என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை அருகே ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்த 2 ரவுடிகள் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    வில்லியனூர்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவருக்கும் தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த முகிலன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் அடியில் முகிலன் தனது நண்பர்களுடன் அமர்ந்து, அருண்குமாரை கொலைசெய்ய சதி திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

    இதுபற்றி அறிந்த அருண்குமார் தனது கூட்டாளிகளுடன் அங்கு சென்றார். அவர்களை பார்த்த முகிலன் தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை அருண்குமார் தரப்பினர் தீவைத்து கொளுத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து முகிலன் மற்றும் அருண்குமார் தரப்பினர் மீது திருக்கனூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக முகிலன், அவரது கூட்டாளி குறளரசன் உள்ளிட்ட ஆதரவாளர்களை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் குறளரசன் தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்கள் அருண்குமாரை பழிவாங்க திட்டமிட்டு அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

    நேற்று மதியம் அருண் குமார் தனது நண்பர்களுடன் சங்கராபரணி ஆற்றில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தகவல் முகிலன் தரப்பினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது தம்பி முரளி (20), கூட்டாளிகளான கொடாத்தூரை சேர்ந்த சந்துரு (20) உள்ளிட்ட 5 பேர் நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் சங்கராபரணி ஆற்றுக்கு வந்தனர்.

    ஆற்றில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அருண்குமார் நோக்கி, அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அவை கீழே விழுந்து வெடித்து சிதறின. இதைப்பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட அருண்குமார் அந்த கும்பலிடம் பிடிபடாமல் தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை முரளி தரப்பினர் விரட்டிச் சென்றபோதும் அருண்குமார் தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து முரளி, சந்துரு இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 3 பேர் இன்னொரு மோட்டார் சைக்கிளிலும் பிள்ளையார்குப்பம் சாலை வழியாக சென்றனர். அப்போது கைகளில் ஆயுதங்களை சுழற்றிக் கொண்டு கூச்சலிட்டபடி அவர்கள் சென்றனர்.

    இதைப்பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து, அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் முரளி தரப்பினர் ஆயுதங்களை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், செங்கல், உருட்டுக்கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசி அவர்களை தாக்கினர். இதில் முரளி, சந்துரு ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுடன் வந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இந்தநிலையில் தன்னை கொலை செய்யும் திட்டத்துடன் வந்தவர்கள் கிராம மக்களிடம் சிக்கிக் கொண்டது பற்றி தகவல் அறிந்த அருண்குமார் அங்கு வந்தார். ஏற்கனவே தாக்கப்பட்டதில் காயமடைந்து கிடந்த முரளி, சந்துரு ஆகிய இருவரையும் உருட்டுக்கட்டையால் அருண்குமார், அவரது கூட்டாளிகள் சக்திவேல், பிரேம் ஆகியோர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இதில் தலை, நெஞ்சு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து, துடிதுடித்து இறந்தனர். இவர்கள் இருவரும் ரவுடிகள் ஆவார்கள். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதுபற்றி தகவல் அறிந்து புதுச்சேரி ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதீஷா கோத்ரா, மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்டு கிடந்த சந்துரு, முரளி ஆகியோரது உடல்களை அங்கிருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் கிராம மக்கள் முன்னிலையில் நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் பிள்ளையார்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பயங்கர கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அருண், அவரது கூட்டாளிகளான சக்திவேல், பிரேம் ஆகியோரை கைது செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    காரைக்காலில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்திற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை சென்றனர். அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக் கண்ணன், மருத்துவத்துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில், முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய உடனே, புதுச்சேரி மாநிலத்தில் எல்லைகள் மூடப்பட்டு ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 5 முறை ஊரடங்கு அறிவித்து தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    காரைக்காலை பொறுத்தவரை, நீண்ட நாட்களாக பச்சை மண்டலமாக இருந்துவந்தது. முதலில் சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும், பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் குணமடைந்த நிலையில், மீண்டும் சென்னையில் இருந்து வந்தவர்களால் தொற்று பரவ ஆரம்பித்தது. தற்போது 42 பேர் கொரோனா தொற்று பாதித்து, அதில், 27 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களுக்கு தரமான உணவு மற்றும் சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    கொரோனா பரிசோதனைகளை திருவாரூருக்கு அனுப்பி 2 நாட்களுக்குப் பிறகே முடிவுகளை பெற வேண்டியது இருப்பதால் காரைக்காலிலேயே கொரோனா பரிசோதனை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு வாரத்தில் அதை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    காரைக்காலில் மொத்தம் 27 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டவையாக உள்ளன. இந்த பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியில் இருந்து அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கப்படும். காரைக்கால் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற, அரசுத்துறை அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    பாசிக், பாப்ஸ்கோ, கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட நிறுவன ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு வரும் பட்ஜெட்டில் தீர்வு காணப்படும். மாநில அரசு, வரிப்பணத்தை நம்பி ஆட்சி நடத்த வேண்டிய சூழல் இருப்பதால் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் யாரும் எவ்வித தொல்லையும் கொடுக்காமல் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரியில் ஒரேநாளில் 63 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 802ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3.59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,80,298 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 94,049 பேருக்கும், டெல்லியில் 8,9802 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 802ஆக உயர்ந்துள்ளது. 
    நாம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தனது உன்னத சேவையின் மூலம் உலகத்தின் அனைத்து மக்களின் உயிரை காக்கும் மருத்துவர்களுக்கு புதுச்சேரி மக்கள் மற்றும் கவர்னர் மாளிகை சார்பாக இந்த மருத்துவர் தினத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு வெறும் நன்றி செலுத்துதல் மட்டும் மிகையாகாது.

    கடுமையான நிலையில் அவர்கள் தங்களது கடமையை நேரம் பார்க்காமல் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நன்றி கூறுதல் மட்டும் போதாது. நண்பர்களே, நாம் அவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு வழி என்னவென்றால் நம் உடலை நாமே கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும், கைகளை சுத்தம் செய்வதின் மூலமும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது நம்மை சுற்றியுள்ளவர் யாருக்கேனும் தொற்று இருந்தால் தெரிவிக்கும்.

    நாம் மருத்துவர்களுக்கு செய்யும் மரியாதை என்னவென்றால், சுய நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குதல், சுய சுகாதார பராமரிப்பு, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி, சுய சுகாதாரம் போன்றவையாகும். அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ துணை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

    ஒவ்வொரு தனி மருத்துவர்களுக்கும் இந்த அரசு சான்றிதழை புதுச்சேரி மக்களின் சார்பாக கவர்னர் மாளிகை வழங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    டாக்டர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு மருத்துவமனை, எல்லைபிள்ளைச்சாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது அவர்கள் மத்தியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது:-

    கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த காலத்தில் மருத்துவ பணியாளர்கள் இடையறாது உழைக் கின்றனர். அவர்களால் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு அவர்களின் வேலைப்பளு அதிகரித்துள்ளது.

    நமது மாநிலத்தில் 70 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளது. பிற துறையினர் குறிப்பிட்ட நேரம் பணி புரிந்து விட்டு வீட்டுக்குச்சென்று விடுவார்கள். ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணி செய்து வருகிறார்கள்.

    சிறப்பாக பணியாற்றியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளிவரும். தொடர்ந்து உங்களது ஒத்துழைப்பு தேவை. புதுவையை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற மருத்துவ வசதியில்லை. எதிர்காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் நம்மால் தாக்குப்பிடிக்க முடியும். நமது மாநிலத்தில் நிறைய தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு ரவுடி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    புதுச்சேரி:

    புதுவை கோவிந்தசாலையை சேர்ந்தவர் அமல்தாஸ் (வயது35). பிரபல ரவுடியான இவர் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர். கடந்த 29-ந்தேதி முதலியார்பேட்டை தோப்பு மாரியம்மன் கோவில் அருகே மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமல்தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

    இதில், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி அமல்தாஸ் மது குடித்தது தெரியவந்தது. அவர்களை பற்றிய விவரம் தெரியவந்ததையடுத்து அரியாங்குப்பம் விஜி(34), அவ்வையார் நகர் திலீப் (30) விடுதலை நகர் குடியிருப்பு பகுதி ஜான் ஆகியோரை பிடித்து கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் சிறப்பு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பான ஆய்வக முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதன்பின் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் அதிரடியாக விசாரித்தனர். இதில், ஏற்கனவே ரவுடி கழுவா செந்தில் கொலையில் அமல்தாசுக்கு தொடர்பு இருந்ததால் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

    ரவுடி அமல்தாசை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான விஜி, திலீப், ஜான் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்தவர் கழுவா செந்தில். ரவுடியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு அமல்தாஸ் உதவி செய்துள்ளார். இதனால் தனது நண்பர் என்ற போதிலும் அமல்தாஸ் மீது கழுவா செந்திலின் கூட்டாளியான விஜிக்கு ஆத்திரம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜியை அமல்தாஸ் தாக்கியதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியதை தொடர்ந்து அமல்தாசை கொலை செய்ய முடிவு செய்த விஜி அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி கழுவா செந்திலின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் இதில் கலந்து கொண்ட விஜி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அமல்தாசை கொலை செய்வது குறித்து திட்டம் வகுத்துள்ளார்.

    அதன்படி கடந்த 29-ந்தேதி அமல்தாசை மது விருந்து கொடுப்பது போல் அழைத்து கழுவா செந்தில் கொலை தொடர்பாக விசாரித்து விஜி மற்றும் அவரது கூட்டாளிகள் கத்தியால் வெட்டியும் கல்லால் தாக்கியும் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். தனித்தனியாக பதுங்கி இருந்த அவர்களை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல் மின்நிலையத்தில் நேற்று காலை திடீரென்று பாய்லர் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    என்.எல்.சி.யில் ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் மனதுக்கு வேதனை தருகிறது. அந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி. எவ்வளவுதான் சாதனைகள் செய்தாலும் இதுபோன்ற சம்பவம் ஒரு கரும்புள்ளியாக அமைந்து விடுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 கடை கதவுகள் இழுத்து மூடப்பட்டு நகராட்சி அதிகாரிகளால் அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. நோய் பரவலை தடுக்கும் வகையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கவேண்டும், அனைத்து கடைகளும் சமூக இடைவெளி, முககவசத்தை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும், மீறினால் அபராதம் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா எச்சரித்துள்ளார்.

    இந்தநிலையில் காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள ஒருசில கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை என்று நகராட்சிக்கு புகார் வந்தது. அதன்பேரில் நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் ஊழியர்கள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடை, நகைக்கடை, கண் கண்ணாடி கடை, டிராவல்ஸ் நிறுவனம் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக நின்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். கதவுகள் இழுத்து மூடப்பட்டு நகராட்சி அதிகாரிகளால் அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. 
    போலீஸ்காரருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால் புதுவையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேரு வீதியில் உள்ள பெரியகடை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த போலீஸ் நிலையம் கிருமி நாசினி தெளித்து இழுத்து மூடப்பட்டது. பெரியகடை போலீஸ் நிலையம் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடத்துக்கு எதிரே உள்ள கூடாரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அந்த கட்டிடத்தின் மேல் மாடியில் செயல்பட்டு வந்த கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும் மூடப்பட்டது. தற்காலிகமாக இந்த அலுவலகம் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    சிறைக் கைதிகள் மற்றும் போலீசாருக்கு கொரோனா பரவி வருவது போலீஸ் வட்டாரத்தை பீதி அடைய வைத்துள்ளது.

    புதுவை நகராட்சி அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த அலுவலகம் செயல்பட்டு வந்த கம்பன் கலையரங்கம் வளாகமும் மூடப்பட்டது. அந்த வளாகத்தில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட மற்ற அலுவலகங்களும் மூடப்பட்டன. இதையடுத்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    ஒருதலை காதல் விவகாரத்தில் சிறுமி மீது வாலிபர் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாகூர்:

    பாகூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 19). இவர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்தார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், மாதேசை கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மீது ஜன்னல் வழியாக கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டு தப்பிச்சென்றார்.

    இதில் சிறுமியின் கை, முகம், கழுத்து பகுதி வெந்து கொப்பளம் ஏற்பட்டது. வலியில் துடித்த சிறுமியை அவரது பெற்றோர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாதேசை கைது செய்தனர். ஒருதலை காதல் விவகாரத்தில் சிறுமி மீது வாலிபர் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவை தடுக்க ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்கள் டாக்டர் ரத்தினசாமி, டாக்டர் மகாதேவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் முரளிதரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற கண்ணுக்கு புலப்படாத வைரசுக்கு எதிராக டாக்டர்கள் போரிட்டு வருகின்றனர். தற்போதைய கொரோனா சூழ்நிலையில் மருத்துவர்கள் தங்கள் உயிரை துச்சமென கருதி பல லட்சம் உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

    மருத்துவர்களில் திறமையான மருத்துவத்தால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களின் பணி மகத்தானது. இதற்காக எங்கள் மருத்துவ சமூகத்திற்கு பாராட்டுகள்.

    புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவ ஆராய்ச்சி பிரிவு செயல்பட்டு வருகிறது. பட்டதாரி மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மருத்துவ மேல்படிப்பு மருத்துவர்கள் அந்தந்த துறையின் பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி இந்த ஆராய்ச்சி மையம் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. நோய் கிருமிகள், மருந்து வகைகள் மற்றும் அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி பட்டறைகளில் பங்கேற்று பல பாராட்டுக்களை பெற்றுள்ளனர். காலத்தின் தேவைக்கு ஏற்ப கொரோனா தொற்றை தடுக்க எங்கள் கல்லூரியில் தனி ஆராய்ச்சி கூடம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இப்போது மக்கள் மருத்துவமனைக்கு வரமுடியாத நிலை இருப்பதால் மாற்று ஏற்பாடாக டெலி மெடிசின் என்ற தொலைபேசி மூலம் எங்கள் மருத்துவர்கள், நோயின் தன்மைக்கு ஏற்ப இலவச மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை பரிந்துரைப்பார்கள். 10 கி.மீ. தூரத்துக்குள் இருப்பவர்களுக்கு மருந்துக்கான கட்டணத்தை மட்டுமே வசூலித்து இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் ஒரேநாளில் 30 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 739ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 5.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3.47 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,74,761 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 90,167 பேருக்கும், டெல்லியில் 87,360 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 739ஆக உயர்ந்துள்ளது. 
    ×