என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • அழுவேன், சிரிப்பேன், அதெல்லாம் ஓ.கே. ஆனால் ரொமான்ஸ்தான் வரவேயில்லை.
    • வெட்கப்படுவது எப்படி? ரொமான்ஸ் பண்ணுவது எப்படி? என்பதையே கற்க ஆசைப்பட்டேன்.

    பருவம் மாறும் போது உருவம் மாறுகிறது. உருவத்துக்கு ஏற்ற வகையில் நடை, உடை, பாவனைகள் எல்லாமே மாறுகிறது. இந்த மாற்றங்கள் நம்மை அறியாமலேயே நிகழுகிறது.

    அதை பார்க்கும் போது நமக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும். அந்த பிரமிப்பால் தானே 'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா... இது பூவாடை வீசிவர பூத்த பருவமா... பாவாடை போன்ற முகம் மாறியதேனோ... பனிபோல நாணம் அதை மூடியதேனோ...' என்று கவி யரசரும் பாடியிருக்கிறார்.

    அந்த பாடல் வரிகள் தான் எவ்வளவு உயிரோட்டமானவை? நானே என்னை நினைத்து பார்க்கிறேன்! எல்.கே.ஜி.யில் தொடங்கிய நடிப்பு பயணம். எட்டாம் வகுப்புக்குள் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தை தொட்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    ஆம் 40 படங்கள் என்றால் நம்ப முடி கிறதா? அந்த வயதில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி களில் அத்தனை படங்களை நடித்து முடித்து விட்டேன்.

    ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடிக்க வைத்த டைரக்டர்கள் 'இப்போ... மீனா பொண்ணு வளர்ந்திருப்பாளே....' என்று நினைத்து இருக்கிறார்கள். அந்த நேரத்தில் 'நவயுகம்' என்ற தெலுங்கு படத்துக்கு கதாநாயகியை தேடியிருக்கிறார்கள்.

    அப்போது தான் எதற்கும் மீனாவையும் பார்த்து வருவோமே என்று டைரக்டர் சென்னைக்கே வந்துவிட்டார். நான் அப்போது 8-ம் வகுப்பு மாணவி.

    புத்தக பையுடன் வீடு திரும்பியபோது முன்னறையில் அப்பா, அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

    நான் உள்ளே நுழைந்ததும் என்னை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். 'அடடே... மீனா பாப்பா வா...' என்றவர்கள் அவர்கள் எதிர்பார்த்தது போலவே நான் வளர்ந்து இருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அந்த வயதில் பருவத்தை விட கொஞ்சம் ஜாஸ்தியாகவே என் உருவம் இருக்கும்.

    என்னை பார்த்ததும் இவர் தான் கதாநாயகி என்று முடிவே செய்துவிட்டார்கள். கதா நாயகியாக நடிக்கட்டுமே என்று தங்கள் விருப்பத்தை அம்மாவிடம் கூறினார்கள்.

    அம்மா படிப்பு என்ன ஆகுமோ என்று தயங்கினார்கள். அம்மா மட்டுமல்ல எனக்கும், பள்ளிக்கூடம் போக முடியுமா? முடியாதா? என்ற தயக்கம்.

    ஆனாலும் நாயகி பாத்திரத்தில் நடிக்க ஒத்துக்கொண்டோம். அவர்களும் போட்டோ செக்சனுக்கு வரச்சொல்லிவிட்டு விடை பெற்று கிளம்பினார்கள்.

    பாவாடை-சட்டையில் ஓடிக்கொண்டிருந்த நான் தாவணி கட்டினேன். தாவணி போட்டுக் கொண்டு நிலைக்கண்ணாடி முன்பு போய் நின்று என்னை நானே பார்த்து பிரேமித்தேன்.

    ஏய்... மீனா நீயா இது? என்று மனதுக்குள் கேட்டதும் என்னை அறியாமலே மனதுக்குள் ஒரு விதமான குறு குறுப்பு முகமும் சிவந்தது.

    ஓ. இது தான் நாணமோ... என்று சிரிப்பு வந்தது! அந்த சிரிப்பிலும் அழகாக இருப்பதாவது நானே கர்வப்பட்டு கொண்டேன். நம்மை பார்த்து நாமே கர்வப்படுவதில் தப்பில்லை தானே?

    அடுத்த சில நாட்களில் படப்பிடிப்பு தொடங்கியது. நவயுகம் படத்தில் ஹீரோ ராஜேந்திர பிரசாத். ஓங்கோல் பகுதியில் படப்பிடிப்பு.

    தாவணி கட்டிக் கொண்டை போட்டு கேமரா முன்பு போய் நின்றதை நினைத்ததும் ஆச்சரியமாக இருந்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்த வரை பெரிய அளவில் டயலாக் எதுவும் கிடையாது. ஒன்றிரண்டு வார்த்தைகள் அல்லது ஒன்றிரண்டு வரிகள்தான் இருக்கும். ஆனால் கதாநாயகி ஆனதும் டயலாக் பெரியதாக இருந்தது.

    அதை கூட பள்ளிக்கூடத்தில் பாடத்தை படித்து மனப்பாடம் செய்தது போல் திரும்ப திரும்ப படித்து மனப்பாடம் செய்து கொண்டேன்.

    ஒரே ஒரு விஷயம்தான் என்னால் முடியவில்லை. அதுதான் 'ரொமான்ஸ்' பண்ணுவது! 13 வயது என்பது 'ரொமான்ஸ்' பண்ண தெரிந்த வயதா?

    அழுவேன், சிரிப்பேன், அதெல்லாம் ஓ.கே. ஆனால் ரொமான்ஸ்தான் வரவேயில்லை. ஒரு மாதிரியாக இருக்கும். காதலிக்கும் போது முக பாவனை இப்படி இருக்க வேண்டும். டயலாக் பேசும் போது காதலை உடல் அசைவே வெளிப்படுத்துவது போல் இருக்க வேண்டும் என்பார்கள். எனக்கு அது மட்டும் வரவே இல்லை.

    ராஜேந்திர பிரசாத் திட்டுவார். ஏம்மா... காதலனை கட்டிப்பிடிக்கும் போது ஒரு 'கிக்...' தெரியவேணாம்? என்று கடுகடுப்பாார். அப்புறம் அவரே என்னருகில் வந்து சொல்லித் தருவார்.

    இப்போது செல்போன், இணைய தளம் எல்லாம் வந்துவிட்டது. பள்ளி பருவத்திலேயே காதலையும் சேர்த்தே படிக்கிறார்கள்.

    அந்த காலகட்டத்தில் வெட்கப்படுவது எப்படி? ரொமான்ஸ் பண்ணுவது எப்படி? என்பதையே கற்க ஆசைப்பட்டேன்.

    சொன்னால் ஆச்சரியமாகத்தான் தெரியும். உண்மையாகவே அதற்காகவே சில படங்களை பார்க்க சென்றேன்.

    அந்த படங்களில் கதாநாயகனும், கதாநாயகியும் காதல் காட்சிகளில் எப்படி நடிக்கிறார்கள். எப்படி ரொமான்ஸ் பண்ணுகிறார்கள் என்று பார்ப்பேன். அப்படித்தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து கற்றுக் கொண்டேன்.

    காதல் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயின் எப்படி நடிக்கிறார்கள்? டூயட் காட்சிகளில் எப்படி நடிக்கிறார்கள்? என்பதை உன்னிப்பாக பார்த்து பார்த்துதான் கற்றேன்.

    அதிலும் முதல் படத்திலேயே எனக்கு கனமான பாத்திரம். நடுரோட்டில் வில்லன் அடியாட்களுடன் துரத்தி வந்து தாலி கட்டுவார். அப்படி அவர்களிடம் சிக்கி தவிக்கும் போது நான் எப்படியெல்லாம் நடிக்கணும்...? சிரமப்பட்டு தான் நடித்தேன். அதே நேரம் டைரக்டர் சொல்லித் தந்ததை அப்படியே நடித்து விடுவேன்.

    அப்படித்தான் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்தேன். அந்த மறக்க முடியாத அனு பவங்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்)

    • பாராளுமன்றத்துக்கு தனியாகவும், மாநில சட்டசபைகளுக்கு தனியாகவும் தேர்தல் நடத்தும் நடைமுறை வந்தது.
    • 12 மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.

    இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை நிர்வாகம் செய்ய சட்டசபை அமைப்பு உள்ளது. அதுபோல ஒட்டு மொத்த நாட்டின் நிர்வாகத்தை மேற்கொள்ள பாராளுமன்ற அமைப்பு உள்ளது.

    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் மக்கள் தனித்தனியாக வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்து அனுப்புகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 1967-ம் ஆண்டு வரை பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டது.

    பாராளுமன்ற எம்.பி.யை தேர்வு செய்ய ஒரு வாக்கும், சட்டசபை எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய மற்றொரு வாக்கும் மக்கள் அளித்து வந்தனர். ஆனால் மாநில சட்டசபைகளில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டதால் அந்த மாநிலங்களுக்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    அன்று முதல் பாராளுமன்றத்துக்கு தனியாகவும், மாநில சட்டசபைகளுக்கு தனியாகவும் தேர்தல் நடத்தும் நடைமுறை வந்தது. நாளடைவில் மாநில சட்டசபைகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சில மாத இடைவெளிகளில் தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டது.

    ஆண்டு முழுவதும் தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. எனவே பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த 1985-ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

    ஆனால் மாநில கட்சிகள் இந்த பரிந்துரையை ஏற்கவில்லை. தங்களது தனித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற பயத்தில் எதிர்ப்பு தெரிவித்தன. என்றாலும் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தை எழுப்பினார்.

    மோடிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. என்றாலும் எதிர்ப்புகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பிரதமர் மோடி தீவிரமாகி உள்ளார். இதற்காக அவர் முன்னாள் ஜனாதிபதி ராாம்நாத்கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அந்த குழு பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும்.

    இந்த விவகாரம், பாராளுமன்றத்தில் வருகிற 18-ந்தேதி கூட இருக்கும் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப் படுவது உறுதியாகி விட்டது. எனினும் இதை ஒரே சமயத்தில் அமலாக்குவது சாத்தியமல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

    ஏனெனில், ஒரே சமயத்தில் அமலாக்க வேண்டுமானால், நாடு முழுவதிலும் 5 வருட ஆட்சிக்காலத்திற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்பட வேண்டும். இதில், அவை அமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் முடிந்து உள்ளன என்பதை கணக்கில் கொள்ள முடியாது. இதுபோல் செய்தால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் எந்த ஒத்துழைப்பும் அளிக்காது. மாறாக, இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் கொந்தளிப்பை உருவாக்கி விடும் ஆபத்து உள்ளது.

    எனவே இந்த தேர்தல் முறையை படிப்படியாகவே அமலாக்க சாத்தியம் உண்டு. உதாரணமாக, அடுத்த ஓரிரு மாதங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதையடுத்து மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும். இதைத் தொடர்ந்து, அரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. புதிய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் தேர்தலும் பாக்கி உள்ளது.

    எனவே 12 மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. இத்துடன், கடைசி ஒரு வருடம் அல்லது 6 மாதங்கள் ஆட்சிக் காலம் பாக்கி உள்ள மாநிலங்களையும் இந்த தேர்தலுடன் சேர்த்து நடத்தும் சாத்தியங்களும் உள்ளன. இந்தப் பட்டியலில், ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் பீகார் இடம்பெற்றுள்ளன. இந்த 15 மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என இரு தரப்பினரின் ஆட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    வரும் 2024 தேர்தலுக்கு பிறகு அடுத்த மக்களவைத் தேர்தலுடன் மேலும் சில மாநிலங்கள் அல்லது எஞ்சிய அனைத்து மாநிலங்களையும் சேர்க்க முடியும். இது முடியாவிட்டால், எஞ்சிய மாநிலங்களில் மூன்றாவது மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தலாம். எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது அடுத்த 10 அல்லது 15 வருடங்களில் முழுமையாக அமலாக்கம் பெறும் என கணிக்கப்படுகிறது.

    இந்த தேர்தல் முறையால் இந்தியாவுக்கு கிடைக்கும் பல்வேறு பலன்களும் மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில் மட்டும் சுமார் ரூ.60,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

    இதில், மத்திய அரசின் செலவுடன் அரசியல் கட்சிகளின் செலவும் அடங்கும். இதில் சட்டப்பேரவை தேர்தல்களையும் சேர்த்தால் தேர்தல் செலவு மேலும் பல ஆயிரம் கோடியை தாண்டும். இந்த செலவுத் தொகையில் பெரும்பகுதி இந்தியாவுக்கு மிச்சமாகும்.

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், அது பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருந்து வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அக்கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.

    அண்மையில் கர்நாடகம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநில பேரவைத் தேர்தல்களில் காங்கிரசிடம் அக்கட்சி தோல்வியைத் தழுவியது. தமிழகம், கேரள மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இடங்களில் கூட பா.ஜ.க.வால் வெற்றி பெற முடிய வில்லை.

    இந்த நிலையில், மக்களவைக்கும், மாநில பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், தேசிய பிரச்சினைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறும் என்றும், அது பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அக்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.

    மோடி அலை மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு வெற்றி தேடித்தரும் என அவர்கள் நமபுகின்றனர்.

    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையானது மாநில பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளி, மாநில பா.ஜ.க தலைவர்கள் மீதான அதிருப்தியையும் மறைத்துவிடும் என அக்கட்சித் தலைவர்கள் நம்புகின்றனர்.

    பெரும்பாலான மாநிலங்களில் பிராந்திய கட்சிகளே பா.ஜ.க.வுக்கு சவாலாகத் திகழ்வதாகவும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறை அக்கட்சிகளுக்குப் பின்னடைவாக அமையும் என்றும் பா.ஜ.க. கருதுகிறது.

    மக்களைவையில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும், மாநிலங்களவையில் அக்கட்சியால் பெரும்பான்மையைப் பெற முடிவதில்லை. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடை முறையானது மாநிலங்களவையிலும் பா.ஜ.க.வின் வலிமையை அதிகரிக்க வழிவகுக்கும் என அக்கட்சித் தலைவர்கள் நம்புகின்றனர்.

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்ட மசோதா வருகிற பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.

    இதற்கு வரவேற்பு தெரிவித்து முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முன்னெடுப்பில் பல்வேறு நன்மைகள் உள்ளன. தேர்தல் பிரசாரத்துக்காக அரசியல்வாதிகள் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டிய அவசிய மில்லை. அதேபோல், தேர்தல் நடத்தும் செலவும் குறையும் என்றார்.

    மேலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களால் கல்வி பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் தவிர்க்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்திற்கு ஏற்படும் பல்வேறு சிரமங்களும் குறையும். அதிகாரிகள் தங்கள் வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தலாம். இதன் பலன் பொதுமக்களுக்கு வந்து சேரும். தேர்தல் எனும் பெயரில் பொது மக்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் பல சேவைகள் தொடரும்.

    மத்திய பாதுகாப்பு படைகள் மற்றும் மாநில காவல் துறைகளின் உழைப்பு விரயமாவது தவிர்க்கப்படும். மாநில மற்றும் பிராந்திய அளவிலான பிரச்சினைகளை விட தேசிய அளவிலான பிரச்சினைகள் புதிய தேர்தல் முறையில் ஓங்கி நிற்கும். பொதுமக்களுக்கும் தேசிய உணர்வு அதிகரிக்கும்.

    • குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு சென்னை வந்தபோது கூ இரண்டு அணியினரும் தனித்தனியே சந்தித்தனர்.
    • இரு தலைவர்களுக்கு இடையேயான சண்டையை ஒரு கட்சியின் உள்விவகாரம் என்று நீதிமன்றம் கடந்து போகமுடியாது.

    தான் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகாமல் தான் சேர்ந்துள்ள காரணத்தால் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவது "வினையூக்கி". இந்த வேதியியல் தத்துவம் வாக்கு அரசியலுக்குக் கனகச்சிதம்! அ.தி.மு.க. பாலி டிக்சில் பாரதியஜனதா தான் வினையூக்கி. அது ஏற்படுத்திய ரசாயன மாற்றங்களால் புரட்டிப் போடப்பட்டது - ஓ.பி.எஸ்.சின் அரசியல் வாழ்வு.

    கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் (2021) அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை எழுந்தது. "இலக்கை நிர்ணயித்து விட்டுக் களத்தில் இறங்குவோம். எடப்பாடியாரை முன்நிறுத்திக் களம் அமைப்போம்!" என்று அமைச்சர்களே குரல் கொடுத்ததும், அன்றைய துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தன்மானம் "தர்மயுத்தபாணியில்" விழித்துக் கொண்டது. தேனி மாவட்டத்தில் "ஓ.பி.எஸ்" ஆர்மி ஒன்று புதிதாக முளைத்தது. "மக்கள் முதல்வர்" "நிரந்தர முதல்வர்" என்று போஸ்டர்கள் ஒட்டிப் பரபரப்பைக் கிளப்பியது.

    2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சென்னை ராயப்பேட்டை அ. தி.மு.க. தலைமைக் கழகத்தில் கொடி ஏற்றுவதைக் கூட மறந்து விட்டு கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ். வீட்டுக்கும் ஈ.பி.எஸ். இல்லத்துக்குமாக அமைச்சர் பட்டாளம் அலைந்து திரிந்தது. எல்லாவற்றையும் நேரலையில் ஒளிபரப்பி ஊடகங்கள் பரபரப்பைக் கூட்டின. இறுதியில் சமாதானம் ஏற்பாடாக ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியானது.

    அதாகப்பட்டது, மகாஜனங்களே, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். யுத்தம் நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. சிலநேரங்களில் அமைதி யானது போலத் தோன்றினாலும் திரை யரங்குகளில் விடப்படும் "இடைவேளை" போலத்தான்! கடலை, முறுக்கு, கலர் சாப்பிட்டுக் கொஞ்சம் புத்துணர்ச்சி ஏற்றிக்கொண்டு மீண்டும் இரு தரப்பினரும் முஷ்டி முறுக்கலுக்குத் தயாராகி விடுவார்கள்.

    அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்து இருந்த காலம். அன்றைய நிதியமைச்சர் ஜெயக்குமாரிடம் ஓ.பி.எஸ். அணி இணைப்பு பற்றியும், முதல்-அமைச்சர் யார் என்றும் செய்தியாளர்கள் கேட்டனர். முதல்வர் பதவி காலி இல்லை என்று கிண்டலடித்தார் ஜெயக்குமார், வேண்டுமென்றால் தனது நிதியமைச்சர் பதவியை விட்டுத் தருவதாகக் கூறினார். ஓ.பி.எஸ். கடுப்பானார். ஜெயலலிதாவே இரண்டு முறை தன்னை முதல்வர் ஆக்கியதாகவும், ஜெயக்குமார் ஒன்றும் நிதியமைச்சர் பதவியை விட்டுத்தர வேண்டியது இல்லை என்றும் பதிலடி தந்தார். இறுதியில் நிதித்துறை பொறுப்புடன் கூடிய துணை முதல்வரானார்.

    இணைப்புக்கு முன் நடந்த இரு கட்டப் பேச்சு வார்த்தைகளில், "கட்சிக்கு ஓ.பி.எஸ்., ஆட்சிக்கு எடப்பாடி!" என்று தான் ஒத்துக் கொள்ளப்பட்டிருந்தது. நாளடைவில் ஈ.பி.எஸ்.சின் ஆட்சி அதிகாரத்திற்கு அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் அடி பணிந்தார்கள். அவர்கள் விரும்பியதைச் செய்து கொடுத்தார் சி.எம். எடப்பாடி. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சி கை நழுவியது. நாளாவட்டத்தில் ஓ.பி.எஸ். தனிமரமானார்.

    ஓ.பி.எஸ்.,-ஈ.பி.எஸ். காம்போ என்.டி.ஏ. கூட்டணிக்குப் பலம் சேர்க்கும் என்பதே 2017-18 காலகட்டத்தில் பா.ஜனதா தலைமையின் "வினையூக்கி கணிப்பு". அதற்காகவே அது இறங்கி வந்தது. எதிரும் புதிருமாகச் செயல்பட்டதால் 2019 ரிசல்ட் "டபக்"! 39-க்கு 1. அதுவும் ஓ.பி.எஸ். மகன் நின்ற தேனி மட்டும்!

    அதன் பின்னரும் "கட்சியில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை. ஒற்றுமை உணர்வோடு இணைந்து செயல்படுகிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க. கட்சி மற்றும் அரசு என்ற தேரை இழுத்துச் செல்கிறோம்!" என்று ஜெயக்குமார் அடிக்கடி சொல்லி வந்தார். ஆனால் அவர் தெருவில் வசிப்பவர்களே அதை நம்பவில்லை.

    மீண்டும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை மந்திரம் உபதேசிக்கப்பட்டது. ஆனால் பலன் இல்லை. தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் ஒற்றுமைக் குரல் ஒலித்திருக்க வேண்டிய அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை கோஷம் ஓங்கியது. 2022 ஜூன் 23-ல் கூடிய முதல் பானிபட் யுத்தமான அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்படாமல் கலைந்தது. மீண்டும் ஜூலை 11-ந் தேதி இரண்டாம் பானிபட் யுத்தம் நடந்தது. அந்தப் பொதுக்குழுவில் ஈ.பி.எஸ். இடைக்காலப் பொதுச் செயலாளர் ஆனார். "துரோகி ஓ.பி.எஸ்." மற்றும் அவரைச் சேர்ந்த அனைவருக்கும் கல்தா தரப்பட்டது.

    இந்த முறை பாரதிய ஜனதா அடக்கியே வாசித்தது. வெளிப்படையான சமாதான முயற்சிகளில் அது ஈடுபடவில்லை. பிரதமர் வருகையின்போது கூட ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகிய இருவருக்கும் சம முக்கியத்துவம் தரப்பட்டது. குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு சென்னை வந்தபோது கூட இரண்டு அணியினரும் தனித்தனியே சந்தித்தனர். ஒற்றுமை மந்திரம் உபதேசிக்கப்பட்டது. ஆனால் பலன் கொடுக்கவில்லை.

    கட்சி அரசியலில் நீதிமன்றம் நிரந்தரத் தீர்வு தராது. தலைவர்கள் முறையிட வேண்டிய இடம் மக்கள் மன்றம். உட்கட்சிப் பிரச்சினைகளைக் கோர்ட்டு தீர்த்து வைத்ததாகச் சரித்திரம் இல்லை. ஓட்டு சதவீதம் தான் ஒரே தீர்வு.

    கட்சியின் விதிகளைச் சுட்டிக் காட்டி சிவில் உரிமையியல் வழக்குகளைத் தொடர்வது தவறு இல்லை. ஆனால் அசல் வழக்கு முடிய கால தாமதம் ஆகும். அப்புறமும் மேல்முறையீடுகள் இழுத்தடிக்கும். எனவே இடைக்கால நிவாரணம் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

    சாதாரண சிவில் வழக்குகளில் இது சரிதான். ஆனால் கட்சியின் நிர்வாகம் சம்பந்தமான உரிமையியல் வழக்குகளில் ஈடு செய்ய முடியாத இழப்பு மற்றும் இடைக்கால நிவாரணத்திற்குப் பின்பும் வாதி, பிரதிவாதி ஆகிய இருவருக்கும் இடையே சமநிலை நிலவுதல் ஆகிய இரண்டையும் நீதிமன்றம் முக்கியமாகப் பார்க்கும்.

    ஓ.பி.எஸ். கேட்கிற இடைக்கால நிவாரணம் தரப்பட்டால் அசல் வழக்கே முடிந்த மாதிரி. மேலும் வாதிக்கு ஏற்படும் இழப்பை விடக் கட்சிக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகமாக இருக்கும். இருதரப்புக்கும் இடையிலான சமநிலையும் பாதிக்கப்படும்.

    சிவில் தாவாக்களில் "ஆவணப் பிழை வாதம்" மற்றும் "இல்லை என்ற கோட்பாட்டு வாதம்" போன்ற பாதுகாப்பு வளையங்களை வழக்கறிஞர்கள் உருவாக்குவார்கள். நடந்து முடிந்த ஒன்றை "இல்லை" என்று மெய்ப்பிக்கும் முயற்சி அது. சாதாரண சிவில் வழக்குகளில் இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு கட்சியின் பொதுக்குழு சம்பந்தப்பட்ட தாவாவில் இது சாத்தியமா?

    பொதுக்குழு என்பது மூன்று வகையான சட்டக் கூறுகளால் ஆனது. எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைத்தல், கட்சியின் கொள்கை மற்றும் செயல் திட்டங்களை வரையறை செய்தல் மற்றும் முன் கூட்டியே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணக்கம் தெரிவித்தல் ஆகியவையே அவை.

    நடந்து முடிந்த அ.தி.மு.க. பொதுக்குழுவை இல்லாததாக்க முடியாது. கட்சியின் நிர்வாகம் அதனால் ஸ்தம்பித்து விடும். எனவே ஓ.பி.எஸ். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால நிவாரண மனுக்கள் "அணுகுமுறைப் பிழை" என்ற கோட்பாட்டில் அடிபட்டுப் போய்விடு கின்றன.

    மக்களாட்சியில் கட்சி அமைப்பு என்பது தேர்தல் செயல்முறையின் நீட்சி. எனவே இரு தலைவர்களுக்கு இடையேயான சண்டையை ஒரு கட்சியின் உள்விவகாரம் என்று நீதிமன்றம் கடந்து போகமுடியாது.

    எனவே தான் ஓ.பி.எஸ். தொடரும் இடைக்கால நிவாரண மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட்டும் தன் ஆணையில் இதை உறுதி செய்திருக்கிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பி.எஸ். போட்ட இடைக்கால மனுக்களைத் தொடர் தள்ளுபடி செய்கிறது. உச்சநீதிமன்றம் போனாலும் இதே கதி தான்.

    துவக்கத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் தனக்குரிய அதிகாரம் அனைத்தையும் இழந்தார். ஈ.பி.எஸ். எடுத்த எல்லா முடிவுகளுக்கும் தலையாட்டி பொம்மையாக இருந்தார். நீட்டிய இடங்களில் எல்லாம் கையொப்பம் போட்டார். அ.தி.மு.க.வை விட்டு அவர் நீக்கிய லிஸ்ட் படா பஹூத். இறுதியில் ஓ.பி.எஸ்.சையே நீக்கி மரண பங்கம் செய்தார்கள். இனி "அம்மாவால் அடை யாளம் காட்டப்பட்ட" முன்னாள் முதல்வருக்கு என்ன தான் வழி?

    1. தனிக்கட்சி தொடங்குதல்.

    2. ஈ.பி.எஸ். தலைமையை ஏற்று மீண்டும் தாய்க்கட்சிக்கே திரும்புதல்.

    3. டி.டி.வி. தினகரனோடு இணைந்து மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி ஈ.பி.எஸ். வேட்பாளர்களைத் தோற்கடித்தல்.

    எதைத் தேர்ந்தெடுப்பார் ஓ.பி.எஸ்? தனிக்கட்சி தொடங்கினால் அ.தி.மு.க. மீதான உரிமையை இழப்பார். செப்டம்பர் 3 காஞ்சிபுரத்தில் தொடங்கிப் புரட்சிப் பயணம் மேற்கொள்ளப்போ வதாக ஓ.பி.எஸ். அறி வித்துவிட்டார். டி.டி.வி. தினகர னோடு இணைந்து மக்கள வைத் தேர்தலில் வேட்பாளர் களை நிறுத்தி அ.தி.மு.க. - பா.ஜனதா வேட்பாளர்க ளைத் தோற்கடித்தல் சாத்தியமா? "வினையூக்கி" பா.ஜனதா மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு அதற்கு "ஸ்பீட் பிரேக்கர்" போடுமே!

    அரசியலும் அன்றாட வாழ்க்கையும் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை. முடிவு களில் ஏற்படும் காலதாமதம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தும். சசிகலா ஆதரவைப் பெற அவர் எடுத்த முயற்சி வெற்றியில் முடிந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஈ.பி.எஸ். தன் பேச்சில் "திருமதி சசிகலா அம்மா" என்று மென்மை காட்டுகிறார். அண்டர்கிரவுண்ட் அரசியலும் முக்கியம் அமைச்சரே!

    ஜெயலலிதா "உதிர்ந்த ரோமங்கள்" என்று நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட மூத்த தலைவர்களை 1990-ல் வர்ணித்தார். நாவலர் அரசியல் "ஆங்ரி பேர்ட்" ஆனார். பின்னர் ஏற்பட்ட தேர்தல் தோல்வி காரணமாக ஜெயலலிதா தலைமையை ஏற்று அவர் அவைத்தலைவராக அ.தி.மு.க.வில் தொடர்ந்தார். கோபித்துக் கொண்டு போன மூத்த தலைவர் எஸ்.டி.எஸ். மீண்டும் எம்.ஜி.ஆரிடம் திரும்பியது வரலாறு.

    தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்தால் அதைக்காரணமாகச் சொல்லி ஓ.பி.எஸ். பக்கம் இருக்கும் முக்கியஸ்தர்கள் தாய்க்கட்சிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு அதிகம். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகிய இருவரையும் வினையூக்கியான பா.ஜனதா தான் சேர்த்து வைத்தது. எனவே பழைய சரித்திரம் மீண்டும் திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அதற்கு முன்னதாக ஈ.பி.எஸ்.சுக்குக் கொடநாடு உட்படப் பல பூச்சாண்டிகள்! 2012ல் முடித்துவைக்கப்பட்ட ஓ.பி.எஸ். சொத்துக் குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இப்போது மறு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளது. "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி - இப்படிக்கு ஓ.பி.எஸ்.!" என்று கதறாத குறை!

    தலைவர்களை மக்கள் ஏற்க வேண்டும் என்றால் காலச் சூழல் ஒத்துழைக்கவேண்டும். அரசியல் வெற்றிக்கு இதுவே அடிப்படை! களப்பணி, மக்கள் தொடர்பு மற்றும் தொடர் உரையாடல் மூலமே அது சாத்தியம். ஆனால் இப்போது பணத்தை வாரி இறைத்து அழைத்து வரப்படும் கூட்டம் ஏற்படுத்துகிற பிம்பச் சிறைக்குள் சிக்கி இருக்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரமண்டலத்தில் லேண்டரை இறக்கிச் சரித்திர சாதனை படைத்து விட்டார்கள். அதில் இருந்து ரோவரும் இறங்கி ஆய்வு நடத்தி வருகிறது. ஆனால் ராமச்சந்திர மண்டலமான அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சால் லேண்டரை இறக்க முடியவில்லை. நீதிமன்றத்தின் நெடிய தாழ்வாரங்களில் எத்தனை முறை முயன்றும் கிட்டத்தட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தன. லேண்டரே "கிராஷ்" ஆன பின்னர் ரோவரைப் பற்றிக் கனவு கூடக் காண முடியாது அல்லவா?.

    • வாய் கோணலாக இருப்பதால் பல் தேய்க்க முடிவதில்லை.
    • கண்ணில் இருந்து கண்ணீராக கொட்டுகிறது என்று சொல்லி அந்த பெண் பதறுகிறார்.

    3 மாத கர்ப்பிணி ஒருவர் ஆஸ்பத்திரிக்கு அவரது கணவருடன் பதட்டத்துடன் வந்தார். இதுதான் அவர்களுக்கு முதல் குழந்தை. ஏன் இந்த பதட்டம் என்று கேட்டால் அந்த பெண்ணுக்கு 3 நாளாக வாய் கோணலாகி இருக்கிறது. இரவு நன்றாக பேசி விட்டு தான் தூங்கச் சென்று இருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தால் வாய் கோணிக் கொண்டு இருந்துள்ளது. 2 நாளில் சரியாகி விடும் என்று நினைத்துள்ளார். ஆனால் வாய் கோணல் சரியாவதற்கு பதிலாக வலி அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. உடனே கணவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார்.

    வாய் கோணலாக இருப்பதால் பல் தேய்க்க முடிவதில்லை. பல் தேய்த்தால் வாய் ஒருபக்கம் செல்கிறது. தண்ணீரை கொண்டு கொப்பளிக்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. கண்ணில் இருந்து கண்ணீராக கொட்டுகிறது என்று சொல்லி அந்த பெண் பதறுகிறார்.

    இதேபோன்ற பாதிப்புடன் பதட்டமாக வருபவர்களை மருத்துவர்களாகிய நாங்கள் அடிக்கடி பார்த்து இருக்கிறோம். இந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் முகவாதம் என அழைக்கப்படுகிறது. பக்கவாதம் (ஸ்டிரோக்) உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. ஆனால் முகவாதம் என்பது அந்த அளவுக்கு ஆபத்தானது அல்ல. ஆனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளோ தங்களுக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பக்கவாதம் வந்து விட்டது என அச்சம் அடைந்து பதட்டம் ஆகி விடுகிறார்கள்.

    முகவாதம் என்பது முகத்தின் ஒரு பகுதி வாதம் ஆகி விடுவது, அதாவது முகத்தின் ஒரு பகுதி செயல்படாமல் போய் விடுவது. இதைத்தான் முக வாதம் என்று சொல்கிறோம். பொதுவாக நரம்பில் 2 வகை உள்ளது. ஒன்று செயல்படும் நரம்பு, மற்றொன்று உணர்வு நரம்பு. இதில் முகத்துக்கு வரும் நரம்பு, பலகீனமாகி வரக்கூடியது தான் முக வாதம். இந்த வாதத்தால் பாதிக்கப்பட்டவர் கண்ணை மூட முடியாது. கண்ணை மூட முயற்சித்து முடியாமல் தவித்தபடி இருப்பார். மேலும் கண்ணில் இருந்து தண்ணீர் வரும்.

    ஸ்டிரோக் எனப்படும் பக்கவாதத்தால் வரும் பாதிப்பின் போது கண்ணை வழக்கம்போல் இறுக்கி மூட முடியும். நெற்றியையும் சுருக்க முடியும். இடதுபக்க சுருக்கமும், வலது பக்க சுருக்கமும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் முகவாதத்தில் கண்ணை முழுவதுமாக மூட முடியாது. நெற்றி சுருக்கமும் சரியாக வராது. இதுதான் முக வாதத்துக்கும், பக்கவாதத்துக்கும் உள்ள வித்தியாசம்.

    முகவாதம் எதனால் வருகிறது என்று பார்ப்போம். காதில் ஏதாவது தொற்று பாதிப்பு இருந்தாலோ, சிறு, சிறு கொப்புளங்களாக வரும் அக்கி பாதிப்பு இருந்தாலோ, தண்டுவடத்தில் ஏதாவது பாதிப்பு இருந்தாலோ முகவாதம் வர வாய்ப்புள்ளது. ஆனால் இந்த பாதிப்புகள் ஒன்று கூட இல்லாமல் எந்தவித காரணமும் இல்லாமல் முகவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகம்.

    முகத்துக்கு வரும் நரம்பு மூளையில் தொடங்கி காது வழியாக வந்து முகத்தை அடைகிறது. குளிர் காற்றால் முகத்துக்கு வரும் நரம்புகள் பாதிக்கப்பட்டு அதனால் முக வாதம் வரும். உதாரணத்துக்கு பஸ்சில் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்தோ, காரில் ஏ.சி. போடாமல் ஜன்னல் ஓரம் உட்கார்ந்தோ பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது குளிர் காற்று படுகிறது. அல்லது குளிர் சாதன எந்திரத்தில் இருந்து வரும் காற்று வீசும் பக்கம் இரவு முழுவதும் உட்கார்ந்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தசமயம் குளிர் காற்று முகத்தில் தாக்குகிறது. அப்போது நரம்புகள் வீக்கம் அடைகிறது. விளைவு முகவாதத்தில் போய் நிற்கிறது.

    முகவாதத்தால் சிலருக்கு கண்ணில் இருந்து தண்ணீர் வரும். சிலருக்கு காதில் அதிக சத்தம் கேட்கும். எதிரில் நிற்பவர் மெதுவாக பேசினால் கூட நோய் பாதித்தவர்களுக்கு அதிக சத்தம் கேட்கும். நாக்கில் சுவை குறைவாக இருக்கும். இந்த பாதிப்புகளை வைத்து நோயாளி முகவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்கிறோம். காதில் அக்கி வைரஸ் பாதித்தவர்களுக்கும் இந்த மாதிரி முக வாதம் வரும். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எதிர்பார்க்கிற முன்னேற்றம் இருக்காது. அவர்களுக்கு கொஞ்சம் வலியும் அதிகமாக இருக்கும். முதல் நாள் வலி குறைவாக இருக்கும், 3-வது, 4-வது நாள் வலி அதிகமாகும். இப்படி வலி அதிகரித்துக் கொண்டே செல்லும். முகவாதம் வந்தால் அச்சப்பட தேவையில்லை. இன்றைய காலத்தில் நல்ல மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகள் கொடுத்து அதனை சரி செய்து விடலாம்.

    முக வாதம் வந்தவருக்கு 2 வாரம் மட்டும் குறிப்பிட்ட மாத்திரை கொடுப்போம். அப்போது கண்ணுக்குள் விடுவதற்கு ஒரு சொட்டு மருந்து கொடுப்போம். கண் திறந்து இருப்பதால் வறட்சி ஆகி விடும். அதற்காக சொட்டு மருந்து கொடுக்கிறோம்.

    பகலில் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை திறந்திருக்கும் கண்ணுக்கு அந்த மருந்தை போடச் சொல்வோம். களிம்பு ஒன்று கொடுப்போம். அது கண்ணுக்கு உள்பகுதியில் போடக்கூடியது. அப்புறம் வைட்டமின் மாத்திரை கொடுப்போம்.

    அதற்கு அடுத்து முகத்தில் பிளாஸ்டர் ஒன்று ஒட்டச் சொல்வோம். வெளியில் எங்காவது போனால் கண்ணுக்கு பெரிய கண்கண்ணாடி அணியக் கேட்டுக் கொள்வோம். குளிரான பகுதிக்கு சென்றால் காதை மூடும் வகையில் எதாவது அணியச் சொல்வோம். முக வாதத்தின் தீவிரத்தை பொறுத்து வைரஸ் எதிர்ப்பு மாத்திரை கொடுப்போம். அது 7 நாள் சாப்பிட வேண்டியது இருக்கும்.


    பக்தவத்சலம்

    பக்தவத்சலம்

    2-வது முகவாதம் உள்ளவர்களுக்கு நரம்பு பரிசோதனை மேற்கொள்வோம். முகவாதத்தின் தீவிரம் எவ்வாறு இருக்கிறது என்பதை லேசான, மிதமான, கடுமையான பாதிப்பு என 3 விதமாக பிரித்துக் கொள்வோம். இதில் மிதமான, கடுமையான பாதிப்பாக இருந்தால் குணமாக 4 அல்லது 6 வாரங்கள் ஆகும். 4 வாரம் ஆகியும் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை என்றால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏன் என்றால் வேறு ஏதாவது நோய் தாக்கத்தை கூட நாம் முக வாதமாக கருதி இருக்கலாம்.

    முகத்தில் இடதுபக்கம் வாதம் இருக்கிறது என்றால் வாயின் வலது பக்கமாக கோணிக் கொண்டு இருக்கும். நோயாளிகள் என்ன செய்வார்கள் என்றால் வலது பக்கம் இழுத்து இருக்கிற இடம் தான் பிரச்சினை என்று எண்ணி வலது பக்கம் பயிற்சி செய்வார்கள். அப்படி செய்யக் கூடாது. அதனால் நாங்கள் முக்கியமாக சொல்வது கண் எந்த பக்கம் மூட முடியாமல் இருக்கிறதோ, அந்த பகுதி தான் பிரச்சினை, எனவே அந்த பக்கம் தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்போம்.

    முக வாத சிகிச்சையில் மருந்து, மாத்திரைகளை விட பிசியோதெரபி மருத்துவர்கள் அளிக்கும் உடற்பயிற்சியே அதிக பலனை கொடுக்கும். நாங்கள் கொடுக்கும் மாத்திரை, மருந்துகள் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் முக்கியம் என்றால் அதேஅளவு பிசியோதெரபிஸ்ட் கொடுக்கும் பயிற்சியானது 50-ல் இருந்து 60 சதவீதம் முக்கியத்துவம் பெறும்.

    பிசியோதெரபிஸ்ட் உடற்பயிற்சி சொல்லி கொடுப்பார்கள். மசாஜ் செய்யச் சொல்வார்கள். சில நோயாளிகளுக்கு எலக்ட்ரிக்கல் சிகிச்சையும் தேவைப்படும். இவை அனைத்துக்கும் மேலாக முகவாதத்தால் பாதிக்கப்பட்டோர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது முக்கியம் ஆகும். உதாரணத்துக்கு சோப்பு போட்டு குளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குளிக்கும் போது கண்ணுக்குள் சோப்பு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதல் ஒன்று அல்லது 2 வாரங்களுக்கு தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். தலைக்கு குளிக்கும் போது காதுக்குள் தண்ணீர் சென்று விடும். காதுக்குள் இருக்கும் தொற்றினால் கூட முக வாதம் வரலாம். அதனால் தலைக்கு குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

    3-வது எந்த காரணத்துக்காகவும் பயணத்தின் போது கண்ணை திறந்த நிலையில் வைத்து இருக்கக் கூடாது. கண் கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். கண்ணுக்கு நேராக காற்று அடித்தால் கண்கள் உலர்ந்து போய் விடும். உலர்ந்து போனால் அதில் இருந்து கண்ணீர் வர வாய்ப்புள்ளது. அதற்காக மருத்துவர் ஒரு சொட்டு மருந்து கொடுப்பார். அதனை நாம் தொடர்ச்சியாக போட்டுக் கொள்ளலாம். அதற்கு அடுத்தது மின்விசிறிக்கு நேர் கீழே படுக்கக் கூடாது. மின்விசிறியில் இருந்து வரும் காற்று பட்டு கண் உலர்ந்து போகும்.

    அதற்கு மேல் நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியது உடற்பயிற்சி தான். இந்த உடற்பயிற்சியோடு நம் வேலையும் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் குடிக்கும் போது டம்ளரில் வெறும் வாயால் குடிக்காமல் ஸ்டிரா வைத்து குடிப்பது ஒரு பயிற்சியாக அமையும். ஸ்டிராவில் உறிஞ்சி குடிக்கும் போது கன்னத்தின் 2 பகுதியில் இருக்கக் கூடிய தசைகள் வேலை செய்யும்.

    நிறைய பேர் வாயை அசைத்துக் கொண்டே இருந்தால் சீக்கிரம் பாதிப்பு சரியாகி விடும் என்று தவறான எண்ணம் கொள்கிறார்கள். அதற்காக பபுள்கம் மெல்ல சொல்வார்கள். சர்க்கரை நோயாளி என்றால் கோதுமையை அள்ளி வாயில் போட்டு மெல்ல சொல்வார்கள். அதெல்லாம் செய்யும் போது என்ன ஆகும் என்றால் அனைத்து தசைகளும் வேலை செய்யும். அப்போது பாதிக்கப்பட்ட தசைகள் மட்டும் அல்லாமல் இயல்பான தசைகளும் வேலை செய்யும். அதனால் நிச்சயமாக பாதிக்கப்பட்ட தசைக்கு பலன் கிடைக்காது. எனவே இந்த முறை பலனை கொடுக்காது. இந்த முறை தவறானது.

    முக வாதம் வந்தால் கண்களை மேலே தூக்குவது, புருவத்தை மேலே தூக்குவது, கண் இமைகளை மூடுவது என்பது கடினமாக இருக்கும். 10 முறை உங்கள் கண் புருவத்தை மட்டும் மேலே உயர்த்துங்கள். அப்போது நெற்றியில் சுருக்கம் வந்து விடும். 10 முறை கீழே இறக்குங்கள். கீழே இறக்கும் போது கண்ணை நன்றாக இறுக்கமாக மூடுங்கள். இதே மாதிரி 10 முறை செய்யுங்கள். தொடர்ந்து செய்தால் நல்ல பலனை தரும். உடற்பயிற்சிகளை காலை, மாலை என இருவேளை செய்யலாம். ஒவ்வொரு பயிற்சியையும் 10 முறை மேற்கொள்வது சிறப்பானது. கண்ணாடி முன்பு அமர்ந்து செய்வதால் நாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதேபோல பல உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் கற்றுத்தருவார்கள்.

    மேலும் கைகளால் பாதிக்கப்பட்ட கன்னத்தை வருடும் மசாஜ் சிகிச்சையும் சொல்லி தருவார்கள். அவர்கள் சொல்வதை போல் தொடர்ந்து உடற்பயிற்சிகள், மசாஜ் செய்து வந்தால் முக வாதம் கண்டிப்பாக குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பலாம். முக வாதம் வந்து விட்டதே என்று அச்சம் கொண்டு முடங்க தேவையில்லை. சரியான மருத்துவர், பிசியோதெரபிஸ்ட் ஆலோசனை பெற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்து விடலாம்.

    தொடர்புக்கு:info@kghospital.com, 98422 66630

    • மதுரையின் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது.
    • குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும், வைக்கோலும் வைத்து அடைத்தனர்.

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் விடுதலைப் போராளிகள் முக்கியப் பங்காற்றினர். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய பல முக்கிய தலைவர்களின் தாயகமாக தமிழ்நாடு இருந்தது.

    குறிப்பாக சுதந்திர போராட்டத்தில் தென்மாவட்டமான நெல்லை, தென்காசி, தூத்துக்குடியை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், ஒண்டிவீரன் என பல்வேறு வீரர்கள் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.

    அந்த வரிசையில் இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்டவர் மாமன்னர் பூலித்தேவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரது 308-வது பிறந்தநாள் நாளை (1-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    மதுரையின் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

    இத்தகைய பாளையங்களில் ஒன்று தற்போதைய தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பாளையம் ஆகும்.

    சித்திரபுத்திரத் தேவர்-சிவஞான நாச்சியாருக்கு மகனாக பூலித்தேவர் 1-9-1715-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தப்பப் பூலித்தேவர் என்பதாகும். 'பூலித்தேவர்'என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கப்படுகிறார். சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய குல தெய்வமான (பூலுடையார் கோவில்) உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்தார். பூலித்தேவர் 6 வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.

    இலஞ்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார். பூலித்தேவருக்கு 12 வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது.

    காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய 12 வயதில் அதாவது 1726-ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.

    பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமா மகள் கயல்கண்ணி என்கின்ற லட்சுமி நாச்சியார். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத்தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.

    பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோவில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோவில் தவிர சங்கரன்கோவில், பால்வண்ணநாதர் கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோவில், நெல்லை வாகையாடி அம்மன் கோவில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோவில் என்று திருநெல்வேலி சீமையில் உள்ள பல கோவில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார்.

    திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை வழங்கினார்.

    1750-ல் ராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கில கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டு பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டும் என்று அறிவிப்பை கொடுத்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்கு தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவன் வெற்றிபெற்றார் என பூலித்தேவன் சிந்து என்ற கதைப்பாடல் கூறுகிறது.

    1755-ம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்சாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் ஆட்களான மாபூஸ்கானை தோற்கடித்தார்.

    அதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியை தோற்கடித்தார். 1756-ல் நெல்லையில் மாபஸ்கானுடன் பூலித்தேவன் நடத்திய போரில் பூலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் வெட்டியதால் மனமுடைந்த பூலித்தேவன் போரை நிறுத்திவிட்டு திரும்பினார். அதனால் மாபஸ்கான் நெல்லையை தன் வசப்படுத்தினார்.

    1765-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையை தாக்கிய காப்டன் பெரிட்சன் பூலித்தேவனிடம் தோற்றான். 1760-ம் ஆண்டு யூசுப்கான் நெற்கட்டும் செவல் கோட்டையை தாக்கிய போதும், 1766-ம் ஆண்டு கேப்டன் பவுட்சன் வாசுதேவநல்லூர் கோட்டையை தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766-ம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமை தளபதி பொறுப்பேற்றிருந்த கான்சாகிப்வால், பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன்பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார்.

    அதன்பின் தலைமறைவானார். நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கிற வகையில் உதவவந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவன் ஏற்க மறுத்துவிட்டார். ஆங்கிலேயர் நெற்கட்டும் செவல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவனை பிடிக்க ஒரு நாட்டையே வளைக்ககூடிய அளவுக்கு பெரும் படையுடன் வந்தனர். 1767-ம் ஆண்டு மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், கேப்டன் ஹார்பர் ஆகியோர் வாசுதேவநல்லூர் கோட்டையை தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும், பூலித்தேவன் நிலைத்து நின்று போரை தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயரின் படை மற்றும் பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும், வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

    குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும், வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களை கொண்டு ஓட்டையை அடைத்து காத்தனர். ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையை பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767-ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.

    பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளை யங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோவிலில் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலத்துடன் கைவிலங்குகள் அறுந்து விழ ஜோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் பூலிசிவஞானம் ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.

    தற்போது நாட்டின் 77-வது சுதந்திர தினவிழாவை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், இந்திய சுதந்திரம் பெறுவதற்காக முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவனை நினைவு கூர்வோம்.

    • நான்கு கரங்களில் `சங்கு சக்கரம் கதை தாமரை` என ஒவ்வொன்றைத் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் குருவாயூரப்பன்.
    • ராமன் காட்டுக்குப் புறப்பட்ட நேரத்தில் அவனது முகத் தோற்றம் எப்படி இருந்தது என்பதையும் எண்ணிப் பார்த்து வியக்கிறாள்.

    லட்சுமி தேவி செந்தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். அலர்மேல் மங்கை என அவளைப் போற்றுகிறோம்.

    பத்மம் என்றால் தாமரை. பதுமத்தில் வீற்றிருப்பதால் அவள் பத்மாவதி எனப் பெயர்பெறுகிறாள்.

    திருப்பதி வெங்கடாசலபதியின் கரம்பிடித்த பெருமை பதுமத்தில் வீற்றிருக்கும் பத்மாவதித் தாயாருக்குரியது. தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமி தேவியைத் தன் இதயத் தாமரையில் ஏற்றுக்கொண்ட பெருமை வெங்கடாசலபதிக்கு உரியது.

    சரஸ்வதி தேவி வீற்றிருப்பது வெண்தாமரை மலரில்.

    `வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்' என அவளைப் போற்றுகிறார் மகாகவி பாரதியார். `வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்` என்றும் இன்னொரு பாடலில் கொண்டாடுகிறார்.

    `வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு

    வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை

    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

    சரியாசனம் வைத்த தாய்.'

    என வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலைவாணியைப் புகழ்ந்து வெண்பாப்பாடுகிறார் காளமேகம்.

    *திருமாலின் வயிற்று உந்தித் தாமரையில் தான் பிரம்மன் உதித்தார். மாபெரும் சமுத்திரத்தின் மேலே பூத்திருந்த தாமரை மலரில் தோன்றிய பிரமன், தான் யாரென்று தெரியாமல் மயங்கினார்.

    தான் வீற்றிருக்கும் இந்தத் தாமரை எங்கிருந்து தோன்றியது என்றறிய ஆவல் கொண்டு நான்கு திசைகளிலும் மாறி மாறிப் பார்க்கவே அவர் நான்கு முகங்களைப் பெற்று நான்முகன் ஆனார்.

    பெருங்கடலில் அந்த ஒரே ஒரு தாமரை மலரை மட்டும் கண்டு அதற்கு இருப்பிடமானதை எப்படிக் காண்பதெனச் சிந்திக்கத் தொடங்கினார்.

    இந்தத் தாமரைக்கு ஏதோ ஓர் உற்பத்தி ஸ்தானம் இருக்கத்தானே வேண்டும், அதை அறிவோம் என்றெண்ணித் தம் யோக பலத்தால் தாமரைத் தண்டின் வழியாகக் கீழே இறங்கினார்.

    எவ்வளவு தேடியும் தன்னைப் படைத்தது யாரென அறியாது திகைத்தார். பின்னர் தெளிவு பெறும் பொருட்டு, தான் உதித்த தாமரை மலரிலேயே அமர்ந்து பல யுக காலம் தவத்தில் ஈடுபட்டார். அந்தத் தவத்தின் பயனாக உட்கண்ணால் திருமாலைக் கண்டுகொண்டார்.

    அதன்பின் நேரிலும் திருமாலின் காட்சியைப் பெற்று அவரே தன்னைப் படைத்தவர் என அறிந்து வணங்கினார். பின்னர் திருமாலின் உத்தரவின் பேரில் படைப்புத் தொழிலைத் தொடங்கினார் பிரம்மன் என்கிறது புராணம்.

    சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பை வெளியிட, அதை வாயு சுமந்துசென்று சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தார். அந்த நெருப்பிலிருந்து, ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாகத் தோன்றினான் முருகன்.

    அந்த ஆறு குழந்தைகளையும் அன்போடு ஆரத் தழுவினாள் அன்னை பார்வதி. குழந்தைகள் ஒன்றிணைந்து ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்ட ஒரே குழந்தையாக உருமாறின என்கிறது கந்த புராணம்.

    முருகன் தாமரைச் செல்வன். தாமரையில் தோன்றிய அவன் திருவடிகளும் திருமுகம் திருக்கரங்களும் தாமரை போன்றவை. சங்க நூலான குறுந்தொகையில், பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய கடவுள் வாழ்த்து, தாமரை போன்ற பாதங்களை உடைய முருகனைத் துதிக்கிறது.

    `தாமரை புரையும் காமர் சேவடி

    பவழத் தன்ன மேனித் திகழொளி

    குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்

    நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்

    சேவலங் கொடியோன் காப்ப

    ஏம வைகல் எய்தின்றால் உலகே!`

    *நல்லியக்கோடன் என்ற மன்னனைப் பற்றிச் சிறுபாணாற்றுப்படை என்ற சங்க நூல் பேசுகிறது. முருக பக்தனான அவன் பகைவர்கள் தன் நாட்டைத் தாக்கியபோது தன் குடிமக்களைக் காக்குமாறு முருகப் பெருமானை உளமுருகி வேண்டிக் கொண்டு உறங்கப் போனான்.

    உறக்கத்தில் கனவில் வந்தார் கந்தக் கடவுள். தன் கோயில் குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களைப் பறித்து எதிரிகள் மேல் எறியுமாறு அறிவுறுத்தி மறைந்தார்.

    முருகன், தான் தோன்றக் காரணமாக இருந்த தாமரை மலர்களால் தன்னைக் காக்க விழைகிறான் என்பதைப் புரிந்துகொண்டது நல்லியக்கோடனின் பக்தி மனம்.

    மறுநாள் கண்விழித்ததும், திருக்குளத்தில் பூத்திருந்த தாமரை மலர்களைப் பறித்து, தன் நாட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த எதிரிகள் மேல் விட்டெறிந்தான். மன்னன் மலர்கொண்டு தாக்க முயல்வதைப் பார்த்து எதிரிகள் நகைத்தனர்.

    ஆனால் அடுத்த கணம் ஒவ்வொரு தாமரை மலரும் பல்லாயிரம் வேல்களாக மாறிப் பகைவர்களை அழிக்கத் தொடங்கின.

    பகைவர்கள் அஞ்சி ஓட, நல்லியக்கோடன் போரில் பெருவெற்றி பெற்றான் என்று எழுதுகிறார் சிறுபாணாற்றுப் படையை இயற்றிய புலவரான இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.

    குருவாயூரப்பன் திருக்கரத்தில் அழகிய தாமரை மலர் உண்டு. நான்கு கரங்களில் `சங்கு சக்கரம் கதை தாமரை` என ஒவ்வொன்றைத் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் குருவாயூரப்பன்.

    ராமாயணத்தில் தசரதர் ராமனை அழைத்து `உனக்கு முடிசூட்டு விழா!` என்றார். அப்போது மலர்ந்திருந்தது ராமன் முகம். பிறகு கைகேயி ராமனை அழைத்து `நீ கானகம் போக வேண்டும்` என்றாள். அந்த நேரத்திலும், அப்போதுதான் மலர்ந்த தாமரைப் பூவில் காணப்படும் மலர்ச்சியும் விஞ்சிய மலர்ச்சி ராமன் முகத்தில் தென்பட்டது என்கிறார் கம்பர்.

    `இப்பொழுது எம்மனோரால்

    இயம்புதற்கு எளிதே யாரும்

    செப்பருங் குணத்து ராமன்

    திருமுகச் செவ்வி நோக்கின்

    ஒப்பதே முன்பு பின்பு அவ்

    வாசகம் உணரக் கேட்ட

    அப்பொழுது அலர்ந்த செந்தா

    மரையினை வென்றதம்மா!'

    சுந்தர காண்டத்தில் தனிமையில் வாடும் சீதாதேவி, பழைய நினைவுகளில் ஆழ்கிறாள். அப்போது ராமன் காட்டுக்குப் புறப்பட்ட நேரத்தில் அவனது முகத் தோற்றம் எப்படி இருந்தது என்பதையும் எண்ணிப் பார்த்து வியக்கிறாள். அதை ஒரு பாடலில் விவரிக்கிறார் கம்பர்.

    அந்தப் பாடலில் ராமன் முகத்தை ஓவியத் தாமரையோடு ஒப்பிடுகிறார் கவிச்சக்கரவர்த்தி. உண்மைத் தாமரை காலையில் மலரும். மாலையில் வாடும். ஆனால் ராமன் முகம் எப்போதும் மலர்ந்திருக்கிறதே?

    எனவே அது உண்மைத் தாமரை மலர்போல் அல்ல, ஓவியத் தாமரை மலர்போல் உள்ளது என்கிறார். அத்தகைய வாடாத ராமனின் முக மலரை சீதாதேவி சுந்தர காண்டத்தில் தனிமையில் வாடும்போது நினைத்துக் கொள்கிறாள் என்கிறார்.

    `மெய்த்திருப் பதம் மேவென்ற போதினும்

    இத்திருத் துறந்து ஏகென்ற போதினும்

    சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை

    ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்!'

    கம்ப ராமாயணத்தில் இன்னோர் இடத்தில், வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை வர்ணிக்கும்போது குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களை விளக்குகளோடு ஒப்பிடுகிறார் கம்பர்.

    மயில்கள் ஆடுகின்றன. தாமரைப் பூக்கள் விளக்குகளைப் போல் பூத்துள்ளன. மேகங்கள் இடிஇடிப்பது, முழவு ஒலியெழுப்புவது போல் உள்ளது. குவளை மலர்கள் இக்காட்சியைக் கண்விழித்துப் பார்க்கின்றன. குளத்தில் எழும் அலைகள் திரைச் சீலைகள் போல் தோற்றமளிக்கின்றன. தேனாய்த் தித்திக்கும் மகர யாழின் ஒலிபோல் வண்டுகள் இனிமையாய் ரீங்கரிக்கின்றன. இவ்வாறு கோலாகலமாக மருத அரசி வீற்றிருக்கிறாளாம்.

    `தண்டலை மயில்க ளாடத்

    தாமரை விளக்கம் தாங்கக்

    கொண்டல்கள் முழவின் ஏங்கக்

    குவளை கண்விழித்து நோக்கத்

    தெண்டிரை எழினி காட்டத்

    தேம்பிழி மகர யாழின்

    வண்டுகள் இனிது பாட

    மருதம் வீற்றிருக்கு மாதோ!

    புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பாவில் தமயந்தியின் சுயம்வரம் பற்றிப் பேசும் ஓர் அழகிய வெண்பா வருகிறது.

    ஏராளமான மன்னர்கள் விழிமலர்ந்து சுயம்வர மண்டபத்தில் காத்திருக்கிறார்கள். மன்னர்களின் விழித் தாமரைகள் பூத்த பொய்கைபோல் காட்சிதரும் அந்த மண்டபத்தில் அன்னம்போல் நடந்து வந்தாள் தமயந்தி என்கிறது வெண்பா.

    `மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே

    பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச் செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்

    பொய்கைவாய்ப் போவதே போன்று.'

    இந்தப் பாடலில் ஒரு நயம் உள்ளது. மன்னர்கள் விழிமலர்ந்து அமர்ந்திருக்கும் மண்டபத்தைக் கமலப் பொய்கை என்று சொன்னாலே போதும். ஆனால் செங்கமலப் பொய்கை என்கிறார் கவிஞர். ஏன்? மன்னர்களின் விழிகள் தமயந்தியின் பேரழகைக் கண்டு அவளை அடைய வேண்டும் என்ற வேட்கையால் சிவந்து காணப்பட்டதாம். எனவே அந்த விழிகள் சிவந்த தாமரை மலராகிய செங்கமலப் பூவோடு ஒப்பிடப்பட்டன.

    விவேக சிந்தாமணி என்ற கவிதைத் தொகுப்பில் தாமரை பற்றி ஒரு பாடல் பேசுகிறது.

    தாமரை மலருடன் அதே குளத்தில் பிறந்து வளர்ந்த தவளை, தாமரையின் இனிய தேனைப் பற்றி அறியாது. ஆனால் எங்கோ கானகத்திலிருந்து பறந்துவரும் வண்டு, தாமரையில் உள்ள தேனை விரும்பி உண்ணும்.

    அருகில் இருந்தாலும் கற்றவர்களின் பெருமையை மூடர்கள் அறிய மாட்டார்கள். எங்கிருந்தோ வரும் கற்றவர்கள் அந்த நல்லவரைக் கண்டு களித்து உறவாடுவார்கள் என்கிறது அந்தப் பாடல்.

    `தண்டாமரையின் அருகிருந்தும்

    தண்தேன் உணரா மண்டூகம்

    வண்டோ கானத்திடை யிருந்து

    வந்தே கமல மதுவுண்ணும்

    பண்டே பழகி யிருந்தாலும்

    அறியார் புல்லோர் நல்லோரை

    கண்டே களித்தங் குறவாடித்

    தம்மில் கலப்பர் கற்றோரே!'

    இந்தியாவின் தேசிய மலர் என்ற பெருமை தாமரைக்குத்தான் உரியது. ராமகிருஷ்ண மடத்துச் சின்னத்தில் தாமரையும் அன்னமும் பாம்பும் உள்ளன. தாமரை ஜீவான்மாவையும் அன்னம் பரமான்மாவையும் குறிக்கும். பாம்பு குண்டலினி சக்தியின் குறியீடு என்று சொல்லப்படுகிறது.

    நம் ஆன்மிகப் பெருவெளியில் தாமரை மலர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனின் தாமரைத் திருவடிகளை நம் இதயத் தாமரையில் இருத்திக் கொண்டால் எந்தத் துன்பமும் நம்மை வாட்டாது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com 

    • அரிசி வகைகள் சத்துக்களின் கூடாரமாக இருப்பதை நாம் என்றுமே மறந்து விடக்கூடாது.
    • இயற்கை உணவுகளை நாடுவது, ஆரோக்கியத்தின் இமயத்தை அடைவதைப் போன்றது.

    முதுமையில் ஏற்படும் பல்வேறு உடலியல் மாறுபாடுகளால் உடல் எளிதாக சோர்வை அடையக்கூடும். மேலும் முதுமையை தொற்றிக்கொண்டு வரும் நீரிழிவு, இதயநோய், சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்களால் உடல் மென்மேலும் பலவீனம் அடையும். இத்தகைய நோய்நிலைகளுக்கான உணவு முறைகள் முதுமையை இன்னும் வலுவற்றதாக மாற்றக்கூடும். ஆகவே முதுமையில் இளமைக் காலத்தை விட, இன்னும் சத்தான உணவுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    பாரம்பரியமாக மருந்துக்கு மட்டுமின்றி, உணவுக்கும் பெயர்போன சித்த மருத்துவத்தில் சத்தான உணவுக்கும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. மாறாக அதனை மறந்து, இன்றைய நவீன உலகில் மேற்கத்திய உணவு முறைகளால், மேற்கத்திய உணவு பொருட்களின் மீதும் நாட்டம் அதிகரித்து இருப்பது என்பது நிச்சயம் ஆரோக்கியத்தின் சாபக்கேடு எனலாம்.

    பொதுவாகவே முதுமையில் பலரின் உணவு அட்டவணையை (டயட் சார்ட்) பெரும்பாலும் அலங்கரிப்பது கோதுமை சார்ந்த உணவுகள் தான். உணவியல் நிபுணரின் உபதேசத்தை தாரக மந்திரமாக கருதும் முதியவர்கள் ஏராளம். ஏனெனில் காலையில் மூன்று சப்பாத்தி, இரவில் மூன்று சப்பாத்தி, மதியம் கொஞ்சமாய் சோறு என்று கோதுமையை நாடும் அவர்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

    பேக்கரி கடை பிரட், பிஸ்கெட் முதல் வீட்டில் சப்பாத்தி, உணவகங்களில் 'பட்டர் நான்' வரை விதவிதமான கோதுமையின் பரிணாமங்கள் நலக்கேட்டை உண்டாக்கும் என்பது இன்றைய முதியோர் மட்டுமல்ல, இளைய தலைமுறையினரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது உடல் நலத்திற்கு நல்லது. ஏனெனில் உலகில் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களில் எச்சரிக்கை விடப்பட்ட 'குளுட்டன்' எனும் வேதிப்பொருளின் முக்கிய ஆதாரம் இந்த கோதுமை தான்.

    கோதுமை கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பயன்பாட்டில் இருந்து வந்ததாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. இருப்பினும் நம் நாட்டில் 300-400 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கோதுமையின் பயணம் துவங்கி உள்ளது. குறிப்பாக சமீப காலத்தில் அதன் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆராய்ந்து பார்த்தால் அதன் பயன்பாடு அதிகரித்த பிறகு தான், நோய்க்கூட்டங்களும் அதிகரித்து உள்ளது என்று கூறினால் மிகையல்ல.

    இன்று பாக்கெட்டுகளில் விற்பனையாகும் பல்வேறு பொருட்களில் குளுட்டன் ஒவ்வாமை பற்றிய எச்சரிக்கை வாசகம் உள்ளதை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. அப்படி என்ன தான் செய்யும்? கோதுமையில் உள்ள இந்த குளுட்டன்? என்று உற்றுநோக்கினால் நமது குடலில் சத்துக்களை உறிஞ்சும் வில்லைகளை பாதித்து இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்ற ரத்தத்திற்கும், எலும்புகளுக்கும் தேவையான சத்துக்கள் உட்கிரகிக்கப்படுவதை தடுத்து நாளடைவில் சத்துக்கள் பற்றாக்குறையை உண்டாக்கும்.


    சோ.தில்லைவாணன்

    சோ.தில்லைவாணன்


    இந்த உண்மை தெரியாமல் உடல் பலவீனம் அடைந்த முதுமைப் பருவத்தில் கோதுமையை நாடுவது மேலும் சத்துக்கள் பற்றாக்குறையை உண்டாக்கி நலக்கேட்டினை உண்டாக்கும். மேலும் நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின் டி சத்தும் உட்கிரகிக்க முடியாமல் போவதால் முதுமையில் மூட்டு வலி இன்னும் சற்று கூடுதலாகும்.

    மேலும் குளுட்டன் முதுமையில் சர்க்கரை நோய்க்கு மூலக்காரணமாக இருக்கும் இன்சுலின் தடையை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடியதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நீரிழிவுக்கு மருந்துகளை எண்ணி கணக்காய் எடுத்துக்கொள்ளும் முதியவர்கள் கோதுமையை நாடுவது நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தாமல், மாறாக சர்க்கரை அளவை அதிகரிக்கும். சர்க்கரை நோயில் அரிசியை விட கோதுமை சிறந்த உணவு இல்லை என்பதை முதியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    குளுட்டன் உள்ள உணவுப்பொருட்களை நெடுநாள் எடுப்பது கணையத்தை பாதித்து பின்னாளில் இன்சுலின் பற்றாக்குறையை உண்டாக்கி டைப்-1 நீரிழுவுக்கும் வழிவகுக்கும் என்கின்றன அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள். ஆக, முதுமையில் கோதுமையானது ஆரோக்கியத்தின் ஆணிவேரை அசைக்கும் கொடிய நஞ்சு எனலாம்.

    முதுமையில் உண்டாகும் தோல் வறட்சிக்கும், அதனைத் தொடர்ந்து ஏற்படும் கரப்பான், சோரியாசிஸ் எனும் காளாஞ்சகப்படை ஆகிய தோல் நோய்களுக்கும் முதல் எதிரி குளுட்டன் அடங்கிய கோதுமை தான். எனவே தோல் வியாதியால் அவதிப்படும் முதியவர்களும் கோதுமையைத் தவிர்ப்பது நல்லது.

    குளுட்டன் வேதிப்பொருளால் சேதமடைந்த நமது குடல் உறிஞ்சிகளை சரிசெய்ய கிட்டத்தட்ட 6 முதல் 20 வாரங்கள் வரை ஆகும் என்கின்றன நவீன அறிவியல் ஆய்வுகள். எனவே முதுமையில் மட்டுமல்ல, எக்காலத்திலும் பிட்சா, பர்கர், பாஸ்டா, பிஸ்கேட் ஆகிய குளுட்டன் கொண்ட கோதுமைப் பொருட்களை நாடுவது என்பது பணம் கொடுத்து நோயினை கொள்முதல் செய்வது போன்றது. வேறு என்ன தான் சாப்பிடுறது? டயட்டீசியன் (உணவியல் நிபுணர்) கொடுத்த அட்டவணையில் வேறு உணவு பற்றிய தகவல் இல்லையே? என்ற கேள்வி பலருக்கும் எழும். நாம் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும் மறந்து, நவீன உணவு அட்டவணையை கண்மூடித்தனமாக நம்புவதே நமது ஆரோக்கிய இழப்பிற்கு காரணம். கருப்பு கவுனி அரிசியும், மாப்பிளை சம்பா அரிசியும், சிகப்பரிசியும், ரத்த சாலியும், காட்டுயானமும் இன்னும் பல்வேறு ரக பாரம்பரிய அரிசி வகைகள் நமது ஆரோக்கியம் காக்கும் மாணிக்கங்கள்.

    பொதுவாகவே பாரம்பரிய அரிசி வகைகளில் உடலுக்கு அத்தியாவசியமான விட்டமின்களான தையமின், நியாசின், வைட்டமின்- பி2 ஆகியனவும், பலம் தரும் தாது சத்துக்களான இரும்பு சத்து, கால்சியம், மக்னேசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் ஆகிய அனைத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக, பாரம்பரிய அரிசி வகைகள் சத்துக்களின் கூடாரமாக இருப்பதை நாம் என்றுமே மறந்து விடக்கூடாது.

    முதுமையில் எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியதாய் இருப்பது கருப்பு கவுனி அரிசி. நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் என எல்லா நோய்நிலைகளிலும் நன்மை அளிக்ககூடியதாய் இருப்பது கருப்பு கவுனி அரிசி.

    மருத்துவ குணமளிக்கும் பல்வேறு தாவர வேதிப்பொருட்கள், விட்டமின்கள், தாது உப்புகள் இவற்றின் சங்கமமாய் இருப்பது கருப்பு கவுனி அரிசி. சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மிகச்சிறந்த பாரம்பரிய உணவு. முதுமை அடைந்த பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு உடல் எடையை அதிகரிப்பதை குறைக்க கருப்பு கவுனி அரிசி உதவுவதாக ஆய்வுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.

    கருப்பு கவுனியின் கருப்பு நிறம் அல்லது கருஊதா நிறத்திற்கு காரணமாக இருப்பது அதில் உள்ள இயற்கை நிறமி 'ஆன்தோசயனின்'. அதன் பல்வேறு மருத்துவ தன்மைக்கும் முக்கிய காரணமாக இருப்பது இந்த இயற்கை நிறமிகளே.

    மேலும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈ அதில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நம் உடலில் உண்டாகும் ஆக்சிஜன் நச்சுப் பொருட்களுக்கு எதிராக செயல்படும் தன்மை கருப்பு கவுனியில் உள்ள இயற்கை நிறமிகளுக்கும், வைட்டமின் ஈ-க்கும் இருப்பதால் முதுமை வராமல் தடுக்கவும், முதுமையில் ஏற்படும் உறுப்புகளின் சேதாரங்களை தடுக்கவும் இது உதவும். சீனாவில் கருப்பு கவுனியில் உள்ள நிறமிசத்துக்கள் கொண்டு நடந்த ஆய்வின் முடிவுகளில் அவை இதய நோய்கள் வராமல் தடுப்பதாக உறுதி செய்துள்ளனர்.

    கருப்பு அரிசியை உணவில் சேர்ப்பது நீரிழிவு, ரத்தக் குழாய் தடிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் எனும் மூட்டு எலும்பு தேய்மானம், ஆஸ்துமா, புற்றுநோய் மற்றும் பெண்களுக்கு உண்டாகும் பக்கவாதம் இவற்றை குறைக்க உதவுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் விளக்கி, பாரம்பரிய அரிசிக்கு மணிமகுடம் சூட்டுகின்றன.

    அதே போல் சத்துக்கு ஆதாரமான கைக்குத்தல் அரிசியை நாடுவதும் நல்லது. தீட்டப்பட்ட (பாலிஷ்டு) அரிசியில் சத்துக்கள் பெரும்பாலும் இழப்பு ஏற்படுவதாக நவீன அறிவியல் கூறுகின்றது. முதுமையில் சத்துக்கள் இழப்பை ஈடு செய்ய கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி ஆகிய பாரம்பரிய அரிசிகளை நாடுவது நலத்திற்கு வலுசேர்க்கும்.

    முதுமையில் 'பஞ்சந்தாங்கி' என்று கருதப்படும் கேழ்வரகினை நாடுவதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பஞ்சம் இருக்காது. கால்சியம் நிறைந்த கேழ்வரகும், தினை மாவும், குறைந்த சர்க்கரைச் சத்து கொண்ட கம்பும், சோளமும், வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களும் முதுமையின் ஆரோக்கியத்திற்கு பலம்.

    சிறுதானியங்கள் அதிக நார்ச்சத்துக்களை உடையதால் மலச்சிக்கலைப் போக்கும். உடல் கொழுப்பினைக் குறைக்கவும் செய்யும். முதுமையில் மருந்து மாத்திரைகளை குறைத்து, இயற்கை உணவுகளை நாடுவது, ஆரோக்கியத்தின் இமயத்தை அடைவதைப் போன்றது.

    அரிசி என்பது வெறும் சக்தி அளிக்கும் உணவாக மட்டுமல்லாமல் சத்தான உணவாக இருக்க வேண்டியது இன்றைய வாழ்வியலில் அவசியம். சத்துக்கள் அடங்கிய உணவு உண்பது நாவிற்கு சுவை, உடலுக்கு ஆரோக்கியம் என்பதைக் கடந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். இதனால் முதுமையில் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் நீங்கி நலமான வாழ்வு மட்டுமின்றி, வளமான வாழ்விற்கும் வழிவகுக்கும்.

    மொத்தத்தில், நாம் பயன்படுத்த மறந்த இன்னும் எத்தனையோ நம் பாரம்பரிய உணவுப் பொருட்கள் ஆரவாரமின்றி முதுமைக்காலத்தில் ஆயுளை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. அவற்றை நாடுவது முதுமையில் நலத்தின் தரத்திற்கு தடம் அமைக்கும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசிப்பது.
    • திங்களூர் சென்று வழிபாடு செய்ய வேண்டும். பவுர்ணமியில் சத்ய நாராயணர் விரதம் இருக்க வேண்டும்.

    பஞ்சாங்கத்தின் மூன்றாவது அங்கம் நட்சத்திரமாகும். ஒருவரின் சிந்தனை, குணாதிசயம், தினசரி புத்தி செயல்பாடு ஆகியவற்றை தீர்மானிப்பது ஜென்ம நட்சத்திரமாகும். ஒரு ஆன்மாவின் விருப்பங்கள் அனைத்தும் ஜென்ம நட்சத்திரத்தில் தான் பதிவாகியிருக்கும். மனித வாழ்வியல் பலனை நிர்ணயம் செய்வதில் ஒருவரின் பிறந்த ஜென்ம நட்சத்திரம் பெரும் பங்கு வகிக்கிறது.

    ராசி மண்டலத்தில் உள்ள 12 ராசிகளிலும் அமைக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் வழியாகத்தான் ஒன்பது கிரகங்களும் வலம் வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள பனிரெண்டு ராசிகளில் அதனுள் குறிக்கப்பட்டுள்ள ஏதேனுமொரு நட்சத்திர பாதத்தில் தான் சுற்றி வர முடியும். ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் ராசி மண்டலத்தை சுற்றி வரும் சந்திரன் நின்ற நட்சத்திரமே அந்த நேரத்திற்குரிய ஜென்ம நட்சத்திரம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் மூன்று நட்சத்திரங்கள் (9X 3=27)வீதம்

    மொத்தம் 27 நட்சத்திரங்கள். அவை

    1. அஸ்வினி, 2. பரணி, 3.கிருத்திகை, 4.ரோகினி, 5.மிருகசீரிஷம், 6.திருவாதிரை, 7.புனர்பூசம், 8.பூசம், 9.ஆயில்யம், 10.மகம், 11.பூரம், 12.உத்திரம், 13.ஹஸ்தம்,14. சித்திரை, 15.சுவாதி, 16.விசாகம், 17. அனுஷம்,18.கேட்டை, 19.மூலம், 20.பூராடம்,21. உத்திராடம், 22. திருவோணம், 23.அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26.உத்திரட்டாதி, 27.ரேவதி.

    இந்த 27 நட்சத்திரங்களை மூன்றாக பிரிக்கலாம்.

    1.தலையற்ற நட்சத்திரங்கள்.

    2.உடலற்ற நட்சத்திரங்கள்.

    3.காலற்ற நட்சத்திரங்கள்

    தலையற்ற நட்சத்திரங்கள்:

    சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இவற்றிற்கு முதல் பாதம் ஒரு ராசியிலும் மீதம் மூன்று பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும் என்பதால் இவை தலையற்ற நட்சத்திரங்கள் எனப்படும்..

    தலையற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், தலைப் பகுதியில் உள்ள நோய்களுக்கும் கண், காது, மூக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய் குணமாகவும் முதன் முதலில் மருத்துவரை சந்திக்க கூடாது.

    தலைமைப் பொறுப்பேற்க கூடாது. இந்த நட்சத்திர நாட்களில் தலைமைப் பதவியை ஏற்றால் நிலைத்து இருக்காது அல்லது அவப்பெயரே மிஞ்சும்.

    உடலற்ற நட்சத்திரங்கள்:

    செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவற்றிற்கு முதல் இரண்டு பாதங்கள் ஒரு ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும் என்பதால் உடலற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

    அடுத்து உடலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், உடல் வலி, ஜீரண உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல முதன் முதலில் மருந்து மாத்திரைகளை சாப்பிடக்கூடாது

    காலற்ற நட்சத்திரங்கள்:

    குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்களுக்கு முதல் மூன்று பாதங்கள் ஒரு ராசியிலும், கடைசி பாதம் மட்டும் அடுத்த ராசியிலும் இருக்கும்.

    காலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், உத்தியோகம் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டவர்களுக்கு அது அனுகூலமாக இருக்காது. கால் வலி, காலில் உள்ள நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அகல மருத்துவரை சந்திக்க கூடாது.

    பொதுவாக தலையற்ற, உடலற்ற, காலற்ற நட்சத்திர நாட்களில் திருமணம், கிரகப்பிரவேசம் வைக்கக்கூடாது. தூரதேசப் பயணங்களை தவிர்க வேண்டும்.

    மேலும் அசுவினி, ரோகிணி, பூசம், ஹஸ்தம், அனுஷம் , மூலம், திருவோணம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் சுப நிகழ்விற்கு மிகவும் உன்னதமானது.

    பரணி, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சுவாதி, கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம் மற்றும் சதயம் மத்திமமான பலனைத் தரும் சுப நட்சத்திரங்களாகும்.

    கிருத்திகை, திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்களில் சுப நிகழ்வுகளை தவிர்ப்பது உத்தமம்.


    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    தீதுறு நட்சத்திரங்களான பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பிவராது. நகை அடமானம் வைக்க கூடாது.

    பலர் தங்களது ஜென்ம நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பார்க்காததால், பல முயற்சிகளில் தோல்வி அடைகின்றனர். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும். அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

    நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம். பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம்.

    உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    அஸ்வினி: பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி

    பரணி: கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி.

    கிருத்திகை: ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி.

    ரோகிணி: மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி.

    மிருகசீரிஷம்: திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. சுவாதி, அனுஷம், மகம், உத்திரம், சதயம், உத்திரட்டாதி, மூலம்

    திருவாதிரை: புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி.

    புனர்பூசம்: பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம்.

    பூசம்: ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை.

    ஆயில்யம்: மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருக சீரிஷம், புனர்பூசம்.

    மகம்: பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம்.

    பூரம்: உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம்.

    உத்திரம்: அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.

    அஸ்தம்: சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம்.

    சித்திரை: சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம்.

    சுவாதி: விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம்.

    விசாகம்: அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை.

    அனுஷம்: கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி.

    கேட்டை: மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம்.

    மூலம்: பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம்.

    பூராடம்: உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை.

    உத்திராடம்: திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திரு வாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். .

    திருவோணம்: அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம்.

    அவிட்டம்: சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம்

    சதயம்: பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம்

    பூரட்டாதி: உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம்.

    உத்திரட்டாதி: ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம்.

    ரேவதி: அஸ்வினி, கிருத்திகை, மிருக சீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி.

    அவரவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும். மேலும் சுய ஜாதகத்தில் சந்திரனை பலப்படுத்த இந்த எளிய பரிகாரத்தை ஜென்ம நட்சத்திரத்தில் செய்தால் சந்திரபலம் கூடும்.

    திங்கட்கிழமை தோறும் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும். பச்சரிசி மாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும்.

    திங்கட்கிழமைகளில் (சோமவார ) விரதம் இருந்து பார்வதி, பரமேஸ்வரரை வணங்க வேண்டும் வெள்ளி பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.

    வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். திருப்பதி சென்று வெங்கடாசல பதியை தரிசிப்பது,

    திங்களூர் சென்று வழிபாடு செய்ய வேண்டும். பவுர்ணமியில் சத்ய நாராயணர் விரதம் இருக்க வேண்டும்.

    • கடன் வாங்கி உல்லாச வாழ்க்கை தேடும் பேராசைகள்.
    • கடனை திரும்ப கட்ட முடியாமல் ஏற்படும் அவமானம் என்று காரணங்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றன.

    தற்கொலை: இது ஒரு மனிதனின் சோகமான முடிவு. குழப்பமான முடிவு. இதன் பாதிப்பு அவருக்கு மட்டுமல்ல. அவரது குடும்பம், சமுதாயம் ஏன் உலகெங்கும் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பினை அடைகின்றது. எந்த ஊரும், நாடும் இந்த வலி மிகுந்த உண்மையில் இருந்து முழுமையாய் தப்பிக்க முடிவதில்லை. இதன் காரண காரியங்களை ஆழ்ந்து அறிந்தால் மட்டுமே இதற்குத் தீர்வினை தர முடியும்.

    சமீப காலமாக பல தற்கொலை நிகழ்வுகளை நாம் கேட்கின்றோம், படிக்கின்றோம். காரணம் கடன் தொல்லை. இளம் வயதினர், இளம் வயது தாய், தந்தையர், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வது என மன வேதனை தரும் நிகழ்வுகளைக் காண்கின்றோம்.

    சமுதாயத்தின் அழுத்தம், சவாலான பொருளாதார நிலை, உடனடியாக சமாளிக்க வேண்டிய சில பொருளாதார சூழ்நிலைகள் போன்றவை உடல், மனம் இரண்டினையும் பாதிக்கின்றன. இதனால் மனிதன் உலகை விட்டே சென்று விடுகின்றான்.

    வேலையில்லா திண்டாட்டம், வருமானம் இல்லாமல் சில நாட்கள் கூட சமாளிக்க முடியாத நிலை, உதவ ஒருவரும் இன்மை, பாதுகாப்பின்மை, தன் கடமைகளை முறையாய் செய்து முடிக்க முடியாத நிலை இவை மனிதனின் தன்னம்பிக்கையினை அடியோடு உருக்குலைத்து விடுகின்றன. இதன் முடிவு மனிதன் தற்கொலை என்ற விளிம்பிற்கு தள்ளப்படுகின்றான்.

    * சிலர் தன்மான பிரச்சினையின் காரணமாக பிறரிடம் உதவி கேட்க கூசுவார்கள்.

    * பலருக்கும் படிப்பே வாழ்வின் மூலாதாரம். இந்த படிப்பிற்காக வாங்கும் கடனை அடைக்க முடியாத போது அது ஆணோ, பெண்ணோ தற்கொலைதான் அவர்களுக்கு முடிவாகத் தோன்றுகிறது.

    * விவசாயிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஊருக்கு நன்மை செய்து தன்னை அழித்துக் கொள்ளும் மெழுகுவர்த்திகள் ஆகி விட்டனர்.

    * கடனால் வரும் குடும்ப பிரச்சினைகள், உறவுகளில் விரிசல் போன்றவை ஒருவரின் மன நலத்தினை பைத்தியமாக்கி வேடிக்கை பார்க்கின்றது.

    * ஏறி இறங்கும் மார்க்கெட் மற்றும் பொருளாதார நிலவரம்.

    * முறையாக எப்படி கடன் பெறுவது, அதனை அடைப்பது என்ற படிப்பின்மை.

    * கடன் வாங்கி உல்லாச வாழ்க்கை தேடும் பேராசைகள்.

    * கடனை திரும்ப கட்ட முடியாமல் ஏற்படும் அவமானம் என்று காரணங்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. தீர்வு தான் தேட வேண்டி உள்ளது.

    * உலகில் 5 நபருக்கு ஒருவராவது வாழ்வில் ஒரு முறையேனும் சில நிமிடங்களாவது தற்கொலை செய்யலாமா? என்று நினைக்கின்றனர் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.


    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    * சிலர் நினைப்பதற்கு காரணம் அவர் இருக்கும் அந்த சூழ்நிலையில் தப்பிப்பது கடினமாக இருக்கின்றது அல்லது உதவி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இவர்களுடன் பேசும் போது அவர்கள் மன உளைச்சலை கொட்டி விட்டாலே சிறிது நிம்மதி பெறுவர்.

    வேகம், கோபம் போன்ற உணர்ச்சிகள் அப்படியே இருக்காது. கால நேரங்கள் கண்டிப்பாய் அனைவருக்கும் மாறும்.

    வாழ்க்கையினை அர்த்த முள்ளதாக வாழ்ந்து காட்டுவதே மாபெரும் திறமைதான்.

    வாழ்வில் அவர் செய்யும் தவறால் உலகம் அவரை சுட்டிக்காட்டி பேசக் கூடாது. அந்த தற்கொலை பண்ணி கிட்டு போனாரே என ஒரு வரையோ, அல்லது குடும்பத்தினையோ மற்றவர்கள் ஏளனமாய் பேசும்படி சொல்லக் கூடாது.

    காலம் வலிகளை ஆற்றும். வருங்காலம் பற்றி யாருக்குத்தான் தெரியும்? நம்பிக்கையோடு தான் வளர்கிறான், படிக்கிறான், வேலை செய்கிறான், திருமணம் புரிகின்றான். ஆக நம்பிக்கையே வாழ்க்கை.

    நீங்கள்.... நீங்கள்.... நீங்கள்... மிக முக்கியம். விவேகானந்தரின் சில கருத்துகளுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    ஒருவர் தன்னைத் தானே பலவீனமானவராக எண்ணக் கூடாது. பிரச்சினைகளை எதிர்கொள்ள தைரியத்துடன் இருக்க வேண்டும். பிரச்சினைகளில் இருந்து ஓடி ஒளிவது எந்த பலனையும் தராது.

    எதனையும் விடா முயற்சியுடன் தொடர வேண்டும். எழுந்திரு, விழுத்திரு, உன் இலக்கினை அடையும் வரை நிறுத்தாதே.

    உங்களை நீங்கள் முதலில் நம்ப வேண்டும்.

    பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து சக்திகளும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன. நம் கண்களை நாமே நம் கைகளால் மறைத்துக் கொண்டு இருட்டாய் இருக்கின்றது என அழுகின்றோம்.

    ஒருவர் வாழ்க்கையில் போராடினால் மட்டுமே வளர முடியும்.

    பிரச்சினை இல்லாமல் ஒருநாள் சென்றால் அன்று நாம் தவறான பாதையில் செல்வதாக இருக்கும்.

    சுயநலம் இல்லாது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

    எதிர்பார்ப்புகள் இல்லாத, சுயநலம் இல்லாத வாழ்வே மகிழ்ச்சி தரும்.

    உங்கள் வாழ்க்கையில் உங்கள் முறையில் நீங்கள் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். நல்லவைகளை அனைவரிடம் இருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக அவராக நாம் மாற வேண்டாம். நாம் நாமாக கற்ற திறமைகளோடு சிறப்பாக இருப்போம்.

    தினமும் சிறிது நேரம் சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும். அன்றாடம் ஒவ்வொருவரும் அவருடனேயே சிறிது நேரம் பேச வேண்டும். இல்லையெனில் உலகின் மிகச் சிறந்த அறிவாளியுடன் பேசும் வாய்ப்பினை ஒருவர் இழக்கின்றார்.

    நேர்மை தான் மனிதனின் முக்கிய குறிக்கோள். உண்மைக்காக எதனையும் இழக்கலாம். ஆனால் உண்மையினை, நேர்மையினை எதற்காகவும் இழக்கக் கூடாது.

    (பலர் தற்கொலை முயற்சியினைத் தவிர்த்து வாழ்வினை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அதற்கு கூறும் விளக்கங்கள் பெயர் குறிப்பிடப்படாமல் தொகுத்து கூறப்பட்டுள்ளது)

    * நான் இவ்வுலகில் இருக்கின்றேன். ஏனெனில் இவ்வுலகை விட்டுச் செல்லும் தயார் நிலையில் இல்லை.

    * நான் தொடர்ந்து வாழ்வதன் காரணம் வாழ்வும், அன்பும் இங்கே கிடைப்பதை நான் இழக்க விரும்பவில்லை.

    * பிறருக்கு கற்பிக்கும், காப்பாற்றும் சிறந்த நிலையில் நான் இருக்கின்றேன்.

    * என் நண்பனின் தம்பி தற்கொலை செய்து கொண்டதால் அந்த குடும்பம் படும் பாட்டினை கண்ணால் கண்ட நான் அதே தவறினை செய்ய முற்படவில்லை.

    * என் வாழ்வின் அர்த்தம் எனக்கு புரிந்து விட்டது.

    * என் குடும்பத்திற்காக நான் வாழ்கின்றேன்.

    * நான் எனக்காக வாழ்கின்றேன்

    * பல சவால்களை சந்தித்து ஜெயிக்க விரும்புகின்றேன்.

    * பெரிய குறிக்கோள், முயற்சி இல்லை. ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக வாழ்கின்றேன்.

    * மீண்டும் வாழ கிடைத்த 2-வது வாய்ப்பு. இதனை நான் இழக்க மாட்டேன்.

    * நான் என்னவாக மாறப் போகின்றேன் என்று நானே காண ஆசைப்படுகின்றேன்.

    இப்படி ஒவ்வொரு தற்கொலை முயற்சிப்பவர் மனதிலும் ஆக்கப்பூர்வமான சிந்தனை எழாதா என்ன?

    நான் தற்கொலை செய்தால் என்ன? என் உயிர், என் உரிமை என்று வாக்குவாதம் செய்யலாம். தெரிந்த இந்த உலகில் பழகிய மக்கள் உள்ள சூழ்நிலையில் ஒன்றும் தெரியாத ஒரு இடத்திற்கு ஏன் அவசரப்பட்டு வாழ்வை முறித்து செல்ல வேண்டும். இயற்கையின் போக்கினை ஏன் சீண்டி பார்க்க வேண்டும். விரலுக்குத் தகுந்த வீக்கமாக ஏன் ஆசைப்பட வேண்டும். உலகிற்கே சோறு போடும் விவசாயிகளா நீங்கள்? கடன் பட்டார் நெஞ்சம் என்று சொல்லுவது போல் புதை குழியில் கால் விட்டு திண்டாட வேண்டாம். எந்த ஒரு மனிதனும் இங்கு நிம்மதியாய் வாழ்ந்து விடுவதில்லை. கந்து வட்டி கதைகளை பல கேட்ட பின்பும் சுழலில் சென்று மாட்டக் கூடாது. சிந்திக்கும் திறனும் பொறு மையும் பல பிரச்சினைகளை தீர்க்கும்.

    இது ஒரு பொதுவான 'தற்கொலை' தடுப்பு முயற்சிக்கான கட்டுரை. அவரவர் வாழ்வின் வலி அவரவரே அறிவர். இருப்பினும் மனநல மருத்துவர் ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும். நாட்டுக்கு நாடு போட்டி போட்டு கடனாளியாகத்தான் இருக்கின்றது. பிறப்பே நம் கடனை தீர்ப்பதற்குதான் என ஆன்மீக உலகில் கூறுவர்.

    பலம்தான் வாழ்க்கை. பலவீனம் இறப்பு. ஆக்கப்பூர்வம் என்பது வாழ்க்கை. அழிவுப்பூர்வம் என்பது இறப்பு. அன்பு என்பது வாழ்க்கை. வெறுப்பு என்பது இறப்பு. ஒருவர் தற்கொலை செய்ய வேண்டும் என எண்ணவே கூடாது. காரணம்

    * நீங்கள் முக்கியமானவர் * நீங்கள் புத்திசாலி * நீங்கள் பொக்கிஷம் * உங்கள் உறவுகளுக்கு நீங்கள் வேண்டும் * வேறு ஒருவர் நீங்கள் ஆக முடியாது * உலகில் காண வேண்டிய இடங்கள் உள்ளன. எனவே 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்று உணருவோம்.

    • ஒரு கட்டத்தில் காட்சிப்படி நல்லா நடிக்கிறாள் என்று மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு நடிக்க முடிந்தது.
    • அப்போது மணிரத்னம் சார் டைரக்‌ஷனில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியது.

    ஆ... அம்மா...

    என்று கதறி அழுத சத்தம் கேட்டு படப்பிடிப்பு தளத்தில் ஆங்காங்கே நின்றவர்கள் எல்லாம் என் அருகில் ஓடி வந்தார்கள்.

    'பாப்பா... என்னம்மா ஆச்சு?' என்று எல்லோரும் பதற்றத்துடன் கேட்டார்கள்.

    ஆனால் பதில் சொல்ல முடியாமல் நான் எனது இடது காதை பொத்தியபடி அழுது கொண்டிருந்தேன்.

    சிலர் என் கையை விலக்கி காதை பார்த்து என்னம்மா... ஏதாச்சும் கடித்துவிட்டதா? என்று கரிசனத்துடன் கேட்டார்கள்.

    இந்த களேபரத்துக்கு இடையே எனது அழுகை சத்தம் கேட்டு அம்மாவும் அங்கே ஓடி வந்தார்.

    அம்மாவை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து அழுதேன். அவர் என்னை வாஞ்சையுடன் தடவி என்னம்மா... என்ன ஆச்சு என்றதும் காதை பிடித்து காட்டினேன்.

    ரத்த சிவப்பாக சிவந்து போயிருந்த காதை பார்த்து அதிர்ச்சியில் 'என்னம்மா என்ன ஆச்சு...?' என்றார்.

    நான் பதில் சொல்லாமல் அழுது கொண்டே சற்று தூரத்தில் கைகாட்டினேன். அங்கு மூத்த கலைஞரான நடிகர் சந்திரமோகன் நின்று கொண்டிருந்தார்.

    அவருக்கு ஒரு பழக்கம். யாரை பார்த்தாலும் ஜாலியாக பின்புறமாக சென்று காதில் சுண்டுவார். பெரியவர்கள் என்றால் பரவாயில்லை. அதை தாங்கி கொள்வார்கள்.

    எனக்கு தாங்கும் வயதா? பச்சை குழந்தை நான். பிஞ்சு காது. அவர் சுண்டியதும் 'சுர்...சுர்' என்று வலித்தது. ரத்தமாக சிவந்து போனது.

    அதை பார்த்து அம்மாவும் அவரிடம் சண்டை போட்டார். யாரிடம் எப்படி விளையாடுவது என்று தெரிய வேண்டாமா? என்று கடிந்து கொண்டார்.

    அவரும் இவ்வளவு வலிக்கும் என்று நினைத்திருக்கமாட்டார். பழக்க தோஷத்தில் சுண்டிவிட்டார். அப்புறம் 'சாரி' கேட்டார்.

    தெலுங்கில் கே.விசுவநாத்தின் 'சிரிவெல்லா' என்ற படத்தில் பார்வையற்ற குழந்தையாக நடித்தேன்.

    பார்வை மட்டும்தான் தெரியாது. கண்கள் திறந்தேதான் இருக்கும். ஆனால் பார்வை தெரியாதது போல் நடப்பேன். டான்ஸ் ஆடுவேன். இப்போது அந்த படத்தை பார்க்கும் போதும் பரவாயில்லையே நல்லாத்தான் நடித்து இருக்கிறோம் என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டு கொள்வேன்.

    என்னை எப்போது எங்கு பார்த்தாலும் 'என்னடா... எப்படி இருக்கே?' என்று பாசத்தோடு பேசக் கூடியவர் விஜயகுமார் அங்கிள். எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்.

    அப்படிப்பட்டவர் என்னை அருகில் வராதே போ என்று விரட்டினால் எப்படி இருக்கும்? அதுவும் சினிமா காட்சிக்காகத் தான்.

    இருந்தாலும் அதை சினிமாதானே என்று எடுத்துக் கொள்ளும் மனநிலை அந்த வயதில் எனக்கு இருந்திருக்குமா? என்பது கேள்விக்குறியே.

    அதனால்தானோ என்னவோ அப்படி ஒரு சம்பவம் நடந்தது. 'உயிரே உனக்காக' என்ற படத்தில் விஜயகுமார் அங்கிள், மோகன்சார், நதியா ஆகியோர் நடித்திருந்தனர்.

    அந்த படத்தில் விஜயகுமார் அங்கிள் மகள் நதியாதான். அதில் சின்ன வயது நதியாவாக நான் நடித்தேன். மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை. கதைப்படி அம்மா இறந்து போவார்.

    தனிமையில் நான் ஒரு நாள் இரவு என் அறையில் தூங்கும் போது வெளியே பயங்கர இடி-மின்னல். அதை பார்த்து பயந்து அலறுவேன். என் அறையில் இருந்து வெளியே வந்து பக்கத்து அறையில் தூங்கும் விஜயகுமார் அங்கிளை எழுப்பி 'டாடி... பயமாக இருக்கு டாடி... உங்களோடு படுத்துக்கிறேன்' என்பேன்.

    ஆனால் அவர் 'இங்கெல்லாம் வரக்கூடாது. போ... என்று பிடித்து தள்ளி விடுவார்...' நான் பயந்து அழுது கொண்டே செல்வேன்.

    எட்டு வயதில் காமிரா முன்பு நிற்க தொடங்கிய எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்த வயதிற்கே உரிய அனுபவம் அதிகரித்து வந்ததாகவே உணர்கிறேன்.

    குழந்தை நட்சத்திரமாக இருந்ததால் ஆரம்பத்தில் பலமுறை அப்படி நில், இப்படி நில் என்று டைரக்டர் சொல்லித் தருவார். கொஞ்சம் அனுபவம் வந்ததும் ஒருமுறை சொன்னதுமே அதை அப்படியே உள்வாங்கி செய்யும் அளவுக்கு வளர்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

    அதனால்தான் ஒரு கட்டத்தில் காட்சிப்படி நல்லா நடிக்கிறாள் என்று மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு நடிக்க முடிந்தது.

    அதனால்தான் குழந்தை நட்சத்திரம் தேவை என்றதுமே மீனாவை பார்க்கலாமே என்று எல்லோரும் தேட தொடங்கி இருக்கிறார்கள். ஒரு வகையில் இதுவும் எனக்கு கடவுள் தந்த வரமே.

    அடுத்தடுத்து படங்கள்... அதனால் படிப்புதான் என்ன ஆகுமோ என்று அம்மா பயப்பட்டார். யாரும் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு 40-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டேன். அந்த காலகட்டத்தில் மணிரத்னம் சார் டைரக்ஷனில் நாகார்ஜூனா நடித்த படம் 'இதயத்தை திருடாதே'. இந்த படத்தில் 3 குழந்தைகள் கதாபாத்திரம் வரும். அதில் ஒரு குழந்தை பாத்திரத்தில் நடிக்க என்னை தேடி வந்தார்கள்.

    20 நாட்கள் தொடர்ந்து கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் அப்போது எனக்கு பரீட்சை நேரம். எனவே படிப்பு கெட்டுப்போகும் என்று அந்த படத்தில் நடிக்கவில்லை. இதனால் அப்போது மணிரத்னம் சார் டைரக்ஷனில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியது.

    இருந்தாலும் எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட வேண்டிய தாயிற்று. ஏனெனில் கதாநாயகி வாய்ப்பு தேடி வந்தது.

    எனவே இதுவரை உங்கள் குழந்தை மீனா அடுத்த வாரம் முதல் கதாநாயகியாக உங்களை சந்திக்க வருகிறேன்.

    (தொடரும்)

    • செல்வ மகளாக, செல்ல மகளாக, அழகு தேவதையாக பிறந்த அக்குழந்தையையும் ‘சொரூபா’ என்றே அழைத்தனர்.
    • ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்ததும் இருவரும் விடுதலைப் போராட்டங்களில் பங்குபெற ஆரம்பித்தனர்.

    "நீ அரசியல்வாதியாக மாறியிருப்பதை உணர்ந்தேன். நீ பெண்ணாகப் பிறந்துவிட்டது அதற்குத் தடையாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம். தங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காக, ஆண்கள் சாதித்துள்ள செயல்களைப் போலவே, எத்தனையோ பெண்களும் தீவிரப் பங்கேற்று அரிய பெரிய சாதனைகளை நிறைவேற்றியுள்ளனர். ஒரு சிலர் ஆண்களை விட அதிகமாக சிறந்து விளங்குவதையும் காணலாம். ஆண்-பெண் என்கிற பேதம் ஒரு பெரிய தடை அல்ல. உள்ளத்தில் உறுதி கொண்டுவிட்ட ஒரு பெண்ணின் ஆதிக்கம் ஆணின் வலிமையை விட வலியதாக, பயன்கள் பல தருவதாக அமையும். ஆகவே, உனது முன்னேற்றத்துக்குத் தேவையான வாய்ப்புகள் உனக்காகக் காத்து நிற்கின்றன." –மோதிலால் நேரு

    தன் மகள்கள் கிருஷ்ணா மற்றும் விஜயலட்சுமி பண்டிட் இருவரும் நாட்டு விடுதலைப் போரில் தங்களை ஒப்படைத்து போராடிக் கொண்டிருந்தபோது சிறையில் இருந்தபடி மகள் கிருஷ்ணாவுக்கு மோதிலால் நேரு எழுதிய கடிதத்தின் வரிகள்தான் மேலே காண்பவை.

    செல்வ வளம் மிக்க அரண்மனை போன்ற வீட்டில் வழக்குரைஞரும், பெரும் செல்வந்தருமான தந்தை மோதிலால் நேருவுக்கு மகளாக பிறந்து வளர்ந்தாலும் நாட்டுப்பற்று மிகுதியாய் இருந்தவராகவும், தாய்நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் ஓங்கி ஒலித்த குரலாக, இருந்தது விஜயலட்சுமி பண்டிட்டின் குரல்.

    கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர அத்தனை வேலைக்காரர்கள் கொண்ட வீட்டில், அறுசுவை உணவு உண்டு, ஆடம்பர வாழ்வை வாழ்ந்து வந்த அப்பெண், தன் குடும்பத்தினரோடு நாட்டு விடுதலைக்காக போராடும் போது மூன்றுமுறை கைது செய்யப்பட்டு புழுக்கம் மிகுந்த சிறைகளில் மூன்று ஆண்டுகளை கழித்துள்ளார்.

    சிறைவாசம் துன்பம் மிகுந்ததாக இருந்தாலும் ஒரு பெண் அதனை இயல்பாக ஏற்றுக்கொள்வது என்பது, எப்படிப்பட்ட சூழலில் பிறந்து வளர்ந்தாலும், லட்சியத்தை நோக்கி நடைபோடும்போது துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்பதை பிற பெண்களுக்கும் உணர்த்துவதாக உள்ளது அல்லவா!

    விஜயலட்சுமியின் இளமைக்காலம்: ஆனந்த பவனம் என்னும் பெரும் மாளிகையில் ஒரு சிற்றரசர் போல் வாழும் அனைத்து வசதிகளையும் கொண்டவர் காஷ்மீரி பண்டிட் பிரிவைச் சேர்ந்த மோதிலால் நேரு. இயற்கையாகவே நேரு குடும்பத்தினர் ஆங்கிலேயர் போன்ற தோற்றமும், அவர்களைப் போன்றே மிடுக்குடனும் வாழ்ந்தவர்கள். பெயருக்கு ஏற்றார்போல், அழகும், இனிமையான குணமும் கொண்டவர் மோதிலால் நேருவின் மனைவி சொரூபராணி. இவர்களின் மூத்த பிள்ளைதான் நவ இந்தியாவின் சிற்பி என்று பின்னாட்களில் போற்றப்பட்ட ஜவஹர்லால் நேரு. ஜவஹர்லாலுக்கு பதினோரு வயதிருக்கும் போது அவரின் தாய் சொரூபராணி 1900, ஆகஸ்டு 18-ந் தேதியன்று அழகுச்சிலை போன்ற பெண்குழந்தையை பெற்றெடுத்தார். செல்வ மகளாக, செல்ல மகளாக, அழகு தேவதையாக பிறந்த அக்குழந்தையையும் 'சொரூபா' என்றே அழைத்தனர்.

    தன் பிள்ளை ஜவஹர் இங்கிலாந்தில் உயர்கல்வி பயிலவேண்டும் என்று எண்ணிய மோதிலால், 1905-ல் தன் மனைவி மற்றும் ஐந்து வயதான மகள் சொரூபாவுடன் இங்கிலாந்து சென்றார். அங்கே ஹாரோ பல்கலைக்கழகத்தில் ஜவஹர் சேர்க்கப்பட்டார். தன் மகளை கவனித்து வளர்க்கவும், கல்வி கற்பிக்கவும் தகுந்த ஆசிரியர் தேவை என்பதை உணர்ந்த மோதிலால் நேரு இங்கிலாந்தில் மிஸ் ஜேன் ஹூப்பர் எனும் பெண்மணியை சொரூபாவிற்கு ஆசிரியராக அமர்த்தினார்.

    இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி என்று ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு சொரூபாவின் ஆசிரியரான மிஸ் ஜேன் ஹூப்பருடன் இந்தியா திரும்பினர் மோதிலால் குடும்பத்தினர். மிகுந்த திறமையும், சிறந்த பயிற்சியும், கடமையில் கண்டிப்பும் கொண்ட தன் ஆசிரியரிடம் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்றார் சொரூபா. மோதிலால் நேரு ஆனந்த பவனத்தில் நிறைய குதிரைகளை வளர்த்து வந்தார். தன் மகள்கள் சொரூபாவிற்கும், 1907-ல் பிறந்த அவளின் தங்கை கிருஷ்ணாவிற்கும் குதிரைகளை பரிசளித்து வந்தார்.

    திருமணம்: காந்தியின் வருகையி்ன்போது அவருடைய செயலாளர் மகாதேவ தேசாயும் உடன் வருவதுண்டு. ஒருமுறை தேசாய் சொரூபாவிடம் 'மாடர்ன் ரிவ்யூ' எனும் பத்திரிகையின் இதழ் ஒன்றில் வெளிவந்திருந்த கட்டுரையை வாசிக்கக் கூறினார். கட்டுரையைப் பற்றியும் அதன் ஆசிரியர் ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் பற்றியும் மிகவும் புகழ்ந்து பேசினார். ரஞ்சித் பண்டிட் அறிவாளி, மேதை, கல்கத்தாவில் பாரிஸ்டராக பணியாற்றி வருகிறார், இலக்கியவாதி என்பதையெல்லாம் எடுத்துக்கூறி அவரை சொரூபாவிற்கு அறிமுகமும் செய்துவைத்தார்.

    காந்தியின் விருப்பப்படி இந்த அறிமுகமும், அதன்பின்னர் இருவரின் மனமொத்து 1921, மே 10-ல் திருமணமும் நிகழ்ந்தது. காந்தியடிகள், அலி சகோதரர்கள் உள்பட பல தலைவர்கள் வந்திருந்தனர். திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய பெயரை 'விஜயலட்சுமி பண்டிட்' என்று மாற்றிக் கொண்டார் சொரூபா. இத்தம்பதிக்கு நயந்தாரா, சந்திரலேகா, ரீட்டா, என மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர்.

    அரசியல் நுழைவும் போராட்டங்களும்: தன்னுடைய 16- வது வயதிலேயே அரசியல் போராட்டக் களத்தில் நுழைந்தவர் விஜயலட்சுமி. மோதிலால் நேருவின் அண்ணன் மருமகளும், 'ஸ்திரீ டர்பன்' எனும் இந்தி பத்திரிகையின் ஆசிரியரும், அனைத்திந்திய பெண்கள் கூட்டமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், சமூக சேவகியுமான ராமேஷ்வரி நேரு, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு அரசியல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். தென்ஆப்பிரிக்காவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து அக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு நாட்டில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வந்தார் விஜயலட்சுமி.

    தொடர்ந்து தன்னாட்சி இயக்கத்தில் இணைந்து போராட முன்வந்தார் விஜயலட்சுமி. ஆனால் அவரது வயதை கருத்தில் கொண்டு 'அன்னி பெசன்ட்' அம்மையார் தன்னார்வலராக மட்டும் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்

    திருமணத்திற்குப் பின்னர் ஆனந்த பவனத்திற்கே வந்துவிட்ட கணவர் ரஞ்சித் பண்டிட்டுடன் முதல் பத்தாண்டுகள் இரண்டு முறை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் விஜயலட்சுமி. ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்ததும் இருவரும் விடுதலைப் போராட்டங்களில் பங்குபெற ஆரம்பித்தனர்.

    விஜயலட்சுமி பண்டிட் அனைத்திந்திய பெண்கள் கூட்டமைப்பில் ராஜ்குமாரி அம்ரித்கவுருடன் இணைந்து செயல்படத்தொடங்கினார். "அரசியலும், சமூகநலனும் ஒன்றுக்கொன்று தனிச்சிறப்புடையவை. அதேநேரம் முரணானவை!" எனவே பெண்கள் கூட்டமைப்பின் குறிக்கோள்களை மாற்றவேண்டியதன் அவசியத்தை விஜயலட்சுமி எடுத்துரைத்தார்.

    காந்தியடிகளின் கொள்கைகள், போராட்டங்களின்பால் ஈர்ப்பு கொண்ட விஜயலட்சுமி, விடுதலைப் போரில் தன் பங்களிப்பை தீவிரப்படுத்த தொடங்கினார். நேரு குடும்பத்துப் பெண்களான கமலா நேருவும், கிருஷ்ணாவும் ராணுவ வீரர்கள் போல் உடை அணிந்து தொண்டர் பயிற்சி பெற்றனர். இது விஜயலட்சுமிக்கு மேலும் ஊக்கத்தைத் தந்தது.

    முதல் பெண் அமைச்சராக விஜயலட்சுமி பண்டிட்: 1936-ல் நடந்த தேர்தலில் லஷ்மணபுரி தொகுதியில் வெற்றிபெற்ற (லக்னோ) விஜயலட்சுமிபண்டிட் கோவிந்தவல்லபபந்த் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சராக பொறுப்பேற்று மிகத் திறம்பட பணியாற்றினார். இந்தியாவிலேயே முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார்.

    அயல்நாடுகளில் தூதுவராக பணியாற்றுதல்:

    இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு விஜயலட்சுமிபண்டிட் 1947-ல் சோவியத் ஒன்றியத்தின் தூதராக நியமிக்கப்பட்டு 1949 வரை பணியாற்றினார். பின்னர் 1949 முதல் 1951 வரை அமெரிக்கா மற்றும் மெக்சிகோ, 1955 முதல் 1961 வரை அயர்லாந்து மற்றும் 1956 முதல் 1961 வரை ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகுதல்: 1953-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் பெண் தலைவராக விஜயலட்சுமி பண்டிட் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது இந்தியர்களுக்கும், பெண்குலத்திற்கும் பெருமை சேர்ப்பதாக ஆனது. ஐ.நா. பொதுச்சபையின் எட்டாவது கூட்டத் தொடருக்கு அவர் தலைமை தாங்கினார். ஐ.நா. பொதுச் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் விஜயலட்சுமி பண்டிட்தான்.

    நெருக்கடிநிலைக்கு எதிர்ப்பு: 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது தனது அண்ணன் நேருவின் மகளும், அப்போதைய பிரதமருமான இந்திரா காந்திக்கு எதிராக விஜயலட்சுமி பண்டிட் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்திரா காந்தியின் முடிவுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுதல்: இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவரான பக்ருதீன் அலி அகமதுவின் திடீர் மறைவைத் தொடர்ந்து, ஜனாதிபதி பதவிக்கு விஜயலட்சுமி பண்டிட் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால் இறுதியில் நீலம் சஞ்சீவ ரெட்டி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மறைவு: இந்திய அரசியலிலும், நாட்டு விடுதலையிலும், சமூக முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகித்த விஜயலட்சுமி பண்டிட் டிசம்பர் 1, 1990 அன்று டேராடூனில் காலமானார்.

    பெண்கள் மேம்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் தனது நிலையை வலுப்படுத்தியதன் மூலம், எதிர்கால சந்ததியினருக்கும் பெண்களுக்கும் சிறந்த பாதையை உருவாக்கித் தந்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    • மெட்ராஸ் ராஜதானியின் மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
    • கச்சத்தீவில் இருந்து கொய்து வரப்பட்ட மலர்கள் ராமேஸ்வரம் அம்மனுக்குச் சூட்டப்பட்ட குறிப்புகள் உள்ளன.

    நான் தனியார் நிறுவனத்தில் வேளாண் பிரதிநிதியாகப் பணியாற்றியபோது அன்றைய ஒன்றுபட்ட ராமநாதபுரம் பகுதி எனது பணியிடங்களில் ஒன்று.

    கச்சத் தீவு பகுதிகளில் சங்கு எடுக்கும் உள் குத்தகை பெற்று இருந்தார் எனது முகவர். அவரது போட் மூலம் 1973ல் ஓரிரு முறை அங்கு சென்று வந்து இருக்கிறேன். ராமேஸ்வரம் பகுதிகளில் இருக்கும் பலருக்கும் இந்த அனுபவம் உண்டு.

    ஒரு நாட்டின் எல்லை என்பது நிலத்தின் முடிவா? சர்வதேசச் சட்டம் வகுத்துள்ள விதி வேறு!

    நில எல்லைக்குக் கீழ் கடலுக்கு அடியில் நீட்சி பெற்றுள்ள கண்டத் திட்டு வரை ஒரு நாட்டின் எல்லை ஆகும். இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் தான் மிகப்பெரிய கண்டத் திட்டைக் கொண்டுள்ளது.

    சேதுபதி அரச மரபு கி.பி.1605-ல் மதுரை நாயக்க மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டது. குத்துக்கல் தீவு, குருசடித் தீவு, ராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகியவையும் 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதிக்கு உரிமை யாக்கப்பட்டிருந்தன.

    தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானது என்று மகாராணி விக்டோரியா தன் பிரகடனம் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

    மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு ஆகிய மூன்றையும் மெட்ராஸ் பிரசி டென்சியின் ராமநாதபுரம் கலெக்டரிடம் கீழக்கரை அப்துல் காதர் "லீஸ்" பெற்றுள்ளார். 1913ல் மறு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. அதன்படி மெட்ராஸ் ராஜதானியின் மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

    முகம்மது என்பவர் 1947ல் கச்சத் தீவை மீண்டும் குத்தகைக்கு எடுத்துள்ளார். (ஆவண எண்: 278/1948 - ராமேஸ்வரம் பதிவாளர் அலுவலகம்). சுமார் 163 ஏக்கர் பரப்பளவுள்ள கச்சத்தீவு ராமேஸ்வரத்தில் இருந்து 11 கடல் மைல் (20.4 கி. மீ) தூரத்தில் உள்ளது. இலங்கையின் தலைமன்னாரில் இருந்து அது 18 கடல் மைல் (33.4 கி. மீ) தொலைவு.

    தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊரைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி மற்றும் ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத் தீவில் புனித அந்தோணியார் ஆலயம் 1913-ல் சிறிய ஓலைக்குடிசையில் நிறுவப்பட்டது. அது 1939-ல் படிப்படியாகப் பூர்த்தியானது.

    ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் சிறப்புத் திருப்பலி, அந்தோணியார் தேர் பவனி என்று திருவிழா நடைபெற்று வந்தது. அந்தோணியார் மீனவர்களுக்குக் "கடல் அய்யனார்"...சமுத்திரத்தின் காவல் மற்றும் கருணை தெய்வம்.

    கச்சத்தீவில் இருந்து கொய்து வரப்பட்ட மலர்கள் ராமேஸ்வரம் அம்மனுக்குச் சூட்டப்பட்ட குறிப்புகள் உள்ளன. கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட பசுக்கள் கச்சத்தீவில் வளர்க்கப்பட்டு, பால் ஆலய அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களும் உள்ளன.

    விடுதலைக்குப் பிறகு, ராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம் (சர்வே எண் 1250- ஜி ஓ எண் 2009: 11.08.1949) ஆனது கச்சத்தீவு.

    இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் கண்டத்திட்டு எல்லைகளுக்குள் கச்சத்தீவு அமைந்துள்ளது. அதைச் சுட்டிக்காட்டி அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஸ்ரீலங்கா 70 களுக்குப் பிறகு கச்சத்தீவின் மீது உரிமை கோரத் துவங்கியது. பண்டாரநாயகா அங்கு பிரதமர் பதவிக்கு வந்த பிறகு இப்பிரச்சினை கூர்மை பெற்றது.

    அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்வர். கச்சத்தீவு உரிமை குறித்த ஆதாரங்களை திரட்டச் சட்டப் பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி என்பவரிடம் கூறினார். அது குறித்த அறிக்கை 1973-ல் வெளி யிடப்பட்டது. பின்னாட்களில் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியுடன் எனக்கு நல்ல பரிச்சயம்!

    எல்லா ஆதாரங்களையும் வைத்து மத்திய அரசுக்குத் தமிழக அரசு சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதற்குப் பிரதமர் அலுவலகம் 8.10.1973 அன்று ஒரு பதிலும் அனுப்பி இருக்கிறது. "கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் தேடப்பட்டு வருவதாக" அதில் கூறப்பட்டு இருந்தது.

    கச்சத்தீவு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த அன்றைய வெளியுறவுத்துறைச் செயலாளர் கேவல் சிங் இலங்கை போகத்திட்டமிட்டார். முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று அவரைச் சந்தித்து "கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தம்!" என்பதற்கான ஆவணங்களை வழங்கினார்.

    இவ்வளவு வரலாற்று உண்மைகள் மற்றும் மத நம்பிக்கைகள் இருந்தும் கச்சத் தீவு ஏன் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது? இந்தியாவிற்கு 1974-ல் செய்த உதவிக்கு இலங்கை கேட்ட கைமாறு அது.

    பாகிஸ்தான் போருக்குப் பின் (1971) இந்திராகாந்தி அரசு 18.5.1974 அன்று பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நடத்தி, உலக நாடுகளின் எதிர்ப்பை எதிர் கொண்டது. "சிரிக்கும் புத்தர்" என்று அதற்குப் பெயரிட்டு அது அமைதிக்கான சோதனை என்று கூறினார் இந்திரா.

    உடனே பாகிஸ்தான் ஐ.நா.சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தது. இலங்கை இந்தியாவுக்கு அளித்த ஆதரவால் அது தோல்வி அடைந்தது. பிரதி உபகாரமாக இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவைக் கேட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டுப் பிரதமர்களும் 28.06.1974ல் கையெழுத்திட்டனர்.

    கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி நாடாளுமன்றத்தில் 23.07.1974-ல் விவாதம் நடைபெற்றது. தி.மு.க. கூட்டணியில் 1971, தேர்தலில் வெற்றி பெற்ற பி.கே. மூக்கையாத் தேவர் (அன்றைய ராமநாதபுரம் எம்.பி.) பலத்த கண்டனம் எழுப்பினார். அப்போது அவரை ஆதரித்துப் பேசியது அன்றைய குவாலியர் எம்.பி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய். ராமாயணத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட இடம் கச்சத் தீவு என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு

    அடுத்த ஆண்டில் எமர்ஜென்சி வந்தது. 1977-ல் இந்திராகாந்தி தோற்கடிக்கப்பட்டார். இங்கு எம்.ஜி.ஆர். ஆட்சி. பின்னர் 80-களில் ஈழத் தமிழர் பிரச்சினை, 1991-ல் ராஜீவ் கொலை என்று தமிழக அரசியலில் பல மாற்றங்கள்! வரலாற்றின் இருட்டுப் பக்கங்களுக்குத் தள்ளப்பட்டது கச்சத்தீவு.

    ஜெயலலிதா 1991-ல் தமிழக முதல்வரானார். ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா உரையின்போது கச்சத் தீவை மீட்பது பற்றிக் குரல் கொடுத்தார். 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும் கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்று கோரினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஆகஸ்ட் 2008-ல் உச்ச நீதீமன்றத்தில் கச்சத்தீவு குறித்த பொது நல வழக்கைத் தொடர்ந்தார். 2011-ல் கச்சத்தீவு மீட்பு பற்றிய தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார்.

    நாட்டுப் பிரிவினையின்போது மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்த பெருபாரி எனும் கிராமம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் எல்லைப் பிரிப்பு ஆவணங்களில் அது குறிப்பிடப்படவில்லை. எனவே பாகிஸ்தான் தன் வரைபடத்தில் அதைச் சேர்த்துக் கொண்டது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

    பின்னர் 1958-ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி பெருபாரி கிராமம் பாகிஸ்தான் வசம் சென்றது. பசும்பொன் தேவர் உள்ளிட்ட பல தலைவர்கள் இதை எதிர்த்தனர். மக்களவையிலும் பேசியிருக்கின்றனர். அப்போது பசும்பொன் தேவர் வைத்த தீர்வு என்பது அதற்கு ஒரு மதிப்புப் போட்டு அதை அந்த அரசுக்கு வழங்கி விட்டு பெருபாரியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது.

    மேற்கு வங்க அரசின் இசைவின்றி மாநிலத்தில் உள்ள பெருபாரிப் பகுதியைப் பாகிஸ்தானுக்கு வழங்கியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 3 (சி)படி ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றி யமைப்பதற்கு மட்டுமே அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.. இந்திய நாட்டின் பரப்பைக் குறைக்க அதிகாரம் இல்லை என்று 14.3.1960-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (AIR 1960 SC 845, 1960 3 SCR 250)

    எனவே அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து பெருபாரி பகுதியைப் பாகிஸ்தானுக்கு வழங்கியதைச் சட்டப்பூர்வ மாக்கியது மத்திய அரசு. அதுவே 9-வது இந்திய அரசி யலமைப்புச் திருத்தத் சட்டம், 1960. இனி இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகள் வேண்டும் என்று அப்போது உச்ச நீதி மன்றம் கருத்துக் கூறியது.

    வங்கதேச எல்லையோரத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை 2015-ல் இந்தியாவிற்கும், அதே போல் இந்தியாவின் மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநில எல்லைகளில் இஸ்லா மியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரா மங்களை வங்கதே சத்திற்கும் பரஸ்பரம் மாற்றிக் கொள்ள வேண்டிய சர்ச்சை எழுந்தது. அப்போது மோடி பிரதமர். பின்னர் அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம், 2015கீழ் இந்திய நாடாளுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது. கச்சத்தீவு விவகாரத்தில் இது போன்ற எந்த ஏற்பாடும் நடக்கவில்லை.

    இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் 11.3.2017-ல் பேசியபோது தி.மு.க.வின் அன்றைய செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு பற்றிப் பேசியிருக்கிறார். முதல்வரானபின் 2022-ல் பிரதமர் மோடியின் சென்னைக் கூட்டத்தில் கச்சத்தீவு மீட்பு பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்:

    "தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுத்துத் தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதைப் பிரதமருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்."

    உடனே அரசியல் சர்ச்சை எழுந்தது. கச்சத் தீவைத் தாரை வார்த்ததே தி.மு.க.வும் அதன் அன்றைய முதல்வர் கலைஞரும் தான் என்று செய்தியாளர் சந்திப்பில் தாக்கினார், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை. அதற்குக் காரசாரமாகப் பதில் அளித்தது தி.மு.க.

    இப்போது இலங்கை இந்தியாவின் உதவியை நாடித் தவம் கிடக்கிறது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மாவட்ட மீனவர் நலன்களைப் பாதுகாக்கவும், கச்சத்தீவை மீட்டெடுக்கவும் இதுவே சரியான தருணம்! குறைந்த பட்சம் நீண்ட காலக் குத்தகைக்காவது கச்சத்தீவை நம்மால் பெற முடியும்.

    எதிர்காலத்தில் சீனா கச்சத்தீவில் கடற்படைத் தளம் அமைத்து இந்தியாவின் பாதுகாப்புக்கும், தமிழக மீனவர் நலன்களுக்கு நிரந்தரக் கேடாகவும் மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது. எனவே இப்போதே இப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

    அதை விடுத்துக் கச்சத் தீவைத் தாரை வார்த்தது யார் என்று விவாதிப்பது லாவணி அரசியல். கச்சத்தீவின் கடல் அய்யனார் தான் நல்ல புத்தி கொடுக்க வேண்டும்!

    விடிவெள்ளி நம்ம வெளக்கு … ஐலசா

    விரி கடலே பள்ளிக்கூடம் … ஐலசா

    அடிக்கும் அல நம்ம தோழன் … ஐலசா

    கருமை மேகம் நமது குடை … ஐலசா

    கச்சத் தீவு நமது பூமி.. ஐலசா! அய்யனாரு

    மனசு வச்சா ஐலசா.. வெள்ளி மீனு தங்க மீனு

    அள்ளி வரும் ஐலசா..

    ( நாட்டுப்புறப் பாடல்)'

    ×