என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • கிரகண தோஷ பாதிப்பு இந்தியாவிற்கு கிடையாது. கிரகண தோஷத்திற்குரிய நடைமுறைகள் கடைபிடிக்கத் தேவையில்லை.
    • இறைவனடி சேர்ந்த முன்னோர்கள், பெற்றோர்களின் ஆசி வேண்டி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

    கிரகணம்:

    நவகிரகங்களின் இயக்கமே உலகம் என்பதை நம் கண்ணிற்கு புலப்படும் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியை கொண்டு உணர முடியும். இவர்களின் ஒளியை ராகு அல்லது கேது மறைப்பதே கிரகணமாகும். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் சந்திர கிரகணம் பவுர்ணமி அன்றும் நிகழும். சூரியனை ராகு மறைக்கும்போது ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஏற்படும். கேது சூரியனை மறைக்கும் போது கேது கிரகஸ்த சூரிய கிரகணம் நிகழும். சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் ஒரு பகுதி சூரியனை மட்டுமே மறைத்தால் அது பகுதியை சூரிய கிரகணம். சந்திரன் முழுமையாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து சூரியனின் விளிம்பு பகுதி சுற்றி நெருப்பு வளையம் தென்படும். சூரியனின் நடுப்பகுதி கறுப்பாக காட்சி தரும். கிரகணம் தெரியும் பகுதிகளில் வெளிச்சம் குறைந்து மாலைப் பொழுது போன்ற உணர்வை கொடுப்பது கங்கண சூரிய கிரகணம் ஆகும்.

    சூரிய கிரகணம் 2023:

    நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 27ம்தேதி 14.10.2023 சனிக்கிழமை இரவு 8.34 மணி முதல் 15.10. 2023 அன்று 2.25 மணி வரை சித்திரை நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஸ்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. அதனால் கிரகண தோஷ பாதிப்பு இந்தியாவிற்கு கிடையாது. கிரகண தோஷத்திற்குரிய நடைமுறைகள் கடைபிடிக்கத் தேவையில்லை.

    அமாவாசை:

    பிரதமை முதல் அமாவாசை வரை திதிகள் 15. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைவதால் பூமிக்கு ஒரு காந்த சக்தி ஏற்படும். மற்ற திதிகளில் ஏதாவது ஒன்று, இரண்டு கிரகம் திதி சூன்யம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் சூன்யம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். அமாவாசை அன்று சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் நெற்றிக்கண் பலப்படுவதால் அமாவாசையன்று மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

    அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசை யன்று நடத்துகின்றனா். சில சடங்குகள் மற்றும் சில பூஜை முறைகளுக்கு அமாவாசை சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம்.

    இறைவனடி சேர்ந்த முன்னோர்கள், பெற்றோர்களின் ஆசி வேண்டி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசை மிகவும் சிறப்புடையது.

    மகாளய அமாவாசை:

    இந்த ஜென்மத்தில் ஒருவர் செய்யக்கூடிய பாவ, புண்ணியங்களுக்கு தகுந்த வகையில் தான் மறுபிறவி அமையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கர்ம பலன்களை குறைத்து சுப பலன்களை அதிகமாக தரும் சக்தி திதிகளுக்கு உண்டு. அதனால் தான் நமது ஜோதிட முன்னோடிகள் திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்று கூறியுள்ளார்கள். பிறவிப் பிணியிலிருந்து விடுபட்டு நற்கதியடைய சாஸ்திரங்களில் கூறப்பட்ட உபாயங்களில் ஒன்றே அமாவாசை திதி நாட்களில் கடைபிடிக்கப்படும் பித்ருக்கள் பூஜையாகும். பிரதமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது.

    சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்.

    சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள். அமாவாசை திதியன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் சூன்யமடையாது என்பதால் அமாவாசை வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    துன்பங்களிலிருந்து விடுபட இறந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கால சூழல் காரணமாக திதி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆடி, அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் முன்னோர்களான பித்ருக்கள் தமது உறவுகளை பார்ப்பதற்காக இந்த பூலோலகத்துக்கு வருகின்றனர்.

    எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போல அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாளை மகாளய அமாவாசை அன்று அவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    மகாளய அமாவாசை 2023:

    மகாளய பட்சம் செப்டம்பர் 30-ந் தேதி துவங்கி, அக்டோபர் 14-ந் தேதி வரை உள்ளது. அக்டோபர் 14 ம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. அக்டோபர் 13-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9.52 மணிக்கு துவங்கி, அக்டோபர் 14 ம் தேதி சனிக்கிழமை இரவு 11.25 வரை அமாவாசை திதி உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி கடைசி சனிக்கிழமையும் சேர்ந்து வருவதால் இந்த நாள் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீர் நிலைகளுக்கு சென்று நீராடி விரதத்தை துவக்கி விட வேண்டும்.

    சனிக்கிழமை:

    சனி என்றால் பூர்வீகம், குலதெய்வம், தொழில், உத்தியோகம், தீராத கடன், தீராத நோய், ஆயுள், கர்மா, தடை , தாமதம். மனிதர்களின் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ற பலன்களை வழங்குபவர் சனிபகவான். ஒருவரின் சுய ஜாதகத்தில் அல்லது கோட்சாரத்தில் சனியால் பாதிப்பு இருந்தால் பூர்வீகத்தில் வாழ முடியாது. குல தெய்வ அனுகிரகம் குறையும். முன்னோர்களின் நல்லாசி கிடைக்காது. பூர்வீகச் சொத்து கிடைக்காது அல்லது பூர்வீகச் சொத்தால் பயனற்ற நிலை உண்டாகும்.தொழில் உத்தியோகம் போன்றவற்றில் நிலையற்ற தன்மை இருக்கும்.ஆயுள் பயம், தீராத நோய், தீராத கடன் போன்ற பாதிப்புகள் இருக்கும். இது போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட பாதிப்பு குறைந்து சுபபலன் அதிகரிக்கும்.

    மகாளய அமாவாசையும் சனிக்கிழமையும்:

    பித்ருக்கள் பூஜைக்கு சனிக்கிழமை மிக உகந்தது. இந்த ஆண்டு புரட்டாசி அமாவாசை சனிக்கிழமை சம்பவிப்பது மிகச் சிறப்பு. மகாளய பட்ச காயத்தில் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும், சாந்தியடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களைச் செய்ய வேண்யது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

    சூரிய கிரகணமும் மகாளய அமாவாசையும்:

    மகாளய அமாவாசையன்று சூரியன், சந்திரன், ராகு, கேது, பூமி ஆகியவை பாகை அடிப்படையில் நெருக்கமான டிகிரியில் பயணம் செய்வது கிரகணத்திற்குரிய கிரக அமைப்பாகும். அமாவாசை திதி முடியும் போது கிரகணம் சம்பவிக்கிறது. கிரகணத்திற்குரிய கிரக நிலவரத்துடன் அமாவாசை சனிக்கிழமை சம்பவிப்பது அரிய கிரக அமைப்பு. கிரகண காலத்தில் செய்யப்படும் ஜெபம் மற்றும் மந்திர உச்சாடனத்திற்கு பல மடங்கு பலன் உண்டு.நியாயமான நீண்ட நாட்களாக நிறைவேறாத கோரிக்கை உடையவர்கள், ஜனன கால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிரகண நேரத்தில் நீராடி தியானம் , ஜபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தி அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடை யாது. கிரகண நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறை பித்ரு சாபம், பித்ரு தோஷம் நீங்கும். பல வருடமாக தீர்க்க முடியாதபூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒரு ராசிக்குள் பிரவேசிக்கிறார். ராசி சக்கரத்தின் தென் மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது. அந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், பித்ருக்கள் விடுதலையாகி தங்கள் உறவுகளை நாடி வீடுகளுக்கு வருகின்றனர். அந்த புரட்டாசி மாதத்தில் 3 தலைமுறை தந்தை வழி, தாய் வழி முன்னோர்களையும் ஆத்மாத்தமாக நினைத்து தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, முன்னோர் ஆத்ம சாந்திக்காக வழிபாடு செய்ய வேண்டும்.

    புரட்டாசி 27-ம் நாளாக 14.10.2023 (சனிக்கிழமை) அமாவாசை திதி பாவம் நீக்கும் நாளாகும். எதிர்கால தலைமுறைக்கு நன்மை சேர்க்கும் பாக்கியம் மிகுந்த நாளாகும். அமாவாசைத் திதியும், சனிக்கிழமையும், கிரகண கிரக அமைப்பு இணைந்த இந்த நாள் பல வருடங்களாக தீராத , தீர்க்க முடியாத பித்ரு தோஷம் உள்ள வர்கள் மற்றும் துர்மரணம், கொடிய நோயால் இறந்தவர்களுக்கு இந்நாளில் செய்யப்படும் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் உடனடி பலன் தரும்.


    பிதுர் வழிபாட்டுக்கு மிகச் சிறப்பு வாய்ந்த நாளான மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை மற்ற எல்லா அமாவாசை நாட்களைக் காட்டிலும் அதிக பலன் தரும். 1 வருட திதி, தர்ப்பணம் செய்த பலனும், முன்னோர் ஆசியும் கிடைக்கும். புரட்டாசி அமாவாசையன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர், முன்னோர் களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு, பூஜை , திதி, தர்ப்பணம் செய்யலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருச்செந்தூர், வேதாரண்யம், திருவையாறு, கொடுமுடி, பவானி கூடுதுறை, தாமிரபரணி போன்ற இடங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பதற்கு சிறப்பானதாக கருதப்படுகிறது. இறந்தநாள், திதி தெரியாதவர்களும், மாதாந்திர அமாவாசையன்று திதி கொடுக்க முடியாதவர்களும் மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். முறையான பித்ரு பூஜை ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் நிச்சயம் அகற்றி விடும். ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் தொடர் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எனவே, மகாளய அமாவாசை, சனிக்கிழமை, கிரகண கிரக அமைப்பு என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் உரிய வழிபாடு செய்தால் புண்ணிய பலன் தலைமுறைக்கு வந்து சேரும்.

    • பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டது காங்கிரசைச் சேர்ந்த சங்கரலிங்கனாருக்கு தூண்டுதலை ஏற்படுத்தியது.
    • 60 நாட்கள் கடந்ததும், சங்கரலிங்கனாரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்தது

    இன்று (அக்டோபர் 13-ந்தேதி) தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார்.

    சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற கிராமத்தில் 1895-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் வள்ளியம்மை. விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தார்.

    மெட்ராஸ் மாகாணத்தில் ஆந்திராவின் பெரும்பகுதியும், கர்நாடகாவின் பெல்லாரி போன்ற பகுதிகளும், கேரளாவின் மலபார் போன்ற பகுதியும் இணைந்து இருந்தன. சென்னையைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் 1952-ம் ஆண்டு ஆந்திராவை சென்னையில் இருந்து தெலுங்கர்கள் வாழும் தனி மாநிலமாக பிரித்து தரக்கோரி 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். அவரது போராட்டம் காரணமாக எழுந்த எழுச்சியால் ஆந்திர மாநிலம் உருவானது.

    1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் கர்நாடகா, கேரளா போன்றவை மொழிவாரி மாநிலங்களாக உருவானது. மிச்சம் மீதி இருந்த பகுதி மெட்ராஸ் மாகாணமாக தொடர்ந்தது. தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பிறகும் கூட தமிழ்நாடு என்ற பெயரை வைக்க மறுப்பதை ஏற்க முடியாது. இனி தமிழர்கள் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் தமிழ்நாடு என்று எழுத வேண்டும் என்றார் தந்தை பெரியார்.

    தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி, தமிழரசு கழகம் உள்ளிட்ட கட்சிகளும் இதை வலியுறுத்தின. காங்கிரசில் இருந்த சிலருக்கும் இந்த எண்ணம் இருந்தது.

    பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டது காங்கிரசைச் சேர்ந்த சங்கரலிங்கனாருக்கு தூண்டுதலை ஏற்படுத்தியது. தமிழர்களின் நிலப்பரப்பை தமிழ்நாடு என மாற்றக்கோரி 1956 ஜூலை மாதம் 27-ந்தேதி விருதுநகர் சூலக்கரைமேட்டில் தனிநபராக உண்ணாவிரதம் தொடங்கினார்.

    அந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது. பாதுகாப்பு கருதி வேறு இடத்தில் உண்ணாவிரதத்தை தொடர வேண்டும் என்று பொதுவுடைமை கட்சியினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார்.

    சங்கரலிங்கனாருக்கு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

    60 நாட்கள் கடந்ததும், சங்கரலிங்கனாரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்தது. ம.பொ.சி., காமராஜர், அண்ணா, ஜீவா, ஆகியோர் விருதுநகருக்கு சென்று சங்கரலிங்கனாரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.

    அதற்கு அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.

    76 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த புனிதரின் உயிர்ப்பறவை 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி அவர் நெஞ்சக்கூட்டில் இருந்து பறந்து சென்றது.

    காங்கிரஸ் கட்சிக்காரர் என்றாலும் தன் கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் கட்சியை நம்பாமல் தான் மரணம் அடைந்தவுடன் உடலை அடக்கம் செய்யும் பொறுப்பை கம்யூனிஸ்டு கட்சியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சங்கரலிங்கனார் கூறியிருந்தார்.

    அதன்படி அவரது உடல் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதுரை தத்தனேரி சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. சங்கரலிங்கனார் மறைவு செய்தி தமிழக அரசியலில் அதிர்ச்சியையும் சலசலப்பையும் உண்டாக்கியது. கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    சங்கரலிங்கனாரின் கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்கு பின் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் தனி மசோதா கொண்டு வரப்பட்ட போதும், மாநில சட்டசபையில் தமிழ்நாடு பெயர் சூட்டி தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் முடிவு எதுவும் கிடைக்கவில்லை.

    1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்-அமைச்சரானதும், 1968 ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவை தலைவர் சி.பா.ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா, 'தமிழ்நாடு' என மூன்று முறை கூற ''வாழ்க'' என்று உறுப்பினர்கள் விண்ணதிர முழக்கமிட்டார்கள்.

    1968 நவம்பர் மாதம் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. 1968 டிசம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு பெயர் மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்டது

    1969 ஜனவரி 14-ந்தேதி பொங்கல் முதல் அதிகாரபூர்வமாக மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது. சங்கரலிங்கனாரின் தியாகத்தை அறிஞர் அண்ணா உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் போற்றினர்.

    சங்கரலிங்கனாரின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசால் விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    • முருகப்பெருமான் மனம் இரங்கவில்லை. பிரம்மனுக்கு கூடுதல் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
    • உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் தெரியுமா?” என்று கேட்டார்.

    ஓம் எனும் பிரணவ மந்திரம் மகத்துமானது. இந்த மந்திர ஓசையால்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரணவ இந்த மந்திரத்துக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா? இந்த கேள்வியை ஒரு தடவை முருகப்பெருமான் படைப்பு தொழில் செய்யும் பிரம்மனை பார்த்து கேட்டார். அதற்கு முன்பு வரை பிரம்மன் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தார்.

    உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் படைக்கும் ஆற்றல் இருப்பதால் உலகிலேயே தனக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்ற ஆணவம் அவர் மனதில் இருந்தது. இதை அறிந்த முருகப்பெருமான் அவரது ஆணவத்தை அடக்கும் நோக்கத்திற்காகவே பிரணவ மந்திரத் திற்கு அர்த்தம் சொல்லும்படி கேட்டார்.

    பிரம்மனுக்கு அர்த்தம் தெரியவில்லை. என்ன சொல்வது என்று யோசித்தார். உடனே முருகப்பெருமான் பிரம்மனின் தலையில் "நச்"சென கொட்டினார். பிரம்மனுக்கு 4 தலைகள் உண்டு. 4 தலைகளிலும் மாறி மாறிக் கொட்டினார். வலி தாங்காமல் பிரம்மன் கதறினார்.

    என்றாலும் முருகப்பெருமான் விடவில்லை. அவர் அடித்த அடியில் பிரம்மன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை எழுப்பிய முருகப்பெரு மான் தனிமை சிறையில் அடைத்து வைத்தார். முருகப்பெருமானிடம் இப்படி வந்து சிக்கிக் கொள்வோம் என்பதை பிரம்மன் எதிர்பார்க்கவில்லை. தனிமை சிறையில் வாடி வதங்கினார்.

    அதன் பிறகும் முருகப்பெருமான் மனம் இரங்கவில்லை. பிரம்மனுக்கு கூடுதல் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி பிரம்மனிடம் இருந்த படைப்பு தொழிலை பறிமுதல் செய்து கொண்டார். பிறகு உலகின் படைப்பு தொழிலை முருகப்பெருமானே செய்யத் தொடங்கிவிட்டார்.

    பிரம்மன் தனிமை சிறையில் அடைக்கப்பட்ட தகவல் பிரபஞ்சம் முழுக்க பரவியது. இதுபற்றி அறிந்த மகாவிஷ்ணு மிகவும் வருத்தப்பட்டார். பிரம்மனை விடுவிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். முருகப்பெருமான் யார் சொன்னால் கேட்பார் என்று ஆய்வு செய்தார்.

    சிவபெருமானிடம் முறையிட்டால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று முடிவுக்கு வந்தார். உடனே சிவபெருமானை சென்று பார்த்தார். பிரம்மன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தகவலை சொல்லி அவரை விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

    இதை அறிந்த சிவபெருமானும் ஆச்சரியப்பட்டார். பிரம்மனுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கப்பட்டது என்று கேட்டார். ஓம் எனும் பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு சிரித்த சிவப்பெருமான் உடனடியாக முருகப்பெருமானை தொடர்பு கொண்டார். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பிரம்மனை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதால் முருகப்பெருமானும் உடனடியாக பிரம்மனை விடுதலை செய்தார்.

    இதனால் சிவபெருமான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். முருகனை அழைத்து தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பாசம் பொங்க பார்த்தார். பிறகு, "முருகா.... நீ இன்னும் எங்களுக்கு எல்லாம் சிறுவன்தான். உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் தெரியுமா?" என்று கேட்டார்.

    உடனே முருகப்பெருமான் சிரித்துக் கொண்டே தெரியும் என்றார். இதைக் கேட்ட சிவபெருமானுக்கு மீண்டும் ஆச்சரியம் ஏற்பட்டது. பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரம் உனக்கு எப்படி தெரியும்? அதை எனக்கு சொல்ல முடியுமா? என்று கேட்டார்.

    அதற்கு முருகப்பெருமான், "மந்திரத்தை எல்லோருக்கும் கேட்கும்படி சொல்ல முடியாது" என்றார். உடனே சிவபெருமான், "என் காதில் சொல்" என்றார். அதன்படி சிவபெருமான் காது அருகே சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை முருகப்பெருமான் விளக்கமாக கூறினார். இதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்த சிவ பெருமான் முருகப் பெருமானை வாழ்த்தினார்.

    இதனால்தான் "அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா" என்ற பெயர் முருகப்பெருமானுக்கு ஏற்பட்டது. தகப்பன் சாமி என்ற பெயரும் முருகப்பெருமானுக்கு ஏற்பட்டது இதனால்தான்.

    இந்த நிகழ்ச்சி நடந்த இடம் சுவாமிமலை. இந்த தலம் கும்பகோணத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணம் யாத்திரை மேற்கொள்பவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

    சுவாமி மலையில் முருகப்பெருமான் குருவாக இருந்து அருள்பாலிக்கிறார். இதனால் இந்த தலத்துக்கு குருமலை என்ற பெயரும் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் எங்கும் மலைகள் கிடையாது. எனவே இந்த சிறிய மலையில் முருகன் வீற்றிருப்பது தனி சிறப்பாக கருதப்படுகிறது.

    சிறு குன்றில் வீற்றிருக்கும் முருகனை தரிசிக்க 60 படிக் கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். முதலில் மகா மண்டபத்துக்குள் நுழைந்ததும் கொடி மரம் அருகே கண் கொடுத்த விநாயகர் இருக்கிறார். அவரை வழிபட்டு விட்டு முருகப் பெருமானை வழிபட செல்லுங்கள். கருவறை யில் முருகப்பெரு மான் வலது கையில் தண்டம் ஏந்தியபடி முத்திரை காட்டியபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உச்சிகுடுமி யுடன் இடது கையை தொடையில் வைத்தபடி யோக நிலையில் ஒரு குரு போல காட்சி அளிக்கும் அந்த முருகப்பெருமானை பார்த்தாலே நமக்கு ஞானம் வந்து விடும்.

    அவர் கையில் வைத்திருக்கும் வேலுக்கு தனி சக்தி உண்டு. அந்த வேல் வஜ்ரவேல் என்று அழைக்கப்படுகிறது. அந்த வேலுக்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 சக்திகளின் ஒருங்கிணைந்த ஆற்றல் இருப்பதாக கணித்துள்ளனர்.

    இந்த முருகனை அலங்கார பிரியர் என்றும் சொல்கிறார்கள். விபூதி அபிஷேகம் செய்யும்போது வயதான ஞானி தோற்றத்தில் முருகப்பெருமான் மாறி காட்சி அளிப்பதாக சொல்கிறார்கள். அதுபோல சந்தனம் அபிஷேகம் செய்யும்போது கம்பீரமான பாலசுப்பிர மணியர் வடிவில் காட்சி தருகிறார்.

    முருகப்பெருமான் நிற்கும் பீடம் சிவலிங்க ஆவுடை போல அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீதுதான் முருகப்பெருமான் இருக்கிறார். இது பாணலிங்கத்தை பார்ப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். எனவேதான் இந்த தலத்தில் சிவனே முருகனாகவும், முருகனே சிவனாகவும் இருப்பதாக சான்றோர்கள் கருதுகிறார்கள்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வது படை வீடாக சுவாமிமலை உள்ளது. இந்த தலத்தில் தல மரமாக நெல்லி மரம் இருக்கிறது. பார்வதிதேவி பூலோகத்துக்கு வந்தபோது இந்த தலத்தில் தவம் இருந்தாளாம். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.எனவே பார்வதிதேவியே நெல்லி மரமாக மாறி தல விருட்சமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

    நக்கீரர், அருணகிரி நாதர் இந்த தலத்தில் முருகப்பெருமானை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களை பாடினால் சுவாமிமலை முருகப் பெருமான் அருளை மிக எளிதாக பெற முடியும். குறிப்பாக எதிரிகள் தொல்லை ஏற்பட்டால் இந்த தலத்தில் ஒரு அர்ச்சனை செய்தாலே போதும் நீங்கி விடும் என்கிறார்கள்.

    இந்த முருகப்பெருமான் செல்வம், குழந்தை வரம், ஆரோக்கியம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு போன்றவற்றை தர வல்லவர். கல்வியில் சிறப்பு பெற்று உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தவறாமல் சுவாமிமலை முருகப்பெருமானை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

    கும்பகோணத்துக்கு யாத்திரை செல்லும் போது புறநகரில் உள்ள பல்வேறு ஆலயங்களுக்கும் செல்ல வேண்டி இருக்கும். அதற்கேற்ப உங்கள் பயணத்தை அமைத்துக் கொண்டால் சுவாமிமலையில் ஞானம் தரும் முருகப்பெருமானை மிக எளிதாக வழிபட்டு விட்டு வரலாம்.

    திருக்கார்த்திகை திருவிழா இந்த தலத்தில் 10 நாட்கள் மிக மிக விமரிசையாக நடைபெறும். அப்ேபாது டெல்டா மாவட்டங்க ளில் உள்ள மக்கள் சுவாமிமலைக்கு படை யெடுத்து வரு வார்கள். அந்த 10 நாட்களும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு உங்களது சுவாமிமலை பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.

    சித்திரை மாதம் 10 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறும். வைகாசி விசாகம் திருவிழாவும் சிறப்பாக நடத்துவார்கள். அந்த சமயங்களில் சென்றால் முருகப்பெருமானை பலவிதமான அலங்காரங்களில் தரிசிக்கலாம்.

    தமிழ், ஆங்கில புத்தாண்டு நாட்களில் திருத்தணியில் நடத்துவது போல இந்த தலத்திலும் திருப்படி திருவிழா நடத்துகிறார்கள். ஒவ்வொரு படியாக பூஜை செய்து நடத்தப்படும் அந்த விழா கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    பொதுவாக சுவாமிமலைக்கு செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகளவு இருக்கும். சென்னை மக்கள் செவ்வாய்க்கி ழமை சிறுவாபுரிக்கு எப்படி படையெ டுக்கி றார்களோ அப்படி சுவாமிமலைக்கு செவ்வாய்க்கிழமைகளில் ஞானத்தை தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். முடிந்தால் நீங்களும் செவ்வாய்க் கிழமை சென்று சுவாமிமலை ஆலயத்தில் தரிசிப்பது நல்லது.

    முருகப்பெருமானிடம் ஞானம் பெற்று விட்டால் மட்டும் போதுமா? அதை அடித்தளமாக வைத்து கல்வி, கேள்வி போன்ற கலைகளில் மேம்பாடு பெற வேண்டும் அல்லவா? அதற்கு நீங்கள் கூத்தனூர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். அடுத்த வாரம் கூத்தனூர் தலம் பற்றி பார்க்கலாம்.

    • இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 25 சதவீத இறப்புகளுக்கு இதய நோய் காரணமாக உள்ளது.
    • மாரடைப்பு வராமல் தடுக்கவும், ரத்தக் குழாய் அடைப்பு வராமல் தடுக்கவும் நவீன அறிவியல் அறிவுறுத்திக் கூறுவது மூன்று யுக்திகளைத் தான்.

    கடந்த 100 ஆண்டுகளாக அதிகப்படியான இறப்புகளுக்கு காரணமாக இருப்பது இதய நோய்கள் தான். நமக்காக ஒரு நொடிப்பொழுது கூட ஓய்வில்லாமல் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் உறுப்பு இதயம். சராசரி வாழ்நாளில் கிட்டத்தட்ட 300 கோடி முறை இதயம் துடிப்பதாக இருக்கின்றது. ஆக, முதுமையில் மட்டுமின்றி எக்காலத்திலும், அத்தகைய இதயத்தின் மீது அக்கறை காட்ட வேண்டியது அத்தியாவசியமான ஒன்று.

    முதுமையில் ஒவ்வொரு உறுப்பும் தேய்மானத்தின் அறிகுறியாக பல்வேறு நோய்நிலைகளை உருவாக்குகின்றது. அந்த வகையில் இதயத்தின் ரத்த சுற்றோட்ட மண்டலமானது முதுமையில் ரத்தக் குழாய் அடைப்பு எனும் நோய்நிலைக்கு ஆளாகின்றது. இந்த ரத்த குழாய் அடைப்பு தான் பின்னாளில் 'ஹார்ட் அட்டாக்' எனும் மாரடைப்புக்கு காரணமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் கிட்டத்தட்ட 63 சதவீத இறப்புகள் தொற்றா நோய் நிலைகளால் உண்டாவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. அதில் உலக அளவில் முதல் இடத்தைப் பிடிப்பது சர்க்கரை நோய். அதற்கு அடுத்தாற் போல், 27 சதவீத இறப்புகளுக்கு காரணமாக அமைவது இதய நோய்கள். அதுவும் குறிப்பாக 40-69 வயது வரை உள்ளவர்களில் 45 சதவீத அளவு இறப்புக்கு காரணமாக அமைவது இதய நோய்களே. எனவே முதுமையில், இதயம் நொறுங்கி விடாமல் அதன் மீது கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாத்துக்கொள்வது ஆயுட்காலத்தைக் கூட்டும்.

    இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 25 சதவீத இறப்புகளுக்கு இதய நோய் காரணமாக உள்ளது. முக்கியமாக இந்தியாவில் பெண்களின் இறப்புக்கு இதய நோய் அதிமுக்கிய காரணமாகும். பெண்களில் கிட்டத்தட்ட 18 சதவீத பேருக்கு இதய நோய்களால் இறப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதய நோயால் நம் நாட்டு பெண்களிடம் ஏற்படும் இறப்பு விகிதம் மார்பகப் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய்களை விட அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கன் காலேஜ் ஆப் கார்டியாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின்படி, இந்தியப் பெண்களில் கரோனரி தமனி நோய்நிலையானது வயதைப் பொறுத்து 3 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியப் பெண்களின் சராசரி மாரடைப்பு வயது 59 ஆகும். அதாவது வளர்ந்த நாடுகளில் உள்ள பெண்களின் சராசரி மாரடைப்பு வயதை விட மிகக் குறைவாகும். எனவே முதுமையில் பெண்கள், ஆண்களைக் காட்டிலும் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

    முதுமையில் இதயத்திற்கு செல்லும் கரோனரி ரத்தக் குழாய்களில் ஏற்படும் தேய்மானமும், அதில் படியும் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்புப் பொருளும் மாரடைப்புக்கு (ஹார்ட் அட்டாக்) காரணமாக நவீன அறிவியல் கூறுகின்றது. இந்தக் கூற்று சித்த மருத்துவம் கூறும் நோய்க்காரணத்திற்கு ஒப்பாக உள்ளது. ரத்த குழாய்களில் படியும் கொழுப்பு பொருளை சித்த மருத்துவம் கபம் என்று கூறுகின்றது. இந்த கபத்துடன் கூடும் வாதம், 'கபவாதமாகி' 'மாரடைப்பு' எனும் தீராத நோய்நிலைக்கு காரணமாகின்றது.

    ஆகவே, கபவாதத்தைக் குறைக்கும் சித்த மருந்துகளும், மூலிகைகளும் முதுமையில் இதய நோயை தடுக்க உதவும். எளிமையாக பூண்டு, லவங்கப்பட்டை, லவங்கம், இஞ்சி (சுக்கு), மிளகு ஆகிய அஞ்சறைப்பெட்டிச் சரக்குகளும், மருதம்பட்டை, வெண்தாமரை, குங்கிலியம், சர்பகந்தா, செம்பருத்தி, முருங்கை, சிற்றாமுட்டி, வல்லாரை, அமுக்கரா கிழங்கு ஆகிய மூலிகைகளும், திரிபலை, திரிகடுகு ஆகிய சித்த மருந்துகளும் இதய நோய் நிலைகளில் நல்ல பலன் தருவதாக உள்ளன. மேலும், பல்வேறு மூலிகைகளில் உள்ள 'கார்டியாக் கிளைக்கோசைடு' எனும் வேதிப்பொருட்கள் இதயத்திற்கு நன்மை பயக்கும் வண்ணம் உள்ளன.

    மாரடைப்பு வராமல் தடுக்கவும், ரத்தக் குழாய் அடைப்பு வராமல் தடுக்கவும் நவீன அறிவியல் அறிவுறுத்திக் கூறுவது மூன்று யுக்திகளைத் தான். முதலில் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை குறைப்பதோடு, ரத்தத்தில் கொழுப்பின் அளவினை சீராக பராமரிப்பது. இரண்டாவது ஆன்டிஆக்சிடன்ட் எனும் ஆக்சிஜன் நச்சுப்பொருட்களை (ROS) உடலில் இருந்து நீக்கும் உணவு முறைகளை பின்பற்றுவது. மூன்றாவது விலங்கு உணவுப் பொருட்களை தவிர்த்து தாவர உணவுப்பொருட்களை அதிகம் சேர்ப்பது. அதாவது அசைவ உணவுகளை குறைத்துக் கொள்வது ஆகிய இவை மூன்றும் தான்.

    பொதுவாக ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு 200 மிகி/dl என்ற அளவிற்கு இருக்க வேண்டும். 244 மிகி/dl அளவிற்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் உள்ள ஆண்களுக்கு, ரத்தத்தில் 210 மிகி/dl அளவிற்கு கொலஸ்ட்ரால் உள்ள ஆண்களை விட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுவது கவனிக்கத்தக்கது. எனவே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் அவ்வப்போது கண்காணித்துக் கொள்வது இதயத்தைக் காக்கும் எளிய வழிமுறை.

    ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க எளிய சித்த மருத்துவ முறைகளாக வெந்தயத்தை வறுத்துப் பொடித்து பகல் நேரங்களில் எடுத்துக்கொள்வது நல்லது. வெந்தயம் அதிகப்படியான நார்சத்துக்களை கொண்டுள்ளபடியால் கொழுப்பினை எளிதில் கரைக்கும். 

    லவங்கப்பட்டையைப் பொடித்து அதனுடன் சீரகம், சோம்பு சேர்த்து அவ்வப்போது தேநீரில் கலந்து எடுத்துக்கொள்வது இதயத்திற்கு நன்மை தரும். லவங்கப்பட்டையானது ரத்தக்குழாயில் படிந்துள்ள கொழுப்பினைக் கரைத்து, ரத்த ஓட்டம் சீராக வழி வகை செய்யும். தினசரி பூண்டினை பாலில் வேக வைத்து எடுத்துக்கொள்வதும் கூட ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பினைக் குறைக்கும். மாரடைப்பினைத் தடுக்கவும் உதவும் 'மூலிகை ஆஸ்பிரின்' என்றே பூண்டினை சொல்லலாம். நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் அஞ்சறைப்பெட்டி சரக்கான மஞ்சள் ரத்தத்தில் உள்ள கொழுப்பினை அளவைக் குறைப்பதாக உள்ளது சிறப்பு.

    கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த திரிபலை சூரணம் எனும் சித்த மருந்து இதயத்திற்கு கிடைத்த மாபெரும் கொடை. ரத்தத்தில் உள்ள கொழுப்பினைக் குறைக்கும் தன்மையும், மாரடைப்பு வராமல் தடுக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மையும் இதற்குண்டு. தினசரி திரிபலை சூரணத்தை இரவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது நல்ல பலன் தரும். அதே போல் குங்கிலியம் எனும் சித்த மருத்துவ மூலிகைப் பொருளும் இதயம் காக்கும் அருமருந்தாக உள்ளது.

    சித்த மருத்துவத்தில் பிரசித்தி பெற்ற மூலிகையான தனி நிலவேம்பு சூரணம் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக உள்ளது என்று எலிகளில் நடந்த சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. அதில் உள்ள 'ஆன்ரோகிராபோலாய்டு' எனும் வேதிப்பொருள் அதன் பல்வேறு மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளது. மேலும் இது ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதாகவும் உள்ளது.

    செம்பருத்தி எனும் இயற்கை தந்த இதய நிபுணரை பயன்படுத்த துவங்குவது இதய நோய்களைத் தடுக்கும் மற்றுமொரு எளிய வழிமுறை. இதய ரத்தக் குழாய்களில் சேதாரத்தை உண்டாகும் நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருளை நீக்கும் தன்மை செம்பருத்திக்கு உண்டு. செம்பருத்திப் பூவில் உள்ள இயற்கை நிறமிகளான பாலிபினோலிக் வேதிப்பொருட்கள் அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மைக்கும், இதயம் காக்கும் தன்மைக்கும் காரணம் என்கின்றன நவீன ஆய்வுகள். எனவே முதுமையில், இயற்கையில் கிடைக்கும் செம்பருத்திப் பூவை சூடான பாலில் போட்டு எடுத்துக்கொள்ளலாம் அல்லது சித்த மருந்தான 'செம்பருத்தி மணப்பாகு' பயன்படுத்துவதும் நற்பலன் தரும்.

    சித்த மருத்துவ மூலிகைகளான 'தசமூலம்' எனும் பத்து மூலிகைகளின் வேரும், அமுக்கராகிழங்கும் இதய நோய்களில் உண்டாகும் படபடப்பை குறைக்க உதவும். மருதம்பட்டை எனும் துவர்ப்பு சுவை கொண்ட மூலிகை பல்வேறு இதய நோய்களில் ஆய்வு செய்யப்பட்டு நல்ல பலன் தருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை நாடுவதும் முதுமையில் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும். 

    சோ.தில்லைவாணன்

    சோ.தில்லைவாணன்

    அமுக்கரா கிழங்கு அதிக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட சித்த மருத்துவ மூலிகை. மன அழுத்தத்தைப் போக்கும் சிறந்த மூலிகை. இது மன அழுத்தம் போக்கி இதயத்தை வன்மைப்படுத்த உதவும். ஆக, அமுக்கராகிழங்கு சூரணத்தை பாலில் கலந்து எடுத்துக்கொள்ள முதுமையில் பல்வேறு நன்மைகளைத் தரும். ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க உதவும் மற்றுமொரு எளிய மூலிகை 'வல்லாரை கீரை'. எனவே, வல்லாரை சார்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதும் இதயத்திற்கு நல்லது.

    ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை சரியாக பராமரிப்பதும், புகைபிடிப்பதை அறவே நிறுத்துவதும், உடல் பருமனைக் குறைப்பதும், சரியான உடற்பயிற்சியும், இதயத்திற்கு இதமான உணவு முறைகளும் முதுமையில் இதயம் காக்கும் எளிய முறைகள். இவற்றை பழகி வருவது பெரும் பொருட்செலவினத்தை தடுத்து ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். சூரிய வணக்கம் செய்வது இதய நோய்களில் இருந்து நம்மை மீட்டு திரும்ப இயல்பு நிலைக்கு கொண்டு வருமென நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுவதும் சிறப்பு.

    பை பாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, பலூன் பிளாஸ்டி சிகிச்சை ஆகிய இதயம் காக்கும் சிகிச்சை முறைகள் அசுர வளர்ச்சி பெற்ற நவீன அறிவியலுக்கு சில உதாரணங்கள். இவற்றால் இதயத்தின் ஆயுள் அதிகரித்திருப்பது உண்மை தான். இருப்பினும் அதற்கான செலவும், உடல் வருத்தமும், மன அழுத்தமும் முதுமையில் கூடுதல் சுமைகள். எனவே, வருமுன் காக்கும் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தை நாடுவது, நோய்களால் இதயமும் ஆயுளும் நொறுங்காமல் பாதுகாக்கும் எளிமையான வழிமுறை.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    • தமிழகத்தின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செய்கிறது.
    • ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் முட்டைகள் மிக முக்கிய உணவு பொருளாக இடம் பிடித்துள்ளது.

    நாளை அக்டோபர் (13-ந் தேதி) உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.

    கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வரும் 2-வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.

    முட்டையின் நன்மைகள் குறித்து அதில் உள்ள சத்துக்கள் மற்றும் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவாக முட்டை திகழ்கிறது. புரதச்சத்து அதிகம் இருக்கும் கோழி முட்டை ஏற்றுமதியில் இந்தியாவில் நாமக்கல் மண்டலம் முதலிடம் வகிக்கிறது.

    குறைந்த விலையில் கிடைக்கும் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவு முட்டை மட்டும் தான், வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ஊட்டச்சத்து மட்டுமின்றி உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி 12, பி 2, பி 5, இ கோலின், சியாந்தீன் போன்ற கனிம சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த முட்டைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் இந்தியாவில் நாமக்கல் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் சிறப்பு வாய்ந்த முட்டை ஏற்றுமதிக்கு சொந்தமான நாமக்கல் மாவட்ட மக்களை பெருமையடைய செய்துள்ளது என்றால் மிகையாகாது.

    நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 1100-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த முட்டை கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் தரமானதாக கிடைப்பதால் தமிழகத்தின் சத்துணவு திட்டம் மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகள், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல் முட்டைகளுக்கு தனி சிறப்பு உண்டு என்பதால் உலகம் முழுவதும் இந்த முட்டைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழகத்தின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது. இதில் உள்ளூர் தேவைக்கு போக மீதம் உள்ள 40 லட்சம் முட்டைகள் தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    முட்டை ஏற்றுமதி தொழிலில் முதலிடத்தில் உள்ள நாமக்கல் மண்டலத்தில் இருந்து உற்பத்தியாகும் முட்டைகள் மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், லைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல்களில் கண்டெய்னர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல், நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. இதில் இரண்டு கரு அடங்கிய முட்டைகள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த முட்டைகளில் சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். இதனால் வெளிநாடுகளில் இந்த முட்டைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    அனைத்து ஓட்டல்களில் மற்றும் வீடுகளில் முட்டைகள் மிக முக்கிய உணவு பொருளாக இடம் பிடித்துள்ளது. குறிப்பாக ஆம்லெட், ஆப்பாயில், முட்டை தோசை, முட்டை குழம்பு, முட்டை புரோட்டா, முட்டை பிரியாணி என பல்வேறு வகையில் அனைவரும் விரும்பும் வகையில் உணவு பொருளாக இந்த முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

    இத்தகைய பெருமை வாய்ந்த முட்டைகளை உற்பத்தி செய்யும் கோழிக்குஞ்சுகள் பிறந்து ஒரு நாள் குஞ்சுகளாக பண்ணையில் விடப்படுகிறது. தொடர்ந்து அதற்கு தீவனம் கொடுத்து வளர்த்து 8 வாரங்களில் முட்டையிடும் கோழிகளாக மாறுகின்றன. இந்த கோழிகள் அதிகபட்சமாக 72 வாரங்கள் முட்டையிடுகிறது. பின்னர் கறிக்காக குறைந்த விலையில் இந்த முட்டை கோழிகள் விற்கப்படுகிறது. முட்டை கோழிகளுக்கு சத்து வாய்ந்த மக்காச்சோளம், ராகி மாவு, தானியங்கள் அரைத்த மாவு உணவாக வழங்கப்படுகிறது.

    கோழிப்பண்ணை

    கோழிப்பண்ணை

    நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கோழிகளை வளர்க்க தீவனம் போடுவது, தண்ணீர் கொடுப்பது, கோழிகள் போடும் முட்டைகளை எடுத்து அட்டையில் அடுக்குவது, லாரியில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்புவது, கோழிப்பண்ணைகளை பராமரிப்பது, சுத்தம் செய்வது, முட்டைகளை வாகனங்களில் எடுத்து செல்வது, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் இருந்து தீவனங்கள் கொண்டு வருவது, முட்டைகளை உள்நாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என இந்த தொழிலை நம்பி 5 லட்சத்திற்கும் அதிகமாக தொழிலாளர்கள் உள்ளனர். இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    ஏற்கனவே நாமக்கல்லில் முட்டை உற்பத்தி 6 கோடியாக இருந்த நிலையில் தற்போது தீவன விலை உயர்வால் பல பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் முட்டை உற்பத்தி 5 கோடியாக குறைந்துள்ளது. இதனால் பலர் பண்ணைகளை மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்றதால் இதனை நம்பி இருந்த பலர் வேலை இழந்துள்ளனர்.

    எனவே கோழி தீவனத்தை மானிய விலையில் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும், வங்கி கடன்களை நிபந்தனையில்லாமல் வழங்கி சிறப்பு வாய்ந்த இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பது கோழிப்ப ண்ணையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்கிறது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் தற்போது முட்டை விலை 510 காசுகளாக உள்ளது. வழக்கமாக முட்டை விலை புரட்டாசி மாதங்களில் குறைவாக இருக்கும், ஆனால் இந்தாண்டு தற்போதும் முட்டை விலை குறையவில்லை. நிர்ணயிக்கும் விலையில் இருந்து மைனஸ் விலை இல்லாமல் விற்பனை செய்ய பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தினசரி 1 கோடி முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் புரட்டாசி மாதத்திலும் முட்டை விலை அதிகரித்தே காணப்படுகிறது.

    • என்னதான் ஏட்டுப் படிப்பின் துணைகொண்டு பட்டங்களும் பதவிகளும் பணி வாய்ப்புகளும் பெற்றாலும், அந்தத் துறை சார்ந்த பயிற்சிகளே நம்மைப் புடம்போடுகின்றன.
    • ஒவ்வொரு மனிதருக்கும் பயிற்சிக்காலம் என்பது தவக்காலம் போன்றது.

    பண்பைப் பயிலும் அன்பானவர்களே! வணக்கம்!

    பயிற்சி இல்லாத எந்த முயற்சியும் பயன் விளைவிக்காது! என்பதே அனுபவம் கற்றுத் தரும் நற்பாடம் ஆகும்.

    'பயில்' என்கிற சொல்லின் அடியாகப் பிறந்ததே 'பயிற்சி'. ஒரு வேலையைச் செய்யத் தொடங்குவதற்கு முன் அதுதொடர்பான அடிப்படை அறிவினைக் கற்றுத் தெளிவதே பயிற்சி ஆகும். 'பயில்' என்பதும் 'கல்' என்பதும் கல்வி கற்றல் முறைகளையே நமக்கு உணர்த்துகின்றன. பயிற்சி தருகின்ற அனுபவப் படிப்பினைகளும் 'படி' என்கிற கற்றலிலிருந்தே தொடக்கம் பெறுகின்றன.

    எந்தத் தொழிலுக்கும் பயிற்சி முக்கியம்; அதுவே தொழிற் பயிற்சி ஆகிறது. எந்தப் போட்டிக்கு முன்னும், எந்தத் தேர்வுக்கு முன்னும் பயிற்சி அவசியம்; போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி அவசியம். அன்றாட வாழ்வியலில் நாம் செம்மையாக வாழ்வதற்கும் முறையான பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

    உடற் பயிற்சி, மனப் பயிற்சி,

    மூச்சுப் பயிற்சி, நடைப் பயிற்சி,

    எழுத்துப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி,

    உணவுப் பயிற்சி, உறக்கப் பயிற்சி…

    என வாழ்வியல் பயிற்சிகள் பலவகைகளில் வந்து நம்மைப் பண்படுத்துகின்றன. இப்போது சிரிப்பதற்குக் கூடப் பயிற்சிகள் வந்துவிட்டன.

    தொழில் சார்ந்த நிலைகளில் போர்ப் பயிற்சி முதல் சமையல் பயிற்சி வரை பலவிதமான பயிற்சிகள் உள்ளன.

    பயிற்சிகள் நம்மைப் பண்படுத்துகின்றன. என்னதான் ஏட்டுப் படிப்பின் துணைகொண்டு பட்டங்களும் பதவிகளும் பணி வாய்ப்புகளும் பெற்றாலும், அந்தத் துறை சார்ந்த பயிற்சிகளே நம்மைப் புடம்போடுகின்றன.

    பயிற்சிக்காலங்கள் நமக்குத் தோல்விகளைக் கற்றுத் தருகின்றன. அத்தோடு மட்டுமல்லாமல் தோல்விகளைச் சமாளித்து வெளியேறி வெற்றி காண்பதற்கான வழிகளையும் சொல்லித் தருகின்றன. அப்படிப் பார்க்கும்போது பயிற்சியின் ஒவ்வொரு அடியெடுத்து வைத்தலும் ஒரு படிப்பினையைக் கற்றுத் தருகின்றன. பயிற்சி நல்ல அனுபவப் பாடசாலையாகத் திகழுகிறது.

    பயிற்சி நமக்கு மன ஒருமைப்பாட்டைப் பயிற்றுவிக்கிறது. மனம் போன திசையிலெல்லாம் கவனத்தைச் சிதற விடாமல் கூர்நோக்குச் சிந்தனைக்குள் ஆட்பட வைக்கிறது.

    ஓட்டுநர் பயிற்சி இல்லாதோர் வாகன வண்டிகளை இயக்க முயற்சித்தால் முடிவு விபத்தாகவே விடியும். ஆசிரியர் பயிற்சி இல்லாதோர் பாடசாலை வகுப்பறைக்குள் கற்பிக்கச் செல்வதும், மருத்துவர் பயிற்சி இல்லாதோர் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைவதும், விளையாட்டுப் பயிற்சி இல்லாதோர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள மைதானத்திற்குள் புகுவதும் விபரீதங்களையே விளைவாகத் தரும்.

    எந்தச் செயலுக்கு முன்பும் பயிற்சி அவசியமானதாகும்.

    ஓர் ஊரில் ஒருவர் தேநீர்க் கடையொன்று வைத்திருந்தார். அன்றாடம் அவருக்கு நல்ல வியாபாரமும் நடந்து வந்தது. ஊரின் பல்வேறு வகையான வாடிக்கையாளர்களும் வருகை தந்து அவரது தேநீரைப் பாராட்டிப் பருகி மகிழ்ந்தனர். அவரது வாடிக்கையாளர்களில், அந்த ஊரின் பிரபலமான மல்யுத்த வீரரும் ஒருவர்.

    ஒருநாள் மல்யுத்த வீரர் தேநீர்க் கடைக்காரரோடு வாய்த் தகராறில் ஈடுபட்டார். "என்ன தேநீர் இது? இனிப்பு, துவர்ப்பு எதுவுமில்லை! சுடுதண்ணீரைப் போல இருக்கிறதே!?" என்று கேட்டு விட்டார். தேநீர்க் கடைக்காரர் பதிலுக்கு ஒன்றுமே கூறவில்லை. ''என்ன ஒன்றுமே கூறாமல் இருக்கிறாய்? உனக்கு என்ன அவ்வளவு திமிரா? வேண்டுமென்றால் என்னோடு மல்யுத்தச் சண்டைபோட வருகிறாயா? சொல்! என்றைக்கு வைத்துக் கொள்ளலாம் சண்டையை?" என்று பேசிக்கொண்டே போனார் மல்யுத்த வீரர்.

    தேநீர்க்கடைக்காரர் அதற்கும் பதில் ஒன்றும் கூறவில்லை. " சரி! சரி! நீ சண்டைக்கு வருவதற்குத் தயாராகி விட்டாய் போலிருக்கிறது!. ஒரு மாதமில்லை! இரண்டு மாதமில்லை! மூன்று மாதங்கள் தருகிறேன். அதற்குள் பயிற்சி எடுத்துக்கொண்டு என்னுடன் மோத வா!. நீ டீக்கடை வைத்திருக்கிற இந்த இடத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் மல்யுத்தப் போட்டியை வைத்துக் கொள்வோம். தயாராய் இரு!" என்று கூறிவிட்டு நடையைக் கட்டினார் மல்யுத்த வீரர்.

    'சாதாரணமாகச் சண்டை போடுவதற்கே தெரியாது! இதில் மல்யுத்தத்திற்கு எங்கே போவது? யாரிடம்போய் பயிற்சி எடுத்து வருவது?'; தேநீர்க் கடைக்காரர், அவர் குருவாக மதிக்கக்கூடிய ஒரு துறவியிடம் சென்று, நடந்ததைக் கூறி ஆலோசனை கேட்டார்.

    எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி, "சரி பயிற்சியை ஆரம்பி!" என்று கூறினார். பதறிப்போன தேநீர்க் கடைக்காரர், ''என்ன குருவே! விளையாடுகிறீர்களா? எனக்குத் தெரியாத வேலையில் எப்படி நான் பயிற்சி எடுத்துக் கொள்வது?" என்று கேட்டார்.

    "அப்படியா? உனக்கு மல்யுத்தம் தெரியாதா?. சரி! உனக்குத் தெரிந்த தொழில் என்ன?"

    "தேநீர் போடுவது! அது மட்டுமே எனக்குத் தெரிந்த தொழில்!"

    "மிகவும் நல்லது! உனது தேநீர் போடும் தொழிலில் உள்ள மிக நேர்த்தியான நுட்பங்களையெல்லாம் நாள்தோறும் பயிற்சிகளின் மூலம் கற்று வா!. மூன்று மாதங்கள் கழித்து மல்யுத்த வீரன்வந்து உன்னைப் போட்டிக்கு அழைப்பான். போட்டிக்குச் செல்வதற்குமுன் ஒரு தேநீர் போட்டுத் தருகிறேன். அருந்திவிட்டு மல்யுத்தம் செய்வோம் என்று கூறித் தேநீர் போட்டுத் தா! பிறகு என்ன நடந்தது என்பதை வெற்றியோடு இங்கு வந்து சொல்! வெற்றி உனக்கே!" என்று ஆசி வழங்கிக் குருநாதர் அனுப்பி வைத்தார்.

    மல்யுத்தப் போட்டிக்கு அவன் அழைத்தால், இவர் தேநீர் போடும் பயிற்சியில் ஈடுபடச் சொல்கிறாரே! என்று யோசித்துக்கொண்டே வந்த தேநீர்க் கடைக்காரர், 'குருநாதர் சொல்லே மந்திரம்!' என்று நினைத்துக்கொண்டு நாள்தோறும் தேநீர் தயாரிக்கும் பயிற்சியில் நுட்பமாக ஈடுபடத் தொடங்கினார். குருநாதர், பத்து நாளுக்கு ஒருமுறை வந்து இன்னும் சிறப்பாகப் பயிற்சி செய்! என்று ஊக்கமளித்து உற்சாகப்படுத்திச் சென்றார்.

    'நடக்கப்போவது மல்யுத்தப் போட்டி! ஆனால் பயிற்சியோ தேநீர்த் தயாரிப்பில்' என்கிற எண்ணமெல்லாம் நாளடைவில் தேநீர்க் கடைக்காரர் சிந்தனையை விட்டு அகன்று விட்டது. முழு வாழ்க்கையும் தேநீர்த் தயாரிப்பது என்பதுபோல மனம் ஒருமைப்பட்டுப் பயிற்சியிலேயே ஆழ்ந்து விட்டார்.

    போட்டிக்குக் குறித்த நாளில் மல்யுத்த வீரர் வந்தார். "போட்டிக்குத் தயாரா? போட்டிக்கு வா!" என அழைத்தார். தேநீர்க் கடைக்காரர், "நீங்கள் என் கடையில் தேநீர் சாப்பிட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது நான் உங்களுக்காக ஒரு தேநீர் போட்டுத் தருகிறேன், அதை அருந்திய பிறகுப் போட்டிக்குச் செல்லலாம்!" என்றார். ஒத்துக்கொண்ட மல்யுத்த வீரரும், தேநீர்க் கடைக்காரர் அப்போதுதான் போட்டுக்கொடுத்த தேநீரைப் பெற்றுப் பருகத் தொடங்கினார்.

    தேநீர்ச் சுவையில் அப்படியே ஆழ்ந்து போனார். 'அடடா! என்ன அற்புதமான சுவை! இந்த மூன்று மாதத்தில் இவர் பயிற்சியெடுத்துக் கொண்ட இந்தத் தேநீர்த் தயாரிப்பே இவ்வளவு பிரமாதமாக இருக்கிறதே!. அப்படியானால் இந்த மூன்று மாதத்தில் இவர் மல்யுத்தப் பயிற்சி எடுத்திருந்தால் எவ்வளவோ அதிநுட்ப விஷயங்களை யெல்லாம் அழகாகக் கற்றிருப்பாரே!. இவரிடம் போட்டியில் கலந்து கொண்டு தோற்றுப்போவதைவிட, விலகிக் கொள்வது மேல்!' என்று முடிவுக்கு வந்தார் மல்யுத்த வீரர்.

    "உனது தேநீர்ச் சுவையே உனது பயிற்சியின் சிறப்பை எடுத்துரைக்கிறது!. மல்யுத்தப் போட்டி வேண்டாம்! நான் தோற்றுப்போனதாக அறிவித்து விலகிக் கொள்கிறேன்!" என்று கிளம்பி விட்டார்.

    'பயிற்சியெடுத்தது ஒன்று! பலன் பெற்றதோ மற்றொன்று!'- தேநீர்க் கடைக்காரருக்கு மட்டுமல்ல; நமக்கும் இது புரியாத புதிராக இருக்கலாம். ஆனால் பயிற்சியின் ஆழமும் அடர்த்தியும் எல்லாவற்றிற்கும் ஒன்றுதான்.

    ஒருவர் ஒருதுறையில் விற்பன்னராக ஆகிவிட்டால், மற்ற துறையில் எளிதில் பயிற்சி பெற்று ஜொலிக்கத் தொடங்கி விடலாம்.

    ஒவ்வொரு மனிதருக்கும் பயிற்சிக்காலம் என்பது தவக்காலம் போன்றது. சிறுவராய் இருக்கும்போது சைக்கிள் ஓட்டப்பயிற்சி எடுக்கிறோம். கை கால்களில் சிராய்ப்பு ஏற்படாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட மனிதரை எங்காவது கண்டதுண்டா?.

    குரங்குப் பெடல் போட்டே வண்டியைக் கொண்டு செலுத்திய அனுபவங்கள் மறந்தா போகும்?. பயிற்சி முடிந்து லாவகம் வந்தவுடன், பெடலை மிதிப்பதையும், ஹேண்டில் பாரைப் பிடிப்பதையும், பிரேக்கில் கைகள் இருப்பதையும் கவனத்தில் கொண்டா வண்டி ஓட்டுகிறோம்?. ஏதே நினைவுகளில் மனம் லயிக்கக் கைகளும் கால்களும் அதனதன் வேலைகளை அவையவை செய்கின்றன.

    பயிற்சிக் காலங்கள் கடினக் காலங்கள்தாம். எல்லாம் வலிதாங்கும் வாழ்வோ என எண்ண வைக்கும் பொழுதுகள் தாம். அவ்வப்போது தாங்கிக்கொண்டு மீண்டு வரவும் பயிற்சி பெற்றுவிட்டால் நம்மை வெல்ல வேறு எதுவும் கிடையாது என்று ஆகிப்போகும். 

    சைக்கிள் ஓட்டும் பயிற்சி, பிறகு இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சியை இலகுவாக்கிவிடும். இருசக்கர வாகனங்களை ஓட்டப் பழகிவிட்டால் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சியும் நாலுகால்ப் பாய்ச்சலில் நமக்கு எளிதே கைகூடி விடும். இப்படித்தான் ஒவ்வொரு பயிற்சியும் இலகுவாக்கி வாழ்க்கையைச் சுலபமாக்கி விடும்.

    பொதுவாக எந்தவொரு தொழிலில் அல்லது செயலில் இறங்குவதற்கு முன்னும் அவற்றிற்கான பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஈடுபடுவது என்றால் முழு ஈடுபாட்டோடு இறங்கிச் செயல்படுவது; எத்தனை இடர்ப்பாடு வந்தாலும் முழு மன உறுதியோடு பயில்வது ஆகும்.

    பயிற்சி என்பது நம்மை முழுமையாகத் தயார்ப்படுத்திக்கொள்வது ஆகும். அதற்குப் பொறுமையும் காத்திருக்கும் பொறுப்புணர்வும் மிக மிக அவசியம்.

    ஒரு வனத்தில் ஒரே மாதிரியான இரண்டு பெரிய மரங்களை அடிப்பகுதியில் அறுத்து வீழ்த்த, ஒரே மாதிரியான இரண்டு ரம்பங்களுடன் இருவர் சென்றனர். ஒருவர் ஒரு மரத்தை மூன்று மணி நேரத்தில் அறுத்து வீழ்த்தி விட்டார். ஆனால் இன்னொரு நபரோ மரத்தை அறுத்து முடிக்க ஐந்து மணிநேரம் எடுத்துக்கொண்டார்.

    மூன்று மணி நேரத்தில் வீழ்த்தியவர் இடையிடையே அரை மணிநேரத்திற்கு ஒருமுறை ஐந்தைந்து நிமிடங்கள் அறுப்பதை நிறுத்தியிருந்தார். ஆனால் மற்றவரோ இடைவெளி விடாமல் அறுத்தார்; அப்படியும் ஐந்து மணி நேரம் ஆயிற்று?

    எப்படி?

    மூன்று மணி நேரத்தில் அறுத்தவர் இடையிடையே ரம்பத்தைக் கூர்மைப்படுத்த ஐந்தைந்து நிமிடங்கள் செலவழித்தார். அதுதான் லட்சியங்களை விரைவாக அடைவதற்கான பயிற்சியும் காத்திருப்பும். கூர்மைப்படுத்தலே மன ஒருமைப்பாடு. அதனால் அவர் விரைந்து செயல் முடித்தார்.

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

     பயிற்சி செயல் வெற்றியின் முன்னோட்டம்!

    பயிற்சி சோதனைகளைச் சாதனைகளாக்கும் பட்டறை!

    பயில்வோம்! ஒவ்வொரு செயலிலும் உயர்வோம்!

    தொடர்புக்கு - 9443190098

    • ஓர் உயர் சக்தி இருக்கின்றது என்பதனை உன்னுள் உணர்ந்து நீ பிடித்த விதத்தில் பிடித்த ரூபத்தில் வழிபாடு செய்யலாம்.
    • உடல் அசையாது ஒரு நிமிடம் கை, கால் மடக்கி உட்கார்ந்து பாருங்கள். மனம் அலைபாயாது.

    பிறந்ததில் இருந்தே பூஜை, மணியோசை, சந்தனம், சாம்பிராணி, ஊதுவத்தி வாசம், மண மணக்கும் பிரசாதங்கள் என்ற சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட ஒரு பிறப்பு தான் என்னுடைய பிறப்பு. பள்ளி விடுமுறை நாட்கள், முக்கிய கிழமைகள் என்றால் காஞ்சிபுரம், மகாபெரியவர் மற்றும் திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகிரிஷி, கோவில் என்றே எனது பயணம் இருந்தது.

    இவை எல்லாம் வீட்டில் உள்ள பெரிசுகளின் நிர்வாகத்தில் நடந்தது. நிறைய ஆன்மீக புத்தகங்கள் படிக்கக் கொடுக்கப்பட்டன. புராணங்கள், பல பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு என பல புத்தகங்களை நூலகங்களில் இருந்து எடுத்து வந்து தருவார்கள். அந்த கால சூழ்நிலையில் அநேக வீடுகளில் இவ்வாறு தான் இருந்திருக்கும்.

    வீட்டில் நவராத்திரி கொலுவிற்கு எமிலிஜாய் சாந்தம்மாள் ஆசிரியையும், விக்டோரியா ஆசிரியையும் வருவார்கள். பக்கத்து வீட்டு இஸ்லாமிய குடும்பம் ஓட்டிய நட்பில் இருந்தது. யாரும் எந்தவித வித்தியாசமும் உணரவில்லை. எங்கள் வீட்டின் அருகில் மேரி மாதா ஆலயம் உள்ளது. கையில் சிறு குழந்தையாக ஏசு. அந்த சிலைக்கு எத்தனை முறை வீட்டில் பூத்து குலுங்கும் செம்பருத்தி பூவினை பறித்து மாலை கட்டி போட்டிருப்பேன் என்பது கணக்கில் அடங்காது.

    இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் எந்த தெய்வ நம்பிக்கை உடையவர்களாயினும் அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவராயினும் மரியாதை, மதிப்போடு நடத்தத் தெரிய வேண்டும். இது நமக்கும் நம் குழந்தைகளுக்கும் மனதில் பதிய வேண்டும். ஆக முதலில் இந்த எண்ணம் மனதில் வந்தால் மட்டுமே 'ஆன்மா', 'ஆன்மீகப் பயணம்' என்பதனைப் பற்றி பேசவோ, சிந்திக்கவோ முடியும். இதனை முதலில் மனதில் பதிய வைத்து மேலே தொடருவோம்.

    சிறு வயதிலேயே சித்தர் பீடங்களுக்கு செல்லும் வழக்கம் இருந்தது. சிறு வயதில் ' மகா பெரியவர்' அவர்களை சந்திக்கும் வாய்ப்பு நிறைய இருந்தது. ஏனோ அவரைப் பார்த்த உடன் உடலில் சப்த நாடியும் ஒடுங்கியது. அவரது மெல்லிய புன்னகையும், ஆசிர்வாதமும் கண்களில் நீர் வரவழைத்தது. ரமண மகரிஷி ஆசிரமும், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமும் இங்கேயே இருந்து விடலாமா என்று நினைக்கும் அளவு சக்தி அலைகள் நிறைந்து இருந்தது.

    பிள்ளையாரில் ஆரம்பித்து ஆஞ்சநேயர் வரை வகுப்பில் நான் முதன்மையாக வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் அளவே தேவை இருந்தது. ஏன் இத்தனை சாமிகள் என்றால் எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்ற ஆசைதான். நிறைவேறியதா? என்று யோசிக்க வேண்டாம் நமக்கோ வேலை முக்கியம். அதுவும் 2, 4 மாணவ, மாணவியருடன் கடுமையான போட்டி படிப்பில் இருந்த போது இந்த மாதிரி எல்லா கடவுளிடமும் சுலோகம் சொல்லி வேண்டிக் கொள்வது நல்லது தானே. இதற்காக நான் கடவுளுக்கு கல்கண்டு, திராட்சை, முந்திரி எல்லாம் கொடுத்தேன். (பிறகு நானே அதனை எடுத்து சாப்பிட்டு விட்டேன் என்பது வேறு விஷயம்) சரி, இப்படி வேண்டிக் கொண்டது நிறைவேறியதா என்று கேட்டால் சில முறை நடந்தது. சில முறை நடக்கவில்லை. நிறைவேறிய நேரங்களில் 'தேங்யூ' சொன்ன நான் நிறைவேறாத நேரங்களில் சற்று முகத்தினை தூக்கி வைத்துக் கொள்வேன். 'நீ எப்படியோ நான் சொன்னபடி சரியா நடந்துப்பேன்' என்று முந்திரி, திராட்சை, கல்கண்டினை கொடுத்து விடுவேன்.

    இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன்? காரணம் இருக்கிறது. இத்தனை சாமிகளை வேண்டிய பிறகும் சில சமயங்களில் நாம் வேண்டுவது நடக்கவில்லையே என்று ஒரு மூத்தவரிடம் பேசிய போது அவர் சொன்னது.....

    'உருவங்கள் வேறு படலாம். ஒளி ஒன்றுதான்'

    'உன் முயற்சிக்கு ஏற்ப உன் உழைப் பிற்கேற்ற பலனே கிடைக்கும்' என்றார்.

    'உழைப்புதான் பலன் என்றால் இத்தனை சாமிகள், பூஜைகள் எதற்கு?- இது எனது அடுத்த கேள்வியாக இருந்தது.

    மனிதனுடைய ஐம்புலன்களையும் எளிதில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாது. முடியாது என்பதனை விட மிகக் கடினம் என்று சொல்லலாம். 'வாய் ஜாங்கிரி இன்னும் வேணும்' என்று அடம் பிடிக்கும். இது போல பல உதாரணங்களைச் சொன்னார். உன் பரம்பரை வழக்கப்படி நீ பூஜை செய்கிறாய். அந்த தெய்வீக சூழல் மனதை அமைதிப்படுத்தும்.

    ஓர் உயர் சக்தி இருக்கின்றது என்பதனை உன்னுள் உணர்ந்து நீ பிடித்த விதத்தில் பிடித்த ரூபத்தில் வழிபாடு செய்யலாம். இந்த ரூப வழிபாடே அரூபத்திற்கு செல்லும் வழிதான். அவரவர் வயது பக்குவத்திற்கேற்ப மனதை பக்குவப்படுத்தும் வழி முறைகள்தான் இவை. உயர் சக்தி என்பது ஒளிரூபம் எனலாம். ஒளி என்கிற-அந்த இறை சக்திதான் பிரபஞ்சம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றது. அது உன்னுள்ளும் இருக்கின்றது. காலம் கூட கூட அந்த இறை சக்தியினை, உன் ஆன்மாவினை உன்னுள்ளே பார்க்கலாம். அதற்கான எல்.கே.ஜி. படிப்புதான் ஆரம்பிக்கப் படுகின்றது என்ற விளக்கம் கிடைத்தது.

    உன்னுள் இருக்கும் அதே ஒளியினை ஒவ்வொரு உயிர்களிடமும் நீ காண ஆரம்பிக்கும் போது நீ ஆரவாரமற்ற, மகிழ்ச்சியை அதாவது அமைதியான நிலையினை அடைவாய்.

    மேற்கூறிய அனைத்து தொகுப்பும் காஞ்சி மகா பெரியவர் பலர் மூலமாக எனக்கு அருளியது என்று நான் நம்புகின்றேன்.

    சரி, நாமும் நன்கு உழைக்க வேண்டும். இறையருளும் தேவை என்று ஒரு முடிவுக்கு வந்தாகி விட்டது. ஒரு முறை சத்குரு ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் பேசிய போது 'எல்லா தெய்வங்களையும் வணங்க வேண்டும். ஆனால் உனக்கென்று ஒரு வழி, வழிகாட்டும் தெய்வ ரூபம் இருக்கும். எந்த சுவிட்ச் போட்டால் எந்த பல்ப் எரியும் என்று ஒருவருக்குத் தெரிய வேண்டும் என்றார்.

    இத்தகு கருத்துக்கள் ஏதோ ஒரு விதத்தில் சேர்ந்து கொண்டே இருந்தன. அனைத்து ரூபங்களும் ஒன்றே என்று இறைவனைப் பற்றிய கருத்து ஆழ் மனதில் பதிந்தது.

    ரமண மகரிஷி அவர்களின் புத்தகங்களை படித்தல் மிகுந்த நன்மையினைத் தரும். மவுனம் என்பதன் அர்த்தம் புரியும். அமைதி என்பதன் உண்மையான விளக்கம் கிடைக்கும். குறிப்பாக ப்ளூடன்பரப் பிரண்டன் எழுதியுள்ளதைப் படிக்க வேண்டும். இவர் பிரிட்டன் நாட்டினை சேர்ந்தவர். தத்துவ ஞானி. இறை உணர்வாளர். தன் பத்திரிகை வேலையினைக் கூட துறந்து பல யோகிகள், ஞானிகளுடன் உரையாடியவர். கட்டுரைகள் எழுதியவர். காஞ்சி மகா பெரியவர் பற்றியும், ரமண மகரிஷி பற்றியும் பால் பிரண்டன் எழுதியதை படிப்பது ஒரு பாக்கியம்தான். நான் படித்தேன்.

    சேஷாத்ரி சுவாமிகள் ரமண மகரிஷியினை காத்து உலகிற்கு காட்டியவர். திருவண்ணாமலையில் மலையினை ஒளிப் பிழம்பினை கோடி சூர்ய பிரகாசமாக ஒளிர்வதனைக் காட்டியவர்.

    மகா பெரியவர், சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி. இவர்கள் மூவருமே சமீபத்திய காலத்தவர்கள். தெய்வீக பரிசுத்தம், தெய்வீக அழகு இவற்றினை அனைத்து சித்தர்கள், மகான்களின் முகத்தில் காண முடியும். அவர்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் இது போலத்தான் இருப்பார்கள் என்பது புரிய ஆரம்பித்தது.

    இவர்களையெல்லாம் பார்த்த பிறகு இவர்களது அறிவின், ஞானத்தின் முன்னால் நாமெல்லாம் ஒரு மண் அளவு கூட இல்லை என்று தோன்றியது. இந்த எண்ணங்கள் திருமணத்திற்குப் பிறகு அதிகம் கூடி யது. எனது கணவர் ஸ்ரீபால் அவர்களும் ஆன்மீகம், சித்தர்கள், ஞானி கள் இவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆக எங்களின் ஆன்மீகப் பயணம் இவ்வழியிலேயே தொடர்ந்தது.

    பல நல்ல நினைவுகள் இந்த பயணத்தினால் இன்றும் பசுமையாய் மனதில் இருக்கின்றது. ஒரே ஒரு கவனம் தேவை. இந்த கால சூழ்நிலையில் நம் முன்னோர்கள் அறிந்த பல காலமாக அறிமுகப்படுத்திய குருமார்களை சென்று சேருவது நன்மை பயக்கும்.

    அடுத்து யோகா, தியானம் இவற்றினை முன்பெல்லாம் அதிக பிரபலமாக இல்லாவிட்டாலும் பழக்கத்தில் இருந்தது. யோகா எந்த அளவு நன்மை பயக்கும் என்பதனை பழகியவர்கள் மட்டுமே நன்கு அறிவார்கள். இன்று யோகா மையங்கள் நிறைய வந்துள்ளன. குழந்தைகளுக்கும் யோகா பயிற்சி தருவதால் அவர்களது பிடிவாதம். கோபம், தேவையற்ற கெட்ட பழக்கங்கள் நீங்கும். இன்று பல மருத்துவ மனைகள் கூட யோகா பயிற்சி யினை நடைமுறை படுத்துகின்றன.

    * அதிக பேச்சு குறையும்.

    * அதிக உணவு, நொறுக்குதீனி குறையும்.

    * மனம்-மனம் போன போக்கில் குதிக்காது.

    தினமும் 20 நிமிடங்களாவது யோகா செய்வது ஒருவரின் வாழ்வினை நன்கு உயர்த்தும்.

    'அன்பே' உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஆயுதம்!

    யோகா பயில்பவர்களுக்கு தியானம் எளிதில் கை கூடும். உடல் அசையாது ஒரு நிமிடம் கை, கால் மடக்கி உட்கார்ந்து பாருங்கள். மனம் அலைபாயாது. இருந்து பாருங்கள். தியானத்தின் முக்கியத்துவம் அப்போதுதான் புரியும்.

    சரி! இதெல்லாம் செய்து என்ன கிடைக்கும்? சொத்து, சுகங்கள் கூட வேண்டாம். நிம்மதியாவது கிடைக்குமா? என்று பலர் கேட்பது காதில் விழுகின்றது.

    அப்படியெல்லாம் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். சோதனைகள் கொட்டலாம். வாழ்க்கை உலுக்கி எடுக்கலாம். ஆனால் இதனைத் தாங்கி, தாண்டி வாழ்வினைத் தொடரும் ஆன்ம பலம் கிடைக்கும். இந்த ஆன்ம பலம் கிடைக்கவும், ஐம்புலன்களை கட்டுப்படுத்தவும் கண்டிப்பாய் ஒரு குருவின் வழிகாட்டுதல் அவசியமாகின்றது. ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்களின் முதல் குரு, முதல் தெய்வம் அவரவரது தாய்-தந்தையர்தான்.

    -தொடரும்

    • டைரக்டர் முதல் காட்சியை விவரித்தார். முதல் சீனே ரொமான்ஸ் சீன்... அச்சச்சோ...
    • எவ்வளவு பெரிய ஸ்டார்... அவர் நான் இருக்கும் இடத்துக்கு வந்து என்னை வாழ்த்தியதை என்னால் நம்பவே முடியவில்லை.

    ராஜமுந்திரியில் உள்ள ஓட்டல்...

    ஒரே தளத்தில் உள்ள அறைகளில் தான் நானும் ரஜினிசாரும் தங்கி இருந்தோம். அவர் இருக்கிறார் என்பதாலேயே எனக்கு அறையை விட்டு வெளியே வரவே ஏதோ ஒருவிதமான தயக்கம் இருந்தது.

    அறையிலேயே அடைந்து கிடந்தேன். வெளியே வரவேயில்லை. அம்மாவும் கூட வெளியே சென்று ரஜினிசாரை சந்திக்க தயங்கினார்.

    குழந்தையாக அவருடன் ஜாலியாக விளையாடி இருக்கிறேன். ஆனாலும் பருவம்... வெட்கம்... தயக்கம்... தடுத்தது. சும்மாவா பாடினார்கள் 'பார்த்த ஞாபகம் இல்லையோ... பருவ நாடகம் தொல்லையோ" என்று.

    காலையில் ரெடியாகி லொகேஷனுக்கு புறப்பட்டேன். மனசு பக்... பக்... என்று படபடத்தது. அதையும் தாண்டி ஒரு சந்தோசம். அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    ஷூட்டிங் ஸ்பாட்...

    சற்று தூரத்தில் ரஜினிசார்.

    ஏராளமான ரசிகர்கள் கூட்டம் திரண்டிருந்தது. அவர்களின் ஆரவாரமும், சத்தமும் அதிர்ந்தது. எல்லோரும் ஒரே குரலில் 'மீனா... மீனா...' என்று உரக்க கத்தினார்கள்.

    அடேய்! அங்கே சூப்பர் ஸ்டாரே நிக்குறார்டா... என்று என் மனம் சொல்லியது. அது ரசிகர்களுக்கு கேட்கவா போகிறது. கேட்டாலும் ஏற்கும் மன நிலையில் அவர்கள் இல்லை.

    தெலுங்கில் சீதாராமையாவின் பேத்தி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நேரம் அது. அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அங்கு என்னை பார்த்ததும் அவர்களுக்கு உற்சாகம்.

    ரஜினிசார் பக்கத்தில் சென்ற போதும் அவரிடம் ஒரு ஹலோ சார்.... அல்லது குட்மானிங்... ம்கூம்... எதுவும் சொல்ல முடியவில்லை. அவரை பார்த்து சிரித்தேன். நகர்ந்தேன். அவ்வளவுதான்.

    டைரக்டர் முதல் காட்சியை விவரித்தார். முதல் சீனே ரொமான்ஸ் சீன்... அச்சச்சோ...

    நான் அந்தரத்தில் பூப்பந்தல் மீது நிற்பேன் கீழிருந்து என் காலில் பூவால் வருடி கிச்சு... கிச்சு... மூட்டுவார் ரஜினி சார். நிஜமாகவே எனக்கு கூச்சமும், வெட்கமும் கலந்து ஒரு மாதிரி ஆகிவிட்டது.

    அப்புறம் மேலிருந்து பூக்களை அவர் மீது கொட்டுவேன். அவர் அலேக்காக என்னை தூக்கி விடுவார்.

    வெட்கத்தால் கையால் ஒரு கண்ணை மறைத்துக் கொண்டு ஒற்றை கண்ணால் அவரை பார்ப்பேன். அவர் என்னை பார்த்த தும் இன்னொரு கையால் மறு கண்ணை மூடிக்கொண்டு அடுத்த கண்ணால் பார்ப்பேன்.

    இந்த காட்சிகளிலும் வெட்கம்... வெட்கம்... அப்படி ஒரு வெட்கம்...

    மதியம் சாப்பாட்டு இடைவேளை வந்தது. அவராகத்தான் பேச்சை தொடங்கினார்.

    "என்னதான் 2 பேரும் ஒன்றாக நடித்து இருந்தாலும் ஹீரோயின் ஆனதும் ஒரு மாதிரி இருக்குல்ல" என்றார்.

    நானும் "ஆமாம்" என்றேன்.

    இப்படித்தான் ஒவ்வொரு நாளும்...

    இருவருமே ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வதோடு சரி. சகஜ நிலைக்கு வரவே சில நாட்கள் ஆகி விட்டது.

    அப்போது ஒருநாள் லீவு கிடைத்தது. அந்த விடுமுறையிலும் ஓய்வு எடுக்க நான் விரும்பவில்லை. வேறு ஒரு தெலுங்கு படத்தில் சில காட்சிகள் நடித்துக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே ஐதராபாத்துக்கு புறப்பட்டேன்.

    நான் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்பியதை பார்த்ததும் 'என்ன ஷூட்டிங்' முடிந்ததா? கிளம்பிட்டியா? என்றார் ரஜினி சார். நான் இல்லை சார். ஒருநாள்தான். தெலுங்கு படம் ஒன்றில் சில காட்சிகள் பாக்கியிருக்கு. எனவே ஐதராபாத் செல்கிறேன் என்றதும் 'பிசி ஆயிட்டேன்னு சொல்லு' என்றார்.

    அதன் பிறகு ராஜமுந்திரியில் ஷூட்டிங் முடிந்து எல்லோரும் கிளம்பினோம். நான், ரஜினி சார், எம்.என்.நம்பியார் சார் எல்லோரும் ஆளுக்கொரு காரில் ரெயில்வே ஸ்டேசனுக்கு சென்றோம்.

    நாங்கள் சென்றதை கேள்விப்பட்டு ரெயில்வே நிலையத்திலும் பெரிய கூட்டம் திரண்டு இருந்தது. நாங்கள் வெளியே வராமல் காருக்குள்ளேயே இருந்தோம்.

    ரெயில் சற்று நேரத்தில் வந்து விடும் வாருங்கள் என்றார்கள்.

    நான் 'கூட்டம் அதிகமாக இருக்கிறது. ரெயில் வரட்டும். வந்தபின் வருகிறேன்' என்றேன்.

    சரி என்று சென்றவர்கள். சிறிது நேரத்தில் மீண்டும் வந்தார்கள். 'மேடம் ரெயில் பக்கத்தில் வந்து விட்டது' என்றார்கள். அவர்களுக்கு எங்கே ரெயிலை பிடிக்க முடியாதோ என்ற கவலை. எனக்கோ ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து பயம்.

    கடைசியில் நான் நினைத்த மாதிரியே நடந்தது. ரெயில் வந்து நிற்பதற்குள் காரை விட்டு இறங்கியதால் கூட்டம் மொய்த்து விட்டது. கூட்டத்துக்குள் சிக்கி கொண்ட என்னால் அங்கிருந்து ஸ்டேசனுக்குள் நகர முடியவில்லை. பாதுகாப்புக்காக வந்த வர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டத்தில் சிக்கி தடுமாறி எப்படி ஸ்டேசனுக்குள் சென்றேன் என்றே தெரியவில்லை. ரஜினிசார் உள்பட யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆளுக்கொரு பக்கம் மாட்டிக் கொண்டோம். லக்கேஜுகளையும் எடுக்க முடியவில்லை. தப்பித்தால் போதும் என்ற நிலை.

    ஒரு வழியாக ரெயிலுக்குள் ஏறியதும் 'ஷட்டைரை' மூடிவிட்டு அமர்ந்த பிறகுதான் நிம்மதி. டிரெஸ்செல்லாம் கச...கச என்றாகி விட்டது. வியர்வை மழையில் குளித்தது போல் இருந்தது.

    உதவியாளர்கள் லக்கேஜுகளை ஏதாவது ஒரு பெட்டிக்குள் போட்டு ஒரு வழியாக கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள்.

    ரெயில் புறப்பட்ட பிறகுதான் ஷட்டரை திறந்தேன். ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. எல்லோரும் ஏறினார்களா? யார்-யார் எங்கே இருக்கிறார்கள்? என்று எதுவும் தெரியவில்லை.

    சுமார் 15 நிமிடங்கள் ஆகியிருக்கும்...

    திடீரென்று ரஜினி சார் நான் இருந்த பெட்டிக்குள் வந்து என் அருகில் நின்றார்.

    அவரை பார்த்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சி. வாங்க சார் என்றேன். அவர் என்னை பார்த்து பிரமித்தவராக, 'ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா... நீ இவ்வளவு பெரிய ஆளாயிட்டியா? எவ்வளவு ரசிகர்கள் கூட்டம்..... உன்னை பார்த்து ரொம்ப பெருமையா இருக்கும்மா. இன்னும் நிறைய பேரும் புகழும் பெற வேண்டும் 'காட் பிளஸ் யூ...' என்று வாழ்த்தினார்.

    அதை கேட்டு நெகிழ்ந்த என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. 'ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்' என்றேன்.

    எவ்வளவு பெரிய ஸ்டார்... அவர் நான் இருக்கும் இடத்துக்கு வந்து என்னை வாழ்த்தியதை என்னால் நம்பவே முடியவில்லை.

    அவர்தான் ரஜினி என்ற மாமனிதர். அவரை போன்றவர்க ளின் வாழ்த்தும், ஆசீர்வாதமும் தான் என்னை வழி நடத்து கின்றன.

    மீண்டும் ஒரு புதிய தகவலுடன் அடுத்த வாரம் வருகிறேன்....

    (தொடரும்)

    • அக்டோபர் 9-ந்தேதியை உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் உள்ளன.

    இன்றைய நாளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகின் மூலையில் எங்கு இருந்தாலும் இணைய செயலிகளின் வழியே சில நொடிகளில் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இதுவே சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தகவலை உறவினருக்கு தெரிவிக்க வேண்டும் எனில் கடிதம் எழுதி தபாலில் அனுப்பி வைக்கப்படும். இரண்டு, மூன்று நாட்கள் கழித்தே அந்த செய்தி உரியவரின் கைகளில் சேரும். இப்படியாக நட்பு, காதல், பாசம், கோபம் என அனைத்துவிதமான உணர்வுகளும் அஞ்சல் கடிதங்கள் வழியே பகிர்ந்து கொள்ளப்பட்டன.

    சுவிட்சர்லாந்தில் உள்ள போர்ன் நகரில் 1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1969-ம் ஆண்டு முதல் ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ந் தேதியை உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. அஞ்சல் சேவையின் முக்கியத்துவத்தையும், மக்களின் அன்றாட வாழ்வில் அஞ்சல் துறையின் பங்களிப்பு பற்றியும் பொதுமக்களிடம் எடுத்துரைப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

     உலக அளவில் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்களை கொண்ட நாடு இந்தியா ஆகும். இ்ந்தியாவில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் உள்ளன. 1764-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 89 சதவீதம் தபால் நிலையங்கள் கிராமங்களில் உள்ளன. தபால் துறைகளில் அரசு காப்பீடு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள் என மக்களுக்கு பயன்படும் வகையில் நிறைய வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை இந்திய அஞ்சல் துறை எடுத்து வருகிறது.

    அஞ்சல் துறையில் பலவகையான அஞ்சல்களும் குழப்பமின்றி பிரிக்கப்பட்டு, விரைவாக அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குறியீட்டு எண் திட்டம் முதன் முதலில் 1972ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6 இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    அதில் முதல் இலக்கம் மண்டலத்தையும், இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தையும், மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தையும் குறிக்கிறது. கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் தபால் நிலையத்தை குறிக்கும்.

    தற்போது ஒரு சில அரசு துறைகளின் தகவல்கள் மற்றும் அறிவிக்கைகள், தனிநபர்களின் பார்சல்கள் மட்டுமே தபால் துறையின் மூலம் அனுப்பப்படுகின்றன. எழுதுகோலை கையில் கொண்டு கடிதங்கள் எழுதி தபால் மூலம் அனுப்புவதின் அனுபவத்தை உணர்ந்த தலைமுறையினர் இளைஞர்களை கடிதங்கள் எழுதுமாறு எடுத்துரைக்க வேண்டும். இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறுவார்கள். இன்றைய தகவல்களும் நாளைய சமூதாயத்தினருக்கு வரலாறாக மாறலாம். எனவே மீண்டும் நம்பிக்கையுடன் கடிதங்கள் எழுதுவோம்.

    • பிள்ளையாரை வணங்கி ஆரம்பித்து குரங்கான ஆஞ்சநேயரை வணங்கி நிறைவு செய்ய வேண்டும்.
    • இத்தனை பெருமைகளுக்கு உரியவராக இருந்த போதிலும் ஆஞ்சநேயர் ஒரு துளி கூட கர்வமே இல்லாதவர்.

    பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல...

    பிள்ளையாரை பிடித்து குரங்கால் முடித்த கதை.

    சொந்த பெரியப்பா மகனான சொக்கார முறை தம்பி ஒருவன் புதிய கார் வாங்க செல்வதற்காக தன்னோடு துணைக்கு வரும்படி அழைத்தான்.

    முக்கியமான வேலை இருப்பதால் காரணத்தை அவனோடு அன்பாய் சொன்னேன்.

    என்ன கார் வாங்க போகிறாய் என்றேன்.

    யண்ணே! ஸ்விப்ட் வாங்க போறேன். நம்மூரு ரோட்டுக்கு அந்த வண்டி தான் சரிப்படுமுண்ணே என்றான்.

    இருவரும் அவரவர் காரியங்களுக்கு சென்று சாயங்காலம் வீடு வந்தோம்.

    அய்யா கோவில்முன் புதிய காரை கொண்டு வந்து நிறுத்தி சந்தனம் தெளித்து திரு நாமம் பூசி பூஜை செய்து கொண்டிருந்தான் தம்பி.

    கிட்டே சென்று பார்த்தால் கூண்டாய் நிறுவனத்து கார் அது.

    என்ன தம்பி!! ஸ்விப்ட் வாங்குவதாக சொன்னாயே.. கூண்டாய் வாங்கியிருக்காயே என்றேன்.

    அது வந்துண்ணே!! போகும் வழியில் கூண்டாய் ஷோரூம் போயிட்டு போவோமா என்றாள் உங்க கொழுந்தியார்.

    கூண்டாய் ஷோரூம் போனதும் இரண்டு பேருக்குமே ஐ20 புடிச்சிடுச்சு. அதான் ஸ்விப்ட் வாங்கல. பிள்ளையாரை புடிக்க போய் கொரங்கா முடிஞ்ச கதை மாதிரி ஆயிடுச்சுண்ணே என்றான்.

    நாம் ஏதோ ஒன்றை செய்ய போய் அது ஏதோ ஒன்றாய் முடிந்து விடுவதை தான் பிள்ளையாரை பிடிக்க போய் கொரங்காய் ஆயிடுச்சுன்னு இந்த பழமொழியை உதாரணமாக சொல்வோம்.

    இந்த அர்த்தம் சரிதானா? தேடி பாத்த போது இந்த பழமொழிக்கு கிடைத்த நிஜ அர்த்தம் உங்களது பார்வைக்கு..

    எந்த ஒரு நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

    அதே போல் அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெற செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வணங்கி செயலை ஆரம்பித்து நினைத்த காரியம் வெற்றிகரமாய் நிறைவேறியதும் மாருதிக்கு மங்களம் பாடி துதித்து நினைத்த செயலை மங்களகரமாய் நிறைவு செய்ய வேண்டும்.

    பிள்ளையாரை வணங்கி ஆரம்பித்து குரங்கான ஆஞ்சநேயரை வணங்கி நிறைவு செய்ய வேண்டும் என்பதை பிள்ளையாரை பிடித்து குரங்கில் முடிந்தது என பெரியவர்கள் சிலேடையாக, சொலவடையாக சொன்னார்கள்.

    அதை பேச்சு வழக்கில் திரித்து "பிள்ளையாரை பிடிக்க போய் குரங்காய் முடிஞ்ச கதை" ன்னு நக்கலாக அர்த்தம் திரித்து நாம் சொல்கிறோம்.

    பிள்ளையாரை பிடித்துக் கொள்: நன்கு வேண்டிக் கொள். எல்லா காரியமும் நல்லபடியே நடக்கும்!" எத்தனை முறை வீட்டு பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள் இந்த வாக்கியத்தை.

    பரமசிவனார் திரிபுரம் எனும் முப்புரத்தை எரிக்க செல்லும் போது பிள்ளையாரை வழிபட மறந்து கிளம்ப சிவனார் பட்ட துன்பங்களை கதையாய் கேட்டிருப்பீர்கள் அனைவரும்.

    "முப்புரம் எரி செய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா "

    என்பது திருப்புகழில் கணபதி துதியில் அருணகிரியார் வாக்கு .

    சிவனார் முப்புரம் எரிக்க ஏறிய தேரின் அச்சை முறித்து தடையை ஏற்படுத்திய பிள்ளையாரை, சிவன் நினைந்து வழிபட, பிள்ளையார், சிவனாரின் காரிய விக்னங்களை விலக்கினார்.

    சிவனே பிள்ளையாரை வழிபடாமல் அந்த பாடுபட்டார் என்றால் மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம் ?

    எனவே சிறிய செயல் என்றாலும் பெரிய செயல் என்றாலும் கணபதியை வழிபட்டு தான் துவங்க வேண்டும் என்பது பெரியவர்கள் நமக்கு சொல்லிய தீர்க்கமான அறிவுரை.

    எந்த காரியத்தை செய்யும் முன்பும் , செயல்கள் தடங்கல் இல்லாமல் நடக்க, முழு முதல் கடவுள் விநாயகரை நினைத்து செய்ய தொடங்குவது இந்துக்களின் வழி வழி வந்த பழக்கம்.

    இதெல்லாம் சரி! அதென்ன குரங்காய் முடியும் சமாச்சாரம்.

    குரங்காய் முடிவதற்கு ஏன் பிள்ளையாரை வழிபட வேண்டும்?

    ஆஞ்சநேயர் ஒரு வானரம் , வாயு புத்ரன், சுக்ரீவனிடத்தில் மந்திரியாக இருந்தவர். சொல்லின் செல்வர், புத்தி சாதுர்யம் மிக்கவர். ஆஞ்சநேயர் மிகுந்த தைரியசாலி, அபார தேக பலம் உள்ளவர், ஜெயிக்க முடியாதவர், வாக்கு வன்மை பொருந்தியவர்.

    அன்னை சீதா பிராட்டியும், அண்ணல் ராமபிரானும் மறுபடியும் வாழ்வில் ஒன்று சேர காரணமாக இருந்தவர்.

    இத்தனை பெருமைகளுக்கு உரியவராக இருந்த போதிலும் ஆஞ்சநேயர் ஒரு துளி கூட கர்வமே இல்லாதவர்.

    இன்றளவும் எங்கெல்லாம் ராமாயணம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இரு கை கூப்பி கண்களில் ஆனந்தப் பெருக்கோடு சூட்சும ரூபத்தில் எழுந்தருளி ராமாயண பாராயணத்தை செவிமடுப்பவர் சிரஞ்சீவி ஸ்ரீஅனுமன்.

    தன்னடக்கம் - அதுதான் ஆஞ்சநேயரின் பெரும் சிறப்பு.

    ராமாயண மகா காவியத்தில் ஆஞ்சநேயரின் பங்கு ரொம்ப பெரியது வார்த்தையில் அடக்க முடியாதது.

    ஆஞ்சநேயர் செய்த செயல் யாவும் வெற்றியில் முடிந்தது. வெற்றியின் மறு பெயர் ஆஞ்சநேயர் எனும் குரங்கர்.

    பிள்ளையாரை வணங்கி ஆரம்பித்து குரங்கரான ஆஞ்சநேயர் எனும் குரங்கர் அருளால் வெற்றியாய் முடிந்த காரியங்களை குரங்கால் முடிந்தது என்று சொல்வார்கள்.

    செயல் ஆரம்பிக்கும் ஆதியில் தொடங்கி, முடிவான அந்தத்தில் நிறையும் தத்துவம் தான் ஆதியந்த சுவாமி.

    யார் இந்த ஆதியந்த சுவாமி??

    ஆதியந்த பரம்பொருள் என்றால் பரம்பொருளான பரமசிவனை குறிப்பதாக தான் நாம் நினைப்போம்.

    அம்மையும், அப்பனும் இணைந்து நின்ற கோலத்தை அர்த்தநாரீஸ்வரர் என அழைப்பது போல் பிள்ளையார் + ஆஞ்சநேயர் இருவரும் இணைந்து காட்சி கொடுக்கும் கோலத்தை ஆதியந்த சுவாமி என அழைப்பார்கள்.

    பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே பிரம்மச்சாரிகள்..

    பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே விலங்கின் ரூபம் கொண்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே சமநிலை மூர்த்திகள். யானையும் குரங்கும் நிலத்துக்கு சமநிலையாகவே நடக்கும். ஒரு போதும் நிலத்தை எதிர்த்து நிமிர்ந்து செங்குத்தாய் நடக்காது.

    அதிலும் குரங்கானது, கைகள் இருந்தும் கூட, நிலத்தை மீறி "தான்" என்று எழுந்து நடக்காது.

    அதே போல் ஆஞ்சநேயரும், பிள்ளையார் இருவரும் ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் ஆவார்கள்.

    மகாதேவரான சிவபெருமான் உட்பட அனைத்து தேவதைகளும் நவக்கிரகங்கள் என்னும் கோள்களின் ஆளுமைக்கு கட்டுபட்டவர்கள் அல்லது அவர்களின் பார்வையால் பீடிக்கப்பட்டவர்களே.

    நவக்கிரகங்களால் கட்டுபடுத்த, பீடிக்கப்படாத தெய்வங்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவர் மட்டுமே.

    எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!

    பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு. பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் என்ற வடிவில் நாம் இருவரையும் வணங்கியிருப்போம்.

    ஆதியில் சுபமாய் தொடங்கி, அந்தத்தில் மங்களமாய் நிறையும் தத்துவம் தான் "பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை."

    எதையோ நினைத்து ஆரம்பித்து எப்படியோ கோணல் மாணலாய் முடிந்த செயலுக்கு பிள்ளையார் பிடிக்க போய், குரங்காய் முடிஞ்சி போச்சின்னு சலிப்பாக தவறாக சொல்லாதீங்க....

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    • 50 வயதைக் கடந்த 60 முதல் 85 சதவீதம் பேருக்கு, முதுகுவலி ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுவது மிகுந்த வருத்தம் தான்.
    • ‘டிஸ்க்’ எனும் சவ்வுப்பகுதி வலுவிழந்து பசைத்தன்மையற்று பல்வேறு துன்பங்களை உண்டாக்கும்.

    மூட்டுவலியும், முதுகு வலியும் வயோதிகத்தில் மிகப்பெரிய சவால்கள். இந்த வலிகளுக்காக மாத்திரைகளை எடுத்து சளைத்துப் போன உடலும், மனமும் ஒரு புறமிருக்க, மறுபுறம் களிம்புகளை தடவி சளைத்துப் போன மூட்டுக்கள் அடையும் வேதனையை வெறும் வார்த்தைகளில் விளக்க முடியாது. இறுதியில் மன உறுதி மட்டுமே மூட்டு வலிக்கு நிவாரணி என்று, முதியோர் கூட்டம் முணுமுணுத்து வாழக்கையை நகர்த்தி கொண்டு செல்வது பலரும் அறிந்திராத உண்மை.

    முதுமையில் மூட்டுவலியைப் போல அதிக தொந்தரவுகளை உண்டாக்குவது முதுகுவலியும் தான். 50 வயதைக் கடந்து முதுமையில் ஏற்படும் முதுகுவலி தற்போதைய சூழலில் 30 வயதிலே உண்டாகிவிடுகிறது. 50 வயதைக் கடந்த 60 முதல் 85 சதவீதம் பேருக்கு, முதுகுவலி ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுவது மிகுந்த வருத்தம் தான்.

    பொதுவாக முதுகுத் தண்டுவட எலும்புகள் மற்றும் சவ்வின் தேய்மானத்தால் உண்டாகக்கூடியது இந்த முதுகுவலி. அதுமட்டுமின்றி முதுகு தண்டுவடத்தில் உண்டாகும் பல்வேறு நோய்நிலைகள் இந்த முதுகு வலிக்கு காரணமாக உள்ளன. சாதாரணமாக வயது மூப்பில் தோன்றும் முதுகு வலி தானே என்று இதனை சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

    ஏனெனில் எலும்பு சவ்வு தேய்மானம் என்பது மட்டுமின்றி முதுமையில் முதுகுத் தண்டுப்பகுதியில் ஏற்படும் சாதாரண கட்டிகளும், புற்றுநோய்க்கட்டிகளும், கிருமித்தொற்றுக்களும், நரம்பின் அழுத்தம், சவ்வு விலகல், சவ்வு அழுத்தம் மற்றும் எலும்பு முறிவும் கூட காரணமாக இருப்பதால் முதுமையில் முதுகுவலி மீது அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தகைய நோய்நிலைகளை கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்வது மிக மிக அவசியமானது.

    முதுமையில் முதுகுத் தண்டு எலும்புகளுக்கு இடையிடையே காணப்படும் 'டிஸ்க்' எனும் சவ்வுப்பகுதி வலுவிழந்து பசைத்தன்மையற்று பல்வேறு துன்பங்களை உண்டாக்கும். இது ஆண்களைக் காட்டிலும் பெண்களை அதிகம் பாதிக்ககூடியது. ஏனெனில் கர்ப்பிணியாக இருக்கும் போதும், பிரசவ காலத்தின் போதும் இயல்பான முதுகுத் தண்டுவட வளைவுகள் மாறுபடுவது தான் இதற்கு காரணமாகிறது.

    கழுத்து முதல் அடி முதுகு வரையிலும் 33 தண்டுவட எலும்புகளைக் கொண்டது முதுகுத் தண்டுப் பகுதி. இந்த எலும்புகளில், வயது மூப்பினை தொடர்ந்து உண்டாகும் மாறுதல்கள் பல்வேறு நோய்நிலைகளை உண்டாக்கி வெவ்வேறு பகுதிகளில் வலி, மரமரத்தல் போன்ற பல்வேறு குறிகுணங்களை ஏற்படுத்தி முதுமையை கூடுதல் சிரமம் உள்ளதாக மாற்றும். எத்தனை வலி நிவாரணி மருந்துகள், தசை தளர்த்தி மாத்திரைகள் பயன்படுத்தினாலும் முன்னேற்றம் கிடைப்பது என்பது முதுமையில் அரிது. இந்நிலையில் பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுவது பயனுடையதாக இருக்கும்.

    நோய்களுக்கு காரணமாக சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் கபவாதத்தின் மாறுபாட்டால் முதுமையில் எலும்பு தேய்மானம் உண்டாகி முதுகு வலி உண்டாவதாக சொல்லப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் கூறும் 4448 வியாதிகளில் வாதம் பாதிப்படைந்து 80 வாத நோய்கள் உண்டாவதாக சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய வாத நோய்களில் ஒரு வகையே இந்த முதுகுத் தண்டுவலி.

    ஆகவே வாதம் குறைக்கும் மருந்துகளை பயன்படுத்துவது மூட்டுவலியில் மட்டுமல்ல முதுகுவலியில் கூட நல்ல பலன் தரும். எளிமையாக வாதத்தைக் குறைக்க கடுக்காய் பொடியை இரவு வேளைகளில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது சிறந்தது. விளக்கெண்ணெய் வாதம் தணிக்க இயற்கை தந்த நன்கொடை எனலாம்.வாரம் ஒருமுறை இரவில் வெந்நீரில் கலந்து உட்கொள்வதும் முதுகு வலியை வரவொட்டாமல் தடுக்கும்.

    மேலும் எளிய சித்த மருத்துவ மூலிகைகளான அரத்தை, நொச்சி, பூண்டு, இஞ்சி, எருக்கு இலை ஆகிய மூலிகைகள் முதுகுத்தண்டு வீக்கம் மற்றும் வலியில் நல்ல பலன் தருவதாக உள்ளன. 'வாதமே' மூட்டுவலி மற்றும் முதுகு வலிக்கு முதன்மைக் காரணம் என்பதால் மூட்டுவலிக்கு பயன்படும் அனைத்து மூலிகைகளும் முதுகுத்தண்டு வலிக்கும் பலனளிக்கும்.

    அரத்தையில் உள்ள 'டைஅரைல் ஹெப்ட னாய்டு' எனும் வேதிப்பொருள் எலும்பு மூட்டுக்களில் உள்ள வீக்கங்களை குறைத்து வலியை போக்கும் தன்மை உடையதாக உள்ளன. இதனை சிறந்த வாதம் போக்கும் மூலிகையாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்த மருந்தான அரத்தை சூரணத்தை எடுத்துக்கொண்டால் மருத்துவ பயன்களை அடையலாம்.

    அதே போல் நொச்சி இலையில் உள்ள 'லிக்னேன்' வேதிப்பொருட்கள் வீக்கத்தை குறைத்து வலியை போக்கும். நொச்சி இலையுடன், மிளகு, மஞ்சள், பூண்டு சேர்த்து கசாயமிட்டு குடித்து வர முதுகுத்தண்டு வலியில் நிவாரணம் கிடைக்கும். நொச்சி இலையை வெந்நீரில் கொதிக்க வைத்து குளிப்பதும் வலியைக் குறைக்க உதவும்.

    முதுமையில் மட்டுமல்லாது, இளம் வயதினரும் முதுகுவலி வராமல் காத்துக்கொள்ள உதவும். எளிய அஞ்சறைப்பெட்டி கடைசரக்கு 'பூண்டு'. தினசரி 4 பல் பூண்டினை பாலில் வேக வைத்து எடுத்துக்கொள்வது முதுகு வலிக்கு நல்லது. சித்த மருந்தான பூண்டு லேகியமும் வாதத்தைக் குறைத்து வலியைக் குறைக்கும். பூண்டில் உள்ள 'டை அல்லில் சல்பைடு' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவத்தன்மைக்கு காரணமாக உள்ளதாக நவீன அறிவியல் கூறுவது சிறப்பு.

    இஞ்சியில் உள்ள ஜின்ஜெரோன், ஷாகோல் போன்ற வேதிப்பொருட்கள் வீக்கத்தை உண்டாக்கும் 'காக்ஸ்' நொதிகளை தடுப்பதன் மூலமும், இன்டெர்லூக்கின் போன்ற வலிக்கு காரணமாகும் வேதிப்பொருட்கள் உடலில் உற்பத்தியாவதை தடுப்பதன் மூலமும், வீக்கத்தைக் குறைத்து வலியை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக, இஞ்சி சேர்ந்த உள் மருந்துகளும், வெளி மருந்துகளும் முதுகு வலிக்கு முடிவு கட்டுவதாக உள்ளன.

    சித்த மருத்துவ உள் மருந்துகளோடு, வெளிப்பிரயோக மருந்துகளை பயன்படுத்துவதும் நல்ல பலன் தரும். இயற்கை தசை தளர்த்தியாக எருக்கு இலை உதவும். நல்லெண்ணையை சூடேற்றி அதில் எருக்கு இலையை தோய்த்து ஒற்றடமிட தசை வலி குறையும்.

    கால்சியம் குறைபாடும், வைட்டமின் டி-3 குறைபாடும் முதுமையில் முதுகு எலும்புகளின் தேய்மானத்திற்கும், முதுகு வலிக்கும் முக்கிய காரணமாக உள்ளன. பொதுவாகவே அதற்கான சேர்க்கை மருந்துகளை (supplements) எடுத்துக்கொள்வது தற்போதைய கால கட்டத்தில் வாடிக்கையாகிவிட்டது. உண்மையில் இத்தகைய சேர்க்கை மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்வது உகந்தது அல்ல என்று சமீபத்திய ஆய்வுத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

    மாறாக கால்சியம் சத்து அதிகம் உள்ள முருங்கை, பிரண்டை இவற்றை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். உளுந்து இடுப்புக்கு வலிமை தரும் என்பதை 'இடுப்புக்கு அடுபலமாம்' என்று சித்த மருத்துவம் வியந்து கூறுகின்றது. எனவே பால் சேர்த்த உளுந்து கஞ்சியினை உணவுக்கு பதில் எடுத்துக் கொள்வது இடுப்பு எலும்புகளுக்கு வன்மை தரும்.

    முதுமையில் வைட்டமின்-டி-3 குறைபாட்டால் எலும்பு தேய்மானத்துடன் தசை வலியும் ஏற்படும். வாரம் இரண்டு மூன்று நாட்கள், 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வெயிலில் நடைப்பயிற்சி செய்வதே இயற்கை யாக வைட்டமின் டி-3 கிடைக்கும் எளிய வழிமுறை.

    வெளிநாடுகளில் 'சூரிய குளியல்' (சன் பாத்) எனும் முறை மிகப்பிரபலமானது. இது வைட்டமின் டி-3 கிடைக்கும் எளிய வழிமுறை. இந்த சூரிய குளியலை பாராட்டி வியந்து பார்க்கும் நம்மவர்கள், நமது 'சூரிய வணக்கம்' செய்யும் முறையை மறந்தவர்கள் என்பது தான் உண்மை. ஆக முதுமையில் வெயிலில் நடைப்பயிற்சியும், சூரிய வணக்கமும் செய்வது உடலுக்கு நன்மை தரும்.

    முக்கியமாக முதுகுத்தண்டு வலியில் ஓய்வு மிக மிக அவசியம். சமமான தரையில் அல்லது மெத்தையில் படுப்பது அதற்கு நலம் பயக்கும். அதே போல் முன்பக்கமாக உடலை அதிகம் வளைக்காமல், முதுகு பக்கமாக (பின்பக்கம்) வளைத்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

    மேடு பள்ளமான சாலையில் நடைப்பயிற்சி செய்வதும், பயணம் மேற்கொள்வதும் வலியை அதிகமாக்கும். எனவே வலி அதிகமுள்ள போது அவற்றை தவிர்ப்பது நல்லது. அதிக உடல் எடையும், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருத்தலும் முதுகு வலியை அதிகமாக்கும் முக்கிய காரணிகள்.

    சர்க்கரை சத்துள்ள உணவுப்பொருட்களும், நிறைவுற்ற கொழுப்பு அதிகம் கொண்ட பாமாயில் போன்றவைகளும், டிரான்ஸ்பேட் அதிகம் கொண்ட அடைக்கப்பட்ட உணவுகளும், மோனோசோடியம் குளுட்டமேட் எனும் செயற்கை சுவையூட்டி கொண்ட உணவுகளும் குளுட்டன் கொண்ட கோதுமை உணவுகளும், கேசீன் கொண்ட பாலும் பால் பொருட்களும், அஸ்பார்டேம் எனும் செயற்கை இனிப்பு சேரும் உணவுகளும், மது, புகை போன்ற பழக்கவழக்கங்களும் மூட்டுவலி மற்றும் முதுகு வலிக்கான வீக்கத்தை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே முதுமையில் மட்டுமல்லாது இளமையிலும் அவற்றை தவிர்ப்பது உடலுக்கு நலம் பயக்கும். ஆயுட்காலத்தைக் கூட்டும்

    முதுகு வலியை நிர்வகிப்பதில் வாழ்வியல் மாற்ற நெறிமுறைகள் முக்கிய பங்காற்றுகின்றன. எலும்பு சவ்வுகளுக்கு வன்மை தரும் தாவரங்கள் அடிப்படையிலான உணவு வகைகளும், நடைப்பயிற்சியும், உடல் பயிற்சியும், மன பயிற்சியும், மன அழுத்தம் நீங்கி நல்ல உறக்கமும், வாதம் குறைக்கும் உணவு முறைகளும், முதுகுவலியில் நல்ல முன்னேற்றம் காண்பதற்கான எளிய வழிமுறைகள். இவற்றை கடைப்பிடித்து வாழ்ந்தால், முதுமையில் முதுகு வலியில் இருந்து விடுதலை பெற முடியும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • மஸ்க்கின் மறுபெயரான எக்ஸ், டுவிட்டரின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கும் என்பது தெளிவாகிறது.
    • எக்ஸ், டுவிட்டர் போல வெற்றி பெறுமா? என்பதைக்காலம் தான் சொல்ல வேண்டும்!

    "எல்லாமே மஸ்க்குன்னா என்னப்பா?"

    "யோவ்! எல்லாமே மஸ்க் இல்லையா! எலான் மஸ்க்!"

    "ஓஹோ அவுரா? இந்த டுவிட்டரை வாங்கி பைக்குள்ள போட்டுகினாரே அவருதானே?"

    "அவரே தான்!"

    "அது என்ன எலக்ட்ரிக் காருலேர்ந்து டுவிட்டர் பக்கம் வண்ட்டாரு?"

    "டுவிட்டர்ங்கறது என்ன தெரியுமா?"

    "ஏன் தெரியாம? நாம ஒருத்தர் ஒருத்தர் திட்டறது! தமிழ்ல திட்டறது! இங்லிஷ்ல டுவிட்டர்!"

    "அடப்பாவி! அதில்லை! டுவிட்டர்ங்கறது ஒரு முக்கியமான தகவல் தொழில் விஷயம்! அந்தக்காலத்துலயே ஜார்ஜ் ஆர்வெல்லுன்னு ஒருத்தர் சொல்லிட்டாரு. இன்னமே உலகத்தைப்பிடிக்கறதுக்கு நிலப்பரப்பெல்லாம் தேவையில்ல. தகவல் தொழிலைக்கைப்பற்றினால் போதும்னு! அதான் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கின சூட்சுமம்"

    "எலான் மஸ்க் பெரிய துட்டுகாரராமே?"

    "துட்டா? அவரோட சொத்து மதிப்பு என்ன தெரியுமா? 170 பில்லியன் டாலர்!"

    "நம்ம ரூபாய்ல சொல்லுங்க?"

    "அதா கொஞ்சம் மூச்சைப்பிடிச்சுக்க. 14 ஆயிரம் கோடி ரூபாய்!"

    "அடேயப்பா! ஆமா டுவிட்டரை கையகப்படுத்திட்டு என்ன செஞ்சாரு?"

    "நூத்துக்கணக்கான தலைகளைச்சீவிட்டாரு!"

    "என்னது?

    "அதாம்ப்பா ஏகப்பட்ட சீனியர் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிட்டாரு. இந்தியாவுல கூட டுவிட்டர் ஆபீசெல்லாம் காலியாகிட்டு வருதாம்!"

    "ஏன் அப்படிப்பண்றாரு?"

    "இரு, கொஞ்சம் சீரியசா பேசுவோமா? டுவிட்டரை வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க், அவ்வப்போது சில குறும்புத்தனமான பதிவுகளையும் போட்டு வருகின்றார். அப்படி போட்ட ஒரு பதிவு தான் டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்தான கருத்து கணிப்பு. இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் இதனை தொடங்கிய 4 மணி நேரத்தில் 90 லட்சம் பேர் தங்களது பதிவினை பதிவிட்டிருந்தனர்.

    எலான் மஸ்கே ஆச்சரியப்படும்படி இந்த பதிவில் 57% பேர் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த கருத்து கணிப்பினை அடுத்து தற்போது எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விரைவில் விலகு வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    "அய்யய்யோ!"

    "ஆமா! எலான் மஸ்கும் பெருவாரியான கருத்துக்கு மதிப்பளித்து தலைமைப்பதவி லேர்ந்து விலகிடுவேன்னு சொல்லிட்டாரு!"

    "விலகீட்டாரா?"

    இன்னும் இல்லை! சில அதிரடி மாற்றங்கள்ளாம் பண்ணனும். செய்த பிற்பாடு விலகிடுவேன்றாரு"

    "பரவாயில்லியே!"

    ஆமா! டுவிட்டர் தளத்தில் புதிய ஸ்பீச் ரெஸ்டிரிக்ஷன்ஸ் மற்றும் பிற சமூக வலைத்தளங்களின் இணைப்பிற்குத் தடை போட்டுட்டாரு! "கூடவே அந்த மாதிரி இன்னும் பல மாற்றங்கள்ளாம் செஞ்சு முடியற வரைக்கும் டுவிட்டர் ஆபீஸ்லதான் தூங்குவேன்னு சொல்லிட்டு அங்கயே ராத்தங்கிடறாரம் எலான் மஸ்க்!"

    அடேயப்பா!

    இன்னொண்ணு தெரியுமா?

    டுவிட்டருக்கு இப்ப எக்ஸ்னு பேரு மாத்திட்டாய்ங்க!

    அப்படியா ஏன்?

    டுவிட்டரின் திடீர் மறுபெயரானது, எலான் மஸ்க்கின் எக்ஸ் எழுத்தின் மீதான விருப்பத்தில் இருந்து ஓரளவு உருவாகிறது, இது அவரது வாழ்க்கை முழுவதும் வெளிவந்துள்ளது. பணம் செலுத்துவது முதல் டிக்டோக் பாணி வீடியோக்கள் வரை அனைத்தையும் வழங்கும் ஒரு சூப்பர் செயலியாக செய்திகள் தலைமையிலான சமூக வலைப்பின்னலை மாற்றுவதற்கான அவரது முயற்சியுடன் இது நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 2022-ல் டுவிட்டரின் எக்ஸ் என கான்செப்ட் அடையாளமாக்கப்பட்டது. மஸ்க் டுவிட் செய்த போது, பிளாட்பார்மைப் பெறுவது "எல்லாப் பயன்பாடான எக்ஸ்-ஐ உருவாக்குவதற்கான விரைவான முயற்சி இது". இந்த ஆண்டு மார்ச் மாதம், மஸ்க் Twitter Inc.ஐ எக்ஸ் கார்ப் என்ற பெயரில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்துடன் இணைத்தார். ஒரு மாதம் கழித்து, ஏப்ரல் மாதம், எக்ஸ்.ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய நிறுவனத்தை உருவாக்கினார்.

    "எல்லாவற்றையும் வழங்கக்கூடிய தளமாக எக்ஸ் இருக்கும். தொடர்ச்சியான இடுகைகளில், மறுபெயரிடுதல் நிறுவனத்திற்கு பயனர்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாக விற்பன்னர்கள் கருதுகிறார்கள்.

    ஒரு சூப்பர் பயன்பாட்டை உருவாக்கும் மஸ்க்கின் திட்டங்களின்படி, எக்ஸ் ஆனது ஏஐ-இயங்கும் தளமாக "ஆடியோ, வீடியோ, செய்தி அனுப்புதல், பணம் செலுத்துதல்/வங்கி போன்றவற்றை மையமாகக் கொண்டதாக இருக்கும்.

    எக்ஸ் என்ற எழுத்தின் மீது மஸ்க்கின் ஈர்ப்பின் தோற்றம் 1999 -ம் ஆண்டிலிருந்து அறியப்படுகிறது. அப்போதுதான் அவர் எக்ஸ்.காம் என்ற நிதியியல் தொடக்கத்தை நிறுவினார், பின்னர் அது பீட்டரால் நிறுவப்பட்ட நிறுவனத்துடன் இணைந்த பிறகு பேபால் ஆனது.

    மஸ்க் இறுதியில் நிறுவனத்தை விட்டு வெளியேறினார், ஏனெனில் நிறுவனத்தின் பெயர் எக்ஸ்.காம் ஆக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதன் பிறகு, அவர் ஸ்பேஸ் எக்ஸ் என்று அழைக்கப்படும் ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் தொடங்கினார். அவரது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவும் ஒரு மாடல் எக்ஸ் வாகனத்தை பெருமையாகக் கொண்டுள்ளது,

    இது முழுமையான மறுபிராண்டிங்கா?

    மஸ்க்கின் மறுபெயரான எக்ஸ், டுவிட்டரின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கும் என்பது தெளிவாகிறது.

    இந்த மாற்றத்தை மக்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள்?

    மீடியா ஆய்வாளர் எரிக்கின் கூற்றுப்படி, பெயர் மாற்றத்திற்குப் பிறகு எக்ஸ் பயன்பாட்டின் பதிவிறக்கங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. ஆப்ஸ் ஸ்டோர் தரவரிசையில் பயன்பாடு கீழே விழுந்தது, மக்கள் டுவிட்டர்தான் இப்போது எக்ஸ் என்பதை உணரவில்லை,

    பொதுவாக, ஒரு அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர் இணையத்தில் உள்ள அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு லோகோவை ஏன் மிகவும் விரும்பி கைவிடுவார் என்பதில் குழப்பம் உள்ளது.

    எக்ஸ், டுவிட்டர் போல வெற்றி பெறுமா? என்பதைக்காலம் தான் சொல்ல வேண்டும்!

    ×