என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சகல தோஷங்களையும் விரட்டும் சுயம்புலிங்க அபிஷேக தைலம்
    X

    சகல தோஷங்களையும் விரட்டும் சுயம்புலிங்க அபிஷேக தைலம்

    • தைலத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் சகலவித தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.
    • ஆண்டுக்கு ஒரு தடவை கிடைக்கும் வாய்ப்பு என்பதால் இது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    திருவொற்றியூர் தியாகேசர் சிவாலயம் ஏராளமான தனி சிறப்புகளைக் கொண்டது.

    முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா வழிபட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்பக் கோள வடிவத்திலிருந்து திருவொற்றியூரில் மகிழ மரத்தடியில் சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது.

    பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர்" என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் அதாவது சுயம்பு லிங்கத்தில் இன்றும் காணலாம்.

    ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் வரி விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    இங்கு சிவபெருமானை வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன.

    இது நந்தி தேவருக்காக சிவபெருமான் பத்ம தாண்டவம் ஆடிய தலம். திருவொற்றியூரில் வசித்த ஏலேல சிங்கர் என்பவர் மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயம் காசியில் இருந்து வந்த சிவ பக்தர்கள் இருவருக்கு அந்த மாணிக்கத்தை கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது சிவபெருமானே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர் மாணிக்கத் தியாகர் என்று அழைக்கப்படுகிறார்.

    சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார்.

    'வட்டப்பாறை அம்மன் ' (காளி) ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.

    பட்டினத்துப் பெருமானுக்குப் பேய்க் கரும்பு இனித்த இடம் இது ஆகும். ஆதலின் தனக்குரிய இடம் இதுவே என்று முடிவு செய்து கடற்கரையொட்டிய இவ்விடத்தில் சமாதியா னார் என்பது வரலாறு.

    நாக வடிவில் அமைந்துள்ள சிவலிங்கத் திருமேனி. சிவலிங்கமும், ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன. சதுர வடிவமான கவசம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் இக்கவசம் அகற்றப்பட்டு புனுகுசட்டம், சவ்வாது, சாம்பிராணித் தைலம் ஆகியவை மட்டுமே சார்த்தப்படுகிறது. இந்நாள் முதலாக மூன்று நாள்களுக்கு மட்டுமே சுவாமி, கவசம் இல்லாதிருப்பார்.

    தேவாதி தேவர்கள் திருவொற்றியூர் இறைவனுக்கு பூஜை செய்ய ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் திருவொற்றியூர் வருவதாக வரலாறு. அதனால் ஆண்டு தோறும் கார்த்திகை பவுர்ணமியில் மாலை 6 மணியளவில் படம்பக்கநாதரின் மேல் அணிவிக்கப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடை பெறுகிறது. இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இப்பூஜை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    நாளை மாலை 6 மணிக்கு மூலவர் கவசம் அகற்றப்படும். ஒரு மணி நேரம் சுயம்பு லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிறகு 7 மணி முதல் சுயம்பு சிவலிங்கத்தை பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள். இரவு 9 மணி வரை வழிபடலாம். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுயம்புலிங்கத்தை பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள். அதுபோல 28-ந்தேதியும் (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கவசம் இல்லாமல் ஆதிபுரீஸ்வரரை பக்தர்கள் வழிபட முடியும்.

    இந்த சுயம்பு சிவலிங்கம் நாக வடிவத்தில் உள்ளது. 3 தலை பாம்பு இருப்பது போல அந்த சுயம்பு லிங்கம் அமைந்திருக்கும். கடல் அலை திரண்டு வருவது போலவும் காட்சி அளிக்கும். இதை வழிபடுவது மிக மிக சிறப்பானது.

    சிறப்புமிக்க இந்த சுயம்பு சிவலிங்கத்துக்கு பக்தர்கள் தைல காப்புக்கு உதவலாம். இதற்கான தைலம் ஆலய வளாகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. நாம் வாங்கி கொடுத்துவிட்டால் தைலம் சாத்தும்போது அதை அர்ச்சகர்கள் பயன்படுத்தி கொள்வார்கள்.

    இந்த சுயம்பு சிவலிங்கம் 4 யுகங்களுக்கு முன்பு தோன்றியதாக வரலாறு உள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதற்கு சான்றுகள் உள்ளன. மூவர் பாடிய இந்த தலத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கவசம் இல்லாத மூலவரான சுயம்பு சிவலிங்கத்தை தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியமாகும்.

    இந்த பாக்கியத்தை பெற ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவொற்றியூர் சிவாலயத்தில் திரள்வது உண்டு. இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் எளிதாக வழிபடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படும்.

    வரிசையில் நின்று வரும் பக்தர்கள் கவசம் இல்லாத சுயம்பு சிவலிங்கத்தை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிடைக்கலாம். ஆண்டுக்கு ஒரு தடவை கிடைக்கும் வாய்ப்பு என்பதால் இது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    திருவொற்றியூர் சிவாலயத்தில் தினமும் 4 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. 8 மணிக்கு காலசாந்தியும், மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். வழக்கம்போல இந்த 4 கால பூஜைகள் நடந்து கொண்டே பக்தர்கள் கவசம் இல்லாத சுயம்பு சிவலிங்கத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    பூஜையில் ஈசனுக்கு சாற்றப்பட்ட ஜவ்வாது, புணுகு சாம்பிராணி (தைலம்) பக்தர்களுக்கு வழங்கப்படும். தைலத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் சகலவித தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். எனவே நாளை கார்த்திகை பவுர்ணமியில் இறைவனை புற்றுவடிவமாக இருப்பதை கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

    3 நாள் தரிசனத்துக்கு பிறகு மூலவர் சுயம்பு சிவலிங்கம் மீண்டும் கவசம் சார்த்தப்பட்டு விடும். அதன் பிறகு ஆண்டு முழுவதும் சுவாமி கவசத்துடனேயே காட்சியளிப்பார். அபிஷே கங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடைபெறும்.

    பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 19-வது தலமாக திருவொற்றியூர் இருக்கிறது. திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற 27 நட்சத்தி ரங்களின் பெயரில் இத்தலத்தில் அமைந்துள்ள சிவலிங்கங்களில் தங்கள் நட்சத்திரத்துக்கு உரிய சிவலிங்கத்தை வழிபாடு செய்வதன் மூலம் பலன் பெறலாம்.

    இவ்வாலயம், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையி லும், பௌர்ணமி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாளில் மேலூருக்கு காலை வேளையில் சென்று இச்சா சக்தியான திருவுடையம்மனையும், பகல் வேளையில் திருவொற்றியூரில் உள்ள ஞான சக்தியான வடிவுடையம்மனையும், மாலை வேளையில் திருமுல்லைவாயில் சென்று கிரியா சக்தியான கொடியிடையம்மனையும் தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வாறு ஒரே நாளில் தரிசனம் செய்வோர், இப்பிறவிலேயே சகல நலன்களும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.

    Next Story
    ×