என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

துல்லியமான நேரம் உண்டா?
- பூமியை விட இந்த அட்டாமிக் கடிகாரங்கள் துல்லியமானவை! இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாமும் துல்லியமாகிக்கொண்டு வருகிறோமே!
- டைம் என்பதே மனிதன் உண்டாக்கிய விஷயம்தானே...
பூமியை விட இந்த அட்டாமிக் கடிகாரங்கள் துல்லியமானவை! இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாமும் துல்லியமாகிக்கொண்டு வருகிறோமே!
டைம் என்பதே மனிதன் உண்டாக்கிய விஷயம்தானே...
"அப்படியே வாய தொறந்தா மாதிரி வெச்சுக்குங்க!"
"…………………….."
" இன்னும் ஒரே நிமிடம்தான், அப்படியே……"
" ஸ்ஸ்..ரொம்ப வலிக்குது டாக்டர்! இன்னும் எத்தனை நாழி?"
"ரெண்டு நிமிடம் கூட ஆகலை சார்! என்ன பண்றது, இத்தன பெரிசா கேவிட்டி இருக்கே!"
"வலி உயிர் போறது டாக்டர்! ரெண்டு நிமிடந்தானா ஆச்சு!"
மேற்சொன்ன ஆசாமி அப்படியே பல் பிடுங்கின கையோடு பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரிக்குப்போகிறார்.
ஒரு அரை வீசை அல்லது முக்கால் பலம் எனர்ஜியை பிளாஸ்கில் போட்டு எடுத்து வந்து மேடையில் வீசி விடுகிறார் பாடகி. "கணீர்" ஸ்தாயியில் வராளி ராகத்தில் எடுக்கும்போதே இங்கே கை தட்டல்! கரகரபிரியாவில் விஸ்தாரமாக ராகம், தாளம்.
அதோ! அந்த குழந்தை தவழ்கிறது. கன்னத்தை வழித்து கொஞ்சுகிறார். அந்தக்குழந்தை தடுமாறி நிற்க முயல, கைகளைப்பிடித்து "வா வா" என்று நடை பயில்கிறார். அந்தக்குழந்தை தள்ளாடி தத்தி நடக்கிறது. இரண்டு கைகளையும் கோர்த்து தம்முடனே அழைத்துச்செல்கிறார்கள். இப்போது அந்தக்குழந்தை ஒரே ஓட்டமாய் ஓடுகிறது. பின்னாலேயே ஓடி அதன் வழிக்கு முதலில் விட்டு, லாவகமாய் தம் வழிக்கு இழுத்து உல்லாச பயணம் போகிறார்கள்.
அங்கு மேடையோ பாடகியோ கச்சேரியோ இல்லை. ராகக்குழந்தை பாம்பே ஜெயஸ்ரீயுடன் ஒரு மகா தெய்வ விளையாட்டு நடத்தின ஆயாசத்தோடு கரகரபிரியா முடிவுக்கு வர, ஆடிட்டோரியம் பிளக்கிறது.
"என்னது மணி ஒம்பதரையாச்சா! நேரம் போனதே தெரியல! என்ன சங்கீதம்! "
நான் முதலில் சொன்ன ஆசாமி டெண்டிஸ்டிடம் பல் பிடுங்கிக்கொண்டு பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரி கேட்கப்போனாரே அவருக்கு பல் வைத்தியர் நாற்காலியில் இருந்த அதே நேரமா இங்கே கச்சேரியில் இருந்தது?
இரண்டும் ஒரே நேரத்துளிகள் தானா?
போன வாரம் இவர் டெண்டிஸ்டுடன் செலவிட்ட நேரமும் இன்று பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரியின் நேரமும் ஒரே வாட்ச்சில் இருந்து வந்த நேரம்தானா?
இந்தக்கேள்விகள் கேட்பது நானில்லை, பால் டேவிஸ் என்னும் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி!
"மனித குலத்துக்கான முக்கியமானவற்றின் அனைத்துக்கும் இதயம் போன்றது நேரம்!"
சொன்னது ஆல்பர்ட் ஐன்ஸ்டெயின்.
பான் நகரில் அழுக்கு காரை பெயர்ந்த சுவருடைய லாபரட்டரியில் உங்கள் வீட்டு காஸ் சிலிண்டர் மாதிரியான தோற்றத்தில் இருக்கும் அந்த வஸ்துவை மிக முக்கியமாக கண்காணிக்கிறார்கள். இந்த வஸ்து, ஆச்சரியப்படாதீர்கள், சீஷியம் அணு கடிகாரம்
மானாவாரியாகச்சுற்றி கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் அனுப்பும் 'பீப்'பில் இருந்து, இல்லை இல்லை, நீங்கள் நினைக்கும் 'அந்த' பீப் இல்லை, இது வேற, பாரீசுக்கு அருகில் இன்னொரு கட்டிடத்தில் தலை கலைந்த ஆசாமிகள் சிக்கலாக மெஷீன் எல்லாம் வைத்து ஆராய்ந்து உங்களின் ஆகாசவாணிக்கும் தூர்தர்ஷனுக்கும் சரியான டைமைச்சொல்ல, நீங்கள் அதைப்பார்த்து உங்கள் வாட்ச்சை சரி செய்து கொண்டு ஆபீசுக்கு லேட்டாகப்போகிறீர்கள்.
"என்ன பெரிய ஆபீசுக்கு லேட்டா வந்துட்டம்! உங்க பூமியே அப்பப்போ சுத்தி வரும்போது நேரம் தப்பிடறதே!"
ஆம் உண்மைதான்!
இதையும் செயற்கைக்கோள்கள் சொல்லிவிட, நம் பாரீஸ் ஆசாமிகள் உலகமெங்கும் கடிகாரங்களைச்சரி செய்யச்சொல்கிறார்கள்.
1994-ம் ஆண்டு ஜூன் 30 அன்று இந்த மாதிரி "ஒரு லீப் நொடி" அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணினது உங்களில் வல்லாரை லேகியம் சாப்பிடும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். ஆக பூமியை விட இந்த அட்டாமிக் கடிகாரங்கள் துல்லியமானவை! இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாமும் துல்லியமாகிக்கொண்டு வருகிறோமே!
நான் படிக்கும்போது ஒரு நொடி என்பது ஒரு நாளின் 1/86, 400 என்று படித்திருக்கிறேன். என் இரண்டாவது மகன் அதை ஒத்துக்கொள்ள மாட்டான்.
"சாரிப்பா! அதெல்லாம் அடாசு கணக்கு! இப்ப நொடிங்கறது சீஷிய்ம பேஸ்டு அட்டாமின் 9,192,631,770 துடிப்புக்கள், தெரியுமா!"
பால் டேவிஸ் சும்மா இல்லாமல் சில கேள்விகளை எழுப்புகிறார்..
"அப்ப மேலே சொன்னியே அந்த சிலிண்டர் கடிகாரத்தில், அதான் அட்டாமிக் என்னவோ, அதோட நேரம் என்பது என்ன?
"உங்க டைம் என் டைம் என்பது?"
"நாம் அறியாத இன்னொரு கிரகத்தில் வாழும் உயிரினங்கள் நம்மைப்போலவோ அல்லது இன்னமும் துல்லியமாக வேறு ஏதாவது நேரக்கணக்குகள் வைத்திருப்பார்களோ?"
அப்ப எதுக்காக அந்த அடாமிக் கடிகாரத்தை வைத்து நம் கடிகாரங்களைச்சரி செய்கிறோம்?
துல்லியமான நேரம் தேவைப்படுகிறது!
எதற்கு துல்லியமான நேரம்! அப்படி ஒன்று இருக்கிறதா?
சரி, நேரம் என்பதே மனித குலத்திற்காகத்தானா?
அப்ப நாம் ஏன் பூமியின் நகர்வைக்கணக்கிட்டுக்கொண்டிருக்கிறோம்! அது எக்கேடு கெட்டுப்போனால் என்ன, நாம் பாட்டுக்கு கோலமாவு கோகிலா சினிமாவுக்கு அரை மணி முன்னாலோ அல்லது நயன்தாரா திரையில் தோன்றிய பின்னரோ போனால் என்ன குடி முழுகிவிடும்!
இதற்கெல்லாம் விடை என்னிடம் இல்லை!
"ஐன்ஸ்டெயினின் ரிலேட்டிவிடி தியரி முழுமையானது இல்லை"என்று சொன்ன கையோடு பால் டேவிஸ் இன்னொரு குண்டைத்தூக்கிப்போடுகிறார்.
"பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பே டைம் என்று ஒன்று இருந்ததாக எண்ணிவிடக்கூடாது. டைம் என்பதே மனிதன் உண்டாக்கிய விஷயம்தானே!"
அடுத்த முறை அமெரிக்கா போகும்போது அரிசோனா பக்கமே போகக்கூடாது என்றிருக்கிறேன்!






