என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் மூலம் சார்ந்த நோய்களும், தீர்வுகளும்
- சித்த மருத்துவம் மூல நோய் குறிகுணங்களை 21 வகைகளாக குறிப்பிடுகின்றது.
- மூல நோயில் உண்டாக்கும் ரத்தப் போக்கினை கட்டுக்குள் கொண்டு வர துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை உணவில் சேர்க்கலாம்.
பொதுவாகவே நாட்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படும்போது மூலநோய் சார்ந்த தொந்தரவுகள் ஏற்பட்டு விடுகின்றன. முதுமையில் மூலநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 50 வயதைக் கடக்கும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு மூலநோய் உண்டாவதாக உள்ளது. மேலும் ஆசனவாய் வெடிப்பு ஆய்வுகளில் தெரிய வந்தது. பவுத்திரம் ஆகிய நோய்நிலைகளும் ஆசனவாயில் ஏற்படுவதாக உள்ளன.
முதுமையில் ஏற்படும் இத்தகைய நோய்நிலைகளில் பவுத்திரம் மற்றும் மூலநோயால் உண்டாகும் துன்பங்கள் அதிகம். தள்ளாடும் வயதில் உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியமால் மூலக்கடுப்பினால் அவதியுறும் பலர் வாழ்க்கையை வெறுப்பதும், மனசலிப்பு அடைவதும் கொடுமையானவை.
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மூலநோய் தொந்தரவு அதிகம் ஏற்படுவதாக உள்ளது. காரணம் கர்ப்பக் காலத்தின்போது அளவில் பெரிதாகும் கருப்பை மலக்குடலை அழுத்துவதால் மூலநோய் குறிகுணங்கள் உண்டாகும். சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னரும் இத்தகைய குறிகுணங்கள் நீடித்து காலம் முழுமைக்கும் தொந்தரவுகளை உண்டாக்கக்கூடும்.
சித்த மருத்துவம் மூலநோய் குறிகுணங்களை 21 வகைகளாக குறிப்பிடுகின்றது. "அனில பித்த தொந்தமாலாது மூலம் வராது" என்கிறது சித்த மருத்துவம். அதாவது சித்த மருத்துவக் கூற்றுப்படி குடலில் சேரும் அதிகப்படியான வாயுவும், சூடும் ஒன்றுகூடி மூலம் சார்ந்த ஆசனவாய் நோய்களை உண்டாக்குகிறது. ஆகவே முதுமையில் மட்டுமின்றி எக்காலத்திலும் வாயுவும், பித்தமும் (சூடும்) குடலில் சேராமல் தடுப்பது மூல நோய் வராமல் தடுப்பதோடு, மூல நோயின் குறிகுணங்களைக் குறைக்க உதவும்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட பலருக்கும் கூட சில நாட்களிலேயே மூலநோயின் குறிகுணங்கள் மீண்டும் உண்டாவதால், இயற்கை தரும் இன்மருந்துகளையும், இயற்கையான வாழ்வியல் நெறிமுறைகளை பின்பற்றுவதும் மட்டுமே நோய்நிலையில் நீடித்த பலன் தரும்.
கடுக்காய், திரிபலை, பிரண்டை, வெங்காயம், துத்தி, சோற்றுக்கற்றாழை, நாயுருவி, நிலாவாரை, குங்கிலியம், தொட்டாற்சிணுங்கி, கருணைக்கிழங்கு போன்ற பல எளிய சித்த மருத்துவ மூலிகைகள் மூல நோயில் உண்டாகும் அழற்சியைக் குறைத்து தருவதாக உள்ளன. அத்துடன் நாக பற்பம், நத்தை பற்பம், சிலாசத்து பற்பம், சங்கு பற்பம், வெள்வங்க பற்பம் ஆகிய தாது சீவக் கலப்புள்ள மருந்துகளும் மூல நோய்க்காக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன.
மூலநோயில் நல்லதொரு பலனை அளிக்கக்கூடியது துத்தி இலை. துத்தி இலையை நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொள்வது மூலநோயில் உள்வீக்கத்தைக் குறைத்து வலியையும், வேதனையையும் போக்கும். பிரண்டையும் மூலநோக்கு நிவாரணம் தரும். பிரண்டையை நெய்யுடன் சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி எடுத்துக்கொள்வதும் நற்பலன் தரும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலை சூரணம் எனும் சித்த மருந்து மலச்சிக்கலைப் போக்குவதுடன் மூலநோயில் வீக்கத்தைக் குறைத்து, ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தி நோய்நிலையைக் குறைக்கும். இதனை மோரில் அல்லது நெய்யில் கலந்து எடுத்துக்கொள்ள மூல நோயின் எரிச்சலைக் குறைத்து புண்ணையும் ஆற்றும்.
தொட்டால்சிணுங்கி மூலிகையும் சித்த மருத்துவத்தில் மூலநோய்க்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்பூறல் எனும் மூலிகை மூலநோயில் ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகை. இதனை 'இம்பூறல் காணாது ரத்தம் கக்கி செத்தான்' என்ற சித்த மருத்துவ பழமொழியால் அறியலாம்.
மூல நோய்க்கு காரணமாகும் வாதத்தையும், பித்தத்தையும் குறைக்க அவ்வப்போது எண்ணெய் குளியல் எடுத்தலும், மலச்சிக்கலைப் போக்கி கொள்வதும் மூல நோயின் குறிகுணங்களுக்கு நிவாரணம் தரும். எளிய வழிமுறையாக ஆமணக்கு எண்ணெயை பாலில் கலந்து இரவு வேளையில் எடுத்துக்கொள்ள வாதம், பித்தம் இரண்டும் குறையும். மூலநோயில் எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை சாற்றுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ள பித்தம் தணிந்து எரிச்சல் குறையும்.
மூல நோயில் உண்டாக்கும் ரத்தப் போக்கினை கட்டுக்குள் கொண்டு வர துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை உணவில் சேர்க்கலாம். வாழைப்பூ, அத்திப்பிஞ்சு, மாதுளைப்பிஞ்சு, பிஞ்சு காய்கறிகள் இவை நல்ல பலனைத் தரும்.
உணவு முறை மாற்றம் மூலநோய் உள்ளவர்களுக்கு மிக மிக அவசியம். ஆகவே மூலநோய் உள்ளவர்கள் குடலில் வாயுவையும், பித்தத்தையும் அதிகரிக்காத உணவு முறைகளை பின்பற்றுவது நல்லது. வாழை, உருளை, பட்டாணி வகைகள் இவை குடலில் வாயுவையும், அசைவ உணவுகள், தேநீர் (டீ), காபி போன்றவை குடலில் பித்தத்தையும் அதிகரித்து நோய்நிலையை அதிகரிக்கும். முக்கியமாக அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதால் மூல நோய் குறிகுணங்கள் அதிகரிப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் உடலின் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும். முக்கியமாக குடலின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். அத்தகைய நார்ச்சத்தினை அதிகம் கொண்ட கருணைக்கிழங்கு மூலநோய் மற்றும் ஆசன வெடிப்பு ஆகிய நோய்நிலைகளில் நற்பலன் தரக்கூடியதால் அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது.
ஆசன வெடிப்பு எனும் நிலையானது உணவில் நார்சத்துகள் பற்றாக்குறையால் உண்டாவதாக உள்ளது. எனவே நார்ச்சத்துள்ள பழங்களையும், பிஞ்சு காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்ப்பது ஆசன வாயில் வெடிப்பு வராமல் தடுக்கும். மலச்சிக்கலையும் போக்கும். நார்சத்தினை அதிகம் கொண்ட கடைசரக்கான வெந்தயத்தை தினசரி எடுத்துக்கொள்வது மூலம் மற்றும் ஆசன வெடிப்பு நிலைகளில் நற்பலன் தரும்.
சித்த மருந்துகளாகிய கடுக்காய் லேகியம், கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம் ஆகிய மருந்துகள் மூலம் (ஆசனவாய்) சார்ந்த நோய்நிலைகளில் நற்பலன் தரும். அதோடு மலச்சிக்கலை தீர்க்க ஆமணக்கு எண்ணெய், நிலாவரை சூரணம், திரிபலை சூரணம், கடுக்காய் சூரணம், சிவதை சூரணம் ஆகிய எளிய சித்த மருந்துகள் பயன் தரும்.
அதிக காரமான மசாலா தோய்ந்த உணவுப் பொருட்களும், அசைவ உணவுகளும், மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் மூல நோயில் வலியையும், எரிச்சலையும் அதிகரித்து மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தும். ஆகவே அத்தகைய உணவு வகைகளையும், பழக்கவழக்கங்களையும் தவிர்ப்பது மூலநோயாளிகளுக்கு நல்லது. மூலநோய் எரிச்சலுக்கு சிறந்த மருந்து 'மோர்' தான். மூலநோயில் எரிச்சல் உள்ளவர்கள் மோரினை அதிகம் பயன்படுத்துவது நல்லது.
மூலநோய் உள்ளவர்கள் உணவில் நெய் சேர்ப்பது குடலில் உண்டாகும் வாதம், பித்தம் இரண்டையும் சமனாக்கும். மூல நோயின் குறிகுணங்களைக் குறைக்க உதவும். மேலும் நெய்யில் ஆன்டி-ஆக்சிடன்ட் வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் கரோடீனாய்டுகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மலம் கழித்த பின் சிட்ஸ் பாத் எடுக்க திரிபலை சூரணம் அல்லது கடுக்காய் சூரணம் பயன்படுத்தலாம். அதாவது ஆறிய வெந்நீரில் சூரணங்களை போட்டு அதில் அமர்ந்து வர மூலநோய் நிலையில் நல்ல முன்னேற்றம் வரும். கடுக்காய் பிஞ்சும், ஆமணக்கு எண்ணெயும் கொண்ட 'மூலக்குடோரி தைலம்' என்ற சித்த மருந்தினை பயன்படுத்துவது மூலநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றது. ஆசனவாய் சார்ந்த நோய்நிலைகளிலும் இந்த மருந்து நல்ல பலனைத் தரக்கூடியது.
சோ.தில்லைவாணன்
குங்கிலிய வெண்ணெய் எனும் சித்த மருந்தும் மூலநோயில் உண்டாகும் எரிச்சலைப் போக்கி சுகம் தரும். இதில் உள்ள குங்கிலியம் எனும் மூலிகைப் பிசின் வீக்கத்தைக் குறைக்கும் செய்கை உடையது. 'குக்குலுஸ்டீரோன்' எனும் வேதிப்பொருள் அதன் வீக்கம் குறைக்கும் செய்கை தன்மைக்கு காரணமாகின்றது. இதனை உள்மருந்தாகவும், வெளி பிரயோகமாகவும் பயன்படுத்தலாம்.
மூல நோய்க்கு அடுத்து ஆசனவாயில் கிருமித் தொற்றினால் உண்டாகும் பவுத்திர நோய் அதிக உபாதைகளை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் மலச்சிக்கலுடன், ஆசன வாயில் இருந்து சீழ் போன்ற நீர் திரவம் அல்லது சீழும், ரத்தமும் கலந்து கசிந்து முதுமையை மேலும் துன்பமாக்கும். நீரிழிவு நோயுள்ள அதிகம் பேருக்கு கிருமித் தொற்று அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.
இயற்கையிலேயே கிருமிநாசினித் தன்மையுள்ள குப்பைமேனி எனும் மூலிகை பவுத்திர நோய் ஆரம்ப நிலையில் நல்ல பலன் அளிப்பதாக உள்ளது. குப்பைமேனி இலைகளை ஆமணக்கு எண்ணெயில் காய்ச்சிய தைலத்தை இரவில் எடுத்துக்கொள்ள நற்பலன் தரும் என்கிறது சித்த மருத்துவம்.
பவுத்திர நோய்க்கு இளைப்பு நோய்க்கான கிருமிகளும் காரணமாக இருப்பதால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ ஆலோசனைப் பெறுவது சிறந்தது. கிருமிக்கொல்லியாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பற்பம், செந்தூர, மெழுகு மருந்துகளை பயன்படுத்துவது இந்நிலையில் பலனளிக்கும்.
முதுமையில் யோகாசனப் பயிற்சி முறைகளான பாலாசனம், பாவன முக்தாசனம், அர்த்த மச்சேந்திர ஆசனம், வஜ்ராசனம், ஜானு சிரசாசனம் ஆகியவற்றை தொடர்ந்து பழகி வருவதன் மூலம் ஆசனவாய் சார்ந்த நோய்நிலைகள் மீண்டும் மீண்டும் வராமல் தடுக்க முடியும்.
மேலும் மலம் கழிக்கும்போது திடீரென வலியில்லாமல் உண்டாகும் ரத்தப்போக்கு என்பது முதுமையில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய குறிகுணமாக உள்ளது. சாதாரண மூலநோயாகத் தான் இருக்கும் என்று ஊகித்து சுயசிகிச்சை மேற்கொள்ளாமல், மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில் மலக்குடலில் உண்டாகும் புற்றுநோயும் ஆசனத்தில் ரத்தப்போக்கினை உண்டாக்கி துன்புறுத்தும். எனவே முதுமையில் குறிகுணங்களை உதாசினப்படுத்தாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறையோடு செயல்படுவது நலத்திற்கு நலம் பயக்கும்.
தொடர்புக்கு:
drthillai.mdsiddha@gmail.com






