search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊருக்குள் வலம் வந்த ரவுடிகள்
    X
    ஊருக்குள் வலம் வந்த ரவுடிகள்

    பொதுமக்களை மிரட்டியபடி ஊருக்குள் வலம் வந்த ரவுடிகள்

    பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் ரவுடிகள் ஆயுதங்களுடன் பொதுமக்களை மிரட்டியபடி ஊருக்குள் வலம் வந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்தவர் முகிலன் (25). ரவுடிகளான இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையொட்டி ஒருவரை ஒருவர் கொலை செய்வது தொடர்பாக சதி திட்டம் தீட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி அருண்குமாரை கொலை செய்யும் நோக்கத்துடன் முகிலன், அவரது தம்பி முரளி (20), கூட்டாளி சந்துரு (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்துக்கு வந்தனர். அப்போது முரளி, சந்துருவை 10-க்கும் மேற்பட்டவர்களால் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

    இந்த இரட்டைக்கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், அவரது கூட்டாளிகளான பிரம்நாத் (25), சிலம்பு செல்வன் (25) உள்பட 6 பேரை கைது செய்து கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் பிள்ளையார்குப்பத்தில் கொலை சம்பவம் நடப்பதற்கு முன் ரவுடிகளான முரளி, சந்துரு ஆகியோர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஊருக்குள் வலம் வந்து பொதுமக்களை மிரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதாவது எதிர்தரப்பை சேர்ந்த அருண்குமார் மீது வெடிகுண்டு வீசியநிலையில் தப்பி ஓடியதையடுத்து அவரை ரவுடிகளான முரளி, சந்துரு ஆகிய இருவரும் ஊருக்குள் புகுந்து தேடி அலைந்த காட்சி அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அருண்குமாரை கொலை செய்ய முயன்று தப்பிச் சென்ற முகிலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முரளி, சந்துரு ஆகியோரது உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    இதையடுத்து வழுதாவூர், கொடாத்தூரில் ரவுடிகளின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. முரளி, சந்துருவின் இறுதி ஊர்வலத்தில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்களில் வந்து கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொரோனா காரணமாக இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஆனால் ரவுடிகள் முரளி, சந்துருவின் இறுதி சடங்கில் 200 பேருக்கு மேல் கலந்து கொண்டதால் வழுதாவூர் காலனி முன்னாள் தலைவர் செந்தில் உள்பட பலர் மீது கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ரவுடிகள் கொலை சம்பவத்தையொட்டி வழுதாவூர் பகுதியில் கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
    Next Story
    ×