என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • பட்டீஸ்வரத்தில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானின் பெயர் ‘தேனுபுரீசுவரர்’.
    • ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    வாழ்க்கையில் முன்னேற்றத்தை எட்டி பிடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஆசைப்பட்டது எல்லாம் நினைத்தபடி நடந்து விடாது. ஒவ்வொரு முயற்சியிலும் எதிர்பாராத இடையூறுகள் வந்து விடும். அந்த இடையூறுகளை தகர்ப்பது என்பது சிலருக்கு மிகப்பெரிய போராட்டமாகக் கூட இருக்கும்.

    இறையருள் இருந்தால் இடையூறுகளை மிக எளிதாக விரட்டி விட முடியும். கும்பகோணம் யாத்திரை நிச்சயம் அதற்கு கை கொடுப்பதாக அமையும். கும்பகோணத்துக்கு மிக அருகே உள்ள பட்டீஸ்வரம் ஆலயத்துக்கு சென்று வழிபட்டால் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் எந்தவித இடையூறும் இல்லாமல் மிக எளிதாக வெற்றிகளை பெற முடியும்.

    பட்டீஸ்வரத்தில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானின் பெயர் 'தேனுபுரீசுவரர்' என்பதாகும். இவருக்கு பட்டீஸ்வரர், கவர்தீஸ்வரர் என்றும் வேறு இரண்டு பெயர்கள் இருக்கின்றன. இந்த பெயர்கள் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தல வரலாற்றில் குறிப்புகள் உள்ளன.

    ஒரு தடவை சிவபெருமானிடம் கோபித்துக்கொண்டு பார்வதி தேவி பூலோகத்துக்கு வந்தாள். அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து தவம் செய்து மீண்டும் சிவபெருமானிடம் சேர வேண்டும் என்பது அவளது இலக்காக இருந்தது. பல இடங்களை தேடிய பிறகு பட்டீஸ்வரத்துக்கு வந்த அவளுக்கு அங்கிருந்த அமைதி பிடித்துப்போனது. அங்குள்ள வனத்தில் ஆசிரமம் அமைத்து பார்வதி தேவி தவம் செய்ய தொடங்கினாள்.

    பட்டீஸ்வரத்தில் உள்ள வனத்தில் பார்வதி தேவி வீற்றிருக்கும் தகவல் அறிந்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பார்வதி தேவியை சுற்றி நின்று தங்களை மரம், செடி, கொடிகளாக மாற்றிக் கொண்டனர். இந்த நிலையிலேயே அவர்கள் பார்வதி தேவியை தினமும் மனம் குளிர வழிபட்டு வந்தனர். இதனால் பார்வதி தேவியால் அமைதியான முறையில் தவத்தை தொடர முடிந்தது.

    எந்த இடையூறும் இல்லாமல் தவத்தை வெற்றிகரமாக செய்த பராசக்தியை கண்டு சிவபெருமான் மகிழ்ந்தார். எனவே பார்வதி தேவியை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக பட்டீஸ்வரம் வந்தார். ஜடாமுடியுடன் பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்து அருளினார். இதையடுத்து சிவசக்தி ஆற்றல் பெருகியது.

    இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு கவதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. எந்த இடையூறு வந்தாலும் இந்த தலத்தில் உள்ள ஈசனையும், அன்னையையும் வணங்கினால் அவை விலகி ஓடி விடும் என்பதற்கு இந்த தல புராணமே சான்றாக உள்ளது.

    ஒரு தடவை காமதேனுவின் மகள்களில் ஒன்றான "பட்டி" என்ற பசுவுக்கு இந்த தலத்தின் சிறப்பு தெரிய வந்தது. அந்த தலத்துக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டது. அதன்படியே பட்டீஸ்வரம் வனத்துக்கு வந்தது. அங்கு ஒரு லிங்கம் அமைத்து தனது பாலால் அபிஷேகம் செய்தது. அந்த பட்டி பசுவுக்கும் சிவபெருமான் காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.

    காமதேனு என்றால் பசு. அந்த பசு தனது பால் காம்பு வழியே பால் சொரிந்து ஈசுவரனை வழிபட்டதால் இங்கே இறைவன் 'தேனுபுரீசுவரர்' என்னும் பெயரை பெற்றார்.

    மேலும் பட்டியின் பெயரால் இத்தலம் 'பட்டீஸ்வரம்' ஆயிற்று. கோவிலின் ஒரு தூணில் பசு, பாலைப் பொழிந்து ஈசனை வழிபடுகிற காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. இறைவன் சன்னதியிலும் இச்சிற்பம் சுதை வடிவில் உள்ளது. அம்பிகை இங்கே தவம் செய்த காரணத்தால் 'தேவிவனம்' என்றும் ஒரு பெயர் உண்டு.

    பட்டீஸ்வரம் ஆலயம் கிழக்கு நோக்கிய வடிவில் கட்டப்பட்டுள்ளது. 7 நிலை, 9 கலசங்களுடன் கிழக்கு நோக்கி ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது. இது தவிர 4 பெரிய கோபுரங்கள் உள்ளன. ஆலயத்தில் மொத்தம் 3 பிரகாரங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆலயத்தை சுற்றிப் பார்க்கும்போது பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கும். கோவிலின் முதல் பிரகாரத்துக்கு வெளியே சோமாஸ்கந்தரும், திருஞான சம்பந்தரும் காட்சி கொடுக்கிறார்கள்.

    சுற்றுப் பகுதியில் சப்தகன்னிகைகளும், சுவர்ண விநாயகர், மகாலிங்கம், சண்முகர், ராமலிங்கம், லட்சுமி ஆகியோரின் சன்னதிகளும் காணப்படுகின்றன. இது தவிர 63 நாயன்மார்களின் மண்டபமும் இருக்கிறது. இங்கே நாயன்மார்களின் சிலைகள் சேர்ந்தபடி இருக்கின்றன.

    பட்டீஸ்வரம் கோவிலில் மொத்தம் 5 நந்திகள் இருக்கின்றன. இதனால் இந்த தலத்தை பஞ்சநந்தி தலம் என்றும் சொல்கிறார்கள். 5 நந்திகளும் சிவபெருமானுக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதற்கு ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

    ஒரு தடவை திருஞான சம்பந்தர் பட்டீஸ்வரம் சிவபெருமானை வழிபடுவதற்கு வந்தார். அப்போது மதியம் ஆகி விட்டது. கடுமையான உச்சி வெயில் தாங்க முடியாத அளவுக்கு உக்கிரமாக இருந்தது. கும்பகோணத்தில் இருந்து நடந்தே வந்து கொண்டிருந்த திருஞானசம்பந்தர் திருவலஞ்சுழி, பழையாறை, வடதளி, திருசத்தி முற்றம் ஆகிய தலங்களில் பாடி விட்டு பட்டீஸ்வரம் நோக்கி வந்தபோது வெயிலால் அவதிக்குள்ளானார். அவர் கால்கள் சூடு தாங்க முடியாமல் தவித்தார்.

    இதை கண்டதும் சிவபெருமான் முத்து பந்தல் அலங்காரத்துடன் கூடிய குடை ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த குடையை பிடித்தபடி திருஞான சம்பந்தர் பட்டீஸ்வரம் கோவிலுக்குள் வந்தார். அவர் வருவதை பார்க்க தேனுபுரீஸ்வரர் விரும்பினார். இதனால் தனக்கு எதிரே இருந்த நந்திகளை சற்று விலகி இருக்குமாறு ஆணையிட்டார். எனவே இந்த தலத்தில் 5 நந்திகளும் விலகி உள்ளன.

    இந்த தலத்துக்கு ராமபிரான் வந்து வழிபட்டுள்ளார். ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள பல தலங்களில் வழிபாடு செய்தார். அந்த ஆலயங்களில் பட்டீஸ்வரம் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்துக்கு வந்தபோது ராமர் தனது வில்முனையால் தீர்த்தம் உண்டாக்கி பட்டீஸ்வரரை வழிபட்டார். 

    அவர் உருவாக்கிய தீர்த்தத்துக்கு கோடி தீர்த்தம் என்று பெயர். இந்தக் கோடி தீர்த்தம் தற்போது கிணறு வடிவில் காணப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் ராமேசுவரத்தில் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். மார்கழி அமாவாசை தினத்தன்று இந்த தீர்த்தத்தில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஆலயத்தின் வடதிசையில் ஆலயத்தை ஒட்டியபடியே அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இங்கே அம்மன் 'பல்வளைநாயகி', 'ஞானாம்பிகை' என்கிற பெயராலும் ஆராதிக்கப்படுகிறார். இந்த அம்மன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்ததை குறிக்கும் வகையில் தலையில் கை வைத்து ஒற்றை காலில் தவம் இருக்கும் காட்சியும் இருக்கிறது.

    அந்த அம்மன் தவம் இருக்கும் இடத்தில் பட்டி உருவாக்கிய தபசு கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்று தண்ணீர் தீர்த்தத்தை தெளித்துக்கொண்டு அம்மனை வழிபட வேண்டும் என்கிறார்கள். இந்த வழிபாட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகமாகும். பிரிந்த கணவன்-மனைவி இங்கு வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.

    இங்கே உள்ள துர்க்கை கோவில் மிகவும் சிறப்புடையது. சோழர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த துர்க்கை 8 கைகளுடன் மகிஷன் தலை மீது நின்ற கோலத்தில் காணப்படுகிறாள். இவளது கைகளில் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி அமைக்கப்பட்டுள்ளன. 3 கண்கள் மற்றும் காதுகளில் குண்டலங்களுடன் காணப்படுகிறாள்.

    ஆனால் மற்ற தலங்களில் அமைந்திருப்பது போல் அல்லாமல் இந்த துர்க்கை சாந்தமான தோற்றத்தில் இருக்கிறாள். இவளை விஷ்ணு துர்க்கை, நவராத்திரி நாயகி, நவக்கிரக நாயகி, நவரத்தின நாயகி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

    சோழ மன்னர்களுக்கு இந்த துர்க்கை தனி சிறப்புடன் திகழ்ந்தாள். சோழ மன்னர்கள் போருக்கு போகும் முன்பு இந்த துர்க்கையை வழிபட்டதாக குறிப்புகள் உள்ளன. அதைப் போல பைரவர் சிலையும் மிகவும் விசேஷமானது.

    தல விருட்சம் வன்னி, தல விநாயகர் அனுக்ஞை விநாயகர், மதவாரணப் பிள்ளையார் என்னும் பெயர்களால் வணங்கப்படுகிறார். இந்த தலத்தில் விஸ்வாமித்திரர், காயத்ரி மந்திரத்தை தொகுத்து வசிஷ்டமுனிவரிடம் கொடுத்தார். இதனால் விஸ்வாமித்திரருக்கு இந்த தலத்தில்தான் பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது.

    இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட பட்டீஸ்வரத்தில் வழிபட்டால் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற முடியும். மன தைரியம் தானாக வரும்.

    வெற்றிக்கு பிறகு என்ன வேண்டும்? பதவி உயர்வு, வாழ்வில் உயர்வைத்தரும் கும்பகோணம் பிரம்மன் ஆலயத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • முதுமையில் சீரண மண்டலத்துக்கு நலம் பயக்கும் சத்தான எளிய உணவுகளை நாடுவது நலத்திற்கு நல்லது.
    • தியானம் பழகி அவற்றை போக்கிக்கொள்வது நல்லது.

    பிறந்தது முதல் இறக்கும் வரை நமது உடல் உறுப்புகள் இயந்திரத்தனமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஓய்வறியா உறுப்புகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது சீரண மண்டல உறுப்புகள். இந்த சீரண மண்டலம் கிட்டத்தட்ட ஓர் இயந்திரம் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இன்றைய நவீன வாழ்வியலில் துரித உணவுகள் ஏற்படுத்தும் உடல் உபாதைகளை நேரடியாக எதிர்கொள்வது சீரண மண்டல உறுப்புக்கள் தான். முதுமையில் வயது மூப்பின் காரணமாக இந்த உறுப்புக்கள் சோர்ந்து போவதால் பல்வேறு செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி மேலும் துன்புறுத்தும்.

    நவீன மருத்துவ வளர்ச்சியினால் ஒட்டுமொத்த ஆயுட்காலம் முதுமையில் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சி தான். இருப்பினும் அத்தகைய வாழ்நாளை ஆரோக்கியமாக கடக்க முடியாமல் அதிக உடல் உபாதைகள் உண்டாகி முதுமையை துன்புறுத்துகின்றன. அதில் செரிமானக் கோளாறுகள் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கக்கூடியதாய் இருக்கின்றன.

    வாழும் இறுதிக்காலத்தில் நாவிற்கு சுகம் தரும் அறுசுவை உணவினை உண்ண முடியாத சூழலை முதுமை மாற்றங்கள் உண்டாக்கிவிடுகின்றன. காரணம், முதுமையில் இயற்கையாகவே உமிழ்நீர் சுரப்பிக் கோளங்கள் செயல்பாடு குறைந்து, உமிழ்நீர் சுரப்பும் குறைகிறது. மேலும் நாவில் சுவை மொட்டுக்கள் தேய்மானம் அடைவதால், சுவை உணரும் திறனும் குறைவது வருத்தம் தான். இத்தகைய சூழலில் அறுசுவை முதுமைக்கு எட்டாக்கனியாகி விடுகிறது.

    முதுமையில் உணவில் விருப்பமின்மை (உணவு வெறுப்பு) பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் காணப்படுகிறது. முதுமையில் சிதைந்த பற்களும், குறைந்து போன சுவை உணரும் தன்மையும், ரத்தத்தில் குறைந்து போன டெஸ்டோஸ்டீரோன் எனும் ஆண் ஹார்மோன் அளவும் இதற்கு காரணமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் குறைபாடு உண்டாகி, உடல் மேலும் பலவீனமடைகிறது. எனவே முதுமையில் சீரண மண்டலத்துக்கு நலம் பயக்கும் சத்தான எளிய உணவுகளை நாடுவது நலத்திற்கு நல்லது.

    அதே போல் முதுமையில் உணவுக்குழாயின் அடிப்பகுதியில் உள்ள இறுக்கு தசைகள் (LES) வலுவிழந்து போவதாலும், அதன் செயல்பாடு குறைவதாலும், இரைப்பையில் உள்ள உணவுப்பொருட்கள் எதிரெடுக்க நேரிடுக்கின்றது. இதனால் 'ஜெர்ட்' (GERD) எனும் எதிரெடுத்தல் பிரச்சினை பெரும்பாலான முதியவர்களுக்கு உண்டாகக்கூடும்.

    அசீரணம், உணவு விழுங்க சிரமம், புளியேப்பம், நாட்பட்ட வறட்டு இருமல், சில சமயம் வாந்தி, வாய் குமட்டல், இதனால் இரவில் தூக்கமின்மை ஆகிய தொந்தரவுகள் கூடி முதுமையை வருத்தும். நெஞ்சு எரிச்சல் மற்றும் உணவு எதிரெடுத்தல் ஆகிய குறிகுணங்கள் அதிக பாதிப்பை உண்டாக்கும். இந்த நோய்நிலை முதுமையில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிகம் பேருக்கு உண்டாகும்.

    ஜெர்ட் நோயில் வயிற்றில் உள்ள அமிலம் உணவுக்குழாயில் எதிரெடுத்து மேலே வருவதால் பல்வேறு துன்பங்களை உண்டாக்கும். முதுமையில் கிட்டத்தட்ட நூற்றில் 20 பேருக்கு இந்த ஜெர்ட் தொந்தரவு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஜெர்ட் நோய்நிலையானது நமது நாட்டில் மட்டுமல்லாது, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் மிகப்பெரும் சவாலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய நவீன வாழ்வியலில் துரித உணவு முறையால் 'ஜெர்ட்' முதியோர்களை விட இளையோர்களுக்கு அதிகம் காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜெர்ட் நோய்நிலையால் அதன் பின்விளைவாக உணவுக்குழாய் அழற்சி, குடல்புண் போன்றவை ஏற்படக்கூடும். நாட்பட்ட ஜெர்ட் தொந்தரவு இருக்கும் பெரும்பாலான முதியோர்களுக்கு 'குடல் இறக்கம்' (hiatus hernia) ஏற்படுவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஜெர்ட் எனும் உணவு எதிரெடுத்தல் பிரச்சினைக்கு 'ஆன்டாசிட்' எனும் வயிற்று புளிப்பகற்றும் மருந்தினை வருடக்கணக்கில் எடுத்துக்கொள்வது முதுமையில் பலரிடம் வாடிக்கையாக உள்ளது. மருத்துவர் ஆலோசனையின்றி தொடர்ந்து ஆன்டாசிட் வகை மருந்துகளை எடுத்துக்கொள்வதால் பல்வேறு பின் விளைவுகள் உண்டாகும் என்றும் ஆய்வுகள் எச்சரிக்கை விடுக்கின்றன.

    முக்கியமாக புரதசத்து பொருட்களின் செரிமானம் பாதிக்கப்படுவதாகவும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உட்கிரகிக்கப்படுவது தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, எளிமையாக சித்த மருத்துவத்தை நாடுவது குடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

    சித்த மருத்துவக் கூற்றின்படி 'ஜெர்ட்' நோய்நிலையானது வாதமும், பித்தமும் தன்னிலை மாறுவதால் உண்டாவதாக அறியப்படுகின்றது. முக்கியமாக வாதமே அனைத்து நோய்களுக்கும் முக்கிய காரணம். 'வாதமலாது மேனி கெடாது' என்பது தேரையர் சித்தர் கூறும் பிணிகளுக்கான முதல் காரணம். முதுமையில் அத்தகைய வாதத்துடன் கூடும் பித்தம் ஜெர்ட் குறிகுணங்களை உண்டாக்குவதாக அறியப்படுகின்றது.

    வாதத்தை குறைக்கும் சித்த மருந்துகளும், பித்தம் குறைக்கும் மருந்துகளும் ஜெர்ட் நோய்நிலையில் நல்ல பலன் தரும். எளிமையாக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள நிலாவரை சூரணம், கடுக்காய் சூரணம், சிவதை சூரணம் ஆகிய மருந்துகள் மலத்தைப் போக்கி அபானனை வெளியேற்றி வாதத்தைக் குறைக்கும்.

    நிலாவரை சூரணம் எனும் மருந்து மலம் போக்கி தன்மை உடையது. இரவில் படுக்கை போகும் போது அரை முதல் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ள நற்பலன் தரும். முதுமையில் பேதி மருந்துக்கு பதிலாக மலமிளக்கி மருந்துகளே எடுத்துக்கொள்ள உகந்தது.

    ஜெர்ட் குறிகுணத்தைக் குறைத்து சீரணத்தை எளிமையாக்க சித்த மருந்தான ஏலாதி சூரணம் அளப்பரிய பயன் தரும். பெருங்காய சூரணம், இந்துப்பு சூரணம் ஆகிய சித்த மருந்துகளும் வாதம் குறைக்க உதவும். பித்தம் குறைக்க சீரக சூரணம், அதிமதுர சூரணம், மாதுளை மணப்பாகு, வில்வாதி லேகியம் ஆகிய மருந்துகள் நல்ல பயனளிக்கும்.

    வாதபித்தம் குறைத்து நோய்நிலையைக் குறைக்கும் சீரகம், சோம்பு, ஓமம் ஆகிய அஞ்சறைப்பெட்டி சரக்குகளை அவ்வப்போது கசாயமாக்கி குடித்து வர வயிற்றுப் பொருமல், வாந்தி, வாய்க்குமட்டல், நெஞ்சு எரிச்சல் ஆகிய குறிகுணங்கள் குறையும். செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.

    வாதமே ஜெர்ட் பிரச்சினைக்கு முதன்மைக் காரணமாக உள்ளதால் வாதம் அதிகரிக்கும் உணவுப்பொருட்களாகிய கிழங்கு வகைகள், (கருணைக்கிழங்கு தவிர), பட்டாணி வகைகள், வாதபித்தம் இரண்டையும் அதிகரிக்கும் அசைவ உணவுகள் இவற்றை தவிர்ப்பது நல்லது. உடல் பருமனை சீராக பராமரிப்பதும் அவசியம்.

    பித்தத்தை தூண்டும் தேநீர், கபின் வேதிப்பொருளைக் கொண்ட காபி, காற்றேட்டப்பட்ட பானங்கள், புளிப்பு தன்மையுள்ள பழங்கள், அதிக காரம் மற்றும் மசாலா சேர்ந்த உணவு வகைகள், மது, புகை, கொழுப்புப் பொருட்கள் இவை நோயின் குறிகுணத்தை அதிகரிக்கும். ஆகவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

    முக்கியமாக இரவில் எண்ணெய் பொருட்களைத் தவிர்த்து எளிதில் செரிக்கும் உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. செரிமானத்தைத் தூண்டும் பிஞ்சுக்காய்கறிகள், புளிப்பில்லாத பழங்கள் இவற்றை அதிகம் சேர்க்கலாம். பாரம்பரிய உணவு வகைகளை நாடுவதன் மூலம் சத்துக்கள் பற்றாக்குறையை தீர்க்க முடியும். வாரம் ஒருமுறை ஆமணக்கு எண்ணெய் இரவில் வெந்நீரில் அல்லது பாலில் கலந்து எடுத்துக்கொள்வது வாதம் குறைக்கும் எளிய வழிமுறை. இது முதுமையில் ஜெர்ட் நோய் வராமல் தடுக்கும்.

    வாழ்வியல் மாற்ற நெறிமுறைகளும் ஜெர்ட் நிலைமையில் பலன் தரக்கூடியன. தலைக்கு தலையணை வைத்து சற்று உயரமாக படுத்தலும், இரவு உணவினை அளவு குறைவாக எடுத்துக்கொள்வதும், உணவு உண்ட பிறகு நேரடியாக படுக்கைக்கு செல்லாமல் சிறிது தூரம் நடைப்பயிற்சி பழகுவதும் ஜெர்ட் நோயின் குறிகுணங்களைக் குறைக்கும். மன அழுத்தமும், மன பதட்டமும் ஜெர்ட் நோயின் குறிகுணங்களை அதிகரிக்கும். ஆகையால் அவ்வப்போது தியானம் பழகி அவற்றை போக்கிக்கொள்வது நல்லது.

    இறுக்கமான உடையை அணிவது தற்போதைய கால கட்டத்தில் அதிகமாகிவிட்டது. இதனால் சீரண மண்டல உறுப்புகள் இயல்பாக செயல்படும் தன்மை பாதிக்கப்படுவதால் ஜெர்ட் நோயின் குறிகுணங்கள் உண்டாகக்கூடும். ஆகவே பாரம்பரிய உடையில் நாட்டம் காண்பது குடல் உறுப்புகளுக்கு நன்மை தரும். தளர்த்தியான ஆடை அணிந்து ஹாலாசனம், வஜ்ராசனம், உஷ்ட்ராசனம், பாவன முக்தாசனம், அர்த்த மச்சேந்திராசனம் ஆகிய எளிய யோகாசனப் பயிற்சி முறைகளை மேற்கொள்வதும் பலனளிக்கும்.

    குடல் நலமே உடல் நலத்துக்கும் அடிப்படை என்கிறது இன்றைய நவீன அறிவியல். இதனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்திருந்த நம் முன்னோர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து எடுக்க வலியுறுத்தி வந்தனர். குடல் நலம் காப்பது மன நலனுக்கும், இதய நலனுக்கும் நல்லது என்கிறது நவீன அறிவியல்.

    மேலும் குடல் நலம் நாட்பட்ட தொற்றா நோய்களான நீரிழிவு, இதயநோய், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை தடுக்கும் எளிய வழிமுறை என்கிறது நவீன அறிவியல். ஆக, குடல் நலம் காக்கும் உணவு முறைகளும், ஆசனப் பயிற்சிகளும் முதுமையின் நலத்திற்கு அவசியம்.

    அறுபது வயதைக் கடந்த பல முதியவர்கள் மருத்துவமனை வாசலை நாடி தவம் இருப்பதற்கு குடல் சார்ந்த நோய்களும் அதன் நலமின்மையும் முக்கிய காரணமாகின்றன. ஆக குடல் நலமே உடல் நலம் என்பதைக் கருத்தில் கொண்டு இயற்கையான உணவையும், இடைஞ்சல் தராத மருந்தையும் நாடுவதே முதுமையில் சீரண மண்டலத்திற்கு தரும் மாபெரும் விருந்து.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • அமிர்தம் என்றாகிலும் பகிர்ந்து உண் என்றார் வள்ளுவர்.
    • மாயா பஜார் படத்தில் ரங்காராவ் சாப்பிடுவாரே அதே போல ஒரு தடவையாவது சாப்பிடணும் சார்! என்றார் நண்பர் ஒருவர்.

    எதிர்காலத்திற்கு வேண்டியது என்று சில நெறிகளை அன்றே எழுத்தாணி கொண்டு விதை நெல்லாய் உள்வாங்கும் நிலம் போல ஆழ உழுதிருக்கிறார்கள். அதில் உலகப் பொதுமறையான திருக்குறளை இணையாகக் கொள்ளலாம். அதேபோல பழமொழிகள். சொல்வழக்காக சிலது இப்போதும் நம்மை சுற்றிவருவதுண்டு.

    அன்றாடம் நம் வாழ்வில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது யாராவது ஒருவரின் வாய்மொழியாக இதைக் கேட்டு இருப்போம். பாம்படம் சுமந்த பாசக்கார கிழவிகள் தங்கள் வெற்றிலைச்சீவல் மணக்கும் வாயோடு உறவுகளைச் சீண்டி, அக்கறையாக, சில நேரங்களில் அறிவுரையாகக் கூட இந்த பழமொழிகளை சொல்லி இருப்பார்கள். அப்படிப்பட்ட பழமொழிகளைப் பற்றியதுதான் இந்த கட்டுரை

    விருந்தும் மருந்தும் மூன்று நாள்....!

    விருந்தோம்பல் பற்றி வகுப்பு எடுக்கும் அளவிற்கு உள்ள தமிழர் பண்பாடு கொண்ட நமது நாட்டில்தான் மெல்ல மெல்ல அந்த கலாச்சாரம் அழிந்து வருகிறது. அப்படிப்பட்ட விருந்துகளில் சில ரசிக்கத்தக்கவை அவற்றை சொல்லலாமா?

    அமிர்தம் என்றாகிலும் பகிர்ந்து உண் என்றார் வள்ளுவர். தன் விருந்தோம்பல் அதிகாரத்தில் அப்படி பகிர்ந்து உண்ணப்படாத உணவு என்பது விஷத்திற்குச் சமம் என்று குறிப்பிடுகிறார். பசியோடு ஒருவர் நம் வீட்டு வாயிலில் நிற்க, அந்நேரம் நம் கையில் சாகாவரம் அளிக்கும் அமிர்தம் இருந்தாலும் அதை பகிர்ந்துண்பது வரம் என்கிறார்.

    தமிழரின் விருந்தோம்பல் பண்பாடு பெயர் பெற்று இருந்தது. இருந்தது எனில்? இப்போது... ஒரு சுவையான துணுக்கு ஒன்றை வாசித்தேன்.

    அந்த வீட்டுக்கு வரும் விருந்தாளியிடம், அடடே வாங்க வாங்க என்று வாயார வரவேற்ற குடும்பத்தலைவி, சில நிமிட பேச்சுக்களின் முடிவில், நீங்க எப்போதும் இப்படித்தாண்ணே சாப்பிட்டே வந்துடுவீங்க, ஒருநாள் நம்ம வீட்டுலே சாப்பிடக்கூடாதா என்று வெளிப்படையாக கேட்கிறார். ஆனால், மனதில் சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிடக்கூடாது என்ற பதைப்புடன்,

    நீ வருத்தப்படுவேன்னுதான் இன்னைக்கு இங்கேயே சாப்பிடலான்னு வந்திட்டேன்மா என்கிறார் அவர், அந்த பெண்மணி விடாக்கண்டனாக, அப்படியே சாப்பிட்டாலும் பிள்ளைங்க கிட்ட காசைத் திணிக்கக்கூடாது சொல்லிட்டேன் என்று எடுத்துக்கொடுப்பார்.

    இது ஒருமாதிரி எதிர்பார்ப்பு கலந்த விருந்தோம்பல்!? நான் உனக்கு சோறு போடுகிறேன்; அதற்கு நீ என்ன அன்பளிப்பைத் தரப்போகிறாய் என்பதைப்போல...

    இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஒரு காட்சி வரும். போர் வருகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன், அரசன் என்ன செய்ய என்ற பதட்டத்தில் இருக்க, வண்டிக்காரன் வேடத்தில் வரும் ஒற்றன் படையெடுத்து வரப்போகிறான் அந்நிய நாட்டவன் என்ற செய்தியோடு வருவான். புலிகேசிக்கு கோபம் வந்து எங்கேயடா சென்றாய் என்றால், என் சித்தப்பா வீட்டில் விருந்தை சிறப்பித்து வந்தேன் "மூன்று நாளைக்கு என்பார்". அதற்கு பிறகு இம்சை அரசன் தன் இம்சையால் மூன்று நாளைக்கு ஒற்றனின் விலாவை சிறப்பிப்பதைப் போல அந்த நகைச்சுவைக் காட்சியை சித்தரித்து இருப்பார்கள்.

    ஏம்மா, விருந்தை சிறப்பித்தது ஒரு தப்பா? என்று நீங்கள் கேட்கலாம் காரண காரியங்களைக் கடந்து எல்லாம் சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்களும் உண்டு. 

    லதா சரவணன்

    லதா சரவணன்

    மாயா பஜார் படத்தில் ரங்காராவ் சாப்பிடுவாரே அதே போல ஒரு தடவையாவது சாப்பிடணும் சார்! என்றார் நண்பர் ஒருவர்.

    கையைக் கட்டிக்கிட்டு வாயை பொளந்துகிட்டான்னு கேட்டார் இன்னொருவர். எல்லாருக்கும் இப்படி வயிறு புடைக்க, நினைத்ததை எல்லாம் வாங்கி சாப்பிட, மனதிற்குள் ஒரு விருப்பம் இருக்கும். ஆனால், சில நேரங்களில் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அதற்கு இடம் தராது.

    இலக்கியங்களில் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மீண்டும் மனைவியைப் பார்க்க வருகிறான். கணவனிடம், செல்வத்தை இழந்தாய், எனை விட்டுப்பிரிந்தாய். நீ இல்லாத இந்த நாட்களில் எல்லாம் நிழல் போல எனைச் சோகங்கள் சுமந்திருந்தது. அந்நாட்களில் எந்த உறவினரும் நம் இல்லத்தை சிறப்பிக்க வரவில்லை, விருந்தோம்பலை ஏற்கவில்லை என்று புலம்பினாளாம்.

    சிலப்பதிகாரத்தில் அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை... என்று விருந்தின் சிறப்பை சிலப்பதிகாரத்தில் சொல்லியிருக்கிறார் இளங்கோவடிகள்.

    நகைச்சுவை, இலக்கியம், எதிர்பார்ப்பு, விருந்துகளைப் பார்த்தது போல பயமுறுத்திய விருந்தையும் பார்ப்போம்!.

    இந்த விருந்தும் மருந்தும் ஏன் மூன்று நாட்களுக்கு மட்டும் எனக் குறிப்பிடுகின்றனர் என்று பார்ப்போம்!

    விருந்தாளியாக ஒரு வீட்டுக்கு செல்லும்போது வரவேற்கப்படுவதென்னவோ மூன்று நாளைக்குத்தான். கல்யாணமாகி போன மாமியார் வீட்டுக்குப் போன மகனிடம் எப்போது அவர்கள் பரிமாறும் உணவில் உன் முகம் தெரிகிறதோ அப்போது வந்துவிடு என்றாராம். முதல் நாள் கறி விருந்து, மறுநாள் கறிகாய் விருந்து, மூன்றாவது நாள் பழைய சாதமும் ஊறுகாயும் அந்த பாத்திரத்தில் தன் முகம் பார்த்த மகன் அம்மா கூறியதைப் புரிந்து கொண்டு திரும்பியதாக ஒரு பழங்கதை உண்டு.

    ஆனால் உண்மையான கருத்து...

    நம் உடல் நலத்தை பேணும் முறையைக் கொண்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் விருந்து உணவு சாப்பிட்டால் அதன் மூலம் நம் உடலில் பல உபாதைகள் நிகழும், எனவே விருந்தை மூன்று நாட்களுக்கு மேல் தொடரக்கூடாது என்றும்; உடல் நலம் சரியில்லாமல் போகும்போது மூன்று நாட்களுக்கு அளிக்கப்பட்ட மருந்தினால், உபாதை சரியாகவில்லை எனில் நீங்கள் மருந்தை மாற்றம் செய்வது மூன்று நாளில் என்பது இன்னும் ஒரு கருத்து.

    எனவே எதிலும் அளவோடு இருக்க வேண்டும் என்பது விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பதன் சாரம்.

    ஆனால் தற்போதைய விருந்து என்பது சுகியில் ஆர்டர் செய்து, பிரிட்ஜ்ஜில் ஸ்டோர் செய்து, சில நேரம்... அடடே வீட்டுக்கு வர்றீங்களா கொஞ்ச நேரம் முன்னாடி சொல்லியிருக்கலாமே...இரண்டு பேரும் ஆபீஸ் போயிருக்கோம். பக்கத்து வீட்டுலே சாவி இருக்கு வாங்கிட்டு வெயிட் பண்ணுங்க. ரோடு கார்னர்லே இருக்கிறே ஓட்டல்ல சாப்டிருங்க... என்பதாக நம் விருந்தோம்பல் இருக்கிறது. ஒரு நாளைக்கு பிறகு அப்போ எப்போ கிளம்பறதா இருக்கீங்க? ஏன்னா விலைவாசி அப்படி பாருங்க. ஒரு நாள் லீவு போட முடியலை என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக இன்றைய விருந்தோம்பல் இருக்கிறது.

    அடுத்த முறை இன்னொரு அற்புதமான பழமொழியுடன் சந்திப்போம்...

    மின்னஞ்சல் - sharnlatha2004@gmail.com

    • நாடு முழுவதும், நிலத்தை அளந்து கணக்கெடுக்கும் முறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர், மன்னர் ராஜராஜன்.
    • மன்னர்களின் வெற்றி வரலாற்றைத் தெரிவிக்கும் மெய்க்கீர்த்தி என்ற வாசகத்தை அறிமுகப்படுத்திய பெருமை மன்னர் ராஜராஜனுக்கே சேரும்.

    ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திர நாளான இன்று, மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,038-வது பிறந்தநாள்.

    சோழ சாம்ராஜ்யத்தின் ஒப்புமை இல்லா சக்கரவர்த்தி ராஜராஜனின் கீர்த்திகள் அளவிடற்கரியவை.

    கடல் தாண்டி படைகளை அழைத்துச் சென்று, அந்நிய தேசத்தில் வெற்றிக்கொடி நாட்டிய முதல் இந்திய மன்னர் ராஜராஜனின் புகழ், இன்னும் கடல் தாண்டாமல் இருக்கிறது என்பதோடு, தமிழகத்துக்கு வெளிப்புறம்கூட முழுமையாகச் சென்று சேரவில்லை என்பது வேதனையான நிதர்சனம்.

    சுந்தர சோழன் - வானவன் மாதேவி ஆகியோரின் இரண்டாவது மகனாகப் பிறந்து, கி.பி.985-ம் ஆண்டு சோழ தேச மன்னராக முடிசூட்டப்பட்ட ராஜராஜன், தனது 29 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகள் மலைக்க வைக்கின்றன.

    ராஜராஜன்

    நாடு பிடிக்க வேண்டும் என்ற மண் ஆசையால் அல்ல, நாட்டு மக்களின் நலனுக்காக அவர் நடத்திய அத்தனைப் போர்களிலும் வெற்றி பெற்றார்.

    தோல்வியையே சந்திக்காத 6 மாமன்னர்களில் ஒருவர் என்ற பெருமையை ராஜராஜன் பெற்றார்.

    முதல் போராக அவர் களம் கண்டது, காந்தளூர்ச் சாலைப் போர்.

    தனது நாட்டுத் தூதரை சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மன் சிறை பிடித்தான் என்ற காரணத்தாலோ, தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பயிற்சி பெற்ற இடம் என்பதாலோ, தற்போதைய கேரளாவில் இருக்கும் காந்தளூர்ச் சாலை என்ற போர்ப்பயிற்சி தளத்தை, நிர்மூலம் ஆக்கினார், ராஜராஜன்.

    நாட்டின் எல்லையை நிலைப்படுத்தும் விதமாக, கீழைச்சாளுக்கியத்தின் வேங்கை நாடு (தற்போதைய ஆந்திரா), கங்கபாடி (மைசூரு பகுதி), தடிகைபாடி, நுளம்பபாடி (பெங்களூரு, பெல்லாரி), கலிங்கம் (ஒடிசா), இரட்டபாடி (வட கர்நாடகம்) ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களில் வெற்றிவாகை சூடினார்.

    சாளுக்கியர்களுடனான போரில், ராஜராஜன் தனி ஆளாக குதிரை மீது சென்று, சத்யாச்சரியனுடன் நேரடியாகப் போர் நடத்தி, அவனை விரட்டியடித்ததும், சாளுக்கிய படைத் தளபதி கேசவன் என்பவனை கைது செய்ததும் அவரது வீரத்துக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

    கப்பல் படையின் முக்கியத்துவத்தை உணர்ந்த ராஜராஜன், அந்தப் படையை விரிவுபடுத்தினார்.

    மக்களின் அன்பை பெற்றார்

    அந்தக் காலத்தில், இந்தியாவில் வேறு எந்த மன்னரும் செய்திராத சாதனையாக, கப்பல் படையை முதல் முறையாக கடல் கடந்து அழைத்துச் சென்று, இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய நாடுகளில் நடந்த போர்களில் வெற்றி பெற்றார்.

    தான் நடத்திய அத்தனை போர்களில் வென்ற இடங்களை, சோழ தேசத்துடன் இணைக்காமல், அங்கு இருந்தவர்களையே ஆட்சி செய்யும்படி ஏற்பாடு செய்தார். அந்த நாட்டு மக்களை நல்ல முறையில் நடத்தியதால் அவர்களின் அன்பையும் பெற்றார். இந்த அபூர்வ நடவடிக்கை, எந்த மன்னரும் செய்யத் துணியாத செயல்.

    நாடு முழுவதும், நிலத்தை அளந்து கணக்கெடுக்கும் முறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர், மன்னர் ராஜராஜன்.

    பதினாறு சாண் நீளமுடைய 'உலகளந்தான் கோல்' என்ற கோல் மூலம், விவசாயம் செய்யும் நிலம், விவசாயம் செய்ய முடியாத நிலம், இறையிலி நிலம் என நிலத்தின் வகையைப் பிரித்து, அவற்றுக்கு ஏற்றபடி வரி வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார்.

    ஆட்சி நிர்வாக வசதிக்காக நாட்டை மண்டலம், கூற்றம், வளநாடு எனப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகளை நியமித்தார்.

    அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விதமாகவும், கிராம மக்களின் நலன்களைக் கவனிக்கவும், ஏரி, குளம், கிணறு ஆகியவற்றைப் பராமரிக்கவும், நிலவாரியம், நீர்வாரியம், தோட்டவாரியம், பஞ்சவாரியம், சம்வுத்சரவாரியம் போன்ற வாரியங்களை ஏற்படுத்தினார். நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

    216 அடி உயர விமானம்

    தஞ்சை நகரில் 216 அடி உயர விமானம் கொண்ட கோவிலை மன்னர் ராஜராஜன் கட்டி இருப்பது அவரது சாதனைகளின் சிகரம்.

    புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து, 5 அடி மட்டுமே என்ற அடித்தளத்தில், பிரமிக்கத்தக்க கோவிலை கருங்கற்களால் எழுப்பியது, மன்னர் ராஜராஜனின் தொழில்நுட்ப அறிவைப் பறைசாற்றுகிறது.

    ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அழியாமல் இருக்கும் வண்ண ஓவியங்களை, கோவிலின் முதல் தளத்தில் தீட்டியது, பரத முனிவர் குறிப்பிட்ட பரதக் கலையின் 108 கரணங்களை சிவனே ஆடிக் காட்டுவது போன்ற சிற்பத் தொகுதியை (81 சிற்பங்கள் மட்டும் நிறைவு பெற்றுள்ளன) உருவாக்கியது ஆகியவை மன்னர் ராஜராஜனின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.

    கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட அனைத்து நகை பற்றிய துல்லியமான அளவையும், கொடுத்தவர்களின் பெயர் விவரங்களையும் கோவில் சுவரில் கல்வெட்டாகப் பதிவு செய்தது மன்னர் ராஜராஜனின் பெருந்தன்மைக்கு அடையாளமாக இருக்கிறது.

    தஞ்சைக் கோவிலை, இறை வழிபாட்டுத் தலம் என்பதையும் தாண்டி, மக்களுக்கு வாழ்வளிக்கும் பொருளாதார மையமாகவும், வங்கி போலவும் பயன்படுத்தினார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

    இலவசம்

    இதற்காக அவர் கொண்டுவந்த 'சாவா மூவா பேராடு' என்ற அற்புதமான திட்டம் எந்த மன்னரின் மனதிலும் தோன்றாத அம்சம் ஆகும். அதாவது, கோவிலில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆடுகள், ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதனைக் கொண்டு அவர்கள் ஆடுகளை வளர்த்துப் பெருக்கி அதன் மூலம் வாழ்க்கை நடத்தி, இறுதியில் அதே அளவிலான ஆடுகளை கோவிலுக்கு திரும்ப வழங்கும் திட்டம், இக்கால பொருளாதார நிபுணர்களையே ஆச்சரியப்பட வைக்கிறது.

    இந்தக் கோவிலுக்குத் தேவைப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் உரிய தொகை முதலீடு செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டி மூலம் அந்தப் பொருள்கள் வாங்கப்பட்ட பொருளாதார திட்டம் வேறு எந்தக் கோவிலிலும் காணாதது ஆகும்.

    கல்வெட்டுகளில், தமிழ் வட்டெழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர் மன்னர் ராஜராஜன்தான்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல ஆண்டுகளாக மறைந்து கிடந்த தேவாரப் பாடல்களை மீட்டுக் கொண்டு வந்தது, மன்னர் ராஜராஜன் தமிழக்குச் செய்த மகத்தான தொண்டு.

    தேவாரப் பாடல்

    தமிழைப் போற்றும் வகையில், மூவர் பாடிய தேவாரப் பாடல்களை கோவிலில் இசையுடன் நாள்தோறும் பாடுவதற்காக, தேவாரம் ஓதுபவர்கள், இசைக் கலைஞர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை நியமித்து, அவர்கள் பெயர் விவரம், அவர்களுக்கான சன்மானம் ஆகிய விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கல்வெட்டாக எழுதி வைத்தார்.

    அதேபோல கோவிலில் பணியாற்றிய 402 நாட்டியப் பெண்களின் பெயர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் எண், அவர்களுக்கான சன்மான தொகை ஆகியவற்றையும் கல்வெட்டாக எழுதி வைத்தார்.

    சிவன் மீதுள்ள பற்று காரணமாக மன்னர் ராஜராஜன், தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினார் என்றாலும், பெங்களூரு அருகே விஷ்ணு கோவிலையும், நாகப்பட்டினத்தில் புத்த விகாரையும் கட்டிக் கொடுத்தார் என்பது அவரது மத சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

    மன்னர்களின் வெற்றி வரலாற்றைத் தெரிவிக்கும் மெய்க்கீர்த்தி என்ற வாசகத்தை அறிமுகப்படுத்திய பெருமையும் மன்னர் ராஜராஜனுக்கே சேரும்.

    சாதனை

    அவரைப் பின்பற்றி மற்ற மன்னர்களும் வெளியிட்ட மெய்க்கீர்த்திகள், தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கின்றன.

    71 வயது வரை வாழ்ந்த மாமன்னர் ராஜராஜன் செய்த சாதனைகளை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை.

    அந்த மன்னரின் பிறந்தநாள் விழா, ஆண்டுதோறும் அரசு சார்பாகக் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது.

    கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற இடத்தில் மன்னர் ராஜராஜன் உயிர் துறந்ததாகக் கூறப்படுகிறது.

    அதன் நம்பகத் தன்மையைக் கண்டறிந்து, உரிய இடத்தில் அவருக்கு பிரமாண்ட நினைவுச் சின்னம் அமைப்பதே மன்னர் ராஜராஜனுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

    • சூரியன், சந்திரன், பூமி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.
    • ஆன்மா சுத்தி அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடையாது.

    நவகிரகங்கள் ஒன்பது.மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உண்டு. ராகு, கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால் அவர்களுக்கு சொந்த வீடு கிடையாது.

    சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180வது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசை சந்திப்பு கேதுவாகும்.

    சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு-கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை. அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180 டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பவுர்ணமி அன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180வது டிகிரியில் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படும். அதாவது சூரியன், சந்திரன், பூமி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.

    சந்திரகிரகணம்

    மங்களகரமான சோபகிருது வருடம் ஐப்பசி 11-ம் நாள் சனிக்கிழமை (29.10.2023) அன்று 1.03 மணி முதல் 2.24 மணி வரை அசுவினி நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள். ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம்.

    சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்து விடுவதால் ஏற்படுவதாகும்.

    சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரைகுறையாக ஏற்பட்டால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

    கிரகண நேரத்தில் நியாயமான நீண்ட நாட்களாக நிறைவேறாத கோரிக்கை உடையவர்கள், ஜனன கால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிரகண நேரத்தில் தியானம் , ஜபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தி அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடையாது.

    கொடிய தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் கிரகணம் விடும் நேரத்தில் தங்களால் முடிந்த தொகையை ஆன்லைனில் செலுத்தினால் வாட்டி வதைத்த கடன் பிரச்சினை விரைவில் தீரும். நடு இரவில் கிரகணம் சம்பவிப்பதால் பெரும்பான்மையாக எல்லோரும் தூங்கிக் கொண்டு இருப்பதால் உணவு கட்டுபாடு அவசியமில்லை.

    கர்பிணி பெண்கள் வெளியே செல்லக் கூடாது. உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம் . மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம்.

    இயன்றவர்கள் கிரகணம் நடந்து கொண்டு இருக்கும் போது காயத்திரி மந்திர ஜபம், ராம நாமப் பாராயணம் , திருக்கோளாற்றுப் பதிகம் பாராயணம் செய்யலாம் .

    பரிகார ராசிகள்

    ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது சிறப்பு.கிரகணம் முடிந்த பிறகு காலையில் நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து புதியதாக சமைத்த உணவை உண்ணலாம்.

    ஐப்பசி மாத பவுர்ணமியும் அன்னாபிசேகமும்

    ஜோதிடத்தில் சந்திரன் மனதை ஆள்பவன் சந்திரன்.

    நவகிரகத்தில் முதல் நிலை பெறுபவன் சூரியன் என்றாலும் சந்திரனை வைத்தே ராசியை குறித்தனர்.சூரியனிடமிருந்து ஒளியை கடன் வாங்கி சந்திரன் பிரகாசிக்கிறது இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. ஒளி கிரகங்களான சூரியன், சந்திரன் ஒரு ஜாதகத்தில் தந்தை, தாயை போன்றது. சூரியன் ஆத்ம பலத்தையும், சந்திரன் மனோ பலத்தையும் தருகிறார்கள்.

    இவ்வளவு சக்தி பெற்ற சூரிய, சந்திரனை வலுவிழக்க வைக்கும் ஆற்றல் ராகு, கேதுக்களுக்கு உண்டு. அமாவாசையில் பிறந்தவருக்கு சூரியன்+சந்திரன் சேர்க்கை இருக்கும். பவுர்ணமியில் பிறந்தவர்களுக்கு சூரியனுக்கு 7-ல் சந்திரன் இருக்கும். இவர்களோடு ராகு கேதுக்கள் நெருங்கி இணைந்து இருந்தால் மன சஞ்சலம் எளிதில் ஏற்படும். நிலையான முடிவெடுக்க முடியாமல் மனம் தடுமாறும்.


    இதே போல் சூரியன் நீசமாகி, ராகு, அல்லது கேது இணைந்தால் ஆன்ம பலமின்றி அடிமைதனமான வாழ்வும் அமையும். அது போல் சந்திரன் அஷ்டமாதிபதி நட்சத்திர சாரத்தில் அமர்ந்து ராகு கேதுக்கள் உடன் 8 டிகிரிக்குள் இணைவு பெற்றவர்கள் கண்டிப்பாக எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க கடுமையாக திணறுவர். ஒளி கிரகங்களான சூரியனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் வலுவற்று இருக்கும் நிலையில் அடுத்தவரை சார்ந்தோ அல்லது அவருடைய ஆதரவிலோ வாழ்க்கை அமையப் பெறும். அன்னை தந்தையின் ஆதரவும் முழுமையாக இருக்காது. மனநலப்பாதிப்பை கண்டிப்பாக உருவாக்கும். பணம், காதல், வேலை, குடும்பம், குழந்தை என இவற்றில் ஒன்றால் மனம் நிம்மதி இல்லாமல் வாடும்.

    அமாவாசை, பவுர்ணமி காலங்களில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும். பூரண பவுர்ணமி காலத்தில் கடல் பொங்கும், சீற்றமாகும். இத னால்தான் மன நலம் பாதித்தோர் இந்த நாட்களில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    சூரியன் பாதிக்கப்பபட்டோர் தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சந்திரன் பாதிப்படைந்தோர் கிரிவலம் வர பிரச்சினை குறையும். பவுர்ணமி அன்று பூரண உபவாசம் இருந்த பின் மாலையில் சந்திர உதயத்திற்கு பின் வீட்டில் பூஜை செய்து, அபிராமி அம்மனையும், அண்ணாமலையாரையும் வழிபட்ட பின் சந்திரனுக்கு பச்சரிசி சாதம் படைத்து அதை பால் ஊற்றி சாப்பிட சந்திரதோஷம் குறையும்.

    ஐப்பசி மாதம் சிவன் கோவிலில் நடைபெறும் அன்னாபிசேக பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் அன்ன பிரசாதத்தை சாப்பிட்டால் சந்திர தோஷம் நீங்கும்.

    ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது.

    தானங்களில் போதும் என்ற மனதி ருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவு அளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படும்.

    அன்னாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தால் அனைத்து பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும்.

    ஐப்பசி 11, சனிக்கிழமை (28.10.2023) அன்று ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம் சிவன் கோவிலில் நடைபெறும். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. உலகத்திற்கே படியலக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். அன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் உலகிற்கே பஞ்சம் வராது என்பது உண்மை.இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்க ளுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

    ஆலய வழிபாட்டில் பவுர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்தி ரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விசேஷமானதாகும். ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்வதால் ஐப்பசி அனனாபிசேகம் மேலும் சிறப்பு பெறுகிறது.

    அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது. அதனால் நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசியை அன்னாபிஷேகம் செய்வது வழிபடுவது சிறப்பு.இந்த அபிஷேகம் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யசூர் வேத பாராயணமும், ஸ்ரீ ருத்திரம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். இரண்டு நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

    அன்னாபிஷேகப் பலன்கள்

    சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிட்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் அவ்வாறு கூறுவார்கள். ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னம் கொண்டு நடக்கும் அன்னாபிஷேகத்தைக் கண்ட வர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது.

    வியாபாரத்தில் பிரச்சினை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும் அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் நிமிரும். மாணவர்கள் உண்டால் கல்வி ஆர்வம் கூடும்.

    வீட்டில் லிங்கம் வைத்திருந்தும் நித்ய வழிபாடுகள் செய்ய இயலாதவர்கள் வருடத்தில் ஒரு நாள் அன்னாபிஷேகம் செய்து பிரசாதம் உண்டால் சிவபூஜை செய்யாததால் ஏற்படும் தோஷம் விலகும்.

    நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தைக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும். இந்த அன்னத்தை உண்பவர்களுக்கு என்றைக்குமே உணவுக்கு தட்டுப்பாடு என்பதே வராது. வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும்.

    வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை. மேலும் சுய ஜாதகத்தில் சந்திரன் ராகு, சந்திரன் கேது சேர்க்கையால் ஏற்படும் மன சஞ்சலம், பய உணர்வு, ஆரோக்கிய குறைபாடு சீராகும்.தோற்றப் பொலிவும், தன்னம்பிக் கையும் கூடும்.

    எனவே வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அன்னாபிசேக காட்சியை வழிபடுவதுடன் ஆலயங்களில் அன்று நடைபெறும் அன்னதானத்திற்கு உதவுவதும் நன்மையை அதிகரிக்கும். அன்று நள்ளிரவில் பவுர்ணமி முடியும் நேரத்தில் கிரகணம் சம்பவிக்க உள்ளதால் கோவிலில் அன்னாபிசேகம் நடைபெறும் நேரத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு பயன் பெறவும்.

    குடும்பத்தில் நிம்மதி இல்லாமல், திருமணம் கை கூடாமல் பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    செவ்வாய் தோஷம் என்றதும் எல்லோரும் அலறும் நிலைதான் உள்ளது. செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் என்பது போல பலரும் பேசுவது மரபு போலவே ஆகிவிட்டது. ஆனால் செவ்வாய் கிரகம் எல்லோரும் நினைப்பது போல மோசமான கிரகம் அல்ல. அதனுடைய தோற்றத்தை தெரிந்து கொண்டாலே அது நமக்கு புரிந்து விடும்.

    சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் முனிவர் நர்மதை ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். ஒருநாள் அதிகாலையில் நர்மதை ஆற்றில் நீராட சென்றார். அப்போது அங்கு தேவலோக பெண் ஒருத்தி நீராடிக் கொண்டிருந்தாள். அவளை கண்டதும் அவளது அழகில் பரத்வாஜ் முனிவர் மயங்கினார்.

    அவளிடம் பேசி மயக்கி இரண்டற கலந்து விட்டார். இதன் காரணமாக அந்த தேவலோக பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் பரத்வாஜ் முனிவர் ஆசிரமத்துக்கு செல்ல முடியாது. அந்த பெண்ணும் அந்த குழந்தையை தேவலோகத்துக்கு கொண்டு செல்ல இயலாது. எனவே இருவரும் நர்மதை நதிக்கரையிலேயே அந்த குழந்தையை விட்டு சென்றனர்.

    இதை கண்ட பூமாதேவி அந்த குழந்தையை எடுத்து வளர்த்தாள். குறிப்பிட்ட வயது வந்ததும் அந்த குழந்தை தன் தந்தை யார் என்று கேட்டாள். பூமாதேவி நடந்தது அனைத்தையும் அந்த பையனிடம் சொல்லி அவனை பரத்வாஜ் முனிவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தாள். பரத்வாஜ் முனிவரும் தன் மகனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். அந்த சிறுவனுக்கு செவ்வாய் என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

    தாய் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்ததால் செவ்வாய்க்கு குடும்பம், தாய், மனைவி போன்ற விவகாரங்களில் வெறுப்பு ஏற்பட்டு போனது. இதனால்தான் ஜாதகத்தில் செவ்வாய் நிற்கும் இடங்களில் குடும்ப ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 ஆகிய கட்டங்களில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு செவ்வாய் தோஷம் என்று சொல்லி விடுகிறார்கள்.

    இதே போல சந்திரன் நின்ற இடத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 இடங்களில் செவ்வாய் இருப்பதும் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். இப்படி சொல்வதால் தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் தற்போது பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல், திருமணம் கை கூடாமல் பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    ஆனால் ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 இடங்களில் செவ்வாய் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அதை செவ்வாய் தோஷம் என்று சொல்லவே முடியாது என்பதுதான் உண்மை. ஜாதக கட்டங்களில் மற்ற கிரக அமைப்புகளுடன் செவ்வாய் இருப்பதை ஒப்பிட்டு பார்க்கும் சமயத்தில் செவ்வாய் தோஷம் இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    பொதுவாக ஜாதகத்தில் 7, 8 இடங்களில் செவ்வாய் இருந்தால் கடுமையான தோஷம் என்பார்கள். 2, 4, 12 இடங்களில் இருந்தால் தோஷம் சற்று குறைவாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் மற்ற கிரக அமைப்புகள் சரியாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய் தோஷம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே 2, 4, 7, 8, 12 கட்டங்களில் செவ்வாய் இருந்து விட்டாலே கண்ணை மூடிக்கொண்டு செவ்வாய் தோஷம் என்று சொல்லக்கூடாது.


    செவ்வாய் தோஷம் இருந்தால் அதே மாதிரி செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்பது பலமொழி போல ஆகி விட்டது. செவ்வாய் கிரகம் வெப்பம் மிகுந்த கிரகமாகும். இந்த கிரக அமைப்பில் இருப்பவர்கள் ஆர்.எச். நெகடிவ் என்ற ரத்த வகை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்ற ரத்த வகை உடையவர்களுடன் இவர்கள் திருமணம் செய்தால் அவர்களது இல்லற இன்பம் திருப்தியாக இருக்காது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    இதை வைத்துக் கொண்டுதான் ஜோதிடர்கள் ஆண்-பெண் இருவரின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும் என்று பொதுப்படையாக சொல்லி விட்டார்கள். செவ்வாய் பகவானை சகோதர காரகன், பூமி காரகன் என்று சொல்வார்கள். எனவே ஜாதகத்தில் செவ்வாய் அமைப்பை பொறுத்து சகோதரர்களால் நல்லது-கெட்டது தீர்மானிக்கப்படும்.

    அதுபோல பூமி, விவசாயம் போன்றவற்றில் ஏற்படும் லாப-நஷ்டங்களிலும் செவ்வாய் ஆதிக்கத்தை காண முடியும். ஜாதகத்தில் செவ்வாய் நிற்கும் இடம் மற்றும் அதன் திசை உள்ளிட்டவற்றை நுட்பமாக ஆய்வு செய்தால் மட்டுமே செவ்வாய் தோஷம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கணிக்க முடியும். எனவே வெறுமனே செவ்வாய் தோஷம் என்றால் நம்பாதீர்கள்.

    தோஷம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப உரிய தலங்களுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் செவ்வாய் தோஷ பாதிப்பில் இருந்து நிவர்த்தி பெற முடியும். எனவே செவ்வாய் தோஷம் என்று சொல்லப்படுவது எந்த அளவுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

    பொதுவாக விநாயகர் வழிபாடு ஒன்றே செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய போதுமானது என்று சொல்வார்கள். செவ்வாய் கிரகத்துக்கு விநாயகர் ஒரு செவ்வாய்க்கிழமை காட்சி அளித்தார். அதனால் செவ்வாய்க்கிழமை மங்களவாரம் என்று சொல்வார்கள். இதில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு மங்களன் என்ற பெயர் வந்தது.

    எனவே விநாயகரை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தை தடுத்து நிறுத்த முடியும். செவ்வாய்க்கி ழமைகளில் சதுர்த்தி திதி வந்தால் அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டு பாருங்கள். செவ்வாய் தோஷம் ஓடியே போய் விடும்.

    செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதும் மற்றொரு பரிகாரம் ஆகும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய் கிரகத்துக்கு செண்பக பூ, சிவப்பு நிற அரளி பூ கொண்டு பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 5 பேருக்கு சிவப்பு வஸ்திரங்களும் உணவும் கொடுப்பது இன்னும் நல்லது.

    செவ்வாய் தோஷத்தால்தான் திருமணம் தடைப்படுகிறது என்று உறுதியாக தெரிய வந்தால் வளர்பிறை செவ்வாய்க்கிழமை வீட்டிலேயே செவ்வாய் பகவானுக்கு பூஜைகள் செய்தால் சரியாகி விடும். பூஜை செய்யும்போது செவ்வாய் கிரகத்தை மனதில் நினைத்துக் கொண்டு சூடம், சாம்பிராணி காட்டினால் நிச்சயம் பலன் உண்டு.

    செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் தெற்கு திசையில் செவ்வாய்க்குரிய கோலம் வரைந்து அதன் மீது செவ்வாய் எந்திரத்தை வைத்து 108 தடவை செவ்வாய் காயத்ரியை சொன்னால் எவ்வளவு பெரிய செவ்வாய் தோஷமும் கட்டுப்பட்டு விடும். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் இலந்துறையில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் வழிபடுவதும் செவ்வாய் தோஷத்தை போக்க உதவும்.

    பொதுவாக செவ்வாய் கிரகத்தை வழிபடும்போது, "பூமித்தாய் பெற்ற தவப்பு தல்வனே, மின்னல் போன்ற ஒளி கொண்டவனே, சக்தி ஆயுதத்தை ஏந்தி இருப்பவனே, மங்களம் என்ற பெயர் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். என்னை பாதுகாத்துக் கொள்" என்று சொன்னாலே போதும். செவ்வாய் பகவான் மனம் இறங்கி நிச்சயம் அருள்வார்.

    செவ்வாயின் அதிபதி முருகப்பெருமான். எனவே முருகன் வீற்றிருக்கும் ஆலயங்களில் வழிபடுவது நல்லது. குறிப்பாக வைத்தீஸ்வரன் ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமைகளில் சென்று வழிபாடு செய்வதால் செவ்வாய் தோஷ பாதிப்பில் இருந்து விடுபட முடியும். வைத்தீஸ்வரன் கோவில் மிக சிறந்த செவ்வாய் பரிகார தலமாக அனைவராலும் போற்றப்படுகிறது.

    இந்த தலத்தில் செவ்வாய் பகவான் தெற்கு பார்த்த நிலையில் உள்ளார். செல்வமுத்துக்குமாரர் சன்னதிக்கு பின்புறம் இவரது சன்னதி அமைந்துள்ளது. நான்கு கைகள் அவற்றில் ஆயுதங்கள் ஏந்தி அபயம் தருவபராக செவ்வாய் காட்சி அளிக்கிறார். செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஆட்டுகிடா வாகனத்தில் செவ்வாய் வீதி உலா வருவார்.

    செவ்வாயும், முருகனும் முன்னும்பின்னு மாக உலா வருவார்கள். அப்போது வழிபட்டால் மிகவும் நல்லது. இந்த பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் தங்கள் ஊர் எல்லையில் உள்ள காவல் தெய்வங்களுக்கு செம்பருத்தி பூ அல்லது சிவப்பு நிற பூவை அணிவித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

    செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

    வீர துவஜாய வித்மஹே, விக்ன ஹஸ்தாய தீமஹி, தந்நோ பவும: ரசோதயாத் என்ற இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு சுத்த ஆடைகளை உடுத்தி நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து 108 முறை சொன்னால் செவ்வாய்க் கிரகத்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

    பூந்தமல்லி, திருப்போரூரில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில்கள், வில்லிவாக்கம் அகதீஸ்வரர் கோவில், நெல்லை கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில், நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநி பெருமாள் கோவில், திண்டுக்கல் தண்டாயுதபாணி கோவில், சின்னாளபட்டி சதுர்முகன் கோவில், மதுரை மன்னாடிமங்களம் நரசிங்க பெருமாள் கோவில், சோழவந்தான் பிரளயநாதர் கோவில், தேனி கோடங்கிபட்டி ஆறுமுக நயினார் கோவில், மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருப்புனவாசல் விருத்தக்கீஸ்வரர் கோவில், சென்னை அனுமந்தபுரம் வீரமந்திரர் கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில், திருப்பணந்தாள் அருணசடேஸ்வரர் கோவில், திருவாரூர் வீரா வாடி அகோரவீர பத்திரர் கோவில் ஆகியவையும் செவ்வாய் தோஷத்தை விரட்டும் மிக சிறந்த தலங்களாக திகழ்கின்றன. பயன்படுத்தி செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபடுங்கள்.

    • பழனியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் கணக்கம்பட்டி சென்று இருக்கின்றீர்களா?
    • வருபவர்களின் குறைகளை அவர்களே அறியாமல் தீர்த்து வைப்பவர்கள்தான் மகான்கள்.

    சென்ற வாரம் 5 நிமிடமாவது அன்றாடம் மவுனமாய் இருப்போம் என்று படித்தோம். செய்திருப்போம் என நம்புவோம். இதனை செய்பவர்கள் சிறிது சிறிதாக 5 நிமிடத்தில் இருந்து 20 நிமிடங்களாக கூட்டிக் கொள்ளலாம். முதலில் மவுனம் என்பதில் அசையாது ஓர் இடத்தில் 5 நிமிடங்கள் அமர்ந்து பாருங்கள். நாற்காலியில் அமர்ந்தும் இதனைச் செய்யலாம். உடல் அசையாது இருக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு நிமிடம் கூட அசையாது அமர்வது கடினமாக இருக்கும். பழக வேண்டும். விடா முயற்சி வேண்டும். அவ்வளவுதான். சாப்பிடுவதற்கு முன் அதாவது வயிறு காலியாக இருக்கும் போது இதனைச் செய்யலாம். இப்படி கண்களை மூடி அமர்ந்தாலும் மனம் பல எண்ண ஓட்டங்களை கொண்டு வரும் அது வந்து விட்டு போகட்டும். எந்த எண்ணத்தின் பின்னாலும் நாம் தொடர்ந்து செல்லக் கூடாது. இதற்கு என்ன செய்வது? உங்கள் மூச்சு எவ்வளவு தூரம் உள்ளே செல்கின்றது? எவ்வளவு தூரம் வெளியே வருகின்றது என்று கவனியுங்கள். இதற்காக எஞ்சின் போன்ற இரைச்சல், பாம்பு போன்ற புஸ், புஸ் என்ற சத்தம் வேண்டாம். சாதாரண, இயல்பான மூச்சு நிகழட்டும். இதனை கவனிக்கும் போது எண்ண ஓட்டங்கள் தடைபடும். மூச்சை கவனிப்பதும் விலகும். ஓர் அமைதி நிலைக்கு வர முடியும். இதெல்லாம் ஒரு நொடியில் நிகழாது. ஆனால் பயிற்சி செய்ய செய்ய கண்டிப்பாய் நிகழும். இனி போன வார தொடர்ச்சியான நான் பார்த்த மகான்களைப் பற்றி பகிர்ந்து கொள்வோம். இவை அவரவர் வாழ்வில் நிகழ்ந்த பல அதிசயங்கள், அனுபங்கள் இவற்றினை ஞாபகத்திற்கு கொண்டு வரலாம்.

    இனி அன்றாடம் கத்தி கத்தி பேசுவதனை தவிர்க்க வேண்டும். அதுவும் மற்றவர்களை குறை கூறுவதனை தவிர்க்க வேண்டும். வாயில் இருந்து வரும் சொற்களில் அதிக கவனம் தேவை.

    பழனியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் கணக்கம்பட்டி சென்று இருக்கின்றீர்களா? இன்று கணக்கம்பட்டி சுவாமிகள் ரூப நிலையில் இல்லை. ஆனால் அவரது ஜீவ சமாதியில் அவர் பலருக்கு காட்சி தந்துள்ளார். அவர் சரீரத்தோடு வாழ்ந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றார்.


    இவர் காலத்தில் என் கணவரும், நானும் சில முறை அவரை சென்று தரிசித்துள்ளோம். ஒரு முறை எங்களுடன் எங்களது மகளும் வந்திருந்தாள். மறுநாள் பழனி செல்ல முடிவு செய்து விடுதியில் தங்கினோம். கடும் மழை காரணமாக அங்கும் மின்சாரம் இல்லை. வைத்திருந்த மெழுகுவர்த்தி கூட தீர்ந்து விட்டது. திடீரென அறையின் விட்டத்தில் மிகப்பெரிய ஒளி வட்டம் ஏற்பட்டது. டார்ச்லைட் கூட இல்லை. செல்போன்கள் இல்லாத காலம் அது. ஓரிரு நிமிடங்களில் அந்த ஒளி வட்டம் மறைந்தது.

    மனம் கணக்கம்பட்டி சாமிதான் இப்படி காட்சி அளிக்கிறார் என எங்களுக்கு அடித்து கூறியது. மறுநாள் காலையில் அடித்து, பிடித்துக் கொண்டு கணக்கம்பட்டி ஓடினோம். குடிசை போன்ற வீடு சுற்றுபுறம் படு சுத்தமாய் இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்ற போது சற்று தூரம் தள்ளி சென்றிருப்பதாக சொன்னார்கள். அங்கு சென்றோம். காய்ந்த நிலப்பகுதி. வெயில், வெட்ட வெளி, ஆண்கள் பெண்கள் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். நாங்களும் அவ்வாறே அமர்ந்து இருந்தோம்.

    பச்சை வேட்டி, பச்சை தலைப்பா என சுவாமிகள் மடித்து கட்டிய வேட்டியுடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். ஏதோ செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு சிலருக்கு வேலை சொன்னார். அவர்கள் தானே செய்தனர். ஓர் அம்மா, நீண்ட கட்டைகளை தூக்கி மற்றொரு புறம் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். நான் மெதுவாக அவரிடம், 'நான் உதவி செய்யவா?' என்று கேட்டேன். அவர் வேண்டாம், வேண்டாம் யாருக்கு என்ன வேலை சாமி சொல்கின்றாரோ அவர்கள் தான் அதனை செய்ய வேண்டும். நானே செய்கிறேன் என்று பதறியபடி கூறினார்.

    காரில் வந்தவர்களும் சரி, நடந்து வந்த வர்களும் சரி, அடக்கத்தோடு எளிமையாய் அங்கு இருந்தனர். திடீரென எங்களைப் பார்த்து கிழக்கால போய், வடக்கால போ தாயி என்றார். சாமி எது கிழக்கு எது வடக்கு என புரியவில்லை. உடன் இருந்தவர்கள் சத்தம் இல்லாமல் திசையினை சைகையாய் காட்ட கிளம்பினோம்.

    வருபவர்களின் குறைகளை அவர்களே அறியாமல் தீர்த்து வைப்பவர்கள்தான் மகான்கள். எல்லா மகான்களிடமும் வெளியில் கண்டிப்பும், உள்ளத்தில் கருணையும் இருக்கும். ஆகவேதான் மகான்கள், ஜீவ சமாதிகள் உள்ள இடங்களை தரிசனம் செய்வது நல்லது.

    மகான்கள் ஆண்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. பெண்களும் இருக்கின்றனர். என் கணவருக்கு வெகு காலமாக தெரிந்த, அறிந்த ஒரு அம்மையார். நாங்கள் அறிந்து அவர் எத்தனையோ வருடங்களாக உணவாக திட உணவு எடுத்துக் கொண்டது இல்லை. திரவ உணவும் மிகக் குறைந்த அளவே இருக்கும். பல நாட்கள் அதுவும் இருக்காது. எப்பேர்பட்ட பிரச்சினை என்று ஒருவர் கூறினாலும் 'கலகல'வென சிரிப்பார். வெள்ளி மணி ஓசை போல் அந்த சிரிப்பு இருக்கும். அந்த சிரிப்பு நம் கண்களில் பரவசத்தால் நீர் வரவழைத்து விடும். பிறகு எல்லாம் சரியாகி விடும் என்பார். ஒரே ஒருமுறைதான் அந்த பதில் பின் அந்த பிரச்சினை எப்படி சரியானது என்று ஒருவர் ஆச்சரியப்படும் அளவுக்கு அது சரியாகும். அந்த பிரச்சினையின் வலி, வேதனை எல்லாம் இருந்தாலும் முடிவு நன்கு இருக்கும். இவர்கள் எல்லாம் உலகத்தின் கண்களுக்கு தெரியாமல் இருப்பவர்கள். இத்தகு மகான்கள் பூமிக்கு வருவது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.

    இப்படி எத்தனையோ அற்புதங்களை சந்திக்கும், பழகும், பேசும் வாய்ப்பு கிடைப்பது நமது நாட்டிற்க்கு கூடுதலாக கிடைத்த பலன் என்றே கூறலாம்.

    இப்படி பல மகான்களை சந்திப்பதும், ஆசி பெறுவதும், அமைதியினை அதிகம் கிரகிப்பதும் எங்களுக்கு வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது எனலாம்.

    இவை நம்மை நாமே புதிதாக மாற்றிக் கொள்ள உதவும். மனதின் எண்ண ஓட்டங்களோடு ஐக்கியம் ஆகாமல் இருப்ேபாம். நல்ல நிகழ்வுகள், அனுபவங்கள் நினைவில் வந்து நம்மை மகிழ்விக்கும். வாயின் உள்ளே செல்லும் உணவிலும், வெளியில் வரும் வார்த்தையிலும் கவனம் அதிகம் ஏற்படும். எதனை நினைக்க வேண்டுமோ, அதனையே மனம் எண்ணும். அதுவே தியான முறைக்கு ஒரு முதல் படிக்கட்டாக அமையும். மனம், வாக்கு இரண்டிலும் மவுனம் ஏற்படும்.

    நெல்லிகாய் ஜூஸ், பூசணி சாறு, கொ.மல்லிசாறு என இவையெல்லாம் தானே மனமுவந்து எடுத்துக் கொள்வர். பெரும் தீணி என்பதே நினைவுக்கு வராது.


    பிறரை சதா குறை கூறி பாவத்தினை சேர்த்துக் கொள்வது குறையும். பிறரும் நம்மை விமர்சனம் செய்வது இருக்காது.

    நெருப்பு தன்னை சேருபவற்றை நெருப்பாகவே மாற்றி விடும். அது போல மகான்கள் தன்னிடம் வருபவர்களை தன்னை போலவே மாற்றி விடுவார்கள்.

    இப்படி ஏற்படும் மாற்றங்கள் நமது அசுத்த உடலை சுத்த உடலாக மாற்றும். இதனைப் பற்றி வேதார்த்த மகரிஷி கூறுபவற்றை பின் வரும் கட்டுரையில் பார்ப்போம்.

    பிரபஞ்ச சக்தி வேகமாய் உடலில் இறங்கும். புருவ மத்தியில் பிரபஞ்சத்தை உணர முடியும். நம்முள் ஆன்மா என்ற பெயரில் இறை சக்தி இருப்பது புரியும்.

    சிறு சிறு ஒழுக்கங்களை அடைய படாதபாடு படுகின்றோம். ஆனால் இந்த சித்தர்கள் எத்தனை சாதனைகளை எளிதாக செய்து விடுகின்றனர். 4000, 5000 ஆண்டுகளுக்கு முன்பு 1008 அண்டங்களுக்கு பயணம் செய்து வந்தவர். தன் உடலை ஒளி உடலாக்கி ஒளியின் வேகம் போல் நொடியில் பல ஆயிரம் மைல்களை கடந்து சென்று மீண்டும் பூமிக்கு வந்தவர். நந்தி பகவான் இவரது குரு. பல அண்டங்களில் தான் கண்டதினை பதிவு செய்துள்ளார். இவர் எழுதியுள்ள திருமந்திரம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல். எனது கணவர் அடிக்கடி 'திருமூலரின் திருமந்திரம்' பற்றி சைவ சித்தாந்த அன்பர்கள் கூட்டத்தில் உரையாற்றுவார்.

    அவரது பிரபஞ்ச பயணம் கேட்டு கேட்டு நான் எவ்வளவு பீல் பண்ணியிருக்கேன் தெரியுமா? 10 அடி நடப்பதற்குள் எத்தனை பேருக்கு மூச்சு வாங்குகிறது, முட்டி வலிக்குது. நடைபயிற்சி என்ற பெயரில் வேர்த்து விறுவிறுத்து சோர்ந்து போகின்றவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளோம். அண்ட சராசரங்களுக்கு செல்ல வேண்டாம். அடுத்த தெருவுக்கு அடிபடாமல் சென்று வருவதே இந்த கால கட்டத்தில் மிக கடினமாக செல்கின்றோம். ஒளி வேகத்தில் என்று திருமூலரைக் குறிப்பிடு கின்றனர். இங்கு பைக் வேகத்தில் கட்டுப் பாடில்லாமல் சென்று தானும் மண்டையை உடைத்துக் கொண்டு, கூட இருப்பவர், எதிரில் வருபவர், மண்டையை உடைப்ப வர்கள் எத்தனை நபர்கள்? பலரின் உயிர் கூட போகும் அளவு மூர்க்கமான வேகம். இந்த வேகம் எங்கே? உடலை ஒளியாக்கி நொடிகளில் சென்று 1008 அண்டங்களை சுற்றி வந்த திருமூலர் வாழ்க்கை கூறும் உயரிய தத்துவம் எங்கே?

    அதற்காக எல்லோரும் திருமூலரும், அகத்தியரும் ஆக முடியாதுதான். ஆனால் நம்முன் இருக்கும் அரக்க குணங்கள், விகார எண்ணங்களை நீக்க, ஐம்புலன்களை அடக்க யோகாவும், தியானமும் பெரிதும் உதவுமே. சிறியவரோ, முதியவரோ தகுந்த பயிற்சியாளர் மூலம் இன்றே ஆரம்பிக்கலாமே.

    -தொடரும்

    • சாதாரண மக்களிடையே அதிகம் புழங்க ஆரமித்திருப்பது இந்த மொபைல் மணிபர்ஸ் எனப்படும் மொபைல் வாலட்ஸ்.
    • மொபைல் மணி பர்ஸ் மிக நல்ல தொழில் நுட்ப அனுகூலம்தான். ஆனால் அதிலுமே கொஞ்சம் சூதனமாக இருத்தல் மிக அவசியம்.

    சென்ற கட்டுரையில் ஆன்லைனில் பணம் செலுத்த உதவும் டிஜிட்டல் பர்ஸ் தொடங்கினது பற்றி விரிவாகப்பார்த்தோம்.

    ஓரிரண்டு வருடங்கள் வரை இந்த இணைய மொபைல் பணப்பரிவர்த்தனை சேவைகளை வெளி நாட்டு உள்நாட்டு தனியார் கம்பெனிகளே நடத்தி வந்தன. இப்போது அரசாங்கமே பலவித இணைய, மொபைல் வழி மென்பொருள் சார்ந்த சேவைகளை சார்ஜ் ஏதுமில்லாமல் இலவசமாகவே ஆரம்பித்துவிட்டது. நான் சொன்னவையெல்லாம் அப்படிப்பட்ட கரன்சி இல்லாப்பணப்பரிவர்த்தனை சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களே!

    "ஏன் மேடம் கேஷ் தர்ரீங்க? பே டி எம்ல தந்தா, அதுக்கு குலுக்கல் முறையில லாட்டரி வெச்சிருக்கோம். இண்டக்ஷன் ஸ்டவெல்லாம் பரிசுல இருக்கு!"

    சமீப காலங்களில் இந்தக்கரன்சி இல்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஏராளமான தள்ளுபடி விற்பனை, குலுக்கல் முறைப்பரிசுகள் என்று பல்வேறு ஊக்கங்கள் வந்துவிட்டன.

    சாதாரண மக்களிடையே அதிகம் புழங்க ஆரமித்திருப்பது இந்த மொபைல் மணிபர்ஸ் எனப்படும் மொபைல் வாலட்ஸ்.

    பல தனியார் நிறுவனங்கள் இந்த மொபைல் மணிபர்ஸ் சேவைகளைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. அவை சேவைக்கான விலையாக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனி சார்ஜ் போட்டு வசூலித்து வந்தனர். ஆனால் மார்க்கெட்டில் இது போன்ற பல நிறுவனங்கள் மொபைல் மணிபர்ஸ் சேவையைத்தொடங்கிவிட, போட்டியை எதிர்கொள்ள ஒரு பக்க சார்ஜைக்கைவிட்டுவிட்டன. உதாரணமாக பே பால் கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நுட்ப தள நிறுவனம். இதில் நாம் ஒரு அக்கவுன்ட் தொடங்கிக்கொள்ளலாம். இந்த அக்கவுன்ட் என்பது நாம் பாங்கில் தொடங்குவது போல இல்லை. எல்லாமே இணையத்தின் மூலம்தான். செக், பாஸ்புக் போன்றபேப்பர் சமாச்சாரம் ஒன்றும் கிடையாது. உங்கள் கிரெடிட் கார்டோ அல்லது பாங்க் அக்கவுண்டின் மூலமோ இந்த பே பால் கணக்கில் பணம் நிரப்பிக்கொள்ளலாம். பிறகு பே பாலில் உள்ள உங்கள் கணக்கு வழியாக கரன்சி இல்லாப்பரிவர்த்தனை செய்து பொருளோ சேவையோ வாங்கலாம். இதற்கு சார்ஜ் ஒன்றும் கிடையாது. ஆனால் நீங்கள் ஒரு பொருளையோ அல்லது உங்களின் சேவையையோ விற்கும் பட்சத்தில் உங்களின் கஸ்டமர் அவரின் பே பால் மூலம் உங்கள் பே பாலுக்கு பணம் செலுத்தும்போது, அதாவது நீங்கள் பணம் பெறும் வகைப்பரிவர்த்தனைகளுக்கு சார்ஜ் உண்டு.

    பே பால் அக்கவுண்ட்டில் உங்கள் கிரெடிட் கார்டை, ஒன்றுக்கு மேலானாலும் கூட, இணைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பே பால் அக்கவுண்ட்டின் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது எந்த கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்து உபயோகிக்கலாம். ஒரு வேளை பே பால் அக்கவுண்ட்டில் பணம் இல்லை எனும்போது அவசர தேவைக்கு உங்கள் கிரெடிட் கார்டு மூலம் அட்வான்ஸ் பணமும் எடுக்க முடியும். ஆனால் இந்த அட்வான்சுக்கு சார்ஜ் உண்டு.

    நம் ஊரிலும் பே பால் போல ஏகப்பட்ட மொபைல் மணிபர்சுகள் வந்துவிட்டன. பே டி எம், பிரு சார்ஜ், பே யூ மணி, மொபிக்விக், ஓலா மணி, எம் பைசா, ஏர்டெல் மணி போன்ற எல்லா மொபைல் பணப்பைகளுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இயங்குகின்றன.

    இந்த மொபைல் மணிபர்சுகளில் பிரீபெய்ட்போஸ்ட் பெயிட் என்னும் வகைகள் உண்டு. பிரீபெய்ட் வகையில் நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டில் முதலிலேயே பணத்தை ஏற்றிக் கொள்ள வேண்டும். அதுவும் இணையத்தின் மூலமாக உங்கள் வங்கிக்கணக்கில் இருந்தோ அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ ஏற்றிக்கொள்ளலாம். போஸ்ட் பெயிட் வகையில் உங்கள் கிரெட் கார்டையோ அல்லது வங்கிக்கணக்கையோ இணையத்தின் மூலம் இணைத்துக்கொண்டு பரிவர்த்தனை செய்யலாம்.

    இன்னொரு விஷயம் நீங்கள் கவனிக்க வேண்டியது இந்த மொபைல் மணிபர்ஸ் திறந்த வகையா அல்லது மூடின வகையா என்பது. இணைய தளத்தில் நீங்கள் ஒரு பொருளை வாங்கி மொபைல் மணிபர்ஸ் மூலம் செலுத்திய பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் அந்தப்பொருளைத்திருப்பி விடுகிறீர்கள். நீங்கள் செலுத்திய பணத்தை கம்பெனி இப்போது மீண்டும் உங்கள் மொபைல் மணிபர்சுக்கு திருப்பிக்கொடுத்து விடும். மூடின வகை பணப்பையாக இருந்தால் அந்தப்பணத்தை நீங்கள் மீண்டும் இன்னொரு செலவுக்குத்தான் பயன்படுத்த முடியும். ஆனால் திறந்த வகை பணப்பையில் அந்தப்பணத்தை நீங்கள் மறுபடியும் உங்கள் பாங்க் அக்கவுண்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

    தாமதமாக வந்த போதிலும், கூகுளின் வளர்ச்சி மிக விரைவாக இருக்கிறது. இது தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பணப்பைகள் மற்றும் இந்தியாவில் உள்ள சிறந்த ஆன்லைன் கட்டண பயன்பாடுகளில் ஒன்றாகும். கூகுள் பே மூலம் ஒருவர் நண்பர்களுக்குப் பணம் அனுப்பலாம், பில்களைச் செலுத்தலாம் மற்றும் ஆன்லைனில் வாங்கலாம் மற்றும் உங்கள் போனை ரீசார்ஜ் செய்யலாம் - அனைத்தும் யூ.பி.ஐ. வழியாகவும் நேரடியாகவும் பயனர்களின் வங்கிக் கணக்கிலிருந்து. கூகுள் பே உங்களின் தற்போதைய வங்கிக் கணக்குடன் செயல்படுவதால், பயனர்களின் பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் பாதுகாப்பாக உள்ளது மற்றும் கணக்கில் இருந்து நேரடியாகப் பற்று வைக்கப்படுகிறது அல்லது வரவு வைக்கப் படுகிறது. பணப்பையை மீண்டும் ஏற்றுவது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை மற்றும் கூடுதல் கே.ஒய்.சி. தேவையில்லை.

    மொபைல் மணிபர்சைத் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப்பார்ப்போம்.

    ஒரு கம்பெனியின் மொபைல் மணிபர்சை தேர்ந்தெடுக்கும்போது அந்தக்கம்பெனிக்கு எந்தெந்த ஆன்லைன் மற்றும் இதர நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தொடர்பு இருக்கிறது என்பதைப்பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு பே.டி.எம்.மை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு டெலிபோன், எலக்டிரிசிடி, கேஸ் பில் செலுத்தும் வசதி, துணிமணி, நகை, பேஷன் பொருட்கள், காய்கறி பழம் மற்றும் மளிகை சாமான்கள் வினியோகிக்கும் பல கம்பெனிகளுடன் ஒப்பந்தத்தொடர்பு இருக்கிறது. அதனால் ஒரு பே.டி.எம். கணக்கு வைத்துக்கொண்டாலே உங்களால் வீட்டுக்குத்தேவைப்படும் அத்தனை பொருட்களையும் வாங்கிவிடமுடியும்.


    அடுத்து உங்களுக்குக்கிடைக்கும் மதிப்பு. அமெரிக்காவில் புகழ் பெற்ற ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் மொபைல் பணப்பை வசதியை அவர்களுடைய 16 ஸ்டோர்களில் மட்டும் ஆரம்பித்தனர். வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கொடுத்த சலுகைகளும் தள்ளுபடிகளும் தாராளமாக இருந்ததால் ஸ்டார்பக்சின் மொபைல் பணப்பை மிகவும் பாப்புலர் ஆகிவிட, அமெரிக்கா முழுவதுமான தங்களின் வியாபாரத்திற்கு இப்போது அந்த வசதியைப்பரப்பிவிட்டனர். கொடுக்கும் காசுக்கு நல்ல மதிப்பு கிடைக்குமானால் வாடிக்கையாளர்கள் தயங்காமல் ஆதரிப்பார்கள். அது போன்ற நம் காசுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும் மொபைல் மணிபர்சைத்தேர்ந்தெடுக்க வேண்டும்.

    முக்கியமாகப் பார்க்க வேண்டியது மொபைல் மணிபர்ஸ் கம்பெனி நம்மிடம் வசூலிக்கும் சார்ஜ். இப்போது உங்களையும் என்னையும் போன்ற வாடிக்கையாளர்களிடம் மொபைல் மணிபர்ஸ் தொடங்கி அதற்குள் பணத்தை லோடு செய்யும்போதோ அல்லது அந்த மொபைல் மணிபர்ஸ் மூலம் பொருள் வாங்கும்போதோ எந்த வித சார்ஜும் வசூலிப்பதில்லை. ஆனால் நம் பணப்பையை நிரப்ப, கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால், அதற்கு சார்ஜ் உண்டு.

    நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால் வாடிக்கையாளர் உங்களிடமிருந்து வாங்கின பொருளுக்கு பணப்பை மூலம் செலுத்தினால் அதைப்பெறும் தொகையில் உங்களுக்கு ஒரு சார்ஜ் வசூலிப்பதுண்டு. சாதாரணமாக இப்போது இந்த சார்ஜ் 2 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை இருக்கிறது.

    "பிக் பாக்கெட் தொந்திரவு இல்லைன்றீங்க! ஆனா மொபைல் மணிபர்சில் பணம் பறிபோகும் ஆபத்தே இல்லியா?"

    "இருக்கு! நிச்சயமா இருக்கு!"

    "எப்படி ஜாக்கிரதையா இருக்கணும்?"

    முதலில் நல்ல பேரைச்சம்பாதித்த மொபைல் மணிபர்ஸ் கம்பெனியைத்தேர்ந்தெடுங்கள். உங்களுடைய மொபைல் போனை ஜாக்கிரதையாக வைத்திருக்க வேண்டும். வேறு யார் கையிலாவது கிடைக்குமானால் அவன் உங்கள் மணிபர்சில் இருக்கும் பணத்தைச்சு ரண்டிவிடக்கூடாதே! எனவே உறுதியான கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள். உங்கள் பிள்ளையின் பெயர் கணவரின் பெயர் போன்ற பாஸ்வோர்டெல்லாம் சாலாக்காகத்திருடி விடுவார்கள். ஒரு காபிடல் எழுத்து, ஒரு நம்பர், ஒரு ஸ்பெஷல் காரக்டர் (@, #, &) போன்ற காட்டமான பாஸ்வோடு வைத்துக்கொள்வது சிலாக்கியம்.

    "யேய் இவளே! என் மொபைலைப்பார்த்தியா" என்னும் கேள்வியைக்கேட்காமல் இருக்க வேண்டும்!

    அதாவது மொபைல் போனை கை தவறி எங்காவது வைத்துவிடும் பழக்கம் மிக ஆபத்தானது!

    உங்களுக்கு ஒரு போன் வரும்.

    "மேடம்! நா இந்த மொபைல் கம்பெனியிலேர்ந்து பேசறேன்! எங்க கம்பெனியோட சிறந்த கஸ்டமரா உங்கள செலக்ட் செஞ்சிருக்கோம். நீங்க உங்க பாஸ்வோர்டைச் சொன்னீங்கன்னா சரி பார்த்துடுவோம். அடுத்த பத்தே நிமிஷத்துல உங்க மணிபர்சுல பத்தாயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வோம்!"

    இந்தக்காலுக்கு உங்களின் பதில், "வைடா போனை!"

    இது அரதப்பழைய முறை பிராடு! ஏமாறாதீர்கள்!

    சின்னச்சின்ன பர்ச்சேசுக்கு மொபைல் மணி பர்சைப்பயன் படுத்துங்கள். அதிகத்தொகைக்கு ஆன்லைன் பாங்கிங்கோ அல்லது கிரெடிட்/டெபிட் கார்டோதான் சரி. மேலும் உங்கள் மொபைல் மணிபர்சின் உபயோகத்தை அடிக்கடி கவனியுங்கள். தப்பான சார்ஜ் ஏதும் இருந்தால் உடனே கம்பெனியுடன் பேசிச்சரி செய்துவிடுங்கள். கால தாமதம் செய்வது உங்களுக்கு எந்த விதத்திலும் நன்மை தராது.

    இந்த மொபைல் மணி பர்ஸ் மிக நல்ல தொழில் நுட்ப அனுகூலம்தான். ஆனால் அதிலுமே கொஞ்சம் சூதனமாக இருத்தல் மிக அவசியம்.

    அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் "டிஜிட்டல் இந்தியா" நமது தேசத்திற்கு தொழில்நுட்ப அதிகாரம் அளித்து அறிவுசார்ந்த பொருளாதார தேசமாக்க எடுக்கப்பட்டுள்ள நல்ல முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. "முகமற்ற, காகிதமற்ற, கரன்சியற்ற" தேசமாக்குவது இந்த டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய குறிக்கோளாகும்.

    "மாயாண்டி! இந்தப்பெட்டியில இருக்கற கள்ள நோட்டுக்களை நம்ம லாக்கர்ல பத்திரப்படுத்தி வை…" வகை வசனங்கள் தமிழ் சினிமாவில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பணமுதிர் காலத்துக்குள் நுழைந்துவிட்டோம்!

    • அவனவன் ஆட்ட அறுக்க எடத்துல சொவரொட்டி கிடைக்காதான்னா ஆலா பறக்குதான்..
    • இதை சாப்பிட்டா நல்ல ரத்தம் ஊறும். அதாவது ரத்தத்துல செவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

    ஏலேய்.. மக்கா.. நம்ம மேல தோட்டத்துல ஆளை வைச்சு பெரியப்பா ஆடு அறுக்காவ..

    ஒன்னோட அம்ம நாலு காலும் கிடாக்கறியும் வேணுமுன்னு சொன்னா. விக்கதுக்கு ஆட்ட அறுக்கல பெரியப்பா.

    நம்ம குடும்பத்துக்கே ரெண்டு கிடாவை அறுத்து போட்டாலும் பத்தாதே. வேற யாராவது வேணுமுன்னு கேட்டா பங்கு போட்டு கொடுத்துடுவாவ ஒன்னோட பெரியப்பா.

    இந்தா இந்த நீச்சத்தண்ணியை பெரியப்பா கிட்ட கொடுத்துட்டு இதே தூக்கு வாளியில எங்க வீட்டுக்கும், ஒங்க வீட்டுக்கும் சேத்து ஆட்டுக்கறிய வாங்கிட்டு வா மக்கா! என்றார் பெரியம்மா.

    தோட்டத்துக்கு சென்றதும் நீச்சத்தண்ணியை மட மடவென குடித்த பெரியப்பா எலும்பில்லாத கறியை அவர்கள் தூக்கு வாளிக்குள் அடைத்தார்.

    பனையோலையை பட்டையாய் பிடித்து அதே போல் எலும்பில்லாத கறியை எனக்கும் மடித்து விட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை..

    ஆட்டை அறுக்கும் அண்ணனை பார்த்து .. ஏலேய் ஆறுமுகம்! அந்த சொவரொட்டியை எடுத்து இந்த பட்டையில வைச்சு மடிச்சு இவங்கிட்ட கொடுத்தனுப்பு என்றார்.

    சுவரொட்டின்னா! என்னவா இருக்கும் என பேந்ந பேந்த முழித்த படியே பெரியப்பாவை பார்த்து...

    பெரியப்போ.. அம்ம கறி மட்டும் தான் வாங்கிட்டு வர சொன்னாவ.. சொவரொட்டியெல்லாம் வேணாம் என்றேன்.

    இவன் எங்கே உள்ளவமுல. சரியான கோட்டிக்காரனா தான் இருப்பானோ..

    அவனவன் ஆட்ட அறுக்க எடத்துல சொவரொட்டி கிடைக்காதான்னா ஆலா பறக்குதான்..

    எடுத்துட்டு போய் நல்லா சாப்பிடுவான்னு பாத்தா சொவரொட்டி வேணாமுன்னு சொல்லிட்டு நிக்கான்.

    "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"

    ஏலேய்! ஆறுமுகம் பட்டையில அந்த சொவரொட்டியும் சேத்து வைச்சு முணிஞ்சு இவங்கிட்ட கொடுலேய்! என்றார் பெரியப்பா.

    ஓலை பட்டையில் ஆட்டுக் கறியை பொதிந்து கொண்டிருந்த ஆறுமுகம் அண்ணன் என்னை பார்த்து...

    ஏல தம்பி! சுவரொட்டின்னா ஆட்டோட ஈரல் பக்கத்தில் இருக்கும் ஒரு பகுதி. கிட்டத்தட்ட மண்ணீரல் மாதிரி. இதை சாப்பிட்டா நல்ல ரத்தம் ஊறும். அதாவது ரத்தத்துல செவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

    நீ ஆளு சாட்டவரைக்காய் மாதிரி ஒல்லியா இருக்கால்லா.. அதான் உங்க பெரியப்பா புள்ள சாப்பிடட்டுமுன்னு கொடுத்து விட சொன்னாவ! என்றான் ஆறுமுகம் அண்ணன்.

    பெரியப்பாவின் பாசத்தை நினைத்து மனதுக்குள் ரசித்தவாறே வீட்டை நோக்கி நடந்தேன். பட்டென்று சுவரொட்டி தரும் போது பெரியப்பா சொன்ன பழமொழி நினைவில் வந்தது.

    "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.." ஏன் அவ்வாறு பெரியப்பா சொன்னார்.

    இந்த பழமொழிக்கான நிஜ அர்த்தம் என்ன.. இந்த பழமொழியை சரியாக உச்சரிக்கிறோமா! என்ற பல்வேறு சிந்தனைகள் மனதில்..

    ஒரு நல்ல பொருளை வேண்டாம் என்றாலோ அல்லது அந்த பொருளின் பயனை உணராது சரியாக பயன்படுத்தாமல் இருந்தாலோ இந்த கழுதை பழமொழியை உதாரணமாக சொல்வதை கேள்வி பட்டு இருக்கிறேன்.


    கழுதை எந்த கோவிலில் போய் கற்பூர ஆரத்தியை பார்த்தது. கழுதை கற்பூர வாசனையை நுகர வேண்டிய அவசியம் என்ன? என நிறைய கேள்விகளும், பதில்களும் மனதில்.

    நிறைய தேடலுக்கு பின்..

    "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்ற சொல்லுக்கு பின் இருக்கும் அர்த்தத்தை தெரிந்து கொண்டேன்.

    நான் தெரிந்த தகவல்களை நீங்களும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..! பதிவிற்கு செல்வோம்.

    அந்த காலத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு பழமொழியை கூறினார்கள்.

    அவர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு விஷயங்களை கூறுகின்றன.

    ஒவ்வொரு பழமொழியின் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது. நிறைய பழமொழிகளை பேச்சு வழக்கில் சிதைத்து நாமாக ஓரோர் அர்த்தம் கற்பித்து கொள்கிறோம்.

    முந்தைய தலைமுறை வரை நம் முன்னோர்கள் படுத்து உறங்குவதற்கு பாய் எனப்படும் புல்லினால் செய்யப்பட்ட விரிப்பை தான் பயன்படுத்தினார்கள்.

    படுத்துறங்க பயன்படுத்தும் அந்த பாயினை புல் கொண்டு தயாரித்தார்கள்.

    சம்பு என்ற கோரைப்புல் மற்றும் கற்பூர புல் என்று இரண்டு வகை புற்களை பாய் தயாரிக்க பயன்படுத்தினார்கள்.

    அந்த காலத்தில் பாய் தயாரிக்க பயன்படுத்தும் கோரைப் புல்லுக்கு கழு என்ற வேறு பெயர் உண்டு.

    பாய் தயாரிக்க பயன்படுத்தும் கழு என்ற கோரைப் புல்லை கொண்டு பாய் பின்னும் போது கற்பூர வாசம் வரும்.

    "கழு" என்ற கோரைப் புல்லை பதப்படுத்தி பாய் தைக்கும் போது அந்த புல்லில் இருந்து வரும் கற்பூர வாசனை நமது மூக்குக்கு தெரியும்.

    கழு- தைக்க - தெரியும் - கற்பூர வாசனை என்பது என்பது தான் பழமொழியின் நிஜமான அர்த்தமும் உச்சரிப்பும் ஆகும்.

    கழு என்ற கோரைப் புற்களை கொண்டு தைத்த பாயில் படுக்கும் போது அந்த பாயில் இருந்து வரும் கற்பூர வாசத்திற்கு தேள், பூரான் மற்றும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் பாயில் படுத்திருப்பவர்களை நெருங்காது.

    அதனால் தான் அந்த காலத்தில் கோரைப் புற்களில் செய்த பாயை தூங்குவதற்காக நமது முன்னோர்கள் பயன் படுத்தினார்கள்.

    இந்த செய்தியை தெரிவிக்கவே பெரியவர்கள் "கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்" என்று சொன்னார்கள்.

    பேச்சு திரிபில் இந்த வார்த்தை நாளடைவில் மாறி கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று ஆகிவிட்டது.

    மற்ற படி கழுதைக்கும், கற்பூர வாசத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதே நிஜம்.

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    • உலகில் உள்ள ஒவ்வொன்றையும் தான் படைப்பதால் தனக்குத் தான் அதிக பெருமை உண்டு என்று பிரம்மன் கூறினார்.
    • சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக கோவில் கொண்டிருக்கிறாள்.

    கோவில்கள் நிறைந்த கும்பகோணம் பகுதியில் எல்லாவித பிரார்த்தனைக்கும், எல்லாவித பரிகாரங்களுக்கும் ஆலயங்கள் உள்ளன. அந்த வரிசையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கும் ஆலயம் இருக்கிறது. கும்பகோணம் அருகே பூந்தோட்டம் கூத்தனூரில் சரஸ்வதி ஆலயம் அமைந்திருக்கிறது.

    இந்தியாவிலேயே சரஸ்வதிக்கென்று ஆலயம் இருப்பது கூத்தனூரில் மட்டும்தான். இந்த ஆலயம் உருவான பின்னணியில் புராண வரலாறு ஒன்று கூறப்படுகிறது.

    ஒரு சமயம் பிரம்மனுக்கும், அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றையும் தான் படைப்பதால் தனக்குத் தான் அதிக பெருமை உண்டு என்று பிரம்மன் கூறினார். ஆனால் அதை சரஸ்வதி ஏற்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஞானம் தரும் கல்வியை கொடுப்பதால் கல்விக்கு அரசியான தனக்குத்தான் அதிக பெருமை என்று சரஸ்வதி வாதிட்டார்.

    அவர்களின் இந்த விவாதம் பெரிய சர்ச்சையாக மாறியது. ஒருவரை ஒருவர் சாபம் இட்டனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் பூலோகத்தில் பிறக்க நேரிட்டது. ஒரே தம்பதிக்கு அவர்கள் அண்ணன், தங்கையாக பிறந்தனர்.

    பிரம்மனுக்கு பகுகாந்தன் என்று பெயரிடப்பட்டது. சரஸ்வதிக்கு சோபனை என்று பெயரிட்டனர். அவர்கள் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டினார்கள். அவர்களுக்கு பெற்றோர் வரன் தேடினார்கள். அந்த சமயத்தில்தான் அவர்கள் இருவருக்கும் தங்களது முந்தைய நிலை நினைவுக்கு வந்தது.

    கணவன்- மனைவியாக இருக்கும் தாங்கள் வேறு ஒரு திருமணத்தை எப்படி செய்துகொள்ள முடியும் என்று தவித்தனர். இதையடுத்து இரு வரும் சிவபெருமானை மனதுக்குள் நினைத்து, உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் முன்பு சிவபெருமான் தோன்றி என்ன பிரச்சினை? என்று கேட்டார்.

    அதற்கு பிரம்மனும், சரஸ்வதியும் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தால் பூலோகத்தில் பிறந்த சம்பவத்தை தெரிவித்து, இனி திருமணம் செய்வது இயலாத காரியம். எனவே தங்களுக்கு நல்ல வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். உடனே சிவபெருமான் அதற்கு ஒரு தீர்வை கூறினார்.

    சரஸ்வதியை மட்டும் பூலோகத்தில் தனியாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க அறிவுறுத்தினார். உண்மையான பக்தியுடன் வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வாரி வழங்க வேண்டும் என்றும் அருள் பாலித்தார். அதை பிரம்மாவும், சரஸ்வதியும் ஏற்றுக்கொண்டனர்.

    அதன்படி பிரம்மா சாபத்தில் இருந்து விடுதலை பெற்று படைப்பு தொழிலை தொடர சென்றார். சரஸ்வதி மட்டும் பூலோகத்திலேயே தங்கிவிட்டார். அவருக்காக அமைந்ததுதான் கூத்தனூர் ஆலயம். அங்கு சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக கோவில் கொண்டிருக்கிறாள்.

    இதன் காரணமாக அவள் அமர்ந்த இடம் அந்த காலத்தில் அம்பாள் புரி என்று அழைக்கப்பட்டது. ஹரி நாகேஸ்வரம் என்ற பெயரிலும் சிறிது காலம் அந்த ஆலய பகுதி அழைக்கப்பட்டது.

    தற்போதைய திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. பூந்தோட்டம் பகுதியில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்த பூந்தோட்டம் பகுதியில்தான் புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

    இரண்டாம் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் புலவர் ஒட்டக்கூத்தர் அங்கு வாழ்ந்து வந்தார். பெரும்புலவராக திகழ்ந்த அவர் வரகவி பாடும் திறமை வேண்டி சரஸ்வதியை வழிபட முடிவு செய்தார். இதனால் அவர் பூந்தோட்டம் பகுதியில் அமைந்திருந்த சரஸ்வதி ஆலயத்துக்கு வந்து வழிபடத் தொடங்கினார்.

    தினமும் காவிரி நதியில் தீர்த்தம் எடுத்து வந்து சரஸ்வதி தேவிக்கு அபிஷேகம் செய்து, பூஜைகள் செய்து மனமுருக வழிபடுவதை அவர் வழக்கத்தில் வைத்துக் கொண்டார். அவருடைய பூஜையால் சரஸ்வதி மனம் மகிழ்ந்தார். ஒட்டக்கூத்தருக்கு கல்வி செல்வத்தை வழங்க தீர்மானித்தார்.

    அதன்படி ஒட்டக்கூத்தருக்கு தன் வாய் தாம்பூலத்தை வழங்கினார். இதன் மூலம் ஒட்டக் கூத்தருக்கு வரகவி பாடும் திறமை கிடைத்தது. அவர் 3 சோழ மன்னர்களின் அரசவை புலவராக இருந்ததாக குறிப்புகள் உள்ளன.

    அவரது கவிபாடும் திறமையை போற்றும் வகையில் அவருக்கு பூந்தோட்டம் பகுதியை கொண்ட இடத்தை சோழ மன்னர் தானமாக வழங்கினார். இதன் காரணமாக சரஸ்வதி ஆலயம் இருந்த இடம் 'கூத்தன் ஊர்' என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் பேச்சு வழக்கில் அது கூத்தனூர் என்று மாறியது.

    மன்னர்கள் ஆதரவு இருந்ததால் அங்கு சரஸ்வதிக்கு புலவர் ஒட்டக்கூத்தர் தனி ஆலயம் அமைத்ததாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. இந்த ஆலயமே தமிழகத்தில் சரஸ் வதிக்கு இருக்கும் ஒரே ஆலயமாக திகழ்கிறது.

    ஒரு தடவை புலவர் ஒட்டக்கூத்தரை சிலர் கொலை செய்ய முடிவு செய்து விரட்டினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய ஒட்டக்கூத்தர் சரஸ்வதி ஆலயத்துக்குள் நுழைந்து மறைந்து கொண்டார். அப்போது அவரை சூழந்துகொண்ட அந்த கும்பல் பரணி நூல் பாடினால் விட்டு விடுவதாக சொன் னார்கள். அதன் பேரில் ஒட்டக்கூத்தர் பரணி நூல் பாடியதாகவும், அதற்கு சரஸ்வதி தேவியே துணை புரிந்ததாகவும் வரலாறு உள்ளது. அந்த பரணி பாடல் வரிகளில் வாணித் தாயே என்று சரஸ்வதியை ஒட்டக்கூத்தர் புகழ்ந்திருப்பதை காணலாம்.

    இத்தகைய சிறப்புடைய சரஸ்வதி ஆலயத்தை தவற விடலாமா? எனவே கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி செல்வத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த ஆலயத்துக்கும் தவறாமல் சென்று வர வேண்டும்.

    கூத்தனூர் சரஸ்வதியை மகாகவி பாரதியார் பல தடவை சென்று வழிபட்டு உள்ளார். சரஸ்வதி ஆலயம் முன்பு நீண்ட தியானத்தில் இருப்பதை பாரதியார் வழக்கத்தில் வைத்தி ருந்தார். அதன் காரணமாக அவர் உலகப் புகழ்பெற்ற கவிஞராக மாற முடிந்தது என்று சொல்கிறார்கள்.

    இந்த ஆலயம் ஒரே ஒரு பிரகாரத்தை கொண்டது. அந்த ஒரே பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்மபுரீஸ்வரர், பால தண்டாயுதபாணி உள்ளனர். கருவறை யில் மூலவராக சரஸ்வதி தேவி சிலை உள்ளது. கருவறை முன்பு அன்ன வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    கருவறைக்குள் சரஸ்வதி தேவி வெண்மை நிற ஆடை அணிந்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறார். வலது கீழ் கையில் சின் முத்திரை செய்தபடி காட்சி தருகிறார். இடது கையில் புத்தகம், வலது மேல் கையில் அட்சர மாலை, இடது மேல் கையில் அமிர்த கலசம் தாங்கி இருக்கிறார். ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் சரஸ்வதி தேவியின் இரு விழிகளும் கருணை பொழியும் வகையில் உள்ளன. இதனால்தான் இந்த தலத்தை ஞான பீடம் என்று சான்றோர்கள் போற்றுகின்றனர்.

    சரஸ்வதி இந்த தலத்தில் தவக் கோலத்தில் இருக்கிறார். நவகிரகங்களில் புதன் கல்விக்குரியதாக கருதப்படுகிறது. எனவே கூத்தனூர் தலத்தில் புதன்கிழமை சரஸ்வதியை வழிபடுவது மிகவும் நல்லது. விஜயதசமி தினத்தன்று ஏராளமானோர் இங்கு வழிபட்டுதான் தங்கள் குழந்தைகளின் கல்வியை தொடங்குவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் புலவர் ஒட்டக்கூத்தருக்கும் சிலை இருக்கிறது. அந்த சிலை முன்பு பலகையில் பரப்பி இருக்கும் நெல்லில் குழந்தைகள் மோதிர விரலால் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை எழுதி கல்வியை தொடங்குவது வழக்கம். அதன்பிறகு அந்த நெல்லில் அ, ஆ எழுதி படிப்பை தொடங்கி வைப்பார்கள். இந்த வழிபாடு காரணமாக குழந்தைகள் கல்வியில் சிறப்பான இடத்தை பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    கூத்தனூரில் சரஸ்வதியை உரிய ஐதீகங்களுடன் வழிபட வேண்டும். யார் ஒருவர் சரஸ்வதி அருளை பெறுகிறார்களோ அவர்களுக்கு காவியங்கள் படைக்கும் அளவுக்கு திறமை உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

    இந்த தலத்தில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. மேலும் அம்பாளுக்கு உரிய பவுர்ணமி மூல நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் சென்றால் சரஸ்வதியை சிறப்பு அலங்கார கோலத்தில் காணலாம்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப்பிறப்பின் போது லட்சார்ச்சனை நடத்தப்படுவதும் வழக்கத்தில் உள்ளது. இந்த ஆலயம் அருகே புகழ்பெற்ற மாப்பிள்ளை சாமி கோவில் இருக்கி றது. அங்கு வழிபட்டால் திருமண தடைகள் விலகும் என்பது ஐதீகமாகும். அந்த ஆலயத்தின் கருவறையில் கல்யாண பந்தல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கூத்தனூரை தட்சிண திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கிறார்கள். இந்த ஊரில் சிவன் கோவிலில் துர்க்கையும், பெருமாள் கோவிலில் மகாலட்சுமியும், தனி கோவிலில் சரஸ்வதியும் அருள் பாலிக்கின்றனர். இதனால் ஒரே ஊரில் முப்பெரும் தேவியையும் தரிசிக்க முடியும் என்ற சிறப்பை கூத்தனூர் பெற்றுள்ளது.

    ஆகையால் கும்பகோணம் யாத்திரையில் கூத்தனூர் ஆலய தரிசனத்தை தவற விட்டு விடாதீர்கள். கும்பகோணம் செல்பவர்கள் பெரும்பாலும் திருநள்ளார் செல்வதுண்டு. அல்லது திருநள்ளார் வழித் தடத்தில் உள்ள ஆலயங்களுக்கு செல்வதுண்டு.

    ராகு, கேது தோஷங்கள் நீக்கும் திருபாம்புரம் அந்த வழித்தடத்தில் தான் உள்ளது. எனவே கும்பகோணத்தில் இருந்து திருநள்ளார் செல்லும் வழித்தடத்தில் இருக்கும் ஆலயங்களை தரிசிக்க செல்லும் போது கூத்தனூருக்கும் அவசியம் செல்லுங்கள். பூந்தோட்டத்தில் இறங்கி கூத்தனூர் செல்லலாம். வாகனங்களில் செல்பவர்கள் மிக எளிதாக சென்று வர முடியும்.

    அடுத்து நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் எந்தவித இடையூறும் இல்லாமல் மிக எளிதாக வெற்றிகளை பெறுதற்கு கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் ஆலயம் உள்ளது. அங்கு எப்படி வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் காணலாம்.

    • முன்பெல்லாம் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் எவ்வளவு தூரம்? என்று கேட்போம்.
    • உழைத்தால் எதிர்பார்க்கும் காலத்திற்கும் முன்பே வெற்றிக்கனி நம் கரங்களில் கனிந்து நிற்கும்!

    நேரத்தை நேசிக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

    நமது வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றியும் சரியான நேர நிருவாகத்தின் அடிப்படையிலேயே அமைவு பெறுகிறது. நேரம் என்பது நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதில் இல்லை. நமது ஒவ்வொரு செயலையும் கால அளவின் அடிப்படையில் திட்டமிட்டுக்கொண்டு அதற்கேற்ப, அதற்குள் செய்து சாதிக்கும் திறமையே நேர நிருவாகம்.

    மனித வாழ்க்கையின் பருவ வயது நிலைகளும், இயற்கையின் பருவ கால நிலைகளும் நேரங்களைக் கொண்டே கணக்கிடப் பெறுகின்றன. நாள், வாரம், மாதம், ஆண்டு என நாள்கணக்கில் காலம் பகுக்கப் பட்டிருந்தாலும், நாளின் பகுதிகள் மணி, மணித்துளி, விநாடி என நேரங்களாலேயே அளக்கப்படுகின்றன.

    முன்பு ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தையும் இரவு பகல் என இரண்டாகப் பிரித்திருந்தோம். உறங்குவதற்கு இரவு என்றும், விழித்துப் பணி புரியப் பகல் என்றும் ஒதுக்கி இருந்தோம். காலத்தின் சுழற்சியில், வேலைக்குப் போகும் மக்கள் பெருகிவிட்ட சூழலில், தற்போது, மூன்று எட்டு மணிநேரங்களாக இருபத்துநாலுமணி நேரம் பகுக்கப்பட்டு வாழ்வியல் கற்பிக்கப் பட்டுள்ளது.

    எட்டுமணி நேரம் உழைப்பு!, எட்டு மணிநேரம் களிப்பு! எட்டுமணிநேரம் ஓய்வு! என ஒவ்வொரு நாளையும் பகுத்துப் பயன்படுத்தினால் நிறைந்த நன்மைகள் வாய்க்கும் என நம்புகிறோம். ஆனால் கடைபிடிக்க முடிகிறதா? என்பது பெரும் கேள்விக் குறியே!.

    மனித வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் இடமும் காலமும் களம் அமைத்துக் கொடுக்கின்றன. எனினும் தற்போது காலம் என்னும் நேரம் முந்திக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் எவ்வளவு தூரம்? என்று கேட்போம். மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்ல எவ்வளவு தூரம் எனக் கேட்டால் 500 கிலோ மீட்டர் எனப் பதில் வரும். ஆனால், தற்போது எவ்வளவு தூரம்? எனக்கேட்டால் ஆறு மணிநேரப் பயணம் என்றே பதில் வருகிறது. ஆம்! தூரத்தை நேரத்தால் அளக்கக் கூடிய நவீனக் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நேரம் சார்ந்திருப்பதால் வாழ்க்கையும் கடிகார முட்களைப்போல விரைந்து கொண்டே இருக்கிறது. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. காலத்தின் ஓட்டத்திற் -கேற்ப நமது வாழ்வின் ஓட்டமும் அமையவில்லையென்றால் நாம் பின்தங்கிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

    காலையில் விழித்து எழுவது தொடங்கி, இரவு உறங்கப் போவது வரை நேரக் கணக்கீடோடு கூடிய திட்டமிடலை வைத்துக் கொண்டால்,நாள் முழுவதும் வெற்றிச் சாதனைகளாகவே அமைந்து போகும்.

    நேரத் திட்டமிடலே நிருவாக வெற்றிகள் அனைத்திற்கும் தாரக மந்திரம். ஒவ்வொரு வெற்றிகரமான மனிதரும் கடிகாரத்தை முந்தியடிப்பவர்களாகவே செயல்படுபவர்கள்.

    ஒரு இயந்திரக் கருவியை உற்பத்தி பண்ணுவதற்கான தொழிற்சாலை ஒன்று ஒரு நகரத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்தது. அதே கருவியை உற்பத்தி பண்ணும் அதே போன்றதொரு தொழிற்சாலை கொஞ்ச நாளில் பக்கத்திலுள்ள கிராமத்தில் தொடங்கப்பட்டு அதுவும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஓராண்டிற்குப் பிறகு, கிராமத் தொழிற்சாலையில் உற்பத்தி ஆகும் இயந்திரக் கருவி தரத்தில் மேம்பட்டதாகத் திகழ்வதாகச் சந்தையில் பேசப்பட்டது.

    விற்பனையிலும் நகரத் தொழிற்சாலைக் கருவியை விட,கிராமத் தொழிற்சாலைக் கருவி அதிக எண்ணிக்கையை எட்டிப் பிடித்தது.

    'இரண்டும் ஒரே மாதிரி தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் ஒரே மாதிரி இயந்திரக் கருவிகள்!; ஆனால் கிராமத்தில் உற்பத்தியாவதற்கு மட்டும் தரம் பெருக என்ன காரணம்?' நேரில் சென்று பார்வையிட்டு இரண்டு மூன்று கருவிகளையும் விலைகொடுத்து வாங்கி வந்து ஆராய்ச்சி பண்ணத் திட்டமிட்டார் நகரத் தொழிற்சாலையின் அதிபர்.

    தான் இன்னாரென்று கூறாமல், கிராமத் தொழிற்சாலைக்குள் நுழைந்தவர், தொழிற்சாலை இயங்கும் முறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இரண்டு மூன்று இயந்திரக் கருவிகள் வாங்கப் போவதாகத் தெரிவித்தார். உள்ளே தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினார். தொழிற்சாலையின் எல்லா அமைப்புகளும் அவருடைய தொழிற்சாலையைப் போலவே இருந்தன; பணிபுரிந்த தொழிலாளர்களும் அவரிடம் பணிபுரிபவர்களைப் போலவே பணி புரிந்து கொண்டிருந்தனர்.

    அப்போது நண்பகல் ஒரு மணி ஆயிற்று; தொழிற்சாலையின் மேஸ்திரி தன்னிடமிருந்த விசிலை வாயில் வைத்து நீள ஊதினார்; அவ்வளவுதான் அடுத்த ஓரிரு வினாடிக்குள் சொல்லி வைத்தாற்போல எல்லா இயந்திரங்களும் நின்று போயின; பணியில் இருந்த அத்தனைத் தொழிலாளர்களும் மொத்தமாகச் சாப்பிடும் கூடத்திற்குள் நுழைந்து விட்டனர். ஆச்சரியமாகப் பார்த்தார் நகரத் தொழிற்சாலையின் அதிபர். ஆம்! சாப்பாட்டு நேரத்திற்கான இடைவேளை நேரம் அது.

    அடுத்து அரை மணி நேரம் ஆனவுடன் மேஸ்திரி விசிலை எடுத்து ஊதினார். சொல்லி வைத்தாற்போல ஓரிரு வினாடிக்குள் தொழிற்சாலைக்குள் எல்லாப் பணியாளர்களும் வந்தனர்; உடனே உற்பத்தி இயந்திரங்கள் ஓடத் தொடங்கி விட்டன. நகரத் தொழிற்சாலை அதிபருக்கு மறு படியும் ஆச்சரியம்.

    மேஸ்திரி வந்து கேட்டார்,"ஐயா! சுற்றிப் பார்த்து விட்டீர்களா? எத்தனை இயந்திரக் கருவிகளை வாங்கப் போகிறீர்கள்?."

    நகரத் தொழிற்சாலை அதிபர் சொன்னார்," மேஸ்திரியாரே! இப்போது எனக்கு உங்கள் இயந்திரக் கருவிகள் தேவைப்படவில்லை; உடனடியாக எனக்குத் தேவைப்படுவதெல்லாம் உங்கள் கையில் இருக்கும் விசில் மட்டும் தான். உங்களிடமுள்ள விசிலில் ஒரு மூன்று மட்டும் விலைக்குக் கிடைக்குமா?"

    நகரத் தொழிற்சாலை அதிபர் கூறியது புரியாமல் திகைத்தார் மேஸ்திரி.

    உண்மைதான். இரண்டு தொழிற்சாலைகளின் இயந்திரங்களிலும் எந்தக் குறையும் இல்லை; ஆனாலும் உற்பத்தியாகும் கருவிகளின் தரம் குறைவதற்குக் காரணம் தன்னிடம் பணியாற்றும் பணியாளர்களின் தரம் குறைபாடு உடையதாக இருப்பதே!. விசிலடித்ததும் உணவு இடைவேளைக்குப் போவதும், மீண்டும் விசிலடித்ததும் சுணக்கமின்றி உடனே வந்து பணியைத் தொடர்வதும் கிராமத்துப் பணியாளர்கள் நேரத்தை அனுசரித்து, நேரப்படி செயலாற்றும் தரத்தின் அடையாளம். அதனால் தான் உற்பத்திப் பொருளும் தரமானதாக இருக்கிறது.


    நேரத்தில் வினையாற்றும் திறமே தரத்திற்குச் சான்று பகர்கிறது. நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழித்தால் வீணாக விரயமாகும் நேரத்தை மிச்சப்படுத்திப் பயனுள்ள மற்ற செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.

    காலம் மூன்று வகைகளாகக் கூறப்படுகின்றன; கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பவை அவை. இதையே நாள் கணக்கில் மிக எளிமையாக நேற்று,இன்று,நாளை என்றும் கூறலாம்.

    நேற்று என்பது கடந்து போன மாயம்!;

    நாளை என்பது கையில் அகப்படாத ஜாலம்!;

    இன்று மட்டுமே கண்களுக்குத் தெரியும் நிஜம்!.

    எனவே கடந்து போன நேரங்களை எண்ணிக் கலங்கத் தேவையில்லை; அதனால் பலனுமில்லை. வருங்காலம் குறித்துக் கனவு காணவும் தேவையில்லை;அது சிலருக்கு வாய்க்கலாம்;வாய்க்காமலும் போகலாம். ஆனால், இன்று மட்டுமே நேரில் தோன்றும் நிஜம். அதனால் வாய்த்திருக்கும் இன்றைய பொழுதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நேர நிருவாகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.' பிரசண்ட்'(Present) என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் 'பரிசு' என்றும் 'இன்று' என்றும் இருவகைப் பொருள்கள் உண்டு. ஆகவே வாய்த்திருக்கும் இன்றைய பொழுது முழுவதையுமே பரிசாக ஏற்றுக்கொண்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.


    ஒரு வளமான நாடு.அந்த நாட்டினை ஆளும் அரசனுக்கு வாரிசுகள் அதிகம். எனவே அரசன் ஒரு புதுமையான திட்டத்தை அடுத்து அரசுரிமை ஏற்கவிருக்கும் மன்னரிலிருந்து செயல்படுமென அறிவித்தான். யார் ராஜாவாக வந்தாலும் அவர்களது ஆட்சிக்காலம் ஐந்தாண்டுகள் மட்டுமே!. ஐந்தாண்டுகள் ஆட்சி முடிந்தவுடன், அவர்களது நாட்டிலுள்ள ஒரு தீவுக்கு அனுப்பப் படுவர்; ஆயுளின் மீதிக்காலத்தை அவர் அங்கு தான் கழிக்க வேண்டும். அந்தத் தீவு வாழ்வதற்கான எந்த வாய்ப்பு வசதிகளும் இல்லாத தீவு. கொடிய மிருகங்களும் உண்டு. ஆண்டுகள் பல கடந்தன; அரச வாரிசுகளில் பலர் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டாலும், அதற்குப்பின் நிகழப்போகிற தீவுகடத்தலுக்கு அஞ்சி ஆட்சிப் பொறுப்பிற்கு வர மறுத்தனர்.

    யாரும் ஆட்சிக்கு வர விருப்பப்படவில்லை என்றால் அடுத்த அரசனை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது?. அமைச்சர்கள் கூடி, நகரத்திலேயே அறிவுத் திறமும் சாதூரியமும் மிக்க இளைஞன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனை ராஜாவாக்க முடிவெடுத்தனர். முதலில் மறுப்புத் தெரிவித்த இளைஞன் பிறகு, யோசித்து, ராஜாவாகச் சம்மதித்தான்.

    ஐந்துவருட ராஜ பதவி என்பது சரிதான்; ஆனால் அதற்குப் பிந்தைய தீவு வாழ்க்கை?. பதவியேற்ற மறு நாளே அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுடன் தீவுக்குப் பயணமானான். தீவில் ஆங்காங்கே முந்தைய மன்னர்களின் எலும்புக்கூடுகள் கிடந்ததைப் பார்த்தான்; கொடிய மிருகங்கள் உலாவுவதையும் கண்டான். வாழ்வதற்கான எந்தச் சூழ்நிலையும் அங்கு இல்லாதிருப்பதை உணர்ந்தான்.

    நாட்டின் தலைநகர் திரும்பியவுடன் நாட்டின் வளர்ச்சிக்குப் பல நல்ல திட்டங்களை வகுத்ததோடு, அந்தத் தீவின் வளர்ச்சிக்கு ஓர் ஐந்தாண்டுத் திட்டத்தைச் சிறப்பாக உருவாக்கினான்.

    1. தீவின் வனப்பகுதியில் ஒரு பகுதியைத் திருத்தி வேளாண் நிலங்களை உருவாக்குதல்

    2. கொடிய விலங்குகளைப் பாதுகாப்பான அடர்வனப் பகுதிக்குள் அனுப்புவது.

    3. அரசின் நிரந்தரமான பாதுகாப்புப் படை ஒன்றை அங்கே நிறுத்தி வைப்பது.

    4. அந்தத் தீவில் குடியிருப்புகளை உருவாக்கி மக்களை அங்கே குடியேற்றுவது.

    5. தீவைச் சுற்றிலும் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் சிறு சிறு கப்பல்கள் வந்து நிற்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்

    ஆகியவற்றை அவன் ஆட்சியிலிருந்த ஐந்தாண்டுகளில் ஆண்டிற்கொரு திட்டமாய்ச் செயபடுத்தித் தீவைச் சொர்க்கபுரியாக மாற்றிவிட்டான்.

    பிறகென்ன? ஐந்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பு முடிந்ததும் மற்றொரு நாட்டிற்கு அரசனைப்போல அந்த இளைஞன் அந்தத் தீவைச் சென்று அடைந்தான்.

    இலக்குகள் எப்போதும் கடினமானவையாகவே இருக்கும். ஆனால் அவற்றை அடைவதற்கான முயற்சியில் நேரத்தைத் தவற விடாது உழைத்தால் எதிர்பார்க்கும் காலத்திற்கும் முன்பே வெற்றிக்கனி நம் கரங்களில் கனிந்து நிற்கும்!

    உன்னத உழைப்பாளிகளுக்கு இந்த நேரம் அந்த நேரம் என்றெல்லாம் இல்லை!

    எல்லா நேரமும் நல்ல நேரமே!

    தொடர்புக்கு 9443190098

    • நல்லதை செய்பவர்களுக்கு கெடுதல்கள் அதிகம் நடக்கிறது.
    • நீங்கள் செய்த புண்ணித்தின் பலனை அடைவது உறுதி.

    கெட்டதை செய்பவர்களுக்கு நல்லதாக நடக்கிறது. நல்லதை செய்பவர்களுக்கு கெடுதல்கள் அதிகம் நடக்கிறது. இது எதனால்? என்ற கேள்வி நீண்ட நாட்களாக எல்லோருடைய மனதிலும் இருக்கும். இதற்கு பதில் சொல்கிற மாதிரியான கதையை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த கதை உங்களது மனநிலையை மாற்றும். வாங்க கதைக்குள்ள போகலாம்.

    சொர்க்கத்தில் ஒரு பெரிய தேவதையும், சின்ன தேவதையும் வாழ்ந்து வந்தார்கள். அந்த பெரிய தேவதை, வயது முதிர்ந்த, அனுபவம் வாய்ந்த தேவதை. ஆனால் சின்ன தேவதைக்கோ வயதும் கிடையாது. அனுபவமும் கிடையாது. இப்படி இருக்கும்போது சின்ன தேவதையை தன்னுடைய சிஷ்யையாக ஏற்றுக்கொண்டு நல்லது, கெட்டதை சொல்லிக்கொடுத்து, பாவ-புண்ணியங்களை சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தாள் பெரிய தேவதை.

    ஆனால் சின்ன தேவதைக்கு, பெரிய தேவதை மேல் ஒரு மனக்குறை. பெரிய தேவதை சரியே இல்லை. வாய்கிழிய பேசுகிறதே தவிர ஒன்றுமே தெரியவில்லை. செய்வதெல்லாம் தாறுமாறு. நல்லவர்களுக்கு எல்லாம் கெட்டது செய்கிறார். கெட்டவர்களுக்கு எல்லாம் நல்லது செய்கிறார். ஏன் தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று எண்ணியது சின்ன தேவதை.

    இந்த மனக்குறையை பெரிய தேவதையிடம் சென்று கேட்கவும் செய்தது சின்ன தேவதை. அப்படியா! பெரிய தேவதைக்கோ ஒரே ஆச்சரியம், நாம் எப்போது இவ்வாறு நடந்துகொண்டோம் என்று மனதில் நினைத்துக்கொண்டு அதை சின்ன தேவதையிடமே கேள்வி கேட்டது.

    சின்ன தேவதையே, இப்படி சொன்னால் எனக்கு புரியவில்லை. நான் எந்த இடத்தில், எந்த சம்பவத்தில் இவ்வாறு நடந்துகொண்டேன் என்று தெளிவாக கூறு. நான் அதை திருத்திக்கொள்கிறேன் என்றது பெரிய தேவதை.

    அதை கேட்டதும் சின்ன தேவதை சம்பவத்தை நியாபகப்படுத்தியது. சரியாக 6 மாதத்திற்கு முன்பு அதாவது சின்ன தேவதை சிஷ்யையாக சேர்ந்த போது, பெரிய தேவதை பாவ-புண்ணிய கணக்கை சொல்லிக் கொடுக்க பூமிக்கு அழைத்துக்கொண்டு வந்தது. அந்த நேரத்தில் பூமியில் இடியுடன் கூடிய பெரிய மழை. அப்போது ஒரு பெரிய பணக்காரரின் வீட்டு முன்னாள் சென்று நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது பெரிய தேவதை ஒரு மந்திரத்தை சொன்னவுடன் அந்த பணக்கார வீட்டின் ஏழை உறவினர்கள் போல் இருவரும் உருவம் மாறினர். இருவரும் நாம் தேவதை என்பதையே மறந்து உறவுக்காரர்களாக மாறி செல்லலாம். அங்கு சென்று அவருடைய பாவ-புண்ணிய கணக்கை எழுதலாம் என்று பெரிய தேவதை, சின்ன தேவதையிடம் சொன்னது.

    சின்னதேவதை ஒரே சந்தோசத்தில் சென்று அந்த வீட்டு கதவை தட்டியது. உடனே அந்த வீட்டின் உரிமையாளர் கதவை திறந்தார். இவர்கள் ஏழை உறவினர்கள் என்று வேண்டாவெறுப்பாக முகத்தை சுழித்தவாறு வீட்டிற்குள் அழைத்தான். சுத்தமாக இல்லாத அறையில் அவர்களை தங்க வைத்து மனவிசனத்தோடு அவர்களை உபசரித்தான்.

    இதனை இரு தேவதைகளும் பொறுமையாக கவனித்து வந்தன. அன்று இரவு பெரிய தேவதை, சிறிய தேவதைக்கு பாடம் சொல்லிக்கொடுத்தாள். ஒரு மனிதன் தேடி தேடி தவறு செய்ய வேண்டும் என்று எதுவும் இல்லை. இந்த மாதிரி சுற்றி இருப்பவர்களிடம் பாரபட்சம் பார்த்தாலும், அவர்களை அலட்சியமாக நடத்தினாலும் பெரிய பாவம் தான். இன்றைக்கு இரவு இவனது பாவக்கணக்கு கூடியது என்று கூறியது.

    சின்னதேவதைக்கு இந்த பாடம் விளங்கியது. இதனால் பெரிய தேவதை மீது மதிப்பும், மரியாதையும் வந்தது. அப்படியே அந்த இரவு அங்கேயே உறங்கினர். ஆனால் பாதி ராத்திரியில் அந்த அறையில் ஒரு சத்தம் கேட்டது. சின்ன தேவதை கண்விழித்து பார்த்தபோது பெரிய தேவதை அந்த அறையில் உள்ள பொத்தல்களை சரிசெய்துகொண்டு இருந்தது.

    சின்ன தேவதைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இன்று தான் இவன் பாவம் செய்துள்ளான் என்று பாடம் புகட்டியது. ஆனால் இவனுக்கு உதவி பெரிய தேவதை உதவி செய்கிறதே என்று நினைத்தது. ஆனால் பெரிய தேவதையிடம் இதனை கேட்கவில்லை.

    அதேபோல் வேறுஒருநாள் இதேபோன்று பாடம் புகட்ட சின்ன தேவதையுடன் பூமிக்கு வந்தாள் பெரிய தேவதை. அன்றைக்கும் பூமியில் பெரிய மழை. அன்றைக்கு பெரிய தேவதை தேர்ந்தெடுத்தது ஒரு நடுத்தர வசதிகொண்ட மனிதனின் வீட்டை. இப்போதும் பெரிய தேவதை ஒரு மந்திரத்தை சொல்ல இருவரும் அந்த வீட்டு சொந்தக்காரர்களின் ஏழை உறவினர்களாக உருவம் எடுத்தனர்.

    வழக்கம்போல் அந்த வீட்டின் கதவை தட்டினர். அந்த வீட்டுக்காரன் கதவை திறந்தான். அவர்களை பாரபட்சம் பார்க்காமல், அலட்சியம் காட்டாமல் தன்னுடைய வீட்டுக்கு முகமலர்ச்சியுடன் உபசரித்து நல்ல சாப்பாட்டை கொடுத்து, நல்ல அறையை அவர்களுக்கு வழங்கினான்.

    உடனே பெரிய தேவதை, சின்ன தேவதைக்கு பாடம் புகட்டியது. புண்ணியம் என்றால் எங்காவது சென்று பெரிய பொருளை தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களை சமமாக பாவித்து சமமாக அவர்களை நடத்தினாலே பெரிய புண்ணியம் தான். எனவே இன்று இரவு இவனது புண்ணிய கணக்கு கூடுகிறது என்று கூறியது பெரிய தேவதை.

    சின்ன தேவதைக்கு இந்த பாடமும் விளங்கியது. இந்த சின்ன விஷயத்தை கூட இவ்வளவு அழகாக புரிய வைத்ததை எண்ணி பெருமையாக நினைத்தது சின்ன தேவதை. அந்த இரவு நிம்மதியாக தூங்கவும் சென்றது. நடுராத்திரியில் அதேபோன்று ஒரு சத்தம் கேட்டது. சின்ன தேவதைக்கு ஒரே அதிர்ச்சி. என்னவென்றால் பெரிய தேவதை அந்த வீட்டின் தரையில் பல இடங்களில் பொத்தல்களை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது. சின்னதேவதைக்கு கோவம் தாங்கவில்லை.

    என்ன இது, போனதடவை பாவம் செய்தவனின் வீட்டில் இருந்த பொத்தல்களை எல்லாம் சரி செய்தது. ஆனால் புண்ணியம் செய்தவனின் வீட்டில் இருக்கும் அறையை இப்படி சேதப்படுத்துகிறதே, இவருக்கு என்ன தான் பிரச்சினை என்று யோசித்துகொண்டு இருந்தது சின்ன தேவதை. ஆனால் பெரிய தேவதையிடம், சின்ன தேவதை எந்த கேள்வியும் கேட்காமல் விட்டுவிட்டது.

    இந்த இரு சம்பவங்களும் தான் எனக்கு உங்கள் மீது அதிருப்தி ஏற்பட காரணம். இதைவைத்து தான் நான் சொல்கிறேன், நீங்கள் கெட்டவர்களுக்கு நல்லது செய்கிறீர்கள். நல்லவர்களுக்கு கெட்டது செய்கிறீர்கள் என்று சின்ன தேவதை, பெரிய தேவதையிடம் கூறியது.

    இதை எல்லாவற்றையும் கேட்ட பெரிய தேவதைக்கு ஒரே சிரிப்பு. சின்ன தேவதையிடம் ஒரு காரியத்தின் முற்பகுதியை வைத்து அதன் முடிவை கணிக்க கூடாது. பிற்பகுதியையும் பார்க்க வேண்டும். அதைவைத்து தான் கணிக்க வேண்டும். எனவே அந்த கதையின் பிற்பகுதியை பார்க்க நான் உன்னை மறுபடியும் பூமிக்கு அழைத்து செல்கிறேன் என்று இருவரும் பூமிக்கு சென்றனர்.

    முதலில் சென்றது பணக்கார மனிதனின் வீட்டுக்கு அந்த வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டாவது அவர்கள் சென்றது நடுத்தர வசதியில் இருக்கும் மனிதனின் வீட்டுக்கு. ஆனால் அந்த மனிதனின் வீடு முன்ன மாதிரி ஓடுவீடாக இல்லாமல் பெரிய பணக்கார வீடாக மாறி இருந்தது. அந்த வீட்டுக்கு அருகில் இருந்த வீடுகளும் கூட நன்றாக வசதிபடைத்தவர்கள் இருக்கும் வீடுகளாக மாறி இருந்தது. உடனே சின்ன தேவதைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

    அப்போது தான் பெரிய தேவதை தான் செய்த வேலைகளை சொல்ல ஆரம்பித்தது. 6 மாதத்திற்கு முன்பு இந்த இரண்டு வீடுகளுக்கும் நாம் சென்று தங்கி இந்த அறைகளுக்கு அடியில் ஒரு புதையல் இருந்தது. அதை யோசித்து இந்த பணக்காரனுக்கு ஏற்கனவே மனிதனை மனிதனாக மதிக்க தெரியவில்லை. அவனுக்கு இந்த புதையல் கிடைத்தால் அவன் தலைகால் புரியாமல் ஆடுவான். எனவே பொத்தல்கள் வழியாக புதையல் தெரிந்துவிடக்கூடாது என்று எண்ணி பொத்தல்கள் எல்லாவற்றையும் அடைத்தேன்.

    ஆனால் மனிதனை மனிதனாக மதிக்கத்தெரிந்த அந்த நடுத்தர வசதிகொண்ட அந்த மனிதனுக்கு புதையலை காட்ட வேண்டும் என்று நினைத்து பொத்தல்களை உருவாக்கி புதையலை காண்பித்தேன். ஆனால் இந்த செயலை மட்டுமே பார்த்துவிட்டு என்னை தவறாக புரிந்துகொண்டாய் என்று சின்ன தேவதையிடம் விளக்கி கூறியது பெரிய தேவதை.

    அவரவர்கள் செய்த செயல்களுக்கான பலன்களை தான் அவரவர்கள் அனுபவிப்பார்கள். வேண்டுமென்றால் காலதாமதம் ஆகலாம் வேறுமாதிரி நடப்பதாக தோன்றலாம். ஆனால் இறுதியில் நல்லது தான் நடக்கும். இது தான் இயற்கையின் நியதி. அதைக்கேட்டு சின்ன தேவதைக்கு ஞானம் கிடைத்தது.

    இன்றைக்கு இந்த கதையை கேட்கிற நீங்களும் உங்கள் வாழ்க்கையில் உள்ள பொத்தல்களை பார்த்து பயந்துகொண்டு இருக்கிறீர்கள் என்றால், எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கெடுதல்கள் நடக்கிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களானால் அந்த பொத்தல்கள் தான் உங்களுக்கு புதையல்களை காட்டப்போகிறது.

    அந்த கீறல்கள் தான் உங்களை முன்னேற்றம் அடையச்செய்யும். காலதாமதம் ஆகலாம், என்னடா நம்மளோட வாழ்க்கை இப்படி போகிறது என்று தோணலாம். நீங்கள் செய்த புண்ணித்தின் பலனை அடைவது உறுதி.

    ×