என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு, அதிக கொழுப்பு உள்ள குப்பை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதய நோய்களைப் பற்றியும் அதை தடுக்கும் முறைகளைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதய ரத்தக்குழாய் நோய்களின் அறிகுறிகளையும், வகைகளையும் அறிந்து இதயத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக உலக இதய தினம் இருப்பதால் மக்களின் உயிர் காக்கும் இத்தினம், முக்கியத்துவம் பெறுகிறது.
உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று இதயம். இதய நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒன்று. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1.7 கோடி மக்கள், அதாவது மொத்த உலக மக்கள்தொகையில் 31%, இருதய ரத்தக் குழாய் நோய்களால் இறக்கிறார்கள் என்று கூறுகிறது புள்ளி விவரம். மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் இதய ரத்தக்குழாய் நோய்களே இந்த இறப்புகளுக்கு காரணமாக இருப்பதால் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் மக்களுக்கு அளிக்கும் வகையில் இந்நாளை கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக இதய தினத்திற்காக ஒரு தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு அதைப்பற்றிய கட்டுரைகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த வருட தலைப்பு "இதயத்தை உபயோகித்து, இதயத்தை அறிந்து கொள்" என்பதே ஆகும். அதாவது ஒவ்வொருவரும் தங்களின் இதயத்தை பற்றி தெரிந்து கொண்டு அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வை பெற வேண்டும் என்பதே இத்தலைப்பின் நோக்கம்.
உலகில் மக்களுக்கு கல்வி அறிவு கூடி இருந்தாலும் கூட இதய நோய்கள் பற்றிய அறிவும் தகவல்களும் குறைவாகவே இருக்கிறது. மேலும் இந்நோய்களை தடுப்பதற்கான திட்டங்களும் குறைவாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தின் செயல்பாடு பற்றியும் இதய ரத்த ஓட்டம், இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் அறிந்து தங்கள் வாழ்க்கை முறையை சரியான படி மாற்றிக்கொண்டு இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே இந்த வருட உலக இதய தினத்திற்கான தலைப்பு வலியுறுத்துகிறது.
வேர்ல்ட் ஹெல்த் ஃபெடரேஷன் என்ற நிறுவனம் 1999 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார மையத்தின்(WHO) கூட்டமைப்புடன் உலக இதய தினத்தை கொண்டாடி வருகிறது. முதலில் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் இதய ரத்தக் குழாய் நோய்களால் உயிர் இழப்பு அதிகமாக ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும் தொற்று அல்லாத நோய்களின் சதவிகிதத்தை 25% ஆக 2025 ஆம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலும், 2012 முதல் செப்டம்பர் 29ஆம் தேதியை உலக இதய தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 90 நாடுகளுக்கும் மேல் இதில் பங்கேற்று உலகெங்கிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட தலைப்பிற்கு ஏற்ப நாம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக செய்ய வேண்டிய விஷயங்கள் கீழ் வருமாறு உடல் எடையை சரியாக பராமரிப்பது. அதாவது பிஎம்ஐ (பாடி மாஸ் இன்டெக்ஸ்)என்பதை 18.5 முதல் 25க்குள் வைத்துக் கொள்வது
உடலில் அதிக ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பின் அளவு இல்லாமல் பார்த்துக் கொள்வது உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய உப்பை, உணவில் குறைத்துக் கொள்வது இருதய நோய்களுக்கான ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து வைத்துக்கொண்டு, அறிகுறிகள் இருப்பின் உடனடியாக சிகிச்சை எடுப்பது உடல் உழைப்பு அற்ற வாழ்க்கை முறையை கைவிடுவது புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது அவ்வப்போதைய உடல்நல பரிசோதனைகளை செய்து கொள்வது ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதும் அதிக கொழுப்பு உள்ள குப்பை உணவுகளை தவிர்ப்பதும் மன உளைச்சலை கட்டுக்குள் வைத்துக்கொண்டு தரமான தூக்கத்தை பெற விழைவதும் மேற்கூறியவைகளே நாம் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகும்.
- அம்பாளாக கர்ப்பரட்சாம் பிகை வீற்றிருக்கிறாள். அவளுக்கு அந்த பெயர் வந்ததின் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கிறது.
- தமிழகத்தில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளை நீக்கும் ஒரே தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாக திகழ்பவள் கர்ப்பரட்சாம்பிகை. ஒரு பெண் கருத்தரிக்கவும், கருத்தரித்தப் பிறகு அந்த கருவை நன்கு பாதுகாத்து சுகப்பிரசவம் ஏற்படும் வரை கண்ணுக்குள் வைத்து காக்கும் கடவுளாக கர்ப்பரட்சாம்பிகை கருதப்படுகிறாள்.
கும்பகோணத்துக்கு மிக அருகில் திருக்கருகாவூர் என்ற ஊரில் கர்ப்பரட்சாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது. திருமணம் கை கூடுவதற்கும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கும், சுகப்பிரசவம் அடையவும் கர்ப்பரட்சாம்பிகையை வேண்டிக் கொண்டால் போதும் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
திருக்கருகாவூர் தலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தலமாகும். இங்கே எழுந்தருளி இருக்கும் சிவலிங்கம் தானே எழுந்த சுயம்புலிங்கம் ஆகும். இந்த லிங்கத்தை கிரேதாயுகத்தில் தேவர்களும், திரேதா யுகத்தில் முனிவர்களும் வழிபட்டதாக குறிப்புகள் உள்ளன.
அம்பாளாக கர்ப்பரட்சாம் பிகை வீற்றிருக்கிறாள். அவளுக்கு அந்த பெயர் வந்ததின் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கிறது.
ஆதிகாலத்தில் இந்த தலத்தில் நித்துருவர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி வேதிகை. இல்லற வாழ்வின் பயனாக வேதிகை கர்ப்பம் அடைந்தாள். கருவை சுமந்த அவள் அந்த குழந்தையை சுகப்பிரசவத்துடன் பெற்று வளர்க்க வேண்டும் என்று மனம் முழுக்க ஆசையுடன் இருந்தாள்.
ஆனால் அவளுக்கு திடீரென்று ஒரு சோகம் ஏற்பட்டது. அவளது கணவர் நித்துருவர் ஒரு சமயம் அவளை ஆசிரமத்தில் தனியே விட்டுவிட்டு வருணனை பார்க்க புறப்பட்டு சென்று விட்டார். தனிமையில் இருந்த வேதிகை சற்று உடல் சோர்வாக இருந்ததால் அயர்ந்து தூங்கிவிட்டாள்.
அப்போது ஊர்த்துவபாதர் என்ற முனிவர் அந்த ஆசிரமத்துக்கு வந்தார். தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும் பசி போக்க உணவு தருமாறும் வாசலில் நின்று கேட்டார். ஆனால் அவரது குரல் வீட்டுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேதிகைக்கு கேட்கவில்லை.
இதனால் அந்த முனிவர் சற்று உரக்க குரல் கொடுத்து உணவு கேட்டார். ஆனால் உடலில் இருந்த சோர்வு காரணமாக வேதிகையால் உடனே எழுந்து வர இயலவில்லை. இது முனிவர் ஊர்த்துவபாதருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த காலத்தில் முனிவர்கள் கோபம் வந்தால் உடனே ஏதாவது சாபம் கொடுத்து விடுவார்கள்.
ஊர்த்துவபாதர் முனிவரும் வேதிகைக்கு சாபமிட்டார். ராசயட்சு என்ற வகை நோயால் பாதிக்கப்பட்டு வருந்துவாயாக என்று முனிவர் சாபமிட்டார். அந்த சாபத்தால் வேதிகையின் வயிற்றில் இருந்த கருவில் பாதிப்பு ஏற்பட்டது. கரு கலைந்து விடுமோ என்ற நிலை உருவானது.
உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு வேதிகை மனம் கலங்கினாள். இந்த நிலையில் வருணனை பார்க்க சென்றிருந்த நித்துருவர் திரும்பி வந்தார். முனிவர் கொடுத்த சாபத்தை அறிந்து கவலை அடைந்தார். நித்துருவரும், வேதிகையும் இந்த தலத்து சிவபெருமானையும், அம்பிகையையும் மனமுருக வேண்டினார்கள். வேதிகையின் மேல் இரக்கம் கொண்ட அம்பாள் அங்கு தோன்றினாள். வேதிகை வயிற்றில் பாதிப்புடன் இருந்த கருவை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாள்.
அந்த கருவை மீண்டும் முன்பு போல நல்ல ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வந்தாள். இதன் காரணமாக வேதிகையின் வயிற்றில் வளர்ந்த கரு காப்பாற்றப்பட்டது. திட்டமிட்டபடி அவள் வயிற்றில் குழந்தையை சுமந்து சுகப்பிரசவத்துடன் சிசுவை பெற்றெடுத்தாள்.
கருவை பாதுகாத்து சுகப்பிரசவத்துக்கு உதவி செய்ததால் அந்த அம்பாளை கர்ப்பரட்சாம்பிகை என்று அழைத்தனர். தன்னை போன்று கரு உண்டாகும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அம்பாளை வேதிகை கேட்டுக் கொண்டாள். அதை ஏற்று அந்த தலத்தில் கர்ப்பரட்சாம்பிகை வீற்றிருந்து தற்போதும் அருள்பாலித்து வருகிறாள்.
இப்போதும் கரு உண்டாகவும், கருவை பாதுகாக்கவும், சுக பிரசவம் ஆகவும் வேண்டுதல்களுடன் தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் திருக்கருகாவூருக்கு வருவதை காண முடிகிறது. கருவை பாதுகாக்க நினைக்கும் பெண்கள் இந்த தலத்தில் குறிப்பிட்ட பூஜையையும், வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக இந்த தலத்தில் கர்ப்பரட்சாம்பிகை திருப்பாதத்தில் விளக்கு எண்ணையை வைத்து மந்திரித்து கொடுப்பார்கள். அந்த எண்ணையை பிரசவவலி ஏற்பட்டதும் வயிற்றில் தடவி வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும் என்பது ஐதீகமாகும்.
குறிப்பிட்ட மாதத்துக்கு முன்னதாகவே வயிற்றில் வலி ஏற்பட்டால் அது அசாதாரண பிரசவ வலியாக கருதப்படும். அந்த சமயத்தில் இந்த தலத்தில் தரப்படும் விளக்கெண்ணையை வயிற்றில் தடவி கொண்டால் அந்த வலி நீங்கி விடும்.
சில பெண்கள் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியத்தை பெற முடியாமல் இருப்பார்கள். அவர்கள் கர்ப்பரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை பயன்படுத்தினால் உரிய பலன் கிடைக்கும்.
அதாவது இந்த தலத்தில் தரும் நெய்யை கணவன்-மனைவி இருவரும் தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சாப்பிட்டு வர வேண்டும். அப்படி சாப்பிட்டால் நிச்சயம் கருத்தரிக்கும்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த தலத்தில் உள்ள தங்க தொட்டில் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பரட்சாம்பிகை அருளால் சுகப்பிரசவம் ஆனவர்களும் தங்கள் குழந்தையை தங்க தொட்டிலில் போட்டு தாலாட்டுவது முக்கிய பிரார்த்தனையாக கருதப்படுகிறது. இந்த பிரார்த்தனைக்கு தனி கட்டணம் உண்டு.
இந்த தலத்தில் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் மட்டுமே காலை 8 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் செய்ய விரும்பும் தம்பதிகள் ஆலயத்தில் முன்பதிவு செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
குழந்தை வரம் வேண்டி செல்லும் பெண்கள் கர்ப்பரட்சாம்பிகை முன்பு நின்று மனம் உருக வழிபட வேண்டும். கர்ப்பரட்சாம்பிகை இடது கையை இடுப்பில் வைத்த நிலையில் அழகாக காட்சி தரும் வடிவ அமைப்பில் இருக்கிறாள். சதுர்புஜ அம்பிகையாக நின்ற கோலத்தில் அருள்கி றாள். அவளிடம் எந்த அளவுக்கு மனம் உருக வேண்டுகிறோமோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள்.
கர்ப்பரட்சாம்பிகை அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பிறகு மீண்டும் அங்கு சென்று அவசியம் வழிபட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது சக்திக்கு ஏற்ப அம்பாளின் சன்னதியில் தங்கள் குழந்தையின் எடைக்கு எடை கல்கண்டு, வாழைப்பழம், சர்க்கரை போன்றவற்றை துலாபாரம் கொடுக்கலாம். சிலர் நாணயங்களையும் எடைக்கு எடை துலாபாரம் கொடுப்பது உண்டு.
மேலும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழி படலாம். புடவை சாத்தி வழிபடலாம். இந்த தலத்து ஈசன் சுயம்புவாக தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. புணுகு சட்டம் சாத்தி வழிபடலாம். கும்பகோணத்துக்கு தென் மேற்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்தில் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் என்று எண்ணற்றவர்கள் வந்து வழிபட்டு பலன் பெற்றுள்ளனர்.
மூலவர் முல்லைவன நாதருக்கும், அம்பாள் கர்ப்பரட்சாம்பிகைக்கும் இடையே முருகன் சன்னதி அமைந்துள்ளது. இந்த மூன்று சன்னதிகளையும் அடுத்தடுத்து தரிசிப்பது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. சோமாஸ்கந்த அமைப்பில் உள்ள இந்த சன்னதிகளை தரிசிப்பவர்களுக்கு குழந்தை பேறு கிடைப்பது என்பது ஐதீகமாக உள்ளது. இந்த மூன்று சன்னதிகளையும் ஒரே ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.
இந்த தலத்தில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் 6 மணி வரை உஷக்கால பூஜையும், 8.30 மணி முதல் 9.30 மணி வரை காலசந்தி பூஜையும், 12.30 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறும். மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை சாயரட்ச பூஜையும், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறும்.
தமிழகத்தில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளை நீக்கும் ஒரே தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. இதனால் இந்த ஊருக்கு கர்ப்பபுரி என்ற பெயரும் உண்டு. இந்த தலத்தில் வழிபடும் பெண்களுக்கு கருச்சிதைவோ, குறை பிரசவமுமோ ஏற்படுவது இல்லை.
அடுத்து என்ன? நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். அதற்கு செல்ல வேண்டிய தலம் வைத்தீஸ்வரன் கோவில். அடுத்த வாரம் வைத்தீஸ்வரன் தலம் பற்றி காணலாம்.
- 60 வயதினைக் கடந்த 50 சதவீதம் பேருக்கு ஆர்த்ரைடிஸ் பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மஞ்சளும், இஞ்சியும் நம் மூட்டுக்களை பாதுகாக்கும் எளிய பாரம்பரிய மூலிகைகள்.
முதுமையில் உண்டாகும் பல்வேறு நோய்நிலைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது மூட்டுவலி தான். மூட்டுவலிக்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், மூட்டுக்கள் தேய்மானத்தால் ஏற்படும் 'மூட்டுவாதம்' (ஆர்த்ரைடிஸ்) முதுமையில் அதிகம் பேருக்கு காணப்படும்.
பொதுவாக மூட்டுவாதம் (ஆஸ்டியோ-ஆர்த்ரைட்டிஸ்) ஆண்களுக்கு இடுப்பு மூட்டுக்களையும், பெண்களுக்கு முழங்கால் மூட்டுக்களையும் அதிகம் பாதிக்கின்றது. 60 வயதினைக் கடந்த 50 சதவீதம் பேருக்கு ஆர்த்ரைடிஸ் பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க ருமட்டாய்டு எனும் முடக்கு வாதமும், 'கவுட்' எனும் யூரிக் அமிலம் அதிகரிப்பால் உண்டாகும் மூட்டு வீக்கமும் கூட ஏற்படக்கூடும். இதில் முடக்கு வாதம்(RA) பெண்களுக்கு அதிகம் காணப்படுவதாகவும், 'கவுட் நோய்'(gout) ஆண்களுக்கு அதிகம் ஏற்படுவதாகவும் உள்ளது. சோரியாசிஸ் எனும் தோல்நோயின் நாட்பட்ட நிலையிலும் சிலருக்கு உண்டாகக்கூடும்.
முதுமையில் தாங்கிப் பிடிக்கக்கூட துணையின்றி தனிமையில் வாடும் தருணத்தில், இந்த மூட்டுகள் ஏற்படுத்தும் தொந்தரவுகளுக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் நவீன வாழ்வியலுக்கு மாறிப்போன வீடுகளும், அதில் பதியப்படும் டைல்ஸ் எனும் தரை ஓடுகளும், முதுமையில் மூட்டுக்களுக்கு கூடுதல் சவால்கள்.
வழவழவென்று தரை ஓடுகளைப் பதிப்பதால் முதுமைக்கு உண்டாகும் அவலங்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு புரிவதில்லை என்பது வருத்தம் தான். இதனால் முதுமையில் பலர் தரையில் கால் வைக்க கூட பயந்து வாழ்வது கூடுதல் மன வருத்தம்.
காலையில் மூட்டுக்களில் தோன்றும் விறைப்புநிலையே எந்த வகையான மூட்டுவியாதி என்பதை உறுதி செய்ய உதவும். வயது மூப்பினால் உண்டாகும் மூட்டுவலியில் காலை விறைப்பு நிலை ஒரு மணி நேரத்திற்குள் குறைந்து விடும். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் நிலை முடக்கு வாதத்தில் மட்டுமே காணப்படும். மேலும் மூட்டு சார்ந்த வியாதிகளால் மூட்டுவலி என்பது ஒருபுறமிருக்க, முதுமையில் ஏற்படும் மன அழுத்தத்தாலும் மூட்டுவலி உண்டாவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
மேற்கூறிய மூட்டு வலிகளுக்கு இயற்கை நிவாரணம் தேடுவது நலம். ஏனெனில் வலி நிவாரணி மாத்திரைகள் வயிறு சார்ந்த உபாதைகளையும், சிறுநீரக நச்சுத் தன்மையையும், ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுத்தரவுகள் எச்சரிக்கை விடுப்பதால் அவற்றை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. எனவே இயற்கை தந்த இம்மருந்துகளை நாடுவது முதுமையில் மூட்டுவலிக்கு அதிக பக்க விளைவுகள் இன்றி நிவாரணம் தரும்.
சித்த மருத்துவக் கூற்றின்படி, நோய்களுக்கு காரணமாகும் வாதம், பித்தம், கபம் ஆகிய இவற்றுள் 'கபவாதம்' கூட்டணியால் மூட்டுக்கள் தேய்மானம் அடைந்து நோய்நிலையை உண்டாக்குகிறது. இதனால் மூட்டுக்களில் வலி, வேதனை, வீக்கம், நடக்க முடியாத சிரமம், முக்கியமாக உட்கார்ந்து எழும்போது அதிக சிரமம் ஆகிய குறிகுணங்களை உண்டாக்கி முதுமையை இன்னும் சிரமம் உள்ளதாக மாற்றும்.
முதுமையில் இத்தகைய மூட்டு சார்ந்த வியாதிகள் வரவிடாமல் தடுக்க எளிமையான மருத்துவ முறையாக, காலையில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் இவற்றை எடுத்துக்கொள்ள கோலை ஊன்றி நடக்கும் கிழவனும், குமரனைப் போல் நடப்பான் என்கிறது சித்த மருத்துவப் பாடல் வரிகள். ஆக, கற்ப மருந்தாக இஞ்சி, சுக்கு, கடுக்காய் இவற்றை நாடுவது முதுமையில் மூட்டு வியாதிகளை தடுப்பதோடு, குணப்படுத்தவும் உதவும்.
காலையில் இஞ்சியை எடுத்துக்கொள்ள பித்தம் சமநிலை அடையும். காய்ந்த இஞ்சியான சுக்கினை பகல் நேரங்களில் எடுத்துக்கொள்ள வாதம் தன்னிலை அடையும். மாலையில் கடுக்காய் பொடியினை இரவு உணவுக்குப் பின் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ள கபம் தன்னிலைப்படும். இவ்வாறு வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் சமநிலை அடைந்து மூட்டுநோய்களை மட்டுமல்லாது, இன்னும் பிற நோய்களையும் விரட்டும்.
மூட்டு வலிக்கு எளிய சித்த மருந்துகளாகிய சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு சூரணமும், அமுக்கரங்கிழங்கு சூரணமும் நல்ல பலன் தரும். திரிகடுகு சூரணத்தை தினசரி தேனில் கலந்து எடுத்துக்கொள்ள மூட்டுவலிக்கு நல்ல பலன் தரும். மூட்டுக்களின் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை இதற்குண்டு.
அதே போல் அமுக்கராகிழங்கில் உள்ள தாவர வேதிப்பொருட்கள் மூட்டுக்களில் சேதமடைந்த குருத்தெலும்புகளை சீர் செய்வதுடன் மேலும் சேதமடையாமல் பாதுகாக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் அமுக்கரா சூரணம் பல்வேறு நோய்நிலைகளில் பலப்பல நன்மைகளை தருவதாக உள்ளது. இதனை 'மூலிகை சர்வ ரோக நிவாரணி' என்றே சொல்லலாம். முதுமையில் அமுக்கராவை எடுத்துக்கொள்ள ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும். கபவாதத்தை நீக்கும் எளிய மற்றுமொரு மூலிகை நொச்சி இலை. நொச்சி இலையில் உள்ள லிக்னேன் வகை தாவர வேதிப்பொருட்கள் மூட்டுக்களில் வீக்கத்தை உண்டாக்கும் காக்ஸ் நொதிகளை தடுத்து மூட்டு வியாதியில் நீடித்த நிவாரணம் தரக்கூடியது. நொச்சி இலையுடன் மிளகும், பூண்டும் சேர்த்து கசாயமாக்கி காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள மூட்டு வலிக்கு நல்ல பலன் தரும்.
முதுமையில் மூட்டு வியாதியில் முருங்கைக்கீரையும் நற்பலன் தரக்கூடியது. மூட்டுக்களுக்கு தேவையான கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட முருங்கைக்கீரையில் 17 மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வுத்தரவுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு. முதுமையில் பாலுக்கு மாற்றாக முருங்கைக்கீரையை நாடுவது மூட்டுக்களுக்கு நலம் பயக்கும். முதுமையில் ஊன்றுகோல் தேவை இருக்காது. 'முருங்கையை நட்டவன் வெறும் கையோடு நடப்பான்' என்ற பழமொழியின் பொருள் மூலம் அறியக்கிடக்கின்றது.
முடக்கினை நீக்கும் முடக்கறுத்தான் கீரை முதுமைக்கு தவமின்றி கிடைத்த வரம். முடக்கறுத்தான் கீரையுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், பெருங்காயம், உப்பு போன்ற வாதத்தை நீக்கும் பிற மூலிகை கடைசரக்குகளை சேர்த்து சூப் செய்து வாரம் இருமுறை எடுத்து வர மூட்டுவாத நோய்நிலையில் நற்பலன் தரும். முடக்கறுத்தானில் உள்ள இயற்கை வேதிப்பொருட்கள் மூட்டுக்களின் வீக்கத்தைக் குறைப்பதோடு மூட்டுக்களை வன்மைப்படுத்துவதாகவும் உள்ளன.
அதே போல் மூட்டுக்களை வன்மைப்படுத்த பிரண்டைத் துவையல், கேழ்வரகு உருண்டை அல்லது களி, தினை மா உருண்டை, எள்ளு உருண்டை ஆகிய எளிய பாரம்பரிய உணவுகளை நாடுவது நல்லது.
முதுமையில் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது மூட்டு வியாதிகளுக்கு நல்லது. எனவே 'திரிபலை சூரணம்' எனும் சித்த மருந்தை இரவு நேரங்களில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது உடல் எடை கூடாமல் தடுக்கும். அத்துடன் மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுடையது. மலச்சிக்கல் இருப்பினும் உடலில் வாதம் அதிகரித்து மூட்டுவலியை அதிகரிக்கும். எனவே மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
மஞ்சளும், இஞ்சியும் நம் மூட்டுக்களை பாதுகாக்கும் எளிய பாரம்பரிய மூலிகைகள். மஞ்சளில் உள்ள 'குர்குமின்' எனும் இயற்கைநிறமி மூட்டுக்களின் வீக்கத்தைக் குறைப்பதாக உள்ளது.
இது வலி நிவாரணி மருந்துகளை விட மூட்டுவலிக்கு நல்ல நிவாரணம் தருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது மூட்டு வலிக்கான தங்க மூலிகை. மூட்டுக்களில் வீக்கத்தை உண்டாக்கும் பல்வேறு நொதிகளை தடுத்து ஆர்த்ரைடிஸ் நிலையில் பலன் தரக்கூடியது. எனவே முதுமையில் மூட்டுவலி நீங்க பாலில் மஞ்சள் பொடி சேர்த்து எடுத்துக்கொள்வதும் சிறந்த பலனைத் தரும்.
சுக்கு வாதத்தை உடைத்து எறியும் தன்மை உடையது. 'சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை' எனும் பழமொழி இதனை உணர்த்தும். சுக்கில் உள்ள 'ஜின்ஜிபெரின்' எனும் வேதிப்பொருள் மூட்டு வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டுக்களின் விறைப்புத் தன்மையைக் குறைக்கவும் உதவும். பாலில் இஞ்சி அல்லது சுக்கு சேர்த்து எடுத்துக்கொள்வதும் மூட்டு வியாதிகளுக்கு நல்லது. ஆக, பாலில் சுக்கும், மஞ்சளும் சேர்த்து குடிப்பது மூட்டு வியாதிகளுக்கு நல்லது என்பதை முதியோர்கள் புரிந்துகொண்டு நம்பிக்கையோடு பயன்படுத்த நலிந்த மூட்டுக்களை வலிமையாக்கும்.
மூலிகைகள் மட்டுமின்றி கால்சியம் பற்றாக்குறையை நீக்கி மூட்டுக்களை வன்மைப்படுத்த சங்கு பற்பம், பவள பற்பம், குங்கிலிய பற்பம், சிலாசத்து பற்பம் போன்ற எண்ணற்ற மருந்துகள் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நாட்பட்ட மூட்டு வலி சார்ந்த நோய்நிலையில் செந்தூர மருந்துகளும், மெழுகு மருந்துகளும் சிறப்பான பயன் தருவதாக உள்ளன.
அத்துடன் வெளி பிரயோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பிண்ட தைலம், வாதகேசரி தைலம், சிற்றாமுட்டி தைலம், நொச்சி தைலம், சுக்கு தைலம், வாதமடக்கி தைலம் ஆகியவைகளும் நற்பலனைத் தரும். எளிமையாக வீட்டில் நல்லெண்ணையுடன் பூங்கற்பூரம், ஓமம் சேர்த்து காய்ச்சி மூட்டுக்களில் தடவி வருவதாலும் வலி குறைந்து வேதனை தணியும். ஓமம் வாதத்தைக் குறைத்து வலியைப் போக்கும். வெந்நீரில் நொச்சி இலை, தழுதாழை இலை, வாத நாராயணன் இலை இவற்றில் ஒன்றை சேர்த்து கொதிக்க வைத்து ஒற்றடமிடவும் வீக்கம் குறைந்து வலி குறையும்.
இன்றைய சூழலில் முதுமையில் மூட்டு வலி என்பது தவிர்க்க முடியாத நோய்நிலையாக உள்ளது. இது. வயது மூப்பின் அடையாளக் குறிகுணம். இருப்பினும் இந்நோய்நிலையானது வாழ்க்கைத் தரத்தை பாதிக்காமல் இருக்கவும், தொடர்ந்து ஆரோக்கிய நடை போடுவதற்கும் சித்த மருத்துவ மூலிகைகளையும், சித்த மருந்துகளையும் நாடுவது நற்பலன் தரும்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
- குறுக்கு வழியைத் தேடுவோருக்கெல்லாம் ஏமாற்றம்தான் மிஞ்சுமேயொழிய எந்த முன்னேற்றமும் எஞ்சாது.
- உழைப்பு சுயநலம் தாண்டிய பொதுநல இலக்கை நோக்கிப் பயணப்பட்டால் அதைவிட நன்மை தருவது உலகில் வேறு எதுவுமில்லை.
உழைப்பில் ஆர்வமிக்க அன்பானவர்களே! வணக்கம்!
இன்றைய இருபத்தொன்றாவது நூற் றாண்டு, மனிதர்கள் இடையராத வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நூற்றாண்டாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று நாம் மார் தட்டிக்கொள்கிறோம். இருந்தாலும், எந்த விதமான கடின உழைப்புமின்றி வசதியாக வாழ்வதற்கேற்ற வாய்ப்புகளைத் தேடியும் அலைந்து கொண்டிருக்கிறோம்.
மனிதனின் அறிவும் திறமையும் வளர வளர, அவனது உடல் உழைப்பிற்கான தேவைகள் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இது ஒருபக்கம் மானுடத்தின் அறிவின் வெற்றி என்றாலும், உழைப்பு என்பது வெறும் உடல் உழைப்பு மட்டுமில்லை என்பதை நாம் கவனமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
திறமையும் அறிவும் மிக்க மனிதர்களில் பலர் வெற்றி பெற்ற மனிதர்களாக ஆகாமல் போவதற்குக் காரணம் அவர்களிடம் உழைப்பு இல்லாமல் போவதே ஆகும். "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ" எனும் தமிழின் புகழ்பெற்ற உழைப்பின் வாசகத்தை எழுதியவர் பட்டினத்தார் என்னும் ஞானி என்றால் ஆச்சரியப்படுவீர்கள்! அதிலும் தவ நிலையை அடைய முயலும் துறவியர்க்காகவே அவர் இவ் வாசகத்தைச் சொல்லியிருக்கிறார் என்றால் மேலும் நாம் ஆச்சரியப்படத்தான் வேண்டும்.
உழைப்பு என்பது மனத்தாலும் உடலாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் முயற்சி. அதற்கு அறிவும் திறமையும் துணை புரியுமேயொழிய முழுமை வெற்றிக்கு உழைப்பு மட்டுமே தனிப்பெரும் காரணமாக அமையும். எத்தனை திறமை இருந்தாலும் உழைப்பின் முயற்சியின்றி எதுவுமே வாய்க்காது.
ஒரு நாள் ஒரு நகரத்தில் சுவரெங்கும் ஒட்டப்பட்டிருந்த ஒரு விளம்பரச் சுவரொட்டி நகர மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விளம்பரம் இதுதான்," வாழ் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே சாப்பிட எளிய வழி கூறுகிறோம். 400 ரூபாய் மட்டும் கொண்டு வாருங்கள்!".மக்கள் எல்லோருக்கும் ஆச்சரிய அலைவரிசை!. 'என்னது? வாழ்நாள் முழுமையும் உட்கார்ந்துகொண்டே சாப்பிட வழி, வெறும் 400 ரூபாய்ச் செலவிலா?' மக்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகச், சரியான சில்லறையோடு, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மைதானம் நோக்கிச் செல்லத் தொடங்கினர். அந்த மைதானத்தில் பெரிய கூடாரம் ஒன்று போடப்பட்டுக், கூட்ட நெரிசல் இல்லாமல் வரிசையாகச் செல்வதற்கான வசதிகள் வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தன.
'நானூறு மட்டுந்தானா? இல்லை.. நாலாயிரமா? நாலு லட்சமா?" என மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசிக்கொண்டே வரிசையாகக் கூடாரத்திற்குள் சென்றனர்.
கூடாரத்திற்குள் ஆயிரக்கணக்கில் மர நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன; விளம்பரம் செய்திருந்தவர்களில் ஒருவர் கூடாரத்திற்குள் கூடியிருந்த மக்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்," மக்களே! இங்கே பாருங்கள்! இங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ள மர நாற்காலிகள் அனைத்தும் அசல் தேக்கு மரத்தினால் செய்யப்பட்டவை; நீங்கள் எப்படிப் பயன்படுத்தினாலும் இவை உடையாது!, சிதையாது!. நாங்கள் உத்திரவாதம் தருகிறோம். இந்த நாற்காலியை 400 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கிச் சென்று உங்கள் வீட்டில் போட்டால் உங்கள் ஆயுள் முழுவதும் அதில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடலாம்; நாங்கள் கியாரண்டி!" என்றார்.
வந்திருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிட வழி சொல்வானென்றால், இவன் இப்படிப் புதுவிதமாக நாற்காலி விற்று ஏமாற்றுவானென்று யாருக்குத் தெரியும். குறுக்கு வழியைத் தேடுவோருக்கெல்லாம் ஏமாற்றம்தான் மிஞ்சுமேயொழிய எந்த முன்னேற்றமும் எஞ்சாது.
உண்மையான உழைப்பு என்பது எப்போது மற்றவர் பாராட்டும் வெற்றி நிலையை எய்தும் என்றால், அந்த உழைப்பில் தன்னலம் கடந்த பொதுநல நோக்கமும் கலந்திருக்க வேண்டும். தேநீர்க் கடையொன்றில் தேநீர் தயாரிக்கும் வேலையில் ஒருவர் இருக்கிறார்; வருகிற வாடிக்கையாளர்களுக்கு மனம் கோணாமல் தேநீர் தயாரித்துத் தயாரித்துத் தந்து, நாள்முடிவில் பணிக்கான , உழைப்பிற்கான ஊதியமும் பெற்றுச் செல்கிறார். இது அவர் ஆற்றுகிற பணி!; ஆனால் வெற்றிகரமான உழைப்பு! என்று கூறிவிட முடியாது. அன்றாடம் அலுவலகம் சென்று திரும்பி வருவதும், மற்ற பணிகளுக்குச் சென்று திரும்பி வருவதும் மாதம் முடிந்ததும் சம்பளம் வாங்குவதும் வெறும் பணி தானேயொழிய வெற்றிகரமான உழைப்பாகக் கருதப்படமாட்டாது.
தேநீர் தயாரிப்பவர், முதல்போட்ட முதலாளிக்கு நஷ்டம் வராத அளவிற்குப் பாலின் அளவையும், தேயிலைத் தண்ணீரையும், சர்க்கரையையும் போட்டுக் கலந்து கொடுத்தாலே அவரது பணி நிறைந்து விடுகிறது. ஆனால், தேநீரை அருந்துகிற வாடிக்கையாளரின் சுவைத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் கலந்து சூடாகச் சுவைப்படுத்தித் தருவதில்தான் தயாரிப்பின் திறமும் உழைப்பின் நுட்பமும் அடங்கியிருக்கிறது.
நாம் பார்க்கிற வேலை அரசாங்க வேலையாக இருந்தாலும் தனியார் வேலையாக இருந்தாலும், ஆற்றுகிற அந்தப் பணியின்மூலம் நாலுபேர் பயன்பெறப் போகிறார்கள் என நினைத்துக்கொண்டு பணியாற்றினால் அதைவிடச் சிறந்த உழைப்பு வேறு எதுவுமில்லை. அப்படிப் பார்க்கும் போது ஆடுமாடு மேய்ப்பது முதல், அரசாங்கத்தின் மிக உயர்ந்த நிருவாகப் பணி வரை எல்லாவற்றிலும் பொதுநன்மை கருதுகிற அக்கறை கலந்திருந்தால், நீங்கள் தான் ஆகச் சிறந்த உழைப்பாளர்.
ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் கடைந்தெடுத்த சோம்பேறி. உழைத்துச் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணம் துளியும் இல்லாதவன். வேலைக்குப் போகாமல் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருக்கிறானே என்று இவன்மீது பரிதாபப்பட்டு, அவனுக்கு அவனது உறவினர்கள் அரிசி பருப்புக் கொடுத்துச் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ள உதவி வந்தனர். ஆயினும் அவனுக்குச் சமைத்துச் சாப்பிடவும் சோம்பேறித்தனம். ஒருநாள் திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டான்.
நாள்தோறும் அங்குள்ள அருவியில் குளிப்பது, பசித்தால் சமைக்கத் தேவைப்படாத பழங்களை மரங்களிலிருந்து பறித்து உண்பது, பெரிய நிழல்தரும் மரங்களின்கீழ் படுத்து உறங்குவது என்பதை வழக்கமாக்கிக் கொண்டான். கொஞ்சநாள் அவனது வாழ்க்கை உழைப்பு ஏதுமின்றி நிம்மதியாக இப்படியாகக் கழிந்தது. ஆயினும் பழங்களை மட்டுமே உண்டு வாழ்கிற வாழ்க்கை சிலநாளில் சலித்துப் போனது. வேறுவழி தேடிக் காடுகளில் அலையத் தொடங்கினான்.
அப்போது ஓர் இடத்தில் இரண்டு கால்களையும் இழந்த நரி ஒன்று இருப்பதைப் பார்த்தான்; இரண்டு கால்களும் இல்லாத இந்த ஜீவன் எப்படித் தனது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறது என யோசித்தான். அப்போது அங்கே ஒரு புலி ஒரு இறைச்சித் துண்டைக் கவ்விக்கொண்டு வந்து அந்த நரியின் முன்னே போட்டது. காலிழந்த நரியும் நன்றிப் பெருக்கோடு அந்தப் புலியைப் பார்த்து விட்டு இறைச்சியை ஆவலோடு உண்ணத் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் தான் வேட்டையாடிப் பெற்ற இறைச்சியின் ஒருபகுதியை, வேட்டையாடும் வாய்ப்பிழந்த நரிக்காகப் புலி கொண்டு வந்து தருகிறது என யூகித்து அறிந்து கொண்டான். "ஆகா! கடவுளின் கருணையே கருணை! உழைக்க முடிந்தவர்கள், உழைக்க முடியாதவர்களுக்கு உதவுகிற அற்புதச் செயல்பாட்டை, விலங்குகளுக்கே இறைவன் கற்றுத் தந்திருக்கிறபோது, மனிதர்களான நமக்கும் வழிகாட்டாமலா இருக்கப் போகிறார்!".
அந்தச் சோம்பேறி மனிதன் முடிவெடுத்தான். இனிமேல் உணவு தேடி வனத்திற்குள் செல்லப் போவதில்லை. மனிதர்கள் வந்துபோகிற வனத்தின் பாதையோரத்தில் அமர்ந்து விடுவது; நரிக்குப் புலி கொண்டுவந்து போட்டது போல நமக்கும் உணவுகொடுக்க யாராவது ஒரு மனிதன் வருவான் என்று.
பாதையோரத்தில் அமர்ந்த அவன் யாராவது மனிதர் வருவார்; உணவுகொண்டு வந்து தருவார்! எனக் காத்திருந்தான். மூன்று நாட்களாக யாரும் வரவில்லை; நம்பிக்கையோடு காத்திருந்தான். கடைசியில் ஒரு துறவி அவ்வழியே வந்தார்; அவர் கையில் உணவு எதுவுமில்லை.
துறவியிடம் தான் உணவுக்காகக் கடவுளை நம்பிக் காத்திருக்கும் சங்கதியைச் சொன்னான். காலிழந்த நரிக்குப் புலியை அனுப்பி உணவிட்ட இறைவன், ஏன் எனக்கு உதவ யாரையுமே அனுப்பவில்லை எனக் கேட்டான்.
துறவி சிரித்துக்கொண்டே சொன்னார்," இயலாதவர்க்கு உதவுவதில் இறைவன் எப்போதும் முன் நிற்பவன் தான். நீ உன்னை இயலாத நரியாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்!; ஆனால் இறைவன் உன்னை அடுத்தவர்க்கு உதவும் புலியாக நினைத்துக் கொண்டிருக்கலாம்!"என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.
அப்போதுதான் அவனுக்கு பிறப்பின் பெருமையும் உழைப்பின் மகத்துவமும் புரியத் தொடங்கியது. ஊருக்குள் சென்று தனக்காக உழைத்து அடுத்தவர்க்கும் உதவும் பணியைத் தொடங்க வேண்டும் என்று புறப்பட்டான். ஞானம் பெற்றது காடாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது நாடாக இருக்க வேண்டும் என்கிற புதுவித உழைப்பின் சித்தாந்தம் அவனுள் உதிக்கத் தொடங்கி விட்டது.
உழைப்பு மனிதனைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது; கடின உழைப்பினால் ஒரு மனிதனுக்கு நோய் வந்ததாக வரலாறு கிடையாது. உழைக்காது உடம்பு பெருத்திருப்போர்க்கே எல்லா நோய்களும் வந்து விடுகின்றன. கடின உழைப்பு என்பது உடம்பையும் மனத்தையும் வருத்திச் செய்கிற வேலை அல்ல. பிறர் செய்யத் தயங்குகிற வேலையை மன உறுதியோடும் மன விருப்பத்தோடும் செய்து முடிப்பதே கடின உழைப்பு.
உழைப்பிற்கு மூலதனமாகக் காசுபணம் எதுவும் தேவைப்படுவதில்லை. முயற்சியே உழைப்பின் மூலதனம். "முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும்" என்பது திருவள்ளுவ வாக்கு. எந்த முயற்சியையும் தளர்வடையாமல் மேற்கொள்வதற்கு அந்தச் செயலின்மீது இடையறாத ஆர்வம் வேண்டும். அந்த ஆர்வம் அந்த உழைப்பினால் ஏற்படப்போகும் பயன் விளைச்சலை மையமிட்டதாக அமையும்.
மனித வாழ்வியலில் உழைப்பு மட்டுமே உறுதியான உடலையும், நிலைத்த மகிழ்ச்சியையும், விழுமியங்களோடு கூடிய நேர்மையான வாழ் நெறிமுறைகளையும் தரும். அந்த உழைப்பும் சுயநலம் தாண்டிய பொதுநல இலக்கை நோக்கிப் பயணப்பட்டால் அதைவிட நன்மை தருவது உலகில் வேறு எதுவுமில்லை.
உழைப்பு! உழைப்பு! உழைப்பு!
வேறு என்ன வேறு என்ன வேண்டும் பிழைப்பு?!
தொடர்புக்கு - 9443190098
- முதல் படம் ‘ஒரு புதிய கதை’ எதிர்பார்த்த வெற்றியடையவில்லை.
- காட்சி நன்றாக வந்திருப்பதாகவும் டயலாக்கை அழகாக பேசியதாகவும் கஸ்தூரி ராஜா சார் சிரித்துக் கொண்டே கூறினார்.
குயில் பாட்டு...
ஓ வந்ததென்ன
இளமானே...
அதைகேட்டு
ஓ செல்வதெங்கே
மனம் தானே...
-மனதை மயக்கும் இந்த பாடலை மறக்க முடியுமா?
மஞ்சள் வண்ணத்தில் தாவணி போட்ட பெண்ணாக பசுமையான மரம், செடி, கொடிகளுக்கிடையே துள்ளிக்குதித்து ஆடிபாடி வருவேனே... மறந்திருக்க மாட்டீர்கள்!
என் ராசாவின் மனசிலே...
இந்த படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஆம் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று நினைத்து கொண்டிருக்கையில் ஒரு நாள் படக்குழுவில் இருந்து வீட்டுக்கு வந்தார்கள். கஸ்தூரிராஜா சார் வரச் சொல்லி இருப்பதாக கூறினார்கள்.
அவரை சந்தித்ததும் தேர்வு செய்திருப்பதாக கூறினார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதே நேரம் மனசுக்குள் ஒருவித பயம். முதல் படம் 'ஒரு புதிய கதை' எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. இந்த படமாவது 'ஹிட்' ஆக வேண்டும் கடவுளே என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டேன்.
சோலையம்மா...
இதுதான் நான் ஏற்று நடித்த கதாபாத்திரம். முதல் நாள் ஷூட்டிங். திண்டுக்கல் பக்கம் படப்பிடிப்பு. முதல் முதலில் வீட்டில் என்னை சந்தித்த போது என்ன டயலாக்கை கொடுத்து பேச சொன்னாரோ அதே டயலாக்கை பேசியபடிதான் முதல் நாள் முதல் காட்சி படமாக்கப்பட்டது.
காட்சி நன்றாக வந்திருப்பதாகவும் டயலாக்கை அழகாக பேசியதாகவும் கஸ்தூரி ராஜா சார் சிரித்துக் கொண்டே கூறினார். அதை கேட்டதும் மனதுக்குள் ஒரு சந்தோஷம்.
2-வது நாள் ஷூட்டிங்குக்குதான் ஹீரோ ராஜ்கிரண் வந்தார். எனக்கு ஜோடியான அவரை பார்த்ததும் ஜோடி பொருத்தம் எப்படி அமையும்...? என்று மனதுக்குள் நினைத்தேன்.
படத்தின் கதைப்படி ஹீரோ முரட்டுக் குணம் உடையவர். ஹீரோயின் அப்பாவி பெண். இந்த பாத்திரத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்பதில் ராஜ்கிரண்தான் உறுதியாக இருந்திருக்கிறார் என்பதை சுமார் 25 வருடங்களுக்கு பிறகு மீனா-40 நிகழ்ச்சியின் போது அவரே சொன்னதை கேட்டு ஆச்சரியப்பட்டேன்.
சினிமா உலகில் தயாரிப்பாளராக இருந்து நடிக்க வந்தவர் ராஜ்கிரண். 'என் ராசாவின் மனசிலே' படம்தான் அவருக்கும் முதல் படம். படத்தின் கதை தயாரானதும் சோலையம்மா பாத்திரத்துக்கு ஹீரோயின் தேடியிருக்கிறார்கள்.
அப்போது ஒரு வார இதழில் எனது புகைப்படத்தை ராஜ்கிரண் பார்த்திருக்கிறார். தனது சோலையம்மா பாத்திரத்துக்கு இவர்தான் ஏற்றவர் என்று கருதி கஸ்தூரிராஜா சாரிடம் போய் சொல்லி அந்த பெண்ணை தேடி பிடித்து ஒப்பந்தம் போடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் கஸ்தூரிராஜா சார் ஒத்துக் கொள்ளவில்லை. மிகவும் சின்ன பெண்ணாக இருக்கிறார். உங்களுக்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்று மறுத்து இருக்கிறார். ஆனால் ராஜ்கிரண் 'சின்ன பெண்ணாக இருந்தாலும் சோலையம்மா கேரக்டருக்கு அவர்தான் வேணும். போங்க என்று அனுப்பி இருக்கிறார். அப்படித்தான் என்னை தேடி வந்திருக்கிறார்கள்.
நிஜமாகவும் நான் ராஜ்கிரணை பார்த்து பயந்தது உண்மை. படத்தில் பாத்திரத்துக்கு ஏற்ப நடித்தேனே தவிர அவரிடம் பேசியது கூட கிடையாது. அம்மாதான் எனக்கு தைரியம் சொல்லி உருவத்தை வைத்து எடை போடாதே. அவரும் நல்ல மனிதர்தான் என்பார். உண்மையிலும் அவர் அப்படித்தான். பார்்க்க அப்படி இருப்பார். ஆனால் ரொம்ப சாப்டானவர்.
அப்போதெல்லாம் இந்த காலகட்டத்தை போல் நவீன வசதிகள் கிடையாது. ஒரு பாடலை ஒரே நாளில் படமாக்க வேண்டும். ஒரு பாடலுக்கு நான்கைந்து காஸ்ட்யூம் இருக்கும். ஆனால் உடைமாற்றுவதற்கு ஏற்ற வகையில் இந்த காலகட்டத்தை போல் 'கேரவன்' வசதியெல்லாம் கிடையாது.
எங்காவது ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடக்கும். உடை மாற்றுவதற்காக தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்றுவிட்டு வரமுடியாது. காரை நிறுத்திவிட்டு கார் மறைவிலோ, மரங்களின் மறைவிலோ நின்று அவசர அவசரமாக உடைகளை மாற்றிக் கொண்டு ஷூட்டிங்க்கு ஓடுவேன்.
சோலையம்மா கேரக்டருக்கு பெரிய அளவில் மேக்-அப் எதுவும் கிடையாது. கிராமத்து அப்பாவி பெண்ணாகவே நடிக்க வேண்டும். அந்த படத்தில் ஸ்ரீவித்யா எனக்கு பாட்டி. அடிக்கடி அவருக்கு பின்னால் ஒளிந்து நின்றபடிதான் பேச வேண்டும்.
இதனாலேயே அவர் அடிக்கடி என்னை பார்த்து "என்ன... பூனைக்குட்டி எப்படி இருக்கே" என்று செல்லமாக அப்படியே கேட்பார்.
அந்த படத்தில் நடித்ததே வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. முரட்டு குணம் கொண்டவராக நடித்த ராஜ்கிரண் காட்சியிலும் பார்க்கும் போது அச்சு அசலாக இருப்பார்.
ஒரு காட்சியில் அவருக்கு சோறும், கறிக்குழம்பும் கொடுக்கும் போது நல்லி எலும்போ... சூப்பு எலும்போ எதுவாக இருந்தாலும் அள்ளிபோடு. மென்று கடிச்சு புடுறேன் என்றபடி ஆட்டிறைச்சி எலும்பை எடுத்து கடிப்பார். நீண்ட நேரமாக அதை கடித்து கொண்டே இருப்பார். நாங்கள் ஆச்சரியமாக பார்ப்போம். காரணம் அவர் கதையில் ஒன்றி விடுவதுதான்.
சின்ன வயசு. ஆனால் ஹெவி கேரக்டர். இருந்தாலும் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்தேன். சோலையம்மா பாத்திரம் ரசிகர்களின் மனதில் நிற்கும்படி என் முழு திறமையையும் செலுத்தி நடித்தேன். அடுத்த வாரமும் சோலையம்மாவாக இன்னும் சில முக்கியமான மறக்க முடியாத சம்பவங்களுடன் உங்களை சந்திக்க வருகிறேன்...
(தொடரும்...)
- ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவை சுருங்கி சிறு சந்துகள் போல ஓடுகின்றன.
- நதிகளின் உரிமையைக் காக்க உறுதி பூண்டு செயல்பட வேண்டிய நாளாக நதிகள் தினம் அமைகிறது.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு! (குறள் எண் 20)
சுத்தமான காற்றும் சுத்தமான நீரும் மனிதர் உயிர் வாழ முக்கியமானவை. நாளுக்கு நாள் மோசமாகி வரும் நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக நதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை நதிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2023-ம் ஆண்டின் நதிகள் தினத்தின் கருப்பொருள் - நதிகளின் உரிமைகள் என்பதாகும்.
உலகெங்குமுள்ள நாடுகளில் நதிகள் அசுத்தப்படுத்தப்படுகின்றன; அதன் மண் வளம் சுரண்டப்படுகிறது. அதை ஒட்டியுள்ள மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உலக மக்களின் எதிர்கால வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கப்போகும் விஷயங்களாக ஆகி மனித குலத்தின் இருப்பையே கேள்விக் குறி ஆக்கும்!
இதைத்தடுத்து எதிர்கால சந்ததியினருக்கு நதிகளை சுத்த நீருடன் பாயும் ஜீவ நதிகளாகப் பாதுகாத்து அளிப்பதே இன்றைய உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.
ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பதுகளில் மார்க் ஏஞ்சலோ என்பவர் வட கனடாவில் பி.சி. ரிவர்ஸ் டே என்பதை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நதி வளத்திற்காக அவர் பாடுபட்டு பல்வேறு நற்பணிகளைச் செய்தார்.
இவரது வெற்றிகளைக் கண்ட உலகம் இவரைப் பாராட்டியதோடு உலகெங்கும் நதிகளைப் பாதுகாக்கும் செய்தியை முன் எடுத்தது.
இந்திய நதிகள்: காலம் காலமாக இந்திய நாகரிகம் நதிகளைக் கொண்டாடி வருவதை அனைவரும் அறிவோம். காலையில் தினமும் செய்யும் பிரார்த்தனையில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகியவற்றைப் போற்றித் தொழுவது நமது மரபு.
நமது நாட்டில் காவேரி புனித நதியாகப் போற்றப்படுகிறது. 805 கிலோமீட்டர் ஓடும் காவிரி தமிழகத்தில் மட்டும் 461 கிலோமீட்டர் ஓடி டெல்டா பகுதியை அமைத்து சிறந்ததொரு வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.
"வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்" தன்மையை பட்டினப்பாலையில் கடியலூரு உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார்.
ஆறு கிடந்தன்ன அகல் நெடும் தெரு என்று நமது வீதிகளை ஆறுகளுடன் ஒப்பிடுவதை நெடுநல்வாடையில் பார்க்கிறோம்.
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய ஆறு பலவோடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு என பெருமிதம் கொள்கிறார் பாரதியார்.
ஆனால் தமிழ் கண்ட வையையும் வளம் தந்த காவிரியும் தாமிரபரணியும் இன்று வற்றி இருப்பதையும் மணல் சுரண்டப்பட்டு காய்ந்து கிடப்பதையும் பார்க்கிறோம். ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவை சுருங்கி சிறு சந்துகள் போல ஓடுகின்றன. பெரிய மணல் வளம் திட்டமிடப்பட்டு மணல் மாபியாக்களால் கொள்ளை அடிக்கப்படுவதைப் பார்க்கிறோம். எப்போதுமே நீரை உறிஞ்சிக் காக்கும் நல்ல மணல் வளம் போய் விடுவதால் கோடை காலங்களிலும் இருக்க வேண்டிய நீர் இல்லாமல் போகும் நிலையும் ஏற்பட்டு விட்டது.
கங்கையின் பெருமை!
இன்னரு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே- இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? என்று கேட்டு புனித கங்கையைப் போற்றி முழக்கமிட்டார் உலக மகாகவி பாரதியார்.
உலகப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பிரபல எழுத்தாளர் மார்க் ட்வெயின் 1896-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி இந்தியா வந்தார். அவர் காசியில் கங்கையில் சடலங்கள் எரிந்த நிலையில் தள்ளி விடப்படுவதையும் மிதந்து செல்வதையும் பார்த்துத் திகைத்தார்.
அப்போது ஆக்ராவில் டாக்டர் ஹென்கின் என்ற விஞ்ஞானி அரசுப் பணியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் கங்கை நீரைச் சோதனை செய்வதற்காக காசிக்கு சென்றார். அங்கே கங்கையில் கழிவு நீர் சேருமிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து ஒரு கனசெண்டிமீட்டர் நீரை சோதனைக்காக எடுத்தார். சாதாரணமாக அந்த அளவு நீரில் லட்சக் கணக்கில் விஷக் கிருமிகள் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் ஆறு மணி நேரத்தில் இறந்ததைக் கண்ட ஹென்கின் ஆச்சரியப்பட்டு பிரமித்தார். மிதந்து சென்ற சில சடலங்களின் அடியிலிருந்து காலரா கிருமிகள் உள்ள நீரை எடுத்தார். ஆனால் அந்தக் கிருமிகளும் ஆறே மணி நேரத்தில் துடிதுடித்து இறப்பதைக் கண்டு வியப்புற்று உலகிற்கு இதை அறிவித்தார்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மகராஜாக்களில் பலர் லண்டன் செல்லும் போது தங்களுடன் கப்பலில் கங்கை நீரை எடுத்துச் செல்வது வழக்கம். ஏனெனில் அது நீண்ட நெடும் பயணத்தில் எப்போதும் சுத்தமாகவே இருக்கும் என்பதால். ஆனால் கால வெள்ளத்தில் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் அபாயகரமான நச்சுக்கள் கலந்த கழிவு நீர் பெருமளவு கங்கையிலும் யமுனையிலும் சேர்க்கப்படுவதால் அவற்றின் தூய்மை கெடப்பட்டு வருகிறது.
கண்ணபிரான் பெரும் லீலைகள் புரிந்த புனிதமான யமுனா நதி தீரம் இன்று பரிதாப நிலையில் இருப்பது அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
இந்த நிலையை அகற்ற நதிகளின் உரிமையைக் காக்க உறுதி பூண்டு செயல்பட வேண்டிய நாளாக நதிகள் தினம் அமைகிறது.
பெயர்களில் மட்டும் உள்ள ஏரிகள்!
இது மட்டுமின்றி சென்னை, பெங்களூர் போன்ற நகர்களில் ஏராளமான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறி அந்த ஏரிகள் அந்தப் பகுதிகளின் தெருக்களின் பெயர்களில் மட்டுமே இன்று இருக்கும் அவல நிலையையும் பார்க்கிறோம்.
சீனாவின் மஞ்சள் நதி: இது இப்படி எனில் சீனாவின் இரண்டாவது பெரும் நதியும் வாழ்வாதாரமாகவும் திகழும் மஞ்சள் நதி பாழ்பட்டு அசுத்த நதியாகவே ஆகி விட்டது. அதன் 66 விழுக்காடு நீர் குடிக்க முடியாத அசுத்த நீர். 435 கோடி டன்கள் அளவு கழிவு நீர் அதில் கலக்கப்பட்டதாக 2005-ம் ஆண்டு நதி நீர் அறிக்கை தெரிவித்தது. சீனாவின் 5464 கிலோமீட்டர் நீளமுள்ள மஞ்சள் நதியின் நிலையும் பரிதாபகரமாக ஆகி விட்டது.
நடந்தாய் வாழி அமேசான்: அடுத்து உலகின் மிகப் பெரும் நதியான அமேசானைப் பார்ப்போம். பெருவிலுள்ள ஆண்டஸ் மலையில் 17000 அடி உயரத்தில் உள்ளது அழகிய ஏரி லாரிகோச்சா. இதுவே அமேசான் நதியின் மூலம்.
இங்கிருந்து பிறக்கும் நதி 4000 மைல் தூரம் நடை பயின்று பல இடங்களில் பல பெயர்களால் அழைக்கப்பட்டு, அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கலக்கிறது.
நைலுக்கு அடுத்தபடியாக 'உலகின் இரண்டாவது பெரிய நதி' என்று பெயர் பெற்ற அமேசானில் 1500 வகைக்கும் மேலான மீன் வகைகள் உயிர் வாழ்கின்றன!
ஆவேசமாக ஓடிவரும் நதியில்,ஒரு நாள் ஓடும் நீரின் அளவு, உலகில் ஓடும் நதிகளில் மூன்றில் இரண்டு பங்கு நீருக்குச் சமம்!
அமேசான் நதி வழியாகவே உலகின் ஐந்தில் ஒரு பங்கு சுத்த நீர் பாய்கிறது.
ஒரு வருடத்தில் தேம்ஸ் நதி, கடலில் சங்கமமாக்கும் நீரின் அளவை ஒரே நாளில் கடலில் கலக்கிறது அமேசான்!
அசுர வேகத்தில் கடலில் கலக்கும் அமேசான், கடலின் உப்பு நீரை 100 மைல் தூரம் பின்னுக்குத் தள்ளி, தூய நீர்ப் பரப்பை ஏற்படுத்துகிறது என்றால் அது சாதாரண விஷயமா என்ன?
இந்த சுத்த நீரும் தொழிற்சாலைக் கழிவுகளாலும் இதர பல வழிகள் மூலமாகவும் அசுத்தமாக்கப்பட்டு வருகிறது.
1848 -லிருந்து 1859 முடிய அமேசான் காடுகளை ஆராய்ந்த பிரிட்டிஷ் அறிஞர் 'ஹென்றி பேட்ஸ்' 15000 மிருக வகைகளைக் கணக்கிட்டார்.
இதே சமயம் தாவர இயல் நிபுணர் 'ரிச்சர்டு ஸ்ப்ரூஸ்' 7000 வகை புது தாவர இனங்களை இங்கே கண்டுபிடித்தார்!
இதில் பாதி உலகில் முதன் முதலாகப் பார்க்கப் பட்டவை!
அமேசான் மழைக்காடுகள் உலகின் நுரையீரல்கள் என வர்ணிக்கப்படுபவை. கார்பனை சேமித்து வைக்கக்கூடிய அரிய சேமிப்பகங்களுள் முக்கியமான ஒன்று இது. 100 பில்லியன் டன் கார்பன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடியாகும்) அமேசான் மழைக்காடுகளில் சேமித்து வைக்கப்படுகிறது என்றும் வளி மண்டலத்தில் இருந்து வருடந்தோறும் சுமார் 200 கோடி கார்பன் டை ஆக்சைடை அமேசான் உறிஞ்சுகிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. ஆனால் இது இனி கார்பன் டை ஆக்சைடை முன் போல பெருமளவில் உறிஞ்சாது.
60 கோடி ஹெக்டேர் அதாவது 23 லட்சம் சதுர மைல் பரப்புள்ள பெரிய மழைக்காடு இது. ஆனால் வருடந்தோறும் 5800 சதுர மைல் அளவில் இது அழிக்கப்பட்டு வருகிறது.
உலகின் பிரபல நடிகரான லியனார்டோ டிகாப்ரியோ 50 லட்சம் டாலர் தந்து அமேசான் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை வலியுறுத்தியுள்ளார். எல்லா நாடுகளிலும் இப்படி ஒரு டிகாப்ரியோ இருந்தால் மழைக்காடுகளே அழியாமல் பாதுகாக்கப்படும் அல்லவா?!
நதிகள் காப்போம்: மண்ணைச் சுரண்டிச் சுரண்டி ஆறுகளை வழக்கம் போலப் பாய விடாமல் ஆக்குவதால், நீடித்த அளவில் நம்மை நாமே அழித்துக் கொண்டவர்களாக ஆகிறோம். செழுமை வாய்ந்த மண் வளத்தினாலேயே, பாரம்பரியம் மிக்க இந்திய விவசாயிகள், நூற்றி முப்பது கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் உணவு பெற வழி வகுக்கிறார்கள். உலகின் இதர இடங்களில் உள்ள மண்ணை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்திய மண்ணில் ஒரு கியூபிக் மீட்டர் மண்ணில் மைக்ரோ ஆர்கானிசம் எனப்படும் நுண்ணுயிர்கள் மிக அதிக அளவில் காணப்படுவது நமது மண்வளத்தின் பெருமையைப் பறை சாற்றும் ஒரு அரிய உண்மையாகும்.
நமது நதிகள் அனைத்தையும் நிலைபெறச் செய்ய, உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உத்வேகமூட்டும் நதியைக் காக்கும் இயற்கை ஆர்வலராக மாறினால் நம் சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள் இல்லையா? நதிகள் காப்போம்! நீர் வளத்தை நிலைக்க வைப்போம்!
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com
- காலேஜுக்கெல்லாம் போகல! நானும் என் பிரெண்டும் சேர்ந்து ஒரு செயலி எழுதி விக்கப்போறோம்.
- நூறு ரூபாய்க்கே தரவிறக்கம் செய்யக்கூடிய செயலிகள் எழுதும் மென் பொருள் ஆசாமிகள் பெருகக்கூடும்.
"நேத்து ஏண்டா ஹோம் ஒர்க் பண்ணிட்டு வரல?"
"சினிமாவுக்கு போயிட்டேன்! அதான் பண்ணல!"
"என்னது! எங்கிட்டயே இப்படி பேசறியா? நான் உன் கிளாஸ் டீச்சர், ஞாபகம் இருக்கா?"
"என்ன டீச்சர் தப்பு! உண்மையத்தானே சொல்றேன்!"
"உன்னச்சொல்லி குத்தமில்ல! உன் குடும்பத்த சொல்லணும்! திமீர் புடிச்ச குடும்பம்!"
"டீச்சர்! தப்பா பேசாதீங்க! என்ன தெரியும் உங்களுக்கு என் குடும்பத்த பத்தி?"
"எல்லாம் தெரியுண்டா! போன வாரந்தான் உன் குடும்பத்தோட ஜீன் (Genes) பத்தி ஹீலிக்சுலேர்ந்து படிச்சேன்!"
ஆம் இது நடக்கப்போகிற விஷயம்தான்!
இந்த ஹீலிக்ஸ் கம்பெனி மரபணு இணைய ஸ்டோர் ஒன்றைத்திறக்கத்திட்டமிட்டு அதற்காக 100 மில்லியன் டாலர் நிதி உதவியும் வாங்கி வைத்திருக்கிறது.
ஒருவருடைய உமிழ் நீரை வைத்து ஆராய்ந்து மரபணு வரிசை முறையைக் கண்டுபிடித்து கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துவிடும். பிறகு அந்த உமிழ் நீரின் சொந்தக்காரர் தனித்தனி செயலிக்கள் மூலம் தன் மரபணு பற்றிய பல தகவல்களை கேட்டறிந்து கொள்ளலாம். அதாவது ஒரு செயலி இந்த மரபணு வரிசையின்படி அந்த ஆசாமிக்கு இனிப்பு பிடிக்கும் என்னும் தகவலை அறிந்துகொள்ள முடியும்.
" சார்!"
"என்னய்யா? இப்பதானே அந்த குவாரி காண்டிராக்டர் பைலை பாத்து டிடெயில் எடுத்து வைன்னேன்! அதுக்குள்ள மறுபடி வந்துட்ட?"
"இல்ல சார்! நாளைக்கும் நாளன்னிக்கும் நான் லீவு சார்!"
"யோவ்! என்ன காரணமா இருந்தாலும் தள்ளிப்போடுய்யா! மினிஸ்டர் என்னைப்பந்தாடிடுவார்!"
"ஒத்திப்போட முடியாது சார்! எனக்கு இன்னிக்கு ராத்திரி நிமோனியா வரப்போறது சார்!"
" என்ன கஷ்டம்யா இது! உளறாம போய் வேலையைப்பாருய்யா!"
"இல்ல சார்! என்னோட மரபணு வரிசையைப்படிச்சா அம்சமா சொல்லிடுது சார்! நா நேரே போய் அட்மிட் ஆகப்போறேன்!அதச்சொல்லிட்டுப்போகலாம்னுதான் வந்தேன்! சிக் லீவு சாங்ஷன் பண்ணிடுங்க!"
இது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ஒருவருக்கு பின்னால் வரப்போகும் உடல் ரீதியான மாற்றங்களையும் நோய்களையும் இந்த மரபணு வரிசை ஆராய்ச்சியின் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்கிறார்கள். மேலும் இந்த ஆராய்ச்சிகள் இப்போதே முன்னேற்றமடைந்து விட்டன. ஆனால் இந்த ஹீலிக்ஸ் கம்பெனி இருக்கிறதே மரபணு விவரங்களை ஒரு புத்தகம் வாங்குகிற ரேஞ்சுக்கு கொண்டு வரப்பார்க்கிறது என்பதுதான் சுவாரஸ்யம். இது போல பலருடைய மரபணு ஆராய்ச்சி முடிவுகளை ஒரு ஆப் ஸ்டோரில் சேமித்து செயலிகள் மூலம் தகுந்த கடவுச்சொற்கள் கொண்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எவருக்குமே தன் உடற்கூறு பற்றிய நுண் விவரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கத்தான் செய்யும். அதுவும் இப்படி ஒரு சேமிப்பாக இருக்கும்பட்சத்தில் உடலின் உபாதைகளுக்கு ஏற்ப மருத்துவம் செய்து கொள்ள இந்த தகவல்கள் மிக்க உதவுமே! இன்றே கூட நம் நாட்டிலேயே தண்டு செல்களை சேமித்து வைக்கும் வங்கிகள் பெருகி விட்டன. அதுபோல மரபணு வரிசை முடிவுகளை சேமிக்கும் ஸ்டோர்களும் பெருகக்கூடும்!
ஹீலிக்ஸ் கம்பெனி தன் நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக மரபணுக்களின் வரிசைக்கிரமத்தையும் மற்ற பல தகவல்களையும், ஒரு மனிதனின் கிட்டத்தட்ட 20,000 மரபணுக்களையும் ஆய்வு செய்து சேமிக்க முடியும் என்கிறார்கள். அதற்கான செலவு வெறும் 100 டாலருக்குள் முடிக்கும்படியான தொழில் நுட்பம் அவர்களிடம் இருக்கிறதாம். இன்றைய மொபைல் சாம்ராஜ்யத்தின் தாக்கத்துக்கேற்ப ஹீலிக்ஸ் கம்பெனி இந்த மாதிரி ஆப் ஸ்டோர் ஐடியாவை சந்தைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
" பிளஸ் டூ முடிச்சுட்டு என்ன செய்யப்போறே?"
" காலேஜுக்கெல்லாம் போகல! நானும் என் பிரெண்டும் சேர்ந்து ஒரு செயலி எழுதி விக்கப்போறோம்!"
"என்ன செயலியா? விக்கப்போறியா?"
"ஆமாம்ப்பா ஆமாம்! இந்தச்செயலியைப்பயன் படுத்தி ஹீலிக்ஸ் கம்பெனியின் ஸ்டோரிலேர்ந்து மரபணு வரிசையைத் தொடர்புகொண்டு இன்னும் பத்து வருஷத்துல பார்க்க எப்படி இருப்பார்னு தெரிஞ்சுக்கலாம்!"
ஆம், இது போல நூறு ரூபாய்க்கே தரவிறக்கம் செய்யக்கூடிய செயலிகள் எழுதும் மென் பொருள் ஆசாமிகள் பெருகக்கூடும். இந்த செயலிகளை எழுதும் மென்பொருள் கம்பெனிகள் உருவாகி அவற்றின் மதிப்பும் அதிகரித்து சந்தை மூலதன மதிப்பு உயர்ந்து பலப்பல கோடீஸ்வரர்கள் உருவாகக்கூடும்.
" அப்பா! எனக்கு நீங்க பார்த்த அந்த பாங்க் மானேஜர் மாப்பிள்ள வேண்டாம்ப்பா!"
"ஏம்மா ? அவன் மாசம் நாற்பதாயிரம் ரூபா சம்பாதிக்கிறானே!"
"அதெல்லாம் ஒரு சம்பளமா! நான் ஒருத்தர லவ் பண்றேன்!"
"லவ்வா! சரி சரி! அவன் என்ன படிச்சிருக்கான்? என்ன வேலை?"
"பிளஸ் டூ படிச்சிருக்கான்! சொந்தமா வீட்லயே கம்பெனி வெச்சிருக்கான்!"
"என்னம்மா விளையாடறியா?"
"உங்களுக்கு தெரியாதுப்பா! இன்னும் ரெண்டே வருஷத்துல அவனோட செயலி கம்பெனிய அமெரிக்காலேர்ந்து நூறு நூத்தைம்பது கோடிக்கு வாங்க ஆள் இருக்கும்ப்பா!"
எங்கே, நடக்காது என்று சொல்லிப்பாருங்க!
- மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரைகளை சரியாக சாப்பிட வேண்டும்.
- உணவுக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
மாரடைப்பு வந்தால் ஒரு ஸ்டென்ட் போட்டு விட்டால் போதும். திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்தால் போதும். அத்துடன் இதயநோய் சரியாகி விடும். நாம் அப்படியே இருந்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
அது உண்மை அல்ல. உண்மை என்னவென்றால் ஸ்டென்ட் பண்றதோ, திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்வதோ இதய நோய் தாக்கத்திற்கான தீர்வு தான். அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளை தற்காலிகமாக தீர்ப்பதற்கான வழி தான் அது.
ஸ்டென்டிங் அல்லது திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்த நிறைய பேர் ஒரு வருடம் அல்லது 2 வருடம் முறையாக மருந்து எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு பிறகு மருத்துவர்கள் சொல்வதை கடைபிடிக்காமல் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் பலன் முழுமையாக கிடைக்காமல் போய் விடுகிறது.
உதாரணத்துக்கு அமெரிக்காவில் ஒருவர் 39 ஆண்டுகளில் 4 முறை திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார். இதற்கு அவர் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு கட்டுப்பாடுகளோடு இருப்பது தான் காரணம். அதனால் அறுவை சிகிச்சை செய்வதும், ஸ்டென்டிங் போடுவதும் மட்டும் முக்கியம் அல்ல. அதற்கு பிறகு நமது வாழ்க்கை முறையை எப்படி மாற்றி பராமரிக்க போகிறோம் என்பது தான். அதன் மூலமாகத்தான் இந்த சிகிச்சையின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என்று சில விஷயங்கள் உள்ளன.
மாத்திரைகள்: மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரைகளை சரியாக சாப்பிட வேண்டும். அதுவும் குறித்த நேரத்திற்கு, குறித்த அளவிற்கு சாப்பிட வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் மருத்துவருடைய அறிவுரை இன்றி மருந்து, மாத்திரைகளை அதிகப்படுத்துவதோ, குறைப்பதோ கூடாது. இது மிகவும் முக்கியமானது.
அறுவை சிகிச்சை செய்த பின் எந்த சமயம் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதோ, உடனடியாக நீங்கள் சிகிச்சை பெறும் மருத்துவரை சென்று பார்த்து விட வேண்டும். நாட்டு வைத்தியம் செய்வது, வீட்டு வைத்தியம் செய்வது இதெல்லாம் ஆபத்தில் போய் முடியும்.
உணவுக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்த பின்னர் 2 வாரத்துக்கு நாக்கில் ருசியே இருக்காது என்பார்கள். கண்டிப்பாக 2-ல் இருந்து 3 வாரங்களுக்கு ருசி தெரியாது. சாப்பிடவே சலிப்பாக இருக்கும். 3 வாரத்துக்கு தூக்கம் வராது. இதெல்லாம் பொதுவாக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரக்கூடியது. இதில் இருந்து வெளியே வர மனப்பக்குவம் அவசியம். தியானம் செய்யலாம், சுவாச பயிற்சி செய்யலாம். சுவாச பயிற்சி செய்வதால் நுரையீரலில் சளி கட்டுவதையும் குறைக்க முடியும்.
மட்டன் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம். சிக்கன் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் குழம்பில் போட்டு சாப்பிடலாம். முட்டையில் மஞ்சள் கருவை தவிர்த்து விட்டு வெள்ளைக் கரு சாப்பிட்டுக் கொள்ளலாம். குழம்பில் போட்டு மீன் சாப்பிடலாம். பொறித்த, வறுத்த உணவுகளை சாப்பிடவே கூடாது. பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதய வால்வு மாற்றியவர்கள் கீரை, முட்டைக்கோஸ், புரோகலி, காலிபிளவர் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இதய வால்வு மாற்றியவர்களுக்கு ரத்தத்தை எப்போதும் தண்ணீராக வைத்துக் கொள்வதற்காக மருந்து, மாத்திரைகள் கொடுக்கிறோம். இந்த உணவுப் பொருட்கள் எல்லாம் சாப்பிட்டால் அதனுடைய பலன் குறைந்து விடும்.
தண்ணீர் கட்டுப்பாடு: ஒருவேளை நீங்கள் பரிசோதிக்கும் மருத்துவர் ஒரு நாளைக்கு 2 லிட்டரோ, ஒன்றரை லிட்டரோ தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் கண்டிப்பாக அந்த அளவு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக குடித்தால் இதயத்தின் வேலைப்பளு அதிகமாகும். இதய பம்பிங் மிகவும் சிரமப்பட்டு செயல்படும். அப்போது மூச்சுத்திணறல் வரும். உங்களால் வேலையை சரியாக செய்ய முடியாது. நிமிர்ந்து நேராக நடக்க முடியாது, மல்லாந்து படுக்க முடியாது. மருத்துவர் இதயத்தின் செயல்பாட்டை பொறுத்தே தண்ணீர் குடிப்பதற்கான கட்டுப்பாட்டை விதிக்கிறார் என்பதை புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
அடுத்து உடற்பயிற்சியும், நடைபயிற்சியும் முக்கியம். ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடம் நடக்க வேண்டும். முதல் 5 நிமிடம் மெதுவாக நடக்கத் தொடங்கி பின்னர் உங்கள் வேகத்தில் நடந்து கடைசி 5 நிமிடத்தில் மெதுவாக நடந்து முடிக்க வேண்டும். உடன் வருபவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்கக் கூடாது.
எதிர்பாராமல் நீங்கள் நடக்கும் போது உங்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, தலைசுற்றல், மயக்கம் அல்லது படபடப்பு வந்தாலோ நடைபயிற்சியை நிறுத்தி விட்டு அதே இடத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். 5 நிமிடம் ஓய்வெடுத்து விட்டு உடல் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என உணர்ந்தால் தொடர்ந்து நீங்கள் நடக்கலாம். அல்லது வீடு திரும்பி விடலாம்.
5 நிமிட ஓய்வுக்கு பிறகு உடல் இயல்பாக வில்லை என்றால் ஆம்புலன்சோ, காரோ வரச் சொல்லி நேராக ஆஸ்பத்திரிக்கு போவது தான் நல்லது. இதுபோன்ற பாதிப்புகள் வரும்போது தயவு செய்து நீங்களாக வாகனம் ஓட்டிச் செல்லாதீர்கள். பிறரின் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்லுங்கள்.
உடற்பயிற்சி: உடற்பயிற்சியில் உடலை தளர்வாக்கும் பயிற்சி அவசியம். அதற்கு முன்பாக 5 நிமிடம் வார்ம்அப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வார்ம்அப் என்பது உடலில் தசைகளை, தசை நார்களை சூடுபடுத்தக்கூடிய ஒரு பயிற்சி. அது செய்து விட்டால் உடற்பயிற்சி செய்வது எளிதாகி விடும். உடற்பயிற்சி செய்யும் போது மூச்சை பிடித்துக் கொண்டு எதையும் செய்யக் கூடாது. உதாரணத்துக்கு 2 கிலோ எடை தூக்குவதாக இருந்தால் மூச்சை பிடித்துக் கொண்டு அதனை செய்யக் கூடாது. சிலர் ரப்பர் பேண்ட் இழுத்து பயிற்சி செய்வார்கள். அதில் தவறு இல்லை. சைக்கிள் ஓட்டலாம். நிறுத்தி இருக்கும் சைக்கிளை ஓட்டி பயிற்சி எடுக்கலாம். டிரெட்மில் ஓட்டலாம். இதனை ஏரோபிக் உடற்பயிற்சி என்று சொல்வோம்.
உங்களுடைய உடற்பயிற்சி திறமை எப்படி உள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற பயிற்சிகளை மேற்கொள்ள மருத்துவர்களும், பிசியோதெரபிஸ்டுகளும் ஆலோசனைகளை வழங்குவார்கள். அதன்படி உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. முடிக்கும் போது வார்ம் அப் செய்வது போல கூல்டவுன் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் மூச்சை பிடித்துக் கொண்டு இழுப்பதோ, தள்ளுவதோ, தூக்குவதோ கூடாது.
உங்களுக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் நீங்கள் 3 கிலோவுக்கு மேல் எடை தூக்காதீர்கள். கைகளை பின்புறமாக மடக்காதீர்கள். அப்படி செய்தால் உங்கள் மார்பின் நடுப்பகுதியில் இருக்கும் தழும்பு பகுதியில் வலி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
மூச்சுப்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். பலூன் ஊதலாம். தவறு இல்லை. காற்றை உள்ளே இழுத்து மெழுகுவர்த்தி அணைக்கலாம். இதெல்லாம் அடிப்படை பயிற்சிகள் தான்.
செய்யக் கூடாதவை: அறுவை சிகிச்சைக்கு பின் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது. ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சில்லி கோபி, பன்னீர் போன்ற பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது.
நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். உட்கார்ந்து கொண்டு நீண்ட தூரம் செல்லக் கூடாது. ரெயில் அல்லது விமானத்தில் பயணிக்கலாம். அதில் இடையில் எழுந்து சிறிது தூரம் நடந்து கொள்ள வசதிகள் இருக்கிறது. காரில் போய் தான் ஆக வேண்டும் என்றால் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கி 5 நிமிடம் நடந்து ரிலாக்ஸ் ஆகி கொள்ளலாம். அதிக வெயில் காலத்திலும், குளிர் காலத்திலும் பயணத்தை தவிர்த்து விடுங்கள். உடற்பயிற்சியையும் அந்த சமயங்கள் தவிர்த்து விடுங்கள். இந்த 2 காலக்கட்டங்களுமே நமக்கு ஆபத்தானவை. காய்ச்சல், இருமல் இருந்தாலும் கூட பயணம் செய்ய வேண்டாம்.
வாகனம் ஓட்டலாமா என்றால் கண்டிப்பாக ஓட்டக் கூடாது. எப்போது வாகனத்தை இயக்கலாம் என்று டாக்டர் சொல்லும் வரை அதனை இயக்கக் கூடாது. அதிகபட்சமாக 4 முதல் 6 வார ஓய்வுக்கு பிறகு வாகனங்களை இயக்க மருத்துவர் அனுமதி அளிப்பார். அந்த சமயம் வாகனத்தை இயக்கினால் போதும்.
வேலைக்கு போகலாமா என்றால் தாராளமாக போகலாம். உடல் நிலை நன்றாக இருக்கிறது, சாப்பிட முடிகிறது. அஜீரண கோளாறு இல்லை, மலச்சிக்கல் இல்லை, அலுவலகத்தில சாதாரணமாக இருக்க முடியும். பிறர் துணை அவசியம் இல்லை என்று எண்ணினால் அலுவலகம் செல்லலாம்.
மேலும் தினமும் 7 மணி நேரம் தூங்க வேண்டும். மதியம் தூங்க வேண்டிய அவசியம் இல்லை. மதியம் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மதியம் தூங்கினால் இரவில் தூக்கம் வராது.
முடிந்தளவு அறுவை சிகிச்சை செய்தவர்களும், ஸ்டென்ட் போட்டவர்களும் சோபாவில் உட்கார கூடாது. தரையிலும் உட்கார வேண்டாம். அப்படி உட்கார்ந்தால் கையை ஊன்றி எழுந்திருக்கும் நிலை உள்ளது. அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சேர் அல்லது கட்டிலில் அமர்ந்து எழும்புங்கள்.
ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் டி.வி. சீரியல் பார்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த ஓட்டம் மெதுவாக இருக்கும். அப்படி இருக்கும் போது ஒரே இடத்தில் அவர்கள் மணிக்கணக்கில் அமர்ந்து இருந்தால் உடல் பாதிப்பு ஏற்படும்.
வேலைக்கு போகிறவர்களாக இருந்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நடந்து பழகுங்கள். தண்ணீர் பாட்டிலை அலுவலகத்தின் ஒரு ஓரமாக வைத்து விட்டு தாகம் எடுக்கும் போது எழுந்து சென்று தண்ணீரை குடிக்க பழகுங்கள். நீங்கள் முதல் தளத்தில் இருந்தால் சிறுநீர் கழிக்க தரைத்தளத்துக்கு வரலாம். தரைத்தளத்தில் இருந்தால் முதல் தளத்துக்கு செல்லலாம். அதிகம் சூடான நீரிலோ, அதிகம் குளிரான நீரிலோ குளிக்காதீர்கள். வெது, வெதுப்பான நீரில் குளியுங்கள்.
இல்லற வாழ்க்கை: இப்போதெல்லாம் குறைந்த வயதிலேயே இதய நோய் வந்து விடுகிறது. அவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இதய நோயாளிகளாக இருப்பதால் அவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாமா என்ற கேள்வி எழும். நிச்சயமாக இல்லற வாழ்வை தொடரலாம். இதற்கும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். இதயத்தின் நிலை மற்றும் உடல்நிலையை பொறுத்து மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு வருமா என்றால் வர வாய்ப்புண்டு. வாழ்க்கை முறையை சரியாக கடைபிடிக்காமல் இருந்தால், மருந்து, மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடாமல் இருந்தால், கொழுப்பு உணவுகளை நிறைய சாப்பிட்டால், மது குடித்தால், சிகரெட் பிடித்தால் மீண்டும் மாரடைப்பு வரும். எனவே ஒருமுறை மாரடைப்பு வந்த பிறகாவது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு மீண்டும் வராமல் தடுக்கலாம்.
தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630
- உற்சவர் ‘ஸ்ரீதேவி பூமிதேவியுடன் ஸ்ரீனிவாசப் பெருமாளாக’ திருவருள் புரிகிறார்.
- திருமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் காட்சி கொடுத்த தலமாதலால் புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகள் அதிக மக்கள் வருகை இருக்கும்.
மாறுபட்ட நிலையில் இருக்கும் பக்தர்களுக்காக திருமால் கீழிறங்கி வந்து சீலம் எனப்படும் ஒழுங்குபடுத்துவது அல்லது குணப்படுத்துமிடம் குணசீலம் ஆகும். புகழ்பெற்ற குணசீலம் திருச்சியில் இருந்து முசிறி செல்லும் வழியில், சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருப்பைஞ்ஞீலி வனத்தில் எழுந்தருளி தவம் செய்து கொண்டிருந்த தால்பிய மகரிஷிக்கு குணசீல மகரிஷி சீடரானார். இவர்கள் இமயம் உள்ளிட்ட வடதேசங்களுக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்து திருப்பைஞ்ஞீலி திரும்பும் வழியில் திருமலையில் திருவேங்கடமுடையானையும் தரிசித்தனர். திருவேங்கடமுடையானின் திவ்ய தரிசனத்தில் மனதைப் பறிகொடுத்த குணசீலர் அங்கிருந்து அகல மனமின்றி குருவோடு திருப்பைஞ்ஞீலி திரும்பினார். ஊர் திரும்பியும் வேங்கடவனை மறக்காத குணசீலர் காவிரி நீராடி, எந்நேரமும் வேங்கடவனை நினைத்துக் கடும்தவத்தில் ஈடுபட்டார்.
காலச்சக்கரச் சுழற்சியில், கடும் மழையிலும் இடியிலும் தவம் தொடர்ந்தது. குணசீலரின் இடைவிடாத தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள் காவிரிக் கரையில் இருந்த குணசீல மகரிஷியின் ஆசிரமத்திற்கு உபய நாச்சியார்களுடன் ஒளி வண்ணத்தில் கருடன் மீதமர்ந்து எழுந்தருளிய வேங்கடேசனின் அருட்காட்சி கண்டு தொழுதார் குணசீலா்.
குணசீல மகரிஷி பெருமாளிடம் பக்தர்கள் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை வழங்கவும் மனித மனங்கள் சீலம் பெறவும் 'மத்திய திருப்பதி' எனும் பெயரால் எப்போதும் இக்காவிரிக்கரையில், பிரசன்ன வேங்கடேசனாக எழுந்தருளி குறைகளை நீக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் வேங்கடவன் அவரின் வேண்டு தலை ஏற்று, கலியுக வரதனாக ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் என்ற பெயரோடு விக்ரக வடிவில் சங்கு, சக்கரம், வரதம், கடிக ஹஸ்தம் கொண்டவராக எழுந்தருளினார். எல்லாவற்றுக்கும் மேலாக கையிலே செங்கோல் தாங்கி "ராஜா வேங்கடநாதன்"என்ற வடிவில் இங்கு காட்சி கொடுத்தார். அப்போதும் திருமார்பில் திருமகளோடு, அா்ச்சாவதாரத் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிர அருள்பாலித்தார்.
ஊரும் பேரும்: குணசீல மகரிஷிக்கு காட்சி தந்து பெருமாள் எழுந்தருளிய தலமாதலால் குணசீலம்' என அழைக்கப்பட்டது.. மூலவா் 'ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி' என்ற திருநாமத்துடன் அருளுகிறார். உற்சவர் 'ஸ்ரீதேவி பூமிதேவியுடன் ஸ்ரீனிவாசப் பெருமாளாக' திருவருள் புரிகிறார்.
குணசீலரின் குரு தால்பியர், தவம் புரிந்து கொண்டிருந்த தன்னுடன் வந்து தங்கி இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்றார். அப்போது குணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் சீடன் இருக்குமிடம் வந்து தொந்தரவு அளித்தன. பயந்துபோன சீடன் எவரிடமும் எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து ஓடி விட்டான். காலப்போக்கில் பெருமாளை புற்று மூடியது.. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனையில் இருந்த பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன.
தொடர்ச்சியாக மேய்ச்சலுக்குப் போன பசுக்களின் மடியில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் காரணத்தையும் இந்த அதிசயத்தையும் அறிய வந்தான். அப்போது ஒலித்த அசரீரியால், புற்றுக்குள் பெருமாள் இருப்பதை அறிந்து பசுக்கள் அதன் மீது பால் சொறிவதைக் கண்டான். மன்னன் சிலையை கண்டெடுத்து கோவில் எழுப்பினான். புற்றிலிருந்து தோன்றியதால் "பிரசன்ன வெங்கடாஜலபதி" எனப் பெயரிட்டு வணங்கத் தொடங்கினார்கள். அது முதல் மக்கள் வழிபட்டு வரும் இக்கோவிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு வரும் போது பக்தர்கள் வழிபாடும் பூஜையும் தடைபடுவதால் சிறிது காலம் முன்பு சன்னதி வெள்ளத்தால் பாதிக்காத அளவு உயர்த்தியும் சுற்றிலும் பக்தர்கள் வசதியை முன்னிட்டு பிரகார மண்டபமும் அமைக்கப்பட்டது.
ராஜ கோபுரம் கடந்து செல்லும் போது இடது புறம் விகனச குருவின் சன்னதியும் பிரகாரச்சுற்றும் அமைந்துள்ளன. சன்னதி முன்புறம் கொடிமரம் பலிபீடம் தாண்டி மகாமண்டபமும் அர்த்த மண்டபமும் அடுத்து கருவறையும் அமைந்துள்ளன.
குலம் காக்கும் குணசீலன்: கருவறையில் பலருக்கு குல தெய்வமாகவும் கண்கண்ட தெய்வமாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவதை அருளும் வரப்பிரசாதியாக பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சங்கு, சக்கரம், வரதம், கடிக ஹஸ்தம் கையிலே பில்லி சூனியம் ஆகியவற்றை அதட்டி ஓட்டும் தண்டமும் ராஜ்யத்தை நிர்வகிக்கும் தங்க செங்கோலும் கொண்டு திரிநேத்ர விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் அருளுகிறார். உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளக்கிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் இருந்து அனுக்கிரகிக்கிறார். தாயார் பெருமாளுடன் சேர்ந்தே திருமார்பிலேயே இருந்து அருளுவதால் தனி சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை.
மலர் சார்த்தி மகிழும் பக்தர்கள்: தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது, பெருமாளுக்கு சார்த்துவதற்கான சுத்தமான வாசம்மிக்க மலர்கள் விளைவிக்க திருநந்தவனம் அமைக்கப்பட்டு அதில் இருந்து வரும் மலர்களைக் கொண்டு தொடுத்து பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. நந்தவன பராமரிப்பில் பக்தர்களும் பங்கேற்கிறார்கள்.
நாளும் வழிபாடும்: தினமும் காலை 6.30 முதல் மதியம் 12.30 மணிவரையும், மாலை 4 இரவு 8.30 மணி வரையும் தரிசன நேரமாக உள்ளது, தினமும் விஸ்வரூபம், காலசந்தி,உச்சிகாலம், சாயுங்காலம்,அர்த்தஜாம் என 5 காலபூஜைகள் நடக்கின்றன; பிரார்த்தனைத் தலமாதலால் வாரத்தில் அனைத்து நாட்களும் முக்கிய நாட்களாகும். சனி ஞாயிறு அதிகளவில் மக்கள் வருகை தருகின்றனர். மாதப்பிறப்பு அமாவாசை, பவுர்ணமி திருவோணம் முக்கிய நாட்களாக இருந்தாலும், சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, புரட்டாசியில் நடைபெறும் 11 நாட்கள் பிரம்மோற்சவம் மக்களின் உளம் கவர்ந்தவையாகும் . திருமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் காட்சி கொடுத்த தலமாதலால் புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகள் அதிக மக்கள் வருகை இருக்கும்.
பன்னிரு கருட சேவை: கோவில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடனில் எழுந்தருளி சேவை சாதிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு.
பிரார்த்தனைத் தலம்: அபிமான மற்றும் பிரார்த்தனைத் தலமாகவும் இருப்பதால் அங்கப் பிரதட்சணம், அடி பிரதட்சணம், முடி காணிக்கை, செலுத்துதல், சந்தனக்காப்பு, புஷ்பாங்கி சேவை, கருடசேவை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செய்தல் ஆகியவை நடக்கின்றன. இதனை "மத்திய திருப்பதி" என அழைத்து வணங்குவதால் திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை இங்கு செலுத்துகிறார்கள்.
நோய் நீக்கும் நிமலன்: இப்போது மட்டுமில்லாமல் தொன்மைக் காலத்திலேயே கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி குறை நீங்கி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாடலும் இயற்றிப் பாடியுள்ளான். இன்று பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
மன நோய் நீக்கும் மருத்துவர்: 60 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கோவிலின் கல் தூணில் பிணைத்து வைத்திருப்பார்கள். திருக்கோவில் பணியாளர்கள் காலை 5 மணிக்கு அவர்களை வரிசையாக அழைத்துச் சென்று காவிரியில் குளிக்க வைத்து சன்னதியின் முன்புறம் நிறுத்திவைத்து விஸ்வரூபம் தரிசனம் செய்வார்கள். மதியம் உச்சி காலத்தில் அவர்களுக்கு பெருமாளின் திருமஞ்சன தீர்த்தம் அடிக்கப்படும். உணவும் பராமரிப்பும் திருக்கோவிலே செய்து வந்தது. பில்லி சூனியம் மனபிரமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம் தங்கி மனபிரமை நீங்கி சித்தம் தெளிந்து பூரண குணம் பெற்று வீடு திரும்பிய நிலையை என் இளமைக் காலத்தில் கண்டுள்ளேன். இந்தக் கோவிலின் இந்த இடத்தின் சிறப்புகளில் அதுவும் ஒன்றாகும்.
மனநல மறுவாழ்வு இல்லம்: தற்போது அரசு அனுமதிப்படி மனநல சுகாதார மறுவாழ்வு இல்லம் அமைந்துள்ளது. இம்மையத்தில் தனிப்பட்ட அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளது. வாரம் ஒன்று அல்லது இருமுறை அரசின் மனநல மருத்துவர் மையத்திற்கு வந்து பார்வையிட்டு தேக மன ஆரோக்கியத்தை பரிசீலித்துச் செல்லுகிறார். தினசரி மனநிலை பாதிப்படைந்த மக்களை கவனித்துக்கொள்ளும் பணியாளர்கள் உள்ளனர். 48 நாட்களுக்கு உச்சிகாலம் (நண்பகல்) மற்றும் அர்த்தசாமத்தின் (இரவு) போது ஒவ்வொரு நாளும் மன பாதிப்படைந்த மக்களை பூஜையின்போது குணசீலப்பெருமாள் முன்பு அமரச்செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளித்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இறையருளால் அவர்கள் பூரண குணம் பெற்று ஊருக்குத் திரும்புகிறார்கள்.
குணசீலத்து வேங்கடவன் துணையிருக்க குறையேதுமில்லை! வினையேதுமில்லை! பயமேதுமில்லை!
- ஒரு பெண் கருவை சுமப்பதற்கு ஆதாரமாக திகழும் மூலத்தலமாக கரு வளர்ச்சேரி திகழ்கிறது
- கருவளர்ச்சேரிக்கு வரும்போது திருமணம் ஆன பெண்கள் தனியாக வருவதை தவிர்த்து கணவனுடன் வர வேண்டும்.
திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்ததும் அனைவரது எதிர்பார்ப்பும் "குழந்தை பேறு" பற்றியதாகத்தான் இருக்கும். 'என்ன ஏதாவது விசேஷம் உண்டா?' என்று புதுமண தம்பதிகளிடம் கேட்க தொடங்கி விடுவார்கள்.
ஒருவரிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாவிட்டால் முழுமையான வாழ்க்கை இல்லாததாகத்தான் கருதப்படும். ஏனெனில் மழலைகள் விளையாடாத வீடு ஒருவித வெறுமையுடன்தான் காணப்படும். எனவேதான் குழந்தை செல்வத்தை அற்புதமான வரம் என்று நமது முன்னோர்கள் சொல்லி உள்ளனர்.
ஒரு தம்பதி குழந்தை பெற்றால் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்துக்கு செல்கிறார்கள் என்று அர்த்தமாகும். தற்போதைய நவீன அறிவியல் வளர்ச்சி உலகில் மன அழுத்தம், சரியான தூக்கமின்மை, கணவன்-மனைவிக்கு இடையே அன்பு குறைவு போன்றவை காரணமாக குழந்தை பேறு பலருக்கும் வாய்க்காமல் உள்ளது.
திருமணமாகி சில ஆண்டுகள் கடந்து விட்டால் குழந்தை இல்லாத பெண்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. வெளியில் செல்லவே தயங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இத்தகைய நிலையில் இருக்கும் பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாக திகழ்கிறாள் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி.
கும்பகோணம் யாத்திரையில் மிக முக்கியமான இடம் கருவளர்ச்சேரிக்கு உண்டு. ஒரு பெண் கருவை சுமப்பதற்கு ஆதாரமாக திகழும் மூலத்தலமாக கரு வளர்ச்சேரி திகழ்கிறது. எனவே குழந்தை பேறுக்காக ஏங்கும் பெண்கள் அவசியம் வழிபட வேண்டிய தலமாக இந்த தலம் உள்ளது.
ஒரு பெண் கருத்தரிக்காமல் அவதிப்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அவை அனைத்தையும் நிவர்த்தி செய்து கருவை உண்டாக்கும் தாயாக அகிலாண்டேஸ்வரி இருப்பதால் அவளை, "கருவளர்த்த நாயகி" என்று பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்கள் இந்த தலத்துக்கு வந்து முறைப்படி வழிபாடுகள் செய்ய வேண்டும்.
கருவளர்ச்சேரிக்கு வரும்போது திருமணம் ஆன பெண்கள் தனியாக வருவதை தவிர்த்து கணவனுடன் வர வேண்டும். இல்லையெனில் குடும்பத்தினருடன் வரவேண்டும். நன்கு நீராடி தூய உடை அணிந்து வழிபாட்டுக்கு வரவேண்டி யது அவசியமாகும். கருவளர்ச்சேரி ஆலயத்துக்கு வந்ததும் முதலில் படிப்பூஜை செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
இதற்காக ஆலயத்துக்கு வருவதற்கு முன்பு பூஜை பொருட்களை தயாராக வாங்கி செல்ல வேண்டும். பூஜைக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்ற விவரம் வருமாறு:-
* 7 மஞ்சள் கிழங்கு * அந்த மஞ்சள் கிழங்குகள் உருண்டையாக இருக்க வேண்டும்.
* தீபம் ஏற்ற பசு நெய் * 2 எலுமிச்சை பழங்கள்
* தேங்காய் * வாழைப்பழம்
* வெற்றிலை பாக்கு * பூ- மாலை
* குங்குமம் * ஊதுபத்தி
இந்த பூஜை பொருட்களுடன் காலையிலேயே ஆலயத்துக்கு சென்று விட வேண்டும். அங்கு குறிப்பிட்ட நேரத்தில் படி பூஜை நடத்துவார்கள். குழந்தை வரம் வேண்டும் பெண்கள் அம்மன் சன்னதிக்கு சென்றதும் முதலில் அம்மனை மனதார வழிபட வேண்டும். "உன்னையே நம்பி வந்திருக்கிறேன் தாயே" என்று உருக்கமுடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அர்ச்சகர் வழிகாட்டுவது போல அம்மன் சன்னதியின் வாசல்படியை நெய்யினால் மெழுக வேண்டும். அதில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதையடுத்து அம்மனை நன்றாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அந்த பூஜை முடிந்ததும் அர்ச்சகர் அம்மனிடம் இருந்து எடுத்து வந்து 7 மஞ்சள் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தை பிரசாதமாக தருவார்.
பெண்கள் அவற்றை பயபக்தியுடன் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது மனதுக்குள் ஒரு சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். அதாவது கர்ப்பம் தரித்து வளைகாப்பு செய்யும்போது 7 வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக எடுத்து வைத்து விடுகிறேன் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
பிரசாதமாக தரப்பட்ட எலுமிச்சை பழம், மஞ்சள்களை கவனத்துடன் வீட்டுக்கு எடுத்து வரவேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து தம்பதிகள் மட்டுமே பருக வேண்டும். அர்ச்சகர் தந்த 7 மஞ்சள்களை வேண்டுதல் வைத்துள்ள பெண் மட்டுமே தொட வேண்டும். மற்றவர்கள் தொடக்கூடாது. அந்த மஞ்சள்களில் ஒன்றை எடுத்து அரைத்து அந்த பெண் குளிக்கும்போது பூசி வர வேண்டும். ஒரு மஞ்சள் முடிந்த பிறகு அடுத்த மஞ்சளை எடுத்து உபயோகிக்க வேண்டும். பாதம் தவிர உடலின் அனைத்து பாகங்களிலும் மஞ்சளை பூசி குளிக்கலாம். அம்பாளின் அனுக்கிரகத்தால் பெண்கள் கர்ப்பம் தரிப்பார்கள்.
அந்த அளவுக்கு கருவளர்ச்சேரியில் பெறப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது. அதனால்தான் குழந்தை பாக்கியம் வேண்டி தினமும் ஏராளமான பெண்கள் இந்த ஆலயத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
கருவளர்ச்சேரியில் இந்த வழிபாட்டை செய்து லட்சக்கணக்கான பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று இருக்கிறார்கள். இந்த ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரி சுயம்புவாக உருவாகி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். அந்த சுயம்பு போலவே தன்னை நாடி வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கரு உருவாக் கலை செய்து கொடுப்பதை அவள் கருணையாக கொண்டிருப்பதாக தல புராணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வேண்டுதல் நிறைவேறியதும் குழந்தைக்கு 2 வயது பூர்த்தி ஆவதற்குள் மீண்டும் அகிலாண்டேஸ்வரியை நாடி சென்று நன்றி சொல்ல வேண்டும். ஆலயத்தில் உள்ள தொட்டிலில் குழந்தையை வைத்து தாலாட்ட வேண்டும். வளைகாப்பின்போது அம்மனுக்காக எடுத்து வைத்திருந்த 7 வளையல்களையும் மறக்காமல் அகிலாண்டேஸ்வரிக்கு சமர்ப்பித்து வழிபட வேண்டும்.
அகத்தியர் தனது மனைவி லோபமுத்ராவுடன் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாடு செய்தார். அதன் மூலம் அவருக்கு சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமண காட்சி கிடைத்தது. இதனால் இந்த தலம் திருமண பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது.
கருவை உண்டாக்கி அந்த கரு அழகாக குழந்தை வடிவத்துக்கு மாறி வளர்வதற்கும் அகிலாண்டேஸ்வரி துணை புரிவதால் கருவை பாதுகாக்க நினைக்கும் பெண்களும் இந்த தலத்துக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் தொட்டில் கட்டி வழிபாடு செய்வதை காண முடிந்தது.
பல்வேறு சிறப்புகளுடன் திகழும் இந்த ஆலயம் 1000 ஆண்டுகள் பழமையானது. தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கருவளர்ச்சேரி ஆலயம் திறந்து இருக்கும்.
தாய்மை அடையும் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போவதால் தவிக்கும் பெண்கள் ஒருமுறை அகிலாண்டேஸ்வரியை பார்த்துவிட்டு வந்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும். ஏனெனில் தன்னை நாடி வந்து வணங்கும் பெண்களின் உடல் ரீதியிலான தோஷங்களை மட்டுமின்றி மன ரீதியிலான கஷ்டங்களையும் அகிலாண்டேஸ்வரி நீக்குகிறார் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்றும் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மட்டுமே அகிலாண்டேஸ்வரியின் முழு உருவத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் திருமுக தரிசனம் மட்டுமே பெற முடியும்.
கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் வழித்தடத்தில் சென்றால் மருதநல்லூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 2 கிலோ தொலைவில் கருவளர்ச்சேரி ஆலயம் உள்ளது.
சரி.... பெண்ணுக்கு கரு உருவாகி விட்டது. அடுத்து என்ன? அந்த கருவை பாதுகாத்து, சுகப்பிரசவம் பெறச் செய்ய வேண்டும். அதற்கு நாம் செல்ல வேண்டிய இடம் திருக்கருக்காவூர்.
கருவளர்ச்சேரி தலத்துக்கு மிக அருகிலேயே திருக்கருக்காவூர் உள்ளது. அடுத்த வாரம் திருக்கருகாவூர் தலத்தை பார்க்கலாம்.
- வயது முதிர்ந்த காலத்தில் உறக்கம் சற்று அதிகம் தேவை.
- எளிமையான யோகாசனப் பயிற்சிகள் முதுமையில் உடலுக்கு பலத்தை தரும்.
முதுமையில் சவாலாகும் எண்ணற்ற உடலியல் மாறுபாடுகள் பல்வேறு நோய்களுக்கு காரணமாகின்றன. இந்த சூழலில் மென்மேலும் நோய்நிலைகள் அதிகமாவதைத் தடுக்க சரியான உணவு பழக்கவழக்கங்களையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியம்.
இராச உறுப்புகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பல்வேறு தொற்றா நோய்நிலைகளான சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, இதய நோய், பக்கவாதம் ஆகிய முக்கிய நோய்நிலைகளுக்கு காரணமாகின்றன. இத்தகைய நோய்நிலைகள் முதுமையில் ஒரு கட்டத்தில் மனத்தடுமாற்றத்தை உண்டாக்கி, என்ன தான் வாழ்க்கை இது? என்கிற அளவிற்கு மனச்சோர்வினை உண்டாக்கி, வாழ்க்கையின் இறுதி கட்டத்தைப் பற்றிய அச்சத்தை உண்டாக்கி விடுகிறது.
எனவே முதுமையில் நோய்களைத் தடுக்க ஆரோக்கியமளிக்கும் சத்தான உணவு முறைகளோடு, எளிய வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடிப்பதும் அவசியம். அதிகாலை எழுதலும், இரவில் சீக்கிரம் படுக்கைக்கு செல்லுதலும் கூட ஒரு வகையில் ஆரோக்கியத்திற்கு பலம் தான்.
வயது முதிர்ந்த காலத்தில் உறக்கம் சற்று அதிகம் தேவை. உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் அதிக அசதியால் அவ்வப்போது ஓய்வு எடுப்பதும் நல்லது. அத்துடன் காலையில் திருமூலர் கூறிய எளிய யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வது நலம் தரும்.
எளிமையான யோகாசனப் பயிற்சிகள் முதுமையில் உடலுக்கு பலத்தை தரும். தசைகளுக்கும், மூட்டுகளுக்கும் நன்மை பயக்கும். மூட்டுகளின் விறைப்புத் தன்மையைக் குறைக்கும். மூட்டுக்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதால் நாட்பட்ட மூட்டுக்கள் சார்ந்த வலிகளில் நல்லதொரு முன்னேற்றம் தந்து நிம்மதி பெருமூச்சுக்கு வழி வகுக்கும். முதுகு வலி, மூட்டு வலிகளில் நல்ல நிவாரணம் தரும். இயல்பான தூக்கத்தையும், மன அமைதியையும் தரும். இதயதுடிப்பு மற்றும் அதிகரித்த இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
யோகாசன முறைகளில் நின்று கொண்டு பயிற்சி செய்யும் யோகாசனங்களான தாடாசனம், உட்கட்டாசனம், திரிகோணாசனம், படுத்த நிலையில் செய்யும் மக்ராசனம், புயங்காசனம், சவாசனம், பாவன முக்தாசனம், சேதுபந்தாசனம், உட்கார்ந்த நிலையில் செய்யும் பட்சிமோத்தாசனம், வக்ராசனம், உஷ்ட்ராசனம் போன்ற எளிய ஆசனப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
தினசரி 15 நிமிடங்கள் இத்தகைய யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேலும் சூரிய வணக்கம் தினசரி 5 நிமிடங்கள் மெதுவாக செய்வதும் அதிக நன்மை பயக்கும். அதனைத் தொடர்ந்து 'பிராணாயாமம்' எனும் மூச்சுப் பயிற்சி தினசரி 7 நிமிடங்கள் செய்வதும் உடலுக்கு பலம் தரும். சுருங்கிய நுரையீரலுக்கு புத்துணர்ச்சி தரும். மூச்சு வாங்கும் சிரமம் குறையும்.
மூச்சுப் பயிற்சியினை தொடர்ந்து தியானப் பயிற்சிகளை மேற்கொள்வது இன்னும் அதிகம் நன்மை பயக்கும். ஏனெனில் நாட்பட்ட மன அழுத்தமே 80% நோய்நிலைகளுக்கு காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வறிக்கைகள். நாட்பட்ட மன அழுத்தத்தால் மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் சார்ந்த ஹார்மோன் அச்சு பாதிக்கப்பட்டு பல்வேறு ஹார்மோன் மாற்றக் கோளாறுகளை உண்டாக்கும்.
உடலின் இயங்குவியலில் மன அழுத்தத்தின் இறுதியில் 'குளுக்கோகார்டிகாய்டுகள்' எனப்படும் ஸ்டீராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்கது 'கார்டிசோல்' எனும் ஹார்மோன் தான். இதுவே "ஸ்ட்ரெஸ் ஹார்மோன்" என்ற பட்டபெயருக்கும் உரித்தானது. இந்த கார்டிசோல் உற்பத்தி அதிகரிப்பின் பல்வேறு மாறுதல்கள் உடலில் ஏற்பட்டு முதுமையை சீரழிக்கும்.
உடலில் பல்வேறு வீக்கங்களை உண்டாக்கும் வேதிநொதிகள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு, நோய் எதிர்ப்புசக்தி மண்டலமும் பாதிக்கப்படும். முதுமையில் உண்டாகும் முடக்கு வாத நோய்களுக்கும், பக்க வாதம் மற்றும் திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும் இந்த மனஅழுத்தம் சார்ந்து உண்டாகும் வேதி வினைகளே காரணமாகின்றன. ஆதலால் முதுமையில் மன அழுத்தத்தை கொஞ்சம் ஓரங்கட்டி, பேரப் பிள்ளைகளோடு கொஞ்சி பேசி விளையாடுவதும், தியானப் பயிற்சி பழகுவதும் ஆயுளை அதிகரிக்க உதவும்.
மன அழுத்தத்தால் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பு மண்டலங்களும் தனித்தனியே பல்வேறு மாறுதல்கள் அடையக்கூடும். இன்றைய நவீன மருத்துவ உலகத்துக்கு சவாலாக உள்ள குடல் அரிப்பு நோய் (IBS), பெருங்குடல் அழற்சி நோய் (கொலைட்டிஸ்) போன்ற பல்வேறு நோய்நிலைகளுக்கு முக்கிய காரணமே இந்த நாட்பட்ட மனஅழுத்தம் தான்.
தியானம் முதுமையில் மிகப்பெரிய பலம். மனதிற்கு அமைதியை கொடுப்பதுடன், உடலுக்கும் மனத்திற்கும் பலம் தரும். உடலும், மனமும் வெதும்பி, தன் மீது அக்கறை காட்ட ஒருவரும் இல்லை என்ற எதிர்மறை எண்ணம் முதுமையில் பல்வேறு நோய்நிலைகளுக்கு ஆதாரமாகின்றது. "மனமது செம்மையானால், மந்திரம் செபிக்க வேண்டாம்" என்கிறது திருமந்திரம் மட்டுமல்ல, நவீன மருத்துவமும் தான்.
முதுமையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் பல்வேறு மருத்துவ நன்மைகளை அளிப்பதாக அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம் பட்டியலிடுகின்றது. முக்கியமாக இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், சர்க்கரை வியாதியைக் கட்டுக்குள் வைக்கவும் பேருதவி புரியும். இவை இரண்டையும் கட்டுக்கள் வைப்பது என்பது, முதுமையில் மாரடைப்பு, பக்கவாதம் (STROKE) ஆகிய நோய்நிலைகளை விரட்டுவதற்கு உதவும். மேலும் முதுமையில் உண்டாகும் மூட்டு வலியை தடுப்பதற்கும் நடைப்பயிற்சி உதவுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஒருபடி கூடுதலாக, நடைப்பயிற்சி மேற்கொள்வது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினை குறைப்பதாக ஆய்வுகள் கூறுவது கூடுதல் சிறப்பு. நடைப்பயிற்சி அதுவும் முதுமையில் பெண்களைப் பாதிக்கும் மார்பக புற்றுநோயினை 14% வரை தடுக்கக்கூடியதாக உள்ளது. வாரந்தோறும் குறைந்தது 7 மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் அத்தகைய நன்மை கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, புற்றுநோய் நிலையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே நெருங்கும் எமனை எட்டி உதைத்து, ஆயுளைக் கூட்ட, நமது கால்களே போதும் என்கிறது நவீன அறிவியல்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் நடைப்பயிற்சி மேற்கோள்பவர்கள், வாரத்திற்கு ஒருமுறை அல்லது அதற்கும் குறைவாக உடற்பயிற்சி செய்பவர்களை விட, நோய்வாய்ப்படும் அளவு 43% குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் நோய்வாய்ப்பட்டால், அது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டும் இருக்கும் எனவும், அவர்களின் அறிகுறிகள் லேசானவை தான் என்றும் முடிவுகள் தெரிவிப்பது நடைப்பயிற்சியின் மகத்துவத்தை உணர்த்துகின்றது.
சித்த மருத்துவம் கூறும் மருத்துவ நெறிமுறைகளில் 6 மாதத்திற்கொரு முறை பேதிக்கு மருந்து எடுப்பதன் மூலம் உடலில் முறை தவறிய வாதம் தன்னிலைக்கு வரும். ஆனால் முதுமையில் பேதி மருந்து எடுப்பது உகந்ததல்ல. ஆதலால் மலத்தை இளக்கி வெளிப்படுத்தும் இலகுவான மருந்துகளை எடுத்துக்கொள்வது வாதத்தைக் குறைத்து பல்வேறு நோய்நிலைகளில் நன்மை பயக்கும். வாதமலாது மேனி கெடாது என்பது தேரையர் சித்தரின் வாக்கு. ஆகையால் உடல் நலம் குன்றாமல் இருக்க அவ்வப்போது குடல் சுத்தம் செய்துகொள்வது உடலுக்கு நன்மை தரும்.
அதே போல் முதுமையில் சத்தான உணவினை நாடுவது ஒருபுறம் இருக்க, உண்ணும் உணவின் அளவைக் குறைப்பதும் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கின்றன சித்த மருத்துவ நூல்கள். மூன்று பொழுது உண்பவன் ரோகி என்று இருக்க, முதுமையில் உணவினை சுருக்கி இரண்டு வேளை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. 'பட்டினியை பெருமருந்து' என்று சித்த மருத்துவம் வலியுறுத்துகின்றது. இந்த கருத்தையே நவீன அறிவியலும் பட்டினி சிகிச்சை என்ற முறையை சமீப காலங்களில் பிரபலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வேளை வேளைக்கு மருந்து மாத்திரைகள் தான் எடுத்துக்கொள்கிறோமே, இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியமா? என்கிற ஐயம் பலருக்குத் தோன்றும். உண்மையில் இத்தகைய பயிற்சிகள் மருந்து மாத்திரைகளை விட கூடுதல் பலனளிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நலத்திற்கு பாதை அளிக்கும்.
சித்த மருத்துவம் அருளிய வாழ்வியல் மாற்ற முறைகளும், ஆரோக்கியமான உடல்பயிற்சி முறைகளும், சத்தான உணவு முறைகளும், மனஅழுத்தம் போக்கும் தியானமும், மூச்சுப்பயிற்சியும், நடைப் பயிற்சியும், இவைகள் அடங்கிய நேர்மறையான வாழ்க்கை முறையும் உடலில் ஆரோக்கியத்திற்கு இயற்கை உரமாகும்.
எதிர்மறையான வாழ்க்கை முறையே இதய அடைப்பு முதல் பல்வேறு வகையான நோய்நிலைகளுக்கு காரணம் என்கின்றன நவீன ஆய்வுகள். ஆகவே நல்ல உணர்வும், நல்ல உணவும், உடல் பயிற்சியும் முதுமையில் நோய்களைத் தடுப்பதோடு மன அழுத்தத்தைப் போக்கி, வாழ்நாளை ஆரோக்கியமாக கடக்க உதவும் உந்துதல்கள்.
ஆக, முதுமை அடைந்து விட்டோம் என்று மனம் ஒடிந்து விடாமல், மனம் திறந்து பேசி மகிழ்ச்சியாக இருப்பது முதுமையின் இன்னல்களுக்கு மாபெரும் மருந்துப் பொட்டலம். இந்த இரகசியத்தை புரிந்து கொண்டு செயல்பட்டால் முதுமை என்றுமே இளமை தான்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
- சொந்த தொழில் மூலமாக பணம் ஈட்டுவதில் 2 வகை உண்டு.
- சிலர் ஒரு குறிப்பிட்ட காலம் கூட்டுத் தொழிலில் சம்பாதிக்கிறார்கள்.
மனிதர்களின் அடிப்படை தேவைகள் உணவு, உடை இருப்பிடம். இதை நிறைவு செய்ய தொழில் மிக அவசியம்.
ஒருவருக்கு பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் ஆகியவற்றை வழங்குவதில் உத்தியோகத்தை விட தொழிலே முன்னிலை வகிக்கிறது. சொந்த தொழில் மூலமாக பணம் ஈட்டுவதில் 2 வகை உண்டு. முதல் வகை முதலீட்டை மூலதனமாகக் கொண்ட தொழில், இரண்டாவது வகை மூளையை மூலதனமாக கொண்ட தொழிலாகும். மூளையை மூலதனமாக கொண்ட தொழிலில் இடர்கள் குறைவு. குறைந்த உழைப்பில், நிறைந்த வருமானம் கிடைக்கும். ஆனால் முதலீட்டை மூலதனமாகக் கொண்ட தொழிலில் இடர்கள் அதிகம். கடினமாக உழைக்க வேண்டும். முதலீடு அதிகமாக தேவைப்படும்.
தொழில் இடர்களை குறைக்கவும் மூல தனத்தை அதிகரிக்கவும் பலர் கூட்டுத் தொழிலை விரும்புகிறார்கள். சுய தொழிலில் முதலாளியாக கொடிகட்டி பறந்த பலர் கூட்டுத் தொழிலில் உலக அளவில் பிரபலம் அடைகிறார்கள்.
சிலர் ஒரு குறிப்பிட்ட காலம் கூட்டுத் தொழிலில் சம்பாதிக்கிறார்கள். பிறகு இருந்த இடம் தெரியாமல் போகிறார்கள். கூட்டுத் தொழில் யாருக்கு சிறப்பான யோகத்தைத் தரும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
தொழில் ஸ்தானம் எனப்படும் 10ம் பாவகத்தின் மூலம் பொருளாதாரம் பெற வெற்றி பெற அவருடைய ஜாதகம் கீழே குறிப்பிட்டுள்ள நிலைகளில் உதவி புரிய வேண்டும்.
லக்னம்
ஜாதகரை குறிக்கும் லக்னம், லக்னாதிபதி வலுவாக இருந்தால் ஜாதகரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு யோகமும் லக்னம், லக்னாதிபதியோடு சம்பந்தப்படும் போது மட்டுமே அந்த யோகம் முழு யோகத்தை தரும். லக்னம் எந்தளவுக்கு வலுத்திருக்கிறதோ அந்தளவுக்கு ஜாதகனது உயர்வு இருக்கும்.
லக்னத்திற்கான காரக கிரகம் சூரியன். சூரியன் ஆத்ம காரகன். எனவே ஜாதகத்தில் சூரியன் பலம் பெற வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தனது சுய சிந்தனையுடன் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய நபராக இருப்பார். அதே போன்று லக்னம் பலமாக அமைந்தால்தான் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கும்.
தன ஸ்தானம்
இரண்டாம் பாவகம் எனும் தனம், வாக்கு ஸ்தானம் பலம் பெற்ற ஒருவரே தனது சாமர்த்தியமான இனிமையான பேச்சால் அனைவரையும் கவர முடியும். வாக்கு சாதுர்யம் இல்லாதவர் ஒருவரால் தொழில் செய்ய முடியாது. தன ஸ்தானத்திற்கு லக்ன தொடர்பு இருந்தால் தொடர் தன வரவு இருந்து கொண்டே இருக்கும். சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற அறிவும், மேலும் பணம் மென்மேலும் வரக்கூடிய வழிகளை பெருக்கக்கூடிய சுயசிந்தனையும் இருக்கும். இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் பேச்சுத் திறமை இருக்காது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. பொருள் வரவில் ஏற்ற இறக்கம் நிலவும்.
உப ஜெய ஸ்தானம் (3, 6,11)
லக்ன பாவத்தின் பாவத் பாவம் 3-ம் பாவகம். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெற விடாமுயற்சி வேண்டும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது பழமொழி. முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர் என்பது புதுமொழி. முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்த வேண்டும்.
ஆறாம் பாவகம் என்றால் அனைவருக்கும் கடன், நோய், எதிரி மட்டுமே ஞாபகம் வரும். அதாவது ஆறாம் பாவகம் எனும் பொருள் கடன் இருந்தால் மட்டுமே தன் முயற்சியால் (3-ம் பாவகம்) தொழில் செய்து (10-ம் பாவகம்) லாபம் (11-ம் பாவகம்) எனும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.
இதையே வேறு விதமாக சொன்னால் பொருள் கடன் மிகுதியாக இருக்கும் ஒருவரே பொருளீட்ட, உழைக்க முயற்சி செய்து லாபம் ஈட்டுவார். ஒருவருக்கு எல்லாவிதமான வாழ்வியல் வெற்றியைப் பெற்றுத் தருவது ஆறாம் பாவகமே.
அப்படியென்றால் ஆறாம் பாவகம் நன்மை செய்யும் பாவகம் தானே. அது கெட்ட பாவகம், நோய், கடன் என்று பயப்படுகிறார்கள். வாங்கிய கடனை திரும்பச் செலுத்தினால் ஆறாம் பாவகம் நன்மை செய்யும் பாவகம் தான். வாங்கிய கடனை திரும்ப அடைக்க முடியாதவர்களுக்கு ஆறாம் பாவகம் சாபம்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஜாதகருக்கு போட்டி மனப்பான்மையும், எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறக்கூடிய அமைப்பும், கடன் மூலம் பொருளாதாரம் ஈட்டக்கூடிய தன்மையும் மற்றும் பணம் கொடுத்தல் வாங்களில் புத்தி சாலித்தனமும் அமைய வேண்டும்.
எதிர்பார்த்த லாபத்தை அடைய லக்னத்திற்கு 11-ம் பாவகமும் அதன் அதிபதிகளும் பலம் பெறுவதன் மூலம் பெரும் பணவரவு சிறப்பாக இருக்கும். 6,11-ம் பாவகம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தொழிலுக்கு தேவையான முதலீட்டை திரட்ட முடியும்.
தொழில் ஸ்தானம் (10-ம் பாவகம்)
10-ம் இடம், 10-ம் அதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10-க்குடையவன் நின்ற ராசி , சனிக்கு 10-ம் இடம், சனிக்கு திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலைத் தீர்மானிக்கிறது.
10-ம்மிடம் பலம் பெற்று 10-ம் அதிபதிக்கு கேந்திர திரிகோண சம்பந்தம் இருந்தால் சொந்த தொழில் செய்யலாம். 10-ம் இடத்தை குரு போன்ற சுப கிரகம் பார்க்க வேண்டும் அல்லது 10-ம் அதிபதியை குரு பார்க்க வேண்டும்.
10-ம் அதிபதி உச்சம் பெற்று சுப கிரகத்தால் பார்க்கப்பட்டாலும் 10-ம் மிடத்தில் உச்சம் பெற்ற சுப கிரகங்கள் இருந்தாலும் தொழிலால் செல்வாக்கு புகழ் பெறுவார்கள். தொழில் முன்னேற்றம் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.
2,11 அதிபதிகள் பலம் பெற்றால் சொந்தத் தொழில் செய்யலாம் பெரும் லாபம் கிடைக்கும்.
10-ம் அதிபதியானவர் தனக்கு நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று, நட்பு கிரகங்களின் நட்சத்திரத்தில் அமைந்தால் தொழில் ஸ்தானம் வலுப்பெறும். தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் எத்தனை கிரகங்கள் பலம் பெற்று நிற்கின்றதோ, அத்தனை தொழில்கள் செய்யக்கூடிய வாய்ப்பு அமையும். அதுபோல 10-ம் அதிபதி எத்தனை கிரக சேர்க்கை பெற்று பலம் பெற்றிருக்கிறதோ அத்தனை விதமான தொழில்கள் செய்யக்கூடிய யோகமும் உண்டாகும்.
ஜென்ம நட்சத்திரம்
ஜனன கால ஜாதகத்தில் தொழில் காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும் ஒருவர் தன் தொழிலை திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் என்பது உடல் மற்றும் மனம். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே தொழிலில் வெற்றி பெற முடியும். அதனால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் லக்னத்திற்கு இணையான முக்கியத்துவத்தை பெறுகிறது.
சனிபகவான்
10-ம் அதிபதியை மட்டும் வைத்து ஒருவரின் தொழிலை நிர்ணயிக்க முடியாது . அதற்கு வலு சேர்ப்பது தொழில் காரக கிரகம் சனி. ஒருவருடைய ஜாதகத்தில் சனி பலம் பெற்றால் தொழில் நன்றாக இருக்கும். சனியோடு சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவ தொழிலே ஜாதகனுக்கு அமையும். சனியோடு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் எந்த கிரகத்தின் தொழிலை ஜாதகர் செய்தால் மேன்மை அடைய முடியும் என்ற சந்தேகம் தோன்றும். ஷட் பல நிர்ணயத்தில் எந்த கிரகம் வலிமை பெறுகிறது என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். வலுவான கிரகத்தின் காரகத்துவ தொழில் ஜாதகரை இயக்கும். வலுவற்ற கிரகங்களின் காரகத்துவ தொழில் உப தொழிலாக அமையலாம்.
கூட்டுத் தொழில்
மேலே கூறியுள்ள அனைத்தும் ஒரளவுக்கு சாதகமாக இருந்தால் சுய தொழில் புரியமுடியும். முதலீட்டையும், லாபத்தையும் அதிகரிக்க சிலர் கூட்டுத் தொழில் செய்ய விரும்பலாம். ஏழாம்பாவம் என்பது கூட்டுத் தொழிலையும், பொதுஜன தொடர்பையும் குறிக்கும். கூட்டுத் தொழில் செய்து பொருள் ஈட்டக் கூடிய அமைப்பு ஜோதிட ரீதியாக சிலருக்கு மட்டுமே அமைகிறது. ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 10-ம்மிடம் தொழில் ஸ்தானமாகும். 10-க்கு, 10-ம் இடமான 7-ம் பாவகம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் கூட்டுத் தொழில் கைகொடுக்கும். 10,7-ம் அதிபதிகளுக்கு கேந்திர, திரிகோண சம்பந்தம் இருந்தாலும் 10,7-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும் கூட்டுத் தொழில் மூலம் அபரிமிதமான பொருள் சேர்க்கை கிடைக்கும். 7-ம் அதிபதி கேந்திர திரிகோணாதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவதுடன் 10-ம் அதிபதியுடன் இணையும் பலம் பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கேற்ற நபர்கள் தொழில் ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு 7-ம் பாவகம் வலிமையாக இருக்கும். 10-ம் இடமான தொழில் ஸ்தானம் பலம் குறைவாக இருக்கும். பண பலம் மிகுதியாக இருக்கும். இவர்களுக்கும் கூட்டுத் தொழில் சிறக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும் அமைப்பை பெற்றிருந்தாலும் ஜாதகரீதியாக யாருடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்யலாம் என்ற கேள்வியும் இங்கே எழும்.
2,7,10-ம் அதிபதிகள் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
10,7-ம் அதிபதிக்கு சூரியன் அல்லது 9ம் அதிபதி சம்பந்தம் பெற்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளுடனும் தொழிலுக்காக கூட்டுச் சேருவார்கள்.
10,7-ம் அதிபதிக்கு 4-ம் அதிபதி அல்லது சந்திரனுடன், புதன் தொகுப்பு இருந்தால் தாய் மற்றும் தாய்வழி உறவுகளுடன், தாய் மாமாவுடன் தொழில் இணைவு உண்டு.
10,7-ம் அதிபதிக்கு குரு, செவ்வாயும் 3,11-ம் அதிபதி சேர்க்கை பெற்றால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் அல்லது மாமனாருடன் இணைந்து கூட்டு தொழில் நடத்துவார்கள் 10, 7-ம் அதிபதிக்கு புதனுடன் கூட்டு இருந்தால் நண்பர்களை பங்காளிகளாக இணைக்கலாம் 5,7,10-ம் பாவகங்கள் மற்றும் குரு சம்பந்தம் இருந்தால் பிள்ளைகளுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள்.
10,7-ம் அதிபதிக்கு சுக்ரன் தொடர்பு இருந்தால் தம்பதிகள் இணைந்து தொழில் கூட்டு அமைக்கலாம் அல்லது மனைவி வழி உறவினர்களுடன் இணைந்து தொழில் நடத்தலாம்.
10-ம் அதிபதி மற்றும் சனி பலம் பெற்றால் நம்பிக்கையான, திறமையான வேலை ஆட்கள் கிடைக்கப் பெறுவதுடன், வேலையாட்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, அதன் மூலம் சம்பாதிப்பார்கள்.
யார் கூட்டுத் தொழில் செய்யக் கூடாது? 7-ம் இடம் கூட்டுத்தொழிலைப் பற்றிக் கூறும் இடம் என்பதால் 7-ம் அதிபதி 3,6,8,12-ல் மறைந்து பகை நீசம் பெற்று இருந்தால், பாதக ஸ்தான சம்பந்தம் இருந்தால், அவர்கள் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நலம்.
உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனத்தை சேர்ந்தவர்களுக்கு 7-ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத் தொழில் பாதகத்தை தரும்.
ஒருவருடைய ஜாதகத்தில் 2,7,10-ம் பாவங்கள் சுபத்துவம் பெற்றால் கூட்டுத் தொழில் மூலம் ஜாதகருக்கு சமுதாய அந்தஸ்து புகழ், கவுரவம் ஆகியவைகள் கிட்டும்.
பரிகாரம்
ஒருவருடைய ஜாதகத்தில் 7-ம் இடம் பலம் குறைந்து கூட்டுத் தொழிலால் சங்கடங்களை அனுபவிப்பவர்கள் 21 சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரையான நித்திய பிரதோஷ வேளையில் சிவ பெருமானுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும்.






