என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • வாழ்த்துவதும் வாழ்த்துப் பெறுவதும் நல்ல பழக்கவழக்கம் தான்.
    • வாழ்த்துவதற்கு எப்போதும் வயது ஒரு தடையே இல்லை.

    அன்பின் வாழ்த்துகள் அன்பர்களே!

    "ராஜாதி ராஜ! ராஜ கம்பீர! ராஜ மார்த்தாண்ட! ராஜகுல திலக! ராஜ பராக்கிரம! ராஜ வைராக்கிய!...." என நீளும் வரவேற்பு முழக்கங்களோடும் வாழ்த்து வாசகங்களோடும் ஆளும் அரசர்களை அரியணையில் அமர வைக்கும் காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். "நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!" எனும் சிவ வாழ்த்துப் பாட்டைச் சிவன் கோவில்களிலும், "பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!"எனும் பாசுரங்களை வைணவ ஆலயங்களிலும் கேட்டிருப்போம். பெரும் பெரும் அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் பெயர்களைக் கூறி "வாழ்க! வாழ்க!" என ஒலிக்கும் வாழ்த்தொலிகளைச் செவி மடுத்திருப்போம். இதில் சிலர் "வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!" எனச் சுவரொட்டிகள் ஒட்டியும் ஒலி வாங்கிகள் பிடித்தும் தெரிவித்துக் கொண்டிருப்பதையும் அறிந்திருப்போம்!.

    வாழ்த்துவதும் வாழ்த்துப் பெறுவதும் நல்ல பழக்கவழக்கம் தான். ஆனால் அது என்ன? "வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!"?.

    வாழ்த்துவதற்கு எப்போதும் வயது ஒரு தடையே இல்லை. மூத்தவர்கள்தாம் வாழ்த்த வேண்டும்; இளையவர்கள் வாழ்த்தக்கூடாது என்றெல்லாம் கிடையவே கிடையாது. கடவுளை வாழ்த்துவதால் கடவுளா வாழப்போகிறார்?. இல்லை நாம் வாழ்த்தித்தான் கடவுள்கள் வாழ வேண்டிய கட்டாய நிலையிலா இருக்கிறார்கள்? கடவுளரை வாழ்த்துவதன் மூலம், வாழ்த்துகிற மனிதர்கள்தாம் வாழ்வார்கள். இதுவே பக்தியின் தத்துவம்.

    வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை; நல்ல நிறைவான மனமும் அப்பழுக்கற்ற சொற்களும் இருந்தாலே போதும். அடுத்தவர்களை வாழ்த்துகிற ஒவ்வொரு முறையும் அந்தத் தூய்மையான மன அதிர்வலைகள் மூலம் நாமும் வாழ்த்துகள் பெறுகிறோம். ஆசீர்வதிக்கப் பெறுகிறோம். இதுவே நிதர்சன உண்மை.

    ஒரு சிறுநகரம். அதன் கடைவீதியில் ஓர் அளவான பலசரக்குக் கடை. கடைக்காரர் நல்லவர். அளவுக்கதிகமான லாபம் வைக்காமல் வியாபாரம் செய்து வந்தார். அவரது நல்லெண்ணத்திற்கு ஏற்ப வணிகமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. அந்தச் சிறுநகரத்தின் பெரும்பான்மை மக்களும் அவரது கடைக்கு வந்தே பலசரக்குகளை வாங்கிப் பயனடைந்து வந்தனர்.

    அவரது கடை இருந்த வீதியில், அவரது கடைக்கு எதிர்த்தாற்போலத் திடீரென ஒரு பெரிய கட்டிடம் ஒன்று எழத் தொடங்கியது. அதிவிரைவாக அதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.

    பலசரக்குக் கடைக்காரரும் நாள்தோறும் அக்கட்டட வளர்ச்சியைக் கவனித்து வந்தாரேயொழிய, அது என்ன?ஏது? என்று அக்கறை கொள்ளவில்லை. ஒருநாள் அவரது கடைக்கு வந்த வாடிக்கையாளர் அவரிடம்," இது என்ன கட்டிடம் தெரியுமா?" என்று கேட்டு விட்டுப்," பெரிய பல்பொருள் அங்காடி, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வரப்போகிறது!: இன்னும் பத்து நாளில் கடை திறக்கப்பட இருக்கிறது; இது வந்து விட்டால் உங்கள் கடை வியாபாரம் அதோ கதிதான்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

    பலசரக்குக் கடைக்காரருக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. பக்கத்து ஊரில் உள்ள மலையில் வாழும் ஒரு துறவி அவருக்கு குருவாக உள்ளார். பெரும் சிக்கலான தருணங்களில் அந்தத் துறவியிடம் சென்று ஆலோசனை கேட்பதும், அதன்படி தப்பாமல் நடப்பதும் அவரது வழக்கம். மளமளவென்று கடையை அடைத்துவிட்டு, குருநாதரைச் சந்திக்கக் கிளம்பிவிட்டார். மலையில் இருந்த குருநாதரிடம், பல்பொருள் அங்காடி திறக்கப்பட இருப்பதையும், அதனால் தனது வியாபாரம் பாதிக்கப்பட இருப்பதையும் தெரிவித்துத், தனக்கு வழிகாட்டும்படி வேண்டினார். குருநாதரும் கொஞ்சநேரம் கண்களைமூடி தியானித்து விட்டு கடைக்காரரிடம் யோசனை ஒன்றைக் கூறினார்.

    "நாள்தோறும் உனது பலசரக்குக் கடையைத் திறந்ததும் முதலில் நீ என்ன செய்வாய்?"

    "கடையில் உள்ள சாமி படங்களுக்குப் பத்தி சூடம் காட்டி இன்றைய வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என வேண்டுவேன்!"

    " நல்லது!. நாளைமுதல் நீ கடை திறந்து, பத்தி சூடம் காட்டிக் கடவுள்களைக் கும்பிடும் போது, எதிரே உள்ள பல்பொருள் அங்காடியிலும் வாணிபம் சிறப்பாக நடக்கவேண்டும் என வேண்டி, வாழ்த்தி, வழிபாடு நிகழ்த்து!" குருநாதர் சொன்னார்.


    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    " அப்படியே செய்கிறேன் குருவே!" குருநாதர் வார்த்தைக்கு இருவார்த்தை இல்லை எனக் கிளம்பிவிட்டார்.

    மறுநாள் முதல் பலசரக்குக் கடைக்காரர் தன் கடையில் பத்தி சூடம்காட்டி, அப்படியே எதிர்க்கடைக்கும் காட்டி, வாழ்க! வளர்க! என வாழ்த்துச் சொல்லத் தொடங்கினார். சிலநாள்களில் பல்பொருள் அங்காடி கோலாகலமாய்த் திறக்கப்பட்டு, வியாபாரம் அமோகமாய் நடக்கத் தொடங்கியது. இவரது வாழ்த்தும் வழிபாடும் குருநாதர் சொன்னபடி தொடர்ந்துகொண்டே இருந்தது.

    ஆறு மாதம் கழிந்தது. பலசரக்குக் கடைக்காரர் குநாதரைக் காண மலைக்குச் சென்றார். கடைக்காரைப் பார்த்ததும் குருநாதர் கேட்ட முதல் கேள்வி,

    "என்ன பலசரக்குக் கடையை மூடிவிட்டாயா?"

    இதற்குப் பலசரக்குக் கடைக்காரர் தந்த பதில்,

    "இல்லை! எதிர்த்தாற்போல இருந்த பல்பொருள் அங்காடியை விலைக்கு வாங்கி விட்டேன்!"

    இதுதான் வாழ்த்தின் மகிமை. உனது எதிரியையும் நீ வாழ்த்து! என்று நல்ல வார்த்தையை நம்பிக்கையில்லாமல் குருநாதர் சொல்லியிருக்கிறார்; அதனால்தான் இருந்த கடையையும் விற்றுவிட்டாயா? என்று அவர் கேட்டிருக்கிறார்.

    ஆனால் குருநாதர் சொன்ன வாழ்த்தின் மகிமையை முழுமையாகக் கடைக்காரர் நம்பியதால் போட்டியாக வந்த வணிகத்தையும் தனதாக்கிக் கொள்ள முடிந்தது.வாழ்த்து சக மனிதத்தை அரவணைக்கும் ரசவாதத்தைப் புரிகிறது.

    மற்றோரைப் பார்த்து நாம் பொறாமைப் படும்போது, நாம் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறோம்; ஏனெனில் ஏதோவொரு வகையில் அவர்கள் நம்மைவிட மேம்பட்ட நிலையில் இருப்பதாகக் கருதுவதாலேயே பொறாமை ஏற்படுகிறது. இதையே வாழ்த்தாக மாற்றிப் பாருங்கள்; நம் நிலைக்கு அவர்களைச் சமமாக்கிப் பார்க்கும் தன்னம்பிக்கை துளிர்ப்பதை மகிழ்வாக உணர முடியும். மேலும், வாழ்த்தும் குணம் வளர வளர நாமும் உயர்ந்து செழிக்கும் பெருமிதத்தை அடைய முடியும்.

    வாழ்த்தும் எண்ணம் வளர்வதற்கு, நமது மனம் முழுவதும் அன்பால் நிறையும் நிறைவுக் குணம் பெருக வேண்டும். அன்புடன் பெருகிப் புறப்படும் வாழ்த்து, செல்லும் மனங்களிலெல்லாம் அன்பை நிறைத்துத் தீய குணங்களை அகற்றி விடுகின்றது. பொறாமைக் குணங்களோ தீயாகிப் பரவிக், கொண்டவர் மனத்தையும் கருக்கிக், கொள்பவர் மனத்தையும் கருகிடவே செய்கின்றன.

    "வாழ்க!" என்பதற்கு எதிர்ச்சொல் "ஒழிக!". பொதுநிலையில் ஒருமனிதருக்கு வாழ்க! முழக்கமும் கேட்கலாம்; ஒழிக! கோஷமும் ஒலிக்கலாம். இதில் வாழ்த்திற்கு மயங்கி, ஒழிகவுக்குக் கலங்கிடும் உள்ளங்களும் இருக்கவே செய்கின்றன.

    ஒரு ராஜா. அவரை நல்லாட்சி நாயகர் என்றே மக்கள் மகிழ்ச்சியோடு அழைத்து வந்தனர். அவர் வாரத்தில் ஒரு நாள் அரண்மனையை விட்டுக் கிளம்பி, நகரத் தெருக்கள் வழியே நகர்வலம் வருவது வழக்கம். வருகின்ற வழியெங்கும், பொதுமக்களும், கடைக்காரர்களும் எழுந்து நின்று, மன்னர் வாழ்க! என மகிழ்ச்சியோடு குரல் எழுப்பி வணங்கி நிற்பர்.

    ஒருநாள் நகர்வலம் முடித்து அரண்மனைக்கு வந்த கையோடு, ராஜா அமைச்சரை அழைத்து,

    "அமைச்சரே! இன்று நகர் வலத்தில் ஒன்று கவனித்தீரா?"

    "எதைப்பற்றி அரசே!"

    "நாம் நகர்வலம் வந்து கொண்டிருந்தபோது, வழியில் நின்றிருந்த மக்கள் எல்லோரும் வாழ்க! வாழ்க! என்றார்கள். கடைகளில் இருந்த வணிகர்கள், கடையை விட்டு வெளியே வந்து மகிழ்ச்சியோடு வாழ்க! சொன்னார்கள்!"

    "ஆமாம்! சொன்னார்கள்!"

    "ஆமாம்! வணிகர்களில் ஒரே ஒருவரைத் தவிர எல்லாரும் வாழ்த்தினார்கள்!"

    "என்ன சொல்கிறீர்கள் அரசே! ஒரே ஒருவர் வாழ்க! சொல்லவில்லையா?"

    "ஆம்! அமைச்சரே! அந்தச் சந்தனக்கட்டை வணிகம் செய்பவர்தான் என்னைப்பார்த்து, வணங்கவும் இல்லை! வாழ்த்தவும் இல்லை! மாறாக உம்மென்று சோகமாக நின்றுகொண்டு மனத்திற்குள் ஒழிக! ஒழிக! என்று சொல்லிக் கொண்டு இருப்பது போலவும் தோன்றியது!".

    "அப்படியா? அரசே! இப்போதே கடைவீதிக்குச் சென்று, அவரிடம் விசாரணை மேற்கொண்டு விவரம் அறிந்து வருகிறேன்!"-அமைச்சர் விடைபெற்றார்.

    ஒருமணிநேரம் கழித்து அரண்மனைக்குத் திரும்பிய அமைச்சர் நேராக அரசரிடம் சென்று பணிந்து நின்றார்.

    "என்ன அமைச்சரே! காரணம் அறிந்து வந்தீரா?

    "ஆம் அரசே! காரணம் அறிந்து எல்லாவற்றையும் சரி செய்து விட்டும் வந்து விட்டேன்."

    "விஷயம் இவ்வளவுதான் அரசே!. அந்தச் சந்தனக்கட்டை வியாபாரி இன்றுமட்டுமல்ல, இதற்குமுன் எப்போது நீங்கள் நகர்வலம் போனாலும் இதேபோலச் சோகமாகத்தான் இருப்பானாம். இன்று தான் உங்கள் கண்ணில் அவன் சிக்கியிருக்கிறான்."

    "அவன் பார்த்து வருவது சந்தனக்கட்டை முதலான பல வாசனைக்கட்டைகளின் வியாபாரம். இவற்றின் வணிகம், மற்றெந்தப் பொருள்களையும்போல எப்போதும் சிறப்பாக நடப்பதில்லை. இதற்குமுன் நல்ல வியாபாரம் என்பது உங்கள் தந்தை மகாராஜா இறந்தபோதுதான் நடைபெற்றதாம். அவரது உடலை எரியூட்டப் பல லட்சக்கணக்கில் வாசனைக்கட்டைகள் விற்றுத் தீர்ந்தனவாம். அதன் பின் நல்ல வியாபாரம் என்பது நீங்கள் இறந்தால்தான் நடைபெறும் என்பது அவனது எதிர்பார்ப்பு. அதனால் தான் ஒவ்வொருமுறை நீங்கள் நகர்வலம் வரும்போதும் சோகத்தோடும் ஏக்கத்தோடும் உங்களை வாழ்த்தாமல், உங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறான்."

    "ஆனாலும் அவனது சோகத்திற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்துவிட்டேன். இந்த வாரத்தில் வரவிருக்கும் உங்களது பிறந்த நாளை மக்கள் தெருமுனைகளில் சந்தனக்கட்டைகள் கொளுத்தி நகரெங்கும் சந்தனப்புகை கமழக் கொண்டாட வேண்டும்! எனப் பறை அறிவிக்கச் செய்துவிட்டேன்.

    "இனி ஆண்டுக்கொருமுறை சந்தனக்கட்டை அமோகமாக விற்பனையாகும். நகர்வலத்தில் மன்னரைப் பார்க்கும் போதெல்லாம் 'எப்போது சாவார்!' என்று 'ஒழிக!' சொல்லிக்கொண்டிருந்த சந்தனக்கட்டைக் கடைக்காரர்,'அரசருக்குப் பிறந்த நாள் ஆண்டுதோறும் வரட்டும்! வாழ்க! வாழ்க! பல்லாண்டு!' என வாரந்தோறும் வாழ்த்தவும் தொடங்கி விடுவார்!" என்றார் அமைச்சர்.

    எந்தப் பிரச்சினையையுமே நேர்முறையாக எடுத்துக்கொண்டு, அதனை நேர்முறையில் தீர்த்துவைத்த இந்த அமைச்சரின் செயல் கவனிக்கத்தக்கது. ஒருவகையில் வாழ்க! என்பதும், ஒழிக! என்பதும் ஒன்றுபோலவே ஆகிவிடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

    "வாழ்க!" நம்மை மகிழ வைக்கிறது!

    "ஒழிக!" நம்மை உணர வைக்கிறது!

    வாழ்த்த வாழ்வோம்!

    வாழ்த்தி வாழ்வோம்!

    தொடர்புக்கு - 9443190098

    • எலும்புகளின் பலவீனம் காரணமாக வலி ஏற்படலாம்.
    • மன உளைச்சல், மனச் சோர்வு காரணத்தினால் வலி ஏற்படலாம்.

    'கீழ் முதுகு வலி' என்ற பாதிப்பினைப் பற்றி ஒரு முறையாவது உலகில் சொல்லாது இருப்பவர்கள் மிகக்குறைவு எனலாம். அதுவும் இந்த கால கட்டத்தில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு இது சர்வ சாதாரணமாய் ஏற்படும் பாதிப்பு ஆகும். நாம் கொடுக்கும் அழுத்தம் தசை நார்களிலும், தசைகளிலும் அத்தகைய ஒரு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

    இது போக உள் உறுப்புகளான வயிறு, ஓவரிஸ், சிறுநீரகம் போன்ற சில கீழ் முதுகு பகுதிகளும், தண்டு வடமும் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பொழுது பின் கீழ் முதுகு வலி ஏற்படுகின்றது.

    இரு பாலாரும் இத்தகு பாதிப்பிற்கு உள்ளாவர். என்றாலும் பெண்களுக்கு கூடுதலாகவே காணப்படுகின்றது. இது பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களால் இருக்கலாம்.

    * தசைகளும், தசை நார்களும் பாதிக்கப்படுவதால் ஏற்படும் வலியே அநேகமாக முக்கிய முதல் காரணமாக இருக்கின்றது. அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, முறையற்று எடைகளை தூக்குவது, வேகம் வேகமாய் திரும்புவது, கோணல், மாணலாய் அமர்வது இவை அனைத்தும் வலி ஏற்படவும் பாதிப்பிற்கும் காரணமாகின்றது.

    * கர்ப்ப காலம்: இக்காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளாலும், கருப்பை விரிவடைவதாலும் கீழ் முதுகு வலி ஏற்படுகின்றது.

    * இதுபோன்றே மாதவிடாய் ஏற்படும் காலங்களிலும் ஹார்மோன் மாறுபாடுகளால் கீழ்முதுகு வலி ஏற்படுகின்றது.

    * என்டோமெட்ரியோசியஸ்: கருப்பைக்கு வெளிவரும் திசுக்கள் என்டோமெட்ரியோசியஸ் என குறிப்பிடப்படுகின்றது. இது இடுப்பு, கீழ் முதுகு பகுதிகளில் மாதவிடாய் காலங்களில் கடும் வலியினை ஏற்படுத்தும்.

    * எலும்புகளின் பலவீனம் காரணமாக வலி ஏற்படலாம்.

    * உடலின் ஒரு பக்க வலி, கால், இடுப்பு பகுதிகளில் வலி, கழுத்தை திருப்பும், நகர்த்தும் போது ஏற்படும் வலி. இவற்றுக்கு தண்டுவட பாதிப்பு இருக்கின்றதா? என பரிசோதித்து கொள்ள வேண்டும்.

    * மன உளைச்சல், மனச் சோர்வு காரணத்தினால் வலி ஏற்படலாம்.

    * நிமிர்ந்து நேராய் அமர பழக வேண்டும்.

    * எடைகளை தூக்கும் போது கவனம் தேவை.

    * அதிக உணர்ச்சி வசப்படுதலை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

    * வலியினை அலட்சியப் படுத்தாது ஆரம்ப நிலையிலேயே மருத்துவ கவனம் பெற வேண்டும்.

    * சுறு சுறுப்பான வாழ்க்கை முறை வேண்டும். மணிக்கொரு முறை சில நிமிடங்களாவது நடக்க வேண்டும்.

    சிறுநீரகம்: இரு சிறுநீரகங்களும் இருபுறமாக மார்பக கூட்டின் கீழ் உள்ளன. உடலில் அதிக நீர், கழிவு இவற்றினை வெளியேற்றுகின்றது, தாதுக்களை சீராய் வைக்க உதவுகின்றது. சிவப்பு ரத்த அணுக்கள் உருவாகின்றது. ரத்த அழுத்தத்தினை சீராய் வைக்கின்றது. எலும்புகள் ஆரோக்கியமாய், வலுவாய் இருக்க உதவுகின்றது.

    சிறுநீரகத்தில் பாதிப்பு என்றாலே மிக அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றுதான். ஆகவே தான் சில அறிகுறிகள் ஏற்படும் போது மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வகையில் சிறு நீரில் கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவர் கவனம் பெற வேண்டும்.

    * சிறுநீர் வெளி செல்வதில் கடினம்.

    * வெளிறிய சிறுநீர், அடிக்கடி அதிக அளவு சிறுநீர் வெளி செல்லுதல்.

    * நுரைத்த சிறுநீர்.

    * அடர்ந்த நிற சிறுநீர், மிகக் குறைந்த அளவே சிறுநீர் செல்லுதல்.

    * இரவில் அடிக்கடி சிறுநீர் செல்லுதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர் கவனம் பெற வேண்டும்.

    வீக்கம்: சிறுநீரகத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும் போது சிறுநீரகத்தினால் உடலில் உள்ள அதிக நீரினை வெளியேற்ற முடியாது. அப்போது முகம், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்.

    வாயில் உலோகம் போன்ற சுவை: கழிவுகள் வெளியேறாமல் ரத்தத்தில் இருப்பதால் ஒரு வித்தியாசமான சுவை உணர்வு நாக்கில் தெரியும். சிறுநீரகம் அதிகம் பாதித்து இருந்தால் இந்த சுவை உணர்வு கூடுதலாய் தெரியும். பசி இருக்காது.

    மேல் முதுகு வலி: சிறுநீரக பாதிப்பு, கிருமி பாதிப்பு, சிறுநீரக கல் இவை கடும் வலியினை ஏற்படுத்தும்.

    சோர்வு: சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால் சிவப்பு அணுக்கள் உற்பத்தியும் நன்கு இருக்கும். சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போது அதிக சோர்வு, தசைகள் பாதிப்பு, மூளை பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

    மூச்சு வாங்குதல்: சிறுநீரக பாதிப்பு ஏற்படும் போது மூச்சு வாங்குதல் இருக்கும். சிகப்பு ரத்த அணுக்கள் குறைபாட்டினால் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுவதால் மூச்சு வாங்கும்.

    கவன ஈடுபாடு இராது, தலை சுற்றல் இருக்கும்: மூளைக்கு ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுவதால் கவன ஈடுபாடு இன்மை, தலை சுற்றல் ஏற்படும்.

    சரும பாதிப்பு: கழிவுகள் ரத்தத்தில் தேங்குவதால் அரிப்பு, வறட்சி, சரும பாதிப்பு என ஏற்படும்.

    மேற் கூறியவை எல்லாம் ஆபத்தான சிறுநீரக பாதிப்பின் வெளிப்பாடுகள்தான். வருடம் ஒருமுறை எப்போதுமே அனைவரும் செக்அப் செய்து கொள்வது பல பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கும்.

    மக்னீசியம்: ஒரு சில சத்து குறைபாடுகளால் ஏற்படும் அறிகுறிகளை நாம் கவனிக்கத் தவறி விடுகின்றோம். ஒரு சத்து குறைபாடே பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

    இன்றைய ஆய்வுகள் சத்து குறைபாடுகளை பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் நிறைய ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு உள்ளன. இந்த வெளியிட்டும் வருகின்றன.

    அதில் மக்னீசியம் குறைபாட்டினை பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் வெளியிடப்பட்டுள்ளன. கருத்துக்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மக்னீசியம் உடலுக்கு மிக அவசியமானது. இதனை உணவில் இருந்து பெறுவது மிக கடினமானது அல்ல. விதைகள், கொட்டைகள், அடர்ந்த நிறம் கொண்ட கீரைகள், பீன்ஸ் இவையெல்லாம் மக்னீசியம் சத்து நிறைந்ததே.

    மக்னீசியம் குறைபாடு என்னென்ன அறிகுறிகளைக் காட்டும் என்பதனைப் பார்ப்போம்.

    . பலமின்மை.

    . தடுமாற்றம்.

    . மறதி.

    . குழப்பம்

    . கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு.

    . விழுங்குவதில் கடினம்.

    . கால்ஷியம் பற்றாமை.

    . எலும்பு தேய்மானம்.

    . சர்க்கரை அளவு குறைதல்.

    . பட படப்பு.

    . குடலில் கெட்ட கிருமிகள்.

    . செயல் பாடுகளில் நிறுத்தம் ஏற்படுதல்.

    . சிறுநீர் பை வீக்கம், கட்டிகள்.

    . தசைகளில் பலவீனம்.

    . எதுவுமே முடியவில்லை என்ற நிலை.

    . உயர் ரத்த அழுத்தம்.

    . சரியான தூக்கமின்மை.

    . கர்ப்ப காலத்தில் பிரச்சினை.

    . தலைவலி. வலிப்பு.

    . ஆஸ்துமா. பொட்டாசியம் குறைபாடு.

    . பல் சொத்தை. அதிக குழப்பம்.

    . தலைவலி.

    . ரத்த கொத்துகள்.

    . ரேடான்ட்ஸ் குறைபாடு பாதிப்பு.

    . நடுக்கம்.

    . நீரிழிவு நோய் பிரிவு 2.

    . குண மாறுபாடுகள்.

    . இருதய கோளாறுகள்.

    . மூச்சு மண்டல பிரச்சினைகள் என இவ்வளவு பாதிப்புகளைக் காட்டும்.

    . பூசணி விதை . சியா விதை.

    . பாதாம்.

    . பசலை.

    . முந்திரி.

    . வேர்கடலை.

    . சோயாபால்.

    . முழுதானி யங்கள் மூலம் இதனை நாம் பெற முடியும்.

    மேலும் ஆப்பிள்

    . பீன்ஸ்பிரிவுகள்

    . பால்

    . வாழைப் பழம்.கறுப்பு திராட்சை

    . காரட்

    இவைகளும் மக்னீசியம் சத்து கொண்டவை ஆகும்.

    எத்தனை முறை நடை பயிற்சியினைப் பற்றி எழுதினாலும் மீண்டும் மீண்டும் அதனை படித்தாலே உறுதி நீடிக்கின்றது. இதன் காரணமாகவே அன்றாடம் 30 நிமிட நடை பயிற்சியின் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    . இருதய பாதிப்புகள் குறையும்.

    . எடை சீராய் இருக்கும்.

    . ஸ்ட்ரெஸ் குறையும்

    . சக்தி கூடும்.

    . ரத்த ஓட்டம் சீராகும்.

    . மனநிலை நன்கு இருக்கும்.

    . படபடப்பு நீங்கும்.

    . தொள தொளவென்ற உடல் இருக்காது.

    . தூக்கம் நன்கு வரும்.

    . புற்று நோய் தவிர்ப்பதற்கு உதவும்.

    . உடல், கை, கால் ஒரு சேர இயங்கும்.

    . தசைகளும், எலும்பும் வலுப்பெறும்.

    . நீரிழிவு பிரிவு 2 பாதிப்பு குறையும்.

    . நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    . உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

    ஆக நடை பயிற்சியினை விடாது செய்வோம்.

    • தெலுங்கிலும் புதுயுகம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
    • படிக்க வைப்பதா? நடிக்க விடுவதா? நடிக்கவிட்டால் எதிர்காலத்துக்கு கை கொடுக்குமா? என்ற பயங்கர குழப்பம்.

    படிப்பா... நடிப்பா...

    எந்த பாதையில் பயணிப்பது என்று எனக்கும் புரியவில்லை. அம்மா-அப்பாவுக்கும் எதுவும் புரியாமல் ஒருவிதமான தயக்கம்.

    எட்டாம் வகுப்பில் பாதியிலேயே கதாநாயகியாக தெலுங்கு பட உலகில் கால் ஊன்றினேன். ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியாக நான் நடித்த நவயுகம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை.

    அந்த நேரத்தில் தமிழிலும் 'ஒரு புதிய கதை' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கே.சுப்பையா டைரக்ஷன். அந்த படம்தான் தமிழில் நான் கதாநாயகியாக நடித்த முதல் படம். ஹீரோவும் பிரபுராஜ் என்ற அறிமுக நடிகர்.

    நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவம் இருந்ததால் டைரக்டர் சொல்வதை கேட்டு அதற்கு ஏற்ப எங்கு நிற்க வேண்டும்? எப்படி திரும்பி நிற்க வேண்டும் என்பதை உடனே சரியாக செய்து விடுவேன்.

    ஆனால் ஹீரோவுக்கு அதுதான் முதல் அனுபவம் என்பதால் சரியாக செய்யாமல் அடிக்கடி டைரக்டரிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பார். அதைப்பார்த்து எனக்கே கஷ்டமாக இருக்கும்.

    அவர் என்னிடம் 'நீங்க நல்லா நடிக்கிறீங்க மேடம்' என்பார். கதாநாயகியாக எனக்கும் இதுதான் முதல்படம். உங்களுக்கும் நடிப்பு வந்துவிடும் என்று நான் அவருக்கு தைரியம் கொடுப்பேன்.

    ஒரு புதிய கதை படப்பிடிப்பு முடிந்து படமும் 10.8.1990 அன்று வெளியானது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

    'ராசாவே என் ராசாவே', 'தெக்கத்தி காத்த டிச்சு உடம்பு ஒரு மாதிரி ஆயிடுச்சி' என்ற பாடல்கள் ரசிக்கும்படி இருந்தன. ஆனாலும் எனக்கு பெயர் வாங்கி தந்த படமாக அமையவில்லை.

    தெலுங்கிலும் புதுயுகம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தமிழில் ஒரு புதிய கதையும் இப்படி ஆனதால் அம்மா, அப்பாவுக்கு மனதளவில் ஒரு விதமான பயம். நம் மகளை தொடர்ந்து நடிக்க வைக்கலாமா? சினிமா அவளது எதிர்காலத்துக்கு கைகொடுக்குமா? என்று ரொம்பவே யோசித்து கொண்டிருந்தார்கள்.

    அந்த நேரத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் படத்தில் நடிப்பதற்காக என்னை தேடி வந்தார்கள். 'சீதா ராமையா காரிமனவரலுரு' அதாவது சீதாராமையாவின் பேத்தி என்ற அந்த படத்தில் நாகேஸ்வர ராவின் பேத்தி வேடத்தில் நடிக்க கேட்டார்கள். 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்.

    அதைக்கேட்டதும் அம்மா ரொம்பவே யோசித்தார். இதுவரை நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. இந்த படத்தில் வேறு 35 நாட்கள் கால்ஷீட் கேட்கிறார்கள். இத்தனை நாட்கள் பள்ளிக்கூ டத்துக்கு போகாவிட்டால் படிப்பும் கெட்டுப் போகும். படிக்க வைப்பதா? நடிக்க விடுவதா? நடிக்கவிட்டால் எதிர்காலத்துக்கு கை கொடுக்குமா? என்ற பயங்கர குழப்பம்.

    கடைசியில் நடிக்க வைக்க வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள். கால்ஷீட் கேட்டு வந்தவர்களிடம் நடிக்க வைக்க விரும்பவில்லை. அவள் படிக்கட்டும் என்று அம்மா உறுதியாக கூறினார்.

    ஆனால் படக்குழுவினரோ 'இது நல்ல கதை' நாகேஸ்வர ராவின் பேத்தி பாத்திரமும் வலுவாக உள்ளது. இந்த பாத்திரத்தில் மீனா நடித்தால் நிச்சயம் பெயர் வாங்கி கொடுக்கும் என்றார்கள்.

    ஆனால் அம்மா-அப்பாவுக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை. 'யோசிக்கி றேன்' என்றார்கள்.

    ஆனால் படக்குழுவினர் 'இந்த ஒரு முறை... 35 நாட்கள் மட்டும் அனுமதியுங்கள்... பெயர் கிடைக்காவிட்டால் அப்புறம் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு படிக்க வையுங்கள்' என்று வற்புறுத்தினார்கள்.

    அவர்களின் வற்புறுத்தலை தட்ட முடியாமல் அம்மாவும் சம்மதித்தார். அதைக்கேட்டதும் படக்குழுவினருக்கு மிகுந்த சந்தோசம்.

    சம்பளம் உள்ளிட்ட எல்லா விசயங்களையும் பேசி முடித்துவிட்டு ஷூட்டிங் தேதியை சொல்லி அனுப்புகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

    சீதா ராமையாவின் பேத்தி கதாபாத்திரத்தில் நடிகர் நாகேஸ்வரராவ் பேத்தியாக நடித்தேன்.

    தெலுங்கில் புகழ்பெற்ற நடிகர் நாகேஸ்வரராவ். அவரது பேத்தியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். படம் எப்படியாவது வெற்றிப்படமாக அமைய வேண்டுமே என்ற எண்ணத்தோடு முழு ஈடுபாட்டோடு நடிக்க தொடங்கினேன்.

    டைரக்டர் கிராந்திகுமார். ரொம்ப கோபக்காரர். அதே நேரம் மனதுக்குள் பாசம் உண்டு. அந்த பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவர் என்பது தான் உண்மை.

    டைரக்டரிடம் திட்டு வாங்கிவிட கூடாது என்பதற்காகவே வசனங்களை அடிக்கடி மனப்பாடம் செய்து கொள்வேன். தெலுங்கு நன்றாக பேச தெரிந்து இருந்தாலும் சில நேரங்களில் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் வைத்து திடீரென்று வசனங்களை மாற்றி தருவார்கள். அந்த நேரங்களில் தான் மனம் கொஞ்சம் திக்... திக்.. என்று இருக்கும்.

    என்னதான் இருந்தாலும் தெலுங்கு தாய்மொழி இல்லையல்லவா? எனவே திடீரென்று புதிதாக நிறைய வசனங்கள் தந்தால் பேச பயமாக இருக்கும்.

    பாடல் காட்சிகளில் சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக பாடல்களை போட்டு கேட்டுவிட்டுத்தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    ஒரு காட்சியில் நிறைய மந்திரங்கள் சொல்லி நடிக்க வேண்டும். அந்த மந்திரங்களை மனப்பாடம் செய்து அப்படியே சொல்லி 'சபாஷ்' வாங்கினேன். அது மனதுக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது.

    நமது பாத்திரம் மூலம் டைரக்டர் படத்தில் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு பேசினால் முகபாவனையும் நன்றாக வந்துவிடும் என்று அட்வைஸ் செய்வார்கள். அப்படித்தான் மெல்ல மெல்ல பழகி கொண்டேன்.

    ஒரு நாள் ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் படப்பிடிப்பு. நான் பாவடை-சட்டையில் போய் நின்றதை பார்த்ததும் டைரக்டர் இந்த காஸ்ட்டியூம் யார் சொன்னது? பாவாடை தாவணி தான் அணிய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

    உடனே புதிய காஸ்ட்டியூமை தயார் செய்வ தற்காக ஓடினார்கள். புதிய காஸ்ட்டியூமை உடனே தைத்து ரெடி பண்ணி கொண்டு வருவதும் சிரமம் தான். ஆனால் டைரக்டர் அதை யெல்லாம் யோசிக்கமாட்டார். என்ன செய்தாலும் சரி. அவர் எதிர் பார்க்கும் காஸ்ட்டியூமை உடனே தயார் செய்தே ஆக வேண்டும்.

    துணி எடுக்க சென்றவர் மதியம் வரை வரவில்லை. அவருக்காக நான் காத்திருந்தேன். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. காலதாமதம் ஆனதால் டைரக்டர் சூடாகி இருக்கிறார். அது எனக்கு தெரியாது.

    துணி வந்ததும் அவசர அவசரமாக பாவாடை, தாவணி காஸ்ட்டியூமில் ரெடியாகி படப்பிடிப்புக்கு ஓடினேன்.

    என்னை பார்த்ததும் டைரக்டருக்கு கடும் கோபம். இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறேன் என்று நினைத்து இருக்கிறார். ஆனால் அது என் தப்பில்லை. துணி கிடைப்பதற்கு தாமத மாகி விட்டது. அதற்கு நான் என்ன செய்வது?

    ஆனால் டைரக்டருக்கு அந்த பிரச்சினை எதுவும் தெரியவில்லை. டிரெஸ் மாற்றிவிட்டு வருவதற்கு இவ்வளவு நேரமா? என்று கன்னா பின்னாவென திட்டினார். ஒரே படத்தில் இவ்வளவு திமிரா உனக்கு? என்று கடுமையாக திட்டினார்.

    எதற்காக திட்டுகிறார்? நாம் எந்த தப்பும் செய்யவில்லையே? செய்யாத தப்புக்கு ஏன் இப்படியெல்லாம் திட்டுகிறார்? என்று தவித்து போனேன். முகம் சுருங்கி கண்கள் கலங்கிவிட்டன.

    என்னை பார்த்து பரிதாபப்பட்ட தாராமாஸ்டர் தான் எனக்கு ஆறுதல் கூறினார். 'அவர் அப்படித்தான்' நீ எதையும் கண்டுக்காதே, என்று என்னை தேற்றினார்.

    அவர் எப்போது திட்டினாலும் கொஞ்சம் நேரத்தில் மறந்து விடுவார். நீ நடிப்பதில் கவனமாக இரு. நீ எந்த தப்பும் செய்யவில்லை. எனக்கு புரிகிறது. நிச்சயம் அவரும் புரிந்து கொள்வார் என்று என்னை ஆசு வாசப்படுத்தி நடிக்க வைத்தார்.

    கண்களை துடைத்துக்கொண்டு காட்சி யில் நடிக்க சென்றேன். இப்படித்தான் அந்த படத்தில் பரபரப்பு, பதட்டம், பயம் என்று எல்லாவற்றையும் சந்தித்து தான் ஒவ்வொரு காட்சி யையும் நடித்து முடித்தேன்.

    35 நாட்களில் திட்ட மிட்டபடி படப்பிடிப்பு முடிந்தது. அப்புறம் அங்கு என்ன வேலை? சென்னைக்கு திரும்பிவிட்டேன்.

    பட வேலைகள் முடிந்து குறிப்பிட்ட நாளில் படமும் திரைக்கு வந்தது!

    'ரிசல்ட்' எப்படி? இந்த படமாவது கை கொடுத்ததா? கை விட்டதா? அடுத்த வாரம் சொல்கிறேன்...

    (தொடரும்)

    • கனடாவில் மத்திய பெடரல் மற்றும் பிராந்தியத் தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன.
    • பஞ்சாயத்துக்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே தேர்தல் என்றால் பாதுகாப்பு என்ன ஆகும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

    இந்தியாவின் ("பாரத்" என்று சொல்ல வேண்டுமோ?) அரசியலமைப்பை உருவாக்க சுமார் மூன்று ஆண்டு ஆனது. ஆனாலும் அப்போது "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" என்று கூறி ஸ்திரத்தன்மை ஏன் பரிந்துரைக்கப்படவில்லை? "ஸ்திரத்தன்மையும் பொறுப்புடைமையும் இணைந்து இருந்தால் நல்லது. அப்படி இருப்பதில்லை. எனவே பொறுப்புடைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்!" என்று நமது அரசியல் நிர்ணய முன்னோர்கள் நினைத்ததே காரணம்! சட்டத்தின் வரிகளை விட அதை இயற்றுபவர்களின் நோக்கமே பிரதானம்!

    அமெரிக்காவில் கூட ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதில்லை. ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் முதல் செவ்வாய் அன்று 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதாவது நிலையான கால அளவு! ஆனால் கவர்னர் தேர்தல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

    கனடாவில் மத்திய பெடரல் மற்றும் பிராந்தியத் தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன. இங்கிலாந்து நாட்டில் "ஹவுஸ் ஆப் காமன்ஸ்" (தேசிய பாராளுமன்றம்) மற்றும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள சட்டமன்றங்களுக்குத் தனித் தேர்தல் வெவ்வேறு நேரங்களில் நடக்கும். ஜெர்மனியில் பெடரல் பாராளுமன்றம் மற்றும் மாநிலத் தேர்தல்கள் ஆகியவற்றிற்கான தேர்தல்கள் தனித்தனி தான்!

    சுவீடனில் ரிக்ஸ்டாக் (உச்ச அமைப்பு), பிராந்தியம் அல்லது கவுண்டி கவுன்சில் சட்ட மன்றங்கள் மற்றும் நகராட்சி மன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நாளில் நடத்தப்படுகின்றன. பெல்ஜியத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தல்! தென் ஆப்பிரிக்காவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாகாண மற்றும் தேசியத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.

    பெல்ஜியம் மற்றும் சுவீடன் ஆகியவை சிறிய நாடுகள்! ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்துவதில் பெரிய சவால்கள் இல்லை. தென் ஆப்பிரிக்கா ஓரளவு சரியான ஒப்பீடு. இந்தியா பரப்பளவில் உலகில் ஏழாவது இடம். தென் ஆப்பிரிக்கா 24-வது! அங்கு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் மாகாண மற்றும் தேசிய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் தேர்தல் முறை விகிதச்சாரப் பிரதிநிதித்துவம்.

    தென் ஆப்பிரிக்காவின் தேசிய பாராளுமன்றத்தில் 400 எம்.பி.க்கள் உள்ளனர், பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மொத்தம் ஒன்பது மாகாணங்கள்! சட்டமன்றங்களின் அமைப்பு மக்கள்தொகையைப் பொறுத்து 30 முதல் 90 இடங்கள் வரை மாறுபடும்.

    தென் ஆப்பிரிக்காவில் பழைய ஓட்டுச் சீட்டு முறை! எனவே பெரிய புகார்கள் எழுவதில்லை. நாம் வாக்குச் சீட்டு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏராளமான இ.வி.எம்.கள் தேவை! மேலும் இந்தியாவில் "பர்ஸ்ட் பாஸ்ட் போஸ்ட்" முறை. அதிக வாக்கு பெற்றவர் வெற்றியாளர். 30 சதவீதம் ஆதரவுடன் கூட ஆட்சியைப் பிடிக்க முடியும்.

    எனவே "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" முறையில் மத்திய, மாநில ஆட்சிகளைக் கைப்பற்றிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது பாரதிய ஜனதா. "வந்ததடி வெள்ளையம்மா, உன் காளைக்கு ஆபத்து!" என்று பதறுகின்றன பெரும்பாலான மாநிலக் கட்சிகள்.

    எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலம் வரை 1957, 1962, 1967 ஆகிய மூன்று தேர்தல்களும் "ஒரே நாடு..ஒரே தேர்தல்"! தான்! மக்களவை, சட்டமன்றம் ஆகிய இரண்டுக்குமான வேறுபாடுகள் பற்றி எல்லாம் பெரிய புரிதல் கிடையாது. "மேலே", "கீழே" என்பார்கள். அதாவது மேலே என்பது மக்களவை. கீழே என்பது சட்டமன்றம்.

    எனது ஆரம்பக் கல்விக் கூடமான கமாலியா பள்ளியில் ஆழ்வார் சார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் இந்தியத் தேர்தல் முறை பற்றி மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த எண்ணினார். அதனால் பள்ளிக்கூடத்தில் மாதிரி சட்டமன்றம் ஒன்றை நடத்தினார். அதில் நான் மந்திரிசபையில் இடம் பெற்று இருந்தேன். ஆழ்வார் சார் மேற்பார்வையில் பள்ளி கரும்பல கையில் தினமும் தேர்தல் முறை பற்றி செய்தி எழுதிப் போடுவோம்.

    ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி 1969-ல் பிளவுபட்டது. அன்றைய பிரதமர் இந்திராகாந்தி பெரும்பான்மையை இழந்தார். திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவரது ஆட்சி தொடர்ந்தது. வங்கதேச யுத்தம், மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கம் போன்ற நடவடிக்கைகளால் இந்திராவுக்கு ஆதரவு பெருகியது.

    அதைப்பயன்படுத்தி மக்களவையைக் கலைத்துவிட்டுத் தேர்தலை முன்கூட்டியே கொண்டுவர 1970-ல் திட்டமிட்டார் இந்திரா. 1971ல் திடீர்த் தேர்தல்! அண்ணாவின் மறை வுக்குப் பிறகு 1969ல் கலைஞர் முதல்வராகி இருந்தார். தனது தலைமையை உறுதிப்படுத்திக்கொள்ள சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார்.

    இந்தியாவில் முதல் மூன்று மக்களவையும் (1952, 57, 62) முழுக் காலமும் பதவியில் இருந்தன. நான்காவது மக்களவை (1967) முன்கூட்டியே கலைக்கப்பட்டது. அவசர நிலைக்குப் பின் ஐந்தாவது மக்களவையின் காலம் (1976) ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. 8, 10, 14, 15-வது, மக்களவைகள் முழுப் பதவிக் காலமும் நீடித்தன. 6, 7, 9, 11, 12, 13-வது மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன.

    இப்படி நிகழ்ந்ததால், 'ஒரே நேரத்தில் தேர்தல்' என்ற நடைமுறை முழுக்கச் சீர்குலைந்தது. 1999 ல் ஆட்சிக்கு வந்த பா. ஜனதா பிரதமர் வாஜ்பாய் சில மாதங்கள் முன்னதாக மக்களவையைக் கலைத்தார். மன்மோகன்சிங், நரேந்திர மோடி (1.0.) முழு ஆட்சிக்காலமும் பதவி வகித்தார்கள். நடப்பு மக்களவை முன்கூட்டியே கலைக்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது.

    மீண்டும் பழைய நிலைக்குப் போகவேண்டும் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி. எனவே "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" நிகழ்ச்சிநிரலை கையில் எடுத்து இருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நியமிக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் விலகிவிட்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் ஆகியோர் ராம்நாத் கோவிந்த்துடன் தொடர் ஆலோசனை செய்துவருகின்றனர்.

    "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" முறையைக் கொண்டுவருவதற்குக் கூறப்படும் காரணம் என்ன? நாடு முழுவதும் ஏதாவது ஒரு தேர்தல் எப்போதும் நடப்பதால் வளர்ச்சிப்பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், ஆறு, ஏழு ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மிச்சமாகும்.

    தேர்தல் செலவு என்பது மக்களாட்சியின் அடிப்படை!. பல,பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் மத்திய அரசு தேர்தல் செலவைப் பெரிதாக நினைக்கத் தேவையில்லை. கிட்டத்தட்ட 70 கோடி வாக்காளர்கள் இருக்கும் இந்தியா மாதிரியான பெரிய தேசத்தில் ஒரு வாக்காளருக்கு 100 ரூபாய் கூட தேர்தல் செலவு செய்ய முடியவில்லை என்றால் "பச்சப் புள்ள" கூட பக,பக என்று சிரிக்கும்! பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொண்டாலேபோதும்!

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆயுள் பாக்கி இருக்கிற பல சட்டமன்றங்களைக் கலைக்க வேண்டியிருக்கும். இப்போது தான் தேர்தல் நடந்து முடிந்த கர்நாடக அரசுக்குக் கிட்டத்தட்ட முழு ஆயுள் பாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த தேர்தல் 2026-ல் தான்! இப்படிப் பல மாநிலங்கள்!

    "இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்" என்று கூறுகிறது நமது அரசியலமைப்பின் முதல் ஷரத்து. எனவே "பாரதம்" என்ற பெயர் மாற்றத்தின் மூலம் அதையும் உடைத்துவிட்டு கூட்டாட்சிக் கோட்பாட்டை நீக்கி விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பெயர் மாற்றம் மூலம் பழமைவாதிகளைத் திருப்திப்படுத்திவிடலாம். அதே நேரத்தில் "மாநிலங்களின் ஒன்றியம்" என்பதை மாற்றியமைப்பதன் மூலம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்து விடலாம்!

    பல்வேறு வட மாநிலங்களுக்கு 2023 கடைசியில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. 2024-ல் மேலும் பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 6 மாதம் முன்னதாகத் தேர்தல் அறிவிக்கத் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் போபால் நகரத்தில் சூசகமாகக் கூறிவிட்டார்.

    ஆகையால் 2023 செப்டம்பர் 18 -ந் தேதி துவங்க இருக்கும் சிறப்புக் கூட்டத் தொடரில் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு "ஒரே நாடு-ஒரே தேர்தல்" நடைமுறையை "நாட்டு நன்மைக்காக" கொண்டுவருகிறோம் என்று தேச பக்தர்கள் கூறினாலும் கூறுவார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. கூடவே "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" நடைமுறையின் முதல் கட்டமாக 9-10 மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்படலாம்! அல்லது ஒட்டு மொத்தமாகக் கூடத் தேர்தல் அறிவிக்கப்படலாம்! எல்லாம் மோடிக்கே வெளிச்சம்!

    தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், சி.பி.ஐ., சி.பி.எம்., பார்வர்ட் பிளாக், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அ.தி.மு.க. 2018-ல் எதிர்த்தது. இப்போது ஆதரிக்கிறது. இது தான் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமான வித்தியாசம், பிரதர்!

    மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் தான். 1983-ல் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆண்டறிக்கையை சமர்ப்பித்த போதே இது விவாதிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டின் சட்ட ஆணையத்தின் அறிக்கையிலும் உள்ளது.

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒரே நேரத்தில் பெருமளவிலான மனிதவளம் தேவைப்படும். அதிக எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை (VVPAT) இயந்திரங்கள் வேண்டும். அவற்றை வாங்க எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்? அவை ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் மாற்றப்பட வேண்டும்.. பாதுகாப்பாகச் சேமிக்கப்பட வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும்?

    தற்போது உள்ளாட்சித் தேர்தல்களை மாநிலங்கள்தான் நடத்துகின்றன அவற்றின் எண்ணிக்கை மிக, மிகப் பெரிய அளவு! அவற்றையும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்குள் கொண்டுவர முன்னாள் ஜனாதிபதி குழுவுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். பஞ்சாயத்துக்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே தேர்தல் என்றால் பாதுகாப்பு என்ன ஆகும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

    ஏதாவது ஒரு காரணத்தால் மத்திய அரசு கவிழ்ந்தாலோ, மாநில அரசு நடைபெறமுடியாமல் போனாலோ என்ன செய்வது? மக்களவைக்கும் சட்டப் பேரவைக்கும் வெவ்வெறு சமயத்தில் தேர்தல் நடக்கும் போது மாநிலப் பிரச்சினைகளைப் பரிசீலித்து வாக்களிக்கும் வாய்ப்பு உருவாகும். எனவே மாநில சுயாட்சியை இது பாதிக்கும். மத்திய மேலாதிக்கத்தை மேலும் அதிகப்படுத்துவதே இதன் நோக்கம் என்பது வெட்டவெளிச்சம்!

    வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தடையாக இல்லாமல் இருக்க விதிகளைத் நிறுத்தினாலே போதும். நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இரண்டு மாதம் தேவை என்றால் எல்லா மாநிலத்திலும் எதற்கு "பணி நிறுத்தம்" செய்ய வேண்டும். தேர்தல் பரப்புரைக் காலத்தை 10 நாட்களாகக் குறைக்கலாம்!

    இந்தியா என்பது ஒரே நாடு தான் என்றாலும் அது தேசங்களின் தேசம்! தனியொரு பிரதமரின் கனவுத் திட்டத்திற்காக நாடு சுமையை ஏற்க முடியாது.

    • சட்டமோ, அரசோ, சீர்திருத்தவாதிகளோ சிந்திக்காத ஒன்றை அப்பெண் சிந்தித்தார்.
    • இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பெண்கள் இந்திய ஆயுதப் படையில் சேர்க்கப்படலாம்.

    "ராணுவத்தில் சேருமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அவரவர்க்கு ஆர்வம் உள்ளிருந்து வர வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்தவும், இதயத்தில் எழும் ஆசையை பின்பற்றவும் ஒருவருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், ராணுவத்தில் சேருமாறு நான் பரிந்துரைக்கிறேன். பல சமயங்களில், பெண்கள் ராணுவத்தில் சேர விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய எதிர்ப்பைப் பற்றி பயப்படுகிறார்கள், எனவே இந்த எதிர்ப்புகளை பெண்கள் மன உறுதியுடன் எதிர்த்துப் போராடவும், அவர்கள் உண்மையில் விரும்புவதைச் செய்யவும் நான் அவர்களை ஊக்குவிக்கிறேன்."

    - மேஜர் பிரியா ஜிங்கன்

    இந்நாட்களில் இந்திய ராணுவத்தில் பெண்கள் சேருவதும், அங்கே தன் சாதனைகளை பதிப்பதும் மிக இயல்பாக, சாதாரணமாக உள்ளது. ஆனால் 1992 வரை பெண்கள் உள்ளே வர முடியாமல் இரும்புத் திரை போட்டு மூடி இருந்தது இந்திய ராணுவம். இன்றைக்கு பல பெண்கள் தன்னம்பிக்கையோடு படைப்பயிற்சிப் பெற்று வலம்வருவதற்கு முன்னோடியாய் இருப்பவர்தான் இந்தக்கட்டுரையின் நாயகி.

    பெண்மையும், நளினமும், நாணமும், மென்மையும் கொண்டவர்கள் பெண்கள். அவர்களால் மிகக் கடுமையாகவும், வலிமையாகவும், கண்டிப்புடனும் பணியாற்ற வேண்டிய ராணுவத்தில் சேரவோ, பணியாற்றவோ முடியாது என்று இரும்புத் திரை போட்டு மூடியிருந்த கதவுகளை உடைக்க முடிவு செய்தார் ஒரு பெண். ஆம். சட்டமோ, அரசோ, சீர்திருத்தவாதிகளோ சிந்திக்காத ஒன்றை அப்பெண் சிந்தித்தார்.

    தன் சிந்தனை செயல்வடிவம் பெற்றபிறகு, தன் கனவு நிறைவேறிய பிறகு பல்வேறு துறைகளில் சேவைகளும் சாதனைகளும் படைத்த பின்னர் அவரிடம்,

    "உங்கள் கனவின் பின்னணி என்ன?" என்று ஒரு பத்திரிகையில் பேட்டி கண்டபோது அவர் மிகவும் உற்சாகமாக எப்படி பதிலளித்தார் தெரியுமா?

    "நான் சொல்வது உங்களுக்கு ஒரு திரைப்படம் பார்ப்பது போலவோ, அல்லது வினோதமாகவோ தோன்றலாம். என் வாழ்வில் நான் என் நாட்டிற்காக ஆலிவ்பச்சை நிற சீருடையை அணிந்து நடக்கவேண்டும் என்று விரும்பினேன். சிறுவயது முதலே அது என் கனவாக இருந்தது. ஒருவேளை என் அப்பா போலீஸ் சர்வீசில் இருந்ததற்கும் நான் டாம்பாய் ஆனதற்கும் தொடர்பு இருந்திருக்கலாம்"

    ஆம் நண்பர்களே! சிறுவயதில் நம் மனதில் எது அழுத்தமாகப் பதிந்து நம் லட்சியத்தை உருவாக்குகிறதோ, எது நம்முடைய சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் இயக்குகிறதோ அதுவாகவே மாறுவது என்பதை காலம் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

    தன்னுடைய பள்ளி பருவத்திலேயே தான் கொண்டிருந்த ராணுவக் கனவுகளை நனவாக்கத் துடித்த ஒரு பெண்ணின் முயற்சிதான் பெண்களை ராணுவத்தில் சேர்க்கலாம் என்ற சிந்தனையைத் தூண்டி அதனை செயல்பாட்டிற்கும் கொண்டுவர வைத்தது.

    வலிமையும், நெஞ்சுறுதியும், கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளும் திறனும், அர்ப்பணிப்பு உணர்வும் பெண்களுக்கும் உண்டென்பதை நிரூபித்து முதன்முதலில் இந்திய ராணுவத்திற்குள் காலடி வைத்ததோடு தான் விரும்பிய காலாட்படை பிரிவு கிடைக்கவில்லை என்றாலும் ராணுவத்தில் பச்சை நிற சீருடையோடு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததே என்று பத்தாண்டுகள் சிறப்பாக பணியாற்றி வெள்ளிப்பதக்கம் பெற்று ஓய்வுபெற்றார் அப்பெண். அவர் பெயர் பிரியா ஜிங்கன்.

    இமாசலப் பிரதேசம் சிம்லாவில் ஒரு போலீஸ் அதிகாரியின் மகளாகப் பிறந்தவர் பிரியா ஜிங்கன். 9-ம் வகுப்பு படிக்கும்போதே ராணுவ வீரர்கள் அணிந்திருக்கும் ஆலிவ்பச்சை நிற சீரூடை மீது மிகுந்த ஆசை கொண்டார். ராணுவ சீருடை அணிந்து மிடுக்காக, தாய்நாட்டிற்காக பணியாற்ற வேண்டும் என்று அவருக்கு ஆர்வம் பிறந்தது. ஆனால் அது பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படாத காலம்.

    பள்ளிப்படிப்பு முடிந்து பிரியா ஜிங்கன், சிம்லாவில் செயின்ட் பீட் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறார். ராணுவத்தில் சேரவருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது அந்த விளம்பரம்.

    பெண்கள் சேர முடியாதோ என்று கவலைப்பட்ட பிரியா, 1989-ல், "ராணுவத்தில் பணியாற்ற ஏன் ஆண்களை மட்டும் அழைக்கிறீர்கள்? என்னைப் போன்ற ஆர்வமுள்ள இளம் பெண்களையும் தேர்ந்தெடுப்பதற்கு வாசல் திறந்துவிடுங்கள். பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவார்கள். நான் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்று அப்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் சுனித் பிரான்சிஸ் ரோட்ரிகசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

    பிரியா ஜிங்கனின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய ராணுவத் தளபதி, "ஒரு பெண்ணிடம் இத்தனை ஆர்வம் காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பெண்கள் இந்திய ஆயுதப் படையில் சேர்க்கப்படலாம்" என்று பதில் எழுதுகிறார்.

    தன் கடிதத்திற்கு பதில் கிடைத்ததை எண்ணி ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் மகிழ்ந்த பிரியா, அக்கடிதத்தை தன் பொக்கிஷமாக இன்றுவரை பாதுகாத்து வருகிறார். தான் போலீசாக வேண்டும் என்று விரும்பிய தன் குடும்பத்தின் கனவுகளை தள்ளிவைத்துவிட்டு ராணுவத்தின் அழைப்புக்காக காத்திருக்க தொடங்குகிறார். அதே நேரத்தில் சட்டக் கல்வியும் படித்து முடிக்கிறார்.

    பிரியா ஜிங்கன் எதிர்பார்த்தபடியே, 1992-ல், "பெண்களே! ராணுவம் உங்களை அழைக்கிறது" என்று பத்திரிகையில் விளம்பரம் வந்ததைப் பார்க்கிறார். அந்த விளம்பரத்தைப் பார்த்த அந்த நொடியே "என் பிரார்த்தனைகள் பலித்துவிட்டதாக எண்ணினேன்" என்று ஒரு பேட்டியிலும் கூறுகிறார் பிரியா.

    ராணுவத்தில் ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் எனும் பதவிக்கு இரண்டு இடங்கள் காலியாக இருப்பதாகவும், மற்ற பணிகளுக்காகவும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. வந்த விளம்பரத்தைப் பார்த்து சட்டம் படித்த பிரியா ஜிங்கன் விண்ணப்பித்தார்.

    காலாட்படை பட்டாலியனில் சேருவதற்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக சட்டப் பட்டதாரியான அவர் நீதிபதி அட்வகேட் ஜெனரல் கிளையில் சேர்க்கப்பட்டார்.

    சேவைகள் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.பி.) மூலம் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டு ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு முதல் பெண்ணாக 001 கேடட் என அறிவிக்கப்பட்டு 1993 மார்ச் 6-ந்தேதி பணியமர்த்தப்பட்டார் பிரியா ஜிங்கன். இதன் மூலம் ராணுவத்தில் இணைந்த முதல் பெண்ணாக இந்திய வரலாற்றில் பதியப்படுகிறார் பிரியா ஜிங்கன். இவருடன் சேர்ந்து 24 பெண்கள் ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.

    பணியில் சேருவதற்கு முன்பு பயிற்சிகள் பெறவேண்டும். அதற்காக சிம்லாவில் இருந்து சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி அகாடமிக்கு பிரியாவை தனியே அனுப்பும்போது அவரின் பெற்றோர் உள்ளுக்குள் மிகவும் பயந்துள்ளனர். அன்று இரவு முழுக்க அவர்கள் தூங்கவில்லை. ஆனாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் மகளின் கனவுகளுக்கு தடை சொல்லாமல் அனுப்பிவைத்ததை பின்னாட்களில் நன்றியுடன், "என் பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லையென்றால், என் கனவுகள் நிறைவேறி இருக்காது" என நினைவுகூர்கிறார் பிரியா ஜிங்கன். இவ்வார்த்தைகளை இன்றைய தலைமுறை மனதில் கொள்ளவேண்டும்.

    சென்னையில் பயிற்சியில் இருக்கும்போது ஆண்கள் பெண்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சியின்போது ஒருமுறை ராணுவப் பயிற்சி உடையோடு நீச்சல்குளத்தில் இறங்கவேண்டிய சூழ்நிலை வந்தது.

    கூச்ச சுபாவமுள்ள பெண் கேடட்கள், ஆண் கேடட்களுடனே ஒரே நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும் அல்லது ஆண் அதிகாரிகளின் கண்காணிப்பில் பயிற்சி பெற வேண்டும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. பிரியா ஜிங்கன் உட்பட 25 பெண்களும் ஒரு டவலை தங்கள் உடையின் மீது சுற்றிக்கொண்டு அது கீழே விழாதவாறு இறுக்கமாக பற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த படைப்பிரிவு தளபதி கேப்டன் பி.எஸ்.பெஹ்ல் அவர்களை அட்டென்ஷனில் நிற்கும்படி கட்டளையிட்டார். உடையின் மீதிருந்த துண்டுகள் கீழே விழுந்தன. அந்தநொடியே புரிதலுடன் அவர்கள் முன்னேறிச் சென்றார்கள்.

    "வழக்கமாக இருக்கும் ஸ்டீரியோடைப்களை உடைப்பது சவாலானதாக இருந்ததா?" என்றும், "உங்கள் குழுவில் உள்ள ஆண் கேடட்கள் பெண்கள் மீது என்ன எதிர்வினைகளை நிகழ்த்தினார்கள்?" என்றும் மேஜர் பிரியாவிடம் கேட்டபோது,

    "உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் வழக்கத்தை, ஸ்டீரியோடைப்களை உடைக்கிறேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை; நான் மற்றவர்களைப் போல் திறமையானவள் என்று உணர்ந்தேன். என் கனவு நனவாகிவிட்டதால் நான் என் பணியின்பால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். எந்த பழைய தத்துவங்களைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை. ஆண் கேடட்கள் தங்களுடைய சொந்த பேட்ச்மேட்களை நடத்துவது போலத்தான் பெண்களாகி எங்களையும் நடத்தினார்கள். அதிகாரிகளும் தேவைக்கேற்ப கண்டித்தனர். பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டினர். அறிவுரைகள் தேவைப்படும்போது அவற்றையும் இருபாலாருக்கும் ஒன்றுபோலத்தான் வழங்கினர்.

    "ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?" என்ற கேள்வி மேஜர் பிரியா ஜிங்கனிடம் வைக்கப்பட்டபோது அவர்,

    "நான் கொடுக்கக்கூடிய ஒரே அறிவுரை என்னவென்றால், நீங்கள் இந்த உயரடுக்கு சக்தியின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் என்றால், அதைக் குறித்து மிகப் பெருமை கொள்ளாதீர்கள், மேலும் உங்கள் பெண்மையை உதவி கேட்கவோ அல்லது நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்வதைத் தவிர்க்கவோ பயன்படுத்த வேண்டாம். உங்கள் நியமனத்தின் கண்ணியத்தை நீங்கள் பராமரிக்க வேண்டும். நீங்கள் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், அதனால் வரும் சவால்களைச் சமாளிக்க, சுலபமான வழியையோ அல்லது அதைத் தவிர்க்க சாக்குப்போக்கையோ கண்டுபிடிக்க வேண்டாம்."

    அறிவும் அனுபவமும் முதிர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இப்படிப்பட்ட அறிவுரைகளை வழங்கமுடியும் அல்லவா!

    ராணுவத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் நிறைந்த சேவைக்குப் பிறகு, மேஜர் ஜிங்கன் 2003-ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் ஆசிரியராகவும், பல்வேறு பயிற்சிவழங்குபவராகவும், தன்முன்னேற்ற பயிற்சியாளராகவும் மிகச் சிறந்த சேவைகளை வழங்கிவருகிறார்.

    ராணுவத்தில் சேவையாற்றிய முதல் பெண் என்பதற்காக குடியரசுத்தலைவரிடம் பதக்கம் பெற்ற மேஜர் பிரியா ஜிங்கன். ராணுவத்தில் பெண்களுக்கு எதிராக வரும் புகார்களைப் பற்றியும் அவ்வப்போது அரசுக்கு எடுத்துரைத்து சமவாய்ப்பும், சமநீதியும் வழங்கவும் வலியுறுத்தி வருகிறார். வித்தியாசமாக சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு மேஜர் பிரியா ஜிங்கன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதானே!

    • பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் உணவு ஆலோசகர் கைகோர்க்கும் பட்சத்தில் ஒரு பக்கவாத நோயாளி முழுமையாக குணம் பெற்று அந்த பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டு விடுவார்.
    • பக்கவாதம், நீரிழிவு உள்ளவர்கள் அதிகம் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பக்கவாதம் ஒரு மனிதனை முழுமையாக முடங்கிப்போகச் செய்யும் மிகவும் ஆபத்தான ஒரு நோய். முன்பெல்லாம் பக்கவாதம் வந்தவுடன் ஆயுள் முழுவதும் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது பக்கவாதம் வந்தவர்கள் பல்வேறு பயிற்சிகளுக்கு பிறகு இயல்பான வாழ்க்கை வாழ வழி ஏற்பட்டுள்ளது.

    பக்கவாதம் எதனால் வருகிறது? அதன் பாதிப்புகள் என்ன? அதற்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்பது பற்றி ஏற்கனவே கூறி இருக்கிறேன். இன்று பக்கவாத நோயாளியை மீட்டுக் கொண்டு வந்து அவருக்கு எப்படி மறுவாழ்வு அளிப்பது என்பதை பற்றி சொல்கிறேன்.

    பக்கவாதம் பாதித்தவர்களுக்கு மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்து அவருக்கு ஏற்பட இருக்கும் அடுத்தக்கட்ட பாதிப்பை தடுத்து விடுவார். பின்னர் அந்த பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வர மருத்துவர் அளிக்கும் மருந்தால் மட்டும் முடியாது. பிசியோதெரபிஸ்ட் அளிக்கும் பயிற்சிகள் பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும். நோயாளிகளுக்கு உடனடியாக கொடுக்கப்படும் சிகிச்சையை விட பிறகு அவர்களுக்கு அளிக்கப்படும் பிசியோ தெரபி பயிற்சியே நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடற்பயிற்சி மட்டும் அல்லாமல் பேசும் பயிற்சி, கை, கால்களை அசைக்க பயிற்சி, நடக்கும் பயிற்சி என பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கென தனித்தனியாக பயிற்சி நிபுணர்கள் உள்ளனர். மருத்துவர்களுடன், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் உணவு ஆலோசகர் கைகோர்க்கும் பட்சத்தில் ஒரு பக்கவாத நோயாளி முழுமையாக குணம் பெற்று அந்த பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டு விடுவார்.

    ஒரு பக்கவாத நோயாளிக்கு என்ன மனதில் ஓடிக் கொண்டிருக்கும் என்றால் அவரே அவரது வேலையை செய்ய வேண்டும். அவரே அவர் கையால் சாப்பிட வேண்டும். அவரே வண்டி ஓட்ட வேண்டும். இவையெல்லாமே அவரது மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். இதையெல்லாம் தான் பக்கவாதமானது தடுமாறச் செய்து விடுகிறது. இந்த சூழ்நிலையில் நரம்பியல் நிபுணர் பக்கவாதத்துக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உயிரை காப்பாற்றி விடுகிறார். அடுத்து பிசியோ தெரபிஸ்ட் நோயாளியை நடக்க வைப்பார்கள். இயங்காத கை, கால்களை இயங்க வைப்பார்கள். சரியாக அமர வைப்பார்கள். நோயாளிகளுக்கு மேற்கொண்டு இந்த பக்கவாதத்தின் தாக்கம் மோசமாவதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வார்கள். 2-வதாக நிறைய பேருக்கு பேச முடியாது. விழுங்க முடியாது. இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களை பேச வைப்பதற்கும், அவர்கள் சாப்பிடுகின்ற உணவை விழுங்க வைப்பதற்கும் பிசியோதெரபிஸ்ட் வேலை மிக முக்கியம்.

    பக்கவாத நோயாளிகளை மீட்டுக் கொண்டு வருவதில் மன நல மருத்துவர்களின் பங்கும் உள்ளது. பக்கவாத நோயாளிகள் மனதளவில் நொந்து போய் இருப்பார்கள். எனவே அவர்களிடம் பேசி இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. நிச்சயமாக நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இதில் இருந்து வெளியே வந்து உங்களை பார்த்துக் கொள்ள முடியும். உங்களை நீங்களே பார்த்துக் கொள்ள முடியும் என்பதை மனநல மருத்துவர்கள் புரிய வைப்பார்கள்.

    நிறைய பேர் என்ன சொல்வாங்கன்னா, நிறைய சாப்பிடுங்க, ஏதாவது சாப்பிடுங்க என சொல்லி வற்புறுத்துவார்கள். அப்படி அவர்களை வற்புறுத்தக் கூடாது. அந்த சூழ்நிலையில் நோயாளிக்கு சரியான அளவில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு கிடைக்கும்படியான உணவுகளை வழங்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு எது என்பதை யெல்லாம் பார்த்து அவர்களது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி அவர்களது உணவை கட்டுப்படுத்தி, வகைப்படுத்தி வழங்குவது உணவு ஆலோசகரின் பணியாக உள்ளது. பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாங்கள் இந்த முறையைத் தான் கடைபிடிக்கிறோம்.

    பிசியோதெரபிஸ்ட் அளிக்கும் சில பயிற்சிகளை சொல்கிறேன்.

    நாம் எந்தவொரு செயலை செய்ய வேண்டும் என்றாலும் கை வலுவானதாக இருக்க வேண்டும். அந்த கையை இயக்கும் மையமாக தோள்பட்டை இருக்கிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் தசைகள் பலவீனமாகி தோள்பட்டை இறங்க வாய்ப்புள்ளது. இதை முன்கூட்டியே அறிந்து கொண்டு பிசியோதெரபிஸ்டுகள் பயிற்சி கொடுத்து தோள்பட்டை இறங்க விடாமல் தடுக்கிறார்கள்.

    பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்களில் பலர் எப்போதும் படுத்த நிலையிலேயே இருப்பார்கள். எப்போதும் படுத்த நிலையிலேயே இருந்தால் படுக்கை புண் வரவாய்ப்புள்ளது. அவ்வாறு படுக்கை புண் ஏற்படுவதை தடுக்க பிசியோதெரபிஸ்ட் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை திரும்பி, திரும்பி படுக்க ஆலோசனை வழங்குவார்கள். அடுத்து படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வைப்பது, சேரில் அமர வைப்பது, அடுத்து கொஞ்சம் நடக்கச் சொல்வது போன்ற பயிற்சிகளை அளிப்பார்கள். இந்த பயிற்சிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அளிக்கப்படுவது கிடையாது. நோயாளியின் உடல் நிலை முன்னேற்றத்தை பொறுத்து படிப்படியாக இந்த பயிற்சிகளை அளிப்பார்கள். இதில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், கைகள் செயல்பாடு மற்றும் தசைகள் வலுவடைவதற்கான பயிற்சிகளை தருவார்.

    அடுத்து உணவு ஆலோசகரின் பங்களிப்பு பற்றி பார்க்கலாம். பக்கவாதம் வந்தவர்களுக்கு கை, கால், வாய் ஆகியவற்றின் செயல்பாடு இல்லாமல் இருக்கும். அவர்களின் தசைகள் பலகீனமாக இருக்கும். உடலில் இரும்புச்சத்து, தேவையான உயிர்ச்சத்துக்கள் குறைவாக இருக்கும். மேலும் மலச்சிக்கலும் சேர்ந்து அவர்களை பாடாய்படுத்தும்.

    அந்த சமயத்தில் உணவு ஆலோசகரின் ஆலோசனைகள் படி உணவு உட்கொண்டோம் என்றால் உடலுக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும்.

    நாம் எப்போதுமே அரிசி தான் சாப்பிடுகிறோம். எனவே அதனை தவிர்க்க வேண்டாம். ஏதாவது ஒரு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற 2 நேரமும் கண்டிப்பாக சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ராகி, கம்பு, சோளம் போன்றவை இருந்தால் சிறப்பானதாக இருக்கும். நோயாளிகளின் தசை பலகீனமாக இருப்பதால் அதனை வலுப்படுத்த கண்டிப்பாக புரதச்சத்து அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு, பயிறு போன்றவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சோயா மற்றும் அதில் தயாரிக்கப்படும் பொருட்களில் புரதச்சத்து உள்ளது. காளானிலும் புரதச்சத்து இருக்கிறது. எனவே தினமும் ஏதாவது ஒரு பருப்பு அல்லது பயிறை வேகவைத்தோ சாப்பிடலாம். சுண்டலை தாளித்த முறையிலோ எடுத்துக் கொள்ளலாம்.

    ரத்தக்கொதிப்பு இருக்கும் நோயாளிகள் கண்டிப்பாக உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது. நாம் சாதாரணமாக சாப்பிடும் உணவிலேயே போதுமான உப்பு இருக்கும். காலையில் இருந்து சாப்பிடுகிற சாம்பார், குழம்பு, ரசம், பொறியல் என எல்லா உணவுகளிலும் உப்பு சேர்க்கப்படுகிறது. அதுவே நமக்கு போதுமானவை. முடிந்தளவு இதில் எல்லாம் உப்பை சேர்த்து விட்டு சாதத்தில் உப்பு போடுவதை தவிர்த்துக் கொள்ளலாம். உப்பில் ஊற வைத்த கருவாடு, சிப்ஸ், பீசா, பர்கர், பப்ஸ் போன்றவற்றில் வழக்கமான அளவை விட அதிக அளவு உப்பு சேர்ப்பார்கள். நிறைய கெமிக்கல்சும் சேர்க்கப்படும். இவை அனைத்துமே உப்பாகத்தான் மாறும். இதனால் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    பக்கவாதம், நீரிழிவு உள்ளவர்கள் அதிகம் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் வேகவைத்த காய்கறியோ, அல்லது பொறியலோ எடுத்துக் கொள்ளலாம். மதியம் 2 காய்கறிகளோ அல்லது கீரை எடுத்துக் கொள்ளலாம். தினமும் எதாவது ஒரு கீரை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இந்த கீரைகள் அதிகம் எடுக்கும் போது நமக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. இரும்புச்சத்தும் கிடைக்கிறது. இரவில் சப்பாத்தி, உப்புமா, தோசை சாப்பிடலாம். உப்புமாவுக்கு காய்கறி சேர்த்து கிச்சடி மாதிரி சாப்பிடலாம். வெஜ்டபிள் உப்புமா செய்யலாம். எந்த வகையில் நாம் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு குறைவாக இருக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் பக்கவாதத்தில் இருந்து சீக்கிரமாக வெளி வருவதற்கு எளிதாக இருக்கும். நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம்.

    அசைவ பிரியர்கள் என்றால் பொறித்த, வறுத்த கோழி, மட்டன் உணவுகளை தவிருங்கள். ஆசைக்கு குழம்பில் போட்டு வேக வைத்ததை சாப்பிட்டுக் கொள்ளுங்கள். முட்டை என்றால் அதில் உள்ள வெள்ளை கரு மட்டும் சாப்பிடுங்கள். நாட்டுக்கோழி முட்டை என்றால் சிறப்பு. அது உங்களுக்கு அதிக புரதச்சத்துக்கு உதவும். தசைகள் வலுவடையும். பழங்கள் அதிகம் சாப்பிடலாம். ஜூஸ் போட்டு குடிப்பதை தவிர்த்து முழு பழமாக சாப்பிடுங்கள். பாட்டில் அல்லது பாக்கெட்டில் அடைத்து வைத்து விற்கப்படும் குளிர்பானங்களை குடிக்க வேண்டாம். தண்ணீர் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 லிட்டர் குடிக்கலாம். உணவு செரிமானத்தில் சிக்கல் இருப்பவர்கள் சீரக தண்ணீர் அருந்துங்கள்.

    புகைப்பிடித்தல், மது அருந்தும் பழக்கத்தை நீங்கள் தவிர்த்தே ஆக வேண்டும். நான் சொன்ன உணவு முறைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள், பிசியோ தெரபிஸ்ட் பயிற்சிகள் இதன் மூலமாகவும் பக்கவாதம் என்ற கொடிய நோயில் இருந்து சீக்கிரம் வெளியே வந்து விடலாம்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    • கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன.
    • காசியை விட அதிக சிறப்பு வாய்ந்த நகரம் என்ற பெருமையும் கும்பகோணத்துக்கு உண்டு.

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

    நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்

    துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

    சங்கத் தமிழ் மூன்றும் தா.

    - அவ்வையார்

    கும்பகோணம்....

    இந்த பிரபஞ்சம் உருவாக காரணமாக இருந்த ஊர்.

    இந்த உலகில் உயிரினங்கள் மற்றும் இடங்களை பிரம்மா உருவாக்கியதாக சொல்வார்கள். ஆனால் சிவபெருமானே முன்னின்று உருவாக்கிய ஊர் கும்பகோணம். அதனால்தான் சிவபெருமானின் மனம் விரும்பும் இடம் என்று கும்பகோணத்தை சொல்வார்கள்.

    கும்பகோணம் மிக மிக பழமையானது மட்டுமல்ல, பல்வேறு முதன்மை சிறப்புகளை கொண்டது. கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. தமிழகத்தில் வேறு எந்த ஊரிலும் இந்த அளவுக்கு ஆலயங்கள் கிடையாது. அதனால்தான் கும்பகோணத்தை கோவில் நகரம் என்று அழைக்கிறார்கள்.

    கும்பகோணம் என்ற பெயர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதுதான். அதற்கு முன்பு இந்த நகரை குடமூக்கு என்றுதான் அழைத்தனர். தமிழ் இலக்கியங்களிலும் குடமூக்கு என்றுதான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கிறது.

    முன் ஒரு காலத்தில் மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் நிலை ஏற்பட்டது. அப்படி ஒரு பிரளயம் ஏற்படப் போவதை பிரம்மா முன்னதாக அறிந்து இருந்தார். எல்லா உயிர்களும் அழிந்துவிட்டால் எவ்வாறு புதிய உயிர்களை படைப்பது என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சிவபெருமானிடம் சென்று உதவி கேட்டார். அதற்கு சிவபெருமான், "உலகம் முழுவதும் உள்ள புண்ணிய தலங்களில் உள்ள மணலை சிறிது சிறியதாக சேகரித்துக் கொள். அவற்றுடன் அமுதம் சேர்த்து பிணைந்து பெரிய பானை (குடம்) ஒன்றை செய்து கொள். அதற்குள் எல்லா உயிரினங்களையும் ஜீவ வித்துக்களை வைத்து விடு. பிறகு அதை மூடி மாவிலை, தர்ப்பை கொண்டு அலங்கரித்து மேல்மலை மீது வைத்து விடு.

    பிரளயம் வரும்போது அந்த பானை தண்ணீரில் மிதக்கும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் அந்த பானை தங்கி விடும். அந்த இடத்தில் நான் தோன்றி உயிரினங்கள் பெருக வழிவகை செய்கிறேன்" என்று உறுதி அளித்தார். சிவபெருமான் சொன்னபடியே பிரம்மாவும் கும்பத்தை உருவாக்கி தயாராக வைத்துள்ளார்.

    பிரளயம் ஏற்பட்டபோது அமுதம் நிறைந்த அந்த குடம் மிதந்து சென்றது. ஒரு இடத்தில் அது தரை தட்டி நின்று விட்டது. அந்த இடம்தான் கும்பகோணம்.

    சிவபெருமான் வாக்குறுதி அளித்தபடி அங்கு வந்தார். அம்பை எய்து குடத்தை உடைத்தார். குடத்தில் இருந்து அமுதம் நாலாபுறமும் வழிந்தது. கும்பத்தை அலங்கரித்து இருந்த பொருட்களும் சிதறின. அவை அனைத்தும் லிங்கங்களாக மாறின. குடத்தில் இருந்து ஜீவ வித்துக்கள் மூலம் மீண்டும் உயிரினங்கள் தோன்றின.

    இந்த புராண வரலாறு படி பார்த்தால் பிரபஞ்சத்தில் மீண்டும் உயிரினங்கள் உருவாக அமைந்த முதல் தலமாக கும்பகோணம் இருப்பதை உணரலாம். இத்தகைய சிறப்புடைய இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில்தான் ஆதிகாலத்தில் இந்த நகரை குடமூக்கு என்று அழைத்தனர்.

    கால ஓட்டத்தில் வடமொழியில் தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்கள் மாற்றம் ஆன போது குடமூக்கு கும்பகோணமாக மாறி போனது. சோழர்களின் தலைநகரமாக இருந்ததால் கலைகளின் நகரம் என்ற சிறப்பையும் கும்பகோணம் பெற்று இருந்தது.

    அனைத்துக்கும் மேலாக காசியை விட அதிக சிறப்பு வாய்ந்த நகரம் என்ற பெருமையும் கும்பகோணத்துக்கு உண்டு. பொதுவாக பாவம் செய்தவர்கள் காசியில் ஓடும் கங்கையில் நீராடி தங்களது பாவங்களை தீர்த்துக் கொள்வார்கள். அந்த பாவ குவியல்களை ஏற்றுக்கொள்ளும் கங்கை நதி கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் விழாவில் நீராடி தனது பாவத்தை போக்கி கொள்ளும் என்பார்கள்.

    இத்தகைய சிறப்புடைய கும்பகோணத்தின் பெயரை சொன்னாலே பாவங்கள் நம்மை விட்டு நீங்கி விடும் என்று அப்பர் பாடி உள்ளார். கும்பகோணத்தில் தங்கினால் பல்வேறு புனித தலங்களில் தங்கிய பலன்கள் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் கும்பகோணத்திலும் அதை சுற்றிலும் அமைந்துள்ள மிக சிறப்பான ஆலயங்கள்தான். கும்பகோணத்தில் சுமார் 200 கோவில்கள் அதன் எல்லைப் பகுதிகளில் சுமார் 300 கோவில்கள் என சுமார் 500 பழமை சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் நம் மூதாதையர்களால் ஒவ்வொரு வகை பிரார்த்தனைக்கும், பரிகாரங்களுக்காகவும் கட்டப்பட்டதாகும்.

    கும்பகோணத்தை சுற்றியுள்ள ஆலயங்கள் மூலம் ஒருவரது வாழ்வியலுக்கு தேவையான அத்தனை பலன்களையும் மிக மிக எளிதாக பெற்று விட முடியும். அதாவது ஒரு பெண்ணிடம் கருவை உருவாக்குவதில் இருந்து அந்த கரு நல்லவிதமாக வளர்ந்து குழந்தையாக மாறி இந்த உலகில் பிறந்து பிறகு பெரிய மனிதராக மாறி வாழ்வியல் கடமைகள் அனைத்தையும் முடித்து விட்டு நிறைவு பெறும்வரை தேவையான அத்தனை பலன்களையும் தரும் ஆலயங்கள் கும்பகோணத்திலும் அதை சுற்றிலும் அமைந்து இருக்கின்றன.

    சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு மனிதன் பிறப்பது முதல் இறப்பது வரை என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது என்பதற்கான ஆலயங்கள் கும்பகோணம் பகுதிகளில் உள்ளன. வாழ்க்கை நிறைவுக்கு பிறகு முக்தி பாதைக்கு அழைத்து செல்லும் ஆலயங்களும் அங்குதான் நிறைந்துள்ளன.

    அதனால்தான் தமிழகத்தில் எந்த ஒரு ஊருக்கும் இல்லாத மகிமை கும்பகோணத்துக்கு இருக்கிறது. உங்களுக்கு என்ன தேவையோ அதை கும்பகோணம் பகுதி ஆலயங்கள் மூலம் எளிதில் பெற முடியும். குழந்தை பாக்கியம், திருமணம், கல்வி, செல்வம், சொத்து, கடன் தீர்ப்பது, மன அமைதியுடன் வாழ்வது, எதிரிகளை ஒடுக்குவது, புகழ் பெறுவது..... இப்படி உங்களுக்கு என்ன வேண்டுமோ அவை எல்லாமே கும்பகோணம் ஆலயங்கள் மூலம் நிச்சயம் கிடைக்கும்.

    இதற்கு உங்களுக்கு ஒரே ஒரு தெளிவுதான் இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது? அந்த பிரச்சினையை தீர்க்கும் ஆலயம் கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளில் எங்கு இருக்கிறது? இதை தீர்மானித்து விட்டால் பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம்.

    வாருங்கள்........... கும்பகோணத்துக்கு போகலாம்.

    சரி கும்பகோணத்துக்கு வந்து விட்டோம். முதலில் என்ன செய்ய வேண்டும்? எதை தொடங்கினாலும் விநாயகரை தொழுதுதானே தொடங்க வேண்டும். கும்பகோணத்தில் முதல் விநாயகர் பழமையான விநாயகர் என்று எல்லாம் புகழப்படும் விநாயகராக கரும்பாயிரம் விநாயகர் திகழ்கிறார்.

    கும்பேஸ்வரர் ஆலயம் அருகில் வராக தீர்த்தம் கரையில் கரும்பாயிரம் விநாயகர் ஆலயம் உள்ளது. இதற்கு வராக பிள்ளையார் என்றும் இன்னொரு பெயர் உண்டு. இவரை வணங்கினால் எதை தொடங்கினாலும் வெற்றி மீது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இந்த விநாயகர் உருவானதில் ஒரு புராண வரலாறு உள்ளது. ஆதி காலத்தில் அசுரன் ஒருவன் பூமாதேவியை கவர்ந்து கொண்டு பாதாள உலகத்துக்குள் சென்று ஒழிந்துக் கொண்டான். அவனிடம் இருந்து பூமியை மீட்பதற்கு மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதன் கரையில் விநாயகரை பிரதிஷ்டை செய்தார்.

    அவருக்கு வராக விநாயகர் என்றும் பெயரிட்டார். அந்த விநாயகரை வணங்கி சென்றதால்தான் அசுரனிடம் இருந்து பூமாதேவியை மகாவிஷ்ணுவால் மீட்க முடிந்தது. இந்த விநாயகர் தான் கும்பஸே்வரர் கோவில் அருகில் அமர்ந்துள்ளார். பிற்கா லத்தில் அவருக்கு கரும்பாயிரம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.

    ஒரு தடவை கரும்பு வியாபாரி ஒருவர் ஏராளமான கரும்புகளுடன் வந்து வராக விநாயகர் ஆலய வளாகத்தில் தங்கியிருந்தார். அவரிடம் விநாயகர் சிறுவன் வேடம் எடுத்து சென்று கரும்பு தரும்படி கேட்டார். ஆனால் வியாபாரி கரும்பு கொடுக்கவில்லை. இதனால் விநாயகர் அங்கிருந்த கரும்பையெல்லாம் தின்று சக்கையாக மாற்றி விட்டார்.

    அதன் பிறகுதான் சிறுவனாக வந்தது விநாயகர் என்று வியாபாரிக்கு தெரிந்தது. அவர் மீண்டும் கரும்புகளை படைத்து வழிபட்டார். அன்று முதல் வராக விநாயகருக்கு கரும்பாயிரம் விநாயகர் பெயரும் ஏற்பட்டது.

    இவரை வழிபட்டால் நம் வாழ்க்கையும் கரும்புபோல இனிக்கும் என்பது ஐதீகம். நீங்களும் கும்பகோணம் யாத்திரை மேற்கொள்ளும்போது முதலில் கரும்பாயிரம் விநாயகரை வணங்கி பிரார்த்தனைகளை தொடங்குங்கள். எல்லாம் வெற்றியாக வந்து சேரும்.

    அடுத்த வாரம் கும்பகோணம் பெயர் உருவாக காரணமான கும்பேஸ்வரர் வழிபாடு பலன்களைப் பார்க்கலாம்.

    • பொதுவாக அனைவரும் மாதவிடாய் சுழற்சியின் முதல் 5 நாட்கள் கருப்பு எள்ளு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி தினமும் செய்து ஹார்மோன் சமநிலையற்ற தன்மையை சரிசெய்து மாதவிடாய் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

    ஒவ்வொருவரின் உடல் தன்மையை பொறுத்தும், வாழும் இடம் மற்றும் காலநிலையை பொறுத்தும் மாதவிடாய் தொடங்கும் வயதும், முடிவுறும் வயதும் வேறுபடுகிறது. சராசரியாக 10 முதல் 16 வயதில் மாதவிடாய் சுழற்சி தொடங்கி 45 முதல் 50 வயதில் முடிவுறுகிறது.

    சராசரியாக 21 முதல் 35 நாட்கள் வரை மாதவிடாயின் ஒரு சுழற்சி நீடிக்கும். சரியான இடைவேளையில் மாதவிடாய் ஏற்படுவது பெண்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான நல்ல அறிகுறியாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக உடலின் இயற்கை நிகழ்வு தொந்தரவு தரும் விதமாக மாறியுள்ளது.

    மாதவிடாயின்போது அதிகமான குருதி வெளியேறுவது அல்லது குறைவாக வெளியேறுவது, இரண்டு மாதவிடாய்க்கு இடையில் குருதி கசிவு, மாதவிடாயின் போது அதிகப்படியான வயிறு வலி மற்றும் இடுப்பு வலி, 21 நாட்களுக்கு முன்பே மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது 90 நாட்கள் ஆனாலும் மாதவிடாய் நடக்காமல் இருப்பது போன்ற குறிகுணங்களில் ஏதேனும் சிலவற்றால் இன்றைய பெண்கள் பலர் அவதியுறுகின்றனர். இதுபோன்ற தொந்தரவுகள் எப்போதாவது ஒரு முறை மட்டும் இருந்தால் அச்சப்பட தேவையில்லை. ஆனால் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையை நாடவேண்டும்.

    பெரும்பாலும் முறையற்ற மாதவிடாய், வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படுகிறது. துரித உணவுகள் மற்றும் உடற்பயிற்சி இன்மை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரித்து ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு சினைப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    உலக சுகாதார மையம் திருமண வயதில் இருக்கும் பெண்களில் 8 - 13 சதவீதம் பேர் pcos பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 70 சதவீதம் பேர் இன்னும் pcos பிரச்சனை இருப்பதை கண்டறியாமல் உள்ளனர் என்றும் கூறுகின்றது.

    இந்த pcos பிரச்சனையால் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் 90 நாட்களுக்கு மேல் ஏற்படாமல் இருப்பது முகம், மார்பு, முதுகு அல்லது பிட்டம் ஆகியவற்றில் அதிக ரோம வளர்ச்சி, தலைமுடி உதிர்தல், முகப்பரு, கழுத்து, அக்குள், மார்பகம் மற்றும் தொடை இடுக்குகளில் கருமை நிறம், கவலை, மனச்சோர்வு, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. இதை சீர் செய்யாமல் விடும் பட்சத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் தங்கள் வேலைகளுக்குக்கிடையில் சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி Pcos பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது மிகவும் சிறந்ததாகும்.

    கழற்சி விதையை பொடித்து, அதற்கு கால் எடை அளவு மிளகு பொடி சேர்த்து தினம் 1/2 ஸ்பூன் காலை மாலை தேனில் கலந்தோ மோரில் கலந்தோ அருந்தி வரலாம்.

    கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை சம அளவு எடுத்து பொடி செய்து, வெல்லம் சிறிது சேர்த்து 1/2 ஸ்பூன் அளவு காலை மாலை சோம்பு கஷாயத்தில் அருந்தலாம்.

    நடுத்தர வயது பெண்கள் Adenomyosis என்னும் கருப்பை சதைகட்டியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கருப்பையின் உள்திசுவான எண்டோமெட்ரியம் கருப்பையின் தசை சுவரில் வளரத் தொடங்குகிறது. இதனால் மாதவிடாயின்போது கடுமையான வயிற்று வலி, அதிகமான உதிரப்போக்கு, இடுப்பில் கத்தியால் வெட்டுவது போன்ற கூர்மையான வலி, உடலுறவின் போது வலி போன்றவை ஏற்படுகிறது.

    கலியாண முருக்கிலையின் சாறை தொடர்ச்சியாக 2 அல்லது 3 மாதங்கள் வரை காலை மாலை இருவேளையும் எடுத்துக்கொள்ளலாம். இது மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைப்பதுடன் கட்டி குறைய வழி வகுக்கும்.

    மேலும் வாழைப்பூச்சாறு, இலவங்கப்பட்டை கஷாயம், ஆடாதோடை இலை கற்கம் போன்றவை அளவு கடந்து போகும் மாதவிடாயை கட்டுக்குள் கொண்டு வரும்.

    அடுத்ததாக 30 முதல் 50 வயது வரை உள்ள பெண்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் நார்த்திசு கட்டி என்னும் Uterine Fibroid ஆல் பாதிக்கப்படுகின்றனர். கருப்பையில் உருவாகும் இந்த மென்மையான கட்டிகள் சிலருக்கு அறிகுறிகள் ஏதும் ஏற்படுத்துவதில்லை. சிறு விதை அளவு முதல் பெரிய பந்து அளவு வரை இருக்கிற இக்கட்டிகளால் அதிக வலி மற்றும் அதிக குருதிபெருக்கு ஏற்படும். கட்டிகள் பெரிதாக வளரும்போது சிறுநீர்ப்பையை அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு மலச்சிக்கல், தொடர்ச்சியான கருச்சிதைவு, கருவுறாமை கூட ஏற்படுகிறது.

    பொதுவாக இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சமநிலையின்மை மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படுகிறது என கருதப்படுகிறது. புற்று நோயாக மாறும் வாய்ப்பு இக்கட்டிகளில் மிக குறைவாகவே உள்ளது. கருப்பையின் புறணி திசு போன்ற ஒரு திசு கருப்பை குழிக்கு வெளியே வளரும்போது Endometriosis என்று அழைக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் கருப்பை திசுக்களை போலவே இந்த திசுவும் சிதைந்து உதிரபோக்கு ஏற்படும். இருப்பினும் சில நேரம் இந்த இரத்தம் தேங்கி, சுற்றியுள்ள திசுக்களின் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.இதனால் மாதவிடாயின் முதல் 2 நாட்கள் கடுமையான தசைப்பிடிப்புகள் ஏற்படும். மேலும் மாதவிடாயின் போதும், மாதவிடாய்களுக்கு இடையிலும் அதிக உதிரப்போக்கு, மலம் மற்றும் சிறுநீரில் இரத்தம், நீங்காத சோர்வு மற்றும் களைப்பு ஏற்படும்.

    அடுத்தது கருப்பை வாய் அழற்சி (cervicitis) குறித்து காணலாம். கருப்பை வாய் என்பது கர்ப்பப்பைக்கு கீழே யோனியை தொடர்பு கொள்ளும் பகுதியாகும். கருப்பை வாயில் வீக்கம் ஏற்படும்போது அது கருப்பை வாய் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் தொற்று பரவக்கூடிய அல்லது பரவாத வகையில் இருக்கலாம். அறிகுறிகள் பெண்களுக்கு பெண்கள் மாறுபட்டு காணப்படுகிறது. கருப்பை வாய் அழற்சியால் சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல், மாதவிடாய் இடைநாட்களில் குருதிகசிவு, காய்ச்சல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கருப்பை வாய் அழற்சியால் பாதிக்கப்படுகிறார்கள்.

    பெரும்பாலான பெண்கள் 50 வயதிற்கு மேல் கருப்பை, கருப்பைவாய், மற்றும் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர கூடும். ஆனால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்குகிறது. தொடக்க நிலையில் புறக்கணிக்கத்தக்க அளவு அற்பமானதாக இருப்பதால் நோயாளிகள் அதில் சிறிதும் கவனம் செலுத்துவதில்லை. வலிகள் ஆரம்பத்தில் இருப்பதில்லை. கசிவுகள் மட்டும் ஓரளவிற்கு அதிகப்படும். முதலில் அளவு கடந்து காணப்படுகின்ற வெண் தீட்டு பின்பு இரத்தம் கலந்து காணப்படும். பின்பு கசிவுகள் மஞ்சள் பழுப்பு வண்ணத்தை பெறுகின்றன. தசைகள் அழுகத்துவங்கியவுடன் கசிவுகள் பழுப்பு நிறமாகின்றன. இவற்றில் நோய் கிருமிகள் சேரும்போது முடைநாற்றம் வீசத் தொடங்கும்.

    சிலசமயம் மாதவிடாய் காலங்களில் உதிரம் போகும் காலம், அளவு கடந்து காணப்படுகிறது அல்லது மாதவிடாய் ஏற்பட்ட ஓரிரண்டு நாட்களில் மீண்டும் இரத்தம் கலந்த செங்கல் நிற மங்கலமான கசிவு காணப்படுகிறது. புணர்ச்சியின் பின்பும், மலத்தை முயற்சி செய்து கழிக்கும்போதும் சில சமயங்களில் உதிரப்போக்கு ஏற்படுகிறது. நாள்போக்கில் அருகிலுள்ள உறுப்புகளுக்கும் பரவி அதற்கேற்ப குறிகுணம் ஏற்படுகிறது. எனவே இந்த நோயை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே கண்டு உறுதிசெய்து, தொடக்கத்திலேயே வளர்ச்சியை தடை செய்ய வேண்டும்.

    எனவே 35 முதல் 65 வரை உள்ள பெண்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை PAP மற்றும் HPV (Human Papilloma Virus) பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

    மேலும் மாதவிடாய் கோளாறுகளான அதிக உதிரபோக்கு அல்லது குறைவான உதிரபோக்கு , மாதவிடாய்க்கு இடையில் குருதி கசிவு , மாதவிடாயின் போதோ அதற்கு முன்னர் பின்னரோ அதிகப்படியான வலி போன்ற குறிகுணங்கள் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி அவர்கள் தேவைக்கேற்ப பரிந்துரைக்கும் இடுப்புப்பகுதி பரிசோதனைகளை தயங்காமல் செய்து கொள்ளவேண்டும்.

    மேலும் பொதுவாக அனைவரும் மாதவிடாய் சுழற்சியின் முதல் 5 நாட்கள் கருப்பு எள்ளு சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் எள்ளு உருண்டை, எள்ளுப்பொடி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கை சீர்செய்து மாதவிடாய் கால வயிற்று வலியை குறைக்கும்.

    அடுத்து 6 முதல் 14 நாட்கள் வரை உளுந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். உளுந்து களி, கஞ்சி போன்றவற்றை இந்த நாட்களில் சேர்த்துக்கொள்ள, இதிலுள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் மாதவிடாய் சுழற்சியில் 14வது நாள் கருமுட்டை வெளிப்பட பெரிதும் துணை செய்கிறது. மேலும் இடுப்பிற்கு பலத்தையும் தருகிறது. மாதவிடாய் சுழற்சியின் கடைசி 14 நாட்கள், அதாவது 15 முதல் 28 நாட்கள் வரை வெந்தயம் பொடி செய்து அரை முதல் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். Harmonal Imbalance ஐ சரிசெய்து மாதவிடாய் முன் குறிகுணங்களான குமட்டல், வாந்தி, தலைவலி, உடல் சோர்வு போன்றவற்றை குறைக்கிறது. மேலும் இது சினைப்பை கட்டிகளை குறைப்பதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவருகிறது.

    பூப்பு தொடங்கியது முதல் முடிவுறும் வரை பெண்கள் இதை தொடர்ந்து பின்பற்றி வர ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரான் அளவு சீர்செய்யப்பட்டு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகிறது. மேலும் போதுமான புரதச்சத்து, இரும்புச்சத்து சேர்ந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி தினமும் செய்து ஹார்மோன் சமநிலையற்ற தன்மையை சரிசெய்து மாதவிடாய் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

    • நமது உடலில் ராஜ உறுப்புகள் எனப்படுவது மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் இவை ஐந்தும் தான்.
    • முதுமையில் அதிக அளவு பாதிப்படையும் மற்றொரு உறுப்பாக உள்ளது ‘சிறுநீரகம்’.

    முதுமை ஏன் இவ்வளவு சவாலாக இருக்கிறது? முதுமையில் ஏன் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது? அப்படி என்ன தான் நடக்கிறது முதுமையில்? என்பதை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    இயற்கையாகவே முதுமையில் உடல் உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு மாறுதல்கள் நோய்களுக்கு காரணமாகின்றன. நாளுக்கு நாள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளிலும் உண்டாகும் மாற்றம், முதியோர்களின் ஆரோக்கியத்தை அடியோடு சாய்த்து விடுகின்றது.

    நமது உடலில் ராஜ உறுப்புகள் எனப்படுவது மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் இவை ஐந்தும் தான். இந்த ஐந்து முக்கிய உறுப்புகளில் முதுமையில் ஏற்படும் எண்ணிலடங்கா மாற்றங்கள், உடல் செயலியலில் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன.

    முதுமையில் அப்படி என்ன தான் நடக்குது? என்று கேள்வி கேட்க விரும்பும் முதியவர்களுக்கு பதில் பக்கம் பக்கமாய் உள்ளது அதிர்ச்சி தான்.

    முதலில் முதுமையில் இதயம் மற்றும் ரத்தக் குழாய்கள் அதிக பாதிப்படைகின்றன. ரத்த குழாயில் உள்ள பக்க சுவரில் செல்கள் ஒழுங்கற்ற வடிவமும், தடிப்பும் பெறுவதால் ரத்த குழாய்கள் சுருங்க துவங்குகின்றன. இதனால் ரத்த அழுத்தம் இயல்பாகவே வயதுக்கு தகுந்தாற் போல் அதிகரிக்கிறது. 30 வயதில் 120 முதல் 130 மி.மீ. வரை இயல்பாக இருக்கக்கூடிய ரத்த அழுத்தம் 60 வயதில் 160 மி.மீ. எட்டிவிடுகிறது. ஏற்கனவே ரத்த அழுத்தம் அதிகரிக்கும்படியாக இருப்பதால், கூடுதலாக ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உப்பு சேர்த்த உணவுகளை தவிர்ப்பது முதுமைக்கு நல்லது. 

    சோ.தில்லைவாணன்

    சோ.தில்லைவாணன்

    முக்கிய ராஜ உறுப்பான, உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் செலுத்தும் இதயமானது ரத்த குழாய்கள் சுருக்கத்தினால், அதிக வேகத்துடன் விசையுடனும் ரத்தத்தை அனுப்ப வேண்டியுள்ளது. ஆகையால் இதயம் தனது இயல்பான அளவை விட அதிக எடை கொண்டதாக உருமாறுகிறது. மேலும் இதயத்தில் உள்ள ரத்தம் செலுத்தும் இடது பகுதி 30 சதவீதம் வரை தடிமனமாக மாறுவதும் குறிப்பிடத்தக்கது. ஆக, முதுமையில் இதய நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவது மிக மிக அவசியம்.

    இதயத்திற்கு அடுத்து நுரையீரல் பிராண வாயுவை உட்கிரகித்து உடல் செல்களுக்கு கொடுக்கும் அத்தியாவசிய பணியை செய்கிறது. மூச்சு விடும்போது சுருங்குவதும், மூச்சினை உள்ளிழுக்கும்போது விரிவதும் நுரையீரலின் இயல்பு. இவ்வாறு சுருங்கி விரியும் தன்மைக்கு காரணம் அதில் உள்ள எலாஸ்டின் நார்த்திசுக்கள் தான். ஆனால் முதுமையில் நாளாக நாளாக இந்த எலாஸ்டின் திசுக்கள் தேய்மானம் அடைவதால் நுரையீரல் சுருங்கி விரிவதும் இயல்பாக குறைந்து விடுகிறது.

    மேலும் பிராண வாயுவை உட்கிரகிக்கும் காற்று நுண்பைகள் எண்ணிக்கையும் படிப்படியாக குறைய துவங்கிவிடுகிறது. 90 வயதை எட்டும்போது கிட்டத்தட்ட 25 சதவீதம் காற்று நுண்பைகள் குறைந்து விடுவதாக உள்ளது. எனவே உடல் ஆரோக்கியமாக இருக்கவும், போதுமான அளவு பிராணவாயு கிடைக்கவும், சித்த மருத்துவம் கூறும் மூச்சு பயிற்சிகளை மேற்கொள்வது முதுமையில் நலம் பயக்கும்.

    முதுமையில் அதிக அளவு பாதிப்படையும் மற்றொரு உறுப்பாக உள்ளது 'சிறுநீரகம்'. முதுமை மட்டுமல்லாது, இன்றைய உணவு பழக்க வழக்கங்களும், இயற்கை அல்லாத நஞ்சு கலந்த உணவுகளும் சிறுநீரக பாதிப்பு உண்டாக காரணமாகின்றன. 80 வயதைத் தொடும் முதியவர்களின் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் 60 முதல் 70 சதவீதம் வரை மட்டுமே இருப்பதாக உள்ளது.

    இதனால் உடலில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுப்பொருட்கள் முழுமையாக நீங்காமல், யூரியா ரத்தத்தில் அதிகரிக்கும். பின்னாளில் இதுவே சிறுநீரக செயலிழப்புக்கும் வழிவகுக்கும். சிறுநீரகம் செயலிழந்தால் இதயம் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிதைந்து விடும். எனவே முதுமையில் சிறுநீரக நலனில் கூடுதலாக அக்கறை செலுத்துவது அவசியம்.

    யூரியா மட்டுமின்றி நாளாக நாளாக கிரியாட்டினின் எனும் கழிவுப்பொருளும் வெளியேற்றப்படுவது குறைகிறது. 80 வயதில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவிற்கு கிரியாட்டினின் வெளியேற்றம் குறைவதாக உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில் அதிகப்படியான சிறுநீரகத்திற்கு பாதிப்பை உண்டாகும் மருந்துகள் பரிந்துரைப்பதிலும் கடினமான சூழல் உண்டாகிறது. எனவே முதுமையில் மருந்துகளை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

    ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல திசுக்கள் தேய்மானம் அனைத்து உறுப்புகளிலும் நடக்கிறது. அந்த வகையில் சிறுநீரகத்தில் ஏற்படும் தேய்மானம் உடலுக்கு அத்தியாவசியமான தாது உப்புக்களைக் கூட மீண்டும் உறிஞ்ச முடியாமல் அப்படியே வெளியேற்றுவதால் உடலில் தாது உப்புக்களுக்கு பஞ்சம் ஏற்படுகிறது. இதற்காகத் தான் முதுமையில் சத்துக்கள் நிறைந்த உணவு அவசியம் என்பதும் அறியக்கிடக்கின்றது.

    சிறுநீர்ப்பையில் ஏற்படும் மாறுபாடுகள் அடிக்கடி சிறுநீர் போவதை தூண்டும். இதனால் இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் மனம் நொந்து வாடும் முதுமைக்கு ஆரோக்கியம் எட்டாக்கனியாகும். அதிலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் இதனால் துன்புறுவது குறிப்பிடத்தக்கது. சிறுநீரை அடக்கவும் முடியாமல், அவசரமாக சென்று கழிக்கவும் முடியாமல் சிரமப்படும் பெண்களுக்கு முதுமை மிகவும் கடினம் தான்.

    முதுமையில் அதிகப்படியான உடலியல் மாற்றங்களைப் பெறுவது சீரண மண்டலமும் கூட தான். மணம், சுவை ஆகிய இரண்டு புலன்களும் கூட முதுமையில் படிப்படியாக குறைந்துவிடுகிறது. நாவின் சுவை மொட்டுக்கள் எண்ணிக்கையில் குறைவதும், மூக்கில் உள்ள மணம் அறியும் நரம்புகள் தேய்மானம் அடைவதும் தான் முக்கியக் காரணம். இந்த உண்மைத் தன்மை அறியாத முதுமை, இதற்கென மருத்துவமனைகளை நாடுவது பலனற்றது.

    அதே போல் 'ஜெர்ட்' எனும் உணவு எதிரெடுத்தல் நோயும் முதுமையில் இயல்பாகவே தோன்றி விடுகிறது. உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில் உள்ள இறுக்குத்தசைகள் செயல்படும் தன்மையை இழந்து விடுவதால் உணவு உண்ட பிறகு வயிற்றில் உள்ள அமிலமும், உணவுப்பொருட்களும் மேலே எதிரெடுத்து இரவில் தூக்கத்தைக் கலைக்கும். இதனால் நெஞ்சு எரிச்சல், புளியேப்பம் ஆகிய உபாதைகளும் தோன்றும்.

    சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் ஏற்படும் மாற்றங்கள் வயிறு பொருமல், வயிற்று வலி, மலச்சிக்கல் ஆகிய உபாதைகளை உண்டாக்கும். மலச்சிக்கல் முதுமையில் மிகப்பெரிய சிக்கல் என்றே சொல்லலாம். பெருங்குடலில் உள்ள சவ்வுகள் மெலிந்து நலிவதன் காரணமாக, பெரிஸ்டால்சிஸ் எனப்படும் குடல் அசைவுகள் குறைந்து, மலச்சிக்கல் தோன்றி முதுமையை வாட்டும். மேலும் நாட்பட்ட நோய்களுக்கான சில மருந்து மாத்திரைகளும் முதுமையில் மலச்சிக்கலை உண்டாக்கும்.

    முக்கிய ராஜ உறுப்பான கல்லீரல் அதன் எடையை விட குறைவதும், அதில் சுரக்கும் நொதிகள் அளவு குறைவதும், பித்தத்தின் அளவு குறைவதும் செரிமானம் சார்ந்த நோய்நிலைகளுக்கு காரணமாகிறது. கல்லீரலில் உண்டாகும் மாற்றம் இன்னும் பல்வேறு நோய்நிலைகளுக்கு வழியமைக்கும். கணையத்தில் உள்ள நொதிகள் சுரப்பு குறைவதால் பால் மற்றும் பால் பொருட்கள் செரிமானம் கூட வெகுவாக குறைந்து விடும். நீரிழிவு நோய்க்கு காரணமான இன்சுலின் ஹார்மோன் சுரப்பு நாளுக்கு நாள் குறைவதால் சரக்கரை கட்டுக்குள் வருவது வெறும் கனவாகவே மாறக்கூடும்.

    உடலில் ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பிகள் பலவும் முதுமையில் எடை குறைந்து பலவீனம் அடைகின்றன. இருப்பினும் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு கடைசி வரை இயல்பாக இருக்கக்கூடும். அதே போல் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக திகழும் இன்சுலின் ஹார்மோன் செயல் திறனுக்கு, உடல் செல்கள் குறைவான உணர்வுத் திறன் கொண்டதாக மாறுவதால், சர்க்கரை அளவு குறைவது கடினமாகிவிடும். 50 வயதுக்கு மேல் ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் வெறும் வயிற்றில் பரிசோதிக்கும் சர்க்கரை அளவு (எப்.பி.எஸ்.) 6 முதல் 14 மி.கி. வரை இயல்பாகவே அதிகரிக்கக்கூடும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். ஆக, முதுமையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு சற்று கூடுதலாக இருப்பதும் இயல்பு தான்.

    மிக முக்கியமான ராஜ உறுப்பான மூளையில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். முதுமையில் படிப்படியாக நரம்பு செல்கள் எண்ணிக்கையும், மூளையில் சுரக்கும் நரம்புகடத்திகள் எனப்படும் ஹார்மோன்களான டோபமைன், செரோடோனின் ஆகியவற்றின் அளவும் படிப்படியாக குறைந்துவிடும். இதனால் கை கால் நடுக்கம், ஞாபக மறதி, மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய குறிகுணங்கள் தோன்றி முதுமைக்கு சவால்விடும்.

    மருந்துப் பெட்டகத்தை தலையணைப் போல் வைத்துக்கொண்ட போதிலும், கட்டுக்குள் வராத சர்க்கரை அளவும், குறையாத ரத்த அழுத்தமும், கால் வீக்கமும், கடினப்பட்டு வெளியேற்ற முடியாத மலமும், அடிக்கடி வெளியேறும் சிறுநீரும், வறட்சியான தோல்களும், தூக்கமின்மையும், தளர்ந்த நடையும், அயர்ந்த உடலும், மூட்டுக்கள் வலியும், முதியவர்களை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் பாதிக்கும்.

    ராஜ உறுப்புக்கள் மட்டுமின்றி, உடலில் அனைத்து உறுப்புகளும், ஏன் ஒவ்வொரு திசுக்களும் முதுமையில் பல்வேறு உடலியல் மாறுபாடுகளை அடைந்து முதுமையைத் துன்புறுத்தும். இத்தகைய மாற்றங்கள் முதுமையில் மிகப்பெரிய சவால்கள் தான்.

    ஆனால், பல்வேறு சவால்களை சாதனையாக்கி, சமூக பொறுப்புகளை வென்று வாகை சூடிய இளமைப் பருவத்தைக் கடந்து வந்த முதுமைக்கு சவால்கள் புதிதல்ல. இதனைப் புரிந்து கொண்டு வாழ்வியலை பழகி வந்தால் முதுமையின் ஆரோக்கியம் கைக்கு எட்டும் தூரம் தான்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    • பல குடும்பங்களில் ஒருவருக்கு குழந்தை பிறந்த பின்னர் அவரது வாழ்வு முற்றிலுமாக அக்குழந்தையின் நலனுக்காகவே கழிக்கப்படுகிறது.
    • குழந்தைக்கு அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் நின்று தசை நடத்திக் கொண்டு இருந்தார்.

    பூர்வ ஜென்ம புண்ணிய பலத்தால் பிறந்த குழந்தைகளை சீரும் சிறப்புமாக வளர்த்து சமுதாயத்தில் தலை சிறந்த குடிமகனாக மாற்றுவது பெற்றோரின் கடமையாகும். இயல்பான மனித வாழ்க்கையில் பாலாரிஷ்ட தோஷத்தால் சில குழந்தைகள் அதீத உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் குழந்தை வளர்ப்பில் சில பெற்றோர்கள் அதிக பாதிப்பை சந்திக்கிறார்கள்.

    ஒரு குழந்தையின் பிறப்பு என்பது சஞ்சித கர்மா, பிராப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்ற மூன்று விதமான கர்ம வினையின் கூட்டணியே. இந்த மூன்றும் மூன்று நிலைகளில் உருவாகுகிறது. 1. தந்தை வழி கர்ம வினை (ராகு - தந்தை வழி) 2. தாய் வழி கர்ம வினை (கேது - தாய் வழி) 3. சுய கர்மா.தந்தை, தாய் என இருவழி முன்னோர்கள் மூலம் கர்ம வினை வந்தாலும் தந்தை வழி முன்னோர்கள் மூலம் வரும் கர்ம வினைத் தாக்கத்திற்கு வலிமை அதிகம்.

    ஒருவரின் ஜாதகத்திற்கு பலன் சொல்லும் போது ஆயுள் பற்றி தான் முதலில் கூற வேண்டும் என்றாலும் உண்மையான ஆயுட்காலத்தை கூறினால் மன வேதனை அதிகரிக்கும் என்பதால் ஆயுள் கண்டத்தை கூறி பயமுறுத்துபவர்கள் (பிரபஞ்ச ரகசியத்தை) இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்று சப்த மகரிஷிகள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 வருடம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தற்காலத்தில் 75 வயது வரை வாழ்ந்தாலே பெரிதாக இருக்கிறது.மனிதனின் ஆயுட்காலத்தை 4 வகையாக பிரிக்கலாம்.12 வயதிற்குள் ஆயுள் - பாலாரிஷ்டம். 27- 33 வயது ஆயுள் - அற்ப ஆயுள். 50 - 68 வயது ஆயுள் - மத்திம ஆயுள். 68 வயதிற்கு மேல் வாழ்வது - தீர்க்க ஆயுள். பொதுவாக சிறு வயது குழந்தைகளுக்கு ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அஷ்டமாதிபதி, பாதகாதி தசை, அஷ்டம பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகங்களின் தசை புக்தி காலங்களில் பாலாரிஷ்ட தோஷத்தின் தாக்கம் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.

    இது போன்ற காலத்தில் நிச்சயமாக குழந்தைகள் தொலைந்துபோய் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பார்கள. அல்லது தாத்தா வீட்டில் வளர்க்கப்பட்டிருப்பார்கள். அல்லது பள்ளிப்பருவத்தில் இருந்து கல்லூரி காலம் வரை விடுதியில்(ஹாஸ்டல்) தங்கிப் படித்திருப்பார்கள்.

    கர்ம வினையை அனுபவிக்கவே ஒவ்வொரு ஆன்மாவும் பூமியில் ஜனனம் எடுக்கிறது. பூர்வஜென்ம புண்ணிய பாக்கியமே கரு ஸ்தானமாகவும் கர்ப்ப ஸ்தானமாகவும் அமைகிறது அந்த பாக்கியத்தால் கருத்தரித்து கர்ம வினைகளுக்கு ஏற்ப கரு வளர்ந்து கர்ம வினையை அனுபவிக்க கூடிய கிரகங்கள் இருக்கும்போது கர்ப்பசெல் நீக்கி லக்கனம் அமைந்து ஜென்மமாய் பிறக்கிறது. அவரவர் வினைகளே கிரகங்களாக மாறி இல்லங்களில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் நம்மை நம் வினைகளுக்கு ஏற்றபடி வாழ வைக்கிறது.நம் பூர்வஜென்ம புண்ணிய பாக்கியமே ஏழரைச்சனியாக, அட்டமச்சனியாக, அர்த்தாஷ்ட மச்சனியாக, ஒன்பது கிரகங்களின் யோக, அவயோக தசையாக மாறிவருகிறது .பல குடும்பங்களில் ஏழரை சனி மற்றும் அஷ்டமச் சனி நடக்கும் காலம் வரும் போது ஏதோ நடக்கக் கூடாத தவறு நடந்தது போல் மனக் கலக்கம் அடைகிறார்கள் . அதுவும் பிறந்த குழந்தைகளுக்கு அல்லது பால்ய வயது குழந்தைகளுக்கு ஏழரை, அஷ்டமசனி நடந்தால் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு குழந்தைகள் காரணம் என்ற மனக் கலக்கம் பல்வேறு பெற்றோர்களுக்கு இருக்கிறது.


    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி


    பல குடும்பங்களில் ஒருவருக்கு குழந்தை பிறந்த பின்னர் அவரது வாழ்வு முற்றிலுமாக அக்குழந்தையின் நலனுக்காகவே கழிக்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் தான் முக்கியம் இல்லை என்ற எண்ணமும், தன்னை விட குழந்தையே முக்கியம் என்ற உணர்வும் பெற்றோருக்கு வந்து விடுகிறது. அதனால் அவர்களின் அன்றாட நிகழ்வுகளுக்கு கூட முக்கியத்துவம் கொடுத்து மன வருத்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள். ஒரு குழந்தை சமூகத்தில் தன்னை நிலை நிறுத்த ஆக்கம், ஊக்கம், மன தைரியம், நம்பிக்கை, வெற்றி, தோல்விகளை பகுத்தறியும் பக்குவமும், உடனிருப்போருடன் உறவாடும் பண்பு போன்ற பல்வேறு இயல்புகள் தேவைப்படுகிறது.

    மேலும் படிப்பு, கற்றல், போட்டித்தேர்வு, தரவரிசை, மதிப்பெண், பல்வேறு கலை கற்றல் போன்றவற்றை சந்தித்தால் மட்டுமே உன்னத நிலையை அடைய முடியும் என்ற நிலையும் சமுதாயத்தில் நிலவி வருகிறது. . உலக நடப்பு இவ்வாறு இருக்க பல குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏழரை, அஷ்டமச் சனி நடந்தால் ஹாஸ்டலில் சேர்த்தல் குழந்தைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்களால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படாது என்று தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். ஒரு வீட்டில் தந்தை மகன், தாய், மகள் என ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏழரை, அஷ்டமச் சனியின் தாக்கம் இருந்தாலும் குழந்தைகளால் தான் பாதிப்பு என்ற தவறான கருத்தும் நிலவுகிறது.

    பிறந்ததில் இருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரை, அஷ்டமச்சனியின் தாக்கத்தை குழந்தைகளிடம் மிகத் தெளிவாகக் காணலாம். உடல் நலக் குறைவு மிகுதியாக இருக்கும். வீட்டையே ஆஸ்பத்திரிக்கு அருகில் மாற்றி விடலாம் என்று எண்ணும் வகையில் வைத்திய செலவு இருக்கும். பிறக்கும் போது ஏழரை, அஷ்டம சனியின தாக்கம் இருந்தால் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும். குழந்தைப் பருவம் முதல் விடலை பருவம் வரையிலான இந்த சுற்றில் படிப்பில் ஆர்வமின்மை, பாடத்தை புரிந்து கொள்ள முடியாத நிலை, மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள். குழந்தைகளால் பெற்றோருக்குள் கருத்து வேறுபாடு, சண்டை என்று பிரச்சினைகள் வந்து நீங்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியினர் 6 வயது ஆண் குழந்தையின் ஜாதகத்தை கொடுத்து குழந்தையால் பெற்றோருக்கு பாதிப்பு இருக்கிறதா? என்று கேட்டார்கள்.

    குழந்தைக்கு அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் நின்று தசை நடத்திக் கொண்டு இருந்தார். ஏழரை சனி நடந்து கொண்டு இருந்தது. குழந்தையை தத்து கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் நிலமை சீராகும் என்று கூறினேன். பெற்றோர்கள் விடாபிடியாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழிலில் பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதற்கு குழந்தையின் நேரம் தான் காரணம் என்று கூறினார்கள். குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்தால் பணம் கிடைத்து விடுமா? என்று கேட்டார்.

    தந்தையின் ஜாதகத்தை ஆய்வு செய்த போது தந்தைக்கும் விரயச் சனி. விரயத்திற்கு உங்கள் குழந்தையின் ஜாதகம் காரணம் இல்லை. உங்கள் ஜாதக குற்றமே காரணம் என்று புரிய வைத்தப் பிறகு குழந்தையை தத்து கொடுத்து வாங்கினால் போதும் என்ற மன நிலைக்கு வந்தார்கள்.

    ஏழரைச் சனியின் காலத்தில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதை உணர வேண்டும். எது நடந்தாலும் குற்றத்தை அடுத்தவர் மேல் சுமத்த கூடாது. ஏழரை, அஷ்ட சனி காலத்தில் ஏற்பட்ட பண இழப்பு எத்தனை கோவில் ஏறி இறங்கினாலும் கிடைப்பது கடினம். தர்ம கர்மாதிபதி யோகம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அந்த தந்தையின் தவிப்பில் பணமா? குழந்தையா? என்ற ஆதங்கம் மிகுதியாக இருந்தது.

    எதுவும் அறியாத பல குழந்தைகள் சம்பந்தம் இல்லாத காரணத்திற்காக பால்ய வயதில் ஹாஸ்டலில் விடப் படுகிறார்கள். எந்த பிரச்சினையும் இல்லாவிட்டாலும் நவீன யுகத்தில் குழந்தைகளை ஹாஸ்டலில் படிக்க வைப்பது பேஷனாகிவிட்டது. இன்று பெற்றோர்களை விட அதிக கவனமாக குழந்தைகளை பராமரிக்கும் ஹாஸ்டல்கள் இருந்தாலும் உளவியல் ரீதியாக இந்த பிரச்சினையை ஆய்வு செய்தால் பல உண்மைகள் அனைவருக்கும் புரிய வரும். அவை என்ன வென்றால் முதலில் குழந்தைக்கு தாய், தந்தையின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காது.

    உற்றார், உறவினர் மட்டும் குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி பழக வேண்டும் என்ற அனுபவம் அற்றவர்களாக இருப்பார்கள். இவ்வளவு ஏன் பல குழந்தைகளுக்கு தாய், தந்தையை தவிர உறவினர்களின் அறிமுகமே இருக்காது. பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை இருக்காது. குழந்தைகள் பெற்றோரை பணம் போடும் ஏ.டி.எம். மெஷினாக மட்டுமே பார்ப்பார்கள். பல குழந்தைகளின் தனித் திறமைகளுக்கு முறையான அங்கீகாரம் இல்லாமல் திறமைகள் முடக்கப்படும். தங்களுக்கு நடந்த ஹாஸ்டல் கொடுமைகளை கேட்க ஆளில்லாமல் ஆழ் மனதில் சோர்வின் உச்ச கட்ட உணர்வு மிகுதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெற்றோர்களிடம் எந்த ஒட்டுதலும் இல்லாமல் தனிமையாக வாழத் தொடங்குவார்கள். பெற்றோர்களின் அன்பு, அரவணைப்பு குழந்தைகளுக்கு மிக அவசியம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் குறைந்த பட்சம் 18 வயது வரை குழந்தைகள் பெற்றோர்கள் பராமரிப்பில் இருந்தால் மட்டுமே தலை சிறந்த குடிமகனாக வாழ முடியும். 20 வருடங்களுக்கு முன்பு வரை பால்ய வயது குழந்தைகளை எந்த பெற்றவர்களும் ஹாஸ்டலில் விட வில்லை. சனியின் தாக்கத்திற்கு பயந்து ஒடி ஒளியவில்லை. பிரச்சினைகளை வழிபாட்டால் மட்டுமே தீர்த்தார்கள்.

    ஜாதகம் பார்க்க வருபவர்களில் பல பெற்றோர்கள் என் குழந்தைக்காக நான் முறைப்படி சஷ்டி விரதம் இருக்கிறேன், பிரதோஷ வழிபாடு செய்கிறேன், பல நபர்களுக்கு கோவிலில் அன்னதானம் செய்கிறேன். தர்மப்படி முறையாக வாழ்ந்தாலும் இந்த தீய கர்ம பலன் குறைய வில்லையே நான் என்ன செய்வது. குழப்பமாக உள்ளது என்கிறார்கள். எப்பொழுது ஒரு மனிதன் தான் செய்த தானத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டானோ அந்த கணத்திலிருந்து அவனுடைய அனைத்து வழிபாடும் தர்மமும் செயல் இழந்து விடும்.மகான்களும் இதைத் தான் சொல்கிறார்கள். ஒரு செயலை செய்த பின்பு மனதில் நான் இதை செய்தேன் என்ற எண்ணம் தோன்றி விட்டால் அந்த செயலுக்கு உண்டான பலன் இல்லாமல் போய்விடும்.

    மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழிப்பதில் அஷ்டமி திதி முன்னணி வகிக்கிறது. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம். கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்தவர் கண்ணன். ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை "கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்று பொருள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்ட மியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் அல்லும் பகலும் என்னை பூஜித்து யாரெல்லாம் எதை என்னிடம் வேண்டுகிறார்களோ அதை அவர்களுக்கு அளிப்பேன் என்று கூறுகிறார்.

    இந்த அற்புதம் நிறைந்த கிருஷ்ண ஜெயந்தி 6.9.2023, ஆவணி 20-ம் நாள், புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்நாளில் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் நாளில் வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் அரிசி மாவில் குட்டிக்குட்டி பாதங்கள் வரைந்து கண்ணனை அழைக்க வேண்டும். வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்ய வேண்டும். பாத கோலம் போட்டு அலங்கரித்தால் குட்டிக்கண்ணன் நம் வீடு தேடி வருவான் என்பது நம்பிக்கை. வீட்டில் குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடம் போட அவர்களின் ஜாதக ரீதியான தோஷம் விலகி ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி தங்கும். அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

    • சூரியாஸ்தமனம் ஆகிவிட்டால் போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது அக்கால மரபு.
    • அர்ச்சுனன் வேறுவழி தெரியாமல் தன் அண்ணன் தர்மபுத்திரரை நோக்கி வில்லை வளைக்கலானான்.

    பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே மகாபாரதப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம். பாண்டவர் அணியில் உடன் இருந்து அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான் பரந்தாமன் கண்ணன்.

    தன் பக்தையான பாஞ்சாலியின் வேண்டுகோளின்படி பாண்டவர்களைக் காப்பதே கண்ணனின் குறிக்கோளாக இருந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாண்டவர்களுக்கு வந்த இடையூறுகளை ஒவ்வொரு விதத்தில் நீக்கிக் கொண்டிருந்தான்.

    அன்றைய போர் முடிந்துவிட்டது. சூரியாஸ்தமனம் ஆகிவிட்டால் போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது அக்கால மரபு. அதனால் இரு தரப்பிலும் போர் நிறுத்தப்பட்டுவிட்டது. இருள் சூழத் தொடங்கிவிட்டது.

    பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனனைத் தவிர தருமன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய மற்ற நால்வரும் போர்க்களத்தில் இருந்து தங்கள் பாசறைக்கு ஒவ்வொருவராகத் திரும்பி விட்டார்கள்.

    ஆனால், எங்கே இன்னும் அர்ச்சுனனைக் காணோம்? கட்டாயம் இன்று கர்ணனைக் கொன்றுவிட்டு வருகிறேன் என்று வீர சபதம் செய்துவிட்டுப் போனவன் அல்லவா அவன்?

    பஞ்ச பாண்டவரில் மூத்தவரான தர்மபுத்திரர், தம்பி அர்ச்சுனன் வரவுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். கர்ணனை இன்றேனும் அவன் கொன்றிருக்கமாட்டானா என்று செய்தியறிய அவரிடம் பேராவல்.

    `பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவி இரண்டும் கலந்தே குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல்முடிப்பேன் யான், அது செய்யுமுன்னே முடியேன்!' என்று சபதமிட்டிருந்த தேவி பாஞ்சாலி, தலைவிரிகோலமாக அர்ச்சுனன் வரவை எதிர்பார்த்துப் பாசறையின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    இருள் மயங்கும் அந்த அந்தி நேரத்தில் தொலைதூரத்தில் நிழலோவியம் போல அர்ச்சுனன் மெல்ல நடந்துவருவது தெரிந்தது. அதைக் கண்டு துள்ளி எழுந்தார் தர்மபுத்திரர்.

    `என் அன்புத் தம்பி அர்ச்சுனா! இன்றேனும் கர்ணனைக் கொன்றாயா?' மிகுந்த ஆவலுடன் கேட்டார்.

    `நாளை கொன்றுவிடுவேன் அண்ணா!'

    - அருகே நெருங்கிவந்த அர்ச்சுனன் உதடுகளில் இருந்து கொஞ்சம் தயக்கத்துடன் வந்தது பதில்.

    தர்மபுத்திரருக்குக் கடும்கோபம். என்ன இது? இன்னும் கொல்லவில்லையா கர்ணனை? துரியோதனனை நெருங்க ஒட்டாமல் அவனுக்குக் கவசம் போல் இருப்பவன் அல்லவா மாவீரனான கர்ணன்?

    கர்ணனைக் கொன்றால் தானே அடுத்து துரியோதனனைக் கொல்ல முடியும்? அப்போதுதானே போர் முடியும்? அப்போதுதானே பாஞ்சாலியின் கை அவளது அவிழ்ந்த கூந்தலை முடியும்? போர் நீண்டுகொண்டே போகிறதே?

    கர்ணனைக் கொல்வதில் ஏன் இந்தத் தாமதம்? தம்பி அர்ச்சுனன் வீரம் என்பது இவ்வளவு தானா? ஒவ்வொரு நாளும் இன்று கர்ணனைக் கொல்வேன் என்று சொல்லிவிட்டுத் தான் போருக்குப் புறப்பட்டுச் செல்கிறான். ஆனால் ஒவ்வொரு நாளும் கர்ணனைக் கொல்லாமலே திரும்புகிறான்!

    எல்லை மீறிய கோபத்தால் தர்மபுத்திரரின் நாவில் இருந்து விபரீதமான ஒரு வாக்கியம் குதித்துக் கொண்டு புறப்பட்டது.

    `அர்ச்சுனா! இன்றுமா நீ கர்ணனைக் கொல்லவில்லை? உன் கையில் உள்ள காண்டீபம் என்ற வில் - அந்த வில் என்ன வில்லா இல்லை புல்லா? நாணமில்லாமல் அதற்கு நாண் வேறு ஒரு கேடா?'

    அடடா! தர்மபுத்திரர் நாவில் அன்று சனி புகுந்துகொண்டதோ? விவரம் தெரிந்த அவரே இப்படிக் கேட்டுவிட்டாரே!

    அர்ச்சுனன் தன் வில்லைப் பழிப்பவர்களை உடனே கொல்வது என்று ஒரு `வாழ்நாள் சபதம்' செய்திருக்கிறானே? அவன் அப்படிச் சபதம் செய்திருக்கும் செய்தி தர்மபுத்திரர் உள்பட ஏனைய பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் அறிந்தது தானே?

    ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழி உண்மையாகி விட்டதே? கர்ணன் இன்னும் கொல்லப்படவில்லை என்ற ஆத்திரத்தில் அண்ணாவே சொந்தத் தம்பியின் வில்லைப் பழிக்கலாமா?

    சாந்த ஸ்வரூபியான தர்மபுத்திரர் இன்று அவசரத்தில் தன் நிலை தடுமாறியது ஏன்? விதி விளையாடுகிறதா?

    இனி என்ன நடக்கும்? பீமன், நகுலன், சகாதேவன் இவர்களோடு பாஞ்சாலியும் தவித்துக் கொண்டு காத்திருந்தாள்.

    தன் வில்லான காண்டீபம் பழிக்கப் பட்டதைக் கேட்டு விக்கித்துப் போன அர்ச்சுனன் மெல்ல தர்மபுத்திரரிடம் வினவினான்:

    `அண்ணா! நான் என்ன செய்வது இப்போது? நீங்கள் தான் அறிவுறுத்த வேண்டும்! என் சபதப்படி என் வில்லைப் பழிப்பவர்கள் யாராயினும் நான் கொல்ல வேண்டுமே? இப்போது நீங்கள் அல்லவா என் வில்லைப் பழித்துவிட்டீர்கள்?'

    தர்மபுத்திரர் திகைப்புடன் நாக்கைக் கடித்துக் கொண்டார். சிறிதுநேரம் என்ன செய்வதென்றறியாமல் யோசித்தார்.

    அவர் தர்மத்தின் வடிவமல்லவா? பின் ஒரு தெளிவோடு கம்பீரமாகச் சொல்லலானார்:

    `பார்த்தனே! என்ன செய்வேன்? ஆத்திரத்தில் நிலைமறந்து வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன். நடந்தது நடந்துவிட்டது. நாவில் இருந்து புறப்பட்ட வார்த்தைகளைத் திரும்பப் பெற இயலாது. நல்லது. இன்றே இப்போதே உன் சபதப்படி நீ என்னைக் கொன்றுவிடு. உன் சபதம் நிறைவேறுவது மிக முக்கியம். ஆனால் மறக்காமல் நாளையேனும் கர்ணனைக் கொன்றுவிடு!' என்றார்.

    அர்ச்சுனன் வேறுவழி தெரியாமல் தன் அண்ணன் தர்மபுத்திரரை நோக்கி வில்லை வளைக்கலானான்.

    பாஞ்சாலி திகைத்தாள். அவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.

    என்ன நடக்கிறது இங்கே? விரோதிகளை அழிக்கவேண்டிய அம்பு சொந்த அண்ணனையே அழிப்பதா? அன்பு செலுத்த வேண்டிய இடத்தில் அம்பு செலுத்துவதா?

    அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கிருஷ்ண பக்தி. துகில் உரியப்பட்ட மிகவும் இக்கட்டான தருணத்தில் அவள் மானத்தைக் காப்பாற்றியது அவளது கிருஷ்ண பக்தி தானே?

    அவளுக்கு எந்தத் துயரம் நேர்ந்தாலும் உடனே உதவிக்கு வரக் கூடியவன் கண்ணன் ஒருவன் தானே? அவனை அழைக்க முடிவு செய்தாள்.

    `கண்ணா! கண்ணா!' என்று கதறலானாள்.

    *துவாரகைக் கண்ணன் ஓடோடி வந்தான். பக்தையின் குரலுக்கு ஓடி வருவதை விடவும் கடவுளுக்கு வேறென்ன வேலை?

    எல்லாம் தெரிந்த கண்ணன் ஏதும் தெரியாததுபோல் என்ன நடந்ததென்று கேட்டான். நேர்ந்துள்ள சங்கடமான நிலைமையை, பாஞ்சாலி, விழிகளில் பெருகிய கண்ணீருடன் விவரித்தாள்.

    'அவ்வளவுதானே? அர்ச்சுனன் யுதிஷ்டிரனைக் கொல்லட்டும்!' என்றான் குறும்பாய்க் கண்சிமிட்டிக் கொண்டே கண்ணன்.

    பாஞ்சாலி, `இதுதானா நீ என்னை ரட்சிக்கிற லட்சணம்? உனக்குத் தெய்வமென்று ஏன் பெயர் வைத்தார்கள்? என் கணவரின் உயிரைக் காக்காமல் அப்புறம் நீ என்ன காக்கும் கடவுள்?' என்று சீறினாள்.

    கடவுளிடம் கோபம் கொள்ளவும் கூட பக்தனுக்கு உரிமை உண்டல்லவா?

    கண்ணன் புல்லாங்குழலைக் கையில் தட்டிக்கொண்டு தன் முத்துப் பற்களைக் காட்டிக் கலகலவென்று நகைத்தான்.

    `பொறு பாஞ்சாலி பொறு! அர்ச்சுனன் தர்மபுத்திரரைக் கொல்லட்டும். ஆனால் நிஜத்தில் கொல்ல வேண்டாம். சாஸ்திரப்படிக் கொல்லட்டும். அப்படிக் கொன்றால் அவன் சபதம் நிறைவேறியதாகவும் ஆகும். உண்மையில் யுதிஷ்டிரர் இறக்கவும் தேவையில்லை!'

    கண்ணனின் பேச்சைக் கேட்டு, இப்போது அர்ச்சுனன் உள்ளிட்ட அனைவரும் திகைத்தார்கள்.

    `அதெப்படி சாஸ்திரப்படிக் கொல்வது?'

    அர்ச்சுனன் வியப்போடு வினவினான். கண்ணன் சொல்லலானான்:

    `அர்ச்சுனா! நம்மிலும் வயதில் மூத்தவர்களையும் முன்னோடிகளையும் காலமானவர்களையும் ஏக வசனத்தில் தாறுமாறாகப் பேசினால் அது அவர்களைக் கொன்றதற்குச் சமானம். உன்னிலும் வயதில் மூத்த யுதிஷ்டிரரை ஏகவசனத்தில் மரியாதைக் குறைவாக நீ பேசுவாயாக. அதை யுதிஷ்டிரரின் காதுகள் கேட்கட்டும்.

    அப்படியானால் சாஸ்திரப்படி நீ அவரைக் கொன்றதாக ஆகும். உன் வில்லைப் பழித்தவர்களைக் கொல்வது என்ற உன் சபதம் நிறைவேறியதாகக் கொள்ளப்படும்! யுதிஷ்டிரன் உயிர் துறக்காமலிருக்க இதுதான் ஒரே வழி!'

    கண்ணன் சொன்ன இந்த யுக்தி பஞ்ச பாண்டவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அர்ச்சுனன் தன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, தான் எப்போதும் பெரும் மரியாதை செலுத்தும் தன் அண்ணா யுதிஷ்டிரரை ஏக வசனத்தில் பேசித் திட்டலானான்.

    தன் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு அர்ச்சுனன் தன்னைத் திட்டும் திட்டுதல்களை யுதிஷ்டிரர் மனமுவந்து ரசிக்கலானார். சற்றுநேரம் திட்டி சாஸ்திரப்படி கொலைக்குச் சமமான செயலைச் செய்த பிறகு அர்ச்சுனனிடம் கடும் சோர்வு ஏற்பட்டது.

    `என் அண்ணனைக் கொல்வதற்குச் சமமான செயலைச் செய்தபின்னர் நான் உயிர்வாழ விரும்பவில்லை கண்ணா! நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்!'

    அர்ச்சுனன் தன் வில்லைத் தன்னை நோக்கியே திருப்பினான். இந்த விந்தையான திருப்பம் அங்கிருந்த அனைவரையும் திகைக்க வைத்தது. பாஞ்சாலி வழக்கம்போல் கண்ணனைச் சரணடைந்தாள். கண்ணன் நகைத்தவாறே அர்ச்சுனனிடம் சொல்லலானான்:

    `உன் அண்ணனைப் பழித்த பிறகு நீ உயிர்வாழ விரும்பவில்லை. தற்கொலை செய்துகொள்ள எண்ணுகிறாய். அவ்வளவு தானே? நல்லது. அதற்கும் வழி இருக்கிறது. சாஸ்திரப்படித் தற்கொலை செய்துகொண்டுவிடு. உன் உயிர் பிழைக்கும். ஆனால் நீ தற்கொலை செய்துகொண்டதாகவும் ஆகும்!'

    பஞ்ச பாண்டவர்கள் திகைத்தார்கள். அடேயப்பா! கண்ணனுக்கு என்னென்ன சாஸ்திரமெல்லாம் தெரிந்திருக்கிறது!

    `அதெப்படி சாஸ்திரப்படித் தற்கொலை செய்துகொள்வது?'

    அர்ச்சுனன் கேட்டான். கண்ணன் சிரித்துக்கொண்டே சொல்லலானான்:

    `அர்ச்சுனா! உன்னை நீயே தற்புகழ்ச்சியாகப் பேசிக் கொள். உன் ஆற்றல்களைப் பற்றி நீயே புகழ்ந்துகொள். தற்புகழ்ச்சி என்பது தற்கொலைக்குச் சமானம்!'

    அப்படி அர்ச்சுனன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு, தற்கொலை செய்துகொள்ளாமல் சாஸ்திரப்படித் தப்பித்தான் என்கிறது மகாபாரதம்!

    வயதில் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பதையும் தற்புகழ்ச்சி பேசாமல் அடக்கத்தோடு வாழ்வது அவசியம் என்பதையும் புரிந்துகொண்ட பாஞ்சாலி, தன் கணவர்களான தருமபுத்திரரையும் அர்ச்சுனனையும் உயிர் போகாமல் காப்பாற்றிய கண்ணக் கடவுளை நோக்கி நன்றியுடன் இருகரம் கூப்பி வணங்கினாள்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, அந்த பிள்ளைகளும் மனதளவிலும், வெளியுலக அளவில் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.
    • பெற்றோர்கள் அங்கு நீதிபதியாகவோ, நாட்டமை செய்யவோ வேண்டாம்.

    விடலை பருவம். இந்த பருவத்தில் இருக்கும் குழந்தைகள்- இவர்கள் இள வயது என்றாலும் குழந்தைகள் என்றே குறிப்பிடலாம். இந்த வயது 13-19 வரை என்று எடுத்துக் கொள்வோம். இவர்களை வளர்க்கும் பெற்றோர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இது பல வீடுகளில் நாம் காணும் ஒன்று. பாசம் ஒரு பக்கம், பெற்ற பிள்ளையை பற்றிய பயம் ஒரு பக்கம். அவர்கள் எதிர்காலத்தினைப் பற்றிய திகில். இவை பெற்றோர்களை மனதளவில் நரக வேதனையை அனுபவிக்க வைக்கின்றது. இது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, அந்த பிள்ளைகளும் மனதளவிலும், வெளியுலக அளவில் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.

    அவர்களின் ஹார்மோன்கள் மாறுதல்கள், பருவ வயதினை அடைதல், பெற்றோர்களின் கட்டுப்பாடு திணிப்புகள், பள்ளியில் படிப்புச் சுமை என பல வகைகளில் அவர்களும் கஷ்டப்படுகின்றனர் என்பதே உண்மை. பலர் அவர்களின் பெற்றோர்களை விரோதியாய் பாவிக்கின்றனர். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி தவறாய் புரிந்து கொள்கின்றனர். இதனை முள் மேல் விழுந்த துணியாகத்தான் கையாள வேண்டி உள்ளது. பொதுவில் இந்த இளம் சிறார்களின் பிரச்சினையாக

    * தனது தோற்றம், அழகு, உருவ அமைப்பு, நிறம் என இதிலேயே கவனமும், கவலையும் உள்ளது.

    * அதிக 'ஸ்ட்ரெஸ்' உடனேயே இருப்பர்

    * மனக்கவலை, மன சோர்வு அதிகம் இருக்கும்.

    * சிலர் மது, புகை பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர்

    * சிறு வயதில் கர்ப்பம்

    * சிறு வயதில் உடல் உறவு

    * எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுதல்

    இப்படி நிறைய வகையில் வெளிப்படுகின்றன.

    முறையான தூக்கமின்மை, ஒழுங்கான உணவு பழக்கமின்மை, முறையான ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் விரும்பமின்மை, தனியாக இருத்தல், அறையில் தனிமையில் கதவை தாளிட்டு இருத்தல் இவை அனைத்துமே பாதிப்பின் ஆரம்ப கால அறிகுறிகள்தான்.

    கோபம், குழப்பம், பொறாமை, முறையில்லாத நடத்தை, பெற்றோர்கள் மீது வெறுப்பு, ரகசியம், இவை அனைத்துமே அவர்களது பருவ மாறுதலின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான். இவர்களால் ஒழுக்கமான முறையில் நடக்க முடியவில்லை என்ற இயலாமையே இவர்களுக்கு கூடுதல் ஆத்திரத்தினை ஏற்படுத்துகின்றது.

    இந்த காலத்துக்கு ஏற்றார் போல் 10-11 வயதிலேயே இந்த ஹார்மோன் மாறுபாடுகள், உடலுறவு, விபரீத விளைவுகள் இவற்றினைப் பற்றி சொல்லிக் கொடுப்பதே இவர்களை பல பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றும் என்கின்றனர் மனநல ஆய்வாளர்கள்.

    எந்நேரமும் அவர்களை குற்றம், குறை கூறாமல் அவர்களின் சுய மதிப்பினை, கவுரவத்தினை அவர்கள் கூட்டிக் கொள்ளும் வகையில் மட்டும்தான் பேச வேண்டும். நீங்கள் அவர்களுக்கு காட்டும் மரியாதையே அவர்களுக்கு சுய மரியாதையினை உருவாக்கும். மாறாக அவர்களை குட்டிக் கொண்டே இருந்தால் சுயநம்பிக்கை இழந்து விடுவர். அக்கறை என்ற பெயரில் அவர் களை அழித்து விடக் கூடாது.

    இந்த பருவ காலத்தில் தான் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் உறவில் இறுக்கம், புரிதல் இருக்க வேண்டும்.

    உங்கள் பிள்ளைகளை கொஞ்சமாவது நம்ப வேண்டும். அதிக குறுக்கு விசாரணை, வேவு பார்த்தல் போன்றவை அவர்களை மேலும் பிரச்சினைக்குள்ளாக்கும். திருட, பொய் சொல்ல, மரியாதை இன்றி பேச முற்படுவார்கள். அவர்களுக்கு மனநல பிரச்சினை இருக்கின்றது என்பதனை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

    அவர்களுக்கு பள்ளியில், சமுதாயத்தில் யாரேனும் மனதளவில் உடல் அளவில் கொடுமைப்படுத்துகின்றனரா? என்று கண்டறிய வேண்டும். அவர்கள் தைரியமாய் பெற்றோரிடம் எதனையும் பகிர்ந்த கொள்ளக் கூடிய நல்ல உறவு முறையினை உருவாக்க வேண்டும்.

    தேவைப்படின் மன நல மருத்துவர் ஆலோசனையும் பெற வேண்டும்.

    இளம் பருவத்தினரின் சில பொதுவான பிரச்சினைகள்:-

    * நண்பர்களே வாழ்வின் முக்கியமான வர்களாக இருப்பார்கள். பெற்றோர்களை தூக்கி எறிவார்கள். இந்த நட்பு தவறான நடத்தை உடையவர்களுடன் இருந்துவிட்டால் இவர்களும் சமுதாய, தனிமனித ஒழுக்கத்தினை வரை கோடு எல்லைகளை மீறுகின்றனர். இந்த இடத்தில் பெற்றோர்களின் பொறுமையும், அன்பு, தவறுதலை சுட்டி காட்டுதல் மட்டுமே தீர்வாக அமையும். உங்கள் பிள்ளைகள் கத்தலாம், எரிந்து விழலாம். ஆனால் விடாது நீங்கள் காட்டும் அன்பும், பொறுமையும் கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதியவே செய்யும்.

    * சகோதர, சகோதரிகளுடன் பொறமை இருக்கலாம். தான் சரியாக பெற்றோர்களால் கவனிக்கப்படவில்லை என்று எண்ணுவாார்கள். அன்பு இல்லை என ஏங்குவார்கள்.

    அவர்களுக்குள் ஏற்படும் சிறு சிறு சண்டைகள், பிரச்சினைகள் இவற்றினை அவர்களே தீர்வு காணட்டும். பெற்றோர்கள் அங்கு நீதிபதியாகவோ, நாட்டமை செய்யவோ வேண்டாம். பொறாமை அதிகப்பட்டால் இருவருக்கும் சம கவனிப்பு, அக்கறை கொடுக்க வேண்டும். ஒருவரை உயர்த்தி பேசுவது, ஒருவரை தாழ்த்தி பேசுவது, மற்றவரோடு ஒப்பிட்டு குறை கூறுவது போன்றவற்றினை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    * பெற்றோர்களின் கருத்துக்களை இந்த காலப் போக்கின்படி பிள்ளைகள் ஏற்க மாட்டார்கள். மாறுபாடாகவே இருக்கும். வாக்குவாதங்கள் இருக்கும். சிலர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வர். பெற்றோர்களும் பொறுமை இழந்து அடிக்கவும் செய்வர்.

    நம் கருத்துகளை அவர்கள் மீது திணிக்க முடியாது. ஒவ்வொரு பிறப்பும் தனித் தன்மை கொண்டதே. சற்று விட்டுக் கொடுக்க வேண்டும். அமைதியான மனநிலையில் மட்டுமே பேச வேண்டும். எதனையும் வாக்குவாதம், மிரட்டல் மூலம் செய்யவே முடியாது என்பதனை பெற்றோர்கள் கண்டிப்பாய் புரிந்து கொள்ள வேண்டும்.

    இம் மாதிரியான பாதிப்புடைய குழந்தை களுக்கு தன்னம்பிக்கை இருக்காது. இதனை மேலும் பாதிக்கும் வகையில் பெற்றோர்கள் நடவடிக்கை இருக்கக் கூடாது. அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

    தியானம், யோகா இவற்றினை பெற்றோர், பிள்ளைகள் இருவரும் கற்க வேண்டும். இது மிக அவசியம். இது மிகுந்த நன்மை பயக்கும் என ஆய்வுகள் அறி வுறுத்துகின்றன.

    இவைகளை நாம் உணர வேண்டும்

    * டீன் பருவம் அதிக சக்தி உள்ள பருவம். பொறுப்புகள் அநேகமாக இருக்காது. பயம் இருக்காது.

    * இன்றைய தலைமுறை காணும் சமுதாயம் முற்றிலும் மாறுபட்டது.

    * அவர்களுக்கு மீடி யாக்கள் மூலம் கிடைக்கும் நன்மை களும் அதிகம். தீமைகளும் அதிகம்.

    * கொடுமை களை அவர்கள் உறவுகள் மூலமோ, நண்பர்கள் மூலமோ, தெரியாதவர் மூலமோ எளிதில் அடைகின்றனர்.

    * ஹார்மோன் மாறுபாடுகள் அவர்களை அதிகம் பாதிக்கின்றன.

    * இளம் வயது காதல், காதல் முறிவு இவை மனதளவில் அதிகம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    * சமீபத்திய ஆய்வு அநேக இளம் பருவத்தினர் சுமார் 9 மணி நேரம் ஏதோ ஒரு வித மீடியா தொடர்பிலேயே இருக்கின்றனர் என்று கூறுகின்றது.

    * பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்பு கனவுகள் அவர்களை பயம் கொள்ளச் செய்கின்றன.

    * எதனையும் அவர்கள் மீது திணிக்க வேண்டாம். வாய்ப்புகள், நல்லவைகள் இவற்றினை கை காட்டி கொடுங்கள். பாட்டோ, இசை கருவியோ கற்பது மனநிலை சீராய் இருக்க உதவும். அவர்களின் ஆர்வங்களுக்கு காது கொடுங்கள். ஓவியம் வரைவதில் திறமை இருந்தால் அதனை ஊக்கம் அளிக்க வேண்டும். அவர்களின் சுற்றுப்புற சூழ்நிலை நல்லவைகளாகவே இருக்கட்டும்.

    ×