என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • திரு.வி.க.வின் உரை மக்களை சிந்திக்கவும், சீறியெழவும் தூண்டின.
    • ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த நடுத்தரப் பள்ளியில் தமிழாசிரியராக சேர்ந்தார்.

    இன்று (26-ந் தேதி) தமிழறிஞர் திரு.வி.க. பிறந்தநாள்.

    தமிழ் உரைநடைக்குப் புதிய பொலிவும், வலிமையும் சேர்த்த திரு.வி.க. புதிய உரைநடையின் தந்தை எனவும் தமிழ்த்தென்றல் எனவும் போற்றப்படுகிறார்.

    இவருடைய முன்னோர்கள் வாழ்ந்த ஊர் திருவாரூர். எனவே திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாணசுந்தரம் என்பதன் சுருக்கமே திரு.வி.க. வடமொழிசொற்களை கலவாமல், தூய தமிழில் எழுதவும், பேசவும் செய்தார். மேடைப் பேச்சை முதன்முதலில் இலக்கிய நடையில் பேசியவர் திரு.வி.க. அவருடைய வாக்கியங்கள் வினாக்களை எழுப்பி விடைதருபவனமாக அமைந்து இருக்கும். துப்பாக்கி, பீரங்கிவேண்டுமா? வேண்டாம்.. வேண்டாம்.

    அடுக்குத்தொடர் அவர் வாக்கியத்தின் சிறப்பு. அவர்கள் வயிற்றில் வீரப்பிள்ளைகள் பிறந்தார்கள். இந்நாளிலோ வெட்கம்! வெட்கம்! உன்னத தமிழ்நாட்டைக் காண, எழுங்கள்! எழுங்கள்!"

    தமிழர்களே உங்கள் பெருமை என்ன? உங்கள் ஆண்மை எங்கே? அன்பு எங்கே? வீரத்தாய்மார் எங்கே? உங்களுக்குள் எத்தனை பிரிவு? எத்தனைப் பிளவு?.

    திரு.வி.க.வின் உரை மக்களை சிந்திக்கவும், சீறியெழவும் தூண்டின. இவரது தீவிரமான உணர்ச்சி கொந்தளிப்பு ஏற்படுத்தக்கூடிய மேடைப்பேச்சுக்கு இளைஞராக இருந்த அறிஞர் அண்ணா ரசிகராக இருந்தார். 'அரசியலில் புயலாகவும், தமிழில் தென்றலாகவும் இருப்பவர் நம் திரு.வி.க. நூல்களிலே நுண்ணிய உரை தீட்டியவர். எதிர்கால உலகத்துக்காக சிறந்த ஏடுகளைத் தயாரிப்பவர், நம் திரு.வி.க' என்று அறிஞர் அண்ணா மனம் திறந்து பாராட்டினார்.

    இந்திய விடுதலைக்கு மட்டுமல்லாமல் தொழிலாளர் முன்னேற்றம், பெண்ணுரிமை, தமிழ் மொழிவளர்ச்சி, முதலிய துறையில் ஈடுபட்டு பெரும் தொண்டாற்றினார். திரு.வி.க. 1883-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி காஞ்சிபுரம் அருகில் உள்ள துள்ளம் கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் விருத்தாச்சலம். தாயார் சின்னம்மாள். திரு.வி.க. பத்தாம் வகுப்பு வரைதான் படித்தார் என்றாலும் தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக யாழ்ப்பாணம் கதிர்வேற் பிள்ளை, மயிலை தணிகாசலம் முதலியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோரிடம் திருக்குறள், கம்பராமாயணம், வில்லிபாரதம், சைவசித்தாந்தம் உபநிடதங்கள் ஆகியவற்றை கற்றுணர்ந்தார். நீதிபதி சதாசிவராவிடம் ஆங்கிலம் கற்றார். ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி, கீட்ஸ் போன்றோரின் ஆங்கில நூல்களை படித்தார். ஸ்பென்சர் நிறுவனத்தில் இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வேலையை ராஜினாமா செய்தார்.

    ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த நடுத்தரப் பள்ளியில் தமிழாசிரியராக சேர்ந்தார். அப்போது கமலாம்பாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதன் பின் அந்த வேலையை விட்டுவிலகி தேசபக்தன் நாளிதழின் ஆசிரியரானார். தேசபக்தனில், எளிய இனிய தமிழில் திரு.வி.க. எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்று விளங்கின. கமலாம்பிகை அம்மாளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. திரு.வி.க.வின் மனைவி தனக்கு கல்வி கற்றுக்கொடுக்கும்படி கணவரிடம் கேட்டுக்கொண்டார். அதைக்கேட்டு வியப்படைந்த திரு.வி.க. எல்லாப் பெண்களும் நகை, புடவை வாங்கதான் விரும்புவார்கள். உனக்கு நகை, புடவை மீது விருப்பம் இல்லையா? என கேட்க அவை என்னிடம் போதுமான அளவில் உள்ளன என கமலாம்பாள் பதில் கூறவும் மனைவியின் விருப்பத்திற்கேற்ப அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தார்.

    கமலாம்பாள் நன்றாக பாடுவார். அவரை திருவொற்றியூர் கடற்கரைக்கு அழைத்துச்சென்று அவரை பாடச்சொல்லி கேட்டு மகிழ்வார். உடல் நலக்குறைவால் கமலாம்பாள் திடீரென மரணம் அடைந்தார். இது திரு.வி.க.வை பேரிடியாகத் தாக்கியது. மனைவி உயிரோடு இருந்தபோது புகைப்படம் எடுக்கவில்லை. இறந்தபிறகு துயரத்துடன் அவரது உடலைப் படமெடுத்தார்.

    அதன்பிறகு அவரது உறவினர்கள் மறுமணத்திற்கு வற்புறுத்திய போதும், அதனைத் தவிர்த்தார். நான் தனியாக வாழவில்லை. தமிழோடு வாழ்கிறேன் என்று கூறி மறுமணப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தேசபக்தன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து திரு.வி.க.விலகினார். பின்னர் நவசக்தி இதழைத் தொடங்கி அதன் ஆசிரியர் ஆனார். நவசக்தி காங்கிரஸ் கட்சியின் கொள்கை முரசாக ஒலித்தது. 20 ஆண்டுகள் தொடர்ந்து அந்த பத்திரிகையை நடத்தி தேச பக்தி கனலை மூட்டினார். திரு.வி.க.வின் அனல் பறக்கும் எழுத்துக்கள் நாடு முழுவதும் புகழ் பெற்றன. எழுத்துவேந்தர் கல்கியின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. தன்குருவான திரு.வி.க.வுக்கு நன்றி செலுத்தும் வகையில் கல்யாணசுந்தரம் என்ற பெயரில் உள்ள 'கல்' என்ற எழுத்துகளையும் தன்பெயரில் உள்ள முதல் எழுத்தான 'கி'யையும் இணைத்து 'கல்கி 'என்று மாற்றிக்கொண்டார்.

    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தபோது அவர் நடித்த ஒரு படத்தில் சிறுவனுக்கு அவர் அறிவுரை சொல்வது போல் ஒரு பாடல் வரும். 'நல்ல, நல்ல பிள்ளைகளை நம்பி! இந்த நாடே இருக்குது தம்பி! என்பது பல்லவி. சரணத்தில் ஒரு இடத்தில் கவிதைகள் வழங்கு பாரதியைப்போல்! மேடையில் முழங்கு திரு.வி.க.வைப் போல் என்றுவரும். திரு.வி.க. காங்கிரஸ்காரர். பாடல் வரியோ அவரை புகழ்கின்றது. இதில் இருந்து மாற்றாரையும் தன்வசம் ஈர்க்கும் பேச்சாற்றல் திரு.வி.க.வுக்கு உண்டு என்பதை அறியலாம்.

    1919-ம் ஆண்டு காந்தியடிகளை முதன் முதலில் சந்தித்தார். காந்தியை காந்தியடிகள் என்று அழைத்தவரும் திரு.வி.க.வே.

    அதன்பிறகு காந்தி தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது, மேடைப்பேச்சைமொழிப் பெயர்த்தார். அதன்பிறகு காந்தியடிகள், திரு.வி.க.வை சந்திக்கும் போதெல்லாம் மொழிப்பெயர்ப்பாளரே என்று அழைத்து வந்தார். 1918-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக தொழிற்சங்கம் தொடங்கினார். சென்னை தொழிலாளர் சங்கம் என அதற்குப் பெயரிட்டு அதன் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இதன் மூலம் தொழிலாளர்கள் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார். போலீஸ் சங்கம், அச்சகர் தொழிலாளர் சங்கம், ரெயில்வே தொழிலாளர் சங்கம் தோன்ற காரணமானார், திரு.வி.க.

    50-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதி உள்ளார். பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, இந்தியாவும், விடுதலையும், மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. திரு.வி.க. தன் வாழ்க்கை வரலாற்றை விளக்கி திரு.வி.க. வாழ்க்கை குறிப்பு என்ற நூலையும் எழுதி உள்ளார். திரு.வி. க.வுக்கு சர்க்கரை நோய் இருந்தது. அதனால் அவர் கண் பார்வை மங்கியது.

    எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை முழுமூச்சாகக் கொண்ட திரு.வி.க. 1953-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி, தனது 71-வது வயதில் காலமானார்.

    திரு.வி.கவின் தன்னலமற்ற தேசப்பணிகளைப் பாராட்டி மத்திய அரசு அவரது நினைவாகத் தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது.

    • பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும் போது அதில் உள்ள பித்த உப்புகள் அதன் அடியில் படியும்.
    • பித்தப்பையில் கல் இருக்கும் போது பித்த நீர் சரியாக செல்லாமல் உணவு விரைவில் செரிமானம் ஆகாது.

    சிறுநீரக கல் போன்று பித்தப்பை கல் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். உணவு சாப்பிட்ட பிறகு வயிறு வலி, மஞ்சள் காமாலை பிரச்சினை என பல உபாதைகளை உண்டாக்கும் பித்தப்பை கல் பிரச்சினையை எளிதில் குணப்படுத்தி விடலாம். பித்தப்பை கல் எப்படி வருகிறது, அதனால் என்ன பாதிப்புகள், அதனை குணப்படுத்துவது எப்படி? என்பது பற்றி இன்று பார்ப்போம்.

    60 வயது பெண்மணி ஒருவர் ஆஸ்பத்திரிக்கு கடுமையான வயிற்று வலி என்று வருகிறார். வாயுத்தொல்லை மாதிரி இருக்கிறது, சாப்பிட்டதும் வாந்தி வருகிறது. வயிறு கடுமையாக வலிக்கிறது என்கிறார். இந்த வலி 2 நாளாக இருக்கிறது. வாயுத்தொல்லை 15 நாட்களுக்கு மேலாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் வயிறு உப்புசம் போல் இருக்கிறது என அடுக்குகிறார்.

    பித்தப்பை கல் பாதிப்பு இருந்தால் இதுபோன்ற அறிகுறிகள் தென்படும். பித்தப்பை கல் என்பது சாப்பிடும் உணவில் இருந்து செல்வது கிடையாது. இது பித்தப்பையில் தானாக உருவாகக் கூடியது. நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்யும் பணியில் பித்தப்பையும் இடம் பெற்றுள்ளது.

    திருமண வீட்டுக்கு செல்கிறோம். வடை, பாயாசம், பொறியல், துவையல், வறுவல், சாம்பார், ரசம், மோர் குழம்பு, இனிப்பு என 10-க்கும் மேற்பட்ட உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடுகிறோம். இவை அனைத்தும் ஜீரணம் ஆக வேண்டும் அல்லவா? அந்த ஜீரணத்தை உண்டாக்க கூடியது பித்த நீர் ஆகும். பித்த நீரை கல்லீரல் சுரக்கிறது. பித்த நீர் சேமித்து வைக்கப்படும் இடமே பித்தப்பை.

    நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப்பெரியது கல்லீரல். இதில் தினமும் ஆயிரத்தில் இருந்து 1500 மில்லி லிட்டர் வரை பித்தநீர் சுரக்கிறது. பித்த நீர் என்பது ஒரு திரவக்கலவை. 97 சதவீதம் நீரும், ஒரு சதவீதம் பித்த நிறமிகளும், ஒன்று முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன.

    கல்லீரலில் சுரக்கும் பித்த நீர், வலது மற்றும் இடது பித்த நீர் குழாய்கள் வழியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேரும். அதற்கு முன்பாக ஒரு கிளை குழாய் வழியாக கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் பித்தப்பையினுள் அது செல்லும்.

    அப்போது பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு அதன் அடர்த்தியை அதிகரித்து உணவு செரிமானத்துக்கு தயாராக வைத்திருக்கும்.

    நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டு புறப்பட்டதும் பித்தநீர் தேவை என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப்பைக்கு வந்து சேரும். உடனே பித்தப்பையானது தன்னைத் தானே சுருக்கி, பித்த நீரை பித்தக் குழாய்க்குள் அனுப்பி வைக்கும். அது நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள கொழுப்பை சரியாக செரிக்க வைக்கும்.

    மனித உடலில் 6 இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம், சிறுநீர்ப்பாதை, பித்தப்பை, உமிழ் நீர்ச்சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த 6 இடங்கள். இவற்றில் சிறுநீரக கற்களுக்கு அடுத்தப்படியாக பித்தப்பை கல்தான் அதிகம் பேருக்கு தொல்லை தரக்கூடியது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 100-ல் 15 பேருக்கு இந்த தொந்தரவு இருக்கிறது.

    பித்த நீரானது பச்சை கலரில் இருக்கும். சாதாரணமாக திரவநிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும் தான் கற்கள் உருவாகின்றன. பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும் போது அதில் உள்ள பித்த உப்புகள் அதன் அடியில் படியும்.

    இது சிறிது, சிறிதாக வளர்ந்து கடினமான ஒரு பொருளாக மாறி கல்லாக மாறி விடும். இந்த கற்கள் பார்ப்பதற்கு சாதாரண கற்கள் போலத்தான் இருக்கும். ஆனால் மிகவும் மென்மையானதாக இருக்கும்.

    சிலருக்கு ஒரு கல் மட்டும் உருவாகலாம். சிலருக்கு 10 கற்களுக்கு மேல் ஏற்படலாம். அதனால் கல்லின் அளவும், எண்ணிக்கையும் ஆளாளுக்கு வேறுபடும்.

    பித்தப்பையில் கல் இருக்கும் போது பித்த நீர் சரியாக செல்லாமல் உணவு விரைவில் செரிமானம் ஆகாது. இதனால் வயிற்று வலி ஏற்படும். அந்த சமயங்களில் எண்ணை பலகாரங்கள் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. வயிற்று வலி மேலும் அதிகமாகும்.

    பித்தப்பை கல் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? நோயாளியை படுக்க வைத்து வயிற்றை தொட்டு பார்ப்போம். சில நேரங்களில் பித்தப்பை வீங்கி இருக்கும். கண்ணை திறந்து பார்த்தால் காமாலை வந்திருக்கும். பித்தப்பை கல் இருப்பவ ர்களுக்கு காமாலை நோய் வர வாய்ப்புண்டு. பித்தப்பையில் இருந்து பித்தநீர் வெளியேற சிரமப்படும் நேரத்தில் பித்த நீர் ரத்தத்துக்குள் போய் அது மஞ்சள்காமாலையாக மாறி விடுகிறது.

    அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் பித்தப்பையில் கல் இருப்பதை கண்டுபிடித்து விடலாம். ஸ்கேன் செய்து பார்க்கும் போது பித்தப்பை கல் இருப்பது தெரிவது மட்டுமல்லாமல் பித்தப்பையில் புற்றுநோய் இருந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.

    கல்லீரல் வீங்கி இருந்தாலும், குடல் வால் வீங்கி இருந்தாலும் இதில் தெரிந்து விடும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பாதிப்பு இருந்தாலும், கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம்.

    சிறிய அளவில் உள்ள பித்தப்பை கற்களை ஊசி மற்றும் மருந்துகள் மூலம் கரைக்கலாம். சற்று பெரிய அளவில் உள்ள கற்களை உடைத்து வெளியேற்றலாம். இருந்தாலும் பித்தப்பை நீக்கம் எனப்படும் அறுவை சிகிச்சை பித்தப்பை கற்களை தடுப்பதற்கு சிறந்த வழி.

    பித்தப்பை வீங்கி கல் இருந்தால் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அது திறந்தநிலை அறுவை சிகிச்சையாகவோ அல்லது லேப்ராஸ்கோபி சிகிச்சையாகவோ இருக்கலாம். கல்லீரலுக்கு கீழே தொங்கிக் கொண்டிருக்கும் பித்தப்பையை கல்லோடு சேர்த்து அகற்றி விட்டோம் என்றால் பின்னர் பிரச்சினைகள் எதுவும் வராது.

    பித்தப்பையை அகற்றுவதால் எந்த பாதிப்பும் கிடையாது. பித்த நீர் அந்த பையில் சேகரித்து வைக்கப்படுவதற்கு பதிலாக கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் நேராக குடலுக்குள் வந்து விடும். அதன் மூலம் வழக்கம்போல் ஜீரணம் ஆகும். அவ்வளவு தான். அதனால் பித்தப்பையை அகற்றுவதில் தவறு இல்லை. அதேசமயம் சிறந்த மருத்துவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    அறிகுறிகள்

    பித்தப்பை கற்களால் பாதிக்கப்படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. இந்த வலியானது கடுமையாகி பல மணி நேரம் நீடித்து குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுவது. 3-வது வலதுபுற விலா எலும்புகளை சுற்றி வந்து முதுகுப்புறம் வரைக்கும் சென்று தோள்பட்டை வரை வலி பரவும். கொழுப்பு அதிகம் உள்ள எண்ணை பதார்த்தங்களை சாப்பிடும் போது இந்த வலி ஏற்படும்.

    உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடை என்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு தேவையான கலோரியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் உழைப்பு மூலம் அதிகப்படியான கலோரியை எரிக்க வேண்டும்.

    பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் எடையை மிக வேகமாக குறைப்பவர்கள், மரபு ரீதியாக பித்தப்பை கல் பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பித்தப்பை கல் வராமல் தடுக்க முடியாது. ஆனால் வாய்ப்பை குறைக்க முடியும். தினமும் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவை தவிர்ப்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

    எடையை குறைக்க அவசரம் வேண்டாம். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும். மிக வேகமாக குறைக்க முயற்சிக்கும் போது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

    அஜீரண பிரச்சினை

    இதேபோல அஜீரணம் ஏற்பட 4 காரணங்களை சொல்லலாம். 1. கல்லீரலில் பாதிப்பு இருப்பது, 2. பித்தப்பையில் கல் ஏற்படுவது. 3. கணையத்தில் நோய் பாதிப்பு இருத்தல், 4. அல்சர் பாதிப்பு.

    அஜீரணக் கோளாறுக்கான காரணத்தை கண்டறிய எண்டாஸ்கோபி சிகிச்சை அளிப்பது சிறந்தது. சின்ன குழாயை வாய் வழியாக உள்ளே செலுத்தி அதன் மூலம் ஒளியை ஊடுருவச் செய்து வயிற்றை முழுமையாக சோதனை செய்து பார்ப்பார்கள். அந்த சோதனையில் இரைப்பையில் புற்றுநோய் இருந்தாலும் தெரிந்து விடும். இரைப்பை புண், அல்சர், அசிசிட்டி போன்ற பிரச்சினைகளையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    • நெற்றி நிறைய திருநீறுபூசி, கழுத்தில் உத்திர கண்டிகை, நவரத்தின மாலையும் மலர் மாலையும் அணிந்து சிவ பழமாக காட்சி அளிப்பார்.
    • நகைச்சுவையோடு உரையாடுவது, சிரிக்கச், சிரிக்கப் பேசுவது வாரியாருக்கு கைவந்த கலை.

    இன்று (25-ந் தேதி) ஆன்மிக பேச்சாளர் கிருபானந்த வாரியார் பிறந்தநாள்.

    திருப்புகழ் ஜோதி என்று பாராட்டப்பெறும் திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மிகச் சொற்பொழிவில் சிகரத்தைத் தொட்டவர்.

    தமிழகம் மட்டுமில்லாமல், தமிழர் வாழும் உலக நாடுகள் அனைத்துக்கும் சென்று ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் ஆன்மிக நெறியைப் பரப்பி மகத்தான சாதனைப்படைத்தவர்.

    அவரது சொற்பொழிவில் நகைச்சுவை நர்த்தனமிடும். பெரியவர்களும், பெண்களும், சிறுவர்களும்கூட அவரது பேச்சைக் கேட்க வருவார்கள்.

    நெற்றி நிறைய திருநீறுபூசி, கழுத்தில் உத்திர கண்டிகை, நவரத்தின மாலையும் மலர் மாலையும் அணிந்து சிவ பழமாக காட்சி அளிப்பார்

    அபாரநினைவாற்றல், இசைஞானம், குரல்வளம், நடிப்புத் திறன், ஆழமான படிப்பு, உயர்ந்த சிந்தனை, உயர்வான ஞானம் இவற்றின் உருவம்தான் வாரியார்.

    வேலூர் காங்கேய நல்லூரில் 1906-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி பிறந்தார். தந்தை பெயர் மல்லையதாச பாகவதர். தாயார் கனகவல்லி அம்மையார்.

    இவரது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கிருபானந்த வாரி.

    கிருபை என்றால் கருணை. ஆனந்தம் என்றால் இன்பம். வாரி என்றால் பெருங்கடல் என்று பொருள்.

    பெயருக்கேற்ற விதத்தில் வாரியார் கருணையே வடிவமாகவும், மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகவும் திகழ்ந்தார்.

    வாரியார் சுவாமிகள் பள்ளிக்கூடம் சென்று படிக்கவில்லை. மாறாக இயற்கையால் அமைந்த அறிவும், பெரியோர்களின் தொடர்பும், உபதேசங்களும், இவரை மேதையாக உருவாக்க உதவின.

    வாரியாரின் தந்தையே இவருக்கு ஞானக்குரு. அவருக்கு தேவையான கல்வி, இலக்கியம், இலக்கணம், இசை ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தார்.

    8 வயதில் கவி பாடும் திறன் பெற்றார். 12-வது வயதில் திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், திருவாசகம், தேவாரம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி நூல்களில் இருந்து 12 ஆயிரம் பாடல்களை மனப்பாடம் செய்தார்.

    16 வயதில் திருமணம் நடந்தது. மனைவி பெயர் அமிர்தலட்சுமி.

    18 வயதில் சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடன் விளங்கினார்.

    'எல்லாம் வல்ல வயலூர் எம்பெருமான் அருளாலே' எனத் தொடங்கி, கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி' என்ற திருப்புகழ் பாடலை இனிமையான இசையுடன் பாடி, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி விடுவார்.

    சிறுவர்களிடம் சிறுசிறு கேள்விகள் கேட்பார். சரியாக பதில் சொல்பவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்குவார்.

    ஒருமுறை சொற்பொழிவின்போது, ஒரு சிறுவனிடம் முருகனின் அப்பா பெயர் என்ன? என்று கேட்டார்.

    அப்போது திருவிளையாடல் படம் வந்த நேரம். அதில் நடிகர் சிவாஜிகணேசன் முருகனுக்கு அப்பாவாக சிவன் வேடத்தில் நடித்திருப்பார்.

    அதைப்பார்த்த சிறுவன் சிவாஜி என்று சொல்லி விட்டான்.

    கூட்டத்தினர் கைக்கொட்டி சிரித்தனர். வாரியார் அவர்களை கையசைத்து அடக்கிவிட்டு அவன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறான்.

    பெரியவர்களின் பெயர்களை சொல்லும்போது 'ஜி 'சேர்த்து மரியாதையாக சொல்வது வழக்கம்.

    காந்திஜி, நேருஜி என்பார்கள். முருகனின் அப்பா பெயர் சிவா. மரியாதையாக 'ஜி' சேர்த்து சிவாஜி என்று சொல்லி இருக்கிறான் என்று சொல்ல கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.

    நகைச்சுவையோடு உரையாடுவது, சிரிக்கச், சிரிக்கப் பேசுவது வாரியாருக்கு கைவந்த கலை.

    ஒரு கூட்டத்தில் இல்லாள் என்ற சொல்லுக்கு வாரியார் சொன்ன விளக்கம் சுவையானது.

    இல்லாள் இல்லத்தை ஆள்பவர். பெண்பாலாகத்தான் குறிப்பிடுகின்றோம். அதையே ஆண்பாலாக கொண்டால் "இல்லார் பாப்பர்" என்று ஆகிவிடும்.

    ஆகவேதான் பிச்சைக்காரன்கூட "அய்யா பிச்சை" என்று சொல்ல மாட்டான். "அம்மா பிச்சை" என்றுதான் சொல்லுவான். அந்த பிச்சைக்காரனுக்கு கூடத்தெரியும், அய்யா பேரில் வீட்டு மனை இருக்காது என்று கூறவும் கூட்டத்தில் கரகோஷம் அடங்க வெகு நேரம் பிடித்தது.

    அடுத்த அஸ்திரத்தை கையிலெடுப்பார்.

    புத்திசாலி கணவருக்கும், முட்டாள் கணவருக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று கேட்டு விட்டு கூட்டத்தினரை உற்று நோக்குவார்.

    வாயை மூடு என்று முட்டாள் தன் மனைவியை திட்டுகிறான்.

    நீ அமைதியாக இருக்கும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா என்பான் புத்திசாலி.

    இதுதான் முட்டாளுக்கும், புத்திசாலிக்கும் உள்ள வித்தியாசம் என்று சொல்லி கூட்டத்தை சிரிப்பலையில் மிதக்க விடுவார்.

    கள்ளைக் குடித்தால்தான் போதை தரும் என்பது இல்லை. கள் என்று சொன்னாலே போதும் பலர் மயங்கி விடுகிறார்கள். ஒருவரை நீ என்று சொல்வதற்கு பதில் நீங்கள் என்று சொல்லிப் பாருங்கள். அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்த கள் செய்யும் வேலைதான் என்று கூறி விட்டு அட்டகாசமாய் சிரிக்க அவரோடு அரங்கமும் சேர்ந்து கொள்ளும்.

    பெண்கள் குறித்து உயர்வான கருத்து கொண்டிருந்த வாரியார் குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாகப் (இன்சியலாக) போட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

    150 புத்தகங்களை எழுதி உள்ளார். அதில் கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    சமய சொற்பொழிவில் கிடைத்த தொகையை ஆலயங்களின் திருப்பணிக்காக பயன்படுத்தி மகிழ்ச்சி அடைவார்.

    ஏழை, எளிய மாணவர்களின் படிப்பு செலவுக்கு மணியார்டர் அனுப்பிவிடுவார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை அளித்தவர், வாரியாரே! சின்னப்ப தேவரின் வேண்டுகோளுக்கிணங்க துணைவன், திருவருள், தெய்வம் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்தார்.

    லண்டன் மாநகருக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றச் சென்றபோது வாரியாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின்பு விமானத்தில் தமிழகம் திரும்பிக்கொண்டு இருந்தார்.

    திடீரென்று அருகில் இருந்த பக்தரிடம் திருப்பதியை தாண்டி விட்டோமா என்று கேட்டார். ஆமாம் சாமி என்றதும் அடுத்தது திருத்தணிதானே என்று கூறிய சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.

    1993-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதிதான் அவரது, இந்த மரணம் நிகழ்ந்தது.

    விமானத்தையே மயிலாக அனுப்பி வைத்து முருகன் அவரை அழைத்து சென்றதாக வாரியாரின் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

    பின்னர் வாரியார் உடல் சென்னையில் இருந்து காங்கேயநல்லூருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    • பொற்றாமரைக் குளத்தில் பூத்திருந்த தங்கத் தாமரை மலர்களால் சிவலிங்கத்தை அர்ச்சித்தது.
    • ஆனைமுகக் கடவுளான விநாயகர் யானையாகவே உருமாறி வந்த கதை கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ளது.

    நம் ஆன்மிக நந்தவனத்தில் பற்பல யானைகள் கம்பீரமாக உலவுகின்றன.

    ஐராவதம் என்பது இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் பெயர். இந்த வெள்ளை யானை பாற்கடலை அமிர்தம் வேண்டிக் கடைந்தபோது தோன்றிய பலவற்றில் ஒன்று.

    ஒருமுறை துர்வாச மகரிஷி இந்திரனைக் காண தேவலோகம் வந்தார். இந்திரனுக்கு சிவப்பிரசாதமான தாமரை மலரைக் கொடுத்தார். அந்த மலரை ஐராவதம் யானை அலட்சியத்துடன் காலில் போட்டு மிதித்தது.

    சீற்றத்திற்குப் புகழ்பெற்ற துர்வாசர் விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் சென்று பிற யானைகளுடன் வாழுமாறு ஐராவத யானையைச் சபித்தார். ஐராவதம் தன் தவறை உணர்ந்து வருந்தியது.

    மண்ணுலகில் பிறந்த அது, நூறாண்டுகள் கடந்த பின் இந்திரனின் தோஷம் நீக்கிய மதுரைக் கடம்பவன ஆலயத்திற்குச் சென்றது.

    அங்கிருந்த பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் நீர் எடுத்துவந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தது. பொற்றாமரைக் குளத்தில் பூத்திருந்த தங்கத் தாமரை மலர்களால் சிவலிங்கத்தை அர்ச்சித்தது.

    அபிஷேகத்தாலும் அர்ச்சனையாலும் மனம் குளிர்ந்த சிவபெருமான் யானைக்கு சாபவிமோசனம் அளித்து அதை மீண்டும் விண்ணுலகு அனுப்பினார் என்கிறது திருவிளையாடல் புராணக் கதை.

    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் தனித்தனிப் படலமாகச் சொல்லப்பட்டுள்ளன. திருவிளையாடல் புராணம் விவரிக்கும் இரண்டாம் படலம், வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் என்பது.

    *ஆனைமுகக் கடவுளான விநாயகர் யானையாகவே உருமாறி வந்த கதை கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக இருந்த காளத்தியப்ப சிவாச்சாரியாரின் புதல்வர்தான் கந்த புராண நூலாசிரியரான கச்சியப்ப சிவாச்சாரியார். கந்த புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை என்னுமளவு சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்க பக்தி நூல் அது.

    வள்ளிக் குறத்திமேல் காதல் கொள்கிறான் முருகன். தன் காதலுக்கு உதவுமாறு அண்ணன் விநாயகனை வேண்டுகிறான். யானை முகம் கொண்ட விநாயகர் யானையாகவே உரு மாறுகிறார்.

    தினைப்புனம் காக்கும் வள்ளியை அந்த யானை துரத்த, அச்சமடைந்த வள்ளி முருகனை ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொள்ள, வள்ளியைத் துரத்திய யானை மறைகிறது, வள்ளிக்கு முருகன் மேல் காதல் தோன்றுகிறது என வளர்கிறது கந்த புராணக் கதை.

    *கண்ணன் கதையைச் சொல்லும் பாகவத புராணத்தில் குவலயாபீடம் என்ற ஒரு யானை வருகிறது. அதன் முற்பிறவியில் அது மகாபலிச் சக்கரவர்த்தியின் புதல்வனான மந்தபாலனாக இருந்தது.

    மந்தபாலன் லட்சம் யானைகளின் பலம் உள்ளவன். ஒருமுறை திருவரங்க ஷேத்திரத்தில் தரிசனம் செய்யப் போனபோது, மக்கள் வெள்ளத்திடையே அவன் கைவீசி நடந்தான். அந்தக் கை பட்டே பலர் நசுங்கினர்.

    மக்களிடையே வந்த வயதான தரித முனிவர் அவன் கையசைவால் கீழே விழுந்து விட்டார். `யானைபோல் கையசைத்த நீ யானையாகப் பிறக்கக் கடவது!` என அவர் சீற்றத்துடன் சபித்தார்.

    மனம் வருந்திய மந்தபாலன் சாபவிமோசனம் வேண்டினான். `நீ ரங்கநாதரை தரிசிக்க வந்தாயே? இந்த ரங்கநாதர் கண்ணனாக அவதரிப்பார். அப்போது அவரால் வதம் செய்யப்பட்டு நீ யானைப் பிறவியிலிருந்து முக்தி அடைவாய்!` என அவர் அருளினார்.

    அதன்படியே மந்தபாலன் குவலயாபீடம் என்ற யானையாகப் பிறந்தான். கண்ணனின் விரோதியான கம்சன் அரண்மனையை அலங்கரித்தது அந்த யானை.

    கம்சனை வதம் செய்ய துவாரகையிலிருந்து மதுராபுரிக்கு பலராமனுடன் வந்தார் கிருஷ்ணர். தன்னை வழிமறித்த யானையை வதம் செய்து அதற்கு முக்தி அளித்தார். அதன் இரு தந்தங்களையும் கிருஷ்ணரும் பலராமரும் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டனர் என்கிறது பாகவத புராணம்.

    *மகாபாரதத்தில் கவுரவர் அணியில் அஸ்வத்தாமன் என்ற பெயருடைய ஓர் யானை இருந்தது. பார்த்தசாரதியான கிருஷ்ணர் யுத்த களத்தில் பீமன் காதோடு ஒரு செய்தி சொன்னார்.

    அவர் சொன்னபடி பீமன் வீரர்களிடையே புகுந்து சென்று அஸ்வத்தாமன் என்ற யானையைக் கொன்றான். பின்னர் துரோணர் இருக்கும் இடத்திற்கு வந்து அஸ்வத்தாமன் இறப்பு நிகழ்ந்துவிட்டது எனக் கூவினான்.

    துரோணரின் மகன் பெயரும் அஸ்வத்தாமன். அவன்தான் பீமனால் கொல்லப்பட்டதாக எண்ணிய துரோணர், உண்மை அறிய வேண்டி, பொய்யே பேசாத யுதிஷ்டிரரிடம் `என் மகன் மாண்டானா?` எனக் கேட்டார்.

    யுதிஷ்டிரர் தயங்கியவாறே `அஸ்வத்தாமன் இறந்தது உண்மைதான். ஆனால் இறந்தது அஸ்வத்தாமன் என்ற யானைதான்!` என்றார்.

    `இறந்தது அஸ்வத்தாமன் என்ற யானைதான்` என தர்மபுத்திரர் சொல்லும்போது பார்த்தசாரதி தன் பாஞ்சஜன்ய சங்கை எடுத்து உரக்க ஊதினார். அந்த ஒலியில் அஸ்வத்தாமன் யானை என்று சொல்லப்பட்ட பகுதி துரோணர் காதில் விழவில்லை. மகன் கொல்லப்பட்டதாகக் கருதிய துரோணர், உடனே யுத்தம் செய்வதை நிறுத்தி, தரையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.

    துருபத ராஜாவின் மகனும் துரோணரைக் கொல்லவே பிறந்தவனுமான திருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து கத்தியால் துரோணரின் தலையைச் சீவி அவரைக் கொன்றான்.

    உண்மையே பேசும் யுதிஷ்டிரர், எப்படியானாலும் சூழ்ச்சியால் அசத்தியத்திற்குத் துணைபோய் விட்டாரே? அதுவரை தரையைத் தொடாமல் உயரத்தில் உருண்டு கொண்டிருந்த யுதிஷ்டிரரின் தேர்ச் சக்கரங்கள், அந்தக் கணமே தரையில் இறங்கி உருள ஆரம்பித்தன என்கிறது மகாபாரதம்.

    *`மரத்தை மறைத்தது மாமத யானை.

    மரத்தில் மறைந்தது மாமத யானை

    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

    பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே

    என்பது திருமூலரின் திருமந்திரம்.'

    மரத்தால் செய்யப்பட்ட மதயானையின் உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணரவொட்டாமல் யானை என்றே உணரப்படுகிறது. ஆனால் சிற்பியின் வேலைப்பாடுகளை அழித்துவிட்டால் யானை மறைந்து அது மரமாகவே தென்படும்.

    அதுபோல் பரம்பொருளால் இயங்குகிறது இவ்வுலகம். குருவருளால் ஞானம் பெறுகையில் உண்மை ஞானம் முன்னர் இருந்த பொது ஞானத்தை அழித்துவிடுவதால் உலகமே பரம்பொருளாய்த் தோன்றும் என்பது இப்பாடலின் தத்துவப் பொருள். மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையை உதாரணம் காட்டி, மாபெரும் அத்வைத தத்துவத்தை விளக்குகிறார் மெய்ஞ்ஞானி திருமூலர்.

    *யானையை வைக்கோலோடு ஒப்பிட்டு காளமேகப் புலவர் ஒரு சிலேடை வெண்பா பாடியுள்ளார்:

    `வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்

    போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற

    செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

    வைக்கோலும் மால்யானையாம்.'

    வைக்கோல் வாரிக் களத்தில் அடிக்கப்படும். யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். வைக்கோல் கோட்டைபோல் குவித்து வைக்கப்படும். யானை கோட்டையில் அதன் கட்டுத்தறியில் புகும். வைக்கோல் போர் பார்க்கப் பொலிவாக இருக்கும். யானையும் போர்புரியும்போது பொலிவாகத் தோன்றும் என வைக்கோலுக்கும் யானைக்கும் உள்ள ஒற்றுமைகளை சமத்காரமாகப் புலப்படுத்துகிறார் சிலேடைச் செல்வர் காளமேகம்.

    *அரசனுக்கு வாரிசு இல்லாதபோது, புதிய மன்னனைத் தேர்வு செய்ய, பட்டத்து யானை பயன்பட்டிருக்கிறது. அதன் தும்பிக்கையில் ஒரு மாலையைக் கொடுத்து நம்பிக்கையோடு காத்திருப்பார்கள். அது நகர்வலம் சென்று யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரே அடுத்த அரசராவார்.

    *வெற்றி விழா ஊர்வலங்களிலும் மணவிழா ஊர்வலங்களிலும் அலங்கரிக்கப் பட்ட யானையை நடத்திச் செல்லும் வழக்கம் உண்டு.

    பல கோவில்களில் யானை உண்டு. பக்தர்கள் கோவில் யானையிடம் ஆசி பெறுவதும் வழக்கம்.

    மந்திராலயம் போன்ற இடங்களில் நாள்தோறும் கஜசேவை நடைபெறும். அதாவது யானைமேல் இறைவனின் திருவுருவை வைத்து ஆலயத்தின் உள்ளே அந்த யானை ஊர்வலமாக அழைத்து வரப்படும்.

    குருவாயூர்க் கோவில் அருகே குருவாயூரப்பன்மேல் பக்தி செலுத்தி வாழ்ந்த கேசவன் என்ற யானைக்குச் சிலை வைக்கப் பட்டிருக்கிறது.

    திருச்சூர் வடக்குநாதன் கோவிலில் `திருச்சூர் பூரம்' என அழைக்கப்படும் திருவிழாஆண்டுதோறும் நடைபெறுகிறது. இவ்விழாவில் ஏராளமான யானைகள் கலந்துகொண்டு நடைபெறும் குடை மாற்றும் உற்சவம் மிகப் பிரசித்தம்.

    லட்சக்கணக்கான மக்கள் பார்வையாளர்களாகப் பங்குபெறும் இவ்விழா, அதில் கலந்துகொள்ளும் யானைகளின் எண்ணிக்கை காரணமாக உலகப் புகழ் பெற்றுவிட்டது. விழா நடக்கும்போது அதைக் கண்டுகளிக்க ஆண்டுதோறும் ஏராளமான வெளிதேசத்தவர்களும் திருச்சூர் வருகிறார்கள்.

    *கடந்த காலங்களில் யானைகள் போர்க்களங்களில் பயன்படுத்தப் பட்டன. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என நால்வகைப் படைகளில் யானைப்படை முக்கியமான ஒன்றாக விளங்கியது.

    சிங்கத்தையே எதிர்க்கக் கூடிய மாபெரும் விலங்கான யானை சைவ உணவை மட்டுமே உண்ணும் என்பது குறிப்பிடத் தக்கது. அசைவ உணவுதான் அதிக உடல் வலிமை தரும் என்ற கருத்தை எதிர்த்து நடமாடும் மாபெரும் சான்றாக யானை திகழ்கிறது.

    யானையைப் பற்றி ஓர் அழகிய குழந்தைப் பாடல் வழக்கில் இருக்கிறது.

    `ஆனை ஆனை அழகர் ஆனை

    அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை

    கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை

    காவேரித் தண்ணீரைக் கலக்கும் ஆனை

    குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம்

    பட்டண மெல்லாம் பறந்து ஓடிப் போச்சாம்!'

    வெற்றி, மகிழ்ச்சி, செல்வம், ஞானம் இவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது யானை. நம் ஆன்மிகத்தில் யானைக்குத் தனித்த பெரிய இடம் உண்டு. பார்க்கப் பார்க்க அலுக்காத யானை, அதைப் பற்றிப் படிக்கப் படிக்கவும் அலுக்காதது!

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • முதுமைக்காலத்தில் எளிமையான செரிக்கக்கூடிய உணவு வகைகளை நாடுவது நல்லது.
    • அரிசி வகை உணவுகளை குறைப்பதும் நல்லது.

    உணவும், உணவு முறைகளும் ஆரோக்கியத்தின் அச்சாணி என்பது பலருக்கு தெரிவதே இல்லை. கையில் காசு இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்ற தவறானப் போக்கு இன்றைய வாழ்வியலில் அதிகம் காணப்படுகிறது. ஆரோக்கியத்தை நிலைநாட்ட இளவயதில் மட்டுமல்ல, முதுமையிலும் அக்கறையோடு சாப்பிட வேண்டிய கட்டாயமும், அவசியமும் உள்ளது.

    முதுமையில் ஆரோக்கியமாக இருந்தால் தான் சமூக நலனில் பங்கெடுக்க முடியும். அடுத்த தலைமுறையின் வளர்ச்சியிலும் பங்காற்ற முடியும். ஆகவே முதுமைக்கான உணவையும், உணவு முறைகளையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.

    சர்க்கரைச் சத்து புரதச் சத்து, கொழுப்புச் சத்து இவற்றை சரிவிகித உணவாக எடுத்துக்கொள்ள நவீன அறிவியல் வலுயுறுத்துகின்றது. இந்த சரிவிகித ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகள், முதுமையில் உடலை தாங்கும் தூண்கள். முதுமையில் முன்கூட்டிய இறப்பு மற்றும் உடல்நலக்கேடுகளுக்கு மோசமான உணவு முறையானது முன்னணி பங்களிப்பாக இருப்பதை ஆய்வுத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே சத்தான உணவுமுறையே முதுமையில் இளமைக்கான ரகசியம்.

    அதே போல் சித்த மருத்துவம் வாதம், பித்தம், கபம் அடிப்படையிலான உணவு முறையை வலியுறுத்துகிறது. இதன் சிறப்பு என்னவெனில் நோய்க்கு தகுந்தாற் போல், நோயாளிகளுக்கு தகுந்தாற் போல், குறிகுணங்களுக்கு தகுந்தாற் போல் உணவு முறையைக் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் தேக அமைப்பிற்கு தகுந்தாற் போல் உணவு முறையைக் கூறுவதும் கூடுதல் சிறப்பு.

    அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக வைத்தல் என்பதே நலத்திற்கான எளிய வழிமுறையாக நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர். முதுமையிலும் அதனைப் பின்பற்றுவது நல்லது. ஆனால், இன்றைய நவீன வாழ்வியலில் செரிமானம் செய்வதற்கு தேவையான நீருக்கும் இடம் கொடுக்காமல் வயிறு நிறைய உணவு உண்பது அசீரணத்திற்கு மட்டுமல்ல, நோய்கள் பலவற்றுக்கும் இடம் கொடுக்கும்.

    வயிற்றில் அசீரணம் என்பது வாயுவால் தான். அத்தகைய வாயுவே பல்வேறு நோய்களை உண்டாக்க வல்லது என்பதை "வாதமலாது மேனி கெடாது" என்கிற சித்த மருத்துவக் கூற்றால் அறியலாம். வாயுவோடு சேரும் பித்தமும், கபமும் பல்வேறு நோய்நிலைகளுக்கு காரணமாகின்றன. ஆகவே வாதம், பித்தம், கபம் இவை மூன்றுக்கும் ஏற்றாற்போல், உணவு முறையை பின்பற்றுவது நல்லது.

    எப்படி ஒவ்வொரு வியாதிக்கும் தனித்தனியாக பின்பற்ற வேண்டிய உணவு முறை உள்ளதோ அதைப்போலவே ஒவ்வொரு உடலின் அமைப்புக்கும் பின்பற்ற உணவு முறைகளை சித்த மருத்துவம் தனித்தனியே பட்டியலிடுகின்றது.


    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

     சித்த மருத்துவக் கூற்றின் படி, 100 ஆண்டுகள் ஆயுட்காலம் உள்ள ஒருவருக்கு முதல் பகுதி வாதத்தின் காலமாகவும், இரண்டாம் பகுதி பித்தம் ஆதிக்கம் செய்யும் காலமாகவும், இறுதி பகுதி கபத்தின் ஆதிக்க காலமாகவும் உள்ளது. அதாவது முதல் 33 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் வாதத்ததின் ஆட்சிக் காலமாகும்.

    இவ்வாறு இருக்க, முதுமைக் காலம் அதாவது கடைசி 33 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கபத்தின் ஆட்சி காலமாகும். இக்காலத்தில் கபத்துடன் சேரும் வாதம் பல்வேறு நோய்நிலைகளை உண்டாக்கி உடலையும், மனதையும் சிதைக்கும். இறப்புக்கும் துணை நிற்கும். எனவே முதுமையில் அதற்கு ஏற்றார் போல் உணவுகளை நாடுவது சிறப்பு.

    நாம் பிறந்தது முதல் உண்ணும் பொருட்கள் அனைத்தையும் செரித்து இயந்திரம் போல் செயல்பட்டு வந்த சீரண மண்டலம் முதுமையில் பழுதாகி உபாதைகளை உண்டாக்கும். குடலும் சுருக்கமடைந்து விடும், நாவிலும் சுவை மொட்டுக்கள் குறைந்து விடும். ஆகவே முதுமைக்காலத்தில் எளிமையான செரிக்கக்கூடிய உணவு வகைகளை நாடுவது நல்லது.

    மேலும் முதுமையில் சீரண மண்டல செயல்பாடு குறையும் என்பது பற்களை இழப்பதில் இருந்தே துவங்கிவிடுகிறது. சேதாரம் அடைந்த பற்களால் உணவினை நன்கு அரைத்து விழுங்கும் தன்மை குறைந்துவிடுகிறது. வாயில் பொருந்தாத பற்களால் உணவை நன்றாக மெல்ல முடியாமல் அப்படியே விழுங்குவதால் உணவு விழுங்குவதில் சிரமங்கள் உண்டாகும். மேலும் இதனால் அசீரணக் கோளாறுகள் ஏற்படக்கூடும். எனவே எளிமையான உணவுகளை, பொறுமையாக மென்று விழுங்குவது கூட நோய்களுக்கு இடமளிக்காமல் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும்.

    ஒரு வேளை உண்பவன் யோகி, இரண்டு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி என்ற வரிகள் பாரம்பரியமாக நமக்கு பழகிப்போனவை. மூன்று வேளை உண்பவர்கள் நோய்களுக்கு இடம் கொடுக்கும் ரோகிகள் என்று இருக்க, மூன்று வேளை உணவுக்கு இடையிடையே நொறுக்குத்தீனிகளை நொறுக்கும் இயந்திரமாக உடல் இருப்பதால், அது எளிதில் சோர்ந்துவிடுகிறது. முதுமை அத்தகைய சோர்வுக்கு இடமாகிறது.

    முதுமைப் பருவத்தில் நுண் ஊட்டச்சத்துக்கள் மிக மிக அவசியம் என்பதால் சத்தான உணவினை நாடுவது நல்லது. இந்த சத்துக்கள் உடல் திசுக்களுக்கு வலுவூட்டும். இன்று நவீன அறிவியல் பயன்படுத்த அறிவுறுத்தும் மைக்ரோ, மேக்ரோ நுண் ஊட்டச்சத்துக்கள் பற்றிய பட்டியல் வருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, நமது சித்த மருத்துவம் இந்த ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சிறுதானிய வகைகளையும், பாரம்பரிய அரிசி வகைகளையும் பயன்படுத்த வலியுறுத்தி இருப்பது ஆச்சர்யம் அளிக்கும். இதனால் முதுமையில் உடல் புத்துணர்ச்சி அடைந்து உடல் சோர்வு நீங்கும்.

    பாரம்பரிய சித்த மருத்துவம் பாரம்பரிய உணவுக்கும் புகழ் பெற்றது. சம்பா அரிசி வகைகளைப் பற்றியும், அதனைக் கொண்டு செய்யப்படும் அவல், பிட்டுக்கும் கூட மருத்துவ நன்மைகளை விளக்குகிறது சித்த மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணி. உணவுக்கே இலக்கணம் வகுக்கிறது நமது பாரம்பரிய மருத்துவம் என்பது உலகறியா உண்மை.

    முதுமையில் முடிந்த வரை செரிக்க கூடுதலாக நேரம் எடுக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. கருப்பு கவுனி கஞ்சி, கம்பங்கூழ், கேழ்வரகு சோளம் சேர்ந்த கஞ்சி, சிறுதானிய உணவு வகைகள் ஊட்டச்சத்துக்களின் வித்தாக உள்ளது. எனவே அவற்றை நாடுவது வயது மூப்பில் செரிமான உறுப்புக்கு மட்டுமல்லாது நோய்நிலைகளுக்கும் நல்லது. அரிசி வகை உணவுகளை குறைப்பதும் நல்லது.

    முதுமையில் பொதுவாகவே அதிக உப்பு, காரம், மசாலாப் பொருட்கள் சேர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் ஆரோக்கிய அக்கறையோடு அவற்றை தவிர்ப்பது நல்லது. வயது மூப்பில் முக்கியமாக சிறுநீரக மற்றும் இதய நோயாளிகள் இதனை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

    முதுமையில், பழங்களை அதிக அளவில் உணவில் சேர்ப்பது நல்லது. பழங்கள் சீரணத்தை துரிதமாக்கி, மலச்சிக்கலைப் போக்கும். முதுமை பருவத்தில் பெரிஸ்டால்சிஸ் எனும் குடல் இயக்கங்கள் குறைவதாலும், நாட்பட்ட நோய்நிலைகளாலும் மலச்சிக்கல் தோன்றும் என்பதால் பழங்களை நாடுவது பலனளிக்கும். பழங்களின் இயற்கை தன்மை நம் உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து கபத்தைக் கூட்டும். ஆகையால், கபம் சார்ந்த குறிகுணங்களான இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு, உடல் வலி போன்ற குறிகுணம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. அதே போல் இரவு நேரம், கபம் இயற்கையாக கூடும் என்பதால் பகலில் பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.

    காய்கறிகள் எடுத்துக்கொள்வதும் கூட செரிமான மண்டலத்துக்கு உதவும். தினசரி உணவில் 300 கிராம் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகின்றது. எனவே அரிசி உணவுகளை குறைத்து காய்கறிகளை அதிகம் சேர்ப்பது நல்லது.

    நார்ச்சத்துக்கள் பல்வேறு நலன்களை அள்ளித்தரும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுவதால் வயது மூப்பில் இவற்றை நாடுவதும் நல்லது. காய்கறிகளில் நார்சத்துள்ளவற்றைத் தவிர கிழங்கு வகைகள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியன. "மண்பரவு கிழங்குகளில் கருணை மட்டும் புசிக்க" உடலுக்கு நன்மை தரும் என்கிறது சித்த மருத்துவ பாடல் வரிகள். முதுமையில், இரவு உறங்க செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னரே எளிய உணவினை எடுத்துக்கொள்வது நல்லது. உணவு உண்ட பின் குறுகிய நடைபயிற்சி செய்வதும் நல்லது. இதனை "நண்பு பெற உண்ட பின் குறுநடை கொள்வோம்" என்ற தேரையர் சித்தர் வரிகளும் நடைப்பயிற்சியை பழக உரக்க கூறுகின்றது.

    முதுமையில் வதைக்கும் நோய்களான நீரிழிவு, இருதய நோய்கள், மூட்டு வலி, சிறுநீரக நோய்கள், செரிமான மண்டலக் கோளாறுகள் போன்ற இவற்றுக்கெல்லாம் தனித்தனியான உணவு முறைகளை கையாள்வது அவசியம். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து வதைக்கும் போது எப்படி தனித்தனியான உணவு முறைகளை கையாள்வது என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படும். முதுமையில் தோன்றும் நோய்களும் எண்ணங்களும், ஆரோக்கியத்திற்கான பாதையில் முட்களை எறிந்து கடினமாக்குகின்றன. குறைவான எண்ணெய் தோய்ந்த உணவுகளும், குறைவான அரிசி வகை உணவுகளும், அதிக புரதச் சத்து நிறைந்த சுண்டல் வகைகளும், சிறுதானிய உணவும், பாரம்பரிய அரிசி உணவுகளும், நார்ச்சத்துள்ள பழங்களும், கீரைகளும், காய்கறிகளும், அவ்வப்போது நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய சூப் வகைகளும், சிறிது மாமிச உணவும், குறைவான உப்பும், காரமும் இவை அனைத்தும் சேர்ந்த முதுமைக்கான உணவுத்தட்டில் சுவை மட்டுமல்ல, ஆரோக்கியமும் ததும்பி நிற்கும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • இயல்பிலேயே இறைத்தன்மை நிறைந்த இறைவனுக்கு மிக நெருக்கமான விருட்சம்.
    • பல சிறப்பு பெற்ற தலங்களில் கருங்காலி தல விருட்சமாக இருப்பதை காண முடிகிறது.

    இன்று உலகத்தை இயக்கிவரும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரமாண்டமாக விற்பனையாகும் ஆன்மீக பூஜைப் பொருட்கள் வரிசையில் முன்னணியில் இருப்பது கருங்காலி.திரைத்துறை பிரபலங்கள் முதல் உலகில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் கருங்காலியைப் பற்றிய சில விசேஷமான தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட விருட்சம் இருந்தாலும் அனைத்து ராசிகாரர்களுக்கும், அனைத்து நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த விருட்சங்களில் ஒன்று தான் கருங்காலி. மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தின் விருட்சம் கருங்காலி.செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தது. விருட்சங்களிலேயே மிகவும் அற்புதமானது. மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான சங்கடங்களுக்கும் தீர்வு கிடைக்க பிரபஞ்சம் வழங்கிய அற்புத கொடை கருங்காலி. இயல்பிலேயே இறைத்தன்மை நிறைந்த இறைவனுக்கு மிக நெருக்கமான விருட்சம். அதனால் தான் பல சிறப்பு பெற்ற தலங்களில் கருங்காலி தல விருட்சமாக இருப்பதை காண முடிகிறது. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் மிகுதியாக இருக்கிறது. அளவற்ற மருத்துவ குணம், ஆரோக்கியத்தை தரக்கூடிய தன்மை எந்த விருட்சங்களுக்கு மிகுதியாக உள்ளதோ அதற்குள் அளவிட முடியாத தெய்வத் தன்மை நிரம்பி இருக்கும். அதிக அளவில் பிரபஞ்ச சக்தியையும் (மின் கதிர் வீச்சுகளையும்) நேர்மறை ஆற்றலையும் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்ட கருங்காலி மனித உடலில் ஜீவகாந்த சக்தியை அதிகரிக்க செய்கிறது. இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எதிர் விளைவுகள் சிறிதும் இல்லாததால் இதன் நிழலில் நின்றால் கூட நோய் நீங்கும். ஆன்மா வலுவடையும். எனவே அனைத்து ராசியினரும், மதத்தினரும் பயன்படுத்தலாம்.

    விருட்ச வழிபாடு

    மரங்கள் மனிதர்களுக்கு மனதை மகிழ்விக்கும் மலர்களையும் உண்ணுவதற்கு காய், கனிகள் தருவதுடன் நிழல், குளிர்ச்சி, மழையும் தருகிறது. காற்றை சுத்தப்படுத்துகிறது. நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன்டை ஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஆக மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன.இதனால் தான் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். விருட்சங்களின் பயன்கள் அளவற்றவைகள். எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவைகள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நல்ல சக்திகளையும் ஈர்த்து தன்னுள் சேமித்து வைக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.

    இதனை வழிபடுபவர்களுக்கு தன்னுள் நிரம்பியுள்ள நற் சக்திகளால் விரும்பிய அனைத்து நற்பலன்களையும் தந்து எதிர்மறை சக்தியை விலக்கி விடும் அல்லது தங்கவிடாது.அதனால் தான் நமது முன்னோர்கள் தெய்வீக சக்தி நிறைந்த மரங்களை வளர்த்து வழிபட்டு வந்தார்கள். விருட்சக சாஸ்தி ரத்தில் 27 நட்சத்தி ரத்தினர் வழிபட வேண்டிய விருட்சங்களையும் அதனால் ஏற்படும் நற்பலன்களையும்

    குறிபிட்டுள்ளது. வசதி வாய்ப்பு இருப்பவர்கள் அவரவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கான விருட்சத்தை நட்டு விரும்பிய பலனை அடையலாம். பராமரிக்க முடியாத சூழ்நிலை இருப்பவர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் விருட்சங்களை பராமரிக்கும் தலங்களுக்குச் சென்று வழிபட கர்ம தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகமாகும். கருங்காலி செவ்வாயின் விருட்சம் அதை அதிகமாக வளர்க்க பூமியில் நோய் தாக்கம் குறையும்.

    பொதுவாக கருங்காலி மரம்

    ஸ்ரீ லங்கா மற்றும் இந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது. இதனை செங்கருங்காலி மற்றும் முள்ளுக்கருங்காலி என இரண்டாக வகைப்படுத்தலாம். கருங்காலியில் உலக்கை, மாலை, சிலைகள் செய்து ஆன்மீக வழிபாட்டிற்கு பயன்படுத்த அளவிட முடியாத நற்பலன்களை அடைய முடியும்.

    உறுதியான, வலுவான அனைத்து பொருள்களுக்கும் காரகர் நமது செவ்வாய் பகவான் தான். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம், ரத்தம், வீரம், தைரியம், வீரியம், கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றை குறிக்கும். செவ்வாய் பெண் ஜாதகத்தில் கணவரையும் ஆண் ஜாதகத்தில் சகோதரத்தைப் பற்றியும் கூறும் கிரகமாகும்.செவ்வாயின் காரத்துவத்தால் ஏற்படக்கூடிய அனைத்து இன்னல்களுக்கு தீர்வு தரக்கூடிய நற்பண்புகளை கொண்ட விருட்சமே கருங்காலி.


    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

     மருத்துவ குணங்கள்

    இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. செவ்வாய் என்றால் ரத்தம்.

    இதனை பயன்படுத்த ரத்தம் தொடர்பான அனைத்து ஆரோக்கிய கேடும் நீங்கும்.சர்க்கரையின் அளவு குறையும்.இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு முற்றிலும் அகலும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். சுவாச,காச நோய்கள் தீரும்.குடிப்பழக்கம் சரியாகும். பல், ஈறுகளில் ரத்தக் கசிவு சீராகும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மாதவிடாய் கோளாறை சீராக்கி குழந்தை பாக்கியம் ஏற்படுத்தும். வெள்ளைப்படுதல், அதிக உதிர போக்கிற்கு சிறந்த மருந்தாகும்.

    ஆண்களுக்கு உடல் பலமடையும்.

    ஆண்மை பெருகும்.நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

    பொதுவான பயன்கள்

    சித்தர்கள், முனிவர்கள் பயன்படுத்தும் தண்டம் ,குறி சொல்பவர்கள் பயன்படுத்தும் குச்சி, வீடுகளில் முன்னோர்கள் பயன்படுத்திய உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் அனைத்தும் கருங்காலியால் செய்யப்பட்டவைகளே. அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகத்தின் பொழுது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள் அது பிரபஞ்சத்தில் உள்ள நல்ல ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில தகடுகள் பதிகப்பட்டு இருக்கும் அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிமிதமான சக்தியை வழங்கும்.

    அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை. செவ்வாய்க் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் அதிகளவில் கிரகித்து வெளியேறுகின்றன. நன்கு விளைந்த கருங்காலியை உடன் வைத்திருக்கும் பொழுது எதிரிகளின் தொல்லை, போட்டி, பொறாமை, எதிரிகளின் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டாகும் காரியத் தடை திருஷ்டி, பில்லி, ஏவல், சூனியம், வசியம், செய்வினை பிரச்சனை, நோய் மற்றும் மனநோய், தூக்கமின்மை மரண பயம், ஆயுள் குற்றம் நீங்கும்.காரிய சித்தியும் தொழில் வளர்ச்சியும் அடையும்.

    பணப் புழக்கம் அதிகரிக்கும்.

    குலதெய்வ வழிபாடு தடை, பித்ரு தோஷம், செவ்வாய் கிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

    கருங்காலி கோலை பூஜை அறையில் வைத்து வழிபடும் பொழுது சொத்து பிரச்சினை, சகோரதர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும்.வாஸ்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பு குறையும்.பூமிக்கு அடியில் உள்ள சல்லிய பொருட்களால் ஏற்படும் எதிர் வினைகளை சரி செய்கிறது.

    தொழில் கூடத்தில் வைத்து வழிபட்டால் தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும். செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும்.

    வாகனங்களில், கைப்பையில் வைக்க விபத்து ஏற்படாது. மாலையாக அணிந்து கொண்டு தியானம் மந்திர ஜபம் செய்ய காரிய சித்தி கிடைத்து வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். அன்னை வாராகி மற்றும் லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    ஜோதிட சாஸ்திரப்படி ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் சுப வலிமை பெற்றவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மையை தருகிறது.

    செவ்வாய் வலிமை குன்றியவர்களுக்கு ஏற்படும் நோய், விபத்து, கடன், சொத்து பிரச்சினை, திருமணத் தடை மண வாழ்வில் நிம்மதியின்மை போன்ற அசவுகரியங்களை குறைக்கிறது. இதில் செவ்வாய் கிரகத்தின் சுப கதிர்வீச்சுக்கள் அதிகமாக இருப்பதால் இதனை பயன்படுத்த செவ்வாய் பகவானால் ஏற்படக் கூடிய அனைத்து இன்னல்களும் தீரும், பாதிப்புகள் அகலும். அந்த காலத்தில் வீடு சொத்து இழந்தவர்கள் கருங்காலி மரத்தை வெட்டி கொண்டு வந்து காய போட்டு பின் நல்ல நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று அந்த கட்டைகளை எரித்து பொங்கல் வைத்து சாமிக்கு படையல் போடுவார்களாம். பின்பு மனதார வேண்டிக் கொண்டு அந்த அடுப்பில் உள்ள சாம்பலை எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் செம்பு கலசத்தில் வைத்து தினமும் பூஜை செய்து வணங்கி வந்தால், இழந்த சொத்துக்கள், மரியாதை மீண்டும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    கருங்காலி மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், கவுலவம் கரணத்தில் பிறந்தவர்க ளுக்கும் செவ்வாய்க்கிழமை, 9, 18, 27-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் மிகவும் உகந்தது. இவர்கள் கருங்காலி மரம் வளர்ப்பது ,கையில் உடலில் கருங்காலி மர பொருள்களை வைத்து இருப்பது சிறப்பான பலன் தரும்.

    கருங்காலி பொருட்களை பயன்படுத்தும் முறை

    கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட மாலை, கோல் போன்ற எந்த பொருளாக இருந்தாலும் சுத்தமான பசும் பால் மற்றும் நீரில் கழுவி சந்தனம் , குங்குமமிட்டு தெரிந்த இஷ்ட மற்றும் குல தெய்வ மந்திரத்தை உருவேற்றி பூஜை அறையில் வைக்கலாம் அல்லது சுத்தமான ஒரு இடத்தில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம், பூஜை முறைகள் தெரியவில்லை என்றால் முழுமனதோடு குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ ,நவகோள்களையோ வேண்டி பயன்படுத்தலாம். ஆன்ம பலம டைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியால் செய்யப்பட்ட பூஜை பொருட்களை வைத்து வணங்கி பயன் பெறுவோம்.

    • பல படங்களில் குழந்தை நட்சத்திரம். இந்த படத்திலும் குழந்தை நட்சத்திரம்தான். இருந்தாலும் படம் முழுவதும் என்னை சுற்றியே இருந்தது.
    • நான் பேச வேண்டும் என்பதற்காக அம்பிகா ஆன்டி என்னுடன் தவியாய் தவிப்பார்.

    ரஜினி அங்கிள்....

    என்று மழலை குரலில் அழைத்தபடியே வெள்ளை வெளேர் நிறத்தில் பிராக் அணிந்து, தலையிலும் வெள்ளை நிறத்தில் பூச்சூடி கொண்டு ஏஞ்சல் போல் முத்துப்பல் தெரிய சிரித்த படியே ஒரு குழந்தை ஓடி வருவதையும்...

    அந்த மயக்கும் குரலை கேட்டு எதிரில் இருந்து வெள்ளை நிற பேண்ட், சட்டையில் ரஜினி ஓடி வந்து அந்த குழந்தையை வாரி அனைத்து தூக்கி கொஞ்சி மகிழ்ந்து

    "முத்து மணிச்சுடரே வா...

    முல்லை மலர் சரமே வா... என்று பாடு வதும் நினைவிருக்கிறதா?

    ஆங்... ஆமா.. அது 'அன்புள்ள ரஜினி காந்த்' படமாச்சே என்கிறீர்களா?

    அதே படம்தான்! அந்த படத்தில் ரஜினி அங்கிள்... ரஜினி அங்கிள்... என்று அவரை சுற்றி சுற்றி வரும் குழந்தை நட்சத்திரம் உங்கள் மீனாதான்...

    பல படங்களில் குழந்தை நட்சத்திரம். இந்த படத்திலும் குழந்தை நட்சத்திரம்தான். இருந்தாலும் படம் முழுவதும் என்னை சுற்றியே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு குழந்தை கதாநாயகி அந்தஸ்து எனக்கு அந்தப் படத்தில் இருந்தது.

    முடங்கிப் போன இடது கையை மடித்து நெஞ்சோடு வைத்துக் கொண்டு... இரண்டு கால்களையும் இணைத்து சேர்த்து வைத்தபடி சக்கர நாற்காலியில்தான் நான் படம் முழுக்க வந்து கொண்டிருப்பேன்.

    ரோசி....!

    இதுதான் அந்த படத்தில் எனது பெயர்.

    மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் வளர்வேன். அதே இல்லத்தில் எனது அம்மாவான அம்பிகா ஆன்டி ஆயாவாக இருப்பார். அவர்தான் என் அம்மா என்பது ஆரம்பத்தில் எனக்கு தெரியாது.

    நான் பேச வேண்டும் என்பதற்காக அம்பிகா ஆன்டி என்னுடன் தவியாய் தவிப்பார். அவர் என் அருகில் வந்து மண்டியிட்டு ஏதாவது பேசு ரோசி என்று என்னிடம் கெஞ்சுவார். அவரை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கும்.

    ஆனால் டைரக்டர் சொல்வார் 'பாப்பா... இப்போது நீ கோபமாக இருக்கணும்... உம்முன்னு இருக்கணும்.... ஏதாவது தந்தால் தூக்கி வீசணும் என்பார்.

    ஆனால் எனக்கு முகத்தை இப்படித்தான் வைக்க வேண்டும் என்றெல்லாம் தெரியாது. ஏதோ எனக்கு தெரிந்தது போல் இருப்பேன்.

    ஆனால் காட்சி முடிந்ததும் சூப்பர்டா கண்ணா... சூப்பர்டா செல்லம்... என்றெல்லாம் பாராட்டுவார்கள்.

    காட்சி முடிந்ததும் அம்பிகா ஆன்டி என்னிடம் வந்து 'நான் கெஞ்சினாலும் பேச மாட்டே.... அழுதாலும் பேச மாட்டே.... என்ன? அவ்வளவு பெரிய பிடிவாதக்காரியா நீ?' என்று செல்லமாக கொஞ்சுவார்.

    அப்படித்தானே இருக்க சொன்னாங்க ஆன்டி என்பேன் நான்.

    அதை கேட்டதும் 'சூப்பர்டா....' என்று பாராட்டுவார். சாக்லெட்டும் தருவார். எனக்கு தேவை அதுதானே...!

    ரஜினி சாரோடு நிறைய காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் தினமும் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்ப்பேன்.

    என்னை பார்த்ததும் 'என்ன... ரோசி பாப்பா... எப்படி இருக்கீங்க..." என்பார்.

    நான் உடனே "அங்கிள், என் பெயர் ரோசி இல்லை. மீனா" என்பேன்.

    அதை கேட்டதும் 'ஓ... நடிக்கும் போது மட்டும்தான் அப்படி கூப்பிடணுமா? ஓ.கே.... ஓ.கே... என்று சிரிப்பார். இப்படி படப்பிடிப்பு தளத்தில் மட்டும் எக்க சக்க நினைவுகள்.

    அதிலும் என்னோடு நடித்த 5 பேரும் என் வயதுடையவர்கள். படப்பிடிப்பு தளத்தில் சும்மா இருக்க மாட்டோம். அங்கும் இங்கும் ஓடி விளையாடுவோம். ரொம்ப ஜாலியாக இருந்தது.

    இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் கேமிரா முன்பு எப்போதும் கையை மடித்தும், காலை சேர்த்தும் வைத்தபடி இருக்க சொல்வார்கள். இந்த பழக்க தோஷம் வீட்டிலும் தொடர்ந்தது. வீட்டில் இருக்கும் போதும் அப்படியே இருப்பேன். அம்மா தான் 'ஏய், நல்லா உட்கார்' என்று அடிக்கடி சத்தம் போடுவார்.

    அந்த படத்தின் கடைசி கிளை மேக்ஸ் காட்சி எனக்கே ஒரு மாதிரி இருந்தது. எனக்கு ஆறுதல் சொல்லும் ரஜினி அங்கிள், அம்பிகா ஆன்டி, மதர், எனது நண்பர்கள் எல்லோரும் சுற்றி நிற்பார்கள்.

    கட்டிலில் படுத்த படுக்கையாக இருக்கும் நான் ஆறுதல் சொல்லும் அவர்களிடம் 'நீங்க பொய் சொல்றீங்க. நான் செத்து போயிருவேன். முன்ன மாதிரி எனக்கு மூச்சு விட முடியவில்லை. ரத்தம் ரத்தமாக வாந்தி எடுக்கிறேன் என்பேன்.

    அதை கேட்டதும் கர்த்தர் உன்னை கைவிட மாட்டார் என்பார்கள். நான் 'கைவிட மாட்டார். என்னை கையோடு கூட்டி சென்று விடுவார் என்பேன்.

    இப்படி உருக்கமாக பேசும் அந்த வசனங்கள் நான் எனது குரலில் பேசியது.

    அந்த படத்தில் மேக்கப் எதுவும் கிடையாது. இயல்பாகவே நடித்தோம். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படம்.

    100-வது நாள் வெற்றி விழாவுக்கு என்னையும் அழைத்து சென்றி ருந்தார்கள். மேடையில் இருந்த நான் பழக்க தோசத்தில் கையை மடித்து வைத்து கொண்டு, கால்களையும் சேர்த்து வைத்தபடி நாற்காலியில் அமர்ந்து இருந்தேன். பார்வையாளர்கள் வரிசையில் இருந்த அம்மாதான் கைைய கீழேேபாடு சகஜமாக இரு என்று சைகையால் சொன்னார்.

    படப்பிடிப்பின் போது பலமுறை ரஜினி என்னை தூக்கி வைத்து கொண்டு நடிப்பார். அப்போது நான் குண்டாக இருப்பேன். வெயிட்டை பார்த்து 'ஏய், எந்த கடையில் அரிசி வாங்கி சாப்பிடுகிறாய்' என்று கிண்டல் செய்வார்.

    'சிரி வெல்லா' என்ற தெலுங்கு படத்தில் பார்வையற்ற குழந்தையாக நடித்தேன். அதில் ஒரு பாட்டுக்கும் நடித்திருப்பேன்.

    அன்புள்ள ரஜினிகாந்த், படத்தில் வரும் காட்சிகளில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிக்காட்டியும் குறிப்பாக ரஜினி தரும் இனிப்பை கோபத்தில் துப்பி விட்டு அவர் தந்த பூங்கொத்தையும் தூக்கி வீசுவேன். அந்த காட்சிகளையெல்லாம் இப்போது பார்த்தாலும் "பரவாயில்லைடி... மீனா.. நீ சின்ன பிள்ளையிலும் நல்லாத்தான் நடிச்சிக்கே..." என்று என்னை நானே சொல்லி பெருமை பட்டுக் கொள்வேன்.

    • ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே 11 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் சென்னை சிறு சிறு கிராமங்களாக புகழ் பெற்று இருந்தன.
    • அந்த காலத்தில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து நடந்தது.

    சென்னைக்கு 384-வது பிறந்த நாள். கடந்த 10 ஆண்டு களாக சென்னை பிறந்த தினம் பல்வேறு தரப்பு மக்களால் மிக மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் இந்த ஆண்டு சென்னை தினம் கொண்டாட்டம் மிக விமரிசையாக களை கட்டி உள்ளது. நேற்று முதலே பல்வேறு இடங்களில் சென்னை தினம் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

    சென்னை தினம் உருவானதில் மிக சுவாரஸ்யமான வரலாற்று பின்னணி உள்ளது. 1639-ம் ஆண்டு வணிகம் செய்வதற்காக ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி சென்னையில் தரை இறங்கியது. அவர்கள் தரை இறங்கிய இடம் அந்த கால கட்டத்தில் மதராச பட்டிணம் என்று அழைக்கப்பட்டது.

    அந்த மதராச பட்டிணத்தை உள்ளடக்கிய கிராமங்களை வெங்கடப்பா நாயக்கர் மற்றும் அவரது சகோதரர் அய்யப்பா நாயக்கர் இருவரும் ஆட்சி செய்து வந்தனர். வெங்கடப்பா நாயக்கர் வந்தவாசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். அய்யப்பா நாயக்கர் பூந்தமல்லியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார்.

    அவர்களிடம் இருந்து கிழக்கு இந்திய கம்பெனியை நிர்வகித்த ஆங்கிலேயர்கள் தங்களுக்காக சிறிய இடம் ஒன்று வேண்டும் என்று கேட்டனர். அதன்படி வெங்கடப்பா நாயக்கரும், அய்யப்பா நாயக்கரும் மதராச பட்டிணத்தில் ஒரு சிறு கிராமத்தை ஆங்கிலேயர்களுக்கு எழுதி கொடுத்தனர்.

    இந்த நிகழ்வு நடந்த நாள் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதியாகும். எனவே சென்னை உருவாக இந்த தினம் காரணமாக இருந்ததால் ஆகஸ்டு 22-ந்தேதியை சென்னை தினமாக கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. மதராசப்பட்டிணமாக இருந்த அந்த இடத்தை ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் என்று அழைத்தனர்.

    ஆனால் கிழக்கு இந்திய கம்பெனிக்கு நிலத்தை கொடுத்த தாமல் வெங்கடப்பா நாயக்கரும் அவரது சகோதரர் அய்யப்பா நாயக்கரும் தங்களது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் புதிய இடத்தை அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில்தான் சென்னை உருவானது.

    காலம் காலமாக இந்த வரலாறு கூறப்பட்டு வந்த போதிலும் மெட்ராஸ், சென்னை என்ற இரண்டு பெயர்களும் பேச்சுவழக்கத்தில் இருந்தன. இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி 1996-ம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயருக்கு பதிலாக சென்னை என்று அறிவித்தார். அன்று முதல் நாடு முழுவதும் சென்னை என்ற பெயர்தான் அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு இந்த கொண்டாட்டம் அதிகமாகி வருகிறது.

    பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சென்னையில் பல்வேறு மாநில மக்கள் சுமூகமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சென்னைக்கு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, போக்குவரத்து, மருத்துவம், அறிவியல், அரசியல், பொழுது போக்கு, உணவு வகைகள் என்று அனைத்து வகைகளிலும் சென்னை நகரம் நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.

    குறிப்பாக முக்கிய துறைகளில் சென்னை நகரம் நாட்டின் தலைநகரமாகவே திகழ்கிறது. தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்படும் சென்னை சில அம்சங்களில் நாட்டின் முதன்மை நகரமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள் கொண்ட சிறப்பு சென்னைக்கு உண்டு.

    இந்தியாவிலேயே சிறந்த மருத்துவம் அளிக்கும் நகரமாக சென்னை திகழ்கிறது. நாட்டி லேயே அதிக கார்கள் உற்பத்தி யாகும் நகரமாக சென்னை உள்ளது. ஐ.டி. தொழில் நுட்பத்திலும் தற்போது மற்ற நகரங்களுக்கு வழிகாட்டும் இடமாக சென்னை உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் நிறைந்த இடம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. சென்னையில் பழமை யான கட்டிடங்களே இதற்கு சாட்சியாக திகழ்கின்றன.

    இந்தியாவில் எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு 25 கிலோ மீட்டர் நீளத்துக்கு அழகான கடற்கரை சென்னையில் மட்டுமே உள்ளது. சினிமா தொழிலில் அதிக வருவாயை தரும் இடமாகவும் சென்னை சிறப்பு பெற்றுள்ளது. அருங்காட்சியகங்கள், நூல் நிலையங்கள் சென்னையின் பழமைக்கு சான்றாக திகழ்கின்றன.

    அன்று கிராமமாக இருந்த சென்னை இன்று பல நூறு கிலோ மீட்டருக்கு பறந்து விரிந்து மாநகரமாக மாறி உள்ளது. தொழில் முதலீட்டுக்கு மிக சிறந்த இடம் என்ற நிலையும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே 11 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் சென்னை சிறு சிறு கிராமங்களாக புகழ் பெற்று இருந்தன. அந்த கிராமங்களில் ஆலய வழிபாடுகள் ஓங்கி இருந்தன. சித்தர்கள் ஏராளமானோர் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் தற்போது சென்னையில் ஆங்காங்கே ஜீவ சமாதிகளாக இருப்பது காண முடியும்.

    அந்த காலத்தில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து நடந்தது. ஆந்திராவில் இருந்து தமிழகத்தின் வட மாவட்டம் வரை அந்த கால்வாயில் மக்கள் படகுகளில் சென்று வியாபாரம் செய்த நிலை இருந்தது. தற்போது அது அடியோடு மறைந்து போனது.

    அதுபோல சென்னையில் ஓடிய டிரம் வண்டிகளும் காணாமல் போய் விட்டன. இவைகளும் இருந்து இருந்தால் சென்னை மாநகரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இவற்றை எல்லாம் நினைவு கொண்டு சென்னையின் சிறப்பை உணர்ந்து சென்னை தினத்தை கொண்டாடுவோம்.

    • சம்பா, குதிரை வாலி போன்றவை அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன.
    • வெள்ளை சர்க்கரை என்று முன்பு கூறினாலும் எந்தவித சர்க்கரையினையும் தவிர்ப்பதே நல்லது.

    எத்தனை முறை சர்க்கரை நோயினைப் பற்றி எழுதினாலும் பின்பற்ற வேண்டிய உணவு முறைகளைப் பற்றி எழுதினாலும் அது அவசியமானதாகவே இருக்கின்றது.

    தவிர்க்க வேண்டிய உணவுகள் என்று சில உள்ளன.

    * அதிக மாவு சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்

    * அதிக புரதம்

    * பதப்படுத்தப்பட்ட உணவுகள்

    * மாவு சத்து நிறைந்த காய்கறிகள்

    * வெள்ளை சர்க்கரை-மற்ற எந்த சர்க்கரையும் கூடாது

    * மிக அதிக அளவு பால், பால் சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * பாலிஷ் செய்த தானியங்கள் அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டும்.

    இன்று மாப்பிள்ளை சம்பா, குதிரை வாலி போன்றவை அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன.

    பதப்படுத்தப்பட்ட அசைவம், சிகப்பு அசைவம் இவைகளை தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை என்று முன்பு கூறினாலும் எந்தவித சர்க்கரையினையும் தவிர்ப்பதே நல்லது.

    உருளை, சர்க்கரை வள்ளி போன்றவை அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப சிறிது எடுத்துக் கொள்ளலாம். என்றாலும் இவைகளை தவிர்ப்பதே நல்லது.

    அதிக கொழுப்பு நிறைந்த பால், பால் சார்ந்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.

    * சத்து சோடா, டயட் சோடா ஆல்கஹால் இவை யாருக்குமே தேவை இல்லை.

    கீரை, பச்சை காய்கறிகள், மருத்துவர் அறிவுரைபடியான பழங்கள், முழு தானிய உணவு, பருப்பு வகைள், கொட்டை வகைகள்.

    இவை எல்லாம் செய்யக்கூடாது

    * Junk Food இதனை அடியோடு தவிர்க்க வேண்டும். இதனை தமிழில் மொழி பெயர்த்தால் குப்பை உணவு என்றே கூறுகின்றனர்.

    * Syuare Meal அதாவது முழுமையான இலை போட்ட சாப்பாடு விருந்து போன்ற உணவினை தவிர்த்து விட வேண்டும்.

    * உருளை, சோளம் இவைகளை தவிர்த்து விடுவது நல்லது அல்லது மருத்துவர் அறிவுரைப்படி அளவாக எடுத்துக் கொள்ளலாம்.

    * அதிக கொழுப்புமிக்க அசைவம், பதப்படுத்தப்பட்ட அசைவம் இவற்றினை தடுத்திட வேண்டும்.

    * அதிக கொழுப்பு அல்லது முழு கொழுப்பு கொண்ட பால், பால் சார்ந்த உணவுகளை தவிர்த்திட வேண்டும்.

    சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் செய்ய வேண்டியவை:

    * நன்கு நீர் குடிக்க வேண்டும். 8 கிளாஸ் அளவு நீர் குடிப்பது நல்லது.

    * எப்போது உண்ணும் பொழுதும் அதிக நார்சத்து நிறைந்து இருக்க வேண்டும்.

    * ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய், பிளம்ஸ், செர்ரி, பப்பாயா, கொய்யா இவைகளை மருத்துவர் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ளலாம்.

    * வெந்தயம் அன்றாட உணவில் சேர்க்கலாம்.

    * அளவான கொட்டை வகை உணவுகளை மருத்துவர் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்வோம்.


    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    மேலும் அறிந்து கொள்வோம்:

    * ஆப்பிள் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் வைட்டமின் 'சி' சத்தும் நார் சத்தும் கொண்டது. உணவு பாதையினை சுத்தம் செய்யும். கொலஸ்டிரால் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    * கொய்யா பழத்தின் ஜிஐ வெகு குறைவு. வைட்டமின் 'சி', 'ஏ' சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுவது. மலச்சிக்கலை நீக்கும்.

    நாவல் பழம்- பல நோய்களில் இருந்து காக்க வல்லது. இன்சுலின் உற்பத்தியினை கூட்டுவதாக அறியப்படுகின்றது. பொட்டாசியம் சத்து கொண்டது.

    ஆரஞ்சு: நார் சத்தும், வைட்டமின் 'சி' சத்தும் அதிகம் கொண்டது. இருதய நோய், சர்க்கரை நோய் தவிர்ப்பிற்கு ஏற்றது.

    சர்க்கரை நோயினை சமாளிப்பது என்றாலே ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதான். இந்த நோய் 400 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை உலகெங்கும் பாதித்து உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைக்க உதவும் சில வழிகளில் ஒன்று குறைந்த கார்போஹைடிரேட் உள்ள உணவினை எடுத்துக் கொள்வதுதான். மாவு சத்து உணவினை குறைத்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு நன்கு குறையும். அவ்வகையில்,

    * பசலை கீரை: அதிக சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து வைட்டமின் ஏ, பி2, சி மற்றும் கே கொண்டது. 100 கி பசலை கீரையில் 4 கி மாவு சத்துதான்.

    * புரோகலி: பச்சை காலி பிளவர் என்றும் இதனைக் கூறுவர். ஆரோக்கியமான காய்கறி. வைட்டமின் சி, கே. சத்து, நார்சத்து மிகுந்தது. புற்று நோயினை எதிர்க்க வல்லது. 100 கி புரோகலி இலையில் 7 கிராம் அளவே மாவு சத்து உள்ளது.

    * தக்காளி ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது. வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்து கொண்டது. உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த வல்லது. 100 கி தக்காளியில் சுமார் 5 கி மாவு சத்து உள்ளது.

    பீன்ஸ்: வைட்டமின் சி, நார் சத்து மிகுந்தது. இதுவும் 100 கிராமிற்கு 4 கிராம் மாவு சத்து கொண்டது. உடற்பயிற்சி செய்வது, அதிக கொழுப்பினைத் தவிர்த்தல். யோகா செய்தல், குறைந்த மாவு சத்து எடுத்துக் கொள்ளுதல் சர்க்கரை நோய் பாதிப்பினை வெகுவாய் கட்டுப்பாட்டில் வைக்கும்.

    சர்க்கரை சாப்பிடுவதால்- சத்து எதுவும் இல்லை. எடை கூடும். ஏனெனில் இனிப்பு எனும் பொழுதில் அதில் கொழுப்பும் சேர்ந்து விடுகின்றது. இத்துடன் அதிக உடல் உழைப்பின்மை கூடும் போது சர்க்கரை நோய் பாதிப்பு ஓடி வந்து விடுகின்றது.

    பழங்கள் என்றவுடன் அதனையும் குறிப்பிட்ட அளவுடனேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சர்க்கரை பாதிப்பும், உயர் ரத்த அழுத்தமும் நெருங்கிய நண்பர்கள், ஒரு சேர உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவார்கள்.

    இந்த நீரிழிவு நோயினை பற்றி அன்றாடம் வலியுறுத்தி கட்டுரைகள் வெளிவருவதன் காரணம் என்ன? கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படாத சர்க்கரை பாதிப்பு உறுப்புகளுக்கு நிரந்தர பாதிப்பினை அளிக்கலாம். கண் பார்வை இழத்தல், இருதய நோய், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, கால் துண்டிக்கப்படுதல் என்ற அளவுக்கு கூட செல்லலாம். நீரிழிவு பிரிவு 1 என்பது ஆட்டோ இம்யுன் பாதிப்பு ஆகும். இதற்கான சிகிச்சை முறை இன்சுலின் சார்ந்தே இருக்கும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை நீரிழிவு பிரிவு 2 பற்றியது மட்டுமே.

    ஆரோக்கியமற்ற உணவு, வாழ்க்கை முறை, டென்ஷன், அதிக எடை இவை நீரிழிவு பிரிவு 2 தாக்குதலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    காயங்கள் ஆறுவதில் கால தாமதம், மங்கலான பார்வை, அதிக சோர்வு, வறட்சி, ஈறுகளில் ரத்தக்கசிவு, அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் செல்லுதல், அதிக பசி இந்த அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    கீட்டோ டயட் என்ற உணவு முறையினை பின்பற்ற விரும்புபவர்கள் கண்டிப்பாக மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது நல்லது.

    மேலும் சிலவற்றினையும் அறிவோம்:

    காரட்டினை பச்சையாக சமைக்காமல் சாப்பிட்டால் மட்டுமே சத்து என்ற கருத்து உள்ளது. காரட்டினை ஆவியில் வேக வைத்து (ஸ்டீம் என்று சொல்லுவோம்) உண்பது நிறைந்த சத்தினை அளிக்கும். நீரில் வேகவைத்து அந்த நீரினை கொட்டி விடும் பொழுது அல்லது அதிக நேரம் கொதிக்க விட்டு வடிகட்டும் பொழுதும் சத்துக்களை இழக்கின்றோம்.

    இதுபோல் தான் தக்காளியும். பச்சையாகத்தான் உண்ண வேண்டும் என்பது இல்லை. அதிக நேரம் சூட்டில் சத்துக்கள் அழிந்து விடக்கூடாது. வடிகட்டி சத்தினை அழிக்கவும் கூடாது. பசலைக்கீரை பீட்டா கரோட்டின் சத்து நிறைந்தது. இருதய நோய், நுரையீரல் புற்றுநோய் இவற்றில் இருந்து காக்க வல்லது.

    பைப்ரோமியால்ஜியா: இதனை தசைநார் வலி என்று குறிப்பிடுவர். உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் வலி என்று கூறாதவர் குறைவு எனலாம். ஜுரம், வைரஸ் பாதிப்பு என பாதிப்பு ஏற்படும்பொழுது அதிக உடல் வலி, தாங்க முடிய வில்லை என்று கூறுவர். பாதிப்பு நீங்கும் பொழுது வலியும் நன்கு நீங்கும். அல்லது வெகுவாய் குறையும். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் மூட்டுகள் தசைகளில் வலி, சோர்வு, ஞாபகத் திறன் கூட குறைதல், மூட்டுகள் தேய்மானம் என கூடவே பக்க விளைவுகள் ஏற்படும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பொதுவில் இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக காணப்படுகிறது. மூட்டு தேய்மானம் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே மருத்துவர் மூலம் சரியான காரணம் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

    பெண்கள் பரம்பரை, மற்ற மூட்டு பிரச்சினைகள், இவைகள் இதற்கு கூடுதல் காரணமாக அமைகின்றன. சில வித்தியாசமான அறிகுறிகளும் தென்படலாம். மூட்டுகளில் இறுக்கம், சிறுநீர் செல்வதில் கட்டுப்படுத்த இயலாமை, வயிறு பாதிப்பு, சருமவலி, கை கால்களில் குறுகுறுப்பு, மூக்கு, கண், வாயில் வறட்சி, குளிர், வெப்பம் சிறிதளவும் தாங்க இயலாமை. கவனம் செலுத்த முடியாமல் எரிச்சல் அடைதல் போன்றவை அந்த அறிகுறிகள் ஆகும்.

    மருத்துவர் ரத்த பரிசோதனை செய்வார். ஹார்மோன் மாற்றங்களை அறிந்து சிகிச்சை அளிப்பார். உடற்பயிற்சி, யோகா, மனசோர்வு, மன அழுத்தம் நீங்க பயிற்சிகள், மருந்துகள் என்று சிகிச்சை வழங்கப்படும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவு, பச்சை காய்கறிகள், பழங்கள், மனநலத்திற்காக பிடித்த பொழுதுபோக்கு என வாழ்க்கை முறையினை மாற்றிக்கொள்ள வேண்டும். உணவில் வைட்டமின் ஏ, சி, டி, இ மற்றும் கால்சியம், மக்னீசியம், செலினியம், சிங்க் சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும். பீட்ரூட், பசலை இவை நல்ல பலன் தரும்.

    • பியர் குடிப்பது ஒரு கலாச்சார அடையாளம்.
    • ஊர்வலம் மட்டுமே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடக்கும்.

    ஜெர்மனியின் பவேரியத்தலைநகரமான மியூனிக்கில் கொண்டாடப்படும் இந்த அக்டோபர்பெஸ்ட் (Oktoberfest) லிட்டர் லிட்டராக பியர் குடிப்பதைத்தான் முதன்மைப்படுத்துகிறது!

    "என்னது சாராயம் குடிக்க திருவிழாவா?"

    "ஆமாம்யா! இப்ப என்னங்கிறீரு" என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்!

    நம் ஊர் டாஸ்மாக்கில் போல 'மட்டையாவதற்கோ அல்லது "என்னப்பிடிக்கலைன்னுட்டா மச்சி! அவளப்போட்டுத் தள்ளிடணும்னுதான் சரக்கடிக்கறேன்" என்று புலம்புவதற்கோ இல்லை.

    இங்கே பியர் குடிப்பது ஒரு கலாச்சார அடையாளம். அதுவும் இந்த அக்டோபர்பெஸ்ட் என்னும் திருவிழா 1810-ம் ஆண்டு பவேரிய மன்னர் லுட்விக், சாக்சே ஆல்டென்பர்க் என்னும் சிறிய ஜெர்மன் பிரதேசத்தின் இளவரசி தெரெசாவைத்திருமணம் புரிந்துகொண்ட சமயத்தில் தொடங்கப்பட்ட கோலாகலம்.

    தம் மன்னரின் திருமண வைபவத்தை பிரஜைகளும் கொண்டாடவேண்டும் என்பதற்காக மியூனிக்கின் வயல் வெளிகளில் மக்களின் கொண்டாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அக்டோபர்பெஸ்ட் கடந்த இருநூத்திச்சொச்ச வருடங்களில் பல வடிவங்கள் மாறினாலும் இன்றும் உலகத்திலேயே மிக அதிக மக்கள் ஒன்று கூடிக்கொண்டாடும் விழாவாக கருதப்படுகிறது. நகரமயமாக்கப்பட்டபின் இந்த விழாவுக்கென்றே ஒரு பெருந்திடல் அமைக்கப்பட்டு அதற்கு தெரெசா பசும்புல் வெளி என்றும் சுருக்கமாக ஜெர்மானிய மொழியில் வைசென் என்றும் சொல்கிறார்கள்.

    2018 செப்டம்பரில் இந்த விழா தொடங்கிய நாளன்று காலை மேகமூட்டத்துடன் இன்றைய சீதோஷ்ணம் காற்று மழை என்றது கூகிளின் அலெக்சா. ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு பார்க்க கிளம்பிவிட்டேன். மரீன் பிளட்ஸ் என்னும், மிக அழகான பவுண்டன் பன்னீர்த்தூவும் அந்த ராஜபாட்டையில் நடுவில் ஒரு நல்ல இடத்தைப்பிடித்துக்கொண்டேன். சரியாக பத்து மணிக்கு ஊர்வலம் நான் இருந்த பாட்டையில் வந்து முன்னேறியது.

    கோலாகலமாக வயதானவர்களும், பெண்களும் கட்டுமஸ்து இளைஞர்களும் சின்னப்பையன்களும் சிறுமியரும் சம்பிரதாய உடையில் கையில் அவரவர் ஊர்களின் விசேஷ சாமக்கிரியைகளுடன் (ஒரு சிலர் மிகப்பெரிய கத்தி, துருப்பிடிக்காத 18-ம் நூற்றாண்டுத்துப்பாக்கி, பதப்படுத்தப்பட்ட செம்மறி ஆட்டை குச்சியில் தலை கீழாகக்கட்டி, கொத்துக்கொத்தாய் மலர்ப்பந்துகள் அடுக்கி என வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல்) ஊர்வலம் வருகிறார்கள்.

    இந்த ஊர்வலத்தின் ஸ்பெஷல் அவர்களின் உடைகள் தாம். பவேரிய உடைகளான டிரெண்டல் என்னும் உடையைப்பெண்கள் அணிகிறார்கள். இது மூன்று பீஸ் கொண்ட உடை – பாவாடை, பிளவ்ஸ் மற்றும் ஏப்ரன் எனப்படும் கவசம் போன்ற மார்புப்பகுதி உடை. ஆண்கள் லெதர்ஹோசென் என்னும் தோலிலானா அரை டிராயர் மற்றும் நம் ஊரில் அந்தக்காலத்தில் எலிமெண்டரி பள்ளிப்பிள்ளைகள் போட்டுக்கொள்ளும் டிராயர் பட்டி, மேலே இறுக்கமான சட்டை.


    ஜெயராமன் ரகுநாதன்

    ஜெயராமன் ரகுநாதன்

    ஒரு காலத்தில் இந்த டிரெண்டல் உடை பாரில் மற்றும் எடுபிடி வேலை செய்யும் பெண்களின் உடையாக இருந்து வந்தது. அதே போல குதிரை லாயங்களில் வேலை செய்யும் ஆண்களின் உடை இந்த லெதர்ஹோசென்! ஆனால் ஆஸ்திரிய மன்னர் பிரான்ஸ் ஜோசெப் (தன் திருமணத்துக்குப்போகும் வழியில் எதேச்சையாகப்பார்த்து, "அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி"யதால் மையல் கொண்டுவிட்ட சிஸ்சி என்னும் பவேரிய சாதாரணவளைப் பிடிவாதமாகத் திருமணம் செய்து கொண்டவர்!) இந்த வித உடையை அணிந்து அதற்கு பெரும் கவுரவத்தை ஏற்படுத்திவிட்டார்.

    சம்பிரதாயமாகத்தொடங்கப்பெறும் இந்த அக்டோபர்பெஸ்ட் முதலில் பலவித மாநிலங்கள் மற்றும் பியர் கம்பெனிகளின் சார்பில் அலங்கார வண்டிகள், அவற்றின் பின்னே தெரெசா மைதானத்தில் பணி புரியவரும் பெண்கள், காவல் காக்க வரும் ஆண்கள் என அனைவரும் அவரவர்களின் கலாச்சார உடையலங்காரங்களுடன் பெரும் ஊர்வலமாக வருகின்றனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூடி ஆரவாரம் செய்ய மறு ஆரவாரம் செய்து உற்சாக மூட்டுகிறார்கள். நான் கூட துப்பாக்கி ஏந்தி வந்த ஒரு ஆசாமியைப்பார்த்து கையை ஆட்டி வைத்தேன். அவர் என்னைக்கவனிக்காமல் எனக்குப்பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஜப்பானியப் பெண்ணைப் பார்த்து சிரித்தார்!

    குரூப் குரூப்பாகப்போகும் இந்த ஊர்வலத்தில் கிட்டத்தட்ட 90-100 குரூப்புக்கள் ஊர்வலம் போகுமாம். அவர்களின் உற்சாகம், தம் நாட்டின் பாரம்பரியத்தில் கலந்துகொள்ளும் பெருமிதம், வயது வித்தியாசமின்றி மழைத்தூறலையும் பொருட்படுத்தாத அழகான தாத்தாக்களூம் பாட்டிகளும் குழந்தைகள் மாதிரிச்சிரித்துக்கைகளை வீசி ஆட்டிக்கொண்டு போகும் குதூகலம் நிச்சயம் ரசிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த ஊர்வலம் மிகப்பெரிய ஒற்றுமை ஊக்கி என்பதில் சந்தேகமில்லை.

    காலை 9 மணியளவில் தொடங்கும் இந்த ஊர்வலம் மியூனிக்கின் முக்கிய ராஜ பாட்டையின் வழியாகச்சென்று தெரெசாப்பசும்புல்வெளியை சுமார் 12 மணியளவில் அடைகின்றது. அங்கே மியூனிக்கின் மேயர் ஒரு அடையாள சுத்தியுடன் முதல் பியர் பீப்பாயைத்தட்டி உடைத்து பியரை வழிய விட்டு முதல் ஒரு லிட்டர் பியர் கோப்பையை பவேரிய மாநிலத்தின் தலைவருக்கு அளிக்க ஆரவாரமாகத்தொடங்குகிறது இந்த அக்டோபர்பெஸ்ட் என்னும் பியர் திருவிழா. ஒவ்வொரு வருடமும் மேயருக்கு எத்தனை சுத்தியல் அடி தேவைப்படுகிறது என்பது பற்றி பெட் எல்லாம் கட்டுகிறார்கள்! இதில் ரிகார்ட் வைத்திருப்பவர் தாமஸ் விம்மர் என்னும் மேயர் – 1950ஆம் ஆண்டு இவருக்கு முதல் பீப்பாயை உடைக்க 19 சுத்தியல் அடி தேவைப்பட்டதாம்! மூன்றே அடிகளில் உடைத்த மேயர்களும் உண்டு!

    தெரெசாப்பசும்புல் வெளியில் இந்த அக்டோபர்பெஸ்டிவலின் போது தரப்படும் பியர் வேறெப்போதும் கிடைக்காதாம்! இன்னும் இரண்டு நாளில் அந்த தெரெசாபசும்புல்வெளியில் போய் அக்டோபர்பெஸ்டின் கோலாகலத்தைப்பார்த்துவிட்டு வரும் வாரம் எழுதுகிறேன்.

    ராஜபாட்டையில் ஊர்வலம் நடந்தது என்று சொன்னேனே, அதற்காக டிராபிக்கை முழுமையும் நிறுத்தி சாலையை துப்புரவாகத்துடைத்துவிட்டிருந்தார்கள். ஊர்வலம் மட்டுமே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடக்கும். இந்த ராஜபாட்டையில் டிராபிக் விளக்குகள் மட்டும் எப்போதும் போல இம்மி பிசகாமல் சிவப்பு ஆரஞ்சு பச்சை என்று குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாமல் ஒளிர்ந்துகொண்டிருந்த டிசிப்ளினில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது என்பேன்!

    • நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கிவிடும்.
    • நீட் எழுதச் செலவே இல்லை என்று ராஜ்பவனில் ஆளுநர் சொல்வதைக் கேட்ட மாணவர்கள் மனதிற்குள் சிரித்திருப்பார்கள்.

    மார்பில் அணிந்த துப்பட்டாவில் இருக்கலாம் ரகசியக் குறிப்புகள்?

    தோளாடைகள் துகிலுரியப்பட்டு..

    தேர்வு மையங்களில் நுழைகிறார்கள் நவீன பாஞ்சாலிகள்..

    அழியப்போகின்றன அஸ்தினா புரங்கள்! - (மனுஷ்யபுத்திரன்)

    நீட் எழுதச் சென்ற மாணவிகளுக்கு ஏற்பட்ட அவலங்களையும் அலங்கோலங்களையும் கண்டு பொங்கிய கவிஞரின் கோப வரிகள் இவை.

    நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 12 அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் ஒரு பாராட்டு விழா நடத்தபபட்டது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவிக்குச் சரியான சூடு கொடுத்தார், திருவாளர் பொதுஜனம் ஒருவர்! நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் தந்தை ராமசாமி (இனிஷியல் "ஈ.வெ." இல்லை) என்பவரே அவர்.

    "நீட் தேர்வை எப்போது ரத்து செய்யப் போகிறீர்கள்?" என்று ஆளுநரைக் கேள்வி கேட்டு மடக்கினார் நமது ராமசாமி.

    "நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கிவிடும். பயிற்சி மையங்களுக்குச் சென்று நீட் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாணவர்களை அறிவுசார் மாற்றுத் திறனாளிகளாக்க நான் விரும்பவில்லை!" என்று பொங்கினார் ஆர். என். ரவி. "நீட் வந்தபிறகு தான் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது. நீட் இல்லாமல் தமிழக மருத்துவக் கல்வி அடைந்துள்ள தரம் பற்றாக்குறையானது. உட்காருங்கள்! (What we have achieved without NEET is no longer sufficient. Sit down.)" என்று அக்னி நட்சத்திரமானார் ஆர். என். ரவி.

    மாட்சிமை தாங்கிய ஆளுநருக்குத் தெரியாமல் போன விஷயங்கள்:

    1. இந்தியாவின் முதல் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை அன்றைய மதராசில் செய்யப்பட்டது. வருடம் 1935.

    2. இந்தியாவின் முதல் வெற்றிகரமான "திறந்த இதய அறுவைச் சிகிச்சை" தமிழ்நாட்டில் தான் நடந்தது. ஆண்டு:1962. மருத்துவரின் பெயர்: டாக்டர் கோபிநாத்.

    3. இந்தியாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்தில் தான் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நாள்: பிப்ரவரி 2, 1971.

    என் கல்லூரிக்காலத்தில் (1965) பி.யூ.சி. மதிப்பெண்படி நேர்முகத் தேர்வு நடந்து மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுவந்தனர். அதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மாநில நுழைவுத் தேர்வு (Tamil Nadu Professional Courses Entrance Examination) நடத்தப்பட்டுத் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதில் எழுந்த குளறுபடிகள் அடிப்படையில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல்படி தர வரிசை வெளியிடப்பட்டு அதன்படி மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதாவது எல்லா முறைகளையும் பல வருடங்களாகப் பரிசோதித்துப் பார்த்தபின்பே நாம் "பிளஸ் டூ" அடிப்படையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

    நீட் எழுதச் செலவே இல்லை என்று ராஜ்பவனில் ஆளுநர் சொல்வதைக் கேட்ட மாணவர்கள் மனதிற்குள் சிரித்திருப்பார்கள். பிரதர், ஆர்.என். ரவி அவர்களே.. நீட் கோச்சிங் கட்டணம் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் வரை.

    உங்களிடம் கேள்வி கேட்டு ஒலிபெருக்கி பிடுங்கப்பட்ட மாணவியின் தந்தை நமது ராமசாமியே "என் மகளை 9-ம் வகுப்பு முதல் நீட் கோச்சிங்கில் சேர்த்துப் படிக்க வைக்க இத்தனை லட்சம் செலவு ஆனது. நான் மத்திய அரசு ஊழியன். என்னால் முடிந்தது. ஏழை எளியவர்களால் எப்படி முடியும்? நீட் வெற்றி என்பதே கோச்சிங் சென்டர் தான்!" என்று ராஜ்பவனுக்கு வெளியே நிருபர்களிடம் விரட்டி விரட்டி பேசியதை டி.வி.க்களில் பார்த்தீர்களா, இல்லையா?

    "கோச்சிங் இல்லாமல் நீட்டில் நல்ல மதிப்பெண் வாங்க முடியும் என்று சொல்கிற ஆளுநருக்கு மேட்டுக்குடிப் பள்ளிகள் கோச்சிங் நிறுவனக் கூட்டணியில் கட்டணக் கொள்ளை அடித்து நீட் பயிற்சி தருவது தெரியுமா?

    நீட் தேர்வு ஒரே ஒரு தாள்! அதற்குக் கட்டணம் ரூ 1700. போக்குவரத்து, முந்திய நாள் இரவுத் தங்கல் என்று இன்னும் பல செலவுகள். பிளஸ் டூ ஸ்டேட் போர்டு ஆறு தாள் தேர்வுக் கட்டணம் எழுதக் கட்டணம் ரூ 175 முதல் 225 வரை. தேர்வு மையம் அவரவர் பள்ளி. பிளஸ் டூ விடைத்தாள் திருத்த ஆசிரியர்களுக்கு அரசு தனியாக மதிப்பூதியம் தருகிறது.

    நீட் கேள்வித்தாள் "ஆப்டிக்கல் ரெஸ்பான்ஸ் ஷீட்" (ஓ.ஆர்.எஸ்) முறை. விடைத்தாள் திருத்தச் செலவு இல்லை. எந்தப் பெரிய செலவும் இல்லாமல் ஒற்றைத் தாளுக்கு 1700 ரூபாய் கட்டணம் வாங்கும் தேசீய தேர்வு முகமை அதில் ஒரு பகுதியைச் செலவு செய்து குழந்தைகள் மன அழுத்தம் அடையாமல் பாதுகாப்புச் சோதனை நடத்தி இருக்கலாம். இதை ஏன் நமது ஆளுநர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடாது?

    தமிழகத்தில் மட்டும் சென்ற ஆண்டு சுமார் 25 கோடி ரூபாய் நீட் தேர்வுக் கட்டணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கிடைத்திருக்கும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு என்ன நன்மை செய்திருந்தார்கள்?

    இவ்வளவு கட்டணம் வசூல் செய்தும் வினாத்தாள் பற்றாக்குறை அவ்வப்போது எழுகிறது. கேள்வித்தாளைப் போட்டோகாப்பி எடுத்துக் கொடுத்துத் தாமதமாகத் தேர்வு எழுத வைத்த "ததிங்கிணத்தோம்" வேலைகள் எல்லாம் நடக்கின்றன. ஆங்கிலம் மற்றும் பிற மொழி கேள்வி மொழிபெயர்ப்புகள் வேறாக இருந்தன என்று வழக்குகள் தொடரப்படுகின்றன.

    நீட் தேர்விற்கான முடிவுகளை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைகாலத் தடை உத்தரவே பிறப்பித்தது. இப்படிப் பல்வேறு குளறுபடிகளுக்கு இடையே உச்சநீதிமன்றத்தின் தயவால் தான் நீட் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. "அடுத்த முறை இது போல் நடக்கக் கூடாது. கபர்தார்!" என்ற எச்சரிக்கை மட்டும் அவ்வப்போது எதிரொலிக்கும்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் டாக்டர் பி. கே என்ற பிரேம்குமார் நீட் பேப்பருக்கு 30 லட்ச ரூபாய் வீதம் பெற்றுக்கொண்டு வினாத்தாளை முன் கூட்டியே லீக் செய்து கேள்விகளுக்குப் பதிலும் தயாரித்து விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் பார்த்தார். நமது ஆளுநரின் மாநிலமான பீகாரைச் சேர்ந்த அந்த மோசடிப் பேர்வழி பற்றிய செய்திகள் வெளிவந்தபோது பல லட்சம் செலவு செய்து விடிய, விடியப் படித்த நமது மாணவ-மாணவியர் நொந்தே போனார்கள்.

    பி.கே. பிடிபட்டார். ஆனால் அவரிடம் கேள்வித்தாள் பெற்றவர்கள் இப்போது மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டும் இப்படிப்பட்ட புகார்கள் எழுந்தன. லீக் செய்யப்பட்ட வினாத் தாள்களில் காணப்பட்ட கேள்விகள் தேர்வுக் கேள்விகளோடு பெரும்பாலும் ஒத்துப் போயின. தேசிய தேர்வு முகமை மறுப்புத் தெரிவித்துவிட்டது.

    நீட் தேர்வின் தரம் பற்றிச் சிலாகிக்கும் ஆளுநர் ஆர். என். ரவிக்கு இவையெல்லாம் தெரியுமா? 7.5 சதவீதம் அரசுப் பள்ளி இட ஒதுக்கீடு இல்லையென்றால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் இந்த வாய்ப்பும் வந்திருக்காது. அதில் இடம் பெற்றவர்களுக்கான மொத்த கல்விச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது என்பதையாவது கவர்னருக்கு யாரேனும் சொன்னார்களா?

    நீட் தேர்வு முறையை நிராகரித்து இந்தியத் தலைமை நீதிபதி அல்டமஸ் கபீர் ஜூலை 18, 2013 அன்று பின்வருமாறு தீர்ப்பு எழுதினார்:

    "நகரங்களில் நவீன நாகரிக மருத்துவர்கள் தேவைப்படுவது போல் கிராமங்களில் ஏழை டாக்டர்கள் (bare foot doctors) தேவைப்படுகிறார்கள். நீட் முறையை அனுமதித்தால் இந்தியாவில் கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைவெளி அதிகரிக்கும். எனவே நீட் நிராகரிக்கப்பட வேண்டும்!"

    கபீர் ஓய்வு பெற்ற பிறகு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதே போன்ற இன்னொரு வழக்கு அரசமைப்புச்சட்ட அமர்வில் இருந்தது. எனவே நீட் சீராய்வு மனு அதற்கு மாற்றப்பட்டது.

    ஏப்ரல் 11, 2016-ல் சீராய்வு மனு அனுமதிக் கப்பட்ட உடன், சங்கல்ப் அறக்கட்டளை எனும் நிறுவனம் நீட் நடத்தவேண்டுமென்று பொது நல வழக்கு தாக்கல் செய்தது. (Sankalp Charitable Trust v. Union of India). இவ்வழக்கில் ஏப்ரல் 28, 2016- ம் தேதி சாதகமான உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். 2013ல் புதைக்கப்பட்ட நீட் பூதம் கொல்லைப்புற வழியாக 2016- ம் ஆண்டு உயிர்பெற்றது.

    ஆனால் இதுவரை சுப்ரீம்கோர்ட் இறுதி முடிவு எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் நீட் நரபலிகள் கூடிக் கொண்டே போகின்றன. கிட்டத்தட்ட 20 தற்கொலைகள். சமீபத்திய சோகம்: சென்னை குரோம்பேட்டை மாணவன் ஜெகதீஸ்வரன் மற்றும் அவனது தந்தை செல்வகுமார் ஆகியோரின் அகால மரணங்கள்!

    நீட் வந்த பிறகு மருத்துவக் கல்வியில் கட்டணக் கொள்ளை இல்லை என்ற ஆளுநரின் வாதம் அபத்தம். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படைத் தர வரிசைப்பட்டி யலில் எப்போதுமே அரசு கல்லூரிகளில் ஒரே கட்டணம் தான்! தனியார் கல்லூரிகளில் அரசு கோட்டா போக மீதியுள்ள நிர்வாகக் கோட்டாவிற்கு லட்சக்கணக்கில் பீஸ்! இப்போதும் அப்படியே!

    நீட்டில் பாஸ் அல்லது மினிமம் தகுதி மதிப்பெண் வாங்குபவன் தரமான மாணவன். எதிர்கால மருத்துவர். மாநிலப்பாடத் திட்டத்தில் அரசு பள்ளியில் படித்து 199 வாங்கி நீட் மதிப்பெண் குறைவாக வாங்கினால் மருத்துவம் படிக்கத் தகுதி அற்றவர்கள். பிரச்சினை மத்திய பாடத்திட்டமா, மாநிலப் பாடத்திட்டமா? நோ.. சார்.. நோ! இது இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான போராட்டம்.

    தரம் (Quality) என்றால் என்ன? ஒரு பொருள் தரும் பயனை அல்லது சேவையை அதே முயற்சியில் அல்லது அதே செலவில் கிடைக்கும் மற்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே தரத்தின் அளவீடு. (standard of something as measured against other things of a similar kind)

    தரம் என்ற போர்வையில் மாநிலப் பாடத் திட்டத்தையும், மத்திய பாடத் திட்டத்தையும் ஒப்பிடவே முடியாது. மத்திய பாடத் திட்டத் தேர்வு எம். சி. கியூ (MCQ) என்று சொல்லபட படும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறை. ஸ்டேட் போர்டு விரிவாக எழுதும் முறை. இரண்டையும் ஒரே தராசில் வைப்பது சரியா?

    ஏன் பிற மாநிலங்கள் நீட் எதிர்ப்புக் காட்ட வில்லை என்று கேட்கிறார்கள். வலியும், வேதனையும் வந்தவன் தானே கதற முடியும்?

    நீதி என்பது வெறுமனே வழங்கப்படுவது மட்டுமல்ல. வழங்கப்படுவதை அனைவரும் உணரச் செய்வது. உணர மறுப்பவர்களுக்கு எதிரான ஒரே ஆயுதம் போராட்டம் மட்டுமே!

    ஆளுநர் மாநில அரசின் அலங்காரத் தலைவர் மட்டுமே! அவர் ஆளவந்தார் போலக் கருத்துக் கூறுவதை பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லை என்பதை மறக்கக் கூடாது.

    • குடல் வால் அழுகி வெடித்தால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
    • அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சைக்கு அரைமணி நேர மயக்கமே போதுமானது.

    மனிதர்களுக்கு வயிற்று வலி என்பது பல வித காரணங்களால் வருகிறது. அதுவும் தொப்புள் அருகில் உண்டாகும் வலியானது குடல் வால் அழற்சி எனப்படும் அப்பெண்டிக்ஸ் பாதிப்பாக இருக்கலாம். இதனை சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். இந்த நோய் பாதிப்பு ஏன் உண்டாகிறது, அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏதேனும் பிரச்சினைகள் வருமா? என்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

    இன்றைய காலக்கட்டத்தில் மாறி வரும் உணவு முறை, அவசர, அவசரமாக இயங்க வேண்டிய வாழ்க்கைச்சூழல், மன அழுத்தம் போன்றவை காரணமாக அல்சர், அஜீரணம், புற்றுநோய் உள்ளிட்ட வயிற்று பிரச்சினைகள் பலருக்கும் ஏற்படுகின்றன. இவற்றில் குழந்தைகளையும், இளம் வயதினரையும் அதிகம் பாதிக்கின்ற ஒரு முக்கிய நோய் குடல் வால் அழற்சி (அப்பெண்டிக்ஸ்). சமீபத்தில் கிடைத்துள்ள புள்ளி விவரப்படி 5 முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகமாக வருகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய இளம்பெண்களுக்கு இதன் தாக்கம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒரு பெண்மணி தனது மகனை ஆஸ்பத்திரிக்கு பதட்டத்துடன் அழைத்து வந்தார். என்ன பிரச்சினை என்று கேட்டபோது பையனுக்கு பயங்கரமான வயிற்று வலி, வேதனையால் துடிக்கிறான் என்றார். அவனுக்கு வயது என்னவென்று கேட்டபோது 6 வயது என்றார்.

    காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கூடத்துக்கு நல்லா தான் புறப்பட்டுச் சென்றான். பள்ளிக்கு போன ஒரு மணி நேரத்தில் அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே ஆசிரியை எனக்கு போன் செய்து சொன்னார்கள்.

    நான் வீட்டுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தேன். வயிற்றை தொட்டு பார்த்தேன். தொப்புள் அருகே வலிப்பதாக சொன்னான். கொஞ்சம் எண்ணையை போட்டு நீவி விட்டேன். சிறிது நேரம் படுத்திருந்தவன் மீண்டும் வலிப்பதாக துடிக்க ஆரம்பித்து விட்டான். உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தேன் என்று சொன்னார்.

    அந்த சிறுவனை பரிசோதித்து பார்த்து அப்பெண்டிக்ஸ் பாதிப்பு போல் இருப்பதாக தெரிவித்தேன். அப்பெண்டிக்ஸ் என்பது குடலில் ஏற்படும் ஒரு வால் பகுதி. வயிற்றில் சிறுகுடல் 21 அடி நீளம் இருக்கும். பெருங்குடல் 6 அடி நீளம் இருக்கும். சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில் இந்த குடல் வால் உண்டாகும்.

    அதாவது நம் அடி வயிற்றில் வலது பக்கத்தில் இடுப்பு எலும்புக்கு சற்று மேலே சிறுகுடல் முடிந்து பெருங்குடல் தொடங்கும் இடத்தில் மிளகாய் அளவுக்கு தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பு குடல் வால். இதன் நீளம் 7 சென்டி மீட்டர் முதல் 10 சென்டி மீட்டர் வரை இருக்கும்.

    இந்த உறுப்பு தேவையில்லாத, உபயோக மற்றதாக காணப்படும்.

    நாம் சாப்பிடும் உணவில் உள்ள விதைகள் போன்ற ஏதாவது ஒரு பொருள் அந்த குடல் வாலில் போய் மாட்டிக் கொள்ளும். சிலருக்கு உடலில் குடற்பூச்சிகள் இருக்கும். அந்த பூச்சிகளும் குடலில் போய் சிக்கிக் கொள்ளும். நாட்கள் ஆக, ஆக குடல் வாலில் சிக்கிக் கொள்ளும் பொருட்களோ, பூச்சிகளோ அழுகி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கும். இதனால் வயிற்றில் பயங்கரமான வலி ஏற்படும். தொப்புளை சுற்றி இந்த வலி ஏற்பட்டிருக்கும். சிறிது நேரத்தில் அந்த வலி வயிற்றின் வலதுபக்கத்துக்கு தாவி விடும்.


    ஜி. பக்தவத்சலம்

    ஜி. பக்தவத்சலம்


    அப்போது வாந்தி வரும், லேசான காய்ச்சல் அடிக்கும். பசி குறையும். மலச்சிக்கல் ஏற்படும். சிலருக்கு வயிற்றுப் போக்கு இருக்கலாம். வயிறும் உப்பிப் போகும். நடந்தாலோ, இருமினாலோ, வயிற்றை தொட்டாலோ வலி அதிகரிக்கும். வயிற்றில் தொட்டுப் பார்த்தால் அம்மாவென அலறுவார்கள். அவர்களால் நிமிர்ந்து நடக்க முடியாது. வலியை குறைக்க குனிந்தபடி நடப்பார்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் அப்பெண்டிக்ஸ் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

    அப்பெண்டிக்ஸ் பாதிப்பு எந்த வயதினருக்கும் வரலாம். எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் அப்பெண்டிக்ஸ் பாதிப்பை கண்டுபிடிக்க முடியாது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்தால் தெரிந்து விடும். ரத்த பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு விட்டால் உடனடியாக அதனை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய வகையில் பாதிப்பு அதிகமாகும்.

    அந்த பெண்மணி அழைத்து வந்த சிறுவனுக்கும் இதேபோன்று பரிசோதனைகள் செய்யப்பட்டு அப்பெண்டிக்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த குடல் வாலை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தேன். அறுவை சிகிச்சை என்றதும் அந்த பெண்மணி அதிர்ச்சி அடைந்து விட்டார். 6 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா? என கேட்டு கண் கலங்கினார். அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை என்பது மிகவும் எளிதான அறுவை சிகிச்சை தான். ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் இருந்தால் போதுமானது. வீட்டுக்கு திரும்பி விடலாம் என விளக்கினோம்.

    முன்பொரு காலத்தில் அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை என்பது பெரிய விஷயமாக கருதப்பட்டது. இன்றைய நவீன உலகில் எளிதாகி விட்டது. மயக்கவியல் நிபுணரை அழைத்து பாதிக்கப்பட்ட நபருக்கு மருந்து கொடுக்கச் சொல்வோம். உடனே அந்த நபர் தூங்கி விடுவார். உடனே லேப்ராஸ்கோபி மருத்துவர், சிறிய ஓட்டை போட்டு அந்த அப்பெண்டிக்சை உருவி எடுத்து விடுவார். அவ்வளவு தான் அறுவை சிகிச்சை. இதற்கு 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். அறுவை சிகிச்சை செய்த மறுநாள் வீட்டுக்கு திரும்பி விடலாம்.

    அறுவை சிகிச்சை செய்யாமல் அப்பெண்டிக்ஸ்சுக்கு மருந்து மட்டும் கொடுத்து சரி செய்யலாமா? என கேட்டால் இது மருந்து கொடுத்து சரி செய்யக் கூடிய பாதிப்பு இல்லை. எப்போது அப்பெண்டிக்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதோ உடனே அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றுவதே சிறந்தது. எத்தனையோ வகையான டான்சில்ஸ் பாதிப்புகள் இருக்கின்றன. அவற்றை மருந்து கொடுத்து சரி செய்யலாம். உடலில் கொப்புளங்கள் வருகிறது என்றால் அதற்கு மருந்து கொடுத்து சரி செய்யலாம். ஆனால் குடல் பகுதியில் உருவாகும் அப்பெண்டிக்ஸ் வீங்கி விட்டது என்றால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து போகும். அப்பெண்டிக்ஸ் வெடிப்பதற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டோம் என்றால் உயிருக்கு ஆபத்து இல்லை. வெடித்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே இருக்கிற சீழ் உடல் முழுவதும் பரவி விடும். அப்போது வயிற்றின் உள்ளறை முழுவதும் கிருமிகள் பரவி நோய் கடுமையாகும். நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

    உடலுக்கு தேவையில்லாத உறுப்பு தான் என்றாலும் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் உண்டு என்ற பழமொழிக்கேற்ப குடல் வாலில் பாதிப்பு ஏற்பட்டால் உடல் முழுமையாக பாதிப்படையும். குடல் வால் அழுகி வெடித்தால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

    என்ன சார் மயக்க மருந்து கொடுக்கணும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பயமுறுத்துகிறீர்களே என கேட்கலாம். மயக்க மருந்து கொடுத்தால் ஆபத்து என்பது அந்த காலம். இப்போதெல்லாம் மயக்கவியல் டாக்டர், அறுவைசிகிச்சைக்கு நோயாளியை மயக்கம் அடையச் செய்ய ஒரு ஊசி போடுகிறார். உடனே நோயாளி மயக்கம் அடைந்து தூங்கி விடுகிறார். அறுவை சிகிச்சை முடிந்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து விடும். அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சைக்கு அரைமணி நேர மயக்கமே போதுமானது.

    பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் தான் 5 மணி நேரம், 6 மணி நேரம் ஆகும். மூளை அறுவை சிகிச்சை என்றால் 8 மணி நேரம் கூட ஆகும். எனவே அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனைத்து ஊர்களிலும் சிறந்த மருத்துவர்கள் உள்ளனர். நல்ல மருத்துவமனை, மருத்துவர்களை தேர்வு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். நோயாளிக்கு அப்பெண்டிக்ஸ் பாதிப்பு தான் என்பதை உறுதி செய்தபிறகே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். பொத்தாம் பொதுவாக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது. அப்பெண்டிக்ஸ் பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதிப்பு வரும்.

    தடுப்பது எப்படி?

    தெருக்களில் விற்கப்படும் ஈக்கள் மொய்க்கும் அசுத்த உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். கொதிக்க வைத்து ஆற வைத்த சுத்தமான தண்ணீரையே எப்போதும் குடிநீராக பயன்படுத்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவோருக்கு குடல்வால் நோய் வர வாய்ப்பில்லை என்பதால் கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள், பயறு வகைகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளும் குடற்புழு தொல்லை ஏற்படாமலிக்க மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மூன்றில் இருந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை புழுநீக்கம் செய்யும் மாத்திரையை தரலாம்.

    தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630

    ×