என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    எது உண்மையான சொத்து?
    X

    எது உண்மையான சொத்து?

    • ஒன்றைத் தேடிய முயற்சியில் அதனை அடைந்துவிட்டால் அத்தோடு திருப்தி அடைந்து விடுவதில்லை மனம்.
    • ஐயா! தாகம் உயிரை வாட்டுகிறது!; தண்ணீர் தாருங்கள்!; நான் அரசன்; விலையாக நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்

    சொத்துக் குறித்த செய்திகளை அறியப்போகும் சுகமான வாசகர்களே! வணக்கம்.

    விடுதலைப் போராட்ட வீரர் தோழர் ஜீவா அவர்கள் மகாத்மா காந்தியடிகளை, சிவகங்கையில் சந்தித்தபோது, "உங்கள் சொத்து எவ்வளவு" என்று காந்திஜி கேட்டாராம். அதற்கு ஜீவா, "இந்தியா தான் எனது சொத்து!" என்றாராம்; " இல்லை ஜீவா! நீங்கள் தான் இந்தியாவின் சொத்து!" என்று வாய்மை மொழி பகிர்ந்தாராம் காந்திஜி. விடுதலைப் போராட்டக் காலத்தில் நாடே நாட்டு மக்களின் சொத்தாக இருந்தது!; அதை அந்நியரிடமிருந்து மீட்பதே அவர்கள் வாழ்வதன் லட்சியமாகவும் இருந்தது.

    இன்று வாழ்க்கையின் நோக்கங்களும் லட்சியங்களும் மனிதருக்கு மனிதர் மாறுபட்டதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கின்றன.

    உயர் படிப்புப் படித்து உயர் பதவிகளில் அமர்வது!

    அரசியல் பதவிகளைப் பிடித்து அதிகாரப் பதவிகளை நிருவகிப்பது!

    கடினமாக உழைத்து வங்கிக் கணக்கில் கோடி கோடியாகப் பணம் சேர்ப்பது!

    எந்த வேலையும் செய்யாமல் அடுத்தவன் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பது!

    நேரம் தவறாமல் அறுசுவை உணவு உண்டு களிப்பது!

    ஊர் சுற்றிப் பார்ப்பது!

    உறங்கிக் களிப்பது!

    வசதியாக வீடுகட்டிச் சுகமாகக் குடியிருப்பது!

    உலகில் உள்ள நிலங்களையெல்லாம் தனக்கு உடமையாக்கிக் கொள்வது!

    ஏழு தலைமுறைக்குச் சொத்துக்கள் சேர்த்து வைப்பது!

    …. என ஆட்களும் கோடி! ஆசைகளும் கோடிகளாகவே விரிந்து கொண்டு செல்கின்றன.

    வாழ்க்கையில் எல்லோரும் ஒருவிதப் பரபரப்போடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம். 'ஏன் இந்த அவசரமோ?' என்று கேட்டால், 'எல்லாம் இந்த ஒரு ஜான் வயிற்றுக்காகத் தான்!' என்று எளிதாகப் பதிலைக் கூறி விடுகிறோம். உண்மையில் மனிதனுக்கான அடிப்படைத் தேவை எனப் பார்த்தால், உண்பதற்கு ஒருநாழி அரிசியும், உடுப்பதற்கு மேலொன்றும் கீழொன்றுமாக இரண்டு துணிகளுமே போதுமானது. ஆனால், நமது ஓட்டத்தைப் பார்த்தால் அதையும் தாண்டிய தேவைகளை நோக்கிய ஓட்டமாகவே இருக்கிறது.

    ஒன்றைத் தேடிய முயற்சியில் அதனை அடைந்துவிட்டால் அத்தோடு திருப்தி அடைந்து விடுவதில்லை மனம். அடைந்த அந்த ஒன்றிலிருந்து அதற்கும் மேலே ஒன்றைத் தேடிக் கிளம்பி விடுகிறது. சொத்துச் சேர்த்துச் சொத்துச் சேர்த்து அலுத்துப்போன மனிதனை இந்த உலகத்தில் காண்பதே அரிதாகிப் போய்விட்டது.

    சொத்துக்களை, அசையும் சொத்துக்கள், அசையாச் சொத்துக்கள் என இருவகைப்படுத்தலாம். உண்மையில் பார்த்தால் அவையெல்லாம் பொருள்கள். இப்போது நம்மிடம் இருக்கும் சொத்துக்கள் ஒருகாலத்தில் வேறு யாருக்கோ சொந்தமாக இருந்தவை: நம்முடைய காலத்திற்குப் பிறகு வேறு இன்னொருவருக்குச் சொந்தமாகி விடப் போகிறவை. அப்படியானால் நமக்கே உரிமையான உண்மையான சொத்து என்பது எது?.

    ஒரு புகழ்மிக்க துறவி பக்கத்து நாட்டில் இருப்பதாகவும், அவரது ஆசியும் ஆதரவும் பெற்றால் பல்லாண்டுகாலம் நலமான ஆட்சி செய்யலாம் என்றும் ஒரு நாட்டு அரசன் கேள்விப்பட்டான். உடனே பல்லக்குப் பரிவாரத்தோடு அமைச்சரை அனுப்பி அவரை அழைத்து வரச் செய்தான். துறவியும் எந்த வித மறுப்புமின்றி வந்து சேர்ந்தார்.

    அரண்மனையில் தங்குவதற்குத் துறவிக்கென ஒரு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டது. அரசனின் அறையில் உள்ள அத்தனை வசதிகளும் அங்குச் செய்யப்பட்டிருந்தன. துறவி உடுத்துவதற்கெனப் பலவிதப் பட்டாடைகள், உட்கார வைரச் சிம்மாசனம், படுக்க ரத்தினக் கம்பளங்கள் விரித்த படுக்கை.. எல்லாம் தயார் நிலையில் இருந்தன.

    அரசன் துறவியை அந்த அறைக்கு அழைத்து வந்து,'இந்த ஏழையின் குடிசைக்கு எழுந்தருளுங்கள் சாமி!' எனத் தன்னடக்கத்தோடு கூறுவது போலத் தற்பெருமையோடு கூறினான்.

    சிரித்துக்கொண்டே துறவி கூறினார், "அரசனே நான் சாதாரணத் துறவி காட்டுத் தரைகளில் படுத்துக், கனிகாய்களைப் புசித்துத் திரிபவன்!. எனக்கு எதுக்கப்பா இத்தனை விலை உயர்ந்த வசதிகள்? "

    "சுவாமி! நான் நாட்டுக்கு அரசன்! தாங்களோ மிகப்பெரும் துறவி! மற்றும் இப்போது எனது விருந்தாளியும் கூட! நான் எனது வசதி வாய்ப்புகள் மற்றும் செல்வ வளத்திற்கு ஏற்ப உங்களுக்கு எனது விருந்தோம்பலைச் செய்ய வேண்டும்!. எனது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?"- சற்று செல்வச் செருக்கோடு அரசன் பேசியதாகத் துறவிக்குப்பட்டது.அமைதியாக இருந்தார். அரசன் மேலும் பேசத் தொடங்கினான்.

    "துறவியாரே! இந்த நாட்டிற்கு என்று சொந்தமாக எத்தனை ஆயிரம் வேலி விவசாய நிலங்கள் இருக்கின்றன தெரியுமா? அரண்மனை கஜானாவில் எத்தனை ஆயிரம் எடைகளில் தங்கம், வைரம்,வெள்ளி,பவளம், முத்து, மணிகள் இருக்கின்றன தெரியுமா? இந்த அரண்மனையின் விலைமதிப்பு என்ன தெரியுமா? நாட்டில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களின் விலைமதிப்பு எவ்வளவு தெரியுமா?- அடுக்கிக் கொண்டே போனான் அரசன்.

    துறவி பேசத் தொடங்கினார்," அரசனே! நீ சொன்ன சொத்துக்களின் பட்டியல் உனக்கு வேண்டுமானால் பெருமையைத் தரலாம். ஆனால் இப்போது நீ சொன்ன உனது சொத்துக்களின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா?. உன்னிடம் ஒன்றிரண்டு வினாக்களைக் கேட்கப்போகிறேன்; பதிலைச் சொல்!"

    "அரசனே! நீ படைகளோடு காட்டிற்கு வேட்டையாடச் செல்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். நெடுந்தொலைவு சென்ற பிறகு வழி தவறி ஒரு பாலை வனப் பகுதிக்குள் தனித்து விடப்படுகிறாய். கொளுத்தும் வெய்யில்; தாகம் தீர்க்க எங்காவது தண்ணீர் கிடைக்காதா? என அலைந்து தேடுகிறாய். தாகம் உயிர்போகுமளவுக்கு வாட்டுகிறது.

    "அப்போது அந்த வழியே ஒரு வழிப்போக்கன் கையில் ஒரு குவளையோடு எதிரில் வருகிறார். அந்தக் குவளையில் பாதியளவுக்கு அழுக்குத் தண்ணீர் இருக்கிறது." ஐயா! தாகம் உயிரை வாட்டுகிறது!; தண்ணீர் தாருங்கள்!; நான் அரசன்; விலையாக நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்; அழுக்குத் தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை!" என்கிறாய்.

    "அந்த வழிப்போக்கன், "தண்ணீர் தருகிறேன்!. அதற்கு விலையாக உனது ராஜ்ஜியத்தில் பாதியையும் சொத்துக்களில் பாதியையும் எனக்குத் தருவாயா?" என்று கேட்கிறான். "தருகிறேன். தண்ணீரைத் தந்து எனது உயித் தாகம் தீருங்கள்" என்று கூறி, அந்த அரைக்குவளை அழுக்குத் தண்ணீரை வாங்கி, ஒரே மொடக்கில் குடித்து, தாகம் தீர்த்துக்கொண்டு அரண்மனை திரும்பி விடுகிறாய்.

    "நீ பாலைவனத்தில் குடித்தது அழுக்குத் தண்ணீர் என்பதால், எவராலும் குணப்படுத்த முடியாத வயிற்று நோய் உனக்கு வந்து விடுகிறது. எல்லா மருத்துவர்களும் குணப்படுத்த முடியாது எனக் கைவிரித்த பின், ஒரே ஒரு மருத்துவன் மட்டும்,' குணப்படுத்த என்னிடம் அதிசய மூலிகை இருக்கிறது; ஆனால் விலையாக மீதம் உன்னிடமுள்ள பாதி ராஜ்ஜியத்தையும் சொத்துக்க ளையும் எனக்குத் தர வேண்டும்' என்கிறான். ஒப்புக்கொண்டு, அவன் தந்த ஐந்தாறு மூலிகை உண்டு நீயும் உயிர் பிழைத்துக் கொள்கிறாய். ஆனால் அரசாங்கமும் சொத்துக்களும்?..

    "இப்போது சொல்! உன்னிடமுள்ள சொத்தின் மதிப்பு என்ன? அரைக்குவளை அழுக்கு நீரும்! ஐந்தாறு மூலிகையும் தானே!. இதை வைத்துக்கொண்டா இத்தனை ஆட்டம்?"- துறவியின் பேச்சில் மூச்சடங்கிப் போனான் அரசன்.

    சொத்துக்கள் பொருள்களாக இருக்கின்ற வரையில், நிரந்தரமற்ற மதிப்புக் கொண்டவையாகவே அவை இருந்து விடுகின்றன. பயன்படாத பொருள்களால் பலன் ஏதும் விளைந்துவிடப் போவதில்லை.

    சொத்துக்களைப் பணமாக, நகையாக, நிலமாக, பொருள்களாகச் சேர்க்கிறோம்;ஆனால் அதற்கு விலையாக நமது உடல் நலனை, மன நிம்மதியை, திரும்பப் பெற முடியாத நமது இளமைக் காலத்தை, மகிழ்ச்சியை இழந்து விடுகிறோம். இழந்த இளமையையும், இழந்த உடல் நலத்தையும், இழந்த குடும்ப நிம்மதியையும் சம்பாதித்த சொத்துக்களை வைத்து மீட்டு எடுத்து விட முடியுமா?.

    அப்படியானால் பொருளீட்டவே கூடாது என்று பொருளில்லை. பொருள் ஈட்டலாம்; சொத்து சம்பாதிக்கலாம். மகிழ்ச்சியாக, மன நிம்மதியாக, நாமும் மகிழ்வோடு, அடுத்தவரையும் மகிழ்வோடு வைத்திருந்து பொருளீட்டலாம். ஈட்டலின் ஒரு பகுதியை ஈதலுக்காகப் பயன்படுத்தலாம்.

    இந்த உலகின் செல்வங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமானவை. அவற்றில் சிலவற்றை நமது முயற்சியினால் நமது சொத்தாக நாம் பெற முடியும். ஆனாலும் அவை முழுக்க நமக்கு மட்டுமே பயன்தர வேண்டும் என்று நினைப்பதே அறிவீனம்.

    ஒரு நாட்டின் தலை நகரத்தில் அரண்மனையை யொட்டி ஒரு குடியிருப்புப் பகுதி இருந்தது.அதில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வீடுகட்டிக் குடியிருந்து வந்தன. திடீரென ஒருநாள், "அரசரின் அரண்மனை இங்கு விரிவாக்கப் படவுள்ளது; ஒரு வாரத்தில் இங்குள்ள வீடுகள் இடிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

    குடியிருப்புவாசிகள் ஒன்று திரண்டு மன்னரிடம் சென்று முறையிட்டனர். பலனில்லை. ஒரு வாரத்தில் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டனர். மக்கள் அந்த ஊரில் இருந்த துறவியிடம் சென்று முறையிட்டனர்.

    துறவி அரண்மனைக்குச் சென்று மன்னனைப் பார்த்தார். மன்னன் வணங்கி, "அழைத்தால் நானே வந்து தரிசித்திருப்பேனே! சுவாமிகள் எதற்கு இவ்வளவு தூரம்?" என்று கேட்டான்.

    "காரியம் எனக்குத் தானே நடக்க வேண்டும். அதனால் நேரில் வந்து விட்டேன்.

    அரசனே! நான் எனது மடத்தில் ஒரு புண்ணிய வேள்வி நடத்தப் போகிறேன்!. அதற்கு ஒரு சாக்கு மூட்டை நிறைய மண் வேண்டும்!. அதுவும் இப்போது நீ புதிதாக இடித்துப் போட்டிருக்கிறாயே குடியிருப்பு, அந்தப் பகுதியிலிருந்து வேண்டும்!. அதுவும் அந்த ஒருமூட்டை மண்ணையும் நீ உன் தோளிலேயே சுமந்து வர வேண்டும்!" என்றார் துறவி.

    துறவியின் புனிதக் கட்டளையை ஏற்று வியர்த்து விறுவிறுக்க சுமக்க முடியாமல் அந்தச் சாக்கு மூட்டையைச் சுமந்துவந்து போட்டான் அரசன். "மிகவும் கனக்கிறதா? நீ இடித்துப் போட்ட மண்ணில், அந்த ஒரு மூட்டையையே பாவ மூட்டையைப்போலச் சுமக்க மாட்டாமல் சுமந்து வந்தாயே! அந்தக் குடியிருப்பு முழுவதையும் இடித்த பாவத்தை எப்படிச் சுமக்கப் போகிறாய்! அபகரிப்பதால் சேர்வதல்ல சொத்து!; அடுத்தவர்க்கு உதவுவதால் ஈட்டுகிற புகழே உண்மையான சொத்து!" என்றார் துறவி.

    ஈட்டலும் இன்பம்! ஈதலும் இன்பம்!

    பெயரும் புகழுமே பொருளையும் பணத்தையும் விட உண்மையான சொத்து!

    தொடர்புக்கு ௯௪௪௩௧௯௦௦௯௮

    - முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    Next Story
    ×