என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மனைவியின் நண்பன் "ரோபோ"!
- வாக்யும் கிளீன் செய்யும் ரோபோக்கள் பல்கிப்பெருகி விலையும் சல்லீசாக ஆகிவிட்டது.
- ரோடிமாடிக் என்னும் ரோபோ சப்பாத்தி பூரியெல்லாம் சடுதியில் செய்து இறக்கி விடுமாம்.
"சேகர்! எனக்கு ஒரு சோமா கலந்து கொடு!"
"வர்ரேன் எஜமானரே!"
குரலில் கடுப்பு தெரிகிறதோ?
"சேகர்! எனக்கும் ஒரு சோமா தருவியா?"
"ஆஹா இதோ ஒரே நொடியில்!"
நித்யாவுடன் பேசும்போது மட்டும் இந்த சேகரின் குரலில் ஒரு குழைவு!
ஆத்மா விசனப்பட்டான்….
பல ஆண்டுகளுக்கு முன்பே சுஜாதா வீட்டில் உதவிகள் செய்யும் சேகர் என்னும் ரோபோ பற்றி எழுதிகற்பனை பண்ணிவிட்டார். அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நித்யா தன் கணவன் ஆத்மாவைக்கேலி செய்தால் "ஹஹ்ஹ்ஹ்ஹ" என்று கச்சிதமாகச்சிரிக்கும் அந்த சேகர்!
அப்போது கற்பனையாக இருந்தது இப்போது கிட்டத்தட்ட நிஜமாகிக்கொண்டிருக்கிறது.
இயந்திர இயலின் முன்னேற்றங்களும் இணையத்தின் வீச்சும் தகவல் தொழில்நுட்ப தொடர்பின் வாயு வேக மனோ வேக உயர்வும் ரோபோக்களின் உபயோகங்களை பல மடங்கு விஸ்தாரமாக்கிவிட்டன.
"ஏண்டி சமையல் ரூமைப்பெருக்கி மொழுகுன்னா இப்படி மாடு கன்னு போட்ட இடம் மாதிரி பண்ணி வெச்சிருக்க!"
அம்மாக்கள் கவலையுடன் பெண்களைக்கோபிக்கும் காலமெல்லாம் போய்விட்டன!
வீட்டுக்குள் நச் நச்சென்று அலுப்பு தட்டும் பல வேலைகளை ரோபோக்கள் அனாயாசமாக செய்ய ஆரம்பித்துவிட்டன. வாக்யும் கிளீன் செய்யும் ரோபோக்கள் பல்கிப்பெருகி விலையும் சல்லீசாக ஆகிவிட்டது. வீட்டைச்சுத்தம் செய்யும் ரோபோவின் விலை ஏழாயிரம் தொடங்கி முப்பதாயிரம் ரூபாய் வரை தானாம். அதாவது நம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு கொடுக்கும் சம்பளத்தை வைத்துக்கணக்கிட்டால் நான்கு முதல் பதினைந்து மாதங்களுக்குப்பின் ரோபோ உங்களுக்கு பீ.ரீ. சர்வீஸ் தான்!
முக்கியமாக எல்.ஜியின் ஹோம்பாட்(Home Bot) என்னும் ரோபோ ஒரு டைம் டேபிளைத் தந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட டயத்துக்கு அதன் இடத்தில் இருந்து நகர்ந்து போய் சுத்தம் செய்யும் வேலைகளை முடித்து விட்டு சமத்தாக மறுபடி அதன் பவர் ஸ்டேஷனுக்குப்போய் சார்ஜ் செய்து கொள்ள ஆரம்பித்து விடுமாம். என்ன, கொஞ்சம் விலை அதிகம், அவ்வளவுதான்!
வீடு என்னங்க வீடு, இந்த ரோபோக்களில் ஒன்றான ஐ ரோபோ நீச்சல் குளத்தையே சுத்தம் செய்யக்கூடியதாம்!
எப்பி என்னும் ஆளுயர ரோபோ ஒரே சமயம் பன்னிரெண்டு துணிகளை இஸ்திரி போட்டுத்தந்துவிடுமாம். இன்னும் கொஞ்சம் முன்னேறிய ரோபோ லாண்ட்ரெட்டானது துணிகளை இஸ்திரி போடுவதோடு அழகாக மடித்தும் வைக்குமாம்.
"அம்மா! தினம் சாதம் சாதம்னு போரடிக்குது! இன்னிக்கு ரோட்டி சப்ஜி பண்ணேன்!"
அடுத்த வருடம் கல்யாணமாகிப்போக வேண்டிய பெண் கேட்கும்போது அம்மா அலுத்துக்கொள்ளவே வேண்டாம். ரோடிமாடிக் என்னும் ரோபோ சப்பாத்தி பூரியெல்லாம் சடுதியில் செய்து இறக்கி விடுமாம்.
இந்த ரோடிமாடிக் ரோபோவை கண்டு பிடித்தது பிரனோடி நாகர்க்கர் இஸ்ரானி என்னும் பெண்ணும் ரிஷி இஸ்ரானி என்னும் அவர் கணவருமே! சிங்கப்பூரில் இந்த கண்டுபிடிப்பு புதுமைக்கான முதல் பரிசை வென்றிருக்கிறது.
பதினைந்து சப்பாத்திக்கான மாவை உள்ளே போட்டுவிட்டால் வேணும் என்கிறபோது ஸ்விட்ச் ஆன் செய்து எத்தனை ரோடி வேண்டுமோ அத்தனை ரோடிக்களை செய்து கொள்ளலாம். ஒரு பக்கம் மாவு மறுபக்கம் ரோடி என்னும் மாஜிக்கை உண்டாக்கும் ரோபோ இந்த ரோடிமாடிக்! இப்போது கிட்டத்தட்ட 70,000 ரூபாய்க்கு விற்கும் இந்த ரோபோவின் விலை சில வருடங்களில் குறையும் என்றே எதிர்பார்க்கலாம்.
இன்னொரு சுவாரஸ்ய ரோபோ நைட்ஸ்கோப் என்னும் பாதுகாப்பு ரோபோ. இது பரந்த கோணம் கொண்ட கேமராவையும் எதிரே ஏற்படும் சலனங்களைப்பகுத்தறியும் ஸ்கேனரும் கொண்ட ரோபோ. ரோந்து சுற்றியவாறு சந்தேகாபஸ்தமான நடமாட்டங்களை மொபைல் அல்லது ஈமெயில் மூலமாக அலர்ட் பண்ணிவிடும்.
மேற்சொன்ன ரோபோக்கள் வீட்டுக்குள் இருந்து வேலை செய்பவை. வீட்டுக்கு வெளியேயும் வேலை செய்யும் ரோபோக்கள் பெருகிவிட்டன. மேற்கத்திய நாடுகளில் தனி வீட்டில் குடியிருப்போருக்கு பெரிய தலைவலியாக இருப்பது அவர்கள் வீட்டு வாசல் புல் வெளி. அந்த ஊர் சட்டப்படி அவரவர் வீட்டுப்புல் வெளிகளை தாமே அவ்வப்போது வெட்டி சமனப்படுத்தியாக வேண்டும். பெண்டாட்டிகள் கணவனை பயமுறுத்த இந்த புல் வெட்டும் வேலையைச்சொல்லிச்சொல்லியே பாடு படுத்துவார்கள் என்பது அந்த ஊர் ஆண்கள் பாதுகாப்புக்கழகங்களின் ஓலமாக இருந்து வருகிறது!
இதில் பாதிக்கப்பட்டோ என்னவோ இந்த பாழாய்ப்போன புல் வெட்டுதலுக்கு ரோபோவைக்கண்டு பிடித்து விட்டார்கள். இப்போதெல்லாம் பல அமெரிக்க வீடுகளின் வாசலில் இந்த ரோபோக்கள் புல் பிடுங்கிக்கொண்டிருக்க வீட்டு ஆண் மகன் ராயசமாக நாற்காலியில் உட்கார்ந்து டீ உறிஞ்சிக்கொண்டிருப்பது சர்வ சாதாரணக்காட்சியாம்! முக்கியமாக நகராட்சிகளில் இந்த ரோபோக்களைப்பயன் படுத்தி பொது இடங்களில் புல் வெளிகளைச்சீராக வைத்திருப்பதைச்சுலபமாக்கிவிட்டார்கள்.
லூஜ் என்னும் ரோபோ சாக்கடைகளைச்சுத்தம் செய்து விடுகிறதாம். தன் சென்சர்கள் மூலம் வழி தேடி சாக்கடைக்குள் தானே நுழைந்து மிக வேகமான துளைக்கும் கருவி மூலம் ஐவுக்குப்பைகளை சப்ஜாடாகச்சுத்தப்படுத்திவிடும். மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலத்தை ஒரு வழியாக முடிவுக்குக்கொண்டு வர இந்த ரோபோவை நிச்சயம் நம்பலாம் போல! மனிதனின் ஆத்மத்துணையாகக்கூட ரோபோக்கள் இருப்பதைக்காண்கிறோம். வகமானு என்னும் ஜப்பானிய ரோபோ நோயாளிகள் மற்றும் வீட்டோடு முடங்கிவிட்ட வயதானவர்களுக்கு கம்பானியனாக இருக்கும். நேரத்துக்கு அவர்கள் சாப்பிட வேண்டிய மருந்து பற்றி நினைவு ஊட்டுவதோடு அவர்களுக்கு எமர்ஜென்சி என்றால் டாக்டரைக்கூப்பிடும் வசதிகளும் கொண்டவை இந்த ரோபோக்கள்.
டெலிபிரசென்ஸ் என்னும் தொலைதொடர்பு ரோபோக்கள் வீட்டோடு இருக்கும் குழந்தைகள் நோயாளிகளை வேறோர் இடத்தில் இருந்து பெரியவர்களோ அல்லது டாக்டர்களோ தொலை-கண்காணிக்க உதவுபவை. இவற்றில் பொருத்தப்பட்ட காமரா, ஸ்கேனர், ஒலி பெருக்கி, ஸ்பீக்கர் போன்ற சாதனங்களின் மூலம் இவை ஒரு மனிதனைப்போலவே தொலை தொடர்பில் காட்சிகள் காண்பித்து, உரையாடி கண்காணிப்பில் பொறுப்பாற்றிவிடும்.
இதெல்லாம் விடுங்க! நம்ம சென்னையிலேயே ஒரு ஓட்டலில் சர்வர்கள் இல்லாமல் ரோபோக்கள் வைத்தே சர்வீஸ் செய்கிறார்கள். டேபிளில் போய் உட்கார்ந்தவுடன் அங்கே இருக்கும் ஐ பாட் போன்ற வஸ்துவில் உங்கள் ஆர்டரைப்பதிவிட்டுவிட்டால், இருபதே நிமிடங்களில் நெற்றியில் விளக்கடித்துக்கொண்டு ஆளுயர ரோபொ நடந்து வந்து தன் கையில் உள்ள டிரேவில் இருக்கும் தட்டுக்களை உங்களிடம் நீட்டிவிடும்.
"எடுத்துக்கப்பா! எவ்வளவு நாழி இங்கவே நிக்க வைப்பே!" என்றெல்லாம் அலுத்துக்கொள்ளாது என்று நம்புவோம்.
ரோபோக்களினால் வேலை வாய்ப்புக்கள் குறைந்துவிடும், அவை ஆபத்தானவை. ஒரு சமூகத்தின் மனித உறவுகளைக் குறைத்து விடுவதால் பல அவலங்கள் நேரக்கூடும் என்பதெல்லாம் ரோபோக்களுக்கு எதிரான வாதங்கள்.
உண்மைதான்! ஆனால் ரோபோக்களினால் அதன் தொழில் நுட்ப நுணுக்கங்களால் வாழ்வின் தரம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.
"ஏங்க! இன்னிக்கு பாத்திரம் தேய்க்க ராணி வரவே இல்லை! கடங்காரி! கொஞ்ச உங்க வீட்டு ரோபோவை அனுப்பறீங்களா?அரை மணியில திருப்பி அனுபிச்சுருவேன்!"
பார்க்கத்தான் போகிறோம்!






