என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 4.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,17,121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,18,594  பேருக்கும், டெல்லியில் 1,02,831 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,151ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 584 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 
    சித்தேரி அணைக்கட்டில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே குருவிநத்தம் தென்பெண்ணையாறு சித்தேரி அணைக்கட்டில் இருந்து மணல் கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையில் மணல் கடத்திச் சென்றவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    விசாரணையில் அவர் சோரியாங்குப்பம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்த அசோக்ராஜன் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் 6 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    திருக்கனூர்:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் வசித்த கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதை மீறி கூனிச்சம்பட்டில் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறியதாக அஜித் (வயது 26) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் வாதானூரில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறி தெருவில் சுற்றித்திரிந்ததாக உதயகுமார் (35) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை தர முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 719665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 467 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20160 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 439948 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 15515 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 259557 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    புதுச்சேரியில் இன்று மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1,041 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை தர  முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு வாரத்தில் கொரோனா சோதனை மையம் அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.






    கடைகளில் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முககவசம் அணிவது, ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவது குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். அது தொடர்பாக தனது மதிப்பீடுகளை சமூக வலைதளத்திலும் பதிவிடுகிறார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:- வில்லியனூர், பள்ளூர் ஆகியவையின் செயல்பாடு மோசமாக உள்ளது. அவை தனது செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும். நெட்டப்பாக்கம், நெடுங்காடு, நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்களின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. அவைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் வேண்டும்.

    காரைக்கால் ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டில் பூஜ்ஜியம். அதுபோல் மாகியில் முன்னேற்றம் காண செயல்பட வேண்டும். ஏனாமும் சற்று அதிக முன்னேற்றம் காண வேண்டும். ஒவ்வொருவரும் ஆரோக்கிய சேது செயலியை உபயோகப்படுத்த வேண்டும். நெட்டப்பாக்கம் கொம்யூன் நல்ல முன்னேற்றம். மற்ற சிலவற்றிலும் முன்னேற்றம் வேண்டும். காரைக்கால் இன்னும் பின் தங்கியுள்ளது. தொழிலாளர் துறை பூஜ்ஜியம் என்று அறிவித்துள்ளது. தொழிலாளர் துறை, உள்ளாட்சி துறையுடன் இணைந்து கடைகளில் இந்த ஆரோக்கிய சேது செயலியை உபயோகப்படுத்த கற்பிக்க வேண்டும். ஏனெனில் இந்த தொற்றின் மூலஆதாரமே கடைகள்தான். சமீப நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஐக்கிய சேவைகளின் இணைய தளத்தை பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    புரட்சிக்கவிஞர் என போற்றப்படும் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் இன்று காலமானார்.
    புதுச்சேரி: 

    புரட்சிக் கவிஞர் என போற்றப்படும் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன்(92), புதுச்சேரியில் வசித்து வந்தார். 

    தமிழறிஞரான இவர் பாரதிதாசனின் வரலாற்றை எழுதியவர். தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றும் பல நூல்களை எழுதியுள்ளார்.

    புதுச்சேரியில் வசித்து வந்த மன்னர் மன்னன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்க உள்ளது.

    இவரது சேவையைப் பாராட்டி தமிழக அரசு திரு.வி.க. விருது, கலைமாமணி விருதுகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மன்னர் மன்னன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் யோசனை தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டாக்டர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:-

    கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள காலதாமதமாவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே கூடுதலாக டாக்டர்கள், பணியாளர்களை நியமித்து ஒரு மணி நேரத்துக்குள் மாதிரி எடுத்துவிட்டு பொதுமக்களை அனுப்ப கேட்டுக் கொண்டுள்ளேன்.

    நான் ஆய்வுக்கு செல்லும் போது வழுதாவூர் சாலையில் திருவிழா போன்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் மக்கள் பொருட்கள் வாங்க ஒட்டுமொத்தமாக கடைவீதிக்கு வந்துள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை போல் புதுவையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தலாம். இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் பேசுவேன்.

    கடந்த 1-ந் தேதி முதல் ஏனாம் பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. 4 வருடமாக சம்பளமும் உயர்த்தப்படவில்லை. எனவே நோட்டீஸ் கொடுத்துவிட்டு பணிகளை செய்யாமல் உள்ளனர். இதுதொடர்பாக அரசு முடிவு எடுத்தாலும் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஊழியர்களின் போராட்டத்தால் அப்பகுதி மக்களுக்கு ஏதேனும் சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு கவர்னர் தான் பொறுப்பு. அங்கு உள்ள பிரச்சினைகள் தலைமை செயலாளர் மற்றும் அரசு செயலாளர்களுக்கு நன்கு தெரியும்.

    புதுவையில் துப்புரவு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்துக்கு மாதந்தோறும் முறையாக பணம் வழங்க ஒப்புதல் அளிக்கும் கவர்னர் கிரண்பெடி, ஏனாம் பணிகளுக்கு மட்டும் ஒப்புதல் தரவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். கவர்னர் கிரண்பேடி ஏனாம் மக்கள் மற்றும் மீனவ மக்களை புறக்கணிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாம் தொற்று நோய் வழக்கு சம்பந்தமான பதிவுகளை அதிகப்படுத்தும்போது, அது நமது பாதுகாப்பை பலப்படுத்தும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இது மிகவும் குறைவாக உள்ளது. உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களின் மூலம் இதை இன்னும் நன்றாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் துறையும் செயல்பாட்டினை அதிகப்படுத்த வேண்டும்.

    இன்னும் முககவசத்தை அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். இந்த விளக்க அறிக்கையை பார்த்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் மக்களை பாதிக்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியில் ஒரேநாளில் 65 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,011ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியா முழுவதும் 6,97,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,53,287 சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,24,433 குணமடைந்துள்ளனர். 19,693 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,011ஆக உயர்ந்துள்ளது.
    கிருமாம்பாக்கம் ஏரிக்கு ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த டெலிகான் பறவைகளும், உள்நாட்டு இனங்களான கொக்கு, நாரை, நத்தை கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகளும் வந்த வண்ணம் உள்ளன.
    பாகூர்:

    புதுவை மாநிலம் முழுவதும் உள்ள 84 ஏரிகளில் பாகூர் பகுதியில் மட்டும் 24 ஏரிகள் அமைந்துள்ளன. இங்கு மழைநீரை தேக்கி வைத்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஏரிகளில் தண்ணீர் இருக்கும் போது வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் இனப்பெருக்கம் மற்றும் உணவிற்காக படையெடுத்து வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் அனைத்து ஏரிகளும் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் பறவைகள் உணவு தேடி வேறுபகுதிக்கு சென்றுவிட்டன. ஒருசில வெளிநாட்டு பறவைகள் மட்டும் சுற்றித்திரிந்து வருகின்றன.

    கிருமாம்பாக்கத்தில் உள்ள சின்ன-பெரிய ஏரிகளில் குறைந்த அளவே தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு உணவு தேடி ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த டெலிகான் பறவைகளும், உள்நாட்டு இனங்களான கொக்கு, நாரை, நத்தை கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்த பறவைகளை கண்டு கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரசித்து விட்டு செல்கின்றனர்.
    புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 946ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,227 லிருந்து 4,09,083 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 946ஆக உயர்ந்துள்ளது. 
    பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் ரவுடிகள் ஆயுதங்களுடன் பொதுமக்களை மிரட்டியபடி ஊருக்குள் வலம் வந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்தவர் முகிலன் (25). ரவுடிகளான இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையொட்டி ஒருவரை ஒருவர் கொலை செய்வது தொடர்பாக சதி திட்டம் தீட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி அருண்குமாரை கொலை செய்யும் நோக்கத்துடன் முகிலன், அவரது தம்பி முரளி (20), கூட்டாளி சந்துரு (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்துக்கு வந்தனர். அப்போது முரளி, சந்துருவை 10-க்கும் மேற்பட்டவர்களால் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

    இந்த இரட்டைக்கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், அவரது கூட்டாளிகளான பிரம்நாத் (25), சிலம்பு செல்வன் (25) உள்பட 6 பேரை கைது செய்து கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் பிள்ளையார்குப்பத்தில் கொலை சம்பவம் நடப்பதற்கு முன் ரவுடிகளான முரளி, சந்துரு ஆகியோர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஊருக்குள் வலம் வந்து பொதுமக்களை மிரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதாவது எதிர்தரப்பை சேர்ந்த அருண்குமார் மீது வெடிகுண்டு வீசியநிலையில் தப்பி ஓடியதையடுத்து அவரை ரவுடிகளான முரளி, சந்துரு ஆகிய இருவரும் ஊருக்குள் புகுந்து தேடி அலைந்த காட்சி அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அருண்குமாரை கொலை செய்ய முயன்று தப்பிச் சென்ற முகிலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முரளி, சந்துரு ஆகியோரது உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    இதையடுத்து வழுதாவூர், கொடாத்தூரில் ரவுடிகளின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. முரளி, சந்துருவின் இறுதி ஊர்வலத்தில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்களில் வந்து கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொரோனா காரணமாக இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஆனால் ரவுடிகள் முரளி, சந்துருவின் இறுதி சடங்கில் 200 பேருக்கு மேல் கலந்து கொண்டதால் வழுதாவூர் காலனி முன்னாள் தலைவர் செந்தில் உள்பட பலர் மீது கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ரவுடிகள் கொலை சம்பவத்தையொட்டி வழுதாவூர் பகுதியில் கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
    ×