என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உன்னுள் ஓர் ஒளி சக்தி- ஜீவநாடி ஜோதிடம்
    X

    உன்னுள் ஓர் ஒளி சக்தி- ஜீவநாடி ஜோதிடம்

    • நாடி ஜோதிடத்திலேயே ‘ஜீவ நாடி ஜோதிடம்’ என்று ஒரு பிரிவினைக் கூறுகின்றார்கள்.
    • முதலில் எந்த சொல், சிந்தனை, செயல் என்றாலும் ஒருவருக்கு நம்பிக்கை வர வேண்டும்.

    அகத்திய மாமுனிவரைப் பற்றியும், மற்ற சித்தர்களைப் பற்றியும் அவ்வப்போது பார்ப்போம் என்று கூறியிருந்தோம். பலரும் 5000 வருடங்களுக்கு முன்பு நடந்தவைகளைப் பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் இப்போது நம்மிடம் பேசுகின்றார்களா? நமக்கு இவர்கள் மூலம் வழி பிறக்கின்றதா? என்று கேட்கின்றனர்.

    இன்றைக்கு கொடி கட்டி பறக்கும் சித்த வைத்தியம் அகத்திய மாமுனிவர் அறிந்தது தானே! இது போன்று ஜோதிடம், நாடி ஜோதிடம் இவைகளும். பழைய சித்தர்கள், முன்னோர்கள் கூறியது தானே. பல முனிவர்களின் நாடி ஜோதிடங்கள்தான் இப்போதும் உள்ளன. தற்போது கலியுகம். அதனால் கலப்படம் சில இடங்களில் செய்யலாம். அதனை விட்டு தூய்மையான ஒன்றினைப் பற்றி பேசுவோமே. நாடி ஜோதிடத்திலேயே 'ஜீவ நாடி ஜோதிடம்' என்று ஒரு பிரிவினைக் கூறுகின்றார்கள். என் கணவரின் தாயார் ஜோதிடத்தில் 'புலி' என்பதால் இவற்றினை நான் கேட்டறிந்துள்ளேன். ஜீவ நாடி ஜோதிடத்தில் அப்போதே பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கூறுவார்கள்.

    பல முனிவர்களின் கூற்றாக இந்த ஜீவ நாடி ஜோதிடம் உள்ளது. பலருக்கு பொதுவாக ஜோதிடம், நாடி ஜோதிடம் இவற்றில் நல்ல அனுபவங்கள் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நன்கு தெரிந்தவர்களின் மூலம் அனுபவம் வாய்ந்தவர்களிடம் செல்வது நல்லது. தீர விசாரித்து செல்வதே எதற்காகவும் எப்போது நீங்கள் அணுகினாலும் நல்லது. சரி இப்போது 'அகத்தியவர் ஜீவ நாடி பாபு' என்பவரைப் பற்றியும் அகத்தியரின் அருளையும் அறிந்து கொள்வோம்.

    சில முறை என் கணவர் ஸ்ரீபால் இவரைப் பற்றி என்னிடம் பேசியுள்ளார். இவர் அதிகம் வெளியில் தெரியாத காலத்திலேயே பல பிரமுகர்கள் இவரிடம் சென்றதைப் பற்றி என்னிடம் ஸ்ரீ பால் குறிப்பிட்டு இருந்தார். இருந்தாலும் இன்றைய யூடியூப் சேனல்களில் இவர் மிகப் பிரபலம். ஜெர்மன், ஜப்பான் நாட்டினர் கூட இவரிடம் 'ஆன்லைன்' மூலம் தொடர்பு கொள்வதாக கேள்விப்படுகின்றேன்.

    ஒரு சிறிய அறையில் கையில் ஓலை இல்லாமல் கேட்போரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் இவரைக் காண காலை 6 மணி முதல் அங்கு ஒரு பேப்பரில் பெயர் எழுதி வைத்து காத்திருக்கின்றனர். நீண்ட கும்பல் காத்து இருக்கின்றது. சாதாரண பதிலாக இசை தொனியில் கையில் ஏடு எதுவும் இல்லாமல் நம்முடைய எதிர்காலத்தை படிக்கின்றார். இதையெல்லாம் நான் அமைதியாய் சென்று ரோடு ஓரத்தில் நீண்ட கியூவில் நின்று பார்க்கவில்லை. ஆனாலும் இவரிடம் ஜோதிடம் கேட்டு தெரிந்த ஒரு குடும்பம் மூலமாக பின்னர் நான் அறிந்த செய்திகள் இவை.

    இதற்கு முன்பு நடந்த நிகழ்வினையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இது ஜீவ நாடி ஜோதிடர் பாபு பற்றியது என்பதனைக் காட்டிலும் அகத்தியர் ஜீவ நாடி மூலம் சொல்லும் தீர்வுகளைத்தான் நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

    திடீரென ஒரு நாள் எதிர்பாராத விதமாக இவரை சந்திக்க நேர்ந்தது. யூடியூப்களில் நான் இவரைப் பார்த்துள்ளேன். என் பெயரைக் கூட அவர் அறிய வேண்டிய அவசியம் இல்லை. 'கமலி ஸ்ரீபால்' என நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். இசைத்தொனியில் வெற்றிடத்தில் இருந்து நாடி படித்தார். என்னைப் பார்த்து 'என்னம்மா- வள்ளலார் போல், முனிவர்கள் போல் உடலினை எப்படி பிரித்து செல்வது. ஓளி உடல் பயணம் பற்றி ரொம்ப யோசிக்கின்றீர்களா?' என கேட்டு மேலும் படித்தார்.

    சூரியன், புதன், அணு, வெப்பம், மாசு, விண்வெளி என நாசா விஞ்ஞானி போல் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் பேசினார். சில செய்திகள் அதில் எனக்கு புரிந்தாலும் இங்கு எழுத முடியவில்லை. நான் எத்தனை காலமாக ஒளி உடல் பயணம் பற்றி நினைத்து நினைத்து ஆதங்கப்பட்டிருப்பேன். முன்பின் தெரியாத இவருக்கு எப்படி அறிய முடிந்தது. அவர் சொன்ன பதில் 'உங்களிடம் இதனை விளக்கச் சொல்லி அகத்தியர் என்னிடம் கூறினார்' என்றார்.

    அகத்தியரிடம், கோரக்கரிடம், திருமூலரிடம் மற்றும் வள்ளலாரிடம் நான் கேட்டது, மனதுக்குள் பேசியது பிரபஞ்சத்தில் இருந்து இப்படி ஒரு பதிலாக வருகின்றதோ என்று தோன்றியது. இப்போதெல்லாம் இவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் போது சற்று ஜாக்கிரதையாய் இருக்கிறேன்.

    ஆத்மா நம் எண்ணக் குவியல்கள், எண்ண மலைகள் மற்றும் பிரபஞ்சத்தை மிஞ்சும் எண்ண ஓட்டத்திற்க்குள் அணுவின் ஒரு சிறு புள்ளியாக அமைந்து இருக்கின்றது. இத்தனை சிறிய புள்ளி தானே என சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது. நம் எண்ண ஓட்டங்களை நீக்கி இந்த ஆன்மாவினை, நம்முள் இருக்கும் இந்த கடவுளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதனை வைத்துதான் பிரபஞ்ச சக்தியோடு நாம் பேச முடியும். இணைய முடியும் என்கின்றனர்.

    முதலில் எந்த சொல், சிந்தனை, செயல் என்றாலும் ஒருவருக்கு நம்பிக்கை வர வேண்டும்.

    இதன் பொருளாக நம் ஆத்மாவும் பிரபஞ்ச சக்தியும் பிரம்மா என்ற உணர்வினை யோகா முறையிலும், ஆன்மீக தியானப் பயிற்சியிலும் கற்ப்பிக்கின்றனர்.

    நான் பரம்பொருளாக இருக்கின்றேன் என்ற உணர்வு ஏற்படும் போது கோபம், காமம், வேகம், கடும் சொல் இப்படி பல தீய குணங்கள் தானே விலகி விடுகின்றன. இங்கு கடவுளை வெளியில் சென்று தேடுவதில்லை. கடவுள்-உள்ளே சென்று- உன் உள்ளே சென்று அந்த ஒளியினைத் தேடு என்பதாகும்.

    அந்த ஒளியினைத்தேட எண்ணங்கள், கர்மாக்கள் விலக நமக்கு ஆசைகள் விலக வேண்டும்.

    ஒரு வித்தை கற்க ஒரு ஆசிரியர் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் யோகா, தியானம், உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, ஆன்மீக பயணம் இவற்றிற்கும் ஒரு ஆசிரியர், ஒரு குரு அவசியம். பலருக்கு தாய், தந்தை, தாத்தா, பாட்டி இவர்களே அடிப்படைகளை சொல்லித் தருபவர்களாக இருக்கலாம்.

    அந்த வகையில் எனக்கு அந்த வாய்ப்பு தாய் வழிபாட்டி டாக்டரின் (தாத்தா) மனைவி, தந்தை வழி பாட்டி வக்கீலின் (தாத்தா) மனைவி ஆகியோரால் கிடைத்தது. இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே பல சுலோக புத்தகங்களை விளக்கி மனப்பாடம் செய்ய வைத்தனர். யோகா பழக்கி கொடுத்தனர். பல்லாங்குழி முதல் கேரம், செஸ் என்னுடன் விளையாடினர். சிறு சிறு தையல், சமையல் கற்று தந்து இரவில் புராண கதைகள் சொல்லி அன்று இவர்கள் எனக்கு உபயோகமான, பயனுள்ள செல்போனாக இருந்தனர்.

    சரித்திர உண்மைகள், நேருஜி அவர்களின் பல செய்தியினை எனது மூளையில் பதிய வைத்தனர். இன்றும் அநேக தாய்மார்களும், தாத்தா பாட்டிகளும் இவைகளை வருங்கால சந்ததியினருக்கு செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

    பலருக்கு சித்தர்களின் ஜீவ சமாதி அருகே குடியிருப்பு இருக்கும். இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வாய்ப்பினை தவற விடாமல் வியாழக்கிழமை, பவுர்ணமி, முடிந்தால் அன்றாடம் கூட இவர்கள் அங்கு செல்லலாம். அங்கே சுமார் 20 நிமிடம் அமைதியாய் உட்கார்ந்திருங்கள். எண்ண ஓட்டத்தின் பின்னால் செல்லாதீர்கள். முடிந்தால் மூச்சினை கவனியுங்கள். இப்படி தொடர்ந்து செய்யும் போது கோபம் கட்டுப்படும். மனம் தெளிவுப்படும். இப்படி பல நன்மைகளைக் கூறலாம். உங்களை வழிகாட்ட மனித உருவில் தானே ஒரு குரு வருவார்.

    குரு பூஜையில் அதிலும் நான் பார்த்த வரையில் நிறைய, அகத்திய மாமுனிக்கு குரு பூஜை நடப்பதனை அறிந்துள்ளேன். இவரைப் பற்றி படித்து பார்ப்பது தமிழர்களாகிய நமக்கு அவசியம் என்றே கூறுவேன். சப்த ரிஷிகள் என்பவர்கள் சிவப்பெருமானின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்டவர்கள் அல்லது சிவப்பெருமானோடு இருக்கும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் என்பர். இந்த சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர் என்பர். நான்கு வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளதாகக் கூறுகின்றனர். வேதத்திற்கும் முந்தைய இதிகாசம், புராணங்களில் இவரின் நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தசாவதாரங்களில் ஒன்பது அவதாரங்களிலும் இவரது பங்கு உள்ளது. பத்தாவது அவதாரம் இன்னும் நிகழவில்லை. வட இந்தியாவில் இருந்து தென்னகம் வந்தவர். சிவனிடம் இருந்தே நேராக வந்தவர் என்பர்.

    திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பமுனி என்ற பெயரில் இவரது ஜீவ சமாதி உள்ளது. முருகப்பெருமானின் நேரடி சீடர் என்றும் இவரை குறிப்பிடுவர். இந்த காலம் என்று குறிப்பிட்ட காலத்தை வரையிட முடியாது. காலத்தினை கடந்து இருப்பவர் அகத்திய மாமுனி.

    இதன் பின்னர் இவரைப் பற்றி நான் சேகரித்த செய்திகள் அதுவும் அவரே கூறியதாக கிடைத்த செய்திகள்.

    இவரது தாத்தா ஓலை வைத்திருந்த முறையில் 'ஜீவ-நாடி ஜோதிடம்' படித்தவர். அவர் காலத்திற்குப் பிறகு பாபு அவர்களின் தந்தை நாடி ஜோதிடம் கற்றவர். தந்தையின் முதுமை காலத்தில் இது இவருக்கு தானாகவே வந்த சக்தி என்றனர். எனது கணவர் இவரது தந்தையினை சந்தித்து உரையாடியதன் காரணமாகவே பாபு அவர்களை பற்றியும் ஜீவ நாடியினைப் பற்றியும் வலியுறுத்தி கூறியுள்ளார் என்பதனை உணர முடிந்தது. ஸ்ரீபால், 'ஆன்மீகம்' என்ற பிரிவில் எல்லா மதங்களைப் பற்றியும், காசு, பணம் கடந்த மெய்ஞானம் பற்றியும் எழுத வேண்டும் என்பதனை அடிக்கடி வலியுறுத்துவார். ஏன்? எப்படி? எதற்கு? எதனால் என்ற விஞ்ஞான ஆய்வுகளை செய்யும் நீ இதே கேள்விகளோடு மெய் ஞானத்திற்கு வா என்பார்.

    சரி, மீண்டும் ஜீவ நாடிக்கு வருவோம். நாடு, உலகம் இவற்றினைப் பற்றி இவர் கணித்துக் கூறுபவைகள் தப்பாமல் நடக்கின்றது என்பதனை இதில் நாட்டம் கொண்டு பார்ப்பவர்கள் கூறுகின்றனர். பெரிய விசிறி கூட்டமே உள்ளது. ரூ.500 இவரது மிக அதிகப் படியான ஊதிய தொகை என்றனர். தனக்கு இறைவன் கொடுத்த இந்த திறமைக்காக தன்னை பணத்தில் இருந்து தள்ளி வைத்துள்ளார் என்றனர். அவரை எளிதில் அணுகுவது கடினம் என்றனர்.

    சித்தர்கள் தங்கள் வேலைகளை தகுந்த, தகுதியான மனிதர்களை தேர்ந்தெடுத்து செய்கின்றனர். சாயம் போல் தவறுகள் தானே வெளுத்து விடுகின்றன. ஜோதிடர் பாபு போன்று வெளியுகத்திற்குத் தெரியாமல் மக்களோடு மக்களாக பலர் இருக்கலாம். ரூ.5-க்கு சிறந்த வைத்தியம் செய்யும் சிறந்த மருத்துவர்களும் உண்டு. ரூ.5-க்கு சாப்பாடு கொடுப்போரும் உண்டு. ஆக இறை சக்தி, பிரபஞ்ச சக்தியில் சித்தர்கள் இவை அனைத்திலும் சில தேர்ந்தெடுத்த மனித உடல்கள் மூலமாக செயலாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர் போலும். அதில் அகத்தியர் ஜீவ நாடி ஜோதிடர் பாபுவும் ஒன்று என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

    Next Story
    ×