என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    விருந்தும் மருந்தும் மூன்று நாள்
    X

    "விருந்தும் மருந்தும் மூன்று நாள்"

    • அமிர்தம் என்றாகிலும் பகிர்ந்து உண் என்றார் வள்ளுவர்.
    • மாயா பஜார் படத்தில் ரங்காராவ் சாப்பிடுவாரே அதே போல ஒரு தடவையாவது சாப்பிடணும் சார்! என்றார் நண்பர் ஒருவர்.

    எதிர்காலத்திற்கு வேண்டியது என்று சில நெறிகளை அன்றே எழுத்தாணி கொண்டு விதை நெல்லாய் உள்வாங்கும் நிலம் போல ஆழ உழுதிருக்கிறார்கள். அதில் உலகப் பொதுமறையான திருக்குறளை இணையாகக் கொள்ளலாம். அதேபோல பழமொழிகள். சொல்வழக்காக சிலது இப்போதும் நம்மை சுற்றிவருவதுண்டு.

    அன்றாடம் நம் வாழ்வில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது யாராவது ஒருவரின் வாய்மொழியாக இதைக் கேட்டு இருப்போம். பாம்படம் சுமந்த பாசக்கார கிழவிகள் தங்கள் வெற்றிலைச்சீவல் மணக்கும் வாயோடு உறவுகளைச் சீண்டி, அக்கறையாக, சில நேரங்களில் அறிவுரையாகக் கூட இந்த பழமொழிகளை சொல்லி இருப்பார்கள். அப்படிப்பட்ட பழமொழிகளைப் பற்றியதுதான் இந்த கட்டுரை

    விருந்தும் மருந்தும் மூன்று நாள்....!

    விருந்தோம்பல் பற்றி வகுப்பு எடுக்கும் அளவிற்கு உள்ள தமிழர் பண்பாடு கொண்ட நமது நாட்டில்தான் மெல்ல மெல்ல அந்த கலாச்சாரம் அழிந்து வருகிறது. அப்படிப்பட்ட விருந்துகளில் சில ரசிக்கத்தக்கவை அவற்றை சொல்லலாமா?

    அமிர்தம் என்றாகிலும் பகிர்ந்து உண் என்றார் வள்ளுவர். தன் விருந்தோம்பல் அதிகாரத்தில் அப்படி பகிர்ந்து உண்ணப்படாத உணவு என்பது விஷத்திற்குச் சமம் என்று குறிப்பிடுகிறார். பசியோடு ஒருவர் நம் வீட்டு வாயிலில் நிற்க, அந்நேரம் நம் கையில் சாகாவரம் அளிக்கும் அமிர்தம் இருந்தாலும் அதை பகிர்ந்துண்பது வரம் என்கிறார்.

    தமிழரின் விருந்தோம்பல் பண்பாடு பெயர் பெற்று இருந்தது. இருந்தது எனில்? இப்போது... ஒரு சுவையான துணுக்கு ஒன்றை வாசித்தேன்.

    அந்த வீட்டுக்கு வரும் விருந்தாளியிடம், அடடே வாங்க வாங்க என்று வாயார வரவேற்ற குடும்பத்தலைவி, சில நிமிட பேச்சுக்களின் முடிவில், நீங்க எப்போதும் இப்படித்தாண்ணே சாப்பிட்டே வந்துடுவீங்க, ஒருநாள் நம்ம வீட்டுலே சாப்பிடக்கூடாதா என்று வெளிப்படையாக கேட்கிறார். ஆனால், மனதில் சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிடக்கூடாது என்ற பதைப்புடன்,

    நீ வருத்தப்படுவேன்னுதான் இன்னைக்கு இங்கேயே சாப்பிடலான்னு வந்திட்டேன்மா என்கிறார் அவர், அந்த பெண்மணி விடாக்கண்டனாக, அப்படியே சாப்பிட்டாலும் பிள்ளைங்க கிட்ட காசைத் திணிக்கக்கூடாது சொல்லிட்டேன் என்று எடுத்துக்கொடுப்பார்.

    இது ஒருமாதிரி எதிர்பார்ப்பு கலந்த விருந்தோம்பல்!? நான் உனக்கு சோறு போடுகிறேன்; அதற்கு நீ என்ன அன்பளிப்பைத் தரப்போகிறாய் என்பதைப்போல...

    இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஒரு காட்சி வரும். போர் வருகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன், அரசன் என்ன செய்ய என்ற பதட்டத்தில் இருக்க, வண்டிக்காரன் வேடத்தில் வரும் ஒற்றன் படையெடுத்து வரப்போகிறான் அந்நிய நாட்டவன் என்ற செய்தியோடு வருவான். புலிகேசிக்கு கோபம் வந்து எங்கேயடா சென்றாய் என்றால், என் சித்தப்பா வீட்டில் விருந்தை சிறப்பித்து வந்தேன் "மூன்று நாளைக்கு என்பார்". அதற்கு பிறகு இம்சை அரசன் தன் இம்சையால் மூன்று நாளைக்கு ஒற்றனின் விலாவை சிறப்பிப்பதைப் போல அந்த நகைச்சுவைக் காட்சியை சித்தரித்து இருப்பார்கள்.

    ஏம்மா, விருந்தை சிறப்பித்தது ஒரு தப்பா? என்று நீங்கள் கேட்கலாம் காரண காரியங்களைக் கடந்து எல்லாம் சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்களும் உண்டு.

    லதா சரவணன்

    மாயா பஜார் படத்தில் ரங்காராவ் சாப்பிடுவாரே அதே போல ஒரு தடவையாவது சாப்பிடணும் சார்! என்றார் நண்பர் ஒருவர்.

    கையைக் கட்டிக்கிட்டு வாயை பொளந்துகிட்டான்னு கேட்டார் இன்னொருவர். எல்லாருக்கும் இப்படி வயிறு புடைக்க, நினைத்ததை எல்லாம் வாங்கி சாப்பிட, மனதிற்குள் ஒரு விருப்பம் இருக்கும். ஆனால், சில நேரங்களில் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அதற்கு இடம் தராது.

    இலக்கியங்களில் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மீண்டும் மனைவியைப் பார்க்க வருகிறான். கணவனிடம், செல்வத்தை இழந்தாய், எனை விட்டுப்பிரிந்தாய். நீ இல்லாத இந்த நாட்களில் எல்லாம் நிழல் போல எனைச் சோகங்கள் சுமந்திருந்தது. அந்நாட்களில் எந்த உறவினரும் நம் இல்லத்தை சிறப்பிக்க வரவில்லை, விருந்தோம்பலை ஏற்கவில்லை என்று புலம்பினாளாம்.

    சிலப்பதிகாரத்தில் அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை... என்று விருந்தின் சிறப்பை சிலப்பதிகாரத்தில் சொல்லியிருக்கிறார் இளங்கோவடிகள்.

    நகைச்சுவை, இலக்கியம், எதிர்பார்ப்பு, விருந்துகளைப் பார்த்தது போல பயமுறுத்திய விருந்தையும் பார்ப்போம்!.

    இந்த விருந்தும் மருந்தும் ஏன் மூன்று நாட்களுக்கு மட்டும் எனக் குறிப்பிடுகின்றனர் என்று பார்ப்போம்!

    விருந்தாளியாக ஒரு வீட்டுக்கு செல்லும்போது வரவேற்கப்படுவதென்னவோ மூன்று நாளைக்குத்தான். கல்யாணமாகி போன மாமியார் வீட்டுக்குப் போன மகனிடம் எப்போது அவர்கள் பரிமாறும் உணவில் உன் முகம் தெரிகிறதோ அப்போது வந்துவிடு என்றாராம். முதல் நாள் கறி விருந்து, மறுநாள் கறிகாய் விருந்து, மூன்றாவது நாள் பழைய சாதமும் ஊறுகாயும் அந்த பாத்திரத்தில் தன் முகம் பார்த்த மகன் அம்மா கூறியதைப் புரிந்து கொண்டு திரும்பியதாக ஒரு பழங்கதை உண்டு.

    ஆனால் உண்மையான கருத்து...

    நம் உடல் நலத்தை பேணும் முறையைக் கொண்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் விருந்து உணவு சாப்பிட்டால் அதன் மூலம் நம் உடலில் பல உபாதைகள் நிகழும், எனவே விருந்தை மூன்று நாட்களுக்கு மேல் தொடரக்கூடாது என்றும்; உடல் நலம் சரியில்லாமல் போகும்போது மூன்று நாட்களுக்கு அளிக்கப்பட்ட மருந்தினால், உபாதை சரியாகவில்லை எனில் நீங்கள் மருந்தை மாற்றம் செய்வது மூன்று நாளில் என்பது இன்னும் ஒரு கருத்து.

    எனவே எதிலும் அளவோடு இருக்க வேண்டும் என்பது விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பதன் சாரம்.

    ஆனால் தற்போதைய விருந்து என்பது சுகியில் ஆர்டர் செய்து, பிரிட்ஜ்ஜில் ஸ்டோர் செய்து, சில நேரம்... அடடே வீட்டுக்கு வர்றீங்களா கொஞ்ச நேரம் முன்னாடி சொல்லியிருக்கலாமே...இரண்டு பேரும் ஆபீஸ் போயிருக்கோம். பக்கத்து வீட்டுலே சாவி இருக்கு வாங்கிட்டு வெயிட் பண்ணுங்க. ரோடு கார்னர்லே இருக்கிறே ஓட்டல்ல சாப்டிருங்க... என்பதாக நம் விருந்தோம்பல் இருக்கிறது. ஒரு நாளைக்கு பிறகு அப்போ எப்போ கிளம்பறதா இருக்கீங்க? ஏன்னா விலைவாசி அப்படி பாருங்க. ஒரு நாள் லீவு போட முடியலை என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக இன்றைய விருந்தோம்பல் இருக்கிறது.

    அடுத்த முறை இன்னொரு அற்புதமான பழமொழியுடன் சந்திப்போம்...

    மின்னஞ்சல் - sharnlatha2004@gmail.com

    Next Story
    ×