என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

புண்ணியம் நிறைந்த புரட்டாசி!
- உண்ணா நோன்பு அனுசரிக்காவிட்டாலும் சைவ உணவை மட்டுமே உண்டு திருமாலை வழிபடும் வழக்கமும் உண்டு.
- மகாளய பட்சம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட ஏற்ற காலம்.
தமிழின் பன்னிரண்டு மாதங்களில் ஆறாவது மாதமாக அமைந்திருப்பது புரட்டாசி மாதம். இந்த மாதம் பெருமாளை பக்தி செய்வதற்கு மிகவும் உகந்த மாதம். புரட்டாசியில் விரதமிருந்தால் எளிதில் பெருமாளின் ஆசியைப் பெறலாம்.
பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில்தான். புரட்டாசிக்கு அதிகப் பெருமை வருவதற்கான காரணங்களில் இது முதன்மையானது.
திருமாலின் அவதாரம் என்றே கருதப்படும் மகான் ஸ்ரீவேதாந்த தேசிகர், வேங்கடவன் கோவில் மணியின் அம்சமாகப் பிறந்தவர். அனந்தசூரியர்-தோதாத்ரி தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் இவர் அவதரித்தது புரட்டாசி மாதத்தில் தான்.
பாதுகா சகஸ்ரம், கோதா ஸ்துதி முதலிய புகழ்பெற்ற வைணவ நூல்களின் ஆசிரியரான இவர் பிறந்த மாதம் என்பதாலும் புரட்டாசி பெருமை பெறுகிறது.
புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் பெரிதும் குறிப்பிடத்தக்கவர், தமிழ்க் கவிதைத் துறையைத் தம் படைப்புகளால் பெருமைப்படுத்தியவரும் இப்போது இருநூறாம் ஆண்டு காண்பவருமான பக்திக் கவிஞர் வள்ளலார்.
சென்னை அருகேயுள்ள திருவொற்றியூரில் குடிகொண்டிருக்கும் வடிவுடையம்மனை நேரில் தரிசித்த சித்த புருஷர் இவர்.
மிக உயர்ந்த ஆன்மிகக் கவிதை நூலான திருமந்திரத்தை எழுதிய மகான் திருமூலர் பிறந்ததும் புரட்டாசியில்தான்.
ராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி புரட்டாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றும் வேடனாக வாழ்ந்த அவர் பின்னாளில் கடும்தவம் செய்து முனிவரானார் என்றும் ஒரு குறிப்பு உண்டு.
எல்லாக் காலத்திலும் போற்றப்பட்டாலும் புரட்டாசியில் சிறப்பாகப் போற்றப்படும் திருமால், பழந்தமிழ்க் கடவுள். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே திருமால் `மாயோன்` என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார்.
`மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.'
என்கிற தொல்காப்பிய நூற்பா.
காடும் காடு சார்ந்த பகுதியும் திருமாலுக்குரிய பிரதேசம். மலைசார்ந்த பகுதி முருகப் பெருமானுடையது. நீர்நிலை சார்ந்த பகுதி இந்திரனுக்குரியது. பெருமணல் உலகம் வருணனுடையது என இடங்களுக்கேற்றவாறு தெய்வ வடிவங்களை வகுக்கிற தொல்காப்பியத்தின் பொருளதிகார நூற்பா, திருமாலுக்கு முதலிடம் கொடுக்கிறது.
`பெரியவனை மாயவனை பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக்
கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்என்ன கண்ணே
கண்இமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன
கண்ணே!
மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்ற
படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே!
நாராயணா என்னா நா என்ன நாவே!`
என ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் திருமாலைப் போற்றிப் பரவுகிறது.
`உலகளந்த பெரியவனை, மாயம் சொல்கிறது. மாயவனை, உலகமாக விரிந்துள்ள தாமரை பூத்த வயிற்றை உடையவனை, விண்ணவனை, கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் சிவந்திருப்பவனை, கரிய நிறமுடையவனைக் காணாத கண் என்ன கண்?
கம்சனின் வஞ்சகத்தைக் கடந்தவனை, பஞ்ச பாண்டவர்க்குத் தூதுவனாகி கவுரவர்களிடம் நடந்தவனைப் புகழாத நாவென்ன நா? நாராயணா என்று சொல்லாத நாவென்ன நா?` எனக் கேட்கிறார் சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோ அடிகள்.
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு மிக ஏற்றதாய்க் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையன்று உண்ணா நோன்பு அனுசரிக்கும் வழக்கம் பலரிடம் உண்டு.
உண்ணா நோன்பு அனுசரிக்காவிட்டாலும் சைவ உணவை மட்டுமே உண்டு திருமாலை வழிபடும் வழக்கமும் உண்டு. அன்றைய சைவ உணவில் வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்ப்பதும் உண்டு.
மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம், கவுரி விரதம் போன்ற பல விரதங்கள் புரட்டாசி மாதத்தில்தான் அனுசரிக்கப்படுகின்றன. நவராத்திரியும் புரட்டாசி மாதப் பண்டிகைதான். ஏராளமான விரதங்களைப் பெற்ற பெருமை புரட்டாசியுடையது.
திருப்பூர் கிருஷ்ணன்
கடவுளுக்குப் பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை வேண்டிக்கொண்டு அவற்றை நிறைவேற்றாமல் மீதி வைத்திருப்பவர்கள் மனத்தில் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும். அந்தக் குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள ஏற்ற மாதமும் புரட்டாசியே.
`எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு'
என்கிறார் திருவள்ளுவர். நமது பிரார்த்தனைகளைச் செவிமடுத்து நாம் வேண்டியவற்றை வேண்டியவாறு அருளிய இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் கடமையல்லவா? புரட்டாசி மாதம் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் மாதம்.
புரட்டாசியில் வரக்கூடிய அமாவாசை `மகாளய அமாவாசை` என அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் பவுர்ணமிக்குப் பின் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்கள் கொண்ட காலம் `மகாளய பட்சம்` என்ற பெயர் பெறுகிறது.
மகாளய பட்சம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட ஏற்ற காலம். நம் முன்னோர் மேலுலகில் இருந்து வந்து நம்மோடு தங்கிச் செல்லும் பதினைந்து நாட்களே `மகாளய பட்சம்` என அழைக்கப்படுவதாக நம்பிக்கை.
பொதுவாக நாம் மாதந்தோறும் அமாவாசையன்று நீத்தார் கடன் செலுத்துகிறோம். அதன்மூலம் மூன்று தலைமுறை முன்னோர்களைக் கரையேற்றுவதாக ஐதீகம்.
`தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை'
என்கிறது வள்ளுவம்.
காலமான முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என ஐந்து வகைப்பட்டவர்களைப் போற்றுவது தலையாய கடமை என்கிறார் வள்ளுவர்.
அந்த ஐந்திலும் தென்புலத்தார் என, காலமான முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதையே முதலில் வைத்தார் அவர். வள்ளுவம் வலியுறுத்தும் அறநெறிக் கருத்துகளில் தலையாயது நீத்தார் கடன் செலுத்துவது.
மகாளய பட்சத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் என்பது, அமாவாசைத் தர்ப்பணம்போல் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், காலஞ்சென்ற நம் அனைத்து முன்னோர்களுக்கும் போய்ச் சேர்கிறது.
தவிர நம் உறவினர்கள் நண்பர்கள் என நமக்கு அறிமுகமாகிக் காலமான அனைத்து உயிர்களும் அன்று தர்ப்பண நன்னீர் பெற்றுத் தாக சாந்தி செய்து கொள்கின்றன. புரட்டாசியில் நாம் செய்ய வேண்டிய புனிதமான ஆன்மிகச் சடங்கில் மகாளய பட்ச தர்ப்பணம் மிக முக்கியமானது.
புரட்டாசி மாதத்தில் திருப்பதி, ஸ்ரீரங்கம், குணசீலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலான பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் பிரம்மோத்சவத் திருவிழா விமரிசையாக நடைபெறும். பத்து முதல் பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் காலையும் மாலையும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
புரட்டாசி ஏகாதசி அதிகப் பெருமை வாய்ந்தது. அன்று ஏகாதசி விரதம் இருந்து பெருமாளைத் துளசி இதழ்களால் அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு.
புரட்டாசி திருமாலுக்கு உகந்த மாதம் என்பதால் திருமாலின் சரித்திரத்தைச் சொல்லும் நாராயணீயத்தை இந்த மாதத்தில் பாராயணம் செய்வது விசேஷம். விஷ்ணுவின் மகிமைகளைப் பேசும் சகஸ்ர நாமத்தையும் நாள்தோறும் ஜபிக்கலாம்.
புரட்டாசியில் செய்யும் ராமநாம ஜபம் அதிகப் பலன்தரக் கூடியது. வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், பாகவதம், மகாபாரதம் முதலிய திருமாலின் பெருமைகளைப் பேசும் ஆன்மிக நூல்களை இந்த மாதத்தில் பாராயணம் செய்வது சிறப்பு.
கண்ணன் அருளிய கீதையை மனமொன்றி வாசித்து அதுசொல்லும் கருத்துகளை ஆழ்மனத்தில் சிந்திப்பதற்குரிய விசேஷ மாதமும் புரட்டாசியே.
திருப்பதி வேங்கடவனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் தங்கள் இல்லத்தில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது இந்த மாதத்தில்தான். அரிசி வெல்லம் கலந்து மாவு உருண்டை செய்து அதன்மேல் குழி அமைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுவார்கள்.
மாவு உருண்டை என்பது திருப்பதி மலையையும் அதன்மேல் ஏற்றப்படும் தீபம் வேங்கடவனையும் குறிக்கும். மரத்தையே வேங்கடவனாக எண்ணி ஒரு வேடன் வழிபட்டான். அந்த மரத்திற்குத் தான் உண்ணும் தேனையும் தினைமாவையும் நிவேதனமாகப் படைத்தான். வேடனின் பக்தியை மெச்சிய பெருமாள் அவனுக்குக் காட்சி கொடுத்து மோட்சம் அருளினார் என்றொரு வரலாறு இருக்கிறது.
இந்த வரலாற்றை நினைவுகூரும் வகையில்தான் தினைமாவுக்கு பதிலாக அரிசி மாவும் தேனுக்கு பதிலாக வெல்லமும் கலந்து உருண்டை பிடிக்கப்படுகிறது. அதுவே மாவிளக்கு மாவு.
மாவிளக்கு ஏற்றினால் வாழ்வில் நேரும் தடைகள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருப்பதன் மூலம் அவர் தரும் தீய பலன்களின் வலிமை குன்றும்.
சனி தோஷம் உள்ளவர்கள் சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு புரட்டாசி சனிக்கிழமை விரதம் உதவும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவை கடவுளின் முப்பெரும் தொழில்கள். அவற்றில் பிரம்மா படைத்தலையும் திருமால் காத்தலையும் சிவன் அழித்தலையும் செய்வதாகப் புராணங்கள் சொல்கின்றன.
காக்கும் தொழிலைச் செய்யும் கடவுளான திருமாலைப் புனித மாதமான புரட்டாசியில் பூஜிப்பதன் மூலம் அவன்தாள் வணங்கி அவனருள் பெறலாம்.
திருமாலின் திருவருள் நமக்கு நேரும் துன்பங்கள் அனைத்தில் இருந்தும் நம் அனைவரையும் காத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com






