என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கும்பகோணம் - பரிகார தலங்கள்
- கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன.
- காசியை விட அதிக சிறப்பு வாய்ந்த நகரம் என்ற பெருமையும் கும்பகோணத்துக்கு உண்டு.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
- அவ்வையார்
கும்பகோணம்....
இந்த பிரபஞ்சம் உருவாக காரணமாக இருந்த ஊர்.
இந்த உலகில் உயிரினங்கள் மற்றும் இடங்களை பிரம்மா உருவாக்கியதாக சொல்வார்கள். ஆனால் சிவபெருமானே முன்னின்று உருவாக்கிய ஊர் கும்பகோணம். அதனால்தான் சிவபெருமானின் மனம் விரும்பும் இடம் என்று கும்பகோணத்தை சொல்வார்கள்.
கும்பகோணம் மிக மிக பழமையானது மட்டுமல்ல, பல்வேறு முதன்மை சிறப்புகளை கொண்டது. கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. தமிழகத்தில் வேறு எந்த ஊரிலும் இந்த அளவுக்கு ஆலயங்கள் கிடையாது. அதனால்தான் கும்பகோணத்தை கோவில் நகரம் என்று அழைக்கிறார்கள்.
கும்பகோணம் என்ற பெயர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதுதான். அதற்கு முன்பு இந்த நகரை குடமூக்கு என்றுதான் அழைத்தனர். தமிழ் இலக்கியங்களிலும் குடமூக்கு என்றுதான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கிறது.
முன் ஒரு காலத்தில் மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் நிலை ஏற்பட்டது. அப்படி ஒரு பிரளயம் ஏற்படப் போவதை பிரம்மா முன்னதாக அறிந்து இருந்தார். எல்லா உயிர்களும் அழிந்துவிட்டால் எவ்வாறு புதிய உயிர்களை படைப்பது என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சிவபெருமானிடம் சென்று உதவி கேட்டார். அதற்கு சிவபெருமான், "உலகம் முழுவதும் உள்ள புண்ணிய தலங்களில் உள்ள மணலை சிறிது சிறியதாக சேகரித்துக் கொள். அவற்றுடன் அமுதம் சேர்த்து பிணைந்து பெரிய பானை (குடம்) ஒன்றை செய்து கொள். அதற்குள் எல்லா உயிரினங்களையும் ஜீவ வித்துக்களை வைத்து விடு. பிறகு அதை மூடி மாவிலை, தர்ப்பை கொண்டு அலங்கரித்து மேல்மலை மீது வைத்து விடு.
பிரளயம் வரும்போது அந்த பானை தண்ணீரில் மிதக்கும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் அந்த பானை தங்கி விடும். அந்த இடத்தில் நான் தோன்றி உயிரினங்கள் பெருக வழிவகை செய்கிறேன்" என்று உறுதி அளித்தார். சிவபெருமான் சொன்னபடியே பிரம்மாவும் கும்பத்தை உருவாக்கி தயாராக வைத்துள்ளார்.
பிரளயம் ஏற்பட்டபோது அமுதம் நிறைந்த அந்த குடம் மிதந்து சென்றது. ஒரு இடத்தில் அது தரை தட்டி நின்று விட்டது. அந்த இடம்தான் கும்பகோணம்.
சிவபெருமான் வாக்குறுதி அளித்தபடி அங்கு வந்தார். அம்பை எய்து குடத்தை உடைத்தார். குடத்தில் இருந்து அமுதம் நாலாபுறமும் வழிந்தது. கும்பத்தை அலங்கரித்து இருந்த பொருட்களும் சிதறின. அவை அனைத்தும் லிங்கங்களாக மாறின. குடத்தில் இருந்து ஜீவ வித்துக்கள் மூலம் மீண்டும் உயிரினங்கள் தோன்றின.
இந்த புராண வரலாறு படி பார்த்தால் பிரபஞ்சத்தில் மீண்டும் உயிரினங்கள் உருவாக அமைந்த முதல் தலமாக கும்பகோணம் இருப்பதை உணரலாம். இத்தகைய சிறப்புடைய இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில்தான் ஆதிகாலத்தில் இந்த நகரை குடமூக்கு என்று அழைத்தனர்.
கால ஓட்டத்தில் வடமொழியில் தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்கள் மாற்றம் ஆன போது குடமூக்கு கும்பகோணமாக மாறி போனது. சோழர்களின் தலைநகரமாக இருந்ததால் கலைகளின் நகரம் என்ற சிறப்பையும் கும்பகோணம் பெற்று இருந்தது.
அனைத்துக்கும் மேலாக காசியை விட அதிக சிறப்பு வாய்ந்த நகரம் என்ற பெருமையும் கும்பகோணத்துக்கு உண்டு. பொதுவாக பாவம் செய்தவர்கள் காசியில் ஓடும் கங்கையில் நீராடி தங்களது பாவங்களை தீர்த்துக் கொள்வார்கள். அந்த பாவ குவியல்களை ஏற்றுக்கொள்ளும் கங்கை நதி கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் விழாவில் நீராடி தனது பாவத்தை போக்கி கொள்ளும் என்பார்கள்.
இத்தகைய சிறப்புடைய கும்பகோணத்தின் பெயரை சொன்னாலே பாவங்கள் நம்மை விட்டு நீங்கி விடும் என்று அப்பர் பாடி உள்ளார். கும்பகோணத்தில் தங்கினால் பல்வேறு புனித தலங்களில் தங்கிய பலன்கள் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் கும்பகோணத்திலும் அதை சுற்றிலும் அமைந்துள்ள மிக சிறப்பான ஆலயங்கள்தான். கும்பகோணத்தில் சுமார் 200 கோவில்கள் அதன் எல்லைப் பகுதிகளில் சுமார் 300 கோவில்கள் என சுமார் 500 பழமை சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் நம் மூதாதையர்களால் ஒவ்வொரு வகை பிரார்த்தனைக்கும், பரிகாரங்களுக்காகவும் கட்டப்பட்டதாகும்.
கும்பகோணத்தை சுற்றியுள்ள ஆலயங்கள் மூலம் ஒருவரது வாழ்வியலுக்கு தேவையான அத்தனை பலன்களையும் மிக மிக எளிதாக பெற்று விட முடியும். அதாவது ஒரு பெண்ணிடம் கருவை உருவாக்குவதில் இருந்து அந்த கரு நல்லவிதமாக வளர்ந்து குழந்தையாக மாறி இந்த உலகில் பிறந்து பிறகு பெரிய மனிதராக மாறி வாழ்வியல் கடமைகள் அனைத்தையும் முடித்து விட்டு நிறைவு பெறும்வரை தேவையான அத்தனை பலன்களையும் தரும் ஆலயங்கள் கும்பகோணத்திலும் அதை சுற்றிலும் அமைந்து இருக்கின்றன.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு மனிதன் பிறப்பது முதல் இறப்பது வரை என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது என்பதற்கான ஆலயங்கள் கும்பகோணம் பகுதிகளில் உள்ளன. வாழ்க்கை நிறைவுக்கு பிறகு முக்தி பாதைக்கு அழைத்து செல்லும் ஆலயங்களும் அங்குதான் நிறைந்துள்ளன.
அதனால்தான் தமிழகத்தில் எந்த ஒரு ஊருக்கும் இல்லாத மகிமை கும்பகோணத்துக்கு இருக்கிறது. உங்களுக்கு என்ன தேவையோ அதை கும்பகோணம் பகுதி ஆலயங்கள் மூலம் எளிதில் பெற முடியும். குழந்தை பாக்கியம், திருமணம், கல்வி, செல்வம், சொத்து, கடன் தீர்ப்பது, மன அமைதியுடன் வாழ்வது, எதிரிகளை ஒடுக்குவது, புகழ் பெறுவது..... இப்படி உங்களுக்கு என்ன வேண்டுமோ அவை எல்லாமே கும்பகோணம் ஆலயங்கள் மூலம் நிச்சயம் கிடைக்கும்.
இதற்கு உங்களுக்கு ஒரே ஒரு தெளிவுதான் இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது? அந்த பிரச்சினையை தீர்க்கும் ஆலயம் கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளில் எங்கு இருக்கிறது? இதை தீர்மானித்து விட்டால் பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம்.
வாருங்கள்........... கும்பகோணத்துக்கு போகலாம்.
சரி கும்பகோணத்துக்கு வந்து விட்டோம். முதலில் என்ன செய்ய வேண்டும்? எதை தொடங்கினாலும் விநாயகரை தொழுதுதானே தொடங்க வேண்டும். கும்பகோணத்தில் முதல் விநாயகர் பழமையான விநாயகர் என்று எல்லாம் புகழப்படும் விநாயகராக கரும்பாயிரம் விநாயகர் திகழ்கிறார்.
கும்பேஸ்வரர் ஆலயம் அருகில் வராக தீர்த்தம் கரையில் கரும்பாயிரம் விநாயகர் ஆலயம் உள்ளது. இதற்கு வராக பிள்ளையார் என்றும் இன்னொரு பெயர் உண்டு. இவரை வணங்கினால் எதை தொடங்கினாலும் வெற்றி மீது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த விநாயகர் உருவானதில் ஒரு புராண வரலாறு உள்ளது. ஆதி காலத்தில் அசுரன் ஒருவன் பூமாதேவியை கவர்ந்து கொண்டு பாதாள உலகத்துக்குள் சென்று ஒழிந்துக் கொண்டான். அவனிடம் இருந்து பூமியை மீட்பதற்கு மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதன் கரையில் விநாயகரை பிரதிஷ்டை செய்தார்.
அவருக்கு வராக விநாயகர் என்றும் பெயரிட்டார். அந்த விநாயகரை வணங்கி சென்றதால்தான் அசுரனிடம் இருந்து பூமாதேவியை மகாவிஷ்ணுவால் மீட்க முடிந்தது. இந்த விநாயகர் தான் கும்பஸே்வரர் கோவில் அருகில் அமர்ந்துள்ளார். பிற்கா லத்தில் அவருக்கு கரும்பாயிரம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.
ஒரு தடவை கரும்பு வியாபாரி ஒருவர் ஏராளமான கரும்புகளுடன் வந்து வராக விநாயகர் ஆலய வளாகத்தில் தங்கியிருந்தார். அவரிடம் விநாயகர் சிறுவன் வேடம் எடுத்து சென்று கரும்பு தரும்படி கேட்டார். ஆனால் வியாபாரி கரும்பு கொடுக்கவில்லை. இதனால் விநாயகர் அங்கிருந்த கரும்பையெல்லாம் தின்று சக்கையாக மாற்றி விட்டார்.
அதன் பிறகுதான் சிறுவனாக வந்தது விநாயகர் என்று வியாபாரிக்கு தெரிந்தது. அவர் மீண்டும் கரும்புகளை படைத்து வழிபட்டார். அன்று முதல் வராக விநாயகருக்கு கரும்பாயிரம் விநாயகர் பெயரும் ஏற்பட்டது.
இவரை வழிபட்டால் நம் வாழ்க்கையும் கரும்புபோல இனிக்கும் என்பது ஐதீகம். நீங்களும் கும்பகோணம் யாத்திரை மேற்கொள்ளும்போது முதலில் கரும்பாயிரம் விநாயகரை வணங்கி பிரார்த்தனைகளை தொடங்குங்கள். எல்லாம் வெற்றியாக வந்து சேரும்.
அடுத்த வாரம் கும்பகோணம் பெயர் உருவாக காரணமான கும்பேஸ்வரர் வழிபாடு பலன்களைப் பார்க்கலாம்.






