என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கடற்கரை சாலையில்தியாக சுவரை திறக்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 100 அடி உயர தேசியக்கொடியுடன் கூடிய தியாக சுவர் 75 நகரங்களில் சக்ரா பவுண்டேஷன் அமைக்க உள்ளது. 

    புதுவை கடற்கரை காந்தி சிலை எதிரே தியாக சுவருடன், கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய ஆயிரம் தியாகிகளின் பெயரை தியாக சுவரில் பொறித்து அதில் கியூ ஆர் கோடு அமைக்கப்படும். 

    இதன்மூலம் தியாகிகளின் வரலாறை தெரிந்துகொள்ளலாம்.  முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஜூலை முதல்வாரத்தில் தியாக சுவர், கொடிக்கம்பம் திறப்பு விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு சக்ரா பவுண்டேஷன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    தேசியக்கொடியை ஏற்றி தியாக சுவரை பிரதமர் திறந்து வைப்பார். நிகழ்ச்சியோடு பாரதியார் 100-வது ஆண்டு, சுபாஷ்சந்திரபோசின் 125-ம் ஆண்டு, வ.உ.சி. 150-வது ஆண்டு விழாக்களையும் இணைந்து கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    தமிழக பாடத்திட்டத்தையே புதுவையிலும் பின்பற்றுவதால் புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 13-ந் தேதி திறக்கப்படுகிறது. பிளஸ்-2 வகுப்புகள் ஜூன் 20-ந்தேதி தொடங்கும் என தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

    தமிழக பாடத்திட்டத்தையே புதுவையிலும் பின்பற்றுவதால் புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று புதுவையில் பள்ளிகள் திறப்பு தேதியை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். புதுவையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 23-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. பிளஸ்-2 வகுப்புகளும் அன்று திறக்கப்படவுள்ளது. பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
    உழந்தைகீரப்பாளையத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை உழந்தை கீரப்பாளையம் தேவி கருமாரியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு தீமிதி திருவிழா  கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    நாள்தோறும் பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கடந்த 27-ந் தேதி சாகை வார்த்தல், சாமி அலங்கார வீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான 108 பால்குட அபிஷேகம், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி யாகம் நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 

    விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில்  சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பெண் பக்தர்கள் அதிகளவில் தீ மிதித்தனர். ஒரு பக்தர் தனது இரு குழந்தைகளையும் கையில் சுமந்தபடியே வந்து தீமித்து தனது நேர்த்திக்கடனை நிறைவு செய்தார்.  இதைத்தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது.
    முதலியார்பேட்டையில் கழிவுநீர் வாய்க்கால் தகராறில் பொதுப்பணித்துறை என்ஜினீயரை தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார்யார்பேட்டை இந்திராநகர் அண்ணாவீதியை சேர்ந்தவர் ராஜகிருஷ்ணன் (வயது57). இவர் புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டுக்கு 2 தெருவிலும் வாசல் உள்ளது.

    இந்த நிலையில் ராஜகிருஷ்ணன் வீட்டு பின்வாசல் கழிவுநீர் வாய்க்காலில் நாகராஜன் என்பவரது வீட்டு கழிவுநீர் தேங்கி அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதுபற்றி ராஜகிருஷ்ணன் கேட்ட போது நீ யார்  இதுபற்றி கேட்பது என்று நாகராஜ் கூறி தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    அப்போது அவருடன் இருந்த அவரது மகன் சங்கர் (26) என்பவர் என் அப்பாவிடம் வாக்குவாதம் செய்கிறாயா? என திட்டி ராஜகிருஷ்ணனை கன்னத்தில் தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜகிருஷ்ணன் மயங்கி சாய்ந்தார்.

     உடனே அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ராஜகிருஷ்ணனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர்.  அங்கு சிகிச்சை பெற்ற ராஜகிருஷ்ணன் பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 1060 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 2 பேர், ஏனாமில் 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    காரைக்கால், மாகியில் தொற்றால் பாதித்தவர் யாரும் இல்லை. தற்போது வரை கொரோனா தொற்று ஏற்பட்ட எவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.

    புதுவையில் 12 பேர், ஏனாமில் 7 பேர் என மொத்தம் 19 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.புதுவையை சேர்ந்த 2 பேர், ஏனாமை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் குணமடைந்துள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 854 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில்  1 லட்சத்து 63 ஆயிரத்து 873 பேர் குணமடைந்துள்ளனர். 

    1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பா.ம.க. தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று புதுவையில் பா.ம.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    புதுச்சேரி:

    சென்னையில்  நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும்  எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதனை வரவேற்று கொண்டாடும் வகையில் புதுவையில் பா.ம.க.வினர் பல இடங்களில் கொண்டாடினர்.

    புதிய பஸ் நிலையம் மற்றும் ராஜா தியேட்டர் சிக்னலில் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி  பா.ம.க.வினர் கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர்கள் வடிவேல், மதியழகன் இளைஞர் சங்க செயலாளர் சேகர், வன்னிய சங்க பொறுப்பாளர்கள் முருகன், நரசிம்மன், நாகப்பன், மாநில தொழிற்சங்க செயலாளர் பாண்டித்துரை, வேல்முருகன் , பாட்டாளி உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் மணிபாலன் மாநில மகளிர்சங்க நிர்வாகிகள் ஜோதி பிரியா, வெர்ஜினியா,நகர தலைவர் தமிழ் செல்வம், நகர செயலாளர் நாகமுத்து, தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணி, ஊடக பேரவை ராகுல், மற்றும் தொகுதி தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    மதுகுடித்து விட்டு ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    பெரியக்கடை போலீசார்  காந்திவீதி-தியாகு முதலியார் வீதி சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் மது குடித்து விட்டு போதையில் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார்  அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்த முகமது அலி (வயது50) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உப்பளம் அம்பேத்கர் சாலை  துறைமுக வாயில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் மது குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் உப்பளம் ராசுஉடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜோசப்(36), கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த வேலவன்(24), லாஸ்பேட்டை எழில் நகரை சேர்ந்த சதீஷ்(25) மற்றும் விழுப்புரம் அத்தியூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் சண்முகாபுரம் பகுதியில்  பொது இடத்தில் ரகளை செய்த வடக்கு பாரதிபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் குண்டுமணி(30) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசாரும், கன்னியக்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த அதே பகுதியை சேர்ந்த தேவா என்ற தேவநாதன்(35) என்பவரை கிருமாம்பாக்கம் போலீசாரும் கைது செய்தனர்
    சாய்பாபாவுக்கு 108 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு அருகேயுள்ள வழிகாட்டு சாய்பாபா ஆலயத்தில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி சாய்பாபாவுக்கு 108 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

    ஒவ்வொரு பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க அவர்களுடைய பெயர்களை கூறி அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாய்பாபாவுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட இளநீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

    விழாவுக்கான ஏற்பாடுகளை வழிகாட்டும் சாய்பாபா ஆலய டிரஸ்டி சாய்சசி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
    உப்பளத்தில் டென்னிஸ் போட்டியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் ஓபன் நான் ரேங்கிங் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் புதுவை டென்னிஸ் சங்க தலைவர் பிரதாபன், போத்தீஸ் பொது மேலாளர் அருள்மொழி,குழு உறுப்பினர்கள் சிவகுமார், புகழேந்தி, அமுத கணேசன், கணேஷ், விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கடந்த 26-ந் தேதி தொடங்கிய இப் போட்டி  முடிவடைகிறது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
    அக்னி நட்சத்திரம் நிவர்த்தி பூஜையை முன்னிட்டு பாகூர் மூலநாதருக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந் தேதி தொடங்கி  நிறைவடைவதையொட்டி பாகூர் மூலநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு மூலநாதருக்கு 108 கலசங்களைக் கொண்டு பூஜை செய்தனர்.

    யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரை மூலநாதருக்கு  நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல் பிரதமரின் லட்சியங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.

    2-வது நாளான திருச்சி இளங்குமார் சம்பத் மனிதநேயம் குறித்து விளக்கினார். வரலாறு, வளர்ச்சி குறித்து மாநில தலைவர் சாமிநாதன் பேசினர். 

    பிரதமரின் நலத்திட்டங்கள் குறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார். தொடர்ந்து தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, தமிழக  பா.ஜனதா செயலாளர் சூர்யா, வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். 

    தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கோபாலன் கடையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடந்த முதல்நாள் தொடக்கவிழாவுக்கு மாநில தலைவர் சாமிநாதன் வரவேற்றார். 

    ஒழுங்கு நடவடிக்கை குழு பொறுப்பாளரும், முகாமின் தலைவருமான இளங்கோவன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    மாநில  பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பேசும்போது,  பயிற்சி முகாம் அனைத்து நிர்வாகிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கட்சியை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள்  குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார். 

    தமிழக  பா.ஜனதா  தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

     8 ஆண்டுகளில் பிரதமர் மோடி  தலைமையிலான ஆட்சியில் அனைவருக்கும் வங்கி கணக்கு, மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா, செல்வமகள், திறன் மேம்பாடு மற்றும்  வேலைவாய்ப்பு, முத்ரா வங்கி கடன் திட்டம், இலவச எரிவாயு அடுப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம்,  விவசாயிகளுக்கு நேரடி மானிய திட்டம், 18ஆயிரத்து 500 கிராமங்களுக்கு மின்வசதி திட்டம், விரைவு சரக்கு போக்குவரத்து உட்பட  பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

    பிரதமரின் லட்சியங்களையும், திட்டங்களையும் உணர்வுப்பூர்வமாக  நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.


    கடற்கரை காந்தி திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் தியாகிகள் சுவருடன் அமைக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    75 ஆண்டை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் 75 நகரங்களில் 100 அடியில் கொடிக்கம்பம் அமைத்து தேசியக்கொடி பறக்கவிடப்பட உள்ளது. 

    புதுவையில் கடற்கரை சாலை காந்தி திடலில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு தியாகிகள் சுவருடன் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 100 அடி கொடிக்கம்பத்தில் 30 அடி நீளத்திலும், 8 அடி அகலத்திலும் தேசியக்கொடி பறக்கவிடப்படும். 

    கொடிக்கம்பம் அமையும் இடத்துக்கு பின்புறம் தியாகிகள் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 

    இதில் சுதந்திரத்துக்காக போராடிய ஆயிரம் தியாகிகளின் பெயர், விபரங்கள், கியூ. ஆர்.கோடு ஆகியவை அமைக்கப்படுகிறது. கியூ.ஆர்.கோடு மூலம் தியாகிகளின் முழு விபரங்களை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் பிரதமர் காணொலி மூலம் டெல்லியிலிருந்து இதை திறந்து வைக்க உள்ளார்.
    ×