என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பிணி அகற்றும் புற சிகிச்சை முறைகள்
    X

    பிணி அகற்றும் புற சிகிச்சை முறைகள்

    • சுக்கு, ஓமம் இவைகளை வாயிலிட்டு மென்று காது, மூக்கு துளைகளில் ஊத மயக்கம் நீங்கி நினைவுண்டாகும்.
    • மஞ்சள் பொடியுடன் அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு ஆமணக்கு எண்ணெய் கலந்து அடுப்பிலிட்டு சூடேற்றி, இளஞ்சூடாக வைத்து கட்ட பரு, கட்டி மறையும்.

    நசியம்: சில மருந்து துளிகளை, எண்ணெய்துளிகளை, சாறுகளின் துளிகளை மூக்கில் இடும் முறை நசியம் எனப்படும். தமிழ் மருத்துவ முறையில் அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். பெரும்பாலும் இது போன்ற சிகிச்சை முறைகளை சுயமாக வீட்டில் செய்வதை தவிர்க்க வேண்டும். தமிழ் மருத்துவம் பயின்ற மருத்துவர்களின் கண்காணிப்பில் செய்வது நலம் தரும்.

    பாம்புக்கடி, மூர்ச்சை, சன்னி, மயக்கம், மஞ்சள் காமாலை, நாசி முளை, நீர்க்கோவை, ஒற்றைத்தலைவலி போன்ற நிலைகளில் மிகுந்த பயனளிக்கிறது.

    தும்பை பூவின் சாற்றை ஓரிரு துளிகள் மூக்கில் நசியமிட்டு வந்தால் நாசி முளை என்னும் Nasal Polyp கரைந்து வெளியேறும்.

    சுக்கு தைலம், பீனிசத் தைலம் போன்றவை பீனிசம் எனப்படும் சைனுசைடிஸ் நோய் நிலையிலும், சிற்றாமுட்டி தைலம் பல வாத தொடர்பான நோய்களிலும் நசியமிட பயன்படும்.

    ஊதல்: இது சில மூலிகை பொருட்கள் அல்லது உப்பு சரக்குகளில் ஏதாவது ஒன்றை காது, மூக்கு, கண் போன்ற உறுப்புகளில் ஊதி விடும் முறையாகும். ஊதல் முறை மூன்று வகைப்படும்-மென்று ஊதல், மருந்து வைத்து ஊதல், வளிவேக ஊதல்.

    மென்று ஊதல் என்பது மருந்து பொருட்களை வாயில் போட்டு காது, மூக்கு போன்றவைகளில் ஊதும் முறையாகும். இப்படி ஊதும்போது மருந்துகளின் வேகம் இந்த உறுப்புகள் வழியாக மூளைக்கு செல்லும் நரம்பு வழி சென்று மூளையை அடைந்து மயக்கம், தெளிந்து நலமடைவர்.

    மருந்து வைத்து ஊதல் என்பது மூக்கில் சிறிது மருந்து பொருட்களை வைத்து ஊதும் முறையாகும்.

    வெற்றிலை, மிளகு இவைகளை வாயிலிட்டு மென்று காது, மூக்கு இவைகளில் ஊத நச்சுக்கடிகளின் வேகம் குறையும். சுக்கு, ஓமம் இவைகளை வாயிலிட்டு மென்று காது, மூக்கு துளைகளில் ஊத மயக்கம் நீங்கி நினைவுண்டாகும்.

    மேலும் இந்த முறையை நோயாளியின் உறவினர் மூலமாக செய்யவேண்டும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. காச நோய், மஞ்சள் காமாலை, புற்று நோய், நீரிழிவு, பீனிசம் (Sinusitis), வாய்ப்புண், வயிற்று புண், தோல் நோயால் பாதிக்கப்பட்டோர், மது அருந்துபவர்கள், புகைபிடிப்பவர்கள் ஆகியோரை வைத்து ஊத கூடாது என்றும் நூல்களின் மூலம் அறிய முடிகிறது. மேலும் ஊதும் முன் பல் துலக்கி வாயை சுத்தம் செய்து, வெந்நீரால் கொப்பளித்து விட்டு ஊத வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

    அவசர கால சிகிச்சை முறைகளில் ஒன்றான இது பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை.

    நாசிகாபரணம்: சில மருந்து சரக்குகளை நிழலில் உலர்த்தி இடித்து துணியில் வடிகட்டி மூக்கில் இடும் முறையாகும்.

    சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை பொடித்து எலுமிச்சம் பழச்சாற்றில் மூழ்க வைத்து சூரிய ஒளியில் உலர்த்தி எடுத்து மூக்கில் இட தலை சீரேற்றம், அதனால் உண்டாகும் பல்ஈறு வீக்கம், வலி, கண் இமை வீக்கம் ஆகியவை நீங்கும்.


    களிம்பு: இது சில மூலிகைகள் அல்லது பாஷாணங்களை துவர்ப்புள்ள காய்ச்சுக்கட்டி போன்ற சரக்குகளுடன் பொடியாக்கி எண்ணெய், மெழுகு சேர்த்து காய்ச்சி உருக்கி, பின் ஆறவைத்து களிம்பாக செய்து கொள்ளும் முறையாகும். களிம்பு வகைகள் பெரும்பாலும் தீக்காயம், சொறி, சிரங்கு, புரையோடிய புண்கள், படுக்கை புண் போன்ற நோய்களை தீர்க்க பயன்படும்.

    நல்லெண்ணையை இளநீருடன் சேர்த்து, அதில் குங்குலிய பொடி சேர்த்து கடையும்போது வெண்மை நிற களிம்பாக வரும். இதை தீக்காயங்களில் பூச எரிச்சல் தணிந்து விரைவாக ஆறும்.

    தேங்காய் எண்ணெயில் மஞ்சள் மெழுகை சேர்த்து காய்ச்சி அதில் ஓமஉப்பு, புதினா உப்பு, சூடம், பூங்கற்பூரம் இவற்றை கலந்து ஆறவைக்க களிம்பாகும். தலை வலி, உடல் வலி, ஜலதோஷம் போன்ற நிலைகளில் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

    சுண்ணாம்பு சிறு துளியுடன் குங்குலிய பொடி சேர்த்து நல்லெண்ணெயில் குழைத்து கட்டி, பரு இவைகளின் மேல் பூச அவை உடைந்து சீழ் வெளியாகி விரைவில் ஆறும்.

    சீலை: சில மருந்து சரக்குகளை, தண்ணீர், மூலிகை சாறு, எண்ணெய் போன்றவற்றில் சேர்த்து அரைத்து குழம்பு போல் செய்து, அதில் துணித்துண்டை தோய்த்து விரணத்தின் மேல் இடும் முறையாகும்.

    அரளி செடியின் பாலை துணியில் தடவி அதை கட்டிகள் மேல் வைத்து வர, கட்டி உடைந்து சீழ் வெளியேறி புண் உலரும். வெள்ளை குங்குலியத்தை பொடி செய்து மெழுகுடன் சேர்த்து உருக்கி சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதை பருத்தி துணியில் தடவி புண்கள் மேல் வைத்து கட்ட புண்கள் ஆறும்.

    பவுத்திரம், புண்கள், கட்டிகள் புற்று போன்ற நிலைகளில் சீலை பயன்படுத்தப்படுகிறது.

    நீர்: இவைகள், தழைகள், பட்டைகள், தாது பொருட்கள் ஆகியவற்றில் தேவையானவற்றை நோய்களுக்கு தக்கவாறு கஷாயம் செய்து அல்லது ஊறவைத்து பயன்படுத்துவது நீர் எனப்படும்.

    புண்களை கழுவவும், வாய் கொப்பளிக்கவும், பீச்சு செய்யவும் இது பயன்படுகிறது. கொட்டைபாக்கு, படிகாரம் சம அளவு எடுத்து மண் கலத்தில் போட்டு நீர் ஊற்றி கொதிக்க வைத்து கஷாயம் வைத்து இளஞ்சூடாக வாய் கொப்பளிக்க பல் ஆட்டம் குறைந்து பல் இறுகும். பல வேர்பகுதியில் சீழ் பிடித்தால் குணமாகும்.

    புங்கம் இலையை நீர் சேர்த்து காய்ச்சி கழுவி வந்தால் ஊரல், சொறி, சிரங்கு குறையும். தோல் கிருமிகள் அழியும் வேம்பு இலை மற்றும் பட்டையை மேற்கூறியவாறு பயன்படுத்த தோல் நோய்கள் கட்டுப்படும். மாவிலையை கழுவி எடுத்து அரிந்து மண்கலத்தில் போட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் வாய் கொப்பளிக்க ஈறிலிருந்து உதிரம் வடிதல், வாய்ப்புண், வாய்நாற்றம் நீங்கும்.

    நெல்லி மரப்பட்டையை இடித்து நீர் விட்டு வேகவைத்து அந்த நீரினால் பிறப்புறுப்பை கழுவி வர யோனிவாசல் சுருங்கும்.

    படிகார பொடி 2 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் கலந்து விரணங்களை கழுவி வர குழிப்புண்கள் ஆறும்.

    வர்த்தி: சில மருந்து சரக்குகளை பொடி செய்து, சில சாறுகளால் அரைத்து குழம்பாக்கி, அதில் சீலையை நனைத்து ஆறாத புண்களுக்கும், புரை ஓடும் புண்களுக்கும் வைக்கும் முறையாகும்.

    தாது சரக்குகளான பால் துத்தம், மயில் துத்தம், இலிங்கம், கற்பூரம் போன்றவற்றை நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து அதில் சீலையை நனைத்து பவுத்திரம் போன்ற புரைபுண்களில் போட்டு வந்தால் புண்கள் உலர்ந்து ஆறும்.

    காலாணியில் சில நேரங்களில் ஓட்டை விழுவதுண்டு அந்த நிலையில் துரிசை சின்னவெங்காயசாறு விட்டரைத்து திரியில் தடவி உட்செலுத்தி மறுநாள் எடுக்க காலாணி ஆறும்.

    சுட்டிகை: சுட்டிகை என்பது உலோக கம்பியை பழுக்கக் காய்ச்சி கடுமையான நோய் நிலைகளில் சூடு வைத்து நோய் வராமல் தடுப்பதோடு, நோய் வந்த பிறகு சரி செய்யவும் உதவும் முறையாகும்.இதற்கு பயன்படும் உலோக கம்பி பல வடிவங்களை உடையது. அவை உடுக்கு, முக்கவர், இருகவர், பிறை, பொட்டு, ஆழி, புள்ளடி போன்றவையாகும்.

    இரும்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகங்களினால் செய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்தி மருந்து மற்றும் அறுவை சிகிச்சையினால் தீர்க்கமுடியாத பிணிகளையும் தீர்க்க முடியும் என்பதை நூல்கள் மூலமாகவும், அனுபவத்தின் மூலமாகவும் அறிய முடிகிறது.

    முதலில் நோயுள்ள இடங்களை ஆய்வு செய்து சுட்டிகை இட வேண்டிய இடங்களை குறிக்க வேண்டும். பின்பு அவ்விடத்தை படிகார நீர் போன்றவற்றால் சுத்தம் செய்து சுட்டிகை கருவியை தீயிலிட்டு சூடு செய்து, சுட்டிகை இட குறித்த இடங்களில் சூடு வைத்து கண்ணிமைக்கும் நொடியில் எடுத்து, அவ்விடங்களில் கற்றாழை மடல் கொண்டு தேய்த்து, குங்குலிய வெண்ணைய் போன்றவை தடவப்படுகின்றது. இதன் மூலம் எரிச்சல் தணிவதோடு, புண்ணாகாமலும் தடுக்க முடியும்.

    சுட்டிகையினால் தீர்ந்த நோய் திரும்பி வருவதில்லை என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றது. ராட்சச சிகிச்சை என அழைக்கப்படும் இந்த சிகிச்சைக்கு உலோகங்கள் மட்டுமல்லாமல் மர கொம்பு, மட்குடுவை, வெப்பமான காற்று போன்றவையும் பயன்படுகிறது. சுட்டிகை பெரும்பாலும் உச்சி, நெற்றி, முதுகு, நெஞ்சு, கால்கள் ஆகிய உறுப்புகளில் இடப்படுகிறது. வாதநோய்களான முழங்கால் வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, பக்கவாதம், முகவாதம், நடுக்குவாதம் போன்றவைகளுக்கும், காலாணி, மருக்கள் போன்றவைகளை எடுப்பதற்கும் சிறப்பாக பயன்படுகிறது.

    மேலும் சிலர் குடலிறக்கம், யானைக்கால் நோய், வலிப்பு, விதை வீக்கம் போன்ற நோய் நிலைகளிலும் சுட்டிகையை பயன்படுத்தி வருகின்றனர்.

    மண் சுட்டிகை: இது எண்ணெய் தடவிய மடக்குடுவையை நெருப்பிலிட்டு சூடாக்கி துணியில் பிடித்துக்கொண்டு உச்சி, நொற்று இவைகளின் மேல் நொச்சியிலையை பரப்பி அதன் மேல் அக்குடுவையை வைக்க சன்னி, ஒற்றைத்தலைவலி நீங்கும்.

    வெப்பம் மிகுந்த காற்றை சில நோய் நிலைகளில் உடலில் படும்படி செய்து வியர்வையை பெருகும்படி செய்யப்படுகிறது. இது கால் சுட்டிகை எனப்படும்.

    வாதத்துடன் கூடிய சன்னி நோய் நிலைகளில் தலையை தவிர மற்ற உறுப்புகள் வெயிலில் படும்படி செய்யும் முறை காந்தி சுட்டிகை எனப்படும்.

    சித்த மருத்துவம் தோன்றிய காலம் முதல் இன்றைய கால கட்டம் வரை சுட்டிகை அனைத்து சித்த மருத்துவர்களாலும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிக குறைந்த நேரம் மற்றும் செலவில் தங்களது பிரச்சினை குறைவதாக கண்டு நோயாளிகளும் விருப்பத்தோடு இந்த சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    சலாகை: இது ஒரு மெல்லிய கருவியாகும். இதனை புரையோடிய புண்களுக்கு துணியில் மருந்து தடவி, புரைகுழியின் இறுதி வரை செலுத்தவும், புண்களின் ஆழம் காணவும் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

    பசை: பசை என்பது உளுந்து, மூசாம்பரம் குங்குலியம் முதலியவைகளை மெழுகு, முட்டைவெண்கரு போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்தும் புறசிகிச்சை முறையாகும். களிம்பை போன்ற செய்கை இருந்தாலும், களிம்பு உடலுடன் ஒட்டி உறுதியாகாது. ஆனால் பசைக்கு ஒட்டி உறுதியாக்கும் தன்மை உண்டு.

    உளுந்து மாவு, சோற்று கற்றாழை, முட்டை வெண்கரு இவை மூன்றையும் சேர்த்தரைத்து பசையாக்கி எலும்பு முறிவு நடந்த இடத்திலோ, மூட்டு நழுவல் நடந்த இடத்திலோ அதனை சீர்செய்து துணிசுற்றி, இப்பசையை வைத்து கட்டுப்போட அவை சீக்கிரத்தில் பொருந்தி இணையும்.


    களி: இது ஆளிவிதை போன்ற மூலிகைகளை அரிசி மாவுடன் சேர்த்து, பசும்பால் அல்லது நீர் சேர்த்து அரைத்து அடுப்பிலிட்டு களிபோல் கிளறும் முறையாகும்.

    மஞ்சள் பொடியுடன் அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு ஆமணக்கு எண்ணெய் கலந்து அடுப்பிலிட்டு சூடேற்றி, இளஞ்சூடாக வைத்து கட்ட பரு, கட்டி மறையும். மேலும் சோற்றுடன் சுட்ட சின்ன வெங்காயத்தை சேர்த்தரைத்து கட்டிகளின் மீது வைத்து கட்ட அதில் உள்ள வீக்கம் மற்றும் வலி குறையும்.

    Next Story
    ×