search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: கோபம் இருந்த இடத்தில் குணத்தை பார்த்தேன்
    X

    மீனா மலரும் நினைவுகள்: கோபம் இருந்த இடத்தில் குணத்தை பார்த்தேன்

    • யாராவது தப்பு பண்ணிவிட்டாலோ, தாமதமாக வந்தாலோ... அவ்வளவுதான்... கோபத்தில் என்ன செய்வார் என்றே தெரியாது.
    • ‘சின்ன பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு’ என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறினார்.

    ஹீரோயின்னா ஆப்பிள் மாதிரி இருக்கணும்... பார்க்குறவங்க கண்களுக்கு அப்படி தெரியணும்!

    -இப்படி நினைப்பவர் டைரக்டர் ராகவேந்தர் ராவ். அவர் படம் என்றாலே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதனால் தெலுங்கில் அவர் படத்தில் நடிக்க எல்லா நடிகைகளும் ஆசைப்படுவார்கள்.

    ஷூட்டிங்கும் சாயங்காலம் ஆறுமணிக்கு மேல் இருக்காது. 6 மணி ஆனதும் ஷூட்டிங் ஓவர். கிளம்புங்க... போய் ரெஸ்ட் எடுங்க என்று எல்லோரையும் அனுப்பி விடுவார்.

    அவரது டைரக்ஷனில் அல்லாரி மொகுடு (குறும்புக்கார கணவன்) என்ற படத்தில் எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ராகவேந்தர் ராவ் டைரக்ஷன் என்றதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

    ஆனால் ஹீரோ மோகன்பாபு. அவரைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே கேள்விப்பட்டு இருந்தேன். ரொம்ப கோபக்காரர். சில நேரங்களில் அடிக்கவும் செய்வார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்ததால் அவருடன் எப்படித்தான் நடிக்க போகிறோமோ என்ற பயமும் மனதில் இருந்தது.

    இருந்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடிக்க தொடங்கினேன். அவரை பொறுத்தவரை நேரம் தவறாமையை கடைப்பிடிப்பவர். அதில் ரொம்ப கவனமாக இருப்பார். 10 மணிக்கு ஷூட்டிங் என்றால் ஐந்து நிமிடம் முன்னதாகவே தயாராக இருப்பார்.

    யாரிடமும் அதிகமாக பேசவும் மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். யாராவது தப்பு பண்ணிவிட்டாலோ, தாமதமாக வந்தாலோ... அவ்வளவுதான்... கோபத்தில் என்ன செய்வார் என்றே தெரியாது.

    நான் அவரிடமும் நல்ல பெயர் வாங்கியே தீர வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

    முதல் நாள் ஷூட்டிங்... அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்தது. முதல் காட்சியே கனவு காட்சி. பாடல்தான். அதை தான் படமாக்கினார்கள்.

    பக்கத்து ஷெட்டில் வேறொரு படத்தில் வெங்கடேஷ் நடித்து கொண்டிருந்தார். எங்கள் ஷெட்டுக்கு வந்தவர் என்னை பார்த்தார். எனது மேக் அப்பையும், காட்சியையும் பார்த்து 'ஏம்மா... இப்பதான் சாண்டி படம் பண்ணியிருக்கிறாய். அந்த கேரக்டர் மிகப்பெரிய பெயர் வாங்கி தந்தது. எனவே பார்த்துக்க...' என்றார்.

    ஆனால் எனக்கோ படத்துக்கு படம் வித்தியாசமாக நடிக்கணும் என்ற ஆசை. இப்படிப்பட்ட கேரக்டர். இப்படித்தான் நடிக்கணும் என்றெல்லாம் நினைப்பது கிடையாது.

    நல்ல கதை. அதற்கேற்ற கதாபாத்திரம்... அதைத்தான் நினைப்பேன். அல்லாரி மொகுடு படத்தில் என்னோடு ரம்யா கிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடித்தார்.

    படம் வளர்ந்து கொண்டிருந்தது. நான் நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருவது, டயலாக்குகளை மனப்பாடம் செய்து தப்பில்லாமல் பேசுவது எல்லாவற்றையும் மோகன்பாபு தினமும் கவனித்து இருக்கிறார்.

    அவர் அவ்வளவு சீக்கிரமாக யாரையும் பாராட்டமாட்டார். அவரே என்னை பாராட்டினார். 'சின்ன பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு' என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறினார்.

    அவரை போலவே நேரம் தவறாமை, தொழில் மீதான ஈடுபாடு ஆகியவற்றை பார்த்ததும் இந்த பொண்ணு நம்மை மிஞ்சி விட்டாள் என்று என்னை பார்த்து பயப்பட்டார். அவருக்கு 2 பையன், ஒரு மகள். என்னைவிட அவரது மகளுக்கு ஒரு வயது தான் அதிகம். அதனால் நாங்கள் தோழிகளாகிவிட்டோம். நேரம் கிடைக்கும் போது ஒன்றாக விளையாடுவோம்.

    ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓய்வு நேரத்தில் நாங்கள் 'மியூசிக்கல் சேர்' சுற்றி விளையாடுவோம்.

    அதை பார்த்து மோகன்பாபு 'ஏம்மா... நீ எனக்கு ஹீரோயின்தானே...?' என்பார். அதற்குள் அவரது மகள் உள்ளே புகுந்து விடுவாள். 'டாடி... எங்களை விளையாட விடுங்கள்' என்பாள்.

    அதை கேட்டு எல்லாம் உங்கள் ராஜ்யம்தான். விளையாடுங்க... விளை யாடுங்க.. என்பார்.

    இப்படி அந்த குடும்பத்துடன் ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடருகிறது. அவரை பார்த்து கோபக்காரர் என்று பயந்த நான் இப்போது அவரது குணத்தை பார்த்து பெருமைப்படுகிறேன்.

    கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை நானே அனுபவத்தில் பார்த்துவிட்டேன்.

    சுந்தரகாண்டா!

    தமிழில் பானுப்பிரியா நடித்து வெளிவந்த 'சுந்தரகாண்டம்' படத்தின் ரீமேக் தான் 'சுந்தரகாண்டா'.

    தமிழில் பானுப்பிரியா நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் தெலுங்கில் நான் நடித்தேன். ஹீரோ வெங்கடேஷ்.

    கதைப்படி நான் ஆசிரமத்தில் வாழ்ந்த அனாதை பெண். அங்கு சொல்லித்தரும் தேவனே... தேவனே... என்று வெகுளித்தனமாக சொல்வதையே பாடலாக பாடி வாங்கி கட்டுவேன். படம் நகைச்சுவையான படம்.

    அதே நேரம் கதாபாத்திரம் மிகவும் கனமானது. படத்தின் கிளைமேக்சில் ஏனுங்க.. ஏனுங்க... நானும் தப்பு பண்ணிட்டேன். நாளைக்கு நான் முதுகு தேய்த்து விடுறேன் என்ற படியே எனது கணவரை தேடி வர வேண்டும். அவர் வெளியே தான் படுத்திருப்பார்.

    அவரை காணாமல் நான் தேடுவேன். அப்போது ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இதை ஒரே காட்சியாக படமாக்க டைரக்டர் முடிவு செய்து இருந்தார். அதை ஒரு சவாலாகவே நினைத்து நடித்தேன்.

    முழு சீனையும் ஒரே டேக்கில் எடுத்துவிட்டனர். அது மறக்க முடியாத அனுபவம். படத்தில் நான் தெலுங்கில் திட்ட வேண்டும். அதற்காக தெலுங்கில் கெட்ட வார்த்தைகளை சொல்லித் தந்து அதனால் நான் பட்ட அவஸ்தையும் உண்டு.

    சாண்டி படத்தை போலவே சுந்தரகாண்டா படமும் பாடல் கேசட் விற்பனையிலும் சாதனை படைத்து பிளாட்டினம் விழா எடுத்தார்கள்.

    இந்த பட ஷூட்டிங் நடந்த போது தான் ஆலங்கட்டி மழையையும் முதல் முதலாக பார்த்தேன்.

    நான் தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வந்த போது வானத்தில் இருந்து பனிக்கட்டி துண்டுகள் சிதறியது போல் பொல பொல வென்று விழுந்தது. அதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அது தான் ஆலங்கட்டி மழை என்றார்கள்.

    மீண்டும் அடுத்த வாரம் புதிய அனுபவங்களுடன் வருகிறேன்.

    (தொடரும்)

    Next Story
    ×