என் மலர்
புதுச்சேரி
கண்டமங்கலம் அருகே லாரி மோதியதில் நடுரோட்டில் மரம் முறிந்து விழுந்தது.
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளித்தென்னல் பகுதியில் அதிகாலை 4 மணிக்கு பெங்களூரில் இருந்து புதுைவ நோக்கி வந்த சரக்கு லாரி புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருந்த மரத்தின் மீது அதிேவகமாக மோதியது.
இதில் மரம் முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது. பலத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினார். சாலையில் விழுந்த மரத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோட்டில் முறிந்து விழுந்த மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்தனர்.
புதுவை இந்திராநகர் தொகுதியில்ரூ .13 லட்சம் செலவில் சாலை பணியை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை இந்திராநகர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தொகுதிக்குட்பட்ட தர்மாபுரி அருண்ணை கண்ணு நகரில் ரூ.5.68 லட்சம் மதிப்பிலும், அகத்தியர் கோட்டம் விரிவாக்கத்தில் ரூ.7.37 லட்சம் மதிப்பிலும் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம்
எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து முத்திரையர்பாளையம் ஜீவாவீதி மற்றும் தர்மாபுரி திரவுபதி அம்மன் கோவில் தெரு விரிவாக்கம் ஆகிய பகுதிகளிலும், இந்திராநகர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கும் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், ஊர் பொதுமக்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மருத்துவம் கற்பிப்பதற்குப் பதிலாக ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி பள்ளிக்கூடம் ஆக்க முயற்சிப்பதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீது இந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜிப்மர் இயக்குனர் ஒரு சுற்று அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.
ஜிப்மர் அலுவலகக் கோப்புகள் அனைத்தையும், எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்து இருக்கின்றார். மருத்துவம் கற்பிப்பதற்குப் பதிலாக ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி பள்ளிக்கூடம் ஆக்க முயற்சிக்கின்றார்.
எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும் இந்தியை விரட்டியடித்து தமிழைக் காக்க வேண்டியது தமிழரின் கடமை ஆகும்.
அந்தச் சுற்று அறிக்கையை அவர் உடனே திரும்பப் பெற வேண்டும்; அந்த இயக்குனரை இந்தி பேசும் மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற மே 10, செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், புதுவை ஜிப்மர் நுழைவாயில் முன்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே. மணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு; எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்ற பாவேந்தர் வாழ்ந்த மண்ணில், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்று, எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... பட்டினப் பிரவேசம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி- தருமபுரம் ஆதீனம் தகவல்
உப்பனாற்றில் பக்க சுவர் அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
உப்பனாற்றில் ஆட்டுப்பட்டி, வாணரப்பேட்டை, கோலாஸ் நகர், திப்புராயப்பேட்டை பகுதிகளில் பக்கச் சுவர்கள் பழுதடைந்து சரிந்தும் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தது.
கனமழையின் போது வெள்ளப்பெருக்கில் சுற்றுசுவர் உடைந்து விழும் அபாயமும் இருந்தது. இதனை சட்டப்பேரவையில் தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பேசும்போது குறிப்பிட்டார். மேலும் சுற்று சுவரை கட்டித்தர வேண்டும் என ேகாரிக்கை விடுத்தார்.
இதை கருத்தில் கொண்டு புதுவை ஸ்மார்ட் சிட்டி நிதியுதவியுடன் சுமார் 26.40 கோடிக்கு பக்கச் சுவர்கள் பலப்படும் திட்டம் சுமார் 815 மீட்டர் நீளத்திற்கு மேம்படுத்துவதற்கான பணி தொடங்கியது.
இப்பணியை செய்வதற்காக பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் சுமார் ரூ.5.33 கோடி பணி ஆணை வழங்கப்பட்டு இருந்தது. இப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.
உப்பனாற்றின் மைய பகுதியில் இறங்கி ஆய்வை மேற்கொண்டார். மேலும் மழை காலங்களுக்குள் இதனை மிக விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதில் தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் செல்வம், மாயவன், பாலாஜி, லாரன்ஸ், மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தில் சட்ட விதிகளை மத்திய அரசு மீறி விட்டது என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
யூனியன் பிரதேச சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்த போது புதுவை சட்டமன்றத்திற்கு 3 எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்வதற்கான 3 நோக்கங்களை அப்போதைய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி வரையறுத்து கூறினார்.
சட்டமன்றத்தில் இடம்பெறாத பெரிய சமுதாயத்தை சேர்ந்தவர்,, பெண்கள், அரசுக்கு ஆலோசனை கூற தகுதி வாய்ந்த பொறியாளர்கள், கல்வியாளர்கள் என 3 பேர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இந்த 3 உன்னத நோக்கங்களையும் மத்திய அரசு யூனியன் பிரதேச சட்டம் 1963 விதி எண் 3 உப விதி எண் 3-க்கு கீழ் கொண்டு வந்திருக்க வேண்டும். இதை செய்யாததால் மத்திய அரசு வெளிப்படையாக தனது கட்சிக்காரர்களையும் காங்கிரஸ், தி.மு.க.விலிருந்து கட்சி மாறியவர்களையும் புதுவையை சேராத-வர்களையும் நியமன எம்.எல்.ஏ.களாக்கி சட்டத்தின் நோக்கங்களை வீணடித்து விட்டது.
இந்த சட்டம் வெளிப்படை-யாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதால் நியமன எம்.எல்.ஏ.க்கள் அவசியம் இல்லை என்று வாதிடலாம்.
மத்திய அரசின் இந்த சட்டவிரோத செயலை கவர்னர் தடுத்து நிறுத்த-வில்லை.இன்றைக்கு இப்பிரச்சினையை உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றாலும் இப்போது நியமிக்கப்பட்டுள்ள 3 எம.எல்.ஏ. நியமனமும் சட்டவிரோதம் என்ற அடிப்படையில் அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியும்.
அதோடு நியமனம்.செய்வதற்கான சட்ட விதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கும்.
அதன்மூலம் சட்டத்தின் அடிப்படையில் நியமன உறுப்பினர்கள் சரியான முறையில் நியமிக்கப்படுவார்கள் அச்சூழ்நிலையில் நியமன உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு தேவை என்பதை புதுவை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
கரிக்கலாம் பாக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கு போட்டு இறந்து போனார்.
புதுச்சேரி:
கரிக்கலாம் பாக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே கரிக்கலாம் பாக்கம் சுபலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜ மாணிக்கம். (வயது 38). கூலித்தொழிலாளி இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே ராஜ மாணிக்கம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டார்.
இந்த நோயின் காரணமாக அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் ராஜமாணிக்கம் வீட்டிலேயே முடங்கினார். இதையடுத்து அவரது மனைவி ஜெகதீஸ்வரி கூலிவேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் வேலைக்கு செல்ல முடியாமல் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பாரமாக இருந்ததால் விரக்தியடைந்த ராஜமாணிக்கம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ஜெகதீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம் பாக்கம் புறக்காவல் நிலைய போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி:
காக்கயந்தோப்பு மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.
காக்கயந்தோப்பு- வீராம்பட்டினம் ரோட்டில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி உற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.
இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தனர். திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 6-ந் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை 9 மணிமுதல் 10.30 வரை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் அனந்தராமன் பொதுச்செயலாளர் சங்கர், அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யப்பன், பி.சி.சி. காங்கேயன் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சசிக்குமார், காங்கிரஸ் பிரமுகர்கள் குகன், சாமிநாதன், மோகன், பாபு, சுரேஷ், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
தேவாலயத்துக்கு பிராத்தனைக்கு சென்ற தனியார் நிறுவன மானேஜர் திடீர் மாரடைப்பால் இறந்து போனார்.
புதுச்சேரி:
முத்தியால் பேட்டையில் தேவாலயத்துக்கு பிராத்தனைக்கு சென்ற தனியார் நிறுவன மானேஜர் திடீர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்து போனார்.
புதுவை முத்தியால்பேட்டை செயின்ட் ரொசோரியா வீதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது48) இவருக்கு அமலோற்பவமேரி என்ற மனைவியும் 13 வயதில் மகளும் மனைவி உள்ளனர். அலெஸ்சாண்டர் புதுவை பாரதி வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
அமலோற்பவமேரி முத்தியால் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஒரு பேஷன் தையல் கடையில் டெய்லராக வேலை செய்து வருகிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் அலெக்சாண்டரும் அவரது மனைவி அமலோற்பவ மேரியும் அப்பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம்.
அதுபோல் கணவன்-மனைவி இருவரும் தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்றனர்.
பிரார்த்தனை முடிந்து தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த போது அலெஸ் சாண்டருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். உடனே அவரது மனைவி அமலோற்பவமேரி மற்றும் அருகில் இருந்த உறவினர்கள் அலெக்சாண்டரை சிகிச்சைகாக ஒரு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அலெக்சாண்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி அமலோற்பவ மேரி கொடுத்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்ற தனியார் நிறுவன மானேஜர் திடீர் மாரடைப்பல் இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
உழவர்கரை பகுதியை சேர்ந்த சதீஷ் பெரியன் (வயது32) டிரைவர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-–மனைவிக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவரது மனைவி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
தனியாக இருந்து வந்த சதீஷ் பெரியன், (17) வயதுள்ள ஒரு சிறுமியை காதலித்து அவரை கர்ப்பமாக்கினார். இது குறித்த புகாரின் பேரில், சதீஷ் பெரியனை, ரெட்டியார்பாளையம் போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சதீஷ் பெரியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
பின்னர், தனது மனைவி குழந்தையுடன் சேர்ந்து வாழ வேண்டும், எங்களை சேர்த்து வையுங்கள் என உறவினர்களிடம் கூறி வந்தார்.
அதன்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ் பெரியன், தனது குழந்தையை, கிருமாம்பாக்கம் அடுத்துள்ள கன்னியக்கோவில் புதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். பின்னர், குழந்தையை, அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற உடன், குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்தபோது, சதிஷ் பெரியன், தனது குழந்தையை, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இது குறித்து புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் கடந்த 14-ம் தேதி வழக்கு பதிந்து, சதீஷ்பெரியனை தேடி வந்தனர்.போலீசார் தேடுவதை அறிந்த சதிஷ் பெரியன் விழம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை முடித்து நேற்று வெளியே வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளையின் சார்பில் திருநங்கைகளுக்கு சுகாதார பொருட்கள் வழங்ப்பட்டது.
புதுச்சேரி:
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளையின் சார்பில் உலக ரெட்கிராஸ் தினம் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளையின் சேர்மன் டாக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கி திருநங்கைகளுக்கு குளியல் சோப், சலவை சோப், தேங்காய் எண்ணெய், உள்ளிட்ட சுகாதார பொருட்களை வழங்கினார்.
நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யனார், ராமன் மற்றும் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ஷீத்தல் நாயக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரெட் கிராஸ் சொசைட்டி ஆயுட்கால உறுப்பினர்கள் குப்புசாமி, சேதுபதி, ரமேஷ், கார்த்திகேயன், ஆதி மூலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கால்பந்து போட்டி பாரதிதாசன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியின் எலக்ட்ரானிக் அன்ட் கம்யூனிகேஷன் முன்னாள் மாணவர்கள் 5-ம் ஆண்டாக நடத்திய ஸ்டேல்லர்ஸ் கோப்பை கால்பந்து போட்டி 2 நாட்கள் நடந்தது.
போட்டியில் புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த 28 கல்லூரி ஆண்கள் அணி, 8 கல்லூரி பெண்கள் அணியும் மோதின. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியும், இந்திராகாந்தி கல்லூரியும் மோதின.
இதில் பாரதிதாசன் மகளிர் கல்லூரி 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
கல்லூரி சேர்மன் தனசேகரன், துணை சேர்மன் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி, முதல்வர் மலர்கண் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினர்.
அடிக்காசு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டே மார்க்கெட் வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் சண்டே மார்க்கெட்டில் கடை போடுவதற்கு நகராட்சி சார்பில் அடிக்காசு வசூலிக்கப்படுகிறது.
அதன்படி கடையின் அளவிற்கேற்ப ரூ.10 முதல் ரூ.20 வரை வசூல் செய்யப்படும். ஆனால் தற்போது ரூ.30 முதல் ரூ50 வரை அடிக்காசு உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடைகளை போடாமல் நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ. ஐ. டி.யூ.சி. சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க கவுரவத் தலைவர் துரை செல்வம், தலைவர் பாபு, செயலாளர் கார்த்திக், பொருளாளர் தயாளன், ஆகியோர் தலைமை தாங்கினர்.
சண்டே மார்க்கெட் சங்க நிர்வாகிகள் இக்பால் ,தோனி, பிரகாஷ், சங்கர், சிலம்பரசன், நாகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை குறைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என வியாபாரிகள் உறுதிப்பட தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






