என் மலர்
புதுச்சேரி
- ஆயுஷ்மான் மருத்துவமனை அருகே ரூ 1 ½ கோடியில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அந்த இடத்தை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கோட்டைமேடு சாலையில் கட்டப்பட்டு வரும் ஆயுஷ்மான் மருத்துவமனை அருகே ரூ 1 ½ கோடியில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் ஆயுஷ் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், அசம்பாவித சம்பவங்க ளின்போது எந்தவித தடையுமின்றி தீயணைப்பு வாகனங்கள் செல்லும் வகையிலும் தீயணைப்பு நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் பாலாஜி, தீயணைப்பு துறை டிவிஷனல் அதிகாரி இளங்கோ மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி துணை செயலாளர் குலசேகரன், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் ரமணன், தர்மராஜ், சபரி, திலகர், சுப்பிரமணி, முருகையன், ரபிக், ராஜா முகமது, வாசு, அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மண்ணாடிப்பட்டு தொகுதி பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கனூரில் நடந்தது.
- அமைச்சர் நமச்சிவாயம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு சிகப்பு ரேஷன்கார்டு, கல்வீடு கட்ட மானியத்தொகையை வழங்கினார்.
புதுச்சேரி
மண்ணாடிப்பட்டு தொகுதி பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கனூரில் நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு சிகப்பு ரேஷன்கார்டு, கல்வீடு கட்ட மானியத்தொகையை வழங்கினார். சமூகநலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையையும் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், முத்தழகன், பா.ஜனதா நிர்வாகிகள் தமிழ்மணி, சிவா, கலியபெருமாள், செல்வகுமார், கண்ணன், அ.தி.மு.க. நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செட்டிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பாட்கோ மூலம் ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் உழவுப்பணிக்காக வாங்கப்பட்ட டிராக்டரை ஓட்டிய அமைச்சர் அதனை விவசாயிகளின் பயன் பாட்டுக்கு ஒப்படைத்தார்.
- புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து தியாக சுவர் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்
- புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
புதுச்சேரி:
மத்திய சுற்றுலாத்துறை மந்திரியை புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து தியாக சுவர் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று காலை மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்தார். அப்போது புதுவை மாநிலத்தில் சுற்றுலா மேம்பட்டு திட்டங்கள் குறித்து சபாநாய கர் ஏம்பலம் செல்வம் விளக்கினார்.
மேலும் புதுவையில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 இடங்களில் நிறுவப்படவுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் தாங்கிய தியாகசுவர் குறித்தும் எடுத்துக்கூறினார். இதைத்தொடர்ந்து புதுவையில் நிறுவப்பட்டு வரும் முதல் தியாக சுவர் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அழைப்பிதழ் வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அருள்முருகன், சக்கரா பவுண்டேசன் நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- முத்தியால்பேட்டை சோலை நகர் தெற்கு சுனாமி குடியிருப்பில் மின் கம்பம் அபாயகரமாக இருந்தது.
- அந்த பகுதி மக்கள் தி.மு.க. சேவை மையம் நிர்வாகி மதன்பாபுவிடம் அதனை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை சோலை நகர் தெற்கு சுனாமி குடியிருப்பில் மின் கம்பம் அபாயகரமாக இருந்தது. அந்த பகுதி மக்கள் தி.மு.க. சேவை மையம் நிர்வாகி மதன்பாபுவிடம் அதனை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தி.மு.க. சேவை மைய நிர்வாகி மதன்பாபு மின்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதனையடுத்து அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டதால் மின்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு மதன் பாபு மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- பாண்டி மெரினா அருகில் சாலை அமைப்பதற்கான பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- மணல்கள் கொண்டு செல்லப்பட்டு இருப்பதை கண்டார்
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பா கீரப்பாளையம் திப்பு ராயப்பேட்டையில் அமைந்துள்ள பாண்டி மெரினா அருகில் சாலை அமைப்பதற்கான பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது டன் கணக்கில் லாரிகளில் பாண்டி மெரினாவுக்கு பின்புறம் மணல்கள் கொண்டு செல்லப்பட்டு இருப்பதை கண்டார். அங்கு எந்த வித அரசு ஆணையின்றி யாரோ காடுகளை வெட்டி அழித்து அங்கு ஆக்கிரமித்து ஜெட் வைத்து சட்ட விரோதமான செயல்களை செய்து வருவது தெரிவந்தது.
இது குறித்து மீன் வளத்துறை இயக்குனர் பாலாஜி, வனவிலங்குகள் துறை இயக்குனர் வாஞ்சு, ஆகியோரிடம் கென்னடி எம்.எல்.ஏ. முறையிட்டார். இது சம்மந்தமாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோரை சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கென்னடி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், தி.மு.க. பிரமுகர் நோயல், நிசார், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, இளைஞர் அணி எமில், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, மோரீஸ் ஜெயசீலன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது.
- புதுவையில் நடைபெறும் பெரும்பாலான கொலைகள் இந்த பாணியை பின்பற்றியே நடந்து வருகின்றன.
புதுச்சேரி:
லாஸ்பேட்டையில் நள்ளிரவில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வீடு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது. ரவுடிகள் தங்களது எதிராளிகளை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். முதலில் வெடிகுண்டு வீசி எதிராளிகளை நிலைகுலைய செய்து விட்டு பின்னர் அரிவாளால் வெட்டி கொல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
புதுவையில் நடைபெறும் பெரும்பாலான கொலைகள் இந்த பாணியை பின்பற்றியே நடந்து வருகின்றன. புதுவை நகர பகுதிகள் மட்டுமின்றி கிராம புறங்களிலும் இளம் ரவுடிகள் நாட்டு வெடிகுண்டை தயாரித்து எதிராளிகளை மிரட்டி வருகின்றனர்.
சில நாட்களாக இதுபோன்ற சம்பவங்கள் புதுவையில் நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் வீடு அருகே பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஏதோ விபரீதம் நடந்ததாக கருதி வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர். சிலர் துணிந்து வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது வெடிகுண்டு வெடித்த இடத்தில் புகை மண்டலமாக காட்சியளித்தது. யாரோ மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ.வை கொல்லும் முயற்சியில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது அவரை மிரட்டுவதற்காக வெடிகுண்டை வீசி சென்றார்களா? என்பது தெரிய வில்லை.
கடந்த சில நாட்களுக்கு லாஸ்பேட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் வேலூர் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரோ கொலை செய்து விட்டதாக வைத்தியநாதன் எம்.எல்.ஏ. புகார் தெரிவித்தார். இந்த புகாரின் எதிரொலியாக வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வீடு அருகே வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவ இடத்தில் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு தீபிகா சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கிடந்த வெடிகுண்டு சிதறல்களை சேகரித்து வருகின்றனர்.
தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நள்ளிரவில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வீடு அருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
- ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
புதுச்சேரி:
புதுவை திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பேட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது18). இவர் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.
இவரை அதே பகுதியை சேர்ந்த உறவினர் முகேஷ் (23) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலை மாணவியிடம் பலமுறை கூறியும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை கீர்த்தனா கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். இதற்காக மதடிகப்பட்டில் இருந்து பஸ் ஏறி சன்னியாசிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கத்திக்குத்தில் மாணவியின் தலை, கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கீர்த்தனா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்த மாணவியின் தம்பி அபினேஷ் தனது நண்பருடன் மொபட்டில் அங்கு வந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது அக்காளை தூக்கி மொபட்டில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.
மாணவியை எடுத்து வந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கீர்த்தனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அபினேஷ் கதறி அழுதான்.
மாணவி படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இதற்கிடையே கீர்த்தனா இறந்தது பற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். மாணவியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் ஹரி தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
மாணவி படுகொலை தொடர்பாக திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முகேஷை வலைவீசி தேடி வருகின்றனர். முகேஷ் மீது ஏற்கனவே அடிதடி, திருவண்டார்கோவில் மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் பெயர், போலீசாரால் பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள் சரித்திர பதிவேட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நெட்டப்பாக்கம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் டாக்டர் பலியானார்.
- மடுகரை புறக்காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெட்டப்பாக்கம்:
புதுவை மாநிலம் நெ ட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரை கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் தனுஷியா (வயது 25). பல் டாக்டரான இவரும், அதே பகுதியை சேர்ந்த சித்தா டாக்டர் ஸ்ரீராம் என்பவரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு 2 பேரும், சென்னையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். கடந்த வாரம் தனுஷியாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் மடுகரையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தனுஷியாவுக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், டெ ங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி தனுஷியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மடுகரை புறக்காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு பல் டாக்டர் பலியான சம்பவம் அ ப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வாக்குப்பெட்டி உரிய பாதுகாப்புடன் இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
- அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றது.
புதுச்சேரி:
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதி நேற்று நடந்தது.
புதுவை சட்டசபை கமிட்டி அறையில் நடந்த வாக்குப்பதிவில் 30 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கமும் வாக்குகளை பதிவு செய்தனர். புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இன்று அதிகாலை வாக்குப்பெட்டி உரிய பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றது.
டெல்லியில் பாராளுமன்ற ராஜ்யசபா செயலாளரிடம் புதுவை சட்டசபை செயலர் முனுசாமி, தேர்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோர் வாக்கு பெட்டி மற்றும் உபகரணங்களை ஒப்படைத்தனர். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
- யார் முதலில் செல்வது என்பதில் இரு கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
- ½ மணி நேரமாக இந்த மோதல் நீடித்த நிலையில், போலீஸ் அணிவகுப்புக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில பிராந்தியமான ஏனாமில் கோதாவரி ஆற்று வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
இதை பார்வையிட கவர்னர் தமிழிசை ஏனாம் சென்றர். அவரை வரவேற்பதில் இரு கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் ஒரு கோஷ்டியும், தற்போதைய எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி அசோக் தலைமையில் ஒரு கோஷ்டியும் கவர்னரை வரவேற்க காத்திருந்தனர்.
யார் முதலில் செல்வது என்பதில் இரு கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ½ மணி நேரமாக இந்த மோதல் நீடித்த நிலையில், போலீஸ் அணிவகுப்புக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
- உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பிட்டு தேசிய நிறுவனங்களுக்குரிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
- புதுவை மத்திய பல்கலைக்கழகம் கூட இந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய கல்வித்துறை அமைச்சகம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கிய உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பிட்டு தேசிய நிறுவனங்களுக்குரிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மட்டுமே சிறந்த முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. புதுவை மத்திய பல்கலைக்கழகம் கூட இந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. பல்கலைக்கழ கங்களுக்கான தரவரிசை பட்டியலிலும் குறைந்துகொண்டே செல்கிறது. இந்த ஆண்டு 68-ம் இடத்தில் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் திறன் ஆண்டுக்காண்டு குறைந்து வருவதை காட்டுகிறது. புதுவை பொறியியல் கல்லூரி உட்பட்ட எந்த பொறியியல் கல்லூரியும், சட்டக்கல்லூரியும் இந்தியாவில் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதுவையில் உள்ள 20 கல்லூரிகளில் காஞ்சி மாமுனிவர் மேற்பட்ட படிப்பு மையம் 80-வது இடத்தையும், மாகியில் உள்ள மகாத்மா காந்தி கலைக்கல்லூரி 99 -வது இடத்தையும் பெற்றுள்ளன. புதுவை கல்லூரிகள் ஒன்று கூட முதல் 50 இடத்தில் வரவில்லை.
புதுவையில் உள்ள எந்த பல் மருத்துவ, மேலாண்மை, மருந்தியல், மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை. இதை எப்படி சரி செய்வது என்ற ஆழ்ந்த பரிசோதனையில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
- போராட்டத்துக்கு மாநில தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மாநில தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜா, பொதுச்செயலாளர் செல்வகுமார், செயலாளர் கஸ்பர், பொருளாளர் கபரியேல், நிர்வாகிகள் சீனிவாசபெருமாள், குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன், தமிழர்களம் அழகர், திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடை ராயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை ஒருங்கிணைந்த வளர்ச்சி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக அரசாணை வெளியிட வேண்டும்.
கல்வி உதவித்தொகையை தடையின்றி முழுமையாக வழங்க வேண்டும். சிறப்புக்கூறு நிதியை வேறு துறைகளை மாற்றக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதை நிறைவேற்றாத என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசை கண்டித்தும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
முன்னதாக இயக்கத்தின் நிர்வாகிகள் முருகா தியேட்டர் சிக்கனல் அருகில் ஒன்றுகூடி அங்கிருந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். அவர்களை துறை அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அங்கு வந்த நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையேற்று முற்றுகையை கைவிட்டு நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றனர்.






