என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் அமைப்பது எப்படி?
    X

    பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் அமைப்பது எப்படி?

    • ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பயன்படுத்தும் பல்வேறு முறைகளில் நியூமராலஜி எனப்படும் எண்கணித முறையும் ஒன்று.
    • வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும்.

    பெயர் என்பது ஒருவரை சமுதாயத்தில் அடையாளப்படுத்த உதவும் சொல். அந்த பெயர் அதிர்ஷ்டகரமாக அமைந்தால் வாழ்க்கை வளமாகும் என்பது சமுதாய நம்பிக்கையாக இருந்தாலும் கூட அதுவே நிதர்சனமான உண்மை. ஒருவரின் பெயரில் உள்ள விசேஷ ரகசியங்களே வெற்றியைப் பெற்றுத் தருகின்றன என்பதை உலகம் எங்கும் உள்ள பல மேதைகள் ஆமோதித்து இருக்கிறார்கள்.

    பெயர் சூட்டுதல் என்பது பூமியிலே பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் நடத்தப்படும் சமயச் சடங்காகும். இச்சடங்கு சமூகத்திற்கு சமூகம் வேறுபடுகின்றது. தற்காலத்தில் பெயர் சூட்டுதல் விழாவாக நடத்தப்படுகிறது. இந்தச் சடங்கினை நாமகரணம் என்ற வடமொழி வழக்கிலும் அழைக்கின்றனர். ஒருவருக்கு சூட்டப்படும் பெயருக்கு ஏற்பவே அவர்களுடைய வாழ்க்கை அமையும் என்பது பலரும் அறியாத உண்மை. குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் பெயருக்கு ஏற்றார் போல் அக்குழந்தைத் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் பெயர் வைக்க வேண்டும். பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அழகிய, பேன்சியான பெயர்கள் என சில மோசமானப் பெயர்ளை சூட்டிவிடுகிறார்கள். சிலர் பொருள் தெரியாத பெயர்களையும் சூட்டுகிறார்கள். இதனால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பலர் உணர்வதில்லை. பெயர்களை உச்சரிக்கும் போது வெளிப்படும் காந்த அதிர்வலைகள் குழந்தையின் ஜாதகரீ தியான குறைபாடுகளை அகற்றும்படியாக இருக்க வேண்டும்.

    ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பயன்படுத்தும் பல்வேறு முறைகளில் நியூமராலஜி எனப்படும் எண்கணித முறையும் ஒன்று. ஒருவரின் பெயரை ஐந்து முறைகளில் அமைக்கலாம். அதன்படி

    1. ஜென்ம நட்சத்திரப் பெயர்.

    ஒருவர் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்குரிய எழுத்தில் பெயர் வைப்பது இப்பொழுது பெருகி வரும் கலாச்சாரமாக இருந்து வருகிறது. வெகு சிலருக்கு நல்ல பலனைத் தரும் இந்த முறை பலருக்கு வெற்றி தருவதில்லை.

    இப்பொழுது ஆன்லைனில் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய பெயர்கள் வருவதால் பலர் அதை தேர்வு செய்து வைத்துக் கொள்கிறார்கள்.

    அந்த பெயரை நியூமராலஜிப்படி வைத்தால் மட்டுமே நல்ல பலன் தரும் என்ற சூட்சமம் புரியாததே இதற்கு காரணம்.

    2. பிறவி எண்

    ஒருவருடைய பிறந்த தேதியைக் கூட்டினால் வரும் பிறவி எண்ணை அடிப்படையாக கொண்டு நியுமராலஜி மட்டும் தெரிந்தவர்கள் பெயரை அமைக்கின்றனர். பிறந்த தேதியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பெயர் பலிப்பதில்லை.

    3. விதி எண்

    ஒருவரின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வரும் விதி எண்ணில் பெயர் வைப்பது அல்லது விதி எண்ணிற்கு பொருத்தமான நட்பு எண்ணில் பெயர் வைப்பது சரியான முறைதான். இதைப் பல பெயரியல் நிபுணர்கள் பின்பற்றி வருகின்றனர். அப்படி பெயர் அமைத்தும் பலர் அவதிப்படுகிறார்கள்.

    4. அதிர்ஷ்ட பெயர்

    ஒருவரின் பிறந்த தேதி, விதி எண் எதையும் ஆய்வு செய்யாமல் பொதுவாக அதிர்ஷ்டத்தை தரக்கடிய எண் என்று நம்பி 1,5,9 ஆகிய எண்களில் பெயர் வைத்துக் கொள்கிறார்கள். தவறான பெயர் இயல்பாகவே அமையும் பொழுதும், தவறான அதிர்ஷ்ட எண்ணில் பெயர் வைத்துக் கொள்ளும் பொழுதும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பிரகாசிக்க முடியும். நிரந்தரமான புகழ், பணம் கிடைக்காது.

    5. ஜாதகப்படி பெயர் அமைத்தல்

    பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவிகிதம் கிடைக்கும். பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும். வெகு சிலர்தான் இதைப் பயன்படுத்தி பெயர் வைத்து வருகின்றனர். இந்த முறை பலருக்கு நன்மையை அதிகமாக செய்கிறது.

    ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதே கிரகம் லக்ன ரீதியான சுபர் எனில் ஜாதகருக்கு சுபபலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும். பலர் கிரகங்களின் ஆட்சி, உச்சம் மற்றும் நீசத்தன்மையை வைத்து கிரகங்களின் வலிமையை எளிதில் தீர்மானிக்கிறார்கள்.அது தவறான முறையாகும். ஒரு கிரகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஷட்பலம் கொண்டே தீர்மானிக்க வேண்டும். ஷட் என்றால் "ஆறு". பலம் என்றால் "வலிமை". ஆறு விதங்களில் காணப்படும் வலிமை.

    அதாவது ஸ்தான பலம், திக் பலம், கால பலம், சேஷ்ட பலம், நைசார்க்கிய பலம் மற்றும் திருக் பலம் என்ற ஆறு நிலைகளில் கணக்கிட வேண்டும். ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் பலமாக உள்ளன என்று நினைக்க கூடாது. நீச கிரகங்கள் வலிமையற்றைவை என்றும் கணிக்க கூடாது. எனவே ஷட் பல முறையில் ஆராய்ந்த பிறகே அதன் உன்னத பலத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் தற்போது ஜோதிட மென்பொருள்கள் மூலம் எளிதில் கிரகங்களின் ஷட் பலத்தை அறிந்து விடலாம். ஷட் பலத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணை அடிப்படையில் அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக லக்ன ரீதியான பாதகாதிபதியாக இருக்கக்கூடாது. பாதகாதி பதியாக உள்ள கிரகத்தின் எண்ணில் பெயர் வைத்தால் கெடுதலே எண்களில் பெயர் வைக்ககூடாது. மேஷ, ரிஷப லக்னத்தினர் 8-ம் எண்ணிலும், மிதுனம், கன்னி லக்னத்தினர் 3-ம் எண்ணிலும், கடகம், கும்ப லக்னத்தினர் 6-ம் எண்ணிலும், விருச்சிக லக்னத்தினர் 2-ம் எண்ணிலும், தனுசு, மீனம் லக்னத்தினர் 5-ம் எண்ணிலும் மகரம் லக்னத்தினர் 9-ம் எண்ணிலும் பெயர் வைக்க கூடாது.சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் ஏகயோக அதிபதி என்பதால் வலுப்பெறலாம். கெடுதலே செய்யாது.

    ஜோதிடமும் நியூமராலஜியும்.

    ஒரு குழந்தை பிறக்கும் பொழுது வான் மண்டலத்தில் உள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம். சில கிரகங்கள் வலிமை இழந்து நிற்கும். ஷட் பல நிர்ணயத்தில் லக்ன ரீதியான அசுப கிரகம். வலிமை இழந்தால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்ன ரீதியான சுபர் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும். வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜை பரிகாரமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்கள் தரும். ஆனால் நிரந்தரமான பலன்களைத் தருவது நியூமராலஜி முறையில் அமைந்த பெயராகும்.

    வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒப்பிட்டு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக் கொண்டால் நூறு சதவிகிதம் வெற்றி கிடைக்கும்.

    குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் முறை

    பிறந்த குழந்தையின் பெயரை தேர்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள் தந்தைக்கும் மகனுக்கும் தாய்க்கும் மகளுக்கும் ஒரே பெயரை வைக்கக்கூடாது. ஆண் குழந்தைகளுக்கு தாத்தா கொள்ளுத் தாத்தா பெயர்களையும் பெண் குழந்தைகளுக்கு பாட்டி கொள்ளுப்பாட்டியின் பெயர்களையும் வைக்கலாம்.

    குழந்தையின் பெயருடன் தந்தை பெயர் தாய் பெயர் கோத்திரப் பெயர் வம்ச பெயர் குலத்தின் பெயர் சேர்த்துக் கொள்ளலாம். அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பட்டப் பெயர்களை அசல் பெயருடன் சேர்த்துக் கொள்ளலாம்.

    அவரவர்களின் குலதேவதை இஷ்ட தேவதைகளின் பெயர்களைச் சூட்டலாம். அத்துடன் சிறிது மாற்றம் செய்து சூட்டுவது மிகச் சிறப்பு.

    ஜென்ம நட்சத்திரம், ஜென்ம நட்சத்திரத்தின் அதிதேவதை பெயர்களை ஆண் குழந்தைகளுக்கு பெயரின் பகுதியாக சேர்க்கலாம். பெண் குழந்தைகளுக்கு நட்சத்திரப் பெயர்களை வைப்பது சிறப்பல்ல. நட்சத்திரம், மரம், நதி, மலை, பறவை, பாம்பு, பயங்கரமான பெயர்கள் உள்ளவர்களுக்கு திருமணத் தடை, முன்னேற்றக் குறைவு மிகுதியாக இருக்கும்.

    ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாம எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை சூட்டலாம். இந்த நட்சத்திர நாம எழுத்துகளில் பெயர் வைக்கும் வழக்கம் வேதகாலத்தில் இல்லை தற்காலத்தில் ஏற்பட்டதாகும்.

    ஒற்றைப் பெயர் வைப்பதை தவிர்த்து இரட்டைப் பெயர்களை வைப்பது நல்லது. இரட்டை பெயர் வைத்திருப்பவர்கள் எளிதில் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். உதாரணமாக உமா என்பது ஒற்றைப் பெயர் உமா மகேஸ்வரி என்பது இரட்டைப் பெயர்.

    சமூகத்தில் பொதுவாக பலருக்கும் வைக்கப்பட்டுள்ள பெயர்கள், அரசியல் பிரமுகர்களின் பெயர்களை தவிர்த்து தனித்தன்மையான பெயர்களை வைப்பது நல்லது. உச்சரிக்க முடியாத பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட கூடாது. குழந்தைக்கு சூட்டிய பெயரை எப்படி எழுதுகிறோமோ அப்படியே பெயரின் எழுத்து வடிவம் உருக்குலையாமல் உச்சரிக்க தக்க பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். எழுத்து வடிவம் ஒரு விதமாகவும் உச்சரிப்பு வேறு விதமாகவும் அமைவது நல்லதல்ல.

    குழந்தையின் முழுப் பெயரையும் கூப்பிடவேண்டும் சுருக்கி செல்லப் பெயராக மாற்றி கூப்பிடக் கூடாது. குழந்தைகளுக்கு சூட்டும் பெயர்கள் அர்த்தம் உள்ளவைகளாக இருக்க வேண்டும். அர்த்தமில்லாத, அர்த்தம் தெரியாத பெயர்களை சூட்டக் கூடாது. அதேநேரத்தில் காலச் சூழலுக்கு தகுந்த மாதிரியான பெயர்களையும் வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. பெயர்கள் கூப்பிடுவதற்கு சுகமானதாகவும் கொடுமை இல்லாததாகவும் நல்ல அர்த்தமுள்ளதாகவும் மனம் லயிக்கும்படி, பிடித்தமானதாகவும் மங்களகரமாகவும் தீர்க்க எழுத்துக்களை உடையதாகவும் ஆசிர்வாதத்தை கொடுக்கக் கூடியதாகவும், இருக்க வேண்டும்.

    மத நம்பிக்கை உடைய பெற்றோர்கள் அவர்களுடைய மத நூல்களில் காணப்படும் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டலாம். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் முதலிய ஸ்தோத்திரங்களில் வரும் பெயர்களைச் சூட்டலாம் கிறிஸ்தவர்கள் பைபிளில் வரும் பெயர்களை இஸ்லாமியர்கள் குரானில் வரும் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டலாம்.

    ஜோதிட ரீதியாக பெயரில் உள்ள எழுத்துக்களில் சனி, ராகு, கேதுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்க கூடாது. இவ்வாறு தேர்வு செய்த பெயர்களை அவரவர் குல, சமூகத்திற்கு உள்ள பழக்க வழக்கங்களின் படி உள்ள நாட்களை தேர்வு செய்து பெயர் சூட்டலாம். பொதுவாக குழந்தை பிறந்த 11,16, 30 நாள் சூட்டும் போது வாரம் திதி நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்ல லக்னத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டால் போதும். மேற்கண்ட நாட்களில் சூட்ட முடியாமல் போனால் 16 நாட்களுக்குப் பிறகு ஏதாவது ஒரு சுபதினத்தில் பெயர் சூட்டலாம்

    பெயர் சூட்டுவதற்கு உகந்த நட்சத்திரங்கள்:

    அஸ்வினி ரோகிணி மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், ரேவதி.

    திதி: துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி.

    வாரம்: புதன் வியாழன் வெள்ளி

    லக்னம்: ஸ்திர லக்னங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை சிறப்பு.

    பெயர் சூட்டும் விழாவை காலையில் உச்சிக் காலத்திற்கு முன்பே செய்ய வேண்டும் மதியானத்துக்கு பிறகு செய்யக்கூடாது. முகூர்த்த லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் குரு சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்கள் நின்றால் நல்லது. அதற்கு எட்டாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.

    வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்க பெயர் தேர்வு செய்யும் போது ஜனன ஜாதகத்துடன் பிறவி எண், விதி எண்ணை ஒப்பிட்டு நல்ல நாள் நேரம் பார்த்து பெயர் வைப்பது சாலச் சிறந்தது.

    Next Story
    ×