என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கடன் தீர்க்கும் சாரபரமேஸ்வரர்
- தலத்துக்கு அருகில் பஞ்சசேத்திரம் எனும் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
- 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து 11-வது வாரம் அபிஷேகம் நடத்தி பிரார்த்தனை செய்தால் எல்லா கடன்களும் தீரும் என்பது ஐதீகம்.
கும்பகோணம் கோவில்களை சுற்றி பார்க்க செல்லும்போது தவற விடக்கூடாத மிக முக்கிய கோவில்களில் திருச்சேறை ஸ்ரீ சார பரமேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கும்பகோணத்துக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. இந்த ஆலயம் பல்வேறு தனிச் சிறப்புகள் கொண்டது.
இந்த தலத்து சிவபெருமானின் பெயர் சார பரமேஸ்வரர், செந்நெறிப்பர், உடையவர் என மூன்று விதமாக அழைக்கப்படுகிறது. இந்த 3 பெயர்களின் பின்னணியிலும் வெவ்வேறு புராண நிகழ்வுகள் உள்ளன.
ஆதிகாலத்தில் இந்த தலம் இருந்த இடத்தில் வயல்கள் சூழ்ந்து இருந்தன. சேறு அதிகமாக இருந்ததால் சேற்றூர் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் அதுவே சேறை என்று மாறியது. தற்போது நாம் திருச்சேறை என்று அழைக்கிறோம்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையை குறிப்பிட்ட நெறிமுறைப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். திட்டமிட்ட நெறிமுறைகளின்படி வாழ்ந்தால்தான் வாழ்வு சிறப்பாக இனிமையாக அமையும். மனிதனின் வாழ்க்கையை செம்மைப்படுத்த நெறிமுறைகள் அவசியம் தேவையாகும். அந்த நெறிமுறையை தந்து அருளும் சிறப்பான தலமாக திருச்சேறை தலம் திகழ்கிறது.
இந்த தலத்தில் வழிபட்டால் நியாயமான வாழ்க்கைக்கு வழி பிறக்கும். அதன் தொடர்ச்சியாக முக்தி பாதைக்கும் செல்ல முடியும். அதை இந்த தலத்து இறைவன் தருவதால்தான் அவருக்கு செந்நெறியப்பர் என்று பெயர் ஏற்பட்டது. இந்த தலத்துக்கு அருகில் பஞ்சசேத்திரம் எனும் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இதன் காரணமாக செந்நெறியப்பருக்கு சாரபரமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
இந்த தலம் கடன் நிவர்த்தி செய்யும் மிக சிறப்பான தலமாக திகழ்கிறது. வாழ்க்கையில் ஒருவர் நிம்மதியாக இருக்க வேண்டுமானால் துளி அளவுக்கு கூட கடன் இருக்கக் கூடாது. எவ்வளவுதான் அறிவும், ஆற்றலும் இருந்தாலும் கடன் இருந்தால் நிம்மதியாக வாழவே முடியாது. கடனை சுமப்பவர்கள் நாளடை வில் வறுமை வலைக்குள் சிக்க நேரிடும்.
இளமையில் வறுமை என்பது கொடியது. எனவே வறுமையை வேரறுக்க வேண்டுமானால் அதற்கு கடன்களை தீர்க்க வேண்டும். ெபாதுவாக கடன் என்றால் தற்போதைய லௌகீக வாழ்க்கையில் உள்ள கடன்களையும் அடுத்த முக்தி பாதைக்கான பிறவிக் கடன்களையும் தீர்ப்பதை குறிக்கும். இந்த 2 வகை கடன்களையும் நிவர்த்தி செய்யும் ஆற்றல் திருச்சேறை தலத்தில் உள்ள "ரிண விமோசன லிங்கேஸ்வரர்" பெருமானுக்கு உள்ளது.
இந்த லிங்கேஸ்வரர் இந்த ஆலயத்துக்கு வந்ததன் பின்னணியிலும் ஒரு வரலாறு இருக்கிறது. மார்க்கண்டேய முனிவர் ஒரு தடவை தனது ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தொடர்ந்து பூஜைகள் செய்து வந்தார். அந்த லிங்கம் அவரது ஆத்மார்த்த லிங்கமாக மாறியது. அதை திருச்சேறை தலத்தில் உட்பிரகாரத்தில் விநாயகருக்கு அருகில் ஸ்தாபித்தார்.
அந்த லிங்கத்துக்கு கடன்களை தீர்க்கும் சக்தியை இறைஅருளால் ஏற்படுத்தினார். இதனால் அந்த லிங்கத்துக்கு "ரிண விமோசன லிங்கேஸ்வரர்" என்ற பெயர் ஏற்பட்டது. 'ரிண' என்றால் கடன், 'விமோசனம்' என்றால் நிவர்த்தி என்று அர்த்தம். கடன்களை நிவர்த்தி செய்யும் லிங்கேஸ்வரர் என்று பொருளாகும்.
இவர் விநாயகருக்கு அருகில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இவரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து 11-வது வாரம் அபிஷேகம் நடத்தி பிரார்த்தனை செய்தால் எல்லா கடன்களும் தீரும் என்பது ஐதீகம். இந்த பிறவிக்கும், பிறவி இல்லாத நிலைக்கும் தேவையான கடன் நிவர்த்திகளை இந்த ஈசன் தருவதாக நம்பிக்கை. எனவேதான் இவரை கடன் நிவர்த்தீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.
இவரை மனதார வழிபட்டால் கடன் நீங்கி, வறுமை விலகி செல்வ வளம் உண்டாகும். அதோடு குழந்தை பாக்கியம், கல்வி மேம்பாடு ஆகியவையும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
இந்த தலத்தில் மிக சிறப்பான அம்சமாக 3 துர்க்கைகள் அமைந்துள்ளனர். சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 வடிவங்களாக அவர்கள் காட்சி அளிக்கிறார்கள். 3 பேரும் ஒரே சன்னதியில் அமைந்திருப்பது மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த துர்க்கை சன்னதியில் வெள்ளிக்கிழமை களில் ராகு காலத்தில் வழிபாடு செய்தால் நினைத்த பலன்கள் கிடைக்கும்.
இந்த தலத்தில் உள்ள பைவரருக்கும் தனி சிறப்பு உண்டு. அவர் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமானால் பாடல் பெற்றவர். இந்த பைரவர் இடது மேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் காட்சி அளிக்கிறார். தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இதுபோன்ற பைரவர் வடிவத்தை காண இயலாது. இந்த பைரவர் சிவபெருமானாகவே இருப்பதாக தேவார பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவருக்கு அஷ்டமி திதி தினத்தன்று வடமாலை சாத்தி வழிபடுகிறார்கள். இவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். நவக்கிரக தோஷங்களை நீக்கும் ஆற்றலும் இந்த பைர வருக்கு உள்ளது. குறிப்பாக வழக்கு விவகாரங்களில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இவரை வழிபட தவறுவது இல்லை.
சூரிய பகவான் தமிழகத்தில் எத்தனையோ தலங்களில் வழிபட்டு பலன் பெற்றுள்ளார். அவ்வாறு சூரியன் வழிபட்ட தலங்களில் ஒன்றாகவும். திருச்சேறை தலம் உள்ளது. ஆண்டு தோறும் மாசி மாதம் 13, 14, 15-ந்தேதிகளில் காலையில் சூரியனின் கிரகணங்கள் இந்த தலத்து இறைவன் மீது நேரடியாகப்படுகிறது. இதனால் மாசி மாதம் முழுவதும் இந்த ஆல யத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்த தலத்தில் அம்பிகை ஞானவல்லி என்ற பெயரில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சாரபரமேஸ்வரர் வாழ்க்கையை நெறிப்படுத்தும் வழிகாட்டு தல்களை வழங்கும் போது அதை நடை முறைப்படுத்துவதற்கான ஞானத்தை ஞானவல்லி தருவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் கட்டிட அமைப்புகள் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த தலத்தின் தல விருட்சமாக மாவிலங்கை உள்ளது. இந்த தல விருட்சத்தை மகாலிங்க மரம் என்றும் சொல்கிறார்கள். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வெளி பிரகாரம் மிகவும் விசாலமானது என்பது குறிப்பிடத் தக்கது.
தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரி தென்கரையில் அமையப் பெற்ற 95-வது தலமாக திருச்சேறை திகழ்கிறது. இந்த ஆலயத்தில் 3 தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீராடி சித்தர்கள், முனி வர்கள் பெறும் பேறு பெற்றுள்ளனர். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு உதவிய தவுமிய மகரிஷி இந்த தலத்தில் புனித நீராடி சாரபரமேஸ்வரை வழிபட்டு மோட்சம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.
இந்த தலத்துக்கு அடுத்தப் படியாக திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வழிபடலாம். திருவிடைமருதூர் ஆலயம் பல்வேறு மகத்தான தனித்துவம் கொண்டது. தோஷங்களை நீக்கும் ஆற்றல் நிறைந்தது. குறிப்பாக இழந்த செல்வத்தை மீண்டும் தர வல்லது. அது பற்றி அடுத்த வாரம் வியாழக்கிழமை பார்க்கலாம்.






