என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • தங்கமே மனிதர்க்கு மகிழ்ச்சி தரும் பொருள் என்று கூறாமல் கூறினார்.
    • நம்மை நாமே நேசிக்கத் தொடங்கும் போது நமது எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் அழகாக ஆகி விடுகின்றன.

    அன்பின் வாழ்த்துகள் அன்பர்களே!

    கண்களை அகல விரித்துக்கொண்டு. பற்கள் தெரிய வாயை நீள விரித்துச் செய்வதல்ல மகிழ்ச்சி. இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சி என்பதே முகம் சார்ந்த செயல் அல்ல; அது அகம் சார்ந்த மலர்ச்சி. ஒரு பூவின் புன்னகை போன்றது மகிழ்ச்சி; அது இயல்பாக நடப்பது. எந்தவிதச் சிரமுமின்றிப் பூக்கள் மலர்வது போல நம் மனங்களில் மகிழ்ச்சி மலர வேண்டும்; அது நிறைந்த மகிழ்ச்சியாய் முகங்களில் படர்ந்து ஒளி வீசவேண்டும் மலர்களில் மணம் வீசுவதுபோல!.

    மகிழ்ச்சி என்பதற்கு எளிமையான விளக்கம் கேட்டால், "மகிழ்ச்சியாக இருப்பதே மகிழ்ச்சி!" என்று பதில் கூறலாம்.

    மகிழ்ச்சி என்பதன் பொருள் அறிய ராஜ ராஜ சோழன் ஒரு போட்டி அறிவித்ததாக ஒருகதை உண்டு. "உலகில் அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய பொருள் எது? அதனைக் கொண்டுவந்து அரண்மனைக் கொலு மண்டபத்தில் ஒரு மேடையில் வைத்துவிட வேண்டும்!. மிகப்பொருத்தமான பொருளை வைப்பவருக்கு 1000 பொற்காசுகளும் அரசாங்க வேலையும் வழங்கப்படும்!" என்று அறிவித்தார்.

    மக்களில் சிலர் அவர்களின் கருத்துக்குத் தோன்றிய வண்ணம், சில பொருள்களைக் கொண்டுவந்து கொலு மண்டபத்தில் வைத்தனர்.

    ஒருவர் கொலுமண்டப மேடையில் ஒரு சிறிய அளவுத் தங்கத்தை வைத்தார். தங்கமே மனிதர்க்கு மகிழ்ச்சி தரும் பொருள் என்று கூறாமல் கூறினார். ஏற்கனவே செல்வம் அதிகமுடைய பணக்காரர்களுக்கும் துறவிகளுக்கும் தங்கம் மகிழ்ச்சி தராது என அரசர் நிராகரித்துவிட்டார்.

    ஒருவர் நல்லிசைக் கருவியான யாழைக் கொண்டுவந்து மேடையில் வைத்தார்; இசையே இதமான இன்பத்தை மனிதர்களுக்கு வழங்கக் கூடியது என்றார். காது கேளாதவர்களுக்கு இது நல்லின்பம் பயக்காது என ஒதுக்கிவைக்கப்பட்டது.

    வாசமிகு வண்ணமலர்கள் ஒருவரால் மேடையில் அலங்காரமாக வைக்கப்பட்டன. கண்களுக்கும் நாசிக்கும் மகிழ்ச்சி தருவன மலர்கள் என எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் கண்பார்வை இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சிதர அவை பயன்படாது எனத் தள்ளிவைக்கப்பட்டது.

    ஒருவர் இனிப்பான பல்வகைப் பலகாரப் பண்டங்களைக் கொண்டுவந்து மேடையில் வைத்தார். இனிக்க இனிக்க உண்பதே நாவிற்கும்,வயிற்றிற்கும், மனத்திற்கும் மகிழ்ச்சியைத் தரும் என்பது அவரது வாதம். ஆனால் நோயாளர்களுக்கு இது இன்பம் தருவதற்கு மாறாகத் துன்பமே தரும் என விலக்கி வைக்கப்பட்டது.

    ஓர் அழகான சிற்பத்தை ஒருவர் கொண்டுவந்து மேடையில் வைத்தார். ஒரு பெரிய சிவலிங்க சொரூபம்; அதன்கீழே பசித்த ஒரு சிறுவனுக்கு ஒரு தாய் கனிவோடு உணவு ஊட்டி விடுவதுபோலச் சிற்பம் வடிவமைக்கப் பட்டிருந்தது. வருந்தும் சக உயிரினங்களுக்காக இரக்கப்படும் அன்பே தலைசிறந்த மகிழ்ச்சியைத் தரும் என்பது சிற்பம் கூறும் கருத்து என விளக்கப்பட்டது.

    ஆம்! வறியவர், செல்வந்தர், துறவியர், கண்ணற்றவர், செவித்திறன் குறைந்தவர், மாற்றுத் திறனாளர், நோயாளர், சிறுவர், பெண்கள், ஆண்கள் என உலகின் எல்லாத் தரப்பினர்க்கும் மகிழ்ச்சியை வழங்க வல்லது அன்பு ஒன்றே! எனத் தீர்மானிக்கப்பட்டு அவருக்குப் பரிசும் வேலைவாய்ப்பும் ராஜ ராஜ சோழனால் நல்கப்பட்டதாம்.

    அன்பு, கொண்டவர் மனத்தைக் கனிவிக்கிறது!; கொள்பவர் மனத்தை நெகிழ்விக்கிறது. அதனால் அன்புள்ளம் கொண்டோர் தாமும் எப்போதும் மகிழ்வாக இருக்கின்றனர். தம்மைச் சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றனர்.

    மகிழ்ச்சியாக இருக்க அன்பு அடிப்படை என்றால், அந்த அன்புக்கு முதல்படி நமக்கு நாமே அன்போடு இருக்கக் கற்றுக்கொள்வது ஆகும். பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் அடுத்தவர்கள் மீது காட்டுவது மட்டுமே அன்பு என்று. ஆனால் அதற்கும் முதற்படியாக நம்மை நாமே நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    நம்மை நாமே நேசிக்கத் தொடங்கும் போது நமது எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் அழகாக ஆகி விடுகின்றன. நமது எண்ணங்கள் செயல்கள் அழகாக அழகாகத் தாமாகவே நாமும் அழகாகி விடுகிறோம். நமது அழகும் நமது மகிழ்ச்சியும் நமது வாழ்வியலுக்கான தன்னம்பிக்கையை வழங்கி விடுகின்றன. எல்லாவற்றுக்கும் பணமே ஆதாரம் என்கிற போலியான கருத்துருக்கள் தவிடுபொடியாகி விடுகின்றன.

    ஓர் அரசன், ஒருநாள் காலையில் ஒரு அரண்மனைச் சேவகனை அழைத்தான். "நான் எப்போது பார்த்தாலும் நீ பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் மகிழ்ச்சியாக வேலைசெய்து கொண்டிருக்கிறாயே! அது எப்படி?. நான் இந்த நாட்டுக்கு அரசன்; கடல்போல அரண்மனை! ஆயிரக்கணக்கில் வேலையாட்கள், லட்சக்கணக்கில் படை வீரர்கள்! கோடிக்கணக்கில் சொத்து பத்துக்கள்! எல்லாம் இருந்தும் என்னால் உன்போல மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லையே? ஏன்? உன் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன?" என்று கேட்டார்.

    "அரசே! வணக்கம்! நான் தங்களது அரண்மனைச் சேவகன். தங்களது ஊதியத்திற்கேற்ற உழைப்பைத் தவறாது நாள்தோறும் செய்து விடுகிறேன். பெறுகிற சம்பளத்திற்குள் குடும்பம் நடத்தும் எளிய வாழ்க்கையைக் கற்றுகொண்டுவிட்டேன். நானும் என் மனைவியும் மக்களும் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க ஓர் ஓலைக்குடிசை உண்டு.அன்றாடம் குறைவில்லாமல் மூன்று வேளையும் எளிமையான உணவை உண்டு வருகிறோம். உடுத்தி மானம் மறைக்க ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று ஜோடி உடைகளும்

    உண்டு. வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி தான். இரவு உறங்கப்போனால் உறக்கம் உடனே வந்து விடுகிறது!. இதுதான் என் மகிழ்ச்சியின் ரகசியம் "என்றான் அரண்மனைச் சேவகன்.

    அரண்மனைச் சேவகனின் கூற்றை அமைச்சரை அழைத்து அப்படியே சொன்னார் அரசர். "அவன் அப்படியா சொன்னான்? அவனையும் நாளையே நமது வருத்தப்படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடுவோம்!" என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அமைச்சர்.

    "அது எப்படி முடியும்?" அரசர் கேட்டார்.

    "பொறுத்திருந்து பாருங்கள் அரசே! இன்னும் ஒரு வாரத்திற்குள் அவன் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு என்ன பாடு படப்போகிறான் பாருங்கள்". அமைச்சர் கிளம்பினார்.

    அன்று இரவு, அந்த அரண்மனைச் சேவகனின் வீட்டு வாசலில் 99 பொற்காசுகள் இருக்கும் ஒரு சுருக்குப் பையைப் போட்டு விட்டு வந்தார் அமைச்சர்.

    மறுநாள் காலை எழுந்து வீட்டு வாசலுக்கு வந்த சேவகன் வாசலில் ஒரு சுருக்குப்பை கிடப்பதைப் பார்த்தான். அவசரமாக எடுத்து வீட்டுக்குள் வந்து, உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தான். தங்க நாணயங்கள். எத்தனை என்று எண்ணத் தொடங்கினான்; அப்போது முதல் அவனது மகிழ்ச்சி தொலையும்காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டது.

    நூறு தடவைக்குமேல் எண்ணிப் பார்த்துவிட்டான். காசுகள் 99 மட்டுமே இருந்தன.இருந்தால் நூறு காசுகள் அல்லவா இருந்திருக்க வேண்டும்; அந்த நூறாவது காசு எங்கே போயிற்று?. அன்று அரண்மனை வேலைக்குப் போகவில்லை. வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகளைக் கிளறத் தொடங்கினான்; சாக்கடைக்குள் இறங்கிச் சல்லடை போட்டு அலசித் தேடினான். அவனது வீட்டைச் சுற்றியுள்ள தெருக்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தேடினான்.

    இப்படியாகத் தேடி அலைவதிலேயே பத்து நாட்கள் கழிந்து போயின; சேவகன் அரண்மனைக்கு வேலைக்கும் போகவில்லை!. சேவகனின் நிலையை அரசனும் அமைச்சரும் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.

    பத்துநாளுக்குப் பிறகு, இனிமேல் எப்படித் தேடினாலும் தொலைந்துபோன அந்தத் தங்கக் காசு கிடைக்காது என்கிற முடிவுக்கு வந்தான். அப்படியானால் அந்த 99 காசுகளை வைத்துக்கொண்டு அவன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினானா? என்றால் அதுதான் இல்லை.

    அவன் புதிதாக ஒரு முடிவுக்கு வந்தான். இனிமேல் அரண்மனைச் சேவகம் தவிர மற்ற வேலைகளுக்கும் சென்று கடுமையாக உழைக்க வேண்டும். கிடைக்கிற பணத்தை வைத்து அந்த ஒற்றைத் தங்கக் காசை உருவாக்குகிற வரை சரியாக உண்ணவும் கூடாது; உறங்கவும் கூடாது! என்று முடிவெடுத்துவிட்டான்.

    அவ்வளவுதான் அவனது நிலைமை அந்தோ பரிதாபம் என ஆகிவிட்டது. "பார்த்தீர்களா அரசே! அவன் இப்போது நமது வருத்தப்படுவோர் சங்கத்தில் எவ்வளவு தீவிரமான உறுப்பினனாக ஆகிவிட்டான் என்பதை!" கேட்டார் அமைச்சர். அந்தத் தங்க நாணயப் பையைப் பார்த்த நாளில் அந்தச் சேவகன் தொலைத்த மகிழ்ச்சியை இனி எந்த நாளிலும் மீட்டெடுக்கப் போவதே இல்லை.

    பணம் இல்லையென்றால் தான் மனிதர்கள் மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்கள் என்பதில்லை. பணம் இருந்தாலும் மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது. அந்த அரண்மனைச் சேவகன் இப்போது 99 தங்க நாணயங்களுக்கு அதிபதி என்றாலும், அவன் தேடி அலையும் அந்த ஒற்றை நாணயம் அவனைப் பிச்சைக்காரனாக மாற்றிவிட்டது. அதனால் அவனை விட்டு மகிழ்ச்சி தொலைதூரம் பயணப்பட்டுவிட்டது.

    மகிழ்ச்சியாக இருக்க அன்பு வேண்டும் என்கிறோம். அந்த அன்பைச் செலுத்தப் பணம், காசு, நகை, வீடு, வாகனம் எனப் பலவகையான செல்வத் துணைகள் வேண்டும் என அலையத் தொடங்குகிறோம். வாழ்க்கை அலைவதிலேயே கழிந்து போகிறது. மகிழ்ச்சி என்பது துரத்தத் துரத்த எட்டிப்போகும் கானல்நீராய்க் கலைந்து போகிறது.

    செல்வம் சேர்ப்பதற்கு எத்தனைவிதமான வழிகள் இருக்கின்றன? என்பதனைத் துருவித் துருவி ஆராய்ந்து முனைகிறோமே! என்றாவது அன்பு செலுத்துவதற்கும், அதன்மூலம் நிலைத்த மகிழ்ச்சியை அடைவதற்குமான வழிகள் என்னென்ன? என்று தேடியிருக்கிறோமா?

    வீடுகளில் தாயாக அன்பு செலுத்துவது!,தந்தையாக அன்பு செலுத்துவது! கணவனாக அன்பு செலுத்துவது! மனைவியாக அன்பு செலுத்துவது! மகனாக அன்பு செலுத்துவது! மகளாக அன்பு செலுத்துவது! ஆசிரியராக அன்பு செலுத்துவது! மாணவராக அன்பு செலுத்துவது! மருத்துவராக அன்பு செலுத்துவது! நோயாளராக அன்பு செலுத்துவது! அலுவல்களில் அலுவலராக அன்பு செலுத்துவது! கோயில்களில் பக்தனாக அன்பு செலுத்துவது!....மொத்தத்தில் மனிதனாக அன்பு செலுத்துவது!...என அன்பு செலுத்தி மகிழ்ச்சி அடைவதற்கு வழிகள்தாம் எத்தனை? எத்தனை?.

    எல்லா வழிகளும் மகிழ்ச்சி வழிகள்!

    வலிகள் இல்லாத வாழ்க்கையின் வழிகள்!

    பொருள்களில் இல்லை மகிழ்ச்சி!

    மனிதங்களில் மலர்ந்திருக்கிறது மகிழ்ச்சி!

    தொடர்புக்கு - 9443190098

    • பிறர் உங்களை எப்படி பார்க்கின்றார்கள் எவ்வளவு உங்களை மதிக்கின்றார்கள் என்பதே முக்கியம்.
    • வேலை, காரியம் இவற்றுக்காக மட்டும் நம்மை நாடுபவரை ஒதுக்கி விட வேண்டும்.

    வாழ்க்கைக்கு நல்ல உணவு, உடற்பயிற்சி என்பது மட்டும் முக்கியம் அல்ல. வாழ்க்கைக்கு சில கட்டுப்பாடுகள், சாமர்த்தியங்கள் அவசியமாகின்றன. அவைகளை நாம் அறிந்து பின்பற்றுகின்றோமா? பார்ப்போம்.

    நம்முடைய திட்டங்களை தம்பட்டம் அடிக்கக் கூடாது. அதனை எதிராளிகள் நாசப்படுத்தி விடக்கூடும்.

    நமது பல வீனங்களை பிறர் அறிய வேண்டிய அவசியம் இல்லை. பகிரக் கூடாது. ஏனெனில் நமக்கு எதிராகவே பிறர் அதனை பயன் படுத்தி விடுவர்.

    நமது வாழ்வில் சில தோல்விகள் ஏற்பட்டு இருக்கலாம். நம்முடன் பழகும் நட்புகளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல உங்களைப் பற்றிய அனைத்தினையும், தோல்விகள் உள்பட அனைத்தையும் அறிவிக்க போர்டு வைக்க வேண்டாம்.

    மற்றவர்கள் உங்கள் தோல்விகளைக் கண்டு மிகவும் குறைத்து எடை போடுவார்கள். இளக்காரமாய் பார்ப்பார்கள். வாய்ப்புகளை நமக்கு அளிக்க மாட்டார்கள்.

    அதே போல் அடுத்த நகர்வு மற்றும் நிகழ்வினையும் சொல்ல வேண்டாமே. வாழ்க்கை செஸ் விளையாட்டு போல்தான். அமைதியாக எதனையும் செயலில்தான் காட்ட வேண்டும். உங்கள் வெற்றிகள் அவர்களை அதிசயிக்க வைக்க வேண்டும்.

    உங்களது ரகசியங்கள் உங்களுக்குள்தான் இருக்க வேண்டும். புத்திசாலித்தனம் இல்லாதவர்தான் தன் ரகசியங்களை பிரகடனப்படுத்துவார்.

    நமது வருமானம் சம்பாதிக்கும் முறை. கண்டிப்பாய் நியாயமானதாக இருக்க வேண்டும். இது வருவாய் துறைக்கு தெரிந்தால் போதும். பிறருக்கு அல்ல.

    (இக்கட்டுரையில் கூறப்படுபவை சில அறிவாளிகளின் எழுத்தினை படித்து தொகுக்கப்பட்டவை. இதனை பகிர்வது நன்மை என்பதாலேயே எழுதப்பட்டுள்ளது. பலர் பஸ்சில், ரெயிலில் பயணம் செய்யும் காலங்களில் சில மணி நேரத்திற்குள் அவரது குடும்ப விவரங்களை பட்டியல் இட்டு விடுவார்கள். இது அவர்களுக்கே எத்தனை தீங்காக முடியும் என்பதனை விளக்கவே இக்கருத்துகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன).

    வாழ்க்கை என்பது மென்மையான ரோஜா இதழ்கள் கொண்ட பாதை அல்ல, முட்களும் இருக்கும். காலம் மிகவும் மாறி விட்டது. உடனடி லாபம், குறுக்கு வழியில் லாபம் என்பது சற்று பெருகி விட்டது. பள்ளியில் பல நீதி போதனைகளை மாணவ சமுதாயத்திற்கு பதிய வைக்கின்றோம்.

    ஆனால் தன்னை காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்க அவர்களுக்கு நாம் சொல்லித் தருவதில்லை. இந்த பாதுகாப்பு இல்லாமல் கருமை நிறைந்த சமுதாயத்தில் அவர்கள் காலை வைக்கும் போது மனதளவில் அதிக காயம் பட்டு கருகி விடக்கூடாது. குறிப்பாக இளைய சமுதாயம் இதனையும் உணர வேண்டும்.

    காதல், அன்பு என்ற பெயரில் ஒருவருக்காக உறவுகளை உதறி, தாய், தந்தையர் அன்பினை தூக்கி எறிந்து முன்பின் முழுமையாய் அறியாத ஒருவருடன் ஓடி வருவது இன்று நாம் காணும் சாதாரண நிகழ்வு ஆகி விட்டது. ஆனால் அந்த ஒருவர் இவரை கைவிட்டு மற்றொருவருடன் ஓடி விடுவதையும் நிறைய பார்க்கின்றோம்.


    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    இதில் ஆண், பெண் என பிரித்து கூறவில்லை. இரு பாலருக்குமே இத்தகு பாதிப்புகள் நிகழ்கின்றன. அனைவருக்கும் இப்படி நிகழ்கின்றது என்பதில்லை. ஆனால் அதிகம் நிகழ்கின்றது என்பதே உண்மை. இதனை இளைய சமுதாயம் மனதில் பதிய வைக்க வேண்டும்.

    மக்களிடம் ஒரு பிரச்சினை இருக்கின்றது. எது உண்மை என அவர்களால் அறிந்து கொள்ள முடிகின்றது, உணர முடிகின்றது. இருப்பினும் மாயையிலேயே, உண்மை அல்லாதவைகளையே அவர்கள் பின்பற்றுகின்றார்கள். இதனை அறியாமை என்பதா? அறிவின்மை என்பதா?

    வாழ்நாள் முழுவதும் உங்களோடு இருக்கப் போவது நீங்கள் மட்டுமே. ஆகவே உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் ஆரோக்கியம், உங்கள் உணவு என உங்களை சேர்ந்த ஒவ்வொன்றிலும் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

    பிறர் உங்களை எப்படி பார்க்கின்றார்கள்? எவ்வளவு உங்களை மதிக்கின்றார்கள் என்பதே முக்கியம்.

    உங்களது நியாயமான முயற்சிகள், கோரிக்கைகளுக்கு உதவியோ, ஊக்குவிப்போ செய்யாதவர்களுக்காக உங்கள் காலம், நேரம், பொருள், உழைப்பு இவற்றினை வீண் செய்யாதீர்கள்.

    பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என தேவையற்ற யோசனையில் உங்களது சக்தி வீணாகக் கூடாது.

    நம்மை குறைத்து கொண்டு, ஒரு பக்க உறவாக ஒருவரிடம் தொங்க வேண்டாம். நல்ல மனம் கொண்ட நமது உறவு வேண்டாமென ஒதுக்குவது எதிராளியின் இழப்பு.

    வேலை, காரியம் இவற்றுக்காக மட்டும் நம்மை நாடுபவரை ஒதுக்கி விட வேண்டும்.

    பிறரது பிரச்சினைகளை அலைந்து, அலைந்து நீங்கள் தீர்க்க முடியாது. அவர்களது முயற்சியும் வேண்டும்.

    வேலையினை முழுமையாக, கவனமாக, முழு மூச்சுடன் செய்ய வேண்டும். பிறருக்கு முன்னால் நம்மை உயர்த்திக் கொள்வதற்காக அது இருக்கக் கூடாது.

    உங்களது வெற்றி உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே மகிழ்ச்சி தரும்.

    இன்றைய கால கட்டத்தில் அநேக நட்புகள் காரண, காரியம் ஒட்டியே இருக்கின்றது. அத்தி பூத்தாற்போல் நல்ல உயர் நட்பு அரிதாகக் காணப்படுகின்றது.

    99.9 சதவீதம் அல்லது 99 சதவீதம் வரை உங்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் அவரவர் பெற்றோர்களே.

    நம் வாழ்வில் நம்மோடு வாழ்வில் தொடர்பில் வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் இருக்கின்றது. அது முடிந்தவுடன் அவர்கள் பிரிந்து விடுகின்றனர். உறவு, நட்பு, பகை, எல்லாமே இப்படித்தான். ஆகவே மன உறுதி வேண்டும்.

    பணம் என்பது வாழ்வில் இன்றியமை யாததுதான். ஆனால் ஏனோ அதனால் அனைத்தினையும் சாதிக்க முடிவதில்லை.

    அனைவரிடமும் புன்னகைப்பதற்கும், அனைவரையும் நம்புவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

    ஒருவரின் செயல், பண்பு, வாழும் முறை இவை எந்த வயதிலும் அவரை உண்மையான அழகோடு வைக்கின்றது.

    பேசினால் அளவாகவும் கருத்தோடும் பேச வேண்டும் என்று கூறுவார்கள். வார்த்தைகள் அறிவை வளர்க்கலாம், அன்பை வளர்க்கலாம். வார்த்தைகளால் ஒருவரை மனக்கொலை செய்யக் கூடாது. இதனால் தான் பல நேரங்களில் பேசாமல் இருப்பதே நல்லது. அவை எந்தெந்த நேரங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என பார்ப்போம்.

    கோபம் கொப்பளித்து தாறு மாறாக வார்த்தைகள் கொட்டி விடும் என்று தோன்றுகின்றதா? அப்படி ஒரு நிலை ஏற்படும் என்றால் உடனே அந்த இடத்தை விட்டே ஓடி விடுங்கள். தனியாக ஒரு அறையில் கூட தாளிட்டு இருங்கள். உங்கள் ஆவேசத்தினை ஒரு தலைகாணியினை நன்கு அடித்து அந்த மிருக வேகத்தினை வெளியில் எடுத்து விடுங்கள். ஆனால் ஒரு வார்த்தை கூட பேச விடாதீர்கள். இந்த வேகம் உங்களுக்கும், எதிராளிக்கும் ஆறா காயத்தினை, பகையினை வளர்த்து விடும்.

    ஏதேனும் ஒரு விஷயத்தில் உங்கள் வார்த்தை எதிராளியை புண்படுத்தும் என்ற நிலை இருந்தால் பேசாதீர்கள். கருத்தினை சொல்வதற்கும் ஒரு முறை உண்டு. நாவினால் சுட்ட புண் ஆறாது என வள்ளுவர் பெருமான் சும்மாவா சொன்னார்.

    சில நேரங்களில் கடும் வார்த்தைகள் நட்பினையே முறித்து விடலாம். 5 நிமிடம் மனதினையும், நாக்கினையும் கட்டுப்படுத்தினால் போதும். நட்பு நிலைத்து விடும்.

    சொல்வதினை அமைதியான தொனியில், பண்பான வார்த்தைகளில் சொன்னால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். அதனை விட்டு மிக சத்தம் போட்டு கத்தி பேசினால் பிரச்சினை பூதாகரமாகும்.

    அதிக உணர்ச்சி வசப்பட்டு பேசினால் ரோஷம், கோபம், தேவையில்லா வீர வசனம், அழுகை என பிரச்சினை தலை விரித்து ஆடும். எனவே உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேச வேண்டாம்.

    சில நிகழ்வுகளை நம் மனதிற்குள் நாம் ஏற்கக் கூடாது. அவை நம்மைப் பற்றியது அல்ல. பிறரைப் பற்றியது.

    உதாரணமாக,

    சிலர் நம்மை வெறுக்கலாம். என்ன காரணம் என நீங்கள் வருந்தலாம். உண்மையில் அவர்களின் பொறாமை குணமே அவர்களை உங்கள் மீது வெறுப்பு கொள்ளச் செய்கின்றது. அவர்கள் அடைய நினைத்த, வாழ நினைத்த ஒன்று உங்களுக்கு கிட்டி விட்டால் அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதுவே வெறுப்பாக மாறி விடுகின்றது.

    உங்களை ஒருவர் உற்று பார்க்கின்றார் என்றால் அவர் மனதில் எத்தனையோ காரணங்கள், போட்டி, பொறாமைகள் இருக்கலாம். இதற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

    நன்றாக இருக்கும் உங்களுடன் ஒருவர் முறிவை ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்றால் கவலைப்படாதீர்கள். மாறாக மகிழ்ச்சி அடையுங்கள். அவர் உங்களுக்கு உதவிதான் செய்கின்றார்.

    எது நடந்தாலும் அதற்கு நீங்களே காரணம் என்று எண்ண வேண்டாம். ஏதோ ஒரு கடுமையான நிகழ்வு நடக்கிறதென்றால் அதன் பின்பே ஒரு நல்ல நிகழ்வும் வரும்.

    மேலும் சில குறிப்புகள் அறிவோம்:

    எனக்கு அவரைத் தெரியும். இவர் நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டார் என பீத்துபவர்களிடம் இருந்து எட்ட தள்ளி இருப்போம்.

    நம்மை பகடை காய் போல் பயன்படுத்தி வேலை வாங்குபவர்களிடம் இருந்து தள்ளி இருப்போம்.

    யாரிடமும் ஏறி விழுந்து பழக வேண்டாமே. ஒரு அளவு கோல் இருக்கட்டுமே.

    நம்மை நம்ப கற்றுக் கொள்ள வேண்டும்.

    தன்னம்பிக்கை இல்லாதவருக்கே பொறாமை ஏற்படும்.

    பார்ப்பவர்கள் எல்லாம் உங்கள் ஆத்மார்த்த நண்பர்கள் அல்ல.

    அறிவோம்! கடைபிடிப்போம்!

    • டான்சிலோ நடிப்பிலோ கொஞ்சம் சரியில்லை என்றாலும் டைரக்டர் திட்டுவார்.
    • ஏன்டா சினிமாவுக்கு வந்தோம் என்று கூட நினைக்க தோன்றியது.

    கொள்ளே கால் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. தண்ணீரில் இறங்கி, பாறை மீது நின்றெல்லாம் டூயட் பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே நடிக்கணும்.

    வழுக்கும் பாறை என்பதால் கவனம் முழுவதும் அதில் தான் இருக்கும். டான்சிலோ நடிப்பிலோ கொஞ்சம் சரியில்லை என்றாலும் டைரக்டர் திட்டுவார். அந்த பயம் வேறு! இப்படியாக ஒவ்வொரு காட்சியிலும் நடித்தது திரில்லிங்கான அனுபவம்.

    ஷூட்டிங் முடிந்து காரில் ஓட்டலுக்கு திரும்புவோம். அப்பல்லாம் ஏ.சி.கார் கிடையாது. பக்க விட்டு கண்ணாடியை இறக்கி விட்டிருப்போம். கார் போகும் வேகத்தில் கண்ணில் போட்டிருக்கும் 'ஐலேஷ்' காற்றில் படபட என்று அடிப்பது கண்ணில் பட்டாம்பூச்சி தொட்டு ெதாட்டு போவது போல் அழகாக இருக்கும். அதை மிகவும் ரசிப்பேன்.

    குழந்தை நட்சத்திரமாக நடித்த போது இந்த மாதிரி மேக்-அப் எல்லாம் போட்டது கிடையாது. கதாநாயகி என்றால் சும்மாவா...? பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் வடக்கில் இருந்து வந்த சேதி எங்களுக்கு சாதகமாக இல்லை. முக்கியமாக அது மகிழ்ச்சியை தரவில்லை.

    ஆம். திட்டமிட்டபடி எனது நடிப்பில் உருவான 'சீதா ராமையா காரி மனவரலு (சீதா ராமையாவின் பேத்தி) என்ற தெலுங்கு படம் திரைக்கு வந்தது.

    படிப்பா? நடிப்பா? என்பதை இந்த படம்தான் முடிவு செய்யும் என்றிருந்ததால் அந்த படத்தை பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இருந்தோம்.

    ஆனால் தெலுங்கு பட உலகில் இருந்து வந்த தகவல் படம் வெற்றி பெறவில்லை. தியேட்டர்களில் கூட்டமே இல்லை. காற்றாடுகிறது... இரண்டு வாரத்தில் தூக்க வேண்டியதுதான் என்பதுதான். அதை கேட்டதும் மிகவும் சங்கடமாக இருந்தது.

    குழந்தை பருவத்தில் ரசிகர்கள் காட்டிய ஆதரவை பெரியவளானதும் காட்ட வில்லையே ஏன்? நாம்தான் சரியாக நடிக்க வில்லையா? என்று பல்வேறு குழப்பம் மனதுக்குள்.

    ஏன்டா சினிமாவுக்கு வந்தோம் என்று கூட நினைக்க தோன்றியது.

    குழந்தை நட்சத்திரமாக நடித்த போது ஜாலியாக மட்டும் தான் இருக்கும். பொறுப்பாக எதுவும் தெரியாது. ஆனால் கதாநாயகியாக மாறிய பிறகு என்னை அறியாமலே மனதுக்குள் ஒரு பொறுப்புணர்வு.

    நடிப்பதோடு கடமை முடிந்ததாக நினைக்க தோன்றாது. எப்படியாவது படம் நல்லா வரவேண்டும். வெற்றிப்படமாக அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதன் விளைவு தான் படம் வெற்றி பெறவில்லை என்று தகவல் வந்ததும் எங்களை கவலையில் ஆழ்த்திவிட்டது.

    என்ன சார்...? இப்படி ஆகிவிட்டதே என்று அம்மாவும் தயாரிப்பாளரிடம் பேசி இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் சொன்னார்.

    நீங்க கவலைப்படா தீங்க. நல்ல படம். நல்லா வந்திருக்கு. ஜனங்க நிச்சயம் ரசிப்பாங்க. வேணும்னா பாருங்க 'மவுத் டாக்' போக, போக ஜனங்க வருவார்கள் என்றார்.

    அவர் சொன்னது அப்படியே பலித்தது. அடுத்த சில நாட்களில் கூட்டம்.... கூட்டம்... அப்படியொரு கூட்டம்...

    திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடியது. ஆந்திரா முழுவதும் படம் சக்கை போடு போட்டது.

    ஹீரோயின் மீனா... தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் ஹீரோயின் ஆகிவிட்டேன். படம் பேசப்பட்டது. அதோடு மீனாவும் பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டேன்.

    இதற்கிடையில் எங்கள் வீட்டில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. அதை கேளுங்கள்....

    கஸ்தூரிராஜா சார் இயக்கப் போகும் 'என் ராசாவின் மனசிலே' என்ற தமிழ் படத்துக்கு ஹீரோயின் தேடியிருக்கிறார்.

    என்னை பற்றி அறிந்து நேரில் வீட்டில் வந்து என்னை பார்த்து பேச வேண்டும் என்று வீட்டிற்கே வந்திருந்தார்.

    தனது படத்தின் கதையை சொன்னார். கதையை சொன்னதோடு அவர் விடவில்லை. படத்தில் வரும் டயலாக்குகள் தென் மாவட்டங்களில் பேசும் சாயலில் இருக்கும். நீ பேசுவியா என்றார்.

    நானும் சரி என்றேன்.

    உடனே நான்கைந்து வரி டயலாக்கை சொன்னார்.

    'நான் ஒண்ணும் அந்த மனுஷனுக்கு கழுத்த நீட்ட மாட்டேன். பொழுது விடிஞ்சு ராத்திரி படுக்க போற வரைக்கும் சாராயம் குடிக்குறது.எதுக்கெடுத்தாலும் ஈவு இரக்கமில்லாம அடிக்குறது. முரட்டு புத்தி. மூர்க்க குணம். நாட்டு கம்பு, புளியங்கம்பு, பெல்ட் அடி. அத தாங்குறதுக்கு என் உடம்புல சக்தி இல்லை. அந்த மனுஷனுக்கு வாக்கப்படுறதற்கு பதிலா சீவி, சிங்காரிச்சு, பொட்டு வச்சு, பூவச்சு, பட்டுச்சேலை கட்டிக்கிட்டு மாலையும், கழுத்துமா கிணத்துல குதிச்சிடலாம் சாமி..."

    -இதுதான் அவர் தந்த டயலாக். அதை பேசி காட்டு பார்ப்பேம் என்றார்.

    நானும் மனப்பாடம் பண்ணி பேசி காட்டினேன். ஆனால் அந்த டயலாக்கை அதற்கேற்ற முக பாவனையுடன் பேசியதில் எனக்கே முழு திருப்தி இல்லை.

    கஸ்தூரிராஜா சார் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

    நானே தொடர்ந்து சொன்னேன். சார், ஒரு சிறிய ரூமில் நின்று பேசுவதற்கும் கேமிரா முன்பு கதா பாத்திரத்தை புரிந்து கொண்டு பேசுதற்கும் வித்தியாசம் உண்டு. காமிரா லைட் வெளிச்சத்தில் நின்று பேசும் போது இன்னும் பெட்டரா வரும் சார்' என்றேன்.

    அது என்ன டைரக்டருக்கு தெரியாதா? எனக்கு அப்போது கொஞ்சம் அதிக பிரசங்கித் தனம்தான். இப்படி நான் பேசியதை கேட்டால் எல்லோரும் அப்படித் தானே நினைப்பார்கள். எந்த இடத்தில், யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று யோசிப்பது இல்லை. மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன். அதுதான் என் குணம்.

    டைரக்டர் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

    நான் டயலாக் பேசியது அவருக்கு பிடித்திருக்குமா? வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஒரே குழப்பம்.

    அவர் போனதும் அம்மா என்னிடம் 'இப்படியா சொல்றது? ஒரு வாய்ப்பு தேடி வரும் போது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளணும். உணர்ச்சிகளை முகத்தில் கொண்டு வந்து காட்டுவதுதானே அழகு? அப்பதானே அவுங்களுக்கு திருப்தி வரும். இப்படி சொன்னா ஏற்றுக் கொள்வார்களா? என்றார்.

    எனவே அந்த படத்தில் என்னை ஹீரோயினா செலக்ட் பண்ணுவாங்களா? மாட்டங்களா? என்று எதுவும் புரியாமல் இருந்தோம்.

    நாட்கள் சென்று கொண்டே இருந்தது. ஆனால் எந்த தகவலும் இல்லை. ஒரு கட்டத்தில் இனி வர மாட்டார்கள். நிச்சயம் கஸ்தூரிராஜா சார் வாய்ப்பு தரப் போவதில்லை என்றே முடிவு செய்து விட்டோம். ஆனால் நடந்தது வேறு.

    என் ராசாவின் மனசிலே...

    என் மனசில் இடம் பிடித்தது எப்படி...? அடுத்த வாரம் சொல்கிறேன்....

    (தொடரும்)

    • பெயர் மாற்றத்திற்குச் சர்வதேச அளவில் ஒப்புதல் தேவைப்படும்.
    • அரபிக்கடலை ஒட்டிய இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை மலபார் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

    "பாரதம், இந்தியா" பட்டிமன்றம் அனல் பறந்துகொண்டிருந்த ஜி-20 மாலை வேளை! வழக்கமாக நான் தொலைபேசியில் பேசும் எங்கள் கிராமத்து ஏழாம் வகுப்புக் குட்டி ஒரு மாபெரும் சந்தேகத்தைக் கிளப்பியது:

    "அங்கிள்.. இனி இண்டியன் ஓஷனை எப்படி அழைக்க வேண்டும்? பாரதப் பெருங்கடல் என்றா? "

    மறுநாள் கிளாஸ் டெஸ்ட்! கவலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. பெயர் மாற்ற அரசியல் விளையாட்டில் மறுபடியும் முதலில் இருந்து படிக்க வேண்டும்! எனது லாயர் நண்பர்களுக்கும், சட்டக் கல்லூரி மாணவ மணிகளுக்கும் இதே கவலை இருக்கிறது. இந்திப் பெயர் சூட்டப்பட்ட புதிய சட்டங்கள் படுத்துகிற பாடு, ஆத்தாடி, ஆத்தா!

    உண்மையில் "இந்தியப் பெருங்கடல்" என்பதைப் பெயர் மாற்றம் செய்ய முடியுமா? அது யார் வைத்தது? நம்மை அடிமைப்படுத்திய வெள்ளைக்காரனா? அல்லது அதற்கு முந்திய இஸ்லாமிய அரசர்களா? வங்காள விரிகுடா என்ற "பே ஆப் பெங்கால்", அரபிக் கடல் என்ற "அராபியன் ஸீ" ஆகியவற்றின் கதி?

    வரலாறு முழுவதும் இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் பல்வேறு பெயர்களால் அறியப்பட்டு வந்திருக்கின்றன, இந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் இருந்து காலப்போக்கில் உருவாகியுள்ளன. வேறு சில வெவ்வேறு ஆட்சியாளர்கள் மற்றும் கலாச்சாரப் பாதிப்புகளால் தோன்றியவை.

    அரபிக்கடல்:- இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கே அமைந்துள்ள அரபிக் கடல் பல நூற்றாண்டுகளாக அரேபிய தீபகற்பத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தியாவிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளின் காரணமாக ஏற்பட்டது.

    இந்தியப் பெருங்கடல்: இந்தியத் துணைக் கண்டத்தைச் சூழ்ந்துள்ள இந்து மகா சமுத்திரம் உலகின் மூன்றாவது பெருங்கடல். கி. பி. 1515 வரைபடத்தில் குறிப்பிடப்பட்டி ருந்த பெயர் நாளடைவில் "இந்தியப் பெருங்கடல்" ஆனது. தமிழன் வைத்த பெயர் "குமரிக்கடல்!"

    மன்னார் வளைகுடா: இந்தியாவின் தென் முனைக்கும் இலங்கையின் வடக்குக் கடற்கரைக்கும் இடையில் மன்னார் வளைகுடா அமைந்துள்ளது. இலங்கையின் மன்னார் நகரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ராமர் பாலம் பற்றிய சர்ச்சை ஏற்கனவே உள்ளது. "வடக்கே அயோத்தியில் ராமர் கோவில்! தெற்கே ராமர் கடல்!" என்று அண்ணாமலை விவாதத்தைக் கிளப்பலாம்!

    வங்காள விரிகுடா: இந்தியாவின் கிழக்கே உள்ள வங்காள விரிகுடா நீண்ட காலமாக இந்தப் பெயரில் அறியப்படுகிறது. "வங்காளம்" என்ற சொல் இப்பகுதியில் இருந்த பழங்கால ராஜ்யமான வாங்காவில் இருந்து வந்திருக்கலாம். குணக்கடல் என்று தமிழர்கள் அழைத்து வந்தனர். அரபிக்கடலுக்குக் குடக்கடல் என்ற தமிழ்ப் பெயர் உண்டு.

    வங்காள வளைகுடா: இந்தப் பெயர் வரலாற்று ரீதியாக வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதிக்குப் பாரசீக மற்றும் அரபு மூலங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்திய மொழியான வங்கத்தின் கலப்பு இருப்பதால் இந்தப் பெயரை அப்படியே விட்டுவிடலாம்! அல்லது மம்தா பானர்ஜி மீதுள்ள கோபத்தால் "பாரத விரிகுடா" என்று பெயர் மாற்றம் செய்தாலும் தப்பில்லை.

    கோரமண்டல் கடற்கரை: வங்காள விரி குடாவை ஒட்டிய இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரை கோரமண்டல் கடற்கரை என்று ஐரோப்பிய காலனித்துவ சக்திகளால் குறிப்பாகப் போர்த்துகீசியர்களால் பெயரி டப்பட்டது. தாராளமாக எதிர்ப்புத் தெரிவிக்கலாம்! சோழ வம்சத்தைக் குறிக்கும் "சோழ மண்டலம்" என்ற தமிழ்ச் சொல் இருப்பதால் அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்து சோழர் செங்கோல் வரலாற்றோடு "லிங்க்" கொடுத்து தமிழ்நாட்டின் பெருமையைக் காப்பது மோடி தான் என்று மார் தட்டிக்கொள்ளலாம்.

    மலபார் கடற்கரை: அரபிக்கடலை ஒட்டிய இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை மலபார் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. "மலபார்" என்ற பெயர் பண்டைய இந்திய வேர்களைக் கொண்டுள்ளது. எனவே பெயர் மாற்றம் தேவை இல்லை. அல்லது கேரளாவில் காலூன்ற ஏதாவது வழி கிடைக்குமென்றால் மலையாள மொழி விற்பன்னர்களைக் கலந்து புராதனப் பெயர்களைத் தேடலாம்.

    லட்சத்தீவுக்கடல்: இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கும் லட்சத்தீவுகளுக்கும் இடையே அமைந்துள்ளது. "லட்சத்தீவு" என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தைகளான "லக்ஷ்யா" (நூறாயிரம்) மற்றும் "த்வீப்" (தீவு) ஆகியவற்றி லிருந்து பெறப்பட்டது. எனவே பெயர் மாற்ற பனிஷ்மெண்ட் நஹி!

    எனது நண்பர் ஒருவர் சர்வதேசப் பெயர் மாற்ற ஸ்பெஷலிஸ்ட். அவரிடம் கேட்டேன்.

    "இந்தியப் பெருங்கடலின் பெயரை "பாரத் பெருங்கடல்" என்று மாற்றுவது முடியாது. அது உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய மாற்றத்திற்கு சர்வதேச அமைப்புகளை உள்ளடக்கிய நீண்ட ராஜதந்திர செயல்முறை தேவைப்படும்." என்றார் அவர்.

    அதனால் என்ன? ஜி 20 அதிகரப்பூர்வமாக நிறைவடைந்து தலைமைப் பொறுப்பை மாற்றிக் கொடுத்த பிறகும் நவம்பர் மாதம் "இணைய ரீவ்யூ" வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறோம் அல்லவா? அதில் இதை "புரோபோஸ்" செய்தால் போயிற்று! தேர்தல் வரை பேசுபொருள் வேண்டும் சுவாமி!

    ஆனாலும் "ஸ்பெஷலிஸ்ட்" நம் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தேசத் துரோகி!

    "கடல்சார் வரைபடம் உலகெங்கிலும் உள்ள நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே பெயர் மாற்றத்திற்குச் சர்வதேச அளவில் ஒப்புதல் தேவைப்படும். அந்தப் பொறுப்பு சர்வதேச ஹைட்ரோகிராபிக் அமைப்பிடம் (IHO) உள்ளது." என்று முட்டுக்கட்டை போட்டார். "அடப் போங்க சார்.. உங்களுக்குத் தேச பக்தியே இல்லை!" என்று கூறி விட்டு இடத்தைக் காலி செய்தோம்.

    அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர். "இந்தியாவைச் சுற்றியுள்ள எல்லாக் கடல்களுக்கும் பெயர் மாற்றம் அவசியம் தேவை!" என்று அவர் பிடிவாதமாகக் கூறினார். நேரடியாக ஏதோ டிவி விவாத மேடையிலிருந்து வந்திருப்பார் போலும்!

    முக்கியமாக அவர் சுட்டிக் காட்டியது தமிழ்நாட்டின் தென் கிழக்கு முனையை! அது "பாக் ஜலசந்தி" என்று அழைக்கப்படுவது காரணம். "ஜி.. பால்க் ஜலசந்தி என்பது பேச்சுவழக்கில் அப்படி ஆகிவிட்டது!" என்று சமாதானப்படுத்திப்பாரத்தோம். அவர் கேட்கவில்லை. "யார் பால்க்? வெள்ளைக்காரன் தானே?" என்று கோபப் பார்வை பார்த்தார்.

    "இந்தியாவின் தென்கிழக்கு முனையை இலங்கையின் வடக்குக் கடற்கரையில் இருந்து பிரிக்கும் நீர்நிலை பால்க் ஜலசந்தி. ராபர்ட் பால்க் என்பவர் 1755 முதல் 1763 வரை மெட்ராசின் (இப்போது சென்னை) ஆளுநராகப் பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய சேவை மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஜலசந்திக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது." என்று நமது "ஜி"யிடம் விளக்கினோம்.

    "மாத்தனும் சார்.. எல்லாத்தையும் மாத்தனும்!" என்று பொங்கியவாறே தனது கோட்டைச் சரி செய்துகொண்டு அவிழ்ந்திருந்த காலணிகளின் முடிச்சுகளைச் சீராக்கி விட்டுத் தலை சிறந்த தேசபக்தனுக்கே உரிய கம்பீரத்தோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தார், "ஜி"!

    ஆத்தாடி.. இவ்வளவு சிக்கல்களா? இந்தியப் பிரதமர் எவ்வளவு எளிதாக பாரதப் பிரதமர் ஆகி விட்டார்? இந்தியக் குடியரசுத் தலைவரை எத்தனை ஈசியாக பாரத ஜனாதிபதி என்று பெயர் மாற்றம் செய்து விட்டோம்? நமது எல்லைக்குட்பட்ட கடல் மற்றும் நீரிணைகளின் பெயரை மாற்ற முடியாதா? அதிலும் "பால்க் ஜலசந்தி" வெள்ளைக்காரக் கவர்னரின் பெயரால் அழைக்கப்படுவது இந்த தேசத்துக்கே அவமானம் அல்லவா?

    மீண்டும் எட்டிப் பார்த்தார் நமது "ஸ்பெஷ லிஸ்ட்" நண்பர். அவர் கையில் இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்ட இந்திய அரசமைப்பு தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தது. டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை செய்த தமிழாக்கம் அது. புத்தகத்தைக் காட்டி அவர் ஆவேசமாகச் சொன்னார்.

    "சார்.. நமது அரசமைப்புச் சட்டத்தின் பகுதி ஒன்றில் "ஒன்றியமும் அதன் ஆட்சி நிலையும்" என்ற தலைப்பில் ஒன்றியத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஓஹோ.. ஒன்றிய சர்ச்சை) பகுதி இரண்டில் "இந்திய மரபினரின் குடிமை உரிமைகள்" என்று இருக்கிறது. அதை "பாரத மரபினர்" என்று மாற்றினால் விடுதலைக்கு முன்னால் ஒரே நாடாக இருந்தபோது இங்கு இருந்த வம்சாவளியும் சேர்ந்துவிடும்!"

    ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நமது நண்பர் "ஸ்பெஷலிஸ்ட்"டை அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் நீங்கள் பார்க்கலாம்.

    "ஐந்தாம் பகுதியில் "இந்தியக் குடியரசுத் தலைவர்" "இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்" என்று தெளிவாக உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி சார் பாரத ஜனாதிபதி என்று பெயர் மாற்றம் செய்யலாம்?" என்று புத்தகமும் கையுமாக அடித்துப் பேசினார் அவர்.

    "முகப்புரையே "இந்திய மக்களாகிய நாம்" என்றுதான் துவங்குகிறது. பழங்காலத்தில் வழக்கில் இருந்த பெயர்தான் பாரதம். நாம் நவீன தேசம் ஆனபோது நம்மிடமிருந்து பிரிந்தது பாகிஸ்தான். பிரியாமல் எஞ்சி இருந்த பகுதி இந்தியா. ஐநா சபைக்கு பாகிஸ்தான் தான் புதிய உறுப்பினர். ஆனால் இந்தியா ஏற்கனவே இருந்த மெம்பர்ஷிப்பை தக்க வைத்துக் கொண்டது. "பாரதம் என்ற இந்தியா" என்பதை தவிர வேறு எங்கும் பாரதம் என்ற பெயர் அரசியலமைப்பில் பயன்படுத்தப்படவில்லை." என்று தன் வாதத்திற்கு வலுச் சேர்த்தார்.

    "பிரதர்.. இதெல்லாம் நமது மாட்சிமை தாங்கிய ஜனாதிபதிக்கும், மாண்புமிகு பிரதமருக்கும் தெரியாதா? நீங்கள் மட்டும் தான் மேதாவியா? ஜி 20 உலக நாடுகள் மத்தியில் "பாரதப் பிரதமர்" என்று சூசகமாகச் சொல்லி விட்டாரே, மோடி?' என்று மடக்கினோம்.

    "சார்.. எல்லாமே தப்பு! (எதையும் ரைட் என்று ஒத்துக் கொள்ளாத ஸ்பெஷலிஸ்ட் அவர்) ஜி 20 மாநாட்டு இலச்சினையில் தாமரைச் சின்னம்! அதற்கு யூனியன் பட்ஜெட்டில் 990 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. கடைசியில் 4100 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். ஆனாலும் டெல்லியின் ஒரு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் ஜி 20 அரங்கமான "பாரத மண்டபத்தில்" தண்ணீர் தேங்கி நின்றது! 2004 ஆகஸ்ட் 3 அன்று உ. பி. சட்டமன்றத்தில் மறைந்த முலாயம்சிங் யாதவ் "பாரத் என்ற இந்தியா" பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அதை ஏன் இவர்கள் எதிர்த்தார்கள்? " என்று வரலாறு பேசினார் அவர்.

    அப்போது மீண்டும் பிரசன்னமானார் இன்னொரு "ஜி!" இவரையும் டிவி விவாதங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். யாரையும் பேசவிடாமல் சண்டமாருதமாகப் பொங்குவாரே அவர் தான்!

    "பாரத மண்டபம் என்று பெயர் வைத்தது இந்த தேச விரோதிகளுக்குப் பொறுக்கவில்லை. மழைத் தண்ணீர் சிறிது நேரம் தேங்கியதைப் பெரிய விஷயமாக்குகிறார்கள். புதிய நாடாளுமன்றக் கட்டிடப் பணியாளர்களுக்கு மேற்கத்திய பாணிச் சீருடைக்குப் பதிலாகப் பாரதக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பஞ்சகச்ச சீருடை கொடுத்திருக்கிறோம்." என்று பெருமையுடன் சொன்னார் அவர்.

    "பெரிய அநியாயம் சார். பணியாளர் சீருடை மேல் சட்டையில் தாமரைச் சின்னம் உள்ளது!" என்று கூறினார் ஸ்பெஷலிஸ்ட்.

    சண்டமாருத ஜி காதில் வாங்கிக் கொண்டால் தானே? "பாரதம் என்ற பெயர் பிடிக்காத ஆண்டி இன்டியன்ஸ் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறிவிட்டார் எங்கள் முன்னாள் தேசீயத் துணைத்தலைவர் திலிப் கோஷ். பாரதத்தில் உள்ள எல்லா வெள்ளைக்கா ரர்களின் சிலைகளையும் அகற்றப் போவதாகவும் அவர் சூளுரைத்திருக்கிறார்!" என்றார்.

    இந்தியப் பெருங்கடலா, பாரதப் பெருங்க டலா? எல்லாப் பெயர்களையும் எப்போது மாற்றுவீர்கள்? அது வரைக்கும் கிளாஸ் டெஸ்ட்டில் என்ன எழுதுவது? எந்தப் பாடத்தைப் படிப்பது?

    இறுதிவரை குட்டியின் கேள்விக்கு விடை கிடைக்கவேயில்லை.

    • புயல் காற்றினால் அடித்து செல்லப்பட்ட மரக்காயரின் படகு கடல் நடுவில் காணப்பட்ட ஒரு பாறையில் சென்று மோதுகிறது.
    • மரகத நடராஜர் சிலையை சிவனருளால் நான் வடித்து தருகிறேன் என ஒரு குரல் ஒலிக்கின்றது.

    ஒரு சமயம் உத்திரகோசமங்கை தலத்தில் வாழ்ந்து வந்த மரக்காயர் என்பவர் வழக்கம் போல் சிவனை தொழுது வணிகம் செய்வதற்காக கடலுக்குள் புறப்பட்டு சென்றார்.

    திடீரென்று கடலில் ஏற்பட்ட தட்ப வெப்பநிலை மாறுபாட்டால் சுழற்காற்றும், மழையோடும் சேர்ந்து கடலில் கொந்தளிப்பு ஏற்படுகிறது.

    மரக்காயரின் படகு புயற்காற்றால் அங்குமிங்கும் கடலில் அலைக்கழிக்கப்படுகிறது.

    தன்னை காப்பாற்றும் படி மரக்காயர் ஆலவாய் அழகன் ஆடலரசன் நடராஜ பெருமானை நோக்கி வேண்டுகிறார்.

    புயல் காற்றினால் அடித்து செல்லப்பட்ட மரக்காயரின் படகு கடல் நடுவில் காணப்பட்ட ஒரு பாறையில் சென்று மோதுகிறது.

    படகு பாறை மீது மோதிய வேகத்தில் சிவனருளால் படகு சேதம் அடையாமல் பாறை உடைந்து படகில் விழுகின்றது.

    பாய்மர படகில் பாறை விழுந்ததும் அதற்காகவே காத்திருந்தது போலவே காற்றும், மழையும் நின்று கடல் அமைதி ஆகின்றது.

    கடலுக்கு சென்ற மரக்காயரை காணவில்லையே என்ற பதை பதைப்புடன் மரக்காயரின் உறவினர்கள் கடற்கரையில் வருத்தமுடன் காத்திருக்கின்றனர்.

    அதே சமயம் மரக்காயர் பாய்மரம், துடுப்பு துணையோடு படகில் விழுந்த பாறைகளோடு கரைக்கு திரும்பி வருகிறார்.

    மரக்காயர் படகில் கொண்டு வந்த பாசி படர்ந்த பாறைக் கற்களை என்ன செய்வது என தெரியாமல் வீட்டின் படிக்கல்லாக இருக்கட்டும் என தலைவாசலில் போட்டு வைக்கின்றார்.

    மரக்காயரின் வீட்டின் நபர்கள் வீட்டினுள் நுழையும் போதும் வீட்டை விட்டு செல்லும் போதும் வாசற்படியாக பயன்படுத்திய பாறை கல் மீது நடந்து நடந்து பாறை மேலிருந்த கடற்பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சூரிய வெளிச்சத்தில் பள பளவென அந்த பாறை மின்னத் தொடங்குகிறது.

    தன் வீட்டு வாசற்படியில் இருப்பது ஏதோ உயர் ரக பாறை என்பதை உணர்ந்த மரக்காயர் பாண்டிய மன்னனின் சபைக்கு அந்த கற்களை கொண்டு செல்கிறார்.

    பாண்டிய மன்னர் கற்தச்சர்கள் மற்றும் சிற்பிகளை கொண்டு பாறையை சோதித்து பார்க்கின்றார்.

    பாறையை சோதித்து பார்த்த சிற்பிகள் மன்னரிடம் இந்த பாறை விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல்லால் ஆனது. உலகில் வேறு எங்கு தேடினாலும் நிச்சயம் இந்த அளவு பெரிய தரமான மரகத பாறை கிடைக்காது என மன்னனிடம் கூறுகின்றனர்.

    பாண்டிய மன்னரும் மரக்காயருக்கு பச்சை பாறைக்கற்களுக்கு உரிய பொற்காசுகளை வெகுமதியாக அளித்து வழி அனுப்பி வைத்தார்.

    விலை மதிப்பற்ற பொருட்களை இறைவனுக்கு வழங்கும் அன்றைய அரசு வழக்கத்தின் படி அந்த பச்சை மரகத பாறையை கொண்டு ஆடல்வல்லான் நடராஜ பெருமானை சிலை வடிவில் வடிக்க திட்டமிடுகிறார் பாண்டிய மன்னன்.

    இலங்கை சிற்பி பாண்டிய மன்னரின் அரச சபைக்கு வந்து பாறை வடிவில் இருந்த பச்சை மரகத கல்லின் அளவை பார்த்து மயக்கமுற்று கீழே விழுகிறார்.

    தன்னால் இவ்வளவு பெரிய மரகத கல்லில் இருந்து நடராஜ பெருமானை சிலையாய் வடிக்க இயலாது என இலங்கைக்கே திரும்ப செல்கிறார்.

    நாட்கள் கடந்தன. தினமும் பாண்டிய மன்னன் மன வருத்தத்தோடு உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னதி முன் நின்று மரகத நடராஜர் சிலை வடிக்க உபாயம் அருளும் படி பிரார்த்தனை செய்கிறார்.

    ஒரு நாள் மன்னா! மனம் சடையாதே! மரகத நடராஜர் சிலையை சிவனருளால் நான் வடித்து தருகிறேன் என ஒரு குரல் ஒலிக்கின்றது.

    குரல் வந்த திசையை நோக்கி கோவிலில் பிரார்த்தித்து கொண்டிருந்த பாண்டிய மன்னரும் பாண்டிய தேச மக்களும் போய் பார்க்கின்றனர்.

    சிவனடியார் தோற்றத்தில் தீட்சண்யமான ஒளி பொருந்திய கண்களுடன் சித்தரை போன்ற தோற்றத்தில் நிற்கும் பெரிய மனிதர் ஒருவரை மன்னரும் மக்களும் கண்டனர்.

    பாண்டிய மன்னனை அழைத்த அந்த மாமனிதர் வேறு யாரும் இல்லை. சிவனடியாரும், சித்தருமான சண்முக வடிவேலர் தான் அந்த மாமனிதர் ஆவார்.

    தனது முழு சிற்பத்திறனை சிவனருளால் பயன்படுத்தி பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜர் சிலையை ஒன்றரை அடி உயர பீடத்துடன் மிகவும் நுணுக்கமாக நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் தெரியும் அளவிற்கு வடிவமைத்தார் சித்தர் சண்முக வடிவேலர்.

    விலை மதிப்பற்ற பச்சை மரகத கல் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு நடராஜரின் முன் புறம் கருவறையை அமைக்கும் படி மன்னனுக்கு அறிவுரை வழங்குகிறார் சித்தர்.

    ஒலியின் அதிர்வினால் உதிரும் தன்மை கொண்டது பச்சை மரகதக்கல். எனவே எப்போதும் சந்தனக்காப்பால் மரகத நடராஜரை சார்த்தி வைத்து வழிபடும் படி மன்னனுக்கும், வேதியர்களுக்கும் அறிவுரை கூறுகிறார் சித்தர்.

    மரகத நடராஜரை நாங்கள் கண்குளிர காண முடியாதா? என மன்னனும் மக்களும் சித்தரை பார்த்து ஏக்கத்தோடு கேட்கின்றார்.

    மார்கழி திருவாதிரை அன்று மரகத நடராஜரை சந்தனகாப்பு சார்த்தாமல் தரிசியுங்கள்.

    அன்றைய திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தின் போது அதிக ஒலி எழுப்பும் கொட்டு, மத்தளம், முரசு போன்ற வாத்தியங்களை அடிக்க வேண்டாம். அந்த ஒலி அதிர்வினால் மரகத நடராஜர் சிலை சேதமடையும் என அறிவுறுத்துகிறார் சித்தர்.

    இன்றளவும் உத்திரகோசமங்கை ஆலயத்தில் அதிக ஒலி எழுப்பும் வாத்தியங்களை வாசிக்காமல் இருப்பதால் "கொட்டு அடிக்காத கோசமங்கை ஆலயம்" என்ற சொலவடையில் உத்திரகோசமங்கை ஆலயத்தை மக்கள் அழைப்பதுண்டு.

    கண்டவரை கவரும், பார்த்தவரை பரவசப்படுத்தும் மரகத கல் நடராஜரை நீங்களும் மார்கழி திருவாதிரையின் போது கண்ணார கண்டு தரிசித்து ஜென்ம சாபல்யம் அடையுங்கள்.

    சிறந்த சிவபக்தன் ஒருவனே தனக்கு கணவனாக வர வேண்டும் என சிவனை நோக்கி மண்டோதரி தவமியற்றுகிறாள்.

    மண்டோதரிக்கு வரம் அளிக்க செல்லும் முன் சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த சிவஞான போதம் எனும் வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் கொடுத்து தான் திரும்பி வரும் வரை அந்த நூலை பத்திரமாக பாதுகாத்து வைத்து கொள்ளும் படி கூறி விட்டு செல்கிறார்.

    மண்டோதரியின் முன்பு பால சிவனாக குழந்தை வடிவில் காட்சி புரிகிறார் சிவன்.

    சிறந்த சிவ பக்தன் ஆன ராவணேஸ்வரனை மணமகனாக ஏற்று கொள்ளும் படி மண்டோதரியிடம் கூறுகிறார் சிவன்.

    உத்திரகோசமங்கை தலத்தில் வைத்து மண்டோதரிக்கும், ராவணனுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

    அகம்பாவம் மிக்க ராவணன் திருமணத்திற்கு முன் தன் புஷ்பக விமானத்தில் கயிலை மலையைத் தாண்டி பறக்க முயன்றான்.

    சிவபார்வதியின் இருப்பிடத்திற்கு மேலாக எவருடைய வாகனமும் பறக்கக்கூடாது. நவக்கிரகங்கள் கூட கயிலை மலையை தாண்டி செல்லாது. கைலாச மலையை சுற்றி தான் செல்லும்.

    ராவணா நீயும் சுற்றிப்போ… என கயிலைமலையின் காவலரான நந்தி தேவர் ராவணனை எச்சரித்தார்.

    நந்தி தேவரின் அறிவுரையை கேளாத ராவணன் நான் நினைத்தால் இந்த மலையையே தூக்கி வீசி விடுவேன் என கூறி ஆணவத்தோடு தன் இருபது கைகளாலும் கயிலாய மலையை பெயர்த்தெடுக்க முற்பட்டான்.

    ராவணனின் செயலால் கோபமுற்ற சிவன் தன் கால் பெரு விரலால் கயிலை மலையை அழுத்த ராவணனின் கை உள்ளே சிக்கி கொண்டது.

    கைவலி தாளாமல் அழுது புலம்பினான் ராவணன். ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து கயிலை மலையில் மாட்டிய கையை எடுக்க முடியாமல் அழுது கொண்டே இருந்தான் ராவணன்.

    ராவணன் இவ்வாறு அழுவதை கண்டு யாரும் கவலை படவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் அவ்வழியே வந்த வாகீசர் எனும் முனிவர் ராவணன் மேல் இரக்கப்பட்டு, சிவனைப் புகழ்ந்து பாடு, நீ விடுதலை அடைவாய் என ராவணனுக்கு உபாயம் கூறினார்.

    ராவணனும் தன் நரம்புகளை யாழாக உருவாக்கி சாம கானம் இயற்றி சிவனாரை புகழ்ந்து மனமுருகி பாடுகிறான்.

    ராவணன் இசையில் மனம் நெகிழ்ந்த சிவன் அவனை வாழ்த்தி ஐம்பது லட்சம் ஆண்டுகள் வாழும் வரத்தை அருளி சந்திரகாந்தம் எனும் வாளினை பரிசாக வழங்குகிறார்.

    வாகீஸ்வர முனிவர் ராவணனுக்கு உபாயம் அருளிய செயல் நந்தி தேவருக்கு பிடிக்கவில்லை.

    தெய்வ நிந்தனை செய்த ஒருவனுக்கு, அதிலிருந்து விடுதலையடைய யோசனை சொன்ன வாகீசரை பூமியில் பிறக்கும்படி சபித்து விட்டார். அந்த வாகீச முனிவரே திருநாவுக்கரசராக மறு பிறவியில் பூமியில் பிறந்தார்.

    ஏற்கனவே சிவ தண்டனை பெற்ற ராவணன் தனது திருமணத்தில் தோன்றிய பாலசிவனை யாருமே தீண்ட இயலா பொன்னார் மேனியனை தீண்ட முற்படுகிறான்.

    அந்த நேரத்தில் சிவன் அக்னியாக மாறி ராவணனை சோதிக்கின்றார்.. இறைவனின் வெம்மையை தாங்க இயலாமல் ராவணன் தனது கைகளில் இருந்து பாலசிவனை கீழே இறக்கி விடுகிறான்.

    பொன்னார் மேனியரான சிவனை, ராவணன் தீண்டியதால் உலகில் அனைத்து பொருட்களும் தீப்பற்றி எரிகின்றது.

    சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற சிவ ஞானபோதம் என்ற நூலுக்கும் தீயினால் ஆபத்து வருகின்றது.

    சிவனடியார்களான ஆயிரத்தோரு முனிவர்களில் ஆயிரம் முனிவர்கள் சிவன் தங்களிடம் தந்த சிவஞான போதம் என்ற நூலை காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில்ஆலயத்தில் அமைந்துள்ள தீர்த்தத்தில் குதித்து இறந்தனர்.

    ஆயிரம் சிவனடியார்கள் சிவனுக்காக, சிவனாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற உயிரை மாய்த்த தீர்த்தம் "அக்னி தீர்த்தம்" என்ற பெயரினை பெற்றது.

    ஆயிரம் சிவனடியார்கள் உயிரை மாய்த்த இடத்தில் சிவகடாட்சம் எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா.?!

    அரிதிலும் அரிதான சகஸ்ரலிங்கம் ஆனது அந்த ஆயிரம் முனிவர்கள் மறைந்த இடத்தில் இருந்து தோன்றுகிறது.

    ஆயிரத்தோரு முனிவர்களில் மாணிக்க வாசகர் மட்டும் என்னை சோதிப்பதுவும் சாதிக்க வைப்பதுவும் சிவமே நீ மட்டுமே! என தைரியமாக இருந்து சிவஞான போதம் என்ற நூலை தீயில் இருந்து அழியாமல் காப்பாற்றினார்.

    தன்னை நம்பி பற்றோடு தன் பாதக்கமலங்களை நம்பி பிடித்த மாணிக்கவாசகருக்கு தன்னை போலவே லிங்க வடிவம் தந்து கவுரவித்தார் சிவபெருமான்.

    உத்திரகோசமங்கை தலத்தில் மாணிக்கவாசகர் இப்போதும் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    • வாழ்வில் 16 வகை செல்வங்களும் பெற்று வாழ இறைவனை நினைத்து இருப்பது விரதம்.
    • விநாயகரை வழிபட்டால் ஜனன கால ஜாதகத்தில் உள்ள நவகிரக தோஷங்களும் அகலும்.

    கணபதியை தொழுதால் காரியம் கைகூடும் என்பது அருளாளர்கள் வாக்கு.எந்த காரியத்தையும், நற்காரியமாக மாற்றுவிக்கும் வல்லமை மிக்க மூலமுதல்வன், முழுமுதற் கடவுள் விநாயகர். தன்னை வழிபடும் பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவது விநாயகரின் தனிச்சிறப்பு. நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், வாழ்வில் 16 வகை செல்வங்களும் பெற்று வாழ இறைவனை நினைத்து இருப்பது விரதம். விரதம் என்பது ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை ஆகும். விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும்.

    விரதங்களை கடைபிடிப்பது ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல். அறிவியல் ரீதியாகவும் உடலுக்கும், உள்ளத்திற்கும் உகந்தது.

    பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விராதாதி நாட்களை திதி மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் கடைபிடிப்பது இந்துக்களின் வழக்கம். திதிகளின் அதி தேவதைகளை வழிபாடு செய்தால் அது அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை பிணி பீடை,கஷ்டம் என அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி சுபிட்சமான வாழ்வு கிடைக்கச் செய்யும். பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, திரயோதசி போன்ற ஒரு சில குறிப்பிட்ட திதிகள் காலத்தால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வலிமை பெற்றவை. அந்த வகையில் வளர்பிறை சதுர்த்தி திதியின் அதிதேவதை விநாயகரை வளர்பிறை சதுர்த்தி திதியில் வழிபடுவது மிகவும் உன்னதமானது.

    ஒவ்வொரு தமிழ் மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு தடை தாமதங்கள் மற்றும் நவகிரக தோஷத்தை நீக்கும் வலிமை உண்டு. என்றாலும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி விநாயகர் அவதரித்த நாள் என்பதால் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி வழக்கமாக விநாயகர் சதுர்த்தியானது ஆவணி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருகிறது. பெருமாளுக்குரிய புரட்டாசி மாதம் முதல் நாளிலேயே, முழு முதற்கடவுளான விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தியும் இணைந்து வருவதால் இது கூடுதல் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.காலண்டர்களில் செப்டம்பர் 17 ம் தேதி தான் அரசு விடுமுறை என்றும், செப்டம்பர் 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததால் எந்த நாளில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 17 க்கு பதிலாக செப்டம்பர் 18-ந் தேதி மாற்றியது.

    திருக்கணித பஞ்சாங்கப்படி சோபகிருது வருடம் புரட்டாசி 1-ம் நாள் திங்கட்கிழமை 18. 9.2023 அன்று பகல் 12.40 முதல் புரட்டாசி 2-ம் நாள் செவ்வாய்கிழமை 19.9.2023 நண்பகல் 1.44 மணி வரை வளர்பிறை சதுர்த்தி திதி உள்ளது. திதியின் பெரும் பகுதி ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சம்பவிக்கிறது. இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் ஜனன கால ஜாதகத்தில் உள்ள நவகிரக தோஷங்களும் அகலும்.

    விநாயகரின் சிறப்புகள்

    ஓங்கார நாயகனாக திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்களும் இருப்பதாக ஐதீகம். அவரது நெற்றியில் சூரியனும், நாபி (தொப்புள்)யில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் எனப்படும் அங்காரகனும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனி பகவானும், சிரசில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்கிர பகவானும், இடது மேல் கையில் ராகு பகவானும், இடது தொடையில் கேது பகவானும் இருப்பதால் நவக்கிரகங்களால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்தும் சக்தி விநாயகருக்கு உண்டு. மேலும் அவரது ஐந்து கரங்களும் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களைக் குறிப்பதுடன் சிவாயநம என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்துவதால் 'ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது பாசத்தை ஏந்திய கை படைத்தலை குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது என்பதால் படைத்தல், காத்தல்,அழித்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார். மோதகம் ஏந்திய கை அருளை குறிப்பதால் இவர் பராசக்தியாகவும் தும்பிக்கை ஏந்திய கை மறைத்தலை குறிப்பதால் இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

    விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம்,கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை.

    சூரியன்,சந்திரன்,அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர் என்பதால் விநாயகர் தத்துவப் பொருள். முக்காலத்துக்கும் வழிகாட்டு பவர், நாம் செய்யும் நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம்.அவரை வழிபடுவதால் சுகம்,ஞானம்,ஆனந்தம் என அனைத்தும் தேடி வரும்.

    ஸ்வஸ்திக் சின்னமும் விநாயகரும்

    எந்த செயலையும் தொடங்கும்முன் விநாயகரை வணங்குவது நமது மரபு. எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் விநாயகர் வழிபாடு வெற்றியை தருவதற்கு காரணம் அவரது கையில் உள்ள மங்களம் மற்றும் வெற்றியின் சின்னமான ஸ்வஸ்திக். உலகில் பல்வேறு நாடுகளில் ஸ்வஸ்திக் சின்னம் அதிர்ஷ்டத்தின் சின்னமாக பல்லாயிரம் வருடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்தை தன் வசப்படுத்த நினைத்த ஹிட்லரின் வெற்றிச் சின்னமும் ஸ்வஸ்த்தி தான்.

    செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும். ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளி நமது ஆன்மா. மனக் கட்டுப்பாடு இல்லாமல் அலைபாயும் ஆன்மாவை கட்டுபடுத்தி பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தரும் சக்தி ஸ்வஸ்திக் சின்னத்திற்கு இருக்கிறது. எனவே விநாயகர் வழிபாடு தடையற்ற நல்வாழ்வு , பொருள், வெற்றியைத் தேடி தரும் ஸ்வஸ்திக் சின்னத்தை பூஜை அறையில் வரைய வேண்டும். அல்லது ஸ்வஸ்திக் சின்னம் கையில் உள்ள விநாயகரை வைத்து வழிபட வேண்டும்.

    விநாயகரும் தோஷ நிவர்த்தியும்

    வளர்பிறை சதுர்த்தி திதியில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் மற்றும் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும் . விநாயகர் சதுர்த்தி திதி ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சம்பவிக்கிறது. ஜனன கால ஜாதகத்தில் கடுமையான சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் 13,22,31-ம் தேதியில் பிறந்தவர்கள், ராகு, கேது தசை நடப்பவர்கள், ஜனன ஜாதகத்தில் அதிக கிரகங்கள் ராகு/கேது சாரம் பெற்றவர்கள் வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன் எனும் ஒன்பது தெய்வத்தன்மை மிகுந்த நாகங்களை மனதில் நிறுத்தி பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்துவிதமான சர்ப்ப தோஷங்களும் நிவர்த்தி ஆகும். திருமணத்தடை அகலும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். அத்துடன் கண்திருஷ்டி, செய்வினை பயம், ஏதாவது ஒரு ரூபத்தில் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருக்கும் பிரச்சினைகள், முன்னேற்றமின்மை போன்றவை நீங்கும். சம்பள உயர்வு. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பி வசூலாகும்..

    மாங்கல்ய தோஷம்

    ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அதிதேவதையாகும். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிட கேது, செவ்வாய் மற்றும் சனியினால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கி திருமணத் தடைகள் அகன்று மங்கல வாழ்வு அமையவும். சனி பகவானின் தோஷம் நீங்கி, ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கவும் விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை தரிசித்து, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைத்து வழிபட்டால் அனைத்து தடை தாமதங்களும் விலகி சுப பலன் தேடி வரும்.

    ஜாதகத்தில் கேது திசை மற்றும் கேது புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு நிச்சயம் விநாயகர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும். இப்படியாக நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான இன்னல்களுக்கும் விநாயகரை வழிபடுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் உண்டாகும்.

    பணவரவை அதிகரிக்கும் குன்றின் மணி கருப்பு வண்ணத்தையும் சிகப்பு வண்ணத்தையும் ஒன்றாக சேர்த்தால் போல் இருக்கும் குன்றின் மணியை நாம் அனைவரும் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. விநாயகர் சதுர்த்தி அன்று மண் பிள்ளையாருக்கு கண்ணாக இதை வைப்பார்கள். கிராமப்புறங்களில் விலையும் இந்தக் குன்றின் மணிக்கு சக்தி அதிகம் உள்ளது. வீட்டில் பணக் கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த சிகப்பு கருப்பு குன்றின் மணியை நம் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம். வீண் விரயங்களையும் தவிர்க்கும் சக்தியானது இந்த சிகப்பு கருப்பு குன்றின் மணிக்கு உள்ளது.

    மன நிம்மதி

    ஓம் சுமுகாய நமஹ' இம்மந்திரம், நம் மனதின் சமநிலையையும், அமைதியையும் நிலைப்படுத்த உதவும் ஒரு இனிய மந்திரம் ஆகும். எப்போதெல்லாம் உங்களுடைய மனம் அமைதி நிலையை இழந்து தவிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதார ஸ்ரீ விநாயகரின் திருவுரு வத்தோடு நினைத்து துதித்தால் மனம் அமைதி நிலை பெற்று மகிழ்ச்சி உணர்வு உண்டாகும். விருட்சமும் விநாயகரும். அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரஹ தோஷங்கள் விலக்குவார்.

    ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும். வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும்.

    விநாயகர் சதுர்த்தி விரத முறைகள்

    அதிகாலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி இரண்டு வாழைக் கன்றுகளையும் கட்டவேண்டும்.

    பூஜையறையை சுத்தம் செய்து ஒரு மணையை வைத்து கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் விநாயகரை வைக்க வேண்டும். களிமண் பிள்ளையார். உலோகம், கற்சிலை விக்ரகங்களையும், படம் வைக்கலாம்.

    விநாயகருக்கு கொழுக்கட்டை, எள்ளுருண்டை, பாயாசம், வடை பால், தேன், வெல்லம், முந்திரி, அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், வெற்றிலை, பாக்கு வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு என அவரவர் வசதிக்கேற்ப நைவேத்யம் செய்யலாம்.

    நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் வைக்கலாம்.பூஜையின் போது மண் அகலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.அதன் பிறகு எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி பூக்களால் அலங்காரம் செய்து 21 வகை இலைகள் மற்றும் அறுகம் புல்லினால் 108 முறை அவரின் திருநாமத்தைச் சொல்லியும், அஷ்டோத்திரம் படித்து அர்ச்சனை செய்யலாம்.விநாயகர் பாடல்கள் விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத்தரும். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம். இந்த விரதத்தை பட்டினியாக இருந்து அனுஷ்டிப்பது சிறப்பு. உலகில் மனிதனுக்கு போதும் என்ற எண்ணம் தோன்றுவது உணவருந்தும் போது தான். ஒருவர் வயிறு நிரம்பி, மனதார வாழ்த்தினால் அனைத்து செல்வங்களும் தேடி வரும். எனவே இயன்ற உணவுகளை தான தர்மங்களை செய்ய பலன் இரட்டிப்பாகும்.

    ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோவிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்த வருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யா விட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வதே ஆன்மீகம்.

    அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித தீய சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிர வேறு யாரும் தெரியாது, உன்னை தவிர வேறு யாரும் கிடையாது. இந்த உடலையும் ஆன்மாவையும் நீயே வழிநடத்தி செல், என விநாயகரிடம் சரணடைந்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும். பொன், பொருள் ஆபரணங்கள் சேரும்.

    • நிலவேம்பில் உள்ள ‘ஆன்ரோகிராபோலாய்டு’ எனும் வேதிப்பொருள் வைரஸ் கிருமிக்கொல்லித் தன்மைக்கு காரணமாகின்றது.
    • வீட்டிலும் நல்ல நீரினை சேமித்து வைக்கும் போது மூடிவைக்க வேண்டும்.

    சமீப காலமாக தமிழகத்தை உலுக்கி வரும் டெங்கு காய்ச்சல் மக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. டெங்கு வைரஸ் கிருமிக்கு நேரடியான எதிர் மருந்துகள் இல்லாததும், தடுப்பூசி மருந்துகள் இல்லாததுமே இதற்கு முக்கிய காரணம். ஆகவே டெங்கு காய்ச்சலைப் பற்றிய விழிப்புணர்வு இறப்புக்களைத் தவிர்ப்பதற்கு அவசியமாகின்றது.

    கடந்த 50 ஆண்டுகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 30 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சியான தகவலைத் தெரிவிக்கின்றன. அதிலும் வெப்பமண்டல நாடுகளில் டெங்கு அதிகம் காணப்படுவதாக குறிப்பிடுகின்றன. திடீரெனெ ஏற்படும் மழையும், அதனால் மாறுபடும் சீதோஷண நிலையும், இந்த டெங்கு வைரஸ் பரவுவதற்கான சூழலை உண்டாக்குகின்றன.

    சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி பேர் டெங்குவால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றன. இதில் 2-5 சதவீதம் பேர் கடுமையான நோய்நிலையை அடைகின்றனர். டெங்கு பரவுவதற்கு கொசுவின் அடர்த்தி, மக்கள் தொகை அடர்த்தி, டெங்கு வைரஸ் கிருமிகளின் இணை சுழற்சி, மழைப்பொழிவு மற்றும் ஈரப்பதம் போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

    டெங்கு காய்ச்சலும், குறிகுணங்களும்:

    டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ் தாக்கத்தினால் உண்டாவதாக இருப்பினும் 'ஏடிஎஸ்' எனப்படும் பகல் நேரங்களில் கடிக்கும் பெண் கொசுக்களினால் பரவுகின்றது.

    சுரம், அதீத உடம்பு வலி, வாந்தி, வாய் குமட்டல், வயிற்று வலி, கண்ணுக்கு பின்பக்க வலி, பசியின்மை, தசை வலி, எலும்பு வலி, உடல் சோர்வு ஆகியன இந்நோயின் குறிகுணங்களாக உள்ளன. சுரம் விட்ட பின் ஏற்படும் அதிகப்படியான தசை வலி, உடம்பு வலி மிக முக்கிய அறிகுறியாகும். அதிகப்படியான வாந்தியும், வாய்குமட்டலும் நோயின் தீவிர நிலைக்கு வெகு விரைவில் கொண்டு செல்லும்.

    ஏடிஎஸ் கொசு கடித்து 3 -10 நாட்களில் நோயரும்பும் (இன்குபேஷன்) காலமாக உள்ளது. அதற்கு பின் குறிகுணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். மூன்று நாள் சுரம் காய்ந்து, அதன்பின் நான்காம் நாள் தொடங்கி ரத்த தட்டணுக்கள் குறையத் துவங்கும். தட்டணுக்கள் குறைவதனால் உடலில் ரத்தம் கசிய துவங்கும். ரத்தபோக்கினை ஏற்படுத்தும். தோலில் ரத்த கசிவு அதனால் தடிப்பு, சில பேருக்கு பல் ஈறில் இருந்து அதிக ரத்தம் கசிதல், சிறுநீரில் ரத்தக்கசிவு, பெண்களுக்கு அதிக மாதவிடாய் ஆகிய குறிகுணங்கள் தோன்றக்கூடும்.

    காய்ச்சல் துவங்கிய முதல் மூன்று நாட்களில் சுரத்துடன் நீர்சத்து இழப்பு இருக்கும். அடுத்து மூன்று நாட்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதும் அதனால் குருதிப்போக்கு, மயக்கம், முக்கிய உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைபாடு ஆகிய குறிகுணங்கள் ஒன்று சேர்ந்து நோயின் தீவிர நிலைக்கு கொண்டு செல்லும். முறையான சிகிச்சை மூலம் இந்த நாட்களை கடந்தால் அடுத்து நோயின் மீட்பு நிலைக்கு சென்று இயல்பான நிலைக்கு திரும்பலாம்.

    பொதுவாக ரத்த பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள், மற்றும் தட்டணுக்கள் ஆகியன வைரஸ் காய்ச்சலில் குறையக்கூடும். மேலும் டெங்குவை எலிசா பரிசோதனை செய்து உறுதி செய்துக் கொள்ளலாம்.

    டெங்குவை உறுதி செய்த பின்னர் 24 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை பரிசோதனை செய்தல் அவசியம். முழு நேரம் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது மிக மிக அவசியம். மேலும் மிக முக்கியமாக ரத்தப் பரிசோதனையில் 'பி.சி.வி' எனும் குறியீடு அதிகரித்தால் 'டெங்கு ஷாக்' குறிகுணங்கள் தோன்றக்கூடும். அத்துடன் தட்டணுக்கள் சேர்ந்து குறைந்தால் 'டெங்கு ஹெமரேஜிக் ஷாக்' ஏற்படக்கூடும். இந்நிலைகளில் சிகிச்சை அளிக்கத் தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

    சரியான நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, நோய் கணிப்புச் செய்து சிகிச்சை மேற்கொண்டால் நோயின் தீவிர நிலையில் இருந்து காத்துக்கொள்ளலாம். நீர்ச்சத்து அதிகம் இழக்கப்படுவதால் திரவ மேலாண்மை மிக அவசியம். நீர்ச்சத்து மிகுந்த கஞ்சி, பழச்சாறுகளை அதிகம் தரலாம். தட்டணுக்களை அதிகரிக்க வைட்டமின்-சி நிறைந்த பழச்சாறுகளை ஒரு மணிக்கொரு முறை கொடுத்து வரலாம்.

    டெங்கு காய்ச்சலும், சித்த மருத்துவமும் :

    சித்த மருத்துவத்தில் 4448 வியாதிகள் வாதம், பித்தம், கபம் இவற்றின் அடிப்படையில் அகத்திய மாமுனிவரால் கூறப்பட்டுள்ளன. இன்றைய நவீன மருத்துவம் கூறும் டெங்கு காய்ச்சலின் குறி குணங்களும், நோய்நிலையும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள 'பித்த சுரம்' என்பதுடன் ஒத்துப் போவதால், பித்த சுரத்துக்கான மருத்துவ முறைகளும், பித்தத்தை குறைக்கும் படியான கசப்பு தன்மையுடைய சித்த மருத்துவ மூலிகைகளும் பயன் தரக்கூடியதாக உள்ளன. இதனை சமீபத்திய ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.

    நிலவேம்பு, ஆடாதோடை, பப்பாளி இலை, சீந்தில், வேப்பிலை, மலைவேம்பு இவற்றாலான மருந்துகள் பித்தத்தைக் குறைத்து நோயினை தீர்க்க உதவும். இந்த மூலிகை மருந்துகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் உடையதால் கிருமிகளுடன் போராடும் திறத்தையும் உடலுக்கு அளிக்கும்.

    உலக அளவில் பிரபலமான சித்த மருந்தான 'நிலவேம்பு குடிநீர்' வைரஸ் சார்ந்த பல்வேறு நோய்த்தொற்றுக்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீரில் சேரும் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தானம், பேய்புடல், கோரைக்கிழங்கு, பற்பாடகம், சுக்கு, மிளகு ஆகிய பல்வேறு மூலிகைச் சரக்குகள் டெங்கு காய்ச்சலில் உண்டாகும் குறிகுணங்களை குறைப்பதுடன் நோய்க்கு காரணமாகும் வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் தன்மையும் உடையன. முக்கியமாக நிலவேம்பில் உள்ள 'ஆன்ரோகிராபோலாய்டு' எனும் வேதிப்பொருள் வைரஸ் கிருமிக்கொல்லித் தன்மைக்கு காரணமாகின்றது.

    சித்த மருந்தான ஆடாதோடை மணப்பாகினை 10 -15 மிலி வெந்நீருடன் ஒரு நாளைக்கு மூன்று முறை கொடுக்கலாம். நிலவேம்பு குடிநீருடன், ஆடாதோடை மணப்பாகு சேர்த்து டெங்கு நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் ரத்தத்தில் தட்டணுக்கள் அதிகரிப்பதையும், நோய் விரைந்து குணமாக இம்மருந்துகள் துணை நிற்பதையும் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் உறுதியாக தெரிவிக்கின்றன.

    கசப்பு சுவையுடைய பப்பாளி இலையில் மருத்துவ குணமிக்க எண்ணற்ற வேதிப்பொருட்கள் உள்ளன. அல்கலாய்டுகள் இயற்கை நிறமிகள், குர்சிட்டின், கேம்ப்பெரால் ஆகியன குறிப்பிடத்தக்கவை. குர்சிட்டின், பப்பைன், கைமோபப்பைன் ஆகியன அதன் மருத்துவ தன்மைக்கு முக்கிய காரணமாகின்றன. இது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எனும் தட்டணுக்கள் குறைவதை தடுப்பதாகவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாகவும், வெள்ளையணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

    பப்பாளி இலைச்சாறு 10 மிலி மூன்று வேளை கொடுக்க நல்ல பலன் தருவதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. எனவே மருத்துவர் ஆலோசனைப்படி நிலவேம்பு, ஆடாதோடை இவற்றுடன் பப்பாளி இலைச் சாற்றினை எடுத்துக்கொள்வது டெங்கு நோய் சிகிச்சையில் நல்ல பலன் தரும்.

    காலம் காலமாக அம்மைத் தொற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் 'வேப்பிலை' டெங்கு வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படுவதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. வேப்பிலையில் உள்ள 'அசாடிராக்டின்' எனும் வேதிப்பொருள் அதன் கிருமிகொல்லித் தன்மைக்கு காரணமாக உள்ளது. வேப்பிலையானது டெங்கு வைரஸ் பல்கி பெருகுவதை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு. அதே போல் 'பொன்முசுட்டை' எனும் சித்த மருத்துவ மூலிகை டெங்கு வைரசின் நான்கு வகை பிரிவுகளிலும் அவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

    'அமிர்தவல்லி' எனப்படும் 'சீந்தில்' மூலிகையை ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுக்கலாம். இது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும், ரத்தத்தில் தட்டணுக்கள் அதிகரிக்கும் தன்மையும், வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் தன்மையும் உடையது. இதில் உள்ள 'டினோஸ்போரின்' எனும் முக்கிய தாவர வேதிப்பொருள் அதன் மருத்துவத் தன்மைக்கு காரணமாக உள்ளது.

    மூலிகைகளைத் தவிர அன்னபேதி செந்தூரம், அய செந்தூரம், அயகாந்த செந்தூரம், பவள பற்பம், சங்கு பற்பம் போன்ற பல்வேறு மருந்துகள் பித்தத்தைக் குறைத்து டெங்குவின் பின் விளைவுகளில் இருந்து காப்பதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    தடுப்பு முறைகள் :

    டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுக்கள் தேங்கிய சுத்தமான நீரில் தான் உற்பத்தி ஆகின்றன. முக்கியமாக மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களை சோதனை செய்து அதனை நீக்குவது நல்லது. வீட்டிலும் நல்ல நீரினை சேமித்து வைக்கும் போது மூடிவைக்க வேண்டும். கொசு கடிக்காமல் இருக்க முழு சட்டைகளை பயன்படுத்தலாம்.

    இயற்கை கொசு விரட்டிகளாக வேப்பிலை, நொச்சி இலை புகை போடலாம். தினமும் குளிப்பது கொசுக்கள் நம்மை அண்டாமல் தடுக்கும். சுத்தமான அழுக்கில்லாத உடைகளை உடுத்துவது நல்லது. கற்பூராதி தைலம் எனும் சித்த மருந்தை கொசு கடிக்காமல் இருக்க மேலே பூசிக்கொள்ளலாம். முறையான தடுப்பு நடவடிக்கைகளும், நோயினை பற்றிய விழிப்புணர்வும், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை நாடுவதும், டெங்குவில் இருந்து நம்மை காக்கும் ஆயுதங்கள்.

    ஆண்டுதோறும் இந்தியாவில் டெங்குவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெங்குவால் பாதிக்கப் பட்டு மீண்டு வந்தவர்க ளின் துன்பத்தை வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாது. அதே போல் டெங்கு காய்ச்சலில் சிகிச்சை பலனின்றி இறப்போர்களின் இழப்பும் ஏற்கக்கூடியது அல்ல. இத்தகைய அச்சுறுத்தலான சூழ்நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவமாக சித்த மருத்துவத்தைப் பயன்படுத்தி இறப்பினைத் தடுத்து, சமூக நலன் காப்பது, இன்றைய தருணத்தில் அவசியமான ஒன்று.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    • ஓசோன் துளை பெரிதாகிக் கொண்டே போகிறது.
    • அமெரிக்க தேசத்தின் பரப்பளவைப் போல இது மூன்று மடங்கு அதிகம்!

    உயிர் காக்கும் ஓசோன் மண்டலம்

    பூமியைச் சுற்றி உள்ள ஓசோன் மண்டலம் பூமியைப் பாதுகாக்கும் பெரும் வளையமாகும். இது வாயுக்களினால் ஆன ஒரு உறையாகும்.

    சூரிய மண்டலத்தில் இருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்களில் இருந்து பூமியை ஓசோன் மண்டலம் காக்கிறது. மனிதர்களையும் தாவரங்களையும் காப்பது இந்த மண்டலம் தான்.

    சூரியன் தனது அளவற்ற சக்தியை பூமியின் மீது வீசும் போது அது மனிதன் தாங்க முடியாத அளவு அளப்பரியதாகும். அதைத் தாங்கக் கூடியதாக ஆக்கி, மனிதர்கள் ஆரோக்கியமாக உயிர் வாழும்படி செய்வது இந்த ஓசோன் மண்டலமே.

    இந்த ஓசோன் உறை மட்டும் இல்லாவிட்டால் இன்னும் அதிக அளவில் புற்று நோயும் காட்ராக்ட் போன்ற கண் நோய்களும் ஏற்படும்.

    ஓசோனில் துளை

    ஆனால் நகரங்களில் இருந்து எழும்பும் நச்சுப் புகைகள் இந்த ஓசோன் உறை மீது பட்டுப்பட்டு அதில் அபாயகரமான அளவில் துளைஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு மேலே அபாயகரமான அளவு பரந்து விரிந்தது மட்டுமின்றி பெரிதாகி வருகிறது.

    அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்ணில் ஏவிய சாட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்ட படம் பூமியின் அபாயகரமான நிலையைக் காட்டுகிறது. அண்டார்டிகாவின் மேலே ஓசோன் துளை பெரிதாகிக் கொண்டே போகிறது. இதன் பரப்பு 110 லட்சம் சதுர மைல்கள். அதாவது அமெரிக்க தேசத்தின் பரப்பளவைப் போல இது மூன்று மடங்கு அதிகம்!

    1970-ம் ஆண்டில் இருந்து விஞ்ஞானிகள் ஓசோன் மண்டலத்தைக் கண்காணித்து வருகின்றனர். கவலைப்படும்படியாக சீசனுக்குத் தகுந்த படி இது சுருங்கியும், விரிந்தும் வருகிறது.

    செப்டம்பர் 16 ஓசோன் தினம்

    1995-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி உலக நாடுகள் அனைத்தும் ஓசோன் லேயர் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடியது. அது முதல் செப்டம்பர் 16-ம் நாள் ஆண்டுதோறும் உலக ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கத்தின் மெட்ரோலாஜிகல் கண்காணிப்பு மையம் ஓசோன் துளை பெரிதாகி வருவது குறித்துக் கவலை தெரிவித்து ஓசோனைக் காப்பாற்றுமாறு உலக நாடுகளை வேண்டி கேட்டுக் கொண்டது.

    1987-ல் அனைத்து நாடுகளும் நச்சுப் புகை கக்கும் விஷ வாயுக்களைக் கட்டுப்படுத்த உறுதி எடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டன.

    ஆனால் இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை இந்த ஓசோன் துளை தெரிவிக்கிறது.

    நச்சு வாயுக்களே காரணம்

    நச்சு வாயுக்கள் பூமியில் இருந்து அதிக அளவில் வெளிப்படுவதால் தான் ஓசோனில் துளை ஏற்பட்டது. இந்த அபாயகரமான வாயுக்களில் குறிப்பிடத்தகுந்தது CFC எனப்படும் குளோரோ புளோரா கார்பன் - Chloro Floro Carbon - ஆகும். இது ரெப்ரிஜரேஷன் எனப்படும் குளிர் சாதனக் கருவிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. PUF எனப்படும் பாலி யூரிதேன் போமிலும் (Poly Urethane foam) இந்த சி.எப்.சி உள்ளது. இது ரெப்ரிஜரேட்டர்களிலும், இன்சுலேடட் மற்றும் ரெப்ரிஜரேடட் வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

    உலக நாடுகள் இதன் உபயோகத்தைத் தடுத்து நிறுத்தி மாற்றுப் பொருளாக 134ஏ என்ற வாயுவை ரெப்ரிஜரேஷன் சம்பந்தப்பட்ட கருவிகளில் உபயோகிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

    இது மட்டுமன்றி அனேக ஆலைகள் கக்கும் விஷப்புகைகள் பூமியின் மேலே உள்ள வளி மண்டலத்தை மோசமாகத் தாக்குகின்றன. ஆகவே விஷ வாயுக்களைத் தடுப்பதில் அனைவரும் விழிப்புணர்வு பெற்று அதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    பர்டிகுலேட் மேட்டர்

    காற்றில் உள்ள பர்டிகுலேட் மேட்டர் எனப்படும் துகள்மப் பொருள்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதால் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். பி எம் 2.5 என்பது துகள்மப் பொருள்கள் குறுக்களவில் 2.5 மைக்ரானுக்கும் குறைவாக இருப்பதைக் குறிக்கும்.

    இவை மிகவும் நுண்ணிய சிறிய பொருள்களாக இருப்பதால் வேகமாகவும் எளிதாகவும் பரவும். அத்துடன் சுலபமாக மனிதர்களின் நுரையீரல்களைச் சென்றடையும். இவை சுலபமாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பதும் சற்று கஷ்டமாக இருக்கிறது.


    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    காற்றுத் தரக் குறியீட்டு எண்

    காற்றுத் தரக் குறியீட்டு எண் எனப்படும் ஏர் குவாலிடி இண்டெக்சில் பூஜ்யம் முதல் 300-க்கும் அதிகம் என ஆறு மட்டங்கள் உள்ளன. இதில் 50 என்ற எண் அளவு உலகளாவிய விதத்தில் ஏற்புடைய அளவு ஆகும். 350 என்ற எண் காற்றின் மிக மிக மோசமான நிலையைக் குறிப்பதாகும். 400-க்கும் மேற்பட்ட நிலையில் ஆரோக்கியமான ஒருவர் கூட சுவாசக் கோளாறை அடைவர். 999 என்ற எண் நச்சு நிரம்பிய அறையில் இருப்பது போலாகும்.

    இதில் இந்திய நகரங்களில் நமது தலை நகரமான டெல்லி 999-ஐ எட்டியிருந்தது அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது. டெல்லி உச்ச நீதி மன்றமே கவலைப்படும் அளவு சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டிருப்பது கவலை தரும் நிலையாகும்.

    அடுத்து பெங்களூர் நகரை எடுத்துக் கொண்டால் மரங்களின் நகரமாக ஒரு காலத்தில் திகழ்ந்த இதன் காற்றுக் குறியூட்டு எண் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு 1.9 மடங்கு அதிகமாக உள்ளது.

    சென்னையின் தர அளவு திருப்திகரமான அளவில் இருப்பதை எண்ணி மகிழ்வதோடு இன்னும் அதிக அளவில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க உறுதி பூண்டு அனைவருக்குமான லட்சிய நகரமாக அமையப் பாடுபட உறுதி பூண வேண்டும்.

    க்ரீன் ஹவுஸ் வாயுக்கள்

    கிரீன் ஹவுஸ் வாயுக்கள் எனப்படும் நீராவி, கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், ஓஜோன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகிய இவை பூமியின் பரப்பில் இருந்து அதிகமாக வெளியிடப்பட்டால் நிறைய அபாயம் ஏற்படும். முதல் அபாயம் ஓசோனில் துளை விழுவதாகும்.

    சென்ற நூற்றாண்டில் 0.4 முதல் 0.8 செல்சியஸ் வரை பூமியின் உஷ்ணநிலை அதிகரித்து விட்டது. இந்த நூற்றாண்டில் 1.4 முதல் 5.8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கவலையுடன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கான முக்கியமான காரணமாகத் திகழ்வது வளி மண்டலத்தில் அளவுக்கதிகமாக கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்கள் சேர்வதேயாகும்.

    கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட நச்சு வாயுக்களை நாம் உபயோகிக்கும் வாகனங்களே வெளியிடுகின்றன. ஆகவே வாகனங்களின் புகையைக் கட்டுப்படுத்துவது இன்றியமையாததாக ஆகிறது.

    ஒரு டிகிரி அளவு புவி வெப்பம் உயரும் போது நான்கு சதவீதம் அதிகமான சுவாசக் கோளாறுகள் ஏற்படும் என்பதோடு அதனால் மருத்துவ மனைகள் நிரம்பி வழியும்.

    புவி வெப்பம் அதிகமாவதால் எலிகள், அணில்கள், முயல்கள் உள்ளிட்ட உயிரினங்கள் உயரமான இடங்களுக்குச் சென்று வசிக்க ஆரம்பித்திருப்பதை விஞ்ஞான ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

    கடல் மட்டம் உயர ஆரம்பிப்பதால் கடலோரம் அமைந்துள்ள புனித தலங்கள், புராதனச் சின்னங்கள் அழிய ஆரம்பித்துள்ளன. 600 ஆண்டுகள் பழமையான சுகோதை என்ற புராதன இடம் அழிக்கப்பட்டு விட்டது. அது ஒரு காலத்தில் தாய்லாந்தின் தலைநகரமாகத் திகழ்ந்தது.

    வீட்டுக்கு ஒரு மரம்

    வீட்டுக்கு வீடு மரம் ஒன்றை நட வேண்டும் என்ற உணர்வு அதிகமாக வேண்டும்.

    ஒரே ஒரு மரம் ஐந்து சராசரி அளவுள்ள குளிர்சா தனப் பெட்டியில் இருந்து வெளிப்படுத்தப்படும் வெப்பத்தை அகற்றி விடும் என்பது சுவையான செய்தி. காற்றைக் கூறுகளாக்கி குளிர்காலத்தில் சீதோஷ்ணத்தை இதமானதாக மரங்கள் ஆக்கும் என்பது இன்னொரு சுவையான செய்தி.

    இதனால் என்ன நன்மை? எனர்ஜி கன்ஸம்ப்ஷன் எனப்படும் ஆற்றலின் உபயோகம் கட்டுப்படுத்தப்படுகிறது. செலவும் குறைவு. மாசும் குறைவுபடும். செடிகளும் மரங்களும் உள்ள நகர்களின் பல பகுதிகளில் ஆங்காங்கே உள்ள நல்ல பூங்காக்கள் வெள்ள நீரைக் கூட செயற்கைமுறையை விட செலவில்லாமல் உறிஞ்சுகின்றன.

    பூங்காக்கள் நல்ல காற்றையும் நீரையும் சேமித்து கண்ணுக்கும் மனதிற்கும் உடலுக்கும் இதத்தையும் ஆரோக்கியத்தையும் தருபவையாகும். ஆகவே நகரத்தின் கண்களான பூங்காக்களை நன்கு பாதுகாத்து, அசுத்தப் பொருள்களை நீக்குதல் வேண்டும்.

    மரீனா போன்ற உலகின் அற்புதமான கடற்கரையை ஒவ்வொருவரும் தங்கள் சொந்த சொத்தாக பாவித்து பெருமை கொண்டு அங்கு மாசுப் பொருள்களைக் குவிக்காமல் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றைப் போடாமல் அதை நன்கு பாதுகாக்க வேண்டும்.

    வாகனப் புகையைக் கட்டுப்படுத்தல்

    அடுத்து வாகனப் புகையை மட்டுப் படுத்த வேண்டும்.

    பாசில் பியூயல் எனப்படும் படிம எரிபொருளைப் பயன்படுத்துவதை கூடுமான அளவில் தவிர்க்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல் வாகனங்களைத் தவிர்த்து. எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் வேண்டும்.

    Chloro Floro Carbon குளோரோ புளோரா கார்பன் இல்லாத குளிர்சாதனப் பெட்டிகளைக் கேட்டு வாங்கி உபயோகிக்க வேண்டும்.

    ஒரு சிறிய வாஷிங் மெஷின் நீரையும் மின்சக்தியையும் தேவையான அளவு மட்டும் உபயோகிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தால் அது ஒரு வருடத்திற்கு 200 கிலோ நச்சுப் பொருள் வெளியேற்றத்தைத் தடுக்கும். ஆகவே மின் சாதனங்களை வாங்கும் போது அவை மாசுக் கட்டுப்பாடு எண்ணத்துடன் ஆராய்ந்து வாங்குதல் இன்றியமையாதது.

    உயிர் வாழ ஓசோன் உறை தேவை

    தனி மனிதராக ஒவ்வொருவரும் இப்படித் தன்னால் இயன்ற அளவு இயற்கையைக் காக்க முற்பட்டால் ஓசோன் துளை பெரிதாகாது.இருக்கின்ற துளையும் சிறுகச் சிறுக மூடி விடும்.

    இப்படிப்பட்ட எண்ணங்களை மனதில் கொள்ள ஒரு நாளை ஆண்டுக்கு ஒரு முறை இதற்காகவே ஒதுக்குவது சிறந்தது அல்லவா?

    அதற்காகவே தான் ஏற்படுத்தப்பட்டது இந்த ஓசோன் தினம். உயிர் வாழ ஓசோன் உறை தேவை என்பதே இந்த நாளில் நாம் எழுப்ப வேண்டிய முழக்கமாகும்.

    இந்த உறையைக் காத்து, அற்புதமான பூமியை என்றும் உயிரினங்கள் வாழக் கூடிய இடமாகப் பாதுகாப்போம்!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • கும்பேஸ்வரரை ஒரு நாள் தரிசித்தாலே நற்பெயர் கிடைக்கும். தொடர்ந்து தரிசித்தால் மோட்சம் கிடைக்கும்.
    • கரும்பாயிரம் விநாயகரை வழிபட்ட பிறகு நீங்கள் அடுத்து அருகில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு தான் வர வேண்டும்.

    கும்பகோணம் நகரம் எப்படி உருவானது என்பதை கடந்த வாரம் பார்த்தோம். ஜீவ வித்துக்கள் கொண்ட அமுத கலசத்தை சிவபெருமான் அம்பு எய்து தெறிக்க வைத்ததால் அந்த அமுதம் சிதறி நாலாபுறமும் பாய்ந்தது. அந்த அமுதம் பாய்ந்தோடிய இடங்களில் எல்லாம் லிங்கங்கள் தோன்றி ஆலயங்கள் உருவானது. அமுத கலசம் தங்கிய இடத்துக்கு கும்பகோணம் என்ற பெயர் ஏற்பட்டது.

    மாசி மாதத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிப்புகள் உள்ளன. எனவேதான் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் கும்பகோணம் எப்போதும் திருவிழா கோலமாக மாறிவிடும். அதிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் திருவிழா நாடெங்கும் உள்ள பக்தர்களை கும்பகோணத்துக்கு வரவழைப்பதாக இருக்கும்.

    கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருந்தாலும் பிரபஞ்சம் தோன்ற காரணமாக அமைந்த கும்பேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்தான் முதன்மையானதாக கருதப்படுகிறது. கரும்பாயிரம் விநாயகரை வழிபட்ட பிறகு நீங்கள் அடுத்து அருகில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு தான் வர வேண்டும்.

    கும்பகோணம் நகரின் நடுநாயகமாக இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தை கும்பகோணத்தின் தலைமை கோவில் என்றே அழைக்கிறார்கள். 128 அடி உயர ராஜகோபுரத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றால் மிக பிரமாண்டமான ஆலயத்தை காணலாம். ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் வரலாற்று பின்னணி கொண்டது.

    ஒவ்வொரு சன்னதியும் ஒரு கதை சொல்லும் மகத்துவம் மிக்கது. எனவே கும்பேஸ்வரர் ஆலயத்தை அவசரம் அவசரமாக வழிபடாமல் பொறுமையாக, நிதானமாக நடந்து வழிபட்டால் பல புதிய தகவல்களை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

    விநாயகர், முருகர், அம்பாள், அகத்தியர், சப்த கன்னியர், வீரபத்ரர், லட்சுமி நாராயண பெருமாள் என்று பல்வேறு கடவுளர்களுக்கும் தனித்தனி சன்னதிகள் நிரம்பிய ஆலயம். குறிப்பாக மங்களாம்பிகை சன்னதி அதிக சிறப்பு வாய்ந்தது. புன்னகை ததும்ப காட்சி அளிக்கும் மங்களாம்பிகை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து விடுவது போல இடது காலை சற்று முன்னே வைத்து நிற்கும் அழகே அழகு.

    அம்பிகையின் நிகரற்ற அருள்பீடமாக மங்களாம்பிகை சன்னதி கருதப்படுகிறது. கருவறையில் கும்பேஸ்வரர் கிழக்கு நோக்கிய வண்ணம் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அமுதத்தையும், மணலையும் குழைத்து உருவாக்கப்பட்ட லிங்கமாக இந்த லிங்கம் திகழ்கிறது. எனவே கவசம் சாத்தப்பட்டுள்ள இந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்துக்கு பவுர்ணமி தோறும் புனுகு சட்டம் சாத்துகிறார்கள்.

    கும்பேஸ்வரர் ஆலய கருவறை லிங்கத்தில் இருந்து தெய்வீக கதிர்வீச்சு தினமும் வெளியில் வருவதாக பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. அந்த தெய்வீக கதிர்வீச்சை பக்தர்களில் சிலர் அடிக்கடி உணர்வதும் உண்டு.

    ஆதி கும்பேஸ்வரரை வழிபட்டால் எங்கு செய்த பாவமும் இல்லாமல் போய் விடும் என்பது ஐதீகமாகும். கும்பேஸ்வரர் ஆலயம் நம் வாழ்க்கை பயணத்துடன் தொடர்புடையது. அதாவது மனித குலத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சக்தியை இந்த ஆலயம் கொண்டிருப்பதாக புராணங்களில் புகழப்பட்டுள்ளது. எனவேதான் கும்பகோணத்துக்கு யாத்திரை வருபவர்களுக்கு இந்த ஆலயத்தில் முதலில் வழிபட்டு தொடங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    பிரபஞ்சத்தில் பிரளயம் ஏற்பட்ட பிறகு பிரம்மன் கும்பகோணத்தில்தான் தனது படைப்பு தொழிலை முதல் முதலாக தொடங்கினார். இதற்காகவே சிவபெருமான் இந்த தலத்தில் லிங்கத்துக்குள் உறைந்து சுயம்பு வடிவமாக மாறினார் என்று சொல்வார்கள். இதன் மூலம் உயிர் படைப்பின் தொடக்கமாக இந்த தலம் கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு பக்தரும் இந்த தலத்தில் வந்து வழிபடுவது என்பது பிறவி கடமையாக சொல்லப்படுகிறது.

    உயிர்களின் தொடக்கத்துக்கு மூலமாக திகழும் இந்த தலத்தில் வழிபட்டால் வாழ்வின் சவால்களை சமாளிக்கும் ஆன்மீக சக்தி கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும். கும்பேஸ்வரரை மனமுருகி வழிபட்டால் உடல் பிரச்சினைகள் மட்டுமல்ல மன பிரச்சினைகளும் நீங்கும் என்பது லட்சக்கணக்கான பக்தர்களின் அனுபவமாகும்.

    இந்த தலத்தில் சிவபெருமான் தனது 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளை மங்களாம்பிகைக்கு கொடுத்து பிரதிஷ்டை செய்ததாக குறிப்புகள் உள்ளன. அம்பாள் ஏற்கனவே 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளை கொண்டவள். சிவனின் 36 ஆயிரம் மந்திர சக்திகளையும் சேர்த்து 72 ஆயிரம் கோடி மந்திர சக்தி கொண்டவளாக மங்களாம்பிகை திகழ்கிறாள்.

    எனவே மங்களாம்பிகையை இந்த தலத்தில் மனமுருக வழிபட்டால் மங்களம் உண்டாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும், சந்திரன் குருவுடன் இணையும் மாசி மாத பவுர்ணமி நாளில் வரும் மகாமக பெருவிழா இந்த ஆலயத்துடன் முதன்மையான தொடர்பு கொண்டதாகும். எனவே மகாமக குளத்தில் புனித நீராடி யார் ஒருவர் கும்பேஸ்வரரை மனமுருக வழிபாடுகள் செய்கிறாரோ அவருக்கு நினைத்ததெல்லாம் நடக்கும்.

    சித்தர்களில் குள்ளமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர் இங்குதான் ஐக்கியமாகி இருக்கிறார். அவர் கும்பேஸ்வரரையும் மங்களாம்பிகையையும் தியானம் செய்து வழிபட்டு நிகரற்ற ஆற்றல்களை பெற்றார். அதனால்தான் சீதையை மீட்க வந்த ராமருக்கு அவரால் இந்த தலத்தில் நல்ல வழியை காட்ட முடிந்தது. அதை உணர்த்தும் வகையில் அகத்தியர் இந்த ஆலயத்தில் தனி சன்னதியில் இருக்கிறார்.

    அந்த சன்னதி முன்பு அமர்ந்து அகத்தியரை நினைத்து தியானம் செய்தால் அவரது அருள் அலைகள் பெருகி வருவதை உணர முடியும். அதுபோல காஞ்சி மகாபெரியவர் இந்த தலத்தில் அம்பாளை பார்த்து அமர்ந்து தியானம் செய்த இடம் இங்கு சிறப்பான இடமாக கருதப்படுகிறது. அங்கு அமர்ந்து தியானம் செய்தால் மனம் அமைதி அடைவதாக சொல்கிறார்கள்.

    படைப்பு தொழிலை தொடங்கிய பிரம்மனிடம் சிவபெருமான், "உமக்கு வேறு என்ன வேண்டும்?" என்று கேட்டாராம். அப்போது பிரம்மன், "மனிதர்கள் பல்வேறு வகையான பாவங்களை செய்து விடுகிறார்கள். அந்த பாவங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ப சில வரங்களை தர வேண்டும்" என்று கேட்டாராம். அதன்படி சிவபெருமான் சில வரங்களை கொடுத்துள்ளார்.

    * கும்பேஸ்வரரை ஒரு நாள் தரிசித்தாலே நற்பெயர் கிடைக்கும். தொடர்ந்து தரிசித்தால் மோட்சம் கிடைக்கும்.

    * கும்பேஸ்வரரை கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தினத்தன்று நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நிறைவான வாழ்க்கை பெற்று முக்தியை பெற முடியும்.

    * கும்பேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணி செய்பவர்களுக்கு வேண்டுபவை எல்லாம் தாமதமின்றி கிடைக்கும்.

    * மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று கும்பேஸ்வரரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் உள்பட முக்கிய தோஷங்கள் அனைத்தும் பனி போல் விலகி விடும்.

    * மாசி மாத விழா நாட்களில் கும்பேஸ்வரரை வழிபட்டால் குலவிருத்தி உண்டாகும்.

    * மகாமகம் குளத்தில் நீராடி கும்பேஸ்வரரை வழிபட்டில் அஸ்வமேத யாக பலன்களுக்கு நிகரான பலன்கள் வந்து சேரும்.

    * கும்பேஸ்வரர் ஆலயத்தில் கொடி மர வழிபாட்டால் தொடங்கி இறுதி வரை ஆகம விதிகளுடன் உரிய வழிபாட்டை செய்தால் எல்லா பாவங்களும் நீங்கி விடும்.

    -இப்படி பல்வேறு பலன்களை தருவதாக கும்பேஸ்வரர் பிரம்மனிடம் வாக்களித்து இருப்பதால் நிச்சயம் இந்த தலத்து வழிபாடு வாழ்க்கை மேம்பாட்டுக்கான வழிபாடாக இருக்கும்.

    சுயம்பு வடிவமாகவும், சக்தி பீடமாகவும் இந்த தலத்து கும்பேஸ்வரரும், மங்களாம்பிகையும் இருப்பதால் இவர்களை வழிபடும் அனைவருக்கும் மங்களம் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூக்களை மாலையாக அணிவித்து வழிபட்டால் வாழையடி வாழையாக வம்சவிருத்தி உண்டாகும். செம்பருத்தி பூவால் மங்களாம்பிகைக்கு மகுடம் சூட்டினால் குபேரன் ஆவான் என்று பிருமாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    இப்படி கும்பேஸ்வரர் ஆலயத்தில் எத்தனையோ பலன்களை உங்களால் பெற முடியும். இங்கு வழிபட்ட பிறகு கும்பகோணத்தை சுற்றியுள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட தொடங்கலாம்.

    கரு உருவாவது முதல் வாழ்க்கையின் நிறைவு வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் என்ன நடக்கும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டதாக கும்பகோணம் பகுதி ஆலயங்கள் உள்ளன. அந்த வகையில் கருவை உருவாக்கும் ஆலயமான கருவளர்ச்சேரி ஆலயத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • பத்து நாட்கள் திலகர் வசித்த இல்லத்தில் ஓர் அறை விவேகானந்தர் தங்கியிருந்தார்.
    • அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற பலவகைத் தத்துவப் போக்குகள் பாரதம் முழுவதும் பரவியிருக்கின்றன.

    இப்போது நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிற விநாயகர் சதுர்த்தி விழாவில் இத்தகைய உற்சாகமான போக்கு தோன்றக் காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? பகவத் கீதைக்கு உரையெழுதிய பால கங்காதர திலகர். அவருக்கு மதப்பற்றும் ஆன்மிகப் பற்றும் மிகுதி.

    ஒருமுறை ரெயில் பயணத்தில் தற்செயலாக சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார் அவர். விவேகானந்தரின் தோற்றமும் பேச்சும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

    அவரைத் தம் இல்லத்தில் ஓர் அறையில் தங்குமாறு வேண்டினார் திலகர். பத்து நாட்கள் திலகர் வசித்த இல்லத்தில் ஓர் அறை விவேகானந்தர் தங்கியிருந்தார். அந்த அறையை விவேகானந்தர் தங்கி தியானம் செய்த இடம் என்பதால், புனிதமானது என்று கருதியது திலகரின் ஆன்மிக மனம்.

    இந்தியர்களை ஒருங்கிணைத்தால்தான் சுதந்திரம் பெற முடியும். விவேகானந்தர் வழிதான் சரியானது. இந்தியர்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்பது தான் சாத்தியமானது.

    மொழிகளாலும் மாநிலங்களாலும் இந்திய மக்கள் பிரிந்திருந்தாலும் ஆன்மிகம் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய ஆன்மிகம் மொழிப் பிரிவு, எல்லைப் பிரிவு இவைகளைக் கடந்து பரவியிருக்கிறது.

    வடக்கே காசிக்குச் செல்பவர்கள் தெற்கே ராமேஸ்வரத்திற்கும் வருகிறார்கள். ராமாயணமும் மகாபாரதமும் எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கின்றன. பகவத் கீதை எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

    ஆன்மிகம் இந்தியர்களின் ஆழ்மனத்தில் வேரூன்றியிருக்கிறது. இந்தியாவில் நாத்திகச் சிந்தனைகள் மிக மிகக் குறைவு.

    எனவே விவேகானந்தர் வழியில் ஆன்மிகத்தின் மூலம் இந்தியர்களை ஒன்றிணைப்பதே சரி, அதுவே எளிதில் சாத்தியமாகக் கூடியது எனத் திலகர் முடிவெடுத்தார். அப்படியானால் இந்தியர்களை மிக எளிதில் ஒன்றிணைக்கக் கூடிய ஆன்மிகக் கொள்கை எது எனவும் யோசனையில் ஆழ்ந்தார்.

    அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற பலவகைத் தத்துவப் போக்குகள் பாரதம் முழுவதும் பரவியிருக்கின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட தத்துவம் சார்ந்து இந்தியர்களை ஒருங்கிணைப்பது சிரமமாக இருக்கும். மற்ற தத்துவப் பிரிவினர் மனத்தால் இணைவதில் சங்கடம் எழும்.

    ஆனால் மக்கள் போற்றித் துதிக்கும் ஏதேனும் ஒரு கடவுள் வடிவத்தின் மூலம் ஒற்றுமையை உண்டுபண்ணி விடலாம்.

    அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்துமதம் எல்லா வகை வழிபாட்டுக்கும் இடம்தரும் பரந்த மனப்பான்மை கொண்ட மதம். சிவனை வணங்குபவர்கள், திருமாலை வணங்குபவர்கள் என தெய்வ வடிவங்களில் தங்களுக்கு உகப்பானதை ஏற்றுத் தொன்று தொட்டு அந்த மரபில் வழிபடுபவர்கள் பற்பலர்.

    அவர்களை ஒரே தெய்வ வடிவத்தைப் போற்றுவதன் மூலம் இணைப்பது எப்படி? அந்த வகையில் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் வகையில் ஒரு தெய்வ வடிவம் வேண்டுமே?

    திலகர் மனத்தில் ஒளிவீசும் விநாயகர் உருவம் தோன்றியது. விநாயகர்தான் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் கடவுள்.

    வைணவர்களும் கூடத் தும்பிக்கை ஆழ்வார் என விநாயகரைக் கொண்டாடுகிறார்கள். இந்து மதத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் எழுதும்போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் தொடங்குகிறார்கள்.

    சத்ரபதி சிவாஜி காலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஓரளவு பிரபலமாகியிருந்தது.

    `நாம் விநாயகர் சதுர்த்தி விழாவை தேசிய விழாவாக மறுபடி உருவாக்குவோம். மக்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்போம்.

    ஆங்கிலேய ஆட்சி நீங்கி நல்லாட்சி மலர இது ஒன்றே வழி. இந்திய மக்களை ஒருங்கிணைத்துவிட்டால் சுலபமாக சுதந்திரம் பெற்றுவிட முடியும்.

    சரியாகச் சிந்தித்த திலகர் சரியாகவே முடிவெடுத்தார். விநாயகர் சதுர்த்தி விழாவை தேசமெங்கும் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தியாவின் எல்லாப் பிரதேசங்களிலும் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரசாரம் செய்யலானார்.

    தாம் முன்னின்று நடத்திய முதல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒரு புனிதமான இடத்தில் இருந்து தொடங்கி நடத்த விரும்பினார். அத்தகைய மிகப் புனிதமான இடம் அவர் இல்லத்திலேயே இருந்தது. சுவாமி விவேகானந்தர் பத்து நாட்கள் தங்கியதால் புனிதமடைந்த அறைதான் அது.

    அந்த அறையிலிருந்தே தம் முதல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அவர் தொடங்கினார். அவ்விதம் தொடங்கியதுதான் நாடெங்கும் நிகழும் இப்போதைய விமரிசையான விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்குத் தொடக்கத்தில் போடப்பட்ட பிள்ளையார் சுழி!...

    மகாபாரதத்தை, வியாசர் சொல்லச் சொல்ல தந்தத்தால் எழுதி நமக்களித்தவர் பிள்ளையார்தான். பலவகைப் பிள்ளையார்கள் இருக்கிறார்கள்.

    கணிப்பொறியைக் கையில் வைத்து இயக்கும் கணிப்பொறி விநாயகர் கூட இப்போது காட்சிப் படுத்தப்படுகிறார். கணிப்பொறி விநாயகருக்கு ஒரு சவுகரியம். அவரிடம் `மவுஸ்` ஏற்கெனவே உண்டு!

    விநாயகரைப் பற்றிப் பல்வேறு தலங்களில் பற்பல கதைகள் உலவுகின்றன. `கடுக்காய்ப் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் திருவாரூருக்குத் தெற்கே திருக்காறாயில் என்ற திருத்தலத்தில் காட்சி தருகிறார்.

    அந்தப் பிள்ளையாருக்குக் கடுக்காய்ப் பிள்ளையார் எனப் பெயர்வந்த கதை சுவாரஸ்யமானது.

    அந்த ஊருக்கு ஒரு வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக வாங்கிக் கொண்டு வந்தான். ஜாதிக்காய்க்கு வரி உண்டு. அதனால் அவன் டோல்கேட் என்கிற சுங்கச் சாவடியில் கடுக்காய் மூட்டை என்று பொய்சொல்லி ஏமாற்ற எண்ணினான்.

    அதிகாரிகள் ஏமாற வேண்டுமே? அதற்காக வண்டியில் முன்னாலும் பின்னாலும் கடுக்காய் மூட்டைகளைப் போட்டுக் கொண்டு ஜாதிக்காய் மூட்டைகளை மறைத்து எடுத்துக் கொண்டு வந்தான்.

    அந்த விதமாக வரி கொடுக்காமல் ஏமாற்றி ஜாதிக்காய் மூட்டைகளை ஊருக்குள் கொண்டுவந்து விட்டான் வியாபாரி.

    பிள்ளையார் அநீதி செய்தால் தண்டனை கொடுத்து விடுவாரே? அதனால் உண்மையாகவே எல்லா மூட்டைகளிலும் இருந்த ஜாதிக்காயை இரவோடு இரவாக கடுக்காயாகவே மாற்றிவிட்டார் பிள்ளையார்.

    மறுநாள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வியாபாரி, திகைத்துப் போனான். இனி என்ன செய்வது? ஏராளமான பண நஷ்டம் ஏற்படுமே?

    கடுக்காய் மட்டும் மறுபடி ஜாதிக்காயாக மாறினால் அதற்குண்டான வரியும் அதற்குமேல் அபராதமும் கட்டுவதாக வேண்டிக் கொண்டான் அவன்.

    அவன் பிரார்த்தனை பிள்ளையார் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தியது. மறுபடி கடுக்காயை ஜாதிக்காயாக மாற்றிவிட்டார் பிள்ளையார்.

    மகிழ்ச்சி அடைந்த வியாபாரி ஒப்பந்தப்படி வரி செலுத்திவிட்டு பக்தியுடன் பிள்ளையாரை வணங்கினான் என்கிறது கடுக்காய்ப் பிள்ளையார் கதை. பிள்ளையாருக்கு யாராலும் கடுக்காய் கொடுத்துவிட முடியாது!

    இப்படியாக இனிக்கும் கொழுக்கட்டையைக் கையில் வைத்திருக்கும் பிள்ளையாருக்கு அந்த ஊரில் கசக்கும் கடுக்காய், பெயரில் அமைந்துவிட்டது!

    `அவ்வையாருக்குப் பிள்ளையார் மேல் மிகுந்த பக்தி. தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அதை விரும்பாத அவ்வையார் பிள்ளையாரை வேண்டித்தான் முதுமையைப் பெற்றார்.

    அவ்வைப் பாட்டி ஊர் ஊராகச் சுற்றிப் பல்வேறு இடங்களுக்குச் சென்றாள். மன்னர்களைச் சந்தித்ததோடு மக்களையும் சந்தித்தாள். தமிழையும் ஆன்மிகத்தையும் எல்லா இடங்களிலும் பரப்பினாள். உயர்ந்த நீதிக் கருத்துகளை அழகிய வெண்பாக்களில் தொகுத்துத் தந்தாள்.

    `வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

    மாமலராள்

    நோக்குண்டாம் மேனி நுடங்காது -

    பூக்கொண்டு

    துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

    தப்பாமல் சார்வார் தமக்கு`

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

    நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -

    கோலம்செய்

    துங்கக் கரிமுகத்துத் தூமணியே

    நீயெனக்கு

    சங்கத் தமிழ் மூன்றும் தா

    என்றெல்லாம் அவ்வைப் பாட்டி தன் இஷ்ட தெய்வமான விநாயகரைப் பாடித் துதித்திருக்கிறாள்.

    `சீதக் களப செந்தாமரை` எனத் தொடங்கும் அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல் யோக சாஸ்திரம் முழுவதையும் செய்யுளில் சொல்கிறது. தமிழையும் ஆன்மிகத்தையும் ஒருசேர வளர்த்த பெருமை அவ்வைக்குரியது.

    மகாகவி பாரதியார் பிள்ளையார்மேல் `விநாயகர் நான்மணி மாலை` எழுதி அவரைத் தம் கவிதையில் போற்றுகிறார்.

    பிள்ளையார் தொந்தியும் தொப்பையுமாக யானை முகத்துடன் அழகே வடிவாக ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி ஏன் அசையாமல் இருக்கிறாய் என்று நாம் சிலரைக் கேட்கிறோம்.

    சிவன் பார்வதியின் மூத்த பிள்ளையான பிள்ளையாரை மரியாதையோடு ஆர் விகுதி சேர்த்துப் பிள்ளையார் என வழங்குகிறோம். நமக்கு வரும் விக்கினங்களை அழிப்பதால், அவரை விக்னேஸ்வரர் என்கிறோம்.

    எந்த பூஜை செய்தாலும் முதலில் அவருக்கு பூஜை செய்துவிட்டுத் தான் தொடங்குகிறோம். எப்போதும் முதல் பூஜை அவருக்குத்தான்.

    தமிழகத்தில் அரச மரத்தடியில் தெரு மூலைகளில் என எல்லா இடங்களிலும் பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். இந்த அளவு பிள்ளையார் கோவில்கள் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை.

    தமிழ் மக்கள் விநாயகர்மேல் அளவற்ற பக்தி உடையவர்கள். பல அரச மரத்தடிகளில் மேற்கூரை கூட இல்லாமல் பிள்ளையார் காட்சி தருகிறார்.

    எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் நாம் எழுதத் தொடங்குகிறோம். மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்களை எழுதினால்கூட அந்தக் காகிதத்தில் பிள்ளையார் சுழிபோட்டுப் பிறகுதான் வாங்கவேண்டிய பொருட்களை எழுதுகிறோம்!

    நம் சுழி எப்படியிருந்தாலும் பிள்ளையார் அதைச் சரிசெய்து விடுவார் என்பது நம் நம்பிக்கை.

    `நம்பிக்கை கொண்டிங்கு நாளும்

    தொழுவோர்க்கு

    தும்பிக்கை நாதன் துணை!'

    என்கிறது புகழ்பெற்ற ஈரடி வெண்பா ஒன்று. விநாயகரை வழிபடுவோம். விக்கினங்கள் நீங்கப் பெற்று வாழ்வில் உயர்வோம்!

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.

    • அத்தனை சிறப்பு வாய்ந்த சிவத்தலமா அது என நிறைய பேர் நினைக்க கூடும்.
    • உலகின் முதல் சிவன் ஆலயம் உத்திரகோசமங்கை சிவாலயம் தான்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.

    உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி கிடைக்குமா? அத்தனை சிறப்பு வாய்ந்த சிவத்தலமா அது என நிறைய பேர் நினைக்க கூடும்.

    வாருங்கள்! பதிவின் மூலம் உத்திரகோசமங்கை தலத்தின் பழமையினையும், தலச்சிறப்புகளையும் பற்றி பார்ப்போம்.

    "மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழியின் மூலம் உத்திரகோசமங்கை சிவாலயத்தின் புராதனத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

    மதுரையின் அரசி, ஏறிய பல்லக்கு இறங்காத நாச்சியார் மீனாட்சியின் சொந்த ஊர் எது என்றால் மதுரை என்பார்கள்.

    காவிரி சூழ் சோலைகளின் நடுவில் கருமணி போல் துயிலும் ரெங்கநாதரின் சொந்த ஊர் எது என கேட்டால் ஸ்ரீரங்கம் என்பார்கள்.

    ஆனைத்தோலினை மார்பிலும், புலித்தோலை இடையிலும் அணிந்து மேனியெங்கும் வெண்ணீறை பூசி ஆலகால விஷத்தை அருந்தியதால் கண்டம் நீலமாகிய நீலகண்டனான ஆலவாய் அழகனின் சொந்த ஊர் எது என கேட்டால் நிறைய பேர் கயிலாயம் என்பார்கள். சிலர் காசி என்பார்கள். பலர் ராமேஸ்வரம் என்பார்கள்.

    அதிகம் படித்த பலரோ தென்னாடுடைய சிவன் அவர். எந்நாட்டவருக்கும் இறைவன் அவர். அதனால் எல்லா நாடும் அவருடைய சொந்த நாடு தான் என்பார்கள்.

    ஆனால் உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என பெருமையோடு சொல்கிறது சிவ புராணம்.

    உலகின் முதல் சிவன் ஆலயம் உத்திரகோசமங்கை சிவாலயம் தான்.

    மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் சிவனார் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தினார். திருவிளையாடல் புராணத்தில் வரும் 'வலை வீசி மீன் பிடித்த படலம்' எனும் நிகழ்வு உத்திரகோசமங்கை தலத்தில்தான் நடந்தது.

    உத்திரகோசமேங்கை கோவில் தெப்ப குளத்தில் வாழும் மீன்கள் அனைத்தும் கடல் நீரில் மட்டும் வாழும் மீன்கள் என்பதே சிவனார் நடத்திய திருவிளையாடலுக்கு அத்தாட்சியாக இன்றளவும் கருத்தில் கொள்ளலாம்.

    ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் ஒன்பது என அறியப்படாத, வகைப்படுத்த படாத காலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே கிரகங்களாக வகைப்படுத்தப்பட்டு இருந்தன.

    நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோவில் உத்திரகோசமங்கை என்பதால் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டுமே கிரக மேடையில் அமைக்கப்பட்டு இருப்பதன் மூலம் உத்திரகோசமங்கை தலத்தின் புராதனத்தை நம்மால் எளிதில் உணரலாம்.

    கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான சிவ ஆலயம்.

    ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம் உத்திரகோசமங்கை ஆலயம் ஆகும்.


    சுரேஸ்வரன் அய்யாப்பழம்

    சுரேஸ்வரன் அய்யாப்பழம்


     அரனின் திருவடி, திருமுடியை காண்பதற்காக நடந்த பந்தயத்தில் பிரம்மனுக்கு ஆதரவாக பொய் சாட்சி கூறியதால் மற்ற எல்லா சிவாலயங்களிலும் பூக்களை சார்த்தி வழிபடும் போது சாபம் பெற்ற பூ என தாழம்பூவை மட்டும் ஒதுக்கி விடுவார்கள்.

    உத்திரகோசமங்கை மூலவரான மங்களேசுவரருக்குத் தாழம்பூ சார்த்தப்படுகிறது.

    இதன் மூலம் பிரம்மனும் பெருமாளும் அடி முடி தேடிய யுகத்திற்கு முன்பே இந்த கோவில் இருந்திருக்கிறது என இந்த ஆலயத்தின் தொன்மையினை தாழம்பூவை மூலவருக்கு சார்த்துவதன் மூலம் அறிய முடிகிறது.

    உத்திரகோசமங்கை சிவாலயத்தில் தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது.

    இத்தல மூலவர் 'மங்களநாதர்' சுயம்புவாக இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

    சுமார் 3,300ஆண்டுகள் பூத்து, காய்த்து கொண்டிருப்பது இத்தல விருட்சத்தின் சிறப்பம்சமாகும்.

    சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் உத்திரகோசமங்கை திருத்தலம் ஆகும்.

    உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை - மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

    உத்தரம் - உபதேசம் அல்லது விளக்கம்.

    கோசம் - ரகசியம்

    மங்கை - பார்வதி.

    பார்வதிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்ததால் உத்தரகோசமங்கை என இத்தலம் பெயர் பெற்றது.

    எதற்காக இந்த தலத்தில் வைத்து பார்வதி தேவிக்கு சிவனார் வேத உபதேசம் செய்தார் என்பதை திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்தி எட்டாவது திருவிளையாடலாக வரும் வலை வீசிய படலம் நிகழ்வின் மூலம் அறியலாம்.

    கைலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி கேட்டு கொண்டதற்கு வேதத்தின் உட்பொருளை பார்வதி தேவிக்கு விவரித்துக் கொண்டிருந்தார்.

    சிவபெருமான் சிரத்தையோடு சொல்லும் வேதபாராயண விளக்கத்தை கவனிக்காமல் உமாதேவி சுனையில் துள்ளி விளையாடும் மீனை கவனித்து கொண்டிருந்தார்.

    பொதுவாக கணவன், மனைவி சம்பாஷணையின் போதோ அல்லது மற்றவர்களோடு உரையாடும் போதோ பேசுவதை கவனிக்காமல் இருந்தால் பேசுபவர் கோபப்படுவது இயல்பு.

    தான் சொல்லும் வேதத்தின் பொருளை கவனிக்காமல் மீன்கள் துள்ளி விளையாடுவதை கவனித்ததால் வேதத்திற்கும், நாதத்திற்கும் நாதனான வேதநாதன் தனது மனைவியான வேதநாயகியை சினத்தோடு மீனவ பெண்ணாக பூலோகத்தில் பிறக்கும் படி சபிக்கிறார்.

    தாயாரை தந்தையான சிவன் சபித்ததை அறிந்த பிள்ளைகள் கணபதியும், கந்தனும் வேகமாக கயிலை மலைக்கு கோபத்தோடு வருகின்றனர்.

    பரமசிவனார் அச்சமயத்தில் கயிலையில் இல்லை. நந்தி தேவர் கயிலையை பொறுப்பு அதிகாரியாக காத்து கொண்டு இருக்கின்றார்.

    எங்க அப்பன் பரமசிவத்துக்கு வேற வேலையே இல்லை. எந்த நேரமும் எங்கம்மை பார்வதியோட சண்டை போட்டு எங்கம்மைக்கு சாபம் கொடுப்பதே அவரோட வேலையா போச்சு.

    முன்னாடி ஒருக்கா சண்டை போடும் போது தக்க பிரஜாதிபதியோட மகளா பொறந்து வான்னு சாபம் போட்டாரு.

    கல்யாணம் பண்ணி கைலாச மலைக்கு கூட்டிட்டு வந்து குடித்தனம் நடத்தையில தக்கராஜன் நடத்துமா யாகத்துக்கு எங்கம்ம போயிட்டாங்கன்னு உயிரோட கொளுத்தி புட்டாரு எங்கம்மைய...

    இன்னொரு வாட்டி எங்கம்மா ஏதோ தப்பு பண்ணிட்டாங்கன்னு சொல்லி மயிலாப்பூரில், சங்கரன்கோயிலில் போய் தவம் பண்ணுன்னு அனுப்பி விட்டுட்டாரு.

    இவரோட கொண்டையில மறைச்சு வைச்சிருக்குற கங்கம்மாவோட குடித்தனம் நடத்துறதுக்காக எங்கம்மைய இந்த வாட்டி கடப்புறத்து பொண்ணா கயற்கண்ணி பேருல பொறந்து வான்னு சாபம் கொடுத்து விட்டுறுக்காரு.

    இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும். கணேசண்ணே.. அந்த வேதம் அத்தனையும் எடுத்து கடலில் போட்டுட்டு வருவோம்.. அப்ப தான் நம்ம அப்பாவோட ஆட்டம் கொஞ்சம் அடங்கும் என கந்தவேள் தனது அண்ணனான கணேசனோடு கூறி நந்திதேவர் தடுத்தும் கேட்காமல் வேதங்களை கந்தனும், கணபதியும் கடலில் வீசி எறிகின்றனர்.

    பாருலோக மக்களுக்கு படியளந்து விட்டு கைலாசம் வந்த பரமசிவம் நடந்த சம்பவங்களை அறிந்து கோபம் கொள்கிறார்.

    வேதங்களை கடலில் வீசி எறிந்த கந்தனை, கணபதியை போரிட்டு தடுக்காத நந்தியை சுறா மீனாக பிறக்கும் படி சபிக்கிறார் சிவன்.

    சுறாவாக மாறிய நந்தி தேவர் கடலில் மிதக்கும் வேதங்கள் அசுரர்கள் கையில் சிக்காதவாறு காவல் புரிகிறார்.

    முழு முதற்கடவுள் கணபதியை யாரும் சபிக்க முடியாது. அப்படி சபித்தால் சபித்தவரையே அந்த சாபம் பீடித்து விடும் என்பதால் சிவனார் கணபதியை சபிக்காமல் துடுக்காக பேசிய கந்த கடவுளை வேளாளர் வீட்டில் ஊமை குழந்தையாய் பிறக்கும் படி சபிக்கிறார்.

    சங்கரனான சிவனின் சாபத்திற்கு பின் இருக்கும் திருவிளையாடல்கள் அனைத்தையும் அவர் தானே அறிவார்.

    வேதங்கள் கடலில் மிதந்து கயற்கண்ணி என்ற பெயரில் பார்வதி தேவி வளர்ந்து வரும் உத்திரகோசமங்கை தலத்திற்கு வருகின்றது.

    கயற்கண்ணி தேவியின் உறவினர்கள் மீன் பிடிக்க செல்லும் போது சுறா வடிவில் இருக்கும் நந்தி தேவர் அவர்களை தாக்குகிறார்.

    சுறாவை பிடித்து கரைக்கு கொண்டு வரும் வீரனுக்கு தனது மகளான கயற்கண்ணியை மணம் முடித்து தருவதாக கயற்கண்ணியின் தந்தை செம்படவத்தலைவன் அறிவிக்கின்றார்.

    வலைவாணன் என்ற பெயரில் வரும் சிவபெருமான் சுறா வடிவில் இருந்த நந்தி தேவரை அடக்கி கடலில் மிதந்த வேதங்களை கைப்பற்றி கரைக்கு வருகிறார்.

    கரைக்கு வந்ததும் மீனவரான செம்படவத்தலைவன் தான் அறிவித்த படி தனது மகளான கயற்கண்ணியை, சிவனுக்கு மணம் முடித்து வைக்கிறார்.

    மணம் முடித்த பின் உத்திரனான சிவன் வேதங்களை கோசம் எனும் உபதேசம் மூலம் மங்கையான பார்வதி தேவிக்கு உபதேசித்ததால் இந்த தலம் உத்திரகோசமங்கை என அழைக்கப்படுகிறது.

    மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர். தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.

    இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

    மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே "முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன".

    அழகும் ஆன்மிகமும் சிறந்து விளங்கும் இத்தலம் ராமநாதபுரம் அருகே அமைந்துள்ளது.

    இத்தலத்தின் மரகத நடராசர் குறித்த வியப்பூட்டும் தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    • உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்பதால் சத்தான உணவுக்கு குறைபாடு நமது நாட்டில் உண்டாகிறது.
    • “இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு” போன்ற எளிய பழமொழிகள் நம் முன்னோர்களின் ஆரோக்கிய சிந்தனைகள்.

    "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்பதைப்போல உயிர் நீடித்து இருப்பதற்கு உடலில் ஆரோக்கியம் அவசியம். அத்தகைய ஆரோக்கியத்தை எட்டிப்பிடிக்க நாம் உண்ணும் உணவே மருந்தாக இருப்பது நல்லது. ஆனால் மருந்தையே முக்காலமும் உணவாக உட்கொள்ளும் இன்றைய நவீன வாழ்வியலில் நலத்தைப் பயக்கும் உணவினைப் பற்றியும் அவற்றின் இன்றியமையாமைப் பற்றியுமான விழிப்புணர்வு சற்று குறைவு என்றே சொல்லலாம்.

    உணவில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும் அதன் இன்றியமையாமைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தேசிய ஊட்டச்சத்து வாரம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. நோய் இல்லாத சமுதாயத்தை உண்டாக்கிட வலிமையான உடலும், அமைதியான மனமும் அவசியம். அதுவே ஆரோக்கியமான சமுதாயத்தை உண்டாக்கி நாட்டினை வளப்படுத்தும். அத்தகைய ஆரோக்கியமான சமூகத்தை உண்டாக்கிட ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம்.

    ஊட்டச்சத்துக்கு அடிப்படையான சரிவிகித உணவு நம் உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை என்கிறது இன்றைய நவீன அறிவியல். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து இவற்றை முறையான அளவு எடுத்துக்கொள்வதில் இருந்தே ஆரோக்கியத்தின் பயணம் துவங்கிவிடுகிறது. இவை மட்டுமின்றி தாது உப்புச்சத்துக்கள், வைட்டமின்கள் ஆகிய நுண் ஊட்டச்சத்துக்களின் பங்கும் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமைகிறது.

    இன்றைய நவீன அறிவியல் ஊட்டச்சத்தின் மகத்துவத்தினை விளக்குவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மருத்துவ முன்னோர்கள் அதன் மகத்துவத்தை விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, வள்ளுவன் கூறிய மிகினும் குறையினும் நோய் செய்யும் என்ற குறளில் சித்த மருத்துவ அடிப்படைக்கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை உண்ணும் உணவின் மூலம் சமநிலையில் இருக்க வலியுறுத்தி இருப்பது ஆச்சரியம் தான். மேற்கூறிய சத்துக்களில் எவையேனும் ஒன்றை மட்டுமே அதிகம் சேர்த்துக்கொள்வது நோய்க்கு ஆதாரம்.

    ஊட்டச்சத்துக்கான பட்டியல் என்பது மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து இவைகள் மட்டுமின்றி இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், அயோடின், பொட்டாசியம், துத்தநாகம், செம்புச்சத்து போன்ற உடலுக்கு அத்தியாவசிய கனிமச்சத்துக்களையும், உடலின் செயல்பாடுகளுக்கு தேவையான ஏ, பி, சி, டி, ஈ, கே போன்ற வைட்டமின்களையும் உள்ளடக்கியது.

    உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்பதால் சத்தான உணவுக்கு குறைபாடு நமது நாட்டில் உண்டாகிறது. சமூக பொருளாதார நிலையும், முழுமையான கல்வியறிவின்மையும், விழிப்புணர்வு இல்லாமையும் கூட ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாகின்றது. இதனால் புரதச்சத்து குறைபாடு, இரும்புச்சத்து குறைவால் ரத்த சோகை , வைட்டமின் ஏ குறைவால் கண் பார்வை குறைபாடு போன்ற பல உடல்நலக்கோளாறுகள் முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஏற்பட்டு அவர்களின் ஆரோக்கியத்திற்கு சவாலை ஏற்படுத்தும்.

    ஊட்டச்சத்து குறைபாட்டினால் உடல் எடை குறைவு, தசை சூம்பல், ரத்தசோகை, அயோடின் குறைபட்டால் தைராய்டு சுரப்பு கோளாறு ஏற்படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதிக ஊட்டச்சத்தினால் அதிக உடல் எடை ஏற்படுகிறது. இந்தியாவில் 7.5 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதியுறுவதாக சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகின்றது.

    இது குழந்தைகளின் வளர்ச்சியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டின் ஆரோக்கியத்தையும், கல்வி வளர்ச்சியையும் சேர்த்து பாதிக்கும் அவலநிலை உள்ளது. இதனால் பல்வேறு நோய் தொற்றுக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி 10 -19 வயதுள்ளவர்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் அதிகம் அவதியுறுவதாக தெரிவிக்கின்றது.

    'உணவே மருந்து' என்ற சித்த மருத்துவ தத்துவப்படி சத்தான உணவு முறைகளே நோய் நீக்கம் மற்றும் தடுக்கும் தன்மையை உடையன. தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளே பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டதாக உள்ளன. அதனை மறந்த இன்றைய நவீன உலகம் பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை நாடி உடல் நலத்தை சிதைத்து கொள்வது வருத்தம் தான்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள சர்க்கரை சத்து பின்னாட்களில் நீரிழிவு நோய்க்கு பாதை அளிப்பதாகவும், அதில் உள்ள பிரக்டோஸ் எனும் மற்றொரு சர்க்கரை சத்து என்.ஏ.எப்.எல்.டி எனும் கல்லீரல் கொழுப்பு நிலைக்கு வழிவகுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

    மேலும் அதில் உள்ள 'டிரான்ஸ் பாட்' எனும் கொழுப்புப் பொருட்கள் பின்னாளில் ரத்த குழாய்களில் அடைப்பை உண்டாக்கி இதயநோய்க்கு வழிவகுக்கும். ஆக, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவு மட்டுமின்றி ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கமும் அவசியம். இதனை இன்றைய இளைய சமூகம் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். இல்லையெனில் பணம் கொடுத்து நலத்தை சீரழித்துக்கொள்ள நேரிடும்.

    நமது பாரம்பரிய உணவைக் கட்டமைத்த நமது முன்னோர்களின் அறிவுத்திறன் நிச்சயம் ஆச்சர்யம் தான். அரிசியும் உளுந்து பருப்பும் வெந்தயமும் கலந்த இட்லியில் மாவுச்சத்து, புரதச்சத்து, மற்றும் நார்சத்துக்களையும் ஒரு சேர ஒன்றிணைத்து கொடுத்தது சிறந்த உதாரணம். அரிசியும் பருப்பும் நெய்யும் சேர்ந்த பொங்கல் சரிவிகித ஊட்டச்சத்து மிக்க உணவின் மற்றுமொரு உதாரணம். இவ்வாறு உணவில், இன்று அறிவியல் கூறும் சரிவிகித உணவு முறையை முன்பிருந்தே கடைபிடித்து, நமது நலத்திற்கான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர் நம் முன்னோர்கள்.

    உடலுக்கு வலிமை தரும் புரதச்சத்து மிகுந்த தானியங்களும், பருப்பு வகைகளும், சிறுதானிய வகைகளும் உடலில் உள்ள செல்களுக்கு கட்டமைப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்புச்சக்தியை இயற்கையாக தூண்டும். உடலுக்கு வளர்ச்சியை கொடுக்கும். வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு தானியவகைகளை இளவறுப்பாக வறுத்து பொடித்து பாலில் பனைவெல்லம் சேர்த்து கொடுக்க ஆரோக்கியம் வலுப்பெறும். உடல் எடை கூடும். சித்த மருத்துவத்தின் 'பஞ்சமுட்டிக் கஞ்சி' எனும் ஊட்டச்சத்து மிக்க உணவைப் பயன்படுத்த புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைந்த நோயாளிகளின் உடலை தேற்ற முடியும். பச்சரிசி, உளுந்து, சிறுபயிறு, துவரம் பருப்பு, கடலை பருப்பு இவை ஐந்தும் சேர்ந்த உணவு பஞ்ச முட்டிக் கஞ்சி.

    "இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு" போன்ற எளிய பழமொழிகள் நம் முன்னோர்களின் ஆரோக்கிய சிந்தனைகள். ஆக, எள்ளு உருண்டையினை தினசரி எடுத்துக்கொள்வது நல்ல ஊட்டம் தரும். எலும்புகளும் வலிமை பெரும். எள்ளு கார்போஹைடிரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து இவை மூன்றும் நிறைந்தது. எலும்புக்கு வலிமையைத் தரும் கால்சியம் சத்தும் இதில் அதிகம் உள்ளது. வளரும் பருவ பெண்கள் இதனை எடுத்துக்கொண்டால் மாதவிடாய் கோளாறுகள் வரவிடாமல் தடுக்கும். தாவர ஈஸ்ட்ரோஜென் இதில் அதிகம் என்கிறது நவீன அறிவியல். 'இந்தியன் பாதாம்' என்று கூறப்படும் வேர்க்கடலையில் பாதாமில் உள்ளதை விட கொழுப்புச்சத்து அதிகம். இதனை வெல்லத்துடன் உருண்டை செய்து எடுத்துக்கொள்ள நல்ல போஷாக்கு தரும். புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் நிறைந்தது. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும், துத்தநாகச் சத்தும் இதில் உள்ளது. வெல்லம் வேர்கடலையால் அதிகரிக்கும் பித்தத்தை தணிக்கும். இங்கு நம் முன்னோர்களின் அறிவு போற்றுதலுக்கூறியது.

    மகத்துவமான கருப்பு உளுந்து இன்று மறந்துபோன ஒன்றாக உள்ளது. புரதச்சத்தும், இரும்புச்சத்தும், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் அதிகம் நிறைந்தது. இதனை களியாகவோ, பனைவெல்லம் சேர்த்த கஞ்சியாகவோ, அல்லது நெய் சேர்த்து உருண்டையாவோ, அல்லது வடையாகவோ செய்து எடுத்துக்கொள்ள உடலுக்கு ஊட்டம் அளிக்கும். வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கும் மிகச்சிறந்தது. இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகையை நீக்கும் தன்மை உடையது. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். சித்த மருத்துவத்தில் எலும்பு, நரம்புகளை வலுப்படுத்தும் மருந்துகளில் உளுந்து சேருவது குறிப்பிடத்தக்கது. பாசி பயறு உருண்டையும் சிறந்த ஊட்டமளிக்கும் ஒன்று.

    கம்பு, சோளம், மக்காசோளம் போன்ற புரதச்சத்து நிறைந்த எளிய சிறு தானியவகைகளை உணவில் பயன்படுத்துவதும் உடலுக்கு ஆரோக்கியம் தரும். தினை, வரகு, சாமை ஆகியவைகளும் ஊட்டச்சத்துக்கான இயற்கை உணவுகள். கேழ்வரகு பிட்டு சாப்பிடுவதால் அதில் உள்ள கால்சியம் இடுப்பு எலும்புகளுக்கு வன்மையை தரும். தினைமாவும் கால்சியத்தை அள்ளித்தரும் மிகச்சிறந்த பாரம்பரிய உணவு. குறிப்பாக சிறுதானியங்கள் அதிக ஊட்டச்சத்தினால் உண்டாகும் நோய்நிலைகளைத் தடுக்கும் தன்மை உடையன.

    வைட்டமின் ஏ குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மட்டுமின்றி வலுவான நோய் எதிர்பாற்றலை கட்டமைக்கவும் உதவும். எளிதாக கிடைக்கும் கேரட், பப்பாளி, மாம்பழம் இவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மாற்றாக, மிக எளிதாக நாம் பயன்படுத்தும் முருங்கைக்கீரையை அடையாக செய்து குழந்தைகளுக்கு தரலாம். முருங்கை கீரையும், கறிவேப்பிலையும் வைட்டமின் ஏ எளிமையாக கிடைக்கும் சிறந்த மூலிகைகள்.

    மேலும் அதில் உள்ள இரும்புச்சத்தும், கால்சியம், மெக்னீசியம் போன்றவைகளும் எலும்பினை வன்மைப்படுத்தவும், உள் உறுப்புகளை பாதுகாக்கவும் உதவும். எளிமையாக கிடைக்கும் கீரைகளை சேர்த்து அடையாகவோ, ரசமாகவோ பனை வெல்லம் சேர்த்து எடுத்துக்கொள்ள அதன் உப்புச்சத்துக்களும், வைட்டமின்களும், இன்னும் பிற சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். இதனால் பெரும்பாலான நோய்நிலைகள் தடுக்கப்படும்.

    நமது பாரம்பரிய உணவு முறைகளும், உணவு பழக்கவழக்கங்களும் சரிவிகித ஊட்டச்சத்து மிக்க உணவின் அடிப்படை ஆதாரங்கள். ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவு, நல்வாழ்வின் துவக்கம்; நோய்நிலைகளற்ற வளமான வாழ்விற்கு வழிகாட்டி. ஆகவே, சத்தான நம் பாரம்பரிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பயன்படுத்த துவங்கி, வலிமையான சமூகத்தை உருவாக்குவதற்கான பாதை அமைத்திடுவது நமது சமூகப் பொறுப்பு.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    ×