search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முரளி - சந்துரு
    X
    முரளி - சந்துரு

    புதுவை அருகே 2 ரவுடிகள் அடித்துக் கொலை- 3 பேர் கைது

    புதுவை அருகே ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்த 2 ரவுடிகள் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    வில்லியனூர்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவருக்கும் தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த முகிலன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் அடியில் முகிலன் தனது நண்பர்களுடன் அமர்ந்து, அருண்குமாரை கொலைசெய்ய சதி திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

    இதுபற்றி அறிந்த அருண்குமார் தனது கூட்டாளிகளுடன் அங்கு சென்றார். அவர்களை பார்த்த முகிலன் தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை அருண்குமார் தரப்பினர் தீவைத்து கொளுத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து முகிலன் மற்றும் அருண்குமார் தரப்பினர் மீது திருக்கனூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக முகிலன், அவரது கூட்டாளி குறளரசன் உள்ளிட்ட ஆதரவாளர்களை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் குறளரசன் தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்கள் அருண்குமாரை பழிவாங்க திட்டமிட்டு அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

    நேற்று மதியம் அருண் குமார் தனது நண்பர்களுடன் சங்கராபரணி ஆற்றில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தகவல் முகிலன் தரப்பினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது தம்பி முரளி (20), கூட்டாளிகளான கொடாத்தூரை சேர்ந்த சந்துரு (20) உள்ளிட்ட 5 பேர் நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் சங்கராபரணி ஆற்றுக்கு வந்தனர்.

    ஆற்றில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அருண்குமார் நோக்கி, அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அவை கீழே விழுந்து வெடித்து சிதறின. இதைப்பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட அருண்குமார் அந்த கும்பலிடம் பிடிபடாமல் தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை முரளி தரப்பினர் விரட்டிச் சென்றபோதும் அருண்குமார் தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து முரளி, சந்துரு இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 3 பேர் இன்னொரு மோட்டார் சைக்கிளிலும் பிள்ளையார்குப்பம் சாலை வழியாக சென்றனர். அப்போது கைகளில் ஆயுதங்களை சுழற்றிக் கொண்டு கூச்சலிட்டபடி அவர்கள் சென்றனர்.

    இதைப்பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து, அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் முரளி தரப்பினர் ஆயுதங்களை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், செங்கல், உருட்டுக்கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசி அவர்களை தாக்கினர். இதில் முரளி, சந்துரு ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுடன் வந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இந்தநிலையில் தன்னை கொலை செய்யும் திட்டத்துடன் வந்தவர்கள் கிராம மக்களிடம் சிக்கிக் கொண்டது பற்றி தகவல் அறிந்த அருண்குமார் அங்கு வந்தார். ஏற்கனவே தாக்கப்பட்டதில் காயமடைந்து கிடந்த முரளி, சந்துரு ஆகிய இருவரையும் உருட்டுக்கட்டையால் அருண்குமார், அவரது கூட்டாளிகள் சக்திவேல், பிரேம் ஆகியோர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இதில் தலை, நெஞ்சு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து, துடிதுடித்து இறந்தனர். இவர்கள் இருவரும் ரவுடிகள் ஆவார்கள். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதுபற்றி தகவல் அறிந்து புதுச்சேரி ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதீஷா கோத்ரா, மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்டு கிடந்த சந்துரு, முரளி ஆகியோரது உடல்களை அங்கிருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் கிராம மக்கள் முன்னிலையில் நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் பிள்ளையார்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பயங்கர கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அருண், அவரது கூட்டாளிகளான சக்திவேல், பிரேம் ஆகியோரை கைது செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×