என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வீடுதோறும் காசநோய் கண்டறியும் திட்டம்-கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்
- உலக சுகாதார நிறுவனம் 2030-க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
- முதல்கட்டமாக 60 சதவீத மக்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட பரிசோதனையில் எஞ்சியவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும்.
புதுச்சேரி:
உலக சுகாதார நிறுவனம் 2030-க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
மத்திய அரசு 2025-க்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என இலக்கு முன்வைத்து அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. புதுவை அரசின் சுகாதாரத்துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் ஒழிப்புக்காக வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்ய உள்ளனர்.
இந்த பரிசோதனை திட்டத்தின் தொடக்கவிழா மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் நடமாடும் எக்ஸ்ரே எந்திரம் மூலம் வீடு, வீடாக பரிசோதனை செய்ய உள்ளனர். மரபியல் மூலம் சளி பரிசோதனையும் செய்யப்படும். இந்த பரிசோதனைகள் மூலம் காசநோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கலாம். முதல்கட்டமாக 60 சதவீத மக்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட பரிசோதனையில் எஞ்சியவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும். விழாவில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், சுகாதாரத்துறை மார்பக நோய் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறும்போது, புதுவையில் ஆயிரத்து 500 காசநோயாளிகள்தான் உள்ளனர். இதில் 56 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்வதால் புதுவையில் காசநோயை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்று கூறினார்.
கவர்னர் தமிழிசை கூறும்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக காசநோய் உள்ளிட்ட பிற நோய்களின் மீது கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு பிற நோய்களின் மீது மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமர் மோடி காசநோய்க்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளார். காசநோயாளிகள் 100 பேரை நானும் தத்தெடுத்துள்ளேன். ஏற்கனவே புதுவை மாநிலம் காசநோய் பாதிப்பை குறைத்ததற்காக மத்திய அரசிடம் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது.
மேலும் தீவிர முயற்சியெடுத்து தங்க பதக்கம் பெற திட்டமிட்டுள்ளோம். தமிழக கவர்னர் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஆரோவில் சேர்மன் பதவி ஆதாயம் தரும் பதவி அல்ல. சேவை அடிப்படையில்தான் அந்த பதவியில் பணியாற்றுகிறோம்.
இதனடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தமிழக கவர்னர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆதார் எண் கட்டாயம் என சொல்கின்றனர். இதன்மூலம் தகுதியான பயனாளிகளை கண்டறிய முடியும் என்றார்.






