என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- பூமியை விட இந்த அட்டாமிக் கடிகாரங்கள் துல்லியமானவை! இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாமும் துல்லியமாகிக்கொண்டு வருகிறோமே!
- டைம் என்பதே மனிதன் உண்டாக்கிய விஷயம்தானே...
பூமியை விட இந்த அட்டாமிக் கடிகாரங்கள் துல்லியமானவை! இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாமும் துல்லியமாகிக்கொண்டு வருகிறோமே!
டைம் என்பதே மனிதன் உண்டாக்கிய விஷயம்தானே...
"அப்படியே வாய தொறந்தா மாதிரி வெச்சுக்குங்க!"
"…………………….."
" இன்னும் ஒரே நிமிடம்தான், அப்படியே……"
" ஸ்ஸ்..ரொம்ப வலிக்குது டாக்டர்! இன்னும் எத்தனை நாழி?"
"ரெண்டு நிமிடம் கூட ஆகலை சார்! என்ன பண்றது, இத்தன பெரிசா கேவிட்டி இருக்கே!"
"வலி உயிர் போறது டாக்டர்! ரெண்டு நிமிடந்தானா ஆச்சு!"
மேற்சொன்ன ஆசாமி அப்படியே பல் பிடுங்கின கையோடு பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரிக்குப்போகிறார்.
ஒரு அரை வீசை அல்லது முக்கால் பலம் எனர்ஜியை பிளாஸ்கில் போட்டு எடுத்து வந்து மேடையில் வீசி விடுகிறார் பாடகி. "கணீர்" ஸ்தாயியில் வராளி ராகத்தில் எடுக்கும்போதே இங்கே கை தட்டல்! கரகரபிரியாவில் விஸ்தாரமாக ராகம், தாளம்.
அதோ! அந்த குழந்தை தவழ்கிறது. கன்னத்தை வழித்து கொஞ்சுகிறார். அந்தக்குழந்தை தடுமாறி நிற்க முயல, கைகளைப்பிடித்து "வா வா" என்று நடை பயில்கிறார். அந்தக்குழந்தை தள்ளாடி தத்தி நடக்கிறது. இரண்டு கைகளையும் கோர்த்து தம்முடனே அழைத்துச்செல்கிறார்கள். இப்போது அந்தக்குழந்தை ஒரே ஓட்டமாய் ஓடுகிறது. பின்னாலேயே ஓடி அதன் வழிக்கு முதலில் விட்டு, லாவகமாய் தம் வழிக்கு இழுத்து உல்லாச பயணம் போகிறார்கள்.
அங்கு மேடையோ பாடகியோ கச்சேரியோ இல்லை. ராகக்குழந்தை பாம்பே ஜெயஸ்ரீயுடன் ஒரு மகா தெய்வ விளையாட்டு நடத்தின ஆயாசத்தோடு கரகரபிரியா முடிவுக்கு வர, ஆடிட்டோரியம் பிளக்கிறது.
"என்னது மணி ஒம்பதரையாச்சா! நேரம் போனதே தெரியல! என்ன சங்கீதம்! "
நான் முதலில் சொன்ன ஆசாமி டெண்டிஸ்டிடம் பல் பிடுங்கிக்கொண்டு பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரி கேட்கப்போனாரே அவருக்கு பல் வைத்தியர் நாற்காலியில் இருந்த அதே நேரமா இங்கே கச்சேரியில் இருந்தது?
இரண்டும் ஒரே நேரத்துளிகள் தானா?

போன வாரம் இவர் டெண்டிஸ்டுடன் செலவிட்ட நேரமும் இன்று பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரியின் நேரமும் ஒரே வாட்ச்சில் இருந்து வந்த நேரம்தானா?
இந்தக்கேள்விகள் கேட்பது நானில்லை, பால் டேவிஸ் என்னும் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி!
"மனித குலத்துக்கான முக்கியமானவற்றின் அனைத்துக்கும் இதயம் போன்றது நேரம்!"
சொன்னது ஆல்பர்ட் ஐன்ஸ்டெயின்.
பான் நகரில் அழுக்கு காரை பெயர்ந்த சுவருடைய லாபரட்டரியில் உங்கள் வீட்டு காஸ் சிலிண்டர் மாதிரியான தோற்றத்தில் இருக்கும் அந்த வஸ்துவை மிக முக்கியமாக கண்காணிக்கிறார்கள். இந்த வஸ்து, ஆச்சரியப்படாதீர்கள், சீஷியம் அணு கடிகாரம்
மானாவாரியாகச்சுற்றி கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் அனுப்பும் 'பீப்'பில் இருந்து, இல்லை இல்லை, நீங்கள் நினைக்கும் 'அந்த' பீப் இல்லை, இது வேற, பாரீசுக்கு அருகில் இன்னொரு கட்டிடத்தில் தலை கலைந்த ஆசாமிகள் சிக்கலாக மெஷீன் எல்லாம் வைத்து ஆராய்ந்து உங்களின் ஆகாசவாணிக்கும் தூர்தர்ஷனுக்கும் சரியான டைமைச்சொல்ல, நீங்கள் அதைப்பார்த்து உங்கள் வாட்ச்சை சரி செய்து கொண்டு ஆபீசுக்கு லேட்டாகப்போகிறீர்கள்.
"என்ன பெரிய ஆபீசுக்கு லேட்டா வந்துட்டம்! உங்க பூமியே அப்பப்போ சுத்தி வரும்போது நேரம் தப்பிடறதே!"
ஆம் உண்மைதான்!
இதையும் செயற்கைக்கோள்கள் சொல்லிவிட, நம் பாரீஸ் ஆசாமிகள் உலகமெங்கும் கடிகாரங்களைச்சரி செய்யச்சொல்கிறார்கள்.
1994-ம் ஆண்டு ஜூன் 30 அன்று இந்த மாதிரி "ஒரு லீப் நொடி" அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணினது உங்களில் வல்லாரை லேகியம் சாப்பிடும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். ஆக பூமியை விட இந்த அட்டாமிக் கடிகாரங்கள் துல்லியமானவை! இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாமும் துல்லியமாகிக்கொண்டு வருகிறோமே!
நான் படிக்கும்போது ஒரு நொடி என்பது ஒரு நாளின் 1/86, 400 என்று படித்திருக்கிறேன். என் இரண்டாவது மகன் அதை ஒத்துக்கொள்ள மாட்டான்.
"சாரிப்பா! அதெல்லாம் அடாசு கணக்கு! இப்ப நொடிங்கறது சீஷிய்ம பேஸ்டு அட்டாமின் 9,192,631,770 துடிப்புக்கள், தெரியுமா!"
பால் டேவிஸ் சும்மா இல்லாமல் சில கேள்விகளை எழுப்புகிறார்..
"அப்ப மேலே சொன்னியே அந்த சிலிண்டர் கடிகாரத்தில், அதான் அட்டாமிக் என்னவோ, அதோட நேரம் என்பது என்ன?
"உங்க டைம் என் டைம் என்பது?"
"நாம் அறியாத இன்னொரு கிரகத்தில் வாழும் உயிரினங்கள் நம்மைப்போலவோ அல்லது இன்னமும் துல்லியமாக வேறு ஏதாவது நேரக்கணக்குகள் வைத்திருப்பார்களோ?"
அப்ப எதுக்காக அந்த அடாமிக் கடிகாரத்தை வைத்து நம் கடிகாரங்களைச்சரி செய்கிறோம்?
துல்லியமான நேரம் தேவைப்படுகிறது!
எதற்கு துல்லியமான நேரம்! அப்படி ஒன்று இருக்கிறதா?
சரி, நேரம் என்பதே மனித குலத்திற்காகத்தானா?

அப்ப நாம் ஏன் பூமியின் நகர்வைக்கணக்கிட்டுக்கொண்டிருக்கிறோம்! அது எக்கேடு கெட்டுப்போனால் என்ன, நாம் பாட்டுக்கு கோலமாவு கோகிலா சினிமாவுக்கு அரை மணி முன்னாலோ அல்லது நயன்தாரா திரையில் தோன்றிய பின்னரோ போனால் என்ன குடி முழுகிவிடும்!
இதற்கெல்லாம் விடை என்னிடம் இல்லை!
"ஐன்ஸ்டெயினின் ரிலேட்டிவிடி தியரி முழுமையானது இல்லை"என்று சொன்ன கையோடு பால் டேவிஸ் இன்னொரு குண்டைத்தூக்கிப்போடுகிறார்.
"பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பே டைம் என்று ஒன்று இருந்ததாக எண்ணிவிடக்கூடாது. டைம் என்பதே மனிதன் உண்டாக்கிய விஷயம்தானே!"
அடுத்த முறை அமெரிக்கா போகும்போது அரிசோனா பக்கமே போகக்கூடாது என்றிருக்கிறேன்!
- தைலத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் சகலவித தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.
- ஆண்டுக்கு ஒரு தடவை கிடைக்கும் வாய்ப்பு என்பதால் இது சிறப்பானதாக கருதப்படுகிறது.
திருவொற்றியூர் தியாகேசர் சிவாலயம் ஏராளமான தனி சிறப்புகளைக் கொண்டது.
முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா வழிபட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்பக் கோள வடிவத்திலிருந்து திருவொற்றியூரில் மகிழ மரத்தடியில் சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது.
பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர்" என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் அதாவது சுயம்பு லிங்கத்தில் இன்றும் காணலாம்.
ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் வரி விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இங்கு சிவபெருமானை வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன.
இது நந்தி தேவருக்காக சிவபெருமான் பத்ம தாண்டவம் ஆடிய தலம். திருவொற்றியூரில் வசித்த ஏலேல சிங்கர் என்பவர் மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயம் காசியில் இருந்து வந்த சிவ பக்தர்கள் இருவருக்கு அந்த மாணிக்கத்தை கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது சிவபெருமானே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர் மாணிக்கத் தியாகர் என்று அழைக்கப்படுகிறார்.
சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார்.
'வட்டப்பாறை அம்மன் ' (காளி) ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.
பட்டினத்துப் பெருமானுக்குப் பேய்க் கரும்பு இனித்த இடம் இது ஆகும். ஆதலின் தனக்குரிய இடம் இதுவே என்று முடிவு செய்து கடற்கரையொட்டிய இவ்விடத்தில் சமாதியா னார் என்பது வரலாறு.
நாக வடிவில் அமைந்துள்ள சிவலிங்கத் திருமேனி. சிவலிங்கமும், ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன. சதுர வடிவமான கவசம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் இக்கவசம் அகற்றப்பட்டு புனுகுசட்டம், சவ்வாது, சாம்பிராணித் தைலம் ஆகியவை மட்டுமே சார்த்தப்படுகிறது. இந்நாள் முதலாக மூன்று நாள்களுக்கு மட்டுமே சுவாமி, கவசம் இல்லாதிருப்பார்.
தேவாதி தேவர்கள் திருவொற்றியூர் இறைவனுக்கு பூஜை செய்ய ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் திருவொற்றியூர் வருவதாக வரலாறு. அதனால் ஆண்டு தோறும் கார்த்திகை பவுர்ணமியில் மாலை 6 மணியளவில் படம்பக்கநாதரின் மேல் அணிவிக்கப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடை பெறுகிறது. இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இப்பூஜை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
நாளை மாலை 6 மணிக்கு மூலவர் கவசம் அகற்றப்படும். ஒரு மணி நேரம் சுயம்பு லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிறகு 7 மணி முதல் சுயம்பு சிவலிங்கத்தை பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள். இரவு 9 மணி வரை வழிபடலாம். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுயம்புலிங்கத்தை பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள். அதுபோல 28-ந்தேதியும் (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கவசம் இல்லாமல் ஆதிபுரீஸ்வரரை பக்தர்கள் வழிபட முடியும்.
இந்த சுயம்பு சிவலிங்கம் நாக வடிவத்தில் உள்ளது. 3 தலை பாம்பு இருப்பது போல அந்த சுயம்பு லிங்கம் அமைந்திருக்கும். கடல் அலை திரண்டு வருவது போலவும் காட்சி அளிக்கும். இதை வழிபடுவது மிக மிக சிறப்பானது.
சிறப்புமிக்க இந்த சுயம்பு சிவலிங்கத்துக்கு பக்தர்கள் தைல காப்புக்கு உதவலாம். இதற்கான தைலம் ஆலய வளாகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. நாம் வாங்கி கொடுத்துவிட்டால் தைலம் சாத்தும்போது அதை அர்ச்சகர்கள் பயன்படுத்தி கொள்வார்கள்.
இந்த சுயம்பு சிவலிங்கம் 4 யுகங்களுக்கு முன்பு தோன்றியதாக வரலாறு உள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதற்கு சான்றுகள் உள்ளன. மூவர் பாடிய இந்த தலத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கவசம் இல்லாத மூலவரான சுயம்பு சிவலிங்கத்தை தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியமாகும்.
இந்த பாக்கியத்தை பெற ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவொற்றியூர் சிவாலயத்தில் திரள்வது உண்டு. இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் எளிதாக வழிபடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படும்.
வரிசையில் நின்று வரும் பக்தர்கள் கவசம் இல்லாத சுயம்பு சிவலிங்கத்தை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிடைக்கலாம். ஆண்டுக்கு ஒரு தடவை கிடைக்கும் வாய்ப்பு என்பதால் இது சிறப்பானதாக கருதப்படுகிறது.
திருவொற்றியூர் சிவாலயத்தில் தினமும் 4 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. 8 மணிக்கு காலசாந்தியும், மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். வழக்கம்போல இந்த 4 கால பூஜைகள் நடந்து கொண்டே பக்தர்கள் கவசம் இல்லாத சுயம்பு சிவலிங்கத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பூஜையில் ஈசனுக்கு சாற்றப்பட்ட ஜவ்வாது, புணுகு சாம்பிராணி (தைலம்) பக்தர்களுக்கு வழங்கப்படும். தைலத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் சகலவித தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். எனவே நாளை கார்த்திகை பவுர்ணமியில் இறைவனை புற்றுவடிவமாக இருப்பதை கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாள் தரிசனத்துக்கு பிறகு மூலவர் சுயம்பு சிவலிங்கம் மீண்டும் கவசம் சார்த்தப்பட்டு விடும். அதன் பிறகு ஆண்டு முழுவதும் சுவாமி கவசத்துடனேயே காட்சியளிப்பார். அபிஷே கங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடைபெறும்.
பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 19-வது தலமாக திருவொற்றியூர் இருக்கிறது. திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற 27 நட்சத்தி ரங்களின் பெயரில் இத்தலத்தில் அமைந்துள்ள சிவலிங்கங்களில் தங்கள் நட்சத்திரத்துக்கு உரிய சிவலிங்கத்தை வழிபாடு செய்வதன் மூலம் பலன் பெறலாம்.
இவ்வாலயம், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையி லும், பௌர்ணமி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாளில் மேலூருக்கு காலை வேளையில் சென்று இச்சா சக்தியான திருவுடையம்மனையும், பகல் வேளையில் திருவொற்றியூரில் உள்ள ஞான சக்தியான வடிவுடையம்மனையும், மாலை வேளையில் திருமுல்லைவாயில் சென்று கிரியா சக்தியான கொடியிடையம்மனையும் தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வாறு ஒரே நாளில் தரிசனம் செய்வோர், இப்பிறவிலேயே சகல நலன்களும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.
- ஒவ்வொரு மனிதனும் உணர்ச்சிகளின் குவியலாகவே இருக்கிறான்.
- கோபமும் ஒரு கட்டுக்குள் அடங்கிவிடக் கூடியதாக இருக்க வேண்டும்.
கோபத்தைக் குணமாக்கும் வித்தக வாசகர்களே! வணக்கம்.
"எனக்கு வருகிற கோபத்திற்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது!"
என்று அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல மனிதர்கள் அடிக்கடி கூறக் கேட்டிருப்போம்; ஏன் நாமே கூட இந்த வசனத்தை அடிக்கடியோ அல்லது அவ்வப்போதோ கூறுபவர்களாகவும் இருந்து கொண்டிருப்போம்.
ஒவ்வொரு மனிதனும் உணர்ச்சிகளின் குவியலாகவே இருக்கிறான். ஆனால், அவன் தனக்குள் அவ்வப்போது உருவாகும் உணர்ச்சிப் பெருக்குகளை எவ்வாறு திறம்படக் கையாண்டு மீடேறுகிறான் என்பதைப் பொறுத்தே அவன் போற்றுதலுக்குரிய மனிதனாக மதிக்கப் படுகிறான்.
அன்பு, கருணை, இரக்கம், மகிழ்ச்சி, கோபம், அழுகை, துணிச்சல், பரபரப்பு, சலிப்பு, சகிப்புத்தன்மை போன்றவை மனித மனங்களின் உணர்வுநிலைகள், அவை அவ்வப்போது மனிதர்களின் வாழ்நிலைச் சூழலுக்கேற்ப அவர்களுக்குள் தோன்றி அவர்களைப் பலவகை குணம் சார்ந்த மனிதர்களாக மாற்றுகின்றன. மனிதர்களில் சிலரைநாம் அன்பானவர், பொறுமைசாலி, அகிம்சாவாதி, கருணையானவர், கோபக்காரர், அழுமூஞ்சி என்றெல்லாம் அடையாளப்படுத்தி அழைப்பதற்கு இந்த உணர்ச்சி மேலீடுகளே காரணம்.
மனித மனங்களுக்குள் எத்தனை விதமான உணர்ச்சிகள் தோன்றி மறைந்தாலும், ஒட்டுமொத்த மனித குலமும் வெறுக்கின்ற ஒரு உணர்ச்சி "கோபம்" மட்டுமே!. கோபம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே வரும் என்பதில்லை!; எறும்பு தொடங்கி யானை வரை உலகில் உள்ள சகல உயிரினங்களுக்கும் கோபம் வரத்தான் செய்கிறது. அதுமட்டுமா? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களின் அடக்கமாகிய இயற்கைக்கும் கூடச் சீற்றம் எனும் கோபம் தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.
ஐம்பூதங்களின் கூட்டாகிய இயற்கையின் கோபத்தையும், ஐந்தறிவு உயிர்களாகிய பிற ஜீவராசிகளின் கோபத்தையும் ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, இவற்றையெல்லாம் அடக்கியாளும் ஆற்றல் படைத்த ஆறறிவு உயிர்களாகிய மனிதர்களுக்கு வருகிற கோபம் குறித்தே இங்கு பார்ப்போம்.
'கறை நல்லது' என்று சோப்பு விளம்பரங்களில் வருவதைப்போலவே மனிதனுக்குக் கோபம் வருவதும் ஒருவகையில் நல்லது என்றே உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்தக் கோபமும் ஒரு கட்டுக்குள் அடங்கிவிடக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் அந்த வித்தகம் தெரியாமல்தான் மனித குலம் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன். அவனுக்கு வருகிற எல்லா உணர்ச்சிகளுமே அவன் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே அவனிடத்தில் தோன்றி விடுகின்றன. ஆயினும் சிந்தனையெனும் அறிவின் வீரியம் கொண்டு, கோபம் தவிர்ந்த மற்ற உணர்ச்சிகளை அவன் உடனே கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடிகிறது; வந்த பிறகு கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறித் தவித்து, அவன் நிறைந்த பாதிப்புகளுக்கு ஆளாவது கோபத்தினால் மட்டுமே!. அதனால்தான் திருவள்ளுவரும்,'சினமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி' என எச்சரிக்கிறார்.
மனிதனுக்குக் கோபம் அவனது அகம், புறம் எனும் இருவகைச் சூழ்நிலைகளாலும் உருவாகிறது. அன்றாடம் வாழ்வியல் சிக்கல்கள் தருகிற மன அழுத்தங்கள் அவனுக்கு எதைப் பார்த்தாலும், எது நிகழ்ந்தாலும் ஒரு வித எரிச்சலைத் தருவதாக அமைந்து விடுகிறது; எரிச்சல் திடீர் கோபத்திற்குக் காரணமாகி விடுகிறது. இது மனிதனின் அகம் சார்ந்த பிரச்சினை. இதனை மாற்றுவதற்கு மனத்தில் அழுத்தமும் பரபரப்பும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
என்ன நடந்தாலும், அது நம்மால் மட்டுமே நடந்தது என்று மகிழவோ! அல்லது வருந்தவோ கூடாது. ஏனெனில் எந்த நிகழ்வும் தனிமனித முயற்சியினால் மட்டும் நடந்து விடுவதில்லை. காலம், இடம், சூழல் எனப் பல காரணிகளும் அவற்றோடு பின்னிப் பிணைந்துள்ளன. நாம் செய்கிற நிகழ்வுகளை முயன்று பொறுமையோடு செய்ய வேண்டும். பிறகு அதன் முடிவுகளை அதன் போக்கிலேயே போக விட்டு ஏற்றுக் கொள்ளவும் திருத்திக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதிக எதிர்பார்ப்பும், ஆசையும் ஏமாற்றத்திலும் கோபத்திலுமே முடிகின்றன.
மனிதர்களும் நிகழ்வுகளும் நாம் எதிர்பார்த்தபடி எப்போதும் ஒரே மாதிரியே செயல்பட மாட்டார்கள். நாம் தான் நிகழ்வுகளுக்கேற்ப நம்மைத் தளர்த்திக் கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். சில குடும்பங்களில் கணவனுக்கு மனைவியைப் பார்த்தாலும், மனைவிக்குக் கணவனைப் பார்த்தாலும், பெற்றோர்களுக்குப் பிள்ளைகளைப் பார்த்தலுமே கோபம் வந்து விடுகிறது. வீட்டுக்குள்ளேயே இப்படி என்றால் வெளியில் சொல்லவும் வேண்டுமோ?.

சுந்தர ஆவுடையப்பன்
புற நிலையில், வீட்டைவிட்டு வெளியில் வந்தாலே சிலருக்கு யாரைப் பார்த்தாலும் கோபம் வருகிறது. அலுவலகத்தில் பணியாற்றும் சில குறிப்பிட்ட பணியாளர்களைப் பார்த்தால் உடனே கோபம் வந்து விடுகிறது. அவர்கள் எப்போதோ ஒருமுறை இழைத்த தவறுக்காக எப்போதும் கோபப்பட்டால் எப்படி?. சிலருக்கு போக்குவரத்து நெருக்கடிகளைப் பார்த்தால் உடனே கோபம் வந்துவிடும்; இரத்த அழுத்தம் ஏற, வாய்க்கு வந்தபடித் திட்டத் தொடங்கி விடுவார்கள்.
ஓர் அரசன். கொஞ்சம் ஆணவம் மிக்கவன். அவனைப்பார்த்து ஓர் உதவி கேட்பதற்காக ஒரு துறவி அரண்மனைக்கு வந்தார். அரண்மனை தர்பார் மண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த படியே துறவியைப் பார்த்து, "வாருங்கள் எருமையாரே!" என்று வரவேற்றான் அரசன். துறவியும் மலர்ந்த முகத்தோடு "வருகிறேன் கடவுளாரே!" என்று மறுமொழி பகர்ந்தான்.
துறவியாரின் கண்ணியமான பதிலுரை கேட்டவுடன், மரியாதையுடன் சிம்மாசனத்திலிருந்து இறங்கித் துறவிமுன் வந்து நின்ற அரசன், "துறவியாரே! நான் தங்களை எருமை என்று அழைத்தும்கூட நீங்கள் கோபப்படாமல், என்னைக் கடவுள் என்று கூறியதன் காரணம் என்ன?" என்று கேட்டான்.
புன்னகைத்தவாறே துறவி பதில் சொன்னார், "அரசே! எவரெவர் மனத்தில் "என்னென்ன இருக்கிறதோ அதுதான் வார்த்தையாக வரும். உங்கள் மனத்தில் என்ன இருக்கிறதோ அதைச் சொல்லி நீங்கள் என்னை வரவேற்றீர்கள். என் மனத்தில் என்ன இருந்ததோ அதைச்சொல்லி நான் உங்களை அழைத்தேன்". இப்போதும் பாருங்கள்! கோபம் துளியும் கலவாத துறவியின் வார்த்தைகளை!.
உடனே அரசன் நெடுஞ்சான் கிடையாகத் துறவியின் காலடிகளில் விழுந்து தனது தவறுக்கு வருந்தினான்.
பொதுவாகக் கோபம் என்பது முற்றும் துறந்த முனிவர்களுக்கே அதிகம் வருமெனப் புராணங்கள் கூறுகின்றன. முனிதல் என்றால் வெறுத்தல் என்றும் சினம்கொள்ளுதல் என்றும் பொருள். முனிவர்கள் உலக ஆசாபாசங்களை வெறுத்து ஒதுக்கியவர்கள்; அதே நேரத்தில் பொருந்தாத செயல்களைக் கண்டால் உடனே கோபம் கொண்டு சபித்து விடவும் செய்வார்கள்.
அப்படிப்பார்க்கும் போது குணம் என்னும் குன்று ஏறி நிற்கின்ற குணவான்களுக்கே கோபம் படக்கென்று வந்து விடும் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் வந்த கோபம் கனப்பொழுதில் மறைந்தும் விடுமாம்.
மனிதர்களுக்கு வருகிற கோபங்களைப் பல வகைகளில் பகுக்கலாம். பொது நலம் சார்ந்து வருகிற கோபங்களை நாம் ஆக்க பூர்வமானவை என்று கூறலாம்; இவற்றால் கோபப்படுவோருக்கோ சமுதாயத்திற்கோ எந்தத் தீமையும் வராது. சமூகத்தில், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் போன்ற பல கவிஞர்கள் மற்றும் ஆன்மிக, சமுதாயச் சீர்திருத்த வாதிகளின் கோபங்கள் நன்மைகளையே விளைவித்திருக்கின்றன. தன்னலம் சார்ந்த நிலைகளில் வருகின்ற தன்முனைப்புக் கோபங்களே கொள்பவர்களையும் கொல்பவைகளாக இருக்கின்றன.
மகாத்மா காந்தியடிகள் ஒருமுறை வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்குக் கப்பலில் பயணமானார். இப்போது வான்வழியே பயணம் வந்துவிட்டது; பத்து மணிநேரத்தில் சென்று விடலாம். அப்போதெல்லாம் பயணம் இரண்டு வாரங்களுக்கு மேலாகும். காந்தியடிகள் எங்கு பயணம் செய்தாலும் தன்னுடைய கைராட்டையையும் கையோடு எடுத்துச் செல்வது வழக்கம். பயண நாள்களில், கப்பலின் மேல்பகுதிக்கு வந்து ஓரிடத்தில் அமர்ந்து கைராட்டையில் நூல் நூற்றார்.
லண்டனுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த சக பயணிகளுக்கு இவர் காந்தி என்பதும், இந்திய விடுதலைக்காகப் பாடுபடும் தலைவர் என்பதும் தெரியும். இவரது புன்னகை முகமும் எளிய ஆடையும் உடன் பயணித்த பல வெள்ளையரை வசீகரித்தாலும், ஒரு வெள்ளை இளைஞனுக்கு மட்டும் இவரைப் பார்த்தாலே கோபம் பொத்துக்கொண்டு வந்தது; எரிச்சல்
எரிச்சலாக இருந்தது. இரவு முழுவதும் கப்பலில் தனது அறையில் அமர்ந்து, தனது மனத்தில் தோன்றிய கெட்ட வார்த்தைகளையெல்லாம் போட்டுக் கத்தை கத்தையாகத் தாள்களில் திட்டிஎழுதி, மறுநாள் காலை கப்பலின் மேல்பகுதிக்கு வந்து, ராட்டை நூற்றுக்கொண்டிருந்த காந்தியடிகளின் கரங்களில் திணித்துவிட்டுச் செல்வான். ஒவ்வொரு நாளும் மலர்ந்த புன்னகையோடு அவன்தரும் தாள்களை வாங்கி கொள்வார் காந்தி.
கப்பல் லண்டனை அடையப்போகிற நாளுக்கு முதல் நாள்; அப்போதும் ஒரு கத்தைத் தாள்களோடு வந்து நின்றான் வெள்ளை இளைஞன். அவன் தருவதற்கு முன்பாகவே சிரித்த முகத்தோடு கரங்களை நீட்டினார் காந்திஜி. அவன் தரவில்லை; மாறாகப் பேசினான்;" இத்தனை நாட்களாக உங்களைக் கண்டபடித் திட்டித் தாள்களைத் தந்தேனே! படித்தீர்களா? உங்களுக்கு என்மீது கோபமே வரவில்லையா?; நாளுக்குநாள் புன்னகையும் அன்பும் பெருகியபடி என்னைப் பார்த்தீர்களே?" கேட்டான்.
காந்தியடிகள் சொன்னார்," எனக்கு உதவி செய்பவர்கள் மீது நான் எப்போதும் கோபம் கொள்வதே இல்லை. எங்குமே வெளியே சென்று பொருள்கள் வாங்க முடியாத இந்தக் கப்பலில் நாள்தோறும் எனக்குக் கத்தை கத்தையாகத் தாள்கள் கிடக்கின்றன. அதிலும் ஒருபக்கமே நீங்கள் எழுதியிருப்பதால், மறுபக்கங்களில் எனது குறிப்புகளை எழுத நான் பயன்படுத்திக் கொள்கிறேன். மேலும் இந்தத் தாள்களை ஓர் அழகான குண்டூசியில் இணைத்துவேறு தருகிறீர்கள். ஒரு நாளைக்கு ஒரு குண்டூசி லாபம். உதவி செய்யும் உங்களைக் கோபித்துக் கொள்ளவே மாட்டேன்".
தவறுக்கு வருந்து தன்கோபம் அழித்தான் அந்த வெள்ளை இளைஞன்.
கோபம் என்பது ஒருநிமிடப் பைத்தியக் காரத்தனம். வந்த நொடிகளில் அதனை மட்டுப்படுத்தத் தவறிவிட்டால் அது தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், பொருள்கள், செயல்கள் மட்டுமல்ல…தன்னையே அழித்துக்கொள்ளவும் தூண்டும் கொடுமையானது.
மனத் தூய்மை, மகிழ்ச்சியில் ஆழும் தன்மை, எல்லா உயிரினங்களுக்குள்ளும் தன்னையே காணும் தன்மை, செயல்களில் பொதுநலம் காணும் புதுமை, சகித்துக் கொள்ளும் சமத்துவப் பாங்கு, எட்ட நின்று காத்திருக்கும் பொறுமை.. இவை போதும் கோபத்தைக் குணமாக மாற்ற!.
எந்த மாற்றமும் ஒரு நாளில் நிகழ்ந்து விடாது. கோபத்தைப் பழக்கிப் பழக்கிப் பண்படுத்தினால் குணமே கோபுர மாகும்!
தொடர்புக்கு 9443190098
- சிவாலயங்களில் வலது பக்கம் அம்பிகை சன்னதி அமைந்திருந்தால் அந்த ஆலயம் திருமண கோலத்தில் உள்ள தலமாக கருதப்படும்.
- அறியாமல் செய்த பாவம் நீங்க இதற்கு உப்பு மற்றும் மிளகிட்டு வணங்குகின்றனர்.
காவிரிக் கரையில் அமைந்துள்ள தலங்களில் ஆறு சிவ தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்ததாக உள்ள இந்த கோவில் நீண்ட 3 பிரகாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையிலும் சிறப்புடையது திருவிடைமருதூர். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதின பரிபாலனத்தில் விளங்குகிறது.
கும்பகோணத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது. கும்பகோணம் ஆலயங்களை தரிசிக்க செல்பவர்கள் மிக எளிதாக இந்த ஆலயத்துக்கு சென்று வரலாம். இத்தலம் 'மத்தியார்கள் சேத்திரம்' என்று போற்றப்படுகிறது. மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலம்.
"திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு, திருவிடை மருதூர் தெருவழகு" என்று கூறுவது வழக்கம். அதற்கிணங்க இங்கு தெருக்களின் அமைப்பு சிறப்பான ஒன்றாகும்.
இத்தலத்தில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீமகாலிங்கப் பெருமான் ஆவார். அம்மையார் பெயர் பெருநலமா முல்லையம்மை. திருவிடைமருதூர் ஆலயத்தில் மகாலிங்க சுவாமியை வழிபாடு செய்து உமா, விநாயகர், முருகர், திருமால், லட்சுமி, சரஸ்வதி, வசிஷ்ட முனிவர், அகத்திய முனிவர், பத்ரகிரியார், ரோமரிஷி, கபில முனிவர், மார்கண்டிய ரிஷி, பட்டினத்தார், சிவவாக்கிய சித்தர், கருவூர் தேவர், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர், பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் உள்பட ஏராளமானோர் பலன் பெற்றுள்ளனர். திருவிடைமருதூருக்கு செண்பகராண்யம், சக்திபுரம், தபோவனம், முக்திபுரம் ஆகிய பெயர்கள் உண்டு. மருத மரத்தை தல விருட்சகமாக கொண்ட 3 தலங்களில் இந்த தலம் நடுவில் அமைந்து இருப்பதால் இடைமருதூர் என்ற பெயர் ஏற்பட்டது.
இத்தலத்தில் அகத்தீஸ்யர் லிங்கம், காஸ்யபர் லிங்கம், சோழலிங்கம், சேர லிங்கம், பாண்டிய லிங்கம், சகஸ்சர லிங்கம், பஞ்ச பூத லிங்கங்கள் என்று திரும்பிய திசையெல்லாம் லிங்க மயமாக காட்சி அளிக்கிறது. ஆலயத்துக்குள் 30-க்கும் மேற்பட்ட லிங்கங்கள் உள்ளன.
இந்த தலத்தில் லிங்கங்களுக்கு அடுத்தப்படியாக விநாயகர் சிலைகளும் அதிகப்படியாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள பெரிய தேர்களில் இந்த தலத்து தேரும் ஒன்று. இங்குள்ள தேர் 89 அடி உயரம் கொண்டது. இத்தலத்தின் கொடி மரம் 24 அடி உயரம் கொண்டது.
சிவாலயங்களில் வலது பக்கம் அம்பிகை சன்னதி அமைந்திருந்தால் அந்த ஆலயம் திருமண கோலத்தில் உள்ள தலமாக கருதப்படும். அந்த வகையில் திருவிடைமருதூர் தலம் திருமண கோல தலமாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள காரிய சித்தி தலங்களில் மனநோய் நீக்கும் தலமாக திருவிடைமருதூர் தலம் கருதப்படுகிறது. விபண்டக முனிவர் முன் தோன்றிய சிவபெருமானிடம் வருடந்தோறும் தைப்பூச நாளன்று காவிரிக் கரையில் உள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடியவர்கள் பாவம் நீங்கி இன்புற்று வாழ வேண்டும் என்று விபண்டக முனிவர் வேண்டினார். இறைவனும் அவ்வாறே ஆகுக! என்று வரம் அருளினார்.
தஞ்சை மாவட்ட ஆலயங்களில் திருவிடை மருதூர் ஆலயத்துக்குதான் அதிக பாடல்கள் கொண்ட தலபுராணம் உள்ளது. இந்த ஆலயம் பற்றி ஞானக்கூத்த சிவபிரகாச தேசிகர் என்பவர் மூவாயிரம் பாடல்கள் தலபுராணமாக பாடியுள்ளார்.
சிவபெருமானின் 64 வடிவங்களுள் ராவண அனுக்கிரக மூர்த்தி அமைந்துள்ள திருத்தலம் திருவிடை மருதூர் மட்டுமே. தஞ்சை மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான பாடல்களை பெற்ற தலங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று திருவையாறு, மற்றொன்று திருவிடை மருதூர்.

தஞ்சை மாவட்டத்தில் 4 திசைகளிலும் நான்கு கோபுரங்கள் அமையப்பெற்ற தலங்கள் இரண்டு. ஒன்று கும்பகோண கும்பேஸ்வரர் கோவில். மற்றொன்று திருவிடை மருதூர். சோழ நாட்டில் காவிரித் தென்கரையில் இருக்கும் 128 தலங்களுள், இத்தலம் முப்பதாவதாகப் போற்றப்படுகிறது. திருவிடைமருதூரில் தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன.
வைகாசி வசந்த விழா, அறுபத்து மூவர் விழா, நவராத்திரி விழா, மார்கழித் திருவாதிரை விழா, தைப்பூசத் திருவிழாவின் போது சுவாமி காவிரிக்கு எழுந்து அருளி ஐராவணத் துறையில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூஜை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூஜை நடைபெறும். இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு பிரமஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும். பத்திர கிரியார் முத்தி பெற்ற திருத்தலம். இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் உள்ளன. இங்குள்ள நவக்கிரக விக்கிரகங்கள் பிற கோவில்களில் இருந்து வேறுபட்டதாக இடம் மாறி அமைந்துள்ளது
லிங்கவடிவ நட்சத்திரங்கள்
சந்திரன், குருவான பிரகஸ்பதியின் மனைவி மீது ஆசை கொண்டதால் தோஷத்திற்கு ஆளானான். தோஷம் நீங்க, சிவனை வேண்டி தவமிருந்தான். இரங்கிய சிவன் விமோசனம் அளித்தார். சந்திரன் வந்தபோது அவனது மனைவியர்களான 27 நட்சத்தி ரங்களும் வந்தன. சந்திரனுக்கு அருளிய சிவன், நட்சத்திரங்களுக்கும் அருள்புரிந்தார். இங்கு தோன்றிய 27லிங்கங்களில் அவை ஐக்கியமாகின. இந்த லிங்கங்கள் ஒரே சந்நிதியில் உள்ளன. அவரவர் பிறந்த நட்சத்திர லிங்கத்தில் விளக்கேற்றி வழிபடலாம். சந்திரனின் தோஷம் நீங்கியதால் திருவிடைமருதூர் தலத்துக்கு "சந்திர தலம்" என்ற சிறப்பும் உண்டு.
பாவம் நீங்க வழிபாடு
வரகுணபாண்டிய மன்னன் அறியாமல் செய்த கொலைக்காக, பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டான். விமோசனத்திற்காக இத்தலம் வந்து மகாலிங்கசுவாமியை வழிபட்டான். சிவன் அவனைப் பற்றியிருந்த பிரம்ம ஹத்தியை அகற்றினார். இந்த பிரம்மஹத்திக்கு, சிவன் சந்நிதியில் இரண்டாம் கோபுரத்தில் சிலை உள்ளது. அறியாமல் செய்த பாவம் நீங்க இதற்கு உப்பு மற்றும் மிளகிட்டு வணங்குகின்றனர்.
அன்பிற்பிரியாள்
சம்பந்தர் இங்கு வந்தபோது, வழியெல்லாம் சிவலிங்கமாகத் தோன்றியது. எனவே தரையில் கால் பதிக்க அவர் அஞ்சினார். அப்போது, சிவன் அம்பிகையை அனுப்பினார்.
அவள், சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தாள். இவளே பிரகாரத்தில் மருதவாணருடன் (சிவன்), கைலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை "அன்பிற்பிரியாள்' என அழைக்கின்றனர்.
தட்சிணாமூர்த்தி இங்கு அம்பிகையுடன் காட்சி தருகிறார். இவருக்கு "சாம்ப தட்சிணா மூர்த்தி' என்று பெயர். மகாலிங்கசுவாமி சந்நிதியின் முன் மண்டபத்தில் சுதை சிற்பமாக விளங்குகிறார். மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகை, தோஷம் நீங்க இங்கு சிவனை வழிபட்டாள். சிவன் விமோசனம் அளித்ததோடு, திருமணம் செய்து கொண்டார். வைகாசி உத்திரத்தன்று இத்திரு மணம் நடக்கும். கிழக்கு கோபுரத்தின் கீழ் பட்டினத்தாருக்கும், மேற்கு கோபுரத்தின் கீழ் அவரது சீடர்பத்திர கிரியாருக்கும் சந்நிதி உள்ளது.
போன வழியே திரும்பக்கூடாத கோவில்
மற்ற கோவில்களில் சென்ற வழியே திரும்புவது தான் வழக்கம். திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வேறு வாசல் வழியே திரும்ப வேண்டும். எதற்காக? இங்கு எந்த வழியில் சென்றோமோ, அதே வழியில் திரும்பக் கூடாது என்பது நியதி.
ஏதேனும் பீடை மனித னுக்கு இருந்தால், அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும். கோவிலை விட்டு வெளியேறும் போது தொற்றிக் கொள்ளும். வேறு வாசல் வழியாக வந்தால் பிடிக்காது. எனவே இந்த தலத்தில் சிவன் சந்நிதி எதிரில் உள்ள கோபுரம் வழியாக நுழைந்து முதலில் படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்பாள் சந்நிதிகளுக்குச் சென்று, பின்பு மூகாம்பிகையை தரிசித்து முடிக்க வேண்டும். வேறு வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தல மகிமையைச் சொல்ல, ஆனந்த கண்ணீர் வடித்தாள். அதுவே குளமாக உருவெடுத்தது. இது காருண்ய (கருணை) தீர்த்தம் எனப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோவிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமருதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள்.
இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடை மருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.வேறு எங்கும் இல்லை. தனி சன்னதி இங்கு மட்டுமே. இக்கோவிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்கு பக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோவிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது. இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இங்கு வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்.
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் தோஷங்களை விரட்டுவதற்காக தினமும் காலை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக தேவேந்தி ரன் நந்தி அமைந்துள்ள பகுதிக்கும், பிரம்மகத்தி சன்னதிக்கு இடையேயும் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமர சிறு பலகைகள் போட்டு இந்த பூஜை நடத்துகிறார்கள்.
தினமும் காலை 7 மணி, 8 மணி, 9 மணி என மூன்று தடவையாக தோஷ நிவர்த்தி பூஜை நடத்தப்படுகிறது. தினமும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தோஷ நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். சிறப்பு மற்றும் பண்டிகை நாட்களில் இந்த தோஷ நிவர்த்தி பூஜை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது. எனவே ஆலயத்தில் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ளுங்கள். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
பெண்கள் உரிய வயதில் ருது பருவம் அடைவதற்கு வேண்டிக்கொள்ளவும் கும்பகோணத்தில் ஆலயம் உள்ளது. அந்த ஆலயம் பற்றி அடுத்த வாரம் வியாழக்கிழமை பார்க்கலாம்.
- குமரகுருபரர் நாவிலிருந்து மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் புறப்பட்டது.
- குமரகுருபரர் காசியில் சைவத்தையும் தமிழையும் எவ்விதம் நிலைநிறுத்துவது என்பதைப் பற்றி ஓயாமல் சிந்தித்தார்.
திருநெல்வேலி அருகே ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சிவகாமசுந்தரி.
மணமாகிப் பல்லாண்டுகள் ஆகியும் இறைவன் குழந்தை பாக்கியத்தை அவர்களுக்கு அருளவில்லை. திருச்செந்தூர் முருகனிடம் நம் குறையைத் தெரிவிப்போம், வா என்றார் கவிராயர். இருவரும் செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.
அந்தக் கடவுள் தான் என்ன அழகு! எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு போகலாம் போல் எத்தனை தத்ரூபமான உயிர்ச்சிலை! குழந்தை கொடுப்பாய் வேலா! என்று மனமாரப் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
வேலை வணங்குபவர்களின் குறையைத் தீர்ப்பது தானே அவன் வேலை! அவன் கேட்டதை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல் என்பதால் அல்லவா அவன் மனைவியைக் கூட வள்ளலின் மனைவி என்பதால் வள்ளி என்கிறோம்!
காலப்போக்கில் சிவகாமசுந்தரி கருவுற்றாள். குழந்தை பிறந்ததும் குமரகுருபரன் என்று பெயர் சூட்டினார்கள்.
வயது ஏறிக்கொண்டே இருந்தது குழந்தைக்கு. ஆனால் ஐந்து வயதாகியும் குழந்தை வாய்திறந்து எந்தச் சொல்லும் சொல்லவில்லை. கவிராயர் தம்பதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
ஒருநாள் சிவகாமசுந்தரி, குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு திருச்செந்தூர் புறப்பட்டாள். கவிராயரும் உடன் நடந்தார்.
`குழந்தையைத் தந்த கடவுளிடம் இவனுக்குப் பேசும் சக்தியைத் தரப்போகிறானா இல்லையா என்று கேட்போம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கடல்!`
சிவகாமசுந்தரி ஒரு முடிவோடு மேலே நடந்தாள்.
`நம் குழந்தை பேசுவான். அதுமட்டுமல்ல. நம் குழந்தையைப் பற்றி உலகமெல்லாம் பேசும்!` என்றவாறே நம்பிக்கையோடு நடந்தார் கவிராயர்.
திருச்செந்தூரில் அவர்கள் தவமிருக்கலானார்கள். நாற்பத்து நான்கு நாட்கள் கடந்தன. நாற்பத்தைந்தாம் நாள். யாரோ மெல்ல மெல்ல ஏதோ பேச முயலும் குரல் கேட்டாற்போல் இருந்தது.
கவிராயரும் மனைவியும் வியப்போடு குழந்தையைப் பார்த்தார்கள். குமரகுருபரன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். அவன் நாக்கு ஒலி அலைகளைத் தேடித் தேடிப் புரண்டு கொண்டிருந்தது.
சில கணங்கள் தவித்த குமரகுருபரக் குழந்தை திடீரென மடைதிறந்தாற் போல் பேச முற்பட்டான். பேச்சா அது? அல்ல. எல்லாமே கவிதைகள். குமரனைத் துதித்துக் கந்தர் கலிவெண்பா பாடலானான் அவன்.
அவனை இனி அவன் என்று சொல்லலாமோ? அவர் என்றல்லவா சொல்ல வேண்டும்? மாபெரும் கவிஞராகிவிட்டார் குமரகுருபரர். தமிழ்க் கடவுள் கந்தனைப் பற்றி எண்ணற்ற பாடல்கள் பாடினார்.
வளர்ந்து இளைஞரானபோது அவர் சிந்தை துறவு நெறியில் நாட்டம் கொண்டது. பெற்றோரிடம் விடைபெற்று திருத்தல யாத்திரை மேற்கொண்டார்.
மதுரைக்கு வந்து சேர்ந்தார். மீனாட்சியின் தெய்வீகப் பொலிவு ததும்பும் சிலையையே பார்த்தவாறிருந்தார். உயிருள்ள சிலை அல்லவா அங்கே உயிரை மறைத்துக் கொண்டு நின்றிருக்கிறது!
குமரகுருபரர் நாவிலிருந்து மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் புறப்பட்டது. அன்னையைப் பத்துப் பருவங்கள் உடையவளாய் அமைத்து தாலாட்டு உள்பட எல்லாப் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களையும் பாடினார்.
அப்போது மதுரையை ஆண்டு கொண்டிருந்தான் திருமலை நாயக்கன். அவனது கனவில் வந்தாள் மீனாட்சி.
`என் பக்தனின் சொக்க வைக்கும் சொக்கத் தங்கமான தமிழைப் பருகாமல் உறங்குகிறாயே?` என்று கேட்டாள். திடுக்கிட்டு விழித்த திருமலை நாயக்கன் திகைத்தான்.
குமரகுருபரரைத் தேடிச் சென்றான். அவர் தரிசனத்தால் பரவசம் அடைந்தான். கோவிலில் மீனாட்சியின் சன்னிதியில் மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழ் நூலைக் குமரகுருபரர் பாடப்பாட அவனும் அமர்ந்து கேட்கலானான்.
அந்தப் பாடல்களின் தமிழ்ச் சுவையைக் கேட்டு, மீனாட்சியின் சிலை அருட்கனிவோடு முறுவல் பூத்தது. அன்னை தன் கணவர் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களைப் போலத் தானும் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தத் திருவுளம் கொண்டாள்.
அடுத்த கணம் கோவில் வாயிலில் இருந்து ஓர் அழகிய சிறுமி புறப்பட்டாள். அவள் எந்தத் தயக்கமும் இல்லாமல் மன்னன் திருமலை நாயக்கனின் மடியில் போய் சொந்தத்தோடு அமர்ந்து கொண்டாள்.
செதுக்கி வைத்த சிலைபோல் இருந்தாள் அவள். அது சரி. செதுக்கி வைத்த சிலையில் இருந்து தானே அவள் வெளிப்பட்டிருக்கிறாள்!
`தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே!` என்று கனிந்துருகிப் பாடிக் கொண்டிருந்தார் குமரகுருபரர். `ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே!` என்று அவர் பாடியபோது சிறுமி சிரித்துக் கொண்டாள்.
நாயக்கரின் மார்பில் இருந்த முத்துமாலையை விளையாட்டாகக் கழற்றினாள்.
மறுகணம் சிறுமி மன்னரின் மடியை விட்டு எழுந்தாள். குமரகுருபரரின் அருகே வந்தாள். மன்னரது முத்துமாலையை அவர் கழுத்தில் அணிவித்துச் சிரித்துக் கொண்டே கர்ப்பகிரகத்தை நோக்கி நடந்தாள்.
சிறுமி நடந்த நடை ஒரு நாட்டியம் போல் தோன்றியது! அவள் நாட்டியத்தில் கணவனுடன் போட்டியிட்டு ஆற்றல் குறைவால் அல்ல, நாண மிகுதியால் அல்லவா தோற்றாள்!
சிறுமி சிலையோடு சிலையாய்க் கலந்து மறைந்தாள். சிலையின் முகமும் வந்த சிறுமியின் முகமும் ஒன்றுபோலவே இருந்தது அப்போது தான் திருமலை நாயக்கருக்கு உறைத்தது. தெய்வ தரிசனத்தைச் சாத்தியப்படுத்திய குமரகுருபரரின் பாதங்களில் விழுந்து பணிந்தான் நாயக்கன்.
சிறிதுகாலம் மதுரையில் தங்கிய குமரகுருபரர் காசி சென்று சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். காசிநோக்கிப் பயணப்பட்டார்.
அங்கு தான் சகலகலாவல்லி மாலை என்ற கலைவாணியைப் பற்றிய தோத்திர நூலைப் புனைந்தார். அங்கே மிகச் சுலபமாக இந்துஸ்தானி மொழியைக் கற்றறிந்தார்.
குமரகுருபரர் காசியில் சைவத்தையும் தமிழையும் எவ்விதம் நிலைநிறுத்துவது என்பதைப் பற்றி ஓயாமல் சிந்தித்தார். காசியில் ஒரு மடம் நிறுவுவதே நல்லதென முடிவு செய்தார். மடம் நிறுவ முடிந்தால் வட இந்தியாவில் சைவமும் தமிழும் வழிவழியாய்த் தழைக்கும்.
தமிழர் ஒருவர் வட இந்தியாவில் மடம் நிறுவுவதென்பது சாமானியமான செயலா? அதற்கு நிலம் வேண்டும். ஒரு தமிழருக்கு நிலத்தை யார் நன்கொடையாக வழங்குவார்கள்?
அக்காலத்தில் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த சுல்தான் ஒருவனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது காசி மாநகரம். சுல்தான் நினைத்தால் நிலம் வழங்குவது அவனுக்கு ஒரு பெரிய காரியமே அல்ல.
மாற்று மதத்தைச் சேர்ந்தவன், அவன் சைவத்தின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உணருமாறு செய்ய இயலுமா?
தனக்கு இந்துஸ்தானி மொழி தெரியும். சுல்தானிடம் பேசுவதில் சிரமம் இருக்காது. ஆனாலும் போகும்போதே தம் பெருமையை நிலைநிறுத்தும் வகையில் அவைக்குப் போக வேண்டும். அப்போது தான் செயலில் வெற்றி ஏற்படும்.
அதை எவ்விதம் நிகழ்த்துவது? ஒன்றும் புரியாமல் தாயே மீனாட்சி என்றவாறே உறங்கலானார்.
மீனாட்சி கனவில் வந்தாள். திருமலை நாயக்கர் மார்பிலிருந்து மாலையைக் கழற்றி அவர் கழுத்தில் பரிசாய் அணிவித்த அதே மீனாட்சி. ஆனால் இப்போது அவள் ஏன் பராசக்தி சொரூபத்தில் வந்திருக்கிறாள்?
சிங்க வாகனத்தில் வந்த அவள் `நான் உனக்கு ஒரு பரிசளிக்க வந்துள்ளேன். இந்தப் பரிசுப்பொருளின் மேல் அமர்ந்து சுல்தானைச் சந்திப்பாய்!` என்றாள். பின் கனவிலிருந்து மறைந்தாள்.
சிம்ம சொப்பனம் என்கிறார்களே, அது இதுதான் போலும்! கண்விழித்து எழுந்தார் குமரகுருபரர். அருகே ஏதோ உறுமும் சத்தம். அவர் அருகில் அவர் கட்டளையை எதிர்பார்த்து வாலை ஆட்டியவாறு நாய்போல் நின்று கொண்டிருந்தது பிரம்மாண்டமான ஒரு சிங்கம்!

திருப்பூர் கிருஷ்ணன்
சிங்கத்தின் முதுகைத் தடவிக் கொடுத்த அவர், தன்பொருட்டாகத் தனது வாகனத்தையே அன்னை அனுப்பிய அருளை எண்ணி நெகிழ்ந்தார். நம்பிக்கையோடு சுல்தானைச் சந்திக்கப் புறப்பட்டார்.
சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அவர் வீதிகளில் சென்றபோது காசி மாநகரம் முழுதுமே அச்சம் கலந்த வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தது. சுல்தானின் அரண்மனையை நோக்கி மிடுக்கோடு நடந்து சென்றது சிங்கம். அதன் முதுகில் கம்பீரத்தோடு அமர்ந்து சென்றது கவிச்சிங்கம்.
அரண்மனை வாயில் காவலர்கள் பதறிப்போய் விலகி வழிவிட்டார்கள். சிங்கத்தின் முதுகில் இருந்து இறங்காமலே சுல்தானின் அரசவைக்குள் பிரவேசித்தார் குமரகுருபரர்.
சுல்தான் அவர் வந்த வாகனத்தின் பெருமையாலும் அவர் முகத்தில் பொங்கிய அருள் வெள்ளத்தின் ஆற்றலாலும் கவரப்பட்டான். குமரகுருபரர் இந்துஸ்தானியில் தன் வேண்டுகோளைச் சொல்லலானார்.
இந்து மதமும் இஸ்லாம் மதமும் வேறுபட்டாலும் ஆன்மீகத்தால் இரண்டும் ஒன்றுபட்டவை தானே? ஒருநெறி சார்ந்து வாழ்பவர் இன்னொரு நெறி சார்ந்து வாழ்பவருக்கு உதவ எண்ணுவதில் எந்தத் தவறும் இல்லையே?
நாம் நிச்சயம் இந்த இந்து மகானுக்கு நிலம் கொடுத்து உதவ வேண்டும். இப்படி எண்ணம் ஓடியது சுல்தானின் மனதில்.
சுல்தான் எந்த நிலம் வேண்டும் எனப் பணிவோடு கேட்டான். உடன் வா என அவரை அழைத்துக் கொண்டு போனார் குமரகுருபரர்.
மேலே ஒரு கருடன் வட்டமிட்டது. அது வட்டமிட்டுக் காட்டிய நிலப்பரப்பு முழுவதையும் குமரகுருபரருக்கே வழங்கினான் சுல்தான்.
தமிழர் ஒருவர் வட இந்தியாவில் காசியில் சைவமடம் நிறுவிய வரலாறு இது. பன்னெடுங்காலம் காசி மடத்தில் வாழ்ந்தார் குமரகுருபரர். இப்போதும் சூட்சும உடலில் அடியவர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் அவர்.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com
- சிவபிரானின் இடப்பாகத்தில் அன்னை இடம் பெற்றது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளிலே தான்.
- ஒன்று சேர்க்கப்பட்ட தீபங்கள் கொடிமரம் அருகே அடையாளமாக அசைக்கப்பட மலை மீது தீபம் ஏற்றப்படும்.
தமிழர் தம் வாழ்வில் தனி இடம் பெறும் மாதம் கார்த்திகை மாதம். தனி இடம் பெறும் நட்சத்திரம் கார்த்திகை.
தமிழர் துதிக்கும் தனிப் பெரும் வெற்றித் தெய்வமான கந்தனையும் கார்த்திகையையும் இணைத்துப் பேசும் புராணக் கதைகள் ஏராளம் உண்டு.
முன்பொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவனுடைய நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாகப் புராணங்கள் விளக்குகின்றன.
அதி உஷ்ண நட்சத்திரமான கார்த்திகை அனைத்து தீமைகளையும் சுட்டுப் பொசுக்கி விடும். ஆகவே தான் திருக்கார்த்திகை தினத்தில் ஒளி விளக்கேற்றி கந்தனை துதித்தல் மரபு.
இலக்கியம் காட்டும் விளக்கொளி
விளக்கின் வகைகளையும் அவற்றைத் தமிழ் மகளிர் போற்றித் துதித்து இல்லங்களிலும் கோவில்களிலும் ஏற்றி வந்ததையும் நூற்றுக்கணக்கான குறிப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் காணலாம். விளக்கு அணைந்தால் அது அபசகுனம் என்று கருதப்பட்டதை 'நெடுநகர் வரைப்பில் விளக்கும் நில்லா' என்ற புறநானூற்று வரி (பாடல் 280) விளக்குகிறது.
அருளாளர்கள் அனைவரும் விளக்கைப் போற்றுவதை சமய இலக்கியத்தில் காணலாம். நூற்றுக்கணக்கான பாடல்களில் சில எடுத்துக்காடுகள் இதோ :
மாணிக்கவாசகர்: "ஜோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே"
ஞானசம்பந்தர்: "விண்களார் தொழும் விளக்கு" என்று சிவபிரானைத் தொழுது ஞான விளக்கினை ஏற்றுவோம் என்ற அறைகூவலை விடுக்கிறார்.
சுந்தரர்: பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்"
அப்பர்: "இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது
பல்லக விளக்கு அது பலரும் காண்பது
நல்லக விளக்கு அது நமச்சிவாயவே"
இப்படி 22 இடங்களில் அப்பர்பிரான் விளக்கைச் சுட்டிக் காட்டுகிறார்.
திருமூலர் : "விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்".
விளக்கை எப்படி எப்போது ஏற்றுவது?
குத்து விளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளையும் குறிப்பதாக ஆகிறது.
ஒரு முகம், இரு முகம், பஞ்ச முகம் என பலவகை விளக்குகள் உண்டு. அனைத்தும் நன்மைகளையே தரும். பசு நெய் உத்தமம், அடுத்து நல்லெண்ணெய் பயன்படுத்தப்படலாம். பருத்தியால் ஆன பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு ஏற்றுதல் உத்தமம். கிழக்கு மற்றும் வடக்கு திசை நோக்கி தீபங்கள் ஏற்றப்பட வேண்டும்.
தீபத்தை வீட்டின் வாயிலில் இரு புறமும் கார்த்திகை மாதம் முழுவதும் ஏற்றுவது மரபு.
அன்றாடம் காலையிலும் மாலை சந்தியா வேளையிலும் தீபம் ஏற்றுவது நமது மங்கையரின் வழி வழி வந்த மரபுப் பண்பாகத் திகழ்கிறது. கிராமங்களில் இன்றும் பழைய வீடுகளின் திண்ணைச் சுவரில் இரு புறமும் தீபம் ஏற்றுவதற்கான பிறை மாடங்களைக் காணலாம்.
விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பயன்கள்
விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பயன்களைப் பட்டியலிடவே முடியாது. மகாலட்சுமி வாசம் புரியும் இடம் என்பதால் செல்வச் செழிப்பு ஏற்படும். துன்பங்கள் தொலையும். கடன் தொல்லை போகும். திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். சகல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர். இப்படி உலகியல் வாழ்க்கைக்கான பல அம்சங்களில் நலம் பெறுவதோடு ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து அரிதான முக்திக்கும் வழி வகை செய்யும் ஒரு வழிபாடே திருவிளக்கு ஏற்றும் வழிபாடாகும்.
திருவண்ணாமலை தீபம்
பஞ்சபூத தலங்களில் அக்கினி தலமாக விளங்கும் திருவண்ணாமலை தலத்தை நினைத்தாலேயே முக்திப் பேற்றைப் பெறுவர் என்பது அறநூல்கள் தரும் அற்புத உண்மை. இந்தத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றே!
ஒருமுறை தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி பிரம்மா, திருமால் ஆகியோருக்கு இடையே எழ, சிவபிரான் அவர்களிடம் தனது அடியையோ முடியையோ யார் காண்கிறாரோ அவரே பெரியவர் என்று கூறினார். அவர் பெரும் ஜோதிப்பிழம்பாகத் தோன்ற பிரம்மா, திருமால் இருவராலும் அடி, முடியைக் காண இயலவில்லை. இருவரின் அகங்காரம் அழிந்து பட அந்தக் கணத்தில் ஜோதிப் பிழம்பிலிருந்து சிவபிரான் சிவலிங்கத் திருவுருவில் வெளி வந்தார். ஜோதிப் பிழம்பே அருணாசலம் ஆனது.
இந்த மலையைப் பற்றி பகவான் ரமண மகரிஷி கூறுகையில், 'கைலாயத்தில் சிவன் உறைகிறார். ஆனால் இந்த மலையே சிவபிரான் தான்" என்று கூறியருளினார். ஆக இங்கு கிரிவலம் பெரும் சிறப்பைப் பெறுகிறது.
இங்கு கார்த்திகை தீபத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். இறைவனின் கர்ப்பக்கிரகத்தில் கற்பூரம் ஏற்றப்பட அதிலிருந்து ஒரு மடக்கில் (அகல்) நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்படுகிறது. நந்திதேவர் முன்னிலையில் ஏற்றப்படும் ஐந்து நெய்விளக்குகள் பஞ்ச மூர்த்தங்களைக் குறிக்கும். அம்மன் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து நெய்த்திரி மடக்குகள் பஞ்ச சக்தியைக் குறிக்கும். மாலையில் அனைத்து தீபங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு, அனைத்தும் இறைவனில் ஐக்கியம் என்ற உண்மையைப் புலப்படுத்தும். அன்று மட்டும் ஆண்டு முழுவதும் வெளிவராத அர்த்தநாரீஸ்வரர் திருவீதி உலா வருவார்.
சிவபிரானின் இடப்பாகத்தில் அன்னை இடம் பெற்றது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளிலே தான்.
ஒன்று சேர்க்கப்பட்ட தீபங்கள் கொடிமரம் அருகே அடையாளமாக அசைக்கப்பட மலை மீது தீபம் ஏற்றப்படும்.
பல மைல் தூரம் தெரியும் இதைப் பார்த்தாலேயே அனைத்துப் பாவங்களும் போகும். நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.
ஐந்து அடி உயரமுள்ள பிரம்மாண்டமான கொப்பரையில் பசுக்களின் நெய் தாரை தாரையாக ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட லட்சக்கணக்கான மக்கள் அதை தரிசித்து வழிபடுவது இன்றளவு நடக்கும் ஒரு தெய்வீக நிகழ்வாகும்.

வள்ளலார் விளக்கும் தீப மகிமை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற தாரக மந்திரத்தை வழங்கிய வள்ளலார் பெருமான், இல்லத்தில் தீபம் ஏற்றுவதன் முக்கியத்துவத்தைப் பலவாறாக விளக்கியுள்ளார். அவற்றில் ஒரு சிறு பகுதி இது (அவரது சொற்களிலேயே தரப்படுகிறது) :-
"இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது. ஏனெனில், அப்படியிருந்தால் அது ஆயுள் நஷ்டத்தை உண்டுபண்ணும் ஆகையால் நாம் வாழுகிற வீட்டில் தீபத்தை வைத்து ஆயுளை விருத்தி செய்து கொள்ள வேண்டும்."
"தீபத்தில், ஒளி, சோபை, பிரகாசம் என்ற மூன்றில் பிரகாசம் காரண அக்கினி. சோபை காரணகாரிய அக்கினி. ஒளி காரிய அக்கினி."
ஆயுளை தீர்க்கமாக்கும் தீபமேற்றுதல் குறித்த முழு விளக்கத்தையும் அவரது உபதேசக் குறிப்புகளில் காணலாம்.
நட்சத்திரமாலை விளக்குகள்
பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி வரை உள்ள ஆலயங்களில் தினமும் ஏற்றப்படும் தீப வகைகள் ஏராளம். விளக்குகளில் மட்டும் சுமார் ஐநூறு வகைகள் உண்டு. இவை அனைத்துமே நலம் தருபவையே. ஒளிச் சுடர் விளக்குகள் ஆங்காங்கே உள்ள மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்ய ஏற்றப்படுகின்றன.
ஆலயங்களுக்குச் செல்வோர் இறைவனைத் தொழும் போது ஏற்படும் நலன்களை இந்த விளக்குகள் தூண்டி விடுகின்றன. இந்த வகையில் எடுத்துக்காட்டாக, ஒரே ஒரு தலத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.
பாண்டி வளநாட்டில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளதும் பழம்பெரும் நூல்களால் போற்றிப் புகழப்படுவதுமாகிய ஒரு சிவத் தலம் திருப்பெருந்துறை ஆகும்.
இந்தத் திருக்கோவிலில் இடப்படும் தீப வகைகள் சிறப்புப் பெயர் பெற்று விளங்குகின்றன.
அவையாவன:
நட்சத்திரமாலை : இதிலுள்ள தீபங்கள் இருபத்தேழு. சக்கரத்தில் இருபத்துநான்கு. மேலே மூன்று. இது இங்குள்ள ஆறு சபைகளுள் ஒன்றான ஆனந்தசபையின் மூலஸ்தானத்திற்குப் பின்னால் உள்ளது.
கலா தீபம் : இதிலுள்ள தீபங்கள் ஐந்து. இது சித் சபையில் உள்ளது.
வர்ண தீபம் : வர்ணம் என்றால் எழுத்து என்று பொருள். இதில் உள்ள தீபங்கள் ஐம்பத்தொன்று. இது சத்சபையில் உள்ளது.
தத்துவ தீபம் : இதிலுள்ள தீபங்கள் முப்பத்தாறு. இது தேவ சபையிலுள்ளது. முப்பத்தாறு தத்துவங்களை இவை குறிக்கின்றன.
புவன தீபம் : இதிலுள்ள தீபங்கள் 224. இது தேவ சபையில் தத்துவ தீபத்திற்கு முன்னேயுள்ளது. இதனை தீப மாலை என்றும் கூறுவர்.புவனம் 224ஐக் குறிப்பது புவனதீபம்.
பத தீபம் : இதிலுள்ள தீபங்கள் எண்பத்தொன்று. இது இங்குள்ள குதிரைச் சேவகர்க்குப் பின் உள்ளது. பதங்கள் எண்பத்தொன்றைக் குறிப்பது பத தீபம்.
மகாபாரதத்தில் தீபதானம் பற்றிய விளக்கம்
தானங்களில் தீப தான மகிமையைப் பற்றி பீஷ்மர் தர்மபுத்திரருக்கு விளக்கும் போது சுக்ராசாரியாருக்கும் பலிக்கும் இடையே நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறார்.
"தனக்கு மேன்மையை விரும்புபவன் கோவிலிலும் சபாமண்டபத்திலும் நாற்சந்தியிலும் மலையிலும், உயர்ந்த மரத்திலும் தீபங்களை நித்தியமாக வைக்க வேண்டும். தீபம் வைக்கும் மனிதன் மனித குலத்திற்கே பிரகாசமாகவும் பரிசுத்த ஆத்மாவாகவும் பெயர் பெற்றவனாக இருந்து தேஜோலோகத்தை அடைவான். தீபத்தை தானமாகக் கொடுப்பவன் சொர்க்கலோகத்தில் தீபமாலைகளின் நடுவில் விளங்குவான்."
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com
- ஞானத்தை கொடுக்கும் என்பதால் குழந்தைப் பருவத்திற்கு தாயின் அன்பு முக்கியம்.
- ஒரு மனிதனுக்கு இந்நிலையில் தான் கிடைக்கிறது.
வாழ்க்கை என்பது ஆரோக்கியமான உடல், அழகான குடும்பம், போதுமென்ற மனம், வாழ்வை நடத்த தேவையான வசதி, இருக்க இடம், உடுத்த உடைகள், நல்ல உணவு, நல்ல நண்பர்கள், துரோகம் நினைக்காத உடன் பிறப்புகள், உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாத உறவினர்கள் இவை அனைத்தும் கிடைக்கப்பட்டால் அதுவே மன நிறைவான நிம்மதியான வாழ்க்கையாகும். உயர்வு என்பது பொருளாதாரத்தை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் தானும் துன்பப்படாமல் பிறரையும் துன்பப்படுத்தாமல் மன நிறைவான வாழ்க்கை வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும்.
உளவியல் ரீதியாக மனித வாழ்க்கையை எட்டு நிலைகளாக பிரிக்க முடியும். நிறைவான ஒரு வாழ்க்கையை இந்த எட்டு நிலைகளை கடந்த பின்பே அடையமுடியும்.
முதல் நிலை
வாழ்வின் முதலாவது மற்றும் அடிப்படை நிலை. குழந்தைப் பருவத்தில தட்டுத்தடுமாறி நடை பழகுவதில் தொடங்கி சமுதாயத்தை எப்படி எதிர்கொள்வது என பெற்றோர் மூலம் புதிது புதிதாக பல விஷயங்களை கற்றுக் கொள்கின்ற காலம்.
சந்திரன் ஆதிக்கம்:
இதில் முதல் 10 வருடங்கள் சந்திரனின் ஆதிக்கம். சந்திரன் தாய்க்கான காரககிரகம். ஒரு உயிரை ஜனிக்க செய்வது சூரிய ஒளி என்றால் உயிரை தாங்கும் உடல் சந்திரன். ஆன்மா உடல் என்றால், மனம் சந்திரனாகும்.
பூமியில் ஜனனமாகும் ஒரு ஆன்மாவின் முதல் பத்து வருடம் குழந்தை பருவம். தாயின் அன்பிற்கு இணையாக உலகில் எதுவும் கிடையாது. ஒரு தாயால் மட்டுமே குழந்தையை எப்பொழுதும் தன் பார்வையில் வைத்துக் கொள்ள முடியும். பிறந்த குழந்தைக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் மிகவும் முக்கியம். தாய்ப்பாலால் அன்பையும் உலக ஞானத்தையும் வழங்குபவள் தாய். 10 வருடத்தில் குழந்தைக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் மட்டுமே பண்பு, பாசம், நல்ல மனநிலை, மூளை வளர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாய் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் .10 வருடங்களில் தாய் கற்றுக் கொடுக்கும் நல்ல போதனைகளே மனிதனின் இறுதி காலம் வரைக்கும் தேவையான ஞானத்தை கொடுக்கும் என்பதால் குழந்தைப் பருவத்திற்கு தாயின் அன்பு முக்கியம்.
முதல் நிலையின் இரண்டாம் பகுதி டீன் ஏஜ் எனப்படும் வளரிளம் பருவத்தை நெருங்கும் சமயம் குழந்தைப் பருவத்தின் இரண்டாவது நிலையில் அடியெடுத்து வைப்பார்கள். இந்த நிலையிலும் நம் அன்றாட மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு பிறரைச் சார்ந்துதான் இருக்கிறோம். இக்காலக்கட்டத்தில் நம்மைச் சுற்றியுள்ள பெரியவர்களும், உற்றார், உறவினர்கள், ஆசிரியர்களும் நமக்கு என்ன போதிக்கின்றனரோ, அவர்கள் நம்முன் எப்படி நடந்து கொள்கிறார்களோ அவையே நம் மனதில் பதிந்து பின்நாளில் நம் எண்ணம், சொல் செயல்களை தீர்மானிக்கும் சக்திகளாக அமைந்து விடுகின்றன. எனவே, வாழ்வின் அடித்தளமான குழந்தைப் பருவம் ஒவ்வொருவருக்கும் சிறப்பாக அமைய வேண்டியது அவசியமாகும்.
புதனின் ஆதிக்கம்:
10 வயது முதல் 20 வயது வரை புதனின் ஆதிக்கம். நவக்கிரகங்களில் சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுற்றக் கூடிய கிரகம் புதன். புதனுக்கு புத்திக்காரகன் என்று பெயர். புதன் புத்தி, அறிவு, ஞானம் தருபவர்.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் என்பதால் புதனுக்கு சூரிய வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். சூரியனின் சக்திகள் புதனில் அதிகம் நிறைந்து இருப்பதால் புதனுக்கு புத்திகாரகன் என்று பெயர். சுய ஜாதகத்தில் புதன் சிறப்பாக அமைந்தால் புத்தி, அறிவு, ஞானம் சிறப்பாக இருக்கும். 10 வருடம் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த குழந்தை விரும்பிய வெளி உலக கல்வியை கற்கும் காலம். குழந்தை தாயிடம் கற்ற ஞானத்தை கல்வி என்ற வித்தையால் வெளி உலகம் தெரிந்து கொள்ளும் காலம். 10 முதல் 20 வயது வரை கற்கும் கல்வியே அவனுடைய வாழ்வாதாரமாக அமையும். புத்தியுடையவன் பலவான் என்பது பழமொழி.
புதன் பலம் பெற்றவன் தன் புத்தி சாலித்தனம் நிறைந்தவன். எந்த சூழ்நிலையிலும் தன் புத்தியால் தன்னை தற்காத்துக் கொள்வான். புதன் நன்றாக இருக்கும் ஜாதகன்தான் முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையும் காலம் இது
இரண்டாம் நிலை:
டீன் ஏஜ் முடிவில் வாழ்வின் இரண்டாம் நிலையில் அடியெடுத்து வைக்கும் காலம். முப்பது வயது வரை தொடரும் இப்பருவத்தை நினைத்தாலே இனிக்கும் பருவமெனச் சொல்லலாம். புதிய நண்பர்களின் அறிமுகம், அவர்களுடன் கேலி, கொண்டாட்டங்கள், நள்ளிரவு விருந்துகள், வாலிபமிடுக்குடன் தனக்கு எல்லாம் தெரியும் என வாழ ஆரம்பிக்கும் காலம். இப்பருவத்தில் தான் நல்லது எது கெட்டது என புரிந்து கொண்டு தவறுகளில் இருந்து பாடங்கள் கற்க வேண்டிய காலமாகும்.
சுக்கிரனின் ஆதிக்கம்:-
20 முதல் 30 வயது வரை சுக்கிரனின் ஆதிக்கம். புதனுக்கு அடுத்து பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் எல்லோருக்கும் மிகவும் பிடித்த கிரகம். சுக்கிரன் என்ற பெயரை கேட்டாலே மனதில் இனம் புரியாத சந்தோசம் குடிபுகும். இது பெண் கிரகம் என்பதால் எதிர்பாலினத்தினர் மீது ஈர்ப்பை உண்டாக்கும். காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எதைப் பார்த்தாலும் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். ஆடை, அலங்காரம், சிற்றின்ப நாட்டத்தில் ஈடுபாடு ஏற்படும் காலம். உழைக்காமல் ஆடம்பரமாக சொகுசாக இருக்க விரும்பும் காலம்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
இந்நிலையில் பெரும்பாலும் மனம் சார்ந்து உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதையே விரும்புவார்கள். மனம் எல்லைகளில்லாமல், கட்டுப்பாடற்று தன் போக்கில் பயணப்பட விரும்பும். தன் விருப்பத்துக்கு தடையாக இருப்பவற்றையெல்லாம் தகர்தெறியவும் துடிக்கும். தடைகளை விதிப்போர் மீது வெறுப்பையும் உமிழும். ஆனால், அத்தடைகளை உண்மையில் எதற்காக பெரியவர்கள் நமக்கு விதிக்கின்றனர். அவர்களின் எச்சரிக்கை வார்த்தைகளில் பொதிந்துள்ள உள்அர்த்தம் என்ன என்பதை அலசி ஆராய்வது அவசியம். கொண்டாட்டங்களும், காதலும் மட்டுமே இந்த நிலையை அர்த்தப்படுத்திவிடாது. உண்மையில் நாம் யார், வாழ்வில் என்னவாக போகிறோம், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் ஒருவருக்கு இந்நிலையில் எழுந்தால் அதுவே இந்த நிலையை முழுமையாக்கும்.
தற்காலத்தில் பிஞ்சிலேயே பழுத்த பழமாக தவறான காதலில் 13 , 14 வயதிலேயே மாட்டி தன் வாழ்வை தொலைக்கும் குழந்தைகளே அதிகம். இந்த கலிகாலத்தில் ஒருவனுக்கு தவறான காதல் உணர்வு வராவிட்டால் அவனுக்கு சமுதாயம் வேறு பெயர் சூட்டி அவமானப்படுத்துகிறது. படிக்கும் காலத்தில் தவறான எண்ண அலைகளை மனதில் விதைக்க கூடாது. காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமைந்தவருக்கு சிறப்பான திருமண வாழ்க்கை இந்த காலகட்டத்தில் தேடி வரும்.
மூன்றாம் நிலை
முப்பதாவது வயதின் முடிவில் வாழ்வின் மூன்றாம் நிலைக்குள் நுழைகிறோம். இதுநாள் வரை கற்ற வாழ்க்கைக் கல்வியின் துணையோடு, கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு, தங்களது பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான பொருளாதாரத் தேவைகளை தான் மேற்கொள்ளும் பணி அல்லது தொழிலின் வாயிலாகப் பூர்த்தி செய்ய வேண்டிய மிக முக்கியமான தருணம் இந்த மூன்றாம் நிலையாகும். அதாவது பள்ளி, கல்லூரி மற்றும் சமுதாயத்தின் வாயிலாக தான் கற்றவற்றை அரங்கேற்றும் பருவம் இது. அத்துடன் பொருளாதார தேடலுக்கு அப்பாற்பட்டு தானும் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு சென்றதற்கான அடையாளத்தை தங்கள் சந்ததியினருக்கும், இச்சமுதாயத்திற்கும் விட்டு செல்வதற்கான மரபை உருவாக்கும் வாய்ப்பும் ஒரு மனிதனுக்கு இந்நிலையில் தான் கிடைக்கிறது.
செவ்வாயின் ஆதிக்கம்:-
30 வயது முதல் 40 வயது வரை செவ்வாயின் ஆதிக்கம். விண்வெளியில் உள்ள கிரகங்களில் சுக்கிரனுக்கு அடுத்து மனிதனுக்கு தைரியத்தை வழங்கும் கிரகமாக இருப்பது செவ்வாயாகும். இவருக்கு பூமிக்காரகன் என்ற பெயரும் உண்டு.
உறவுகளில் ஆண் ஜாதகத்தில் சகோதரர், பெண் ஜாதகத்தில் கணவரையும் குறிக்கும். சிற்றின்ப நாட்டத்தை குறைத்து தொழில், வேலையில் வாழ்வாதாரத்தை தேடி அலையும் மிக முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை ஆற்றல்களை வெளிப்படுத்தி வேலை அல்லது தொழிலில் உயர்வு பெறும் காலம். சிறு வயதில் சகோதரர்களிடம் சிறு மனக்கசப்பு இருந்தாலும் உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்து வாழ்வதே சிறப்பு என்ற அனுபவ பாடத்தை உணரும் காலம். பெண்கள் கணவரை முழுமையாக புரிந்து கொள்ளும் காலம். மண், பொன், பெண் ஆசை ஏற்படும் காலம் என்பதால் வீடு, வாசல் , வாகனம் என வாழ்விற்கு தேவையான பொருட்களை வாங்க ஆர்வம் ஏற்படும். ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றால் வாழ்க்கையில் உயர்வதற்கு எல்லா வழிகளும் இந்த காலத்தில் நடக்க செவ்வாய் பகவான் உதவி செய்வார்.
நான்காம் நிலை:
வாழ்வின் நான்காம் நிலையான இந்த நிலையில் 40 முதல் 50 வயது வரை தான் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தை, பலன்களை அனுபவிக்கும் நிலையாகும்.
சூரியனின் ஆதிக்கம்:-
40 வயது முதல் 50 வயது வரை சூரியனின் ஆதிக்கம். நவகிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகமாகும். ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெளிவாக புலப்படுபவர். உலகில் உயிர்கள் தோன்ற ஆதாரமாக இருப்பவர் சூரியபகவான். சூரியன் அழியா புகழை கொடுப்பார். சமூக சேவையில் நாட்டம் ஏற்படும்.
எளிமையாக இருக்கவும் இரக்க உணர்வை கொடுப்பார். ஜனன ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் ஆன்மபலம் பெற்று உடல் தேஜஸ் பெருகும் காலம். பொன் நிறமாக இருப்பார். தந்தை, தந்தை வழி உறவுகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பிரபல மனிதர்களுடன், சமூகத் தொடர்புகள், சமுதாய அங்கீகாரம் கிடைக்கும் காலம். பதவி, புகழ், அந்தஸ்திற்காக ஏங்கும் காலம்.
(5-ம் நிலை முதல் 8-ம் நிலை வரை அடுத்த வாரம் காணலாம்)
-தொடரும்
- ஒருவர் என்ன நன்மை-தீமை செய்கிறாரோ அவருக்கு ஏற்றபடி சனி பகவான் செயல்படுவார்.
- வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் சனிக்கிழமை சனி ஓரையில் வழிபட்டு தானங்கள் செய்யலாம்.
நவக்கிரகங்களில் சனி கிரகம் என்றதும் பலருக்கும் பயம் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு சனிதோஷம் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆனால் எல்லோரும் நினைப்பது போல சனி பகவான் ரொம்பவும் மோசமானவர் அல்ல.
ஆயுள் காரகனான சனியை கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவரை பொறுத்தவரை வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ஒருவர் என்ன நன்மை-தீமை செய்கிறாரோ அவருக்கு ஏற்றபடி சனி பகவான் செயல்படுவார். எனவே தான் நவக்கிரகங்களில் இவரை தலைமை நீதிபதி என்றுகூட சொல்வது உண்டு.
பொதுவாக ஒருவர் ஜாதக அமைப்பில் 1, 2, 5, 7, 8, மற்றும் 12-ம் இடங்களில் சனி அமர்ந்திருந்தால் அது தோஷமாக கருதப்படும். அதாவது ஜாதகத்தில் லக்னத்தில் சனி இருந்தால் அவர் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டு எப்போதும் சோம்பலான மன நிலையில் இருப்பார். 2-வது இடத்தில் சனி இருந்தால் திருமணம் நடைபெறுவது தாமதம் ஆகும் என்பார்கள். சிலருக்கு 2-வது இட சனியால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்று கூட மிரட்டுவார்கள்.
5-வது இடத்தில் சனி இருந்தால் குழந்தை பாக்கியம் தாமதமும், 7, 8-வது இடங்களில் இருந்தால் திருமண தாமதமும் உண்டாகும் என்பார்கள். 12-வது இடத்தில் சனி இருந்தால் விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று குறிப்பபுகள் உள்ளன. அது போல செவ்வாய், சந்திரன், ராகு ஆகியோரது வீட்டில் சனி நுழைந்தாலும் அது சனி தோஷத்துக்கு காரணமாக அமைந்து விடும் என்று ஜோதிட முறையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து நின்றால் அது நல்ல நிலையில் இருந்தாலும் அதை சனி தோஷம் என்றுதான் சொல்வார்கள். சனி வீட்டில் சந்திரன் இருந்தாலோ அல்லது சந்தி ரன் வீட்டில் சனி இருந்தாலோ அதையும் தோஷம் என்று தான் குறிப்பிடுவார்கள்.
சந்திரன் வேகமாக செயல்படுபவர். 30 நாளில் ராசி மண்டலத்தை சுற்றி விடுவார். சனி சற்று மந்தமாக செயல்படுபவர். ராசி மண்டலத்தை சுற்ற 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். இப்படி வேகமும், மந்தமும் கொண்ட இரு கிரகங்கள் இணைவது பெரும்பாலும் தோஷத்துக்கு அடிப்படையாக அமைந்து விடும்.

சனி ஒரு வீட்டை கடந்து செல்ல சுமார் 2½ ஆண்டுகள் ஆகும். இப்படி அனைத்து வீடுகளிலும் ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும். இதன் அடிப்படையில்தான் சனிதோஷத்தின் பல்வேறு வகைகள் கணிக்கப்படுகிறது. அதாவது ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்ட சனி, மங்கு சனி, பொங்கு சனி என்றெல்லாம் சொல்வார்கள்.
சனி பகவான் கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டுகளை ஏழரை சனி பிடித்துவிட்டது என்று சொல்வார்கள். சனி 8-வது இடத்தில் இருந்தால் அஷ்டமத்து சனி என்பார்கள். அதுபோலதான் மற்ற வகை சனிகளும் சொல்லப்படுகின்றன.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாக பிறந்த சனி பகவான் புதன், சுக்கிரன், ராகு, கேதுவுடன் நட்புடன் இருப்பார். சூரியன், சந்திரன், செவ்வாய் சேர்க்கை ஆகவே ஆகாது. இந்த கிரக அமைப்புகளுக்கு ஏற்பதான் ஒருவரது குணத்தில் நடவடிக்கைகளில் சனி நல்லதையும் செய்வார், கெட்டவைகளையும் செய்வார். சனியை அடிப்படையாக கொண்ட கிரக அமைப்புகள் நன்றாக இருந்தால் ஒன்றும் இல்லாதவர்களையும் உச்சாணி கொம்புக்கு கொண்டு போய் விடுவார். பூமி, வாகனம், வசதி ஏற்படுத்தி கொடுத்து பதவிகளையும் தந்து புகழ் பெற செய்வார்.
அதே சமயத்தில் ஒருவரது ஜாதகத்தில் சனி கெடுதல் செய்பவராக இருந்தால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி உச்சாணியில் இருந்து அதல பாதாளத்தில் தள்ளி விட்டு விடுவார். எனவேதான் சனி போல் கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்று இதை சொல்வார்கள்.
பொதுவாகவே சனியிடம் இருந்து யாருமே தப்ப முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்தில் சனி பார்வைக்கு வந்துதான் செல்ல வேண்டும். அப்படி அவர் வரும்போது நல்ல நிலையில் இருந்தால் நீங்கள் அவரை வணங்க வணங்க மேலும் நல்லது நடக்கும். ஒருவேளை சரியில்லாத சூழ்நிலை இருந்தால் சனி பகவான் தரும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் வகையில் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால்தான் சனி தோஷத்தின் மிக கடுமையான பாதிப்புகளை சற்று குறைக்க முடியும். சனி தோஷம் இருந்தால் ஒவ்வொரு முயற்சியும் தடைபடும். உறவுகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் பின்னடைவு காணப்படும். நோய்கள் தாக்கம் உடலை படாதபாடு படுத்திவிடும். சில சனி தோஷம் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும். கடன்களை அதிகரிக்க செய்யும். எனவே இவற்றில் இருந்து விடுபட வீட்டிலேயே எளிய பரிகாரங்கள் செய்யலாம்.
இதில் முதன்மையானதாக தானம் சொல்லப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஏழை-எளியவர்களுக்கு இயன்ற தானத்தை செய்யலாம். உங்களால் என்ன தானம் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். சனி பகவான் மனம் இரங்குவார். அடுத்து சனி பகவான் மனம் குளிர செய்ய விரதம் இருக்கலாம். 51 சனிக்கிழமை விரதம் இருந்தால் சனி பாதிப்பு பாதியாக குறைந்து விடும் என்பார்கள்.
வீட்டிலேயே சனியை சாந்தப்படுத்தும் பாடல்களை படிக்கலாம். சிவன் துதி, அனுமன் துதிகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம். தினமும் வீட்டில் பூஜை செய்து முடித்ததும் சிவன், லட்சுமி, நரசிம்மர், அனுமன், சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரங்களை மனதில் உள்வாங்கிக் கொண்டு சொல்லுங்கள். சனி ஓடோடி வந்து உங்களுக்கு உதவுவார்.
சனிக்கிழமைகளில் பிரதோஷம் வந்தால் அது மகாபிரதோஷம் என்று அழைக்கப்படும். அன்றைய நாட்களில் நந்தியை வழிபடுவது விசேஷமானது. அன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி தோஷம் வீரியத்தை இழக்கும்.
வீட்டில் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடலாம். தினமும் காலையில் உணவு அருந்தும் முன்பு காகத்துக்கு உணவு வைத்து சாப்பிடுவது நல்லது. அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று சனிக்கிழமைகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
சனி பகவானுக்கு மட்டும்தான் சிவனுக்கு நிகரான ஈஸ்வரன் பட்டம் உள்ளது. எனவே எந்த அளவுக்கு சிவபெருமானை வழிபடுகி றோமோ அந்த அளவுக்கு சனியின் பார்வையில் இருந்து தப்பலாம். சனிக்கிழமை அதிகாலையில் சிவனை வழிபட்டால் ஏழரை நாட்டு சனி தாக்கம் குறையும்.
வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் சனிக்கிழமை சனி ஓரையில் வழிபட்டு தானங்கள் செய்யலாம். இரும்பு பாத்திரங்களில் எள் தானியம் கலந்த நைவேத்தியம் செய்து தானம் கொடுக்கலாம். முடிந்தவர்கள் சனிக்குரிய காயத்ரியை தினமும் 108 தடவை சொல்லலாம்.
ஆஞ்சநேயரை வழிபடுவதும், விநாயகரை வழிபடுவதும் சனி தாக்கத்தை கணிசமாக சரிகட்டும். நம்பிக்கை இருப்பவர்கள் கறுப்பு உடை அணியலாம். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சனி தசாபுத்தி காலத்தில் பிறந்தவர்களாக கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் கூடுதல் வழிபாடு செய்ய வேண்டும்.
ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் பூஜை செய்து வழிபட வேண்டும் என்று விரும்புபவர்கள் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று நள தீர்த்தத்தில் நீராடி பிறகு ஆலயத்துக்கு வந்து சனி பகவானை வழிபடலாம். நள தீர்த்தத்தில் நீராடும்போது உடுத்தி இருக்கும் ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட வேண்டும் என்று சொல்வார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிகாடு அக்னீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கொங்குசனியை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நவ கைலாயம் உள்ளன. அவற்றில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் வழிபட்டால் சனிக்கிரகம் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். உத்திரகோச மங்கை தலத்தில் நவக்கிரகங்களில் சனி பகவான் மட்டுமே இருக்கிறார். அங்கு வேறு எந்த கிரகங்களும் கிடையாது. எனவே உத்திரகோச மங்கையில் சனி பகவானை வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.
தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வரன் சுயம்பு மூர்த்தியாக அருளும் தனி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் சனி பகவானை வழிபட ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வருகிறார்கள். இங்கு வழிபடுவதும் மிகவும் நல்லது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள ஐயாரப்பர் கோவிலில் சனீஸ்வரன் கிழக்கு நோக்கி காகம் வாகனத்தில் காட்சி தருகிறார். அந்த கோலத்தில் சனீஸ்வர பகவானை வழிபடுவது சிறந்த பலனாக கருதப்படுகிறது.

அதுபோன்ற அமைப்பு கடலூர் அருகே உள்ள வில்வராயநத்தம் ஆலயத்திலும் இருக்கிறது. அங்கும் சென்று சனீஸ்வரனை வழிபடலாம். திருவாரூர் தியாகராஜ கோவிலில் நளனும், சனீஸ்வரனும் வழிபட்டு பலன் பெற்றுள்ளனர். சனீஸ்வரன் வழிபட்ட லிங்கம் அங்கு இருக்கிறது. அங்கு வழிபட்டால் நமக்கும் நன்மை உண்டாகும்.
திருநிறையூர் ராமநாத சுவாமி ஆலயத்தில் உள்ள சனீஸ்வரனை தசரதர் வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. இந்த தலத்தில் சனி பகவான் தனது இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஸ்டாதேவியுடன் காட்சி அளிக்கிறார். கூடவே அவரது இரண்டு மகன்களான மாந்தி, குளிகனும் உள்ளனர். இங்கு சனி பகவான் தனி கொடி, தனி பலிபீடம் ஆகியவற்றுடன் கல்யாண கோலத்தில் மங்கள சனியாக இருக்கிறார்.
இந்தியாவில் வேறு எந்த ஊரிலும் சனி பகவான் இப்படி குடும்பத்துடன் திருமண கோலத்தில் இல்லை. எனவேதான் இந்த தலத்து சனீஸ்வரனை கல்யாண சனீஸ்வரர் என்று சொல்கிறார்கள். இந்த ஊரில் மட்டும்தான் சனீஸ்வரன் வீதிஉலா வருகிறார். இத்தகைய சிறப்பான இந்த தலத்தில் சனீஸ்வர பகவானுக்கு திருக்கல்யாணம் நடத்தி வழிபட்டால் தோஷங்கள் விலகுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
- தியானம் இறைத்தன்மையினை உள்ளே இறங்கச் செய்யும்.
- தியானம் செய்வதால் கோபம் நீங்கும்.
தியானம் பற்றிய ஆய்வுகள் பல வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. அதிக ஸ்ட்ரெஸ்- மன அழுத்தம் இவைகளாலேயே மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது அவர்களது முந்தைய கட்டுரைகளில் ஆய்வின் முடிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை முழுமையாய் மருத்துவ உலகமும் ஏற்றுக் கொள்கின்றது.
மன உளைச்சல் காரணமாக * குழம்பிய எண்ணங்கள் * ஒற்றை தலைவலி * அதிக உணவு உண்ணுதல் * எரிச்சல் * பற்களை கடித்தல் * வேகமான மூச்சு அல்லது நெஞ்சு விரியும் டென்ஷன் மூச்சு * உடலில் வீக்கம் * குளிர்ந்த கால், கை * தூக்கமின்மை * மனம் பேசிக் கொண்டே இருத்தல் * நோய் எதிர்ப்பு சக்தி குறைவு * படபடப்பு, மனச் சோர்வு * உயர் ரத்த அழுத்தம் * கவனமின்மை * மனப்போக்கு அடிக்கடி மாறுதல் * அதிக கார்டிசால் ஹார்மோன் சுரத்தல் * தசை இறுக்கம் * இருதய துடிப்பு அதகரித்தல் * ஜீரண சக்தி குறைவு * புகை, மது, காபி போன்றவற்றில் அதிக ஈடுபாடு * உடல் சக்தி குறைவு * வாழ்க்கை முறைகளான நேரத்திற்கு குளித்தல், பல் தேய்த்தல் போன்றவற்றில் ஒழுக்கமின்மை ஏற்படுகிறது.
தியான பயிற்சிக்கு பின்னர் உடலில் ஏற்படுத்தும் மாறுதல்களாக கூறப்படுபவை:-
* உயர் ரத்த அழுத்தம் சீராகுதல் * உள்ளுணர்வு சீராய் இருக்கும் * ஆரோக்கிய உணர்வு * அமைதி * ஹார்மோன் இயக்கம் சரியாய் இருத்தல் * தீய பழக்க வழக்கங்கள் இல்லா திருத்தல் * ஜீரண மண்டலம் சீராய் இயங்குதல் * விழிப்புணர்வு ஏற்படும் * தெளிவாய் சிந்தித்தல் * தசைகள் இயல்பாய் இயங்குதல் * நச்சுக்கள் நீங்குதல் * கவனம் அதிகரித்தல் * ஆக்கப் பூர்வமாக சிந்தித்தல் * சதா பேசிக் கொண்டே இருப்பது நீங்கும் * கற்கும் திறமை கூடும் * பிரச்சினைகளை திறமையாய் கையாள முடியும் * படபடப்பு குறையும் * முதுமை தாமதப்படும் * ரத்த ஓட்டம் சீராகும் * தூக்கம் நன்றாக இருக்கும்.
தியானம் செய்வதால் கோபம் நீங்கும். பொறுமை கூடும். தியானம் இறைத்தன்மையினை உள்ளே இறங்கச் செய்யும்.
கடந்த காலத்தினை நினைக் காதிருப்பதும், வருங்காலத்தினை நினைக்காதிருப்பதுமே தியானம். இந்த நொடியில் முழு விழிப்புணர்வோடு இருபப்பதுதான் தியானம். இது எத்தனை கடினம் என்று முயன்று பார்க்கும் போதே உணர முடியும். விழிப்புணர்வு என்று ஒன்று இல்லாவிட்டால் கர்ம வினைகளை நம்மை அறியாமல் சேர்த்துக் கொண்டே இருப்போம். சேர்த்த கர்ம வினைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. அதனை கடக்கும் சக்தி தியானத்தின் மூலம் பெற முடியும். சித்தர்களின் ஆசி நமக்கு கிடைக்குமெனில் வாழ்க்கை பல உயர்வுகளை பெறும்.
ஒரு முறை சேஷாத்திரி சுவாமிகளிடம் ஒரு பக்தை வான் உலகை காண ஆசைப் படுவதாக வேண்டி கேட்டார். அவரும் அந்த அம்மாவிற்கு பல அற்புத உண்மைகளை காணச் செய்தார். அந்த ஒளியின் தாக்கத்தினை தாங்க முடியாத அந்த பக்தைக்கு கண் பார்வை பறிபோனது. இதனைக் காணும் அளவுக்கு உன் தவ வலிமையினை நீ கூட்டிக் கொள்ளவில்லை. நாளை மதியம் நீ மிண்டும் கண் பார்வை பெறுவாய் என்று சுவாமிகள் கூற அந்த அம்மாவிற்கு மறுநாள் மீண்டும் பார்வை கிடைத்தது. இதுதான் தவ வலிமை. தியான வலிமை.
முதலில் "நான்" என்ற அகந்தை போக வேண்டும். இந்த அகந்தை போவது என்பது வேகப்பட்ட விஷயம் கிடையாது. என்னதான் சுய முயற்சி இருந்தாலும் யோகா, தியானம் இவற்றினை ஒரு நல்ல குரு மூலமாக பயில வேண்டும். கோவில், சித்தர் ஜீவ சமாதிகள் சென்று சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்தாலே ஏதோ ஒரு வழி கிடைக்கும். முடியவில்லை என்றால் வீட்டிலேயே சிறிது நேரம் அமைதியாய் இருந்தாலே வழி நமக்கு பிறக்கும்.
உருவ வழிபாடு என்பது மனதினை கட்டிப் போடத்தான். அணுவின் ஒரு துகளான இந்த ஆன்மாவினைத் தேடத்தான். மனம் செம்மைப்படும் பொழுது அரூபம்தான் நிலைக்கும். மந்திர சொற்கள் கூட இருக்காது. இந்த அரூபம் ஒரு வெளிச்சம் போல் விரிந்து கொண்டே செல்லும். பலரின் கேள்வி 'அப்படியானால் ஏன் இன்று பலரும் உயர்ந்த நிலை அடைந்தவர்கள் என்றும் நாம் கூறும் பலரும் பூஜை திருவிழா ஜெபம் என்று இருக்கின்றார்கள் என்றும் கேட்கின்றனர்.
மிகப் பெரிய படிப்பு படித்த ஆசிரியை பிரி கேஜி, எல்.கே.ஜி. என்று வரும் பொழுது ஏ பார் ஆப்பிள் என்றுதான் ஆரம்பிக்க முடியுமே தவிர பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என அவர்கள் படிப்பின் உயரத்தினை இங்கு பேச முடியாது. இது மனிதனை ஒழுங்குப்படுத்த முயலும் ஆரம்ப கட்டம் எனலாம். ஆனால் இதன் காலம் மிக நீண்டதாக அநேகருக்கும் இருக்கும். அதுதான் ஆன்மீகப் பாதையின் ரகசியம் ஆகும்.
சில காலங்களுக்கு முன்பு வரை புத்தகம் படிக்கும் வழக்கம் அநேகரிடம் இருந்தது. கருத்து சொற்பொழிவுகளும் நிறைய நிகழ்ந்தன. இது பக்க பலமாக இருந்தது. தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள முடிந்தது. பாவம், புண்ணியம் என்ற வார்த்தைகளுக்கு ஒரு மதிப்பு இருந்தது. சத்தியம் இருந்தது. இன்று அந்த நிலை சற்று மாறுபடுகின்றதோ என்று தோன்றுகின்றது. இன்று பல ஆடியோ, யூடியூப்களில் அநேக நல்ல பதிவுகள் உள்ளன. ஆனால் மக்கள் எளிதில் கவரப்படுவது அதிக தமாஷ், கேளிக்கை போன்றவற்றால்தான்.
பல நல்ல பிரிவுகளை பரிந்துரைக்கும் பொழுது ஞான வேதார்ந்த மகரிஷி அவர்களை பற்றியும் குறிப்பிட வேண்டும்.
கமலி ஸ்ரீபால்
அவரது உபதேசங்கள், பயிற்சிகளை நேரில் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. அவரிடம் பயிற்சி பெற்றவர்களும் மிகவும் கவனத்தோடு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். யூடியூப்களிலும் இவை உள்ளன. இவை அனைத்தையும் கேட்க வேண்டும். பழக வேண்டும். மிக எளிமையாய் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலேயே இருக்கும். வேதாந்த மகரிஷி கூறும் ஒன்று...
பாவம் என்றால் என்ன? என்பதன் விளக்கமாகும். மகரிஷி கூறும் விளக்கம் ஒருவர் தனது சொல்லால், செயலால், எண்ணத்தால், தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, எதிர்காலத்திலோ உடலையோ, மனதினையோ பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் அதுவே பாவம்.
எத்தனை பெரிய கருத்து! எத்தனை ஆழமான கருத்து எத்தனை எளிய வார்த்தைகளில் புரிய வைத்து விட்டார். அணு-பஞ்சபூதம்-அண்டம்-உலகம் என பிரித்துக் கொண்டால் ஓர் அறிவில் இருந்து ஆறிவு வரை பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் இருக்கின்றான். ஆக மனிதனிடம் அனைத்தும் பதிவுகளாக இருக்கின்றது.
பிறரை துன்புறுத்துவது, பிறரது உரிமைகளைப் பறித்தல், பிறர் வாழ்வின் சுதந்திரங்களைப் பறித்தல், போன்றவை பாவப் பதிவுகள் என குறிப்பிடுகின்றார். வேதாந்த மகரிஷி அவர்கள்.
பிராயசித்தம் செய்ய வேண்டும். நாம் செய்த துன்ப செயல் அடுத்தவர் மனதினை பாதித்து இருந்தால் மனதார உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தீய பதிவுகள் மீது நல்ல பதிவுகளை பதிவு செய்ய வேண்டும். இதற்கான உதாரணங்களையும் அவர் கூறுகின்றார். நீங்கள் அவரது பயிற்சி வகுப்புகள் மூலம் நல்ல விரிவான விளக்கங்களை பெற வேண்டும்.
அடுத்ததாக அடியோடு தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி நம் ஆன்மாவினை திசை திருப்ப குரு தேவை. மகான்களின் ஆசி தேவை. ஆனால் எடுத்தவுடன் குருமார்களிடம்
பெரிய விஷயங்களை எடுத்த எடுப்பில் கேட்காதீர்கள். நமக்கு முதலில் அதை வாங்கக் கூடிய, தாங்கக்கூடிய சக்தி இருக்காது. அதனை தாங்காது பொசுங்கி விடுவோம். நம் முயற்சிகளை ஒழுங்காய், நம் கடமைகளை சீராய் செய்வோம். அந்த இறைத் தன்மைக்கு நமக்கு என்ன, எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று தெரியும். இங்கு நான் பெரிய விஷயங்கள் என்று குறிப்பிடுவது பேராசையாக மனம் நினைப்பவற்றை பற்றியதும் தான். வேதாந்த மகரிஷி அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெறும் வாய்ப்பு என் கணவருக்கும், எனக்கும் கிடைத்த இறை அருள் என்றே கருதுகின்றேன்.
இப்படி பலவற்றினை கேட்கும் பொழுது ஆயிரம் சந்தேகங்கள் வரலாம். ஒரு நேரத்தில் உறுதியாய் இருந்த நம்பிக்கை- மறு நேரத்தில் மாறுபடலாம்.அசையா மன உறுதி ஏற்பட வேண்டும். நம் சுய சிந்தனை நமக்கு உறுதி அளிக்க வேண்டும். அதற்கு பல பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் படிக்க வேண்டும். இன்று காலத்திற்கு ஏற்றாற் போல் யூடியூப் வசதிகள் உள்ளது. சந்தேகம் வருவதால் உங்களை குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். சுவாமி விவேகானந்தருக்கு எழாத சந்தேகங்களா? அவர் எளிதில் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரை தன் குருவாய் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஏற்றுக் கொண்டபின் புள்ளி மாறவில்லை. சரி, இந்த வாரம் கொஞ்சம் (முழுமையாக முடியாது) சில ஞானிகள், பெருந்தலைவர்கள் பற்றி படிப்போமா?
* தலைவர் அம்பேத்கார் அவர்களின் சமுதாய சீர் திருத்தங்கள்.
* தந்தை பெரியார் அவர்களின் சமுதாய பணிகள்.
* யாணன் அவர்களின் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்+ சுவாமி விவேகானந்தர்.
* டாக்டர் ஷாலினி அவர்கள் பல தலைப்புகளின் கீழ் பேசிய பேச்சு. (குறிப்பாக பெண்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கான உரை) இவர் பேச்சில் எத்தனை ஆய்வுகளை இவர் செய்து இருக்க வேண்டும் என்ற ஆச்சரியம் எழும்.
இன்னும் வரலாற்றினை பிறகு வரும் கட்டுரைகளில் கூறுகிறேன். எங்கேயாவது உங்களின் மனம் அதிகம் ஈர்க்கப்படும். கண் மூடித்தனமான விருப்பம், கண் மூடித்தனமான வெறுப்பு எதிலும் வேண்டாம்.
இன்றைய விஞ்ஞானத்தின் முன்னேற்றம் லட்டு போல் பல நல்ல செய்திகளை உங்கள் முன் கொட்டுகின்றது. ஏன் இவற்றினை நாம் கேட்கக் கூடாது வீடியோ கேம், ஊர் வம்பு என காலத்தினை வீணடிப்பது தவறு.
நல்லதே படிப்போம்! நல்லதே சிந்திப்போம்! நல்ல செயல்களையே செய்வோம்.
- தூரத்தில் படகு வரும் சத்தம் கேட்டதும் அதோ வந்திட்டாங்க... நம்மை காப்பாத்திடுவாங்க... என்று மனதில் நிம்மதி பிறந்தது.
- மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போலாகிவிட்டது. சிரமப்பட்டது சரி. ஆனால் படமாவது ‘ஹிட்’ ஆகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மிகப்பெரிய ஏரி...
எதிர் பாராமல் ஏரிக்குள் சிக்கி கொண்டோம். எப்படி மீளப்போகிறோம் என்ற பயம்! ஒரு பக்கம் பயமுறுத்தியது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர்! யார் காப்பாற்ற வருவார்கள் என்றும் தெரியவில்லை. நேரம் செல்ல செல்ல பயம் மனதை கவ்வியது. எனக்கு நீந்த தெரியும். தண்ணீரில் குதித்து நீந்தி கரை சேருவோமா என்று யோசித்தேன். ஆனால் அவ்வளவு தூரம் நீந்த முடியுமா என்ற தயக்கமும் இருந்தது.
இருந்தாலும் வேறு வழியில்லை என்று முடிவு செய்து அஜய் என்ன செய்வது..? தண்ணீரில் குதித்து நீந்துவோமா என்றேன். அப்போது தான் தெரிந்தது அவர் என்னை விட அதிகமாக பயந்து போய் இருந்திருக்கிறார். அவருக்கு நீந்தவும் தெரியாது என்றார்.
என்ன செய்வது...? சற்று தூரத்தில் தண்ணீருக்குள் ஒரு பாறைக்குன்று தெரிந்தது. எப்படியாவது அந்த பாறைக்கு சென்று விட்டால் போதும். தைரியமாக இருக்கலாம். எப்படியாவது படக்குழுவினர் நம்மை காப்பாற்ற ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன்.
அதற்கு மிதவையை நகர்த்தி கொண்டு அந்த பகுதிக்கு செல்ல வேவண்டும். அது எப்படி? துடுப்பும் இல்லை. கைகளையே துடுப்பாக்கி கொள்ளலாம் என்று முடிவு செய்து மிதவையில் அமர்ந்து தண்ணீரை துளாவி விட தொடங்கினேன்.
மறுபக்கம் அவருக்கு தண்ணீரை துளாவவும் தெரியவில்லை. அதையும் சொல்லி கொடுத்தேன். மிதவை மெல்ல மெல்ல பாறையை நோக்கி நகர்ந்தது. பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் பாறையை நெருங்கி விட்டோம். அஜய் முதலில் பாறையில் குதித்து நான் ஏறுவதற்கு கை கொடுத்து உதவினார்.
தண்ணீரைவிட்டு பாறை யில் பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்டோம். இனி எப்போது மீட்க வரு வார்கள்...? எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். அந்த ஏரியில்
அந்த ஏரியில் படகு, பரிசல் போக்குவரத்து எதுவும் கிடையாது எங்களை மீட்பதற்குத் தான் படகு ஏற்பாடு செய்ய வேண்டும்.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. காலையிலும் சாப்பிடாததால் பசி வயிற்றை வதைத்தது. உச்சி வெயில் வேறு தாகத்தால் நாவும் வறண்டது. சுற்றிலும் தண்ணீர் இருந்தும் குடிப்பதற்கு வாய்ப்பில்லையே! என்ன செய்வது?
தாகத்தால் நாவும் வறண்டது பசியால் வயிறும், பயத்தால் இதயமும் தான் துடித்தது. நேரம் சென்றது தான் மிச்சம் ஆனால் யாரும் மீட்க வருவது போல் தெரியவில்லை.
மறுபுறத்தில்.....
கரையில் இருந்த படக்குழுவினர் எங்களை மீட்பதற்காக கயிறு தயார் செய்து இருக்கிறார்கள். அந்த கயிற்றின் ஒரு முனையை டிராலியில் கட்டி விட்டு, மறு முனையை மிதவையில் கொண்டு கட்டி இழுப்பதற்காக ஒருவர் கயிற்றை எடுத்து கொண்டு ஏரியில் குதித்து நீந்தியிருக்கிறார்.
கொஞ்சதூரம் நீந்தியவர் நீந்த முடியாமல் திணறியிருக்கிறார். விட்டால் அவர் தண்ணீரில் மூழ்கி விடுவார் என்று எப்படியோ சிரமப்பட்டு அவரை மீட்டு இருக்கிறார்கள்.
அந்த முயற்சியும் தோல்வி அடைந்ததால் எங்களை எப்படி மீட்பது என்று நினைத்து பதற்றத்தில் இருந்து இருக்கிறார்கள். படகுக்கு என்ன செய்வது? படகு வேண்டுமென்றால் செகந்திரபாத்துக்கு தான் செல்ல வேண்டும். என்று கூயிருக்கிறார்கள்.
உடனடியாக செகந்திரா பாத்துக்கு ஆட்களை அனுப்பி ஒரு மோட்டார் படகை ஏற்பாடு செய்து லாரியில் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். படகு புறப்பட்டதும் எல்லோர் பார்வையும் ஏரி மீது தான்.
தூரத்தில் படகு வரும் சத்தம் கேட்டதும் அதோ வந்திட்டாங்க... நம்மை காப்பாத்திடுவாங்க... என்று மனதில் நிம்மதி பிறந்தது.

படகு நெருங்கி வர வர மனதில் அப்படி ஒரு சந்தோசம். அப்பாடா.. இனி எப்படியாவது தப்பிவிடலாம் என்ற சந்தோசம் அது.
படகு வந்தது. எங்களை சுமந்தபடி கரை திரும்பியது. காலை 12 மணியளவில் தண்ணீரில் சிக்கிய நாங்கள் கரை திரும்பிய போது மாலை சுமார் 4 மணி இருக்கும் எங்களை பார்த்த பிறகு தான் படக்குழுவினருக்கும் நிம்மதி. அதுவரை அவர்களும் தவித்தபடி தான் இருந்து இருக்கிறார்கள்.
அன்றுடன் ஷூட்டிங்கை முடித்து விட வேண்டும் என்பது தான் திட்டம். ஆனால் முடியவில்லை.
மீதி காட்சியை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று அவசர அவசரமாக விமானத்தை பிடித்து சென்னை திரும்பினோம்.
நடந்த சம்பவத்தை பற்றி நினைக்க கூட நேரம் இல்லை. சென்னை திரும்பியதும் உடனடியாக அடுத்த படம் ஷூட்டிங்.
அது ஒரு இந்திப்படம். பிர்லா கோளரங்கத்தில் இரவு 9 மணிக்கு தொடங்கிய ஷூட்டிங் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்தது. பின்னர் வீடு திரும்பி சிறிது நேரம் தூங்கிவிட்டு மீண்டும் காலையில் எழுந்து அடுத்த ஷூட்டிங் புறப்பட்டேன். அந்த காலகட்டத்தில் அப்படித்தான். காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடுவது போல் ஓடிக்கொண்டிருந்தேன்.
ஆனால் என்னோடு நடித்த ஹூரோ அஜய் மிகவும் பயந்துவிட்டார். காய்ச்சல், வாந்தி, பேதி என்று நான்கைந்து நாட்கள் வீட்டிலேயே முடங்கி விட்டார் என்றார்கள்.
மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போலாகிவிட்டது. சிரமப்பட்டது சரி. ஆனால் படமாவது 'ஹிட்' ஆகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அது கூடுதலான மனச்சுமையைதான் கொடுத்தது.
இன்னொரு விஷயம். ஆபத்தில் சிக்கி மீண்ட அந்த ஏரி பக்கம் அதன் பிறகு இதுவரை சென்றதில்லை.
எனது சினிமா வாழ்க்கையில் இது திகில் நிறைந்த மறக்க முடியாத அனுபவம்.
அடுத்த வாரம் ஒரு ராஜகுமாரனுடனான சந்திப்பு பற்றிய சுவையான தகவல்களுடன் சந்திக்கிறேன்...
(தொடரும்.)
- பங்குச்சந்தைகளின் வளர்ச்சியினால் மத்தியதர வகுப்பினர் பலர் கோடீஸ்வரர்களான கதைகள் நமக்குத்தெரியும்.
- மற்ற செயற்கைக்கோள்களைப்போல பூமியைச்சுற்றாமல் பூமியின் சுழற்சிக்கேற்ப இதுவும் சுழலுவதால் பூமியின் ஒரே சில இடங்களைக்கண்காணித்து தகவல்கள் தந்து ஆராய உதவும்.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா கண்ட பல வெற்றிகளைப் பார்த்தோம். அவை வெறும் பண விரயம் அல்ல என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இஸ்ரோ சேர்மன் ஒரு முறை சொன்னார் இஸ்ரோவின் ஆராய்ச்சிகள் ஏதோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவது மட்டுமில்லை. அவர்களால் மிகத்துல்லியமாக சீதோஷ்ண நிலைமைகளையும் வரப்போகும் புயல் எச்சரிக்கைகளையும் முன் கூட்டியே அறிந்து வானிலை மையங்களுக்கு தெரியப்படுத்தி மீனவர்களை தக்க சமயத்தில் உஷார்படுத்த முடிந்திருக்கிறது. அடுத்த 100 வருடங்களுக்குத்தேவையான விஷயங்களின் முதல்கட்ட ஆராய்ச்சி களை இப்போதிருந்தே தொடங்குவதற்கான அளவில் திட்டங்கள் போடப்படுகின்றன. இப்போது செலுத்தப்பட்ட சந்திரயான் வெற்றிப்பயணம் உலகத்தையே நம்மை திரும்பி பார்க்கச்செய்திருக்கிறது..
விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவின் சரித்திரம் பொன்னேட்டில்…. ஆம் அதேதான்! இருபது வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் புவி நோக்கு செயற்கைக்கோள் ஐ.ஆர்.எஸ். 1ஏ –அனுப்பப்பட்டது. அதன் பிறகு இது வரை 10 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுவிட்டன. அவற்றில் ஆறு இன்னும் திருப்திகரமாக செயல்பட்டு நமக்கு வேண்டிய விண்வெளித்தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறன.
ஒரு காலத்தில் இந்த இஸ்ரோ அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டின் செயற்கைக்கோள்கள் அனுப்பிய தகவல்களை கொண்டே ஆராய்ச்சிகள் செய்து வந்த நிலை மாறி, இன்று இந்தியாவே பல வெளிநாடுகளுக்கு விண்வெளித்தகவல்கள் தரும் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பது நிச்சயம் இஸ்ரோவின் மறுக்க முடியாத சாதனையே. இதுவும் அவ்வளவு சுலபமாகக்கிடைத்த வெற்றியல்ல. பல வருடங்களாக இந்த இஸ்விரோவின் அலுவலர்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு கிளையிலும் பேசி மீட்டிங் போட்டு அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் என்னென்ன என்று பெரிய லிஸ்ட் எடுத்து பேயாய் உழைத்திருக்கிறார்கள். இஸ்ரோ செயற்கைக்கோள் அனுப்ப தயாராகியவுடன் அதிலிருந்து கிடைக்கப்போகும் தகவல்களை எடுத்துக்கொள்ள இந்த அரசு கிளைகள் ரெடியாக போட்டிபோட்டுக்கொண்டு வர, அப்புறம் என்ன, வெற்றிதான்.
இந்த செயற்கைக்கோள்களின் உறங்கா விழிகள் நமக்குத்தரும் தகவல்களின் விஸ்தீரணமும் பயன்பாடுகளும் அடர்த்தியும் சொல்லிமாளாது.
துல்லியமான பயிர் வளர்ப்பு ஏக்கரா, சாகுபடி அளவு, வறட்சி அல்லது வெள்ளத்தின் நஷ்ட கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பல்லுயிர் கண்காணிப்பு, நீர் மேலாண்மை, பனிப்பாறை ஆய்வு, தாது மற்றும் உலோக ஆய்வு, கடலியல் ஆராய்ச்சி என்று செயற்கைக்கோள் தரும் தகவல்களின் பயன்பாடு ஒரு நாட்டின் வாழ்வாதாரத்துக்கே மிக அத்தியாவசியமானதாகபோய்விட்டது.
கார்டோசாட் 2ஏ என்னும் செயற்கைக் கோளை 2007-ல் செலுத்தினார்கள். இதில் பல நிறங்களையும் தனித்தனியாகப் பகுத்துணரும் பான்-குரோமேடிக் கேமராவைப்பொருத்தியதால் பூமியின் சின்னச்சின்ன வித்தியாசங்களையும் துல்லியமாக கண்டறியமுடியும்.
ஏன், தெருவில் போகும் ஒவ்வொரு வாகனத்தைக்கூட கவனிக்க முடியும்! இப்படிப்பட்ட கேமிராவினால் நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளையும் கூர்மையாக கண்காணித்து, திட்டமிட்டு செயல்படுத்தமுடியும்.
இதற்கு முன் செலுத்தப்பட்ட காடோசாட் ஒன்றுடன் சேர்ந்து இவை இரண்டும் இன்னும் அதிக நிலப்பரப்பைக்கண்காணிக்க இயலும். கார்டோசாட் 2 இ வரை செலுத்திவிட்டோம். இனி 2எப் வருடக்கடைசியில் போகப்போகிறது. கிட்டத்தட்ட 600 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த செயற்கைக்கோள்கள் மூலம் நாம் அறியக்கூடிய தகவல்களின் முக்கியத்துவம் மிக அதிகம்.

மெகா-டிரோபிகியுஸ் என்னும் ஒப்பந்தத்தின்படி இந்தியாவும் பிரான்சும் இணைந்து செயல்பட்டு அனுப்பும் செயற்கைக்கோள் மிகப்பயனுள்ள ஆராய்ச்சிக்கான தகவல்கள் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கை கோளின் ஜியோ ஸ்டேஷனரி தன்மை ஒரு வித்தியாசமான அம்சம். மற்ற செயற்கைக்கோள்களைப்போல பூமியைச்சுற்றாமல் பூமியின் சுழற்சிக்கேற்ப இதுவும் சுழலுவதால் பூமியின் ஒரே சில இடங்களைக்கண்காணித்து தகவல்கள் தந்து ஆராய உதவும். இந்தத்தகவல்கள் இயற்கை வள ஆராய்ச்சிக்கு மட்டுமன்றி பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை கொண்ட தகவல்களைத்தரவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இன்றைய விஞ்ஞான முன்னேற்ற காலகட்டத்தில் ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆராய்ச்சியின் மூலம் தங்கள் நாட்டின் வளங்களைப்பற்றி நுட்பமாக ஆராய்ந்து அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் வழிவகை செய்யமுடியும் என்பதைக்கையில் எடுத்துவிட்டன. சாதாரண சிறிய நாடுகள் கூட தங்கள் பட்ஜெட்டில் இந்த விண்வெளி ஆராய்ச்சிக்கென கணிசமான தொகையை ஒதுக்கி வைக்கின்றன. ஆனால் அந்தச்சிறிய நாடுகளால் செயற்கைக்கோள்கள் செலுத்தும் தொழில்நுட்பத்திலோ அல்லது அதற்கான முதலீடுகளிலோ தாக்குப்பிடிக்க இயலாது. ஆகவே அவை அமெரிக்கா, இந்தியா போன்ற செயற்கைக்கோள் இயலில் மிக முன்னேறிவிட்ட நாடுகளிடம் காசு கொடுத்து தங்கள் நாட்டுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வேலையைத்தருகின்றன. இது நம் நாட்டுக்கும் இஸ்ரோவுக்கும் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் சேவையாகும்.
உலக விண்வெளி வர்த்தகத்தில் நம் இஸ்ரோவின் திறமையும் நம்பகத்தன்மையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இனி வரும் விண்வெளி வர்த்தக வருமானத்தில் கணிசமான பங்கை இந்தியாவுக்குக்கொண்டு வருவதில் இஸ்ரோ அரும்பணி ஆற்றப்போகிறது.
உலகமெங்கும் விண்வெளி என்பது ஆராய்ச்சியைத்தாண்டி வர்த்தகத்தினுள் நுழைய ஆரம்பித்துவிட்டது. விண்வெளி வர்த்தகம் என்பது இன்று கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள். கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களும் இந்த விண் வெளி இயல் வர்த்தகத்தில் உருவாகிச்செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய வென்ச்சர் பண்ட் என்னும் துணிகர நிதி நிறுவனங்கள் இந்தமாதிரியான விண்வெளி வர்த்தகம்தொடங்கும் கம்பெனிகளுக்கு முதலீடுகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வருவது இந்த விண்வெளி வர்த்தகம் இன்னும் இன்னும் விரிவடையப்போவதின் முன்னோட்டமே. ஏன் இந்தியாவிலேயே இன்று பல விண்வெளி வர்த்தக கம்பெனிகள் உருவாகி செயல்பட்டு வருகின்றதை பார்க்கிறோம்.
தனியார் மயமாக்குதலின் நல்ல அம்சங்களில் ஒன்று சாதாரண மனிதனும் செல்வந்தனாக முடிவதே. பங்குச்சந்தைகளின் வளர்ச்சியினால் மத்தியதர வகுப்பினர் பலர் கோடீஸ்வரர் களான கதைகள் நமக்குத்தெரியும்.
"என்னப்பா, ஒரு மாசமா ஆளையே காணலை?"
"அதா, ஒரு டிரிப் சுவிட்சர்லாந்துக்கு போயிருந்தேன் குடும்பத்தோட!"
" என்னது சுவிட்சர்லாந்தா…?"
"வாயைப்பொளக்காத! போன வருஷம் இஸ்ரோ ஷேர் வாங்கியிருந்தேன். இப்ப மார்க்கெட் விலை எங்கயோ போயிடுத்தே! அதான் 100 ஷேர்களை வித்து வந்த லாபத்துல பாரின் டூர்! இன்னொரு 100 வித்து பொண்ணு கல்யாணதையும் முடிச்சுடலாம்னு பாக்கறேன்!"
பாரத ரத்தினங்கள் என்று வெற்றிகரமான அரசு நிறுவனங்களின் பங்குகளை நாட்டு மக்களுக்கு விற்கும் நாள் வந்துவிட்ட நிலையில், கூடிய விரைவில் இந்த சம்பாஷணையையும் நாம் கேட்க முடியும்!
- ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும். அது சூரனை சென்று தாக்கும்.
- பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும்.
சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு.
சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டார்.
சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெரு வாழ்வு தந்தருள்கிறார்.
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புடைய முருகன்-சூரபத்மன் போர் எப்படி நடந்தது தெரியுமா?
மொத்தம் 6 நாட்கள் போர் நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும். ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று இங்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார். ஆறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுரு, வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்ட திக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் முருகப்பெருமான் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்.
முன்னதாக சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்படும் சூரன் திருச்செந்தூர் நகரில் ரத வீதிகளை வலம் வருவான்.
அப்போது சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும், இங்கும் அசைத்தபடி வருவான். சூரன் முன்னே முரசு ஒலித்தபடி செல்வார்கள்.
சூரன் கடற்கரைக்கு வந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரனும், முருகனும் போர் செய்யும் காட்சியை காண ஒன்று திரண்டு நிற்பார்கள். விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள். இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருள்வார். அப்போது இயற்கை காட்சியில் கூட மாற்றங்கள் ஏற்படும். கடல், ஆகாயத்தின் செந்நிறமாக மாறும். கடற்கரையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அசாதாரண அமைதி நிலவும்.
போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வரும். பின்னர் சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின் வாங்கி செல்லும். இதைத் தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும். அது சூரனை சென்று தாக்கும்.
சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான். முதலில் யானை முகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக சாமியைச் சுற்றி வருவான். முருகன் சார்பாக அர்ச்சகர் அவன் நெற்றியில் குத்தி வீழ்த்துவார். இதைத்தொடர்ந்து உடலில் சிங்க முகா சுரன் தலை பொருத்த ப்படும். சிங்க முகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்து வார்கள்.
அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்படும். சூரபத்மனும் வீழ்த்தப்படுவான்.
இந்த போரின் போது பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும்.
சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றி கொண்டே இருப்பான். அவனை ஜெயந்தி நாதர், வதம் செய்வதை பக்தர்கள் கண்டு களிப்பார்கள். போரின் போது ஜெயந்தி நாதருடன் தேவர் படையும், சூரனுடன் அசுரர் படையும் இருப்பது போல் பக்தர்கள் இரண்டு பிரிவாக எதிர் எதிரே வேல் மற்றும் ஆயுதங்களை வைத்து கொண்டு செல்வார்கள்.
இந்த போரின் போது ஒரு கட்டத்தில் சூரன், விநாயகர் தலையுடன், ஜெயந்தி நகர் முன்பு தோன்றுவான். அவனது மாயத்தை கண்டு சற்று தடுமாறும் ஜெயந்திநாதர், சூரனின் தந்திரத்தை புரிந்து கொண்டு அவனது யானை தலையையும் துண்டித்து விடுவார்.
நான்காவது மாமரமும், சேவலும் சூரனின் உடலில் பொருத்தப்படும். மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறந்து விடும். அத்துடன் சூர சம்ஹாரம் முடியும். சூரனை, ஜெயந்தி நாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக ஆட்கொள்வார். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். சூரசம்கார நிகழ்ச்சி முடிவடைந்ததும் 6 நாட்களாக சஷ்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் கடலில் குளித்து விட்டு விரதத்தை முடித்து உணவு உட்கொள்வார்கள்.
ஜெயந்திரநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். சாயா என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது.
தெய்வானை திருக்கல்யாணம்:
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத் தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்த சஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள்.
மாலையில் குமரவிடங்கர், சண்முகப் பெருமானின் பிரதி நிதியாக தபசு மண்ட பத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள் பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிபடுத்துகின்றனர்.






