search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்த மருத்துவர்கள்"

    • சித்தா டாக்டர்களுக்கான திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
    • அரசு சித்தா டாக்டர்களும், அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள்.

    ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, கரூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு சித்தா டாக்டர்கள் பலர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழக சுகாதார துறையின் கீழ் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், கிராமப்புற சுகாதார நிலையங்கள், சித்தா மற்றும் ஓமியோபதி போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மையங்கள் அனைத்திலும் சித்தா டாக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

    அலோபதி டாக்டர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை பின்பற்றித்தான் சித்தா டாக்டர்களையும் அரசு தேர்ந்தெடுத்து பணியமர்த்துகிறது. ஆனால் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பலன்களை சித்தா டாக்டர்களுக்கு வழங்குவதில்லை. எனவே அரசாணையின்படி அலோபதி மற்றும் பல் டாக்டர்களை போல சித்தா டாக்டர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், அதிக எண்ணிக்கையில் உள்ள அலோபதி டாக்டர்களை போல், குறைந்த எண்ணிக்கையில் உள்ள சித்தா டாக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகளை செயல்படுத்த இயலாது என்று தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மனுதாரர்கள் சித்த மருத்துவப்பிரிவு அரசு டாக்டர்கள்தான், அவர்களும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை அளிக்கின்றனர். அதனால் அவர்களும் அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து ஏற்கனவே மனு அளித்துள்ளனர், அலோபதி டாக்டர்கள் பதவி உயர்வு அரசாணை நேரடியாக மனுதாரர்களுக்கு பொருந்தாது என்றாலும், இவர்களும் பலன் அடையும் வகையில் உரிய செயல்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

    அதனால் இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ஒரு கூட்டத்தை கூட்டி அதில் பங்கேற்குமாறு மனுதாரர்களையும் அழைக்கலாம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சித்தா டாக்டர்கள் பயன் பெறும் வகையில் உரிய செயல் திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    ×