search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்
    X
    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்

    புதுச்சேரி கடற்கரை சாலை வருகிற 31ந் தேதி வரை மூடப்படும்- கலெக்டர் அருண் அறிவிப்பு

    புதுச்சேரி கடற்கரை சாலை வருகிற 31-ந்தேதி வரை மூடப்படும் என கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 10 (2) மற்றும் (1) ன் கீழ் மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் தொடர்ச்சியாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகமானது வருகிற 31-ந் தேதி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இரவு 10 மணி முதல் காலை மணி 5 வரையிலான அனைத்து அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக நடமாட்டத்தை தடை செய்வதற்கான உத்தரவுகளை அந்தந்த பகுதி அதிகாரிகளே பிறப்பிக்கும் வகையிலான அறிவுறுத்தல்கள் உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் மேற்கூறிய உத்தரவில் வழங்கப்பட்டுள்ளன.

    எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் 144 பிரிவின் கீழ் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்கள் வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே பொதுமக்கள் நடமாட்டத்தை தடை செய்யும் வகையில் புதுச்சேரி பிராந்தியத்தில் (மாகி, ஏனாம் தவிர) பின்வரும் நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும். அனைத்து கடைகள், நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், பாலகங்கள், உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவது உள்பட காலை 6 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும். மதுபான கடைகள் உரிம நிபந்தனைகளின் படி திறந்து இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும். புதுச்சேரி கடற்கரை சாலை வருகிற 31-ந் தேதி வரை தொடர்ந்து மூடப்படும். மொத்தம் மற்றும் சில்லரை மருந்தகங்கள், மருந்து கடைகளை திறக்க எந்த தடையுமில்லை.

    இந்த கட்டுப்பாடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன. மறுஉத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். இதுதொடர்பான விதிமீறல் கள், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் தொற்று சட்டம் 1897 ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நடைமுறைகள், சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொருந்தாது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×