என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அடிக்காசு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டே மார்க்கெட் வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் சண்டே மார்க்கெட்டில் கடை போடுவதற்கு நகராட்சி சார்பில் அடிக்காசு வசூலிக்கப்படுகிறது. 

    அதன்படி கடையின் அளவிற்கேற்ப ரூ.10 முதல் ரூ.20 வரை வசூல் செய்யப்படும். ஆனால் தற்போது ரூ.30 முதல் ரூ50 வரை அடிக்காசு உயர்த்தப்பட்டுள்ளது. 

    இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடைகளை போடாமல் நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஏ. ஐ. டி.யூ.சி. சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற  போராட்டத்திற்கு சங்க கவுரவத் தலைவர் துரை செல்வம், தலைவர் பாபு, செயலாளர் கார்த்திக், பொருளாளர் தயாளன், ஆகியோர் தலைமை தாங்கினர். 

    சண்டே மார்க்கெட் சங்க நிர்வாகிகள் இக்பால் ,தோனி, பிரகாஷ், சங்கர், சிலம்பரசன், நாகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    நகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை குறைத்தால்  மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என வியாபாரிகள் உறுதிப்பட தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என எல்லாவற்றின் தலைப்புகள், பணிக்கால கணக்குகள் ஆகியவை அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது.

    ஜிப்மரில் புதுவை மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். சமீப காலமாக ஜிப்மரில் மருந்து மாத்திரை விநியோகமின்மைத் தொடங்கி பலவித குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அலுவல் மொழி விதி 1976ன்படி மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகள், பதிவேடுகள், தலைப்புகள் ஆகியவற்றில் இந்தி, ஆங்கிலம் மொழி மட்டுமே இருக்கவேண்டு்ம். பாராளுமன்றக்குழுவுக்கு வழங்கப்பட்ட உறுதி எண் 7ன்படி அலுவல் மொழியாக இவை இருக்க வேண்டும்.

    ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என எல்லாவற்றின் தலைப்புகள், பணிக்கால கணக்குகள் ஆகியவை அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

    எதிர்காலத்தில் பதிவேடுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் அனைத்தும் முடிந்தவரை இந்தியில் மட்டும் எழுத வேண்டும்.

    அனைத்து துறைகளின் தலைவர்கள், பிரிவு பொறுப்பாளர்கள், ஊழியர்கள் அனைவரும் இந்த விதியை கண்டிப்பாக கடைபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    குறிப்பாக அலுவல் மொழி தொடர்பாக பாராளுமன்ற குழுவுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகள், அதன் பொறுப்பு அதிகாரிகள் மூலம் இது கண்காணிக்கப்படும். இதுதொடர்பாக உதவி தேவைப்பாட்டால் இந்தி செல்லை அணுகலாம்.

    இவ்வாறு ராகேஷ் அகர்வால் உத்தரவில் கூறியுள்ளார்.

    ஜிப்மரில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவ கல்லூரியிலும் நாடு முழுவதும் இருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் உள்ளனர்.

    அதுபோல், சிகிச்சைக்கு வருவோரில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் மக்கள். இதனால் பதிவேடுகள், சேவைப் புத்தகங்கள் ஆகியவற்றில் இந்தி மட்டுமே வரும்காலத்தில் இடம் பெறுவது நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஏனாம் தொகுதியில்அ ரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
    புதுச்சேரி:

    ஏனாம் பிராந்தியத்துக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சபாநாயகர்  ஏம்பலம் செல்வம் சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    இதனை தொடர்ந்து ஏனாம் தொகுதியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொல்ல பள்ளி சீனிவாஸ் அசோக் 
    எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர் மற்றும் விதவைகள் 158 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். 

    இதைத் தொடர்ந்து வேளாண் துறை சார்பில் 40 விவசாயிகளுக்கு இலவச கொசுவலை வழங்கப்பட்டது.

    விழாவில் ஏனாம் நிர்வாகி அமன் ஷர்மா,  எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், அசோக்பாபு, வேளாண் துணை இயக்குனர் கணேசன், வேளாண் அதிகாரி ஜோகிராஜு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி-கள் கலந்து கொண்டனர்.
    புதுவையில் மதுக்கடையில் சப்ளையரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    விழுப்புரம் அருகே கோழிப்பட்டு அம்பேத்கார் வீதியை சேர்ந்தவர் குமரேசன் வயது (50). இவர் கடந்த 2 மாதமாக புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு தனியார் மதுபானக்கடையில் சப்ளை யராக வேலை செய்து வருகிறார்.

    வழக்கம் போல் மதுக்கடையில் குமரேசன் வாடிக்கையாளருக்கு மது பானங்களை பரிமாரி க்கொண்டிருந்தார். 

    அப்போது அருள் (33) என்ற வாலிபர் வெளியி டத்தில் உணவு பண்டங்களை வாங்கிக்கொண்டு மது பானக்கடையில் மது அருந்த வந்தார். 

    இதற்க்கு குமரேசன் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அருள் தகாத வார்த்தைகளால் திட்டி சப்ளையர் குமரே சனை கன்னத்தில் தாக்கினார்.

    இதில் காயமடைந்த குமரேசன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருளை கைது செய்தனர்.

    புதுவை மேரி உழவர் கரை குண்டு சாலை ரோட்டில் உள்ள ஒரு மதுபானக்கடை அருகே ஒருவர் மது குடித்து விட்டு ஆபாச வார்த்தைகளால் பேசி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார்.

    இது பற்றிய தகவல் அறிந்த ரெட்டியார் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் அரும்பார்த்தபுரம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேல்முருகன் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுவையில் தனித்தனி விபத்தில் பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே வி.தட்டாஞ்சாவடி செந்தாமரைநகர் புதுத்தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மனைவி அம்ச வேணி (வயது53). இவர் பூ வாங்குவதற்காக புதுவை-விழுப்புரம் மெயின் ரோட்டில் அரும்பார்த்த புரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென அம்சவேணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அம்சவேணிக்கு தலை மற்றும் தோல்பட்டை வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    உடனே விபத்தை ஏற்படு த்தியவரே அம்ச வேணியை மீட்டு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அம்சவேணியின் மகன் ரத்னகுமார் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர் ஆபத்தாரனபுரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 47) இவரது மகள் சவுந்தர்யா வுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    செந்தில் குமாரும் அவரது மனைவி புவனேஸ்வரியும் உடனிருந்து மகளை கவனித்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம் செந்தில் குமார் தனது மனைவிக்கு உணவு வாங்க ஆஸ்பத்திரி எதிரே சாலையை கடக்க முயன்றார். 

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக செந்தில் குமார் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த செந்தில் குமாருக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

    அங்கு செந்தில் குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    4 வழி சாலை விரிவாக்க பணிக்காக மடுகரை-கடலூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    சென்னை- நாகப்பட்டி–னம் சாலை விரிவாக்கப் பணி தற்போது புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வருகின்றது. 

    அதனைத்தொடர்ந்து மதகடிப்பட்டு இருந்து கடலூர் செல்லும் முக்கிய சாலை தற்போது துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

    புதுவையில் இருந்து நெட்டப்பாக்கம் வழியாக மடுகரை கடலூர் செல்லும் வாகனங்கள், திருக்கனூரில் இருந்து வரும் வாகனங்கள், விழுப்புரத்தில் இருந்து வரும் வாகனங்கள், 4 முனை முக்கிய சந்திப்பாக மதகடிப்பட்டில் இருந்து பிரிந்து செல்லும் வாகனங்கள் தற்போது மதகடிப்பட்டு பகுதியில் உள்ள சந்தை தோப்பு வழியாக மாற்றி விடப்பட்டு உள்ளன. 

    இதனால் மதகடிப்பட்டு பகுதியில் தற்போது வாகன நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சாலையின் இருபுறமும் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் நிலையில் இப்பகுதியில் மீண்டும் வாகனங்கள் இயங்குவதற்கு சில வாரங்கள் ஆகும் என்று தெரிய வருகின்றது.

    மதகடிப்பட்டில் 4 முனை சந்திப்பில் 4 வழி சாலை விரிவாக்க பணிக்காக கடலூர்- மடுகரை சாலை துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    நெட்டப்பாக்கத்தில் விஷக் குளவி கொட்டியதில் மாற்றுத்திறனாளி பெண் பரிதாபமாக இறந்து போனார்.
    புதுச்சேரி:

    கோபிசெட்டி ப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 54). இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெட்டப்பாக்கத்தில் குடிபுகுந்தனர். மாரியம்மாள் மாற்றுத்திறனாளி ஆவார்.ராஜி மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 

    கடந்த சில மாதங்களாக ராஜீ தனது மனைவி மற்றும் மகன்களுடன் பண்டக சோழநல்லூரில் பாஸ்கர் ரெட்டியார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பை குத்தகை எடுத்து அங்கு கூரைவீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாரியம்மாள் இயற்கை உபாதை கழிக்க தென்னந்தோப்பில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு கூடுகட்டியிருந்த குளவிகள் மாரியம்மாளை சரமாரியாக கொட்டியது.

    இதில் வலிதாங்காமல் மாரியம்மாள் அலறவே குடும்பத்தினர் அங்கு சென்று குளவிகளை விரட்டி மாரியம்மாளை மீட்டனர். 

     பின்னர் அவரை நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைகாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் மாரியம்மாளை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் மாரியம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது கணவர் ராஜீ கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கனூர் அருகே டிரைவரை பீர் பாட்டிலால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே தமிழக பகுதியான சித்திரம்பட்டு அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 41) டிரைவராக வேலைசெய்து வருகிறார்.

    வேலை முடிந்து தட்சணா மூர்த்தி திருக்கனூர்-திருவண்ணாமலை மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது திருக்கனூர் புது நகரை சேர்ந்த ரியாஸ் மற்றும் அவரது நண்பர் சாரதி ஆகியோர் தட்சணா மூர்த்தியிடம் வீண் தகராறு செய்தனர். 

    அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் தட்சணா மூர்த்தி ஏன் தேவையில்லாமல் பேசுகிறீர்கள் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட முயன்றார்.

    ஆனால் அவர்கள் மீண்டும் தகராறு செய்து மோட்டார் சைக்கிள் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து தட்சணாமூர்த்தி தலையில் தாக்கினர். 

    இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டியதால் தட்சணா மூர்த்தி அலறல் சத்தம் போட்டார்.

    உடனே ரியாசும் சாரதியும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திருக்கனூரை சேர்ந்த சுமன் என்பவரின் உதவியுடன் மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின் இது குறித்து தட்சணாமூர்த்தி திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரியாஸ் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.
    கட்சி மாறிகளுக்கு பேச தகுதியில்லை நான் தேர்தலுக்கு அஞ்சுபவன் அல்ல நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா முதல், 2-வது அலையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் பல மாநிலங்களில் மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக உத்திரபிரதேசத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் மத்திய அரசு நாடு முழுவதும் ம் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் மட்டுமே இறந்ததாக கணக்கு தெரிவித்துள்ளது. 

    ஆனால் உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் 40 லட்சத்து 27 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. உண்மையில் நாடு முழுவதும் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணி க்கையை அனைத்துக்கட்சி குழு அமைத்து கண்டறிய வேண்டும். 

    சுப்ரீம்கோர்ட்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி அளிக்க கூறியதால் மத்திய அரசு போலியான கணக்கை காட்டியுள்ளது.உள்துறை அமைச்சரின் புதுவை வருகையால் பல மாற்றங்கள் ஏற்படும் என ஆளும்கட்சியினர் தெரிவித்தனர். ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியுள்ளது.

    காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்களை அடிக்கல் நாட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த ஆட்சி மீது மக்கள் அதிருப்தியாக உள்ளனர். உள்துறை அமைச்சர் வருகையில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றார்கள், ஆனால் காட்சி மாற்றம்கூட நடக்கவில்லை.

    புதுவையில் வெடி குண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தோம். முதல்- அமைச்சர் அலுவலகம் உட்பட அமைச்சர்களின் அலுவலகம் புரோக்கர்களின் கூடாரமாக மாறியுள்ளது. 

    ஊழல் மலிந்த அரசாக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு உள்ளது. 

    கலால்துறையில் ஊழல் கொடிகட்டி பறக்கிறது. தேர்தல் தோல்வி பயம் காரணமாக நான் தேர்தலில் போட்டியிடவில்லை என அமைச்சர் நமச்சிவாயம் விமர்சித்துள்ளார். நான் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். 

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றபோதுகூட நான் போட்டியிட்டேன். நான் தேர்தலை கண்டு அஞ்சுபவன் அல்ல. அமைச்சர் நமச்சிவாயம் ஏன் ஏற்கனவே வெற்றி பெற்ற வில்லியனூர் தொகுதியில் போட்டியிடவில்லை. 

    வேறு தொகுதியில் போட்டியிட காரணம் என்ன? தோல்வி பயம் காரணமா? அல்லது தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லையா? அவர் இதுவரை 5 கட்சிகள் மாறியுள்ளார். 

    கட்சி மாறிகளுக்கு காங்கிரசையும், என்னைப்பற்றியும் விமர்சிக்கும் தகுதியில்லை. 

    முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசு எடுத்த தவறான முடிவுகளால்தான் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போயுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு உரிய ஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அதுதான் உண்மையான சமூகநீதியாக இருக்கும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தியது தான் மோடி அரசின் சாதனை. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியது.

    கடந்த ஒரு மாதமாக யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று பரவி வருகிறது. புதுவையில் 278 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

    இதில் புதுவையில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 8 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.  மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. 

    புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 16 லட்சத்து 92 ஆயிரத்து 143 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    வாய்க்கால் வீதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை தொகுதி வாய்க்கால் வீதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென நில அளவை துறை இயக்குனர் ரமேசிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முதலியார்பேட்டை வாய்க்கால் வீதியில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  வாய்க்காலின் மீது குடியிருப்பு அமைத்துள்ளதால் பெரும் சுகாதார கேட்டில் இவர்கள் அவதியுற்று வாழ்ந்து வருகின்றனர். 

    மேலும் மழைக்கா லங்களில் இவர்களின் வீடுகள் அனைத்தும் மழை நீரால் சூழப் படுகின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நீரோட்டம் தடைபட்டு, வாய்க்கால் நீர் வரத்து பகுதிகளான ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர் காலனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறிவருகின்றது.

    இந்த தொகுதியின் பிரதான பிரச்சினைகளில் முதலில் நிற்பது இந்த பிரச்சினையாக உள்ளது. எனவே இந்தப் பகுதியில் வசிக்கும் 45-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் தருவதாக முந்தைய ஆட்சியில் இருந்தவர்களால் பல ஆண்டுகளாக ஏமாற்ற ப்பட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் நான் தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று அரசிற்கு சொந்தமான இடம் காலியாக உள்ளதா என்று ஆய்வு செய்தேன். பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிக்கபட்டு உள்ளது. 
    இது தொடர்பாக தனியாக ஒரு மனுவை விரைவில் தங்களிடம் அளிக்கின்றேன். 

    தேங்காய்த்திட்டு வருவாய் கிராமம் அடங்கிய காலியிடம் தேங்காய்த்திட்டு சுடுகாடு செல்லும் பாதையில் உள்ளது இவற்றை ஏரி வாய்க்கால் வீதியில் வசிக்கும் மக்களுக்கு பகிர்ந்தளித்தால் 40 ஆண்டுக்கு மேலாக இன்னல்களை அனுபவித்தவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்‌. எனவே இவர்களுக்கு இந்த இடத்தை ஒதுக்கி தர தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா ஓராண்டு ஆட்சியில் வேதனைகளே அதிகம் என்று வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு ஆகிறது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என்று அறிவித்தார். ஓராண்டு நிறைவடைந்தும் எதிலும் புதுவை பெஸ்ட்டாக மாறவில்லை. 

    மத்திய பா.ஜனதா அரசு, காங்கிரஸ் ஆட்சி ஒதுக்கிய நிதியைவிட குறைவாகவே ஒதுக்கியுள்ளது. புதுவையில் 10 ஆயிரம் அரசுக் காலிப்பணியிடங்கள் உள்ளது. ஆனால் அதை நிரப்புவதற்கான நிதி மாநில அரசிடம் இல்லை.

    இந்த ஆட்சியில் ஓராண்டாக எந்த மாற்றமும் இல்லை. இந்த அரசில் சாதனைகள் இல்லை, வேதனைகள்தான் அதிகம் உள்ளது. 

    மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மத்திய உள்துறை மந்திரிஅமித்ஷா புதுவைக்கு வந்த பின் தலைமை செயலர் மாற்றத்தைத்தவிர எந்த மாற்றமும் நடைபெறவில்லை. 

    புதுவைக்கு தேவை நிதியும், நிதி அதிகாரமும் தான். அதனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பா.ஜனதா நியமித்துள்ள கவர்னர்கள் பிரச்சினைகளை உருவாக்குபவர்களாக உள்ளனர். 

    புதுவை அரசுக்கு பொருளாதாரம்  உள்பட ஆலோசனைகளை வழங்க நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர். தற்போதைய 
    எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் நல்ல கல்வி கற்றுள்ளனர். எனவே தனியாக அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக நியமன எம்.எல்.ஏ.க்கள் தேவையில்லை. 

    நியமன எம்.எல்.ஏ.க்களை கொண்டுதான் கடந்த ஆட்சியில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியை கவிழ்த்தது. எனவே தற்போது புதுவை அரசியல் சட்டத்தில் இருந்து நியமன எம்.எல்.ஏ.க்களை நீக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×