என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை என கவர்னர் கிரண்பேடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இது ஒரு தொற்று மற்றும் பேரழிவு மேலாண்மை சட்ட விதி மீறல்கள் பற்றிய பகுத்தாய்வு. உழவர்கரை நகராட்சி, அரியாங்குப்பம் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் இன்னும் சிறப்பாக செய்ய முடியும். காரைக் காலில் நிரவி, கோட்டுச்சேரி, திருநள்ளாறு மற்றும் நெடுங் காடு ஆகியவையும் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் அவர்களது செயல்பாடுகள் மோசமாக உள்ளன. மாகி மற்றும் ஏனாமில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. காரைக்காலில் சமூக விலகல் மிகவும் மோசமாக காணப்படுகிறது.

    இதேபோல் தொழிலாளர் துறையில் ஆரோக்கிய சேது செயலியை எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும். மாகி போலீஸ் நிலையம் மற்றும் நகர மற்றும் போக்குவரத்து நகரம் இதேபோல் இன்னும் நன்றாக செயல்பட வேண்டும். குறிப்பாக லாஸ்பேட்டை, பெரியகடை, முத்தியால்பேட்டை, திருக்கனூர் நகர காவல் நிலையம், டி.ஆர்.பட்டினம் இன்னும் நன்றாக செயல்பட வேண்டும்.

    முதலியார்பேட்டை, வில்லியனூர், திருக்கனூர் செயல்பாடு குறைவாக உள்ளது. பல்லூர் பூஜ்ஜியமாகும். டி.ஆர்.பட்டினம் மற்றும் பல்லூர் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இவை இன்னும் நன்றாக செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், வழக்கு சுமைகளை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் இந்த அறிக்கையை மேம்படுத்த உழைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்குப்பதிவு செய்ய விடுமுறை இல்லை. சில இடங்களில் ஞாயிறு சந்தைகளில் கூட்டங்கள் கூடலாம். இவைகளை தடுக்க வேண்டும் அல்லது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடல்நலம் விசாரித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 904 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று காலை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகளை நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் உடல் நலம் விசாரித்தார். அப்போது நோயாளிகளிடம் உணவு, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதற்கு நோயாளிகள் நல்ல தரமான உணவு வழங்கப்படுவதாகவும், டாக்டர்கள் தங்களை கனிவுடன் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர். சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

    மேலும் மருத்துவமனை வளாகம் கழிப்பறை உள்ளிட்டவற்றை சுத்தமாக வைத்திருக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார். அப்போது கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் டாக்டர்கள் ரகுநாதன், ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதன்பின் சட்டசபைக்கு திரும்பிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனா நிலவரம் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் நேரடியாக விளக்கினார். பின்னர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது கிராமங்களில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் உமிழ்நீர் மாதிரிகள் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 140 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவை அருகே ரவுடிகள் 2 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). ரவுடி. இவருக்கும் தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த முகிலன் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்வது தொடர்பாக சதி திட்டம் தீட்டி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சங்கராபரணி ஆற்றில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து முகிலன், அவரது தம்பி முரளி (20), கூட்டாளியான கொடாத்தூரை சேர்ந்த சந்துரு (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அருண்குமாரை கொலை செய்ய முயன்றனர். ஆனால் அந்த கும்பலிடம் பிடிபடாமல் அவர் தப்பி ஓடினார்.

    இதையடுத்து முகிலன், முரளி, சந்துரு ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்குப்பம் சாலை வழியாக சென்றனர். அப்போது கைகளில் ஆயுதங்களை சுழற்றியபடி சென்ற அவர்களை, கிராம மக்கள் மடக்கிப்பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் ஆயுதங்களை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டினர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், செங்கல், உருட்டுக்கட்டைகளை எடுத்து வீசி அவர்களை தாக்கினர். இதில் முரளி, சந்துரு ஆகியோர் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் முகிலன் மட்டும் தப்பிச்சென்று விட்டார். தன்னை கொல்ல வந்த 2 பேர் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட தகவல் அறிந்த அருண்குமார் தனது கூட்டாளிகளுடன் அங்கு வந்தார்.

    ஏற்கனவே காயமடைந்ததில் நிலை குலைந்து இருந்த அவர்கள் இருவரையும் அருண்குமாரும் அவரது கூட்டாளிகளும் உருட்டுக்கடையால் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் முரளி, சந்துரு இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தனர்.

    இந்த பயங்கர கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அருண்குமார், அவரது கூட்டாளிகளான பிரம்நாத் (25), சிலம்பு செல்வன் (25) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.

    அதன்படி அருண்குமார் உள்பட 3 பேருக்கும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட சந்துரு, முரளி ஆகிய இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகளாக அவர் கள் வலம் வந்துள்ளனர். இந்தநிலையில் தான் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தியபோது எதிர் தரப்பினரால் அடித்து கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மேலும் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுதவிர அருண்குமாரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் வந்து நாட்டு வெடிகுண்டுகள் வீசிய முகிலன் மற்றும் கொலை செய்யப்பட்ட முரளி, சந்துரு ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ரவுடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    புதுவையில் மேலும் 9 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.கதிர்காமம் விநாயகர் கோவில் வீதி, 2.திலாசுபேட்டை வீமன் நகர் மாரியம்மன் கோவில் வீதி, 3.தட்டாஞ்சாவடி சொக்கநாதன்பேட்டை மாரியம்மன் கோவில் வீதி, 4.தர்மாபுரி திரவுபதி அம்மன் கோவில் வீதி, 5.கருவடிக்குப்பம் நாகம்மன் நகர் முருகேசன் வீதி, 6.லாஸ்பேட்டை சாந்தி நகர் சேரன்வீதி, 7.அரியாங்குப்பம் முதல் குறுக்குத்தெரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒருபகுதி, 8. அபிஷேகப்பாக்கம் புதுநகரின் ஒருபகுதி, 9.மணவெளி முதல் குறுக்குத்தெரு ஒருபகுதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    அந்த பகுதிகளில் பொதுபோக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது.

    மேலும் புதுவை மாநிலத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16,667 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி சுற்றித்திரிந்ததாக 1,432 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடனை கைது செய்த போலீசார் 13 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி மரப்பாலம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணமாக பதில் அளித்த அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை டி.ஆர். நகரை சேர்ந்த ரமணா (வயது24) என்பதும் அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

    தற்போதைய விதிமுறைகளின்படி அவரை கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ரமணா அங்கிருந்து தப்பி ஓடினார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தேடிப்பிடித்து கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது குணமடைந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரது தகவலின்பேரில் முதலியார்பேட்டையில் 6, அரியாங்குப்பத்தில் 2, உருளையன்பேட்டையில் 3, விழுப்புரத்தில் 2 என மொத்தம் 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    தற்போது அடுத்த கல்வி ஆண்டுக்கான காலமும் கடந்து விட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் எழுந்தது. இத்தகைய சூழலில் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் சித்ரா வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘புதுவை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி முதல் நடைபெறும். ஆகஸ்டு 17-ந் தேதி பல்கலைக்கழக வளாகம் திறக்கப்பட்டு வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    ரெயில்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் பரிசோதனைகளையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400 பேருக்கும், ஜிப்மரில் 1000 பேருக்கும் நாள்தோறும் பரிசோதனை நடக்கிறது. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சோதனை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி வில்லியனூர் கரிக்கலாம்பாக்கத்தில் உமிழ்நீர் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    காரைக்காலில் வெளிநாடு மற்றும் சென்னையில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிக அளவில் பரவி உள்ளது. எனவே எல்லைகளை மூடி வைக்க உத்தரவிட்டுள்ளோம். காரைக்கால் அரசு மருத்துவமனையில் உமிழ்நீர் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அங்கு அந்த மையம் அமைக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற இடங்களை ஒதுக்கி உள்ளனர். அதற்கு கிராமப்புற மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. மக்களுக்கு இடையூறு இல்லாமல் தான் இந்த சிகிச்சை பிரிவுகள் செயல்படும். எனவே மக்கள் அரசு ஒத்துழைக்க வேண்டும்.

    புதுவையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் தளர்வு முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும்.

    பயணிகள் ரெயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே விமானம், பஸ் சேவைகள் தனியாரிடம் சென்று உள்ளன. ரெயில்களை ஏழை நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தனியாரிடம் சென்றால் அவர்கள் லாப நோக்கத்தோடு செயல்படுவார்கள். எனவே மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தனியாரிடம் செல்வதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமே தவிர பலன் ஏற்படாது. அனைத்து சுமைகளும் மக்கள் மீது சுமத்தப்படும். எனவே இந்த முடிவை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.

    இவ்வாறு முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரியில் ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 904ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 3.94 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,92,990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,02,721 பேருக்கும், டெல்லியில் 94,695 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 904ஆக உயர்ந்துள்ளது. 
    ஆரோக்கிய சேது செயலியின் உபயோகத்தை மக்களிடம் சென்றடைய நாம் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி  சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ரெட்டியார்பாளையம், திருநள்ளாறு மற்றும் பள்ளூர் காவல் நிலையங்கள், அதுபோல் நெட்டப்பாக்கம் மற்றும் திருபட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்களின் ஒட்டுமொத்த வழக்கு அறிக்கையின் மீதான குறிப்புகளை பார்க்கும் போது இவை அனைத்தும் இப்பொழுது நாம் செய்து கொண்டிருப்பதை காட்டிலும் இன்னும் மேன்மையாக செய்ய வேண்டும்.

    அதேபோல் புதுச்சேரியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆரோக்கிய சேது செயலியை உபயோகப்படுத்துவதில் இன்னும் அதிகமாக மக்களை ஈடுபடச் செய்ய வேண்டும். அதுபோலவே, நிரவி, கோட்டுச்சேரி, திருபட்டினம், திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கள் ஆரோக்கிய சேது செயலி உபயோகத்தை நடைமுறைப்படுத்த இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    அதுபோல், தொழிலாளர் துறை ஆரோக்கிய சேது வழக்கு எண்ணிக்கையின் விவரத்தை குறிப்பிட வேண்டும். காரைக்கால் பகுதியை பொருத்தமட்டில் ஆரோக்கிய சேது செயலி உபயோகம் பூஜ்ஜியமாக உள்ளது. அதுபோல் மாகி, ஏனாம் ஆரோக்கிய சேது செயலி உபயோகத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவைகள்தான் அறிக்கையின் மீதான என்னுடைய கணிப்பு. இதை பார்க்கும்போது ஆரோக்கிய சேது செயலி உபயோகம் வடக்கு பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வில்லியனூரை பொருத்தமட்டில் செயல்பாடு படுமோசம். இந்த செயலியின் உபயோகத்தை மக்களிடம் சென்றடைய நாம் முழுவீச்சில் செயல்பட வேண்டும்.

    காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த செயலி மற்றும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் வருமுன் காப்போம். இதன் மூலம் நாம் மருத்துவர்களுக்கும், மருத்துவத்துக்கும் கொடுக்கும் அழுத்தம் குறையும். அதுபோல் விதிமீறல் மீது பதியப்படும் வழக்குகள் மக்களின் மருத்துவமனை உபயோகத்தை குறைக்கும்.

    இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
    புதுச்சேரியில் ஒரேநாளில் 24 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 824ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 6.25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3.79 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,86,626 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 98,392 பேருக்கும், டெல்லியில் 92,175 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824ஆக உயர்ந்துள்ளது. 
    புதுச்சேரி கடற்கரை சாலை வருகிற 31-ந்தேதி வரை மூடப்படும் என கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 10 (2) மற்றும் (1) ன் கீழ் மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் தொடர்ச்சியாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகமானது வருகிற 31-ந் தேதி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இரவு 10 மணி முதல் காலை மணி 5 வரையிலான அனைத்து அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக நடமாட்டத்தை தடை செய்வதற்கான உத்தரவுகளை அந்தந்த பகுதி அதிகாரிகளே பிறப்பிக்கும் வகையிலான அறிவுறுத்தல்கள் உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் மேற்கூறிய உத்தரவில் வழங்கப்பட்டுள்ளன.

    எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் 144 பிரிவின் கீழ் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்கள் வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே பொதுமக்கள் நடமாட்டத்தை தடை செய்யும் வகையில் புதுச்சேரி பிராந்தியத்தில் (மாகி, ஏனாம் தவிர) பின்வரும் நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும். அனைத்து கடைகள், நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், பாலகங்கள், உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவது உள்பட காலை 6 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும். மதுபான கடைகள் உரிம நிபந்தனைகளின் படி திறந்து இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும். புதுச்சேரி கடற்கரை சாலை வருகிற 31-ந் தேதி வரை தொடர்ந்து மூடப்படும். மொத்தம் மற்றும் சில்லரை மருந்தகங்கள், மருந்து கடைகளை திறக்க எந்த தடையுமில்லை.

    இந்த கட்டுப்பாடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன. மறுஉத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். இதுதொடர்பான விதிமீறல் கள், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் தொற்று சட்டம் 1897 ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நடைமுறைகள், சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொருந்தாது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவை அருகே ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்த 2 ரவுடிகள் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    வில்லியனூர்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவருக்கும் தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த முகிலன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் அடியில் முகிலன் தனது நண்பர்களுடன் அமர்ந்து, அருண்குமாரை கொலைசெய்ய சதி திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

    இதுபற்றி அறிந்த அருண்குமார் தனது கூட்டாளிகளுடன் அங்கு சென்றார். அவர்களை பார்த்த முகிலன் தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை அருண்குமார் தரப்பினர் தீவைத்து கொளுத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து முகிலன் மற்றும் அருண்குமார் தரப்பினர் மீது திருக்கனூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக முகிலன், அவரது கூட்டாளி குறளரசன் உள்ளிட்ட ஆதரவாளர்களை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் குறளரசன் தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்கள் அருண்குமாரை பழிவாங்க திட்டமிட்டு அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

    நேற்று மதியம் அருண் குமார் தனது நண்பர்களுடன் சங்கராபரணி ஆற்றில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தகவல் முகிலன் தரப்பினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது தம்பி முரளி (20), கூட்டாளிகளான கொடாத்தூரை சேர்ந்த சந்துரு (20) உள்ளிட்ட 5 பேர் நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் சங்கராபரணி ஆற்றுக்கு வந்தனர்.

    ஆற்றில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அருண்குமார் நோக்கி, அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அவை கீழே விழுந்து வெடித்து சிதறின. இதைப்பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட அருண்குமார் அந்த கும்பலிடம் பிடிபடாமல் தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை முரளி தரப்பினர் விரட்டிச் சென்றபோதும் அருண்குமார் தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து முரளி, சந்துரு இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 3 பேர் இன்னொரு மோட்டார் சைக்கிளிலும் பிள்ளையார்குப்பம் சாலை வழியாக சென்றனர். அப்போது கைகளில் ஆயுதங்களை சுழற்றிக் கொண்டு கூச்சலிட்டபடி அவர்கள் சென்றனர்.

    இதைப்பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து, அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் முரளி தரப்பினர் ஆயுதங்களை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், செங்கல், உருட்டுக்கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசி அவர்களை தாக்கினர். இதில் முரளி, சந்துரு ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுடன் வந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இந்தநிலையில் தன்னை கொலை செய்யும் திட்டத்துடன் வந்தவர்கள் கிராம மக்களிடம் சிக்கிக் கொண்டது பற்றி தகவல் அறிந்த அருண்குமார் அங்கு வந்தார். ஏற்கனவே தாக்கப்பட்டதில் காயமடைந்து கிடந்த முரளி, சந்துரு ஆகிய இருவரையும் உருட்டுக்கட்டையால் அருண்குமார், அவரது கூட்டாளிகள் சக்திவேல், பிரேம் ஆகியோர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இதில் தலை, நெஞ்சு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து, துடிதுடித்து இறந்தனர். இவர்கள் இருவரும் ரவுடிகள் ஆவார்கள். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதுபற்றி தகவல் அறிந்து புதுச்சேரி ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதீஷா கோத்ரா, மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்டு கிடந்த சந்துரு, முரளி ஆகியோரது உடல்களை அங்கிருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் கிராம மக்கள் முன்னிலையில் நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் பிள்ளையார்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பயங்கர கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அருண், அவரது கூட்டாளிகளான சக்திவேல், பிரேம் ஆகியோரை கைது செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    ×