என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமையில் நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள்
    X

    முதுமையில் நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள்

    • வயது முதிர்ந்த காலத்தில் உறக்கம் சற்று அதிகம் தேவை.
    • எளிமையான யோகாசனப் பயிற்சிகள் முதுமையில் உடலுக்கு பலத்தை தரும்.

    முதுமையில் சவாலாகும் எண்ணற்ற உடலியல் மாறுபாடுகள் பல்வேறு நோய்களுக்கு காரணமாகின்றன. இந்த சூழலில் மென்மேலும் நோய்நிலைகள் அதிகமாவதைத் தடுக்க சரியான உணவு பழக்கவழக்கங்களையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியம்.

    இராச உறுப்புகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பல்வேறு தொற்றா நோய்நிலைகளான சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, இதய நோய், பக்கவாதம் ஆகிய முக்கிய நோய்நிலைகளுக்கு காரணமாகின்றன. இத்தகைய நோய்நிலைகள் முதுமையில் ஒரு கட்டத்தில் மனத்தடுமாற்றத்தை உண்டாக்கி, என்ன தான் வாழ்க்கை இது? என்கிற அளவிற்கு மனச்சோர்வினை உண்டாக்கி, வாழ்க்கையின் இறுதி கட்டத்தைப் பற்றிய அச்சத்தை உண்டாக்கி விடுகிறது.

    எனவே முதுமையில் நோய்களைத் தடுக்க ஆரோக்கியமளிக்கும் சத்தான உணவு முறைகளோடு, எளிய வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடிப்பதும் அவசியம். அதிகாலை எழுதலும், இரவில் சீக்கிரம் படுக்கைக்கு செல்லுதலும் கூட ஒரு வகையில் ஆரோக்கியத்திற்கு பலம் தான்.

    வயது முதிர்ந்த காலத்தில் உறக்கம் சற்று அதிகம் தேவை. உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் அதிக அசதியால் அவ்வப்போது ஓய்வு எடுப்பதும் நல்லது. அத்துடன் காலையில் திருமூலர் கூறிய எளிய யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வது நலம் தரும்.

    எளிமையான யோகாசனப் பயிற்சிகள் முதுமையில் உடலுக்கு பலத்தை தரும். தசைகளுக்கும், மூட்டுகளுக்கும் நன்மை பயக்கும். மூட்டுகளின் விறைப்புத் தன்மையைக் குறைக்கும். மூட்டுக்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதால் நாட்பட்ட மூட்டுக்கள் சார்ந்த வலிகளில் நல்லதொரு முன்னேற்றம் தந்து நிம்மதி பெருமூச்சுக்கு வழி வகுக்கும். முதுகு வலி, மூட்டு வலிகளில் நல்ல நிவாரணம் தரும். இயல்பான தூக்கத்தையும், மன அமைதியையும் தரும். இதயதுடிப்பு மற்றும் அதிகரித்த இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

    யோகாசன முறைகளில் நின்று கொண்டு பயிற்சி செய்யும் யோகாசனங்களான தாடாசனம், உட்கட்டாசனம், திரிகோணாசனம், படுத்த நிலையில் செய்யும் மக்ராசனம், புயங்காசனம், சவாசனம், பாவன முக்தாசனம், சேதுபந்தாசனம், உட்கார்ந்த நிலையில் செய்யும் பட்சிமோத்தாசனம், வக்ராசனம், உஷ்ட்ராசனம் போன்ற எளிய ஆசனப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

    தினசரி 15 நிமிடங்கள் இத்தகைய யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேலும் சூரிய வணக்கம் தினசரி 5 நிமிடங்கள் மெதுவாக செய்வதும் அதிக நன்மை பயக்கும். அதனைத் தொடர்ந்து 'பிராணாயாமம்' எனும் மூச்சுப் பயிற்சி தினசரி 7 நிமிடங்கள் செய்வதும் உடலுக்கு பலம் தரும். சுருங்கிய நுரையீரலுக்கு புத்துணர்ச்சி தரும். மூச்சு வாங்கும் சிரமம் குறையும்.

    மூச்சுப் பயிற்சியினை தொடர்ந்து தியானப் பயிற்சிகளை மேற்கொள்வது இன்னும் அதிகம் நன்மை பயக்கும். ஏனெனில் நாட்பட்ட மன அழுத்தமே 80% நோய்நிலைகளுக்கு காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வறிக்கைகள். நாட்பட்ட மன அழுத்தத்தால் மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் சார்ந்த ஹார்மோன் அச்சு பாதிக்கப்பட்டு பல்வேறு ஹார்மோன் மாற்றக் கோளாறுகளை உண்டாக்கும்.

    உடலின் இயங்குவியலில் மன அழுத்தத்தின் இறுதியில் 'குளுக்கோகார்டிகாய்டுகள்' எனப்படும் ஸ்டீராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்கது 'கார்டிசோல்' எனும் ஹார்மோன் தான். இதுவே "ஸ்ட்ரெஸ் ஹார்மோன்" என்ற பட்டபெயருக்கும் உரித்தானது. இந்த கார்டிசோல் உற்பத்தி அதிகரிப்பின் பல்வேறு மாறுதல்கள் உடலில் ஏற்பட்டு முதுமையை சீரழிக்கும்.

    உடலில் பல்வேறு வீக்கங்களை உண்டாக்கும் வேதிநொதிகள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு, நோய் எதிர்ப்புசக்தி மண்டலமும் பாதிக்கப்படும். முதுமையில் உண்டாகும் முடக்கு வாத நோய்களுக்கும், பக்க வாதம் மற்றும் திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும் இந்த மனஅழுத்தம் சார்ந்து உண்டாகும் வேதி வினைகளே காரணமாகின்றன. ஆதலால் முதுமையில் மன அழுத்தத்தை கொஞ்சம் ஓரங்கட்டி, பேரப் பிள்ளைகளோடு கொஞ்சி பேசி விளையாடுவதும், தியானப் பயிற்சி பழகுவதும் ஆயுளை அதிகரிக்க உதவும்.

    மன அழுத்தத்தால் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பு மண்டலங்களும் தனித்தனியே பல்வேறு மாறுதல்கள் அடையக்கூடும். இன்றைய நவீன மருத்துவ உலகத்துக்கு சவாலாக உள்ள குடல் அரிப்பு நோய் (IBS), பெருங்குடல் அழற்சி நோய் (கொலைட்டிஸ்) போன்ற பல்வேறு நோய்நிலைகளுக்கு முக்கிய காரணமே இந்த நாட்பட்ட மனஅழுத்தம் தான்.

    தியானம் முதுமையில் மிகப்பெரிய பலம். மனதிற்கு அமைதியை கொடுப்பதுடன், உடலுக்கும் மனத்திற்கும் பலம் தரும். உடலும், மனமும் வெதும்பி, தன் மீது அக்கறை காட்ட ஒருவரும் இல்லை என்ற எதிர்மறை எண்ணம் முதுமையில் பல்வேறு நோய்நிலைகளுக்கு ஆதாரமாகின்றது. "மனமது செம்மையானால், மந்திரம் செபிக்க வேண்டாம்" என்கிறது திருமந்திரம் மட்டுமல்ல, நவீன மருத்துவமும் தான்.

    முதுமையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் பல்வேறு மருத்துவ நன்மைகளை அளிப்பதாக அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம் பட்டியலிடுகின்றது. முக்கியமாக இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், சர்க்கரை வியாதியைக் கட்டுக்குள் வைக்கவும் பேருதவி புரியும். இவை இரண்டையும் கட்டுக்கள் வைப்பது என்பது, முதுமையில் மாரடைப்பு, பக்கவாதம் (STROKE) ஆகிய நோய்நிலைகளை விரட்டுவதற்கு உதவும். மேலும் முதுமையில் உண்டாகும் மூட்டு வலியை தடுப்பதற்கும் நடைப்பயிற்சி உதவுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

    ஒருபடி கூடுதலாக, நடைப்பயிற்சி மேற்கொள்வது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினை குறைப்பதாக ஆய்வுகள் கூறுவது கூடுதல் சிறப்பு. நடைப்பயிற்சி அதுவும் முதுமையில் பெண்களைப் பாதிக்கும் மார்பக புற்றுநோயினை 14% வரை தடுக்கக்கூடியதாக உள்ளது. வாரந்தோறும் குறைந்தது 7 மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் அத்தகைய நன்மை கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, புற்றுநோய் நிலையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே நெருங்கும் எமனை எட்டி உதைத்து, ஆயுளைக் கூட்ட, நமது கால்களே போதும் என்கிறது நவீன அறிவியல்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் நடைப்பயிற்சி மேற்கோள்பவர்கள், வாரத்திற்கு ஒருமுறை அல்லது அதற்கும் குறைவாக உடற்பயிற்சி செய்பவர்களை விட, நோய்வாய்ப்படும் அளவு 43% குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் நோய்வாய்ப்பட்டால், அது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டும் இருக்கும் எனவும், அவர்களின் அறிகுறிகள் லேசானவை தான் என்றும் முடிவுகள் தெரிவிப்பது நடைப்பயிற்சியின் மகத்துவத்தை உணர்த்துகின்றது.

    சித்த மருத்துவம் கூறும் மருத்துவ நெறிமுறைகளில் 6 மாதத்திற்கொரு முறை பேதிக்கு மருந்து எடுப்பதன் மூலம் உடலில் முறை தவறிய வாதம் தன்னிலைக்கு வரும். ஆனால் முதுமையில் பேதி மருந்து எடுப்பது உகந்ததல்ல. ஆதலால் மலத்தை இளக்கி வெளிப்படுத்தும் இலகுவான மருந்துகளை எடுத்துக்கொள்வது வாதத்தைக் குறைத்து பல்வேறு நோய்நிலைகளில் நன்மை பயக்கும். வாதமலாது மேனி கெடாது என்பது தேரையர் சித்தரின் வாக்கு. ஆகையால் உடல் நலம் குன்றாமல் இருக்க அவ்வப்போது குடல் சுத்தம் செய்துகொள்வது உடலுக்கு நன்மை தரும்.

    அதே போல் முதுமையில் சத்தான உணவினை நாடுவது ஒருபுறம் இருக்க, உண்ணும் உணவின் அளவைக் குறைப்பதும் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கின்றன சித்த மருத்துவ நூல்கள். மூன்று பொழுது உண்பவன் ரோகி என்று இருக்க, முதுமையில் உணவினை சுருக்கி இரண்டு வேளை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. 'பட்டினியை பெருமருந்து' என்று சித்த மருத்துவம் வலியுறுத்துகின்றது. இந்த கருத்தையே நவீன அறிவியலும் பட்டினி சிகிச்சை என்ற முறையை சமீப காலங்களில் பிரபலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    வேளை வேளைக்கு மருந்து மாத்திரைகள் தான் எடுத்துக்கொள்கிறோமே, இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியமா? என்கிற ஐயம் பலருக்குத் தோன்றும். உண்மையில் இத்தகைய பயிற்சிகள் மருந்து மாத்திரைகளை விட கூடுதல் பலனளிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நலத்திற்கு பாதை அளிக்கும்.

    சித்த மருத்துவம் அருளிய வாழ்வியல் மாற்ற முறைகளும், ஆரோக்கியமான உடல்பயிற்சி முறைகளும், சத்தான உணவு முறைகளும், மனஅழுத்தம் போக்கும் தியானமும், மூச்சுப்பயிற்சியும், நடைப் பயிற்சியும், இவைகள் அடங்கிய நேர்மறையான வாழ்க்கை முறையும் உடலில் ஆரோக்கியத்திற்கு இயற்கை உரமாகும்.

    எதிர்மறையான வாழ்க்கை முறையே இதய அடைப்பு முதல் பல்வேறு வகையான நோய்நிலைகளுக்கு காரணம் என்கின்றன நவீன ஆய்வுகள். ஆகவே நல்ல உணர்வும், நல்ல உணவும், உடல் பயிற்சியும் முதுமையில் நோய்களைத் தடுப்பதோடு மன அழுத்தத்தைப் போக்கி, வாழ்நாளை ஆரோக்கியமாக கடக்க உதவும் உந்துதல்கள்.

    ஆக, முதுமை அடைந்து விட்டோம் என்று மனம் ஒடிந்து விடாமல், மனம் திறந்து பேசி மகிழ்ச்சியாக இருப்பது முதுமையின் இன்னல்களுக்கு மாபெரும் மருந்துப் பொட்டலம். இந்த இரகசியத்தை புரிந்து கொண்டு செயல்பட்டால் முதுமை என்றுமே இளமை தான்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×