என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. ஆயிரம் ரொக்கம் வழங்க உள்ளது.
    • கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பினை நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.

    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. ஆயிரம் ரொக்கம் வழங்க உள்ளது.

    வருகின்ற 9-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைக்கிறார். கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பினை நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரியமுதலியார்சாவடி முதல் வார்டில் கோட்டகுப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி தலைமையில் வீடு வீடாகச் சென்று தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்பட்டது.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் ஏழுமலை, டாக்டர்.வினோபாரதி, சேகர், ஏழுமலை, விஜயரங்கம், சக்திவேல், முருகானந்தம், விநாயகம், சுதாகர், தேவராஜ், ரமேஷ், அய்யப்பன், ஜானகி, சிவகுமார், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக சுகாதார நிறுவனம் 2030-க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • முதல்கட்டமாக 60 சதவீத மக்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட பரிசோதனையில் எஞ்சியவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும்.

    புதுச்சேரி:

    உலக சுகாதார நிறுவனம் 2030-க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

    மத்திய அரசு 2025-க்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என இலக்கு முன்வைத்து அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. புதுவை அரசின் சுகாதாரத்துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் ஒழிப்புக்காக வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்ய உள்ளனர்.

    இந்த பரிசோதனை திட்டத்தின் தொடக்கவிழா மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் கீழ் நடமாடும் எக்ஸ்ரே எந்திரம் மூலம் வீடு, வீடாக பரிசோதனை செய்ய உள்ளனர். மரபியல் மூலம் சளி பரிசோதனையும் செய்யப்படும். இந்த பரிசோதனைகள் மூலம் காசநோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கலாம். முதல்கட்டமாக 60 சதவீத மக்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட பரிசோதனையில் எஞ்சியவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும். விழாவில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், சுகாதாரத்துறை மார்பக நோய் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறும்போது, புதுவையில் ஆயிரத்து 500 காசநோயாளிகள்தான் உள்ளனர். இதில் 56 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்வதால் புதுவையில் காசநோயை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்று கூறினார்.

    கவர்னர் தமிழிசை கூறும்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக காசநோய் உள்ளிட்ட பிற நோய்களின் மீது கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு பிற நோய்களின் மீது மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.

    பிரதமர் மோடி காசநோய்க்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளார். காசநோயாளிகள் 100 பேரை நானும் தத்தெடுத்துள்ளேன். ஏற்கனவே புதுவை மாநிலம் காசநோய் பாதிப்பை குறைத்ததற்காக மத்திய அரசிடம் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது.

    மேலும் தீவிர முயற்சியெடுத்து தங்க பதக்கம் பெற திட்டமிட்டுள்ளோம். தமிழக கவர்னர் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஆரோவில் சேர்மன் பதவி ஆதாயம் தரும் பதவி அல்ல. சேவை அடிப்படையில்தான் அந்த பதவியில் பணியாற்றுகிறோம்.

    இதனடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தமிழக கவர்னர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆதார் எண் கட்டாயம் என சொல்கின்றனர். இதன்மூலம் தகுதியான பயனாளிகளை கண்டறிய முடியும் என்றார்.

    • யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
    • அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது.

    தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை செயலாளர் குமார் வரவேற்றார்.

    நமது வாழ்க்கையுடன் யோகக்கலை ஒன்றிணைந்து உள்ளது. யோகக் கலையானது அனைத்து நோய்களுக்கும் பிரதான மருந்தாக உள்ளதை அனுபவ ரீதியாகவே உணரமுடியும், இந்தக் கலையை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி. இஸ்லாமிய நாடுகளிலும் யோகக் கலையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். நமது கோவில்களில் இறைவன் யோக நிலையில் இருப்பதை காணலாம். மனதையும் உடலையும் நலமுடன் வைப்பதற்கு யோக கலை அவசியம். கோபம் உடல் நலத்தை கெடுக்கும். அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது. மருத்துவமனை நோயாளிகளுக்கு யோக கலை பயிற்சி அளிக்க புதுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் விருப்பப்படும் மாணவகளுக்கு யோகா கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

    • லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலுக்கு பாதயாத்திரை நடைபெறும்.
    • ஆன்மிக சொற்பொழிவை பஞ்சமுக ஆஞ்சநேய பக்தசபா கோசகன் பட்டாச்சாரியார் தொடங்கி வைக்கிறார்.

    புதுச்சேரி:

    லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலுக்கு பாதயாத்திரை நடைபெறும்.

    அதுபோல் வருகிற 8-ந் தேதி 26-ம் ஆண்டு பாதயாத்திரை நடைபெற உள்ளது. அன்றைய 6 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் பாதயாத்திரையை திருக்கோவிலூர் ஸ்ரீமத் ஜீயர் சுவாமிகள் மங்கள சாசனத்துடன் தொடங்கி வைக்கிறார்.

    யாத்திரையில் தமிழகம், புதுவையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பஜனை குழுக்களும், திருமால் அடியார்களும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மிக பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.

    யாத்திரை புதுவை- கடலூர் சாலை வழியாக அபிஷேகபாக்கம், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலை சென்றடைகிறது.

    தொடர்ந்து கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.  8 மணி முதல் 2 மணி வரை லட்சுமி நரசிம்மருக்கு பூஜிக்கப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    முன்னதாக 7-ந் தேதி 6 மணிக்கு வைசியாள்வீதி வாசவி திருமண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. ஆன்மிக சொற்பொழிவை பஞ்சமுக ஆஞ்சநேய பக்தசபா கோசகன் பட்டாச்சாரியார் தொடங்கி வைக்கிறார். பூவைப் பூவண்ணன் அடி என்ற தலைப்பில் நெய்தல்நாடான் சொற்பொழிவாற்றுகிறார்.

    விழா ஏற்பாடுகளை ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, பொருளாளர் வாசுதேவன், கவுரவ தலைவர்கள் பூவராகவன், ஜெயப்பிரகாஷ், நிர்வாகிகள் முகுந்தன், ராமமூர்த்தி, விட்டல், சுப்பிரமணியன், கோதண்டராமன், ராஜேஷ், அசோகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • முதலியார்பேட்டை தொகுதி குமரன் நகர் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது.
    • இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி குமரன் நகர் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இந்த சாலைகளை சீரமைத்து தருமாறு குமரன் நகர் பகுதி மக்கள் சம்பத் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள புதுவை நகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    இதில், நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்க டாஜலபதி, இளநிலை பொறியாளர் ரமேஷ், குமரன் நகர் நல வாழ்வு சங்க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • சாராயக்கடையில் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்த ஜெயகுமார் (24) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசாரும் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம் கனரக வாகனம் நிறுத்து மிடத்தில் உள்ள ஒரு மதுக்கடை எதிரே ஒரு வாலிபர் மது குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடை யூறாக ரகளை செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளை செய்த அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் மயிலம் அருகே பாதிரியாபுலியூரை சேர்ந்த சீனிவாசன்(வயது30) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதுபோல் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ரகளை செய்த லாஸ்பேட்டை வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு(33) என்பவரை லாஸ்பேட்டை போலீசாரும், உழவர்கரை குண்டு சாலை ரோட்டில் மது குடித்து விட்டு பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்ட மூலம்குளம் அன்னை தெரேசாநகரை சேர்ந்த ரவி(37) என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசாரும், சேதராப்பட்டு சந்திப்பில் போதையில் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்ட வானூர் அருகே கொடூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (40) என்பவரை சேதராப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

    மேலும் திருக்கனூர் அருகே மணலிபட்டு பாலத்தில் நின்று கொண்டு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட வானூரை சேர்ந்த சக்ரபாணி(35) மற்றும் ராஜேஷ்(32) ஆகியோரை திருக்கனூர் போலீசாரும், சந்தை புதுக்குப்பம் புது அய்யனார் கோவில் தெருவில் ரகளை செய்த அதே பகுதியை சேர்ந்த முத்தாள்ராயன்(25) என்பவரை காட்டே ரிக்குப்பம் போலீசாரும், கரியமாணிக்கத்தில் சாராயக்கடையில் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்த ஜெயகுமார் (24) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசாரும் கைது செய்தனர்.

    இதேபோல் திருபுவனை, முதலியார்பேட்டை, தவளக்குப்பம், பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடி போதையில் ரகளை செய்த 4 பேரை அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் கைது செய்தனர்.

    • புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • 223 தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.16 லட்சத்து 26 ஆயிரத்து 170 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு வேளாண்துறை மூலமாக ஒருங்கிணந்த தோட்டக்கலை மேம்பாடு திட்டம் மூலம் வெற்றிலை சாகுபடிக்கு பிந்தைய மானியம் வழங்கப்படுகிறது.

    ஒரு சென்ட்டிற்கு ரூ.ஆயிரத்து 500 என்ற அடிப்படையில் 657.33 சென்ட் பரப்பில் வெற்றிலை சாகுபடி செய்த 51 விவசாயிகளுக்கு ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்து 995 வழங்கப்படுகிறது.

    மரவள்ளி சாகுபடி செய்த 36 விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகையாக ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 550, தென்னை பராமரிப்பு திட்டத்தின் கீழ் 136 விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.8 ஆயிரத்து 750 வீதம் ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 625 என மொத்தம் 223 தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.16 லட்சத்து 26 ஆயிரத்து 170 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவைச் சட்டசபைத் தேர்தலில் மீனவர்களுக்கு தனித்தொகுதி ஒதிக்கீடு செய்ய வேண்டும் எனஅகில இந்திய மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    • புதுவையில் மக்கள் தொகையின்படி 3-வது பெரிய சமூகமாக மீனவ சமூகம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவைச் சட்டசபைத் தேர்தலில் மீனவர்களுக்கு தனித்தொகுதி ஒதிக்கீடு செய்ய வேண்டும் எனஅகில இந்திய மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    அகில இந்திய மீனவர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் புதுவை செல்வராஜ் செட்டியார் சிலை அருகே சங்க செயல் தலைவர் பேராசிரியர் பெரியாண்டி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் செயலாளர் மூர்த்தி, அமைப்பாளர் குமார், அமைப்பு செயலாளர்கள் சுயசந்திரன், வடிவேல், நிர்வாகிகள் பத்மநாபன், தலைமணி பரத்குமார், சக்திவேல், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    புதுவையில் மக்கள் தொகையின்படி 3-வது பெரிய சமூகமாக மீனவ சமூகம் உள்ளது. ஆனால் சட்டசபைத் தேர்தலில் என்றைக்குமே மீனவர்கள், அவர்கள் வாழும் தொகுதிகளில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக வர முடியாதவாறு தொகுதிகள் வரைமுறை செய்யப்பட்டுள்ளன.

    சட்டசபையில் பிரிதிநிதித்தும் இல்லாமல் கடந்த 75 ஆண்டுகளாக மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது ஜனநாயக கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது. பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் மீனவர்களின் நலன்கள் முற்றிலும் புறக்கணிக்கப் படுகின்றன.

    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அளிப்பது போல், சட்டசபை தேர்தலில் 10 சதவீத தொகுதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்காக புதுவை சட்டசபையில் பிரத்யேக சட்டம் இயற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று அகில இந்திய மீனவர் சங்கம் ஜனநாயக சக்திகள் அனைத்தையும் கேட்டுக் கொள்கிறது.

    மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து மீனவ கிராமங்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பாண்டியன் சந்து, மிளாத் வீதி, சந்தாசா கிப் வீதி, சந்தாசாகிப் வீதி, காஜியார் வீதி, முல்லா வீதி, பெரியப்பள்ளி, வீரர்வெளி, வ.உ.சி. வீதி, தில்லை மேஸ்திரி வீதி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடையின் மூடிகளும் அடிக்கடி மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகின்றன.
    • அப்போது போலீஸ் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பாண்டியன் சந்து, மிளாத் வீதி, சந்தாசா கிப் வீதி, சந்தாசாகிப் வீதி, காஜியார் வீதி, முல்லா வீதி, பெரியப்பள்ளி, வீரர்வெளி, வ.உ.சி. வீதி, தில்லை மேஸ்திரி வீதி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடையின் மூடிகளும் அடிக்கடி மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகின்றன.

    மேலும் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களும் அதிகப்படியாக திருடப்படுகின்றன.

    ஆகவே அப்பகுதி மக்கள் இரவில் நடமாடும் மர்ம நபர்களை கட்டுப்படுத்த வேண்டும். திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்கு சென்ற தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது போலீஸ் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவ்வை நகர் பஞ்சாயத்து கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் அசோக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன் மற்றும் ரூ.33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
    • இந்த நிலையில் அரியாங்குப்பத்தில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன் மற்றும் ரூ.33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுவையில் கேரள லாட்டரி மற்றும் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த தடையை மீறி பலர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.

    அவ்வப்போது போலீசார் இதனை கண்டறிந்து லாட்டரி சீட்டு விற்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரியாங்குப்பத்தில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது 2 பேர் லாட்டரி முடிவுகளை செல் போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொண்டி ருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் காக்கையன்தோப்பை சேர்ந்த மாமாமொய்தீன்(50) மற்றும் காஜாமெய்தீன்(48) என்பதும், இவர்கள் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    • புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்கள் சந்திப்பு நடைபயணத்தை காங்கிரசார் நடத்த உள்ளனர்.
    • ரங்கசாமி பா.ஜனதா வுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் மாநில அந்தஸ்து பெறுவதுதான் என, தேர்தல் சமயத்தில் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்கள் சந்திப்பு நடைபயணத்தை காங்கிரசார் நடத்த உள்ளனர்.

    இதற்கான ஆலோச னைக்கூட்டம் வள்ளலார் சாலையில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம்

    எம்.பி. முன்னிலை வகித்த னர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் அனுமந்த்ராவ் சிறப்புரையாற்றினார்.

    வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கள் கமலகண்ணன், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர். பாலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    ரங்கசாமி பா.ஜனதா வுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் மாநில அந்தஸ்து பெறுவதுதான் என, தேர்தல் சமயத்தில் கூறினார். உண்மையில் மாநில அந்தஸ்து பெற ரங்கசாமி நினைத்திருந்தால் ஆட்சியில் அமர்ந்த 6 மாதங்களில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். டெல்லிக்கு சென்று புதுவைக்கு மாநில

    அந்தஸ்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி யிருக்க வேண்டும்.

    இதில் எதையாவது செய்தாரா? இல்லை. ஆனால் அவருக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ, கவர்னர் எப்போது கோப்புகளில் கையெழுத்து போடவில்லையோ, அப்போது மாநில அந்தஸ்து பற்றி பேசுகிறார். உண்மையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் பா.ஜனதாவை எதிர்த்து தெருவில் இறங்கி போராட ரங்கசாமிக்கு தைரியம் இருக்கிறதா?

    பள்ளிகள், கோவில்கள், குடியிருப்புகள் மத்தியில் ரெஸ்டோ பப், மதுபார்க ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளனர். அரசு சொத்துக்கள் தனியார் மயமாக்கும் வேலைகள் நடக்கிறது. இந்த அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டி யிடவேண்டும். அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றிபெற செய்ய வேண்டும். புதுவை மாநிலத்தில் அனைத்து கிராமங்களிலும் இந்த பாதையாத்திரையை 2 மாதம் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கம் இணைந்து வில்லியனூரில் பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
    • வில்வம் பவுண்டேஷன் சார்பில் தயார் செய்யப்பட்ட கைக்கழுவுதல் குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகையை வௌியிட்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கம் இணைந்து வில்லியனூரில் பொது மருத்துவ முகாம் நடத்தினர்.

    வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடந்த முகாமை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்து, வில்வம் பவுண்டேஷன் சார்பில் தயார் செய்யப்பட்ட கைக்கழுவுதல் குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகையை வௌியிட்டார்.

    வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் திலகம், சுகாதார செவிலியர் மேற்பார்வையாளர் ஷாகிரா பானு ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் சிகிச்சை, கண் சிகிச்சை, பல் சிகிச்சை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

    முகாமில் மூத்த குடிமக்கள் நல்வாழ்வுச் சங்க நிர்வாகிகள் கலைமாமணி பரசுராமன், மண்ணாங்கட்டி, விஸ்வநாதன், ரஜினி முருகன், விஜயன், சரவணன், மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன், சபரிநாதன், ரபீக், நடராஜன், பழனிசாமி, முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை வில்வம் பவுண்டேஷன் மற்றும் வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    ×