என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோட்டக்குப்பம் அடுத்த குப்பம் கலால் சோதனைச்சாவடி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி சென்னையை சேர்ந்த என்ஜினீயர்கள் படுகாயம் அடைந்தனர்.
    சேதராப்பட்டு:

    சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் அந்தோணி (வயது 27). இவரது நண்பர் ஷேக் அப்துல் (வயது 28). இவரது மனைவி ராகுல்யா (வயது 27) மற்றும் சினேகா (வயது 21) சுப்புலட்சுமி (வயது 20). இவர்கள் 5 பேரும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் சென்னையிலிருந்து புதுவைக்கு நள்ளிரவில் காரில் சுற்றுலா வந்தனர். காரை அந்தோணி ஓட்டி வந்தார். கோட்டக்குப்பம் அடுத்த குப்பம் கலால் சோதனைச்சாவடி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த வேப்பமரத்தில் வேகமாக மோதியது. இதில் கார் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த காரை ஓட்டி வந்த அந்தோணி, ஷேக் அப்துல், ராகுல்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். சினேகா, சுப்புலட்சுமி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    காயமடைந்த 5 பேரும் வலியால் துடித்தனர். அவர்களை அங்கிருந்த போலீசார் மீட்டு கனக செட்டிக்குளத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பயனாளிகளுக்கு உதவித் தொகை ஆணை செல்வகணபதி எம்.பி-அசோக்பாபு எம்.எல்.ஏ. வழங்கினர்
    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை தொகுதியில் முதியோர் உதவித்தொகை ஆணையை செல்வகணபதி எம்.பி., அசோக்பாபு எம்.எல்.ஏ. வழங்கினர்.

    புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம், முதலியார்பேட்டை தொகுதி முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப் பட்டது.

    செல்வகணபதி எம்.பி., அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையை வழங்கினர்.

    பா.ஜனதா தொகுதி தலைவர் இன்பசேகர், விவசாய அணி தலைவர் புகழேந்தி, இளைஞர் அணி தமிழரசன், மாவட்ட துணைத் தலைவர்கள் குமார், விஜயரங்கம் , நிர்வாகிகள் விஜயகுமார், கணகராஜ், திருச்செல்வம், பிரவின் குமார், பன்னீர் செல்வம், மவுளி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பேசிய செல்வகணபதி எம்.பி. முதலியார் பேட்டை தொகுதிக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை அசோக் பாபு எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் செய்து தருவேன் என்று உறுதியளித்தார்.
    கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் கிராமத்தில் அன்னையர் தின விழா கொண்டாடப்பட்டது.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் எஸ்.ஓ.எஸ். தன்னார்வு அமைப்பு சார்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தனித்தனி குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    இந்த இல்லத்தில் குழந்தைகளைப் பாதுகாக்கும் அன்னையர்களுக்கு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். அன்னையர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் மற்றும் அன்னையர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் கிராமத்தின் நிர்வாக இயக்குனர் ஜார்ஜ்  கலந்து கொண்டார். முதுநிலை பணியாளர் சுஜாதா நன்றி கூறினார்.
    நெட்டப்பாக்கத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் மெயின் ரோட்டில் வயல்வெளிக்கு செல்லும் பாதையில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். 

    அப்போது அங்கு சந்தேக ப்படும் படியாக நின்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது சட்டைப்பையில் சோதனை நடத்திய போது சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தார். 

    இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் நெட்டப்பாக்கம் அருகே அந்தராசிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாலு (வயது 21) என்பதும் இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலைபார்த்து அந்த வேலையை கைவிட்டு பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து பாலுவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 56 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் செல்போல் பறிமுதல் செய்யப்பட்டது.
    சாப்ட்வேர் கம்பெனி ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி லேப்டாப் மற்றும் செல்போன் கொள்ளையடித்துச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
    புதுச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் அரித்துவார மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன். இவர் புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த ஒரு மாதமாக தங்கி புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

    வேலை முடிந்து கண்ணையன் விடுதி அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அதேவிடுதியில் 3-வது மாடியில் தங்கி இருந்த 4 பேர் கண்ணையன் தங்கி இருந்த அறை கதவை தட்டினார்கள். 

    உடனே கண்ணையன் அறை கதவை திறந்து பார்த்தார். அப்போது அவர்கள் கையில் வைத்து இருந்த பீர் பாட்டிலால் ஓங்கி கண்ணையனை திடீரென தாக்கினார். அவர் என்ன காரணத்திற்காக அடிக்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டார். ஆனால் மீண்டும் அவர்கள் பீர் பாட்டிலால் கண்ணையனை தலை மற்றும் கையில் சரமாரியாக குத்தினார்கள்.

    மேலும் அத்துமீறி அறைக்குள் நுழைந்து அங்கு கண்ணையன் வைத்து இருந்த லேப்டாப், மற்றும் விலை உயர்ந்த செல்போன், மனிபர்ஸ் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். 

    இந்த தாக்குதலில் காயமடைந்த கண்ணையன் விடுதி ஊழியர் உதவியுடன் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து சாப்ட்வேர் கம்பெனி ஊழியரை தாக்கி லேப்டாப், செல்போன் மற்றும் மனிபர்சை  கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் விடுதியில் தங்கும் போது அவர்கள் மதுராந்தகத்தை சேர்ந்த அசாருதின் (21) மற்றும் மணி (22) என முகவரி கொடுத்து உள்ளனர். இந்த முகவரியை வைத்து போலீசார் அவர்களை பிடிக்க மதுராந்தகம் விரைந்துள்ளனர்.
    அவின் ஸ்ரீ பள்ளியில் மேஜிக் ‌ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது
    புதுச்சேரி:

    திருவண்டார்கோவில் அவின்ஸ்ரீ இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான நுண்ணறிவு திறன் மற்றும் கல்வி சார்ந்த மேஜிக் ஷோ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
     
    அவின்ஸ்ரீ சி.பி.எஸ்.இ. பள்ளியின் சேர்மன் வாசுதேவன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி குத்துவிளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
     
    பள்ளியின் முதல்வர் அலமேலுமங்கை அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாணவர்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளவும், கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளாக நடைபெற்ற இந்த விழாவில், உலகப் புகழ்பெற்ற கோவை மேஜிக் நிபுணர் தயாநிதி கலந்துகொண்டு மேஜிக் ஷோவை நடத்தி காட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    புதுவையில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனைகூடம் பின்புறம் உள்ள புதர் நிறைந்த இடத்தில் ஒரு வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் வேறு எங்கோ அடித்து  கொலை செய்து உடலை இங்கு வந்து யாரோ வீசிசென்று ள்ளனர். 

    இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் கொலைசெய்யப்பட்டு கிடந்த வாலிபர் காலாப்பட்டு அருகே உள்ள கூனிமேட்டு கம்பம் கொல்லை பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ஷேக் திப்பு  சுல்தான் (வயது 29) என்பது தெரியவந்தது. 

    மேலும் விசாரணையில் ஷேக் திப்பு சுல்தான் அப்பகுதியில் டீ கடை நடத்திவந்ததும். அவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது.  

    இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் ஷேக் திப்பு சுல்தானை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 

    இதற்கிடையே ஷேக் திப்பு சுல்தான் பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை அவர் திரும்ப தரவில்லை. பணம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு ஷேக் திப்பு சுல்தானுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். 

    இந்த நிலையில் ஷேக் திப்பு சுல்தான் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ஜூஸ்கடை நடத்திவரும் தனது நண்பர் கவியரசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்தார்.

    ரெயின்போ நகரில் வந்த போது ஒரு கும்பல் ஷேக் திப்பு சுல்தானை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் கடன் வாங்கிய பணத்தை கேட்டு மிரட்டியுள்ளது. அப்போது ஷேக் திப்பு சுல்தான் தனது தந்தைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி வேறு எங்காவது பணம் கடன்வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். 

    ஆனால் அந்த கும்பல் கவியரசனை விரட்டி விட்டு ஷேக் திப்பு சுல்தானை மட்டும் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளது.
    பின்னர் ஷேக் திப்பு சுல்தானை அடித்து கொலை செய்து உடலை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் வீசிச்சென்றது. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

    இதற்கிடையே ஷேக் திப்பு சுல்தானை அடித்து கொன்ற சாரம் பகுதியை சேர்ந்த சிவா, மூலகுளத்தை சேர்ந்த தெஸ்தான் மற்றும் குருமாம்பேட் பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் மற்ற சிலருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    ஜிப்மரில் இந்தி திணிப்பு-வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    மத்திய அரசின் கீழ் இருந்தால் சிகிச்சை உலகத்தரத்தில் கிடைக்கும் என்பதற்காக புதுவையில் ஜிப்மர் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதன்படி ஜிப்மரில் தரமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது. 

    அதில் புதுவை மக்களும் பயன் பெற்று வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜிப்மரில் சிகிச்சைக்கு செல்லும் புதுவை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசின் இந்தி திணிக்கும் பணியை ஜிப்மர் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஜிப்மர் மருத்துவமனை தரமான சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் இருந்து விலகி இந்தி திணிக்கும் பணியை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. 

    மேலும் வரும்காலங்களில் ஜிப்மர் பணிக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதை கட்டா யத்திற்குள்ளாக்கி இந்தி மொழி மாநிலத்தவர்களை மட்டுமே ஜிப்மர் மருத்துவமனையில் கொண்டுவர மத்திய அரசும், ஜிப்மர் நிர்வாகமும் முயற்சித்து வருவதாக தெரிகிறது. 

    அவ்வாறு உள்ளூர் மக்களை புறக்கணித்து வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் பணியில் அமர்த்தினால் அது கலவரத்திற்கும், மோதலுக்குமே வழி வகுக்கும்.

    எனவே, ஜிப்மர் நிர்வாகம் உடனடியாக எதிர்காலத்தில் அலுவலக மொழியாக இந்தி மற்றுமே என்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் இந்தி திணிப்புக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்கள் அனைத்திற்கும் ஜிப்மர் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும். 

    குறிப்பாக ஜிப்மர் நிர்வாகத்தில் இருப்பவர்கள் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதே நமது முதன்மையான நோக்கம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வர வேண்டும். 

    மேலும் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி., என்ற முறையில் நான் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    தமிழகத்திலும், புதுவையில் ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. நிர்வாகரீதியாக அளிக்கப்பட்ட சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டு, இந்தி திணிக்கப்படுவதாக செய்தி உலா வந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சென்னையிலிருந்து கவர்னர் தமிழிசை நேரடியாக புதுவை ஜிப்மருக்கு வந்தார். அங்கு காலை 11.30 மணியளவில் நிர்வாக பிரிவு அலுவலகத்தில் உள்ள இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றார்.

    அங்கு இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

    பின்னர் ஜிப்மரில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கவர்னர் தமிழிசை கூறியதாவது:

    தமிழகத்திலும், புதுவையில் ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. நிர்வாகரீதியாக அளிக்கப்பட்ட சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டு, இந்தி திணிக்கப்படுவதாக செய்தி உலா வந்துள்ளது. கொரோனா காலத்தில் தமிழகம், புதுவை மக்களுக்கு ஜிப்மர் ஆற்றிய சேவை அளப்பரியது. ஜிப்மரில் மொழி திணிப்பு இல்லை. உள்கட்டமைப்புக்காக, நிர்வாகரீதியாக கொடுக்கப்பட்ட சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 4 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் 2 சுற்றறிக்கை மட்டும் வெளியில் வந்துள்ளது. மற்ற சுற்றறிக்கையில் பொதுமக்கள் தொடர்பான கருத்துகள், துறைரீதியானவை தமிழில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மொழியான தமிழை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    ஜிப்மர் மத்திய அரசின் நிறுவனம். இங்கு இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்காக இந்தியை பயன்படுத்த கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டவிதிகளை நினைவுபடுத்தி உறுதிப்படுத்தும் வகையில்தான் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    ஜிப்மரில் தமிழிலேயே பெயர் பலகைகள் இருக்கிறது. இயக்குனர் அலுவலகத்தில்கூட அவரின் பெயர் தமிழில்தான் முதலில் எழுதப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ஆங்கிலம், 3வதாக இந்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தி மட்டும் தெரிந்த பணியாளர் சேவை புத்தகத்தில் இந்தியை பயன்படுத்தும்படி கூறியுள்ளனர்.

    அதே நேரத்தில் நோயாளிகளுக்கான மருத்துவ சேவை, குறிப்புகள் தமிழில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜிப்மரில் இந்தி திணிப்போ, வெறியோ இல்லை. ஜிப்மரின் மருத்துவ சேவைகள் தொடர நாம் அனுமதிக்க வேண்டும்.

    அதற்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். எனவே போராட்டம் என்பது தேவையற்றது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நெல்லித்தோப்பில் மனைவியுடன் தகராறில் தொழிலாளி தூக்கு போட்டு இறந்து போனார்.
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு கண்ணாரவீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 41). கம்பி பிட்டர். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் சூரியா மோட்டார் சைக்கிள் மெக்கானிகாக வேலைபார்த்து வருகிறார். 

    இதற்கிடையே சங்கரின் பெரியம்மா சங்கரின் மனைவி சாந்தியிடம் 4 பவுன் நகையை கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அந்த நகையை பல ஆண்டுகள் ஆகியும் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. 

    அப்போது சங்கர் இனிமேல் இது போன்று நகையை திருப்பி வாங்குமாறு தகராறு செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். குடும்பத்தினர்  சங்கர் விளையாட்டாக கூறி மிரட்டுவதாக எண்ணி இதனை கண்டுகொள்ளவில்லை. 

    இந்த நிலையில்  சாந்தி வெளியே சென்றிருந்தார். அவரது மகள் தேவாலயத்துக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த சங்கர் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து படுக்கையறையில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். 

    தேவாலத்துக்கு சென்று வீடு திரும்பிய அவரது மகள் சுஜித்ரா தந்தை தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இது குறித்து தனது தாய்  மற்றும் அண்ணன் சூரியாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து சங்கரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் சங்கர் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது மகன் சூரியா கொடுத்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வில்லியனூர் அருகே பூக்கடை ஊழியர் ஆற்றில் விழுந்து இறந்து போனார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த பத்துக்கண்ணு ஆற்றுப் பாலத்தில் தண்ணீரில் ஆண் பிணம் மிதந்தது. 

    இது குறித்து பொது மக்கள் வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சென்று தண்ணீரில் மிதந்த உடலை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர் திருக்கோவிலூரை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 47) என்பதும் அவர் பத்துக்கண்ணு சந்திப்பில் பூ கடை ஒன்றில் வேலை செய்ததும். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அந்த பகுதியில் சுற்றி வந்தது தெரியவந்தது. 

    இந்நிலையில் மதுபோதையில் அவர் தவறி பத்துக்கண்ணு ஆற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆத்திச்சூடி சிறப்பு பள்ளியில் மாற்று திறனாளிகள் குறித்து விழிப்புணர்வு வகுப்பை ஜான்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி ஸ்வஸ்திக் அறக்கட்டளை  மற்றும் என்.ஐ.இ.பி.எம்.டி. இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சட்டங்கள் சலுகைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஒருநாள் விழிப்புணர்வு வகுப்பை நடத்தியது. 

    எல்லைபிள்ளை சாவடியில் உள்ள ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி வளாகத்தில்   நடைபெற்ற இந்த சிறப்பு வகுப்பை ஜான்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி ெதாடங்கி வைத்தார். ஆத்திச்சூடி சிறப்பு பள்ளியின்  தாளாளர் டாக்டர்  சத்திய வண்ணன் அனைவரையும்  வரவேற்றார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ராமச்சந்திரன் மற்றும் தொழிலதிபர் சதீஷ்குமார் ஆகிேயார் சிறப்புரையாற்றினார்கள். அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் நன்றி கூறினார். 

    இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பங்குபெற்றனர்.
    ×