என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கரு உருவாக்கும் கருவளர்ச்சேரி
- ஒரு பெண் கருவை சுமப்பதற்கு ஆதாரமாக திகழும் மூலத்தலமாக கரு வளர்ச்சேரி திகழ்கிறது
- கருவளர்ச்சேரிக்கு வரும்போது திருமணம் ஆன பெண்கள் தனியாக வருவதை தவிர்த்து கணவனுடன் வர வேண்டும்.
திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்ததும் அனைவரது எதிர்பார்ப்பும் "குழந்தை பேறு" பற்றியதாகத்தான் இருக்கும். 'என்ன ஏதாவது விசேஷம் உண்டா?' என்று புதுமண தம்பதிகளிடம் கேட்க தொடங்கி விடுவார்கள்.
ஒருவரிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாவிட்டால் முழுமையான வாழ்க்கை இல்லாததாகத்தான் கருதப்படும். ஏனெனில் மழலைகள் விளையாடாத வீடு ஒருவித வெறுமையுடன்தான் காணப்படும். எனவேதான் குழந்தை செல்வத்தை அற்புதமான வரம் என்று நமது முன்னோர்கள் சொல்லி உள்ளனர்.
ஒரு தம்பதி குழந்தை பெற்றால் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்துக்கு செல்கிறார்கள் என்று அர்த்தமாகும். தற்போதைய நவீன அறிவியல் வளர்ச்சி உலகில் மன அழுத்தம், சரியான தூக்கமின்மை, கணவன்-மனைவிக்கு இடையே அன்பு குறைவு போன்றவை காரணமாக குழந்தை பேறு பலருக்கும் வாய்க்காமல் உள்ளது.
திருமணமாகி சில ஆண்டுகள் கடந்து விட்டால் குழந்தை இல்லாத பெண்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. வெளியில் செல்லவே தயங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இத்தகைய நிலையில் இருக்கும் பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாக திகழ்கிறாள் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி.
கும்பகோணம் யாத்திரையில் மிக முக்கியமான இடம் கருவளர்ச்சேரிக்கு உண்டு. ஒரு பெண் கருவை சுமப்பதற்கு ஆதாரமாக திகழும் மூலத்தலமாக கரு வளர்ச்சேரி திகழ்கிறது. எனவே குழந்தை பேறுக்காக ஏங்கும் பெண்கள் அவசியம் வழிபட வேண்டிய தலமாக இந்த தலம் உள்ளது.
ஒரு பெண் கருத்தரிக்காமல் அவதிப்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அவை அனைத்தையும் நிவர்த்தி செய்து கருவை உண்டாக்கும் தாயாக அகிலாண்டேஸ்வரி இருப்பதால் அவளை, "கருவளர்த்த நாயகி" என்று பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்கள் இந்த தலத்துக்கு வந்து முறைப்படி வழிபாடுகள் செய்ய வேண்டும்.
கருவளர்ச்சேரிக்கு வரும்போது திருமணம் ஆன பெண்கள் தனியாக வருவதை தவிர்த்து கணவனுடன் வர வேண்டும். இல்லையெனில் குடும்பத்தினருடன் வரவேண்டும். நன்கு நீராடி தூய உடை அணிந்து வழிபாட்டுக்கு வரவேண்டி யது அவசியமாகும். கருவளர்ச்சேரி ஆலயத்துக்கு வந்ததும் முதலில் படிப்பூஜை செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
இதற்காக ஆலயத்துக்கு வருவதற்கு முன்பு பூஜை பொருட்களை தயாராக வாங்கி செல்ல வேண்டும். பூஜைக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்ற விவரம் வருமாறு:-
* 7 மஞ்சள் கிழங்கு * அந்த மஞ்சள் கிழங்குகள் உருண்டையாக இருக்க வேண்டும்.
* தீபம் ஏற்ற பசு நெய் * 2 எலுமிச்சை பழங்கள்
* தேங்காய் * வாழைப்பழம்
* வெற்றிலை பாக்கு * பூ- மாலை
* குங்குமம் * ஊதுபத்தி
இந்த பூஜை பொருட்களுடன் காலையிலேயே ஆலயத்துக்கு சென்று விட வேண்டும். அங்கு குறிப்பிட்ட நேரத்தில் படி பூஜை நடத்துவார்கள். குழந்தை வரம் வேண்டும் பெண்கள் அம்மன் சன்னதிக்கு சென்றதும் முதலில் அம்மனை மனதார வழிபட வேண்டும். "உன்னையே நம்பி வந்திருக்கிறேன் தாயே" என்று உருக்கமுடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அர்ச்சகர் வழிகாட்டுவது போல அம்மன் சன்னதியின் வாசல்படியை நெய்யினால் மெழுக வேண்டும். அதில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதையடுத்து அம்மனை நன்றாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அந்த பூஜை முடிந்ததும் அர்ச்சகர் அம்மனிடம் இருந்து எடுத்து வந்து 7 மஞ்சள் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தை பிரசாதமாக தருவார்.
பெண்கள் அவற்றை பயபக்தியுடன் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது மனதுக்குள் ஒரு சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். அதாவது கர்ப்பம் தரித்து வளைகாப்பு செய்யும்போது 7 வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக எடுத்து வைத்து விடுகிறேன் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
பிரசாதமாக தரப்பட்ட எலுமிச்சை பழம், மஞ்சள்களை கவனத்துடன் வீட்டுக்கு எடுத்து வரவேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து தம்பதிகள் மட்டுமே பருக வேண்டும். அர்ச்சகர் தந்த 7 மஞ்சள்களை வேண்டுதல் வைத்துள்ள பெண் மட்டுமே தொட வேண்டும். மற்றவர்கள் தொடக்கூடாது. அந்த மஞ்சள்களில் ஒன்றை எடுத்து அரைத்து அந்த பெண் குளிக்கும்போது பூசி வர வேண்டும். ஒரு மஞ்சள் முடிந்த பிறகு அடுத்த மஞ்சளை எடுத்து உபயோகிக்க வேண்டும். பாதம் தவிர உடலின் அனைத்து பாகங்களிலும் மஞ்சளை பூசி குளிக்கலாம். அம்பாளின் அனுக்கிரகத்தால் பெண்கள் கர்ப்பம் தரிப்பார்கள்.
அந்த அளவுக்கு கருவளர்ச்சேரியில் பெறப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது. அதனால்தான் குழந்தை பாக்கியம் வேண்டி தினமும் ஏராளமான பெண்கள் இந்த ஆலயத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
கருவளர்ச்சேரியில் இந்த வழிபாட்டை செய்து லட்சக்கணக்கான பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று இருக்கிறார்கள். இந்த ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரி சுயம்புவாக உருவாகி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். அந்த சுயம்பு போலவே தன்னை நாடி வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கரு உருவாக் கலை செய்து கொடுப்பதை அவள் கருணையாக கொண்டிருப்பதாக தல புராணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வேண்டுதல் நிறைவேறியதும் குழந்தைக்கு 2 வயது பூர்த்தி ஆவதற்குள் மீண்டும் அகிலாண்டேஸ்வரியை நாடி சென்று நன்றி சொல்ல வேண்டும். ஆலயத்தில் உள்ள தொட்டிலில் குழந்தையை வைத்து தாலாட்ட வேண்டும். வளைகாப்பின்போது அம்மனுக்காக எடுத்து வைத்திருந்த 7 வளையல்களையும் மறக்காமல் அகிலாண்டேஸ்வரிக்கு சமர்ப்பித்து வழிபட வேண்டும்.
அகத்தியர் தனது மனைவி லோபமுத்ராவுடன் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாடு செய்தார். அதன் மூலம் அவருக்கு சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமண காட்சி கிடைத்தது. இதனால் இந்த தலம் திருமண பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது.
கருவை உண்டாக்கி அந்த கரு அழகாக குழந்தை வடிவத்துக்கு மாறி வளர்வதற்கும் அகிலாண்டேஸ்வரி துணை புரிவதால் கருவை பாதுகாக்க நினைக்கும் பெண்களும் இந்த தலத்துக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் தொட்டில் கட்டி வழிபாடு செய்வதை காண முடிந்தது.
பல்வேறு சிறப்புகளுடன் திகழும் இந்த ஆலயம் 1000 ஆண்டுகள் பழமையானது. தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கருவளர்ச்சேரி ஆலயம் திறந்து இருக்கும்.
தாய்மை அடையும் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போவதால் தவிக்கும் பெண்கள் ஒருமுறை அகிலாண்டேஸ்வரியை பார்த்துவிட்டு வந்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும். ஏனெனில் தன்னை நாடி வந்து வணங்கும் பெண்களின் உடல் ரீதியிலான தோஷங்களை மட்டுமின்றி மன ரீதியிலான கஷ்டங்களையும் அகிலாண்டேஸ்வரி நீக்குகிறார் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்றும் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மட்டுமே அகிலாண்டேஸ்வரியின் முழு உருவத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் திருமுக தரிசனம் மட்டுமே பெற முடியும்.
கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் வழித்தடத்தில் சென்றால் மருதநல்லூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 2 கிலோ தொலைவில் கருவளர்ச்சேரி ஆலயம் உள்ளது.
சரி.... பெண்ணுக்கு கரு உருவாகி விட்டது. அடுத்து என்ன? அந்த கருவை பாதுகாத்து, சுகப்பிரசவம் பெறச் செய்ய வேண்டும். அதற்கு நாம் செல்ல வேண்டிய இடம் திருக்கருக்காவூர்.
கருவளர்ச்சேரி தலத்துக்கு மிக அருகிலேயே திருக்கருக்காவூர் உள்ளது. அடுத்த வாரம் திருக்கருகாவூர் தலத்தை பார்க்கலாம்.






