என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- மண்ணுக்குள் மூன்று மாத காலம் புதைந்திருந்த பிரம்மேந்திரர், தொடர் தியானத்தில் ஆழ்ந்து சமாதியில் இருந்திருக்கிறார் என்பதை அன்பர்கள் புரிந்து கொண்டார்கள்.
- புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவப் பிரம்மேந்திரரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அளவற்ற வியப்படைந்தான்.
சதாசிவப் பிரம்மேந்திரர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். ஆடையற்று உலவிய அத்வைத வேதாந்தி. தத்துவச் செறிவு நிறைந்த சமஸ்கிருதக் கீர்த்தனைகளால் கர்நாடக இசைத்துறைக்குப் பெரும் பங்களித்தவர்.
`பஜரே கோபாலம், சிந்தா நாஸ்திகிலா, பிபரே ராமரசம்` உள்ளிட்ட அவரது பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை. பற்பல அற்புதங்களை நிகழ்த்திய மகான் அவர்.
பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது திடீரென்று ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புற உணர்வின்றி தியானத்தில் ஒன்றியிருந்த அவர், தன் தலைக்குமேல் வெள்ளம் போனதை உணரவில்லை.
மூன்று மாதங்கள் கழிந்தன. வெள்ளம் வடிந்தது. ஆற்றில் மணல் அள்ளியவர்கள் மணலின் கீழ் ஒரு மனித உடல் தென்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
கண்டெடுத்த உடலை மெல்ல ஆற்றங்கரைப் படித்துறையில் வைத்து நீராட்டினார்கள். அவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான் என்பதை அன்பர்கள் கண்டுகொண்டார்கள்.
திடீரெனக் கண்விழித்து எழுந்தார் பிரம்மேந்திரர்! வலக்கரம் உயர்த்தி எல்லோருக்கும் ஆசி வழங்கி, எதுவுமே நடவாததுபோல் விறுவிறுவென்று நடந்து சென்றுவிட்டார்!
மண்ணுக்குள் மூன்று மாத காலம் புதைந்திருந்த அவர், தொடர் தியானத்தில் ஆழ்ந்து சமாதியில் இருந்திருக்கிறார் என்பதை அன்பர்கள் புரிந்து கொண்டார்கள். அவர் சென்ற திசைநோக்கிக் கீழே விழுந்து வணங்கினார்கள்.
சதாசிவப் பிரம்மேந்திரர் எத்தனையோ சித்துக்கள் கைவரப் பெற்றிருந்தார். அவற்றின் மூலம் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தினார். எனினும் எதையும் தன் செயல் என்பதாக அவர் வெளிப்படுத்திக் கொண்டதில்லை.
தன்னை ஒரு மகான் என்று அவர் காட்டிக்கொள்ள முயன்றதே இல்லை. ஆடை அணிவதிலும் அக்கறை அற்றவராக, திகம்பர சன்னியாசியாகத் திரிந்து வந்தார்.
மனம் ஒன்றிய தியானத்தாலும் தவத்தாலும் அவரிடம் இயல்பாய் ஏற்பட்டிருந்த சக்திகள் தேவைப்பட்ட தருணங்களில் தானாகவே வெளிப்பட்டு வேலை செய்தன. அந்த அற்புதங்கள் தன்னால்தான் நிகழ்கின்றன என்றுகூட அவர் ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை.
ஒருமுறை நெற்குவியல் ஒன்றில் அமர்ந்தவர் அப்படியே இறைதியானத்தில் தோய்ந்து சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். நேரம் கடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த காவல்காரன் திடீரென அவரைப் பார்த்தான். அவர் நெல் திருட வந்த திருடன் என நினைத்துவிட்டான். ஒரு பிரம்பால் அவரை அடிக்க எண்ணிப் பிரம்பை ஓங்கினான்.
மறுகணம் அவன் தூக்கிய கை தூக்கியபடியே கீழே இறங்காமல் நின்றுவிட்டது. பிரம்மேந்திரர் சமாதி நிலை கலைந்து கண்விழித்து அவனை அருள்பொங்கப் பார்த்த பின்னர்தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது.
அவர் ஒரு மகான் என்பதைப் புரிந்துகொண்ட அவன் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். அதற்குள் அவர் விரைவாக நடந்து அந்த இடத்தை விட்டே சென்றுவிட்டிருந்தார்.
அவர் அடிக்கடி இந்த உலகத்திற்கு வந்து போகிறவராகவும் ஆனால் அவர் உலகம் தனித்த வேறோர் உலகம் என்றும் அந்தக் காவலாளிக்குத் தோன்றியது. அவரை தரிசித்ததையே பெரும் பாக்கியமாகக் கருதினான் அவன்.
ஒருமுறை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு விறுவிறுவென நடந்து போய்க் கொண்டிருந்தார் பிரம்மேந்திரர். வழியில் சிலர் ஒரு வண்டியில் மரக்கட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
உணர்வில்லாமல் கட்டைபோல் நடந்து போய்க் கொண்டிருந்த பிரம்மேந்திரரைத் தொட்டு நிறுத்தினான் ஒருவன். வண்டியில் ஏற்ற உதவியாகக் கட்டைகளை எடுத்துத் தருமாறு அதட்டினான்.
அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. கட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தார். பின் தொடர்ந்து நடக்கலானார்.
நிர்வாணமாகத் திரியும் ஒரு பைத்தியம் என்று அவர்கள் அவரை நினைத்தார்களே அன்றி அவர் ஒரு மகான் என்பதை அவர்கள் அறியவில்லை. தங்களுக்கு உதவிய அவரிடம் அவர்களுக்கு எந்த நன்றியுணர்ச்சியும் தோன்றவில்லை.
'இந்தக் கட்டை போகுமிடம் எதுவோ?' என்று அவரைச் சுட்டிக்காட்டி அவரிடமே ஏளனமாகக் கேட்டான் ஒருவன்.
பிரம்மேந்திரர் ஏதொன்றும் பேசாமல் கட்டைகள் ஏற்றப்பட்ட வண்டியை ஒரு பார்வை பார்த்தார். அடுத்த கணம் வண்டியில் ஏற்றப்பட்டிருந்த கட்டைகள் அனைத்தும் தானே திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன.
வெடவெடத்துப்போன அவர்கள் அப்போதுதான் அவர் ஒரு மாபெரும் மெய்ஞ்ஞானி என்பதைப் புரிந்து கொண்டார்கள். அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள்.
மறுபடி வண்டியையே உற்றுப்பார்த்தார் பிரம்மேந்திரர். நெருப்பு அணைந்தது. பாதங்களில் விழுந்தவர்கள் எழுந்து நிமிர்ந்து பார்ப்பதற்குள் அவர் தன் வழியே மிக வேகமாய் நடந்து சென்றுவிட்டார்.

திருப்பூர் கிருஷ்ணன்
ஒருமுறை அவர் நடந்துபோகும் வழியில் ஒரு நவாபின் அந்தப்புரம் குறுக்கிட்டது. தன் நினைவேயில்லாத பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் உள்ளே நடக்கலானார். நிர்வாணமாக ஒருவர் வருவதைப் பார்த்ததும் அந்தப்புரப் பெண்கள் அலறினார்கள். விவரமறிந்து ஓடிவந்த நவாப் சீற்றத்துடன் பிரம்மேந்திரரின் கரத்தை வெட்டினான். வெட்டிய கரம் கீழே கிடக்க பிரம்மேந்திரர் சலனமில்லாது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்!
நவாப் பயந்துவிட்டான். அவர் ஒரு பெரிய மகான் என்பதை உணர்ந்து கொண்டான். உடனே, வெட்டப்பட்ட அவரது கையைத் தூக்கிக் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து ஓடினான். அவரை நிறுத்தி உலுக்கி உலக நினைவுக்குக் கொண்டு வந்தான்.
நடந்ததைச் சொல்லி வலக்கரத்தை அவர் மறுபடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் குற்ற உணர்ச்சி தன்னை வாட்டும் என்றும் அழுதும் தொழுதும் விண்ணப்பித்தான். அப்படியா எனக் கலகலவென்று குழந்தைபோல் சிரித்த பிரம்மேந்திரர், அந்த வலக்கரத்தைத் தன் இடக்கரத்தால் வாங்கித் தன் தோள்பட்டையில் மறுபடி பொருத்திக் கொண்டார்.
ஆச்சரியம். உடனே கரம் ஒட்டிக்கொண்டு முன்பு போலவே ஆகிவிட்டது. கண்ணீர் விட்டுக் கரைந்த நவாப் அவரை விழுந்து வணங்கி நிமிர்ந்தபோது அவர் அங்கே இல்லை. மிக வேகமாக நடந்து எங்கோ சென்றுவிட்டார்.
ஒருவன் தன் கையை வெட்டியதைக் கண்டும் கூட அவரிடம் எள்ளளவு கோபமும் ஏற்படவில்லை. சாதாரணமான மனித உணர்வுகளையெல்லாம் அவர் என்றோ கடந்து விட்டிருந்தார். அவர் மனம் எப்போதும் கடவுளைப் பற்றிய சிந்தனையிலேயே தோய்ந்திருந்தது.
புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவப் பிரம்மேந்திரரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அளவற்ற வியப்படைந்தான். அவர் அருளைப் பெற விரும்பினான்.
அவர் இருக்குமிடம் அறிந்து அங்கே சென்று அவரை வணங்கிப் பணிந்தான். அவரைத் தன் அரண்மனைக்கு ஒருமுறை வந்துசெல்ல வேண்டும் என அழைப்பு விடுத்தான்.
மவுன விரதம் மேற்கொண்டிருந்த பிரம்மேந்திரர் பதிலெதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். அவர் அரண்மனைக்கெல்லாம் வர மாட்டார் என்பதை அவன் புரிந்து கொண்டான். தனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுமாறு பணிவுடன் வேண்டினான்.
மன்னனைப் பரிவு பொங்கப் பார்த்த பிரம்மேந்திரர், கீழேயிருந்த மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தை விரலால் எழுதிக் காண்பித்தார். பின் அவன் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து விட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார்.
அவர் மணலில் எழுதிக் காண்பித்த மந்திரத்தை ஓலைச்சுவடியில் எழுதிக் கொண்டான் மன்னன். பின்னர் மிக எச்சரிக்கையாக பிரம்மேந்திரர் தன் புனித விரல்களால் மந்திரம் எழுதிய மணலைத் தன் பட்டு அங்கவஸ்திரத்தில் கட்டி எடுத்துக் கொண்டான். அந்த மணலை அவன் தன் அரண்மனைப் பூஜை அறையில் வைத்து பூஜித்து வரலானான்.
இவ்விதம் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி, பிரம்ம ஞானியாகவே வாழ்ந்த பிரம்மேந்திரர் சித்தி அடைய முடிவு செய்தார். அருகில் இருந்த தன் அன்பர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமராவதி ஆற்றங்கரையோரம் அமைக்கும்படி எழுதிக் காட்டினார்.
பக்தர்கள் அவர் சித்தி அடையப் போவதை எண்ணிப் பெருந்துயரடைந்தனர். 'இனி யார் எங்களுக்கு வழி காட்டுவார்கள்?' என்று கண்ணீர் விட்டுக் கரைந்தனர். பிரம்மேந்திரர் தம் கடைசிக் கீர்த்தனையை மணலில் எழுதிக் காட்டினார். 'சர்வம் பிரம்ம மயம் ரே ரே சர்வம் பிரம்ம மயம்...'
'எல்லாமே கடவுள்மயம் தான். கடவுளை எங்கே தேட வேண்டும்? நம் மனத்தின் உள்ளே அல்லவா தேடவேண்டும்? அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்' என்று பொருள்படும் கீர்த்தனை அது.
1755-ல் பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்தார். அவர் ஒரே சமயத்தில் மூன்று உடல்கள் எடுத்து நெரூர், மானாமதுரை, கராச்சி ஆகிய மூன்று இடங்களில் ஜீவசமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.
நெரூரில் உள்ள அவரது ஜீவ சமாதி பெரும்புகழ் பெற்றது. அதை நிர்மாணிக்க புதுக்கோட்டை மன்னர் உதவியிருக்கிறார். அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் தொடர்ந்து சென்று பிரம்மேந்திரரை வழிபடுகிறார்கள்.
இசைக் கலைஞர்கள் அங்கு சென்று அவர் இயற்றிய பாடல்களைப் பாடி அவருக்கு அஞ்சலி நிகழ்த்துகிறார்கள். பிரம்மேந்திரரின் ஆன்மிக அதிர்வலைகள் நெரூர் ஜீவ சமாதியில் செறிந்திருப்பதை அன்பர்கள் உணர்கிறார்கள்.
'ஒரு யோகியின் சுயசரிதை' என்ற புகழ்பெற்ற தன்வரலாற்று நூலை எழுதிய பரமஹம்ச யோகானந்தர், நெரூர் சென்று பிரம்மேந்திரர் சமாதியில் வழிபட்டிருக்கிறார். தன் நூலில் சதாசிவப் பிரம்மேந்திரர் குறித்த சில அற்புதச் செயல்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சதாசிவப் பிரம்மேந்திரரின் தூய திருவடிகளை இதயத்தில் இருத்தித் தியானம் செய்வதன் மூலம் காமம், குரோதம் முதலிய மன மாசுகள் நீங்கி நாம் தூய்மை பெறலாம்.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com
- சிறு வயதில் ராமலிங்கம் பிள்ளை படிப்பை விட ஓவியம் வரைவதில் வல்லவராக விளங்கினார்.
- கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
இன்று (அக்டோபர் 19-ந்தேதி) கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாள்.
தமிழக அரசின் முதல் அரசவை கவிஞராக திகழ்ந்தவர் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை.
"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!" "கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது," போன்ற தேசப்பக்தி பாடல்களை பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றினார். தமிழக மக்களால் காந்திய கவிஞர் எனப் போற்றப்பட்ட ராமலிங்கம் பிள்ளை 1888-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார்.
ஓவியர்
சிறு வயதில் ராமலிங்கம் பிள்ளை படிப்பை விட ஓவியம் வரைவதில் வல்லவராக விளங்கினார். 1912-ம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி டெல்லியில் நடந்த ஓவிய கண்காட்சியில் ராமலிங்கம் பிள்ளை வரைந்த ஓவியம் இடம்பெற்று தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
திருச்சி கல்லூரியில் பி.ஏ. படித்தார். படிப்பை விட இலக்கியத்தில் நாட்டம் கொண்ட ராமலிங்கம் பிள்ளை கிட்டப்பா நாடகங்களுக்கு பாட்டு எழுதிக்கொடுத்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
1932-ல் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு வருடம் சிறைத்தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைவாசம் அனுபவித்து வந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உள்பட மற்ற தலைவர்களுக்கு கம்பராமாயணம், திருக்குறள் பாடங்களை நடத்தினார். திருக்குறளுக்கு புதிய உரை எழுதினார்.
பாரதியார் பாராட்டு
புதுச்சேரியில் இருந்து தமிழகம் திரும்பிய பாரதியாரை காரைக்குடி அருகே கானாடு காத்தான் என்ற ஊரில் சந்தித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் ராமலிங்கத்தை பாரதியாரிடம் இவர் பாடல்கள் எழுதுவார் என்று கூற, ஏதாவது நீர் இயற்றிய பாடலை கூறும் என்று பாரதியார் கேட்டுக்கொண்டார்.
உடனே ராமலிங்கம் கிட்டப்பாவின் லங்காதகனம் நாடகத்துக்கு எழுதிய 'தம்மரசை பிறர் ஆளவிட்டு விட்டுதான் வணங்கி கைகட்டி நின்ற பேரும்' என்ற பாடலின் முதல் வரியை பாடிய உடனே' "பலே பாண்டியா!' பிள்ளை நீர் ஒரு புலவன் ஐயமில்லை'!' என்று தட்டிக்கொடுத்து பாராட்டினார் பாரதியார்.
ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுவதற்கென்றே' கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்ற பாடலை எழுதித்தந்தார். அது காங்கிரஸ் தொண்டர்களிடையே வேதமந்திரமாக ஒலித்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கவிஞரின் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் மாநில அரசு அவரை முதல் அரசவைக்கவிஞராக நியமித்தது. மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதளித்து போற்றியது.
2 தடவை தமிழக மேல்சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். சாகித்ய அகாடமியின் நிர்வாகக்குழுவில் தமிழ் பிரதிநிதியாகவும் இடம்பெற்று இருக்கிறார்.
மலைக்கள்ளன்
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து இருந்தனர். "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 'என்ற இனிமையான பாடல் இடம்பெற்ற இந்தப்படம் எம்.ஜி.ஆருக்கு" "சூப்பர் ஹீரோ" அந்தஸ்தை பெற்றுத்தந்தது.
இந்தப்படத்துக்கு கலைஞர் மு.கருணாநிதி திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருந்தார்.
படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்று குடியரசுத்தலைவரின் விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் பெற்றது. ராமலிங்கம் பிள்ளை தன் சுயசரிதையை 'என் கதை' என்ற பெயரில் எழுதியுள்ளார். 40-க்கும் மேற்பட்ட நாவல்கள், கவிதை தொகுப்பு, நாடகங்கள் எழுதியிருக்கிறார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் படைப்புகள் தமிழக அரசால் 1998-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
நினைவுத்தூண்
1948-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவிலில் காந்தியடிகள் நினைவாக நினைவுத்தூண் ஒன்று நிறுவினார். அதன் திறப்பு விழாவில் மாலை நடந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் கவிஞரை தலைமை வகிக்கச்செய்து அவரது தலைமையில் பேரறிஞர் அண்ணா சொற்பொழிவு ஆற்றினார்.
அண்ணாவும், நாமக்கல் கவிஞரும் அன்றுதான் நேருக்குநேர் சந்தித்து பேசினர். அப்போது "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்று அண்ணா நாமக்கல் கவிஞருக்கு புகழாரம் சூட்டினார். கவிஞரின் எழுத்தாற்றலை சிறப்பித்து பாராட்டி மகிழ்ந்தார்.
தமது பாடல்களாலும், சொற்பொழிவுகளாலும், மக்கள் மனதில் நாட்டுப்பற்றை ஊட்டிய கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 24-8-1972 அன்று காலமானார்.
தமிழக அரசு, கவிஞர் வாழ்ந்த நாமக்கல் இல்லத்தை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கி உள்ளது. சென்னை அரசு தலைமைச்செயலக 10 மாடி கட்டிடத்துக்கு இவரது பெயரை சூட்டி உள்ளது. நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- முதுமையில் நொறுக்குத் தீனிகளை உட்கொண்டு இதயத்தை நொறுங்க செய்வது கூடாத செயல்.
- பொதுவாகவே நார்ச்சத்துக்கள் உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
"நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்பது தமிழ் பழமொழி. மாறாக அவசர அவசரமாக உணவு உண்ணும் பழக்கமும், துரித உணவு முறைகளும், எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம் என்ற எண்ணமும், தான் இன்றைய ஆரோக்கியத்திற்கு சவால்கள். மேற்கூறிய நவீன வாழ்வியலால், சேதாரம் சீரண மண்டலத்துக்கு மட்டும் அல்ல, இதய-ரத்த ஓட்ட மண்டலத்துக்கும் தான். ஆகவே உணவு சார்ந்த இந்த விழிப்புணர்வு முதுமையில் குடலுக்கு மட்டுமல்ல, இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பொதுவாகவே, இருக்கும் வரை வாய்க்கு ருசியா பிடித்த உணவை உட்கொண்டு மன நிறைவாய் இருப்போம் என்ற தவறான எண்ணம் முதுமையில் பலருக்கு உண்டாகிவிடுகிறது. முதுமையில் சத்தான உணவுகள் எவ்வாறு மிக மிக அவசியமோ, அதே போல் உடலுக்கு பாதிப்பில்லாத உணவும் அவசியம்.
அதிலும் முக்கியமாக உயிர் ஓட்டத்தின் அடிப்படை உறுப்பான இதயத்திற்கு தீமை பயக்காத உணவு மிகவும் அவசியம். ஆனால் உணவே மருந்தாக இருந்த காலம் மாறி, நஞ்சு கலந்த உணவும், மருந்தே உணவாகவும் மாறிவிட்ட அவலமான காலகட்டத்தில் உள்ளோம்.
ஆகவே, முதுமையில் நொறுக்குத் தீனிகளை உட்கொண்டு இதயத்தை நொறுங்க செய்வது கூடாத செயல். பதிலாக இதயத்திற்கு இதமான உணவுப் பொருட்களை நாடுவது நல்லது. அந்த வகையில் பால், செறிவுற்ற கொழுப்பு அமிலம் அடங்கிய பொருட்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது.
பாலில் உள்ள லாக்டிக் அமிலம் எனும் வேதிப்பொருள் நாட்பட்ட தொற்றா நோய்நிலைகளுக்கு காரணமாக அமையும் இன்சுலின் தடையை உண்டாக்கக்கூடியது. மேலும், பாலில் செறிவுற்ற கொழுப்பு அமிலம் (saturated fat) 50 சதவீதம் அளவுக்கு அதிகமாக உள்ளது.
கொழுப்பு அமிலங்களுள் குறிப்பாக உடலுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியது இந்த செறிவுற்ற கொழுப்பு பொருட்கள் தான். பால் மட்டுமல்லாது சிவப்பு இறைச்சி, பாமாயில் மற்றும் அதில் வறுத்து எடுக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இவற்றில் அதிகம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கொழுப்பு அமிலம் மேற்கத்திய உணவுகளான பிட்சா, பிரெச் பிரைஸ், கேக், குக்கீஸ் இவற்றிலும் அதிகம் காணப்படுகிறது. இத்தகைய உணவுகளுக்கு இன்றைய தலைமுறையினர் அதிகம் அடிமைப்பட்டு கிடக்கின்றனர். இதனால் தான் முதுமையில் மட்டுமின்றி இளம் வயதிலும் மாரடைப்பு அதிகம் ஏற்பட்டு, ஆரோக்கியத்திற்கான பாதை அச்சமாகின்றது. எனவே இத்தகைய உணவுப் பொருட்களை தவிர்ப்பது இதயத்திற்கு நல்லது.
ரத்தத்தில் கொழுப்பினைக் குறைத்து, இதய நலம் காக்கும் செறிவுறா கொழுப்பு அமிலங்கள் (PUFA) தாவர எண்ணெய்களில் அதிகம். முக்கியமாக சுத்திகரிக்கப்படாத கடலை எண்ணெயும், நல்லெண்ணையும் அவற்றிக்கு உதாரணங்கள். கூடுதலாக இதய நோயாளிகள் அரிசி தவிடு எண்ணெய் பயன்படுத்துவதும் சாலச் சிறந்தது. தாவர உணவுப் பொருட்களான கொட்டைகளில் இதயத்திற்கு நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த ரத்த அழுத்தம் என்பது பல்வேறு நோய்நிலைகளின் குறியீடு. ஆக, ரத்த அழுத்தம் குறைய மருந்து மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதற்கான காரணம் அறிந்து, உணவு முறைகளை பின்பற்றினால் தான் ரத்த அழுத்தம் வெகுவாக குறையும்.
அதற்காக டேஷ் (DASH) உணவு முறையை பின்பற்றுதலும் நல்லது. அதென்ன டேஷ் உணவு முறை? என்பது பற்றி முதியோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதே போல், உலகில் சிறந்த உணவு முறையாக கருதப்படும் மத்திய தரைக்கடல் உணவு முறையும் இதயத்திற்கு அளவில்லா நன்மைகளைத் தரவல்லது.
டேஷ் உணவு முறை முக்கியமாக நான்கு குறிப்புகளை பட்டியலிடுகின்றது. 1. அதிக செறிவுற்ற கொழுப்புச் சத்துக்களை கொண்ட இறைச்சி உணவுகளையும், தேங்காய் எண்ணெய், பாமாயில் இவற்றை தவிர்ப்பது 2. குறைவான கொழுப்புச் சத்து கொண்ட பால் பொருட்களையும், தானியங்கள், கொட்டை வகைகள், எண்ணெய் வகைகளை சேர்த்துக்கொள்வது 3. இனிப்பு சுவையுடைய குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பொருட்களைத் தவிர்ப்பது 4. உணவில் அதிகப்படியாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் சேர்த்துக்கொள்வது ஆகிய இவைகளைத் தான்.
மேலும் சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைக் குறைத்து, பொட்டாசியம், கால்சியம், மக்னேசியம், புரதச்சத்து, நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்ப்பதையும் வலியுறுத்துகிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பொருட்களில் காணும் டிரான்ஸ்-கொழுப்பு உள்ள பொருட்களைத் தவிர்க்கவும் கூறுகின்றது.
ட்ரான்ஸ் கொழுப்பு அமிலமானது இரத்தத்தில் உள்ள எச்.டி.எல் (HDL) எனும் நல்ல கொழுப்பினைக் குறைத்து எல்.டி.எல் (LDL) எனும் கெட்ட கொழுப்பினை அதிகரிக்கும் தன்மை உடையது. இதனை அறியாத நம் நாட்டினர் டிரான்ஸ் பாட் அதிகமுள்ள பொருட்களை நாடுவதும் இதயத்திற்கு சேதாரம் தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிகம் பயன்படுத்தப்பட்ட 'வனஸ்பதி' எனும் 'டால்டா' அதிக அளவு டிரான்ஸ்-கொழுப்பு உடையது. தற்போது அது பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் அதை விட மூன்று மடங்கு டிரான்ஸ் கொழுப்பு கொண்டதாக கருதப்படும் 'பிரன்ச் பிரைஸ்' போன்ற மேலை நாட்டு நொறுக்குத் தீனிகள் நம் ஆரோக்கியத்திற்கு இன்று மிகப்பெரிய சவாலாக உள்ளன.
காலம் காலமாக நம் முன்னோர்கள் மீன் போன்ற இறைச்சியை குழம்பில் போட்டு உணவாக எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வந்தனர். ஆனால் நாவின் சுவைக்கு அடிமையான இன்றைய உலகம், மீன் வறுவலை அதிகம் ருசிப்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்து தான்.
ஏனெனில் மீனில் உள்ள இதயத்திற்கு நன்மை பயக்கும் ஒமேகா கொழுப்பு அமிலமானது, 'டிரான்ஸ்பாட்' எனும் செறிவுற்ற கொழுப்பாக மாறுவது தான் என்கிறது நவீன அறிவியல். எனவே நம் பாரம்பரிய அறிவு நம்மை பாதுகாக்கும் அரண் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம்.
"மண்பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசிவோம்" என்று தேரையர் சித்தர், நோய்கள் அணுகாமல் இருக்க, தினசரி உணவில் கருணைக்கிழங்கு மட்டும் சேர்த்துக்கொள்ளும்படி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுறுத்தியுள்ளார். நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்தையும் பேணிக்காக்கும் என்று இன்றைய நவீன அறிவியல் கூறுவது ஆச்சரியத்தின் உச்சம். நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலைப் போக்கி குடல் சார்ந்த புற்றுநோய்களையும் தடுக்கும். ஆக, அதிகப்படியான நார்சத்துக்களைக் கொண்ட கருணை இதய நலத்தின் மீது அளவில்லா கருணை காட்ட வல்லது.
பொதுவாகவே நார்ச்சத்துக்கள் உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சமீபத்திய ஆய்வின்படி, உணவில் அதிக நார்சத்துக்களை எடுத்துக்கொள்வது குடலில் வாழும் நன்மை பயக்கும் கிருமிகளுக்கு நன்மை பயப்பதாக தெரிவிக்கின்றன. நார்சத்துக்களை எடுத்துக்கொள்வது உடல் பருமன் மட்டுமல்லாது, இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் இவற்றுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுவது சிறப்பு.

நம் அனைவருக்கும் அதிகம் பழக்கப்பட்ட அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு வெந்தயம். அந்த வெந்தயத்தில் உள்ள கரையும் நார்ச்சத்துக்கள் எண்ணிலடங்கா நன்மைகளை அள்ளித்தருவதாக உள்ளன. அதில் உள்ள 'காலக்டோமன்' எனும் நார்சத்துப்பொருள் இதயம் மற்றும் குடல் வாழ் கிருமிகளுக்கு நன்மைப் பயப்பதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே, வெந்தயத்தை தினசரி எடுத்துக்கொள்வது ரத்தத்தில் கொழுப்பினைக் குறைத்து இதயத்திற்கு நன்மை பயக்கும். வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல இதய நோயாளிகளுக்கும் வரப்பிரசாதம் தான்.
இன்றைய துரித உணவு நாட்டத்தால் குடலில் வாழும் நன்மை பயக்கும் கிருமிகளுக்கு மிகப்பெரிய சேதாரம் உண்டாகிறது. நாவிற்கு கிடைக்கும் சுவையை மட்டும் நாடுவதால் குடலுக்கும் இதயத்துக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு என்பது இன்றைய நவீன வாழ்வியலுக்கு கிடைத்த சாபம் எனலாம்.
அதே போல் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்த உணவும், ஆலோசனை இன்றி அதிகம் பயன்படுத்தும் ஆன்டி-பயோட்டிக் மருந்துகளும் கூட குடலை சிதைக்கும். குடல் சிதைவு இதயத்துக்கும் பாதிப்பு என்கிறது நவீன அறிவியல். ஆக, உணவே மருந்து என்ற சித்த மருத்துவ கோட்பாட்டை பின்பற்றி நஞ்சில்லா உணவை மருந்தாக்குவது ஆயுளை நீட்டிக்கும்.
அதிக மாவுச்சத்துள்ள பொருட்களை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் டிரைகிளிசெரைடு அளவு அதிகரிக்கக்கூடும். எனவே அவற்றை குறைத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது. கருப்பு கவுனி அரிசி இதய நோயாளிகளுக்கு அளப்பரிய நன்மைகளை தருவதாக சீன தேசத்து ஆய்வு முடிவுகள் கூறுவதும் சிறப்பு.
அசைவ உணவுகளை தவிர்ப்பதும், மது புகை இல்லா வாழ்வியல் முறையும், மனதிற்கு அமைதியான தியானமும் இதய நோயாளிகளின் ஆயுளை அதிகரிக்கும் என்கின்றன ஆய்வுகள். தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் இதய நோயாளிகளின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் வரை கூடுதலாக வாய்ப்பு உள்ளதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு உணவு மொழியை பின்பற்றுவது நல்லது.

சோ.தில்லைவாணன்
தெருவுக்கு ஒரு மருத்துவமனை இருக்கிறது என்ற தைரியமும், அலட்சியமும் இன்றைய நவீன வாழ்வியலில் உணவு கட்டுப்பாடு இல்லாமல் உணவு உண்டு நோய்கள் உருவாக வழிவகை செய்கிறது. இதுவே பிற்காலத்தில் இதயம் நொறுங்கி இறப்புக்கும் வழிவகுக்கும். ஆகவே முதுமையில் மட்டுமின்றி எக்காலத்திலும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய பாரம்பரிய உணவு வகைகளையும், பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் நாடுவது இதயத்தின் நலத்திற்கு பாதை அமைக்கும்.
தொடர்புக்கு:
drthillai.mdsiddha@gmail.com
- ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பயன்படுத்தும் பல்வேறு முறைகளில் நியூமராலஜி எனப்படும் எண்கணித முறையும் ஒன்று.
- வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும்.
பெயர் என்பது ஒருவரை சமுதாயத்தில் அடையாளப்படுத்த உதவும் சொல். அந்த பெயர் அதிர்ஷ்டகரமாக அமைந்தால் வாழ்க்கை வளமாகும் என்பது சமுதாய நம்பிக்கையாக இருந்தாலும் கூட அதுவே நிதர்சனமான உண்மை. ஒருவரின் பெயரில் உள்ள விசேஷ ரகசியங்களே வெற்றியைப் பெற்றுத் தருகின்றன என்பதை உலகம் எங்கும் உள்ள பல மேதைகள் ஆமோதித்து இருக்கிறார்கள்.
பெயர் சூட்டுதல் என்பது பூமியிலே பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் நடத்தப்படும் சமயச் சடங்காகும். இச்சடங்கு சமூகத்திற்கு சமூகம் வேறுபடுகின்றது. தற்காலத்தில் பெயர் சூட்டுதல் விழாவாக நடத்தப்படுகிறது. இந்தச் சடங்கினை நாமகரணம் என்ற வடமொழி வழக்கிலும் அழைக்கின்றனர். ஒருவருக்கு சூட்டப்படும் பெயருக்கு ஏற்பவே அவர்களுடைய வாழ்க்கை அமையும் என்பது பலரும் அறியாத உண்மை. குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் பெயருக்கு ஏற்றார் போல் அக்குழந்தைத் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் பெயர் வைக்க வேண்டும். பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அழகிய, பேன்சியான பெயர்கள் என சில மோசமானப் பெயர்ளை சூட்டிவிடுகிறார்கள். சிலர் பொருள் தெரியாத பெயர்களையும் சூட்டுகிறார்கள். இதனால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பலர் உணர்வதில்லை. பெயர்களை உச்சரிக்கும் போது வெளிப்படும் காந்த அதிர்வலைகள் குழந்தையின் ஜாதகரீ தியான குறைபாடுகளை அகற்றும்படியாக இருக்க வேண்டும்.
ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பயன்படுத்தும் பல்வேறு முறைகளில் நியூமராலஜி எனப்படும் எண்கணித முறையும் ஒன்று. ஒருவரின் பெயரை ஐந்து முறைகளில் அமைக்கலாம். அதன்படி
1. ஜென்ம நட்சத்திரப் பெயர்.
ஒருவர் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்குரிய எழுத்தில் பெயர் வைப்பது இப்பொழுது பெருகி வரும் கலாச்சாரமாக இருந்து வருகிறது. வெகு சிலருக்கு நல்ல பலனைத் தரும் இந்த முறை பலருக்கு வெற்றி தருவதில்லை.
இப்பொழுது ஆன்லைனில் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய பெயர்கள் வருவதால் பலர் அதை தேர்வு செய்து வைத்துக் கொள்கிறார்கள்.
அந்த பெயரை நியூமராலஜிப்படி வைத்தால் மட்டுமே நல்ல பலன் தரும் என்ற சூட்சமம் புரியாததே இதற்கு காரணம்.
2. பிறவி எண்
ஒருவருடைய பிறந்த தேதியைக் கூட்டினால் வரும் பிறவி எண்ணை அடிப்படையாக கொண்டு நியுமராலஜி மட்டும் தெரிந்தவர்கள் பெயரை அமைக்கின்றனர். பிறந்த தேதியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பெயர் பலிப்பதில்லை.
3. விதி எண்
ஒருவரின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வரும் விதி எண்ணில் பெயர் வைப்பது அல்லது விதி எண்ணிற்கு பொருத்தமான நட்பு எண்ணில் பெயர் வைப்பது சரியான முறைதான். இதைப் பல பெயரியல் நிபுணர்கள் பின்பற்றி வருகின்றனர். அப்படி பெயர் அமைத்தும் பலர் அவதிப்படுகிறார்கள்.
4. அதிர்ஷ்ட பெயர்
ஒருவரின் பிறந்த தேதி, விதி எண் எதையும் ஆய்வு செய்யாமல் பொதுவாக அதிர்ஷ்டத்தை தரக்கடிய எண் என்று நம்பி 1,5,9 ஆகிய எண்களில் பெயர் வைத்துக் கொள்கிறார்கள். தவறான பெயர் இயல்பாகவே அமையும் பொழுதும், தவறான அதிர்ஷ்ட எண்ணில் பெயர் வைத்துக் கொள்ளும் பொழுதும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பிரகாசிக்க முடியும். நிரந்தரமான புகழ், பணம் கிடைக்காது.
5. ஜாதகப்படி பெயர் அமைத்தல்
பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவிகிதம் கிடைக்கும். பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும். வெகு சிலர்தான் இதைப் பயன்படுத்தி பெயர் வைத்து வருகின்றனர். இந்த முறை பலருக்கு நன்மையை அதிகமாக செய்கிறது.
ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதே கிரகம் லக்ன ரீதியான சுபர் எனில் ஜாதகருக்கு சுபபலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும். பலர் கிரகங்களின் ஆட்சி, உச்சம் மற்றும் நீசத்தன்மையை வைத்து கிரகங்களின் வலிமையை எளிதில் தீர்மானிக்கிறார்கள்.அது தவறான முறையாகும். ஒரு கிரகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஷட்பலம் கொண்டே தீர்மானிக்க வேண்டும். ஷட் என்றால் "ஆறு". பலம் என்றால் "வலிமை". ஆறு விதங்களில் காணப்படும் வலிமை.
அதாவது ஸ்தான பலம், திக் பலம், கால பலம், சேஷ்ட பலம், நைசார்க்கிய பலம் மற்றும் திருக் பலம் என்ற ஆறு நிலைகளில் கணக்கிட வேண்டும். ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் பலமாக உள்ளன என்று நினைக்க கூடாது. நீச கிரகங்கள் வலிமையற்றைவை என்றும் கணிக்க கூடாது. எனவே ஷட் பல முறையில் ஆராய்ந்த பிறகே அதன் உன்னத பலத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் தற்போது ஜோதிட மென்பொருள்கள் மூலம் எளிதில் கிரகங்களின் ஷட் பலத்தை அறிந்து விடலாம். ஷட் பலத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணை அடிப்படையில் அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக லக்ன ரீதியான பாதகாதிபதியாக இருக்கக்கூடாது. பாதகாதி பதியாக உள்ள கிரகத்தின் எண்ணில் பெயர் வைத்தால் கெடுதலே எண்களில் பெயர் வைக்ககூடாது. மேஷ, ரிஷப லக்னத்தினர் 8-ம் எண்ணிலும், மிதுனம், கன்னி லக்னத்தினர் 3-ம் எண்ணிலும், கடகம், கும்ப லக்னத்தினர் 6-ம் எண்ணிலும், விருச்சிக லக்னத்தினர் 2-ம் எண்ணிலும், தனுசு, மீனம் லக்னத்தினர் 5-ம் எண்ணிலும் மகரம் லக்னத்தினர் 9-ம் எண்ணிலும் பெயர் வைக்க கூடாது.சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் ஏகயோக அதிபதி என்பதால் வலுப்பெறலாம். கெடுதலே செய்யாது.
ஜோதிடமும் நியூமராலஜியும்.
ஒரு குழந்தை பிறக்கும் பொழுது வான் மண்டலத்தில் உள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம். சில கிரகங்கள் வலிமை இழந்து நிற்கும். ஷட் பல நிர்ணயத்தில் லக்ன ரீதியான அசுப கிரகம். வலிமை இழந்தால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்ன ரீதியான சுபர் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும். வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜை பரிகாரமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்கள் தரும். ஆனால் நிரந்தரமான பலன்களைத் தருவது நியூமராலஜி முறையில் அமைந்த பெயராகும்.
வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒப்பிட்டு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக் கொண்டால் நூறு சதவிகிதம் வெற்றி கிடைக்கும்.
குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் முறை
பிறந்த குழந்தையின் பெயரை தேர்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள் தந்தைக்கும் மகனுக்கும் தாய்க்கும் மகளுக்கும் ஒரே பெயரை வைக்கக்கூடாது. ஆண் குழந்தைகளுக்கு தாத்தா கொள்ளுத் தாத்தா பெயர்களையும் பெண் குழந்தைகளுக்கு பாட்டி கொள்ளுப்பாட்டியின் பெயர்களையும் வைக்கலாம்.
குழந்தையின் பெயருடன் தந்தை பெயர் தாய் பெயர் கோத்திரப் பெயர் வம்ச பெயர் குலத்தின் பெயர் சேர்த்துக் கொள்ளலாம். அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பட்டப் பெயர்களை அசல் பெயருடன் சேர்த்துக் கொள்ளலாம்.
அவரவர்களின் குலதேவதை இஷ்ட தேவதைகளின் பெயர்களைச் சூட்டலாம். அத்துடன் சிறிது மாற்றம் செய்து சூட்டுவது மிகச் சிறப்பு.
ஜென்ம நட்சத்திரம், ஜென்ம நட்சத்திரத்தின் அதிதேவதை பெயர்களை ஆண் குழந்தைகளுக்கு பெயரின் பகுதியாக சேர்க்கலாம். பெண் குழந்தைகளுக்கு நட்சத்திரப் பெயர்களை வைப்பது சிறப்பல்ல. நட்சத்திரம், மரம், நதி, மலை, பறவை, பாம்பு, பயங்கரமான பெயர்கள் உள்ளவர்களுக்கு திருமணத் தடை, முன்னேற்றக் குறைவு மிகுதியாக இருக்கும்.
ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாம எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை சூட்டலாம். இந்த நட்சத்திர நாம எழுத்துகளில் பெயர் வைக்கும் வழக்கம் வேதகாலத்தில் இல்லை தற்காலத்தில் ஏற்பட்டதாகும்.
ஒற்றைப் பெயர் வைப்பதை தவிர்த்து இரட்டைப் பெயர்களை வைப்பது நல்லது. இரட்டை பெயர் வைத்திருப்பவர்கள் எளிதில் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். உதாரணமாக உமா என்பது ஒற்றைப் பெயர் உமா மகேஸ்வரி என்பது இரட்டைப் பெயர்.
சமூகத்தில் பொதுவாக பலருக்கும் வைக்கப்பட்டுள்ள பெயர்கள், அரசியல் பிரமுகர்களின் பெயர்களை தவிர்த்து தனித்தன்மையான பெயர்களை வைப்பது நல்லது. உச்சரிக்க முடியாத பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட கூடாது. குழந்தைக்கு சூட்டிய பெயரை எப்படி எழுதுகிறோமோ அப்படியே பெயரின் எழுத்து வடிவம் உருக்குலையாமல் உச்சரிக்க தக்க பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். எழுத்து வடிவம் ஒரு விதமாகவும் உச்சரிப்பு வேறு விதமாகவும் அமைவது நல்லதல்ல.
குழந்தையின் முழுப் பெயரையும் கூப்பிடவேண்டும் சுருக்கி செல்லப் பெயராக மாற்றி கூப்பிடக் கூடாது. குழந்தைகளுக்கு சூட்டும் பெயர்கள் அர்த்தம் உள்ளவைகளாக இருக்க வேண்டும். அர்த்தமில்லாத, அர்த்தம் தெரியாத பெயர்களை சூட்டக் கூடாது. அதேநேரத்தில் காலச் சூழலுக்கு தகுந்த மாதிரியான பெயர்களையும் வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. பெயர்கள் கூப்பிடுவதற்கு சுகமானதாகவும் கொடுமை இல்லாததாகவும் நல்ல அர்த்தமுள்ளதாகவும் மனம் லயிக்கும்படி, பிடித்தமானதாகவும் மங்களகரமாகவும் தீர்க்க எழுத்துக்களை உடையதாகவும் ஆசிர்வாதத்தை கொடுக்கக் கூடியதாகவும், இருக்க வேண்டும்.
மத நம்பிக்கை உடைய பெற்றோர்கள் அவர்களுடைய மத நூல்களில் காணப்படும் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டலாம். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் முதலிய ஸ்தோத்திரங்களில் வரும் பெயர்களைச் சூட்டலாம் கிறிஸ்தவர்கள் பைபிளில் வரும் பெயர்களை இஸ்லாமியர்கள் குரானில் வரும் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டலாம்.
ஜோதிட ரீதியாக பெயரில் உள்ள எழுத்துக்களில் சனி, ராகு, கேதுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்க கூடாது. இவ்வாறு தேர்வு செய்த பெயர்களை அவரவர் குல, சமூகத்திற்கு உள்ள பழக்க வழக்கங்களின் படி உள்ள நாட்களை தேர்வு செய்து பெயர் சூட்டலாம். பொதுவாக குழந்தை பிறந்த 11,16, 30 நாள் சூட்டும் போது வாரம் திதி நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்ல லக்னத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டால் போதும். மேற்கண்ட நாட்களில் சூட்ட முடியாமல் போனால் 16 நாட்களுக்குப் பிறகு ஏதாவது ஒரு சுபதினத்தில் பெயர் சூட்டலாம்
பெயர் சூட்டுவதற்கு உகந்த நட்சத்திரங்கள்:
அஸ்வினி ரோகிணி மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், ரேவதி.
திதி: துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி.
வாரம்: புதன் வியாழன் வெள்ளி
லக்னம்: ஸ்திர லக்னங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை சிறப்பு.
பெயர் சூட்டும் விழாவை காலையில் உச்சிக் காலத்திற்கு முன்பே செய்ய வேண்டும் மதியானத்துக்கு பிறகு செய்யக்கூடாது. முகூர்த்த லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் குரு சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்கள் நின்றால் நல்லது. அதற்கு எட்டாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்க பெயர் தேர்வு செய்யும் போது ஜனன ஜாதகத்துடன் பிறவி எண், விதி எண்ணை ஒப்பிட்டு நல்ல நாள் நேரம் பார்த்து பெயர் வைப்பது சாலச் சிறந்தது.
- ஒரு கட்டத்துக்கு மேல் போராட முடியாது என்ற நிலை வரும். அப்போதுதான் பரிகாரத்தை பற்றி நினைத்துப் பார்ப்பார்கள்.
- கிரக அமைப்புகள் எந்த இடங்களில் அமர்ந்து இருக்கின்றன என்பதை பொறுத்துதான் தோஷம் உள்ளதா? என்பதை ஜோதிடர்கள் கணிப்பார்கள்.
நீங்களும், நானும் சந்தோஷமாக இருக்க முடியாவிட்டால் ஏதோ தோஷம் இருக்கிறது என்று அர்த்தம். தோஷம் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயமாக சந்தோஷமாக இருக்கவே முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தோஷம் இருக்கும். அதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களுக்கு ஏற்ப தோஷம் ஏற்பட்டு அவை தற்போதைய வாழ்க்கையில் கஷ்டங்களை கொடுப்பதாக பொதுவாக சொல்லப்படுகிறது.
ஒருவரது வாழ்க்கை நடைமுறைகளை வைத்தே அவருக்கு எந்த மாதிரியான தோஷம் ஏற்பட்டு இருக்கும் என்பதை மூதாதையர்கள் மிக மிக எளிதாக கண்டுபிடித்து சொல்லி விடுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அது மட்டுமின்றி அந்த தோஷத்துக்குரிய பரிகாரத்தையும் வரையறுத்தனர்.
பெரும்பாலும் வாழ்க்கையில் கஷ்டம் வந்தால் அது நம் தலைவிதி என்றுதான் பலரும் கடந்து சென்று விடுகிறார்கள். கஷ்டத்தை தீர்க்க எவ்வளவுதான் போராடுவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் போராட முடியாது என்ற நிலை வரும். அப்போதுதான் பரிகாரத்தை பற்றி நினைத்துப் பார்ப்பார்கள்.
அதற்கு பதில் கஷ்டம் உருவாகுகிறது என்றால் உடனே அதற்கு பரிகாரம் தேடிவிட்டால் அந்த கஷ்டத்தை உடைத்தெறிந்து விட்டு நிம்மதியாக வாழ முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தோஷங்களை விரட்டும் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு முதலில் நமக்கு என்ன தோஷம் இருக்கிறது என்று தெரிய வேண்டும். அதை எப்படி தெரிந்து கொள்வது? ஜாதகம்தான் அதை நமக்கு துல்லியமாக காட்டும்.
திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி, தொழில், பதவி உயர்வு, நிம்மதி, குடும்ப வாழ்க்கை, வெளிநாட்டு பயணம் என்று எதை எடுத்தாலும் அது தொடர்பான தோஷங்களை ஜாதகத்தை வைத்து கண்டுபிடித்து விட முடியும். அது மட்டுமின்றி அந்த தோஷத்துக்கு ஏற்ப பரிகாரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஜாதக அடிப்படையில் பார்த்தால் பல வகையான தோஷங்கள் தெரிந்து விடும். ஒருவருடைய ஜாதகம் எவ்வளவுதான் சுத்தமான, யோகமான ஜாதகமாக இருந்தாலும் தோஷம் வந்து விட்டால் அந்த ஜாதகக்காரருக்கு கிடைக்க வேண்டிய உரிய பலன்கள் கிடைக்காமல் போய் விடும். எனவே தோஷத்தை முதலில் கணித்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
ஜாதகத்தை பார்த்தால் 12 கட்டம், 12 ராசி என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கட்டங்களில் லக்னம், சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று எழுதப்பட்டு இருக்கும். இந்த கிரக அமைப்புகள் எந்த இடங்களில் அமர்ந்து இருக்கின்றன என்பதை பொறுத்துதான் தோஷம் உள்ளதா? என்பதை ஜோதிடர்கள் கணிப்பார்கள்.
ஜாதகத்தில் ராசி கட்டத்தில் உள்ள 12 கட்டங்களும் 4 விதமாக பிரிக்கப்படும். அதாவது தர்மம், கர்மம், காமம், மோட்சம் என்று 4 வகையாக பிரிக்கப்படும். மேஷம், சிம்மம், தனுசு 3 ராசிகளும் தர்மத்தை குறிக்கும். ரிஷபம், கன்னி, மகரம் 3 ராசிகளும் கர்மத்தை குறிக்கும். மிதுனம், துலாம், கும்பம் 3 ராசிகளும் காமத்தை குறிக்கும். கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய 3 ராசிகளும் மோட்சத்தை குறிக்கும்.
இந்த ராசிகள் அடிப்படையில்தான் தோஷங்கள் கண்டுபிடிக்கப்படும். தோஷத்தில் பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் ஜோதிடர்கள் திருமணம் தாமதம் ஆகும்போது விதவிதமான தோஷங்களை சொல்வார்கள்.
செவ்வாய் தோஷம்
ராகு-கேது தோஷம்
மாங்கல்ய தோஷம்
சூரிய தோஷம்
களத்ர தோஷம்
சர்ப தோஷம், காலசர்ப தோஷம் என்றெல்லாம் சொல்வார்கள்.
இந்த தோஷங்களுக்கு ஏற்ப என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆலய வழிபாடுதான் இந்த தோஷங்களை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இருக்கும். பரிகாரங்கள் செய்ய செய்ய நிச்சயம் பலன் கிடைக்கும்.
இந்த தோஷங்கள் தவிர பித்ரு தோஷம், புத்திர தோஷம், பிரம்மகத்தி தோஷம், நாக தோஷம், நவக்கிரக தோஷம், சகட தோஷம் என்றெல்லாம் தோஷங்கள் இருக்கின்றன. இத்தகைய தோஷங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது தாமதமாகும். அல்லது குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.
மூதாதையர்களை மறந்து விட்டாலோ அல்லது அவர்களுக்கு உரிய தர்பணங்கள் செய்யாவிட்டாலோ பித்ரு தோஷம் ஏற்பட்டு விடும். அவற்றை நிவர்த்தி செய்ய உரிய பரிகாரங்கள் இருக்கின்றன. இதே போன்று மற்ற தோஷங்களின் பரிகாரங்களையும் நாம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
ஆனால் சில தோஷங்களை சிலர் வாழ்க்கையில் கேள்விபட்டே இருக்க மாட்டார்கள். வஞ்சித தோஷம், பந்த தோஷம், கல்பித தோஷம், வந்தூலக தோஷம், பிரணகால தோஷம் என்ற பெயர்களில் எல்லாம்கூட தோஷங்கள் இருக்கின்றன. குடும்ப உறவுகளால் வரும் தோஷங்கள் இவை. இந்த தோஷங்களை அடித்து விரட்டவும் பரிகாரங்கள் இருக்கின்றன.
அது போல குடும்ப தோஷம் என்று கூட ஒரு தோஷம் இருக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் 2-ம் இடம் குடும்ப ஸ்தானமாகும். 2-ம் இடத்தில் ராகு, 8-ல் கேது இருந்தால் மிகப்பெரிய குடும்ப தோஷம் என்பார்கள். இப்படிதான் வாக்கு தோஷம் என்று ஒரு தோஷம் இருக்கிறது.

மனை தோஷம், பிரேத சாபம், குல தெய்வ தோஷம், மாந்தி தோஷம் ஆகியவையும் முக்கியமானவையாகும். இந்த தோஷங்கள் ஏற்பட்டால் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது. தினம் தினம் போராட்டமாகத்தான் இருக்கும்.
ஒவ்வொரு வகை தோஷமும் ஒவ்வொரு வகையான துன்பத்தை ஏற்படுத்தும். எனவே தோஷங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டியது அவசியமாகும். சில தோஷங்கள் நுட்பமானவையாக இருக்கும். அதாவது கிரக அமைப்புகளின் இடங்களுக்கு ஏற்ப அந்த தோஷங்கள் வலுவாக அமைந்து விடும்.
அதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். அதை விட முக்கியம் அந்த தோஷத்தை விரட்டுவதற்கு நூறு சதவீதம் சரியான பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதுதான்.
பெரும்பாலும் பரிகாரங்களுக்கு ஆலய வழிபாடுதான் முதன்மையாக உள்ளது. ஆலயங்களுக்கு சென்று உரிய வகையில் பரிகாரம் செய்தால் அல்லது பிரார்த்தனை செய்தால் தோஷத்தை விரட்ட முடியும்.
சில தோஷங்கள் நோய்களை தந்து கொண்டே இருக்கும். எல்லா வகை செல்வம் இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாதபடி உடல்நலம் பாடாய்படுத்தி விடும். அந்த தோஷத்தை கண்டறிந்து பரிகாரம் செய்தால் வாழ்க்கையை இன்பமாக மாற்றிக் கொள்ள முடியும்.
ஜாதக அமைப்புகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் தோஷங்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்யும் பரிகாரங்களுக்காகவே தமிழகம் முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. எல்லா ஆலயங்களிலும் எல்லா வித பரிகார வழிபாடுகளையும் செய்து விட முடியாது.
ஒவ்வொரு தோஷத்துக்கும் என்று குறிப்பிட்ட ஒவ்வொரு ஆலயங்கள் இருக்கின்றன. அதை சரியாக தேர்வு செய்து ஆலய வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்கள் தோஷத்தை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரிடம் உள்ள தோஷங்களையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அதுபற்றிதான் இனி வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பார்க்க போகிறோம்.
பொதுவாக தோஷம் என்றவுடன் எல்லோருடைய மனதிலும் தோன்றுவது செவ்வாய் தோஷம்தான்.
செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி செவ்வாய் தோஷம் காரிய தடைகளை செய்து கொண்டே இருக்கும் என்றும் சொல்வதுண்டு. அதனால்தான் செவ்வாய் தோஷம் மிக முக்கியமான தோஷமாக கருதப்படுகிறது.
செவ்வாய் தோஷத்தை எப்படி கண்டு பிடிப்பது? எத்தகைய பரிகாரங்கள் மூலம் அந்த தோஷத்தை விரட்டுவது என்பதை அடுத்த வாரம் காணலாம்.
- சில மகான்கள் உலகின் கண்ணுக்கே படாமல் எங்கோ இருந்து உலக மக்களுக்கு நன்மை செய்து வருகின்றனர்.
- எனக்கு இந்த மகானைத் தெரியும். எந்த மகானைப் பற்றியும் மனம் போன போக்கில் யாரும் நினைக்க முடியாது.
குருவினைப் பற்றி பேச ஆரம்பித்தோம் அல்லவா! நம் நாட்டில் சத்யமான குருமார்கள் எத்தனையோ பேர் வாழ்ந்து நம் கண்ணுக்குத் தெரியாமல் நமக்கு அருள் புரிந்து வருகிறார்கள். நம் காலத்தில் வாழ்ந்து வருபவர்களிலும் எத்தனையோ மகான்கள், ஞானிகள் உள்ளனர். இது இந்த மண்ணின் பெருமை எனலாம். உலகெங்கிலும் இவ்வாறு நிறைய பேர் உள்ளனர். அந்த குருமார்களையும், அவர்களின் சக்தி அலை நிறைந்த தலங்களையும் சென்று வழிபடலாம்.
தயவு செய்து போலியானவர்களைப் பற்றி இந்த இடத்தில் பேச வேண்டாம். அவர்களும் வாழ்வில் நல்வழி திரும்ப வேண்டும் என மனதார நினைத்து இனி நம் பயணத்தினை தொடர்வோம்.
என் வாழ்வில் நான் முதன் முதலில் சந்தித்த ஒரு நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவர்தான். வயதில் சிறுமி என்றாலும் அவரை சந்தித்தபோது அவரது அமைதியான தோற்றத்திலும், மென்மையான புன்னகையாலும் எனது சப்தநாடியும் ஒடுங்கியது. மறுமுறை செல்லும் போது அந்த மென்மையான புன்னகையினையோ, கை அருளும் ஆசீர்வாதமோ கிடைக்கப் பெறாவிடில் நாம் ஏதாவது தப்பு செய்து விட்டோமோ? என்று எண்ணத் தோன்றியது. 'சாமி தயவு செய்து கொஞ்சமா சிரியுங்க' என்று மனம் எல்லா சாமிகளையும் வேண்டிக் கொள்ளும். சிறு வயது என்பதால் மிகவும் தட்டுதடு மாறிய நடைதான் இந்த ஆன்மீக பயணத்தில். ஆனால் இன்றோ ஓரளவு தெளிவு பட்டு மனம் நடக்கின்றது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கை, பிடிப்பு, வழி என்பது அவரவர் வாழ்வில் நடந்திருக்கலாம். எனது கணவர் ஸ்ரீபாலுடன் எத்தனையோ முறை- ஏன் மாதாமாதம் சென்று தரிசனம் செய்யும் போது ஒன்றினை நான் உணர்ந்தேன். எதனை நாம் விடாது நினைக்கின்றோமோ, அது நம் வாழ்வில் நடக்கும் என்று உணர்ந்தேன்.
மகா பெரியவர் என் கணவருடன் சமண மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன பற்றியும், தர்ம தேவி பற்றியும் பேசுவார். என் கணவர் சமண மதத்தவர். அதனை நன்கு தெரிந்தவர். அதே போன்று அனைத்து மத நூல்களினைப் பற்றியும் நன்கு படித்து அறிந்தவர். ஆகவே மகா பெரிய வரிடம் அது வும் அதிகாலை நேரத்தில் இவர்கள் உரையாடுவது காண்பதற்கும், கேட்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கும். மகா பெரியவரின் பூர்வாஸ்ர மத்தின் சகோதரரான சிவன் சுவாமிகள் எங்கள் குடும்பத்திற்கு ஒரு பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளாத சாதாரணத் தோற்றம். யாரும் எளிதில் சென்று அவரிடம் பேச முடியும். அவர்கள் ஆசைப்பட்டதை வாங்கித் தர முடியும். இதெல்லாம் எங்கள் மனதிற்கு நிறைவான மகிழ்ச்சி தந்தன.
இவ்விடத்தில் நான் வேறு சில குறிப்புகளையும் கூற வேண்டும். ஸ்ரீபால் சீறாப்புராணம் பற்றி அவரது நெருங்கிய நண்பர் அப்துல்குத்தூசோடு பேசிக் கொண்டு இருப்பார். பைபிள் பற்றி பாதர் வின்சென்ட்டோடு எத்தனையோ கருத்துக்களை, விளக்கங்களை கேட்டறிவார். இந்த சூழ்நிலை காரணமாகவே எங்களுக்கு அதிக ஆன்மீக நாட்டம் ஏற்பட்டது எனலாம்.

இதே போன்று சமண மதத்தில் எங்களது பெரு மதிப்புக்குரியவர் முனி மகாராஜ் ஆர்ஜ்வ சாகர். கொசு கடித்து உடல் வீங்கினாலும் அவருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் இருப்பார். உடன் இருப்பவர்கள் அவதிபடுவர். ஏனெனில் கொசு, ஈ, எறும்புகளை நாம் அடித்து அவை உயிரிழக்கக் காரணமாகி விடக்கூடாது என்பது சமண மதத்தின் அடிப்படை கொள்கை. தரையில் படுப்பதும், விளக்கு, பேன் இல்லாமல் இருப்பதும், விரதம் என்ற பெயரில் வருடத்தில் அநேக நாட்கள் பட்டினி இருப்பதும் இங்கு சர்வ சாதாரணமாய் காணும் நிகழ்வு.
இந்த அளவிற்கு உங்களை வருத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல. இவ்வரிகளின் நோக்கம். இந்த நிலையினை அடைவது என்பது சாதாரண முயற்சி அல்ல. குறைந்தபட்சம் கொலை, கொடுமைகள் இல்லாத சமுதாயமாக வாழ இப்படி எண்ணற்ற மகான்களின் வழிகாட்டுதலில் இருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசைதான்.
ஷீரடி பாபா, ராகவேந்திர சுவாமிகள் என நமக்கா மகான்களுக்கு பஞ்சம்? எனக்கு கிடைத்த வாய்ப்பில் நான் பார்த்த, பழகிய மகான்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது.
நாங்கள் அடுத்து அடிக்கடி சென்ற இடம் திருவண்ணாமலை. இங்கு ரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் பிரபலம். கோவில் என்று சென்ற எங்களுக்கு 'பகவான் யோகிராம் சுரத்குமாரை சந்தித்து பேசும், பழகும் வாய்ப்பு கிடைத்தது. தெய்வீக சிரிப்பு. கூர்மையான பார்வை. சிங்கம் போன்ற நடை. தோற்றத்தில்.... கசங்கிய எளிய பழைய ஆடை. இதனை மீறி அவர் மீதிருந்து பரந்து, விரிந்த ஒரு தெய்வீக உணர்வு. அந்த உணர்வே ஒருவரை அமைதிப்படுத்தும். தெளிவு படுத்தும்.
அடிக்கடி சென்றோம். பல அனுபவங்கள் நிகழ்ந்தன. இம்மாதிரி நிகழ்வுகள் விஞ்ஞா னத்தினை தாண்டிய மெய்ஞானத்தினை வலியுறுத்தின. இப்படி நான் எழுதுவதால் எந்த மகான்களிடமும் சென்றால் நம் மொத்த பிரச்சினைகளும் உடனே தீர்ந்து, சொத்து, சுகம் குவியும் என்ற கற்பனையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. இம் மாதிரி எண்ணங்கள் வளரவும் அவர்கள் விடமாட்டார்கள். இதற்கு ஒரு உதாரணத்தினைப் பார்ப்போம்.
பகவான் யோகி ராம் சுரத்குமாரைக் காண நாங்கள் செல்லும் நேரங்களில் ஒரு நபர் அடிக்கடி வருவதும், பகவான் அவரோடு சிரித்து சிரித்து பேசுவதனையும் பார்த்தோம். அந்த நபர் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று எண்ணுவோம். இவ்வாறு சில முறை தொடர்ந்தது.
வழக்கம் போல் அவரும் சிரித்தப்படியே பகவானை தரிசிக்க வந்தார். பகவான் அவரைப் பார்த்து உங்கள் பெயர் என்ன? என்றார். இதனைக் கேட்ட அனைவருக்கும் உறைந்து விட்டது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது.
இது ஒரு படிப்பினை. யாருக்கு? என்றால் அங்கு வந்த அனை வருக்குமேதான். பகவான் நடத்திய நாடகத்தில் அந்த நபருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான். எனக்கு இந்த மகானைத் தெரியும். எந்த மகானைப் பற்றியும் மனம் போன போக்கில் யாரும் நினைக்க முடியாது. அவர்களது எளிமை என்பது அவர்கள் நமக்கு காட்டும் கருணை என்பதினை உணர வேண்டும்.
இப்படி செல்லும்போது குணத்தால், பண்பால் நம்மை நாம்- நம் மனநிலையினை உயர்த்திக் கொள்ள முடியும். இந்த மனநிலையுடன் ஆன்ம நிலை உயர்ந்தால் அன்றி அமைதியும், தியானமும் பழகுவது கடினம். 'கைக்கு கை, காலுக்கு கால்' எடுப்போம் என்று கத்தி எடுத்து பேசும் வீரவசனங்கள் குறைய ஒரு நல்ல குருவின் வழிகாட்டுதல் ஒருவருக்கு அவசிய மாகின்றது.
சில மகான்கள் உலகின் கண்ணுக்கே படாமல் எங்கோ இருந்து உலக மக்களுக்கு நன்மை செய்து வருகின்றனர்.
வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு, போதனைகளை படித்து இருக்கின்றீர்களா? இல்லையெனில் இப்பொழுதே அவரைப் பற்றிய புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும்.
'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று கூறிய இரக்கத்தின், கருணையின் மொத்த வடிவம் அவர். 'கடவுள் ஒருவரே, அவரை மதம், ஜாதி என்ற பெயரில் பிரிக்காதீர்கள். இறைவனை அருட்பெருஞ் ஜோதியாக வணங்கலாம் என்ற வழிபாட்டு முறையினை கற்பித்தவர். 'அருட்பெரும் ஜோதி. அருட்பெரும் ஜோதி, தனிப்பெருங் கருணை அருட்பெரும் ஜோதி' என்பதே இவர் தந்த மாபெரும் மந்திரம்.
'கொல்லாமை'- எந்த உயிரினையும் கொல்லக் கூடாது என்பது இங்கு அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.
'பசிப்பிணி' என்ற ஒன்று சமுதாயத்தில் இருக்கவே கூடாது என்ற அவரின் அறிவுரைக்கேற்ப வடலூரில் அன்னதானம் ஓயாமல் வழங்கப்படுகிறது.

இங்கு பெரிய சம்பிரதாயங்கள் என்ற பேச்செல்லாம் இல்லை. பிறர் பசி தீர்த்தல், கொல்லாமை, சுய ஒழுக்கங்கள், ஜோதி வடிவில் இறைவனை வழிபடுதல் போன்றவை இந்த காலத்தில் அனைவராலும் அநேகமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வழி முறைகளே இங்கு நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொரு குருமார்களைப் பற்றியும் எழுதினால் சுருங்க எழுதினால் கூட ஒரு பெரிய புத்தகம் ஆகி விடும். எல்லோரின் பொதுவான கருத்துகளாக சிலவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.
மனிதனையும் சரி, இறைவனையும் சரி சில விகார பிரிவுகளைக் கொண்டு பார்க்கக் கூடாது. அவற்றினை அழித்து விடுவோம்.
* பசி என்ற பிணி இருக்க கூடாது.
* உடல் நோயின்றி இருத்தலும், மனம் கவலை இன்றி இருத்தலும் மிகப்பெரிய வரம்.
* பணம் ஒருவரது வாழ்வினை நிர்ணயிப்பது இல்லை. அவனது மன நிறைவும், நிம்மதியும் தான் வாழ்வினை நிர்ணயிக்கின்றது.
* நேற்று, நாளை, இன்று என்று இந்த நிமிடத்தில் எதுவுமே செய்ய முடியாது. எனவே இந்த நொடியில் முழுமையாய் நிறைவாய் வாழ்வோம்.
ஓஹோ அவர்கள் கூறியுள்ளது போல எதனையும் இதுதான் வேண்டும் என்று சாதாரண வாழ்க்கைப் பொருட்களில் நிர்ணயிக்க வேண்டாம்.
இந்த வாரம் சொல், மனம் இவற்றில் அன்றாடம் 5 நிமிடம் எதுவும் சிந்திக்காது. முயற்சித்து பார்ப்போமா.
-தொடரும்
- தமிழில் குஷ்பு-பிரபு ஜோடியின் மிகப்பெரும் வெற்றிப்படமான சின்னத்தம்பி படத்தின் தெலுங்கு ரீமேக் படம்தான் ‘சாண்டி’.
- ஒரே நேரத்தில் பாட்டு, நடிப்பு, உணர்ச்சிகள் என்று எல்லாவற்றையும் கேமரா முன் கொண்டு வர வேண்டியிருந்தது.
ஏம்மா...
அழுது நடிக்கத்தானம்மா சொன்னேன்...! அதற்காக இப்படியா... ஒரேயடியாக அழுவது? என்று கேட்ட டைரக்டர் எனது அழுகையை நிறுத்த முடியாமல் தவித்தார்.
உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டிருந்த என்னாலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் இருந்து பெருகி வந்த கண்ணீர் கன்னங்களில் பெருக்கெடுத்து ஓடியது.
ஷூட், கட்... டைரக்டர் உள்பட எல்லோரும் என் அருகில் வந்து ஜூஸ் வாங்கி தந்து குடிக்க வைத்து மீனா... ரிலாக்ஸ்... நீ சினிமா காட்சிக்காகத்தான் நடிக்கிறாய்... என்று தட்டிக் கொடுத்தும் அழுகை நிற்க அரைமணி நேரத்துக்கும் மேலாகி விட்டது.
அதன்பிறகு டைரக்டர் சொன்னார். 'எமோஷன் தேவைதான். கூடவே நடிக்கவும் செய்யணும்' அதை மறக்கலாமா? என்று அவர் சொன்னதும் எனக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது.
அப்படி காட்சிகளோடு நான் ஒன்றிப்போய் நடித்த படம் தெலுங்கில் 'சாண்டி'. அதாவது தமிழில் குஷ்பு-பிரபு ஜோடியின் மிகப்பெரும் வெற்றிப்படமான சின்னத்தம்பி படத்தின் தெலுங்கு ரீமேக் படம்தான் 'சாண்டி'.
தெலுங்கிலும் குஷ்புவைத்தான் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் தமிழில் குஷ்பு ரொம்ப பிசியாக இருந்ததால் அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை.
அடுத்து யாரை தேர்வு செய்யலாம் என்று யோசித்த போது தயாரிப்பாளர் கே.எஸ்.ராமாராவ் 'சீதா ராமையாவின் பேத்தி' என்ற படத்தில் எனது நடிப்பை பார்த்துதான் என்னை தேர்வு செய்து இருக்கிறார்.
டைரக்டர் ரவிராஜ் தெலுங்கில் மிகப்பெரிய டைரக்டர். அதேபோல் கே.எஸ்.ராமாராவ் தயாரிப்பு நிறுவனமும் பெரிய நிறுவனம். எனவே இந்த வாய்ப்பு எனக்கு நட்சத்திர அந்தஸ்தை தேடித்தரும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு எனது உழைப்பும் அதிகம் தேவைப்பட்டது.
சின்னத்தம்பி படத்தின் கதை, காட்சி அமைப்பு எல்லாமே அந்த காலகட்டத்தில் புதுமையாக இருந்தது. அதில் குஷ்பு-பிரபு ஜோடியின் பிரமாண்ட நடிப்பு படத்துக்கு உயிரூட்டி இருந்தது. அதனால்தான் மிகப்பெரிய ஹிட்டானது.
அதே கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது மிகப்பெரிய சவால்தான். சவாலை ஏற்றாச்சு. சந்தித்துதானே ஆக வேண்டும்? ஆந்திராவில் படப்பிடிப்பு. சின்னத்தம்பி மெல்ல மெல்ல வளர்ந்தான். கூடவே என் மனதுக்குள் பயமும் வளர்ந்தது. ஏனெனில் தமிழில் குஷ்பு ஏற்று நடித்த கதாபாத்திரம். எனவே படம் வெளியானதும் அவருடன் ஒப்பிட்டு பார்ப்பார்களே... அவரை விட நன்றாக நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர் அளவுக்காவது நடிக்க வேண்டுமே என்ற பயம்தான்.
என்னைப்போலவே நடிகர் வெங்கடேசுக்கும் பயம் இருந்திருக்கிறது. அவர் என்னிடம், 'மீனா, பிரபு சாரின் முகம் வித்தியாசமானது. எல்லா பாவங்களுக்கும் ஒத்து வரும்' என்றார்.
அழுத்தமான கதை. ஒரே நேரத்தில் பாட்டு, நடிப்பு, உணர்ச்சிகள் என்று எல்லாவற்றையும் கேமரா முன் கொண்டு வர வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் குஷ்புவை நான் நேரில் சந்தித்ததும் கிடையாது. பேசியதும் கிடையாது.
படத்தில் பார்த்துதான் எவ்வளவு அற்புதமாக நடித்து இருக்கிறார். என நினைத்து வியந்தேன். அப்போதெல்லாம் யூடியூப், இணைய தள வசதி எல்லாம் கிடையாது.
'வீடியோ கேசட்' இருந்தது. அதை டெக்கில் போட்டுத்தான் பார்க்க வேண்டும்.
நான் சின்னத்தம்பி வீடியோ கேசட் ஒன்று வாங்கி வைத்து இருந்தேன். ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பியதும் படத்தை போட்டு பார்ப்பேன். ஒவ்வொரு காட்சியிலும் குஷ்பு எப்படி நடித்திருக்கிறார் என்பதை உன்னிப்பாக பார்ப்பேன். சில காட்சிகளை மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன். ரொமான்ஸ் பண்ணும் போது எப்படி முகத்தை வைத்துள்ளார்? சீரியசான காட்சிகளில் எப்படி நடித்துள்ளார்? என்று திரும்ப திரும்ப பார்ப்பேன். அப்படி பார்த்துதான் பல காட்சிகளில் சிறப்பாக நடித்தேன்.
கடைசியில் கிளைமாக்ஸ் காட்சியில் சோகம், ஆவேசம், எதிர்பார்ப்பு, ஏக்கம், தவிப்பு... அப்பப்பா... எத்தனை எத்தனை பாவனைகள்...? சான்சே இல்லை குஷ்பு பிரமாதமாக நடித்து இருந்தார். அந்த காட்சியில்தான் அப்படியே மூழ்கி உணர்ச்சி வசப்பட்டு அழுதேவிட்டேன். அதை பார்த்துதான் டைரக்டர் என்னை ஆறுதல்படுத்தியது.
படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கிலும் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது.
அப்போதெல்லாம் படத்தை போலவே பாடல் கேசட் விற்பனையும் பிரபலம். கேசட்டுகள் விற்பனையை பொறுத்து பிளாட்டினம், டபுள் பிளாட்டினம் என்று விழா எடுத்து பாராட்டுவார்கள்.

சாண்டி பட பாடல்கள் விற்பனையில் டபுள் பிளாட்டினம் பெற்றது. படம் வெளியான தியேட்டர்களில் எல்லாம் நூறு நாட்களை கடந்து வெற்றி நடை போட்டது. எனக்கு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து வெற்றி விழாவில் கவுர வத்தையும் பெற்றுத்தந்தான் சின்னத்தம்பி...
இதில் இன்னும் சில மறக்க முடியாத சுவாரஸ்யங்கள் உள்ளன. அந்த தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...
(தொடரும்...)
- சுக்கு, ஓமம் இவைகளை வாயிலிட்டு மென்று காது, மூக்கு துளைகளில் ஊத மயக்கம் நீங்கி நினைவுண்டாகும்.
- மஞ்சள் பொடியுடன் அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு ஆமணக்கு எண்ணெய் கலந்து அடுப்பிலிட்டு சூடேற்றி, இளஞ்சூடாக வைத்து கட்ட பரு, கட்டி மறையும்.
நசியம்: சில மருந்து துளிகளை, எண்ணெய்துளிகளை, சாறுகளின் துளிகளை மூக்கில் இடும் முறை நசியம் எனப்படும். தமிழ் மருத்துவ முறையில் அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். பெரும்பாலும் இது போன்ற சிகிச்சை முறைகளை சுயமாக வீட்டில் செய்வதை தவிர்க்க வேண்டும். தமிழ் மருத்துவம் பயின்ற மருத்துவர்களின் கண்காணிப்பில் செய்வது நலம் தரும்.
பாம்புக்கடி, மூர்ச்சை, சன்னி, மயக்கம், மஞ்சள் காமாலை, நாசி முளை, நீர்க்கோவை, ஒற்றைத்தலைவலி போன்ற நிலைகளில் மிகுந்த பயனளிக்கிறது.
தும்பை பூவின் சாற்றை ஓரிரு துளிகள் மூக்கில் நசியமிட்டு வந்தால் நாசி முளை என்னும் Nasal Polyp கரைந்து வெளியேறும்.
சுக்கு தைலம், பீனிசத் தைலம் போன்றவை பீனிசம் எனப்படும் சைனுசைடிஸ் நோய் நிலையிலும், சிற்றாமுட்டி தைலம் பல வாத தொடர்பான நோய்களிலும் நசியமிட பயன்படும்.
ஊதல்: இது சில மூலிகை பொருட்கள் அல்லது உப்பு சரக்குகளில் ஏதாவது ஒன்றை காது, மூக்கு, கண் போன்ற உறுப்புகளில் ஊதி விடும் முறையாகும். ஊதல் முறை மூன்று வகைப்படும்-மென்று ஊதல், மருந்து வைத்து ஊதல், வளிவேக ஊதல்.
மென்று ஊதல் என்பது மருந்து பொருட்களை வாயில் போட்டு காது, மூக்கு போன்றவைகளில் ஊதும் முறையாகும். இப்படி ஊதும்போது மருந்துகளின் வேகம் இந்த உறுப்புகள் வழியாக மூளைக்கு செல்லும் நரம்பு வழி சென்று மூளையை அடைந்து மயக்கம், தெளிந்து நலமடைவர்.
மருந்து வைத்து ஊதல் என்பது மூக்கில் சிறிது மருந்து பொருட்களை வைத்து ஊதும் முறையாகும்.
வெற்றிலை, மிளகு இவைகளை வாயிலிட்டு மென்று காது, மூக்கு இவைகளில் ஊத நச்சுக்கடிகளின் வேகம் குறையும். சுக்கு, ஓமம் இவைகளை வாயிலிட்டு மென்று காது, மூக்கு துளைகளில் ஊத மயக்கம் நீங்கி நினைவுண்டாகும்.
மேலும் இந்த முறையை நோயாளியின் உறவினர் மூலமாக செய்யவேண்டும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. காச நோய், மஞ்சள் காமாலை, புற்று நோய், நீரிழிவு, பீனிசம் (Sinusitis), வாய்ப்புண், வயிற்று புண், தோல் நோயால் பாதிக்கப்பட்டோர், மது அருந்துபவர்கள், புகைபிடிப்பவர்கள் ஆகியோரை வைத்து ஊத கூடாது என்றும் நூல்களின் மூலம் அறிய முடிகிறது. மேலும் ஊதும் முன் பல் துலக்கி வாயை சுத்தம் செய்து, வெந்நீரால் கொப்பளித்து விட்டு ஊத வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
அவசர கால சிகிச்சை முறைகளில் ஒன்றான இது பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை.
நாசிகாபரணம்: சில மருந்து சரக்குகளை நிழலில் உலர்த்தி இடித்து துணியில் வடிகட்டி மூக்கில் இடும் முறையாகும்.
சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை பொடித்து எலுமிச்சம் பழச்சாற்றில் மூழ்க வைத்து சூரிய ஒளியில் உலர்த்தி எடுத்து மூக்கில் இட தலை சீரேற்றம், அதனால் உண்டாகும் பல்ஈறு வீக்கம், வலி, கண் இமை வீக்கம் ஆகியவை நீங்கும்.

களிம்பு: இது சில மூலிகைகள் அல்லது பாஷாணங்களை துவர்ப்புள்ள காய்ச்சுக்கட்டி போன்ற சரக்குகளுடன் பொடியாக்கி எண்ணெய், மெழுகு சேர்த்து காய்ச்சி உருக்கி, பின் ஆறவைத்து களிம்பாக செய்து கொள்ளும் முறையாகும். களிம்பு வகைகள் பெரும்பாலும் தீக்காயம், சொறி, சிரங்கு, புரையோடிய புண்கள், படுக்கை புண் போன்ற நோய்களை தீர்க்க பயன்படும்.
நல்லெண்ணையை இளநீருடன் சேர்த்து, அதில் குங்குலிய பொடி சேர்த்து கடையும்போது வெண்மை நிற களிம்பாக வரும். இதை தீக்காயங்களில் பூச எரிச்சல் தணிந்து விரைவாக ஆறும்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் மெழுகை சேர்த்து காய்ச்சி அதில் ஓமஉப்பு, புதினா உப்பு, சூடம், பூங்கற்பூரம் இவற்றை கலந்து ஆறவைக்க களிம்பாகும். தலை வலி, உடல் வலி, ஜலதோஷம் போன்ற நிலைகளில் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
சுண்ணாம்பு சிறு துளியுடன் குங்குலிய பொடி சேர்த்து நல்லெண்ணெயில் குழைத்து கட்டி, பரு இவைகளின் மேல் பூச அவை உடைந்து சீழ் வெளியாகி விரைவில் ஆறும்.
சீலை: சில மருந்து சரக்குகளை, தண்ணீர், மூலிகை சாறு, எண்ணெய் போன்றவற்றில் சேர்த்து அரைத்து குழம்பு போல் செய்து, அதில் துணித்துண்டை தோய்த்து விரணத்தின் மேல் இடும் முறையாகும்.
அரளி செடியின் பாலை துணியில் தடவி அதை கட்டிகள் மேல் வைத்து வர, கட்டி உடைந்து சீழ் வெளியேறி புண் உலரும். வெள்ளை குங்குலியத்தை பொடி செய்து மெழுகுடன் சேர்த்து உருக்கி சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதை பருத்தி துணியில் தடவி புண்கள் மேல் வைத்து கட்ட புண்கள் ஆறும்.
பவுத்திரம், புண்கள், கட்டிகள் புற்று போன்ற நிலைகளில் சீலை பயன்படுத்தப்படுகிறது.
நீர்: இவைகள், தழைகள், பட்டைகள், தாது பொருட்கள் ஆகியவற்றில் தேவையானவற்றை நோய்களுக்கு தக்கவாறு கஷாயம் செய்து அல்லது ஊறவைத்து பயன்படுத்துவது நீர் எனப்படும்.
புண்களை கழுவவும், வாய் கொப்பளிக்கவும், பீச்சு செய்யவும் இது பயன்படுகிறது. கொட்டைபாக்கு, படிகாரம் சம அளவு எடுத்து மண் கலத்தில் போட்டு நீர் ஊற்றி கொதிக்க வைத்து கஷாயம் வைத்து இளஞ்சூடாக வாய் கொப்பளிக்க பல் ஆட்டம் குறைந்து பல் இறுகும். பல வேர்பகுதியில் சீழ் பிடித்தால் குணமாகும்.
புங்கம் இலையை நீர் சேர்த்து காய்ச்சி கழுவி வந்தால் ஊரல், சொறி, சிரங்கு குறையும். தோல் கிருமிகள் அழியும் வேம்பு இலை மற்றும் பட்டையை மேற்கூறியவாறு பயன்படுத்த தோல் நோய்கள் கட்டுப்படும். மாவிலையை கழுவி எடுத்து அரிந்து மண்கலத்தில் போட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் வாய் கொப்பளிக்க ஈறிலிருந்து உதிரம் வடிதல், வாய்ப்புண், வாய்நாற்றம் நீங்கும்.
நெல்லி மரப்பட்டையை இடித்து நீர் விட்டு வேகவைத்து அந்த நீரினால் பிறப்புறுப்பை கழுவி வர யோனிவாசல் சுருங்கும்.
படிகார பொடி 2 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் கலந்து விரணங்களை கழுவி வர குழிப்புண்கள் ஆறும்.
வர்த்தி: சில மருந்து சரக்குகளை பொடி செய்து, சில சாறுகளால் அரைத்து குழம்பாக்கி, அதில் சீலையை நனைத்து ஆறாத புண்களுக்கும், புரை ஓடும் புண்களுக்கும் வைக்கும் முறையாகும்.
தாது சரக்குகளான பால் துத்தம், மயில் துத்தம், இலிங்கம், கற்பூரம் போன்றவற்றை நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து அதில் சீலையை நனைத்து பவுத்திரம் போன்ற புரைபுண்களில் போட்டு வந்தால் புண்கள் உலர்ந்து ஆறும்.
காலாணியில் சில நேரங்களில் ஓட்டை விழுவதுண்டு அந்த நிலையில் துரிசை சின்னவெங்காயசாறு விட்டரைத்து திரியில் தடவி உட்செலுத்தி மறுநாள் எடுக்க காலாணி ஆறும்.
சுட்டிகை: சுட்டிகை என்பது உலோக கம்பியை பழுக்கக் காய்ச்சி கடுமையான நோய் நிலைகளில் சூடு வைத்து நோய் வராமல் தடுப்பதோடு, நோய் வந்த பிறகு சரி செய்யவும் உதவும் முறையாகும்.இதற்கு பயன்படும் உலோக கம்பி பல வடிவங்களை உடையது. அவை உடுக்கு, முக்கவர், இருகவர், பிறை, பொட்டு, ஆழி, புள்ளடி போன்றவையாகும்.
இரும்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகங்களினால் செய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்தி மருந்து மற்றும் அறுவை சிகிச்சையினால் தீர்க்கமுடியாத பிணிகளையும் தீர்க்க முடியும் என்பதை நூல்கள் மூலமாகவும், அனுபவத்தின் மூலமாகவும் அறிய முடிகிறது.
முதலில் நோயுள்ள இடங்களை ஆய்வு செய்து சுட்டிகை இட வேண்டிய இடங்களை குறிக்க வேண்டும். பின்பு அவ்விடத்தை படிகார நீர் போன்றவற்றால் சுத்தம் செய்து சுட்டிகை கருவியை தீயிலிட்டு சூடு செய்து, சுட்டிகை இட குறித்த இடங்களில் சூடு வைத்து கண்ணிமைக்கும் நொடியில் எடுத்து, அவ்விடங்களில் கற்றாழை மடல் கொண்டு தேய்த்து, குங்குலிய வெண்ணைய் போன்றவை தடவப்படுகின்றது. இதன் மூலம் எரிச்சல் தணிவதோடு, புண்ணாகாமலும் தடுக்க முடியும்.
சுட்டிகையினால் தீர்ந்த நோய் திரும்பி வருவதில்லை என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றது. ராட்சச சிகிச்சை என அழைக்கப்படும் இந்த சிகிச்சைக்கு உலோகங்கள் மட்டுமல்லாமல் மர கொம்பு, மட்குடுவை, வெப்பமான காற்று போன்றவையும் பயன்படுகிறது. சுட்டிகை பெரும்பாலும் உச்சி, நெற்றி, முதுகு, நெஞ்சு, கால்கள் ஆகிய உறுப்புகளில் இடப்படுகிறது. வாதநோய்களான முழங்கால் வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, பக்கவாதம், முகவாதம், நடுக்குவாதம் போன்றவைகளுக்கும், காலாணி, மருக்கள் போன்றவைகளை எடுப்பதற்கும் சிறப்பாக பயன்படுகிறது.
மேலும் சிலர் குடலிறக்கம், யானைக்கால் நோய், வலிப்பு, விதை வீக்கம் போன்ற நோய் நிலைகளிலும் சுட்டிகையை பயன்படுத்தி வருகின்றனர்.
மண் சுட்டிகை: இது எண்ணெய் தடவிய மடக்குடுவையை நெருப்பிலிட்டு சூடாக்கி துணியில் பிடித்துக்கொண்டு உச்சி, நொற்று இவைகளின் மேல் நொச்சியிலையை பரப்பி அதன் மேல் அக்குடுவையை வைக்க சன்னி, ஒற்றைத்தலைவலி நீங்கும்.
வெப்பம் மிகுந்த காற்றை சில நோய் நிலைகளில் உடலில் படும்படி செய்து வியர்வையை பெருகும்படி செய்யப்படுகிறது. இது கால் சுட்டிகை எனப்படும்.
வாதத்துடன் கூடிய சன்னி நோய் நிலைகளில் தலையை தவிர மற்ற உறுப்புகள் வெயிலில் படும்படி செய்யும் முறை காந்தி சுட்டிகை எனப்படும்.
சித்த மருத்துவம் தோன்றிய காலம் முதல் இன்றைய கால கட்டம் வரை சுட்டிகை அனைத்து சித்த மருத்துவர்களாலும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிக குறைந்த நேரம் மற்றும் செலவில் தங்களது பிரச்சினை குறைவதாக கண்டு நோயாளிகளும் விருப்பத்தோடு இந்த சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சலாகை: இது ஒரு மெல்லிய கருவியாகும். இதனை புரையோடிய புண்களுக்கு துணியில் மருந்து தடவி, புரைகுழியின் இறுதி வரை செலுத்தவும், புண்களின் ஆழம் காணவும் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
பசை: பசை என்பது உளுந்து, மூசாம்பரம் குங்குலியம் முதலியவைகளை மெழுகு, முட்டைவெண்கரு போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்தும் புறசிகிச்சை முறையாகும். களிம்பை போன்ற செய்கை இருந்தாலும், களிம்பு உடலுடன் ஒட்டி உறுதியாகாது. ஆனால் பசைக்கு ஒட்டி உறுதியாக்கும் தன்மை உண்டு.
உளுந்து மாவு, சோற்று கற்றாழை, முட்டை வெண்கரு இவை மூன்றையும் சேர்த்தரைத்து பசையாக்கி எலும்பு முறிவு நடந்த இடத்திலோ, மூட்டு நழுவல் நடந்த இடத்திலோ அதனை சீர்செய்து துணிசுற்றி, இப்பசையை வைத்து கட்டுப்போட அவை சீக்கிரத்தில் பொருந்தி இணையும்.

களி: இது ஆளிவிதை போன்ற மூலிகைகளை அரிசி மாவுடன் சேர்த்து, பசும்பால் அல்லது நீர் சேர்த்து அரைத்து அடுப்பிலிட்டு களிபோல் கிளறும் முறையாகும்.
மஞ்சள் பொடியுடன் அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு ஆமணக்கு எண்ணெய் கலந்து அடுப்பிலிட்டு சூடேற்றி, இளஞ்சூடாக வைத்து கட்ட பரு, கட்டி மறையும். மேலும் சோற்றுடன் சுட்ட சின்ன வெங்காயத்தை சேர்த்தரைத்து கட்டிகளின் மீது வைத்து கட்ட அதில் உள்ள வீக்கம் மற்றும் வலி குறையும்.
- சந்தேகப்பிராணிகள் அலுத்துக்கொண்டாலும் இந்தப்பணமில்லாப்பரிவர்த்தனையில் பல நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
- ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் வந்தன, ஒரு கல்யாணத்துக்கு வேண்டியவை அனைத்துமே மொபைல் மூலம் வாங்கிவிடும் சவுகரியம் வந்தாகிவிட்டது.
"இந்தாங்க!"
"நூறு ரூபாயா? சில்லரை இல்லியேம்மா. பாக்கி மூணு ரூபாய்க்கு சாக்லேட் எடுத்துக்குங்க!"
"ஏங்க இன்னிக்கி ஓனர் வாடகை கேட்டு வந்துருவாரு! கேஷ் வெச்சுட்டு போங்க!"
"ஏண்டி இத நேத்தே சொல்ல மாட்டியா?"
"அய்யோ கேஷ் இல்லியா? போன மாசமே அடுத்த நாள் தரேன்னதுக்கு வாய் கூசாம கத்திட்டுப்போனாரு! நீங்க வேலைக்குப்போறதுக்கு முன்ன பாங்குலேர்ந்து கேஷ் எடுத்து குடுத்துடுங்க!"
இந்த சங்கடங்கள் எல்லாம் சூரியன் கிழக்கில் உதிப்பது போல தவறாமல் பல வீடுகளில் நடந்த, ஆம் இறந்த காலம்தான், நடந்த அக்கப்போர்கள். தகவல் தொழில் நுட்பமும் தொலைத்தொடர்பும் போட்டி போட்டுக்கொண்டு, பின்னங்கால் பிடறிபட வேகமாக முன்னே ஓடியதால் ஏற்பட்ட பல நன்மைகளில் மிக முக்கியமானது கரன்சி இல்லாப்பரிவர்த்தனை (Cashless Transactions).
அட! அதென்னங்க கரன்சி இல்லாத பரிவர்த்தனை!

சில வருடங்களுக்கு முன்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே அதன்பின் நமது அரசாங்கம் இந்தக்கரன்சி இல்லாப்பரிவர்த்தனைகளை முன்னெடுத்து ஊக்குவிக்க ஆரம்பித்திருக்கிறது.
"என்னவோ போங்க! சாதாரணமா கேஷ் குடுத்தாலே ஆயிரம் வில்லங்கம் வருது! இப்ப இந்த மாதிரி கரன்சி இல்லாம வேறயா..!"
சந்தேகப்பிராணிகள் அலுத்துக்கொண்டாலும் இந்தப்பணமில்லாப்பரிவர்த்தனையில் பல நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
காலாகாலமாகப் பெண்களைக் கேலி செய்யப்பயன்படும் மஞ்சப்பைகள் இனி தேவையில்லை! நோட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்ட பெருத்த பர்சுகளும் அதை நோட்டம் விட்டு ஆட்டையைப்போடத்துடிக்கும் பிக் பாக்கெட் பயமும் இல்லை. சம்பளப்பணத்தை பாங்கில் போட்டுவிட்டு கிரெடிட், டெபிட் கார்டுகளோடு கடைக்குள் நுழைந்து கொத்தமல்லியிலிருந்து கோட்டு சூட்டு வரை பிளாஸ்டிக் அட்டையை வைத்தே வாங்கிவிடலாமே!
அதுவும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் வந்த பிற்பாடு கடைகளுக்குப்போக வேண்டிய அவசியமும் இல்லை. இரவுச்சாப்பாட்டை முடித்துப்படுக்கப்போகும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு கம்ப்யூட்டர் அல்லது மொபைல் மூலம் ஆன் லைன் ஷாப்பிங்கில் வாங்கலாமே! கடை திறந்திருக்குமோ என்னமோ, ஆபீசில் பர்மிஷன் கிடைக்குமோ, குழந்தை பள்ளியிலிருந்து வந்துவிடும் நேரமாச்சே என்பது போன்ற நிபந்த னைகள் எதுவும் இல்லாமல், வீட்டில் சாய்நாற்காலியில் அமர்ந்தவாறே வாங்கும் சவுகரியம்!
"இன்னிக்குதான் மாசம் இருவது தேதியாகுது! ஒண்ணாம் தேதிதானே சுளையா பதினெட்டாயிரம் ரூபாய் குடுத்தேன். அதுக்குள்ள தீர்ந்து போச்சுன்றியே?"
"ஆமா நாந்தான் உங்க பணத்தை எடுத்து எங்க பொறந்த வீட்டுக்கு கொடுத்திருக்கேன்! கேப்பீங்களே!"
கரன்சி இல்லாப்பரிவர்த்தனையில் இது போன்ற மாதாந்திரச்சண்டைகள் தவிர்க்கப்படும். ஒவ்வொரு முறையும் கார்டு பயன்படுத்தப்பட்டவுடன் உங்களுக்கு மொபைல் போனில் "த பாரு! சொச்சம் கணக்குல இவ்வளவுதான்! என்று முன்னெச்சரிக்கை மெசேஜ் வந்துவிடும்! ஆக, உங்கள் செலவுகளை குறைக்க முடிகிறதோ இல்லையோ அதைத்தீர்க்கமாக கணக்கு வைத்துக்கொள்வது படு சுலபம்!
பயணம் செய்யும்போது ரெயிலில் யாரோ கொடுத்த பிஸ்கெட்டைத்தின்றாலும் உங்கள் பணத்துக்கு பங்கம் வராது! முக்கியமாக இந்தக்கள்ள நோட்டுப்பயமே கிடையாது!
லட்சக்கணக்கானவர்கள் கரன்சியை விடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறும்போது நாட்டில் பேப்பர் உபயோகம் குறைந்து பசுமை இந்தியாவுக்கு இரண்டு பிளஸ் புள்ளிகள் ஏறும்!
"இந்த பே டி எம், பே பால்ன்னுன்றாங்களே அதான் இந்தக்கரன்சியில்லாப் பரிவர்த்தனையா?"
ஆம்! அவைகளும்தான்!"
"அப்படீன்ன வேற நெறைய இருக்கா?"

ஜெயராமன் ரகுநாதன்
நிறைய கரன்சியில்லாப்பரிவர்த்தனைக்கான செயல் முறைகளும் மென்பொருள் சார்ந்த சேவைகளும் இணைய தளத்தை முதுகெலும்பாய்க்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் பரவ ஆரம்பித்துவிட்டன.
கரன்சியற்ற நிலைக்கு இட்டுச்செல்ல வந்துவிட்ட பலப்பல பரிவர்த்தனை முறைகளில் முக்கியமானவை இவைதாம்:
1. வங்கிக்கார்டுகள் Bank Cards / Prepaid and post paid
2. கட்டமைப்பில்லாத துணை சேவைத்தகவல் Unstructured Supplementary Services data (USSD)
3. ஆதார் துணை கொண்ட பரிவர்த்தனை Aadhaar enabled Payments
4. ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை Unified Payments Interface
5. மொபைல் பணப்பை Mobile Wallets
6. விற்பனை பாயிண்ட் Point of Sale
7. இணைய வங்கி Internet Banking
8. மொபைல் வங்கி Mobile Banking
9. மினி ஏ டி எம் Micro ATMS
"அட என்னங்க! என்னென்னமோ பேரெல்லாம் சொல்றீங்க! இதெல்லாம் என்னது? சீக்கிரமா ஆகட்டும். எனக்கு அடுப்புல குழம்பு கொதிக்குது!"
சொல்கிறேன்..
பர்சில் கை விட்டு பணம் எடுத்துக்கொடுக்காமல் பொருள் வாங்குவது, தகவல் தொழில் தோடர்பு நுட்பத்தின் மூலம் சாத்தியமாகிவிட்டது. உங்களில் பலர் கணவரின் ஜாயிண்ட் பாங்க் அக்கவுண்ட் மட்டுமே என்றிருந்த காலங்கள் தாண்டி, தனி அக்கவுண்ட்டுக்கு மாறிவிட்டீர்கள். கடந்த சில வருடங்களாக கம்ப்யூட்டர் மூலமாகவும் மொபைல் மூலமாகவும் பரிவர்த்தனை செய்யும் அனுபவமும் பெற்று விட்டீர்கள். கிரெடிட் கார்ட் உபயோகம் பற்றி சகலருக்கும் தெரியும். இந்த செக், கிரெடிட் கார்டு போன்ற கரன்சியில்லாப்பரிவர்த்தனையை இன்னொரு லெவலுக்கு எடுத்துப்போய் விட்டது தொழில் நுட்பம். ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் வந்தன, ஒரு கல்யாணத்துக்கு வேண்டியவை அனைத்துமே மொபைல் மூலம் வாங்கிவிடும் சவுகரியம் வந்தாகிவிட்டது.
இதே நேரத்தில் வர்த்தக உலகில் இணையம் பெரும் புரட்சியை உண்டு பண்ணி ஆன்லைன் வியாபாரம் பெருகி இப்போது உப்பு, புளி, கொத்தமல்லி, கருவேப்பிலை கூட ஆன்லைனில் வாங்கலாம் என்னும் நிலையை அடைந்துவிட்டோம்.
- எருமைத்தலை பெற்ற வரமுனி மீண்டும் கடுமையான தவங்கள் பல புரிந்து மூன்று உலகங்களையும் ஆளும் வல்லமை பெற்றிருந்தான்.
- தசரா திருவிழாவின்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விதவிதமான வேடங்களை அணிந்து, வீடுகள் தோறும் சென்று தர்மம் எடுப்பதை காணமுடியும்.
உலகின் ஆதார சக்தியாய் விளங்கும் அன்னை பராசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு திருநாமங்களில் அருள் பாலிக்கிறாள். அந்தவகையில் திருச்செந்தூர் அருகில் உள்ள கடற்கரை பட்டினமாகிய குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் எனும் பெயர் கொண்டு கருணை மழை பொழிந்து கொண்டிருக்கிறார் மூவுலகிற்கும் நாயகி.
அம்மையும், அப்பனுமாக காட்சியளிக்கும் அற்புத தெய்வமாம் அன்னை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது ஆகும்.
இந்தியாவில் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெறும் தசரா பெருந்திருவிழாவுக்கு அடுத்து மிகப்பெரிய அளவில் இங்கு தான் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தசரா பெருந்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, 10-ம் நாள் திருவிழாவான 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு மகிசா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
கொடியேற்ற நாளுக்கு முந்தைய இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்கு காப்பு கட்டப்படும். முதல் நாளில் அம்பாள் துர்க்கை கோலத்தில் காட்சி தருவாள்.
2-ம் நாள் விசுவ கர்மேஸ்வரர் கோலத்திலும், 3-ம் நாள் பார்வதி கோலத்திலும், 4-ம் நாள் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், 5-ம் நாள் நவநீதகிருஷ்ணர் கோலத்திலும், 6-ம் நாள் மகிஷாசுரமர்த்தினி யாகவும், 7-ம் நாள் ஆனந்த நடராசராகவும், 8-ம் நாள் கஜலட்சுமி கோலத்திலும், 9-வது நாளில் கலைமகள் கோலத்திலும் காட்சியளித்து வீதிஉலா வருகிறாள்.
10-ம் நாள் பிற்பகலில் தசமி திதியில் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மகிஷாசுர சம்ஹாரத்திற்காக கொண்டு செல்லப்படும் சூலத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பிறகு, மகிஷாசுர மர்த்தினி கோலம் கொண்டு, கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரே சுவரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்பாள் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து மகிசாசூரசம்ஹாரம் நடைபெறும்.
மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். மாலையில் கோவிலை அம்மன் வந்தடைந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து, சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்து விடுவார்கள். 12-ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம், குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா திருவிழா இனிதே நிறைவடையும்.
தசரா திருவிழா தோன்றிய வரலாறு
முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவன் தான் பெற்ற தவத்தின் பயனாக வலிமை மிக்க வனாகி ஆணவத்தால் தன் அறிவுக்கண்ணை இழந்திருந்தான். ஒரு நாள் இவனது இருப்பிடம் வழியாக மகா மகத்துவம் பொருந்திய அகத்திய மாமுனிவர் செல்லும்போது அவரை மதிக்கத் தவறியதுடன் அவமரியாதையும் செய்தான்.
இதனால் அகத்தியர் மனம் நொந்து வரமுனிக்கு எருமைத்தலையும் மனித உடலும் பெற்று அலைவாயாக என்று சாபம் கொடுத்தார். செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய உடன், சாப விமோசனமாக இறைவியின் கையால் உன் உடல் அழிந்து சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.
எருமைத்தலை பெற்ற வரமுனி மீண்டும் கடுமையான தவங்கள் பல புரிந்து மூன்று உலகங்களையும் ஆளும் வல்லமை பெற்றிருந்தான். இதனால் பூமியில் தவம் புரியும் முனிவர்கள் முதல் தேவர்கள் வரை அனைவருக்கும் எல்லையில்லா துன்பம் கொடுத்து வந்தான். வரமுனி முழுமையான அசுரனாக மாறி மகிஷா சூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான். தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று முறையிட, அன்னை பார்வதியை நோக்கி தவம் செய்யுங்கள், உங்களுக்கான தீர்வை அன்னை தருவாள் என்றார் சிவன்.
தேவர்களும் அன்னையை நோக்கி விடாமுயற்சியுடன் கடும்தவம் புரிந்தனர். முனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராதபடி அன்னை மாயஅரண் ஒன்றை உருவாக்கி எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேள்வியை நடத்தும்படி கூறினாள். அவர்கள் நடத்திய வேள்வியில் பெண் குழந்தை ஒன்று தோன்றியது இந்த குழந்தை லலிதாம்பிகை என்று அழைக்கப்பட்டது.
9 நாட்களில் இந்த குழந்தை முழுமையான வளர்ச்சியடைந்து 10-வது நாள் பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிஷாசூரனை வதம் செய்யப்புறப்பட்டாள். மகிஷாசூரனை அழித்த 10-ம் நாள் தசரா பெரும் திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது. அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். முதல் 3 நாட்கள் மலைமகளாகவும், அடுத்து வரும் 3 நாட்கள் அலைமகளாகவும் , இறுதியில் வரும் 3 நாட்கள் கலைமகளாகவும் காட்சி அளிக்கிறாள் அன்னை.
வேடம் அணியும் பக்தர்கள்
தசரா திருவிழாவின்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விதவிதமான வேடங்களை அணிந்து, வீடுகள் தோறும் சென்று தர்மம் எடுப்பதை காணமுடியும். அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அரிசி, பணம் காணிக்கையாக வழங்குவார்கள். இதற்கு காரண, காரியம் உண்டு. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகத்தின்படி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டும், நினைத்த காரியும் நிறைவேற வேண்டியும், மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.
பொதுவாக தசரா திருவிழாவையொட்டி வேடமணியும் பக்தர்கள் 61 நாள், 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள் என தங்கள் வசதிக்கேற்ப விரதமிருந்து வேடம் அணிவது வழக்கம்.

முருகன், விநாயகர், ராமன், லட்சுமணன், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, காளி, அட்டகாளி, கருங்காளி, அனுமன், சுடுகாட்டு காளி, சுடலை மாடன், இசக்கி அம்மன், குறவன், குறத்தி என பல்வேறு வேடங்களை பக்தர்கள் விரும்பி அணிகின்றனர்.
வழிபாடு-பலன்கள்
அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இறைவனை தீ வடிவில் வழிபாடு செய்தால் அனைத்து நலன்களையும் பெற்று உயரலாம் என்பதே இதன் தத்துவம். எண்ணெய், மாப்பொடி, நெல்லிப்பொடி, மஞ்சள் பொடி, பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம் ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெற்று வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்.
இதேபோல குலசையில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆன்மாவினுள் புகுந்து நம்மை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் அகங்காரம், ஆணவம், கோபம், மோகம் உள்ளிட்டவைகளை அன்னமாக வேகவைத்து இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வது என்பதே இதன் தத்துவம் ஆகும். இதன் மூலம் தோஷங்கள் நீங்குவதாகவும் நம்பப்படுகிறது.
- நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் பார்வதியையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் போற்றுகிறோம்.
- தேவி வழிபாட்டிற்கு ஏற்ற நவராத்திரி காலத்தில் அவரவர் இல்லத்தில் கொலு வைத்து தேவியை எழுந்தருளச் செய்வோம்.
இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி.
மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப் படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுகிறது.
பொதுவாக கடவுளரைப் படங்களாக மட்டுமே வீடுகளில் வைத்து வழிபடுகிறோம். சிலைகளாக வைத்து வழிபடும் மரபு பெரும்பாலும் ஆலயங்களில்தான்.
ஆனால் நவராத்திரியில் மட்டும் தெய்வ வடிவங்களைப் படங்களாக அல்லாமல் பொம்மைகளாகவே வைத்து வழிபடுகிறோம்.
நவராத்திரி கொலுவில் ஒன்பது படிகள் வைப்பது வழக்கம். குறைவாக வைத்தாலும் ஒற்றைப் படை எண்ணிக்கையில்தான் மூன்று, ஐந்து, ஏழு என்று வைப்பார்கள். இரட்டைப் படை எண்ணிக்கையில் கொலுப் படிகள் அமைக்கும் மரபில்லை. ஒன்பது படிகளுக்கு மேலாக வைக்கும் வழக்கமும் கிடையாது.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் பார்வதியையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் போற்றுகிறோம். அவ்விதம் வீரம். கல்வி, செல்வம் என நமது மூன்று அடிப்படைத் தேவைகளும் நிறைவேற இறைச்சக்தியைப் பிரார்த்திக்கிறோம்.
பொம்மைக் கொலுவில் பரிணாம வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பொம்மைகள் வைக்கப்படுகின்றன. கீழே உள்ள மூன்று படிகளைப் பறவைகள் மற்றும் விலங்குகளின் பொம்மைகள் அலங்கரிக்கும்.
அதற்கடுத்த மூன்று படிகளை மகான்கள் மற்றும் தேசத் தலைவர்களின் பொம்மைகள் அலங்கரிக்கும்.
கொலுவில் மேலே உள்ள மூன்று படிகளில் தெய்வப் பொம்மைகளை இடம் பெறச் செய்வது வழக்கம்.
பார்வதியை வழிபடுவதால் நல்ல சக்தி வாய்ந்த உடலை அடைய முடியும். நோய் நீங்கப் பெற்று நல்ல ஆரோக்கியம் நமக்கு வேண்டும் எனப் பார்வதியை வேண்டலாம்.
சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்களால் பூமாதேவி பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருந்தாள். அவள் மும்மூர்த்திகளை வேண்ட, அவர்கள் தங்கள் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி ஆதி பராசக்தியைப் படைத்தார்கள். அவள் அரக்கர்களை வதம் செய்தாள்.
அப்படி வதம் செய்யும் போர் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. அந்த ஒன்பது நாட்களே நவராத்திரியாகக் கொண்டாடப் படுவதாக தேவி பாகவதம் சொல்கிறது.
சும்பன், நிசும்பன் ஆகிய அரக்கர்கள் காமம் குரோதம் ஆகிய தீய குணங்களின் உருவகம். நம் மனத்தில் பார்வதி தேவியைக் கொலு வீற்றிருக்கச் செய்து அந்தத் தீய பண்புகளை அழிக்க வேண்டும் என்பதே நவராத்திரிக் கொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள உட்கருத்து.
பார்வதிக்குக் காளி, துர்க்கை, பராசக்தி என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் உண்டு. காளிதாசர், ராமகிருஷ்ண பரமஹம்சர், வள்ளலார், மகாகவி பாரதியார் உள்ளிட்ட பலர் அன்னை பராசக்தியின் அடியவர்களாகத் திகழ்ந்தவர்கள். மராட்டிய மாமன்னன் சிவாஜி காளிதேவியின் பெரிய பக்தனாக இருந்தவன்.
லட்சுமி தேவி தோன்றிய விதம் பற்றி நாராயண பட்டதிரி குருவாயூரப்பன்மேல் எழுதிய நாராயணீயம் என்கிற மஸ்கிருதச் செய்யுள் நூல் தெரிவிக்கிறது.
தேவர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது அமிர்தம் வெளிப்படுவதற்கு முன்பாகப் பாற்கடலில் இருந்து கொடிய நஞ்சு வெளிப்பட்டது. சிவபெருமான் அந்த நஞ்சைக் குடித்து தேவர்களைக் காப்பாற்றினார்.
தொடர்ந்து பாற்கடல் கடையப்பட ஐராவதம் என்ற வெள்ளை யானை, கேட்டதெல்லாம் தரும் கற்பக மரம் உள்படப் பல புனிதப் பொருட்கள் தோன்றின. அப்போது பாற்கடலில் தோன்றியவள்தான் லட்சுமிதேவி.
அவளுக்கான சுயம்வரம் அப்போதே நடத்தப் பட்டது. பேரழகியான லட்சுமி நாணத்தோடு திருமால் கழுத்தில் மாலையிட்டாள். திருமாள் அவளைத் தன் இதயத்தில் வைத்துப் போற்றினார். அதனால்தான் திருப்பதி வெங்கடாஜலபதி மார்பில் நாம் லட்சுமி தேவியைப் பார்க்கிறோம்.

அவரவரும் தங்கள் மனைவியை நெஞ்சத்தில் வைத்து மதித்துப் போற்றினால் வாழ்வில் செல்வம் சேரும் என்பதே வெங்கடாஜலபதி வடிவம் உணர்த்தும் கருத்து. நவராத்திரியில் லட்சுமி வழிபாடு செய்பவர்கள் இல்லங்களில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
ஆதிசங்கரர் லட்சுமியைப் போற்றி கனகதாரா ஸ்தோத்திரம் என்ற பாடலை அருளியுள்ளார். கவியரசர் கண்ணதாசன் அந்தப் பாடலால் கவரப்பட்டு, அதைப் பொன்மழை என்ற தலைப்பில் கவிதையாகவே தமிழாக்கம் செய்துள்ளார். நவராத்திரி காலத்தில் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது விசேஷமானது. லட்சுமி தேவியின் அருளைப் பெற உதவக் கூடியது.
லட்சுமி தேவியைப் பற்றிய குறிப்பு திருக்குறளில் உண்டு. செய்யாள், செய்யவள், திரு என்றெல்லாம் லட்சுமி தேவியைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். மங்கலங்களைத் தரும் லட்சுமியின் சகோதரி அமங்கல வடிவமான மூதேவி. லட்சுமியின் அக்கா மூதேவியைத் தவ்வை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
லட்சுமி கடாட்சம் உடையவர்களே இந்த உலக வாழ்வின் இன்பங்களை அடைய முடியும். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. நவராத்திரி காலத்தில் லட்சுமியைப் பிரார்த்தனை செய்வதன் மூலம் செல்வ வளத்தைப் பெறலாம்.
ஒருவனுக்கு உடல் வலிமையும் செல்வ வளமும் இருந்தாலும் அறிவில்லா விட்டால் அவையிரண்டும் வீண்தான். அவன் செல்வ வளம் எளிதாய்ப் பிறரால் சுரண்டப்படும். அவன் உடல் வலிமை கொண்டிருந்தாலும் பகைவர் சூழ்ச்சியால் அவனை வீழ்த்துவர்.
எனவே அறிவிருப்பவர்களே வாழ்வில் வெற்றி பெற இயலும். அந்த அறிவை அருள்பவள் கலைவாணி. நவராத்திரியின் போது பார்வதி பூஜை லட்சுமி பூஜை என்றெல்லாம் நாம் தனித்தனியே பெயர் வைத்து அழைப்பதில்லை.
ஆனால் சரஸ்வதி பூஜை எனத் தனிப் பெயரிட்டு ஒரு நாளை நவராத்திரியில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். சரஸ்வதியின் பெருமை அத்தகையது.
பார்வதியின் வாகனம் சிங்கம். உடல் வலிமையை அருளும் பார்வதிக்கு காட்டு ராஜாவான சிங்கம் வாகனமாகியது. லட்சுமியின் வாகனம் ஆந்தை. இரவு, பகல் பாராது உழைத்தால் தான் செல்வம் சேரும் என்பதால் இரவில் கண்விழித்திருக்கும் ஆந்தை அவளுக்கு வாகனமாகியது.
சரஸ்வதியின் வாகனம் அன்னப்பறவை. பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்துப் பாலை மட்டும் அருந்தும் ஆற்றல் கொண்டது அன்னம். அதுபோலவே நாம் கல்வி கற்கும் போது நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும் என்பதை உணர்த்து கிறது கல்விக் கடவுளான கலைமகளின் வாகனம்.
லட்சுமிதேவி செந்தாமரையில் வாசம் செய்கிறாள். கலைவாணி வெண்தாமரையில் குடியிருக்கிறாள். வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள் என்று சரஸ்வதியைப் போற்றுகிறார் பாரதியார்.
கலைவாணியின் தோற்றமே அவள் கல்விக் கடவுள் என்பதைப் புலப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளதுதான் ஆச்சரியம்.
அவள் வீற்றிருக்கும் வெண்தாமரை தாவரவியல் சார்ந்தது. அவள் வாகனமான அன்னம் விலங்கியல் சார்ந்தது. அவள் கையிலுள்ள ஓலைச் சுவடி இலக்கியப் பாடத்தை உணர்த்துவது. இன்னொரு கையில் உள்ள மணிமாலை, எண்ணிக்கையுடன் ஜபம் செய்யப் பயன்படுவதால், கணிதத்தை உணர்த்துகிறது. கலைவாணியின் கையில் உள்ள வீணை அனைத்துக் கலைகளின் உருவகம்.
பெண்கல்வி தேவை என்று மகாகவி பாரதியார் உள்படப் பலரும் போராடினார்கள். ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று, பெண்கல்வி மறுக்கப் பட்ட காலத்தில் பல ஆண்கள் குரல் கொடுத்தார்கள்.
நமது தேசத்தில் இடைக்காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்று உண்மை. இப்போதுதான் அந்நிலை மாறியுள்ளது.
ஆனால் நம் ஆன்மிக மரபில் கல்விக் கடவுளாகவே கலைவாணி என்ற பெண்ணைத்தான் நாம் போற்றுகிறோம் என்பதை உணரும்போது, பெண்களும் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதே நம் ஆன்மிகத்தின் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நூறாண்டு வாழ்ந்த தவ முனிவரான காஞ்சிப் பரமாச்சாரியார் வாழ்வில் ஒரு செய்தி வருகிறது. அவர் நவராத்திரி காலமொன்றில் வெளியூரில் முகாமிட்டிருந்தார். துறுதுறுவென்றிருந்த ஓர் ஐந்து வயதுச் சிறுமி சுவாமிகளை நோக்கி வேகவேகமாக நடந்து வந்தது. உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் சுவாமிகள்.

`நவராத்திரி வரப் போகிறதே? இங்கு ஏன் நீங்க கொலு வெக்கல்லே? கொலு வெச்சா எல்லோருக்கும் சுண்டல் கிடைக்கும். நாங்கள்லாம் பாட்டுப் பாட முடியுமே?`
அந்தச் சிறுமியின் பேச்சை அம்பாளின் பேச்சாகவே மதித்தார் சுவாமிகள். தன்னை தரிசிக்க வந்தவர்களிடம் நாளை எல்லோரும் ஆளுக்கொரு பொம்மை கொண்டு வாருங்கள் என்றார்.
மறுநாள் பொம்மைகள் வந்து குவிந்தன. சுவாமிகள் தங்கியிருந்த இடத்திலேயே ஒன்பது படிக்கட்டுகள் கட்டி, அழகாக கொலு வைக்கப்பட்டது. குழந்தைகளும் பெரியவர்களும் கொலுவை வந்து தரிசித்தார்கள். பெண்கள் பலர் நாள்தோறும் பாட்டுப் பாடினார்கள். எல்லோருக்கும் சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஒன்பது நாள் கொலு முடிந்ததும், பொம்மைகளைப் பிரசாதமாக அடியவர்களுக்கே திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார் சுவாமிகள். ஒவ்வோர் இந்து வீட்டிலும் கட்டாயம் கொலு வைத்து அம்பிகையை வழிபட வேண்டும் என்றும் அது நம் நாட்டு மக்களுக்கு எல்லா நலன்களையும் தரும் என்றும் அவர் கூறிய செய்தி அவரது சரித்திரத்தில் வருகிறது.
ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அடியவர்கள் நவராத்திரி வழிபாட்டில் மிகுந்த அக்கறை செலுத்தியிருக்கிறார்கள். நவராத்திரி கொலு பெண்களுக்கு உரியதாக இருந்தாலும் நவராத்திரி காலத்தில் ஆண்கள் விரதமிருப்பதும் தேவியை வழிபடுவதும் கூட வழக்கமாக உள்ளது.
தேவி வழிபாட்டிற்கு ஏற்ற நவராத்திரி காலத்தில் அவரவர் இல்லத்தில் கொலு வைத்து தேவியை எழுந்தருளச் செய்வோம். அம்பிகையை வழிபட்டால் அதிக வரம் பெறலாம் என்கிறார் மகாகவி பாரதியார். முப்பெருந் தேவியரை வழிபட்டு முழுமையான பலனைப் பெறுவோம்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- விவசாயத்தை நம்பிய அவர் தன் பெண் பிள்ளைகள் படிக்க விரும்பிய கல்வியை படிப்பதற்காய் தன்னால் இயன்ற முயற்சி, பொருளுதவி அத்தனையும் கொடுத்து தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.
- தந்தையின் பத்து ஏக்கர் விவசாய நிலத்தை விற்று பாகமாக தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கும் ஆசை அவளுக்கு..
ஐந்து பெண் பிள்ளைகளின் தகப்பன் என் கதையின் நாயகன் தங்கராசா தாத்தா.
தனக்கு ஐந்தும் பொம்பள புள்ளையளா பொறந்துடுச்சே! என ஒரு நாளும் கவலையோ வருத்தமோ பட்டதில்லை அவர்.
விவசாயம் மட்டும் தெரிந்த தென்மாவட்ட வெள்ளந்தி விவசாயி அவர்.
தன்னுடன் பிறந்த சகோதரர்களுக்கு திருமணம் முடிந்து தனது பிள்ளைகள் திருமண வயதை எட்டிய பருவம் வரை கூட்டு குடும்பமாய் ஒரு பானை சோற்றை ஒன்றாய் தம்பி குடும்பங்களோடு சாப்பிட்ட தங்க மனசு ராசா அவர்.
விவசாயத்தை நம்பிய அவர் தன் பெண் பிள்ளைகள் படிக்க விரும்பிய கல்வியை படிப்பதற்காய் தன்னால் இயன்ற முயற்சி, பொருளுதவி அத்தனையும் கொடுத்து தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.
தனக்கு கிடைக்காத கல்வியை தனது பிள்ளைகளுக்கு கொடுத்து அவர்கள் வாழ்வில்முன்னேற வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை மேற்கொண்டார் தங்கராசா தாத்தா.
கல்வி என்பது காற்றால் அழியாதது. தீயினால் வாடாதது. காசை கொடுத்தாலும் கிட்டாதது என்பதை உணர்ந்து பாரதி கண்ட புதுமை பெண்கள் போல் தங்கராசா தாத்தாவின் ஐந்து பெண் பிள்ளைகளும் கல்வியை கற்று வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவியராய் படித்து வந்தனர்.
தாயும் புள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேற தானே! என தங்கராசா தாத்தாவின் தம்பிமார் மனைவியர்கள் முரண்டு பிடித்ததால் தங்கராசா தாத்தாவின் பூர்வீக சொத்தை பிரிக்க வேண்டியதாயிற்று.
பாகப்பிரிவினை நடந்து பாகமாய் தனக்கு கிடைத்த பத்து ஏக்கர் நிலத்தில் தங்கராசா தாத்தா விவசாயம் செய்து தனது பிள்ளைகளை தட்டு முட்டின்றி படிக்க வைத்தார்.
தகப்பனார் தங்களுக்காய் படும் கஷ்டத்தை உணர்ந்து கீதா, ராதா, லதா, சுதா, சீதா என பெயர் கொண்ட தங்கராசாவின் ஐந்து பெண்களும் முதுகலை பட்டப்படிப்பை முதல் வகுப்பு தேர்ச்சியோடு முடித்து வந்தனர்.
ஐந்து பெண்களும் அவரவர் படித்த எம்.ஏ., எம்.காம்., எம்.சி.ஏ, எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., படிப்புகளின் மூலம் அரசாங்க உத்தியோகத்தை பெறுவதற்காக முயற்சி செய்தனர்.
"காக்காசு உத்தி யோகமானாலும் கவர்மெண்ட் உத்தியோகமாக இருக்கணும் மக்கா"...
"சல்லிக்காசு சம்பளமா இருந்தாலும் சர்க்காரு சம்பளமா இருக்கணும் மக்களேய்"
என தகப்பனார் சிறு வயது முதலே ஊட்டி வளர்த்த அறிவுரையை மனதில் கொண்டு அரசாங்க உத்தியோகத்தை பெறும் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர்...
அத்தனை பெண்களும் அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்ததும் தான் பட்ட பாடு பழுதாகவில்லை என்ற பெருமிதத்தோடு தனது அருமை பிள்ளைகளை நினைத்து உவகை கொண்டார் தங்கராசா தாத்தா.
அரசு வேலையில் இருந்த ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் நல்ல முறையில் நகை, நட்டு சீர்வரிசை கொடுத்து திருமணம் முடித்து அனுப்பிய பின்னரும் விவசாயத்தை தொடர்ந்தார் தங்கராசா.
ஆம். அந்த வெள்ளந்தி மனிதனுக்கு தெரிந்தது விவசாயம் தானே.
காலங்களும் கடந்து சென்றன..

தங்கராசா தாத்தாவின் இளைய மகளுக்கு கல்யாணம் முடிந்த பத்தாவது ஆண்டு.
வருடந்தோறும் ஆடி மாதம் நடைபெறும் முத்தாரம்மன் கோயில் கொடைக்கு வழக்கம் போல் தங்கராசா தாத்தாவின் அனைத்து பிள்ளைகளும் தங்களது வீட்டுக்கு குடும்பத்தோடு வந்தனர்.
கோயில் கொடை முடிந்து வியாழக்கிழமை அனைவரும் வீட்டுக்கு புறப்பட தயாராகினர்.
எந்த பெண் பிள்ளைகளும் யோசிக்காத விசயத்தை வக்கீல் கணவனுக்கு வாக்கபட்டு போன சுதா எனும் தங்கராசா தாத்தாவின் நான்காவது மகள் யோசித்தாள்..
தந்தையின் பத்து ஏக்கர் விவசாய நிலத்தை விற்று பாகமாக தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கும் ஆசை அவளுக்கு..
தகப்பனாரிடம் தனது விருப்பத்தை சொன்னதும்... தங்கராசா சிரித்தபடியே தனது நான்காவது மகளை பார்த்து..
ஏ! மக்கா எல்லா ஆம்பளையளுக்கும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைன்னு ஏதாவது ஒரு ஆசை இருக்கும்..
அப்படி ஆசை ஏதும் இல்லைன்னா மது, மாது, சூது ன்னு அவங்கிட்ட ஏதாவது ஒரு சபலம் இருக்கும்..
எனக்கு இந்த மண்ணும் அதன் மேல் நடக்கும் விவசாயத்தின் மீதும் சபலம் மக்கா..
நண்டும், சிண்டுமா நீங்க அஞ்சு பேரு பொம்பள புள்ளையளா பொறந்து வளர்ந்ததும், ஒங்க அத்தன பேரையும் படிக்க வைக்கையில இந்த ஊர்க்காரனுவ வேணாம், வேணாம், அவனுகள விடு.. நம்ம குடும்பக்காரனுவ என்ன சொன்னானுவ தெரியுமா.?
தங்கராசா நாடானுக்கு கோட்டி புடிச்சிருக்கு. அஞ்சு பொம்பள புள்ளையளுக்கும் ஆளுக்கு நூறு பீடித்தூளு வாங்கி கொடுத்து பீடி சுத்த வைச்சா நெதம் நூத்தம்பது ரூவா வருமானம் வரும்.
அத வுட்டுட்டு அஞ்சு பொட்ட புள்ளையளையும் மதத்து போயி காலேச்சில படிக்க வைக்குதான்.
"அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டியாயிறுவான்".. தங்கராசா என்ன கதியா ஆக போறானோன்னு நய்யாண்டி பேசுனானுவ.
அஞ்சி பொம்பள புள்ளையளா பெத்தா அரசனும் ஆண்டியா போயிறுவான்னு அவனுவ எளப்பமா நெனைச்சி சொன்னானுவ.
அந்த கோட்டிகாரனுவளுக்கு தெரியுமா..?
ஆடம்பரமா செலவு பண்ணுற அம்மக்காரி,
பொறுப்பில்லாத அப்பங்காரன்,
வெட்டியா உக்காந்து திங்குற தம்பிமாரு,
சேத்து வைக்க தெரியாத பொண்டாட்டி,
சொல் பேச்சு கேக்காத புள்ளையளு ..
இந்த அஞ்சை பெத்தவன் தான் ஆண்டியா போவான்.
அது தான் நெசம். அத வுட்டுட்டு அஞ்சு பொம்பள புள்ளையள பெத்தவன் ஆண்டியா போயிறுவான்னு சொல்லுறது பொய் மக்கா.
அஞ்சு பொம்பள புள்ளையள நான் பெத்தேன். நீங்க படிச்சு பெரிய அதிகாரிமார் வேலைக்கு போனதால இன்னைக்கு நான் ராசாவோட தோரணையில தான் இந்த ஊருல இருக்குதேன்.
எனக்கு ஒரு கொறயும் வராம அந்த முத்தாரம்ம பாத்துக்குவா.
நீ சொன்ன மாதிரி இந்த சகதியை மிதிக்காம வெள்ளாம நெலத்தை வித்துட்டு உன்னோடு அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்தா அடுத்த ஆறு மாசத்தில நான் செத்து போயிறுவேன் மக்களேய்.
நான் கண்ண மூடுன பின் ஒங்க விருப்பப்படி எப்படி வேணுமோ இந்த நெலத்த வித்து செஞ்சுகோங்க மக்கா.
நான் உசுரோட இருக்குற வரைக்கும் தோட்டத்தை விக்குற கதைய பத்தி இனி யாரும் என்னோடு பேசாதீங்க..
சோறு போடுற பூமியை விக்குறதும் பெத்த தாயை விக்குறதும் ஒண்ணு தான் மக்கா.. என்று சொன்ன தகப்பனாரை கண்ணீரோடு பார்த்தாள் தங்கராசா தாத்தாவின் செல்ல மகள் சுதா.
எத்தனை இடைஞ்சல்கள் வந்த போதும் விவசாயத்தை கைவிடாமல் வெள்ளாமை நிலத்தை பெத்த பிள்ளையை போல் பேணும் விவசாயிகள் தங்கராசா தாத்தா போல் இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்க தான் செய்கிறார்கள்.
தொடர்புக்கு-isuresh669@gmail.com






