என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நோயற்ற வாழ்க்கைக்கு வைத்தீஸ்வரன் கோவில்
    X

    நோயற்ற வாழ்க்கைக்கு வைத்தீஸ்வரன் கோவில்

    • சித்தர்கள் தங்களது பாடல்களில் வைத்தீஸ்வரன் ஆலயத்தை மருத்துவத்தின் தலைமை பீடம் என்று புகழ்ந்து குறிப்பிட்டுள்ளனர்.
    • வைத்தீஸ்வரன் ஆலய தீர்த்த குளத்தை சித்தாமிர்த தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.

    நோய் இல்லாமல் வாழ்வது என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எவ்வளவுதான் செல்வம், செல்வாக்கு, புகழ் இருந்தாலும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் வாழ்க்கை முழுமை பெறாது. அதனால்தான் நோய் இல்லாமல் வாழ்வது இன்பம் என்று நமது முன்னோர்கள் சொல்லி உள்ளனர்.

    கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளுக்கு யாத்திரை செல்லும் போது நோயற்ற வாழ்வு பெறுவதற்கான வழிபாட்டை செய்து கொள்ள முடியும். கும்பகோணத்தில் இருந்து ஒவ்வொரு தலமாக பார்த்து விட்டு வரும்போது வைத்தீஸ்வரன் கோவில் தலத்துக்கும் அவசியம் செல்ல வேண்டும். இந்த தலம்தான் நோய்களை தீர்க்கும் அற்புதமான தலமாக கருதப்படுகிறது.

    இந்த தலத்தின் தல வரலாறு இதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஒரு தடவை அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. அந்த நோய் கடுமையால் அங்காரகன் கடுமையாக போராட வேண்டியது இருந்தது. இந்த நோயில் இருந்து விடுபட ஈசனை நோக்கி வழிபட்டார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. அதில், "வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று ஒரு மண்டலம் விரதம் இருந்து சித்தாமிர்த குளத்தில் நீராடி வைத்தியநாத சுவாமியை வழிபட்டால் வெண்குஷ்ட நோய் உடனே குணமாகி விடும்" என்று கேட்டது.

    உடனே அங்காரகன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று நீராடி வழிபட்டான். இதனால் அவனுக்கு ஏற்பட்டிருந்த வெண்குஷ்ட நோய் குணமானது. அங்காரகனை தொடர்ந்து ஏராளமான சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு பலன்களை பெற்றனர். இதனால் நோயற்ற வாழ்வு தரும் தலமாக வைத்தீஸ்வரன் கோவில் தலம் புகழ் பெற்றுள்ளது.

    4448 வகையான நோய்கள் இருப்பதாக உலகளவில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 4448 வகையான நோய்களையும் தீர்க்கும் ஒரே தலமாக இந்த தலம் திகழ்கிறது. எனவேதான் சித்தர்கள் தங்களது பாடல்களில் வைத்தீஸ்வரன் ஆலயத்தை மருத்துவத்தின் தலைமை பீடம் என்று புகழ்ந்து குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த தலத்தில் வழங்கப்படும் திருச்சாந்து என்ற மருந்து உருண்டை மிகவும் புகழ் பெற்றது. புற்றுமண், அபிஷேக தீர்த்தம், அபிஷேக சந்தனம், விபூதி மற்றும் வேப்பிலை கலந்து இந்த திருச்சாந்து மருந்து உருண்டை தயாரிக்கிறார்கள். வைத்தீஸ்வரன் பாதத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு தரப்படும் இந்த திருச்சாந்து மருந்து உருண்டையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்பது காலம் காலமாக பக்தர்கள் கண்டு வரும் உண்மையாகவும், அனுபவமாகவும் உள்ளது.

    திருச்சாந்து மருந்து உருண்டை தவிர இந்த தலத்தில் தரப்படும் வில்வம், தைலம், விபூதி போன்றவையும் சக்தி வாய்ந்தது.

    அதனால்தான் நோய் தீரும் என்ற நம்பிக்கையில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோவில் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். மருத்துவம் படித்தவர்கள் தங்களது கல்வியில் மேம்பாடு பெறுவதற்கு வைத்தீஸ்வரனை நாடுவது காலம் காலமாக ஒரு மரபு போலவே உள்ளது.

    தோல் நோயால் அவதிப்படுபவர்கள் இந்த தலத்தில் தரப்படும் புணுகு எண்ணையை வாங்கி பயன்படுத்தினால் உடனே பலன் கிடைக்கும்.

    இந்த தலத்தின் அருமையை உணர்ந்த சித்தர்கள் அனைவரும் இங்கு வந்து தியானம் செய்து அருள் பெற்றுள்ளனர். பெரும்பாலான சித்தர்கள் வைத்தீஸ்வரனுக்கு அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பலன்கள் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. சித்தர்கள் அபிஷேகம் செய்தபோது சிதறிய அமிர்தம் அங்குள்ள தீர்த்தத்தில் கலந்துள்ளன. எனவே தான் வைத்தீஸ்வரன் ஆலய தீர்த்த குளத்தை சித்தாமிர்த தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.

    சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடினாலே போதும் எந்த நோயாக இருந்தாலும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை. அதை உறுதிப் படுத்துவது போல இந்த தீர்த்தத்தில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன என்று சொல்கிறார்கள்.

    சீர்காழிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சுயம்பு மூர்த்தியாக ஈசன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மரகத லிங்கம் மிகவும் புகழ் பெற் றது. இந்த ஆலய கரு வறைக்கு பின்புறம் நவக்கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் அமைந் துள்ளன. பொதுவாக மற்ற ஆலயங்களில் நவக்கிரகங்கள் மூன்று வரிசையில் திசை மாறி அமைந்து இருப்பதை பார்த்து இருப்போம். ஆனால் இந்த தலத்தில் மட்டும்தான் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் இருப்பதை காண முடியும்.

    வைத்தியநாத சுவாமிக்கு நவக்கிரகங்களும் கட்டுப்பட்டு இருக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது. நவக்கிரகங்களில் எந்த கிரக தோஷம் ஏற்பட்டாலும் அதை வைத்தியநாத சுவாமி குணமாக்கி தன் பக்தனுக்கு சாதகமான பலனை வழங்குவார் என்பது ஐதீகமாகும். கிரகங்களை கட்டுப் படுத்துவ தால் நோய் மட்டுமின்றி தோஷங்களும் விலகுவதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.

    இந்த தலத்தில் அங்காரகன் தனி சன்னதியில் உள்ளார். செவ்வாய் தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இவரை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். குறிப்பாக ஜாதகத்தில் செவ்வாய் திசை நடப்பவர்கள் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். கடன் தொல்லை, நிலப்பிரச்சினை, நோய் பிரச்சினை போன்றவை செவ்வாய் கிரக அமைப்பால் படாதபாடுப்படுத்தி விடும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் தவறாமல் வைத்தீஸ்வரன் கோவிலில் வழிபட வேண்டி யது அவசியமாகும். குறிப்பாக செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அங்காரகனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூடும்.

    அம்பாள் பெயர் தையல்நாயகி. இந்த தலத்தில் அங்காரகன் நோயை தீர்ப்பதற்கு சிவபெருமான் மருந்து தயார் செய்தபோது பார்வதிதேவி தைல பாத்திரம் எடுத்து வந்தாள். எனவே அவளுக்கு தையல்நாயகி என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். அவளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் என்ற குறை நீங்கும் என்பது ஐதீகமாகும்.

    அம்பாளுக்கும் இறைவனுக்கும் இடையே முருகப்பெருமான் சன்னதி உள்ளது. அவரை செல்வமுத்துகுமரர் என்று அழைக்கிறார்கள். சூரபத்மனை அழிப்பதற்கு முருகப்பெருமான் இந்த தலத்தில் வழிபட்டுதான் வரம் பெற்றார். எனவே வைத்தீஸ்வரன் ஆலய முருகப்பெரு மான் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படு கிறார். இவரது காலடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி பயன்படுத்தினால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

    நோயற்ற வாழ்வு தரும் மிகப்பெரிய வரத்தை தருபவராக வைத்தியநாத சுவாமி திகழ்ந்தாலும் இந்த தலத்தில் முருகப்பெருமானுக்குதான் முதன்மை சிறப்புகள் உள்ளன. அர்த்தஜாம பூஜையின் போது முதலில் முருகருக்குத்தான் பூஜைகள் செய்கிறார்கள். அதன் பிறகே சிவபெருமானுக்கும், அம்பா ளுக்கும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் காமிக ஆகமத்தில் பூஜைகள் நடத்தப்படுகிறது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் இந்த தலத்தில் படிகம் பாடியுள்ளனர். இதனால் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 16-வது தலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. 5 பிரகாரங்கள், 5 கோபுரங்கள் என்று இந்த ஆலயம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மூலவர் முன் இரண்டு கொடி மரங்கள் இருப்பதன் மூலம் இந்த ஆலயத்தின் சிறப்பை அறிந்து கொள்ள முடியும்.

    ராமபிரான் இந்த தலத்தில் சடாயுவுக்கு இறுதி சடங்குகள் செய்து கடமையை நிறைவேற்றினார். அந்த இடம் சடாயு குண்டம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கே பார்த்த ஆலயமான இங்கு வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். தற்போது இந்த ஆலயத்தை தருமபுரம் ஆதீனம் பராமரித்து வருகிறது.

    தென் இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பத்தினர் வைத்தீஸ்வரனை குல தெய்வமாக ஏற்றுள்ளனர். எனவே தினமும் இந்த ஆலயம் திருவிழா கோலமாகவே இருக்கும். கும்பகோணம் செல்லும் போது தவற விடக்கூடாத ஆலயங்களில் இதுவும் ஒன்று என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

    உடல் நலம் பெற்றால் மட்டும் போதுமா? அதற்கேற்ப கூர்மையான அறிவுத்திறன் வேண்டும் அல்லவா? அந்த ஞானம் பெற வேண்டுமானால் நாம் செல்ல வேண்டிய ஆலயம் சுவாமிமலை. கும்ப கோணம் நகருக்கு மிக மிக அருகில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை அமைந்துள்ளது. அந்த ஆலயத்தின் சிறப்புகளை அடுத்த வாரம் காணலாம்.

    Next Story
    ×