என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

'ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்'
- விவசாயத்தை நம்பிய அவர் தன் பெண் பிள்ளைகள் படிக்க விரும்பிய கல்வியை படிப்பதற்காய் தன்னால் இயன்ற முயற்சி, பொருளுதவி அத்தனையும் கொடுத்து தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.
- தந்தையின் பத்து ஏக்கர் விவசாய நிலத்தை விற்று பாகமாக தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கும் ஆசை அவளுக்கு..
ஐந்து பெண் பிள்ளைகளின் தகப்பன் என் கதையின் நாயகன் தங்கராசா தாத்தா.
தனக்கு ஐந்தும் பொம்பள புள்ளையளா பொறந்துடுச்சே! என ஒரு நாளும் கவலையோ வருத்தமோ பட்டதில்லை அவர்.
விவசாயம் மட்டும் தெரிந்த தென்மாவட்ட வெள்ளந்தி விவசாயி அவர்.
தன்னுடன் பிறந்த சகோதரர்களுக்கு திருமணம் முடிந்து தனது பிள்ளைகள் திருமண வயதை எட்டிய பருவம் வரை கூட்டு குடும்பமாய் ஒரு பானை சோற்றை ஒன்றாய் தம்பி குடும்பங்களோடு சாப்பிட்ட தங்க மனசு ராசா அவர்.
விவசாயத்தை நம்பிய அவர் தன் பெண் பிள்ளைகள் படிக்க விரும்பிய கல்வியை படிப்பதற்காய் தன்னால் இயன்ற முயற்சி, பொருளுதவி அத்தனையும் கொடுத்து தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.
தனக்கு கிடைக்காத கல்வியை தனது பிள்ளைகளுக்கு கொடுத்து அவர்கள் வாழ்வில்முன்னேற வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை மேற்கொண்டார் தங்கராசா தாத்தா.
கல்வி என்பது காற்றால் அழியாதது. தீயினால் வாடாதது. காசை கொடுத்தாலும் கிட்டாதது என்பதை உணர்ந்து பாரதி கண்ட புதுமை பெண்கள் போல் தங்கராசா தாத்தாவின் ஐந்து பெண் பிள்ளைகளும் கல்வியை கற்று வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவியராய் படித்து வந்தனர்.
தாயும் புள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேற தானே! என தங்கராசா தாத்தாவின் தம்பிமார் மனைவியர்கள் முரண்டு பிடித்ததால் தங்கராசா தாத்தாவின் பூர்வீக சொத்தை பிரிக்க வேண்டியதாயிற்று.
பாகப்பிரிவினை நடந்து பாகமாய் தனக்கு கிடைத்த பத்து ஏக்கர் நிலத்தில் தங்கராசா தாத்தா விவசாயம் செய்து தனது பிள்ளைகளை தட்டு முட்டின்றி படிக்க வைத்தார்.
தகப்பனார் தங்களுக்காய் படும் கஷ்டத்தை உணர்ந்து கீதா, ராதா, லதா, சுதா, சீதா என பெயர் கொண்ட தங்கராசாவின் ஐந்து பெண்களும் முதுகலை பட்டப்படிப்பை முதல் வகுப்பு தேர்ச்சியோடு முடித்து வந்தனர்.
ஐந்து பெண்களும் அவரவர் படித்த எம்.ஏ., எம்.காம்., எம்.சி.ஏ, எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., படிப்புகளின் மூலம் அரசாங்க உத்தியோகத்தை பெறுவதற்காக முயற்சி செய்தனர்.
"காக்காசு உத்தி யோகமானாலும் கவர்மெண்ட் உத்தியோகமாக இருக்கணும் மக்கா"...
"சல்லிக்காசு சம்பளமா இருந்தாலும் சர்க்காரு சம்பளமா இருக்கணும் மக்களேய்"
என தகப்பனார் சிறு வயது முதலே ஊட்டி வளர்த்த அறிவுரையை மனதில் கொண்டு அரசாங்க உத்தியோகத்தை பெறும் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர்...
அத்தனை பெண்களும் அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்ததும் தான் பட்ட பாடு பழுதாகவில்லை என்ற பெருமிதத்தோடு தனது அருமை பிள்ளைகளை நினைத்து உவகை கொண்டார் தங்கராசா தாத்தா.
அரசு வேலையில் இருந்த ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் நல்ல முறையில் நகை, நட்டு சீர்வரிசை கொடுத்து திருமணம் முடித்து அனுப்பிய பின்னரும் விவசாயத்தை தொடர்ந்தார் தங்கராசா.
ஆம். அந்த வெள்ளந்தி மனிதனுக்கு தெரிந்தது விவசாயம் தானே.
காலங்களும் கடந்து சென்றன..
தங்கராசா தாத்தாவின் இளைய மகளுக்கு கல்யாணம் முடிந்த பத்தாவது ஆண்டு.
வருடந்தோறும் ஆடி மாதம் நடைபெறும் முத்தாரம்மன் கோயில் கொடைக்கு வழக்கம் போல் தங்கராசா தாத்தாவின் அனைத்து பிள்ளைகளும் தங்களது வீட்டுக்கு குடும்பத்தோடு வந்தனர்.
கோயில் கொடை முடிந்து வியாழக்கிழமை அனைவரும் வீட்டுக்கு புறப்பட தயாராகினர்.
எந்த பெண் பிள்ளைகளும் யோசிக்காத விசயத்தை வக்கீல் கணவனுக்கு வாக்கபட்டு போன சுதா எனும் தங்கராசா தாத்தாவின் நான்காவது மகள் யோசித்தாள்..
தந்தையின் பத்து ஏக்கர் விவசாய நிலத்தை விற்று பாகமாக தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கும் ஆசை அவளுக்கு..
தகப்பனாரிடம் தனது விருப்பத்தை சொன்னதும்... தங்கராசா சிரித்தபடியே தனது நான்காவது மகளை பார்த்து..
ஏ! மக்கா எல்லா ஆம்பளையளுக்கும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைன்னு ஏதாவது ஒரு ஆசை இருக்கும்..
அப்படி ஆசை ஏதும் இல்லைன்னா மது, மாது, சூது ன்னு அவங்கிட்ட ஏதாவது ஒரு சபலம் இருக்கும்..
எனக்கு இந்த மண்ணும் அதன் மேல் நடக்கும் விவசாயத்தின் மீதும் சபலம் மக்கா..
நண்டும், சிண்டுமா நீங்க அஞ்சு பேரு பொம்பள புள்ளையளா பொறந்து வளர்ந்ததும், ஒங்க அத்தன பேரையும் படிக்க வைக்கையில இந்த ஊர்க்காரனுவ வேணாம், வேணாம், அவனுகள விடு.. நம்ம குடும்பக்காரனுவ என்ன சொன்னானுவ தெரியுமா.?
தங்கராசா நாடானுக்கு கோட்டி புடிச்சிருக்கு. அஞ்சு பொம்பள புள்ளையளுக்கும் ஆளுக்கு நூறு பீடித்தூளு வாங்கி கொடுத்து பீடி சுத்த வைச்சா நெதம் நூத்தம்பது ரூவா வருமானம் வரும்.
அத வுட்டுட்டு அஞ்சு பொட்ட புள்ளையளையும் மதத்து போயி காலேச்சில படிக்க வைக்குதான்.
"அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டியாயிறுவான்".. தங்கராசா என்ன கதியா ஆக போறானோன்னு நய்யாண்டி பேசுனானுவ.
அஞ்சி பொம்பள புள்ளையளா பெத்தா அரசனும் ஆண்டியா போயிறுவான்னு அவனுவ எளப்பமா நெனைச்சி சொன்னானுவ.
அந்த கோட்டிகாரனுவளுக்கு தெரியுமா..?
ஆடம்பரமா செலவு பண்ணுற அம்மக்காரி,
பொறுப்பில்லாத அப்பங்காரன்,
வெட்டியா உக்காந்து திங்குற தம்பிமாரு,
சேத்து வைக்க தெரியாத பொண்டாட்டி,
சொல் பேச்சு கேக்காத புள்ளையளு ..
இந்த அஞ்சை பெத்தவன் தான் ஆண்டியா போவான்.
அது தான் நெசம். அத வுட்டுட்டு அஞ்சு பொம்பள புள்ளையள பெத்தவன் ஆண்டியா போயிறுவான்னு சொல்லுறது பொய் மக்கா.
அஞ்சு பொம்பள புள்ளையள நான் பெத்தேன். நீங்க படிச்சு பெரிய அதிகாரிமார் வேலைக்கு போனதால இன்னைக்கு நான் ராசாவோட தோரணையில தான் இந்த ஊருல இருக்குதேன்.
எனக்கு ஒரு கொறயும் வராம அந்த முத்தாரம்ம பாத்துக்குவா.
நீ சொன்ன மாதிரி இந்த சகதியை மிதிக்காம வெள்ளாம நெலத்தை வித்துட்டு உன்னோடு அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்தா அடுத்த ஆறு மாசத்தில நான் செத்து போயிறுவேன் மக்களேய்.
நான் கண்ண மூடுன பின் ஒங்க விருப்பப்படி எப்படி வேணுமோ இந்த நெலத்த வித்து செஞ்சுகோங்க மக்கா.
நான் உசுரோட இருக்குற வரைக்கும் தோட்டத்தை விக்குற கதைய பத்தி இனி யாரும் என்னோடு பேசாதீங்க..
சோறு போடுற பூமியை விக்குறதும் பெத்த தாயை விக்குறதும் ஒண்ணு தான் மக்கா.. என்று சொன்ன தகப்பனாரை கண்ணீரோடு பார்த்தாள் தங்கராசா தாத்தாவின் செல்ல மகள் சுதா.
எத்தனை இடைஞ்சல்கள் வந்த போதும் விவசாயத்தை கைவிடாமல் வெள்ளாமை நிலத்தை பெத்த பிள்ளையை போல் பேணும் விவசாயிகள் தங்கராசா தாத்தா போல் இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்க தான் செய்கிறார்கள்.
தொடர்புக்கு-isuresh669@gmail.com






