என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இதய அறுவை சிகிச்சைக்கு பின் வாழ்க்கை முறை
    X

    இதய அறுவை சிகிச்சைக்கு பின் வாழ்க்கை முறை

    • மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரைகளை சரியாக சாப்பிட வேண்டும்.
    • உணவுக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

    மாரடைப்பு வந்தால் ஒரு ஸ்டென்ட் போட்டு விட்டால் போதும். திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்தால் போதும். அத்துடன் இதயநோய் சரியாகி விடும். நாம் அப்படியே இருந்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

    அது உண்மை அல்ல. உண்மை என்னவென்றால் ஸ்டென்ட் பண்றதோ, திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்வதோ இதய நோய் தாக்கத்திற்கான தீர்வு தான். அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளை தற்காலிகமாக தீர்ப்பதற்கான வழி தான் அது.

    ஸ்டென்டிங் அல்லது திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்த நிறைய பேர் ஒரு வருடம் அல்லது 2 வருடம் முறையாக மருந்து எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு பிறகு மருத்துவர்கள் சொல்வதை கடைபிடிக்காமல் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் பலன் முழுமையாக கிடைக்காமல் போய் விடுகிறது.

    உதாரணத்துக்கு அமெரிக்காவில் ஒருவர் 39 ஆண்டுகளில் 4 முறை திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார். இதற்கு அவர் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு கட்டுப்பாடுகளோடு இருப்பது தான் காரணம். அதனால் அறுவை சிகிச்சை செய்வதும், ஸ்டென்டிங் போடுவதும் மட்டும் முக்கியம் அல்ல. அதற்கு பிறகு நமது வாழ்க்கை முறையை எப்படி மாற்றி பராமரிக்க போகிறோம் என்பது தான். அதன் மூலமாகத்தான் இந்த சிகிச்சையின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என்று சில விஷயங்கள் உள்ளன.

    மாத்திரைகள்: மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரைகளை சரியாக சாப்பிட வேண்டும். அதுவும் குறித்த நேரத்திற்கு, குறித்த அளவிற்கு சாப்பிட வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் மருத்துவருடைய அறிவுரை இன்றி மருந்து, மாத்திரைகளை அதிகப்படுத்துவதோ, குறைப்பதோ கூடாது. இது மிகவும் முக்கியமானது.

    அறுவை சிகிச்சை செய்த பின் எந்த சமயம் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதோ, உடனடியாக நீங்கள் சிகிச்சை பெறும் மருத்துவரை சென்று பார்த்து விட வேண்டும். நாட்டு வைத்தியம் செய்வது, வீட்டு வைத்தியம் செய்வது இதெல்லாம் ஆபத்தில் போய் முடியும்.

    உணவுக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்த பின்னர் 2 வாரத்துக்கு நாக்கில் ருசியே இருக்காது என்பார்கள். கண்டிப்பாக 2-ல் இருந்து 3 வாரங்களுக்கு ருசி தெரியாது. சாப்பிடவே சலிப்பாக இருக்கும். 3 வாரத்துக்கு தூக்கம் வராது. இதெல்லாம் பொதுவாக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரக்கூடியது. இதில் இருந்து வெளியே வர மனப்பக்குவம் அவசியம். தியானம் செய்யலாம், சுவாச பயிற்சி செய்யலாம். சுவாச பயிற்சி செய்வதால் நுரையீரலில் சளி கட்டுவதையும் குறைக்க முடியும்.

    மட்டன் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம். சிக்கன் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் குழம்பில் போட்டு சாப்பிடலாம். முட்டையில் மஞ்சள் கருவை தவிர்த்து விட்டு வெள்ளைக் கரு சாப்பிட்டுக் கொள்ளலாம். குழம்பில் போட்டு மீன் சாப்பிடலாம். பொறித்த, வறுத்த உணவுகளை சாப்பிடவே கூடாது. பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    இதய வால்வு மாற்றியவர்கள் கீரை, முட்டைக்கோஸ், புரோகலி, காலிபிளவர் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இதய வால்வு மாற்றியவர்களுக்கு ரத்தத்தை எப்போதும் தண்ணீராக வைத்துக் கொள்வதற்காக மருந்து, மாத்திரைகள் கொடுக்கிறோம். இந்த உணவுப் பொருட்கள் எல்லாம் சாப்பிட்டால் அதனுடைய பலன் குறைந்து விடும்.

    தண்ணீர் கட்டுப்பாடு: ஒருவேளை நீங்கள் பரிசோதிக்கும் மருத்துவர் ஒரு நாளைக்கு 2 லிட்டரோ, ஒன்றரை லிட்டரோ தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் கண்டிப்பாக அந்த அளவு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக குடித்தால் இதயத்தின் வேலைப்பளு அதிகமாகும். இதய பம்பிங் மிகவும் சிரமப்பட்டு செயல்படும். அப்போது மூச்சுத்திணறல் வரும். உங்களால் வேலையை சரியாக செய்ய முடியாது. நிமிர்ந்து நேராக நடக்க முடியாது, மல்லாந்து படுக்க முடியாது. மருத்துவர் இதயத்தின் செயல்பாட்டை பொறுத்தே தண்ணீர் குடிப்பதற்கான கட்டுப்பாட்டை விதிக்கிறார் என்பதை புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து உடற்பயிற்சியும், நடைபயிற்சியும் முக்கியம். ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடம் நடக்க வேண்டும். முதல் 5 நிமிடம் மெதுவாக நடக்கத் தொடங்கி பின்னர் உங்கள் வேகத்தில் நடந்து கடைசி 5 நிமிடத்தில் மெதுவாக நடந்து முடிக்க வேண்டும். உடன் வருபவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்கக் கூடாது.

    எதிர்பாராமல் நீங்கள் நடக்கும் போது உங்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, தலைசுற்றல், மயக்கம் அல்லது படபடப்பு வந்தாலோ நடைபயிற்சியை நிறுத்தி விட்டு அதே இடத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். 5 நிமிடம் ஓய்வெடுத்து விட்டு உடல் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என உணர்ந்தால் தொடர்ந்து நீங்கள் நடக்கலாம். அல்லது வீடு திரும்பி விடலாம்.

    5 நிமிட ஓய்வுக்கு பிறகு உடல் இயல்பாக வில்லை என்றால் ஆம்புலன்சோ, காரோ வரச் சொல்லி நேராக ஆஸ்பத்திரிக்கு போவது தான் நல்லது. இதுபோன்ற பாதிப்புகள் வரும்போது தயவு செய்து நீங்களாக வாகனம் ஓட்டிச் செல்லாதீர்கள். பிறரின் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்லுங்கள்.

    உடற்பயிற்சி: உடற்பயிற்சியில் உடலை தளர்வாக்கும் பயிற்சி அவசியம். அதற்கு முன்பாக 5 நிமிடம் வார்ம்அப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வார்ம்அப் என்பது உடலில் தசைகளை, தசை நார்களை சூடுபடுத்தக்கூடிய ஒரு பயிற்சி. அது செய்து விட்டால் உடற்பயிற்சி செய்வது எளிதாகி விடும். உடற்பயிற்சி செய்யும் போது மூச்சை பிடித்துக் கொண்டு எதையும் செய்யக் கூடாது. உதாரணத்துக்கு 2 கிலோ எடை தூக்குவதாக இருந்தால் மூச்சை பிடித்துக் கொண்டு அதனை செய்யக் கூடாது. சிலர் ரப்பர் பேண்ட் இழுத்து பயிற்சி செய்வார்கள். அதில் தவறு இல்லை. சைக்கிள் ஓட்டலாம். நிறுத்தி இருக்கும் சைக்கிளை ஓட்டி பயிற்சி எடுக்கலாம். டிரெட்மில் ஓட்டலாம். இதனை ஏரோபிக் உடற்பயிற்சி என்று சொல்வோம்.

    உங்களுடைய உடற்பயிற்சி திறமை எப்படி உள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற பயிற்சிகளை மேற்கொள்ள மருத்துவர்களும், பிசியோதெரபிஸ்டுகளும் ஆலோசனைகளை வழங்குவார்கள். அதன்படி உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. முடிக்கும் போது வார்ம் அப் செய்வது போல கூல்டவுன் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் மூச்சை பிடித்துக் கொண்டு இழுப்பதோ, தள்ளுவதோ, தூக்குவதோ கூடாது.

    உங்களுக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் நீங்கள் 3 கிலோவுக்கு மேல் எடை தூக்காதீர்கள். கைகளை பின்புறமாக மடக்காதீர்கள். அப்படி செய்தால் உங்கள் மார்பின் நடுப்பகுதியில் இருக்கும் தழும்பு பகுதியில் வலி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    மூச்சுப்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். பலூன் ஊதலாம். தவறு இல்லை. காற்றை உள்ளே இழுத்து மெழுகுவர்த்தி அணைக்கலாம். இதெல்லாம் அடிப்படை பயிற்சிகள் தான்.

    செய்யக் கூடாதவை: அறுவை சிகிச்சைக்கு பின் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது. ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சில்லி கோபி, பன்னீர் போன்ற பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது.

    நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். உட்கார்ந்து கொண்டு நீண்ட தூரம் செல்லக் கூடாது. ரெயில் அல்லது விமானத்தில் பயணிக்கலாம். அதில் இடையில் எழுந்து சிறிது தூரம் நடந்து கொள்ள வசதிகள் இருக்கிறது. காரில் போய் தான் ஆக வேண்டும் என்றால் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கி 5 நிமிடம் நடந்து ரிலாக்ஸ் ஆகி கொள்ளலாம். அதிக வெயில் காலத்திலும், குளிர் காலத்திலும் பயணத்தை தவிர்த்து விடுங்கள். உடற்பயிற்சியையும் அந்த சமயங்கள் தவிர்த்து விடுங்கள். இந்த 2 காலக்கட்டங்களுமே நமக்கு ஆபத்தானவை. காய்ச்சல், இருமல் இருந்தாலும் கூட பயணம் செய்ய வேண்டாம்.

    வாகனம் ஓட்டலாமா என்றால் கண்டிப்பாக ஓட்டக் கூடாது. எப்போது வாகனத்தை இயக்கலாம் என்று டாக்டர் சொல்லும் வரை அதனை இயக்கக் கூடாது. அதிகபட்சமாக 4 முதல் 6 வார ஓய்வுக்கு பிறகு வாகனங்களை இயக்க மருத்துவர் அனுமதி அளிப்பார். அந்த சமயம் வாகனத்தை இயக்கினால் போதும்.

    வேலைக்கு போகலாமா என்றால் தாராளமாக போகலாம். உடல் நிலை நன்றாக இருக்கிறது, சாப்பிட முடிகிறது. அஜீரண கோளாறு இல்லை, மலச்சிக்கல் இல்லை, அலுவலகத்தில சாதாரணமாக இருக்க முடியும். பிறர் துணை அவசியம் இல்லை என்று எண்ணினால் அலுவலகம் செல்லலாம்.

    மேலும் தினமும் 7 மணி நேரம் தூங்க வேண்டும். மதியம் தூங்க வேண்டிய அவசியம் இல்லை. மதியம் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மதியம் தூங்கினால் இரவில் தூக்கம் வராது.

    முடிந்தளவு அறுவை சிகிச்சை செய்தவர்களும், ஸ்டென்ட் போட்டவர்களும் சோபாவில் உட்கார கூடாது. தரையிலும் உட்கார வேண்டாம். அப்படி உட்கார்ந்தால் கையை ஊன்றி எழுந்திருக்கும் நிலை உள்ளது. அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சேர் அல்லது கட்டிலில் அமர்ந்து எழும்புங்கள்.

    ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் டி.வி. சீரியல் பார்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த ஓட்டம் மெதுவாக இருக்கும். அப்படி இருக்கும் போது ஒரே இடத்தில் அவர்கள் மணிக்கணக்கில் அமர்ந்து இருந்தால் உடல் பாதிப்பு ஏற்படும்.

    வேலைக்கு போகிறவர்களாக இருந்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நடந்து பழகுங்கள். தண்ணீர் பாட்டிலை அலுவலகத்தின் ஒரு ஓரமாக வைத்து விட்டு தாகம் எடுக்கும் போது எழுந்து சென்று தண்ணீரை குடிக்க பழகுங்கள். நீங்கள் முதல் தளத்தில் இருந்தால் சிறுநீர் கழிக்க தரைத்தளத்துக்கு வரலாம். தரைத்தளத்தில் இருந்தால் முதல் தளத்துக்கு செல்லலாம். அதிகம் சூடான நீரிலோ, அதிகம் குளிரான நீரிலோ குளிக்காதீர்கள். வெது, வெதுப்பான நீரில் குளியுங்கள்.

    இல்லற வாழ்க்கை: இப்போதெல்லாம் குறைந்த வயதிலேயே இதய நோய் வந்து விடுகிறது. அவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இதய நோயாளிகளாக இருப்பதால் அவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாமா என்ற கேள்வி எழும். நிச்சயமாக இல்லற வாழ்வை தொடரலாம். இதற்கும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். இதயத்தின் நிலை மற்றும் உடல்நிலையை பொறுத்து மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு வருமா என்றால் வர வாய்ப்புண்டு. வாழ்க்கை முறையை சரியாக கடைபிடிக்காமல் இருந்தால், மருந்து, மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடாமல் இருந்தால், கொழுப்பு உணவுகளை நிறைய சாப்பிட்டால், மது குடித்தால், சிகரெட் பிடித்தால் மீண்டும் மாரடைப்பு வரும். எனவே ஒருமுறை மாரடைப்பு வந்த பிறகாவது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு மீண்டும் வராமல் தடுக்கலாம்.

    தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630

    Next Story
    ×