என் மலர்
புதுச்சேரி
- மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்
- புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் தலைமை செயலருக்கு ஏப்ரல் 11-ம் தேதியில் கடிதம் அனுப்பியிருந்தேன்.
புதுச்சேரி:
புதுவை மாநில அதிமுக துணை செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த மார்ச் 20-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டு புதுவையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி முக்கிய சாலைகளில் மது விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இந்த சாலைகளில் இருக்கக்கூடிய மது விற்பனை உரிமத்தை உடனடியாக 4 வாரத்தில் இடமாற்றம் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
சுப்ரீம்கோர்ட்டு குறிப்பிட்டுள்ள புதுவையில் உள்ள தேசிய, மாநில மற்றும் நகராட்சி முக்கிய சாலைகளில், என்.எச் 45 ஏ புதுவை- மதகடிப்பட்டு எல்லை முதல் முள்ளோடை எல்லை வரை, என்.எச் 66 புதுவை இந்திராகாந்தி சதுக்கம் முதல் கோரிமேடு எல்லை மாநில நெடுஞ்சாலை வரை, கணபதி செட்டிகுளம் முதல் பிள்ளைச்சாவடி வரை(கிழக்கு கடற்கரை சாலை), கருவடிகுப்பம் முதல் ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் வரை(கிழக்கு கடற்கரை சாலை), லால்பகதூர் சாஸ்திரி வீதி, எஸ்.வி.படேல் சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை, பாரதி வீதி, சின்ன சுப்பராயப் பிள்ளை வீதி, முகமது காசிம் சாலை, செஞ்சி சாலை, மறைமலை யடிகள் சாலை, திருவள்ளுவர் சாலை, ஆம்பூர் சாலை, உப்பளம் அம்பேத்கர் சாலை, வெங்கட சுப்பாரெட்டியார் சதுக்கம் முதல் மரப்பாலம் சந்திப்பு வரையுள்ள சாலை,
மகாத்மா காந்தி சாலை, ஜவகர்லால் நேரு வீதி, மிஷன்வீதி மெயின் சாலை, கருவடிக்குப்பம் மெயின்ரோடு, ஏழை மாரி யம்மன் கோவில் மெயின் ரோடு, கடலூர் மெயின்ரோடு, லெனின் வீதி, வில்லியனூர் மெயின்ரோடு, திருக்காஞ்சி மெயின்ரோடு, வில்லியனூர் முதல் பத்துகண்ணு வரையுள்ள மெயின்ரோடு, பத்துக்கண்ணு முதல் திருக்கனூர் வரை சோரப்பட்டு வழி செல்லும் சாலை, ராஜீவ்காந்தி சதுக்கம் முதல் திருக்கனூர் மெயின்ரோடு வரை, மதகடிப்பட்டு முதல் திருக்கனூர் வரை மெயின்ரோடு, திருக்கனூர் முதல் மணலிப்பட்டு வரை மெயின்ரோடு மற்றும் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள முக்கிய வீதிகளும் அடங்கும்.
சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்தி புதுவை மாநில அதிமுக சார்பில் தலைமை செயலருக்கு ஏப்ரல் 11-ம் தேதியில் கடிதம் அனுப்பியிருந்தேன்.
அதற்கு எந்தவித பதிலும் தலைமை செயலாளர் அளிக்கவில்லை. இதனால் கடந்த மே 11-ம் தேதி சட்டவிரோதமாக அமைக்கப் பட்டுள்ள மதுபான கடைகளை அகற்றக்கோரி சட்டப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் புதுவை அரசு எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை ஏற்காமல் இருப்பது, இந்திய அரசிய லமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும். எனவே புதுவை அரசுக்கு மத்திய உள்துறை மந்திரி, சுப்ரீம்கோர்ட் உத்தரவை புதுவை அரசு பின்பற்ற உறுதியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் கூறியுள்ளார்.
- மது போதையில் ரகளை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
- 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை மடுவுபேட் சந்திப்பில் உள்ள மதுக்கடையில் 2 பேர் குடித்து விட்டு மது போதையில் ரகளை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகளை செய்த 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த எழில்(வயது38) மற்றும் கோட்டக்குப்பம் அபிஷேக் நகரை சேர்ந்த சாந்தநாதன்(26) என்பது தெரியவந்தது. இதைத்தொடந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- பா.ஜனதா அறிவிப்பு
- மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள தெருக்கள் எப்போதும் குப்பைகள் குவிந்து காட்சியளிக்கின்றன.
இது தெருநாய்கள், பன்றிகள், கால்நடைகள் சுற்றித்திரிவதற்கும், அதனால் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்து வருகிறது. அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவில்கள் உள்ள பகுதிகளிலும்கூட குப்பைகள் குவிந்து கிடக்கிறது. முருங்கப்பாக்கம் ரங்கசாமி நகர் செல்லும் பகுதியில் கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது.
இதன் அருகே தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதுபோல் அரியாங்குப்பம் மாதா கோவில் கல்லறைக்கு பின்புறம் நிறைய குடியிருப்புகள் உள்ளது. அங்கும் குப்பை தொட்டி கிடையாது. இதனால் அப்பகுதியிலும் சாலை யிலேயே குப்பைகள் கொட்டி கிடக்கிறது. அரியாங்குப்பம் தொகுதி முழுக்கவே இதுபோன்ற நிலைதான் உள்ளது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள் தொகுதி முழுவதும் குப்பை முறையாக அகற்றப்படு கின்றதா? என ஆய்வு மேற்கொள்ளாததுதான். எனவே அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் நகராட்சி அதிகாரிகளும், கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளும் கள ஆய்வு மேற்கொண்டு குப்பைகள் சாலையில், தெருக்களின் முனைகளிலும் சேர்க்காமல் முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் புதுவை நகராட்சி மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தை கண்டித்து அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதானரை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 26-ந் தேதி தொடங்குகிறது
- இந்த உத்தரவை போலீஸ்துறை சிறப்பு பணி அலுவலர் குபேரசிவக்குமரன் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை போலீஸ் துறையில் காலியாக உள்ள 253 போலீஸ் பணியிடங்களை நிரப்ப உடல் தகுதி தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 4-ந் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கோரிமேடு 26-ந் தேதி தொடங்குகிறது
பிறப்பு, கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி ஆகிய சான்றுகள், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேர்வு நுழைவுச்சீட்டு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 26-ந் தேதி 112 பேர், 27-ம் தேதி 112 பேர், 28-ம் தேதி 26 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை போலீஸ்துறை சிறப்பு பணி அலுவலர் குபேரசிவக்குமரன் வெளியிட்டுள்ளார்.
- வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- அ.ம.மு.க. வெற்றி பெறுவதற்கு சிறப்பாக பணியாற்றுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில அ.ம.மு.க. ஒருங்கிணைந்த வடக்கு மற்றும் தெற்கு மாநில தொகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தெற்கு மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யூ.சி .ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் தொகுதியில் உள்ள வார்டு மற்றும் பூத் கமிட்டி அமைப்பது , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறுவதற்கு சிறப்பாக பணியாற்றுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தொகுதி செயலாளர்கள் செந்தில் என்ற குமரவேல், தனவேல், ராமச்சந்திரன், ரத்தின குமார், முருகன், அன்பழகன், செல்லா என்ற தமிழ்செல்வன், மணவாளன், பரிதி மாற்கலைஞன், கலிய மூர்த்தி, சதீஷ் கண்ணா, வேதபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடல் அன்னைக்கு அபிஷேக பெருவிழா புதுவை நல்லவாடு கடற்கரையில் நடைபெற்றது.
- செயலாளர்கள் சுகுமார், ஜெகதீசன், மாவட்ட தலைவர் செல்வகுமார், நிர்வாகி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் 60 நாட்கள் தடைகாலம் முடிந்து நேற்று முன் தினம் முதல் மீனவர் கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் நாடு மீனவர் பேரவையும் புதுவை மாநிலம் சார்பில் சமூத ஒற்றுமை ஓங்கிடவும் கடல்வளம் மற்றும் மீனவர் நலம் பெருகிடவும் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்திட வேண்டி கடல் அன்னைக்கு அபிஷேக பெருவிழா புதுவை நல்லவாடு கடற்கரையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நல்லவாடு மீனவ பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக மீன் வளத்துறை இயக்குனர் பாலாஜி மற்றும் கிராம அலுவலர் சிவபிரகாசம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மீனவர் பேரவையின் புதுவை மாநில தலைவர் புகழேந்தி அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் ராஜேஷ், மற்றும் பொதுச்செயலாளர்கள் சிட்டி பாபு, குணசீலன், ஆலோசகர் புத்துப்பட்டார், செயலாளர்கள் சுகுமார், ஜெகதீசன், மாவட்ட தலைவர் செல்வகுமார், நிர்வாகி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பா.ம.க. வலியுறுத்தல்
- பல இன்னல்களுக்கு ஆளாகி மிக சிறிய மண் தரை மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு மற்றும் விளையாட்டு துறை சார்பில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் சர்வதேச தரம் வாய்ந்த செயற்கை புல் ஹாக்கி மைதானம் 2004 -ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
செயற்கை புல் ஹாக்கி மைதானத்தின் ஆயுட்காலம் என்பது 7 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு மைதானம் புதுப்பிக்க படாத காரணத்தினால் விளையாட்டு வீரர்கள் அதே மைதானத்தில் விளையாடி வந்தனர்.
ஆனால் தற்போது ஹாக்கி மைதானம் மிகவும் சேதமாகி உள்ளதால் விளையாட்டு வீரர்கள் சரியான முறையில் பயிற்சி பெற முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகி மிக சிறிய மண் தரை மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
மேலும் புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் போட்டிக்கு தயாராக ஒரு மணி நேரத்திற்கு ரூ. 3000 முதல் 5000 வரை செலவு செய்து சென்னை போன்ற நகரங்களில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தை வாடகை எடுத்து பயிற்சி செய்கின்றனர்.
ஹாக்கி விளையாடும் வீரர்களுக்கு இது பெரும் சுமையை ஏற்படுத்துகின்றது. இதனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக ஹாக்கி மைதானத்தை சீர்படுத்தி தரவும் மேலும் அதனை தகுதி வாய்ந்த ஊழியர்களை கொண்டு பராமரிக்கவும், செப்பனிடவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அமைச்சர் சந்திரபிரியங்கா பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏ, கலெக்டர் ஊர் மக்களுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.
- போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தமிழக அரசு பஸ்சில் கண்டெக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைத்து பஸ் சேவையை தொடங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனின் முயற்சியால் காரைக்கால்-கும்பகோணம் வரை செல்லும் தமிழக அரசு பஸ் சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பஸ் சேவை கருக்குங்குடியில் இருந்து தொடங்கப்பட்டது. புதிய பஸ் சேவையை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.சிவா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அமைச்சர் சந்திரபிரியங்கா பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏ, கலெக்டர் ஊர் மக்களுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தமிழக அரசு பஸ்சில் கண்டெக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணித்தார்.
புதுவை அரசு போக்குவரத்து கழகத்தால் பஸ்களை இயக்க முடியாத சூழலில் தமிழக அரசு பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார்.
- அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசுத்துறைகளில் 625 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் மேல்நிலை எழுத்தர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
ஆனாலும் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமைசெயலாளர் மற்றும் அதிகாரிகள், அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உதவியாளர் பணியிடங்களை மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்பவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதேபோல் அமைச்சக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடமும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர். சட்டசபைக்கு வெளியே முதலமைச்சரின் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார். அங்கு காத்திருந்த அமைச்சக ஊழியர்கள் மனித சங்கிலி போன்று நீண்ட வரிசையில் நின்று கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.
- சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேறொருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தேன். அதையும் மாமியார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை சாமி. அவரது மனைவி மேரி டெய்சி (வயது 72). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. இவரது கணவர், முதல் மகன் இறந்து விட்டனர். 2-வது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனவே வீட்டின் முதல் தளத்தை வாடகைக்கு கொடுத்து விட்டு 2-வது தளத்தில் மேரிடெய்சி தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் வெட்டுக்காயங்களுடன் மேரிடெய்சி உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது குன்னூரில் வசித்து வரும் அவரது மருமகள் ரபெக்கா ரோஸ்லின் நிஷா (36) மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரை பிடித்து விசாரித்தபோது கூலிப்படை ஏவி தனது மாமியாரை கொல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படைகளாக செயல்பட்ட நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்த ராஜேஷ் (27), சிம்சன் (19), முத்து (18) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைதான ரபெக்கா ரோஸ்லின் நிஷா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் மெரி டெய்சியின் மூத்த மகன் அந்தோணி சேவியரை 2-வதாக திருமணம் செய்தேன். எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பின் நான் குன்னூர் சென்று விட்டேன். அங்கு உயர்தர நாய்கள் விற்பனை செய்து வருகிறேன்.
எனது மாமியார் வீடு, நிலங்களை வாங்கி விற்பது போன்ற தொழில்கள் செய்து வருகிறார். நான் எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரும்படி மாமியாரிடம் கேட்டேன். அவர் பிரித்து தரவில்லை.
மேலும் நான் வேறொருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தேன். அதையும் அவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.
எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்காக என்னிடம் வேலை செய்யும் நெல்லையை சேர்ந்த ராஜேஷ் (27) என்பவரிடம் உதவி கேட்டேன். ரூ.15 லட்சம் தருவதாக ஆசைவார்த்தை கூறினேன். எங்களது திட்டம் படி கடந்த 13-ந் தேதி ராஜேஷ் தலைமையில் 4 பேர் புதுவைக்கு வந்து மேரி டெய்சியை கொலை செய்ய முயற்சி செய்தனர்.
எனது மாமியாருக்கு பலரிடம் கொடுக்கல்-வாங்கல் தகராறு இருப்பதால் நான் கொலை செய்தாலும், என் மீது சந்தேகம் வராது என்று நினைத்தேன். இருப்பினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரபெக்கா ரோஸ்லின் நிஷா உள்பட 4 பேர் காலாப்பட்டு சிறையிலும், சிறுவன் அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புதுவை சட்டசபை வளாகத்தில் நடந்தது.
- காரிலிருந்து ரங்கசாமி இறங்கி நின்று, சட்டசபை படிக்கட்டுகளில் ஏற முயன்றார். இதைக்கண்ட தவமணி ஓடிச்சென்று முதல்-அமைச்சரின் காலை பிடித்துக்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை கோர்க்காடை சேர்ந்த பெண் தவமணி(46).இவர் தனது அண்ணன் மாசிலாமணி மற்றும் குடும்பத்தினருடன் புதுவை சட்டசபைக்கு இன்று காலை வந்திருந்தார்.
முதல்-அமைச்சரை காண வேண்டும் எனக்கூறி சட்டசபை வளாகத்திற்குள் வந்து காத்திருந்தார். அப்போது சுமார் 12.15 மணியளவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்துக்கு காரில் வந்தார். அவரை வரவேற்க அலுவலக ஊழியர்கள் காத்திருந்தனர்.
அப்போது காரிலிருந்து ரங்கசாமி இறங்கி நின்று, சட்டசபை படிக்கட்டுகளில் ஏற முயன்றார். இதைக்கண்ட தவமணி ஓடிச்சென்று முதல்-அமைச்சரின் காலை பிடித்துக்கொண்டார்.
தனது பிரச்சினைக்கு முதலமைச்சர்தான் தீர்வு காண வேண்டும். கோர்க்காட்டில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நெல் பயிர் செய்திருந்தோம். தற்போது வக்கீல் ஒருவர் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்துகொண்டார். நெல்லையும் அறுவடை செய்துவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கதறியழுதார்.
அப்போது அருகிலிருந்த தவமணியின் அண்ணன் மாசிலாமணி மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். அப்போது பெட்ரோல் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் காலிலும் ஊற்றியது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முதலமைச்சரின் பாதுகாவலர்கள், சட்டசபை காவலர்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் இருந்து அகற்றினர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி கூறிவிட்டு அலுவலகத்துக்குள் சென்றார். இதையடுத்து சட்டசபை காவலர்கள் பெரியகடை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெரியகடை போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி, பின்னர் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து வில்லியனூர் எஸ்பியிடம் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அவர்களை போலீஸ் வாகனத்தில் வில்லியனூருக்கு அனுப்பி வைத்தனர்.
புதுவை சட்டசபையில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வது வாடிக்கை. இருப்பினும் பாட்டிலில் பெட்ரோல் எடுத்துவரும் வரை சட்டசபை காவலர்கள் அஜாக்கிரதையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துறைரீதியில் விசாரணை நடத்தவும் சட்டசபை செயலர் நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவத்தால் புதுவை சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது. பெட்ரோல் துளிகள் பட்டதால் முதலமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் சட்டையை மாற்றிக்கொண்டார்.
- மாநில கபடி சங்கத் தலைவர் விஜயராணி ஜெயராமன் வரவேற்பு
- சர்வதேச மற்றும்தேசிய அளவில் விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்க விடுபட்ட சங்கங்கள் விண்ணப்பக்கவும் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விளையாட்டு வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் கபடி சங்க தலைவரும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினருமான விஜயராணி ஜெயராமன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவை மாநில விளையாட்டு குழுமம் மற்றும் ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் உருவாக்கி தந்திருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தவையாகும்.
புதுவையில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு ஆணையம் உருவாக்குவதை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிறைவேற்றியுள்ளார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் புதுவை மாநில கபடி சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கல்வித்துறை வளாகத்தில் முதல்-அமைச்சரும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேர்மனுமான ரங்கசாமி தலைமையில், விளையாட்டுத் துறை அமைச்சரும் ஆணையத்தின் துணை சேர்மனுமான நமச்சிவாயம் முன்னிலையில் ஆணையத்தின் உறுப்பினர் செயலர்கள், கபடி, டேபிள் டென்னிஸ், வாலிபால் ஆகிய விளையாட்டு சங்கத் தலைவர்கள், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் பங்கேற்ற ஆணையத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடந்தது. இந்த கூட்டத்தில், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இயக்குனரகம் உருவாக்க வேண்டும், ஆணையத்திற்கு நிர்வாக அமைப்பை உருவாக்குதல், புதுச்சேரியில் விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு நிரந்தர பணி நியமனம், ஊதிய உயர்வு வழங்குதல், சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்கும் விளையாட்டு சங்கங்களுக்கான செலவின தொகையை வழங்குதல், சர்வதேச மற்றும்தேசிய அளவில் விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்க விடுபட்ட சங்கங்கள் விண்ணப்பக்கவும் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி விளையாட்டுத் துறையில் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொன்னாளாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் நடந்த பொதுக்குழு கூட்டம் கருதப்படுகிறது.
இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் விளையாட்டுத்துறை சிறந்த வளர்ச்சியை பெறுவதற்கான தொடக்கமாக உள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆண்கள், பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று வரும் நிலையில் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறந்த செயல்பாடுகள் மூலம் புதுவையில் விளையாட்டு துறை மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பாக வளர்ச்சி பெறும்.
இதற்கு முத்தாய்ப்பாக உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு புதுவை மாநில கபடி சங்கம் சார்பிலும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயராணி ஜெயராம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.






