என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • போர்க்கடவுள் முருகப்பெருமான் அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி அசுரனை சூரசம்காரம் செய்தார் என்பது வரலாறு.
    • சுப்பிரமணியர் வடக்கு திசையில் இருந்த திருத்தணிகைக்குச் செல்லும் முன் வடக்கு நோக்கி வந்து இருந்த இத்தலம் தென்தணிகை எனப்படுகிறது.

    தென் தணிகை என்றால் பலருக்கும் தெரியாது. குன்றத்தூர் என்றால் புரியும். குன்று இருக்கும் ஊர் என்பதால் குன்றே பிரதானமாக, அத்தாக இருப்பதால் குன்றத்தூர் என்று பெயர் உண்டானது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும்-வாழுமிடம் என்பதற்கு இசைய இக்குன்றிலும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கோவில் கொண்டிருக்கிற இம்மலைக் கோவிலுக்குதான் தென் தணிகை என்று பெயர்.

    போர்க்கடவுள் முருகப்பெருமான் அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி அசுரனை சூரசம்காரம் செய்தார் என்பது வரலாறு. சூரபத்மன் என்ற அரக்கனுக்கு எதிரான போரில் அவர் சுவாமிமலை, திருத்தணிகை, திருவாவினன்குடி (பழனி), திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் ஆகிய ஆறு இடங்களில் தங்கினார். இந்தத் தலங்கள் ஒவ்வொன்றிலும், திருமுருகாற்றுப்படையில் புகழப்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன. ஆண்டவரின் ஆறு போர் முகாம்கள் "அறுபடை வீடு" எனப்படுகின்றன.

    அதேபோல் தீயவற்றை அழித்து நல்லவற்றைக் காக்க கந்த புராணப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கொண்டார். ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரில் நீரிலும், கண்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்தில் நிலத்திலும், மாயாமலம் கொண்ட தாருகாசுரனை திருப்போரூரில் ஆகாயத்திலும் போர் புரிந்து சம்ஹாரம் செய்தார். சம்காரம் என்றால் தீயவற்றை அழித்து நல்லவற்றை வாழ வைத்தல் என்பதாகும். தாரகாசுரன் என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தன் படையை முன்னெடுத்துச் சென்று அவனுடன் திருப்போரூரில் வானில் இருந்தபடியே கடுமையான போர் செய்து அவனை வென்றார். சூரனை அழித்த பாவம் தீர, திருத்தணிகை செல்லும் முன் சிவ வழிபாடு செய்ய நினைத்தார்.

    சுப்பிரமணியர் திருப்போரூரில் இருந்து திருத்தணிகைக்கு செல்லும் தனது பயணத்தின்போது வழியில் குன்று ஒன்றைக் கண்டார். இயற்கையாய் அழகாய் அமைந்த மலை அவரைக் கவரவே, தவம் செய்ய விரும்பி அங்கு தங்கினார். திருச்செந்தூரில் செய்தது போலவே இங்கும் மலையடிவாரத்தில் பகையின் வலிமையை அழித்து தனக்கு போரின்போது "பற்றுக்கோடாக" துணைநின்ற சிவனின் அருவுருவத்தோற்றமாக சிவலிங்கம் ஒன்றை நிறுவி ஆழ்ந்த தியானம் தவம் முடித்து சிவபூஜை செய்து பயணம் மேற்கொண்டார் என்பது வரலாறு.

    சுப்பிரமணியர் வடக்கு திசையில் இருந்த திருத்தணிகைக்குச் செல்லும் முன் வடக்கு நோக்கி வந்து இருந்த இத்தலம் தென்தணிகை எனப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பழமையான முருகன் தலங்களில் வடக்கு நோக்கியபடி உள்ள திருமணக்கோலத்தில் உள்ள முருகன் கோவில் இதுவாகும், தங்கள் துன்பம் நீக்கிய திருமுருகப்பெருமானை அவரது துணைவிகளுடன் தணிகை போல் தனித்தனி சன்னதிகளில் அல்லாது ஒருசேர காட்சி தந்து அருள் செய்ய வேண்டுமென துன்பம் நீங்கிய தேவர்கள் வேண்டியதால் அங்கே வள்ளி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் வடக்கு நோக்கி நின்றவாறே காட்சி தந்தார். மேலும் மக்களுக்கு அருள் செய்யத் தொடர்ந்து இம்மலையில் துணைவிகளுடன் வித்தியாசமாகக் காட்சி தந்தருள வேண்டுமென தேவர்கள் வேண்டியபடி இன்றுவரை காட்சி தரும் தலம் இத்தென் தணிகையாகும் இக்கோவிலின் கருவறையில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் இருந்து அருளுகிறார். சுப்பிரமணியர் இரு தேவிகளுடன் இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு தேவியுடன் மட்டுமே தரிசிக்க முடியும். முருகனின் ஒருபுறம் பார்த்தால் வள்ளியுடன் தரிசிக்க முடியும், மறுபுறம் நகர்ந்து பார்த்தால் தெய்வயானையுடன் தரிசிக்கலாம். 

    கருவறையைச் சுற்றி உள் பிரகாரம் உள்ளது. முருகப்பெருமான் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகியோர் கோஷ்ட தேவதைகளாக உள்ளனர். இக்கோவிலின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இது 9 முதல் 13-ம் நூற்றாண்டு வரை ஆண்ட சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது. இக்கோவில் 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு, 1726 -ம் ஆண்டில் மதுரை நாயக்கர்களால் மேம்படுத்தப்பட்டது எனவும் சான்றுகள் குறிக்கிறது.

    மலையடிவாரத்தில் 'ஸ்ரீ சரவண பொய்கை' எனப்படும் ஒரு பெரிய குளம் உள்ளது. அடிவார மண்டபத்துடன் கூடிய மலைக்கோவில் அடிவாரத்தில் இருந்து 84 படிகள் உள்ளது. மலையடிவாரத்தில் அசுரனை அழித்த பாவம் நீங்க முருகன் நிறுவி வழிபட்ட கந்தழீசுவரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. புறப்பொருள்திணைகளில் ஒன்றான "கந்தழி" என்பதற்கு "வழிபடும் தெய்வம் பற்றுக்கோடாக துணை நிற்பது" என தொல்காப்பியம் குறிக்கிறது. சூரனை அழிக்க துணை நின்ற ஈசன் கந்தழீசுவரர் என வழிபடப்படுகிறார்.

    முருகன் சூரனை அழிக்கப் புறப்பட்டபோது தாய்மாமன் திருமால் ஆசி வழங்கி அருளவந்து குடி கொண்டுள்ளார். அவ்வாறு ஆசி வழங்க வந்தவர் ஊரிலிருந்து வந்ததால் "ஊரகத்தான்" என்ற பெயரோடு தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளார்.

    அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற இக்கோவிலுக்கு படியேறி மலைமீது செல்லும் வழியில் வலஞ்சுழி விநாயகர் கோவிலும் மலைமீது முன் மண்டபமும் சுமார் 50 அடி உயரம் உடைய மூன்று நிலையுடன் கூடிய ராஜ கோபுரமும் அமைந்துள்ளன. திருச்சுற்றில் விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், பைரவர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, வில்வ மரத்தடி விநாயகர் ஆகியோரின் பிரார்த்தனை பரிவார சந்நிதிகள் பழைமையும் பெருமையும் வாய்ந்தவை. மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. பிள்ளை வரம் வேண்டுவோர் பிரார்த்தனை செய்து கொண்டு பிரார்த்தனை நிறைவேற மரத்தொட்டில் கட்டுகிறார்கள். அரச மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்து குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் அளிக்கிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து மரத்தில் தொட்டில் கட்டி விருப்பங்கள் நிறைவேறி,அவர்கள் கோவிலுக்குத் திரும்பி, குழந்தையின் எடைக்கு சமமான பழங்கள் அல்லது சர்க்கரையை பிரசாதமாக வழங்குகிறார்கள். குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கோவிலுக்குச் சென்று தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து விபூதி பெற்றுச் சென்று பலன் அடைகிறார்கள்.

    சுமார் 50 ஆண்டுகளாக கந்தசஷ்டி விழாவில் மக்கள் விரதமிருந்து முருகனை தரிசனம் செய்து லட்சார்ச்சனையில் பங்கு கொண்டு கந்த சஷ்டியன்று முடிவுபெறும்.

    50 ஆண்டுக்குப்பிறகு சூரசம்காரம் இணைந்த திருவிழாவாக முன்பு நடந்தது போல் மீண்டும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    2023ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை முருகனைப் போற்றும் கந்தசஷ்டி லட்சார்ச்சனை சென்ற ஆண்டுகள் போல் நடைபெறும். 17-ந் தேதி மாலை 6 மணிக்கு மலையடிவரத்தில் இருக்கும் கந்தழீசுவரர் அம்பாள் நகைமுகவல்லியிடம் சென்று முருகப்பெருமான் சக்திவேல் வாங்கி மீண்டும் மலைக்கு எழுந்தருள்வார். 18-ந் தேதி பகல் 12 மணிவரை பக்தர்கள் சத்ரு சம்கார திரிசதி மகாலட்சார்ச்சனை செய்து முருகனை வேண்டிட மலையில் இருந்து முருகன் வில்லேந்திய வேலனாக குதிரை வாகனத்தில் மலையடிவாரத்திற்கு வந்து மாலை சுமார் 4 மணிக்கு சூரசம்காரம் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு சம்காரம் செய்து வேகத்துடனிருக்கும் முருகப்பெருமானுக்கு கீழேயுள்ள கந்தழீசுவரர் கோவிலில் மகாசாந்தி அபிஷேகம் நடந்து சிவபூஜை செய்து கந்தனீச்சுரமுடையார் எனப்பெயர் சூட்டப்பட்டு மலைக்குத் திரும்புவார்.

    19-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து புதியதாக செய்யப்பட்ட தங்க மயில் வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானை எழுந்தருளி அருள் வழங்குவார்கள். 

    இரா.இரகுநாதன்

    இரா.இரகுநாதன்

    குன்றத்தூர் முருகன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. வாகனங்கள் (கார், பைக், ஆட்டோ) 84 படிகள் ஏறி நடக்க முடியாதவர்கள் மலையில் உள்ள கோவிலின் முன்புறம் வரை மலைக்குச் செல்ல வாகனப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலுக்குச் செல்பவர்கள் சென்னை வெளிவட்ட சாலையில் இருந்து விரைவில் கோவிலுக்குச் செல்லலாம். பல்லாவரம் மற்றும் பூந்தமல்லியில் இருந்தும் குன்றத்தூருக்கு நிறைய பஸ்கள் உள்ளன.

    மனிதர்களின் ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் சம்ஹாரம் செய்த குமரக்கடவுளை வழிபட்டால், அவற்றில் இருந்து விடுபட்டு, பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம் என்பது குமார வழிபாட்டுத் தத்துவம்.

    கந்தசஷ்டி சூரசம்கார நிகழ்வுகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்வதால் நம் முன் ஊழ்வினைகள் நீங்கும், பாவங்கள் நீங்கி ஆன்ம சுத்தி கிடைக்கும்.

    • ஒன்றைத் தேடிய முயற்சியில் அதனை அடைந்துவிட்டால் அத்தோடு திருப்தி அடைந்து விடுவதில்லை மனம்.
    • ஐயா! தாகம் உயிரை வாட்டுகிறது!; தண்ணீர் தாருங்கள்!; நான் அரசன்; விலையாக நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்

    சொத்துக் குறித்த செய்திகளை அறியப்போகும் சுகமான வாசகர்களே! வணக்கம்.

    விடுதலைப் போராட்ட வீரர் தோழர் ஜீவா அவர்கள் மகாத்மா காந்தியடிகளை, சிவகங்கையில் சந்தித்தபோது, "உங்கள் சொத்து எவ்வளவு" என்று காந்திஜி கேட்டாராம். அதற்கு ஜீவா, "இந்தியா தான் எனது சொத்து!" என்றாராம்; " இல்லை ஜீவா! நீங்கள் தான் இந்தியாவின் சொத்து!" என்று வாய்மை மொழி பகிர்ந்தாராம் காந்திஜி. விடுதலைப் போராட்டக் காலத்தில் நாடே நாட்டு மக்களின் சொத்தாக இருந்தது!; அதை அந்நியரிடமிருந்து மீட்பதே அவர்கள் வாழ்வதன் லட்சியமாகவும் இருந்தது.

    இன்று வாழ்க்கையின் நோக்கங்களும் லட்சியங்களும் மனிதருக்கு மனிதர் மாறுபட்டதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கின்றன.

    உயர் படிப்புப் படித்து உயர் பதவிகளில் அமர்வது!

    அரசியல் பதவிகளைப் பிடித்து அதிகாரப் பதவிகளை நிருவகிப்பது!

    கடினமாக உழைத்து வங்கிக் கணக்கில் கோடி கோடியாகப் பணம் சேர்ப்பது!

    எந்த வேலையும் செய்யாமல் அடுத்தவன் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பது!

    நேரம் தவறாமல் அறுசுவை உணவு உண்டு களிப்பது!

    ஊர் சுற்றிப் பார்ப்பது!

    உறங்கிக் களிப்பது!

    வசதியாக வீடுகட்டிச் சுகமாகக் குடியிருப்பது!

    உலகில் உள்ள நிலங்களையெல்லாம் தனக்கு உடமையாக்கிக் கொள்வது!

    ஏழு தலைமுறைக்குச் சொத்துக்கள் சேர்த்து வைப்பது!

    …. என ஆட்களும் கோடி! ஆசைகளும் கோடிகளாகவே விரிந்து கொண்டு செல்கின்றன.

    வாழ்க்கையில் எல்லோரும் ஒருவிதப் பரபரப்போடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம். 'ஏன் இந்த அவசரமோ?' என்று கேட்டால், 'எல்லாம் இந்த ஒரு ஜான் வயிற்றுக்காகத் தான்!' என்று எளிதாகப் பதிலைக் கூறி விடுகிறோம். உண்மையில் மனிதனுக்கான அடிப்படைத் தேவை எனப் பார்த்தால், உண்பதற்கு ஒருநாழி அரிசியும், உடுப்பதற்கு மேலொன்றும் கீழொன்றுமாக இரண்டு துணிகளுமே போதுமானது. ஆனால், நமது ஓட்டத்தைப் பார்த்தால் அதையும் தாண்டிய தேவைகளை நோக்கிய ஓட்டமாகவே இருக்கிறது.

    ஒன்றைத் தேடிய முயற்சியில் அதனை அடைந்துவிட்டால் அத்தோடு திருப்தி அடைந்து விடுவதில்லை மனம். அடைந்த அந்த ஒன்றிலிருந்து அதற்கும் மேலே ஒன்றைத் தேடிக் கிளம்பி விடுகிறது. சொத்துச் சேர்த்துச் சொத்துச் சேர்த்து அலுத்துப்போன மனிதனை இந்த உலகத்தில் காண்பதே அரிதாகிப் போய்விட்டது.

    சொத்துக்களை, அசையும் சொத்துக்கள், அசையாச் சொத்துக்கள் என இருவகைப்படுத்தலாம். உண்மையில் பார்த்தால் அவையெல்லாம் பொருள்கள். இப்போது நம்மிடம் இருக்கும் சொத்துக்கள் ஒருகாலத்தில் வேறு யாருக்கோ சொந்தமாக இருந்தவை: நம்முடைய காலத்திற்குப் பிறகு வேறு இன்னொருவருக்குச் சொந்தமாகி விடப் போகிறவை. அப்படியானால் நமக்கே உரிமையான உண்மையான சொத்து என்பது எது?.

    ஒரு புகழ்மிக்க துறவி பக்கத்து நாட்டில் இருப்பதாகவும், அவரது ஆசியும் ஆதரவும் பெற்றால் பல்லாண்டுகாலம் நலமான ஆட்சி செய்யலாம் என்றும் ஒரு நாட்டு அரசன் கேள்விப்பட்டான். உடனே பல்லக்குப் பரிவாரத்தோடு அமைச்சரை அனுப்பி அவரை அழைத்து வரச் செய்தான். துறவியும் எந்த வித மறுப்புமின்றி வந்து சேர்ந்தார்.

    அரண்மனையில் தங்குவதற்குத் துறவிக்கென ஒரு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டது. அரசனின் அறையில் உள்ள அத்தனை வசதிகளும் அங்குச் செய்யப்பட்டிருந்தன. துறவி உடுத்துவதற்கெனப் பலவிதப் பட்டாடைகள், உட்கார வைரச் சிம்மாசனம், படுக்க ரத்தினக் கம்பளங்கள் விரித்த படுக்கை.. எல்லாம் தயார் நிலையில் இருந்தன.

     

    அரசன் துறவியை அந்த அறைக்கு அழைத்து வந்து,'இந்த ஏழையின் குடிசைக்கு எழுந்தருளுங்கள் சாமி!' எனத் தன்னடக்கத்தோடு கூறுவது போலத் தற்பெருமையோடு கூறினான்.

    சிரித்துக்கொண்டே துறவி கூறினார், "அரசனே நான் சாதாரணத் துறவி காட்டுத் தரைகளில் படுத்துக், கனிகாய்களைப் புசித்துத் திரிபவன்!. எனக்கு எதுக்கப்பா இத்தனை விலை உயர்ந்த வசதிகள்? "

    "சுவாமி! நான் நாட்டுக்கு அரசன்! தாங்களோ மிகப்பெரும் துறவி! மற்றும் இப்போது எனது விருந்தாளியும் கூட! நான் எனது வசதி வாய்ப்புகள் மற்றும் செல்வ வளத்திற்கு ஏற்ப உங்களுக்கு எனது விருந்தோம்பலைச் செய்ய வேண்டும்!. எனது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?"- சற்று செல்வச் செருக்கோடு அரசன் பேசியதாகத் துறவிக்குப்பட்டது.அமைதியாக இருந்தார். அரசன் மேலும் பேசத் தொடங்கினான்.

    "துறவியாரே! இந்த நாட்டிற்கு என்று சொந்தமாக எத்தனை ஆயிரம் வேலி விவசாய நிலங்கள் இருக்கின்றன தெரியுமா? அரண்மனை கஜானாவில் எத்தனை ஆயிரம் எடைகளில் தங்கம், வைரம்,வெள்ளி,பவளம், முத்து, மணிகள் இருக்கின்றன தெரியுமா? இந்த அரண்மனையின் விலைமதிப்பு என்ன தெரியுமா? நாட்டில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களின் விலைமதிப்பு எவ்வளவு தெரியுமா?- அடுக்கிக் கொண்டே போனான் அரசன்.

    துறவி பேசத் தொடங்கினார்," அரசனே! நீ சொன்ன சொத்துக்களின் பட்டியல் உனக்கு வேண்டுமானால் பெருமையைத் தரலாம். ஆனால் இப்போது நீ சொன்ன உனது சொத்துக்களின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா?. உன்னிடம் ஒன்றிரண்டு வினாக்களைக் கேட்கப்போகிறேன்; பதிலைச் சொல்!"

    "அரசனே! நீ படைகளோடு காட்டிற்கு வேட்டையாடச் செல்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். நெடுந்தொலைவு சென்ற பிறகு வழி தவறி ஒரு பாலை வனப் பகுதிக்குள் தனித்து விடப்படுகிறாய். கொளுத்தும் வெய்யில்; தாகம் தீர்க்க எங்காவது தண்ணீர் கிடைக்காதா? என அலைந்து தேடுகிறாய். தாகம் உயிர்போகுமளவுக்கு வாட்டுகிறது.

    "அப்போது அந்த வழியே ஒரு வழிப்போக்கன் கையில் ஒரு குவளையோடு எதிரில் வருகிறார். அந்தக் குவளையில் பாதியளவுக்கு அழுக்குத் தண்ணீர் இருக்கிறது." ஐயா! தாகம் உயிரை வாட்டுகிறது!; தண்ணீர் தாருங்கள்!; நான் அரசன்; விலையாக நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்; அழுக்குத் தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை!" என்கிறாய்.

    "அந்த வழிப்போக்கன், "தண்ணீர் தருகிறேன்!. அதற்கு விலையாக உனது ராஜ்ஜியத்தில் பாதியையும் சொத்துக்களில் பாதியையும் எனக்குத் தருவாயா?" என்று கேட்கிறான். "தருகிறேன். தண்ணீரைத் தந்து எனது உயித் தாகம் தீருங்கள்" என்று கூறி, அந்த அரைக்குவளை அழுக்குத் தண்ணீரை வாங்கி, ஒரே மொடக்கில் குடித்து, தாகம் தீர்த்துக்கொண்டு அரண்மனை திரும்பி விடுகிறாய்.

    "நீ பாலைவனத்தில் குடித்தது அழுக்குத் தண்ணீர் என்பதால், எவராலும் குணப்படுத்த முடியாத வயிற்று நோய் உனக்கு வந்து விடுகிறது. எல்லா மருத்துவர்களும் குணப்படுத்த முடியாது எனக் கைவிரித்த பின், ஒரே ஒரு மருத்துவன் மட்டும்,' குணப்படுத்த என்னிடம் அதிசய மூலிகை இருக்கிறது; ஆனால் விலையாக மீதம் உன்னிடமுள்ள பாதி ராஜ்ஜியத்தையும் சொத்துக்க ளையும் எனக்குத் தர வேண்டும்' என்கிறான். ஒப்புக்கொண்டு, அவன் தந்த ஐந்தாறு மூலிகை உண்டு நீயும் உயிர் பிழைத்துக் கொள்கிறாய். ஆனால் அரசாங்கமும் சொத்துக்களும்?..

    "இப்போது சொல்! உன்னிடமுள்ள சொத்தின் மதிப்பு என்ன? அரைக்குவளை அழுக்கு நீரும்! ஐந்தாறு மூலிகையும் தானே!. இதை வைத்துக்கொண்டா இத்தனை ஆட்டம்?"- துறவியின் பேச்சில் மூச்சடங்கிப் போனான் அரசன்.

    சொத்துக்கள் பொருள்களாக இருக்கின்ற வரையில், நிரந்தரமற்ற மதிப்புக் கொண்டவையாகவே அவை இருந்து விடுகின்றன. பயன்படாத பொருள்களால் பலன் ஏதும் விளைந்துவிடப் போவதில்லை.

    சொத்துக்களைப் பணமாக, நகையாக, நிலமாக, பொருள்களாகச் சேர்க்கிறோம்;ஆனால் அதற்கு விலையாக நமது உடல் நலனை, மன நிம்மதியை, திரும்பப் பெற முடியாத நமது இளமைக் காலத்தை, மகிழ்ச்சியை இழந்து விடுகிறோம். இழந்த இளமையையும், இழந்த உடல் நலத்தையும், இழந்த குடும்ப நிம்மதியையும் சம்பாதித்த சொத்துக்களை வைத்து மீட்டு எடுத்து விட முடியுமா?.

    அப்படியானால் பொருளீட்டவே கூடாது என்று பொருளில்லை. பொருள் ஈட்டலாம்; சொத்து சம்பாதிக்கலாம். மகிழ்ச்சியாக, மன நிம்மதியாக, நாமும் மகிழ்வோடு, அடுத்தவரையும் மகிழ்வோடு வைத்திருந்து பொருளீட்டலாம். ஈட்டலின் ஒரு பகுதியை ஈதலுக்காகப் பயன்படுத்தலாம்.

    இந்த உலகின் செல்வங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமானவை. அவற்றில் சிலவற்றை நமது முயற்சியினால் நமது சொத்தாக நாம் பெற முடியும். ஆனாலும் அவை முழுக்க நமக்கு மட்டுமே பயன்தர வேண்டும் என்று நினைப்பதே அறிவீனம்.

    ஒரு நாட்டின் தலை நகரத்தில் அரண்மனையை யொட்டி ஒரு குடியிருப்புப் பகுதி இருந்தது.அதில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வீடுகட்டிக் குடியிருந்து வந்தன. திடீரென ஒருநாள், "அரசரின் அரண்மனை இங்கு விரிவாக்கப் படவுள்ளது; ஒரு வாரத்தில் இங்குள்ள வீடுகள் இடிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

    குடியிருப்புவாசிகள் ஒன்று திரண்டு மன்னரிடம் சென்று முறையிட்டனர். பலனில்லை. ஒரு வாரத்தில் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டனர். மக்கள் அந்த ஊரில் இருந்த துறவியிடம் சென்று முறையிட்டனர்.

    துறவி அரண்மனைக்குச் சென்று மன்னனைப் பார்த்தார். மன்னன் வணங்கி, "அழைத்தால் நானே வந்து தரிசித்திருப்பேனே! சுவாமிகள் எதற்கு இவ்வளவு தூரம்?" என்று கேட்டான்.

    "காரியம் எனக்குத் தானே நடக்க வேண்டும். அதனால் நேரில் வந்து விட்டேன்.

    அரசனே! நான் எனது மடத்தில் ஒரு புண்ணிய வேள்வி நடத்தப் போகிறேன்!. அதற்கு ஒரு சாக்கு மூட்டை நிறைய மண் வேண்டும்!. அதுவும் இப்போது நீ புதிதாக இடித்துப் போட்டிருக்கிறாயே குடியிருப்பு, அந்தப் பகுதியிலிருந்து வேண்டும்!. அதுவும் அந்த ஒருமூட்டை மண்ணையும் நீ உன் தோளிலேயே சுமந்து வர வேண்டும்!" என்றார் துறவி.

    துறவியின் புனிதக் கட்டளையை ஏற்று வியர்த்து விறுவிறுக்க சுமக்க முடியாமல் அந்தச் சாக்கு மூட்டையைச் சுமந்துவந்து போட்டான் அரசன். "மிகவும் கனக்கிறதா? நீ இடித்துப் போட்ட மண்ணில், அந்த ஒரு மூட்டையையே பாவ மூட்டையைப்போலச் சுமக்க மாட்டாமல் சுமந்து வந்தாயே! அந்தக் குடியிருப்பு முழுவதையும் இடித்த பாவத்தை எப்படிச் சுமக்கப் போகிறாய்! அபகரிப்பதால் சேர்வதல்ல சொத்து!; அடுத்தவர்க்கு உதவுவதால் ஈட்டுகிற புகழே உண்மையான சொத்து!" என்றார் துறவி.

    ஈட்டலும் இன்பம்! ஈதலும் இன்பம்!

    பெயரும் புகழுமே பொருளையும் பணத்தையும் விட உண்மையான சொத்து!

    தொடர்புக்கு ௯௪௪௩௧௯௦௦௯௮

    - முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    • திருவாரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்குவனாரிடம் 9, 10-ம் வகுப்புகளில் படித்த மாணவர்தான் கலைஞர் மு.கருணாநிதி.
    • ஆராய்ச்சி உலகிலும் இலக்குவனார் ஒரு போராளியாக விளங்கினார்.

    இன்று (நவம்பர் 17-ந் தேதி) தமிழறிஞர் இலக்குவனார் பிறந்த தினம். மொழிப்போர் தியாகி, செந்தமிழ் மாமணி என புகழப்படும் பேராசிரியர் இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர்.

    கல்லூரி பேராசிரியர்

    இலக்குவனார் திருவாரூர் மாவட்டம் வாய் மேடு கிராமத்தில் 17-11-1910 அன்று பிறந்தார். பெற்றோர் சிங்காரவேலர்-ரத்தினம். திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டத்துக்கு படித்து ஆசிரியராக தம் வாழ்க்கையைத் தொடங்கி, கல்லூரி பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியவர். தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும், பாட மொழியாக வேண்டும் என பல போராட்டங்களை நடத்தி அதன் விளைவாக இருமுறை சிறைப்பட்டவர். இந்தியாவில் ஒரு மொழியின் உரிமைக்காக போராடி சிறை சென்ற ஒரே பேராசிரியர் சி.இலக்குவனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி எதிர்ப்பு போராட்டம் எதிரொலியாக கைதாகி சிறைப்பட்டார். இதன் விளைவாக தான் வகித்து வந்த கல்லூரி பேராசிரியர் பணியை அவர் இழக்க நேரிட்டது.

    இவரது அஞ்சா நெஞ்சமும், தன்மான உணர்ச்சியும் எவ்விடத்திலும் இவர் தொடர்ந்து பணிபுரிய இடம் அளிக்கவில்லை. 1967-ல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அறிஞர் அண்ணா மீண்டும் இலக்குவனாருக்கு பணி புரியும் வாய்ப்பினை வழங்கினார். சென்னை மாநில கல்லூரியில் தலைமை தமிழ் பேராசிரியராக பணி புரிந்தார். இங்கும் ஓராண்டுக்கு மேல் அப்பணியில் நீடிக்க முடியவில்லை.

    கோயம்புத்தூரில் தமிழாசிரியர் மாநில மாநாட்டில் பேசிய கல்வி அமைச்சர் தமிழ் பாடமொழியாவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று கூறியதை கேட்டு அந்த மேடையிலேயே அமைச்சர் அவ்வாறு பேசியது தவறு என்று சுட்டிக்காட்டினார். தமிழில் காவலராக நீங்கள் இருப்பீர்கள் என்று மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். நீங்கள் ஆங்கிலத்தின் காவலராக மாறலாமா என அவர் கேட்ட கேள்வி அந்த காலத்தில் தமிழ் நாடெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.

    பி.ஏ.ஆனர்ஸ் எனும் படிப்பு மாறி எம்.ஏ. படிப்பு அறிமுகமானபோது தமிழ் பாடத்தை எடுத்துவிடலாம் என 1959-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர் முடிவு செய்தனர். அப்படி தமிழ் பாடத்தை நீக்குவது தவறு என ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது அங்கு வந்து இருந்த செட்டிநாட்டு அரசர் முத்தையா செட்டியார் தமிழ் படித்து பலர் வேலை தேடி திண்டாடுகிறார்கள். எனவே இந்த முடிவு எனது முடிவே என்று கூறியுள்ளார். அரசர் முடிவு என்று தெரிந்தும் இலக்குவனார் விடவில்லை. "உங்கள் தந்தையார் அண்ணாமலை அரசர் இந்த நிறுவனத்தை தமிழுக்கு முதன்மை அளிக்கவே தொடங்கியதாக கூறினாரே? நீங்கள் உங்கள் தந்தையார் போலவே தமிழைப் போற்ற வேண்டாமா என்று அரசரையே கேட்கவும் அரசர் தமது வாதத்தை கைவிட்டு இனி எப்போதும் என் பல்கலைக்கழகம் தமிழுக்கு முதன்மையளிக்கும்" என்று கூறினார். மிகத்துணிச்சலாக அரசருடன் வாதாடி தமிழ் படிப்பு தொடங்கி வழிவகுத்த இலக்குவனாரை அனைவரும் பாராட்டினர்.

    கருணாநிதியின் ஆசிரியர்

    இலக்குவனாரின் இந்த போராட்ட குணம் பல போராளிகளை உருவாக்க வழி வகுத்தது. திருவாரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அவரிடம் 9, 10-ம் வகுப்புகளில் படித்த மாணவர் தான் கலைஞர் மு.கருணாநிதி. அதன் பின்னர் அவர் திருநெல்வேலி மா.தி.தா இந்து கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியபோது அவரிடம் இரண்டு ஆண்டுகள் படித்த மாணவர் தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் இரா.நல்லக்கண்ணு. மதுரை தியாகராஜர் கல்லூரியில் அவர் பேராசிரியராக பணியாற்றியபோது அவரிடம் படித்த காளிமுத்து, நா.காமராசர் இருவரும் இந்தி ஆட்சி மொழி சட்டத்தை எதிர்த்து சிறை சென்ற போராளிகள். நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் மு.கருணாநிதி, "அவர் மாணவர்களை உருவாக்கினார் என்பதை விட தமிழ் உரிமைக்கான போராளிகளை உருவாக்கினார் என்பதே பொருந்தும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆராய்ச்சி உலகிலும் இலக்குவனார் ஒரு போராளியாக விளங்கினார். தொல்காப்பியம் பற்றிய தமது ஆராய்ச்சியில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையும், தமிழ்நாடும் கடலால் பிரிக்கப்படவில்லை இணைந்தே இருந்தன என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஆராய்ச்சி நூலை மதிப்பிட்டவர்கள் இந்த கருத்தை ஏற்க மறுத்தனர். இலங்கையும், தமிழ்நாடும் இணைந்திருந்தது என்ற கருத்தையும் அதன் அடிப்படையாக கொண்ட கற்பனை நில வரைபடத்தையும் நீக்கினால் தான் பிஎச்.டி பட்டம் வழங்க முடியும் என்று குறிப்பிட்டனர். இலக்குவனார் 37 விளக்கங்களை வழங்கிய பின் அவர்கள் தம் பிடிவாதத்தை தளர்த்தி பட்டம் வழங்க இசைவு தெரிவித்தனர்.

    தொல்காப்பியம்

    தமிழர்களின் தொன்மை வாய்ந்த இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர் பேராசிரியர் இலக்குவனார். இந்த நூலை அறிஞர் அண்ணா முதல்வரான பின் போப் ஆண்டவரை சந்தித்தபோது அவருக்கு கொடுத்தார். பழங்கால தமிழரின் பண்பாட்டு சிறப்பையும், நாகரிக பெருமையையும் விளக்கும் காலப்பெட்டகம் இந்த நூல் என தம் கைப்பட அண்ணா எழுதி கொடுத்தார் என்பது இலக்குவனாரின் பெருமைக்கும், புலமைக்கும் சான்றாகும். தமிழ், ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார்.

    என்னாளும் தமிழின் எதிர்காலம் பற்றியே சிந்திப்பவர் இலக்குவனார் என்பதால் காலமெல்லாம் தமிழர் பெருமை கூறும் வகையில் பத்திரிகை நடத்தி வந்தார் .

    சங்க இலக்கியம், இலக்கியம், திராவிட கூட்டரசு, குறள்நெறி என்று பல பத்திரிகைகளை நடத்தினார். எனினும் திருக்குறளை பரப்புவதற்காக குறள்நெறி, தமிழ்முனை என்று பல பத்திரிகைகளை நீண்டகாலம் தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தினர். 3.9.1973 அன்று சிறுநீரக கோளாறு காரணமாக தனது 64-வது வயதில் காலமானார். தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழனின் இருகண்கள் என்பார் இலக்குவனார். ஒவ்வொரு தமிழரும் அவ்வாறு போற்றினால் அதுவே அவருக்கு செய்யும் புகழ் வணக்கமாக அமையும்.

    • தலத்துக்கு அருகில் பஞ்சசேத்திரம் எனும் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
    • 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து 11-வது வாரம் அபிஷேகம் நடத்தி பிரார்த்தனை செய்தால் எல்லா கடன்களும் தீரும் என்பது ஐதீகம்.

    கும்பகோணம் கோவில்களை சுற்றி பார்க்க செல்லும்போது தவற விடக்கூடாத மிக முக்கிய கோவில்களில் திருச்சேறை ஸ்ரீ சார பரமேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கும்பகோணத்துக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. இந்த ஆலயம் பல்வேறு தனிச் சிறப்புகள் கொண்டது.

    இந்த தலத்து சிவபெருமானின் பெயர் சார பரமேஸ்வரர், செந்நெறிப்பர், உடையவர் என மூன்று விதமாக அழைக்கப்படுகிறது. இந்த 3 பெயர்களின் பின்னணியிலும் வெவ்வேறு புராண நிகழ்வுகள் உள்ளன.

    ஆதிகாலத்தில் இந்த தலம் இருந்த இடத்தில் வயல்கள் சூழ்ந்து இருந்தன. சேறு அதிகமாக இருந்ததால் சேற்றூர் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் அதுவே சேறை என்று மாறியது. தற்போது நாம் திருச்சேறை என்று அழைக்கிறோம்.

    ஒவ்வொருவரும் வாழ்க்கையை குறிப்பிட்ட நெறிமுறைப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். திட்டமிட்ட நெறிமுறைகளின்படி வாழ்ந்தால்தான் வாழ்வு சிறப்பாக இனிமையாக அமையும். மனிதனின் வாழ்க்கையை செம்மைப்படுத்த நெறிமுறைகள் அவசியம் தேவையாகும். அந்த நெறிமுறையை தந்து அருளும் சிறப்பான தலமாக திருச்சேறை தலம் திகழ்கிறது.

    இந்த தலத்தில் வழிபட்டால் நியாயமான வாழ்க்கைக்கு வழி பிறக்கும். அதன் தொடர்ச்சியாக முக்தி பாதைக்கும் செல்ல முடியும். அதை இந்த தலத்து இறைவன் தருவதால்தான் அவருக்கு செந்நெறியப்பர் என்று பெயர் ஏற்பட்டது. இந்த தலத்துக்கு அருகில் பஞ்சசேத்திரம் எனும் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இதன் காரணமாக செந்நெறியப்பருக்கு சாரபரமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

    இந்த தலம் கடன் நிவர்த்தி செய்யும் மிக சிறப்பான தலமாக திகழ்கிறது. வாழ்க்கையில் ஒருவர் நிம்மதியாக இருக்க வேண்டுமானால் துளி அளவுக்கு கூட கடன் இருக்கக் கூடாது. எவ்வளவுதான் அறிவும், ஆற்றலும் இருந்தாலும் கடன் இருந்தால் நிம்மதியாக வாழவே முடியாது. கடனை சுமப்பவர்கள் நாளடை வில் வறுமை வலைக்குள் சிக்க நேரிடும்.

    இளமையில் வறுமை என்பது கொடியது. எனவே வறுமையை வேரறுக்க வேண்டுமானால் அதற்கு கடன்களை தீர்க்க வேண்டும். ெபாதுவாக கடன் என்றால் தற்போதைய லௌகீக வாழ்க்கையில் உள்ள கடன்களையும் அடுத்த முக்தி பாதைக்கான பிறவிக் கடன்களையும் தீர்ப்பதை குறிக்கும். இந்த 2 வகை கடன்களையும் நிவர்த்தி செய்யும் ஆற்றல் திருச்சேறை தலத்தில் உள்ள "ரிண விமோசன லிங்கேஸ்வரர்" பெருமானுக்கு உள்ளது.

     

    இந்த லிங்கேஸ்வரர் இந்த ஆலயத்துக்கு வந்ததன் பின்னணியிலும் ஒரு வரலாறு இருக்கிறது. மார்க்கண்டேய முனிவர் ஒரு தடவை தனது ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தொடர்ந்து பூஜைகள் செய்து வந்தார். அந்த லிங்கம் அவரது ஆத்மார்த்த லிங்கமாக மாறியது. அதை திருச்சேறை தலத்தில் உட்பிரகாரத்தில் விநாயகருக்கு அருகில் ஸ்தாபித்தார்.

    அந்த லிங்கத்துக்கு கடன்களை தீர்க்கும் சக்தியை இறைஅருளால் ஏற்படுத்தினார். இதனால் அந்த லிங்கத்துக்கு "ரிண விமோசன லிங்கேஸ்வரர்" என்ற பெயர் ஏற்பட்டது. 'ரிண' என்றால் கடன், 'விமோசனம்' என்றால் நிவர்த்தி என்று அர்த்தம். கடன்களை நிவர்த்தி செய்யும் லிங்கேஸ்வரர் என்று பொருளாகும்.

    இவர் விநாயகருக்கு அருகில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இவரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து 11-வது வாரம் அபிஷேகம் நடத்தி பிரார்த்தனை செய்தால் எல்லா கடன்களும் தீரும் என்பது ஐதீகம். இந்த பிறவிக்கும், பிறவி இல்லாத நிலைக்கும் தேவையான கடன் நிவர்த்திகளை இந்த ஈசன் தருவதாக நம்பிக்கை. எனவேதான் இவரை கடன் நிவர்த்தீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

    இவரை மனதார வழிபட்டால் கடன் நீங்கி, வறுமை விலகி செல்வ வளம் உண்டாகும். அதோடு குழந்தை பாக்கியம், கல்வி மேம்பாடு ஆகியவையும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

    இந்த தலத்தில் மிக சிறப்பான அம்சமாக 3 துர்க்கைகள் அமைந்துள்ளனர். சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 வடிவங்களாக அவர்கள் காட்சி அளிக்கிறார்கள். 3 பேரும் ஒரே சன்னதியில் அமைந்திருப்பது மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த துர்க்கை சன்னதியில் வெள்ளிக்கிழமை களில் ராகு காலத்தில் வழிபாடு செய்தால் நினைத்த பலன்கள் கிடைக்கும்.

    இந்த தலத்தில் உள்ள பைவரருக்கும் தனி சிறப்பு உண்டு. அவர் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமானால் பாடல் பெற்றவர். இந்த பைரவர் இடது மேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் காட்சி அளிக்கிறார். தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இதுபோன்ற பைரவர் வடிவத்தை காண இயலாது. இந்த பைரவர் சிவபெருமானாகவே இருப்பதாக தேவார பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவருக்கு அஷ்டமி திதி தினத்தன்று வடமாலை சாத்தி வழிபடுகிறார்கள். இவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். நவக்கிரக தோஷங்களை நீக்கும் ஆற்றலும் இந்த பைர வருக்கு உள்ளது. குறிப்பாக வழக்கு விவகாரங்களில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இவரை வழிபட தவறுவது இல்லை.

    சூரிய பகவான் தமிழகத்தில் எத்தனையோ தலங்களில் வழிபட்டு பலன் பெற்றுள்ளார். அவ்வாறு சூரியன் வழிபட்ட தலங்களில் ஒன்றாகவும். திருச்சேறை தலம் உள்ளது. ஆண்டு தோறும் மாசி மாதம் 13, 14, 15-ந்தேதிகளில் காலையில் சூரியனின் கிரகணங்கள் இந்த தலத்து இறைவன் மீது நேரடியாகப்படுகிறது. இதனால் மாசி மாதம் முழுவதும் இந்த ஆல யத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    இந்த தலத்தில் அம்பிகை ஞானவல்லி என்ற பெயரில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சாரபரமேஸ்வரர் வாழ்க்கையை நெறிப்படுத்தும் வழிகாட்டு தல்களை வழங்கும் போது அதை நடை முறைப்படுத்துவதற்கான ஞானத்தை ஞானவல்லி தருவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் கட்டிட அமைப்புகள் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த தலத்தின் தல விருட்சமாக மாவிலங்கை உள்ளது. இந்த தல விருட்சத்தை மகாலிங்க மரம் என்றும் சொல்கிறார்கள். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வெளி பிரகாரம் மிகவும் விசாலமானது என்பது குறிப்பிடத் தக்கது.

     

    தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரி தென்கரையில் அமையப் பெற்ற 95-வது தலமாக திருச்சேறை திகழ்கிறது. இந்த ஆலயத்தில் 3 தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீராடி சித்தர்கள், முனி வர்கள் பெறும் பேறு பெற்றுள்ளனர். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு உதவிய தவுமிய மகரிஷி இந்த தலத்தில் புனித நீராடி சாரபரமேஸ்வரை வழிபட்டு மோட்சம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.

    இந்த தலத்துக்கு அடுத்தப் படியாக திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வழிபடலாம். திருவிடைமருதூர் ஆலயம் பல்வேறு மகத்தான தனித்துவம் கொண்டது. தோஷங்களை நீக்கும் ஆற்றல் நிறைந்தது. குறிப்பாக இழந்த செல்வத்தை மீண்டும் தர வல்லது. அது பற்றி அடுத்த வாரம் வியாழக்கிழமை பார்க்கலாம்.

    • பொறாமையில்லாத வஞ்சகமில்லாத நல்ல மனநிலைமை ஏராளமான நோய்களை குணப்படுத்திவிடும்! என்கிறார் வ.உ.சி.
    • எண்ணற்ற வியாதிகளுக்கு நிரந்தரமாகத் தீர்வு காண உடலுக்கு வைத்தியம் பார்க்காதீர்கள். மனத்திற்கு வைத்தியம் பாருங்கள்.

    ராமகிருஷ்ண பரமஹம்சர் ஓர் அழகான குட்டிக்கதை சொல்கிறார். கூட்டுப்புழு பட்டுப்பூச்சி ஆவது எப்படி என்பது பற்றிய கதை அது. குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கதை.

    தரையில் ஊர்ந்து செல்லும் ஒரு புழு. அந்தப் புழு கனவு கண்டால் அதிகபட்சம் என்ன கனவு காணலாம்? எழுந்து நடக்க வேண்டும் என விரும்பலாம்.

    அந்த விருப்பத்தை அந்தப் புழு வெளியே சொன்னால் கூடக் கேட்பவர்கள் கேலி செய்வார்கள். `ஊர்ந்துசெல்லும் புழுவுக்கு நடக்க ஆசையாம்! பாரேன்!` என்று சிரிப்பார்கள்.

    ஆனால் அது நடக்க அல்ல, ஆகாயத்தில் பறக்கவே விரும்புகிறது. கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா!

    ஆனால் என்ன ஆச்சரியம்! அதன் ஆசை சாத்தியமாகிறது. ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டு உள்ளே குடியிருந்த புழு கொஞ்ச காலத்தில் கூட்டை உடைத்துக்கொண்டு பட்டுப்பூச்சியாய் வெளியே பறந்து செல்கிறது.

    இந்த அதிசயச் சாதனை நிகழ்ந்தது எப்படி? 

    பரமஹம்சர் விளக்குகிறார்....

    இரண்டு செயல்களைச் செய்தது அது. ஒன்று `நான் பட்டுப்பூச்சி! நான் பட்டுப்பூச்சி!` என்று ஒருகணம் கூட விடாமல் மனத்தில் நினைத்துக் கொண்டிருந்தது.

    இன்னொன்று, தன்னுடைய அந்த நினைப்பின் தீவிரத்தை வேறு யாரும் குறுக்கிட்டுக் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே? எனவே தன்னைச் சுற்றி ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டு அதன் உள்ளேயே இருந்தது அது.

    அவ்வளவுதான்! ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தான் எண்ணியபடியே வண்ணத்துப் பூச்சியாக ஆனந்தமாய் விண்ணில் பறந்தது.

    புழுவாக இருக்கும் நம் குழந்தைகள் பட்டுப்பூச்சியாக மாற வேண்டாமா? அவர்கள் தாம் விரும்பும் துறையில் பட்டாம்பூச்சியாக சமுதாயத்தில் மேலே மேலே பறக்க வேண்டாமா? என்ன செய்ய வேண்டும் அதற்கு?

    எப்படிக் கூட்டுப்புழு தன்னைப் பட்டுப்பூச்சி என்று விடாமல் நினைத்ததோ அதுபோல் நம் குழந்தைகளும் கட்டாயம் தான் விரும்பிய துறையில் தன்னால் முன்னேற முடியும் என்று ஓயாமல் நினைக்க வேண்டும்.

    அந்த நினைப்பை மற்றவர் தடைசெய்யாத வகையில் அந்த நினைவையே தீவிரமாய் நினைத்துப் பழக வேண்டும். இதற்குப் பெற்றோர்தான் உதவ வேண்டும்.

    `நீ உருப்பட மாட்டாய்! நீ எங்கே தேறப் போகிறாய்!` என்பது போன்ற எதிர்மறை வாக்கியங்களை நம் பிள்ளைகளிடமும் பெண்களிடமும் ஒருபோதும் சொல்லக் கூடாது. அவை அவர்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்தால் நாம் விரும்பும் பலன் கிட்டாது.

    மாறாக `உன்னால் முடியும், நிச்சயமாக முடியும்!` என்று உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் தங்களால் முடியும் என்று நினைக்கத் தொடங்குவார்கள். அந்த நினைப்பை வேறு நினைப்பு தடை செய்யாத மாதிரிக் காப்பாற்றுவதும் உங்கள் பொறுப்புத் தான்.

    தேவையற்ற புறக் கவர்ச்சிகளுக்கு உங்கள் குழந்தை ஆட்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொலைக்காட்சியில் கண்ட தொடர்களையும் அவர்கள் பார்க்க வேண்டாம். மோசமான திரைப்படங்களுக்கு அவர்கள் போக வேண்டாம். இப்படியெல்லாம் பார்த்துக் கொள்வதுதான் ஆன்மிக வழியில் குழந்தைகளை வளர்க்கும் முறை. அப்படி வளரும் குழந்தைகள் தாங்கள் நினைத்ததைக் கட்டாயம் சாதிப்பார்கள்.

    சுந்தரகாண்டத்தில் ஒரு சம்பவம் வருகிறது. அசோக மரத்தின் அடியில் அமர்ந்திருந்த சீதாதேவி ஒருநாள் மிகுந்த வியப்போடு ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மரக்கிளை ஒன்றில் ஒரு குளவி, ஒரு சின்னஞ்சிறு புழுவைத் தன் கூட்டில் வைத்து அதைத் தன் கொடுக்கால் விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது!

    `திரிஜடா! என்ன செய்கிறது இந்தக் குளவி?` என்று சீதை அசோக வனத்தில் தனக்குத் துணையாக இருந்த விபீஷணனின் மகள் திரிஜடையிடம் விளக்கம் கேட்டாள். திரிஜடை சொன்னாள்:

    `தாயே! அந்தக் குளவி புழுவைக் கொட்டிக்கொட்டி அதைக் குளவியாகவே மாற்றிவிடும். எப்போதும் அந்தக் குளவியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதால் ஒருகால கட்டத்தில் அந்தப் புழு குளவியாகவே உருமாறிவிடும்!`

    இதைக் கேட்ட சீதாப்பிராட்டி கவலையோடு கேட்டாள்:

    `நான் எப்போதும் ராமபிரானையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் ராமபிரானாகவே மாறிவிட்டால் என்ன செய்வது திரிஜடா? அப்போது உலகில் இரண்டு ராமர்கள் அல்லவா இருப்பார்கள்?`

    திரிஜடை கலகலவெனச் சிரித்துவிட்டுச் சொன்னாள்:

    `அப்போதும் உலகில் ஒரு ராமர்தான் இருப்பார் அம்மா! நீங்கள் ராமராக மாறியது மாதிரி, உங்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீராமர் சீதாதேவியாக மாறிவிடுவார் இல்லையா?`

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    மேல்நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆலன் என்ற உயர்நிலை ஆன்மீகவாதி, மிகச் சிறந்த உளவியல் அறிஞரும் கூட. அவரது சிந்தனைகளால் கவரப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளை, தாம் சிறையில் இருந்தபோது அவரது நூல்கள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

    `அகமே புறம், மனம்போல வாழ்வு, மெய்யறிவு, வலிமைக்கு மார்க்கம்` என்பன போன்ற தலைப்புகளில் அவை சின்னஞ்சிறு நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும் இவை படிப்பதற்கு இலவசமாகக் கிடைக்கின்றன.

    ஜேம்ஸ் ஆலன் அற்புதமான சில உளவியல் உண்மைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்திருக்கிறார். அவற்றில் ஒன்றுதான் அகம் புறத்தை மாற்றுகிறது என்பதும் புறம் அகத்தை மாற்றுகிறது என்பதும்.

    (ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகளால் கவரப்பட்ட இன்னொரு பிரமுகர் காலஞ்சென்ற டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.)

    அகம் புறத்தை மாற்றுகிறது என்ற உளவியல் விதிக்கான ஆதாரம்தான் மேலே சொன்ன ராமாயணக் கதை.

    அகம் புறத்தை மாற்றுகிறது. அகத்தில் எண்ணும் எண்ணங்கள் புறத்தில் பற்பல விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இது என்றும் மாறாத உளவியல் விதி. ஆன்மிகத்தின் அடிப்படையே உளவியல்தான்.

    இந்த விதியிவிருந்தே இன்னொரு விதியும் உருவாகிறது. அகம் புறத்தை மாற்றுவது போலவே புறமும் அகத்தை மாற்றுகிறது. புறத்தில் உள்ள விஷயங்களைச் சீராக்கினால் அகம் தானாகவே மாறுகிறது. உருவத்தை மாற்றினால் உள்ளமும் மாறிவிடுகிறது.

    ராவணன் சீதையைத் தன் பக்கம் கவர்வதற்காக ராமனாக உருவை மாற்றிக் கொண்டான். ஆனால் ராமனாக உருமாறியதும் அவனிடம் பிறன் மனைவியைக் கவர வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை! எனவே மீண்டும் ராவணனாகவே அவன் தன் வடிவை மாற்றிக் கொண்டான் என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை....

    அகவிஷயங்கள் புறத்தைப் பாதிக்கின்றன. அதுபோலவே புற விஷயங்களும் அகத்தைப் பாதிக்கத்தான் செய்கின்றன.

    சிடுசிடுவென்று கோபித்துக்கொள்ளும் மனிதர்கள் இருக்கும் வீட்டைப் போய்ப் பாருங்கள். வீடு சுத்தமாக இராது. குப்பையும் கூளமுமாய் தூசும் துறும்புமாய் இருக்கும்.

    துப்புரவாகவும் ஒழுங்காகவும் பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்ட அறையில் போனால் நம்மை அறியாமலேயே நம் மனத்தில் சாந்தி நிலவும்.

    சுற்றுப்புறத்தை ஒழுங்காகவும் சீராகவும் வைத்துக்கொண்டால் நம் வாழ்க்கை இனிக்கும். மனத்தில் அமைதி வரும். வீட்டில் அன்பு மலரும். புறத்தால் அகம் சீராகும். அகம் சீரானால் வாழ்க்கை மேம்படும்.

    வலிமையான எண்ணத்தோடும் சீரான ஒழுங்கு முறைகளோடும் வாழும் மனிதன் எண்ணிய எண்ணியாங்கு எய்துகிறான். அவன் தீவிரமாக எதை எண்ணினானோ அதை அடைய அவனது சுற்றுப்புற ஒழுங்கும் உதவுகிறது.

    `எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

    திண்ணிய ராகப் பெறின்!`

    என்று திருக்குறள் சொல்கிறதே?

    காதல் மணம் புரிந்துகொண்ட கணவன்- மனைவியிடையே சில ஆண்டுகளில் கடும் சண்டை எழுந்தது. அவர்கள் விவாகரத்துப் பெற முடிவு செய்தார்கள். ஏனோ மனைவிக்கு அதில் விருப்பமில்லை.

    அவள் ஓர் உளவியல் நிபுணரை அணுகினாள். கணவனையும் உடன் அழைத்துச் சென்றாள். தன் பிரச்சினையை ஒரு கடிதமாக எழுதி உளவியல் நிபுணரிடம் கொடுத்தாள்.

    அந்தக் கடிதத்தில் தெரிந்த அவள் கையெழுத்தைப் பார்த்த அவர் யோசனையில் ஆழ்ந்தார். கையெழுத்து சாய்வாக இருந்தது. நேராகவோ சீராகவோ இல்லை.

    கணவனிடமும் ஒரு கடிதம் எழுதச் சொன்னார் அந்த உளவியல் நிபுணர். கணவன் கையெழுத்தையும் பரிசீலித்தார். அதுவும் சீராக இல்லை. பின் அவர் ஒரு யோசனை கூறினார். ஆறுமாதம் வரை சேர்ந்தே வாழுமாறும் ஆனால் கையெழுத்து நோட்டுப் புத்தகம் வாங்கி நாள்தோறும் திருத்தமான கையெழுத்தில் ஓரிரு பக்கங்கள் எழுதிப் பழகுமாறும் அறிவுறுத்தினார்.

    அவர்கள் அந்த அறிவுரையைப் பின்பற்றினார்கள். என்ன ஆச்சரியம்! ஆறு மாதத்திற்குள் அவர்கள் பழைய காதலித்த காலத்தைப் போலவே மீண்டும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தத் தொடங்கினார்கள். விவாகரத்து எண்ணத்தையே கைவிட்டு விட்டார்கள். நெகிழ்ச்சியோடு உளவியல் நிபுணருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

    சூட்சுமம் இதுதான். அகம்தான் கையெழுத்தைத் தோற்றுவிக்கிறது. குழப்பமான மனம் குழப்பமான கையெழுத்தை ஏற்படுத்துகிறது. கையெழுத்தைச் சீராக்கும்போது தானாகவே அகமும் சீராகி விடுகிறது. குழப்பமில்லாத கையெழுத்து தெளிவான மனத்தைத் தோற்றுவித்து விடுகிறது.

    உடல் என்பது மனம் உடுத்தியிருக்கும் ஆடை போன்றதுதான். மனத்தைச் சீர்செய்யும்போது உடல் தானே சீராகி விடும்.

    `எண்ணற்ற வியாதிகளுக்கு நிரந்தரமாகத் தீர்வு காண உடலுக்கு வைத்தியம் பார்க்காதீர்கள். மனத்திற்கு வைத்தியம் பாருங்கள். பொறாமையில்லாத வஞ்சகமில்லாத நல்ல மனநிலைமை ஏராளமான நோய்களைக் குணப்படுத்திவிடும்!` என்கிறார் வ.உ.சி.

    எனவே ராமகிருஷ்ணர் சொன்ன கூட்டுப் புழுவைப் போல் மாறுவோம். மன நலம் உடல் நலம் இரண்டும் பெற்று நாம் விரும்புகிற நல்ல விஷயங்கள் அனைத்தையும் அடைவோம்.

    ஆன்மிகம் என்பது மனத்தை மேம்படுத்துவது என்பதையும் உண்மையான ஆன்மிகம் மனம் சார்ந்தது என்பதையும் புரிந்துகொள்வோம். மனத்துக்கண் மாசிலன் ஆவதே ஆன்மிகத்தின் அடிப்படை என்பதை உணர்வோம்.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • ராகு- கேது தரும் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும்.
    • மன திருப்திக்காக கவலையே படாமல் ராகு- கேது தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்யலாம்.

    ராகு-கேது இரண்டு கிரகங்களையும் பாம்பு என்று சொல்வார்கள். பாம்பின் தலையை ராகு என்றும், உடலை கேது என்றும் நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். வானத்தில் இந்த 2 கிரகங்களும் பின்னோக்கி நகர்வதாக அறிவியல் ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த 2 கிரகங்களையும் நிழல் கிரகங்கள் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவதுண்டு.

    இந்த 2 கிரகங்கள் பற்றி ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல்வேறு தகவல்கள் உள்ளன. இரண்டுமே பொதுவான கருத்துக்கு ஏற்புடையதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆன்மிக ரீதியான தகவலை பார்க்கலாம்.

    பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்குவதற்காக மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்து வந்தார். தேவர்களை வரிசையாக நிற்க வைத்து அமிர்தத்தை கொடுத்தார். அப்போது சுவர்பானு என்ற அசுரன் தேவர்கள் வரிசையில் நின்று அமிர்தத்தை பருகினான்.

    இதை மோகினி வடிவத்தில் இருந்த மகாவிஷ்ணுவிடம் சூரியனும், சந்திரனும் சுட்டிக்காட்டினார்கள். உடனே மோகினி சக்கராயுதத்தின் மூலம் சுவர்பானுவை வெட்டினார். தலைவேறு, உடல் வேறாக சுவர்பானு பிரிந்து விழுந்தான். அமிர்தம் சாப்பிட்டு இருந்ததால் அவனுக்கு மரணம் ஏற்படவில்லை. தலையிலும், உடலிலும் உயிர் இருந்தது.

    இதையடுத்து மனம் இரங்கிய மகாவிஷ்ணு, சுவர்பானுவின் தலை பகுதிக்கு ராகு என்றும், உடல் பகுதிக்கு கேது என்றும் பெயர் சூட்டி கிரக அந்தஸ்தை கொடுத்தார். புராணத்தில் இந்த கதை விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அறிவியலின் படி ராகு- கேதுக்கு தனி விளக்கம் அளிக்கப்படுகிறது.

    பூமியை சந்திரன் சுற்றி வருவது நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படி சுற்றிக்கொள்ளும் போது பூமியின் சுற்று வட்டப்பாதையும், நிலவின் சுற்று வட்டப்பாதையும் ஒரு இடத்தில் வெட்டிக் கொள்ளும். அப்படி வெட்டிக்கொள்ளும் இடத்தை அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு புள்ளியாக சொல்வார்கள். அந்த புள்ளிதான் விஞ்ஞானப்படி ராகு- கேதுவாக கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாகவே ராகு- கேதுவுக்கு உருவம் இல்லை. வீடு இல்லை என்பார்கள். மற்ற 7 கிரகங்களுக்கு இருப்பது போன்று கிரக வடிவமைப்பும்கூட ராகு-கேதுவுக்கு கிடையாது. ஆனால் மற்ற 7 கிரகங்களை விட ராகுவும், கேதுவும் சக்தி வாய்ந்தவர்கள். ஏனெனில் மற்ற 7 கிரகங்களும் ஏற்படுத்தும் அதிர்வுகள் அனைத்தையும் ராகு, கேது இரண்டும் தான் தங்களுக்குள் உள்வாங்கி அதை பூமிக்கு அனுப்பி வைப்பார்கள்.


    எனவே ஒரு மனிதனுக்கு எந்த கிரகத்தின் மூலம் நன்மை ஏற்பட்டாலும் சரி, தீமை ஏற்பட்டாலும் சரி அவை ராகு- கேது வழியாகவே நமக்கு வந்து சேரும். அந்த வகையில் ராகுவும், கேதுவும் எண்ணற்ற அதிர்வலைகளை உண்டாக்கி பூமிக்கு அனுப்புகின்றன. எனவேதான் ராகு- கேது தரும் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும்.

    ஜாதக அமைப்புப்படி கட்டங்களில் ராகுவும், கேதுவும் எந்த இடத்தில் அமைகிறார்களோ அதற்கு ஏற்ப அந்த தாக்கம் இருக்கும். எனவேதான் திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ராகு- கேது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மிக முக்கியமாக பார்ப்பார்கள். பொதுவாக ராகு- கேது துணை இல்லாமல் எந்த திருமணமும் நடக்காது. ஆனால் அவை ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

    ஜாதகத்தில் லக்னம் எனப்படும் ஒன்று மற்றும் 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் ராகு- கேது இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு திருமணம் கைகூடுவது சற்று தாமதம் ஏற்படும் என்று சொல்வார்கள். இதைத்தான் சர்ப்ப தோஷம் அல்லது ராகு- கேது தோஷம் என்று சொல்வார்கள். அதிலும் 1-7, 2-8 இடங்களில் ராகுவும், கேதுவும் இருந்தால் தோஷத்தின் வீரியம் மேலும் அதிகமாக இருக்கும் என்று ஒரு கருத்து உள்ளது.

    லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதற்கு 7-ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பார்கள். காரணம் ராகுவும், கேதுவும் 150 டிகிரி கோணத்தில் நிரந்தரமாக சுற்றி வருபவர்கள். இப்படி சுற்றுவதால்தான் நிலையான சிந்தனை இருக்காது என்று பொதுவான ஒரு குறிப்பை ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.

    2-8 கட்டங்களில் ராகு- கேது இருக்கும் பட்சத்தில் கணவன்-மனைவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பெரும்பான்மை ஜோதிடர்கள் கண்ணை மூடிக்கொண்டு பேசுவார்கள். ஆனால் இதற்காக பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் ஆதி காலத்து ஜோதிட நூல்களில் ராகு- கேதுவால் தனி நபர்களின் குணம் மற்றும் நடவடிக்கைகளில் ஏற்படும் விளைவு மட்டுமே சொல்லப்பட்டு இருக்கின்றன.

    மேலும் திருமணத்துக்கு ராகு- கேது எப்போதும் துணையாக இருப்பார்கள் என்றுதான் ஜோதிட நூல்களில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளன. எனவே ராகு-கேது தோஷம் என்பது எந்த வகையிலும் திருமணத்தை நிறுத்தும் வகையில் நிச்சயமாக இருக்கவே இருக்காது. என்றாலும், ராகு- கேது கிரகங்களின் அதிர்வலைகள் ஏற்படுத்தும் தாக்கத்தால் நிகழும் குணமாற்றங்களை தடுக்க நாம் தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்யலாம்.

    இதைத் தான் ராகு-கேது தோஷ நிவர்த்தி பூஜை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ராகு- கேது தோஷம் நிச்சயமாக திருமணத்தை பாதிக்காது என்ற நிலையில் சமீப காலமாக பரிகார பூஜைகள் அதிகமாக நடந்து வருகின்றன. மன திருப்திக்காக கவலையே படாமல் ராகு- கேது தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்யலாம். அதில் தவறில்லை.

    ராகு- கேது தோஷங்கள் தீர்க்க ஏராளமான எளிய பரிகாரங்கள் உள்ளன. நாம் வசிக்கும் வீட்டில் வடமேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் பறவைகளுக்கு தானியங்களும், தண்ணீரும் வைத்தால் தோஷம் நீங்கும் என்கிறார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புற்றுக் கோவில்களுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்தால் பலன் கிடைக்கும்.


    தானங்கள் மூலமாகவும் ராகு- கேது தோஷ நிவர்த்தி பண்ணலாம். ஏழை- எளியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிற போர்வைகள் வழங்கலாம். வசதி இருப்பவர்கள் நாகர் கற்சிலையை வேப்பமரமும், அரச மரமும் இணைந்து இருக்கும் பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபடலாம்.

    அடிக்கடி அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கட சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவது மிகவும் நல்லது. அதிலும் வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு உடனடியாக ராகு- கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் என்கிறார்கள். விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் நல்லது நடப்பதை காணலாம்.

    ராகு காலத்தில் ராகு பகவானுக்கு உளுந்தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம் செய்து வழிபடலாம். ராகு காயத்ரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது நல்லது. திங்கட்கிழமைகளில் கேது தொடர்பான வழிபாடுகள் செய்யலாம். கேதுவுக்கு பிரியமான கொள்ளு பயிறு படைத்து வழிபட்டு தானம் செய்வது நல்ல பலன் தரும்.

    இந்த எளிய பரிகாரங்களை தவிர ஆலயங்களுக்கு சென்று பரிகாரங்கள் செய்தே தீர வேண்டும் என்று சொல்லப்பட்டால் அதற்கும் தமிழ்நாட்டில் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அதில் புகழ் பெற்றவைகளாக சில ஆலயங்கள் குறிப்பிடப்படுகின்றன. ராகு தலமாக சொல்லப்படும் கும்பகோணம் அருகே சிவனை ராகு வழிபட்ட திருநாகேஸ்வரத்திலும், சிவபெருமான் வாசுகி என்னும் நாகத்துக்கு வரம் தந்த இடமான கேது தலம் என்று சொல்லப்படும் கீழப் பெரும்பள்ளம் ஆலயத்திலும் பூஜைகள் செய்யலாம்.

    இரண்டு கிரகங்களுக்கும் சேர்த்து தோஷ நிவர்த்தி பூஜை செய்ய விரும்புபவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் ஆலயத்துக்கு செல்வது மிகவும் நல்லது. அங்கு தினமும் காலையில் நூற்றுக்கணக்கானவர்கள் ராகு- கேது தோஷ நிவர்த்தி பூஜை செய்து கொள்கிறார்கள். திருபேரை தலத்திலும் இந்த பூஜை செய்யலாம்.

    ராகு- கேது 2 கிரகங்களும் நம்மை பயமுறுத்தும் கிரகங்கள் அல்ல. ஆலயங்களில் உரிய பரிகாரம் செய்தாலே இந்த 2 கிரகங்கள் மூலம் அபரிமிதமான பலன்களை பெற முடியும். குறிப்பாக ராமேஸ்வரத்துக்கு சென்று 3 நாட்கள் தங்கி இருந்து கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தாலே போதும் ராகு-கேது தோஷங்கள் பறந்துபோய்விடும். ராகு-கேதுவால் நீண்ட நாட்கள் திருமணம் தாமதம் ஆவதாக கருதினால் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடவும். ராகு காயத்ரியையும், கேது காயத்ரியையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கலாம்.

    சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில், திருப்பனந்தாள் அருண ஜடேஸ்வரர் ஆலயம், கோடகநல்லூர் மாதவ பெருமாள் ஆலயம், கோட்டைக்காடு நாகேஸ்வரர் ஆலயம், நெடுங்குடி கைலாசநாதர் ஆலயம், மதுரை சந்தன மாரியம்மன் ஆலயம், உடையார்குடி அனந்தீஸ்வரர் ஆலயம், வாழ்க்கை புத்தகளூர் ஸ்ரீபரமசுந்தரர் ஆலயம், புட்டிரெட்டிபட்டி சோம நாகேஸ்வரர் ஆலயம், பேரையூர் ஸ்ரீநாகநாதர் ஆலயம், சென்னை செம்பாக்கம் ஸ்ரீஜம்புகேஸ்வரர் ஆலயம், செம்பான்குடி நாகநாதர் ஆலயம், கோடங்குடி ஸ்ரீகார்கோடகநாதர் ஆலயம், சென்னை குன்றத்தூர் ஸ்ரீநாகேஸ்வர சுவாமி ஆலயம், உத்தமபாளையம் அருகே உள்ள காளத்தீஸ்வரர் ஆலயம், சென்னை காட்டாங்குளத்தூர் காளத்தீஸ்வரர் ஆலயம், நத்தம் தென் காளத்தீஸ்வரர் ஆலயம், நெய்வேலி அக்னீஸ்வரர் ஆலயம், நெல்லை செய்துங்கநல்லூர் வியாக்ரபாதர் ஈஸ்வரர் ஆலயம், சென்னை மாடம்பாக்கம் ஸ்ரீதேனு புரீஸ்வரர் ஆலயம், திருக்கண்டியூர் வடக்கு மருதூர்பிரம்மா ஆலயம், திருமணஞ்சேரி ராகு பகவான் ஆலயம், கதி ராமங்களம் ஸ்ரீவன துர்க்கை ஆலயம், காஞ்சிபுரம் ஸ்ரீசித்ர குப்தர் ஆலயம் ஆகியவை ராகு-கேது தோஷ நிவர்த்தி வழிபாட்டு தலங்களாக திகழ்கின்றன.

    • சித்த மருத்துவம் மூல நோய் குறிகுணங்களை 21 வகைகளாக குறிப்பிடுகின்றது.
    • மூல நோயில் உண்டாக்கும் ரத்தப் போக்கினை கட்டுக்குள் கொண்டு வர துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை உணவில் சேர்க்கலாம்.

    பொதுவாகவே நாட்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படும்போது மூலநோய் சார்ந்த தொந்தரவுகள் ஏற்பட்டு விடுகின்றன. முதுமையில் மூலநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 50 வயதைக் கடக்கும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு மூலநோய் உண்டாவதாக உள்ளது. மேலும் ஆசனவாய் வெடிப்பு ஆய்வுகளில் தெரிய வந்தது. பவுத்திரம் ஆகிய நோய்நிலைகளும் ஆசனவாயில் ஏற்படுவதாக உள்ளன.

    முதுமையில் ஏற்படும் இத்தகைய நோய்நிலைகளில் பவுத்திரம் மற்றும் மூலநோயால் உண்டாகும் துன்பங்கள் அதிகம். தள்ளாடும் வயதில் உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியமால் மூலக்கடுப்பினால் அவதியுறும் பலர் வாழ்க்கையை வெறுப்பதும், மனசலிப்பு அடைவதும் கொடுமையானவை.

    ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மூலநோய் தொந்தரவு அதிகம் ஏற்படுவதாக உள்ளது. காரணம் கர்ப்பக் காலத்தின்போது அளவில் பெரிதாகும் கருப்பை மலக்குடலை அழுத்துவதால் மூலநோய் குறிகுணங்கள் உண்டாகும். சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னரும் இத்தகைய குறிகுணங்கள் நீடித்து காலம் முழுமைக்கும் தொந்தரவுகளை உண்டாக்கக்கூடும்.

    சித்த மருத்துவம் மூலநோய் குறிகுணங்களை 21 வகைகளாக குறிப்பிடுகின்றது. "அனில பித்த தொந்தமாலாது மூலம் வராது" என்கிறது சித்த மருத்துவம். அதாவது சித்த மருத்துவக் கூற்றுப்படி குடலில் சேரும் அதிகப்படியான வாயுவும், சூடும் ஒன்றுகூடி மூலம் சார்ந்த ஆசனவாய் நோய்களை உண்டாக்குகிறது. ஆகவே முதுமையில் மட்டுமின்றி எக்காலத்திலும் வாயுவும், பித்தமும் (சூடும்) குடலில் சேராமல் தடுப்பது மூல நோய் வராமல் தடுப்பதோடு, மூல நோயின் குறிகுணங்களைக் குறைக்க உதவும்.

    அறுவை சிகிச்சை மேற்கொண்ட பலருக்கும் கூட சில நாட்களிலேயே மூலநோயின் குறிகுணங்கள் மீண்டும் உண்டாவதால், இயற்கை தரும் இன்மருந்துகளையும், இயற்கையான வாழ்வியல் நெறிமுறைகளை பின்பற்றுவதும் மட்டுமே நோய்நிலையில் நீடித்த பலன் தரும்.

    கடுக்காய், திரிபலை, பிரண்டை, வெங்காயம், துத்தி, சோற்றுக்கற்றாழை, நாயுருவி, நிலாவாரை, குங்கிலியம், தொட்டாற்சிணுங்கி, கருணைக்கிழங்கு போன்ற பல எளிய சித்த மருத்துவ மூலிகைகள் மூல நோயில் உண்டாகும் அழற்சியைக் குறைத்து தருவதாக உள்ளன. அத்துடன் நாக பற்பம், நத்தை பற்பம், சிலாசத்து பற்பம், சங்கு பற்பம், வெள்வங்க பற்பம் ஆகிய தாது சீவக் கலப்புள்ள மருந்துகளும் மூல நோய்க்காக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன.

    மூலநோயில் நல்லதொரு பலனை அளிக்கக்கூடியது துத்தி இலை. துத்தி இலையை நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொள்வது மூலநோயில் உள்வீக்கத்தைக் குறைத்து வலியையும், வேதனையையும் போக்கும். பிரண்டையும் மூலநோக்கு நிவாரணம் தரும். பிரண்டையை நெய்யுடன் சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி எடுத்துக்கொள்வதும் நற்பலன் தரும்.

    கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலை சூரணம் எனும் சித்த மருந்து மலச்சிக்கலைப் போக்குவதுடன் மூலநோயில் வீக்கத்தைக் குறைத்து, ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தி நோய்நிலையைக் குறைக்கும். இதனை மோரில் அல்லது நெய்யில் கலந்து எடுத்துக்கொள்ள மூல நோயின் எரிச்சலைக் குறைத்து புண்ணையும் ஆற்றும்.

    தொட்டால்சிணுங்கி மூலிகையும் சித்த மருத்துவத்தில் மூலநோய்க்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்பூறல் எனும் மூலிகை மூலநோயில் ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகை. இதனை 'இம்பூறல் காணாது ரத்தம் கக்கி செத்தான்' என்ற சித்த மருத்துவ பழமொழியால் அறியலாம்.

    மூல நோய்க்கு காரணமாகும் வாதத்தையும், பித்தத்தையும் குறைக்க அவ்வப்போது எண்ணெய் குளியல் எடுத்தலும், மலச்சிக்கலைப் போக்கி கொள்வதும் மூல நோயின் குறிகுணங்களுக்கு நிவாரணம் தரும். எளிய வழிமுறையாக ஆமணக்கு எண்ணெயை பாலில் கலந்து இரவு வேளையில் எடுத்துக்கொள்ள வாதம், பித்தம் இரண்டும் குறையும். மூலநோயில் எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை சாற்றுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ள பித்தம் தணிந்து எரிச்சல் குறையும். 

    மூல நோயில் உண்டாக்கும் ரத்தப் போக்கினை கட்டுக்குள் கொண்டு வர துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை உணவில் சேர்க்கலாம். வாழைப்பூ, அத்திப்பிஞ்சு, மாதுளைப்பிஞ்சு, பிஞ்சு காய்கறிகள் இவை நல்ல பலனைத் தரும்.

    உணவு முறை மாற்றம் மூலநோய் உள்ளவர்களுக்கு மிக மிக அவசியம். ஆகவே மூலநோய் உள்ளவர்கள் குடலில் வாயுவையும், பித்தத்தையும் அதிகரிக்காத உணவு முறைகளை பின்பற்றுவது நல்லது. வாழை, உருளை, பட்டாணி வகைகள் இவை குடலில் வாயுவையும், அசைவ உணவுகள், தேநீர் (டீ), காபி போன்றவை குடலில் பித்தத்தையும் அதிகரித்து நோய்நிலையை அதிகரிக்கும். முக்கியமாக அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதால் மூல நோய் குறிகுணங்கள் அதிகரிப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் உடலின் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும். முக்கியமாக குடலின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். அத்தகைய நார்ச்சத்தினை அதிகம் கொண்ட கருணைக்கிழங்கு மூலநோய் மற்றும் ஆசன வெடிப்பு ஆகிய நோய்நிலைகளில் நற்பலன் தரக்கூடியதால் அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது.

    ஆசன வெடிப்பு எனும் நிலையானது உணவில் நார்சத்துகள் பற்றாக்குறையால் உண்டாவதாக உள்ளது. எனவே நார்ச்சத்துள்ள பழங்களையும், பிஞ்சு காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்ப்பது ஆசன வாயில் வெடிப்பு வராமல் தடுக்கும். மலச்சிக்கலையும் போக்கும். நார்சத்தினை அதிகம் கொண்ட கடைசரக்கான வெந்தயத்தை தினசரி எடுத்துக்கொள்வது மூலம் மற்றும் ஆசன வெடிப்பு நிலைகளில் நற்பலன் தரும்.

    சித்த மருந்துகளாகிய கடுக்காய் லேகியம், கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம் ஆகிய மருந்துகள் மூலம் (ஆசனவாய்) சார்ந்த நோய்நிலைகளில் நற்பலன் தரும். அதோடு மலச்சிக்கலை தீர்க்க ஆமணக்கு எண்ணெய், நிலாவரை சூரணம், திரிபலை சூரணம், கடுக்காய் சூரணம், சிவதை சூரணம் ஆகிய எளிய சித்த மருந்துகள் பயன் தரும்.

    அதிக காரமான மசாலா தோய்ந்த உணவுப் பொருட்களும், அசைவ உணவுகளும், மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் மூல நோயில் வலியையும், எரிச்சலையும் அதிகரித்து மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தும். ஆகவே அத்தகைய உணவு வகைகளையும், பழக்கவழக்கங்களையும் தவிர்ப்பது மூலநோயாளிகளுக்கு நல்லது. மூலநோய் எரிச்சலுக்கு சிறந்த மருந்து 'மோர்' தான். மூலநோயில் எரிச்சல் உள்ளவர்கள் மோரினை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

    மூலநோய் உள்ளவர்கள் உணவில் நெய் சேர்ப்பது குடலில் உண்டாகும் வாதம், பித்தம் இரண்டையும் சமனாக்கும். மூல நோயின் குறிகுணங்களைக் குறைக்க உதவும். மேலும் நெய்யில் ஆன்டி-ஆக்சிடன்ட் வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் கரோடீனாய்டுகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    மலம் கழித்த பின் சிட்ஸ் பாத் எடுக்க திரிபலை சூரணம் அல்லது கடுக்காய் சூரணம் பயன்படுத்தலாம். அதாவது ஆறிய வெந்நீரில் சூரணங்களை போட்டு அதில் அமர்ந்து வர மூலநோய் நிலையில் நல்ல முன்னேற்றம் வரும். கடுக்காய் பிஞ்சும், ஆமணக்கு எண்ணெயும் கொண்ட 'மூலக்குடோரி தைலம்' என்ற சித்த மருந்தினை பயன்படுத்துவது மூலநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றது. ஆசனவாய் சார்ந்த நோய்நிலைகளிலும் இந்த மருந்து நல்ல பலனைத் தரக்கூடியது.

    சோ.தில்லைவாணன்

    சோ.தில்லைவாணன்

     குங்கிலிய வெண்ணெய் எனும் சித்த மருந்தும் மூலநோயில் உண்டாகும் எரிச்சலைப் போக்கி சுகம் தரும். இதில் உள்ள குங்கிலியம் எனும் மூலிகைப் பிசின் வீக்கத்தைக் குறைக்கும் செய்கை உடையது. 'குக்குலுஸ்டீரோன்' எனும் வேதிப்பொருள் அதன் வீக்கம் குறைக்கும் செய்கை தன்மைக்கு காரணமாகின்றது. இதனை உள்மருந்தாகவும், வெளி பிரயோகமாகவும் பயன்படுத்தலாம்.

    மூல நோய்க்கு அடுத்து ஆசனவாயில் கிருமித் தொற்றினால் உண்டாகும் பவுத்திர நோய் அதிக உபாதைகளை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் மலச்சிக்கலுடன், ஆசன வாயில் இருந்து சீழ் போன்ற நீர் திரவம் அல்லது சீழும், ரத்தமும் கலந்து கசிந்து முதுமையை மேலும் துன்பமாக்கும். நீரிழிவு நோயுள்ள அதிகம் பேருக்கு கிருமித் தொற்று அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.

    இயற்கையிலேயே கிருமிநாசினித் தன்மையுள்ள குப்பைமேனி எனும் மூலிகை பவுத்திர நோய் ஆரம்ப நிலையில் நல்ல பலன் அளிப்பதாக உள்ளது. குப்பைமேனி இலைகளை ஆமணக்கு எண்ணெயில் காய்ச்சிய தைலத்தை இரவில் எடுத்துக்கொள்ள நற்பலன் தரும் என்கிறது சித்த மருத்துவம்.

    பவுத்திர நோய்க்கு இளைப்பு நோய்க்கான கிருமிகளும் காரணமாக இருப்பதால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ ஆலோசனைப் பெறுவது சிறந்தது. கிருமிக்கொல்லியாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பற்பம், செந்தூர, மெழுகு மருந்துகளை பயன்படுத்துவது இந்நிலையில் பலனளிக்கும்.

    முதுமையில் யோகாசனப் பயிற்சி முறைகளான பாலாசனம், பாவன முக்தாசனம், அர்த்த மச்சேந்திர ஆசனம், வஜ்ராசனம், ஜானு சிரசாசனம் ஆகியவற்றை தொடர்ந்து பழகி வருவதன் மூலம் ஆசனவாய் சார்ந்த நோய்நிலைகள் மீண்டும் மீண்டும் வராமல் தடுக்க முடியும்.

    மேலும் மலம் கழிக்கும்போது திடீரென வலியில்லாமல் உண்டாகும் ரத்தப்போக்கு என்பது முதுமையில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய குறிகுணமாக உள்ளது. சாதாரண மூலநோயாகத் தான் இருக்கும் என்று ஊகித்து சுயசிகிச்சை மேற்கொள்ளாமல், மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில் மலக்குடலில் உண்டாகும் புற்றுநோயும் ஆசனத்தில் ரத்தப்போக்கினை உண்டாக்கி துன்புறுத்தும். எனவே முதுமையில் குறிகுணங்களை உதாசினப்படுத்தாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறையோடு செயல்படுவது நலத்திற்கு நலம் பயக்கும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    • ஒரு சிலருக்கு இப்படி ஒரு தோஷம் இருப்பதே தெரியாது.
    • வாஸ்து சாஸ்திரமானது நுல்களில் 16 வகையானப் பொருட்களைச் சல்லியம் என்று கூறுகின்றன.

    பொதுவாக அனைவரும் வீடு மற்றும் நிலம் வாங்கும் போது அதில் வில்லங்கம் அல்லது வாஸ்து குறைபாடு இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து வாங்குவார்கள். அப்படி பார்த்தும் சிலர் கட்டிய அல்லது வாங்கிய சொந்த வீட்டில் குடிபுக முடியாத நிலை அல்லது குடிபுகுந்த பிறகு தீராத வாழ்வியல் சங்கடங்கள், வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியாத நிலை அல்லது கட்டுமானப் பணி முழுமையடையாமல் நிற்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதை பார்த்து இருக்கிறோம். பலர் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு பிரச்சினையில், விதியின் வசத்தால் மாட்டி வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள்.

    எளிதில் உணர முடியாத, கண்ணுக்குத் தெரியாத, விதிப்பபயனை முழுமையாக வெளிப்படுத்தும் ஒருவிதமான வாஸ்துப் பிரச்சினையே 'சல்லிய தோஷம்'. ஒரு சிலருக்கு இப்படி ஒரு தோஷம் இருப்பதே தெரியாது.

    ஒரு நிலத்தை புதிதாக வாங்கியவுடன் நிவர்த்தி செய்ய வேண்டிய தோஷம் சல்லிய தோஷம். நிவர்த்தி செய்யாத சல்லிய தோஷத்தினால் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

    சல்லிய தோஷம்

    சல்லியம் என்ற சொல்லிற்கு வேண்டாத, துன்பம் தருகின்ற என்பது பொருள். சல்லிய தோஷம் என்பது குடியிருக்கும் வீடு, தோட்டம், பண்ணை நிலம் , ஆலைகளின் பூமியில் உள்ள குற்றம் மற்றும் குறைகளாகும். ஒருவர் வாங்கும் வீடோ, நிலமோ பல வருடங்களுக்கு முன்பாக வேறு மனிதர்களாலோ, விலங்குகளாலோ பயன்படுத்தப்பட்டு இருந்திருக்கலாம். அந்த இடத்தில் இறந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்கள், நகம், முடி, எலும்பு புதைத்திருக்கலாம். இது போன்று நிலத்திற்கு அடியில் உருவாகி அந்த இடத்தின் அதிர்வலைகள் கட்டுப்படுத்தும் தோஷம்தான் சல்லிய தோஷமாகும்.

    பல வருடங்களுக்கு முன்பாக மனிதர்கள் நகருக்குள் வீடு கட்டி வசித்தனர். விலங்குகள் காடுகளில் வாழ்ந்தன. தற்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகள், ஏரி, குளங்கள், குட்டைகள் என கிடைத்த இடத்தை வாங்கி வீடு கட்டுகின்றனர். அந்த இடங்களில் குப்பை மண், மக்கியத் துர்நாற்றம் வீசுகின்ற மண், இறந்த உயிர்கள், எலும்புகள் என அனைத்தும் இருக்கத்தான் செய்யும். இது தெரியாமல் இருக்க மேற்புரத்தில் சுத்தமான மண்ணை கொட்டி விற்பவர்களிடம் ஏமாந்து மனை வாங்குபவர்களே அதிகம். இதற்கும் ஒரு படி மேலே போய் சிலர் மலிவு விலை என பயன்படுத்தாத சுடுகாடு அல்லது சுடுகாடு இருந்த இடத்திற்கு அருகில் பிளாட் போடும் மனையை அறியாமையால் வாங்குகிறார்கள். அது போன்ற இடங்களில் சடலங்களின் எலும்புகள் புதையுண்டு கிடக்கும்.

    மேலும் பிணங்களை எரித்த சாம்பலும் பரவிக் கிடக்கும். அத்துடன் பலர் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுது புலம்பிய அழுகுரலின் அவல ஒலிகளின் அதிர்வலைகள் இருக்கும். இதை நம்பாதவர்கள் கூட காலப்போக்கில் பாதகத்தை அனுபவிக்கும் போது சல்லிய தோஷத்தை நம்புகின்றனர்.

    வாஸ்து சாஸ்திரமானது நுல்களில் 16 வகையானப் பொருட்களைச் சல்லியம் என்று கூறுகின்றன. அவை எலும்பு, தலையின் மண்டை ஓடு, செங்கல், மண் ஓடு, அடுப்பு, சிலை, சாம்பல், கரி, பணம், தானியம், பொன், கல், தேரை, விலங்கின் கொம்பு, எலும்புகள், ஜாடி ஆகும்.

    மனிதர்களின் இன்ப, துன்பங்களுக்கு 'சல்லிய தோஷம்' பிரதான காரணம் என வாஸ்து சாஸ்திரங்கள் வலியுறுத்தினாலும் சல்லியத்தை இரண்டாக வகைப்படுத்தலாம்.

    1.நன்மை தரும் சல்லியங்கள்

    மனையை தோண்டும் போது அரணை, சிலந்தி, நண்டு, பல்லி, தவளை, பசுவின் கொம்பு போன்றவைகள் தென்பாட்டால் அதிகமானத் தீமைகள் இல்லை.

    தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் உலோகத்தினால் செய்யப்பட்ட விக்ரகங்கள், மண் சிலைகள் கிடைத்த நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு சிறப்பான தொழில், செல்வச் செழிப்பு, காரிய சித்தி, புகழ், அந்தஸ்து, கவுரவம், கிடைக்கும். ஆனாலும் பூமியில் தென்படும் அனைத்து சல்லியத்தையும் வெளியேற்றிய பிறகு தான் வீடு கட்டும் பணியை துவங்க வேண்டும்.


    2. தீமை தரும் சல்லியங்கள்

    மனையை தோண்டும் போது உடைந்த மண் ஓடுகள், சாம்பல், கரித்துண்டுகள், கரையான், எறும்பு புற்றுகள், பல், மரத்தின் வேர், வண்டு, ஓணான், உடும்பு, பாம்பு, தேள், சூலம் மற்றும் ஆயுதங்கள், எலி, விறகு, எறும்புகள், தேன் கூடு, ஆமை, முட்டை, நகம், மயிர் , பிணம், போன்றவைகள் நிலத்தை தோண்டும் போது கிடந்தால், அதில் தீமைகள் தான் அதிகம் வரும்,. ஆகவே இவைகளைத் தேடிப் பார்த்து முற்றிலும் அகற்ற வேண்டும்.

    நாட்டில் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் பலர் இருந்தாலும் வெகு சிலரே இது போன்ற பிரச்சினைகளால் மன உளைச்சலை சந்திக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

    ஜோதிட ரீதியாக ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு 4ம் பாவகத்துடன் வக்கிர கிரகங்கள், நீச, அஸ்தமான, பகை கிரகங்கள் தொடர்பு , ராகு, கேது, மாந்தி தொடர்பு பெறும் போதும் சல்லிய தோஷத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. என் அனுபவத்தில் மேஷ, சிம்ம ராசி மற்றும் லக்னத்தினருக்கு சல்லிய தோஷ பாதிப்பு சற்று மிகையாக உள்ளது. இத்தகையவர்களுக்கு வீடு மனை யோகம் சிறப்பாக கிடைக்கப் பெற்றாலும் அதை அனுபவிக்கும் போது பல்வேறு சிக்கல்கள் தொடர்கதையாக இருக்கிறது.

    நாம் சல்லிய தோஷம் என்று குறிப்பிடுவதை வெளிநாட்டினர் காந்த சக்தி ஓட்டம் என்று கூறுகிறார்கள். இது உலகில் உள்ள அனைத்து பூமி ஆராய்ச்சி நிபுணர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை். நிலத்துக்கு கீழே புதைந்து இருக்கும் சல்லிய பொருட்களும் பூமியின் காந்த சக்தியும் இணைந்து நிலத்தில், கட்டிடங்களில் வசிப்பவர்களை பாதிக்கும் . விவசாய நிலமாக இருந்தால் நில உரிமையாளர் விளைச்சல் இன்மை, நிலத்தடி நீர் இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள. ரியல் எஸ்டேட் துறையில் கோடி கோடியாக சம்பாதித்து கரை கடந்தவர் கூட ஒரு சில மனையை தேர்வு செய்யும் போது மீள முடியாத துக்கத்தை சந்திக்கிறார்கள்.

    சிலர் 10 பங்களா வாங்கிய போது ஏற்படாத இழப்பு ஒரு சல்லிய தோஷம் நிறைந்த வீட்டை போய் பார்த்து வந்ததற்கே உருவாகும். மிகப் பெரிய ஆலைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அடிக்கடி விபத்து, உற்பத்தி பாதிப்பு, இயந்திரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதற்கு இந்த தோஷமே காரணம்.

    சல்லிய தோஷம் இருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு தீராத மன உளைச்சல், தீராத கடன், உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை.

    குடும்ப உறுப்பினர்களிடம் மனக்கசப்பு. பல தலைமுறையாக முன்னேற்றமின்மை சொந்த பூமியை பல தலைமுறையாக பயன்படுத்தவும் , விற்கவும் முடியாமை, வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியாமை, வீடு கட்டும் பொழுது தொடர் அசம்பாவிதம், பாதி கட்டிய நிலையில் வீட்டு வேலை நின்று விடுவது, பேய், பிசாசு, பில்லி, சூன்யம் இருப்பது போன்ற உணர்வு வீட்டில் யாரோ நம்முடன் இருப்பது போன்ற உணர்வு நீங்காத நோய், தலைமுறையாக தொடர் நோயால் அவதி, கலப்பு. காதல் திருமணம், வாஸ்து குற்றம் உள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை, பூமியில் நீராதாரம் கட்டிய வீடு தலைமுறையாக அடமானத்திலேயே இருப்பது போன்றவைகள் நீடிக்கும். வெகு சில இடங்களில் பூமிக்கு கீழ் மனித, மிருக உடல்கள் அல்லது எலும்புகள் இருந்தால் சல்லிய தோஷ வலிமை மிகுதியால் தொடர் விபத்து தூர் மரணங்களை சந்திக்க நேரும்.

    வாஸ்து குறைபாடு இல்லாத வீட்டில் வசிப்பவர்களுக்கு மிகுதியான சுப பலன்கள் கிடைக்கும். சிலர் வாடகை வீட்டிற்கு குடிபுகும் போது அன்றாட தேவைக்கு கூட கஷ்டபட்டவர்கள் குடி புகுந்த பிறகு மன நிம்மதி, தொழில் முன்னேற்றம, வீடு வாகன யோகம் போன்ற மன மகிழ்வு நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். வீட்டின் உரிமையாளரை தேடி வந்து வாடகை கொடுப்பார்கள். உரிமையாளருக்கும், வசிப்பவர்களுக்கும் இடையே நட்பு ஏற்படும். உரிமையாளர்களுக்கு வசூலாகும் வாடகைப் பணம் சுப செலவுகளுக்கு பயன்படும்.

    நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்து கொண்டு இருக்கும் சிலர் வாடகை வீட்டை மாற்றியவுடன் தொடர் அசுப பலனை சந்திக்க நேரும். அதனால் மனம் நொந்து வாடகை தருவார்கள். வாடகை தாரருக்கும் உரிமையாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். மன வேதனையுடன் தரும் வாடகை பணத்தால் வீட்டின் உரிமையாளருக்கு அசுப செலவுகளே அதிகரிக்கும்.

    அவர்களுடைய அழுகை, புலம்பல் வீட்டின் அதிர்வலையுடன் இணைந்து வீட்டிற்கு மேலும் பாதிப்பை அதிகரிக்கும். வீட்டை காலி செய்யக் கூட முடியாத நிலை ஏற்படும்.

    எந்த செயலுக்கும் பின் விளைவு உண்டு என்பதை உணர்ந்து விதியின் மேல் பழி போட்டு தப்பிக்காமல் மதியுடன் செயல்படுவது சிறப்பு. பாதகம் என்ற ஒன்றைக் கொடுக்கும் பிரபஞ்சம் பாதகத்தை சாதகமாக மாற்றும் சூட்சுமத்தை தந்து இருக்கிறது. காலி நிலத்தில் சல்லியம் நீக்குவது எளிது. குடியிருக்கும் வீட்டில் சல்லியம் நீக்குவது சிறிது கடினம். அதனால் வீடு கட்டும் முன்பு சல்லியத்தை முழுமையாக வெளியேற்றினால் சுப பலன் அதிகமாகும்.

    பரிகாரம்

    அனுபவத்தில் இது போன்ற நடைமுறை சிக்கலை சந்திக்கும் சொந்த மற்றும் வாடகை வீட்டினர், வாராகி அம்மனின் ஆயுதமான கருங்காலி கோல் வைத்து வழிபட கெடுபலன்கள் குறையும்.

    • உங்கள் முகம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.
    • குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், பகைவர்கள் இவர்கள் முகம் எல்லாம் ஞாபகம் வரும்.

    இன்று இப்போது இதனை நீங்கள் படிக்கும் இந்த நொடியில் ஒரு சிறு பயிற்சியினை, முயற்சியினை செய்து பார்க்கலாமா? அமைதி யாய் உங்களுக்கு வசதியான முறையில், இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு முயற்சி என்று சொல்லும் போதே உடல் ராணுவ வீரர் போல் இறுகி, முறுக்கேறி விடும். அப்படி இருக்க வேண்டாம். உடலை தளர்வாய் இயல்பாய் இருக்கச் செய்யுங்கள்.

    இதன் பொருள் தொய்ந்து மடங்கி இருக்கலாம் என்பதல்ல. உடல் டென்ஷன் இன்றி இயல்பாய் இருக்க வேண்டும் என்பதுதான். காலை மடித்தோ, நாற்காலியிலோ அவரவர் வயது உடல் நலத்திற்கேற்ப அமரலாம். கண்களை மென்மையாய் மூடிக் கொள்ளுங்கள். நிதானமாய் மூச்சினை ஓர் 5 முறை உள்வாங்கி, வெளி விடுங்கள். அனைத்தும் இயல்பாய், மென்மையாய் இருக்கட்டும்.

    இப்போது உங்கள் முகத்தினை, உங்கள் உருவத்தினை உங்களுள் காண முயலுங்கள். இப்படி அமர்ந்திருக்கும் நிலையில் தான் காண வேண்டும் என்பதல்ல. உங்கள் உருவம் தெளிவாக உங்களால் காணப்பட வேண்டும். உங்கள் முகம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். அநேகருக்கு இது இயலாது. குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், பகைவர்கள் இவர்கள் முகம் எல்லாம் ஞாபகம் வரும்.

    தன் முகம் காண்பது என்பது கடினமாக இருக்கும் அல்லது சற்று மங்கலாக இருக்கும். நம் கவனம் நம் மீது எந்த அளவு குறைவாய் இருக்கின்றது என்று உணரலாம். இது புற அழகினை கூட்டிக் கொள்வதற்கான பயிற்சி கிடையாது. அக வலுவினை கூட்டிக் கொள்வதற்கான பயிற்சியாகும்.

    நடிப்பு துறையில் இருப்பவர்கள், பேச்சாளர்கள் இவர்களை பெரிய கண்ணாடி முன் அவர்களை பேசி, நடிக்கச் செய்வார்கள். இது அவர்களை தன்னை மேலும் செதுக்கிக் கொள்ளவும் தன்னம்பிக்கையினை கூட்டிக் கொள்ளவும் சிறந்த செயலாற்றலினை கொடுக்கவும் உதவும். இங்கு நாம் கூற முற்படுவது அக வலிமையினை பெருக்கிக் கொள்வதற்கான பயிற்சி. இதற்கு உங்களுக்கு தேவையான விதத்தில் ஒரு கண்ணாடி ஒன்றியை வாங்கி சுவரில் பொருத்திக் கொள்ள வேண்டும். தினமும் அக்கண்ணாடி முன் அமர்ந்து உங்களையே நீங்கள் கவனியுங்கள். முதலில் என் மூக்கு சரியில்லை, நிறம் குறைவு இப்படி குறை நிறைகள் வரும். அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, உங்களை நீங்கள் பார்த்து அமைதியாய் இருங்கள். சற்று பெரிய கை கண்ணாடியினை வைத்து பயிற்சி செய்பவர்களும் உள்ளனர். சிறு விளக்கினை ஏற்றி வைத்து கண்ணாடி பயிற்சி செய்பவர்களும் உண்டு. இங்கு நான் குறிப்பிடுவதன் மூலம் இப்பயிற்சியினை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன். தெரிந்தவர்களுக்கு மீண்டும் நினைவுறுத்துகின்றேன்.

    வேதாந்த மகரிஷியின் மையம், தொண்டர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கண்ணாடி பயிற்சியினை சிறப்பாக நடத்துகின்றனர்.

    நான் இங்கு குறிப்பிடுவது சற்று மருத்துவம் சார்ந்த மனப்பயிற்சி. இதனை மேலை நாடுகளில் பயன்படுத்துகின்றனர். கண்டிப்பாக இதனை 10 நிமிடங்களுக்கு மேல் செய்ய வேண்டாம்.

    இதனை பயிற்சி செய்பவர்களுக்கு மனச்சோர்வு, மன உளைச்சல் போன்றவை நன்கு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் இதனைச் செய்யும் போது தனது புற தோற்றத்திற்கு மிக அதிக கவனம் கொடுப்பதனை நன்கு குறைத்து, ஆழ்ந்த உணர்வுகள், அமைதி, உள்ளுணர்வு போன்றவற்றிக்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தன்னைத் தானே கண்டு உணரச் செய்யும் என்று கூறப்படுகின்றது. தன்னைத் தானே ஆய்வு செய்து குறைகளை நீக்க உதவும். மிகவும் தன்னம்பிக்கை கொடுக்கும் பயிற்சியாகவும் கூறப்படுகின்றன.

    இதனை தகுந்த பயிற்சியாளர் மூலம் கற்றுக் கொள்வதே நல்லது என்பது மீண்டும் இங்கு வலியுறுத்தப்படுகின்றது.


    பயிற்சிகளில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும், எந்த மத வழியினைப் பின் பற்றினாலும், எந்த சித்தர் வழிமுறையில் சென்றாலும் அவை அனைத்தும் ஒருசேர கூறும் ஒரு கருத்து. 'அன்பு செய்' 'அனைத்து மக்களிடமும், ஜீவராசிகளிடமும் அன்பாய் இரு' என்பதுதான்.

    இதனை அழகாக 'அன்பே சிவம்' என்று கூறினர் நம் ஞானிகள், சித்தர்கள், திருமூலர் போன்றோர் நமது உள்ளத்தினுள் இந்த அன்பு வர வேண்டும். அப்படி நிகழ உள்ளே இருக்கும் அகந்தை, மமதை, பெருமை அகங்காரம் அழிய வேண்டும். கடவுள் பூஜையினைக் கூட பகட்டோடு, தம்பட்டம் அடிக்கும் ஆடம்ப ரத்தோடு செய்வதால் கூடுதல் கர்மவினைகள்தான் சேரும். ஆகவே தான் அகவழிபாடு-பிறர் அறியாத வழிபாடு, ஒழுக்கம் நிறைந்த வழிபாடு சிறந்ததாகக் கூறப்படுகின்றது. நினைத்துப் பாருங்கள்- உங்களுக்குள் சிந்தியுங்கள்- பிறரை மனம் புண்படும்படி பேசுவது, அலட்சியம் செய்வது இதனை தன் குடும்பத்திலும், வெளியுலகிலும் செய்பவர்கள் எத்தனை பேர்கள் உள்ளனர். இவர்கள் கடவுளிடம் செலுத்தும் பக்தி வியாபார பக்திதான். கனியிருக்க காய்தேடி செல்லக் கூடாது.

    அகந்தைதான் ஒருவரை மனம் போனபடி பேசவும், செயல்படவும் வைக்கின்றது.

    'நான் என்கின்ற அகந்தை வெட்டப்பட வேண்டும்' என்பதனைத்தான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. இந்த அகந்தை இல்லாமல் கோவிலுக்கு செல்லும்போது தான் நல்ல அதிர்வலைகளை ஒருவரால் பெற முடியும். ஏனெனில் அநேக கோவில்களில் ஒரு சித்தரின் ஜீவ சமாதி இருக்கும். எந்த சித்தரும் ஜாதி, மதம் என பேசியதே கிடையாது. அப்படியானால் மனிதனின் அகந்தை தானே இவற்றையெல்லாம் உருவாக்கி உள்ளது. ஒருவரின் மனம் கூறுவதற்கேற்ப அவர் சில வழிமுறைகளை பின்பற்றலாம். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம யோகம் என எந்த வழிமுறையிலும் செல்லலாம். ஆனால் பிறரை மட்டும் குறை கூறாது, புண் படுத்தாது வாழ்ந்தால் அதுதான் மிகப்பெரிய யோகம். இறை நம்பிக்கை இல்லையா? எதுவும் தப்பில்லை. அன்பாக இருக்கக் கற்றுக் கொண்டால் போதும். இந்த அகந்தையை நீக்கத்தான் தியான பயிற்சி என்பது அவசியமாகின்றது.

    தியானம் என்று சொன்னாலே பலரும் தனக்கு ஒத்து வராத ஒரு வார்த்தையாகவே நினைக்கின்றனர். என்னால் சில நிமிடங்கள் கூட ஒரு இடத்தில் அமர முடியாது. கவனச் சிதறல் அதிகம் இருக்கின்றது. நேரமில்லை. இப்படி ஆயிரம் காரணங்களை தேடி கண்டு பிடிப்பவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்கள் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும்.

    பல மணி நேரம் அல்லது 20 நிமிடங்கள் தியானம் என்பதற்கு ஒரு மாற்றும் இருக்கின்றது. ஜென் தியான முறையிலும் (புத்தர் பயிற்சி முறையின் பிரிவாக) இதனை கற்பிக்கின்றனர். இதற்கு அதிக நேரம், கடும் தவம் எதுவும் தேவையில்லை. ஒவ்வொரு நொடியிலும் ஒருவர் அந்த நொடியோடு செய்யப்பட வேண்டிய வேலையினை செய்ய வேண்டும்.

    உதாரணமாக நீங்கள் காலையில் எழுந்தவுடன் பல் தேய்க்கின்றீர்கள். ஆனால் மனம் அன்றைய நாளைப் பற்றியோ, நேற்றைய நாளைப் பற்றியோ நினைக்கும். அதற்கு தொடர்பான பல நிகழ்வுகளை நினைத்து ஓடும். கை மட்டும் பல்லினை தேய்க்கும். வாய் கொப்பளிப்பது இவை எல்லாமே ஒரு எந்திர நிகழ்வு போல் நடக்கும். பல் சுத்தம் செய்தது கூட அரை குறை நினைவில் தான் இருக்கும். இப்படித்தான் சாவியை வைத்த இடம் மறந்து தேடி அலைக்கின்றனர். ஒன்று கடந்த காலம் அல்லது வருங்காலத்தினைப் பற்றிய கவலையிலேயே மூழ்கி இருக்கின்றனர். இதனால் இவர்களின் மனநலம் வெகுவாய் பாதிக்கப்படுகின்றது. கடந்த கால நிகழ்வினை ஒன்றும் செய்ய முடியாது. வருங்காலத்தினைப் பற்றிய கணிப்பு உறுதியானது இல்லை. ஆக இந்த நொடி உங்களின் ஒவ்வொரு நொடியினையும் முழு கவனத்தினையும் அதில் செலுத்தி வாழ்வதே ஒரு வகை தியானம் ஆகின்றது. இதனை சற்று முயற்சி செய்தால் மிக எளிதாகி விடும்.

    புத்த மதத்தின் பிரிவாக சீனா, ஜப்பான் இந்நாடுகளுக்கு பரவினாலும் அநேக அடிப்படை கொள்கைகள் தியான வகைகள், பிரிவுகள் இவைகள் புத்தரின் போதனைகளை கொண்டே அமைந்துள்ளது.

    இவர்கள் முறைப்படி

    * 'நான்' என்ற ஒன்று இல்லை

    * எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கும்.

    * நாம் உலக வாழ்வில் முக்கியத்துவம் கொடுப்பவை எல்லாம் ஒன்று மில்லாதவை.

    * இந்த அண்டம், பிரபஞ்சத்தில் அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.

    * நமது தாக்கங்கள் தவறாகவே செல்கின்றன.

    * வலி மிகுந்த நிகழ்வுகள் ஏற்பட்டால் அந்த நிகழ்வினை ஏற்றுக் கொள்.

    * இந்த நொடியில் இரு. விழிப்ணர்வோடு இரு.

    * தியான முறையே விழிப்புணர்வினை கூட்டும்.

    * ஆசை, பேராசை இரண்டுமே வேண்டாம்.

    * வாழ்க்கை எளிமையான முறையில் இருக்க வேண்டும்.

    * எந்த தீய பழக்கத்தில் இருந்தும் தள்ளி இரு.

    * நல்லவைகளை கடை பிடி.

    * மனம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.

    * எந்த ஜீவனையும் கொல்லாதே.

    * திருடக் கூடாது.

    * உன்னையும் ஏமாற்றிக் கொள்ளாேத. பிறரையும் ஏமாற்றாதே.

    * மனம் அமைதியாய் இருக்கட்டும்.

    ஜென் முறை பயிற்சியில் விழிப்புணர்வு என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இவர்களின் தியான பயிற்சியில் பல பிரிவுகள் இருக்கின்றன. இதனை பயில விரும்புபவர்கள் தகுந்த பயிற்சியாளர் மூலம் மட்டுமே பயில வேண்டும். முதலில் தியானம் என்று ஆரம்பிப்பவர்களுக்கு இவர்களின் பயிற்சி முறையினை எளிதாய் பின்பற்ற முடியும். மேலும் அறிவோம்.

    -தொடரும்

    • சிரமத்தை பார்க்காமல் அதிகாலையில் ஷூட்டிங் முடிந்தாலும் மீண்டும் காலையில் ஷூட்டிங்கை தொடங்கி விடலாம் என்று கூறியிருந்தேன்.
    • தினமும் காலையில் புறப்படும் போதே ஆபத்தை நினைத்து பயந்தால் அன்றாட வாழ்க்கையே அமைதியற்றதாகி விடும்.

    அதிகாலை 6 மணி....

    ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் அறை...

    "மீனா... எழுந்திரு... நேரமாச்சு..." என்ற அம்மாவின் குரல் காதில் விழுந்தது.

    ம்ம்... என்றபடி மெத்தையில் புரண்டேன். கண்ணை திறக்க முடியவில்லை. தூக்கம் சொக்கியது. அடித்து போட்டது போல் உடம்பெல்லாம் வலித்தது.

    வலிக்காதா பின்னே...? ஷூட்டிங் முடிந்து அதிகாலை 2 மணிக்குதான் வந்து படுத்தேன். அடுத்த 4 மணி நேரத்துக்குள் மீண்டும் எழுப்பினால் எப்படி இருக்கும்.

    செங்கல்வா பூதண்டா (சிவந்த பூக்கள்) என்ற தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருந்தேன்.

    ஒரு பாடல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அதை முடித்து விட்டு மாலையில் விமானத்தை பிடித்து சென்னை வந்து இரவில் ஒரு இந்தி படத்தில் நடிக்க வேண்டியிருந்தது.

    அதனால்தான் சிரமத்தை பார்க்காமல் அதிகாலையில் ஷூட்டிங் முடிந்தாலும் மீண்டும் காலையில் ஷூட்டிங்கை தொடங்கி விடலாம் என்று கூறியிருந்தேன்.

    காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்று முடிவு செய்து இருந்தோம். ஆறு மணிக்கே எழுந்து ரெடியாகி, மேக்-அப் போட தொடங்கினால்தான் சரியான நேரத்துக்கு செல்ல முடியும்.

    அதனால்தான் 6 மணிக்கு எழுப்பினார்கள். சிரமப்பட்டு எழுந்து தயாராகிவிட்டேன். மேக்-அப் போட்டுக் கொண்டதும் உற்சாகம் பிறந்த விடும்.

    அன்றும் அப்படித்தான்... உற்சாகத்துடன் ஷூட்டிங் கிளம்பினேன். ஆனால் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கப் போகிறோம் என்றெல்லாம் நினைத்து கூட பார்க்கவில்லை.

    தினமும் காலையில் புறப்படும் போதே ஆபத்தை நினைத்து பயந்தால் அன்றாட வாழ்க்கையே அமைதியற்றதாகி விடும். வாழ்க்கையில் எது நடந்தாலும் சந்தித்துதானே ஆக வேண்டும்?

     

    ஐதராபாத் நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே ஷூட்டிங் நடைபெறும் ஏரி இருந்தது. காரை விட்டு இறங்கி ஏரியை பார்த்தேன். வாவ்... கடல் போல் பரந்து விரிந்து கிடந்தது. சுற்றிலும் அடர்ந்த காடுகள்... மலைகள்... பார்ப்பதற்கு இயற்கை சூழ்ந்த அந்த பகுதி பிரமிப்பாக இருந்தது.

    ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத பகுதி. எனவேதான் அந்த இடத்தை தேர்வு செய்து இருந்தார்கள்.

    ஏரியின் மறுகரைக்கு சென்றால் நீர் வீழ்ச்சியும், வனவிலங்குகள் தண்ணீர் அருந்தும் பகுதியும் இருப்பதாக கூறினார்கள்.

    அந்த ஏரியில் நானும் ஹீரோவும் மட்டும் தனியாக மிதக்கும் ஒரு மிதவையில் நின்றபடி ஆடி-பாடி நடிக்க வேணடும்.

    ஹீரோ அஜய். அவருக்கு அதுதான் முதல் படம். ஆனால் எனக்கு 3-வது படம். எனவே வயதில் சின்னவளாக இருந்தாலும் நாம்தான் சீனியர் என்ற உணர்வு மனதில் இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.

    நிஜமாகவும் அவர் புதுமுகம் என்பதால் கேமிரா முன்பு எப்படி நிற்பது? எப்படி நடப்பது? எப்படி திரும்புவது? என்பதையெல்லாம் சொல்லி கொடுப்பேன்.

    படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தயாரானது. ஏரிக்கரையில் டிராலியை தயார் செய்து, காமிரா ஆங்கிளையும் ஒளிப்பதிவாளர் சரியான கோணத்தில் வைத்தார்.

    நாங்கள் ஏரியில் செல்வதற்காக மிதவை தயார் செய்யப்பட்டிருந்தது. அதாவது இரண்டு டிரம்மை போட்டு அதன்மீது ஒரு சிறு மரபலகையை கட்டி மிதக்க விட்டிருந்தார்கள். பக்கவாட்டில் பிடித்துக் கொள்ள கைப்பிடிகள் எதுவும் கிடையாது. அதே போல் மிதந்து செல்வதற்கு துடுப்போ, மோட்டாரோ எதுவும் கிடையாது. தண்ணீர் அசைவிலும், நாங்கள் ஆடும் போது ஏற்படும் அசைவிலும் மிதவை மிதந்து செல்லும் அவ்வளவுதான்.

    மிதவையை இழுத்து பிடித்து கொள்வதற்காக நீளமான கயிறு கட்டியிருந்தார்கள். அந்த கயிறை பிடித்தபடி ஒருவர் கரையில் அமர்ந்து இருந்தார்.

    இந்த காலத்தை போல் தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாததால் தகவல்கள் சொல்வதற்காக கரையில் மெகாபோனுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    நாங்கள் ஏரியில் நிற்கும் போது எங்களிடம் சொல்ல வேண்டியதை அந்த மெகா போனில் அறிவித்து கொண்டிருப்பார்கள்.

    அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. எல்லா ஏற்பாடுகளும் தயாரானதும் டைரக்டர் எங்களை அந்த மிதவை மீது ஏற்றி விட்டார்.

    மிதவை நகர தொடங்கிய போது பாடலுக்கு ஏற்றவாறு நாங்கள் ஆட தொடங்கியதும் மிதவையும் கவிழ்த்தி விடுவது போல் ஆடியதும் பயமாக இருந்தது. ஆனால் அந்த பய உணர்ச்சி முகத்தில் தெரிந்து விடக்கூடாது. தெரிந்தால் காட்சி சரியாக அமையாது.

    எனவே பயத்தை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டு மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு நடித்தேன்.

    இன்னொரு புறம் தூக்கம் இல்லாததால் மிகவும் களைப்பாக இருந்தது. அதோடு காலை 6 மணிக்கே கிளம்பியதால் வெறும் ஜூஸ் மட்டுமே குடித்திருந்தேன். எதுவும் சாப்பிடாததால் வயிற்று பசியும் வாட்டி எடுத்தது. அதையும் தாங்க வேண்டியிருந்தது.

    காலை 11.30 மணியளவில் முதல் டேக் எடுத்து முடிக்கப்பட்டது. அதன் பிறகு அடுத்த காட்சிக்கு கயிறு தெரியக்கூடாது. எங்களை சுற்றிலும் ஏரி தண்ணீர் மட்டும் பிரமாண்டமாக தெரிய வேண்டும் என்று டைரக்டர் சொன்னதால் மிதவையில் கட்டியிருந்த கயிறை அகற்றி விட்டார்கள்.

    நூலறுந்த பட்டம் காற்றடிக்கும் திசையில் எங்கெங்கோ பறந்து கொண்டிருப்பது போல் எங்கள் மிதவையும் மிதந்து சென்று கொண்டிருந்தது.

    கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஏரியில் வெகு தூரம் சென்றுவிட்டோம். கரையில் நின்ற படப்பிடிப்பு குழுவினர் எங்களுக்கு மிகச் சிறிதாக தெரிந்தார்கள். அப்படியானால் ரொம்ப தூரத்துக்கு வந்துவிட்டோம் என்பதை புரிந்து கொண்டோம்.

    சுற்றும், முற்றும் பார்த்தோம். எங்களையும் அறியாமல் ஒருவிதமான பயம் மனதை சூழ்ந்தது. நாங்கள் எவ்வளவோ கத்தியும் கரையில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லை.

    நான் அன்று ஆரஞ்சு நிற சேலை கட்டியிருந்தேன். அந்த சேலை தலைப்பை அங்கும் இங்கும் அசைத்து யாராவது பார்த்து காப்பாற்ற மாட்டார்களா? என்று நினைத்தோம்.

    யாரையும் காணவில்லை. வேறு வழியில்லை என்று நானும் ஹீரோவும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம்.....

    எப்படி உயிர் தப்பினோம் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்)

    • குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார்.
    • அமாவாசை விரதம் இருப்பவர்கள் நாளை மறுநாள் திங்கட் கிழமை காலையிலேயே தொடங்க வேண்டும்

    நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருக நாம் மகாலட்சுமியை வேண்டி பூஜை செய்ய வேண்டும். தீபாவளி நாளில் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி செய்யும் பூஜைக்கு தனி மகத்துவம் உள்ளது.

    லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடும் முறையாகும். தொடக்கத்தில் குபேரர் செல்வ வளத்தை பெற்றிருக்கவில்லை. செல்வ வளத்தை பெற தான் என்ன செய்ய வேண்டும் என குபேரர், தனது நண்பரான சிவ பெருமானிடம் சென்று ஆலோசனை கேட்டிருக்கிறார்.

    அதற்கு சிவ பெருமான், செல்வத்திற்கு உரியவர் மகாலட்சுமி. அவருடைய அனுகிரகம் இருந்தால் மட்டுமே உன்னால் செல்வத்திற்கு அதிபதியாக முடியும். எனவே ஐப்பசி மாதம் அமாவாசை திதியில், மாலை நேரத்தில் மகாலட்சுமியை பூஜை செய்தால் உன்னால் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற முடியும் எனக் கூறுகிறார்.

    சிவ பெருமானின் யோசனையை ஏற்றுக்கொண்டு குபேரனும் மகாலட்சுமியை பூஜை செய்து செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கும் வரத்தை பெற்ற நாள் தான் தீபாவளி. இத்தனை சிறப்பு வாய்ந்த நாளில் செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய மகாலட்சுமியையும் பூஜை செய்தால் நம்முடைய இல்லங்களிலும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது. எனவேதான் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.

    குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கி அவரிடம் இருந்து யந்திரத்தை பெற்று அந்த யந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்ததால் நல்லது நடந்தது. சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார்.

    மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை கொண்டவர். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.

    குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான்.

    இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.

    தீபாவளி நாளில் குபேரனை நாம் வணங்கினால் வற்றாத செல்வம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. செல்வ வளம் தரும் ஸ்ரீலட்சுமி குபேரரை வெள்ளிக்கிழமை, வியாழக்கிழமை பூசம் நட்சத்திரம் நாளில் பூஜை செய்து வணங்கினால் வற்றாத செல்வ வளம் பெறலாம். தீபாவளி நாளில் நாம் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளினால் நமக்கு செல்வ வளம் பெருகும்.

     

    லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை:

    பூஜை அறையில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இரண்டு பக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். லட்சுமி குபேரர் படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைக்க வேண்டும். அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை தொடங்கிட வேண்டியது தான். பின்னர் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். குபேர மந்திரங்களான 'குபேராய நமஹ' 'தனபதியே நமஹ' என 108 முறை சொல்லி தாமரை பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.

    நைவைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜையை முடித்திட வேண்டும். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார் என்பது ஐதீகம்.

    நாளை பிற்பகல் 3.10 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி விடுகிறது. அமாவாசை விரதம் இருப்பவர்கள் நாளை மறுநாள் திங்கட் கிழமை காலையிலேயே தொடங்க வேண்டும். நாளை காலை 5.40 மணி முதல் இரவு 7.36 வரை லட்சுமி பூஜை செய்வதற்கு ஏற்ற சிறந்த நேரமாக சொல்லப்படுகிறது.

    தீபாவளி நாளான ஞாயிற்றுகிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம் ராகு காலமும், பகல் 12 முதல் 1.30 வரை எமகண்டம் நேரமும் உள்ளது. அந்த நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் லட்சுமி பூஜை செய்வது சிறப்பானதாகும். இந்த நேரத்தில் லட்சுமி தேவியையும், விநாயகர் மற்றும் குபேரரை வழிபடுவதால் வற்றாத செல்வம் வீட்டில் நிறைந்திருக்கும். மகா லட்சுமியின் அருளினால் செல்வம் மழையாக பொழியும். குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.

    வட இந்தியாவில், தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.

    • ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயரும் சொற்கள் எப்போதும் தன் மொழியின் தன்மையையும் மாற்றிக்கொள்ளும்.
    • ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும். இது தான் பழமொழியின் உண்மை வடிவம்.

    அசோக் உன் டைரியிலே குறிச்சி வைச்சிக்கோ,"யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்....". முன்னுச்சியை ஒருதரம் கோதிவிட்டு, தொடையைத் தட்டி ஸ்டைலா தலைவர் பேசுறா மாதிரி கெத்துள்ள ஒரு பழமொழிதான் இது.

    அட என்னப்பா போனதடவை நாய், இந்த தடவை பூனையும் யானையுமா ? ஜமாய்ங்க என்று முதுகு தட்டிப் போகிறது பூனைகளின் பார்வைகள்.

    தேன்தமிழில் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு உவமையும், கருத்தையும் கொண்டு இருக்கும். பழமொழியும் அப்படியே. எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்பதைப் போலத்தான் அர்த்தங்களும் அதிகம்.

    பத்துபேர் ஒரு அறையில் குழுமி இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு விளையாட்டு. முதல் நபர் காதில் சொல்லும் ரகசிய வார்த்தையை பத்தாவது நபர் சரியாக சொல்ல வேண்டும். ஆனால் அப்படி வர வாய்ப்பே இல்லை. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயரும் சொற்கள் எப்போதும் தன் மொழியின் தன்மையையும் மாற்றிக்கொள்ளும்.

    களவாணி படத்தில் ஒரு காட்சி வரும். பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான்னுங்கிற கதைதான். சாதாரண வார்த்தைகளே அப்படியெனில் பழமொழிகள் மனிதர்களின் நண்பர்களைப் போலல்லவா ?

    மாடு கட்டிப் போரடித்தால்

    மாளாது செந்நெல்

    என்று யானை கட்டிப் போரடித்த

    அழகான தென்மதுரை

    என்ற இலக்கியப் பாடல் ஒன்று உண்டு. தற்போது எயந்திரங்கள் கொண்டு நெல்மணிகளை கதிரில் இருந்து பிரிக்கிறார்கள். ஆனால் முன்னோர்கள் அவ்வேலைக்கு மாடுகளையும், அதிக விளைச்சல் நேரங்களில் யானைகளையும் பயன்படுத்தி போரடித்து இருக்கிறார்கள். இந்த போரடித்தல் வார்த்தையும் வாய்மொழியாக மருவி வந்தது தான். சூடடித்தல் தான் காலப்போக்கில் போரடித்தல் ஆனது.

    சங்ககாலம் போல இப்போதும் மதுரையில் அழகர்கோவில் அருகே புலிப்பட்டி கிராமத்தில் சுமதி என்ற யானையைக் கட்டி போரடித்து வருகிறார் மதன் என்னும் பட்டதாரி. மதுரை சுமதி கூகுளிலும் பிரபலம். விஜய் பாடினாமாதிரி கூகுள் பண்ணிப் பாருங்களேன்.

    அறுவடை முடிந்து நெல்லை சேமித்து வைத்ததும் நெல்லை தின்பதற்கு எலிகள் நிறைய வரும். அப்படி வரும் எலிகளை வேட்டையாட பூனைகளை கொண்டு போய் விடுவார்கள்.

     

    என்ன.. யானைக்கு வரவேற்பு சற்று பலமாக இருக்கும். பூனைகள் நல்லதே செய்தாலும் மறைமுகமாக செய்ய வேண்டியிருக்கும். இது வலியோரின் கரம் எதிலும் ஓங்கி இருப்பதையும் எளியோரின் கரம் நலிந்திருப்பதையும் ஒரு வகையில் குறிக்கிறது.

     பழமொழியின் உண்மையான விளக்கத்திற்குப் போகும் முன் பூனைகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரையலாம்.

    நம்மாளு ஒரு நாளைக்கு 70 சதவீதம் தூங்கியே பொழுதைக் கழிப்பாங்க, வடிவேலு விடவும் சும்மா இருக்கிறது எத்தனை கஷ்டன்னு ஒரு புக்போடற அளவுக்கு விவரம் கேட்டுக்கலாம். பூனைகளோட வியர்வை உள்ளங்கால் வழியாதான் வெளியேறும். அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை உடையது. ஒயிலான நடையை கேட் வாக்னு சொல்லுவாங்க. பெண் பூனைகள் எப்போதும் புதுப்பொண்ணு வீட்டில் வலதுகாலை எடுத்து வைத்து வர்றாமாதிரி வலதுகால் பழக்கம் கொண்டது. பசங்களை சாதாரணமாகவே கணக்கெடுக்க மாட்டோம். ஆனாலும் வரலாறு தப்பா பேசக்கூடாது பாருங்க, அதனால ஆண் பூனைகளுக்கு இடதுகால் பழக்கம் உள்ளதுன்னு ஒரு வரி சேர்த்துக்கிட்டா எடிட்டர் திட்டமாட்டாரு.

    காலரைத் தூக்கிவிட்டுட்டு எலியைக் கொன்னுட்டோன்னு சொல்ல முடியாது. ஏன்னா இவங்களுக்கு காலர் எலும்புகள் கிடையாது. கடல் நீரைக் கூட அசால்டா குடிப்பாங்க, பூனையோட சிறுநீரகங்களுக்கு உப்பை வடிகட்டும் திறன் உண்டு.

    அடுத்தது, அரசருக்கு கொடுக்கப்படும் உணவை பரிசோதனை செய்து பார்க்கும் டெஸ்டிங் வேலையை தனக்குத்தானே செய்துப்பாங்க. சாப்பிடறதுக்கு முன்னாடி உணவை மூன்றுமுறை சோதனை செய்து டேஸ்ட் பார்த்த பிறகு நாலாவது முறைதான் சாப்பிடுவாங்க. ஸ்வீட்ஸ் சுத்தமாக ஆகாது. மோலி அல்லது ராணின்னு செல்லப்பெயர் உண்டு. இந்த வரி வாசிக்கும்போது ஏஞ்சலா பூனையை மனதில் நினைத்துக் கொள்ளவும்.

    இதுவரைக்கும் 33 இனம் பூனைகளால் அழிந்திருக்குன்னு உங்களால நம்பமுடியுமா.. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று. அடுத்தமுறை பூனையைப் பார்த்தா பயப்படுவீங்களா... ?!

    நம்ம பழமொழிக்கும் இந்த குறிப்புகளுக்கும் சம்பந்தமில்லை, சில நேரம் திரைப்படத்திற்கு ஒட்டாத நகைச்சுவைக் காட்சிகள் ஹிட் அடித்தா மாதிரிதான் இந்த குறிப்புகளும்.

    ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும். இது தான் பழமொழியின் உண்மை வடிவம்.

    ஆ என்றால் ஆவினம். பசுக்கூட்டம். பசுவின் பாலில் இருந்து கிடைக்கும் நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பொலிவு கிடைக்கும். ஆனால், வயது ஏற ஏற இதன் நன்மையும் மனிதருக்கு தீமையாய் முடியும் என்பதால்... முதுமையின் போது பூ நெய் எனப்படும் தேனை உண்டால் உடலுக்கு எந்த தீங்கும் நேராது என்பது பழமொழியின் கருத்தாகும்.

    ஏறத்தாழ 20000 வகைகள் கொண்ட ஈ இனத்தில் ஏழு இனங்கள் தேனீக்கள் என்று அழைக்கப்படுகிறது. தேனீயில் 44 வெரைட்டி தேனீக்கள் உண்டு. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றில் இருந்து கக்குகிறது. தேனீக்கள் சுமார் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வாழறாங்க அதுவும் கூட்டுக்குடும்பமா...இங்கேயும் ராணியின் ராஜ்ஜியம்தான்.

    ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு கிடையாது, உணவு சேகரிக்கவும் போகமாட்டாங்க. இனவிருத்தி முடிந்து இவங்களோட சிறகுகள் எல்லாம் உதிர்ந்து இறந்து போவதுதான் இதன் பணி.

     

    ராணித்தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 வரை முட்டைகளை இடும். கணக்குப்பார்த்தா வருஷத்துக்கு இரண்டு லட்சம் முட்டைகள். பேறு காலங்களில் ராணித்தேனீக்கு உணவு கொடுக்க பத்து தேனீக்கள் தாதிக்களாய் இருக்காங்க. ராணித்தேனீயின் கட்டளைக்கு கீழ்படிகிறார்கள்.

    வெள்ளோட்டம் பார்க்கிறவங்க ஊர்ப்பக்கம் நீர்வரத்துக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவாங்க. தன் கூட்டை விட்டு வெளியே வர்ற ராணித்தேனீ, தான் இருக்கும் சூழலை கண்காணிக்க அறிமுக விழா மாதிரி நான் வந்துட்டேன்னு...பறக்குமாம். தகவல்களை தங்கள் குழுவிற்கு தெரிவிக்க நடன அசைவுகளைப் பயன்படுத்துமாம். 65 முதல் 100 அடிவரை பறந்த நிலையில்தான் இனப்பெருக்க உறவு கொள்ளுமாம். தேனீமாதிரி சுறுசுறுப்பாக இருன்னு வார்த்தைக்கு சொல்லலைங்க வாழ்ந்து காட்டுவதால சொல்லி இருக்காங்க.

    இப்போ புரியுதா யானைக்கு ஒரு காலமும் பூனைக்கு ஒருகாலமும்... இளமைக்காலத்தில் உணவுப் பழக்கத்தில் நெய்யின் அளவும் வயதாக வயதாக குறைந்து அதற்கு பதில் தேனை அருந்தினால் நலமுடன் வாழலாம் என்ற மருத்துவக் குறிப்பான பழமொழிதான். ரஜினி ஸாருடைய பஞ்ச் டயலாக் மாறி மாறிட்டது.

    -லதா சரவணன்

    ×