என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீவேங்கடேசன் அவதாரம்.
    • பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும்.

    நாளை புரட்டாசி 3-வது சனிக்கிழமை.நாளை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது.

    'உப' என்றால் 'சமீபம்' என்று பொருள். 'வாசம்' என்றால் 'வசிப்பது' என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.

    திருப்பதி ஏழுமலையான் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக போற்றப்படுகிறார். 'வேங்' என்றால் 'பாவம்' 'கடா' என்றால் 'தீர்த்து வைக்கும் சக்தி' என்று பொருள். ஆதலால் திருப்பதிக்கு 'வேங்கடாச்சலம்' என்ற பெயர் வந்தது.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீவேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.

    ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது. ஒருமுறை முனிவர்கள் எல்லோரும் கூடி கங்கை நதி கரையில் யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அப்போது அங்கே நாரதர் தோன்றி 'மும்மூர்த்திகளில் யார் பெரியவர்'? யாருக்கு 'அவிர்பாகம்' கொடுப்பீர்கள்? என்று கேட்டார். இது முனிவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பிருகு முனிவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டனர். பிருகு முனிவர் மும்மூர்த்திகளை தேடிச் சென்றார்.

    முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு பிரம்மா வேதத்தை ஓதி கொண்டிருந்தார். இன்னொரு வாயினால் நாராயண நாமத்தை உச்சரித்துக்கொண்டு இருந்தார். பிருகு முனிவரை கவனிக்கவில்லை. அடுத்ததாக கயிலாயத்துக்கு சிவனை காணச்சென்றார் பிருகு முனிவர். அங்கு சிவன் தியானத்தில் இருந்தார். பிருகு முனிவரை கவனிக்க முடியாமல் போய்விட்டது.

    ஆகவே முனிவர் வைகுண்டத்தை நோக்கி சென்றார். அங்கு மகாவிஷ்ணு திருமகளுடன் இருந்தார். பிருகு முனிவரை வரவேற்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிருகு முனிவர், விஷ்ணுவின் மார்பு மீது தன் காலால் உதைத்து விட்டார். விஷ்ணு கோபப்படவில்லை. மாறாக வாஞ்சையுடன் பிருகு முனிவரின் காலை வருடினார்.

    பிருகு முனிவரின் செயலால் ஆத்திரமடைந்த திருமகள், திருமாலின் செய்கையால் மேலும் ஆவேசமடைந்து அவரை பிரிந்து வைகுண்டத்தை விட்டு பூலோகம் வந்து விட்டாள். திருமகளை விட்டு பிரிந்து இருக்க முடியாத மகா விஷ்ணுவும், வைகுண்டத்தை விட்டு கீழே இறங்கி சேஷசலத்தை (திருமலை) தன் இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது விஷ்யோத்தர மஹாத்மியத்தில் உள்ள கதையாகும்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

    பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.

    பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.

    • திருவேங்கடம் என்பது எதைக் குறிக்கிறது? வடமொழியில் வேம் என்றால் பாவம் என்று பொருள். கடா என்றால் அழித்தல்.
    • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது உண்மையல்லவா? திருமாலின் அவதாரமான கண்ணன் முழுமுதல் கடவுள் என்ற உண்மையை அவன் மறந்தான்.

    பன்னிரண்டு தமிழ் மாதங்களில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு மிகவும் விசேஷமான மாதம் புரட்டாசி. அதிலும் அவருக்கு இன்னும் கூடுதல் விசேஷமான நாள் புரட்டாசி சனிக்கிழமை.

    இந்த நாளில் விரதமிருந்து திருமலையில் உறையும் வேங்கடவனை வழிபட்டுத் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெறும் பக்தர்கள் பற்பலர்.

    அசைவம் உண்பவர்கள் புரட்டாசி புண்ணிய மாதம் என்பதால் அந்த மாதத்தில் அசைவ உணவைத் தவிர்ப்பது வழக்கம். புரட்டாசி மாதம் தூய நினைவுகளோடு வெங்கடாசலபதியை வழிபடுவதற்குரிய புனித மாதம்.

    திருவேங்கடம் என்பது எதைக் குறிக்கிறது? வடமொழியில் வேம் என்றால் பாவம் என்று பொருள். கடா என்றால் அழித்தல். வேங்கடவன் என்றால் பாவங்களை அழிப்பவன் என்று பொருள்.

    தன்னை தரிசிக்கும் அன்பர்களின் பாவங்களையெல்லாம் அடியோடு வேரறுத்து அழிக்கும் கடவுளாக வேங்கட மலையில் காட்சி தருகிறான் திருமாலாகிய வேங்கடவன்.

    எனவே வேங்கடவனை தரிசித்துப் பாவங்களை நீக்கிக் கொண்டு, இனிப் பாவம் புரியாமல் இருக்கும் மன உறுதியையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அப்படியானால் நம் வாழ்வில் மிக எளிதாக நாம் முன்னேறலாம். படிப்படியாகத் தன்னை நாடி மேலே மலையேறி வரும் பக்தர்களை வேங்கடவன் படிப்படியாக வாழ்வில் மேலே மேலே உயர்த்துகிறான்.

    பன்னிரண்டு ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் என்ற பெருமையை உடையது திருப்பதி.

    `ஊனேறு செல்வத்து உடற்பிறவி

    யான்வேண்டேன்

    ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்

    கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து

    கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே'.

    `ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

    வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்

    வேண்டேன்

    தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச்

    சுனையில்

    மீனாய்க் கிடந்தியங்கும் விதியுடையன்

    ஆவேனே'.

    `செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

    நெடியானே வேங்கடவா நின்கோயில்

    வாசலிலே

    அடியாரும் வானவரும் அரம்பையரும்

    கிடந்தியங்கும்

    படியாய்க் கிடந்துநின் பவழவாய்

    காண்பேனே!'.

    என்றெல்லாம் திருவேங்கடத்தில் மீனாகவும் வாயிற்படியாகவும் கொக்காகவும் செண்பக மரமாகவும் காட்டாறாகவும் இன்னும் பலவாறாகவும் இருந்து வேங்கடவன் பேரழகை தரிசித்துக் கொண்டே இருக்க விரும்புவதாகக் குலசேகர ஆழ்வார் பாடிப் பரவுகிறார்.

    துவாபர யுகத்தில் திருமாலின் கிருஷ்ணாவதாரம் நடைபெற்றது. அப்போது கண்ணன் கோகுலத்தில் வசித்த கோபர்களால் கொண்டாடப்பட்ட கடவுளாக விளங்கினான்.

    திரேதா யுகத்தில் ராமன், தான் கடவுள் என்பதை ஒளித்து வாழ்ந்தான். ஆனால் துவாபர யுகத்தில் கண்ணன் தான் கடவுள் என்பதை அறிவித்து வாழ்ந்தான்.

    `வழக்கம்போல் இந்திரனுக்கு பூஜை செய்ய வேண்டாம், கோவர்த்தனகிரி தானே நமக்கெல்லாம் செல்வங்களை அள்ளித் தருகிறது, நாம் மேய்க்கும் ஆனிரைகளுக்கு வேண்டிய புல் முழுவதும் கோவர்த்தனகிரியில் தானே விளைகிறது.

    நாம் பறித்து உண்ணும் சுவை மிகுந்த கனிகளையெல்லாம் கோவர்த்தன கிரியில் உள்ள மரங்கள் தானே கொடுக்கின்றன! இந்த ஆண்டு கோவர்த்தன கிரிக்கே பூஜை செய்யுங்கள்!` என கோபர்களுக்கு அறிவுறுத்தினான் கண்ணன்.

    கண்ணன் வாக்கைப் பெரிதும் மதித்த கோபர்கள், கண்ணனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபன் தலைமையில் ஒன்றுகூடி ஆலோசித்தனர். கண்ணன் சொன்னபடி கோவர்த்தன கிரிக்கே பூஜை செய்வது என முடிவு செய்தனர்.

    கோவர்த்தன கிரி பூஜை முன்னெப்போதும் இல்லாத அளவு பிரமாண்டமான முறையில் கோலாகலமான திருவிழாவாக நடைபெற்றது.

    ஒவ்வோர் ஆண்டும் தனக்கு பூஜை செய்யும் கோபர்கள் இவ்வாண்டு தனக்கு பூஜை நிகழ்த்தாமல் கோவர்த்தன கிரிக்கு பூஜை நிகழ்த்தியதால் கடும் ஆத்திரமடைந்தான் தேவர்களின் அரசனான தேவேந்திரன்.

    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது உண்மையல்லவா? திருமாலின் அவதாரமான கண்ணன் முழுமுதல் கடவுள் என்ற உண்மையை அவன் மறந்தான்.

    பெருமழை பொழிந்து கோபர்களுக்கு இடையூறு தருமாறு வருணனை ஏவினான் இந்திரன். தேவலோக அரசனான இந்திரனின் ஆணையை வருணன் தட்ட இயலாதே? கோகுலத்தில் பிரளய கால மழைபோலப் பெருமழை தொடர்ந்து விடாமல் பொழியத் தொடங்கியது.

    கோகுலத்து மக்கள் அனைவரும் அடுத்து என்ன நடக்குமோ என எண்ணி அச்சமடைந்தனர். கண்ணன் திருவடியைத் தஞ்சமடைந்தனர்.

    அவர்கள் அனைவரையும் தன் அருகே வரச் செய்த கண்ணன் கோவர்த்தனகிரியைத் தன் சுண்டு விரலால் தூக்கி நிறுத்தி, அதனடியில் அவர்களை நிற்க வைத்தான். ஒரு சொட்டு மழை கூட அவர்கள் மேல் விழாதவாறு அவர்களைக் காத்தான்.

    இவ்விதம் ஏழு நாட்கள் மழை மக்கள்மேல் விழாதவாறு தாங்கி நின்றான்.

    அதன் பின்னர் இந்திரன், கண்ணன் முழுமுதல் கடவுளே என்ற உண்மையை உணர்ந்து மழையை நிறுத்தி கண்ணனின் திருவடிகளைப் பணிந்து மன்னிப்புக் கேட்டான் என்கிறது கண்ணன் கதையை விரிவாகச் சொல்லும் பாகவத புராணம்.

    கோவர்த்தனகிரி ஏழு நாட்கள் தன்னைத் தாங்கிய திருமாலை, அதன் நன்றிக் கடனாகவே, கலியுகத்தில் ஏழுமலையாகித் தாங்குகிறது என்று சொல்லப்படுகிறது.

    சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய இந்த ஏழும் இங்குள்ள அழகிய ஏழு மலைச் சிகரங்களின் பெயர்கள்.

    திருப்பதி வெங்கடேஸ்வர ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது எனத் தெரியவில்லை. மிகப் பழங்காலத்தில் இருந்தே இந்தக் கோவில் இந்த மலைமேல் காணப்படுகிறது.

    இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம், சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை ஆகிய சங்க காலத்தை ஒட்டி எழுந்த பழங்காப்பியங்களிலேயே வேங்கடம் பற்றிய குறிப்பு உள்ளது.

    சோழர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள் போன்றோரால் வழிவழியாக இந்தக் கோவில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப் பட்டு வந்திருக்கிறது.

    வேங்கடவன் எழுந்தருளி இருக்கும் திருப்பதி கோவிலைப் பராமரிப்பதை ஒரு புனிதச் செயலாக அன்றைய மன்னர்கள் கருதியிருக்கிறார்கள். இங்கேயுள்ள பல கல்வெட்டுகள், முக்கியமாகத் தமிழ்க் கல்வெட்டுகள் இத்தகவல்களைத் தெரிவிக்கின்றன.

    விஜயநகரத்தை ஆண்டுவந்த மன்ன ரான ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி வேங்கடவன்மேல் அளவற்ற பக்தி கொண்ட வராக வாழ்ந்திருக்கிறார். அவர் இந்தத் திருக்கோவிலுக்குப் பல விலைமதிப்புடைய ஆபரணங்களை வழங்கியுள்ளார்.

    பின்னர் வந்த பற்பல மன்னர்களும் கூட, வேங்கடவனின் செல்வத்திற்குத் தங்களால் இயன்ற வகையில் வளம் சேர்த்திருக்கிறார்கள்.

    சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான நம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் என்கிற கோதை நாச்சியார் பாடிய திருப்பாவைத் தமிழ்ப் பாடல்கள் மார்கழி மாதத்தில் திருப்பதியில் நாள்தோறும் ஒலிக்கின்றன.

    கண்ணன்மேல் ஆண்டாள் கொண்ட காதலைப் போற்றும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் உன்னதமான பக்தியைத் திருப்பதி கொண்டாடுகிறது.

    திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் ஒலிப்பது ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் என்ற சமஸ்கிருத சுலோகம். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால் எழுதப்பட்ட புகழ்பெற்ற சுலோகம் இது.

    திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயிலெழுப்புகிற முறையில் அமைவது. ஆன்மிக விழிப்பின்றி மாயை என்ற நித்திரையில் தோய்ந்திருக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி அதற்கு பரமான்மாவைச் சென்று சேர வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் திருப்பள்ளியெழுச்சி பாடப் படுவதாகச் சொல்லப்படுகிறது.

    சமஸ்கிருதத்தில் அமைந்துள்ள திருப்பள்ளி எழுச்சிப் பாடலான வெங்கடேச சுப்ரபாதம் `கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே` எனத் தொடங்குகிறது.

    அயோத்தியில் இருந்து சிறுவர்களான ராம லட்சுமணர்களைக் கானகத்திற்கு தம் வேள்வியைப் பாதுகாக்கும் பொருட்டு அழைத்துச் சென்றார் விஸ்வாமித்திர மகரிஷி.

    அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமபிரானின் பேரழகைக் கண்ணால் பருகியவாறே, `கோசலையின் புதல்வனே துயிலெழுவாய்!` எனக் கூறி அவர் துயிலெழுப்பினாராம்.

    வெங்கடேச சுப்ரபாதப் பாடலைப் பாடி இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி பெரும்புகழ் பெற்றார். பக்திச் சுவை நனிசொட்டச் சொட்ட வெங்கடேச சுப்ரபாதத்தைப் பாடிய எம்.எஸ். சுப்புலட்சுமிக்குத் திருப்பதியில் சிலை வைக்கப் பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

    பழனி என்றால் உடனே முருகப் பெருமானுடன் இணைந்து நமக்கு ஞாபகம் வருவது பஞ்சாமிர்தம். அதுபோல, திருப்பதி என்றால் நம் அனைவரின் நினைவிலும் தோன்றி நம் மனத்தைத் தித்திக்க வைப்பது வேங்கடவன் பிரசாதமான லட்டு. திருப்பதி லட்டு உலகப் புகழ்பெற்று விட்டது.

    இந்த லட்டு சர்க்கரை கடலைப் பருப்பு நெய் முந்திரிப் பருப்பு உலர் திராட்சை பச்சைக் கற்பூரம் ஏலக்காய் குங்குமப்பூ போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு கூட்டுக் கலவை முறையில் தயாரிக்கப்படுகிறது.

    திருப்பதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வேங்கடவனின் திருவருளை லட்டு மூலம் இனிக்க இனிக்கப் பெற்றுக் கொள்கிறார்கள்.

    இந்தியாவிலேயே மிக அதிக வருமானம் உள்ள கோவில் வேங்கடவன் திருக்கோவில்தான். ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டு முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் ஏராளமானோர். முடி காணிக்கை வருமானத்தின் மூலமே பற்பல கோடிகளைச் சம்பாதிக்கிறது தெய்வீகத் திருத்தலமான திருப்பதி.

    எண்ணற்ற அடியவர்களை இன்றளவும் தன்னை நோக்கி இழுக்கின்ற சக்தி திருப்பதி வேங்கடவனுக்கு அமைந்துள்ளது. எல்லா மாதத்திலும் வேங்கடவனைத் தொழலாம் என்றாலும், புரட்டாசி மாதத்தில் மலையப்பனான வேங்கடவனைத் தொழுதால் அவன் பொங்கிப் பெருகும் தன்னுடைய அருளால் நம்மை இன்பத்தில் ஆழ்த்தி மலைக்க வைப்பான்.

    புரட்டாசி மாதம் அவன் அருளை விரைந்து பெற ஏற்ற மாதம். புரட்டாசியில் வேங்கடவனைத் தொழுது புண்ணியம் அடைவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • சித்தர்கள் தங்களது பாடல்களில் வைத்தீஸ்வரன் ஆலயத்தை மருத்துவத்தின் தலைமை பீடம் என்று புகழ்ந்து குறிப்பிட்டுள்ளனர்.
    • வைத்தீஸ்வரன் ஆலய தீர்த்த குளத்தை சித்தாமிர்த தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.

    நோய் இல்லாமல் வாழ்வது என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எவ்வளவுதான் செல்வம், செல்வாக்கு, புகழ் இருந்தாலும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் வாழ்க்கை முழுமை பெறாது. அதனால்தான் நோய் இல்லாமல் வாழ்வது இன்பம் என்று நமது முன்னோர்கள் சொல்லி உள்ளனர்.

    கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளுக்கு யாத்திரை செல்லும் போது நோயற்ற வாழ்வு பெறுவதற்கான வழிபாட்டை செய்து கொள்ள முடியும். கும்பகோணத்தில் இருந்து ஒவ்வொரு தலமாக பார்த்து விட்டு வரும்போது வைத்தீஸ்வரன் கோவில் தலத்துக்கும் அவசியம் செல்ல வேண்டும். இந்த தலம்தான் நோய்களை தீர்க்கும் அற்புதமான தலமாக கருதப்படுகிறது.

    இந்த தலத்தின் தல வரலாறு இதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஒரு தடவை அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. அந்த நோய் கடுமையால் அங்காரகன் கடுமையாக போராட வேண்டியது இருந்தது. இந்த நோயில் இருந்து விடுபட ஈசனை நோக்கி வழிபட்டார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. அதில், "வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று ஒரு மண்டலம் விரதம் இருந்து சித்தாமிர்த குளத்தில் நீராடி வைத்தியநாத சுவாமியை வழிபட்டால் வெண்குஷ்ட நோய் உடனே குணமாகி விடும்" என்று கேட்டது.

    உடனே அங்காரகன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று நீராடி வழிபட்டான். இதனால் அவனுக்கு ஏற்பட்டிருந்த வெண்குஷ்ட நோய் குணமானது. அங்காரகனை தொடர்ந்து ஏராளமான சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு பலன்களை பெற்றனர். இதனால் நோயற்ற வாழ்வு தரும் தலமாக வைத்தீஸ்வரன் கோவில் தலம் புகழ் பெற்றுள்ளது.

    4448 வகையான நோய்கள் இருப்பதாக உலகளவில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 4448 வகையான நோய்களையும் தீர்க்கும் ஒரே தலமாக இந்த தலம் திகழ்கிறது. எனவேதான் சித்தர்கள் தங்களது பாடல்களில் வைத்தீஸ்வரன் ஆலயத்தை மருத்துவத்தின் தலைமை பீடம் என்று புகழ்ந்து குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த தலத்தில் வழங்கப்படும் திருச்சாந்து என்ற மருந்து உருண்டை மிகவும் புகழ் பெற்றது. புற்றுமண், அபிஷேக தீர்த்தம், அபிஷேக சந்தனம், விபூதி மற்றும் வேப்பிலை கலந்து இந்த திருச்சாந்து மருந்து உருண்டை தயாரிக்கிறார்கள். வைத்தீஸ்வரன் பாதத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு தரப்படும் இந்த திருச்சாந்து மருந்து உருண்டையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்பது காலம் காலமாக பக்தர்கள் கண்டு வரும் உண்மையாகவும், அனுபவமாகவும் உள்ளது.

    திருச்சாந்து மருந்து உருண்டை தவிர இந்த தலத்தில் தரப்படும் வில்வம், தைலம், விபூதி போன்றவையும் சக்தி வாய்ந்தது.

    அதனால்தான் நோய் தீரும் என்ற நம்பிக்கையில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோவில் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். மருத்துவம் படித்தவர்கள் தங்களது கல்வியில் மேம்பாடு பெறுவதற்கு வைத்தீஸ்வரனை நாடுவது காலம் காலமாக ஒரு மரபு போலவே உள்ளது.

    தோல் நோயால் அவதிப்படுபவர்கள் இந்த தலத்தில் தரப்படும் புணுகு எண்ணையை வாங்கி பயன்படுத்தினால் உடனே பலன் கிடைக்கும்.

    இந்த தலத்தின் அருமையை உணர்ந்த சித்தர்கள் அனைவரும் இங்கு வந்து தியானம் செய்து அருள் பெற்றுள்ளனர். பெரும்பாலான சித்தர்கள் வைத்தீஸ்வரனுக்கு அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பலன்கள் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. சித்தர்கள் அபிஷேகம் செய்தபோது சிதறிய அமிர்தம் அங்குள்ள தீர்த்தத்தில் கலந்துள்ளன. எனவே தான் வைத்தீஸ்வரன் ஆலய தீர்த்த குளத்தை சித்தாமிர்த தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.

    சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடினாலே போதும் எந்த நோயாக இருந்தாலும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை. அதை உறுதிப் படுத்துவது போல இந்த தீர்த்தத்தில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன என்று சொல்கிறார்கள்.

    சீர்காழிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சுயம்பு மூர்த்தியாக ஈசன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மரகத லிங்கம் மிகவும் புகழ் பெற் றது. இந்த ஆலய கரு வறைக்கு பின்புறம் நவக்கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் அமைந் துள்ளன. பொதுவாக மற்ற ஆலயங்களில் நவக்கிரகங்கள் மூன்று வரிசையில் திசை மாறி அமைந்து இருப்பதை பார்த்து இருப்போம். ஆனால் இந்த தலத்தில் மட்டும்தான் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் இருப்பதை காண முடியும்.

    வைத்தியநாத சுவாமிக்கு நவக்கிரகங்களும் கட்டுப்பட்டு இருக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது. நவக்கிரகங்களில் எந்த கிரக தோஷம் ஏற்பட்டாலும் அதை வைத்தியநாத சுவாமி குணமாக்கி தன் பக்தனுக்கு சாதகமான பலனை வழங்குவார் என்பது ஐதீகமாகும். கிரகங்களை கட்டுப் படுத்துவ தால் நோய் மட்டுமின்றி தோஷங்களும் விலகுவதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.

    இந்த தலத்தில் அங்காரகன் தனி சன்னதியில் உள்ளார். செவ்வாய் தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இவரை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். குறிப்பாக ஜாதகத்தில் செவ்வாய் திசை நடப்பவர்கள் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். கடன் தொல்லை, நிலப்பிரச்சினை, நோய் பிரச்சினை போன்றவை செவ்வாய் கிரக அமைப்பால் படாதபாடுப்படுத்தி விடும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் தவறாமல் வைத்தீஸ்வரன் கோவிலில் வழிபட வேண்டி யது அவசியமாகும். குறிப்பாக செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அங்காரகனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூடும்.

    அம்பாள் பெயர் தையல்நாயகி. இந்த தலத்தில் அங்காரகன் நோயை தீர்ப்பதற்கு சிவபெருமான் மருந்து தயார் செய்தபோது பார்வதிதேவி தைல பாத்திரம் எடுத்து வந்தாள். எனவே அவளுக்கு தையல்நாயகி என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். அவளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் என்ற குறை நீங்கும் என்பது ஐதீகமாகும்.

    அம்பாளுக்கும் இறைவனுக்கும் இடையே முருகப்பெருமான் சன்னதி உள்ளது. அவரை செல்வமுத்துகுமரர் என்று அழைக்கிறார்கள். சூரபத்மனை அழிப்பதற்கு முருகப்பெருமான் இந்த தலத்தில் வழிபட்டுதான் வரம் பெற்றார். எனவே வைத்தீஸ்வரன் ஆலய முருகப்பெரு மான் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படு கிறார். இவரது காலடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி பயன்படுத்தினால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

    நோயற்ற வாழ்வு தரும் மிகப்பெரிய வரத்தை தருபவராக வைத்தியநாத சுவாமி திகழ்ந்தாலும் இந்த தலத்தில் முருகப்பெருமானுக்குதான் முதன்மை சிறப்புகள் உள்ளன. அர்த்தஜாம பூஜையின் போது முதலில் முருகருக்குத்தான் பூஜைகள் செய்கிறார்கள். அதன் பிறகே சிவபெருமானுக்கும், அம்பா ளுக்கும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் காமிக ஆகமத்தில் பூஜைகள் நடத்தப்படுகிறது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் இந்த தலத்தில் படிகம் பாடியுள்ளனர். இதனால் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 16-வது தலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. 5 பிரகாரங்கள், 5 கோபுரங்கள் என்று இந்த ஆலயம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மூலவர் முன் இரண்டு கொடி மரங்கள் இருப்பதன் மூலம் இந்த ஆலயத்தின் சிறப்பை அறிந்து கொள்ள முடியும்.

    ராமபிரான் இந்த தலத்தில் சடாயுவுக்கு இறுதி சடங்குகள் செய்து கடமையை நிறைவேற்றினார். அந்த இடம் சடாயு குண்டம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கே பார்த்த ஆலயமான இங்கு வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். தற்போது இந்த ஆலயத்தை தருமபுரம் ஆதீனம் பராமரித்து வருகிறது.

    தென் இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பத்தினர் வைத்தீஸ்வரனை குல தெய்வமாக ஏற்றுள்ளனர். எனவே தினமும் இந்த ஆலயம் திருவிழா கோலமாகவே இருக்கும். கும்பகோணம் செல்லும் போது தவற விடக்கூடாத ஆலயங்களில் இதுவும் ஒன்று என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

    உடல் நலம் பெற்றால் மட்டும் போதுமா? அதற்கேற்ப கூர்மையான அறிவுத்திறன் வேண்டும் அல்லவா? அந்த ஞானம் பெற வேண்டுமானால் நாம் செல்ல வேண்டிய ஆலயம் சுவாமிமலை. கும்ப கோணம் நகருக்கு மிக மிக அருகில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை அமைந்துள்ளது. அந்த ஆலயத்தின் சிறப்புகளை அடுத்த வாரம் காணலாம்.

    • தர்ப்பணம் என்ற சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள்.
    • இயற்கைக்கு மாறாக இறந்தவர்களின் ஆத்மாவை தில ஹோமத்தால் மட்டுமே சரி செய்ய முடியும்.

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் உருவாகுகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும். ஒருவரின் ஜாதகத்தில் சென்ற பிறவியைக் குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும், இந்த பிறப்பைக் குறிக்கும் பாவம் முதல் பாவமாகும், அடுத்த பிறப்பை பற்றி தெரிவிக்கும் பாவம் ஐந்தாம் பாவமாகும். ஜென்ம லக்கினத்திற்கு பத்தாமிடம் கர்மஸ்தானம் எனப்படும். அதாவது இந்த பிறவியில் அனுபவிக்கப் போகும் பிராப்த கர்மங்களை குறிக்குமிடமாகும். லக்கினம் ஜாதகரை குறிக்குமிடமாகும். லக்கினத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக் குறிக்குமிடமாகும். ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாம் பாவம் தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்குமிடமாகும்.

    ஜாதகரின் தகப்பனைக் குறிக்குமிடம் ஒன்பதாமிடமாகும். எனவே தகப்பன் தெய்வத்திற்கு சமமானவனாவார். தகப்பன் வழிபட்ட தெய்வத்தைக் குறிக்குமிடம் ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடமாகும். எனவே ஐந்தாமிடம் குல தெய்வத்தைக் குறிக்குமிடமாகக் கருதப்படுகிறது. தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்குமிடமாகவும் ஐந்தாமிடம் வருவதால் பாட்டனாரும் தெய்வத்திற்கு சமமானவராவார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக் குறிக்குமிடமாகவும் அமைகிறது. கர்மத்தால் வந்தது தர்மத்தால் போகும் என்பது சான்றோர் வாக்கு. மேலும் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவம் அந்த குறிப்பிட்ட பாவத்திற்கு எதிராக செயல்படும் அல்லது அந்த குறிப்பிட்ட பாவத்தை அழிக்கும்.

    இதன்படி பூர்வஜென்ம கர்மத்தைக் குறிக்கும் பாவமான ஆறாம் பாவத்தை அழிக்க அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவம் குறிக்கும் குல தெய்வ வழிபாடு மற்றும் ஒன்பதாம் பாவகம் குறிக்கும் பித்ருக்கள் வழிபாடு நம்மை ஆபத்து மற்றும் இடையூறுகளில் இருந்தும் நாம் காப்பாற்றப்படுவோம். இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கர்மங்களைக் குறிக்கும் பாவம் பத்தாம் பாவமாகும். அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஒன்பதாமிடம் இஷ்ட தெய்வ வழிபாட்டைக் குறிக்குமிடம்.

    எனவே இந்த ஜென்மத்தில் தெரிந்தோ, அல்லது தெரியாமலோ செய்யும் வினைகளில் இருந்து விடுபட, முதலில் நம் பெற்றோர்களை நல்ல முறையில் பேணிக்காத்து அவர்களுடைய அன்பும் ஆசியும் எப்பொழும் நமக்கு கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தாய், தந்தையின் மரபணுவில் உருவாகுவதே குழந்தை. முன்னோர்களின் மரபணுவில் தோன்றிய ஒருவர் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், சாந்தி அடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

    பிதுர் தோஷம் நீங்காமல் எந்த பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர ஜெபங்களும் சித்தியடைவதில்லை. எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும். பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். பிதுர் தோஷமும் பரிகாரங்களும் ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை. மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகமாகும். அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகமாகும். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டும். ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதை சுட்டிக்காட்டும் கிரகங்களாகும்.

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் பித்ரு தோஷம் வருவது ஏன்?

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். ஒரு வீட்டில் 4 ஆண்கள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டும் பித்ரு தோஷ தாக்கம் அதிகமாக இருக்கும்.

    முன்னோர்களின் மரபணு ஒருவரின் உடம்பில் எந்த அளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் பித்ரு தோஷ தாக்கத்தின் வலிமையில் மாற்றம் ஏற்படும்.

    ஆனால் பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும். நம் அண்ணன் கஷ்டப்படுகிறான், தம்பி கஷ்டப்படுகிறான். நாம் நிறைய புண்ணியம் பண்ணி இருக்கிறோம் அதனால் நன்றாக இருக்கிறோம் என்று யாரும் நினைத்து விட முடியாது. இந்த பிறவிக்குள் ஏதாவது ஒரு கால கட்டத்திற்குள் நிச்சயம் பாதிப்பு உண்டு. அவர் பாதிக்கப்படவில்லை என்றால் அவரின் வாரிசுகள் பல மடங்காக பாதிக்கப்படுகிறார்கள். வசதி கொட்டி கிடக்கும். ஆனால் அதை அனுபவிக்கும் பாக்கியமற்ற வாரிசுகள் உருவாகும். கொடுத்து கெடுக்கும் யோகம். இது ஒரு வகையான பித்ரு தோஷம். நமக்கு தான் பாதிப்பு என்று யாரும் வருந்த வேண்டாம். ஒரே தாயின் வயிற்றில் உருவாகிய வாரிசுகளில் பாதிப்பு ஏற்படும் காலம் மட்டுமே மாறுபடும்.

    திருமணமான பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும்.

    தர்ப்பணம் என்ற சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இயற்கை முறையில் இறந்தவர்களுக்கு வருடாந்தர திதி, அமாவாசை திதி, மகாளயபட்ச வழிபாடு மற்றும் தர்ப்பணங்களில் சரி செய்ய முடியும். இயற்கைக்கு மாறாக இறந்தவர்களின் ஆத்மாவை தில ஹோமத்தால் மட்டுமே சரி செய்ய முடியும்.

    ஒரு ஆத்மா உடலை விட்டு வெளியேறும்போது மனதால் துன்பப்பட்டால் அதன் மனதை துன்புறுத்திய நிகழ்வில் திருப்தி ஏற்படும் வரை அதைச் சார்ந்தவர்களை தாக்கிக்கொண்டே இருக்கும். அதனால் தான் அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கக்கூடாது. இன்று நகர்ப்புறங்களில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். வீடு மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு தாய், தந்தை அல்லது மாமனார், மாமியாரை கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள். வயதான அந்த ஜீவன்கள் படும் கஷ்டத்திற்கு அளவுகோலே இல்லை.

    சொந்த ஊரில் உற்றார் உறவினர்களுடன் வாழ்ந்து பழகியவர்களுக்கு நகர வாழ்க்கை ஒத்து வருவதில்லை. வேலைக்கு செல்பவர்களுக்கு அவர்களை கவனிக்கவே நேரம் கிடைப்பதில்லை. இதில் பெற்றோரை கவனிக்க ஏது நேரம். பல இடங்களில் அவர்களின் வயதிற்கு மீறிய வேலை கொடுத்து மன உளைச்சலை அதிகப்படுத்துகிறார்கள்.

    இன்னும் சிலர் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை கொண்டு விடுகிறார்கள். பல பெற்றோர்கள் தங்களின் மன வேதனையை வெளியில் சொல்லியும், சொல்ல முடியாமலும் மன வேதனையுடன் இறந்து விடுகிறார்கள். இதை இயற்கை மரணத்தில் சேர்ப்பதா? இல்லை இயற்கைக்கு மாறான மரணத்தில் சேர்ப்பதா? இது இரண்டும் இல்லாத புது விதம். இறந்த ஆன்மாவின் மனவேதனையால் பாதிக்கும் காலம் வரும்போது கூட பல பேர் தங்கள் தவறை புரிந்து கொள்ளாமல் நியாயப்படுத்து கிறார்கள். இந்த வகை பித்ரு தோஷம் எவ்வளவு திதி, தர்பணம் கொடுத்தாலும் விலகாது. திருப்தி அடையாத ஆத்மாக்கள் அந்த தலைமுறையை ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே தில ஹோமம். இவ்வகை பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான். எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பணங்கள் தரப் படவில்லையோ, எவர் ஒருவர் தலைமுறையில் இயற்கைக்கு மாறான இறப்பு அதிகம் இருக்கிறதோ அவர்களுக்கு தில ஹோமமே தீர்வு. அந்த ஜாதகர் தில ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் பலன் கிடைப்பது அரிது.

    தில என்றால் எள். தில ஹோமம் என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பணத்திற்கும், தில ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

    தில ஹோமம் செய்யும்போது கவனிக்க வேண்டியது

    உங்களுடைய ஜாதகத்தில் யோகம் பொருந்திய நாளாக இருப்பது சிறப்பு.

    தாய், தந்தை, குல, குடும்ப , இஷ்ட, உபாசன, காலடி, காவல் தெய்வ ஆசியை மானசீகமாகவோ நேரடியாகவோ பெற்ற பின்பே பரிகாரம் செய்ய வேண்டும். சந்திராஷ்டம நாளாக இருக்கக்கூடாது.

    ஜனன ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்தால் கூட நீச, அஸ்தமனம் பெற்ற கிரகத்திற்கான தசா, புத்தி, அந்தர காலங்களை தவிர்த்தல் நலம்.

    திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறும் தசா, புத்தி, அந்தர காலமாக இருப்பது சிறப்பு. 6, 8, 12 அதிபதிகளின் தசா, புத்தி, அந்தர காலமாக இருக்கக்கூடாது.

    மிகப் பெரிய யாகங்கள் பரிகார பூஜை செய்யும்போது ஜாதகரின் பட்சி அரசு செய்யும் காலமாக இருப்பது மிகச் சிறப்பு.

    ஜாதகருக்கு தாராபலம் உள்ள நாளாக இருப்பது மேலும் பலனை அதிகரிக்க செய்யும்.

    பரிகாரம் உடனே யாருக்கு நிறைவேறும் என்று பார்க்கலாம்.

    லக்னாதிபதி வலிமையுடன் இருப்பவருக்கு தில ஹோமத்தின் பலன் 6 மாதத்திற்குள் தெரிந்துவிடும்.

    பரிகாரம் செய்யும் நாளின் நட்சத்திரத்திற்கு சுய ஜாதகத்தில் திரிகோணாதிபதிகள் தொடர்பு இருக்க வேண்டும்.

    பரிகாரம் செய்யும் கிரகம் கோச்சாரத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று இருக்க வேண்டும்.

    மிகப் பெரிய பரிகார பூஜை செய்யும் போது குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு பிரமச்சரியத்தை கடைபிடித்து புலால் உண்பதை தவிர்த்து மானசீகமாக காரிய சித்தி வழிபாடு செய்பவரின் பரிகாரம் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நிறைவேறும்.

    வேத விற்பனர் ஏதோ மந்திரம் சொல்கிறார் தனக்கும் அந்த பரிகாரத்திற்கும் தொடர்பு இல்லாதது போல் எண்ண அலைகளை பரவவிட்டு பரிகாரத்தில் காட்சியாளராக ஈடுபடுவது கூடாது. ஆத்மார்த்தமாக முன்னோர்களின் ஆத்ம சாந்திக்கு வழிபாடு செய்ய வேண்டும்.

    தில ஹோமம் முடித்தவுடன் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வதும் நல்லது.

    இது ஒரு சக்தி வாய்ந்த ஹோமம். முழு மனதுடன் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய வேண்டும்.

    ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே இதை செய்ய வேண்டும். சரியாக செய்யப்படும் திலா ஹோமம் அந்த சந்ததிக்கே நல்ல வழிகாட்டும்.

    முறையான தில ஹோமத்தின் பலன் 6 மாதத்தில் தெரியும். முறையாக தில ஹோமம் செய்தவர்களுடைய வாரிசுகளின் வாழ்வில் திருப்புமுனை உடனே ஏற்படும்.

    உங்கள் லக்கினத்திற்கு 9-ம் வீட்டு அதிபதியின் நட்சத்திரம், கிழமை, 9-ம் வீட்டில் மாந்தி இல்லாத நாளாக இருப்பது நன்று.

    தில ஹோமம் என்பது இயற்கைக்கு மாறாக இறந்த நம் முன்னோர்களுக்கு செலுத்தும் அஞ்சலியாகும். இது வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்படும் ஹோமம் என்பதால் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இதில் பங்கு கொள்ள வேண்டியது அவசியம்.

    தில ஹோமத்தின் நன்மைகள்:

    உங்கள் முன்னோர்களுக்கு தில ஹோமம் செய்வதன் மூலம் சாந்தி அடைய முடியாத மற்றும் அகால மரணமடைந்த ஆன்மாக்களுக்கு விடுதலை கிடைக்கும். இறந்த ஆன்மாக்களுக்கு முக்தி ஏற்படும். எதிர்மறை ஆற்றல்களை நீக்கும். ஒரு ஆன்மாவை இறைவனடி சேர உதவிய புண்ணியம் கிடைக்கும்.

    • வேதாரண்யத்தில் தலைவர் ராஜாஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ள குமரன் விரும்பினார்.
    • உயிர்பிரியும் வேளையிலும் தாய்நாட்டின் கொடியை கீழே விடாமல் கைகளில் பற்றியதால் திருப்பூர் குமரன் என்று பெயர் பெற்றார்.

    இந்திய சுதந்திர போராட்டத்தில் திருப்பூர் குமரனுக்கு நீங்கா இடம் உண்டு. ஆங்கிலேய போலீசாரின் தடியடியில் தலை உடைந்து ரத்தம் கொட்டி மயங்கிய நிலையிலும் தாய்நாட்டுக்கொடியை கீழே விழாமல் கையில் ஏந்தியபடி இன்னுயிர் ஈந்தார். இதனால் கொடிகாத்த குமரன் என்ற பெயரை பெற்றார்.

    அவர் ஈரோடு அருகே சென்னிமலையில் ஒரு ஏழை கைத்தறி குடும்பத்தில் கடந்த 1904-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி பிறந்தார். தந்தை பெயர் நாச்சிமுத்து. தாயார் கருப்பாயி. பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் குமாரசாமி. விடுதலைப்போரில் ஈடுபட்டு உயிர்நீத்த பிறகே குமாரசாமி என்ற பெயர் குமரன் என்றானது. சென்னிமலை போர்டு உயர்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்த குமரனுக்கு அதற்கு மேல் படிக்க முடியவில்லை. காரணம் குடும்பத்தின் வறுமை. பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு தனது தாய்மாமன்கள் வீட்டில் தங்கியிருந்து நெசவுத்தொழில் பயின்றார். சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற குமரன், நெசவுத்தொழிலை கற்று பட்டுச்சேலை நெய்வதில் நிபுணத்துவம் பெற்றார். சொந்த ஊரான சென்னிமலைக்கு சென்று தொழில் செய்தார். 1923-ம் ஆண்டு தனது 19 வயதில் திருப்பூரை சேர்ந்த ராமாயி அம்மாள் என்பவரை திருமணம் செய்தார்.

    குடும்பம் நடத்த தேவையான வருமானம் குமரனுக்கு நெசவுத்தொழிலில் கிடைக்கவில்லை. இதனால் திருப்பூருக்கு வந்தார். பஞ்சு வியாபாரத்தில் பெயர் பெற்ற சென்னியப்ப முதலியார், ரங்கசாமி கவுண்டர் ஆகியோர் குமரனுக்கு வேலை கொடுத்து ஆதரித்தனர். பஞ்சை எடைபோடும் குமாஸ்தா வேலையை குமரன் செய்தார். குமரன் காலமெல்லாம் காந்தியின் போதனைகளை கற்றறிந்து அவற்றை பின்பற்றியே தம் வாழ்க்கையை நடத்தி வந்தார். திருமணம் முடிந்த குமரனுக்கு குழந்தைப்பேறு இல்லை. திருப்பூரில் குடியேறிய நாள் முதல் குமரன், கதர் ஆடையை மட்டும் அணிந்து வந்தார். நாள்தோறும் கைராட்டையில் நூல் நூற்று வந்தார். தனது மனைவியையும் கைராட்டையில் நூல் நூற்க வைத்தார். சிக்கனமாக வாழ்க்கை நடத்தி கிடைத்த சொற்ப பணத்தை வைத்து செம்மையாக வாழ்ந்து வந்தார். குமரனுக்கு வீரமும், தியாகமும் இயற்கையாகவே அவரிடம் இருந்தது.

    1930-ம் ஆண்டு வேதாரண்யத்தில் தலைவர் ராஜாஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ள குமரன் விரும்பினார். ஆனால் குமரனின் குடும்பத்தினர், வேலை கொடுத்த முதலாளிகள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதன்காரணமாக உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்க முடியாமல் போனதால் குமரன் மிகவும் வருந்தினார். இதற்காக ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து பிராயசித்தம் தேடிக்கொண்டார். காந்தி இர்வின் சமாதான காலத்தில் திருப்பூரில் நடந்த சாத்வீக மறியல் போராட்டங்களில் குமரன் கலந்து கொண்டு பணியாற்றினார்.

    கடந்த 1932-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி காந்தி, ஆங்கிலேய அரசால் சிறை செய்யப்பட்டதும், 6-ந் தேதி திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் உள்ள காந்தி கட்டிடத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜனவரி மாதம் 10-ந் தேதி சட்ட மறுப்பு இயக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் மக்கள் பங்கேற்காமல் இருப்பதற்காக அவர்களை அச்சுறுத்தும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரிசர்வ் போலீஸ் படையை வரவழைத்து வீதிகளில் துப்பாக்கிகளுடன் போலீசார் வலம் வந்தனர். 1932-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவான பி.டி.ஆஷர், பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காலை 8.30 மணிக்கு மங்கள விலாஸ் ஜின்னிங் பேக்டரியில் இருந்து தியாகி பி.எஸ்.சுந்தரம் தலைமையில் 9 வீரர்கள் ஊர்வலமாக கொடிபிடித்து சென்றனர். குமரன் தாய்நாட்டுக்கொடியை கையில் ஏந்தி முன்வரிசையில் நின்று வீறுநடை போட்டார். தற்போதைய வடக்கு போலீஸ் நிலையம் எதிரில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது 30 போலீசார், 2 காவல்துறை அதிகாரிகள் பாய்ந்து வந்தனர். எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் ஊர்வலமாக சென்றவர்களை கண்மூடித்தனமாக தடியால் தாக்கினார்கள். போலீசாரின் குண்டாந்தடியின் முதல் அடி முன்னே சென்ற குமரனுக்கு விழுந்தது. இடதுபுறம் காதுக்கு நேராக அவருடைய தலை உடைந்து ரத்தம் கொட்டியது. வந்தே மாதரம் என்று வீர முழக்கமிட்டபடி குமரன், தனது இரு கைகளில் கொடியை பற்றிக்கொண்டார். காவலரின் தாக்குதல் நடந்தாலும் குமரன் ஊர்வலமாக செல்ல முயன்றார். அவர் மீது பல அடிகள் விழுந்தது. ரத்தம் அதிகம் வெளியேறியதால் மயங்கிய குமரன், தனது கையில் பற்றிய கொடியுடன் கீழே சாய்ந்தார். ஆனால் கையில் இருந்த கொடியை அவர்விடவில்லை.

    காவலர்களின் கண்மூடித்தமான தாக்குதலில் நிலைகுலைந்து படுகாயத்துடன் கிடந்த குமரன் உள்ளிட்டவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர், குமரனுக்கு பல்வேறு இடங்களில் எலும்புகள் உடைந்து இருப்பதாக தெரிவித்தார். அபாயகட்டத்தில் இருப்பதாக கூறினார். தீவிர சிகிச்சை அளித்தும் குமரனின் உயிர் நள்ளிரவில் பிரிந்தது. குமரன் உடலை அடக்கம் செய்ய அவருடைய உறவினர்களிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர். அதுவும் ஊர்வலமாக உடலை கொண்டு சென்றால் பிரச்சினை வரும் என்று நினைத்து கம்பில் தொட்டில் கட்டி, அதில் குமரனின் உடலை வைத்து நகரின் சந்து, சந்தாக யாருக்கும் தெரியாமல் இடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

    உயிர்பிரியும் வேளையிலும் தாய்நாட்டின் கொடியை கீழே விடாமல் கைகளில் பற்றியதால் திருப்பூர் குமரன் என்று பெயர் பெற்றார். தாய்நாட்டுக்காக இன்னுயிர் கொடுத்த தியாக சீலர் திருப்பூர் குமரன் பிறந்தநாளான இன்று (புதன்கிழமை) அவரின் தியாகத்தை போற்றுவோம். 

    • வீரத்துறவி ‘வீர முரசு' என புகழப்பட்ட சிவாவின் பேச்சில் அனல் பறக்கும்.
    • தோற்றப்பொலிவுடன் சிறைக்குச் சென்ற சிவா ஆறு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து திரும்பும்போது தொழு நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார்.

    இந்திய விடுதலை போராட்டக் காலத்தில் வெள்ளை ஏகாதிபத்திய அடாவடித்தனத்தை தீரத்துடன் எதிர்த்து, விடுதலை சிந்துபாடிய தியாகி சுப்பிரமணிய சிவா.

    வீரத்துறவி 'வீர முரசு' என புகழப்பட்ட சிவாவின் பேச்சில் அனல் பறக்கும். அவர் இதயத்தில் இருந்து பொங்கும் உணர்வுகளும் நாவில் இருந்து எழும் வார்த்தைகளும் சுதந்திரக்கனலை மக்கள் மத்தியில் பற்றி எரியச் செய்தது. 'சிவம் பேசினால் சவமும் வீறுகொண்டு எழும்' என்று பாரதியாரால் பாராட்ட பெற்ற சுப்பிரமணிய சிவா 1884 அக்டோபர் 4-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பிறந்தார். தந்தை ராஜம் அய்யர். தாயார் நாகலட்சுமி. பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். சதானந்த சுவாமிகள் இவரது பெயருடன் சிவம் என்ற பெயரையும் சேர்ந்ததால் சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்டார். பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 12 வயது வரை மதுரையில் இருந்தார். இளம் வயதிலேயே தமிழ் பற்றும் தேசப்பற்றும், அவரை ஆட்கொண்டன. வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கொட்டார கரையில் சதானந்த சுவாமிகளிடம் ராஜயோகம் பயின்றார்.

    பிறகு தமிழகம் திரும்பி சிவகாசி போலீஸ் நிலையத்தில் எழுத்தராக சேர்ந்து, மறுநாளே விலகினார் திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்று திரட்டி தர்மபுரி பாலன சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் ஊர் ஊராக நடந்து சென்று பொதுமக்கள் மத்தியில் வீராவேசமாக பேசி விடுதலைக்கனலை மூட்டினார். காவி உடை அணிந்து வீரத்துறவியாக மாறினார். தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார், பாரதியாரை சந்தித்தார். இருவருக்கும் நண்பரானார். சுதந்திரப் போரில் ஈடுபட்ட சிவா பத்திரிகையில் விடுதலை வேட்கையை தூண்டும் விதத்தில் கட்டுரைகளை எழுதினார். பொதுக்கூட்டங்களில் அனல்பறக்கும் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

    சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, நெல்லை ஆகிய ஊர்களுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தினார். வெள்ளையர் அரசு வ.உ.சிதம்பரனாரையும், சுப்பிரமணிய சிவாவையும் கைது செய்து ராஜதுரோக வழக்கு தொடர்ந்தது. இதில் வ.உ.சி.க்கு 20 ஆண்டுகள் கடுங்காவலும், சிவாவுக்கு 10 ஆண்டு கடுங்காவலும் விதிக்கப்பட்டது. பின்னர் சிவாவுக்கு 6 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது. வ.உ.சி. கோவை சிறையிலும், சிவா திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    சிறையில் அவர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளானார்கள். தோற்றப்பொலிவுடன் சிறைக்குச் சென்ற சிவா ஆறு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து திரும்பும்போது தொழு நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இதனை கண்டு சுப்பிரமணிய சிவா மனம் கலங்கவில்லை. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் பயணத்தை மேற்கொண்டு வெள்ளையர் ஆட்சியின் கொடுமையை விளக்கி பிரசாரம் செய்தார்.

    தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார். ஞானபானு, பிரபஞ்ச மித்திரன், இந்திய தேசாந்திரி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். தனித்தமிழில் கட்டுரை எழுதுவோருக்கு 5 ரூபாய் பரிசு என்று 1915-ல் அறிவித்த தனித்தமிழ் பற்றாளர்.

    பாரத தேவிக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது சிவாவின் லட்சியமாக இருந்தது. பாப்பாரப்பட்டியில் மக்கள் உதவியுடன் 7 ஏக்கர் நிலம் வாங்கி அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார். சர்வ மதத்தினரும் வழிபடும் வகையில் அங்கு பாரதமாதா கோவில் கட்ட முடிவு செய்து தேசபந்து சித்தரஞ்சன் தாசை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார். தொழு நோயின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் ஊர் ஊராக சென்று சொற்பொழிவாற்றி நிதி திரட்டினார். தொடர் பயணத்தால் அவரது உடல் நலம் குன்றியது. இருந்தாலும் சென்ற இடமெல்லாம் விடுதலைக்கான பிரசாரமும் செய்தார்.

    எந்த நேரமும் பாரத விடுதலை பாரத மாதா வழிபாடு என்று வாழ்ந்த வீரத்துறவி சுப்பிரமணிய சிவா 23-7-1925-ல் இவ்வுலக வாழ்க்கையை நீத்தார்.

    சுப்பிரமணிய சிவாவின் அளப்பரிய சேவையை பாராட்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தியாகி சுப்பிரமணிய சிவா மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. வத்தலக்குண்டு பஸ் நிலையம் சிவாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    • தாயின் தோள்களிலும் தந்தையின் கரங்களிலும் உறங்கும் குழந்தையை எந்த விதமான இரைச்சலும் நெருக்கடிகளும் தொந்தரவு தருவதில்லை.
    • கடவுள் நம்பிக்கை தொடங்கி சாதாரண மனிதர்கள்மீது கொள்கிற நம்பிக்கை வரை எல்லா நம்பிக்கைகளிலும் ஓர் ஆழ்ந்த அழுத்தமான பற்றுதல் கொண்டிருக்க வேண்டும்.

    அன்பிற் சிறந்த நம்பிக்கையாளர்களே! வணக்கம்!

    மகாகவி சுப்பிரமணிய பாரதி "நம்பற்குரியர் நம் வீரர்!" என்று குறிப்பிடுவார். நமது உலகமே நம்பிக்கையில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

    சூரியனும் நிலாவும் நம்பிக்கையோடு பூமியைச் சுற்றி வருகின்றன; இவற்றைக் காணும் நம்பிக்கையில் நாள்களின் உறுதியை உணர்ந்து நாமும் நம்பிக்கையோடு வாழ்க்கையை வலம் வந்து கொண்டிருக்கிறோம்.

    குழந்தைகள் பெற்றோர்களை நம்புகின்றன! பெற்றோர்கள் குழந்தைகளை நம்புகின்றனர்! ஆசிரியர்கள் மாணவர்களை நம்புகின்றனர்! மாணவர்கள் ஆசிரியர்களை நம்புகின்றனர்! தொழிலாளிகள் முதலாளிகளை நம்புகின்றனர்! முதலாளிகள் தொழிலாளிகளை நம்புகின்றனர். ஆண்டவன் பக்தர்களை நம்புகின்றான்! பக்தர்கள் ஆண்டவனை நம்புகின்றனர்! தொண்டர்கள் தலைவர்களை நம்புகின்றனர்! தொண்டர்களைத் தலைவர்கள் நம்புகின்றனர், இவ்வாறு ஒருவருக்கொருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

    "நம்பு" என்கிற சொல்லின் அடியாகப் பிறந்ததே "நம்பிக்கை" என்கிற சொல் ஆகும். நம்பு என்பதற்கு "நசை" என்று பொருள் விளக்கம் தருகிறார் தொல்காப்பியர். நசை என்றால் ஆசைப்படுவது!, ஆர்வம் கொள்வது!, விரும்புவது ஆகும். ஒரு பொருள் அல்லது ஒரு செயல்மீது விருப்பத்தோடு ஈடுபாடு கொள்வதே நம்பிக்கை! விருப்பமின்றிக் கொள்வது மூட நம்பிக்கை அல்லது அவ நம்பிக்கை ஆகிவிடும்.

    நாரதர் திரிலோக சஞ்சாரி. அப்படியென்றால் அவர் விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள லோகம் என்ற மூன்று உலகங்களுக்கும் சென்றுவரும் ஆற்றலும் அனுமதியும் பெற்றவர். அவர் ஒருமுறை பூலோகத்திற்கு வருகை தந்தபோது ஓர் ஆன்மீகச் சொற்பொழி வாளரைப் பார்த்தார்.

    "சுவாமி வணக்கம்!"

    "மங்களம் உண்டாகட்டும்!"

    "நான் ஓர் ஆன்மீகச் சொற்பொழிவாளன்! பகவானின் புகழையும் பெருமையையும் அனுதினமும் மேடைகள்தோறும் பரப்பி வருபவன்!"

    "தெரியும்!"

    "நீங்கள் பூலோக சஞ்சாரம் முடித்து தேவலோகம் சென்று பகவான் திருமாலைக் காணும் போது 'எனக்கு எப்போது மோட்சம்?' என்று கேட்டுத் திரும்பி வரும்போது சொல்ல வேண்டும்!" என ஒரு வேண்டுகோள் வைத்தார் பண்டிதர். நாரதரும் "அப்படியே" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

    கொஞ்ச தூரம் சென்றபின் ஓர் ஆல மரத்தின் அடியில் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி செருப்புத் தைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார் நாரதர். நாரதரைப் பார்த்ததும் பார்த்துக்கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு வந்து வணக்கம் செலுத்தினார் தொழிலாளி.

    "மங்களம் உண்டாகட்டும்" ஆசீர்வத்தித்தார் நாரதர்.

    "சுவாமி பூலோக சஞ்சாரம் முடிந்து மேலோகம் செல்லும்போது அங்கே பகவானைப் பார்ப்பீர்கள் தானே!"-கேட்டார் செருப்புத் தைக்கும் தொழிலாளி.

    " எனக்காக பகவானிடம் ஒரு கேள்வி கேட்டு அதற்கான பதிலைக் கேட்டு வர வேண்டும்!; 'எனக்கு எப்போது மோட்சம்?' என்பதே நீங்கள் பகவானிடம் கேட்டுப் பெற வேண்டிய பதில்!" என்றார் தொழிலாளி!

    "அப்படியே!" என்று சொல்லி நகர்ந்தார் நாரதர்.

    மண்ணுலக உலா முடித்து விண்ணுலகம் புகுந்த நாரதர் "நாராயாணா! நாராயணா!" என்றவாறே வைகுண்டத்துக்குள் நுழைந்தார். அங்கே பகவானைக் கண்டு வணங்கியபின் பூலோகத்தில் பண்டிதரும் செருப்புத் தைக்கும் தொழிலாளியும் தங்களுக்கு எப்போது மோட்சம் என்று கேட்டுவரச் சொன்ன செய்தியைத் தெரிவித்தார்.

    பகவான் சிரித்துக்கொண்டே சொன்னார்," நாரதரே! அந்தப் பண்டிதர் இன்னும் நூறுமுறை இறந்து நூறு பிறவி எடுத்து வந்தாலும் மோட்சம் இல்லை!. அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி இன்று இறந்தாலும் நாளைக்கே மோட்சம்! என்று சொல்லிவிடு!"

    "இது என்ன சுவாமி வினோதமாக இருக்கிறது; பகவானின் பெருமைகள் கூறும் அத்தனை சாத்திர தோத்திரங்களையும் கரைத்துக் குடித்து விட்டு அன்றாடம் தமது சொற்பொழிவுத் திறத்தாலே மக்கள் அனைவருக்கும் பக்திப்பால் ஊட்டிவரும் பாகவதருக்கு இன்னும் நூறு பிறவிக்கு மோட்சம் இல்லையா? படிப்பு வாசனையே இல்லாத செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு உடனடி மோட்சமா?" என்று கேட்டார்.

    "நாரதரே! மண்ணுலகம் செல்லுங்கள்!.அவர்கள் உங்களைப் பார்த்தவுடன்,'பகவான் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்? என்பதை முதல் கேள்வியாகக் கேட்பார்கள். அவர்கள் இருவரிடமும் நான் இப்போது கூறப்போகும் பதிலைச் சொல்லிப் பாருங்கள்! அப்போது அவர்கள் என்ன விதமாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அப்புறம் ஒரு முடிவுக்கு வாருங்கள்!" என்றார் பகவான்.

    "சரி அவர்களிடம் நான் என்ன கூற வேண்டும்?" கேட்டார் நாரதர்.

    "நான் போய்ப் பார்க்கும்போது, பகவான் ஒரு துணி தைக்கும் ஊசியினுடைய காது ஓட்டைக்குள் ஒரு யானையைத் திணித்துக் கொண்டிருந்தார்! என்றுமட்டும் கூறிப்பாருங்கள்! பிறகு அவர்களது எதிர்வினைகளை வைத்து அவர்களுக்கு நான் கூறிய மோட்சக் கணக்கு சரியா? இல்லையா? என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!".

    பகவானிடம் விடைபெற்றுக் கொண்டு நாரதர் வெகு ஆவலோடு பூலோகம் வந்தார்; முதலில் பண்டிதரிடம் சென்றார். பண்டிதரும் வணங்கி, " மேலோகத்தில் பகவானைக் கண்டீர்களா? என்ன செய்து கொண்டிருந்தார்?" என்று கேட்டார்.

    நாரதரும் துணி தைக்கும் ஊசியின் காது ஓட்டைக்குள் பகவான் யானையை நுழைத்துக் கொண்டிருந்ததாக பகவான் கூறியனுப்பியதைக் கூறினார். உடனே பண்டிதருக்குக் கண்மண் தெரியாத கோபம் வந்து விட்டது."ஐயா நாரதரே! படித்தவர் மாதிரியா பேசுகிறீர்! யானையைக் கொண்டுபோய் யாராவது ஊசியின் காதுக்குள் நுழைக்க முடியுமா?.யாருக்குக் காது குத்த நினைக்கிறீர்?" என்று திட்டி அனுப்பிவிட்டார்.

    அடுத்து ஆல மரத்தடிக்குச் சென்றார். செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தொழிலாளி, கையில் செருப்புத் தைக்கும் ஊசி சகிதம் வந்து நாரதருக்குப் பெரிய வணக்கம் வைத்தார். அவரும் பண்டிதர் கேட்ட கேள்வியையே கேட்டார். நாரதரும், இப்போது நான் சொல்லப் போகும் பதிலை வைத்துக் கோபப்பட மாட்டாயே! என முன் எச்சரிக்கையாகக் கேட்டு விட்டு, பகவான் ஊசியின் காது ஓட்டைக்குள் யானையை நுழைத்துக் கொண்டிருந்த காட்சியைக் கூறினார்.

    அவ்வளவுதான், செருப்புத் தைக்கும் தொழிலாளி கையில் வைத்திருந்த எல்லாவற்றையும் கீழே போட்டு விட்டு, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கும்பிட்டபடி "நாராயணா! நாராயணா!" எனக் கூத்தாடத் தொடங்கிவிட்டார்.

    இப்போது நாரதர் தொழிலாளியிடம் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்,"ஐயா! அதெப்படி ஊசியின் காதுக்குள் யானையை நுழைக்க முடியும்? பக்தி உங்கள் கண்ணை மறைக்கிறதா? அறிவின் துணை கொண்டு ஆராய்ந்தால் இது பொருந்தாதே?"

    செருப்புத் தைக்கும் தொழிலாளி தனது காலடியில் கீழே விழுந்து கிடந்த ஓர் ஆலம்பழத்தை எடுத்து 'இதைப் பிய்த்துக் காட்டுங்கள்!' என்று கூறினார். 'உள்ளே இருப்பவை என்ன?' என்று கேட்டார். 'எல்லாம் ஆலமத்தின் விதைகள்! 'என்று பதிலளித்தார் நாரதர்.

    "ஆம் இத்துனூண்டு ஆலம்பழத்துக்குள் நூற்றுக் கணக்கான ஆலமரங்களை விதைகளாக உள்ளே வைத்துப் படைக்கத் தெரிந்த பகவானுக்கு அந்தச் சிறிய ஊசியின் காது ஓட்டைக்குள் யானையை நுழைப்பது என்ன முடியாத காரியமா? " கேட்டார் தொழிலாளி.

    வாயடைத்துப் போனார் நாரதர்.

    நம்பிக்கை!. ஆம்! அன்பின் வழிகொண்டு ஆண்டவன்மீது நம்பிக்கை வைத்ததால் அவரை எளிதில் அடைந்தார் செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் படித்த பண்டிதரோ அறிவின் வழியில் நம்பிக்கை கொண்டதால் ஆண்டவனைத் தேடிக்கொண்டே தான் இருக்க முடிந்தது.

    நம்பிக்கை என்பது நம்மிலிருந்து தொடங்க வேண்டும். நாம் முதலில் நம்மால் முடியும் என்று நம்மை நம்பத் தொடங்க வேண்டும். நம்மை நம்புவது என்பது நம்மை நாமே நேசிப்பது. எந்த விதமான கழிவிரக்கமும் கொள்ளாமல் எல்லா நிலைகளிலும் நாம் பொருத்தமானவராக இருப்பதாகவே நினைக்க வேண்டும். தன்னம்பிக்கையே நன்னம்பிக்கையாக மாறும் மூல மந்திரமாகும்.

    ஒரு குழந்தையைப்போல நம்பிக்கை வையுங்கள் என்பார்கள்; தாயின் தோள்களிலும் தந்தையின் கரங்களிலும் உறங்கும் குழந்தையை எந்த விதமான இரைச்சலும் நெருக்கடிகளும் தொந்தரவு தருவதில்லை. ஏனெனில் குழந்தை முழுமையாகப் பெற்றோர் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் அது வருத்தப்படுவதுமில்லை; அவநம்பிக்கை கொள்வதுமில்லை!. அன்பின் அடிப்படையிலேயே நம்பிக்கை கிளை விரிக்கிறது.

    ஞானியும் விஞ்ஞானியும் வேறு வேறானவர்கள். ஆயினும் இயற்கைப் படைப்பின் ரகசியங்களை உள்ளுணர்வின் அடிப்படையிலும் அறிவியலின் வழிகாட்டலிலும் ஆராய்ந்து வருபவர்கள். ஞானிக்குக் கடவுளே முதன்மை; விஞ்ஞானிக்கோ அறிவே முதன்மை.

    ஞானியும் விஞ்ஞானியும் ஓர் இடத்தில் சந்தித்து விவாதித்துக் கொண்டனர். "கடவுளைக் காட்ட முடியுமா?"ஞானியிடம் விஞ்ஞானி கேட்டார். "காற்றைக் காட்ட முடியுமா? அதைப்போலத் தான் கடவுளும்! என்றார் ஞானி விஞ்ஞானியிடம். விஞ்ஞானி விட்டபாடில்லை; "இரண்டு நிமிடம் மூச்சு விடுவதை நிறுத்திப் பாருங்கள்! நீங்கள் காற்றை உணரலாம்!"என்றார். "அதையே ஒரு ஐந்து நிமிடம் நீட்டித்துப் பாருங்கள்! கடவுளையே நேரடியாகப் பார்த்து விடலாம்!" என்றார் நகைச்சுவையாக ஞானி.

    கடவுள் நம்பிக்கை தொடங்கி சாதாரண மனிதர்கள்மீது கொள்கிற நம்பிக்கை வரை எல்லா நம்பிக்கைகளிலும் ஓர் ஆழ்ந்த அழுத்தமான பற்றுதல் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் எல்லாவற்றிலும் சந்தேகம் எனும் தொற்று நோய் பற்றிக்கொள்ளும். சந்தேகம் பற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டால் எந்தச் செயலையும் நாம் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அவ நம்பிக்கையின் அவதாரமாகவே நாம் மாறிவிடும் அவலநிலை அரங்கேற்றம் ஆகிவிடும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து உதறி, நேர்முறை எண்ணங்களை மனத்தில் நிரப்பத் தொடங்கினால் நம்பிக்கை நாற்றுகள் தாமாகவே துளிர்த்து வளரத் தொடங்கி விடும்.

    எந்தச் செயலினைத் தொடங்கும் போதும் முழு விருப்பத்துடனும் முழு நம்பிக்கையுடனும் தொடங்கினால் முழு வெற்றிதான். அதற்கு நேர்த்தியான திட்டமிடலும் நிலைத்த செயலூக்கமும் மிக மிக அவசியம்.

    நம்பிக்கையே வாழ்க்கை!

    நம்புவோம் நாளையும் நமதே!

    தொடர்புக்கு - 9443190098

    • ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பில் வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமல்ல.
    • ரஜினி சார் ஓ.கே. சொல்லி விட்டாரா? அது எப்படி? வானத்துக்கும் பூமிக்கும் பறந்தது போன்ற உணர்வு.

    என்னது....

    ரஜினி சாருக்கு ஜோடியாவா...?

    கேட்டதுமே தூக்கி வாரி போட்டது. உண்மையிலேயே தெரிந்துதான் இவர்கள் பேச வந்திருக்கிறார்களா...?

    ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவனம். எவ்வளவு பெரிய நிறுவனம்! அங்கிருந்து பேச வந்திருக்கிறார்கள் என்றதுமே ஏற்பட்ட சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பில் வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமல்ல. திரை நட்சத்திரங்கள் எல்லோருக்கும் அது ஒரு கனவு.

    அப்படி இருக்கும்போது வளர தொடங்கிய கால கட்டத்தில் அங்கிருந்து வாய்ப்பு வீடு தேடி வந்தால் எப்படி இருக்கும்...?

    மகிழ்ச்சி... அப்படி ஒரு மகிழ்ச்சி....

    டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் சார் கதையை சொன்னார். கதையும் மிகவும் பிடித்து போனது.

    ஹீரோ யார்...? என்று நாங்கள் கேட்டதும் அவர் சொன்ன பதில்தான் எங்களை திக்குமுக்காட வைத்து விட்டது.

    ரஜினிதான் ஹீரோ என்றார்கள்.

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ரஜினிசார் இதற்கு ஒத்துக்கொள்வாரா? என்று எனக்கு சந்தேகம்.

    நாலு வயதிலேயே அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறேன். இப்போது அவருக்கு ஜோடியாக என்றால்... நிச்சயம் சம்மதிக்க மாட்டார் என்று நினைத்தோம்.

    அம்மாவும் இதே சந்தேகத்தை சொன்னார். ஆனால் டைரக்டர் உங்களுக்கு சம்மதமா என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டு விட்டு சென்றார்.

    எங்களுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. இந்த வாய்ப்பு கிடைக்காது என்றே நினைத்து இருந்தோம்.

    ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று ஒருநாள் வந்து ரஜினி சார் ஓ.கே. சொல்லி விட்டார் நீங்கள்தான் ஹீரோயின் என்று முடிவு செய்துள்ளோம் என்றார்கள்.

    ரஜினி சார் ஓ.கே. சொல்லி விட்டாரா? அது எப்படி? வானத்துக்கும் பூமிக்கும் பறந்தது போன்ற உணர்வு.

    மீனா.... நீ ரஜினி சார் ஜோடியாக நடிக்கப் போகிறாய் என்று என்னையும் அறியாமல் என் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது.

    இன்னொரு பக்கத்தில் அவருக்கு ஜோடியாக என்றதும் ஒருவிதமான படபடப்பும் இருந்தது.

    எல்லாம் ஓ.கே. சொல்லி பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட பிறகும் ஷூட்டிங் போகும் வரை அம்மாவுக்கு நம்பிக்கை வரவில்லை.

    அந்த படம்தான் 'எஜமான்'! ரஜினி சாருக்கு ஜோடியாக நான் நடித்த முதல் படம்.

    எப்படி என்னை ஹீரோயினாக தேர்வு செய்தார்கள்? ரஜினி சார் எப்படி சம்மதித்தார் என்பது என் மனதில் விடை தெரியாத கேள்வியாக இருந்தது.

    அதற்கு 30 வருடங்களுக்கு பிறகு நடந்த மீனா-40 நிகழ்ச்சியின்போது விடை கிடைத்தது. ரஜினிசார் மேடையிலேயே அதை விவரித்தார்.

    எஜமான் படத்துக்கு ஹீரோ ரஜினி என்பதை ஏ.வி.எம். நிறுவனம் முடிவு செய்து விட்டது. இந்த கதைக்கு யாரை ஹீரோயினாக போடலாம் என்று விவாதித்து இருக்கிறார்கள்.

    அப்போது டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் சார் நான் கதாநாயகியாக நடித்திருந்த தெலுங்கு படத்தை பார்த்து என்னை ஹீரோயினாக போட்டால் நல்லாயிருக்கும் என்று முடிவு செய்துள்ளார். அதுபற்றி படத் தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னதும் டைரக்டருக்கு ஓ.கே. என்றால் எங்களுக்கும் ஓ.கே.தான் என்று ஏ.வி.எம். நிறுவனம் சொல்லி இருக்கிறது.

    அதன் பிறகு டைரக்டர் ரஜினி சாரை சந்தித்து பேசி இருக்கிறார். அவரும் ஹீரோயின் யார் என்று கேட்டு இருக்கிறார்.

    டைரக்டர் 'மீனா' என்றதும் மீனாவா? யார் அது... பீல்டில் அப்படி யார் இருக்கா? என்று கேட்டுள்ளார்.

    'அன்புள்ள ரஜினிகாந்தில் உங்களோடு நடித்த பொண்ணு என்று நினைவுபடுத்தி இருக்கிறார்.

    அதை கேட்டதும், அந்த குட்டி பெண்ணா என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்.

    டைரக்டர் ஆமாம் என்றதும் 'என்ன சார் ஹீரோயின் செலக்ஷன்? அது அமுல் பேபி மாதிரி சின்ன பொண்ணாச்சே! ஹீரோயினுக்கு எப்படி சரிப்படும்? என்று தயங்கி இருக்கிறார்.

    டைரக்டர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் ரஜினி சார் ஏற்கவில்லை.

    உடனே டைரக்டர் அந்த பொண்ணு ஹீரோயினா நடித்து வெளியான படம் தெலுங்கில் சக்கை போடு போடுகிறது. அந்த படத்தை பார்ப்போம். அதன் பிறகு நீங்களே ஏற்றுக் கொள்வீர்கள் என்று கூறியிருக்கிறார்.

    அதன் பிறகு டைரக்டர் சொன்ன மாதிரியே அந்த தெலுங்கு படத்தை ரஜினி சார் பார்த்துள்ளார்.

    அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியலையாம். 'அவ.... இவ்வளவு வளர்ந்திட்டாளா.... என்னால் நம்பவே முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

    இப்ப சொல்லுங்க...? எங்கள் தேர்வு எப்படி? இந்த கதைக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று டைரக்டர் சொன்னதும் ரஜினி சாரும் ஓ.கே. சொல்லி இருக்கிறார்.

    அப்படித்தான் எஜமான் என்னை தேடி வந்திருக்கிறார்.

    படப்பிடிப்புக்கான நாளும் வந்தது. 'லொகேஷன்' ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி. சென்னையில் இருந்து நானும் அம்மாவும் ராஜமுந்திரிக்கு ரெயிலில் பயணித்தோம்.

    ரெயிலில் செல்லும்போது தூக்கமே வரவில்லை. ரஜினி சார் சூப்பர் ஸ்டார். அவருக்கு ஜோடியாக நடிப்பது எப்படி இருக்கும்?

    குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது "ரஜினி அங்கிள்... ரஜினி அங்கிள்..." என்று அவரை சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். அவரோடு விளையாடி இருக்கிறேன்.

    ஆனால் இப்போது... எப்படி....? ஒருவிதமான வெட்கம்...! வார்த்தையால் விவரிக்க முடியாத ஒருவிதமான உணர்வு என்னுள் வந்து வந்து போனது.

    குழந்தையாக அவர் முன்பு நின்றதற்கும் இப்போது நிற்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

    இனி அவரை பார்க்கும்போது எப்படி இருக்கும்? எப்படி அழைப்பது? அவர் என்ன சொல்வார்?

    இப்படி பல பல கேள்விகள். விதவிதமான எண்ணங்கள்.... ஆனால் எதற்கும் ஒரு முடிவு இல்லை. ரெயில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு இணையாக என் மனமும் வேகமாக அடித்து கொண்டது.

    அந்த நினைவுகளோடு எப்படியோ தூங்கி விட்டேன். கண்விழித்தபோது ரெயில் ராஜ முந்திரியை நெருங்கி கொண்டிருந்தது.

    ஏற்கனவே தெலுங்கு பட ஷூட்டிங்குக்காக பல தடவை ராஜமுந்திரிக்கு சென்று வந்ததால் அது எனக்கு நன்கு பரிச்சயமான இடம்.

    ரெயிலை விட்டு இறங்கி நேராக தங்கும் ஓட்டலுக்கு சென்றோம். ஓட்டலின் முதல் தளத்தில் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

    ஓட்டல் அறையில் தங்கி இருந்தேன் அவ்வளவுதான். ஆனால் அந்த அறையை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தேன். ஏன்? என்னாச்சு... அடுத்த வாரம் சொல்கிறேன்.

    பெற்றோரின் அக்கறை...

    எனது வளர்ச்சியில் என் அம்மா-அப்பாவின் பங்களிப்பு அலாதியானது. பார்த்து பார்த்து எனது வளர்ச்சியில் அவர்கள் காட்டிய அக்கறைதான் என்னை சிகரத்தை நோக்கி அழைத்து சென்றது.

    தெலுங்கு படங்களில் ராதிகா அவர்களுக்கும், சுகாசினி அவர்களுக்கும் குழந்தையாக நடித்து இருக்கிறேன். ரஜினி சாருக்கு மகளாக நடித்து விட்டு அவருக்கு ஜோடியாகவே நடிக்கும் வாய்ப்பை பெற்றதை மூத்த கலைஞர்களான ராதிகா, சுகாசினி ஆகியோர் வாழ்த்தினார்கள். சமத்தான, அழகான குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்து வருபவர் என்று பாராட்டினர். அவர்களை எல்லாம் பார்த்து பார்த்துதான் கலைத்துறையில் நான் வளர்ந்து கொண்டிருந்தேன்.

    'என் ராசாவின் மனசிலே' படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த படமானது. அடுத்து வந்த 'எஜமான்' தமிழ் திரை உலகில் எனக்கென்று ஒரு இடத்தை தேடிக்கொடுத்தது. இந்த படத்துக்கு பிறகு ரொம்ப பிசி ஆகி விட்டேன்.

    (தொடரும்)

    • நோய்களுக்கு ஏற்ப உள்மருத்துவம் மற்றும் புறமருந்துகள் தேர்வு செய்து சிகிச்சையளிக்கும்போது பிணியாளன் விரைவில் குணமடைகிறான்.
    • கோதுமை தவிடை வறுத்து துணியில் முடிந்து மார்பு மற்றும் முதுகு பகுதியில் ஒற்றடமிட்டு வர மார்பு சளி கரையும்.

    தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவம் மனித இனம் தோன்றிய காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும். நாய்க்கு தன் உடல் கோளாறுகளுக்கு அருகம்புல்லைத் தின்னவும், பூனைக்கு குப்பைமேனியை வணங்கவும், கீரிக்கு விடம் பாதிக்காமல் இருப்பதற்கு கீரிப்பூண்டில் உருளவும் சொல்லிக் கொடுத்த இறைவனாகிய சிவபெருமானே மனிதருக்கு மருத்துவத்தை சொல்லிக்கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

    "மறுப்பது உடல் நோய் மருந்தெனலாகும்

    மறுப்பது உளநோய் மருந்தென சாலும்

    மறுப்பது இனிநோய் வாராதிருக்க

    மறுப்பது சாவை மருந்தெனலாமே"

    என்ற திருமூலரின் வாக்கிற்கு இணங்க, சித்த மருத்துவம் காப்பு, நீக்கம், நிறைப்பு என்ற மூன்று தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. நோய் வருவதற்கு முன்பே சுகநிலையில் நோய் ஏற்படாதிருக்க மருந்து உண்டால் அம்மருந்துகள் 'காப்பு' என்றும், நோய் வந்தபின் அதனை நீக்குவதற்காக கொடுக்கப்படும் மருந்தும், சிகிச்சையும் 'நீக்கம்' என்றும், பிணியினால் உண்டாகும் இழப்புகளை ஈடு செய்வதற்கு கொடுக்கப்படும் மருந்து முறை நிறைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

    சித்த மருத்துவத்தில் உள்மருந்துகள் 32 ஆகவும், புறமருந்துகள் 32 ஆகவும் வகுக்கப்பட்டுள்ளது. நோய்களுக்கு ஏற்ப உள்மருத்துவம் மற்றும் புறமருந்துகள் தேர்வு செய்து சிகிச்சையளிக்கும்போது பிணியாளன் விரைவில் குணமடைகிறான்.

    உடலின் புறப்பகுதியில் பயன்படுத்தப்படும் புறமருந்துகள் குறித்து விரிவாக காணலாம். கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, பொட்டணம், தொக்கணம், புகை, மை, பொடிதிமிர்த்தல், கலிக்கம், நசியம், ஊதல், நாசிகாபரணம், களிம்பு, நீர், வர்த்தி, சுட்டிகை, சலாகை, பசை, களி, குடோரி, முறிச்சல், கீறிகட்டல், காரம், அட்டைவிடல், அறுவை, கொம்புகட்டல், உறிஞ்சல், குருதிவாங்கல், பீச்சு என புறமருந்துகள் 32 வகைப்படுகிறது.

    கட்டு: தாவரங்களின் இலைகள் அல்லது பட்டைகளை இடித்தோ, அரைத்தோ, வதக்கியோ நோயுள்ள இடங்களில் கட்டுதல் கட்டு எனப்படும். வீக்கம், திறந்த காயங்கள், சதைப்பிடிப்பு, சுளுக்கு மற்றும் எலும்பு முறிவு அல்லது விலகல் போன்ற நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. சுத்தமான பருத்தி துணியில் மருந்துகளை தடவி நோயுள்ள இடங்களை சுற்றி கட்டும்போது ரத்த ஓட்டத்தை சீராக்கி, அவ்விடம் மாசுபடுவதையும் தடுக்கிறது. சித்த மருத்துவ நூல்களில் சன்னி நோய்க்கு தலையிலும், கண் நோய்க்கு கண்ணிலும், கைகால் எரிவிற்கு உள்ளங்கை உள்ளங்காலிலும், கால் வீக்கத்திற்கு காலிலும் கட்டுதல் வேண்டும் என்று கூறப்படுகிறது.

    பற்று: தாவரங்களின் இலை, பட்டை, வேர் போன்றவற்றை அரைத்து நோய்நிலைக்கேற்ப சூடு செய்தோ, சூடு செய்யாமலோ வலி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் திண்மையாக அப்புதல் பற்று எனப்படும்.தோல் நோய்களில் உள்ள அழற்சியை போக்கவும்,மூட்டு தேய்மானம்,விரைவீக்கம் போன்ற நிலைகளில் உள்ள வீக்கத்தை குறைக்கவும், மேலும் சில கட்டிகள் போன்றவற்றை கரைக்கவும் இது பயன்படுகிறது. கழற்சி விதை பொடி, தொட்டாற்சுருங்கி, நத்தைசூரி போன்றவற்றை அரைத்து முட்டை வெண்கருவுடன் சேர்த்தோ, பச்சைப்பயிறு மா போன்றவற்றுடன் சேர்த்து அரைத்தோ பற்றிட பயன்படுத்தலாம்.

    ஒற்றடம்: இது மூலிகைகளின் இலைகளையோ, கருங்கல் பாறைத்தூள், இரும்பு கிட்டத்தூள், அரிசித்தவிடு, சுண்ணாம்பு காரை, செங்கல்தூள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வறுத்து துணித்துண்டில் முடிந்து, மார்பு, தலை, கன்னம், தோள்கள், முதுகு, இடுப்பு, முழங்கால், காலடி ஆகிய இவ்விடங்களில் சூடுண்டாகும்படி ஒற்றி எடுக்கும் முறையாகும். மேற்கூறிய இடங்களில் மட்டுமல்லாமல் மூக்கு, வயிறு, தொப்புள், இரண்டு விலாப்பக்கம், இடுப்பு அரை ஆகிய இவ்விடங்களிலும் ஒற்றிடலாம்.

    கம்பளித்துணி அல்லது பருத்தி துணியைக் கொதிக்கும் வெந்நீரில் நனைத்து பிழிந்து வேதனையுள்ள கட்டி, வீக்கம் இருக்கும் இடங்களில் ஒற்றடமிடலாம். மேலும் தைலங்களை நோயுள்ள இடங்களில் பூசி நொச்சி, எருக்கு, தழுதாழை, ஆமணக்கு, துத்தி, போன்ற இலைகளை ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒற்றடமிட மூட்டு வீக்கத்தை போக்கும்.

    மஞ்சள், உப்பு இவ்விரண்டையும் பொட்டணமாக கட்டி கொதிக்கும் எண்ணெயில் தோய்த்து சற்று ஆறியபின் அடிபட்ட வீக்கங்களுக்கு நோயுள்ள இடங்களில் ஒற்றடம் இடலாம். இவ்வாறே எலுமிச்சம்பழத்தை இரண்டாக அரிந்து, துணித்துண்டில் முடிந்து எண்ணெயில் தோய்த்து ஒற்றடமிடலாம்.

    கோதுமை தவிடை வறுத்து துணியில் முடிந்து மார்பு மற்றும் முதுகு பகுதியில் ஒற்றடமிட்டு வர மார்பு சளி கரையும். ஆமணக்கு விதை பருப்பை வறுத்து விடா வயிற்றுவலிக்கு ஒற்றடமிடலாம். மேலும் குழந்தைகளின் வயிற்று வலிக்கு ஆமணக்கு இலை, வெற்றிலை போன்றவைகளை வதக்கி ஒற்றடமிடலாம்.

    பூச்சு: கொதிக்க வைத்த சில இலை இரசங்களையாவது, தைலங்களையாவது நோயுள்ள இடங்களில் பூசுவது பூச்சு எனப்படும். வேப்பிலை, மஞ்சள், குப்பைமேனி போன்ற செடிகளின் இலைகளை அரைத்து சாறெடுத்து அரிப்புள்ள இடங்களிலும், மருக்கள் உள்ள இடங்களிலும் மேல்பூச்சாக பூசி குளித்து வரலாம். சந்தனத்தை பழச்சாற்றில் அரைத்து முகப்பருக்கள் மீது பூசலாம். மேலும் மூலிகை தைலங்களை நோய்க்கு ஏற்றவாறு மேல் பூசி வரலாம். சுண்ணாம்பு தேன் கலந்து வீக்கத்திற்கு மேல் பூசலாம்.

    வெள்ளரி விதை, சந்தனம், நெருஞ்சி முள் இவற்றை சம அளவு எடுத்து தாய்ப்பால் அல்லது பசுவெண்ணெய் சேர்த்து அரைத்து தொப்புள் மற்றும் அடிவயிற்றில் பூசி வர நீர்க்கடுப்பு குறைந்து நீர் வெளியேறும் .

    கஸ்தூரி மஞ்சளை பொடிசெய்து இளநீர் சேர்த்து அரைத்து கால் வெடிப்புக்கு பூச்சாக பயன்படுத்தலாம்.

    வேது: வெந்நீரில் நொச்சித்தழை முதலியவற்றை இட்டு அதனின்று கிளம்பும் ஆவியையாவது, செங்கலை சிவக்க காய்ச்சி நீரில் இட்டு அதிலிருந்து எழும் ஆவியையாவது பிடிப்பது ஆகும். தலையில் நீர்கோர்த்து இருந்தால் எலுமிச்சம் பழ விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை பிடிக்கலாம்.

    உடல்வலிக்கு நீரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி, அதில் உப்பு பொடியை நிரம்ப போட்டு அதிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படுமாறு செய்யலாம். இப்படி செய்வதால் வியர்வை உண்டாகி வேதனை தணியும். மேலும் குப்பைமேனி, மஞ்சள்தூள், துளசி, தும்பை, கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை போன்றவற்றை தேவைக்கேற்ப வேது பிடிக்க பயன்படுத்தலாம். வேது பிடிப்பதற்கு முன் சிறிது நீர் அருந்திவிட்டு பிடிக்கவேண்டும். இதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். புளியிலை, துத்தியிலை, முசுமுசுக்கையிலை இவைகளின் சாற்றை நீரில் ஊற்றி செங்கலை சிவக்க சுட்டு போட்டு மூல நோய்க்கு ஆவி பிடிக்கலாம்.

    பொட்டணம்: இது சில மருந்துகளை துணித்துண்டில் பொட்டணமாக முடிந்து காது, மூக்கு, எருவாய், பெண்களின் கருவாய் ஆகிய இடங்களில் வைக்கப்படுவதாகும். சில சரக்குகளை இடித்து முடிச்சுக்கட்டி வேப்பெண்ணெய்யோ வேறு நெய்யோ சுடவைத்து அம்முடிச்சை அதில் நனைத்து நோயுள்ள இடங்களில் ஒற்றடம் போடவும் உதவும் முறையாகும்.

    காதுவலி, இரைச்சல் போன்றவைக்கு பூண்டு,காயம் இவற்றை சிறு பொட்டணமாக கட்டி காதில் வைத்து வரலாம். சைனுசைடிஸ், அலர்ஜிக் ரைனைட்டிஸ் போன்ற பிரச்சினைகளில் கருஞ்சீரகத்தை ஒரு சிறு பொட்டணமாக கட்டி சிறிது நசுக்கி முகர்ந்து வரலாம். மேலும் நாவல், அத்தி, கடுக்காய் தோல் ஆகியவற்றின் பொடிகளை ஒரு சிறு துணியில் முடிந்து கருவாயில் தினம் வைத்து வர யோனி தளர்ச்சி நீங்கும்.

    சம்பா அரிசி தவிடு, புண்ணாக்கு சம அளவு எடுத்து நன்றாக இடித்து வறுத்து பஞ்சு வெண்துணியில் பொட்டணம் கட்டி அளவான சூடுடன் தலையில் ஒற்றி எடுக்க ஒற்றை தலைவலி தீரும்.

    தொக்கணம்: தொக்கணம் என்பது மர்த்தனம் எனப்படும். வாதத்தால் உண்டாக்கக்கூடிய நோய்கள் எல்லாவற்றையும் நீக்குவதற்கு இது பயன்படும். வெறுங்கையாலோ, தைலங்களை தடவியோ தட்டல், இறுக்கல், பிடித்தல், முறுக்கல், கைகட்டல், அழுத்தல், இழுத்தல், மல்லாத்துதல், அசைத்தல் என ஒன்பது வகையில் செய்யப்படும். இதை தொடர்ந்து செய்து வர நரம்பில் ஊறி வருத்துகின்ற வாயுக்கள், பிடிப்புகள், சுளுக்குகள் குணமாகும். இம்முறை வாதபிணியினால் எழுந்திருக்கமாட்டாத நொண்டிபோல்வனையும் எழுந்து நடக்க செய்யும். உளுந்து தைலம், விஷமுஷ்டி தைலம், சிவப்பு குக்கில் தைலம் போன்றவற்றை பயன்படுத்தி தொக்கணம் செய்யலாம்.

    புகை: இது மருந்து பொருட்களை துணித்துண்டில் வைத்து திரியாகச் செய்து கொளுத்தி புகை பிடித்தல், புண் முதலியவற்றில் தாக்கும்படி செய்தல் போன்ற முறைககளில் பயன்படுகிறது. மேலும் இது அறைகளில் உள்ள நாற்றத்தை அகற்றும் வண்ணம் மணப்புகையாகவும் போடப்படுகிறது.

    ஊமத்தை பூவை சுவாச நோய்களில் புகை பிடிக்க பயன்படுத்தலாம். சலதோசத்தில் மஞ்சள் கொம்பை சுட்டு அந்த புகையை பிடித்து வரலாம்.மேலும் சாம்பிராணி புகையால் தலைபாரம் குறையும்.

    சுக்கு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், ஓமம் போன்றவற்றை ஆடாதோடையின் இலைச்சாற்றை விட்டு அரைத்து, அதை துணியில் தடவி திரியாக திரித்து, வெயிலில் உலர்த்தி சைனசைடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் தினம் காலை திரியை கொளுத்தி புகையை மூக்கில் பிடித்து வர நீர் வடிந்து குணம் தரும்.

    மேலும் பூச்சிக்கடியில், அகஸ்தியர் குழம்பு என்னும் சித்த மருந்தை திரியாக்கி அப்புகையில் கடிவாயை காட்டி வர பூச்சிக்கடியால் உண்டாகும் எரிச்சல் மற்றும் வலி தணிவதோடு, சுற்றியுள்ள இடங்களில் சிவந்திருப்பது படிப்படியாக குறைவதை கண்ணால் காண முடியும்.

    மேலும் இந்த அகஸ்தியர் குழம்பு புகையால் பல வகைப்பட்ட புண்கள், முக்கியமாக நீரிழிவினால் ஏற்பட்ட புண்களில் இருந்து நீர் வடிந்து எளிதில் புண் உலருகின்றது.

    மை: இது சில மருந்து சரக்குகளை அஞ்சனக்கல் எனப்படும் சரக்கோடு சேர்த்து, இலைச்சாறு விட்டு உலர உலர அரைத்து, உலர்த்தி, பிறகு தேன்விட்டு மைபோல அரைத்துக் கொள்வதும், சில சரக்குகளை கருக்கி தேன் விட்டு அரைத்து கண்களில் மைபோல தீட்டிக் கொள்ளும் முறையாகும்.

    சுக்கு, திப்பிலி, இந்துப்பு, வெள்ளைப்பூண்டு போன்ற சரக்குகளை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து மாத்திரையாக செய்து உலர்த்தி கொள்ளலாம். சன்னி போன்ற நோய்நிலையில் இம்மாத்திரையை எலுமிச்சை சாற்றில் உரைத்து மருத்துவரின் கண்காணிப்பில் மைபோல தீட்டலாம். மேலும் மாதுளை இலையை பசும்பாலில் அரைத்து கண்ணை சுற்றி பூசி வர கண்ணெரிச்சல் குணமாகும்.

    - தொடரும்

    • வாக்யும் கிளீன் செய்யும் ரோபோக்கள் பல்கிப்பெருகி விலையும் சல்லீசாக ஆகிவிட்டது.
    • ரோடிமாடிக் என்னும் ரோபோ சப்பாத்தி பூரியெல்லாம் சடுதியில் செய்து இறக்கி விடுமாம்.

    "சேகர்! எனக்கு ஒரு சோமா கலந்து கொடு!"

    "வர்ரேன் எஜமானரே!"

    குரலில் கடுப்பு தெரிகிறதோ?

    "சேகர்! எனக்கும் ஒரு சோமா தருவியா?"

    "ஆஹா இதோ ஒரே நொடியில்!"

    நித்யாவுடன் பேசும்போது மட்டும் இந்த சேகரின் குரலில் ஒரு குழைவு!

    ஆத்மா விசனப்பட்டான்….

    பல ஆண்டுகளுக்கு முன்பே சுஜாதா வீட்டில் உதவிகள் செய்யும் சேகர் என்னும் ரோபோ பற்றி எழுதிகற்பனை பண்ணிவிட்டார். அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நித்யா தன் கணவன் ஆத்மாவைக்கேலி செய்தால் "ஹஹ்ஹ்ஹ்ஹ" என்று கச்சிதமாகச்சிரிக்கும் அந்த சேகர்!

    அப்போது கற்பனையாக இருந்தது இப்போது கிட்டத்தட்ட நிஜமாகிக்கொண்டிருக்கிறது.

    இயந்திர இயலின் முன்னேற்றங்களும் இணையத்தின் வீச்சும் தகவல் தொழில்நுட்ப தொடர்பின் வாயு வேக மனோ வேக உயர்வும் ரோபோக்களின் உபயோகங்களை பல மடங்கு விஸ்தாரமாக்கிவிட்டன.

    "ஏண்டி சமையல் ரூமைப்பெருக்கி மொழுகுன்னா இப்படி மாடு கன்னு போட்ட இடம் மாதிரி பண்ணி வெச்சிருக்க!"

    அம்மாக்கள் கவலையுடன் பெண்களைக்கோபிக்கும் காலமெல்லாம் போய்விட்டன!

    வீட்டுக்குள் நச் நச்சென்று அலுப்பு தட்டும் பல வேலைகளை ரோபோக்கள் அனாயாசமாக செய்ய ஆரம்பித்துவிட்டன. வாக்யும் கிளீன் செய்யும் ரோபோக்கள் பல்கிப்பெருகி விலையும் சல்லீசாக ஆகிவிட்டது. வீட்டைச்சுத்தம் செய்யும் ரோபோவின் விலை ஏழாயிரம் தொடங்கி முப்பதாயிரம் ரூபாய் வரை தானாம். அதாவது நம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு கொடுக்கும் சம்பளத்தை வைத்துக்கணக்கிட்டால் நான்கு முதல் பதினைந்து மாதங்களுக்குப்பின் ரோபோ உங்களுக்கு பீ.ரீ. சர்வீஸ் தான்!

    முக்கியமாக எல்.ஜியின் ஹோம்பாட்(Home Bot) என்னும் ரோபோ ஒரு டைம் டேபிளைத் தந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட டயத்துக்கு அதன் இடத்தில் இருந்து நகர்ந்து போய் சுத்தம் செய்யும் வேலைகளை முடித்து விட்டு சமத்தாக மறுபடி அதன் பவர் ஸ்டேஷனுக்குப்போய் சார்ஜ் செய்து கொள்ள ஆரம்பித்து விடுமாம். என்ன, கொஞ்சம் விலை அதிகம், அவ்வளவுதான்!

    வீடு என்னங்க வீடு, இந்த ரோபோக்களில் ஒன்றான ஐ ரோபோ நீச்சல் குளத்தையே சுத்தம் செய்யக்கூடியதாம்!

    எப்பி என்னும் ஆளுயர ரோபோ ஒரே சமயம் பன்னிரெண்டு துணிகளை இஸ்திரி போட்டுத்தந்துவிடுமாம். இன்னும் கொஞ்சம் முன்னேறிய ரோபோ லாண்ட்ரெட்டானது துணிகளை இஸ்திரி போடுவதோடு அழகாக மடித்தும் வைக்குமாம்.

    "அம்மா! தினம் சாதம் சாதம்னு போரடிக்குது! இன்னிக்கு ரோட்டி சப்ஜி பண்ணேன்!"

    அடுத்த வருடம் கல்யாணமாகிப்போக வேண்டிய பெண் கேட்கும்போது அம்மா அலுத்துக்கொள்ளவே வேண்டாம். ரோடிமாடிக் என்னும் ரோபோ சப்பாத்தி பூரியெல்லாம் சடுதியில் செய்து இறக்கி விடுமாம்.

    இந்த ரோடிமாடிக் ரோபோவை கண்டு பிடித்தது பிரனோடி நாகர்க்கர் இஸ்ரானி என்னும் பெண்ணும் ரிஷி இஸ்ரானி என்னும் அவர் கணவருமே! சிங்கப்பூரில் இந்த கண்டுபிடிப்பு புதுமைக்கான முதல் பரிசை வென்றிருக்கிறது.

    பதினைந்து சப்பாத்திக்கான மாவை உள்ளே போட்டுவிட்டால் வேணும் என்கிறபோது ஸ்விட்ச் ஆன் செய்து எத்தனை ரோடி வேண்டுமோ அத்தனை ரோடிக்களை செய்து கொள்ளலாம். ஒரு பக்கம் மாவு மறுபக்கம் ரோடி என்னும் மாஜிக்கை உண்டாக்கும் ரோபோ இந்த ரோடிமாடிக்! இப்போது கிட்டத்தட்ட 70,000 ரூபாய்க்கு விற்கும் இந்த ரோபோவின் விலை சில வருடங்களில் குறையும் என்றே எதிர்பார்க்கலாம்.

    இன்னொரு சுவாரஸ்ய ரோபோ நைட்ஸ்கோப் என்னும் பாதுகாப்பு ரோபோ. இது பரந்த கோணம் கொண்ட கேமராவையும் எதிரே ஏற்படும் சலனங்களைப்பகுத்தறியும் ஸ்கேனரும் கொண்ட ரோபோ. ரோந்து சுற்றியவாறு சந்தேகாபஸ்தமான நடமாட்டங்களை மொபைல் அல்லது ஈமெயில் மூலமாக அலர்ட் பண்ணிவிடும்.

    மேற்சொன்ன ரோபோக்கள் வீட்டுக்குள் இருந்து வேலை செய்பவை. வீட்டுக்கு வெளியேயும் வேலை செய்யும் ரோபோக்கள் பெருகிவிட்டன. மேற்கத்திய நாடுகளில் தனி வீட்டில் குடியிருப்போருக்கு பெரிய தலைவலியாக இருப்பது அவர்கள் வீட்டு வாசல் புல் வெளி. அந்த ஊர் சட்டப்படி அவரவர் வீட்டுப்புல் வெளிகளை தாமே அவ்வப்போது வெட்டி சமனப்படுத்தியாக வேண்டும். பெண்டாட்டிகள் கணவனை பயமுறுத்த இந்த புல் வெட்டும் வேலையைச்சொல்லிச்சொல்லியே பாடு படுத்துவார்கள் என்பது அந்த ஊர் ஆண்கள் பாதுகாப்புக்கழகங்களின் ஓலமாக இருந்து வருகிறது!

    இதில் பாதிக்கப்பட்டோ என்னவோ இந்த பாழாய்ப்போன புல் வெட்டுதலுக்கு ரோபோவைக்கண்டு பிடித்து விட்டார்கள். இப்போதெல்லாம் பல அமெரிக்க வீடுகளின் வாசலில் இந்த ரோபோக்கள் புல் பிடுங்கிக்கொண்டிருக்க வீட்டு ஆண் மகன் ராயசமாக நாற்காலியில் உட்கார்ந்து டீ உறிஞ்சிக்கொண்டிருப்பது சர்வ சாதாரணக்காட்சியாம்! முக்கியமாக நகராட்சிகளில் இந்த ரோபோக்களைப்பயன் படுத்தி பொது இடங்களில் புல் வெளிகளைச்சீராக வைத்திருப்பதைச்சுலபமாக்கிவிட்டார்கள்.

    லூஜ் என்னும் ரோபோ சாக்கடைகளைச்சுத்தம் செய்து விடுகிறதாம். தன் சென்சர்கள் மூலம் வழி தேடி சாக்கடைக்குள் தானே நுழைந்து மிக வேகமான துளைக்கும் கருவி மூலம் ஐவுக்குப்பைகளை சப்ஜாடாகச்சுத்தப்படுத்திவிடும். மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலத்தை ஒரு வழியாக முடிவுக்குக்கொண்டு வர இந்த ரோபோவை நிச்சயம் நம்பலாம் போல! மனிதனின் ஆத்மத்துணையாகக்கூட ரோபோக்கள் இருப்பதைக்காண்கிறோம். வகமானு என்னும் ஜப்பானிய ரோபோ நோயாளிகள் மற்றும் வீட்டோடு முடங்கிவிட்ட வயதானவர்களுக்கு கம்பானியனாக இருக்கும். நேரத்துக்கு அவர்கள் சாப்பிட வேண்டிய மருந்து பற்றி நினைவு ஊட்டுவதோடு அவர்களுக்கு எமர்ஜென்சி என்றால் டாக்டரைக்கூப்பிடும் வசதிகளும் கொண்டவை இந்த ரோபோக்கள்.

    டெலிபிரசென்ஸ் என்னும் தொலைதொடர்பு ரோபோக்கள் வீட்டோடு இருக்கும் குழந்தைகள் நோயாளிகளை வேறோர் இடத்தில் இருந்து பெரியவர்களோ அல்லது டாக்டர்களோ தொலை-கண்காணிக்க உதவுபவை. இவற்றில் பொருத்தப்பட்ட காமரா, ஸ்கேனர், ஒலி பெருக்கி, ஸ்பீக்கர் போன்ற சாதனங்களின் மூலம் இவை ஒரு மனிதனைப்போலவே தொலை தொடர்பில் காட்சிகள் காண்பித்து, உரையாடி கண்காணிப்பில் பொறுப்பாற்றிவிடும்.

    இதெல்லாம் விடுங்க! நம்ம சென்னையிலேயே ஒரு ஓட்டலில் சர்வர்கள் இல்லாமல் ரோபோக்கள் வைத்தே சர்வீஸ் செய்கிறார்கள். டேபிளில் போய் உட்கார்ந்தவுடன் அங்கே இருக்கும் ஐ பாட் போன்ற வஸ்துவில் உங்கள் ஆர்டரைப்பதிவிட்டுவிட்டால், இருபதே நிமிடங்களில் நெற்றியில் விளக்கடித்துக்கொண்டு ஆளுயர ரோபொ நடந்து வந்து தன் கையில் உள்ள டிரேவில் இருக்கும் தட்டுக்களை உங்களிடம் நீட்டிவிடும்.

    "எடுத்துக்கப்பா! எவ்வளவு நாழி இங்கவே நிக்க வைப்பே!" என்றெல்லாம் அலுத்துக்கொள்ளாது என்று நம்புவோம்.

    ரோபோக்களினால் வேலை வாய்ப்புக்கள் குறைந்துவிடும், அவை ஆபத்தானவை. ஒரு சமூகத்தின் மனித உறவுகளைக் குறைத்து விடுவதால் பல அவலங்கள் நேரக்கூடும் என்பதெல்லாம் ரோபோக்களுக்கு எதிரான வாதங்கள்.

    உண்மைதான்! ஆனால் ரோபோக்களினால் அதன் தொழில் நுட்ப நுணுக்கங்களால் வாழ்வின் தரம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.

    "ஏங்க! இன்னிக்கு பாத்திரம் தேய்க்க ராணி வரவே இல்லை! கடங்காரி! கொஞ்ச உங்க வீட்டு ரோபோவை அனுப்பறீங்களா?அரை மணியில திருப்பி அனுபிச்சுருவேன்!"

    பார்க்கத்தான் போகிறோம்!

    • ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகிறது. இந்த அடைப்பினால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
    • ஒரு நாளைக்கு ஒருவருக்கு, 2500 மில்லிகிராம் அளவே சோடியம் சத்து பரிந்துரைக்கப்படுகிறது.

    'உங்கள் இதயத்தை அறிந்து கொள்ளவும்'!

    இதுவே இந்த ஆண்டின் உலக இருதய தினத்தின் கருப்பொருள். நாம் உயிருடன் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதே இந்த இருதயமும், இருதய துடிப்பும் தான். அதனைப்பத்திரமாக பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவே உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த மிக முக்கியமான நமது உடல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள் எவை? ஏன் பலர் இதய சம்பந்தப்பட்ட நோய்களாலும், திடீர் மாரடைப்பாலும் இறக்க நேரிடுகிறது? மருத்துவ ரீதியாக இதற்கு பற்பல காரணங்கள், காரணிகள் கூறப்படுகிறது. இவற்றில், நமது வாழ்க்கை முறைகளும், உணவு முறைகளும், மாற்றக்கூடிய காரணிகளைச்சார்ந்தது.

    நமது மூதாதையர்களில் சிலர் நூறு வயதிலும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்பதை ஊடகங்களின் மூலம் அறிந்திருக்கிறோம், எப்படி அது சாத்தியம்? அவர்களது ஆயுள் ரேகை பலமானதாக இருந்தாலும், ஆரோக்கிய ரேகை பலமானதாக இருந்ததால்தானே ஊடகங்கள்மூலம் வெளிச்சத்திற்கு வருகின்றனர்!! இத்தகைய கேள்விகள் எழ, உலகளவில், நூறு ஆண்டுகள், அதற்கு மேல் வாழ்பவர்களைக்குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பல உண்மைகள் கண்டறியப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தான் அவர்களின் உணவு முறையும் வாழ்க்கைமுறையும். அவற்றைப்பற்றி, இக்கட்டுரையின் பிற்பகுதியில் படிக்கலாம்.

    இதயம் எனும் உறுப்பின் செயல்திறன் எவ்வெவற்றால் பாதிக்கப்படுகிறது? ஆய்வுகள் எவற்றை வரிசைப்படுத்துகின்றன? அவற்றில் சிலவற்றைக்காண்போம். அதிக உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாட்டிலில்லாத சர்க்கரை நோய், மண அழுத்தம், சரியான தூக்கமின்மை, மது அருந்துதல், புகை பழக்கம், துரித வாழ்க்கை முறை, துரித உணவு முறைகள்

    என பட்டியல் நீளுகிறது. மேற்கூறியவற்றை கூர்ந்து நோக்கினால், இவையெல்லாம், நாம் நினைத்தால், முயன்றால், மாற்றக்கூடிய காரணிகள்தானே!. 24 மணிநேரம், 365 நாட்கள், நமக்காக ஓயாமல் உழைக்கும் நம் இருதயத்திற்காக, நாம் இக்காரணிகளை சரிசெய்துக்கொண்டால் நாமும் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வோர் பட்டியலில் இடம்பெறலாமே!!

    அதிக உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாட்டிலில்லாத சர்க்கரை நோய் இவை நமது உடலிலுள்ள செல்களில், அதன்செயல்பாடுகளில் பல மாறுதல்களையும், இன்னல்களையும் ஏற்படுத்துகிறது. உடல் பருமன் என்றால், உடலில் தேவைக்கு அதிகமான கொழுப்பு திசுக்களில் சேர்ந்திருப்பது. இது, கணையம் சுரக்கும் இன்சுலின் ஹார்மோனின் செயல்திறனைக்குறைக்கிறது. இதனால், உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் செல்களுக்குள் எடுத்துச் செல்லப்படாமல் ரத்தத்தில் தேங்கி சர்க்கரை அளவை உயர்த்துகிறது. அது மட்டுமல்லாமல், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு, கொலஸ்ட்ரால், ட்ரைகிளசரைட் எனப்படும் கொழுப்பின் அளவுகளை அதிகரித்து நல்ல கொலஸ்டிரால் [எச்.டி.எல்.] அளவைக்குறைக்கிறது. இவற்றால், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகிறது. இந்த அடைப்பினால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    இத்தனை மாற்றங்களின் வெளிப்பாடாக உடலின் செல்களில் அழற்சி, எண்டொதீலியல் திசு பாதிப்பு, ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஆகிய விளைவுகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் இணைந்து இருதய நோய்கள், மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றது. மேலும், திசுக்களில் உருவாகும் இவ்வகை வேதியியல் மாற்றங்களின் காரணமாக தூக்கமின்மை, மனஅழுத்தம் என பல்வேறு உடல், மன ரீதியான உபாதைகள் உருவாகின்றன. இவற்றை தவிர்க்கவோ அல்லது மாற்றவோ முடியுமா?

    "இந்தியா என்ன சாப்பிடுகிறது?" சமீபத்தில் ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட இந்த ஆராய்ச்சி தொகுப்பு என்ன சொல்கிறது தெரியுமா? இந்தி யாவில், தினசரி தானியங்கள் உட்கொள்ளும் அளவு தேவைக்கு மிக அதிகமாக உள்ளது, அதேநேரத்தில், பருப்புகள், காய்கறி, பழ வகைகள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், கொட்டை வகைகள் என உடலுக்கு பல நன்மைகள் தரும் உணவுகளின் அளவு, தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவை விட, குறைவாகவே உள்ளது. இந்த அளவுகள் மாநிலத்துக்கு மாநிலம், நகற்புறம், கிராமப்புறங்கள் என வேறுப்பட்டாலும், பெறும்பாலும் இந்த உணவுமுறைகள் பொதுவாகக்காணப்படுகிறது. மேலும் குளிர்பானங்கள், சிப்ஸ், இனிப்பு வகைகள், துரித உணவுகள், பிஸ்கட்டுகள், சாக்லெட்டுகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் கலோரிச் சத்துக்கள் பத்து விழுக்காடுக்கும் மேல் அமைந்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி இடுப்புச்சுற்றளவில் அதிக கொழுப்பு அதாவது, உடல் பருமன் ஐம்பத்தி மூன்று விழுக்காடு நகற்புறங்கள் வாழ் இந்தியற்களிடையேயும், பதினெட்டு விழுக்காடு கிராமப்புறங்களில் வாழ் இந்தியர்களிடையேயும் இருப்பதாக தெரிவிக்கின்றது.

    இவற்றின் பொருள் என்ன? நமது உணவில் இருந்து கிடைக்கும் கலோரிச்சத்து, சரிவிகிதமாக இல்லாமல், பெரும்பாலும் மாவுச்சத்து நிறைந்த தானியவகைகளில் இருந்து மட்டுமே பெறப்படுவதும், புரதம், வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து போன்ற பல தாது உப்புக்கள் சரியான அளவில் உட்கொள்ளாமல் இருப்பதையுமே குறிக்கிறது. அதனால் என்ன?

    இன்றைய காலக்கட்டத்தில் உடல் உழைப்பு ஆண், பெண் இருபாலாருக்கும் குறைந்துவிட்டது என்பது நாம் அறிந்ததே. அதனுடன் கலோரி அளவு, அது தரும் உணவுகள் சரியானதாக அமையாவிட்டால், உடல் எடை அதிகரித்து, இடுப்பு சுற்றளவு அதிகரித்து, தேவையற்ற கொழுப்பு அதிகரித்து, முன் விவரித்த திசு அழற்சி மற்றும் அதைச்சார்ந்த ஆரோக்கியமில்லா மாற்றங்களை உடல் அனுபவிக்க வேண்டியதாகிறது.

    உணவில் இருந்து கிடைக்கும் புரதம், ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யவும், தசைகள் வலுப்பெறவும், கொழுப்பு சேராமலும் உதவுகிறது. வைட்டமின் நிறைந்த உணவுகள் திசு அழற்சி ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்படாமல் காக்கிறது. உணவில் இருந்து பெறப்படும் சுண்ணாம்பு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருதய தசைக்களுக்கு வலு அளித்து, சீராக இயங்க உதவுகிறது. இவை அனைத்திற்கு மேலாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்த்து, தேவையற்ற கொழுப்பினை மலம் மூலம் வெளியேற்றுகிறது.

    எனவே, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது, டயட்டரி டைவர்சிடி எனப்படும். இயற்கை நமக்கு அளித்திருக்கும் தானியங்கள், பருப்பு வகைகள், கீரை, காய், பழ வகைகள், பால் மற்றும் பால்சார்ந்த பொருட்கள், மிதமான அளவில் கொழுப்பு வகை உணவுகள் என சரிவிகித்தில் உண்டால் இருதயம் சீராக துடித்துக்கொண்டிருக்கும்.

    இவற்றுடன் சேர்ந்து உடற்பயிற்சியையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு வாரத்திற்கு 150 மணிநேர உடற்பயிற்சி பரிந்துரைக் கப்படுகிறது. ஒரே நாளில் இது சாத்தியமா?!. சிறு துளி பெருவெள்ளமல்லவா? ஒரு நாளைக்கு குறைந்தது முப்பது நிமிடங்கள் என ஐந்து நாட்கள் ஒரு வாரத்தில் கடைபிடித்தால் அது சாத்தியமானது அல்லவா?

    நமது முன்னோர்கள் வாரத்தில் சில நாட்கள் சில மணிநேரங்கள் உபவாசத்தைக் கடைபிடித்தார்கள் அல்லவா? நினைவில் இருக்கிறதா? அவ்வாறான உபவாசங்களை மேற்கொள்வது நல்லது என்று இன்று பல ஆராய்ச்சிகள் சொல்கிறது. உபவாசத்தில் பல முறைகள், அதாவது திரவ உணவுகள் மட்டுமே ஓரிரு நாட்கள் சாப்பிடுவது, காலை, இரவு சாப்பிடாமல் மதியம் மட்டுமே சாப்பிடுவது, ஆறு அல்லது எட்டு மணிநேரம் சாப்பிடாமல் இருப்பது, சூரியன் மறைவதற்குமுன் சாப்பிட்டுவிட்டு, பின் வேறேதும் சாப்பிடாமல் இருப்பது, என, இன்னும் பல வகைகள் இருந்தாலும், அவரவர் உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும், வேலை சூழலுக்கும் தகுந்தவாறு, சத்துணவு மருத்துவவியல் நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று, கடைப்பிடித்தாலும் பலனுன்டு.

    முடிவாக, "ஹார்ட் ஹெல்தி டயட்" அதாவது, இருதயத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகள் என நம் நாட்டு, பன்னாட்டு ஆராய்ச்சிகள் குறிப்ப்டும் பட்டியல் இதோ உங்களுக்காக:

    முழு தானியங்கள்- அரிசி, கோதுமை, கேழ்வரகு, தினை, சாமை போன்ற சிறுதானியங்கள், பார்லி புரதம் நிறைந்த பருப்புவகைகள், முளைக்கட்டிய பயறு வகைகள், பீன்ஸ், ஒமெகா-3 கொழுப்பு நிறைந்த மீன் வகைகள் {மத்தி, கெளுத்தி, கிழங்கான், சங்கரா), முட்டை, சிக்கன், தோல்நீக்கிய இறைச்சி அனைத்து வகை கீரைகள், காய்கறிகள் அனைத்து வகை பழ வகைகள், பாதாம், பிஸ்தா, அக்ரூட், எள்ளு, சூரியகாந்தி வித்துக்கள், பூசனிவித்துக்கள், வேர்க்கடலை, பிலாக்ஸ் சீட்ஸ் கொழுப்பு குறைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட பால், பால் சார்ந்த பொருட்கள் (தயிர், பாலாடைக்கட்டி, யோகர்ட்)

    இவ்வகை உணவுகள் இருதய நோய் உள்ளவர்களுக்கும், இருதய நோய் வராமல் தடுக்க விரும்புபவர்களுக்கும் பொருந்தும். எனினும் ஏற்கனவே நோய் உள்ளவர்களுக்கு, அவர்களின் நோயின் தன்மைக்கேற்ப, உடல்நிலைக்கேற்ப, உட்கொள்ளும் மருந்துகளுக்கேற்ப, சத்துணவு மருத்துவவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும். அவர்களின் ஆலோசனையின் பேரில், பயமில்லாமல் உணவு உட்கொள்ளலாம்.

    இருதய ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிப்பதால் தவிர்க்க/ மிகக்கட்டுப்படுத்த வேண்டிய உணவுகள்

    டிரான்ஸ் பேட் எனப்படும் கெட்ட கொழுப்புகள் நிறைந்த பேக்கரி உணவுகள், மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயில் பொரித்து, வறுத்தெடுக்கப்படும் உணவுகள்

    அதீத பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், இனிப்பு அதிகமிருக்கும் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உப்பு அதிகமாக இருக்கும் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள். ஒரு நாளைக்கு ஒருவருக்கு, 2500 மில்லிகிராம் அளவே சோடியம் சத்து பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு டீஸ்பூன் அளவே ஆகும். நமது உணவில் பெரும்பாலான சோடியம் சத்து, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றில் இருந்தே பெறப்படுகிறது. எனவே, இவற்றை வாங்கும்முன், உங்கள் இருதயத்தின் மீது கைவைத்து சிந்தித்து பின் வாங்க யோசிக்கலாம்.

    ஆக, மேற்கூறியுள்ள இரு பட்டியல்களிலும், நூறு வருடங்களுக்கு முன் எவை கிடைத்தது, எவைப் பற்றித் தெரியாமலிருந்தது என்பதை உணரமுடிந்திருக்கும்.

    இறுதியாக, 100 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களின்மேலான ஆராய்ச்சி கண்டுபிடித்ததும், முதலில் பட்டியலிட்டிருக்கும் சேர்க்கவேண்டிய உணவுகளே என்பதை விளக்கவும் வேண்டுமோ?

    • உண்ணா நோன்பு அனுசரிக்காவிட்டாலும் சைவ உணவை மட்டுமே உண்டு திருமாலை வழிபடும் வழக்கமும் உண்டு.
    • மகாளய பட்சம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட ஏற்ற காலம்.

    தமிழின் பன்னிரண்டு மாதங்களில் ஆறாவது மாதமாக அமைந்திருப்பது புரட்டாசி மாதம். இந்த மாதம் பெருமாளை பக்தி செய்வதற்கு மிகவும் உகந்த மாதம். புரட்டாசியில் விரதமிருந்தால் எளிதில் பெருமாளின் ஆசியைப் பெறலாம்.

    பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில்தான். புரட்டாசிக்கு அதிகப் பெருமை வருவதற்கான காரணங்களில் இது முதன்மையானது.

    திருமாலின் அவதாரம் என்றே கருதப்படும் மகான் ஸ்ரீவேதாந்த தேசிகர், வேங்கடவன் கோவில் மணியின் அம்சமாகப் பிறந்தவர். அனந்தசூரியர்-தோதாத்ரி தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் இவர் அவதரித்தது புரட்டாசி மாதத்தில் தான்.

    பாதுகா சகஸ்ரம், கோதா ஸ்துதி முதலிய புகழ்பெற்ற வைணவ நூல்களின் ஆசிரியரான இவர் பிறந்த மாதம் என்பதாலும் புரட்டாசி பெருமை பெறுகிறது.

    புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் பெரிதும் குறிப்பிடத்தக்கவர், தமிழ்க் கவிதைத் துறையைத் தம் படைப்புகளால் பெருமைப்படுத்தியவரும் இப்போது இருநூறாம் ஆண்டு காண்பவருமான பக்திக் கவிஞர் வள்ளலார்.

    சென்னை அருகேயுள்ள திருவொற்றியூரில் குடிகொண்டிருக்கும் வடிவுடையம்மனை நேரில் தரிசித்த சித்த புருஷர் இவர்.

    மிக உயர்ந்த ஆன்மிகக் கவிதை நூலான திருமந்திரத்தை எழுதிய மகான் திருமூலர் பிறந்ததும் புரட்டாசியில்தான்.

    ராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி புரட்டாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றும் வேடனாக வாழ்ந்த அவர் பின்னாளில் கடும்தவம் செய்து முனிவரானார் என்றும் ஒரு குறிப்பு உண்டு.

    எல்லாக் காலத்திலும் போற்றப்பட்டாலும் புரட்டாசியில் சிறப்பாகப் போற்றப்படும் திருமால், பழந்தமிழ்க் கடவுள். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே திருமால் `மாயோன்` என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார்.

    `மாயோன் மேய காடுறை உலகமும்

    சேயோன் மேய மைவரை உலகமும்

    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

    வருணன் மேய பெருமணல் உலகமும்

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.'

    என்கிற தொல்காப்பிய நூற்பா.

    காடும் காடு சார்ந்த பகுதியும் திருமாலுக்குரிய பிரதேசம். மலைசார்ந்த பகுதி முருகப் பெருமானுடையது. நீர்நிலை சார்ந்த பகுதி இந்திரனுக்குரியது. பெருமணல் உலகம் வருணனுடையது என இடங்களுக்கேற்றவாறு தெய்வ வடிவங்களை வகுக்கிற தொல்காப்பியத்தின் பொருளதிகார நூற்பா, திருமாலுக்கு முதலிடம் கொடுக்கிறது.

    `பெரியவனை மாயவனை பேருலக மெல்லாம்

    விரிகமல உந்தியுடை விண்ணவனைக்

    கண்ணும்

    திருவடியும் கையும் திருவாயும் செய்ய

    கரியவனைக் காணாத கண்என்ன கண்ணே

    கண்இமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன

    கண்ணே!

    மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

    கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்ற

    படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது

    நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே!

    நாராயணா என்னா நா என்ன நாவே!`

    என ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் திருமாலைப் போற்றிப் பரவுகிறது.

    `உலகளந்த பெரியவனை, மாயம் சொல்கிறது. மாயவனை, உலகமாக விரிந்துள்ள தாமரை பூத்த வயிற்றை உடையவனை, விண்ணவனை, கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் சிவந்திருப்பவனை, கரிய நிறமுடையவனைக் காணாத கண் என்ன கண்?

    கம்சனின் வஞ்சகத்தைக் கடந்தவனை, பஞ்ச பாண்டவர்க்குத் தூதுவனாகி கவுரவர்களிடம் நடந்தவனைப் புகழாத நாவென்ன நா? நாராயணா என்று சொல்லாத நாவென்ன நா?` எனக் கேட்கிறார் சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோ அடிகள்.

    புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு மிக ஏற்றதாய்க் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையன்று உண்ணா நோன்பு அனுசரிக்கும் வழக்கம் பலரிடம் உண்டு.

    உண்ணா நோன்பு அனுசரிக்காவிட்டாலும் சைவ உணவை மட்டுமே உண்டு திருமாலை வழிபடும் வழக்கமும் உண்டு. அன்றைய சைவ உணவில் வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்ப்பதும் உண்டு.

    மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம், கவுரி விரதம் போன்ற பல விரதங்கள் புரட்டாசி மாதத்தில்தான் அனுசரிக்கப்படுகின்றன. நவராத்திரியும் புரட்டாசி மாதப் பண்டிகைதான். ஏராளமான விரதங்களைப் பெற்ற பெருமை புரட்டாசியுடையது.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    கடவுளுக்குப் பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை வேண்டிக்கொண்டு அவற்றை நிறைவேற்றாமல் மீதி வைத்திருப்பவர்கள் மனத்தில் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும். அந்தக் குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள ஏற்ற மாதமும் புரட்டாசியே.

    `எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

    செய்ந்நன்றி கொன்ற மகற்கு'

    என்கிறார் திருவள்ளுவர். நமது பிரார்த்தனைகளைச் செவிமடுத்து நாம் வேண்டியவற்றை வேண்டியவாறு அருளிய இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் கடமையல்லவா? புரட்டாசி மாதம் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் மாதம்.

    புரட்டாசியில் வரக்கூடிய அமாவாசை `மகாளய அமாவாசை` என அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் பவுர்ணமிக்குப் பின் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்கள் கொண்ட காலம் `மகாளய பட்சம்` என்ற பெயர் பெறுகிறது.

    மகாளய பட்சம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட ஏற்ற காலம். நம் முன்னோர் மேலுலகில் இருந்து வந்து நம்மோடு தங்கிச் செல்லும் பதினைந்து நாட்களே `மகாளய பட்சம்` என அழைக்கப்படுவதாக நம்பிக்கை.

    பொதுவாக நாம் மாதந்தோறும் அமாவாசையன்று நீத்தார் கடன் செலுத்துகிறோம். அதன்மூலம் மூன்று தலைமுறை முன்னோர்களைக் கரையேற்றுவதாக ஐதீகம்.

    `தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு

    ஐம்புலத்தார் ஓம்பல் தலை'

    என்கிறது வள்ளுவம்.

    காலமான முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என ஐந்து வகைப்பட்டவர்களைப் போற்றுவது தலையாய கடமை என்கிறார் வள்ளுவர்.

    அந்த ஐந்திலும் தென்புலத்தார் என, காலமான முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதையே முதலில் வைத்தார் அவர். வள்ளுவம் வலியுறுத்தும் அறநெறிக் கருத்துகளில் தலையாயது நீத்தார் கடன் செலுத்துவது.

    மகாளய பட்சத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் என்பது, அமாவாசைத் தர்ப்பணம்போல் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், காலஞ்சென்ற நம் அனைத்து முன்னோர்களுக்கும் போய்ச் சேர்கிறது.

    தவிர நம் உறவினர்கள் நண்பர்கள் என நமக்கு அறிமுகமாகிக் காலமான அனைத்து உயிர்களும் அன்று தர்ப்பண நன்னீர் பெற்றுத் தாக சாந்தி செய்து கொள்கின்றன. புரட்டாசியில் நாம் செய்ய வேண்டிய புனிதமான ஆன்மிகச் சடங்கில் மகாளய பட்ச தர்ப்பணம் மிக முக்கியமானது.

    புரட்டாசி மாதத்தில் திருப்பதி, ஸ்ரீரங்கம், குணசீலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலான பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் பிரம்மோத்சவத் திருவிழா விமரிசையாக நடைபெறும். பத்து முதல் பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் காலையும் மாலையும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    புரட்டாசி ஏகாதசி அதிகப் பெருமை வாய்ந்தது. அன்று ஏகாதசி விரதம் இருந்து பெருமாளைத் துளசி இதழ்களால் அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு.

    புரட்டாசி திருமாலுக்கு உகந்த மாதம் என்பதால் திருமாலின் சரித்திரத்தைச் சொல்லும் நாராயணீயத்தை இந்த மாதத்தில் பாராயணம் செய்வது விசேஷம். விஷ்ணுவின் மகிமைகளைப் பேசும் சகஸ்ர நாமத்தையும் நாள்தோறும் ஜபிக்கலாம்.

    புரட்டாசியில் செய்யும் ராமநாம ஜபம் அதிகப் பலன்தரக் கூடியது. வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், பாகவதம், மகாபாரதம் முதலிய திருமாலின் பெருமைகளைப் பேசும் ஆன்மிக நூல்களை இந்த மாதத்தில் பாராயணம் செய்வது சிறப்பு.

    கண்ணன் அருளிய கீதையை மனமொன்றி வாசித்து அதுசொல்லும் கருத்துகளை ஆழ்மனத்தில் சிந்திப்பதற்குரிய விசேஷ மாதமும் புரட்டாசியே.

    திருப்பதி வேங்கடவனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் தங்கள் இல்லத்தில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது இந்த மாதத்தில்தான். அரிசி வெல்லம் கலந்து மாவு உருண்டை செய்து அதன்மேல் குழி அமைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுவார்கள்.

    மாவு உருண்டை என்பது திருப்பதி மலையையும் அதன்மேல் ஏற்றப்படும் தீபம் வேங்கடவனையும் குறிக்கும். மரத்தையே வேங்கடவனாக எண்ணி ஒரு வேடன் வழிபட்டான். அந்த மரத்திற்குத் தான் உண்ணும் தேனையும் தினைமாவையும் நிவேதனமாகப் படைத்தான். வேடனின் பக்தியை மெச்சிய பெருமாள் அவனுக்குக் காட்சி கொடுத்து மோட்சம் அருளினார் என்றொரு வரலாறு இருக்கிறது.

    இந்த வரலாற்றை நினைவுகூரும் வகையில்தான் தினைமாவுக்கு பதிலாக அரிசி மாவும் தேனுக்கு பதிலாக வெல்லமும் கலந்து உருண்டை பிடிக்கப்படுகிறது. அதுவே மாவிளக்கு மாவு.

    மாவிளக்கு ஏற்றினால் வாழ்வில் நேரும் தடைகள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.

    சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருப்பதன் மூலம் அவர் தரும் தீய பலன்களின் வலிமை குன்றும்.

    சனி தோஷம் உள்ளவர்கள் சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு புரட்டாசி சனிக்கிழமை விரதம் உதவும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவை கடவுளின் முப்பெரும் தொழில்கள். அவற்றில் பிரம்மா படைத்தலையும் திருமால் காத்தலையும் சிவன் அழித்தலையும் செய்வதாகப் புராணங்கள் சொல்கின்றன.

    காக்கும் தொழிலைச் செய்யும் கடவுளான திருமாலைப் புனித மாதமான புரட்டாசியில் பூஜிப்பதன் மூலம் அவன்தாள் வணங்கி அவனருள் பெறலாம்.

    திருமாலின் திருவருள் நமக்கு நேரும் துன்பங்கள் அனைத்தில் இருந்தும் நம் அனைவரையும் காத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    ×