என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உடல்நலத்துக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள்
- உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்பதால் சத்தான உணவுக்கு குறைபாடு நமது நாட்டில் உண்டாகிறது.
- “இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு” போன்ற எளிய பழமொழிகள் நம் முன்னோர்களின் ஆரோக்கிய சிந்தனைகள்.
"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்பதைப்போல உயிர் நீடித்து இருப்பதற்கு உடலில் ஆரோக்கியம் அவசியம். அத்தகைய ஆரோக்கியத்தை எட்டிப்பிடிக்க நாம் உண்ணும் உணவே மருந்தாக இருப்பது நல்லது. ஆனால் மருந்தையே முக்காலமும் உணவாக உட்கொள்ளும் இன்றைய நவீன வாழ்வியலில் நலத்தைப் பயக்கும் உணவினைப் பற்றியும் அவற்றின் இன்றியமையாமைப் பற்றியுமான விழிப்புணர்வு சற்று குறைவு என்றே சொல்லலாம்.
உணவில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும் அதன் இன்றியமையாமைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தேசிய ஊட்டச்சத்து வாரம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. நோய் இல்லாத சமுதாயத்தை உண்டாக்கிட வலிமையான உடலும், அமைதியான மனமும் அவசியம். அதுவே ஆரோக்கியமான சமுதாயத்தை உண்டாக்கி நாட்டினை வளப்படுத்தும். அத்தகைய ஆரோக்கியமான சமூகத்தை உண்டாக்கிட ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம்.
ஊட்டச்சத்துக்கு அடிப்படையான சரிவிகித உணவு நம் உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை என்கிறது இன்றைய நவீன அறிவியல். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து இவற்றை முறையான அளவு எடுத்துக்கொள்வதில் இருந்தே ஆரோக்கியத்தின் பயணம் துவங்கிவிடுகிறது. இவை மட்டுமின்றி தாது உப்புச்சத்துக்கள், வைட்டமின்கள் ஆகிய நுண் ஊட்டச்சத்துக்களின் பங்கும் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமைகிறது.
இன்றைய நவீன அறிவியல் ஊட்டச்சத்தின் மகத்துவத்தினை விளக்குவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மருத்துவ முன்னோர்கள் அதன் மகத்துவத்தை விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, வள்ளுவன் கூறிய மிகினும் குறையினும் நோய் செய்யும் என்ற குறளில் சித்த மருத்துவ அடிப்படைக்கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை உண்ணும் உணவின் மூலம் சமநிலையில் இருக்க வலியுறுத்தி இருப்பது ஆச்சரியம் தான். மேற்கூறிய சத்துக்களில் எவையேனும் ஒன்றை மட்டுமே அதிகம் சேர்த்துக்கொள்வது நோய்க்கு ஆதாரம்.
ஊட்டச்சத்துக்கான பட்டியல் என்பது மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து இவைகள் மட்டுமின்றி இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், அயோடின், பொட்டாசியம், துத்தநாகம், செம்புச்சத்து போன்ற உடலுக்கு அத்தியாவசிய கனிமச்சத்துக்களையும், உடலின் செயல்பாடுகளுக்கு தேவையான ஏ, பி, சி, டி, ஈ, கே போன்ற வைட்டமின்களையும் உள்ளடக்கியது.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்பதால் சத்தான உணவுக்கு குறைபாடு நமது நாட்டில் உண்டாகிறது. சமூக பொருளாதார நிலையும், முழுமையான கல்வியறிவின்மையும், விழிப்புணர்வு இல்லாமையும் கூட ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாகின்றது. இதனால் புரதச்சத்து குறைபாடு, இரும்புச்சத்து குறைவால் ரத்த சோகை , வைட்டமின் ஏ குறைவால் கண் பார்வை குறைபாடு போன்ற பல உடல்நலக்கோளாறுகள் முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஏற்பட்டு அவர்களின் ஆரோக்கியத்திற்கு சவாலை ஏற்படுத்தும்.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் உடல் எடை குறைவு, தசை சூம்பல், ரத்தசோகை, அயோடின் குறைபட்டால் தைராய்டு சுரப்பு கோளாறு ஏற்படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதிக ஊட்டச்சத்தினால் அதிக உடல் எடை ஏற்படுகிறது. இந்தியாவில் 7.5 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதியுறுவதாக சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகின்றது.
இது குழந்தைகளின் வளர்ச்சியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டின் ஆரோக்கியத்தையும், கல்வி வளர்ச்சியையும் சேர்த்து பாதிக்கும் அவலநிலை உள்ளது. இதனால் பல்வேறு நோய் தொற்றுக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி 10 -19 வயதுள்ளவர்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் அதிகம் அவதியுறுவதாக தெரிவிக்கின்றது.
'உணவே மருந்து' என்ற சித்த மருத்துவ தத்துவப்படி சத்தான உணவு முறைகளே நோய் நீக்கம் மற்றும் தடுக்கும் தன்மையை உடையன. தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளே பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டதாக உள்ளன. அதனை மறந்த இன்றைய நவீன உலகம் பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை நாடி உடல் நலத்தை சிதைத்து கொள்வது வருத்தம் தான்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள சர்க்கரை சத்து பின்னாட்களில் நீரிழிவு நோய்க்கு பாதை அளிப்பதாகவும், அதில் உள்ள பிரக்டோஸ் எனும் மற்றொரு சர்க்கரை சத்து என்.ஏ.எப்.எல்.டி எனும் கல்லீரல் கொழுப்பு நிலைக்கு வழிவகுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் அதில் உள்ள 'டிரான்ஸ் பாட்' எனும் கொழுப்புப் பொருட்கள் பின்னாளில் ரத்த குழாய்களில் அடைப்பை உண்டாக்கி இதயநோய்க்கு வழிவகுக்கும். ஆக, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவு மட்டுமின்றி ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கமும் அவசியம். இதனை இன்றைய இளைய சமூகம் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். இல்லையெனில் பணம் கொடுத்து நலத்தை சீரழித்துக்கொள்ள நேரிடும்.
நமது பாரம்பரிய உணவைக் கட்டமைத்த நமது முன்னோர்களின் அறிவுத்திறன் நிச்சயம் ஆச்சர்யம் தான். அரிசியும் உளுந்து பருப்பும் வெந்தயமும் கலந்த இட்லியில் மாவுச்சத்து, புரதச்சத்து, மற்றும் நார்சத்துக்களையும் ஒரு சேர ஒன்றிணைத்து கொடுத்தது சிறந்த உதாரணம். அரிசியும் பருப்பும் நெய்யும் சேர்ந்த பொங்கல் சரிவிகித ஊட்டச்சத்து மிக்க உணவின் மற்றுமொரு உதாரணம். இவ்வாறு உணவில், இன்று அறிவியல் கூறும் சரிவிகித உணவு முறையை முன்பிருந்தே கடைபிடித்து, நமது நலத்திற்கான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர் நம் முன்னோர்கள்.
உடலுக்கு வலிமை தரும் புரதச்சத்து மிகுந்த தானியங்களும், பருப்பு வகைகளும், சிறுதானிய வகைகளும் உடலில் உள்ள செல்களுக்கு கட்டமைப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்புச்சக்தியை இயற்கையாக தூண்டும். உடலுக்கு வளர்ச்சியை கொடுக்கும். வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு தானியவகைகளை இளவறுப்பாக வறுத்து பொடித்து பாலில் பனைவெல்லம் சேர்த்து கொடுக்க ஆரோக்கியம் வலுப்பெறும். உடல் எடை கூடும். சித்த மருத்துவத்தின் 'பஞ்சமுட்டிக் கஞ்சி' எனும் ஊட்டச்சத்து மிக்க உணவைப் பயன்படுத்த புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைந்த நோயாளிகளின் உடலை தேற்ற முடியும். பச்சரிசி, உளுந்து, சிறுபயிறு, துவரம் பருப்பு, கடலை பருப்பு இவை ஐந்தும் சேர்ந்த உணவு பஞ்ச முட்டிக் கஞ்சி.
"இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு" போன்ற எளிய பழமொழிகள் நம் முன்னோர்களின் ஆரோக்கிய சிந்தனைகள். ஆக, எள்ளு உருண்டையினை தினசரி எடுத்துக்கொள்வது நல்ல ஊட்டம் தரும். எலும்புகளும் வலிமை பெரும். எள்ளு கார்போஹைடிரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து இவை மூன்றும் நிறைந்தது. எலும்புக்கு வலிமையைத் தரும் கால்சியம் சத்தும் இதில் அதிகம் உள்ளது. வளரும் பருவ பெண்கள் இதனை எடுத்துக்கொண்டால் மாதவிடாய் கோளாறுகள் வரவிடாமல் தடுக்கும். தாவர ஈஸ்ட்ரோஜென் இதில் அதிகம் என்கிறது நவீன அறிவியல். 'இந்தியன் பாதாம்' என்று கூறப்படும் வேர்க்கடலையில் பாதாமில் உள்ளதை விட கொழுப்புச்சத்து அதிகம். இதனை வெல்லத்துடன் உருண்டை செய்து எடுத்துக்கொள்ள நல்ல போஷாக்கு தரும். புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் நிறைந்தது. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும், துத்தநாகச் சத்தும் இதில் உள்ளது. வெல்லம் வேர்கடலையால் அதிகரிக்கும் பித்தத்தை தணிக்கும். இங்கு நம் முன்னோர்களின் அறிவு போற்றுதலுக்கூறியது.
மகத்துவமான கருப்பு உளுந்து இன்று மறந்துபோன ஒன்றாக உள்ளது. புரதச்சத்தும், இரும்புச்சத்தும், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் அதிகம் நிறைந்தது. இதனை களியாகவோ, பனைவெல்லம் சேர்த்த கஞ்சியாகவோ, அல்லது நெய் சேர்த்து உருண்டையாவோ, அல்லது வடையாகவோ செய்து எடுத்துக்கொள்ள உடலுக்கு ஊட்டம் அளிக்கும். வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கும் மிகச்சிறந்தது. இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகையை நீக்கும் தன்மை உடையது. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். சித்த மருத்துவத்தில் எலும்பு, நரம்புகளை வலுப்படுத்தும் மருந்துகளில் உளுந்து சேருவது குறிப்பிடத்தக்கது. பாசி பயறு உருண்டையும் சிறந்த ஊட்டமளிக்கும் ஒன்று.
கம்பு, சோளம், மக்காசோளம் போன்ற புரதச்சத்து நிறைந்த எளிய சிறு தானியவகைகளை உணவில் பயன்படுத்துவதும் உடலுக்கு ஆரோக்கியம் தரும். தினை, வரகு, சாமை ஆகியவைகளும் ஊட்டச்சத்துக்கான இயற்கை உணவுகள். கேழ்வரகு பிட்டு சாப்பிடுவதால் அதில் உள்ள கால்சியம் இடுப்பு எலும்புகளுக்கு வன்மையை தரும். தினைமாவும் கால்சியத்தை அள்ளித்தரும் மிகச்சிறந்த பாரம்பரிய உணவு. குறிப்பாக சிறுதானியங்கள் அதிக ஊட்டச்சத்தினால் உண்டாகும் நோய்நிலைகளைத் தடுக்கும் தன்மை உடையன.
வைட்டமின் ஏ குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மட்டுமின்றி வலுவான நோய் எதிர்பாற்றலை கட்டமைக்கவும் உதவும். எளிதாக கிடைக்கும் கேரட், பப்பாளி, மாம்பழம் இவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மாற்றாக, மிக எளிதாக நாம் பயன்படுத்தும் முருங்கைக்கீரையை அடையாக செய்து குழந்தைகளுக்கு தரலாம். முருங்கை கீரையும், கறிவேப்பிலையும் வைட்டமின் ஏ எளிமையாக கிடைக்கும் சிறந்த மூலிகைகள்.
மேலும் அதில் உள்ள இரும்புச்சத்தும், கால்சியம், மெக்னீசியம் போன்றவைகளும் எலும்பினை வன்மைப்படுத்தவும், உள் உறுப்புகளை பாதுகாக்கவும் உதவும். எளிமையாக கிடைக்கும் கீரைகளை சேர்த்து அடையாகவோ, ரசமாகவோ பனை வெல்லம் சேர்த்து எடுத்துக்கொள்ள அதன் உப்புச்சத்துக்களும், வைட்டமின்களும், இன்னும் பிற சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். இதனால் பெரும்பாலான நோய்நிலைகள் தடுக்கப்படும்.
நமது பாரம்பரிய உணவு முறைகளும், உணவு பழக்கவழக்கங்களும் சரிவிகித ஊட்டச்சத்து மிக்க உணவின் அடிப்படை ஆதாரங்கள். ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவு, நல்வாழ்வின் துவக்கம்; நோய்நிலைகளற்ற வளமான வாழ்விற்கு வழிகாட்டி. ஆகவே, சத்தான நம் பாரம்பரிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பயன்படுத்த துவங்கி, வலிமையான சமூகத்தை உருவாக்குவதற்கான பாதை அமைத்திடுவது நமது சமூகப் பொறுப்பு.
தொடர்புக்கு:
drthillai.mdsiddha@gmail.com






