search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  குன்றத்துக் குமரனின் சூரசம்ஹாரம்
  X

  குன்றத்துக் குமரனின் சூரசம்ஹாரம்

  • போர்க்கடவுள் முருகப்பெருமான் அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி அசுரனை சூரசம்காரம் செய்தார் என்பது வரலாறு.
  • சுப்பிரமணியர் வடக்கு திசையில் இருந்த திருத்தணிகைக்குச் செல்லும் முன் வடக்கு நோக்கி வந்து இருந்த இத்தலம் தென்தணிகை எனப்படுகிறது.

  தென் தணிகை என்றால் பலருக்கும் தெரியாது. குன்றத்தூர் என்றால் புரியும். குன்று இருக்கும் ஊர் என்பதால் குன்றே பிரதானமாக, அத்தாக இருப்பதால் குன்றத்தூர் என்று பெயர் உண்டானது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும்-வாழுமிடம் என்பதற்கு இசைய இக்குன்றிலும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கோவில் கொண்டிருக்கிற இம்மலைக் கோவிலுக்குதான் தென் தணிகை என்று பெயர்.

  போர்க்கடவுள் முருகப்பெருமான் அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி அசுரனை சூரசம்காரம் செய்தார் என்பது வரலாறு. சூரபத்மன் என்ற அரக்கனுக்கு எதிரான போரில் அவர் சுவாமிமலை, திருத்தணிகை, திருவாவினன்குடி (பழனி), திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் ஆகிய ஆறு இடங்களில் தங்கினார். இந்தத் தலங்கள் ஒவ்வொன்றிலும், திருமுருகாற்றுப்படையில் புகழப்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன. ஆண்டவரின் ஆறு போர் முகாம்கள் "அறுபடை வீடு" எனப்படுகின்றன.

  அதேபோல் தீயவற்றை அழித்து நல்லவற்றைக் காக்க கந்த புராணப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கொண்டார். ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரில் நீரிலும், கண்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்தில் நிலத்திலும், மாயாமலம் கொண்ட தாருகாசுரனை திருப்போரூரில் ஆகாயத்திலும் போர் புரிந்து சம்ஹாரம் செய்தார். சம்காரம் என்றால் தீயவற்றை அழித்து நல்லவற்றை வாழ வைத்தல் என்பதாகும். தாரகாசுரன் என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தன் படையை முன்னெடுத்துச் சென்று அவனுடன் திருப்போரூரில் வானில் இருந்தபடியே கடுமையான போர் செய்து அவனை வென்றார். சூரனை அழித்த பாவம் தீர, திருத்தணிகை செல்லும் முன் சிவ வழிபாடு செய்ய நினைத்தார்.

  சுப்பிரமணியர் திருப்போரூரில் இருந்து திருத்தணிகைக்கு செல்லும் தனது பயணத்தின்போது வழியில் குன்று ஒன்றைக் கண்டார். இயற்கையாய் அழகாய் அமைந்த மலை அவரைக் கவரவே, தவம் செய்ய விரும்பி அங்கு தங்கினார். திருச்செந்தூரில் செய்தது போலவே இங்கும் மலையடிவாரத்தில் பகையின் வலிமையை அழித்து தனக்கு போரின்போது "பற்றுக்கோடாக" துணைநின்ற சிவனின் அருவுருவத்தோற்றமாக சிவலிங்கம் ஒன்றை நிறுவி ஆழ்ந்த தியானம் தவம் முடித்து சிவபூஜை செய்து பயணம் மேற்கொண்டார் என்பது வரலாறு.

  சுப்பிரமணியர் வடக்கு திசையில் இருந்த திருத்தணிகைக்குச் செல்லும் முன் வடக்கு நோக்கி வந்து இருந்த இத்தலம் தென்தணிகை எனப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பழமையான முருகன் தலங்களில் வடக்கு நோக்கியபடி உள்ள திருமணக்கோலத்தில் உள்ள முருகன் கோவில் இதுவாகும், தங்கள் துன்பம் நீக்கிய திருமுருகப்பெருமானை அவரது துணைவிகளுடன் தணிகை போல் தனித்தனி சன்னதிகளில் அல்லாது ஒருசேர காட்சி தந்து அருள் செய்ய வேண்டுமென துன்பம் நீங்கிய தேவர்கள் வேண்டியதால் அங்கே வள்ளி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் வடக்கு நோக்கி நின்றவாறே காட்சி தந்தார். மேலும் மக்களுக்கு அருள் செய்யத் தொடர்ந்து இம்மலையில் துணைவிகளுடன் வித்தியாசமாகக் காட்சி தந்தருள வேண்டுமென தேவர்கள் வேண்டியபடி இன்றுவரை காட்சி தரும் தலம் இத்தென் தணிகையாகும் இக்கோவிலின் கருவறையில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் இருந்து அருளுகிறார். சுப்பிரமணியர் இரு தேவிகளுடன் இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு தேவியுடன் மட்டுமே தரிசிக்க முடியும். முருகனின் ஒருபுறம் பார்த்தால் வள்ளியுடன் தரிசிக்க முடியும், மறுபுறம் நகர்ந்து பார்த்தால் தெய்வயானையுடன் தரிசிக்கலாம்.

  கருவறையைச் சுற்றி உள் பிரகாரம் உள்ளது. முருகப்பெருமான் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகியோர் கோஷ்ட தேவதைகளாக உள்ளனர். இக்கோவிலின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இது 9 முதல் 13-ம் நூற்றாண்டு வரை ஆண்ட சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது. இக்கோவில் 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு, 1726 -ம் ஆண்டில் மதுரை நாயக்கர்களால் மேம்படுத்தப்பட்டது எனவும் சான்றுகள் குறிக்கிறது.

  மலையடிவாரத்தில் 'ஸ்ரீ சரவண பொய்கை' எனப்படும் ஒரு பெரிய குளம் உள்ளது. அடிவார மண்டபத்துடன் கூடிய மலைக்கோவில் அடிவாரத்தில் இருந்து 84 படிகள் உள்ளது. மலையடிவாரத்தில் அசுரனை அழித்த பாவம் நீங்க முருகன் நிறுவி வழிபட்ட கந்தழீசுவரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. புறப்பொருள்திணைகளில் ஒன்றான "கந்தழி" என்பதற்கு "வழிபடும் தெய்வம் பற்றுக்கோடாக துணை நிற்பது" என தொல்காப்பியம் குறிக்கிறது. சூரனை அழிக்க துணை நின்ற ஈசன் கந்தழீசுவரர் என வழிபடப்படுகிறார்.

  முருகன் சூரனை அழிக்கப் புறப்பட்டபோது தாய்மாமன் திருமால் ஆசி வழங்கி அருளவந்து குடி கொண்டுள்ளார். அவ்வாறு ஆசி வழங்க வந்தவர் ஊரிலிருந்து வந்ததால் "ஊரகத்தான்" என்ற பெயரோடு தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளார்.

  அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற இக்கோவிலுக்கு படியேறி மலைமீது செல்லும் வழியில் வலஞ்சுழி விநாயகர் கோவிலும் மலைமீது முன் மண்டபமும் சுமார் 50 அடி உயரம் உடைய மூன்று நிலையுடன் கூடிய ராஜ கோபுரமும் அமைந்துள்ளன. திருச்சுற்றில் விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், பைரவர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, வில்வ மரத்தடி விநாயகர் ஆகியோரின் பிரார்த்தனை பரிவார சந்நிதிகள் பழைமையும் பெருமையும் வாய்ந்தவை. மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. பிள்ளை வரம் வேண்டுவோர் பிரார்த்தனை செய்து கொண்டு பிரார்த்தனை நிறைவேற மரத்தொட்டில் கட்டுகிறார்கள். அரச மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்து குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் அளிக்கிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து மரத்தில் தொட்டில் கட்டி விருப்பங்கள் நிறைவேறி,அவர்கள் கோவிலுக்குத் திரும்பி, குழந்தையின் எடைக்கு சமமான பழங்கள் அல்லது சர்க்கரையை பிரசாதமாக வழங்குகிறார்கள். குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கோவிலுக்குச் சென்று தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து விபூதி பெற்றுச் சென்று பலன் அடைகிறார்கள்.

  சுமார் 50 ஆண்டுகளாக கந்தசஷ்டி விழாவில் மக்கள் விரதமிருந்து முருகனை தரிசனம் செய்து லட்சார்ச்சனையில் பங்கு கொண்டு கந்த சஷ்டியன்று முடிவுபெறும்.

  50 ஆண்டுக்குப்பிறகு சூரசம்காரம் இணைந்த திருவிழாவாக முன்பு நடந்தது போல் மீண்டும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  2023ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை முருகனைப் போற்றும் கந்தசஷ்டி லட்சார்ச்சனை சென்ற ஆண்டுகள் போல் நடைபெறும். 17-ந் தேதி மாலை 6 மணிக்கு மலையடிவரத்தில் இருக்கும் கந்தழீசுவரர் அம்பாள் நகைமுகவல்லியிடம் சென்று முருகப்பெருமான் சக்திவேல் வாங்கி மீண்டும் மலைக்கு எழுந்தருள்வார். 18-ந் தேதி பகல் 12 மணிவரை பக்தர்கள் சத்ரு சம்கார திரிசதி மகாலட்சார்ச்சனை செய்து முருகனை வேண்டிட மலையில் இருந்து முருகன் வில்லேந்திய வேலனாக குதிரை வாகனத்தில் மலையடிவாரத்திற்கு வந்து மாலை சுமார் 4 மணிக்கு சூரசம்காரம் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு சம்காரம் செய்து வேகத்துடனிருக்கும் முருகப்பெருமானுக்கு கீழேயுள்ள கந்தழீசுவரர் கோவிலில் மகாசாந்தி அபிஷேகம் நடந்து சிவபூஜை செய்து கந்தனீச்சுரமுடையார் எனப்பெயர் சூட்டப்பட்டு மலைக்குத் திரும்புவார்.

  19-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து புதியதாக செய்யப்பட்ட தங்க மயில் வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானை எழுந்தருளி அருள் வழங்குவார்கள்.

  இரா.இரகுநாதன்

  குன்றத்தூர் முருகன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. வாகனங்கள் (கார், பைக், ஆட்டோ) 84 படிகள் ஏறி நடக்க முடியாதவர்கள் மலையில் உள்ள கோவிலின் முன்புறம் வரை மலைக்குச் செல்ல வாகனப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

  கோவிலுக்குச் செல்பவர்கள் சென்னை வெளிவட்ட சாலையில் இருந்து விரைவில் கோவிலுக்குச் செல்லலாம். பல்லாவரம் மற்றும் பூந்தமல்லியில் இருந்தும் குன்றத்தூருக்கு நிறைய பஸ்கள் உள்ளன.

  மனிதர்களின் ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் சம்ஹாரம் செய்த குமரக்கடவுளை வழிபட்டால், அவற்றில் இருந்து விடுபட்டு, பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம் என்பது குமார வழிபாட்டுத் தத்துவம்.

  கந்தசஷ்டி சூரசம்கார நிகழ்வுகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்வதால் நம் முன் ஊழ்வினைகள் நீங்கும், பாவங்கள் நீங்கி ஆன்ம சுத்தி கிடைக்கும்.

  Next Story
  ×