என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

'நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம்'
- நாற்பது வயதை எட்டியவர்களுக்கு உலக அறிவு அதிகம் கிடைக்கும், அவர்களின் பேச்சில் நாவண்மை நிரம்பியிருக்கும்.
- முல்தாணி மெட்டி பேய்கள்மாறி... வெறும் பேக்ரவுண்ட் மீயூசிக் பயத்தை உண்டு பண்றதுதான் இப்போ 2k பேய்களின் ஸ்டைல்.
'நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம்'இந்த பழமொழிதான்னு யோசிக்கும் போதே ஏன்பா உங்க போதைக்கு நான்தான் ஊறுகாயான்னு திருவாளர் பைரவர் பேமிலி சைடு இருந்து கொஞ்சம் அதிகமாகவே குறைக்கும் சப்தம் கேட்டது.
நாற்பது வயதில் நாய் குணம் அதை நாம் தான் தெரிஞ்சி நடக்கணும்னு சிவாஜியைப் பார்த்து கே.ஆர்.விஜயா பாடினதை இப்படி கொஞ்சம் யோசியுங்கள், அடுத்த லைனில் சிவாஜி, அட பாட்டாவே பாடிட்டியா என்று குணா கமல் ஸ்டைலில் பதில் தந்திருந்தால் எப்படியிருக்கும் என்று....!
நாற்பது வயசாயிடுச்சில்லே அதான் எதையும் புரிஞ்சிக்காம வாலு வாலுன்னு கத்தினா வேற என்னன்னு சொல்லுவாங்களாம்...அதனாலதான் நாற்பது வயசில நாய்குணம்னு சொல்றது?!
மனுஷங்களைக் காட்டிலும் எங்களுக்குப் புரிந்து கொள்ளும் சக்தி அதிகம்தான். நம்பலைன்னா எங்க முன்னோர்கள் நடிச்ச தேவர் பிலிம்ஸ், ராமநாராயணன் படங்களைப் பாருங்கன்னு மைண்ட் வாய்ஸ்ல அவங்க பேசறது உங்களுக்கும் கேட்குதுதானே. சரி இவ்வளவு சொன்னபிறகும் அவங்களைப் பற்றி இரண்டொரு வார்த்தையாவது நம்ம ஜிம்மி, பப்பி பத்தி பேசலைன்னா எப்படி ? உடனே டாபர்மென்ஸ் குறைக்ககூடாது.
அவங்களே சொல்றாங்க கேளுங்க, 6 அவுன்ஸ் எடையுள்ள மூளையிருக்கிற எங்களுக்கு 100 சதவிகித மோப்ப சக்தி அதிகம். இல்லைன்னா எங்களை போலீஸ்ல குற்றங்களைக் கண்டுபிடிக்க கூப்பிடுவாங்களா ? நாய் கடிப்பதைப் போல கனவு வந்தால் கனவு கண்டவருக்கு முன்கூட்டியே வரும் ஆபத்தை அந்த கனவு உணர்த்தும். மனித இறப்புகள், தீயசக்திகளைக் கூட இனம் காணும் சக்தி எங்களுக்கு உண்டுன்னு ஆன்மீகம் சொல்லுது. எகிப்தியர்கள் நாய்களை வேட்டையாட பயன்படுத்தினார்கள். அவர்கள் நாய்களை நண்பனாக, வேலையாளாக பாராட்டினார்கள். சில சமயங்களில் தன் எஜமானர்களுடன் மம்மி செய்யப்பட்டு நாய்களும் புதைக்கபட்டன என்றால் ஆச்சரியம்தானே.
பிஸ்கட்டுக்கு மட்டும் நாங்க வாலை ஆட்றதில்லைங்க. நட்புக்கு வலதுபுறமும், வெறுப்புக்கு இடதுபுறமும் வாலை ஆட்டி எங்க விருப்பத்தை தெரிவிப்போம். அப்புறம்....எங்க லவ்வுக்கும் இந்த வாலாட்டல் பொருந்துன்னு வெட்கத்தோடயே சொன்னாங்க.
நாய்கள் என்றாலே எஜமான விசுவாசமும் நட்புணர்வும்தான் நம்ம கவனத்துக்கு முதல்ல வரும். ஆனா வாலாட்டுவதில் கூட இத்தனை நுணுக்கம் இருக்குனு தெரிஞ் சிக்கோங்க. இல்லைன்னா கடிதான். இப்போ பழமொழிக்கு வருவோம். நாற்பது வயதிற்கு நாய் குணம் என்பதே பழமொ ழியின் உண்மையான விளக்கம்.
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று- என்கிறார் வள்ளுவர்.
எத்தனை பெரிய சிக்கலாக இருந்தாலும் அதை தன் பேச்சினால் அழகாக முடித்துவைக்கும் குணம் உடையவர் நாற்பது வயதுக்காரர் என்பதே ஆகும். அதாவது நாற்பது வயதை எட்டியவர்களுக்கு உலக அறிவு அதிகம் கிடைக்கும், அவர்களின் பேச்சில் நாவண்மை நிரம்பியிருக்கும். இதைத்தான் திரித்து சம்பந்தமில்லாமல் எங்களை கூட்டிவந்துட்டாங்கன்னு முனுமுனுக்கி பைரவர்.
நாய் பரவாயில்லைங்க எங்க நிலைமைதான் ரொம்ப மோசம்னு வரிஞ்சி கட்டிட்டு வருது பேய்கள் சங்கம். Part - 1, part 2, part 3 ன்னு பேய்பட சீரிஸ் ஒரு பக்கம். சரி நம்மை டெரர் ஆகவாவது காட்டுறாங்களா.. வயசான கிழவி உடம்புலே பூந்துகிட்டு பர்ஸ்ட் நைட்டுக்கு வந்தே ஆகணுன்னு செத்துப்போனவனை கூப்பிடுது, காரேத்தி கொன்னவனை காதலிச்சி அவனுக்காக வாழற காதல் பேய், தண்ணியிலே பேய், கரண்ட்டுல பேய், ஸ்வீட் செய்துதரும் பேய், பேய் சீசன் ஆரம்பிச்ச காலத்திலே இருந்து கொன்னவங்களைப் பழிவாங்குற பேய், ஏப்பா...கொன்னவங்களை பேய் பழிவாங்கிறா மாதிரி பேய் கொன்ன ஆளுங்களும் பேயாத்தானே சுத்திட்டு இருப்பாங்கன்னு சந்தானம் கேட்ட கேள்விக்கு இப்போ வரைக்கும் பேய்களால் கூட பதில் சொல்ல முடியலை. டிவி சீரியல் தொடங்கி, ஆன்லைன் பேய் கூட வந்திட்டது.
படம் எடுத்துட்டுப் போறாங்க.. பேய்னு எவனுக்காவது ஒரு பயம் இருக்கா. விவேக் சொல்வதை போல தமிழ்நாட்டுலே நான் பைக்லே ஸ்டாண்டிங்கல வந்தவன்டா என்ற புலம்பல்தான் இப்போதைய பேய்களுக்கு அதிகம். ஒரு கொசு மேல இருக்கிற பயம் கூட எங்க மேல இல்லைன்னு ரொம்பத்தான் பொங்கறாங்க.
நள்ளிரவு இரண்டு மணிக்கு, வீட்டில் ஒரு அறையில் மட்டும் லைட் எரியுது. வெளிச்சத்தை பார்த்ததும் பேய் அங்கே போகிறது. ஒரு பையன் படிச்சிட்டு இருக்கான். புக்கை எடுக்கறான், மானிட்டரைப்பார்க்கிறான். ஏதோ குறிப்பு எழுதறான். மறுபடியும் எழுதறான் படிக்கிறான். இப்படியே ஒரு அரைமணிநேரம் அந்த பேய் அவனையே பார்க்கிறது. தன் பக்கத்தில் ஏதோ உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் பையனுக்கு ஒரு ஷாக். மெல்ல தலையைத் திருப்பிப் பார்க்க... வந்த பேய் என்ன நினைச்சதோ தெரியலை. அவன் தலையை பாசமா வருடி, கூட சேர்ந்து விடிய விடிய நோட்ஸ் எடுக்க உதவி செய்ததுன்னா பார்த்துக்கோங்களேன்.
இதேபோல ஒரு கார் பார்க்கிங். காரை பார்க் பண்ணிட்டு சோகமா நடந்து வர்றான் ஒரு பையன். அவன் மனசில ஆயிரம் கவலை. அப்போ அவனை பயங்கரமா பயமுறுத்துகிறது ஒரு உருவம். நிதானமாக பார்த்து சட்டுன்னு கட்டிப்பிடிச்சி அழ ஆரம்பிச்சிடறான். பேயும் அவனை சமாதனாப்படுத்துது. சமீபத்தில் ரசித்த இரண்டு வீடியோக்கள் இவை.
வித்தியாசமா காதலை காட்டின அதே சினிமா, ஆக்ரோஷமான பேய்களைக் காமெடியா காட்டியதில் இந்த பேய்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். முல்தாணி மெட்டி பேய்கள்மாறி... வெறும் பேக்ரவுண்ட் மீயூசிக் பயத்தை உண்டு பண்றதுதான் இப்போ 2k பேய்களின் ஸ்டைல்.
"அறுபது வயதில் பேய் குணம் இல்லைங்க சேய் குணம்".
வயது ஆக ஆக... குழந்தைத்தனம் மிகுதியாகும் என்பது பழமொழியின் சாரம். இதுவரையில் நம்மைத் தாங்கிய அன்புள்ளங்களை நாம் எப்படி கவனிக்க வேண்டும் என்பதை சொல்கிறது. அறுபது வயதில் வாழ்வின் முழுமையும் புரட்டிப்பார்க்கும் தருணம். எதை விடுத்தோம், எதை பெற்றோம், எங்கே ஏமாற்றப்பட்டோம். எங்கே சந்தோஷித்தோம் என்று எல்லாவற்றையும் இதயத்திற்கு கொண்டு வந்து அசை போட்டு பார்க்கும் தருணம். இத்தகைய குழந்தைகளை பொக்கிஷமென பாதுகாத்து வைத்திருங்கள். அவர்களின் அனுபவங்களை பாடமாக கொள்ளவேண்டும். குறைந்த பட்சம் காது கொடுத்து கேளுங்கள். சேயாய் அவர்களை பராமரியுங்கள்.
இன்னும் ஒரு பழமொழியுடன் அடுத்த கட்டுரையில் சந்திக்கலாம்.






