search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
    X
    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் அமைச்சர் உடல் நலம் விசாரித்தார்

    கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடல்நலம் விசாரித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 904 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று காலை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகளை நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் உடல் நலம் விசாரித்தார். அப்போது நோயாளிகளிடம் உணவு, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதற்கு நோயாளிகள் நல்ல தரமான உணவு வழங்கப்படுவதாகவும், டாக்டர்கள் தங்களை கனிவுடன் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர். சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

    மேலும் மருத்துவமனை வளாகம் கழிப்பறை உள்ளிட்டவற்றை சுத்தமாக வைத்திருக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார். அப்போது கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் டாக்டர்கள் ரகுநாதன், ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதன்பின் சட்டசபைக்கு திரும்பிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனா நிலவரம் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் நேரடியாக விளக்கினார். பின்னர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது கிராமங்களில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் உமிழ்நீர் மாதிரிகள் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 140 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×