என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நவராத்திரி பண்டிகையும் முப்பெருந் தேவியரும்!
- நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் பார்வதியையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் போற்றுகிறோம்.
- தேவி வழிபாட்டிற்கு ஏற்ற நவராத்திரி காலத்தில் அவரவர் இல்லத்தில் கொலு வைத்து தேவியை எழுந்தருளச் செய்வோம்.
இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி.
மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப் படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுகிறது.
பொதுவாக கடவுளரைப் படங்களாக மட்டுமே வீடுகளில் வைத்து வழிபடுகிறோம். சிலைகளாக வைத்து வழிபடும் மரபு பெரும்பாலும் ஆலயங்களில்தான்.
ஆனால் நவராத்திரியில் மட்டும் தெய்வ வடிவங்களைப் படங்களாக அல்லாமல் பொம்மைகளாகவே வைத்து வழிபடுகிறோம்.
நவராத்திரி கொலுவில் ஒன்பது படிகள் வைப்பது வழக்கம். குறைவாக வைத்தாலும் ஒற்றைப் படை எண்ணிக்கையில்தான் மூன்று, ஐந்து, ஏழு என்று வைப்பார்கள். இரட்டைப் படை எண்ணிக்கையில் கொலுப் படிகள் அமைக்கும் மரபில்லை. ஒன்பது படிகளுக்கு மேலாக வைக்கும் வழக்கமும் கிடையாது.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் பார்வதியையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் போற்றுகிறோம். அவ்விதம் வீரம். கல்வி, செல்வம் என நமது மூன்று அடிப்படைத் தேவைகளும் நிறைவேற இறைச்சக்தியைப் பிரார்த்திக்கிறோம்.
பொம்மைக் கொலுவில் பரிணாம வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பொம்மைகள் வைக்கப்படுகின்றன. கீழே உள்ள மூன்று படிகளைப் பறவைகள் மற்றும் விலங்குகளின் பொம்மைகள் அலங்கரிக்கும்.
அதற்கடுத்த மூன்று படிகளை மகான்கள் மற்றும் தேசத் தலைவர்களின் பொம்மைகள் அலங்கரிக்கும்.
கொலுவில் மேலே உள்ள மூன்று படிகளில் தெய்வப் பொம்மைகளை இடம் பெறச் செய்வது வழக்கம்.
பார்வதியை வழிபடுவதால் நல்ல சக்தி வாய்ந்த உடலை அடைய முடியும். நோய் நீங்கப் பெற்று நல்ல ஆரோக்கியம் நமக்கு வேண்டும் எனப் பார்வதியை வேண்டலாம்.
சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்களால் பூமாதேவி பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருந்தாள். அவள் மும்மூர்த்திகளை வேண்ட, அவர்கள் தங்கள் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி ஆதி பராசக்தியைப் படைத்தார்கள். அவள் அரக்கர்களை வதம் செய்தாள்.
அப்படி வதம் செய்யும் போர் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. அந்த ஒன்பது நாட்களே நவராத்திரியாகக் கொண்டாடப் படுவதாக தேவி பாகவதம் சொல்கிறது.
சும்பன், நிசும்பன் ஆகிய அரக்கர்கள் காமம் குரோதம் ஆகிய தீய குணங்களின் உருவகம். நம் மனத்தில் பார்வதி தேவியைக் கொலு வீற்றிருக்கச் செய்து அந்தத் தீய பண்புகளை அழிக்க வேண்டும் என்பதே நவராத்திரிக் கொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள உட்கருத்து.
பார்வதிக்குக் காளி, துர்க்கை, பராசக்தி என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் உண்டு. காளிதாசர், ராமகிருஷ்ண பரமஹம்சர், வள்ளலார், மகாகவி பாரதியார் உள்ளிட்ட பலர் அன்னை பராசக்தியின் அடியவர்களாகத் திகழ்ந்தவர்கள். மராட்டிய மாமன்னன் சிவாஜி காளிதேவியின் பெரிய பக்தனாக இருந்தவன்.
லட்சுமி தேவி தோன்றிய விதம் பற்றி நாராயண பட்டதிரி குருவாயூரப்பன்மேல் எழுதிய நாராயணீயம் என்கிற மஸ்கிருதச் செய்யுள் நூல் தெரிவிக்கிறது.
தேவர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது அமிர்தம் வெளிப்படுவதற்கு முன்பாகப் பாற்கடலில் இருந்து கொடிய நஞ்சு வெளிப்பட்டது. சிவபெருமான் அந்த நஞ்சைக் குடித்து தேவர்களைக் காப்பாற்றினார்.
தொடர்ந்து பாற்கடல் கடையப்பட ஐராவதம் என்ற வெள்ளை யானை, கேட்டதெல்லாம் தரும் கற்பக மரம் உள்படப் பல புனிதப் பொருட்கள் தோன்றின. அப்போது பாற்கடலில் தோன்றியவள்தான் லட்சுமிதேவி.
அவளுக்கான சுயம்வரம் அப்போதே நடத்தப் பட்டது. பேரழகியான லட்சுமி நாணத்தோடு திருமால் கழுத்தில் மாலையிட்டாள். திருமாள் அவளைத் தன் இதயத்தில் வைத்துப் போற்றினார். அதனால்தான் திருப்பதி வெங்கடாஜலபதி மார்பில் நாம் லட்சுமி தேவியைப் பார்க்கிறோம்.
அவரவரும் தங்கள் மனைவியை நெஞ்சத்தில் வைத்து மதித்துப் போற்றினால் வாழ்வில் செல்வம் சேரும் என்பதே வெங்கடாஜலபதி வடிவம் உணர்த்தும் கருத்து. நவராத்திரியில் லட்சுமி வழிபாடு செய்பவர்கள் இல்லங்களில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
ஆதிசங்கரர் லட்சுமியைப் போற்றி கனகதாரா ஸ்தோத்திரம் என்ற பாடலை அருளியுள்ளார். கவியரசர் கண்ணதாசன் அந்தப் பாடலால் கவரப்பட்டு, அதைப் பொன்மழை என்ற தலைப்பில் கவிதையாகவே தமிழாக்கம் செய்துள்ளார். நவராத்திரி காலத்தில் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது விசேஷமானது. லட்சுமி தேவியின் அருளைப் பெற உதவக் கூடியது.
லட்சுமி தேவியைப் பற்றிய குறிப்பு திருக்குறளில் உண்டு. செய்யாள், செய்யவள், திரு என்றெல்லாம் லட்சுமி தேவியைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். மங்கலங்களைத் தரும் லட்சுமியின் சகோதரி அமங்கல வடிவமான மூதேவி. லட்சுமியின் அக்கா மூதேவியைத் தவ்வை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
லட்சுமி கடாட்சம் உடையவர்களே இந்த உலக வாழ்வின் இன்பங்களை அடைய முடியும். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. நவராத்திரி காலத்தில் லட்சுமியைப் பிரார்த்தனை செய்வதன் மூலம் செல்வ வளத்தைப் பெறலாம்.
ஒருவனுக்கு உடல் வலிமையும் செல்வ வளமும் இருந்தாலும் அறிவில்லா விட்டால் அவையிரண்டும் வீண்தான். அவன் செல்வ வளம் எளிதாய்ப் பிறரால் சுரண்டப்படும். அவன் உடல் வலிமை கொண்டிருந்தாலும் பகைவர் சூழ்ச்சியால் அவனை வீழ்த்துவர்.
எனவே அறிவிருப்பவர்களே வாழ்வில் வெற்றி பெற இயலும். அந்த அறிவை அருள்பவள் கலைவாணி. நவராத்திரியின் போது பார்வதி பூஜை லட்சுமி பூஜை என்றெல்லாம் நாம் தனித்தனியே பெயர் வைத்து அழைப்பதில்லை.
ஆனால் சரஸ்வதி பூஜை எனத் தனிப் பெயரிட்டு ஒரு நாளை நவராத்திரியில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். சரஸ்வதியின் பெருமை அத்தகையது.
பார்வதியின் வாகனம் சிங்கம். உடல் வலிமையை அருளும் பார்வதிக்கு காட்டு ராஜாவான சிங்கம் வாகனமாகியது. லட்சுமியின் வாகனம் ஆந்தை. இரவு, பகல் பாராது உழைத்தால் தான் செல்வம் சேரும் என்பதால் இரவில் கண்விழித்திருக்கும் ஆந்தை அவளுக்கு வாகனமாகியது.
சரஸ்வதியின் வாகனம் அன்னப்பறவை. பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்துப் பாலை மட்டும் அருந்தும் ஆற்றல் கொண்டது அன்னம். அதுபோலவே நாம் கல்வி கற்கும் போது நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும் என்பதை உணர்த்து கிறது கல்விக் கடவுளான கலைமகளின் வாகனம்.
லட்சுமிதேவி செந்தாமரையில் வாசம் செய்கிறாள். கலைவாணி வெண்தாமரையில் குடியிருக்கிறாள். வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள் என்று சரஸ்வதியைப் போற்றுகிறார் பாரதியார்.
கலைவாணியின் தோற்றமே அவள் கல்விக் கடவுள் என்பதைப் புலப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளதுதான் ஆச்சரியம்.
அவள் வீற்றிருக்கும் வெண்தாமரை தாவரவியல் சார்ந்தது. அவள் வாகனமான அன்னம் விலங்கியல் சார்ந்தது. அவள் கையிலுள்ள ஓலைச் சுவடி இலக்கியப் பாடத்தை உணர்த்துவது. இன்னொரு கையில் உள்ள மணிமாலை, எண்ணிக்கையுடன் ஜபம் செய்யப் பயன்படுவதால், கணிதத்தை உணர்த்துகிறது. கலைவாணியின் கையில் உள்ள வீணை அனைத்துக் கலைகளின் உருவகம்.
பெண்கல்வி தேவை என்று மகாகவி பாரதியார் உள்படப் பலரும் போராடினார்கள். ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று, பெண்கல்வி மறுக்கப் பட்ட காலத்தில் பல ஆண்கள் குரல் கொடுத்தார்கள்.
நமது தேசத்தில் இடைக்காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்று உண்மை. இப்போதுதான் அந்நிலை மாறியுள்ளது.
ஆனால் நம் ஆன்மிக மரபில் கல்விக் கடவுளாகவே கலைவாணி என்ற பெண்ணைத்தான் நாம் போற்றுகிறோம் என்பதை உணரும்போது, பெண்களும் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதே நம் ஆன்மிகத்தின் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நூறாண்டு வாழ்ந்த தவ முனிவரான காஞ்சிப் பரமாச்சாரியார் வாழ்வில் ஒரு செய்தி வருகிறது. அவர் நவராத்திரி காலமொன்றில் வெளியூரில் முகாமிட்டிருந்தார். துறுதுறுவென்றிருந்த ஓர் ஐந்து வயதுச் சிறுமி சுவாமிகளை நோக்கி வேகவேகமாக நடந்து வந்தது. உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் சுவாமிகள்.
`நவராத்திரி வரப் போகிறதே? இங்கு ஏன் நீங்க கொலு வெக்கல்லே? கொலு வெச்சா எல்லோருக்கும் சுண்டல் கிடைக்கும். நாங்கள்லாம் பாட்டுப் பாட முடியுமே?`
அந்தச் சிறுமியின் பேச்சை அம்பாளின் பேச்சாகவே மதித்தார் சுவாமிகள். தன்னை தரிசிக்க வந்தவர்களிடம் நாளை எல்லோரும் ஆளுக்கொரு பொம்மை கொண்டு வாருங்கள் என்றார்.
மறுநாள் பொம்மைகள் வந்து குவிந்தன. சுவாமிகள் தங்கியிருந்த இடத்திலேயே ஒன்பது படிக்கட்டுகள் கட்டி, அழகாக கொலு வைக்கப்பட்டது. குழந்தைகளும் பெரியவர்களும் கொலுவை வந்து தரிசித்தார்கள். பெண்கள் பலர் நாள்தோறும் பாட்டுப் பாடினார்கள். எல்லோருக்கும் சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஒன்பது நாள் கொலு முடிந்ததும், பொம்மைகளைப் பிரசாதமாக அடியவர்களுக்கே திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார் சுவாமிகள். ஒவ்வோர் இந்து வீட்டிலும் கட்டாயம் கொலு வைத்து அம்பிகையை வழிபட வேண்டும் என்றும் அது நம் நாட்டு மக்களுக்கு எல்லா நலன்களையும் தரும் என்றும் அவர் கூறிய செய்தி அவரது சரித்திரத்தில் வருகிறது.
ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அடியவர்கள் நவராத்திரி வழிபாட்டில் மிகுந்த அக்கறை செலுத்தியிருக்கிறார்கள். நவராத்திரி கொலு பெண்களுக்கு உரியதாக இருந்தாலும் நவராத்திரி காலத்தில் ஆண்கள் விரதமிருப்பதும் தேவியை வழிபடுவதும் கூட வழக்கமாக உள்ளது.
தேவி வழிபாட்டிற்கு ஏற்ற நவராத்திரி காலத்தில் அவரவர் இல்லத்தில் கொலு வைத்து தேவியை எழுந்தருளச் செய்வோம். அம்பிகையை வழிபட்டால் அதிக வரம் பெறலாம் என்கிறார் மகாகவி பாரதியார். முப்பெருந் தேவியரை வழிபட்டு முழுமையான பலனைப் பெறுவோம்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com






