என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இதயம் ஒரு கோவில்- குடல் வால் அழற்சி நோய்க்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா?
    X

    இதயம் ஒரு கோவில்- குடல் வால் அழற்சி நோய்க்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா?

    • குடல் வால் அழுகி வெடித்தால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
    • அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சைக்கு அரைமணி நேர மயக்கமே போதுமானது.

    மனிதர்களுக்கு வயிற்று வலி என்பது பல வித காரணங்களால் வருகிறது. அதுவும் தொப்புள் அருகில் உண்டாகும் வலியானது குடல் வால் அழற்சி எனப்படும் அப்பெண்டிக்ஸ் பாதிப்பாக இருக்கலாம். இதனை சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். இந்த நோய் பாதிப்பு ஏன் உண்டாகிறது, அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏதேனும் பிரச்சினைகள் வருமா? என்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

    இன்றைய காலக்கட்டத்தில் மாறி வரும் உணவு முறை, அவசர, அவசரமாக இயங்க வேண்டிய வாழ்க்கைச்சூழல், மன அழுத்தம் போன்றவை காரணமாக அல்சர், அஜீரணம், புற்றுநோய் உள்ளிட்ட வயிற்று பிரச்சினைகள் பலருக்கும் ஏற்படுகின்றன. இவற்றில் குழந்தைகளையும், இளம் வயதினரையும் அதிகம் பாதிக்கின்ற ஒரு முக்கிய நோய் குடல் வால் அழற்சி (அப்பெண்டிக்ஸ்). சமீபத்தில் கிடைத்துள்ள புள்ளி விவரப்படி 5 முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகமாக வருகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய இளம்பெண்களுக்கு இதன் தாக்கம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒரு பெண்மணி தனது மகனை ஆஸ்பத்திரிக்கு பதட்டத்துடன் அழைத்து வந்தார். என்ன பிரச்சினை என்று கேட்டபோது பையனுக்கு பயங்கரமான வயிற்று வலி, வேதனையால் துடிக்கிறான் என்றார். அவனுக்கு வயது என்னவென்று கேட்டபோது 6 வயது என்றார்.

    காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கூடத்துக்கு நல்லா தான் புறப்பட்டுச் சென்றான். பள்ளிக்கு போன ஒரு மணி நேரத்தில் அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே ஆசிரியை எனக்கு போன் செய்து சொன்னார்கள்.

    நான் வீட்டுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தேன். வயிற்றை தொட்டு பார்த்தேன். தொப்புள் அருகே வலிப்பதாக சொன்னான். கொஞ்சம் எண்ணையை போட்டு நீவி விட்டேன். சிறிது நேரம் படுத்திருந்தவன் மீண்டும் வலிப்பதாக துடிக்க ஆரம்பித்து விட்டான். உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தேன் என்று சொன்னார்.

    அந்த சிறுவனை பரிசோதித்து பார்த்து அப்பெண்டிக்ஸ் பாதிப்பு போல் இருப்பதாக தெரிவித்தேன். அப்பெண்டிக்ஸ் என்பது குடலில் ஏற்படும் ஒரு வால் பகுதி. வயிற்றில் சிறுகுடல் 21 அடி நீளம் இருக்கும். பெருங்குடல் 6 அடி நீளம் இருக்கும். சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில் இந்த குடல் வால் உண்டாகும்.

    அதாவது நம் அடி வயிற்றில் வலது பக்கத்தில் இடுப்பு எலும்புக்கு சற்று மேலே சிறுகுடல் முடிந்து பெருங்குடல் தொடங்கும் இடத்தில் மிளகாய் அளவுக்கு தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பு குடல் வால். இதன் நீளம் 7 சென்டி மீட்டர் முதல் 10 சென்டி மீட்டர் வரை இருக்கும்.

    இந்த உறுப்பு தேவையில்லாத, உபயோக மற்றதாக காணப்படும்.

    நாம் சாப்பிடும் உணவில் உள்ள விதைகள் போன்ற ஏதாவது ஒரு பொருள் அந்த குடல் வாலில் போய் மாட்டிக் கொள்ளும். சிலருக்கு உடலில் குடற்பூச்சிகள் இருக்கும். அந்த பூச்சிகளும் குடலில் போய் சிக்கிக் கொள்ளும். நாட்கள் ஆக, ஆக குடல் வாலில் சிக்கிக் கொள்ளும் பொருட்களோ, பூச்சிகளோ அழுகி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கும். இதனால் வயிற்றில் பயங்கரமான வலி ஏற்படும். தொப்புளை சுற்றி இந்த வலி ஏற்பட்டிருக்கும். சிறிது நேரத்தில் அந்த வலி வயிற்றின் வலதுபக்கத்துக்கு தாவி விடும்.


    ஜி. பக்தவத்சலம்


    அப்போது வாந்தி வரும், லேசான காய்ச்சல் அடிக்கும். பசி குறையும். மலச்சிக்கல் ஏற்படும். சிலருக்கு வயிற்றுப் போக்கு இருக்கலாம். வயிறும் உப்பிப் போகும். நடந்தாலோ, இருமினாலோ, வயிற்றை தொட்டாலோ வலி அதிகரிக்கும். வயிற்றில் தொட்டுப் பார்த்தால் அம்மாவென அலறுவார்கள். அவர்களால் நிமிர்ந்து நடக்க முடியாது. வலியை குறைக்க குனிந்தபடி நடப்பார்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் அப்பெண்டிக்ஸ் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

    அப்பெண்டிக்ஸ் பாதிப்பு எந்த வயதினருக்கும் வரலாம். எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் அப்பெண்டிக்ஸ் பாதிப்பை கண்டுபிடிக்க முடியாது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்தால் தெரிந்து விடும். ரத்த பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு விட்டால் உடனடியாக அதனை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய வகையில் பாதிப்பு அதிகமாகும்.

    அந்த பெண்மணி அழைத்து வந்த சிறுவனுக்கும் இதேபோன்று பரிசோதனைகள் செய்யப்பட்டு அப்பெண்டிக்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த குடல் வாலை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தேன். அறுவை சிகிச்சை என்றதும் அந்த பெண்மணி அதிர்ச்சி அடைந்து விட்டார். 6 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா? என கேட்டு கண் கலங்கினார். அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை என்பது மிகவும் எளிதான அறுவை சிகிச்சை தான். ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் இருந்தால் போதுமானது. வீட்டுக்கு திரும்பி விடலாம் என விளக்கினோம்.

    முன்பொரு காலத்தில் அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை என்பது பெரிய விஷயமாக கருதப்பட்டது. இன்றைய நவீன உலகில் எளிதாகி விட்டது. மயக்கவியல் நிபுணரை அழைத்து பாதிக்கப்பட்ட நபருக்கு மருந்து கொடுக்கச் சொல்வோம். உடனே அந்த நபர் தூங்கி விடுவார். உடனே லேப்ராஸ்கோபி மருத்துவர், சிறிய ஓட்டை போட்டு அந்த அப்பெண்டிக்சை உருவி எடுத்து விடுவார். அவ்வளவு தான் அறுவை சிகிச்சை. இதற்கு 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். அறுவை சிகிச்சை செய்த மறுநாள் வீட்டுக்கு திரும்பி விடலாம்.

    அறுவை சிகிச்சை செய்யாமல் அப்பெண்டிக்ஸ்சுக்கு மருந்து மட்டும் கொடுத்து சரி செய்யலாமா? என கேட்டால் இது மருந்து கொடுத்து சரி செய்யக் கூடிய பாதிப்பு இல்லை. எப்போது அப்பெண்டிக்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதோ உடனே அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றுவதே சிறந்தது. எத்தனையோ வகையான டான்சில்ஸ் பாதிப்புகள் இருக்கின்றன. அவற்றை மருந்து கொடுத்து சரி செய்யலாம். உடலில் கொப்புளங்கள் வருகிறது என்றால் அதற்கு மருந்து கொடுத்து சரி செய்யலாம். ஆனால் குடல் பகுதியில் உருவாகும் அப்பெண்டிக்ஸ் வீங்கி விட்டது என்றால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து போகும். அப்பெண்டிக்ஸ் வெடிப்பதற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டோம் என்றால் உயிருக்கு ஆபத்து இல்லை. வெடித்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே இருக்கிற சீழ் உடல் முழுவதும் பரவி விடும். அப்போது வயிற்றின் உள்ளறை முழுவதும் கிருமிகள் பரவி நோய் கடுமையாகும். நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

    உடலுக்கு தேவையில்லாத உறுப்பு தான் என்றாலும் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் உண்டு என்ற பழமொழிக்கேற்ப குடல் வாலில் பாதிப்பு ஏற்பட்டால் உடல் முழுமையாக பாதிப்படையும். குடல் வால் அழுகி வெடித்தால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

    என்ன சார் மயக்க மருந்து கொடுக்கணும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பயமுறுத்துகிறீர்களே என கேட்கலாம். மயக்க மருந்து கொடுத்தால் ஆபத்து என்பது அந்த காலம். இப்போதெல்லாம் மயக்கவியல் டாக்டர், அறுவைசிகிச்சைக்கு நோயாளியை மயக்கம் அடையச் செய்ய ஒரு ஊசி போடுகிறார். உடனே நோயாளி மயக்கம் அடைந்து தூங்கி விடுகிறார். அறுவை சிகிச்சை முடிந்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து விடும். அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சைக்கு அரைமணி நேர மயக்கமே போதுமானது.

    பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் தான் 5 மணி நேரம், 6 மணி நேரம் ஆகும். மூளை அறுவை சிகிச்சை என்றால் 8 மணி நேரம் கூட ஆகும். எனவே அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனைத்து ஊர்களிலும் சிறந்த மருத்துவர்கள் உள்ளனர். நல்ல மருத்துவமனை, மருத்துவர்களை தேர்வு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். நோயாளிக்கு அப்பெண்டிக்ஸ் பாதிப்பு தான் என்பதை உறுதி செய்தபிறகே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். பொத்தாம் பொதுவாக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது. அப்பெண்டிக்ஸ் பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதிப்பு வரும்.

    தடுப்பது எப்படி?

    தெருக்களில் விற்கப்படும் ஈக்கள் மொய்க்கும் அசுத்த உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். கொதிக்க வைத்து ஆற வைத்த சுத்தமான தண்ணீரையே எப்போதும் குடிநீராக பயன்படுத்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவோருக்கு குடல்வால் நோய் வர வாய்ப்பில்லை என்பதால் கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள், பயறு வகைகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளும் குடற்புழு தொல்லை ஏற்படாமலிக்க மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மூன்றில் இருந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை புழுநீக்கம் செய்யும் மாத்திரையை தரலாம்.

    தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630

    Next Story
    ×